Sunday, June 21, 2026

டாடி'ஸ் டே !

 நண்பர்களே, 

வணக்கம். ஒரு சோம்பலான ஞாயிறு..... காத்திருக்கும் ஜூலை மாதம்....! வழக்கமாய் வாடகை சைக்கிளை எடுத்துக்கொண்டு 'ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே' என்றபடிக்கு ஷேவிங் பண்ணாத சேரனாட்டம் நமது லயனின் துவக்க நாட்களை நினைவுகூர்வது வழக்கம். ஆனால் காதில் தக்காளி சட்னி கசியும் அளவிற்கு பழசுக்குள் தலையை விட்டு முடித்தாயிற்று. பற்றாக்குறைக்கு இப்போதெல்லாம் பூமர் தலைமுறையைச் சேர்ந்த நாம் எதையாச்சும் பழைய நினைப்பில் செய்யப்போய் அது கூடுதலாய் cringe ஆகிடவும் கூடாதே என்ற பயம் சேர்ந்து கொள்கிறது. ஆனாலும் இது ஒரு flashback பதிவாகவே இருந்திடும்..... ஆனால்  சற்றே வித்தியாசமான பாணியில் ! 

இந்த flashback-க்குள் தலையை நுழைப்பதற்கு முன்பாக நமக்கு நாமே வாழ்த்துக்கள் சொல்லிக் கொள்வோமா மக்களே? Because இன்று "உலக தந்தையர் தினம்". இதோ - ஒவ்வொரு இல்லத்திலும் வாய் திறந்து தம் குடும்பத்தாரிடம் பிரியத்தையோ, நேசத்தையோ வெளிப்படுத்தும் பழக்கமே இல்லாத போதிலும், செயல்களின் மூலமாய் காலம் காலமாய் பாகுபலிகளாய் தாங்கி நிற்கும் அத்தனை தந்தையர்க்கும் வேறு யார் சொல்கிறார்களோ - இல்லையோ ; நாமே  வாழ்த்துக்களை சொல்லிக்கொள்வோமே !!!  Happy Father's day to all the fathers out there. 

And இந்த நாளின் வருகையோடு, எனது நினைவுகள் பின்னோக்கிச் செல்வது கி.பி,.... கி.மு காலத்திற்கெல்லாம் அல்ல. வெறும் 12 மாதங்களுக்கு முன்பான இன்னொரு  தந்தையர் தினத்திற்குத்தான். Becos போன வருடம் இதே நாளில்தான் நமது அரை நூற்றாண்டுக்கும் மேலான காமிக்ஸ் பயணத்தின் ஒரு ஆகப் பெரிய மைல்கல்லை தொட்டு நின்றோம் - "பயணம்" என்னும் அசாத்தியத்துடன் !!

நேற்றைக்குப் போலுள்ளது - அந்த இதழினுள் பயணித்தது. Truth to tell துவக்கத் திட்டமிடலின் போதோ, விலை நிர்ணயத்தின் போதோ  இந்த இதழ் இத்தனை ராட்சச சைசில் வெளிவருவதாகவே கிடையாதுதான். நமது மேக்ஸி சைஸே இதற்கென நாம் தீர்மானித்திருந்தது. ஆனால், காலம் சென்ற இயக்குனர் இமயம் சொன்னதைப்போல 'I want more emotions' என்ற குரல் உள்ளுக்குள் ஒலித்துக் கொண்டே இருக்க, முன்னெப்போதும் இல்லாத ஒரு அசுர சைஸிற்கு இந்த இதழைத் திட்டமிட்டால் தப்பே இல்லை என்று தோன்றியது. அதற்கான பிரதான காரணம், b&w-ல்   இருந்தாலும், மிரட்டோ மிரட்டென்று   மிரட்டிய சித்திரங்கள்தான் என்பதில் ரகசியங்கள் ஏது ? எனது ஞாபகம் சொதப்பாது இருக்கும் பட்சத்தில், சென்ற ஆண்டின் மே மாதத்து ஆன்லைன் விழாவின்போது அறிவிக்கப்பட்ட அரை டஜன் இதழ்களுள் இந்த ஒற்றை இதழை மட்டும் தந்தையர் தினத்திற்கெனத் தள்ளிப் போட்டிருந்தோம். So, கடைசி நிமிடத்தில் சைஸ் மாற்றி, குட்டிக்கரணங்கள் பல அடிக்க, எனக்குக் கொஞ்சமாய் அவகாசம் கிட்டியிருந்தது. 

And பைண்டிங் முடித்து, இந்த சைஸில் புக்ஸ் ஆபீசுக்கு வந்து இறங்கிய நொடியில் அந்த காட்சியை ஏற்கனவே அகன்ற விழிகள் மேலும் அகல பார்த்ததொரு பொழுதை, சத்தியமாய் இன்னமும் மறக்க முடியவில்லை. இதழின் டெஸ்பாட்சும் சரி, உங்களை கூரியர்கள் எட்டிப்பிடித்த நொடியில் ஆளாளுக்குச் செல்ஃபீக்கள் போட்டுத் தாக்கியதும் சரி, சென்ற ஆண்டின் உச்ச சந்தோஷ நொடிகளுள் முக்கியமானவை. கதைக்களம் என்ற மட்டில் 'பயணம்', கணிசமான இறுக்கம்  + இறுதியில் ஒரு நம்பிக்கை என்ற கீற்றோடு பயணித்ததை நாம் அறிவோம். In many ways தந்தையராய், நம் வாழ்க்கைகளின் பிரதிபலிப்பு கூட அதுவேதானே?! சிரமங்கள் இன்றைக்கு சிரம்மேல் எத்தனை தாண்டவம் ஆடினாலும், நாளைய பொழுது நல்லதாய் புலரும் என்ற நம்பிக்கையில்தானே நடை போடுகிறோம் ?  So, இந்தத்  தந்தையர் தினத்தன்று கொஞ்சமே கொஞ்சமாய் நேரம் கிடைப்பின், 'பயணம்' இதழை உள்ளிருந்து வெளியெடுத்து, அதனூடே பயணித்துப் பாருங்களேன். ஏற்கனவே படித்து முடித்திருக்கும் பட்சத்தில், அந்த நினைவுகளைச் சற்றே relive செய்தது போல் இருக்கும். ஒருவேளை, பொம்மை பார்த்ததோடு பீரோவுக்குள் புஸ்தகமும் துயில் பயின்று கொண்டிருக்கிறது  எனில், இன்றைய பொழுதை அதன் வாசிப்புக்கென தந்து தான் பாருங்களேன், you definitely will not be disappointed!

இந்தத் தந்தையர் தினத்தினில், "பயணம்" தவிர்த்த இன்னொரு flashback - ஆச்சரியங்களே இன்றி நமது சீனியர் எடிட்டரை சார்ந்தது. சென்றாண்டிலுமே  இதே நேரத்தில் சீனியர் எடிட்டர் நம்மோடு இருந்திருக்கவில்லைதான். ஆனால் அவர் இயற்கையோடு ஐக்கியமாகி இரண்டரை மாதங்களே ஆகியிருந்த நிலையில் அவர் விட்டுச் சென்றிருந்த வெற்றிடத்தின் முழுமையும் உள்ளுக்குள் பதிவாகி இருக்கவில்லை. ஆனால் இன்றைக்கோ கிட்டத்தட்ட பதினாறு மாதங்கள் ஓடியிருக்கும் நிலையில், நிதானமாய் அசை போட நிரம்பவே நேரம் கிட்டியுள்ளது. சிந்தித்துப் பார்க்கும் போது, சிலிர்க்கச் செய்யும் சென்டிமென்ட் கதைகளெல்லாம் எங்களது உறவில் சினிமா பாணியில் இருந்திருக்கவில்லைதான். எத்தனையோ பேர் எனக்கு ஏதேதோ விதங்களில் ஆசான்களாய் இருந்திட இடமும் தந்திருக்கிறார் அப்பா. So நியாயப்படிப் பார்த்தால், உலகைப் புரட்டிப் போடும் ரகத்திலான "டாடி நினைவு"களெல்லாம் எனக்குள் புதைந்திருக்கக் கூடாதுதான். ஆனாலும் ஒரு சூப்பர் டாடியாக இருந்திடாமலுமே ஒவ்வொரு தந்தையும் நம்மில் எத்தனை பெரிய அடையாளத்தை விட்டுச் செல்கிறார்கள் என்பதை அப்பாவின் நினைவுகள் உணர்த்துகின்றன. 

இக்கட சின்னதொரு disclaimer : தொடர்வதில் நான் எழுதியுள்ள நிறைய விஷயங்களை ஏற்கனவே முந்தைய பதிவுகளிலோ, அப்பா சார்ந்த உரைகளிலோ நான் குறிப்பிட்டிருக்கக்கூடும் தான் ! So ஆங்காங்கே மறுஒலிபரப்பாக இருக்கவும் கூடும் தான் ! புரிதலுக்கு முன்கூட்டிய நன்றிகள் மக்களே !! 

My earliest memories have always been அப்பாவின் எந்நேரமும் சிரிப்பு சூழ்ந்த முகமே! ரொம்ப ரொம்ப சொற்பத் தருணங்களில் மாத்திரமே எதற்கேனும் கோபப்படும் பட்சத்தில் 'மட நாயே' என்று வீட்டில் பிள்ளைகள் யாரையேனும் திட்டுவது நிகழும். அந்த ஒற்றை நொடியில், அந்தச்  சிரிப்பற்ற முகத்தைப் பார்க்க நேரிட்டாலே எங்களது சப்தநாடிகளும் அடங்கிவிடும் தான். ஆனால் அந்தக் கோபக்கீற்றை ஈடுசெய்ய அன்றைக்கே எதேனும் செய்து எங்களைச் சாந்தமும்படுத்தியிருப்பார் அப்பா. அப்போதெல்லாம் தெருவுக்கு நாலு பிராய்லர் கடைகள் கிடையவே கிடையாது. So வீட்டில் கோழி விருந்து என்றால் அது அபூர்வத்திலும் அபூர்வம். கோழிப் பண்ணைக்கு நேரடியாகப் போய், அங்கேயே கோழிகளை வாங்கிவந்து சமைத்தால் தான் உண்டு. சிவகாசியிலிருந்து ஒரு ஆறோ -  ஏழோ கிலோமீட்டர் தொலைவில் கோழிப் பண்ணைகள் இருப்பதுண்டு. மாதத்தில் ஏதேனும் ஒரு ஞாயிறு அன்று, காலையில் செம குறட்டையில் இருக்கும் அப்பாவை எழுப்பி, வாசலில் நிற்கும் லேம்ப்ரெட்டா ஸ்கூட்டரை,  'டெக்ஸ்' இன்று வில்லன்களை மிதிக்கும் அதே பாணியில் மிதி....மிதி என்று மிதித்து ஸ்டார்ட் பண்ணி,  கோழிப்பண்ணைக்கு புறப்பட்டுச் சென்று, அங்கே தனித்தனி பெரும் அறைகளுக்குள் அடைந்து கிடக்கும் கோழிகளில் எவற்றையேனும் தேர்வு செய்து  வாங்கிவிட்டு  வீட்டுக்குத் திரும்புவதெல்லாம் அசாத்தியமான சந்தோஷத் தருணங்கள். எங்கள் வீட்டிலுமே விக்ரமன் படப் பாணியில்தான் வண்டி ஓடும். Becos தாத்தாவுக்கு அம்மா ஒரே மகள்....and அந்த மகளைக் கட்டிக் கொடுத்ததும்  தாத்தாவின் உடன் பிறந்த சகோதரி மகனுக்கே. So எல்லாமே நெருங்கிய சொந்தத்துக்குள் என்றான நிலையில், மகளும், மருமகனும், பேரப்பிள்ளைகளும்  எங்கிருக்கிறார்களோ அதற்கு எதிர்வீட்டிலோ பக்கத்து வீட்டிலோ காலம் காலமாய் குடியிருந்தே தாத்தா & பாட்டி பழகிவிட்டார்கள். நாங்கள் வளரும் போதெல்லாம் எங்களது சிறு வீட்டுக்கு நேர் எதிரே தான் தாத்தாவின் வீடும். தமிழ் சினிமாவில் வரும் பிசினஸ் காந்தத்தைப் போல அப்பா அந்நாட்களில் ஓடு ஓடு என்று ஓடிக்கொண்டே இருந்தாலும், தாத்தாவும் பாட்டியும் அடைகாக்கும் கோழிகளாய் இருந்ததால், அப்பாவால் நிறைவேற்ற முடியாத சில சமாச்சாரங்களை அவர்கள் பார்த்துக் கொண்டார்கள் தான். இருந்தாலும், அப்பாவோடு செலவழிக்கக் கிடைத்த அந்த நாட்கள், அந்த நேரங்கள், எங்கள் அனைவருக்குமே ஒரு மிடறு  ஸ்பெஷல். சென்னைக்குப் போவோம்.......சென்றிறங்கிய அரை மணி நேரத்தில் குளித்துக் கிளம்பி கஸ்டமர்களைப் பார்க்கக் கிளம்பும் அப்பா, மதியம் ஏதேனும் ஒரு ஹோட்டலில் சந்திக்க வருவதாகச் சொல்லிவிட்டால், அதுவே எங்களுக்குத் திருவிழா போல். அதேபோல இரவு, செகண்ட் ஷோ படத்துக்கு என்னை மட்டும் கூட்டிக்கொண்டு போவது இன்னொரு தனி high.

ரொம்பச் சீக்கிரமே காலத்தின் சுழற்சி, எனது கல்விப் பயணத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, தொழிலுக்குள் துபுக்கென தூக்கிக் கடாசி இருந்ததால், அப்பாவுடனான லடாய்கள் தொடங்கும் படலமும் துவக்கம் கண்டது. நிறையவே பேசியிருக்கிறேன் - அப்பாவின் கூட்டு நிறுவனத்தின் நிதிச் சிக்கல்களால், எனக்குச்   செய்திட இயலாது போன சப்போர்ட் பற்றி. ஆனால் பாக்கெட்டை பணத்தால் நிரப்பினால் மட்டுமே போதாது, அதைத்தாண்டியும், ஒரு வழிகாட்டல் தருவது தந்தைக்கு மட்டுமே சாத்தியம் என்பதை புரிந்திட முடிகிறது ! அன்றைக்கே, என்னை ஃபிராங்க்ஃபெர்ட் நோக்கி கழுத்தைப் பிடித்துத் தள்ளாத குறையாய் அனுப்பி வைத்ததன் மூலமாய் அதற்கொரு துவக்கம் தந்தார் அப்பா.  நானாகவே குப்பை கொட்டியிருந்தால் - maybe ரொம்ப ரொம்ப காலம் வரைக்குமே இஸ்பய்டர் சார் கூடவும் சட்டித்தலையனோடும் தான் சுற்றித்திரிந்திருப்போம் ! ஐரோப்பிய பதிப்பகங்களோடு பரிச்சயங்களை வளர்த்துக்கொண்டு, இங்கு வந்த பின்னே, எனக்குத் தெரிந்த பாணியில் வண்டியை ஓட்டத் தொடங்கிய பிற்பாடு, அப்பாவுடன் ஒரு தூரத்தைத் தொடர்ந்து கொண்டேதான் இருந்தேன். ஓட்டுவதே குண்டுச்சட்டிக்குள்ளான குதிரை, இதில் எத்தனை பேர் சவாரி செய்வது ? என்ற எண்ணம் எனக்கும் இருந்தது, அப்பாவுக்கும் இருந்தது என்பதை சத்தியமாய் மறுக்க இயலாது. மறுபடியும் அப்பாவின் பாதையும் எனது பாதையும் இணைந்தது 1990-களின் மத்தியில் , அச்சு இயந்திரங்கள் இறக்குமதி சார்ந்த தொழிலுக்குள் நான் தலைநுழைத்த நாட்களில்தான். எனக்கு அந்தத் துறை கொஞ்சம் புதிது என்பதாலும், ஒற்றையாளாய் அங்கே குப்பை கொட்டுதல் அசாத்தியம் என்பதாலும், அப்பாவின் அண்மை எனக்கு நிரம்பவே உதவியது என்றுதான் சொல்லவேண்டும். 

1995-ல் முதல் முறையாகத் தென் கொரியாவிற்கு கிட்டத்தட்ட 17 அல்லது 18 நாட்களோ, நான் பயணமாகி இருந்தேன். அந்நாட்களில் அங்கே கிடைக்க வாய்ப்பிருந்த மெஷின்களின் எண்ணிக்கை சொல்லிமாளாது. நானோ அச்சுத்துறையில் அத்தனை பெரிய ஜித்தெல்லாம் கிடையாது ! சொன்னால் நம்பமாட்டீர்கள்,  ஒரு 160 பக்க நோட்டு வாங்கி, ஒற்றை நாள் இரவில் அதில் முழுக்க முழுக்க கொரியாவில்  நான் பார்த்திடக் கூடிய மெஷின்கள் சார்ந்த தகவல்களை, அச்சுத்துறை பற்றி அப்பாவுக்குத் தெரிந்திருந்த சமாச்சாரங்களை எல்லாம்  கிட்டத்தட்ட 125 பக்கங்களுக்கு கைப்பட எழுதியிருந்தார். நான் சென்னைக்குக் கிளம்ப ஆயத்தமான போது அந்த நோட்டை என் கையில் திணித்து, "போகும் வழியில் இதை படித்துக்கொள். ....உதவியாக இருக்கும்" என்று சொன்னது இன்னமும் நினைவில் உள்ளது. பேந்தப்  பேந்த முழித்தபடியே, பக்கங்களைப் புரட்டினால், அச்சுத்தொழில் கண்டுபிடிக்கப்பட்ட நாள் முதல் இன்று வரைக்கும் அதில் இருக்கக்கூடிய தொழில்நுட்பங்கள் பற்றி தனக்குத் தெரிந்திருந்த சகலத்தையும் அந்தப் பக்கங்களில் அப்பா கொட்டித் தீர்த்திருந்தார். சத்தியமாய் அதை முழுதும் படித்திருந்ததால், நான் இன்னும் கொஞ்சம் உருப்பட்டிருப்பேனோ என்னவோ தெரியாது. ஆனால், பத்து பக்கங்களை தாண்டுவதற்குள் எனக்கு நாக்கே தொங்கிவிட்டது. மொத்தத்தையும் எழுத அப்பா எடுத்துக்கொண்ட பிரயாசையை, இன்று யோசிக்கும்போது மலைப்பாக உள்ளது. For sure, பிள்ளையாண்டன் சொன்னதைக் கேட்கப் போவதில்லை ; நோட்டில் எழுதித் தந்ததையெல்லாம்  முழுசாய் படிக்கப் போவதில்லை என்பது அவருக்கும் தெரிந்திருக்கும் தான். இருந்தாலும், தேவைப்படும் பட்சத்தில் உதவட்டுமே - என்ற ஒரே சிந்தனையில் அவர் செய்த அந்த அசுர முயற்சி தான் தந்தையரின் touch என்பது இன்று உறைக்கிறது ! மெஷினரி இறக்குமதி தொழிலில் சில ஆண்டுகள் இணைந்து கழிந்த பிற்பாடு ,அப்பா ஒரு கொரிய குழுமத்தின் ஆட்டோமேடிக் தீப்பெட்டி உற்பத்தி மிஷினரிக்கு ஏஜென்சி எடுத்துவிட்டு, அதனில் பிஸியாகிவிட, அந்நேரத்திற்குள் எனது தம்பியும் படித்து முடித்துவிட்டு தொழிலுக்குள் நுழைந்திருக்க, மறுபடியும் எங்களது பாதைகள் விலகிக்கொண்டன. எங்கள் பிழைப்பை நாங்கள் பார்க்கிறோம்...... ஏஜென்சி சார்ந்த பணிகளை நீங்கள் பார்க்கிறீர்கள், ஓ.கே. என்றபடிக்கு உரசல்கள் இன்றி வண்டி கொஞ்ச காலத்துக்கு ஓடியது. 

2004-ல் மறுக்கா பாதைகள் இணைய வேண்டிய கட்டாயம் இயற்கையின் உபயத்தில் நிகழ்ந்தது. அப்போதெல்லாம் சென்னையில் அக்கா வீட்டிற்குச் சென்றிருந்தால், வெளியே போகும் சமயங்களில் அங்கே இருக்கும் ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு அப்பா வலம் வருவார் . எனக்கோ சென்னையின் டிராஃபிக்கை பார்த்தாலே கிறுகிறுக்கும் ! அவ்விதம் ஒருமுறை இளைய அக்காவை ரயில் நிலையத்திலிருந்து இட்டுவர எக்மோர் சென்றிருக்கும் போது, மேம்பாலம் ஏறி, ஐந்தாவது பிளாட்ஃபாரத்திற்குச்  சென்று அக்காவைக் கூட்டிவரும் முயற்சியில் கடும் மூச்சுவாங்கல் நேர்ந்திருக்கிறது.கொஞ்ச நேரம் அமர்ந்து ஆசுவாசப்படுத்திக் கொண்ட பிற்பாடு தான் , காத்திருந்த அக்காவை மறுபடியும் சிரமத்தோடே படியேறி வீட்டிற்கு அழைத்து வந்திருந்தார். அந்நாட்களில் பெருசாய் ஸ்பெஷலிஸ்ட் டாக்டர்களை பார்க்கும் அளவிற்கு பரிச்சயமெல்லாம் எங்களுக்குக் கிடையாது. அம்மாவின் ஒன்றுவிட்ட அண்ணன் மதுரையில் செம சீனியர் டாக்டர் என்ற முறையில் குடும்பத்தின் சகல ரோக நிவாரணங்களுக்கும் அவரிடமே தான் போய் நிற்போம். அதே பாணியில் அப்பாவையும் அவரிடம் இட்டுச் சென்றபோது, மேலோட்டமாய் சில பரிசோதனைகள் செய்துவிட்டு, சில மாத்திரைகளை மட்டும் தந்து அனுப்பியிருந்தார். ஏனோ தெரியவில்லை, எனக்கு கொஞ்சமாய் நெருடியது. அன்று இரவு மதுரையிலிருந்த டாக்டர் மாமாவுக்கு போன் அடித்து, "அப்பாவுக்கு என்ன பிரச்சனை மாமா? எல்லாம் நிஜமாவே ஓகே தானா?" என்று கேட்டேன். லேசான தயக்கத்துடன், "அப்பாவுக்கு ஹார்ட்டில் பிரச்சனை இருப்பதுபோல் தெரிகிறது. கொஞ்சம் மாத்திரைகள்  தந்திருக்கிறேன்...... இரண்டு மாதம் ரெஸ்டாக இருக்கவும் சொல்லியிருக்கிறேன். இரண்டு மாதம் கழிச்சுப் பார்த்துக்கொள்ளலாம்," என்று சொன்னார். 

ஏனோ தெரியவில்லை, எனக்கு அந்த ஆலோசனையில் அத்தனை திருப்தி இருந்திருக்கவில்லை. அங்கும், இங்கும்  விசாரித்தபோது, உறவினர் ஒருவர் வெகு சமீபத்தில் சென்னையில் ஒரு முன்னணி ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட்டிடம் ஏதோ ட்ரீட்மெண்ட் எடுத்திருந்தது பற்றித் தெரிய வந்தது. சரி அந்த டாக்டரிடமே ஒரு தடவை போய்ப்  பார்த்துவிட்டு வந்து விடலாமே, என்ற எண்ணத்தில் அப்பாயிண்ட்மெண்ட் எப்படியோ வாங்கிவிட்டோம். ஆனால், அப்பாவை இங்கிருந்து தடிப்  போட்டுக்  கிளப்பவே முடியவில்லை. அது கோடை விடுமுறை காலம்.....  அக்கா பசங்கள், தங்கை பசங்களெனப் பேரப்பிள்ளைகள் வீட்டுக்கு விடுமுறைக்கு வந்திருந்த சமயம் அது. "ஸ்கூல் லீவ் எல்லாம் முடியட்டும், பிள்ளைகள் ஊருக்குத் திரும்பின பிற்பாடு சாவகாசமாய்ப்  போய் பார்த்துக்கொள்ளலாம்" என்று ஒற்றை வரியில் அப்பா மறுத்துவிட்டார். எனக்கோ உள்ளுக்குள் ஏதோ ஒரு உறுத்தல் - இரண்டு மாதம் கழித்து பார்த்துக்கொள்ளக்கூடிய சிக்கலாக இது இல்லாது போனால் என்ன செய்வது என்று. And இன்டர்நெட்டோ இன்றைய கூகுள் டாக்டர்களோ,  AI ஆலோசகர்களோ இல்லாத நாட்களவை ! ஒரு மாதிரி கெஞ்சிக் கூத்தாடி, காலையில் போய் டாக்டரைப் பார்த்துவிட்டு, அன்று மாலையே ஊருக்கு இரயிலைப் பிடித்து விடலாம், என்று சொல்லி, up&down டிக்கெட்கள்  போட்டுவிட்டு, வம்படியாய் அப்பாவைத் தள்ளிக்கொண்டு சென்னைக்குப் போயிருந்தேன்.

அங்கே போய் டாக்டரைச் சந்தித்த பத்தாவது நிமிடமே இதயம் சார்ந்த பரிசோதனைகள் ஒன்றன்பின் ஒன்றாய் அரங்கேறின. கொஞ்ச நேரத்திலேயே டாக்டர் என்னைத் தனியாகக் கூட்டிச் சென்று, "நிச்சயம் பிரச்சனை உள்ளது, மேற்கொண்டு ஆஞ்சியோ செய்தால் தான் எதுவும் சொல்ல முடியும்" என்று குண்டை தூக்கிப் போட்டார். இன்றைக்கும் எனக்கு நினைவிருப்பது அப்பாவின் அந்த முதற்கட்ட ஷாக்கிற்கு பிற்பாடான நெஞ்சுரம் மட்டுமே. மறுநாள் ஆஞ்சியோ செய்து முடித்த கையோடு -  "இருதயத்தில் ஐந்து அடைப்புகள் உள்ளன, அதிலும் ஒரு அடைப்பானது 95 சதவீத block, உடனடியாக பைபாஸ் அறுவை சிகிச்சை செய்தாகணும். எங்கே பண்ணப் போகிறீர்கள் என்பது மட்டும்தான் உங்களது தீர்மானமாக இருக்க முடியுமே தவிர இங்கிருந்து நேராக அடுத்த ஹாஸ்பிடலுக்குத்தான் போக வேண்டும்" என்று டாக்டர் கறாராகச் சொல்லிவிட்டார். அதுவரையில் ஊரைச் சுற்றி பஸ்களெல்லாம் போவது மட்டும்தான் பைபாஸ் என்று மட்டுக்கே நமது ஞானம் இருந்தது. அது  என்ன பைபாஸ் அறுவை சிகிச்சை ? என்றெல்லாம் அவரிடம் விளக்கம் கேட்டுக்கொண்டு நிற்கக்கூட தம் இருக்கவில்லை. 

ஆனால், ஒரு மனிதனின் நெஞ்சுரம் நெஞ்சுக்குள் இருக்கக்கூடிய நோவுகளையும் நொறுக்கித் தள்ளிட முடியும் என்பதைத் தொடர்ந்த மூன்று வாரங்களில் அப்பா கண் முன்னே காட்டினார். அப்போலோவில் அறுவை சிகிச்சை செய்வதென்று தீர்மானமாகி, மறுநாள் அங்கே ஷிப்ட் செய்வது என்று திட்டமிட்டோம். ஆஞ்சியோ செய்திருந்த மியாட் ஹாஸ்பிடலில் அன்றிரவு மட்டும் தங்கிச் செல்லும்படி சொல்லியிருந்தார்கள். துணைக்கு நான் மட்டுமே அப்பாவோடு. அப்பாவின் கடைசி நாட்களுக்கு முன்பானதொரு காலகட்டத்தில் அத்தனை அமைதியாய் அப்பாவை நான் பார்த்தது 2004-ன் அந்த ஒற்றை நாளின் மாலையில் மட்டுமே. பகலில் செம பிஸியாக இருந்த ஹாஸ்பிடல், இரவு கவிழ்ந்த நேரத்தில் ஒருவித இறுக்கமான அமைதிக்குள் மூழ்கியிருந்தது. சுற்றிலும் ஓசைகள் கேட்டுக் கொண்டிருந்த வரைக்கும் ஒரு மாதிரி பிஸியாக இருப்பதுபோல் பழகியிருந்த மனதானது, அந்த நிசப்தத்தில் குரங்காய் அலைபாய்ந்து கொண்டிருந்தது. அந்த அலைபாயும் சங்கடம் எனக்கு மட்டுமே அல்ல என்பது அன்றைக்கு அப்பாவின் நிச்சலனமான முகத்தைப் பார்த்தபோது புரிந்தது. சுத்தமாய் எதுவுமே பேசாமல் ஆழ்ந்த சிந்தனையிலேயே அன்றைய பொழுதை அப்பா கழித்துவிட்டார். தொடர்ந்த நாட்களில் அப்போலோவிற்குச் சென்றது ' அறுவை சிகிச்சைக்கான முன்னேற்பாடுகளைத் தைரியமாய் எதிர்கொண்டது ;  ஆப்ரேஷனின் தினத்தன்று கலங்காது தயாரானது ; அடுத்தடுத்த நாட்களில் நவீன அறிவியலும், நவீன யுக மருத்துவர்களின் மாயாஜாலங்களும்  அதிசயங்களைக் கண்ணில் காட்ட , அவற்றிற்குத் துளியும் சளைக்காது அப்பாவின் மன உறுதியும் ஈடுதர, ஒரு புனர்ஜென்மம் என் கண்முன்னே சாத்தியமாவதைப் பார்க்க முடிந்தது.

மொத்தம் 25 நாட்கள் அப்போலோவில் அப்பா இருந்தபோது, அட்டெண்டர் என்ற முறையில் நான் மாத்திரமே முழுக்க முழுக்க துணை இருக்க அனுமதித்தார்கள். வீட்டாரனைவருமே சென்னை வந்து அக்கா வீட்டில் டேரா போட்டிருக்க, பகலில் விசிட்டிங் அவர்சில் மட்டும் சாரை சாரையாய் வந்து பார்த்துவிட்டுப் போவார்கள். மீத நேரங்கள் முழுவதும் நான் மட்டுமே அப்பாவுக்குத் துணை & அப்பா மட்டுமே எனக்குத் துணை. அங்கிருந்து நலமாய் வெளிப்பட்ட பிற்பாடு, நாங்கள் செய்த முதல் காரியம், அப்பா அதுநாள் வரைக்கும் சிவகாசியின் நீள அகலங்களை, அளந்து கொண்டிருந்த கைனடிக் ஹோண்டா ஸ்கூட்டரை மூலை சேர்த்ததுதான். இனி மேற்கொண்டும் ஸ்கூட்டரில் எங்கேயும் தனியாகப்  போக வேண்டாம் என்று அழுத்தமாகச் சொல்லிவிட்டோம். அதன் பின்பாய் தம்பியின் திருமணம், பேரப்பிள்ளைகளின் திருமணங்கள் என வாழ்க்கையின் அந்திம நாட்களில் அப்பா ஆராமாய் பின்சீட் எடுத்துக் கொண்டார். எதுவாக இருந்தாலும், என் பிள்ளைகள் பார்த்துக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை அரவணைத்துக் கொண்டது தெரிந்தது. ஆனாலும் சோம்பி இருக்க அவரால் சுத்தமாய் முடியவில்லை என்பது இறுதி நாட்கள் வரை அப்பட்டம். மார்ச் 2025-ல் இறுதித் தடவையாக ஹாஸ்பிட்டலில் அட்மிட் ஆகியிருந்த போது கூட, அவரது செல்லில் ஏதேதோ வாட்ஸ்அப் செய்திகள் குவிந்து கொண்டே இருந்தன.  

அப்பாவின் கடைசிப்  பத்தாண்டுகளில் நமது காமிக்ஸ் சார்ந்த பயணமும், நமது காமிக்ஸ் சார்ந்த சந்திப்புகளும், ஒரு மறக்க இயலா உச்சங்களாய் அமைந்திருப்பது இன்றைக்கு நிதர்சனமாய்ப் புரிகிறது. நமக்கு மொட்டையைப் போட்டு விட்டுப் போன   சென்னை Three Elephants கடையில் வைத்து ஏதோவொரு ஸ்பெஷல் இதழினை  ரிலீஸ் செய்யத் தயாரான போதுதான், முதன்முறையாக, அப்பா நம்மோடு கலந்துகொண்டதாய் ஞாபகம். தொடர்ந்த ஆண்டில் "மின்னும் மரணம்" கலர் தொகுப்பு  வெளியீட்டின் போது, சென்னையில் நடுநாயகமாக வீற்றிருந்தது அப்பா தான். ராயப்பேட்டையில் உள்ளதொரு அரங்கில், புத்தக வெளியீட்டுக்கென, ஒரு தனி ஹால் ஒதுக்கி இருக்க, அங்குதான் நண்பர்களுடனான முதல், உற்சாக அளவளாவல்....!!. நிகழ்ச்சி முடிந்த பிற்பாடு அருகிலிருந்தொரு ஹோட்டலுக்குச் சென்று, எல்லோருமாய், சாப்பிட்டுவிட்டுப் புறப்பட்டதை, அப்பா அத்தனை வாஞ்சையாய் நினைவு கூர்ந்திட்டது , இன்னமும் நினைவுள்ளது.

அதற்குப் பிற்பாடுதான் ஈரோடுப்  புத்தக விழாக்களில் அப்பாவும் கலந்துகொள்ள ஆரம்பித்தது. முதலில் ஒரு வருடம் அம்மாவுமே துணையாக வந்திருந்தார்கள், அதற்குப் பின்னே எல்லா ஆண்டுகளிலும் கருணையானந்தம் அங்கிளோடு ஆகஸ்ட்டில் ஈரோடு என்பது அப்பாவிற்கு ஒரு நிரந்தர உற்சாக ஆதாரமாகிப் போனது.  2023-ல் முத்து காமிக்ஸின் 50-வது ஆண்டு விழா கொண்டாட்டங்கள் அப்பாவுக்குத் தந்த ஒரு மகிழ்வு, அதுவரையிலுமான அவரது 80 ஆண்டு கால வாழ்க்கையிலும் அனுபவித்திராததொரு உச்சமாக இருந்திருக்கும் என்பதில் எனக்குத் துளியும் ஐயமில்லை. வீட்டில் அதே சமயம் அம்மா ரொம்பவே சுகவீனமாய் இருந்து கொண்டிருக்க, வீட்டிற்குப் போனாலே டாக்டர், ஹாஸ்பிட்டல், சிக்கல் என்ற சூழலில் சிக்கிக்கிடந்த அப்பாவுக்கு ஈரோட்டில் கிடைத்த அந்த ராஜ உபச்சாரம் எத்தனை ரசித்திருக்கும் என்று எனக்குப் புரிந்து கொள்ள முடிகிறது. 

பணம் அவசியம் தான்......! வாழ்க்கையின் வெற்றி சார்ந்த அளவீடுகளை பணமே நிர்ணயிக்கின்றது என்பதை மறுக்கவே இயலாது ! ஆனால் அவற்றையெல்லாம் தாண்டியும், just being a father ....a humble, smiling father can leave behind incredibly strong memories ! அந்த நினைவலைகளை ஒருபோதும் பணத்தால் ஈடு செய்திடவே முடியாது தான் ! Maybe நாமும் கிளம்பிச் செல்லும் நேரம் வரும் போது  - நமது பசங்களுக்கு வாஞ்சையான பல நினைவுகளை பரிசாக்கி விட்டுப் போக முடிந்தால் - that would be a job well done ! நேரம் கிடைத்தால் இன்றைக்கு வீட்டில் பசங்களோடு அமர்ந்து, பழைய போட்டோ ஆல்பங்களை புரட்டுவோமே folks ? "Cringe" என்று இளம் தலைமுறை முகத்தைச் சுளிக்கக்கூடும் தான் - ஆனால் அந்த ஆல்பங்களின் ஏதேனுமொரு மூலையில் நிற்கக்கூடிய நமது தந்தையரை இன்னொருக்கா பார்த்துக் கொள்ள நமக்கொரு வாய்ப்பாகிடக்கூடுமே ? 

Have a great Sunday all....see you around ! Bye for now !

P.S : சில ஜாலி updates மக்களே : 

1.தாத்தாக்கள் மீது கொஞ்சமாய் கரிசனப்பார்வைகள் கிட்டியுள்ளன  ! தாத்தாக்களின் முந்தைய 4 இதழ்கள் pack-க்கு கொஞ்சம் ஆர்டர் கிட்டியுள்ளன ! இவற்றுள் எத்தனை - புது வாசிப்புக்கு வாங்கப்பட்டவை ? எத்தனை நம் மீதான பிரிவில் நண்பர்கள் மறுக்கா வாங்கியதென்பது தெரியவில்லை - but thanks a ton all !!


2.
FAB FIVE முன்பதிவுகளிலும் ஓரளவுக்கு வேகம் கண்ணில் படுகிறது ! அடுத்த பதிவில் காத்திருக்கும் முதல் இதழ் பற்றிய preview !

3.TERRIFIC TEX தனித்தடத்தினில் புதிய கதைகளும் இடம் பெறவுள்ள என்பதை ஊர்ஜிதம் செய்கிறேன் ! 2 புதுசுகள் + பாக்கி மறுபதிப்புகள் என்று அமைந்திடும். விடுபடும் அந்த 2 க்ளாஸிக் கதைகளுமே இடைப்பட்ட புத்தக விழாக்களில் வெளிவந்திடும் ! So இன்னொரு ஆலமரத்தடியினைத் தேட வேணாமே - ப்ளீஸ் ? 


4.வேலைப் பளு காரணமாய் நெய்வேலி புத்தக விழாவினில் ஜூனியர் எடிட்டரின் கைவண்ணத்திலான அந்த ஸ்பெஷல் புக்சினை ரெடி செய்திட இயலவில்லை ! பேனா பிடிக்கும் வேலையை நானே  செய்தால் தேவலாம் என்று ஜூனியர் அழுத்தமாய்  எண்ணியதால் - என்னால் தான் கொஞ்சம் லேட் ! கோவை விழாவில் மொத்தம் 9 இதழ்கள் வெளிவந்திடும் - சகலமும் விக்ரமின் கைவண்ணத்தில் ! தந்தையர் தினத்தில் காலரைத் தூக்கி விட்டுக் கொள்கிறான் இந்தத் தந்தை !  

59 comments:

  1. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  2. தந்தையர் தின வாழ்த்துகள்💐💐💐💐

    ReplyDelete
  3. வணக்கம் சார் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    ReplyDelete
  4. Awesome Post சார். Simply superb

    ReplyDelete
  5. அடடே அப்போ கோவை டிக்கெட் போட வேண்டும் போலவே

    ReplyDelete
    Replies
    1. 18th ஜூலை (சனிக்கிழமை) சார் 👍

      Delete
  6. அருமையான பதிவு சார்...

    ReplyDelete
  7. நெகிழ்வான பதிவு சார்

    ReplyDelete
  8. அனைவருக்கும் வணக்கம்...

    ReplyDelete
  9. /// அப்பாவை எழுப்பி, வாசலில் நிற்கும் லேம்ப்ரெட்டா ஸ்கூட்டரை, 'டெக்ஸ்' இன்று வில்லன்களை மிதிக்கும் அதே பாணியில் மிதி....மிதி என்று மிதித்து ஸ்டார்ட் பண்ணி ///
    பகடியில் உங்களை அடிச்சுக்க ஆளே இல்லை சார்...என்ன மாதிரியான ஒரு கம்ப்பேரிஸன்.....

    ReplyDelete
    Replies
    1. அந்த வண்டியைப் பார்த்தவங்களுக்குத் தானே சார் தெரியும் - அது எம்புட்டு மிதிகள் வாங்குமென்று 😃😃

      Delete
  10. நெகிழ்வான பதிவு சார்....

    ReplyDelete
  11. கோவை விழாவில் மொத்தம் 9 இதழ்கள் வெளிவந்திடும் - சகலமும் விக்ரமின் கைவண்ணத்தில் ! தந்தையர் தினத்தில் காலரைத் தூக்கி விட்டுக் கொள்கிறான் இந்தத் தந்தை..

    ######

    மிக்க மகிழ்வான செய்தி சார்...தங்களுக்கும்...எங்களுக்கும்...

    ReplyDelete
  12. அற்புதமான பதிவு சார்...

    ReplyDelete
  13. ம(நெ)கிழ்வான பதிவு சார்..

    ReplyDelete
  14. கோவை விழாவினில் 9 புத்தகங்கள் . எதிர்பார்க்கவே இல்லை செம சர்ப்ரைஸ் சார். தேங்க்ஸ் தேங்க்ஸ் தேங்க்ஸ்

    ReplyDelete
  15. இந்த புதிய முயற்சிக்கு
    தாங்கள் பேனா பிடித்திருப்பதில் மகிழ்ச்சி , சார்

    ReplyDelete
  16. 😘💐Daddypa க்கு Daddy's day வாழ்த்துக்கள் 💐👍😘

    ReplyDelete
  17. Awesome deep emotional heart touching sir accept my greetings sir. Really we are expecting this blog eagerly🎉🎉🎉🎉

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார்... 🙏 பச்சே கடையிலே காத்து வாங்குது இன்னிக்கி 🧐

      Delete
    2. I mean வழக்கத்தை விடவும் கூடுதலாய்!

      Delete
    3. தந்தையர்கள் எல்லாம் கறிக்கடையில் பிசி சார்

      Delete
  18. // கோவை விழாவில் மொத்தம் 9 இதழ்கள் வெளிவந்திடும் - சகலமும் விக்ரமின் கைவண்ணத்தில் ! தந்தையர் தினத்தில் காலரைத் தூக்கி விட்டுக் கொள்கிறான் இந்தத் தந்தை //

    ❤️😍❤️😍

    ReplyDelete
  19. // இரவு, செகண்ட் ஷோ படத்துக்கு என்னை மட்டும் கூட்டிக்கொண்டு போவது இன்னொரு தனி high.//

    உண்மை சார். சிறுவயதில் எனது அய்யா அம்மாவுடன் உடன் பார்த்த படம் நெற்றிக்கண்.

    சிறுவயதில் கழுத்தில் சளிகட்டி இருந்ததால் வாரம் 2 நாட்கள் ஊசி போட சைக்கிள்ளில் கூட்டி கொண்டு ஊசி போட்டு விட்டு எங்கள் லாரி அலுவலகத்திற்கு அழைத்து சென்று வேலையை எல்லாம் முடித்து விட்டு, ரயில்வே ஸ்டேஷனுக்கு அருகில் உள்ள ஐயர் கடையில் சூடாக உளுந்து வடை எனக்கு வாங்கி கொடுப்பார் 😍 அவர்களின் அன்றாட கஷ்டத்திலும் இந்த வடை எல்லாம் பெரிய விஷயம். ஆனால் நம்மை சந்தோஷபடுத்தி தனக்கென்று ஏதும் யோசிக்காமல் வாழ்த்ததே அவர்களின் வாழ்க்கை ☺️

    ReplyDelete
  20. // அப்பாவுக்கு ஈரோட்டில் கிடைத்த அந்த ராஜ உபச்சாரம் எத்தனை ரசித்திருக்கும் என்று எனக்குப் புரிந்து கொள்ள முடிகிறது. //

    😍😍😍😍😍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    ReplyDelete
  21. // வாழ்க்கையின் வெற்றி சார்ந்த அளவீடுகளை பணமே நிர்ணயிக்கின்றது என்பதை மறுக்கவே இயலாது ! ஆனால் அவற்றையெல்லாம் தாண்டியும், just being a father ....a humble, smiling father can leave behind incredibly strong memories ! //
    உண்மை சார்.
    லவ்லி சார். 😍😍😍😍

    ReplyDelete
  22. //கோவை விழாவில் மொத்தம் 9 இதழ்கள் வெளிவந்திடும் //

    கோவை புத்தக விழாவில் இவைகள் வெளிவருவதில் மகிழ்ச்சிகள் பல

    ReplyDelete
    Replies
    1. கடலம்மா இருக்கும் ஊருக்கு மரியாதை செய்யனும்ல 😊

      Delete
  23. // நமக்கு மொட்டையைப் போட்டு விட்டுப் போன சென்னை Three Elephants கடை //

    அட இது என்ன புதுசா சார். இவர்களுமா அதுவும் நமது மறுவருகைக்கு பிறகு. வருத்தமாக உள்ளது சார்.

    ReplyDelete
  24. // "மின்னும் மரணம்" கலர் தொகுப்பு வெளியீட்டின் போது, சென்னையில் நடுநாயகமாக வீற்றிருந்தது அப்பா தான். ராயப்பேட்டையில் உள்ளதொரு அரங்கில், புத்தக வெளியீட்டுக்கென, ஒரு தனி ஹால் ஒதுக்கி இருக்க, அங்குதான் நண்பர்களுடனான முதல், உற்சாக அளவளாவல்....!!. நிகழ்ச்சி முடிந்த பிற்பாடு அருகிலிருந்தொரு ஹோட்டலுக்குச் சென்று, எல்லோருமாய், சாப்பிட்டுவிட்டுப் புறப்பட்டதை, அப்பா அத்தனை வாஞ்சையாய் நினைவு கூர்ந்திட்டது //

    என்னால் இதனை கண்டிப்பாக மறக்க முடியாது, புத்தகம் வெளிஇட்ட பிறகு நண்பர்களுடன் நடந்து சென்று பக்கத்தில் உள்ள ஒரு கிம்ஹோட்டலில் உங்கள் அனைவரும் சேர்ந்து உணவருந்திய நாள், அதுவும் லயன் அசிரியர்களுடன் 😍 வாழ்வில் கிடைத்த மகிழ்ச்சியான தருணம்; சிறுவயதில் நமது காமிக்ஸ் படிக்கும் போது எதிர்காலத்தில் லயன் முத்து காமிக்ஸ் ஆசிரியர்களுடன் இணைந்து உணவருந்த
    வாய்பு கிடைக்கும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை 😍❤️❤️❤️❤️

    ReplyDelete
  25. சார், கொஞ்சம் YouTube பக்கமும் எட்டிப் பாருங்க. வீடியோ வந்து 6 மாதத்துக்கு மேலாகிவிட்டது. உங்க வீடியோக்காக இன்னும் நம்பிக்கையோட காத்திருக்கிறோம்! 😄

    ReplyDelete
  26. அருமையான, நெகிழ்ச்சியான பதிவு எடிட்டர் சார். நமது அன்புக்குரியவர்களுக்காக ஒரு இக்கட்டான சூழ்நிலையில் ஹாஸ்பிடலில் உட்கார்திருப்பது ரொம்பவே கொடுமையான சமாச்சாரம்! அம்மாவுக்காக, அப்பாவுக்காக, அக்காவுக்காக, வீட்டம்மவுக்காக, குழந்தைக்காக - என்று ஒவ்வொரு முறையும் வாரக்கணக்கில் நான் ஹாஸ்பிடலில் இருக்கவேண்டியிருந்த போதெல்லாம் அங்கே நிலவும் ஒரு வகையான 'வாழ்வா சாவா'சூழ்நிலை ரொம்பவே மனஅழுத்தத்தில் உழலச் செய்திருக்கிறது! நீங்கள் சீனியர் எடிட்டரைப் பார்த்துக்கொள்ள அப்பல்லோவில் இருந்த நாட்களில் உங்களுக்கும் அப்படிதான் இருந்திருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது!


    அப்பாவைப் பற்றிய உங்களது எழுத்துக்கள் அவர் மீதான உங்களது அன்பையும், மரியாதையின் ஆழத்தையும் வெளிப்படுத்துகிறது! இந்தப்பதிவு அவருக்கான ஒரு அழகான நினைவஞ்சலி!🙏🙏🙏

    ReplyDelete
  27. ///இதோ - ஒவ்வொரு இல்லத்திலும் வாய் திறந்து தம் குடும்பத்தாரிடம் பிரியத்தையோ, நேசத்தையோ வெளிப்படுத்தும் பழக்கமே இல்லாத போதிலும், செயல்களின் மூலமாய் காலம் காலமாய் பாகுபலிகளாய் தாங்கி நிற்கும் அத்தனை தந்தையர்க்கும் வேறு யார் சொல்கிறார்களோ - இல்லையோ ; நாமே வாழ்த்துக்களை சொல்லிக்கொள்வோமே !!!///

    சூப்பரா சொன்னீங்க சார்! அத்தனையும் நிஜம்!!😁💐

    ReplyDelete
    Replies
    1. நாமெல்லாம் அக்மார்க் கல்லுளி மங்கர்களாச்சே சார்...! Happy கல்லுளிமங்கர் day 💪

      Delete
    2. மறுக்க முடியாத உண்மை சார். ☺️

      Delete
  28. Good old memories editor sir🥰😍💐🌹💐🌹💐

    ReplyDelete
  29. //கொஞ்ச நேரத்திலேயே டாக்டர் என்னைத் தனியாகக் கூட்டிச் சென்று, "நிச்சயம் பிரச்சனை உள்ளது, மேற்கொண்டு ஆஞ்சியோ செய்தால் தான் எதுவும் சொல்ல முடியும்" என்று குண்டை தூக்கிப் போட்டார். இன்றைக்கும் எனக்கு நினைவிருப்பது அப்பாவின் அந்த முதற்கட்ட ஷாக்கிற்கு பிற்பாடான நெஞ்சுரம் மட்டுமே//

    ALMOST SAME INCIDENT HAPPENED WITH MY FATHER SIR SOME 4 YEARS BACK .. HE TOO DIDNT SHOW ANY FEAR JUST LYK OUR SENIOR EDITOR SIR .. NOW HE S ALRITE .. REMINDED ME OF THAT INCIDENT ..

    BOMB படித்து விட்டு ஒரு 1/2 நேரம் அதை பற்றியே பேசி கொண்டு இருந்தார் .. நீங்கள் அதற்கு கால் பண்ணி பேசியது எல்லாம் HAPPY MEMORIES SIR .. WILL CHERISH IT ..

    HAPPY FATHER S DAY TO ALL

    ReplyDelete
  30. அருமையான பதிவு ❤️👌.
    டெக்ஸ் சந்தாவில் அந்த 2 புதிய கதைகள் எது? என அறிய ஆவல் சார்.

    ReplyDelete
  31. பெரியவர்களிடம் நாம் காட்டும் மரியாதையையும், அன்பையும் பின்பு நமது வாரிசுகள் மூலம் அறுவடை செய்வோம். தந்தையர் தினத்துக்கான சிறந்த பதிவு

    ReplyDelete