நண்பர்களே,
வணக்கம் . வைகைப்புயல் வடிவேல் ஒரு படத்தில் கண்ணாடியின் முன் நின்று கொண்டு, தனது மூஞ்சிக்கு நேராக ஒற்றை விரலை நீட்டிக் கொண்டு "உனக்கு இது தேவையா? உனக்கு இது தேவையா?" என்று கேட்பாரே, கனகச்சிதமாய் அதே சீன் தான் இந்த நொடியில் எனக்கு நினைவுக்கு வருகிறது. என்னடாப்பா விஷயம் என்கிறீர்களா? AI மூலமாய் காமிக்ஸ் என்று உருவாக்கி நாம் வெளியிடவுள்ள நேரத்தில், நம் வட்டத்தினர் என்ன சொல்வார்கள் என்பது தெரிந்திருந்துமே AI நல்லதா, கெட்டதா? என்றதொரு சர்ச்சையை நாமளே ஆரம்பித்து வைத்தால் - சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொள்ள மெனக்கெடுவது ஏனோ? என்று ஒரு கேள்வி எழுவது நியாயம் தானே? இந்த வாரத் துவக்கத்தில் நமது வாட்சப் கம்யூனிட்டியில் ஓடிக்கொண்டு இருந்த சர்ச்சை பற்றியே பேசுகிறேன் folks! ஆனால், இதை மிகச்சரியாக இந்த நொடியில் நான் எழுப்பியதற்கும் ஒரு காரணம் உண்டு. Becos இந்த சமூக வலைத்தளப் பிரவாக நாட்களில் ஆளுக்கொரு அபிப்ராயம் என்பது ரஸ்க் சாப்பிடுவது போல் செம மொறுமொறுப்பானது என்பதில் no secrets at all. So, நம் மேலுள்ள அபிமானம் காரணமாக நீங்கள் வெளிப்படுத்த தயங்கி இருக்கக்கூடிய எண்ண ஓட்டங்களை குறுகுறுப்பின்றி வெளியிட ஒரு வாய்ப்பினை நாமே உருவாக்கித் தருவதே முறை என்று நினைத்தேன். அதனால் தான் இந்த கேள்வியை AI இதழ்கள் சார்ந்த அறிவிப்புக்கு மறுதினமே எழுப்பி வைத்தேன்.
And பதில்கள் - "AI சார்ந்த முயற்சிகள் வேண்டாமே?!" என்று தான் பெரும்பாலும் இருக்கும் என்பதை யூகிப்பதில் எனக்கு இம்மியூண்டு கூட சிரமம் இருந்திருக்கவில்லை. ஒண்ணா - ரெண்டா? ஒரு நூறு மூத்திரச் சந்துகளின் அனுபவப் பாடம் மண்டையில் நிற்குமல்லவா?
AI தேவையா, இல்லையா? என்றெல்லாம் சொல்லும் அளவிற்கு நான் ஒரு அப்பாடக்கரும் அல்ல, தொழில் வல்லுனரும் அல்ல. எனது வேலையும் அதுவல்ல....! மாறாக நமது காமிக்ஸ் சார்ந்த முயற்சிகளுக்கு மட்டுமே இது ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள், எதிர்வினைகள் பற்றிப் பேசுவதே பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். Because all said and done, ஏழே முக்கால் கழுதை வயசுக்கு இந்தத் துறையில் குப்பை கொட்டிய பிற்பாடு கொஞ்சமே கொஞ்சமாய் கருத்து கந்சாமியாக இருந்திடும் தகுதி நேக்கு இல்லாது போனாலே வியப்பு என்பேன். And எப்போதும் போலவே ஒரு பாட்டம் பாடினால் தவிர மண்டைக்குள் உள்ளதை முழுமையாய் இறக்கி வைத்த திருப்தி நமக்கு இராது என்பதால், இது ஒரு நெடும் பதிவாகவே அமைந்திடும் folks. So, ஏதாச்சும் முக்கியமான வேலை இருந்தாலோ, OTT-ல் இன்னொரு பக்கம் படம் ஓடிக்கொண்டிருந்தாலோ, ப்ளீஸ் - அவற்றை தொடர்ந்திடுங்கள். இங்கு நான் சொல்ல விழைவது எதுவுமே பூமியை புரட்டிப் போடப் போகும் சமாச்சாரமே கிடையாது தான்.
"AI வேண்டாம்......மனித கற்பனையை நசுக்கி விடும் எந்த ஒரு விஷயமும் வேண்டாம், human skills-க்கு ஈடோ, இணையோ கிடையவே கிடையாது" என்றெல்லாம் நண்பர்கள் அவரவர் பாணிகளில் எழுதியிருந்தனர். அதில் எனக்குக் கிஞ்சித்தும் மறுப்பே கிடையாது. Because நானே ஒரு அரதப்பழசான ஓல்ட் ஸ்கூல் பார்ட்டி தானே ?! இன்னமும் பேனா பேப்பரை எடுத்துக் கொண்டு பதிவில் ஆரம்பித்து, மொழிபெயர்ப்பு வரை பக்கம் பக்கமாய் கையொடிய எழுதிக்கொண்டு தானே இருக்கிறேன் ?! அநேகமாய் சிவகாசியில் சிகப்பு மை பேனாவை இத்தனை டஜன் வாங்கி இருக்கக்கூடியது நானாகத் தான் இருப்பேன் என்பதில் ஐயமே இல்லை. So, human skills பற்றியும், அவற்றால் செய்ய முடிவதை இயந்திரத்தனமான பணிகள் இட்டு நிரப்ப முடியாது என்பதையும் சர்வ நிச்சயமாய் உணர்ந்தவனே நான். அதே சமயம் மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை எத்தனை மல்லுக்கட்டி, எத்தனை தம் பிடித்து, எத்தனை எத்தனை அணிகளாய் நாம் திரண்டு எதிர்க்க முற்பட்டாலும், அந்த மாற்றத்தின் அழுத்தமானது அனைவரையுமே ஊதித் தள்ளிவிடும் என்பது இயற்கையின் நியதி.
அப்படியே டைம் மெஷினை எடுத்துக்கொண்டு 42 ஆண்டுகள் பின்னே போகின்றேன். சகலமும் திறன் வாய்ந்த பணியாட்களால் நிரம்பிய அச்சுக்கூடத்தின் நடுவே உலா வந்து கொண்டிருக்கும் நாட்கள் அவை.
😎ஒரு பக்கம் டைப்செட்டிங் பணிகளை திறன் கொண்ட கம்பாசிட்டர்கள் கையாண்டு அச்சுக்கோர்த்து, ஆர்ட்பேப்பரில் அச்சிட்டு ஆர்ட்டிஸ்ட்களிடம் ஒப்படைப்பார்கள்.
😎ஆர்ட்டிஸ்ட்கள் அதில் கர்ம சிரத்தையாய் பணி செய்து அதனை என் மேஜையில் நிரப்புவார்கள்.
😎நான் எடிட்டிங் என்று எனக்குத் தெரிந்த கூத்தை அடித்து வைத்த பிற்பாடு நேராக நெகட்டிவ் எடுக்கும் செக்ஷனுக்கு அது செல்லும்.
😎அங்கே திறன் வாய்ந்த பணியாளர்கள் ஒரு பெரிய தண்டவாளத்தின் மேல் ஓடும் மெகா சைஸ் கேமராவில், சகலத்தையும் போட்டோ எடுப்பது போல் எடுத்து, ஜில் என்று இருக்கும் ஒரு டார்க்ரூமுக்குள் போய் முழுசுமாய் இருட்டுக்குள், சில்வர் கலந்த கெமிக்கலில் போட்டு டெவலப் செய்து வெளியே கொண்டு வருவார்கள். அங்கே கொஞ்சமாய் கெமிக்கலின் பதம் மாறி இருந்தாலோ அந்த நெகட்டிவ் குப்பைக்குத் தான் போகும், மறுக்கா எடுக்க வேண்டி இருக்கும்.
😎அவ்விதம் எடுத்து வரும் நெகட்டிவ்களை அடுத்து "ரீ-டச்சிங் ஆர்டிஸ்ட்" என்ற கலைஞர்களிடம் எடுத்துப் போக வேண்டும். வண்ணத்தில் பணி செய்வதற்கென அவர்கள் உயிரைக் கொடுத்து நாட்கணக்கில் வேலை பார்ப்பார்கள். மஞ்சள், ப்ளூ, சிகப்பு, கருப்பு என நான்கு வர்ணங்களில் ஒவ்வொரு பக்கத்திற்கும் பணியாற்றித் தந்த பிற்பாடு அந்த நெகட்டிவ்களை எடுத்துக்கொண்டு போய் பிளேட் மேக்கிங் என்ற அடுத்த பிராசஸில் போய் நிற்போம்.
😎நல்ல வாத்து முட்டைகள் ஒரு டஜன் வாங்கி அவற்றை உடைத்து ஆம்லெட் போடுவது போல் கலகலகலவென்று கலந்து அடித்து, ஈய பிளேட்டுகள் மீது அந்த முட்டை கோட்டிங்கைத் தடவி ஒரு baking மெஷின் எனும் வெப்பமூட்டும் கருவியில் காட்டுவார்கள். அந்த முட்டை கோட்டிங் கச்சிதமாய் ஈய பிளேட்டுகள் மேல் ஏறிய பிற்பாடு, நாம் கொண்டு செல்லும் கலர் நெகட்டிவ்களை ஒன்றின் மேல் ஒன்றின் பின் ஒன்றாய் மணிக்கணக்கில் எக்ஸ்போஸ் செய்திட வேண்டும்.
😎அப்புறமாய் அந்த பிளேட்டுகளில் நெகட்டிவில் உள்ள படங்கள் இறங்கி இருப்பதைச் சரிபார்த்துவிட்டு, அதை மறுக்கா கெமிக்கல்கள் நிரம்பிய தொட்டிக்குள் போட்டு கழுவி எடுத்து கையில் கொடுப்பார்கள். ஒற்றை வர்ணத்துக்கான பிளேட் ரெடியாகவே சில மணி நேரங்கள் பிடிக்கும்.
😎அந்த பிளேட்டுகளை எடுத்துக்கொண்டு போனால் ஒற்றை ஒற்றை கலர்களாய் ஒரு நேரத்திற்கு அச்சிட்டுத் தரும் பிரிண்டிங் மெஷினில், திறமை வாய்ந்த பணியாட்கள் லைன் கட்டி நிற்பார்கள். முதலில் கருப்பு அச்சாகும், அதன் பிற்பாடு மஞ்சள், அடுத்து சிகப்பு, இறுதியாய் ப்ளூ. இந்த நான்கு வர்ணங்களையும் ஒவ்வொன்றாய் ஒவ்வொரு தடவையாய் அச்சிடுவதற்கு அந்த பிரிண்டிங் மெஷினின் ஆபரேட்டர்களின் திறன் அபரிதமாய் அவசியம்.
😎ரைட், அச்சாகி முடிந்ததா...? அவற்றை தூக்கிக்கொண்டு போனால் பைண்டிங்கில் வரிசையாக பசங்கள் அமர்ந்திருப்பார்கள். காகிதங்களை ஒன்றுக்கு மூன்றாகவோ நான்காகவோ கையால் சரக் சரக் சரக் என்று மடிப்பார்கள். அவ்விதம் மடித்து முடித்த பேப்பர்களை தனித்தனி அட்டியல்களாய் அடுக்கி 16 / 32 பக்கங்களாய் உள்ள ஒவ்வொரு தொகுப்பையும் சேகரிப்பார்கள். 128 பக்கம் எனில் நாலு தொகுப்புகளை இணைத்து அவற்றை பின்னடித்து அதன் பின்பாய் பசை போட்டு அட்டைப்படத்தை ஒட்டுவார்கள்.
😎இன்னொரு பக்கம் அட்டைப்பட பிராசஸோ செம லந்தானது. எங்கிருந்தாவது ஆட்டையைப் போட்ட அட்டைப்படங்களுக்கான ரெஃபரன்ஸ்களை நமது ஓவியர் மாலையப்பனிடம் எடுத்துக்காட்டி, 'இன்ன மாதிரி, இன்ன மாதிரி ஹீரோ வேணும், இந்த மாதிரி, இந்த மாதிரி பேக்ரவுண்ட் அமையணும், பின்னணி கலரிங்கிற்கு இந்த ரெஃபரன்ஸை எடுத்துக்கொள்ளணும்' என்றெல்லாம் விவரம் சொல்லி, புரிய வைப்பது ஒரு படலம் என்றால், அவர் அடுத்த 10, 12-வது நாளில் அந்த டிசைனை பிரித்து மேய்ந்து நம் கையில் தந்த பிற்பாடு செய்திடும் பிராஸஸிங் பணிகள் இன்னொரு மண்டகப்படி.
😎உட்பக்கங்களின் கருப்பு, வெள்ளை பக்கங்களை எடுப்பது LITH என்றொரு ரக நெகட்டிவ் என்றால், அட்டைப்படங்களுக்கான கலர் நெகட்டிவுகளுக்கு PAN ஃபிலிம் என்று பெயர். அதை ரொம்பச் சொற்பமான பிராஸஸிங் கூடங்கள் மட்டுமே கையிருப்பில் வைத்திருப்பார்கள். And, அதனை துளிகூட மின்வரத்தில் ஏற்ற இறக்கம் இல்லாத சாமங்களில் எடுத்தால்தான் சுகப்படும். So, அட்டைப்பட டிசைனில் நாம் மேலே கதைகளின் பெயர்களை எழுதிய பிற்பாடு, பெயிண்டிங்கை அவர்களிடம் ஒப்படைத்துவிட்டால், வேதாளம் உலாப் போகும் வேளைகளில் அந்த நெகட்டிவ்களை எடுப்பார்கள். அது சரியாக அமைந்துளதா ? இல்லையா ? என்பதை மறுநாள் நமது பிராஸஸிங் ஆர்ட்டிஸ்ட் போய் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். அதன் பிற்பாடு அதனில் ஒவ்வொரு கலராய் பணி செய்து மறுக்கா பிரிண்டிங்கிற்குப் போக வேண்டும்.
So, இத்தனை வெவ்வேறு நிலைகளில் வெவ்வேறு ஆற்றலாளர்கள் அன்றைக்கெல்லாம் நமக்கு அவசியப்பட்டனர்.
காலச்சக்கரம் மெதுமெதுவாய் சுழல, முதலில் அடி வாங்கியது அச்சுக்கோர்ப்புத் துறை. ஈயத்திலான எழுத்துக்களைத் தேய்ந்த பிற்பாடு சென்னையில் இருக்கக்கூடிய ஃபவுண்ட்ரிகளுக்குத் திருப்பி அனுப்புவது வாடிக்கை. நெல்சன் மாணிக்கம் ரோட்டில் இருக்கும் அந்த ஃபவுண்ட்ரி, அந்த எழுத்துக்களை உருக்கிவிட்டு மறுக்கா புதுசாய்ச் செய்து அனுப்பி வைப்பார்கள். இதெல்லாம் கொஞ்சமும் கட்டுப்படியாகாது என்ற ஒரு நிலை வந்த போது, வரிசையாய் ஃபவுண்ட்ரிகள் கடை மூடிவிட்டுப் போக, கம்ப்யூட்டரில் டைப் செய்வது எதார்த்தம் என்றாகிப் போனது.எனக்கு இன்னமும் நினைவுள்ளது, முதல் முறையாக ஏதோ ஒரு ரிப் கிர்பி சாகசத்திற்குத் தான் கம்ப்யூட்டரில் டைப்செட்டிங் செய்தது. அதுநாள் வரை ஒவ்வொரு பலூனின் அளவுக்கும் ஏற்ப அச்சுக்கோர்க்கும் போதே கம்பாஸிட்டர்கள் அந்தந்த இடங்களைப் பார்த்து, இட்டு நிரப்பித் தருவது வாடிக்கை. ஆனால் கம்ப்யூட்டரிலோ மொதுமொதுவென்று அடித்து மொத்தமாய் கையில் கொடுத்துவிடுவார்கள். ஆனாலும் நமது ஆர்ட்டிஸ்ட் டீம் கையில் இருந்ததால் எப்படியோ சமாளித்துவிட்டோம். சிறுகச் சிறுக ஆர்ட்டிஸ்ட்கள் டைனசர்களைப் போல சுத்தமாய்க் காணாமல் போகத் துவங்க, ஒரு கட்டத்தில் லொட்டாவோ லொட்டா! And, 2000-களின் பிற்பகுதியில் நாம் ஏற்கனவே கடையைச் சாத்த கிட்டத்தட்ட தயாராகி இருந்த நிலையில், ஓவியப் பற்றாக்குறை எனக்கு அத்தனை பெரிய பழுவாகத் தெரியவில்லை தான்.
2011 இறுதிவாக்கில் ஜூனியர் எடிட்டர், "இக்கட ரா" என்று சொல்லி, கம்ப்யூட்டர் முன் என்னை உட்கார வைத்து, லக்கி லூக்கின் ஒரு பக்கத்திற்கு DTP அடித்து, கோரல் டிராவில் செட் செய்து, வண்ணத்திலான பக்கத்தைக் காட்டிய போது ஆந்தை முழி, அசுர முழியாகிப் போனது. "இது என்னடா கூத்து, இத்தனை பேர் இத்தனை காலம் செய்ததை இந்த ஒரு சதுர டப்பி செய்து முடித்துவிடுகிறதே!" என்று வாயைப் பிளக்கத்தான் முடிந்தது. ஆக ஒற்றைக் கம்ப்யூட்டரும், ஒரு திறன் வாய்ந்த ஆபரேட்டரும் இருந்தாலே 'ஆடரா ராமா ..தாண்டரா ராமா' என்று நமக்கான பல்டிகளை அடித்துவிடலாம் என்ற தைரியம் துளிர்விட்டதன் பிற்பாடு, நமது இரண்டாவது இன்னிங்ஸ் துவங்கியது.
"இல்லை இல்லை இல்லை, கையால் அச்சுக்கோர்த்தால் தவிர நாம் எதிர்பார்க்கும் துல்லியம் கிடைக்காது; ஓவியர்கள் அழகாய்ப் பணி செய்தாலன்றி காமிக்ஸ் தேறாது; திறன் வாய்ந்த பிராஸஸிங் கலைஞர்கள் இல்லாமல் டிஜிட்டலில் செய்யும் பிராஸஸிங் எல்லாம் நமக்கு லாயக்குப்படாது" என்றுதான் நானுமே துவக்கத்தில் கழுத்தைச் சாய்த்தேன். ஆனால், "இதுதான் முன்செல்லும் பாதை, பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் இதை அரவணைக்காவிட்டால் நஷ்டம் உனக்கே" என்பதை டெக்னாலஜி பறைசாற்றியது.
So, அங்கு துவங்கிய நமது இரண்டாவது இன்னிங்ஸில் human skills என்பது பேனா பிடிக்கும் துவக்கக் கட்டத்தில் மட்டுமே குடிகொண்டிருந்தது. அட்டைப்படம் வரையும் கலைஞர் கூட கம்ப்யூட்டரிலேயே தான் சித்திரங்களைப் போட்டுக் கொடுத்தார். அவருமே ஒரு தோர்கல் ராப்பரில் சொதப்பித் தள்ளிய மறுநாள், நாம் கழுவிக் கழுவிக் காக்காய்க்கு ஊற்றியது இன்றைக்கும் நினைவுள்ளது. And, அந்த ஓவியர் நமக்கு போட்டுக் தந்த கடைசிச் சித்திரமாகவும் அதுவே அமைந்து போனது. இன்றைக்கோ ஒரிஜினல் ராப்பர்களை நம்மவர்கள் மேம்படுத்துகிறார்கள். and, கடந்த சில மாதங்களாக அந்தப் பணிக்கு AI வழிகாட்டியும் வருகிறது. சின்னதாய் ஒரு உதாரணம் இதோ.
IMAGE COMING......
நீங்கள் பார்க்கும் முதல் சித்திரமானது அந்நாட்களில் நமது ஓவியர் போட்ட அட்டைப்படம். அதையே AI வசம் ஒப்படைத்து, "தம்பி டேய், காலத்திற்கு ஏற்றாற்போல இதை மாற்றம் பண்ணித் தாடா" என்ற மூணாவது நிமிடத்தில் விட்டெறிந்த சித்திரம் இது. சொல்லுங்களேன் guys, இந்த இரண்டில் உங்கள் தேர்வு எதுவாக இருக்குமோ? ஓவியர் போட்டதுதான் வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக பல மடங்கு அழகானதொரு AI சித்திரத்தை ஒதுக்கத்தான் தோன்றுமா?
முன்னொரு காலத்தில் பெரிய புத்தகக் கடைகளுக்குள் புகுந்தால், கடையின் ஒரு கணிசமான பகுதிக்கு ஆர்ச்சீஸ் வாழ்த்து அட்டைகள் (Greeting Cards) இடம் பிடித்திருக்கும். பொங்கல், தீபாவளி, பக்ரீத், கிறிஸ்மஸ், ரம்சான், நல்ல நாள், கெட்ட நாள், திருமணம், பிறந்தநாள் என சகலத்திற்கும் ரகம் ரகமாய், வித விதமாய், கலர் கலராய் கார்டுகள் அடுக்கி வைத்திருப்பார்கள். "ராக்காயி வீட்டு கண்ணுக்குட்டி இன்னைக்கு மோ என்று கத்தியது, அதற்கு ஒரு கார்டு வேண்டும்" என்றால் கூட அங்கே கார்டுகள் வைக்கப்பட்டிருக்கும். கொஞ்சமாய் யோசியுங்கள், அவற்றையெல்லாம் எந்தக் காக்கா எங்கே தூக்கிப் போய், எங்கே பதுக்கி வைத்திருக்கக் கூடும்? Whatsapp என்றதொரு ராட்சசன் உட்புகுந்த மறுநாளில், கடுதாசி எழுதும் கலையே காணாமலே போனது. இன்றைக்கு நம்ம தலைவர் கூட ரீம் கணக்கில் பேப்பர்களை வாங்கி எழுதித்தள்ளாது, ரிலாக்ஸாய் படுத்தபடியே பத்து வரிகளைத் தட்டி விட்டு முடித்துவிடுகிறார். நல்ல நாள், பண்டிகையா? கடமை கண்ணாயிரமாய் நட்பு வட்டங்களுக்கு ஒரு வாழ்த்தை வாட்ஸப்பில் தட்டிவிட்டால், வேலை முடிந்தது. "இல்லைங்க, இந்த சைத்தானை நான் ஏத்துக்கிறதா இல்லை; நான் இன்னமும் லெட்டர் தான் போடுவேன், கிரீட்டிங் கார்டு தான் அனுப்புவேன்" என்று நம்மில் யாரேனும் சொல்லவாவது முனைகிறோமா? அட, இந்த AI சார்ந்த விவாதத்தின் துவக்கப்புள்ளியே நண்பர் அனுப்பிய வாட்சப் சேதி தானே?
இல்லப்பு...படைப்புகளுக்குள் AI புகுவதை தான் நாங்க எதிர்க்கிறோம் ; மற்றபடிக்கு டெக்னாலாஜியும் நாங்களும் பாய்-பாய் தான் என்கிறீர்களா? ரைட்டு...நாம் AI பக்கம் போகவில்லை என்றே வைத்துக்கொள்வோம். ஆனால் நமக்கு வந்து சேரும் அயல்தேசக் கதைகள், அவற்றின் பின்னணிகள், அவற்றில் இருக்கக்கூடிய AI சார்ந்த உழைப்புகள் பற்றி நமக்கு ஏதாச்சும் தெரியவாவது வாய்ப்புள்ளதா ? Not at all என்பதே பதில்!
ஒரு காமிக்ஸின் உருவாக்கம் என்பது ஒருநூறு பரிமாணங்கள் கொண்டது. புதிதாய் ஒரு கதாபாத்திரத்தை உருவகப்படுத்துகிறார்கள் என்று வைத்துக்கொள்ளுங்களேன்: அந்தத் தொடரில் வரக்கூடிய முக்கிய கதை மாந்தர்கள் அனைவருக்கும் உரித்தான குணாதிசயங்கள், உடல்வாகு, முகவெட்டு, கேச அழகு என்று வண்டி வண்டியான சமாச்சாரங்களை ஓவியருக்கு வழங்கி, சாம்பிள்களை வரையச் சொல்லி அவரை வாரக்கணக்கில் பெண்டை நிமிர்த்துவார்கள்.ஹீரோ நேராகப் பார்க்கட்டும், குறுக்கால நிற்கட்டும், பின்னே திரும்பிப் பார்க்கட்டும், கையைத் தூக்கட்டும், காலை உதைக்கட்டும் என்று விதவிதமான ஆங்கிள்களில் அவரை வரைந்து சரிபார்ப்பது முதல் படி. இந்தக் கடின உழைப்புகள் எதுவுமே நாம் பார்க்கப்போகும் இறுதிப் பக்கங்களில் கிஞ்சித்தும் பிரதிபலிப்பதில்லை. ஏனெனில், இவையெல்லாமே பின்னணியில் உள்ள ஒத்திகைகள் மாதிரியானவை மட்டுமே! இன்றைக்கோ, AI வசம் அதே விவரங்களைத் தந்தால், அடுத்த பத்தாவது நொடியில் அந்த ஹீரோவின் கொள்ளுப்பேரன் எப்படி இருப்பான் ? என்பது வரை கண்ணில் காட்டிவிடும். "ஹீரோ ஓங்கி ஒரு கராத்தே வெட்டு வெட்டினார் என்றால் எப்படி இருக்கும்?" எனப் பார்க்க நினைத்தால், அவர் கராத்தே வெட்டு மட்டுமல்ல, கழுதையில் சவாரி செய்தாலுமே எவ்விதம் இருக்கும் என்று கண்முன்னே காட்டிவிடும்.
அடுத்த கட்டமாய், ஒரு நெடுங்கதையை 50 /100, 200 அல்லது 300 பக்கங்களில் பிரித்து வரையும்போது 'Pacing the story' என்ற பணி பிரதானமானது. அதாவது, ஒரு கட்டத்திலிருந்து அடுத்த கட்டத்திற்கு, அதற்கு அடுத்ததற்கு என கதையை நகர்த்திச் செல்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதுதான் அந்தப் பணி. ஒரு லக்கி லூக் கதையென்றே வைத்துக்கொண்டால்:
- அவர் ஊருக்குள் புதிதாய் வரும்போது ஒரு ஷாட் ......
- அடுத்து, சலூன் தூரத்தில் தெரிவது போல இவர் வீதியில் வந்துகொண்டிருப்பது போல கதையைக் கொஞ்சம் முன்னெடுத்துச் செல்வது........
- அதன்பின்பாய்ச் சலூனுக்குள் ஏதோ கலவரம் நடந்துகொண்டிருந்தால் அங்கே அடிதடி நடப்பது போலான சித்திரம்.......
என்று ஒரு கதையை நெடுக இட்டுச் செல்வது ஒரு ஸ்கிரிப்ட்ரைட்டரின் பல வார காலத்து மண்டைக் குடைச்சலான பணி. Again, இது நமக்குக் கண்ணில் தட்டுப்படவே போவதில்லை; ஏனெனில், இதுவுமே பூர்வாங்கப் பணிகளில் சேர்த்தியானதுதான். ஆனால் இன்றைக்கோ, கதையின் ஸ்கிரிப்ட்டை AI வசம் தந்துவிட்டு, "இத்தனை பக்கங்களுக்கு இதை இட்டுச் செல்ல வேண்டும்" என்ற விவரத்தையும் சொல்லிவிட்டால், "ஒரு பக்கத்திற்கு எத்தனை frames வேண்டும்?" என்று மட்டுமே கேட்கும். அந்த விவரத்தையும் சொல்லிவிட்டால், கதையை நகர்த்தும் சகல பணிகளையும் அண்ணாத்தே பார்த்துக்கொள்வார். மேல் நோவ, நனைத்து சுமந்து கொண்டிருந்த பணிகளில் பலவற்றைச் சொடுக்கு போடும் நேரத்தில் முடிக்க சாத்தியமாகிவிடும் பட்சத்தில், படைப்பாளிகளுக்கு மெய்யாலுமே கவனம் தர வேண்டிய கிரியேட்டிவ்வான சமாச்சாரங்களில் ஈடுபட எத்தனை சுதந்திரமும் அவகாசமும் கிடைத்துவிடும்?!
ஒரு மேஸ்திரி சிமெண்ட் கலவை போடுவதிலிருந்து, செங்கல்களைத் தூக்கி அடுக்குவதிலிருந்து, ஜன்னல்களைப் பொருத்துவதிலிருந்து, கதவு நிலைகளைச் சாத்துவதிலிருந்து சகலத்தையும் தானே செய்யும் அவசியமின்றி, மேற்பார்வை பார்த்தபடியே பிசிறுகளைச் சரிசெய்துகொண்டு வழிநடத்துவது என்பது எத்தனை ஆராமான விஷயம் ?. இத்தகையதொரு வாய்ப்பு கிட்டும் போது, - "இல்லீங்கோ AI இந்தப் பக்கமே வரப்படாது !" என்று மறுக்கவாவது முடியுமா? AI என்பது பல இடங்களில் ஒரு பொதி சுமக்கும் கழுதையே தவிர, மனிதனின் கற்பனைகளை வறளச்செய்யும் ஒரு இடரே அல்ல!
மிகச் சமீபமாய் நமது வாட்ஸ்அப் கம்யூனிட்டியில் ஒரு டாம் & ஜெர்ரி வீடியோவைப் பகிர்ந்திருந்தேன். ஒன்றே முக்கால் நிமிடங்கள் மட்டுமே ஓடக்கூடிய அந்த வீடியோ, இந்த எலியும் பூனையும் லூட்டி அடிக்கும் கார்ட்டூன்களைப் பார்த்து ரசித்திருக்கக்கூடியவர்களின் ஈரக்குலையை உருவியெடுக்கும் ஆற்றல் கொண்டதாக இருந்தது. ஒற்றை வரி வசனம் கூட இல்லாமலே, கண்கள் வேர்க்கவும், இதயம் இனிக்கவும் அந்த வீடியோ செய்திருந்தது. And surprise, surprise... அதை முழுக்க முழுக்க உருவாக்கியிருந்தது AI தான்! Hollywood-ன் அற்புதக் கலைஞர்களுக்கே சவால் விடும் தரத்திலிருந்த படைப்பை ஆதி முதல் அந்தம் வரை செயற்கை நுண்ணறிவால் நடத்த முடிகிறது எனில், பாராட்டுவதில் தப்பே இல்லையே மக்களே?! Credit where it's due!! ஒரு சில நாட்களுக்கு முன்பாகக் கூட பிரபல Star Wars திரைப்பட வரிசைகளை உருவாக்கியிருந்த டைரக்டர் AI தான் திரையுலகின் எதிர்காலமே, படங்கள் எடுப்பது இன்றைக்கு இதன் உதவியுடன் ரொம்பவே சுலபமாகிவிட்டது என்று சொல்லியிருந்தார். உலகத்துக்கே பொழுதுபோக்கின் முன்னோடியான Hollywood இந்த ஆற்றலை அரவணைத்து ஏற்றுக்கொள்ளும்போது, நாம் மட்டும் கோபித்துக்கொண்டு நிற்பதில் என்ன லாபம் இருக்கக்கூடும் folks?
And விஷயத்துக்கு வருகிறேனே, "AI நல்லது, AI வல்லது, AI நாலும் தெரிந்தது" என்றெல்லாம் நான் டமுக்கடிக்க பிரியப்படவே இல்லை. And இது ஆறு தம்மாத்துண்டு புத்தகங்களுக்கான sales pitch-ம் அல்லவே அல்ல. போன பதிவிலேயே அழுத்தம் திருத்தமாய் நான் சொல்ல முனைந்திருந்தது : இந்தப் படைப்புகளின் Target audience நாமே அல்ல என்பதைத்தான். கையில் வெறும் 20 ரூபாயை வைத்துக்கொண்டு வரும் பிள்ளைகளுக்கு அப்துல் கலாமின் ஒரு குட்டி comics-ஐ கொடுக்க முடிந்தால் அந்த மட்டிற்கு நமக்குத் திருப்தியே. "அக்கா, சிறுத்தை மனிதன் book படித்தேன், அதில் அடுத்தது வந்திருக்கா?" என்று கேட்டு வரும் பிள்ளைகளுக்குக் கொஞ்சமே கொஞ்சமாய் அதைவிடவும் better தரத்தில் உள்ள Arnold-ஐ தந்தால் ஒரு திருப்தி.
20 ரூபாய்க்கு இன்றைக்கு முறைப்படி உரிமைகள் வாங்கி, தரமான கதைகள் எவற்றையும் வழங்கிட கிஞ்சித்தும் வாய்ப்புக் கிடையாது. நடப்பாண்டின் Gen Z இதழ்களையே எடுத்துக்கொள்ளுங்களேன், ஒரு சிறு கதையே அந்த குட்டி size-ல் 32 பக்கங்களுக்கு ஓடிவிடுகிறது. And அதனை 40 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறோம். அந்த விலைகளைக் கண்டாலே பிள்ளைகள் ஒதுங்கி விடுகிறார்கள் என்னும்போது, Rs.20 என்ற விலையை முதலில் நிர்ணயம் செய்து கொண்டு அதற்குள் என்ன படியும் என்றே சிந்திக்க வேண்டிப்போனது. நாமாகவே உருவாக்கும் சரக்கு என்னும்போது இதற்கு Royalty-யும் கிடையாது, எந்த size-இல் போடணும் போடக்கூடாது என்ற கட்டுப்பாடுகளும் கிடையாது, இஷ்டப்பட்ட printrun சாத்தியமே. So முழுக்க முழுக்கவே பிள்ளைகளுக்கு comics சார்ந்த ஒரு பரிச்சயம் ஏற்படுத்தித் தரவே இந்த முயற்சி.
And again, டாக்டர் கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றைத் தவிர்த்த பாக்கி ஐந்து புத்தகங்களுமே ஜூனியர் எடிட்டரின் கற்பனைக் குழந்தைகள். அந்த அர்னால்டு & அப்ரசன்டி ஜோடியினை வரும் நாட்களில் இன்னும் கொஞ்சம் மெருகேற்றினால், அட்டகாசமானதொரு cartoon ஜோடியாக மிளிர்ந்திட சர்வ நிச்சயமாய் வாய்ப்புகள் உண்டு என்றே சொல்லுவேன்.
Make no mistake folks - இது நடைபழக முயற்சிக்கும் ஒரு குழந்தையின் ததக்கா புத்தக்கா நடை மாத்திரமே என்பதில் எவ்வித சந்தேகமும் தேவையே கிடையாது. கண்ணில் ஒரே ஒரு சொட்டு விளக்கெண்ணெயை விட்டுக்கொண்டு பார்த்தாலே ஒரு நூறு பிழைகள் தென்படாது போகாதுதான். ஆனால் இங்கு நடைமுறை எதார்த்தம் பற்றியும் உங்களுக்குச் சொல்லிட வேண்டியுள்ளது.
கபிஷ் கதைகளை கடந்த இரு வருடங்களாக நாம் வெளியிட்டு வருவது உங்களுக்கு தெரிந்ததே. இதில் சிக்கல் என்னவெனில் இந்த தொடருக்கான உரிமைகளை வைத்திருக்கும் நிறுவனத்திடம் கபிஷின் கோப்புகள் சுத்தமாய் கிடையாது. உரிமைகள் மாத்திரமே கைமாறியுள்ளனவே தவிர ஆங்காங்கே சுற்றில் இருக்கக்கூடிய பழைய பிரதிகளிலிருந்து scan செய்து முயன்றதை ஆளாளுக்கு ஒப்பேற்றிக் கொண்டிருக்கிறோம். இந்த சூழல் தொடர வேண்டாமே என்ற எண்ணத்தில் ஒரிஜினல் ஓவியரிடமே மேற்கொண்டு புது கதைகள் உருவாக்கும் திட்டத்தை முன்மொழிந்து பார்த்தோம். 'கபிஷ் வந்துச்சு, சீகால் ஓடுச்சு, பந்திலா சாத்துச்சு' என்ற ரீதியில் சிம்பிளான சிறுகதைகளை எழுதி படம் போட்டுத் தருவதாக இருந்தால், 32 பக்கங்கள் கொண்டதொரு கபிஷ் இதழுக்கு அவர்கள் கோரிய தொகை நெருக்கி Rs.50,000. யோசித்துத்தான் பாருங்களேன். இத்தனை பெரிய தொகையைத் தந்து படைப்புகளை உருவாக்கி அவற்றை போணி பண்ணுவது ஒற்றை பிராந்திய மொழியில் மட்டுமே இயங்கி வரும் நமக்கு நடைமுறைக்கு ஒத்தாவது வருமா?
இதோ இப்போது விக்ரம் ரெடி செய்துள்ள அப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாறு வெறும் 16 பக்கங்கள் + இரண்டு அட்டைப்படங்கள், ஆக 18 பக்கங்கள். இந்த 18 பக்கங்களை ஒரு தரமான, ஆற்றலான ஓவியரிடம் தந்து பணி செய்திருக்கும் பட்சத்தில், குறைந்தபட்சமாய் ரூபாய் 25,000 பிடித்திருக்கும். And அது மிக நியாயமான தொகையுமே தான்! ஆனால் இந்த 25,000 ரூபாயை ஒரே ஒரு மொழியில் நாம் வெளியிட்டு ஈடு செய்வது என்பது கனவிலும் சாத்தியமாகா சமாச்சாரம். But இன்றைக்கோ, நாமே உருவாக்க முடிந்துள்ளது ; ஒரு சின்ன விலையில் பிள்ளைகளிடம் கொடுக்கவும் வாய்ப்பு அமைந்துள்ளது. இதுதான் நமது இந்த திட்டமிடலின் பின்னணியே தவிர, அடுத்த கட்டத்தில் நாமாக கதைகளை உருவாக்கி லயனுக்குள் / முத்துவுக்குள் புகுத்தப் போகிறோம் என்றோ நீங்கள் 'டர்'ராக அவசியமே இல்லை. உலகத்தரத்திலான படைப்புகளையே போட்டுவிட்டே, மாதா மாதம் வாசிக்க உங்களை கையைப் பிடித்து இழுத்துக் கொண்டிருக்கும் வேளையில், இந்த அமெச்சூர் முயற்சிக்கு ரெகுலர் களத்தை தந்திடுவோம் என்று மெய்யாலுமே நினைக்கிறீர்களா?
Oh yes..., வரும் நாட்களுக்கென இன்னும் நிறையவே திட்டமிடல்களோடு ஜூனியர் எடிட்டர் பணியாற்றிக் கொண்டுதான் இருக்கிறார். அவை முழுக்க முழுக்கவே ஆகச் சின்ன விலைகளில், சிறார்களின் கைகளைப்போய் சேர வேண்டும் என்ற நோக்கத்தில் மாத்திரமே உருவாக்கவும்படும், மார்க்கெட்டிங் செய்யவும்படும். So, இவற்றை பத்தோ, பன்னிரண்டோ வயது சிறார்களின் பார்வையில் இருந்து பார்க்கத்தான் வேண்டுமே தவிர்த்து, ப்ளூ சொக்காய் போட்டபடியே நாம் அலசிட முகாந்திரங்கள் இருப்பதாய் நான் நினைக்கவே இல்லை. நமக்குப் தேவை மிகச் சின்ன விலைகளில், அழகான சித்திரங்களுடன் கலரிலான இதழ்கள். அவற்றை வழங்கிட அயல்நாட்டுப் படைப்புகள் சுகப்படாது எனும் போது, எஞ்சியிருக்கக்கூடிய ஒரே வாய்ப்பு பப்ளிக் டொமைனில் இருக்கக்கூடிய புராதன காமிக்ஸ்களை கையில் எடுப்பது, அல்லது இன்றைய டெக்னாலஜியைக் கொண்டு நாமாகவே உருவாக்க முனைவது. We chose the latter ! Simple as that!
இந்த AI முயற்சியில் இன்னொரு வசதியுமே உண்டு. இவற்றை நாம் இஷ்டத்திற்கு டிஜிட்டலிலும் விலைகளின்றியே சுற்றில் விட முடியும். சமூக வலைத்தளங்களில் கணிசமாய் நேரம் செலவிடும் புது வாசகர்களை விலைகளில்லாத இந்த முயற்சிகள் எட்டிட முடிந்தால், அந்தமட்டிற்கு காமிக்ஸ்களுக்கு வெற்றி தானே ?1 So, மாற்றங்கள் - முன்னேற்றங்கள் என்ற முதல் நொடியில் நாம் ரிவர்ஸ் கியர் போடுவது தேவையற்ற பீதி என்பேன். டைனோசார் காலத்து ஆசாமியான நான் இன்னும் "புளகாங்கிதம் அடைந்தேன்"....ஸ்பஷ்டமாய் உணர்ந்தேன் "என்றெல்லாம் வசனங்கள் எழுதித் திரியும் வரையிலும், எதுவுமே ஒற்றை ராத்திரியில் திடுதிடுபென மாறிவிடாது. AI வரப்போகிறது என்பது சூழல் அல்ல, அது எப்போதோ வந்தே விட்டது !! எப்போதோ நம்மைச் சுற்றி ஆறாமாய் காலூன்றித் திளைத்து வருகிறது.
சின்னதொரு side track :
இதுவரையிலும் மருத்துவத்துறையில் எழுதப்பட்டிருக்கக்கூடிய லட்சோபலட்ச புத்தகங்களையும் படித்ததொரு டாக்டர்...! இதுவரையிலும் மருத்துவத்துறையில் பிரசண்ட் செய்யப்பட்டுள்ள ஆய்வுத் தாள்களின் சகலத்தையும் கரைத்துக் குடித்ததொரு டாக்டர்...! ஆனால் ஆயுசுக்கும் கையில் ஒரு ஸ்டெதாஸ்கோப்பையோ, ஒரு தெர்மாமீட்டரையோ ஏந்திக்கூட இருக்காததொரு டாக்டர்! அவர் யார் ?
இந்த டாக்டர் 2027 முதலாக உலகின் முதல் நாடான அமெரிக்காவில் Clinical Assistant ஆகப் பணியாற்றப் போகிறார். அவர் வேறு யாரும் அல்ல ..... AI டாக்டர்களே ! வருஷா வருஷம் இந்தியாவிலிருந்தும், பிலிப்பைன்ஸிலிருந்தும், இன்ன பிற நாடுகளிலிருந்தும் டாக்டர்களை இறக்குமதி செய்வதற்குப் பதிலாக, AI டாக்டர்களை நடைமுறைக்குக் கொண்டுவர அமெரிக்காவில் தீர்மானம் செய்யப்பட்டுள்ளதாம். ஒரு பொம்மை புக்குக்குள் AI புகுந்தாலே பதறியடிக்கின்றோம்; நமது ஆரோக்கியத்தையே அதனிடம் ஒப்படைக்கும் ஒரு நாள் புலர்ந்தால் என்னவென்போம்? Relax guys.... மாற்றங்களை தம் கட்டி எதிர்க்கும் நேரத்திற்கு, அதனை நமக்கு நல்லதொரு சேவகனாய் பயன்படுத்திக் கொள்வதே விவேகம் என்பேன். மாறாக அதனைத் தவிர்த்தே தீருவோம் எனும் பட்சத்தில், அவன் தோளிலேறி உலகமே நம்மைத் தாண்டி எங்கேயோ முன்சென்றிருக்கும். அப்புறமாய் நாம் திடுதிடுவென பின்னே விரட்டிக்கொண்டு ஓடினாலும் எட்டிப்பிடிக்க சாத்தியமாகுமா? புனித மனிடோவுக்கே வெளிச்சம்!
நம் தடங்களில், நம் பயணங்களில் எப்போதும் போலவே கதைகளும் பணிகளும் தொடர்ந்திடும். And நாம் தேர்வு செய்து, வெளியிடும் கதைகள் சகலமுமே கிட்டத்தட்ட ஐந்தோ, பத்தோ, இருபதோ ஆண்டுகளுக்கு முன்பானவை என்னும்போது, அவற்றினுள் AI-யின் தாக்கங்கள் பெருசாய் இருக்கவும் வாய்ப்பில்லை. So, நிம்மதியாய், தைரியமாய், சலனங்களின்றி, சங்கடங்களின்றி, நெருடல்களின்றி வாசிப்புகளை நேசிப்போம்.
Bye all... இன்று காலை கோவையில் புத்தக விழாவுக்குப் போகும் முன்பாய் இந்தப் பதிவை போட நினைத்தேன் - glad I did! See you around! Have a great weekend!
அப்புறம் TERRIFIC TEX தெறிக்க விட ரெடி.... இதோ அட்டைப்பட preview 😎... சந்தா ரயிலில் நீங்க இடம் போட்டாச்சுங்களா? No time like now please 🙏

Hi Sir
ReplyDeleteவணக்கம் சார்
ReplyDelete😘😘💐🥰Me in💐🙏👍😘
ReplyDeleteசூப்பர்
ReplyDeleteMe 3🥰😘👍
ReplyDelete❤️
ReplyDeleteஹைய்யா புதிய பதிவு...
ReplyDelete10 th
ReplyDeleteவணக்கம் சார்
ReplyDeleteஆஜர்
ReplyDeleteஎந்த போலீஸ் ஸ்டேஷன் சத்யா 😊
Deleteஎல்லையில் ஒரு யுத்தம் அட்டைப்படம் தெறிக்குது...
ReplyDelete🙋🏻♂️
ReplyDeleteAgreed sir
ReplyDeleteஇரு பாகங்களும் ஒரே மாதத்தில்தானே சார்...
ReplyDeleteYes sir
Deleteடன் சார்...
Deleteஇந்த பதிலுக்காக தான் இத்தனை நாள் காத்திருந்தேன்... worth sir..
ReplyDeleteஅட்டைப்படம் சூப்பர் சார் 👍💐🙏😘
ReplyDeleteசெம்ம்ம்மமமம பதிவு சார்...
ReplyDeleteஒரு காமிக்ஸ் பக்கத்த ப்ரிண்ட் பண்றதுக்கு எவ்வளவு வேலை பின்னாடி இருக்குன்னு தெரியும் போது பிரமிப்பா இருக்கு...
இந்த பதிவ அப்படியே காப்பி பேஸ்ட் பண்ணி ப்ரிண்ட் எடுத்து வச்சுக்க போறேன்...
அதே மாதிரி கம்யூனிட்டில AI காமிக்ஸ்க்கு thumbs down கொடுத்த பிரகஸ்பதிகளில் நானும் ஒருவன். But யோசிச்சு பார்த்தா எல்லாத்துலேயும் பழைச கிண்டல் பண்ணி புதுசு பெரும பேசுற நானும் AIய காமிக்ஸ் பண்ண allow பண்ண விரும்பாதது தவறுன்னு புரியுது...
மாற்றம் ஒன்றே மாறாததுங்குற கோட்பாடுக்கு ஏத்த மாதிரி மனச கல்லாக்கி கிட்டு AI Comicsக்கு ரத்ன கம்பளம் விரிச்சுட வேண்டியதுதான்...
செம டாக்டர்.. Hats off to you
Deleteஅட்டையே ஆசை கொள்ள வைக்கிறதே.. ஆஹா.
ReplyDeleteவந்துட்டேன்
ReplyDeleteமாற்றம் என்ற சொல் மட்டுமே மாறாதது
ReplyDeleteஉள்ளேன் ஐயா..!!
வணக்கம் நண்பர்களே...
ReplyDeleteடெக்ஸ் அட்டைப்படம் தெறி... 💥💥💥
ReplyDeleteயேயப்பா!! அந்தக் காலத்துல பிரின்டிங் சமாச்சாரமெல்லாம் எவ்ளோ கஷ்டமான காரியமா இருந்திருக்கு!! படிக்கப் படிக்க மலைப்பா இருக்குதுங்க சார்!😯
ReplyDeleteகாலதோடு ஒத்துப் போகணும்றதையும், AI இனி நம் வாழ்க்கையின் ஒரு பகுதியா இருப்பதைத் தவிர்க்க முடியாதுன்றதையும் ரொம்பத் தெளிவா விளக்கியிருக்கீங்க சார்... சூப்பர்!!💐💐💐💐
ம்... வந்து... இந்த பதிவு நீங்களே போட்டதா.. அல்லது AI ங்களாங் சார்? 🧐
ஆமா நானும் அந்த கால பிரிண்டிங் பற்றி வியந்து பார்த்தேன். எவ்வளவு உழைப்பு மற்றும் கடினம்.
Deleteடெக்ஸ் அட்டைப் படம் - அட்டகாசம்!!😍😍😍
ReplyDeleteசார், சிவகாசி சித்திர வைத்தியர்கள் இன்றைக்கு கோவை விஜயமாங் சார்?
ReplyDeleteHi..
ReplyDelete// guys.... மாற்றங்களை தம் கட்டி எதிர்க்கும் நேரத்திற்கு, அதனை நமக்கு நல்லதொரு சேவகனாய் பயன்படுத்திக் கொள்வதே விவேகம் என்பேன் //
ReplyDeleteமாற்றம் என்ற சொல் ஒன்றே மாறாததது,மகாபாரதத்தில் கிருஷ்ணன் பீஷ்மர் இடையே வரும் உரையாடல் ஒன்றில்,காலத்திற்கு ஏற்ப மாற்றத்தை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்,இல்லையேல் காலம் அவர்களை ஒதுக்கித் தள்ளும் என்பார்,அதற்கேற்ப காலமாற்றத்தில் வரும் வசதிகளை நம் வளர்ச்சிக்கு ஏற்ப உட்படுத்தி நம்மை நாம் தகவமைத்துக் கொள்வோமாக...
அருமையான விளக்கப் பதிவு. ஆரம்ப கால அச்சுத் துறையின் நுணுக்கங்கள் பற்றிய விளக்கங்கள் பிரமிக்க வைத்தன.
ReplyDeleteமாற்றம் ஒன்றே மாறாதது.
உங்கள் விளக்கத்திற்கு நன்றி சார்.
சூப்பர் சார் மலைக்க வைக்குது அந்தக்காலம்....ஏதோ ஜெராக்ஸ் எடுத்து தருவது...பைண்ட் பன்னுவது என நினைத்த எனக்கு சகலத்தையும் புட்டு வைத்தமைக்கு நன்றிகள்...
ReplyDeleteராயல்ட்டிய பாக்கைல நிச்சயமா தூள் கிளம்பலாம் நம் முயற்ச்சி...விமர்சனங்கள் ஒரு கை பாக்கலாம் நம்மை செதுக்கும் வகையிலிருந்தால்....ஒதுக்கும் வகையில் இருந்தால் ஒதுக்க வேண்டியதுதான்...வாழ்த்தேக்கள் விக்ரம்
A I பற்றி நமக்கு அவ்வளவு தெரியாது.
ReplyDeleteஆனால் குறைவான விலையில் வருகிறதே!
அதுவே ஒரு சந்தோசம்......
Ai காமிக்ஸ் மூலம் அப்துல்கலாம் காமிக்ஸ் உருவாக்க முடியும் போது 20ல் ஒன்னு என்ற விகிதம் டானிக் போன்று முயற்சி செய்து பார்ப்பதில் தவறு ஏதும் இல்லையே...
Deleteபடைப்பாளிகள் தான் Ai உருவக்குதலில் நமது முன்னாடிகள்.
அப்புறம் எப்போதுமே ஆர்ட்டிஸ்ட்கள் இங்கே இந்தியாவில் Tinkle தவிர ஜெயித்தது இல்லையே 🥺
அந்த டெரிஃபிக் டெக்ஸ் லோகோ அட்டையில் இருக்காதா சார்
ReplyDelete
ReplyDelete///இதுதான் நமது இந்த திட்டமிடலின் பின்னணியே தவிர, அடுத்த கட்டத்தில் நாமாக கதைகளை உருவாக்கி லயனுக்குள் / முத்துவுக்குள் புகுத்தப் போகிறோம் என்றோ நீங்கள் 'டர்'ராக அவசியமே இல்லை. உலகத்தரத்திலான படைப்புகளையே போட்டுவிட்டே, மாதா மாதம் வாசிக்க உங்களை கையைப் பிடித்து இழுத்துக் கொண்டிருக்கும் வேளையில், இந்த அமெச்சூர் முயற்சிக்கு ரெகுலர் களத்தை தந்திடுவோம் என்று மெய்யாலுமே நினைக்கிறீர்களா?
Oh yes..., வரும் நாட்களுக்கென இன்னும் நிறையவே திட்டமிடல்களோடு ஜூனியர் எடிட்டர் பணியாற்றிக் கொண்டுதான் இருக்கிறார். அவை முழுக்க முழுக்கவே ஆகச் சின்ன விலைகளில், சிறார்களின் கைகளைப்போய் சேர வேண்டும் என்ற நோக்கத்தில் மாத்திரமே உருவாக்கவும்படும், மார்க்கெட்டிங் செய்யவும்படும்.//
உங்கள் மேல் கடுமையான சீற்றம் ஏற்படுத்திய வரிகள் இவைகள் தான் சார்.
உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடுவது மட்டுமல்லாமல் அதற்குள் ஜூனியர் எடிட்டரையும் இழுக்கிறீர்கள்.
உலகத் தரம் வாய்ந்த படைப்புகளை உள்ளூர் படைப்புகளை நம்மால் உருவாக்க முடியாது என்று நீங்களே ஏன் நினைத்துக் கொள்கிறீர்கள். அதற்கான ஒரு முயற்சியும் நீங்கள் எடுக்காத போது நீங்கள் ஏன் அப்படிப்பட்ட முடிவை எடுக்கிறீர்கள்?
பிள்ளையார் சுழி போடும் ஜூனியர் எடிட்டர் சிறியவர்களுக்கு மட்டும் தான் படைப்பை உருவாக்க முடியும் நம் வாசக வட்ட பெரியவர்களுக்கான படைப்பை உருவாக்க முடியாது என்ற எண்ணம் உங்கள் மனதில் ஏன் வந்தது?
இரு பெரும் மாநில கட்சிகள், தேசிய கட்சிகள், எண்ணற்ற உதிரி மாநில கட்சிகள் அனைத்தையும் தனியாகவே எதிர்த்து நின்ற ஒரு மனிதனின் தன்னம்பிக்கையை சமீபத்தில் நாம் பார்க்கவில்லையா?
பெரியவர்களுக்கும் ஆன கதையை தயவுசெய்து உருவாக்க முயற்சியாவது செய்து பாருங்கள். இந்தியாவில் தமிழகத்தில் உருவான ஒரு கதையை வெளிநாட்டு பதிப்பகங்கள் ராயல்டி கொடுத்து வாங்கின சகாப்தத்தை நீங்களும் ஜூனியர் எடிட்டரோ அல்லது இருவரும் சேர்ந்தோ உருவாக்கத்தான் முயற்சி செய்யுங்கள்.
எங்கே சார் - கண்ணில் பார்க்கும் முன்னமே தீர்ப்பு எழுதிக் காத்திருக்கும் ஜூரி ஒரு நூறு பேர் தானே இவற்றின் வாசகர்களே?! நாக்கு தொங்கத் தொங்க blog-ல் விளக்கி எழுதிய பின்னரும், அவரவர் நிலைப்பாடுகளில் தொடரவே விரும்பும் போது என்ன செய்வதோ நான்?
Deleteஅயல்தேசப் படைப்புகளின் சகலமும் காப்பியங்களும் அல்ல ; உள்ளூர் தயாரிப்புகளின் சகலமும் டப்சாவும் அல்ல என்பதை மக்கள் புரிந்தாலன்றி யதார்த்த களம் மாறாது!
அந்த அர்னால்டு & அப்ரசண்டி Instagram ID க்கு இப்போது வரைக்கும் எட்டே followers - அதில் ஒருத்தன் நான்! இன்னொருத்தர் நீங்கள்!
ஏற்கனவே சொன்னதுதான். செயற்கை நுண்ணறிவுத் துறையில் நமக்கு வேண்டிய பகுதியில் ஜூனியர் எடிட்டரை ஆன்லைனில் ஒரு டிப்ளமோ ஆவது பெற செய்யுங்கள்.... 🙏
ReplyDeleteநீங்கள் பார்க்கும் முதல் சித்திரமானது அந்நாட்களில் நமது ஓவியர் போட்ட அட்டைப்படம். அதையே AI வசம் ஒப்படைத்து, "தம்பி டேய், காலத்திற்கு ஏற்றாற்போல இதை மாற்றம் பண்ணித் தாடா" என்ற மூணாவது நிமிடத்தில் விட்டெறிந்த சித்திரம் இது. சொல்லுங்களேன் guys, இந்த இரண்டில் உங்கள் தேர்வு எதுவாக இருக்குமோ? ஓவியர் போட்டதுதான் வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக பல மடங்கு அழகானதொரு AI சித்திரத்தை ஒதுக்கத்தான் தோன்றுமா? படங்கள் எதுவும் இணைக்கப்படவில்லையே sir.
ReplyDeleteWaiting terrific tex
ReplyDeleteHi sir ,
ReplyDeleteThanks for explaining all these . We know only the output. There was so much of hard work behind.
On top of it , you are the first lover of our comics . if the quality is not good and you will not proceed.
Happy to know that comics in 20 rupees and if next generation can afford to buy it , it’s great news.wish you and Vikram Sir good luck on this new step .
Tex wrapper looks awesome sir .
Please share about FAB 5 if possible sir
//தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் //
ReplyDeleteபழமொழி
சீனியர். எட்டடி
எடிட்டர் பதினாறடி
ஜூனியர் முப்பத்திரண்டு அடி
ReplyDeleteபல வருடங்கள் கழித்து "
போனெலியின் வாரிசுகளில் ஒருவர் இந்தியாவில் ,தமிழ் நாட்டின் சிவகாசிக்கு சென்றுகாமிக்ஸ் உரிமை வாங்கி வந்ததை சுவை பட எழுதியிருப்பார்..
தலைப்பு .சிங்கத்தின் சிறுவயதில்
// இன்று காலை கோவையில் புத்தக விழாவுக்குப் போகும் முன்பாய் இந்தப் பதிவை போட நினைத்தேன் - glad I did! //
ReplyDeleteநன்றி சார் 🙏🏻
47th
ReplyDeleteகோவை நமக்கு அளித்திருக்கும் வரவேற்பு மகிழ்ச்சியளிக்கிறது. கோவையில் வெற்றி நடை தொடர வாழ்த்துக்கள்
ReplyDeleteஅடேங்கப்பா ...அன்று இவ்வளவு பணி சூழல்கள் முடிந்து தான் எங்களை காமிக்ஸ் வேறு உலகத்திற்கு அழைத்து சென்றது என்பதை இப்பொழுது தான் அறிய முடியும் பொழுது வியப்பே ஏற்படுகிறது சார்...
ReplyDeleteஎன்னை பொறுத்தவரை மனித உருவாக்கத்தில் உருவான இதழோ...அல்லது ஏஐ மூலம் உருவான இதழோ காமிக்ஸ் இதழை வாசிக்கும் பொழுது கதையும் ..சித்திரங்களும் ...என்னை கவர்ந்தால் சரி...ஏஐ மூலம் உருவாக்கும் சித்திரங்களில் உயிரோட்டம் இருக்காது என்பது பெரும்பாலான நண்பர்களின் எண்ணவோட்டம் எனில் மனித உருவாக்கத்தில் உருவான நமது சில இதழ்களே அந்த உயிரோட்டம் இல்லாத சித்திரங்களாக எனக்கு தென்பட்டது உண்டு..உதாரணமாக க்ரையான் வண்ண பென்சில்களில் வரைந்து வந்தது போல் வந்த சில இதழ்கள் எனக்கு அந்த உயிரோட்டத்தை அளித்ததே இல்லை என்பதே உண்மை...எனவே ஏஐ மூலமோ .. ..அல்லது மனித உருவாக்க சித்திரமோ வாசிக்கும் பொழுது என்னை மனம் கவர வைத்தால் சரி...இந்த கருத்தும் ஏஐ மூலமாக நாமும் முழுநீள கதைகள் மூலம் வெளிவருமாயின் அதற்கான எண்ணங்களே இந்த எண்ணங்கள்.....
அப்படி இருக்கும் பொழுது சிறுவர்களுக்காக இவ்வளவு குறைந்த விலையில் ஏஐ மூலம் உருவாக்க பட்ட சித்திரங்களுடன் இந்த கதைகள் வருவது இதன் மூலமாகவேனும் சிறிதுசிறிதாக அவர்களையும் நமது முழுநீள காமிக்ஸ் உலகிற்கு அழைத்து வர முடியும் என்ற சிறுநம்பிக்கையின் வெளிப்பாடான இதழ்கள் இவை என்பதால் நம்மை போன்ற நெடுநாளைய காமிக்ஸ் ரசிகர்கள் அதற்கு ஆதரவு தந்து நம்முடன் அவர்களையும் இணைத்து அரவணைத்து செல்வோம் நண்பர்களே...
டெக்ஸ் அட்டைப்படம் சும்மா பட்டையை கிளப்புகிறது சார்...சூப்பர்...
ReplyDeleteகாமிக்ஸ் துறையின் காலமாற்றத்தினைப் பற்றிய சரித்திரம் அற்புதம் சார்.
ReplyDeleteதற்போது எனது மறுவாசிப்பில் இருக்கும், அண்டர்டேக்கரின் ஒரு வெள்ளை செவ்விந்தியன் கதையின் 79ம் பக்கத்தில், அண்டர்டேக்கரிடம் வில்லன் ஸிட் பீச்சம் பேசும் வசனம் இது." காலத்திற்கேற்றவாறு மாறிக்கொள்ளாதவன் மண்ணில் புதைந்து போவான் ஜோனாஸ்".
ஆசிரியரின் அற்புத வரிகள் இன்றைய பதிவிற்கு ஏகப் பொருத்தம்.
மிகவும் சரி சார்
Deleteஎடிட்டர் சார்
ReplyDeletefab five அப்டேட் இருக்க . எப்போ சார் first புக் வரும் .
ஆகஸ்ட் 1
DeleteAI இல் நீதிபதியே வந்து விட்டபோது, நாம் காமிக்ஸ் இல் பயன்படுத்துவது தவறில்லை என்பது என் அபிப்பிராயம் சார் !
ReplyDelete🥹🥹
DeleteToday we are ruled by younger generation which seems to be better than us. Similarly let's give the Lagaan to younger generation who knows what and how to do.
ReplyDeleteYou are in right path. The free digital comics is going to develop lots of hard core comic fans like us.
One thing that's amazing to know is that Vikram was the brains behind our second innings.
Your maternal grandfather respected your idea and views and helped you. You respect your son's intelligence and instincts. All these are benefitting us.
Thanks to lion comics family who respects younger generation's opinion. It's hard for common people like me.
சார் - நீங்கள் குறிப்பிடும் அதே common people தான் நாங்களும்.....! எனது தாத்தா ரொம்பவே மத்திமமான குடும்பத்தில் பிறந்தவரே....!கையை, காலை ஊன்றிட அவரது இளமைக்காலத்தில் போட்ட கரணங்கள் பற்றி பிறர் சொல்ல நிறையக் கேட்டிருக்கிறேன். So ஒவ்வொரு ரூபாயும் அவரது சொந்த உழைப்பின் பலன்களே! அந்தப் பணத்தை நாமானால் பொத்திப் பாதுகாக்கவே நினைப்போம்!
Deleteஆனால் 17 வயசுப் பேரன் தத்தளிப்பதைப் பார்த்த கணத்தில், துளியும் யோசிக்காது பணத்தைத் தூக்கித் தர நொடியும் தயங்கவில்லை! அவரிடம் வாழ்க்கைப் பாடம் படித்தவன் இன்று வேறு விதமாய் இருந்தாலே வியப்பு சார்!
இன்றைய தலைமுறை தெளிவானவர்கள் - நம்பலாம் தைரியமாய்!