நண்பர்களே,
வணக்கம். "மாயன் காலெண்டர்" உலக அழிவை பறைசாற்றுவதாய் திரும்பிய பக்கமெல்லாம் பேச்சிருக்க, எங்கள் ஊரிலோ 2013-க்கான காலெண்டர்கள் மும்முரமாய்த் தயாராகி வருகின்றன ! சிவகாசியே பரபரப்பாய் இயங்கிடும் ஆண்டின் இந்த இறுதி மாதத்தில் - சரியான சமயத்துக்குள் டைரிகளையும் ; காலண்டர்களையும் முடித்து ஒப்படைக்காவிட்டால் பிழைப்பு நாறிடுமே என்ற பீதியில் சுழலும் மக்களுக்கு doomsday பற்றிய கவலைக்கோ, சிந்தனைக்கோ நேரமில்லை என்பது தான் நிஜம் ! இந்தப் பரபரப்பில் அரசின் சமச்சீர்க் கல்வியின் 9.5 கோடி (!!!) பிரதிகளின் அச்சுப்பணிகளும் கடந்த வாரம் முதல் துவங்கி இருப்பதால், ஊரெல்லாம் சொல்லி மாளா busy ! சமச்சீர் கல்வியின் பணிகளுக்கு 30 நாட்கள் மாத்திரமே காலக் கெடு ; தாண்டிடும் ஒவ்வொரு நாளுக்கும் மிகக் கணிசமான அபராதத் தொகை உண்டென்பதால் 12 மணி நேர மின்வெட்டின் இடையே பைண்டிங் பணிகளை பூர்த்தி செய்திட ஆங்காங்கே அடிதடி நடக்காத குறை தான் ! இந்த நெரிசலில் சிக்கித் தவிக்கும் நமது NBS பைண்டிங் பணிகளை கரை சேர்க்க, நடையாய் நடக்கும் நம் பணியாளர்கள் அனைவருக்கும் குறைந்த பட்சம் ரெண்டு ஜோடிக் காலணிகளாவது புதிது வாங்கிட அவசியமாகிடும் என்றே தோன்றுகிறது ! சென்னை புத்தகத் திருவிழா ஒரு வாரம் பின்னே தள்ளி வைக்கப்பட்டதும் சரி ; நாம் 'முன்ஜாக்கிரதை முத்தண்ணாவாக' இருந்து இதழின் பணிகளை முன்னக்கூடியே நிறைவு செய்திட்டதும் சரி, நிச்சயம் ஆண்டவனின் அருளே என்று நினைக்கத் தோன்றுகிறது ! NBS நிச்சயம் ஜனவரி 11-க்குத் தயாராகிடும் ; எனினும் நான் கடந்த பதிவில் அறிவித்திருந்த 2 காமிக்ஸ் க்ளாசிக்ஸ் இதழ்கள் இம்மாதம் வெளி வருவது மிக மிகக் கடினமே ! ஒவ்வொன்றும் 360 பக்க இதழ்கள் என்பதால் இவற்றின் பைண்டிங் பணிகள் மிகுந்த நேரத்தை ஆக்ரமிக்கும் விஷயங்கள்! So மூச்சு வாங்க சற்றே அவகாசம் எடுத்துக் கொண்டு இந்த நெரிசல் சற்றே நேரானதும் classics இதழ்களை தயாரிக்க உங்களின் அனுமதியை இங்கே கோருவது எனது கடமை ! Sorry guys, hope you'd understand ! (BN-USA & Comixcreate & many others classics fans - a special word of apology for the delay!)
இந்த சின்ன ஏமாற்றத்தை சரி செய்திட இரு சந்தோஷச் சேதிகள் கைவசமுள்ளன :
பிப்ரவரி 2013 -ல் டெக்ஸ் வில்லரின் black & white சாகசம் ரூ.50 விலையில் வெளி வருவது தெரிந்தது தானே ?! அதனோடு சேர்ந்து வரவிருக்கும் லக்கி லூக்கின் "வில்லனுக்கொரு வேலி" -வண்ண இதழ்களின் பணிகளை NBS முடிந்த கையோடு துவக்கி இருந்தோம் ! (வழக்கமாய்) 17 நாட்கள் நடைபெறும் சென்னைப் புத்தகத் திருவிழாவின் நடுப்பகுதியின் போது இதனை surprise ஆக வெளியிடலாமென்ற சிந்தனை தலைக்குள் இருந்தது ! So, இதன் பணிகள் கூடிய சீக்கிரத்தில் நிறைவுறும் நிலையில் உள்ளன ! ரூ.50 விலையில் ; 64 பக்கங்களுடன் மாத்திரமே வரவிருக்கும் முதல் வண்ண இதழ் என்பதால் இதனை தயாரிப்பதோ, பைண்டிங் செய்து வாங்குவதோ comparatively easy ! ஆகையால் NBS ரிலீஸ் ஆகிய சில நாட்களில் - "வில்லனுக்கொரு வேலி" யும் சென்னையில் கிட்டிடும்! பிப்ரவரி 15-க்கான இதழ் ஒரு மாதம் முன்னதாக வரவிருப்பது, நம் சரித்திரத்தில் இது முதல் முறையே! 2013-க்கான சந்தா இதனோடு துவக்கம் காண்பதால், இது வரையில் சந்தா செலுத்தாதிருக்கும் நண்பர்கள் இனியும் தாமதிக்க வேண்டாமே என்று கேட்டுக் கொள்கிறோம் !
![]() |
| நமக்கு அட்டைப்படம் இதுவல்ல ! |
குட் நியூஸ் # 2 : காமிக்ஸ் க்ளாசிக்ஸ் வண்ண மறுபதிப்புக்கான உங்களின் தேர்வுகளைக் கோரி இருந்தது நினைவிருக்கும் தானே ?! நம் ஜனநாயகத்தின் இரு மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் வந்திருக்கும் இந்த நாளில், நம் "தேர்தலின்" முடிவுகளையும் அறிவிப்பது தானே முறை ? இங்கு நல்ல வோட்டுக்களாகவும் சரி ; 'போங்கு' வோட்டுக்களாகவும் சரி, செமத்தியாகப் பெற்றிட்டு முன்னணியில் இருப்பது கேப்டன் டைகரின் இரும்புக்கை எத்தனின் வண்ண reprint -க்கான கோரிக்கையே ! என்னை நேரில் சந்தித்த நண்பர்களின் பெரும்பான்மையினரும் சரி ; கடிதம் மூலம் சிந்தனைகளைப் பகிர்ந்திடும் அன்பர்களின் நிறையவர்களும் இதனையே வழி மொழிந்துள்ளனர் ! லக்கி லூக்கின் "புரட்சித் தீ" ; "பயங்கரப் பொடியன் " போன்ற கதைகளைக் கோரி ஓரளவிற்குக் குரல்களும், கேப்டன் பிரின்சின் ஹிட்ஸ்களை வண்ணத்தில் மறுபதிப்பு செய்திட சன்னமாய்க் கொஞ்சம் குரல்களும் ஒலித்துள்ளன ! எனினும், பெரியதொரு எதிர்ப்பின்றித் தேர்வாவது கேப்டன் டைகரே ! So மே மாதம் இந்த வண்ண மறுபதிப்பு நமது காமிக்ஸ் க்ளாசிக்சில் வெளி வந்திடும் ! அதே மே மாதமே, இது வரை வெளியாகாத இதன் இறுதி 2 பாகங்களும் நமது முத்து காமிக்ஸில் ரூ.100 விலையில் வந்திடும் ! இந்தக் கோடை - இந்த அழுக்கு சிப்பாயின் ராஜ்யமே !
இரண்டில் எந்த அட்டை சூப்பரென்று சொல்லுங்களேன் ? அதனை நமது முன்னட்டையாகிடுவோம் ?
ஒரு வழியாய் இந்தாண்டின் இறுதி இதழும், நமது 'சின்ன விலை ; சிம்பிள் தரம்' என்ற பாணிக்கு விடை கொடுக்கும் இதழுமான "மரணத்தின் நிசப்தம்" இன்று உங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது ! சமீபத்தில் ஜானியை 'பளீர்' வண்ணத்தில் பார்த்திட்ட பின், அவரையே இப்போது b&w-ல் பார்த்திடுவது எனக்கே என்னவோ போலுள்ளது ! கதை அழகாக இருந்திடும் போதிலும், அதனில் லயிப்பது சிரமமாகவே இருந்தது ! நண்பர்கள் பலரும் எப்போதாவது டெக்ஸ் வில்லரை வண்ணத்தில் வெளியிடக் கோரிடும் போதெல்லாம் நான் அதற்குப் பெரிதாய் ஒரு reaction காட்டாதிருப்பது இதனால் தான் ! வண்ணத்தில் பார்த்துப் பழகி விட்டால்,அதன் பின்னே அதே நாயகரை கறுப்பு-வெள்ளையில் சந்திப்பது பெரியதொரு சிரமமே !
எனினும், இந்த பாணியில் உள்ள வசதிகள் அசாத்தியமானவை ! வசனங்கள் எத்தனை நீளமாய் இருந்தாலும், அவற்றை ஆங்காங்கே லாவகமாய்த் திணிக்கும் பொறுப்பை நம் ஓவியர்கள் வசம் ஒப்படைத்து விட்டு, "மாதம் மும்மாரி மழை பொழிகிறதா அமைச்சரே ?" என்று நான் பாட்டுக்கு உலா சென்றிட முடியும்.
துவக்க நாட்களில் எங்கள் வீட்டின் பின்னே இருந்த சின்ன ஷெட் தான் நமது லயன் காமிக்ஸின் ஆர்டிஸ்ட் + typesetting கூடம் ! ஒரு சிறுவர் இதழே எனது துவக்க காலத்து லட்சியம் என்பதால், நிறைய சிறுகதைகளை ; பொது அறிவு சமாச்சாரங்களை மொழிபெயர்த்திருந்த அனுபவம் எனக்கு இருந்திருந்த போதிலும், எனது எழுத்துக்கள் அச்சில் ஏறுவதை பார்த்திருக்க அது வரை எனக்கு வாய்ப்பு இருந்திருக்கவில்லை ! (முத்து காமிக்ஸின் "ஒரு நாள் மாப்பிள்ளை" கதையின் சில பக்கங்கள் ; விங் கமாண்டர் ஜார்ஜின் "பனியில் புதைந்த ரகசியம்" இதழின் சில பக்கங்களை எழுதியது அடியேனே - but அவை பள்ளி விடுமுறை நாட்களின் நடுவே, அப்போதைய முத்து காமிக்ஸின் மேனேஜர் எனக்குக் கொடுத்த குட்டியான வாய்ப்புகளே! ) So 1984-ல் முதன் முறையாக மாடஸ்டி கதைக்கு எனது மொழிபெயர்ப்பை சுடச் சுட அச்சுக் கோர்த்து, நமது ஆர்டிஸ்ட் பணி செய்து, முடிந்த பக்கங்களை நெகடிவ் எடுத்திடக் கொண்டு சென்ற பெருமிதம் இன்னமும் நினைவில் உள்ளது. ஒரு 28 ஆண்டு காலப் பழக்கத்தை 'படக்' என்று மாற்றிக் கொள்ள ஆரம்பத்தில் எனக்கு பெரியதொரு ஆர்வமில்லை என்பதே நிஜம் ! கம்ப்யூட்டர்களின் வருகையினைத் தவிர்க்க இயலாதென்பது மண்டைக்குப் புரிந்த போதிலும், அதனைத் தள்ளிப் போட சாக்குப் போக்குகள் தேடிய வண்ணமே இருந்தேன் உள்ளுக்குள்! டைனோசாரஸ்கள் extinct ஆனது போல் ஓவியர்களும் சுத்தமாய்க் காணாது போய் விட்டார்களென்ற நாள் ஒன்று புலர்ந்த பின்னே, வேறு மார்க்கமின்றியே டெக்னாலஜியினை நெருங்கினோம் என்பதே நிஜம் ! So இன்று கை அசைத்து விடை கொடுப்பது ஒரு black & white இதழுக்கு மாத்திரமல்ல - அசாத்தியத் திறமை கொண்ட பல மனிதர்களின் உழைப்புப் பாணிக்கும் சேர்த்தே ! நம்மிடம் பணியாற்றிய அத்தனை ஓவியர்களுக்கும் , அச்சுக் கோர்த்திட உதவிய எல்லா பணியாளர்களுக்கும் - a huge thanks சொல்லிட வேண்டிய தருணமிது !
அப்புறம் கடந்த பதிவினில் எழுந்த அந்தப் "பூனை" கேள்விக்கு இதுக்கு மேலும் உங்களைப் படுத்த வேண்டாமே என்பதால், இதோ அதற்கான பதில் ! வரவிருக்கும் ஆண்டில் வண்ணம் + black & white ஒரே இதழில் வேண்டாமே என்ற உங்களின் பெரும்பான்மையின் குரலுக்கு செவி சாய்ப்பது அவசியமாகிறது ! இனி வரும் இதழ்களில், மெயின் கதைகள் 92 பக்கங்களை நிரப்பிய பின்னே, மீதம் கொஞ்சமாய் எனது புராணங்கள் அடைத்தது போக - வண்ணத்தில் filler pages நிரம்பவே அவசியம்.So மதியில்லா மந்திரியின் 8 பக்க கார்ட்டூன் தோரணங்கள் ; "ஸ்டீல் பாடி ஷெர்லாக்" எனும் புதிய நாயகரின் காமெடி கலாட்டா என்பதோடு - அழகாய் சில புது வரவுகளும் வண்ணத்தில் இடம் பிடிப்பார்கள் !
| ஸ்டீல் பாடி ஷெர்லாக் |
முழுக்க முழுக்க பூனைகளின் உலகை மாத்திரமே மையம் கொண்டு வரையப்பட்ட ஒரு பக்கக் கார்ட்டூன் வரிசையின் உரிமைகளை நாம் பெற்றிடுகிறோம். பாஷை அறியா இந்தப் பிராணிகளுக்கு இந்தக் கார்டூன்களில் எவ்வித டயலாகும் கிடையாது ! மௌனமே மொழியாகக் கொண்ட இந்த அழகான filler pages , உங்கள் வீட்டுக் குட்டீஸ்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்று நினைக்கிறேன் ! Garfield போல இது ஒரு சிந்திக்கச் செய்யும் ரகக் கார்டூன் அல்ல ! அழகாய், வண்ணத்தில், சிறுசுகளுக்கு ரசிக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ள பக்கங்கள் இவை !
டிசம்பர் 24 வந்திட்டால் நம் வலைப்பதிவிற்கு வயதொன்றாகிறது என்பதை நினைவுபடுத்திய கார்த்திக்குக்கு நன்றிகள் ! For sure , இந்த 365 நாட்கள், எண்ணிலடங்கா புது அனுபவங்களை எனக்குக் கற்றுத் தந்த அழகானவை என்பதில் சந்தேகமில்லை ! இந்த ஓராண்டுப் "பதிவுப் பயணத்தின்" எனது highs - lows பற்றி நிச்சயம் எழுதிடுவேன் ! அதே போல - கடந்த பதிவினில் நான் promise செய்திருந்த அந்த "வித்தியாசமான" சங்கதியினையும் கூட டிசம்பர் 24-ன் பதிவுக்குள் இணைத்திட்டால் சிறப்பாக இருக்குமென்று தோன்றுகிறது ! So, will catch you soon folks ! Take care !
![]() |
| கடைகளில் தொங்க விட...! |























