Powered By Blogger

Sunday, February 15, 2026

பிப்ரவரியின் பாட்ஷா !

 நண்பர்களே,

​ஞாயிறு வணக்கங்கள். ஒரு குட்டியான பிப்ரவரியின் நடுவாக்கில் நின்று கொண்டிருக்க - காத்திருக்கும் மார்ச் இதழ்களைப் பற்றிய ப்ரிவியூவில் பிசியாவதா ? அல்லது ஒளிவட்டம் இன்னமும்  பிப்ரவரியின் புக்ஸ் மீதே தங்கிட அனுமதிப்பதா? என்ற குழப்பம் உள்ள்ளுக்குள்! So 'தென்னைமரத்திலே ஒரு குத்து - பனைமரத்திலே ஒரு குத்து' என்பது போல இப்படிக் கொஞ்சம்  ; அப்புறம் அப்படிக் கொஞ்சம் என வண்டியை ஓட்டலாமென்று தோன்றுகிறது!

​பிப்ரவரியின் சந்தோஷ highlight என்று பார்த்தோமானால் அது டெக்ஸோ - மாடஸ்டியோ அல்ல என்பதுதான் ஆச்சரிய நிஜம்! மாறாக - The KING'S SPECIAL #2 சக்கை போடு போட்டு வருவதால் "பிப்ரவரியின் பாட்ஷா" என்ற பட்டத்தை அந்த ஹார்ட்கவர் இதழே தட்டிச் செல்கிறது! பொதுவாகவே நமக்கெல்லாம் கூட்டணி இதழ்கள் மீது தீராத காதல் உண்டு என்பது தெரிந்த விஷயம் தான்! Maybe நமது அரசியல் கட்சிகளுக்கு கூட்டணி மந்திரிசபைகள் வேப்பங்காயாய் கசக்கலாம் ; ஆனால் நமக்கோ கூட்டணிகள் என்றைக்குமே கிருஷ்ணா ஸ்வீட்ஸின் மில்க் ஸ்வீட் பாக்ஸைப் போன்ற பல்சுவை பதார்த்தங்களே என்பதில் no secrets! So அரை டஜன் கிளாசிக் நாயகர்களை ஒரே இதழில் தரிசிக்கும் அந்த அனுபவம் பரவலாய் 'ஜே' பெற்று வருவதை விற்பனைகளில் பார்த்திட முடிகிறது! Light Reading; அதிலும் ஒவ்வொரு கதையுமே 30 to 40 பக்க நீளங்கள் தான் எனும் போது சாவகாசமாய் நேரம் கிட்டும் போதெல்லாம் ஒரு கதை என பயணிக்க இங்கு சாத்தியப்படுவது பெரிய பிளஸ் என்று தோன்றுகிறது! ஆக இந்தக் கூட்டணிப்  படலத்தின் இரண்டாவது அத்தியாயமும் smash hit என்பதால் அண்ணாச்சி செம ஹேப்பி ! காத்திருக்கும் ஏப்ரலில் The KING'S ஸ்பெஷல் #3 வெளிவந்திடும் என்பது கொசுறுத் தகவல் ! And அந்த ஸ்பெஷல் இதழுடன் ELECTRIC '80 தனித்தடம் பூர்த்தியாகிடும்! So இந்த நொடியில் எனது கேள்வி இதுவே folks:

​King's ஸ்பெஷலின் சீஸன் 2 - தொடரலாமா? அல்லது ஒரு பிரேக் விடலாமா?

​இதே போல வருஷத்திற்கு 3 கூட்டணி இதழ்களோடு அடுத்த ஒற்றை ஆண்டுக்குள் பயணிக்கலாமா - வேண்டாமா? பதில் ப்ளீஸ்?

பிப்ரவரியின் TEX  (என் இனிய பொய்யே) செம ஜிலோவென்று ஓட்டமெடுத்த சாகசம் &  அந்த அடங்காப் பொய்யன் செம வித்தியாசமான கதாபாத்திரம் என்பதை மறுப்பதற்கில்லை! கதையில் அடர்த்தி குறைவே என்பதை ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும் - ஆனால் அந்த வன்மேற்குக் களத்தில் 80 ஆண்டுகளாய் பயணம் பண்ணி வரும் TEX-க்கு கதாசிரியர்கள் தந்திட விழையும் சற்றே மாறுபட்ட கதைப் பின்னணிகளுக்கு நாம் இயன்ற மட்டிலும் பாராட்டுக்களைத் தெரிவிப்பதே நியாயம் என்பேன்! Oh yes - கமான்சே கிளர்ச்சி; ஆயுதக் கடத்தல்; இரத்த வெறிக் கும்பல் என்று கூடுதலான ஆக்ஷன்களுக்கு வாய்ப்பு தரக்கூடிய களங்களைக் கையிலெடுப்பது செம ஈஸியான options தான்; ஆனால் ஒரு நூறு தடவைகள்  கும்மி எடுக்கப்பட்ட  templates அவை என்பதே யதார்த்தம்! So இயன்ற திசைகளிலெல்லாம் புதுப்புது ஐடியாக்களை உருவாக்க முனைந்து வருகிறார்கள் TEX-ன் படைப்பாளிகள் என்பது தற்சமயம் வெளிவந்து கொண்டிருக்கும் லேட்டஸ்ட் கதைகளில் தெள்ளத் தெளிவாய் தெரிகிறது! More power to you gentlemen! என் இனிய பொய்யே கூட செம recent படைப்பே !

பிப்ரவரியின் இளவரசி எதிர்பார்த்தபடியே செம ஹிட் என்பது தரமான தகவல்! அட்டைப்படம் பிரமாதமாய் அமையும் போதே அந்த இதழின் வெற்றி விகிதம் எகிறிடுவது வாடிக்கை! இம்முறை அட்டை மாத்திரமன்றி கதையுமே அழகாய் அமைந்து போக, makes for engrossing reading. அதிலும் அந்த அருவியில் சிக்கி கார்வினும், மாடஸ்டியும் படும் அல்லல் sequence சினிமாக்களில் வந்திருந்தாள் மிரட்டியிருக்கும் அட்டகாசம் ! And சொல்ல மறந்த செய்தி - இதன் மொழிபெயர்ப்பு Ms.P. சுகன்யா. பெரிதாய் நான் நோண்ட அவசியமின்றியே அவரது ஸ்கிரிப்ட் அழகாய் அமைந்து போனதால் - அந்த குசும்பான, நக்கலான portions-ல் மட்டும் நான் மண்டையை நுழைத்திருந்தேன்!

And சந்தேகமேயின்றி பிப்ரவரியை நெஞ்சுக்கு நெருக்கமாக்கியது "டைட்டானிக் தாத்தா" எனலாம்! துறுதுறுப்பான க்யூட் பேத்தியும் அவரது மம்மிப்பாவும்  (!!) சந்தோஷமாய் செலவிடும் ஒரு நாளே இந்தக் குட்டி ஆல்பம்! அழகான சித்திரங்கள் & கண்களுக்கு இதமான கலரிங்  இந்தத் தொடரின் அடையாளங்கள் எனில், அந்த அழகான கதையோட்டம் இதமான குற்றாலச் சாரலுக்குச் சமம் எனலாம்! இந்த ஆல்பத்தைப் படித்த கையோடு  ஒரு நண்பர் எனக்கு வாட்ஸ்அப்பில் செம வாஞ்சையோடு எழுதியிருந்தார். இத்தனைக்கும் அவருக்குப் பேரன்-பேத்தி பார்க்கும் வயதே அல்ல  தற்சமயம்! "பேரன்-பேத்திகள் எனக்கும் கிட்டும் நாளில் அவர்களையும்  நான் இந்த கதையில் ரோஸ் கூப்பிடுவது போலவே 'மம்மிப்பா' என்று தான் கூப்பிடச் சொல்வதாக இருக்கிறேன் சார்!" என்று எழுதியிருந்தார். நான் ஜாலியாய் எழுதி வைக்கும் சமாச்சாரம் இது போலெல்லாம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவதை பார்க்கும் போது 'பக்கோ' என்றுள்ளது !!  சில தருணங்களில் மாங்கு மாங்கென்று காடு-மேடு-மலையெல்லாம் அலையத் தேவையே இல்லை போலும்; இத்தகைய மெலிதான படைப்புகள் கூட நெஞ்சைத் தொடும் ஆற்றல் கொண்டவை தான் போலும்! டைட்டானிக் தாத்தா - WARM WELCOME from ரோஸ் & us !!

காத்திருக்கும் மார்ச் இதழிலோ TEX ஒரு சிங்கிள் ஆல்பத்தில் வலம் வருகிறார். தலைப்பு என்னவோ "கார்சனைக் காணோம்" என்றிருக்கலாம் தான்; ஆனால் கதையின் பெரும்பகுதியை ஆக்கிரமிப்பவர் நமது வெள்ளிமுடியாரே ! செம லைட்டான கதை; எக்கச்சக்க ஆக்ஷன் & செம அழகான சித்திரங்கள்! இதோ ஒரிஜினல் அட்டைப்படம் - மெருகூட்டப்பட்ட வர்ணங்களில்!


மார்ச் மாதத்தில் நான் பார்க்க ஆவலாய் இருக்கும் இன்னொரு இதழ்  – "ஜாக்கி போட்ட ஓநாய் " தான் ! முன்கூட்டியே சொல்லி விடுகிறேன் folks – இது நம் வீட்டு குட்டீஸ்களுக்கு  கதை சொல்லவும் / வாசிக்கத் தந்திடவுமே  சுகப்படப் போகும் இதழ்! இதன் கதாசிரியர் Wilfrid Lupano தான் தாத்தாக்கள் தொடரின்  பிதாமகர்  & இந்த ஓநாய் கேரக்டர் கூட தாத்தாக்கள்  கதையில் தலைகாட்டும் உருப்படி தான்! பேத்தி Sophie நடத்தும் பொம்மலாட்ட நிகழ்வின் நாயகனே இந்த ஓநாய் தானே? ரொம்பவே சிம்பிளான ஒரு கதைக்களத்தில் இளைய தலைமுறைக்கென சில சின்னச் சின்ன  மெசேஜ்கள் சொல்ல முனைகிறார் கதாசிரியர். பிரெஞ்சில் மட்டுமே கிட்டத்தட்டமுக்கால் மில்லியன் பிரதிகள் விற்பனை கண்டுள்ள இந்தத் தொடரின் முதல் ஆல்பத்தின் preview இதோ!


ரைட்டு... மார்ச்-ன் பாக்கி 2 இதழ்களான "புதைகுழிப் பூக்கள்" + ஸகுவாரோவொவின் "இருளில் ஒரு நிழல்" இதழ்களுக்கான பிரிவியூவினை அடுத்த வாரம் பார்த்துக் கொள்ளலாமா? இன்றைய பகல் பொழுதில் சின்னதாயொரு Vlog ரெடி பண்ணி நமது YouTube சேனலில் ஏற்றிட நினைக்கிறேன்! So see you again soon folks! Have fun... have a lovely Sunday!

P.S : தற்போது ஓடிக் கொண்டிருக்கும் சில முன்பதிவுகள் - உங்கள் கவனங்களுக்கு folks : 



அப்புறம் தற்சமயம் நெல்லையிலும் , திருச்சியிலும் அரங்கேறி வரும் புத்தக விழாக்களில் நாம் பங்கேற்று வருகிறோம் ! அந்தப் பகுதிகளில் இருப்பின் - please do drop in மக்களே !


91 comments:

  1. //ஜாக்கி போட்ட ஓநாய்//

    வெயிடிங் 😍😍😍

    ReplyDelete
  2. ​King's ஸ்பெஷலின் சீஸன் 2 - தொடரலாமா? அல்லது ஒரு பிரேக் விடலாமா?

    ​இதே போல வருஷத்திற்கு 3 கூட்டணி இதழ்களோடு அடுத்த ஒற்றை ஆண்டுக்குள் பயணிக்கலாமா - வேண்டாமா? பதில் ப்ளீஸ்? //////

    டெபனட்லீ.. டெபனட்லீ...

    ReplyDelete
  3. காத்திருக்கும் ஏப்ரலில் The KING'S ஸ்பெஷல் #3 வெளிவந்திடும் என்பது கொசுறுத் தகவல் ! ////

    ரக்கிட ரக்கிட ரக்கிட ஊ......

    ReplyDelete
  4. Hi Editor sir,
    As usual , Tex wrapper looks awesome .
    For Kings special season 2 - please continue sir. I feel it’s a balance to read new stories in Santha and classic hero’s in Kings special.
    With multiple hero’s in a book. It makes it more special .

    Waiting for Vlog sir.

    ReplyDelete
  5. //YouTube சேனலில் ஏற்றிட நினைக்கிறேன்! //


    இன்று இன்னொரு லட்டா 🤩🤩🤩

    ReplyDelete
  6. ///​இதே போல வருஷத்திற்கு 3 கூட்டணி இதழ்களோடு அடுத்த ஒற்றை ஆண்டுக்குள் பயணிக்கலாமா - வேண்டாமா? பதில் ப்ளீஸ்? ///

    கண்டிப்பாக சார் 😊

    ReplyDelete


  7. ​King's ஸ்பெஷலின் சீஸன் 2 - தொடரலாமா? அல்லது ஒரு பிரேக் விடலாமா?

    ​இதே போல வருஷத்திற்கு 3 கூட்டணி இதழ்களோடு அடுத்த ஒற்றை ஆண்டுக்குள் பயணிக்கலாமா - வேண்டாமா? பதில் ப்ளீஸ்?

    தாரளமாக பயணிக்கலாம் ஆசிரியரே

    ReplyDelete
  8. ஜாக்கி போட்ட ஒநாய்
    அட்டைப்படம் க்யூட்
    ஒரேயொரு காட்டிலே...
    ஆரம்பமே அருமை

    ReplyDelete
  9. ///King's ஸ்பெஷலின் சீஸன் 2 - தொடரலாமா? அல்லது ஒரு பிரேக் விடலாமா?///

    தொடரலாம் சார்!

    ​//இதே போல வருஷத்திற்கு 3 கூட்டணி இதழ்களோடு அடுத்த ஒற்றை ஆண்டுக்குள் பயணிக்கலாமா - வேண்டாமா? பதில் ப்ளீஸ்?///

    பயணிக்கலாம் சார்!

    ReplyDelete
  10. Kings special Seriesல் ஜூலியான், ட்ரேசி போன்ற ஹீரோக்களையும் சேர்த்திக்கலாம் சார்.!
    அதுமட்டுமில்லாம முத்து & மினி லயனில் வெளியான சில ஒன்சாட் மாதிரியான கதைகளையும் கூட சேர்த்க்கலாம் சார்..!

    ReplyDelete
  11. மாடஸ்டி கதைக்கு வசனங்கள் எழுதிய சுகன்யா சகோதரிக்கு பாராட்டுகள் 💐💐💐

    ReplyDelete
    Replies
    1. சிறப்பாக இருந்தது! என்னுடைய பாராட்டுங்களும்!!👏👏💐💐💐

      Delete
  12. //குசும்பான, நக்கலான portions-ல் மட்டும் நான் மண்டையை நுழைத்திருந்தேன்!//

    😊😊😁😁😁

    ReplyDelete
    Replies
    1. ரொம்பவே ரசித்தோம் சார்!!😍😍💐💐💐

      Delete
  13. Kings சீரிஸ் தொடரலாம்

    ReplyDelete
  14. 'கார்சனைக் காணோம் ' அட்டைப்படம் மிகப் பொருத்தமாய் அமைந்திருப்பதாய் படுகிறது சார்! டெக்ஸ் குதிரையில் அமர்ந்தபடி கார்சனைத் தேடியலைவது போலவும் ; கார்சன் water mark ல் டெக்ஸின் வருகையை எதிர் நோக்கியிருப்பது போலவும் அமைந்திருப்பது அருமை!!😍😍😍😍

    உள்பக்க சித்திரங்கள் - எல்லாமே புள்ளிகளில் - வாவ்!!😍😍😍😍😍

    ReplyDelete
    Replies
    1. //கார்சன் water mark ல் டெக்ஸின் வருகையை எதிர் நோக்கியிருப்பது போலவும் அமைந்திருப்பது அருமை!!//

      ஆமாங்க இளவரசரே😊😊
      இதையேத்தான் சொல்ல வந்தேன்

      Delete
  15. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
    Replies
    1. இந்த மாதம் உங்க விமர்சனங்கள் இன்னும் வரலைங்க, சகோ

      Delete
  16. அடடே வந்துட்டேன்...

    ReplyDelete
  17. உங்கள் இரண்டு கேள்விகளுக்கும் எனது ஒரே விடை ஆமாங்க ஆமா..!

    ReplyDelete
  18. Replies
    1. வாங்க PfB! ரொம்ப பிஷியோ?

      Delete
  19. கிங்ஸ் ஸ்பெசல் சீசன் 2 தொடரலாம் சார். இதே போல 3 இதழ்கள் கண்டிப்பாக அடுத்த ஆண்டும் தொடரலாம்.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது இந்த மே மாதத்தில் இருந்து அடுத்த ஏப்ரல் வரையிலான ஒரு வருடம் தானே?

      Delete
    2. ஓஓஓ...ஏப்ரலில் முடிந்து மே-வில் உடனே ஆரம்பம்
      குமார் சகோ 🤝🏽🤝🏽🤝🏽

      Delete
  20. கிங்ஸ் ஸ்பெசல் 3 ஏப்ரலில் வருவது மிக்க மகிழ்ச்சி...

    ReplyDelete
  21. என் இனிய பொய்யே

    நல்ல எண்டெர்மெயிண்ட்டான கதை

    திருட்டு கும்பல், ஒரு கதைச்சொலலி + அவனது மனதை கொள்ள கொண்ட பெண், காப்பாற்றி ஆக்ஷன் புரிந்திட நம்ம டெக்ஸ் & கார்சன்😊😁

    ReplyDelete
  22. ஆனாலும் ஓவர் குறும்பு சார் உங்களுக்கு! ஜாக்கி போட்ட ஓநாய் அட்டையில் லயன் லோகோவுக்கு மேலே ஜாக்கியை தொங்கவிட்டிருப்பதெல்லாம்... 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 இன்னமும் சிரிப்பை அடக்க முடியலை!🤣🤣🤣🤣🤣

    ReplyDelete
    Replies
    1. விஜயகாந்தின் மூக்குத்தி முத்தலகு பாட்டு ஞாபகம் வருகிறது. இந்த அட்டைபடத்தை பார்த்தஉடன் 🤩

      Delete
  23. // ​King's ஸ்பெஷலின் சீஸன் 2 - தொடரலாமா? அல்லது ஒரு பிரேக் விடலாமா? //

    தொடரலாம் சார். காரிகன் கதை பெரியதாக ஈர்க்கவில்லை சார். அதற்கு பதிலாக வேறு நாயகர்கள் கதைகளை முயற்சிக்க முடியுமா சார்?

    ReplyDelete
  24. // இதே போல வருஷத்திற்கு 3 கூட்டணி இதழ்களோடு அடுத்த ஒற்றை ஆண்டுக்குள் பயணிக்கலாமா - வேண்டாமா? //

    கண்டிப்பாக இதே தரத்தில் இதே வடிவமைப்பில் பயணிக்கலாம் சார்.

    ReplyDelete
  25. //இத்தகைய மெலிதான படைப்புகள் கூட நெஞ்சைத் தொடும் ஆற்றல் கொண்டவை தான் போலும்! //

    தாத்தா & பேத்தி மனதை கவர்ந்து விட்டார்கள் ❤❤❤

    ReplyDelete
    Replies
    1. /////இத்தகைய மெலிதான படைப்புகள் கூட நெஞ்சைத் தொடும் ஆற்றல் கொண்டவை தான் போலும்! ////

      அவ்வண்ணமே, மெலிதான காதல் கதைகளும் கூட மெஸ்மெரைஸ் பண்ணும் ஆற்றல் கொண்டவை தான் எடிட்டர் சார்!😍😍😍

      Delete
    2. //அவ்வண்ணமே, மெலிதான காதல் கதைகளும் கூட மெஸ்மெரைஸ் பண்ணும் ஆற்றல் கொண்டவை தான் எடிட்டர் சார்!😍😍😍//

      +9

      Delete
    3. அவ்வண்ணமே, மெலிதான காதல் கதைகளும் கூட மெஸ்மெரைஸ் பண்ணும் ஆற்றல் கொண்டவை தான் எடிட்டர் சார்!😍😍😍///


      1000 %

      Delete
    4. எப்பா Gen-Z உங்க வீட்டுள உள்ள குழந்தைகளுக்கு, அதுல போய் காதல் கதை கேட்குறிங்க 😉

      Delete
  26. King special season2 அறிவிப்பு சீக்கிரமே வெளியிடுங்கள் சார்.

    ReplyDelete
  27. Replies
    1. 'Me jumped in, Edi sir'னு சொன்னா பொருத்தமா இருக்குமுங்க ஜம்பிங் தல!!😍😍😍😍

      Delete
  28. பதிவைப் போட்டுட்டு எடிட்டர் ஏதாச்சும் வ்ழாவை சிரிப்பிக்கக் கிளம்பியிருப்பார்னு நினைக்கிறேன்!😁😁

    ReplyDelete
    Replies
    1. இப்பெல்லாம் காணாம போயிடுகிறார்

      Delete
    2. வாட்ஸ் அப் கம்யூனிட்டி பக்கம் போய் பாருங்க சாமி

      Delete
  29. கிங்ஸ் ஸ்பெஷல் 2,3,4,5,6,7,8,9,..................தொடர்ந்தே ஆக வேண்டும்.. ஹாங்....

    ReplyDelete

  30. தாத்தாக்களின் பிதாமகர் உருவாக்கத்தில் தாகத்தால் ஸ்பின் ஆஃப்
    போல வரும் ஜாக்கி போட்ட ஓநாய் ஆவலை கிளப்புகிறது. We are waiting sir

    ReplyDelete
  31. கிங்ஸ் ஸ்பெஷல் 2 தொடரலாம் சார்...



    டெக்ஸ் வில்லரின் அட்டைப்படம் செம அழகு சார்...கண்ணை கவர்கிறது..

    ReplyDelete
  32. பிரபுக்கள் ஜாக்கிரதை (Kings Special 2):-

    திண்ணைல படுத்துக் கெடந்தவனுக்கு திடீர்னு வந்துச்சாம் கல்யாணம்கிற மாதிரி பட்லர் டெஸ்மாண்டுக்கு திடீரென பல மில்லியன் சொத்துகளுக்கான வாரிசு உரிமை வந்து சேருகிறது.!

    கிர்பி வீட்டு கிச்சனில் இருக்கும் அண்டாகுண்டா சட்டிபானை டபராசெட்டு கேஸ்ஸ்டவ் லைட்டரு எல்லாத்தையும் கட்டிப்புடிச்சி கண்ணீர்விட்டு பிரியாவிடை குடுத்துட்டு தன்னோட பட்லர் ஃப்ரென்ட் விக்கர்ஸுடன் எஸ்டேட்டுக்கு புறப்படறாரு டெஸ்மாண்ட்.!

    வாரிசு இல்லாத சொத்து டெஸ்மாண்டுக்கு வந்து சேர்ந்ததன் பின்னனியில் அவர் உயிருக்கே ஆபத்தை உண்டாக்கும் மிகப்பெரிய சதி இருக்க.. ரிப் கிர்பியின் உதவி இல்லாமலேயே டெஸ்மாண்டும் விக்கர்ஸூம் கிட்டத்தட்ட கதையை முடிவுக்கு கொண்டு வந்துவிடுகிறார்கள்.! முத்தாய்ப்பாக கிர்பி வில்லனை ஒரே ஒரு கும்மாங்குத்து விட்டு சதிக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார்.!
    ரொம்பவே எளிமையான தெளிவான கதை.!

    வில்லனின் கைப்பாவையாக இருந்துவிட்டு டெஸ்மாண்ட் மேல் பரிதாபப்பட்டு திருந்தி இறுதியில் கிர்பிக்கு உதவும் மிஸ் ஆர்சிட் ரொம்பவே அழகாக இருக்கிறாள்.!

    வில்லனின் தொடர் கொலைமுயற்சிகளில் தன்னையறிமால் டெஸ்மாண்ட் தப்பிக்கும் காட்சிகள் சார்லி சாப்ளினின் காமெடியை நினைவூட்டுகின்றன.!

    படிப்பதற்கு இலகுவான நல்ல கதை.!


    தெய்வம் நின்று கொல்லும் (Kings Special 2) :-

    கத்தி எடுத்தவனுக்கு கத்தியால் சாவு என்கின்ற பழமொழிக்கேற்ப நாயை பழக்கி திருடவைத்து சம்பாதித்தவனுக்கு நாயின் திருட்டாலேயே தண்டனை கிடைக்கிறது.!

    இந்தக் குறுங்கதையில் டிடெக்டிவ் சார்லிக்கு பேப்பர் படிப்பது மட்டுமே வேலை.! மற்றவை தானாகவே நடக்கின்றன.

    வெள்ளைமாளிகை படலம் (Kings Special 2) :-

    இந்தச் சிறுகதையில் 25000 டாலர்கள் வருமானமுள்ள நியாயமற்ற வேலையை நிராகரிக்கும் சார்லி.. ஆல்பி என்னும் சிறுவனின் உண்டியல் தொகைக்காக அவனின் பூனையை மீட்டுக்கொடுக்கும் வேலையை ஏற்றுக்கொள்கிறார்.!

    இறுதியில் அந்தப் பூனை ஓடிப்போய் வெள்ளைமாளிகைக்குள் புகுந்துகொள்ள செக்யூரிட்டியிடம் கேட்டு பூனையை மீட்டு வருகிறார்கள்.! (அதனால்தான் கதைக்கு வெள்ளைமாளிகை படலம்னு தலைப்பு.!)

    தனக்கு ஊதியமாக கிடைத்த ஆல்பியின் உண்டியல் சேமிப்பு ஒரு டாலர் தொண்ணூறு சென்ட்டுகளை வைத்து அவனது பூனைக்கே கழுத்துப்பட்டை வாங்கி மாட்டிவிட்டு மனநிறைவோடுவும் முகமலர்ச்சியோடும் திரும்புகிறார் சார்லி.!

    ஏங்க.. இதெல்லாம் ஒரு கதைங்களா என்று நீங்க கேட்கலாம்..! ரத்தக்களறி.. கொலை.. வன்முறை.. சூழ்ச்சி.. வஞ்சகம்.. அதைவிட்டா விடுமுறையில மீன்புடிக்க போற இடத்துல பிரச்சினை.. இதுமாதிரி கதைகளையே தொடர்ச்சியா படிக்கிறதுக்கு..

    இந்த மாதிரி அழகான சின்ன சின்ன ட்விஸ்ட்கள் கொண்ட இலகுவான.. பரபரப்பு இல்லாத எளிமையான கதைகளை படிக்கும்போது மனசு அமைதியாகுது.. சந்தோசமாவும் இருக்குது.!

    I love kings Special series..💓💓💓

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் சூப்பர் கண்ணா. தரமான விமர்சனம்.

      Delete
  33. பேய்த்தீவு ரகசியம் (Kings special 2)

    காதல் மன்னன் ஜெமினி கணேசனைப் போலவே தோற்றமளிக்கும் டிடெக்டிவ் சார்லியின் கதை.!
    சார்லியின் நண்பர் ஒருவர் சொந்தமாக டிக்கா (நல்லவேளை கடைசி எழுத்துக்கு கொம்பு போடலை) என்கிற ஒரு அமைதியான தீவை வாங்கி தனது அழகு மனைவியுடன் குடியேறுகிறார்.!

    வேட்டையாபுரம் அரண்மனையில திடீர் திடீர்னு எல்லாம் சாயுதாம்.. உருளுதாம்.. உடையுதாம்கிற மாதிரி.. அந்தத் தீவிலும் ஏகப்பட்ட தொல்லைகளும் பிரச்சினைகளும் அடுத்தடுத்து கிளம்புகின்றன.!

    அந்தப் பிரச்சினைகளின் ஆணிவேரைக் கண்டறிந்து அகற்ற டிடெக்டிவ் சார்லியை வரவழைக்கிறார்கள்.!

    கெடுதல் யாரால் ஏற்படுகிறது என்று தெரிந்திருந்தும் அந்த நபரின் உதவியில்லாமல் வெளியேற முடியாதென்று பொறுமை காக்கவேண்டிய சூழல்.. இதையெல்லாம் தாண்டி எப்படி தப்பிக்கிறார்கள் என்பதே கதை.!

    சின்ன சின்ன திருப்பங்களுடன் எளிமையான கதை பின்னல்.! படிப்பதற்கு சுகமாக.. ரிலாக்சாக இருக்கிறது.!

    வில்லனிடம் மாட்டிக்கொண்ட சார்லி.. சாகும் தறுவாயிலும் வில்லனின் கையாளை பேசிப்பேசியே திருத்தி தன்பக்கம் இழுக்க முயற்சிக்கும் போது 23ஆம் புலிகேசி ப்ரோ ஞாபகத்துக்கு வர்ராரு.!

    அப்புறம் கைத் தூண்டிலை வெச்சிக்கிட்டு ஏழடி நீள சுறாமீனை பிடிப்பது.. சிறுத்தைக் கூண்டுக்குள்ள போடப்பட்ட சார்லியை சிறுத்தை மோந்து கூட பார்க்காமல் விட்டுவிடுவது..
    நாப்பது தேள்கள் கடிச்சும் வில்லனோட அடியாட்களுக்கு ஒண்ணுமே ஆகாதது.. அந்த தீவோட ஓணரம்மா தன்னோட புருசனை விட்டுட்டு எப்போப் பார்த்தாலும் சார்லியை நீச்சலடிக்கக் கூப்பிடுவது என சில நகைச்சுவைகள் இல்லாமலில்லை.!

    அதையெல்லாம் மீறி படிப்பதற்கு சுகமாக இருக்கிறது இந்த சார்லி கதை.!

    ReplyDelete
    Replies
    1. அட நீங்க எப்ப சார்லி ரசிகர் ஆனீங்க. சூப்பர்.

      Delete
  34. யார் அந்த Ms X (kings special) :-

    விங் கமாண்டர் ஜார்ஜ் கதைகளின் மேல் எனக்கு எப்போதுமே கூடுதல் பிடித்தமுண்டு.! சதுரம் சதுரமாய் வரையப்பட்ட அந்த சித்திரங்களில் ஏதோ ஒருவித ஈர்ப்பு இருப்பதையும் மறுக்கமுடியாது.! ஜார்ஜ் கதைகளின் இன்னொரு சிறப்பம்சம்.. அவர் ஒரு பைலட் என்பதால் கதைகள் உலகையே களங்களாக கொண்டவை..!

    யார் அந்த Ms. X....

    அத்தியாயத்திற்கு ஐயாயிரம் ருபாய் என்கிற ஒப்பந்தத்தின் அடிப்படையில் பத்திரிக்கைக்கு கதைத்தொடரை அனுப்பிவந்த அநாமதேய எழுத்தாளர்... கதைத் தொடர் படு பிரபலம் அடைந்ததும் கடைசி அத்தியாயத்தை அனுப்ப கால் மில்லியன் டாலர் கேட்கும் கட்டத்தில் கதை தொடங்குகிறது.!

    பத்திரிக்கையில் பணிபுரியும் இன்னொரு எழுத்தாளரான ட்ரிம்பியின் வேண்டுகோளின்படி..

    எடிட்டர் ஐவி ஆண்டர்ஸையும் (நம்மூரு மாதிரி இல்லாம வெளிநாட்டுல எல்லாம் அழகழகான இளம்பெண்கள்தான் எடிட்டர்கள் போலும்).. எழுத்தாளர் ட்ரிம்பியையும் பப்ளிசரின் கோபத்தில் இருந்து காப்பாற்றும் பொருட்டு..

    அந்த அநாமதேய Ms Xஐக் கண்டுபிடிக்கும் பணியில் இறங்குகிறார் ஜார்ஜ்.! அந்த மிஸ் Xஐ அடையாளம் காட்டக்கூடிய ஆட்களை எடிட்டர் ஐவியே போட்டுத்தள்ள.. ஐவி தான் அந்த மிஸ் Xஓ என்கிற சந்தேகம் கிளம்புகிறது..!

    ஆனால் மிஸ் X யாரென்றும் கதைகளை அனுப்புவது யாரென்றும் தெரிந்துகொண்ட ஐவி அவர்களை கொன்றுவிட்டு தான்தான் அந்த மிஸ் X என்று புகழையும் பணத்தையும் தட்டிச்செல்ல திட்டமிட்டிருப்பது ஜார்ஜுக்கு தெரியவர.. க்ளைமாக்ஸ் மீண்டும் ஒரு செம்ம ட்விஸ்ட்டுடன் இனிதே முடிகிறது.!

    அழகுப் பெட்டகமாக அறிமுகமாகும் எடிட்டர் ஐவி ஆண்டர்ஸ்.. சொர்ணாக்கா அவதாரம் எடுப்பது.. தள்ளாத கிழவியாக இருப்பாள் என்று எதிர்பார்த்த ட்ரிம்பியின் அத்தை.. மாடஸ்டி ப்ளைசி மாதிரி சண்டை போடுவது என இந்தச் சின்னக் கதைக்குள் பெரிய பெரிய திருப்பங்கள்.!

    கிங் ஷ்பெசல் 3 ல் விங் கமாண்டர் ஜார்ஜுக்கு 2 ஸ்லாட் கொடுக்கலாம் சார்.!

    ReplyDelete
  35. டைட்டானிக் தாத்தா (GEN-Z)

    கதையின் ஆரம்பமே மனதுக்கு நெருக்கமாக ஒரு ஃபேமிலி ட்ராமா போல இருந்தது.!

    சிறுமி ரோஸ் தன் தாத்தா ஜாக்ஸுடன் தங்க ஆரம்பித்ததும் கதை குதூகலமாகிவிடுகிறது.! தாத்தாவுக்கும் பேத்திக்குமான பாசப்பிணைப்பும் உரையாடல்களும் பிரமாதம்.! தாத்தா தனது பேத்தியை கவலை இல்லாமல் மகிழ்ச்சியாக பார்த்துக்கொள்ள படும் பாடுகள் கிச்சுகிக்சுமூட்டத் தவறவில்லை.!

    பாட்டியின் பழைய காரில் பேத்தியை ஸ்கூலுக்கு கூட்டிச்செல்லும் இடத்தில் ஜாக்ஸ் தாத்தா மெய்யாலுமே கலக்கியெடுத்துருக்கிறார்.. சாலையை மட்டுமல்ல.. நம்மையும்தான்.!

    காருக்குள் குடும்பம் நடத்தும் எலிகளும்.. காரையே பிரசவ ஆஸ்பத்திரியாக்கி வைத்திருக்கும் பூனையும்.. தாத்தாவின் டைட்டானிக் கப்பல் புராஜெக்ட்டும் என.. அடடா.. இத்தனை சின்ன இதழுக்குள் எத்தனை ரசிக்கத்தக்க விசயங்கள்..!

    சித்திரங்கள் கதைக்கு மிகப்பெரிய பலம்.! நிறைய இடங்களில் சிரிக்கவைத்தவை சித்திரங்களே.. ஆனால் புத்தகத்தின் சைஸ் காரணமாக தெளிவாக ரசிச்கமுடியாமல் போய்விடுகிறது.! எடிட்டர் சார்.. டைட்டானிக் தாத்தாவை மட்டுமாவது கொஞ்சம் பெரிய சைஸில் போடமுடியுங்களா சார்.?
    ஏனெனில் மிகத் தெளிவான சித்திரங்களே என்றாலும் நுணுக்கமான சில நகைச்சுவைகள் சைஸ் காரணமாக தவறவிடப்பட வாய்ப்பிருக்கிறது.!

    டைட்டானிக் தாத்தாவின் அடுத்த இதழுக்காக காத்திருக்கிறேன்.!

    ReplyDelete
    Replies
    1. ரசிக்க எத்தனை சமாச்சாரங்கள்!!! சூப்பர் kok!!😍😍😍💐💐💐

      Delete
  36. King's ஸ்பெஷலின் சீஸன் 2 - தொடரலாமா?

    ​இதே போல வருஷத்திற்கு 3 கூட்டணி இதழ்களோடு அடுத்த ஒற்றை ஆண்டுக்குள் பயணிக்கலாமா?

    Yes Please

    ReplyDelete
  37. // இதன் கதாசிரியர் Wilfrid Lupano தான் தாத்தாக்கள் தொடரின் பிதாமகர் & இந்த ஓநாய் கேரக்டர் கூட தாத்தாக்கள் கதையில் தலைகாட்டும் உருப்படி தான்! பேத்தி Sophie நடத்தும் பொம்மலாட்ட நிகழ்வின் நாயகனே இந்த ஓநாய் தானே? ரொம்பவே சிம்பிளான ஒரு கதைக்களத்தில் இளைய தலைமுறைக்கென சில சின்னச் சின்ன மெசேஜ்கள் சொல்ல முனைகிறார் //

    ஆகா ஆர்வத்தை தூண்டும் விஷயம். ஆவலுடன் காத்திருக்கிறேன்

    ReplyDelete
  38. டைட்டானிக் தாத்தா மனதுக்கு மிகவும் நெருக்கமான கதை சார். மாடஸ்டி ஏமாற்றவில்லை. மற்ற இரு புத்தகங்களும் இனிதான் படிக்க வேண்டும். கிங் ஸ்பெஷல் ஆண்டுக்கு 4 புத்தகங்கள் வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். தாத்தாஸ் சந்தாவில் ஒரு புத்தகம் அறிவிக்கப்பட்டதே சார் அது எப்போது வருகிறது? அது முன்பதிவு கதைக்கு முன்பா, பின்பா?

    ReplyDelete
  39. Kids comics is a smash hit with my daughter, particularly the First issue Team judi. தமிழ் வசனங்கள் மிகவும் வசீகரித்து விட்டது. She is continuously laughing for குச்சி குச்சி ராக்கம்மா. This particular book she took to school and read among her friends. Humourous and adventurous stories like this attract kids of age 10-13 years of age.

    ReplyDelete
    Replies
    1. ஆஹா!! கேட்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. எடிட்டரின் இந்த முயற்சி வீண்போகவில்லை என்பது கூடுதல் மகிழ்ச்சி!! 😀😀👏👏👏🙏🙏

      Delete
    2. மகிழ்ச்சி. நன்றி நண்பரே

      Delete
  40. ***கிங்ஸ் ஸ்பெஷல் 2***
    **பயங்கர பல்வலி**

    மாண்ட்ரேக் கதைக்கு பயங்கர பல்வலி என்ற தலைப்பா,
    அதென்ன பயங்கரரரரரரர பல்வலி என ஆர்வத்தை தூண்டிட படித்தேன்

    ஊரெல்லாம் பல்வலி என சுற்றி வர, இவர்ஙெதாவது கண்டுபிடிப்பார என நினைத்து படிக்க ஆரம்பித்தேன் 😋


    நம்மளை காத்திருக்க வைக்காமல் முதல் பக்கத்திலே பல்வலி ஆரம்பமாகி விடுகிறது , வந்த நொடியில் போயும் விடுகிறது, அனைத்து இடங்களிலும் கோட்சூட் போட்ட ஒரு மனிதன் தன் வயிற்று பகுதியில் ஒரு அழுத்தம் குடுக்க பல்வலி வந்து வந்து போகிறது, அந்த நொடியில் வேறு எதையும் செய்யவோ, நினைக்கவோ விடாமல் பயங்கரமான வலியை உண்டாக்கும் வண்ணம் செய்கிறான்😬😬😬

    எதோ ஒரு கருவி பயன்படுத்துகிறான் என்று புரிபட்டாலும் எப்படி,எதனால் என்ற கேள்வி எழவே செய்கிறது.

    சரி இந்த கண்டுபிடிப்பு எதற்கு
    பணம் பறிப்பதற்க்காக தான்,
    பேங்க் கொள்ளையடிக்க போகிறானா என நினைத்தேன், ஆனால் ஒரு பாடகனிடம் கைவரிசையை காட்டுகிறான், ஓஓஓ பழிவாங்கும் படலமோ என நினைத்தால் இல்லை பணம் பறிப்பே என்றாகிறது. சின்ன
    மாத்திரைகளை குடுத்து எவ்வளவு சம்பாத்திக்க முடியும் என நினைத்தால், அவன் உருவாக்கி உள்ள தேவை அப்படி. பல்வலின்னா சும்மாவா, அதுவும் ஒரு நொடியில் பயங்கரமான வலி.

    திடமான மனம் உள்ள பாடகனை ஒன்றோ, இரண்டு நாளிலோ மனதை மாற்றிட முடியாது என்பதை புரிந்து கொண்டு, தொடர்ச்சியாக பொறுமையாக செயல்பட்டு அவரிடமே பிரச்சனை நம்ப வைத்து விடுகிறான்.

    அடுத்ததாக ரவுடி கும்பல் தலைவனிடம் செல்லும் இவனுக்கு செம தில் வேண்டும் என நினைத்தேன், பணத்தாசையால் பேசி சம்மதிக்க வைத்து விடுகிறான். சொன்னதை செய்து பசம் வாங்க முற்பட்ட, நான் லளசுபட்டவனில்லை என தலைவன் காசு குடுக்காமல் இவனை துரத்த விட முனையா, ஓங்கின கைகளை அவரவர் கண்ணங்களில் பிடித்து கொள்ளும் சூழ்நிலையை உருவாக்கி விடுகிறான்.
    ரவுடி கும்பல் தலைவன் கண்ணத்தில் வைத்த கையை எடுக்க வேண்டி பணம் குடுத்து விடுகின்றான்.

    அடுத்ததாக போலீஸ் கமிஷனரிடம் செல்கிறான், பயங்கர தில்லுடா உனக்கு,
    என்றே தோன்றியது.

    நடுவில் நம்ம மாண்ட்ரேக் ஏமாற்று வேலை நடக்கிறது என புரிந்து கொண்டு தன் வழியில் விசாரனை செய்கிறார்.

    இறுதியில் தன் பேராசையால் பிடிபடுகிறான் ஏமாற்றுகாரன்.
    அவன் உண்டாக்கிய பல்வலி வித்தையும் புலனாகிறது.

    இக்கதையில் மாண்ட்ரேக்கின் மேஜிக் வேலை மிகக் குறைவே, ரவுடி கும்பலிடம் அவரின் ஹிப்னாட்டிச திறமையை காட்டும்போது இது வேறயா என்று புலம்ப வைத்து விடுகிறார் 😂😂

    கீழே வைக்க விடாமல் பக்கங்களை திருப்ப வைத்துவிட்டது இக்கதை.
    மிக நூதமான பணம் பறிப்பு படலம்.
    நியாமாக வகையில் பணம் வாங்கின மாதிரியும் ஆச்சு, பணம் உள்ளவர்கள் வலி போனா போதும் என சந்தேக படவும் மாட்டாங்க.

    ReplyDelete
    Replies
    1. சூப்பரா எழுதியிருக்கீங்க சகோ! இந்தக் கதையை நான் ஏற்கனவே முத்து காமிக்ஸ் தீபாவளி மலரில் படித்திருக்கிறேன். அன்று என்னை வெகுவாகக் கவர்ந்த கதை இது! கதை நன்றாக அமைந்ததற்கு மான்ட்ரெக்கின் மாயாஜால வேலைகள் அதிகம் இல்லாததே காரணம் என்று நினைக்கிறேன்!😝

      Delete
  41. கிங் ஸ்பெஷல் சீசன் 2,
    நிச்சயமாக தொடரலாம்.

    வருடத்திற்கு மூன்று தொகுப்பு,
    வரவேற்கிறேன்.

    சிறு வேண்டுகோள்..
    கிங் ஸ்பெஷல் என்ற பெயரிலேயே தொடரலாம் வேறு பெயர் மாற்ற வேண்டாம்.

    ReplyDelete
    Replies
    1. யெஸ்! இதுவே நல்ல பெயர்தான்! தவிர, எடிட்டருக்கு இதை மாற்றும் எண்ணம் இருப்பதாகவும் தெரியவில்லை!👏

      Delete
  42. சூப்பர் சார்...இது வரை வந்ததிலே டாப் நிகழ் அட்டை டெக்ஸ் தான் வேற லெவல்...‌மேக்சி சைசுல இந்த சித்திர விருந்து படிக்க வாய்ப்பில்லையென்பது சிறிய வருத்தம்...தலையில்லா போராளி சைசுக்கான அற்புதம்

    ReplyDelete
  43. ஏஜென்ட் ராபின், எழுந்து வந்த எதிரி. கிளைமேக்ஸ் கதை

    எங்கேயோ கேட்ட குரல்.. மார்ச்சில் எதிர்பார்த்தேன்.

    ReplyDelete
  44. கிங் ஸ்பெஷலை தொடரலாம்.
    வருடத்திற்கு மூன்று இதழ்கள் என்பது சரியாகத்தான் இருக்கும்.

    ReplyDelete
  45. King's ஸ்பெஷலின் சீஸன் 2 - தொடரலாமா?

    ​இதே போல வருஷத்திற்கு 3 கூட்டணி இதழ்களோடு அடுத்த ஒற்றை ஆண்டுக்குள் பயணிக்கலாமா?

    Yes yes yes

    ReplyDelete
    Replies
    1. ஆச்சரியம் தான்!
      'ஒரு ஆட்டு மந்தையின் நடுவே...' - அதானுங்களே செனா அனா?!!😁

      Delete
  46. ​King's ஸ்பெஷலின் சீஸன் 2 - தொடரலாமா? அல்லது ஒரு பிரேக் விடலாமா?

    ​இதே போல வருஷத்திற்கு 3 கூட்டணி இதழ்களோடு அடுத்த ஒற்றை ஆண்டுக்குள் பயணிக்கலாமா - வேண்டாமா? பதில் ப்ளீஸ்?

    Yes and Yes - however one request - let Phantom + Mandrak come together and Rip Kirby + the other detective (forgot his name) can come together.

    ReplyDelete
  47. ​// King's ஸ்பெஷலின் சீஸன் 2 - தொடரலாமா? அல்லது ஒரு பிரேக் விடலாமா? //
    தாராளமாக தொடரலாம் சார்...

    ​// இதே போல வருஷத்திற்கு 3 கூட்டணி இதழ்களோடு அடுத்த ஒற்றை ஆண்டுக்குள் பயணிக்கலாமா - வேண்டாமா? பதில் ப்ளீஸ்? //
    தாராளமாக பயணிக்கலாம் சார்...

    ReplyDelete
  48. மெய்ன் சந்தாவிலேயே சோபிக்காத ஹீரோக்களுக்கு டாட்டா காட்டுறோம். கிங் ஸ்பெசலிலும் எந்த ஒரு கவனிப்பையும் ஈர்க்காத ஒரே ஒரு ஹீரோக்கு டாட்டா காட்டிவிட்டு சார்லி அல்லது ரிப் கிர்பிக்கு ஸ்லாட் அதிகரிக்க முடியுமானு யோசிக்கலாங்க சார்.இல்லைனாலும் இதே போல தொடரண முழு ஆதரவுங்கசார்

    ReplyDelete
    Replies
    1. ///கிங் ஸ்பெசலிலும் எந்த ஒரு கவனிப்பையும் ஈர்க்காத ஒரே ஒரு ஹீரோக்கு டாட்டா காட்டிவிட்டு///

      நீங்க மான்ட்ரேக்கை சொல்றீங்கன்னு நினைக்கறேன் 😁

      Delete
  49. // King's ஸ்பெஷலின் சீஸன் 2 - தொடரலாமா? அல்லது ஒரு பிரேக் விடலாமா? //

    Continue the same combo and format sir ..

    ReplyDelete