Powered By Blogger

Sunday, January 25, 2026

"சென்னை" எனும் சாகசம் !!

 நண்பர்களே,

வணக்கம். இப்போதெல்லாம் வருஷத்தின் முதல் மாதம் பல விதங்களில் ஒரு மெகா திருவிழாவாகிப் போகிறது நமக்கு! புத்தம் புதியதொரு ஆண்டு கொண்டு வரும் உத்வேகம் ஒரு பக்கம் ; புத்தம் புது அட்டவணையுடன், புதிதாய் புறப்படும் நமது காமிக்ஸ் பயணத்தின் த்ரில் இன்னொரு பக்கமெனில்... சென்னைப் புத்தகவிழா எனும் அமர்க்களம் is the icing on the cake! ஒவ்வொரு ஜனவரியுமே தலைநகரம் தனது புஜங்களைத் தட்டி, தனது வாங்கும் திறனைக் காட்சிப்படுத்தும் போது "வாவ்வ்!" என்று வாய் பிளக்காதிருக்க முடியாது! And no different this time too! அதுவும் இம்முறை டபுள் ஸ்டால் கிடைக்காத நிலையில் - உள்ளுக்குள் உடுக்கடித்துக் கொண்டிருந்ததெல்லாம் நிஜம் தான்! ஆனால் மெய்யான காமிக்ஸ் ஆர்வலர்களின் தேடல்களுக்கு 'சிங்கிள் - டபுள்' என்ற பேதங்களெல்லாம் ஒரு பொருட்டே அல்ல என்பதை ஓங்கி உரக்கப் பதிவு செய்து, நம் வயிற்றில் மில்க் ஷேக் வார்த்துள்ளனர் - பட்டினத்துப் பிரஜைகள் ! சிங்கிள் ஸ்டால் விற்பனைக்கு அநேகமாய் இம்முறை ஒரு புது ரெகார்ட் போட்டிருப்போம் என்பேன் - thanks to your பொம்ம புக் காதல்!

And வழக்கம் போலவே சென்னையில் தென்னையாய் இதம் தந்தோர் யார்? வெறுமனே வேடிக்கை மட்டும் பார்த்த கையோடு ஊடு திரும்பினோர் யார்? என்பதை அலசிடலாமா? ஜூனியர் எடிட்டரின் ஏற்பாட்டில் பில்லிங் software செம இலகுவாக அமைந்திருப்பதால் - விற்பனைப்  புள்ளி விபரங்களை விரல்நுனியில் அறிவது சுலபமாகியுள்ளது! So ஆரம்பிக்கலாமுங்களா?

"சென்னைக்குப் போவ டிக்கெட் எடுக்குறியோ - இல்லே கக்கூசிலேயே வித்தவுட்டில் போறியோ ? - அது உன்பாடு ; ஆனாக்கா கணிசமான மாயாவி கையிருப்பு இல்லாமல் போகாதே!" என்பது ரொம்பச் சீக்கிரமே நாம் படித்துக் கொண்ட பாடம் என்பதால், இந்த தபா கொஞ்சம் முன்கூட்டியே சுதாரித்திருந்தேன்! And அதன் பலன்களை இந்த நொடியில் என் கையிலுள்ள காகிதம் பறைசாற்றுகிறது! என்ன தான் விடிய விடிய நான் கி.நா; க்ரைம்; த்ரில்லர்; fantasy; கௌபாய் என்று எதை எதையோ promote பண்ணக் கூரை மேல் நின்று கொண்டு கூவித் தீர்த்தாலுமே,  படிய வாரிய தலையோடு வலது கரத்தினை ஒரு இரும்புப் பிரதேசமாக்கியதொரு மனுஷன் 'தேமே' என Black & White-ல் ஆஜராகும் நொடியில், ஒளிவட்டம்  அந்த மனிதன் மீது மட்டுமே நிலைகொள்வது ஒரு வருடாந்திரத் தொடர்கதையாகிறது. அதுவும் இந்தவாட்டி நாம் மறுபதிப்புக்குத் தேர்வு செய்த கதைகளும் சரி, புக் சைஸும் சரி, அட்டைப்படங்களும் சரி, அம்சமாய் அமைந்து போக - "சென்னை '26-ன் TOPSELLER யார்?" என்பதற்கான போட்டி - மாயாவியின் 4 ஆல்பங்களுக்கு இடையே தான்!!

டெக்ஸ் அல்ல; டைகர் அல்ல; XIII அல்ல; டின்டின் அல்ல; லக்கி லுக் அல்ல....... இரும்புக்கை மாயாவியே yet again சென்னை விழாவின் பிரதம நாயகன்! And "மாயாவிக்கோர் மாயாவி" தான் இம்முறை விற்பனையில் டாப் இடத்தைப் பிடித்திருக்கும் இதழ்! தானாய் மாயாவியைக் கற்பனை செய்து ; தானாய் கதை எழுதியதாய் அள்ளி விட்டு வரும் அந்த டைரடக்கரின் பங்களிப்பும் maybe இங்கே கொஞ்சம் இருக்கலாமோ, என்னவோ -  4 மாயாவி மறுபதிப்புகளும் புரட்டியெடுத்துள்ளன விற்பனைகளில்!! "போச்சு... பழசு வந்தாலே புதுசுக்கான ஸ்லாட் போச்சு!" என்று அவ்வப்போது குரல் எழுப்பும் ஆர்வலர்களை ரெண்டு நாட்களுக்கு நம்ம பில்லிங் செக்ஷனில் நிலைகொள்ளச் செய்யனும் என்ற அவா இந்த நொடியில் பீறிடுகிறது! உசிரைக் கொடுத்துப் பணி செய்து உருவாக்கும் புத்தம் புது ஆல்பங்களை விடவும் பத்து மடங்கு - பன்னிரெண்டு மடங்கு கூடுதலாய் மாயாவி மாமா பட்டையைக்  கிளப்புவதை நேரில் பார்க்கும் பின்னரும் அவர்களதுவிசாரங்கள் தொடருமா? என்றறிய ஒரு curiosity!

"சரி, சரி மாயாவிக்கு all time craze; பழசென்றாலும் விற்குது! அதுக்காக பழசுக்கே ஜெயம்ன்னு ஒரேடியாவும் எடுத்துக்க முடியாது தான்!" என்றபடிக்கே அடுத்ததாக யார் ஸ்கோர் செய்துள்ளார் என்று பார்க்க விழைந்த போது எனது ஆந்தை விழிகள் இன்னும் அகலமாய் விரிந்தன! Becos வெயிலோ, மழையோ, குளிரோ - அதே ஜட்டியும், முழுக்கைச் சட்டையும் அந்த முகமூடியுமாய் உலா வரும் வேதாள மாயாத்மா கம்பீரமாய் காட்சி தந்து நிற்கிறார்! நம்பினால் நம்புங்கள் guys - இங்கேயும் சிரிகாகுவா சில்க்கின் இடையளவே வித்தியாசம் - "மாயாவிக்கோர் மாயாவி" இதழின் விற்பனை நம்பருக்கும், வேதாளரின் "சூனியக்காரியின் சாம்ராஜ்யத்தில்" இதழின் விற்பனை நம்பருக்குமிடையில் ! வெறும் 7 பிரதிகளே இடைவெளி இம்முறைக்கான Best seller #1-க்கும #2-க்கும் மத்தியிலான இடைவெளி! இங்கேயுமே கொஞ்சம் முன்னமே சுதாரித்து செப்டம்பரில் "கபால வேட்டை" & ஜனவரிக்கென "சூனியக்காரியின் சாம்ராஜ்யம்" இதழ்களைத் தயார் செய்திட்டதால் கானக சூப்பர் ஸ்டாரின் ரசிகர்களுக்கு ஏமாற்றமின்றிப் பார்த்துக் கொள்ள முடிந்துள்ளது! And KING'S ஸ்பெஷல் # 1 இதழிலுமே மிரட்டலானதொரு விற்பனை!  Pheww... க்ளாஸிக் பார்ட்டிகள் இந்த மாதிரிக் பின்னியெடுத்தால் புது வரவுகளை அப்புடிக்கா ஓரமாப் போயி கில்லி, பம்பரம் என்று ஏதாச்சும் ஆடச் சொல்லலாம் தான் போலும்!

சரி ரைட்டு - மாயாவி first; வேதாளார் second.... சர்வ நிச்சயமாய் 'தல' டெக்ஸ் தான் மூன்றாமிடத்தில் இருக்கணுமென்ற நம்பிக்கையில் பரிசீலனையைத் தொடர்ந்தால் மறுபடியும் ஒரு LED பல்பு எனக்கு! இங்கேயுமே வெற்றிக் கோப்பை ஒரு க்ளாஸிக் பார்ட்டிக்கே!

And அவருமே கானகத்தைச் சார்ந்தவரே and அவருமே மரத்துக்கு மரம் தாவுபவரே! இல்லீங்கோ - நான் குறிப்பிடுவது நம்ம கோடாரி மாயாத்மாவை அல்ல...! நம்ம அபிமான "கபிஷ்" புள்ளையாண்டனைத் தான்! சென்றாண்டின் அளவுக்கு இல்லையென்றாலும் கபிஷ் ஸ்பெஷல்-3 தான் 2026-ன் விற்பனைகளில் மூன்றாமிடத்தைப் பிடித்துள்ளது! சரி..."நோஸ்டால்ஜியா...வீட்டில் பசங்க படிக்க ஏதுவானது; கலரில் அம்சமா இருக்குது என்ற காரணங்களினால் ஸ்கோர் செய்துள்ளது! ப்ரீயா விடு... next நம்ம 'தல' தான் - confirmed"என்றபடிக்கே சேல்ஸ் ரிப்போர்ட்டை மறுக்கா ஸ்கேன் செய்தால், இம்மாம் பெரிய பல்பாய் மறுக்கா கிட்டியது! எனக்கே நம்பச் சிரமமாய் உள்ளது folks - ஆனால் நமது அரைஜாண் வெகுமதி வேட்டையன் "கைப்புள்ள ஜாக்" தான் இம்முறை விற்பனையில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளான்! அட்டகாசமான அந்த அட்டைப்படமும், உள்ளே புரட்டும் போது கண்ணைப் பறிக்கும் சித்திரங்களும், வர்ணங்களும் இந்த இதழுக்கு அசாத்தியமானதொரு விற்பனையைத் தந்துள்ளன! Simply amazed!

இப்படியே பல்பு-பல்பா வாங்கிட்டுத் திரிஞ்சா எக்மோர் வாசலிலே ஒரு சாலையோர பல்புக்கடை போட்டிடலாம் என்று பட்டதால் அடுத்து யூகங்கள் எதையும் முன்வைக்காமல் லிஸ்ட்டை மட்டுமே படித்தேன்! ஷப்பாடி.... ஒரு வழியாக TEX வந்தே விட்டாரென்று நிம்மதிப் பிரவாகம் உள்ளுக்குள் குடிகொண்ட நொடியே "நானும் அதே படகிலே தான் வர்றேனுங்க" என்று ஒரு கறுப்புக் கோட் ஆசாமி குரல் கொடுப்பது போலிருந்தது! யாரென்று பார்த்தால் - டைலன் டாக் தான்! "The குட்.. பேட்.. & அக்ளி" இதழும், டெக்ஸின் Best seller இதழும் ஒரே நம்பரில் விற்பனை கண்டுள்ளன்! "ஆஹா!" என்று உள்ளுக்குள் ஒரு வித சன்னமான மகிழ்வு பரவியது! சச்சின் டெண்டுல்கரோ, விராத் கோலியோ, ரோஹித் ஷர்மாவோ பின்னிப் பெடல் எடுத்து டீம் கெலித்தால் அது நார்மலான நிகழ்வு தானே! அதே சமயம் ஒரு புஜாராவோ, ரஹானேயோ, நிதிஷ் ரெட்டியோ சதமடித்து டீம் ஜெயிக்கும் பட்சத்தில் மகிழ்வு கொள்ள கூடுதல் முகாந்திரமாச்சே! அதே போலவே இந்த நொடியில்! 'தல' டெக்ஸ் வழக்கம் போல overall ரகளை செய்திருந்தாலும், மற்றவர்களின் பங்களிப்புகளும் கணிசமாய் இருந்திருப்பது heartening! இம்முறை "மெக்ஸிகோ மேஜிக் ஸ்பெஷல் " டாப்கியரில் தான் பயணித்துள்ளது! And "சாபம் வாங்கிய சுரங்கம்" இதழ் தான் டெக்ஸ் வரிசையில் maximum விற்றுள்ளது!

அப்புறம் வழக்கம் போலவே நமது ஒல்லியார் கார்ட்டூன் கொடியை உசத்திப் பிடித்து நிற்கின்றார்! "புதுவரவு" என்ற காரணத்தினால் "கைப்புள்ள ஜாக்" கார்ட்டூன் இதழ்களுள்  #1 இடத்தைப் பிடித்திருக்கலாம்! ஆனால் overall விற்பனையில் லக்கி லூக் எப்போதும் போலவே பட்டியலில் ரொம்பவே உசரத்தில்!

Top perfomers லிஸ்டில் அடுத்த இடத்தில் இருப்பவர் நம்ம உலகம் சுற்றும் டின்டின்! போன வருஷம் போலவே நடப்பாண்டிலும் டின்டின் has done well!

அதிலும் "விண்கல் வேட்டை" + "கேல்குலஸ் படலம்" தெறி விற்பனை! So உலக மொழிகளின் ஒரு ஜாம்பவான் நம் மத்தியிலும் சிறுகச் சிறுக ஒரு சூப்பர் ஸ்டாராய் பரிணாம வளர்ச்சி கண்டு வருவதில் மெய்யான மகிழ்ச்சி!

இன்னொரு solid performer நம்ம பில்லியனர் லார்கோ வின்ச் தான்! சமீபமாய் "போர் கண்ட சிங்கம்" வாயிலாக ஏகமாய் வெளிச்ச வட்டத்துக்கு வந்து சேர்ந்திருக்கும் 'W' குழுமத்தின் 'தல' இம்முறை  அழகாய் விற்பனை கண்டுள்ளார். "கான்க்ரீட் கானகம் நியூயார்க்" நீங்கலாய் நம்மிடம் இதர இதழ்கள் எல்லாமே இருப்பதால் செட்டாக வாங்கியோரும் கணிசம். நம்ம B டீமிடம் அந்த  "கா.கா.நி" இருப்பதால் அதை மட்டும் அங்கே வாங்கிவிடும்போது full set சாத்தியமாகி விடுகிறது!

இந்த விழாவின் surprise package யாரென்று சொன்னால் நம்பச் சிரமமாக இருக்கும் தான்! ஓ யெஸ் - ரிப்போர்ட்டர் ஜானி தான் இம்முறை ஆச்சர்யமூட்டும் விற்பனை கண்டுள்ள பார்ட்டி! இதற்கான முழுப் புண்ணியமும் Gosu Vlog-ல் (பரிதாபம்) சுதாகர் & கோபி போட்டிருந்த அந்த காமிக்ஸ் வீடியோவுக்கே சாரும் என்பேன்! "ஜெர்மனியில் ஜானி"..."ஜானிக்கொரு தீக்கனவு" என்று எந்த இதழ்களெல்லாம் வீடியோவில் காட்டினார்களோ - அவையெல்லாமே பட்டையைக் கிளப்பியுள்ளன அடுத்த 4 தினங்களில்! அந்த வீடியோ வந்த ஞாயிறு மதியம் முதலாய், விழா முடிந்த புதன் வரை ஜானி செம பிஸி! பற்றாக்குறைக்கு நமது ஆன்லைன் ஆர்டர்களிலும் திரும்பின திக்கெல்லாம் ஜானி தான்! Gosu vlogs - பெரிய பெரிய நன்றிகள்!

இன்னொரு solid performer - நம்ம தட்டை மூக்குத் தளபதியார் தான்! கைவசமிருப்பது இரண்டே இதழ்கள் தான் என்றாலும் இரண்டுமே வழக்கம் போல 'நச்' என்ற விற்பனை!

வியப்பூட்டும் வகையில் விற்பனைகளில் மேல் அடுக்கில் இடம் பிடித்திருக்கும் அடுத்த நாயகர் நமது மாயாஜால மன்னன் மாண்ட்ரேக் தான்! செம காதில் பூ சுத்தும் கதைகள் தான்; அவ்வப்போது ஆளாளுக்குக் கலாய்க்கவும் செய்கிறோம் தான்! ஆனாலும் மனுஷன் விற்பனைகளில் துளியும் அசராமல் சாதனை செய்து வருகிறார் - கடந்த சில வருடங்களாகவே! மேஜிக் ஆப் மாண்ட்ரேக் !

கொஞ்சம் கொஞ்சமாய் லிஸ்டில் கீழே பார்வைகளை நகர்த்தும் போது, மத்திமமான விற்பனை கண்டுள்ள பார்ட்டிகள் அடுத்து தென்படுகின்றனர்!

உட்சிட்டியின் சிறப்புச் சிரிப்புப் போலீசார் அங்கே கரம் தூக்கி நிற்பது தெரிகிறது! ‘பட்டையைக் கிளப்புவோம்’ என்றும் இல்லாமல், ‘குட்டையைக் குழப்புவோம்’ என்று தலைநோவுகளுக்கும் வழி தராது மீடியமாக விற்றுள்ளன சிக் பில் இதழ்கள்! But லக்கி லுக்கிற்கும் இவருக்கும் மத்தியிலான இடைவெளி இன்னுமே பயில்வான் ரங்கநாதனின் இடுப்பளவு என்பேன்!

டீசெண்டான விற்பனை என்ற அணிவகுப்பில் முண்டியடித்தபடியே தலை காட்டும் அடுத்த அணியோ நமது க்ளாஸிக் பார்ட்டீஸ்!

 * CID லாரன்ஸ் & டேவிட்

 * ஜாக்கி நீரோ & ஸ்டெல்லா

ஆகியோர் சிறப்பாக இல்லாவிட்டாலும் ஓ.கே.வாக விற்பனையாகியுள்ளனர். Again, மாயாவிக்கும், அவரது சமகால  நாயகர்களுக்கும் மத்தியிலான இடைவெளி HULK HOGAN-ன் இடுப்பளவையும் விடப்  பன்மடங்கு ஜாஸ்தி என்பேன்! மாயாவியார் இருப்பது குல்பர்காவில் என்றால் பாக்கிப் பேர் இருப்பதோ கன்னியாகுமரியில்! Phewww !!

‘Decent சேல்ஸ்’ அணியில் அடுத்த நபரோ ஒரு அம்மணி! கேரட் கேசத்தோடு, கலக்கலான கலரில் சிகாகோவை தெறிக்க விடும் டிடெக்டிவ் ரூபின், மூன்றாவது ஆண்டாகத் தரமான சம்பவம் செய்துள்ளார். ஆண்டுக்கு ஒரு ஸ்லாட் என்ற பொறுப்புக்கு அம்மணி ‘நச்’சென்று நியாயம் செய்து வருகிறார் என்பேன்!

ஒற்றைப்படி கீழே நிற்பதோ நமது அணியின் நிரந்தர இளவரசியாரே! டாக்டர்கள் முதல் டகாட்டி விடுவோர் வரை அனைவருக்கும் ஆதர்ஷ டாவான மாடஸ்டி பிளைசி, இம்முறை தனக்கான விற்பனைகளை கரெக்ட்டாகச் செய்து தந்துள்ளார். And - அந்த மேக்சி சைசில், “ The BLAISE ஸ்பேஷல் ” புருவங்களை உயரச் செய்யும் விற்பனை கண்டுள்ளது !

அடுத்த இடத்திலும் வியப்பில்லை - ஹாரர் கதைகளின் ஒரே பிரதிநிதியான டைலன் டாக், ஓட்டுக்கா பார்க்கையில் அழகாகவே ஸ்கோர் செய்துள்ளார். இவரது கதைகளில் சமீப காலமாய் Adult Content சற்றே தூக்கலாக இருப்பது மட்டும் தான், இவருக்குக் கூடுதல் ஸ்லாட் ஒதுக்க விடாமல் தடுத்து வருகிறது! இல்லையெனில் நிச்சயமாய் he is worth more! என்ன சொல்கிறீர்கள் folks?

நாயகராய் அல்லாது - ஒரு ஜான்ராவாக அடுத்த நிலையில் நிற்கின்றன - டீசெண்ட் விற்பனை பார்த்த இதழ்களின் லிஸ்டில்! And அவை கிராபிக் நாவல்களை கூட்டணி! Black & White கிராபிக் நாவல்கள் இம்முறை ஓரளவுக்கு நன்றாகவே விற்றுள்ளன தான்.ஆனால் கலரிலான கி.நா.களில் ஒரு விதச் சுணக்கம்! Strange!! இங்குமே உங்களது எண்ணங்கள் ப்ளீஸ்?

அடுத்து நான் சுட்டிக் காட்டப் போவது:

 * ⭐️ ஸகுவாரோ (Saguaro)

   &

 * ⭐️ சாமுராய் தாத்தா & டீம்

2025-ல் வெளிவந்து முதல் இதழிலேயே impressive ஆக செயல்பட்டிருக்கும் இந்த இரு ரக அணிகளுமே, முன்செல்லும் பயணங்களுக்குத் தமது டிக்கெட்களை ஊர்ஜிதம் செய்து கொள்ளும் விதத்தில் செயல்பட்டுள்ளனர்! Very decent!

லிஸ்டில் அடுத்த இடத்திலிருப்பவர்கள் மீது தான் இனி பார்வையினை நீள விட வேண்டும்! And இவர்களோ - தென்னையாய் உசரங்களுமின்றி, வெண்ணெய்களாய் சொதப்பல்களுமின்றி ‘பரவாயில்லை’ என்று சொல்லச் செய்துள்ளனர்!

முதலிடம் இந்தப் பிரிவினில் - நம்ம மர்ம மனிதர் மார்ட்டினுக்கே! அமைதியாய், தனக்கென ஒரு சிறு ரசிக வட்டத்தைக் கொண்டிருக்கும் இந்த மனுசன், ஆர்ப்பாட்டம் இல்லாமல் விற்பனைக்கு வழி வகுத்துள்ளார். Again - ஆண்டுக்கொரு slot-க்கு நேர்மையாய் செயல்படும் நாயகர்!

வியப்பு தான் - ராபின் 2.0 கூட இந்த ‘ஓகே’ லிஸ்டில் மட்டுமே இடம் பிடித்திருப்பதில்! சர்வ நிச்சயமாய் இவருக்கு முந்தைய ‘டாப்’ பட்டியலில் இடம் கிட்டியிருக்க வேண்டும் தான்! ஆனால் ஏனோ புரியலை - அந்த அளவிற்கான அதிரடி வரவேற்பில்லை!

மிஸ்டர் நோ கூட “ஓ.கே... ஓ.கே.. விசாரம் கொள்ள ஏதுமில்லை!” என்ற ரேஞ்சுக்கே செயல்பட்டுள்ளார்! இவரைப் பொறுத்தவரை இன்னும் கூடுதலாய் வாய்ப்புகள் வழங்கினால் தான், இவர் முழுமையாய் limelight-க்கு வந்திடுவார் என்று தோன்றுகிறது! அந்த 9 அத்தியாய மெகா சாகஸத்தை துவக்க வேண்டிய வேளை நெருங்கி விட்டது போலவே படுகிறது!

Exactly the very same situation with ZAGOR too !! ஒரு மிரட்டலான குண்டு புக் தேவை போலும் - கோடாலி மாயாத்மாவை வெளிச்ச வட்டத்தில் உறுதியாய் நிலைப்படுத்திட !! திட்டமிடுவோம் - ரொம்பச் சீக்கிரமே !! இத்தனை வீரியமான ஆட்டக்காரரை சோம்பி இருக்க அனுமதிக்கலாகாதே ?!

அடுத்த செட் இதழ்களோ - நமது கதை சொல்லும் காமிக்ஸ் (Fairy Tales)! போன வருஷம் அவை ‘புதுசு’ என்ற காரணத்தினால் செமத்தியாக விற்றிருந்தன! இம்முறை அந்தப் ‘புது இதழ் factor’ இல்லாத காரணத்தால் அதே வேகம் நஹி! ஆனாலும் “கூட்டிக் கழிச்சப் பாரு... கணக்கு சரியா வரும்” என்றே தகவல் சொல்லுகின்றன!

‘பரவாயில்லை’ பட்டியலில் அடுத்த இடமோ நமது ஜென்டில்மேன் டிடெக்டிவ் ரிப் கிர்பிக்கே! இவரது இதழ்கள் நம்மிடம் ரொம்பக் கிடையாதென்பதால், அதன் விற்பனையைப் பொறுத்தே அளவிட முடிகிறது! Nothing to complain at all! 

இனி காத்துள்ள பெயர்களோ - நமக்கு சங்கடத்தை உருவாக்கக் கூடிய சில பல பெயர்கள்! Please remember guys : இது முழுக்கவே ஒற்றைப் புத்தக விழாவின் விற்பனை சார்ந்த புள்ளி விபரங்கள் தான் என்பதால், இதனையே அவர்களது ஆற்றல்கள் மீதான தீர்ப்பாகவோ; முன்செல்லும் பொழுதுகளில் அவர்களது எதிர்காலங்களைத் தீர்மானிக்கும் காரணிகளாகவோ பார்த்திடத் தேவையிராது என்பேன்! அப்புறம் சொதப்பல்ஸ் என்றான பின்னே இவருக்கு என்ன இடம் ? - அவருக்கு அந்த இடம் என்றெல்லாம்  கணக்குப் பார்க்கத் தேவை இல்லை என்று எண்ணினேன்! என்ன - நமக்கான ஏமாற்றத்தை ஆகக் கூடுதலாய் தந்துள்ளது யாரென்று பார்த்தால்:

🔻 SODA

🔻 மேக் & ஜாக் 

🔻 சிஸ்கோ 

🔻 ப்ளுகோட்ஸ் 

🔻 வேய்ன் ஷெல்டன் 

🔻 தோர்கல் 

🔻 ஸ்பூன் & ஒயிட் 

🔻 சுஸ்கி & விஸ்கி 

ஆகியோரே தந்துள்ளனர். அதிலும் சுஸ்கி & விஸ்கி நிலவரமெல்லாம் வெளியே சொல்ல முடியா கலவரம்!! அதே கதை தான் ஸ்பூன் & ஒயிட் மற்றும் மேக் & ஜாக் (Mac & Jack) கார்ட்டூன் பார்ட்டிகளுக்கும்! SODA வைப் பொறுத்தவரைக்கும் - சரி, வாணாம், விட்ருவோம் - அழுதுருவேன் !! ஒற்றை விஷயம் மட்டும் ஸ்பஷ்டமாய்ப் புரிகிறது : 

எதில் பரிசோதனை முயற்சிகள் மேற்கொண்டாலும் ஏதேனும் ஒரு லக்கில் தலை தப்பிவிடும் போலும் - ஆனால் கார்ட்டூன்களில் மட்டும் தெரியாத்தனமாய் 'புதுசு - புத்தம் புதுசு' என்ற விஷபரிட்சைகள் கூடவே கூடாது போலும்! இங்கே விழும் சாத்துக்கள் ஒவ்வொன்றும் டெக்ஸின் டிரேட்மார்க் ‘ணங்’ - ‘சத்’-களை விட வீரியமானவையாக உள்ளன! Phewww!! இனி கார்ட்டூன் களங்கள் ரொம்பவே சின்ன குண்டாவுக்குள் தான் இருந்திட வேணும் போலும்!

ஆக்ஷன் கதைகளிலும் நமது வேய்ன் ஷெல்டன் ; சோடா ஆகியோர் வாங்கி வரும் மதிப்பெண்களைப் பார்க்கும் போது சற்றே கவலையாகத் தானுள்ளது! இவர்கள்  தான் இப்படியென்றால் நம்ம XIII-ன் இதழ்களுமே இம்முறை செம சாத்து வாங்கியுள்ளன! பூஜ்யத்துக்கு மிக அருகில் சேல்ஸ் !! இந்தக் கொடுமையில் 4 ஆண்டுகளின் தரைக்கடிப்  பதுங்குதள ஜாகைக்குப் பிற்பாடு, நமது இரத்தப்படலம் கலர் தொகுப்பானது ‘ஏக் தம்மில்’ இப்போது வெளிவந்துள்ளது! வாங்கி அடுக்கிய சமயம் - பன்மடங்கு விலை பெருகும் என்ற நம்பிக்கை இருந்திருக்குமென்பது உறுதி! ஆனால் நம்மிடமே நண்பர்கள் எக்கச்சக்கமாய் வாங்கி முடித்து விட்டதாலும், நம்மிடம் ஒரு வெளியே தெரியாத நம்பரில் பிரதிகள் இன்னுமுமே இருப்பதாலும் - எதிர்பார்த்த 'ஜாக்பாட்' சாத்தியப்படவில்லை போலும்! So, நமது புக்கிங் ஒரிஜினல் விலைகளுக்கு ஒட்டியதொரு விலையிலேயே பிரதிகள் நீரின் மேற்பரப்புக்கு இப்போது வந்துள்ளன! B இருக்க பயமேன்?!

ரைட்டூ... Yet another விழாவின் நிறைவுடன், நிறைவான விற்பனையுடன், நிறைந்த மனசுடன் விடைபெறுகிறேன் folks!நேற்று முதல் திருப்பூரில் விழா தொடங்கியுள்ளது & காத்திருக்கும் வாரங்களில் தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் புத்தக விழாக்கள் களைகட்ட உள்ளன! Hopefully இங்கே ‘சுமார் மூஞ்சிக் குமார்கள்’ அவதாரில் இருந்தோர் அங்கே ஜொலிப்பார்கள் என்று நம்புவோம்!

Bye all.. See you around! ஒரு மினி அறிவிப்போடு நாளை திரும்புகிறேன் ! Have a great long weekend all !!

85 comments:

  1. வணக்கம் நண்பர்களே

    ReplyDelete
  2. மாயாவி மாமா ராக்ஸ்..🔥🔥🔥

    ReplyDelete
  3. விற்பனை சொதப்பல் பட்டியலில்
    சிஸ்கோ
    ஷெல்டன்
    தோர்கல்
    ப்ளூ கோட்
    சுஸ்கி & விஸ்கி
    இடம் பெற்றது ரொம்பவே கஷ்டமாக உள்ளது நல்ல வேளை ஜானி அதில் இடம் பெற வில்லை நன்றி கோபி சுதாகர்

    ReplyDelete
  4. மினி அறிவிப்பு இரட்டை வேட்டையர்கள் & ஸ்பைடர் அல்லது டெக்ஸ் வில்லரா ஆசிரியரே சீக்கிரம் வாங்க

    ReplyDelete
  5. //XIII-ன் இதழ்களுமே//

    இந்த கதையின் தொடர் புத்தகங்கள் வைத்திருப்பவர் வாங்கிடலாம் சார்
    ஸ்பின் ஆப் ஓகே

    தற்போது கைவசமிருப்பதை வாங்க வருவோர் முந்திய பாகங்களின் கதையை தெரிந்து கொளவதில் ஆர்வம் காட்டுகிறார்கள், அதுதான் XIII விற்பனையில் சிறு குறை சார்

    ReplyDelete
  6. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  7. தோர்கல் இன்னும் விற்பனையில் கவலைக்கிடம் வருத்தமளிக்க செய்கிறது

    நம்ம பரிதாபங்கள் சுதாகர் சகோதரர் கூட "விண்வெளி யின் பிள்ளை" மட்டும் வாங்கி உள்ளார் இதை படித்துவிட்டு எப்படி இருக்குனு பார்த்துட்டு மற்ற பாகங்களை வாங்குவேன் என சொல்லி உள்ளார்

    நானுமே ஒரு பதின்ம வயது சிறுமிக்கு விண்வெளியின் பிள்ளைதான் எடுத்து குடுத்தேன், படித்துவிட்டு மற்ற பாகங்களை வாங்கும் உத்தேசத்தில் உள்ளார்
    வி.பி வாசகர்களை தன்பால் ஈர்க்கும் மேக்னேட் உள்ளதுங்க

    ஜனவரியின் சிங்கிள் ஆல்பம்
    விடைகொடு ஆரிசியா சேல்ஸ் எப்படிங்க சார்

    ReplyDelete
  8. Replies
    1. வணக்கம் போட கூட சோம்பேறித் தனம் வந்து விட்டது
      என்னத சொல்ல

      Delete
    2. வெல்கம் டு யதார்த்த உலகம் 💪

      Delete
  9. //Exactly the very same situation with ZAGOR too !! ஒரு மிரட்டலான குண்டு புக் தேவை போலும் - கோடாலி மாயாத்மாவை வெளிச்ச வட்டத்தில் உறுதியாய் நிலைப்படுத்திட !! திட்டமிடுவோம் - ரொம்பச் சீக்கிரமே !! இத்தனை வீரியமான ஆட்டக்காரரை சோம்பி இருக்க அனுமதிக்கலாகாதே ?!//

    Agreed Sir

    ReplyDelete
  10. மினி அறிவிப்பிற்கு வெயிட்டிங் சார்...:-)

    ReplyDelete
  11. //எதில் பரிசோதனை முயற்சிகள் மேற்கொண்டாலும் ஏதேனும் ஒரு லக்கில் தலை தப்பிவிடும் போலும் - ஆனால் கார்ட்டூன்களில் மட்டும் தெரியாத்தனமாய் 'புதுசு - புத்தம் புதுசு' என்ற விஷபரிட்சைகள் கூடவே கூடாது போலும்! இங்கே விழும் சாத்துக்கள் ஒவ்வொன்றும் டெக்ஸின் டிரேட்மார்க் ‘ணங்’ - ‘சத்’-களை விட வீரியமானவையாக உள்ளன! Phewww!! இனி கார்ட்டூன் களங்கள் ரொம்பவே சின்ன குண்டாவுக்குள் தான் இருந்திட வேணும் போலும்!//

    மிகவும் வருத்தமளிக்கும் விசயம்
    😩😩😩😥😥

    ReplyDelete
    Replies
    1. ஸ்டாலில் உள்ளே இருக்கும் போது பத்து வயதை ஒட்டிய நாலு சிறுவர்கள் வந்தார்கள், அவர்களிடம் கைப்புள்ள ஜாக் கபிஷ் எடுத்து நீட்டினால் அவர்கள் "இரவே..இருளே...கொல்லாதே" புத்தகத்தை பிடித்து கொண்டு நின்றார்கள்
      அவங்கள கூட்டிட்டு வந்தவங்கமிடம் இது பெரியவங்க படிக்கும் புத்தகம் என்றேன்,
      வேறு புத்தகம் வாங்கி தராமல் இழுத்து சென்று விட்டார்

      எல்லாம் தமிழ் சினிமாவின் அரண்மனை, காஞ்சனா படங்களின் இம்பேக்ட் எனவும் சொல்லிடலாம், சார்

      Delete
  12. //B இருக்க பயமேன்?!//

    😂😂😂😂😂

    ReplyDelete
  13. சென்னை விற்பனை உங்களுக்கு சந்தோஷத்தை கொடுத்தது என்றால் அது எங்களுக்கும் பல மடங்கு சந்தோஷம் என்பதை சொல்லித் தான் தெரிய வேண்டும் என்பதில்லை... விவசாயம் நன்றாக வந்தால் பஞ்சம் இருக்காது என்பது போல்... காமிக்ஸ் இன் விற்பனை எங்களைப் போன்றவர்களுக்கு காமிக்ஸ் கிடைத்துக் கொண்டே இருக்கும் என்ற அந்த சந்தோஷமே ஒன்றே போதும்... ❤️❤️❤️❤️.

    ReplyDelete
  14. சந்தோஷத்தை பகிர்வதற்கு முன்னால் துக்கத்தை பகிர்கிறேன்... தோர்கலின் விற்பனை... இன்னமும் என்னால் நம்ப முடியாத ஒரு செய்தி என்னைப் பொறுத்தவரை டெக்ஸ் டைகருக்கு அடுத்தப்படியாக நான் மிகவும் விரும்பும் ஒரு தொடர் தோர்கல். மிக அற்புதமான பேண்டஸி கலந்த தொடர் தோல்வி அடைவதில் எனக்கு மிகவும் மன வருத்தத்தை அளிக்கிறது. 😭😭😭😭

    ReplyDelete
    Replies
    1. //டெக்ஸ் டைகருக்கு அடுத்தப்படியாக நான் மிகவும் விரும்பும் ஒரு தொடர் தோர்கல்//

      சூப்பர் சகோ

      Delete
  15. சோடா
    வித்தியாசமான கதைக்களம்
    கார்ட்டூன் பாணியில் இருந்தாலும் சித்திரங்கள் ரசிக்க வைத்திடவை
    என் மிக பேவரிட்களில் ஒருவர்

    சோடா-வை ட்ரை பண்ணாதவங்க படித்து பாருங்கள்
    உங்களே கவரக்கூடியவரே

    ReplyDelete
    Replies
    1. உண்மை மிக அருமையான தொடர் இதுவும் தோல்வி அடைவதில் எனக்கு வருத்தமே..

      Delete
    2. எனக்கு மிகவும் பிடித்த தொடர்

      Delete
  16. மறு பதிப்பு புத்தகங்கள் வரும்போது எல்லாம் என் மனதில் தோன்றும் ஒரு விஷயம் நீங்கள் அதில் கவனமாக செயல்பட வில்லையோ என்று... உதாரணத்திற்கு விண்வெளி கொள்ளையர். ஒரே சைஸ் ஆனால் அட்டை படத்தை பாருங்கள் உங்களுக்கே புரியும். இதுபோல் ஏமாற்றம் அளித்த நிறைய மறு பதிப்பு புத்தகங்கள் உண்டு ஆனால் அதற்கெல்லாம் முடிவு கட்டும் விதமாக இப்போது சிறந்த முறையில் மறு பதிப்பு வெளியிடுவது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது.. அதனால்தான் என்னவோ மாயாவின் புத்தகங்கள் பட்டையை கிளப்பியது அதிலும் மறு பதிப்பு வராத மாயாவிக்கு ஒரு மாயாவி முதலிடத்தை பிடித்ததில் வியப்பு இல்லை.... வாழ்த்துக்கள் தங்களின் பயணம் இதுபோல் சிறப்பாக தொடர எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்த வாழ்த்துக்கள் 🙏🌹🌹🌹

    ReplyDelete
    Replies
    1. "விண்வெளிக் கொள்ளையர்" maxi சைசில் முத்து காமிக்சில் முன்னொரு காலத்தில் வந்தது... அதை நாம எப்போ மறுபதிப்பு போட்டோம் சாமி? 🤔🤔🤔

      Delete
  17. இனிமேல் தோர்களின் தொடர்களை நான்கைந்து புத்தகம் சேர்த்து முன்பதிவில் வெளியிடுவது சிறந்த என்று என் மனதிற்கு படுகிறது ஆனால் எக்காரணம் கொண்டும் இத்தொடரை நிறுத்தி விடாதீர்கள் ப்ளீஸ்

    ReplyDelete
  18. //விண்கல் வேட்டை" + "கேல்குலஸ் படலம்" தெறி விற்பனை//

    சூப்பர் 🔥🔥🔥🔥🔥

    ReplyDelete
  19. //ஒரு மினி அறிவிப்போடு நாளை திரும்புகிறேன் //

    Curious

    ReplyDelete
  20. Replies
    1. Lady S சென்னை போகவில்லைங்க, சகோ

      Delete
    2. Nopes.... தவறான தகவல்! அம்மணி சூப்பரா போயிட்டு, சூப்பரா திரும்பிட்டாங்களே 💪

      Delete
    3. 4 பேருக்கு நன்னி சொல்லணும் - becos 2 ஆல்பங்களிலும் சேர்த்து 2+2 =4 புக்ஸ் விற்றிருக்கு 👍👍

      Delete
    4. சாரி சார்

      //4 பேருக்கு நன்னி சொல்லணும் - becos 2 ஆல்பங்களிலும் சேர்த்து 2+2 =4 புக்ஸ் விற்றிருக்கு 👍👍
      //

      Glad to know Sir

      Delete
    5. அதுல இரண்டு நம்மளது. Gave to my friend's daughter

      Delete
    6. I got it to gift to my friend's daughter 🤣

      Delete
    7. சிறப்பு நவநீதன்

      Delete
  21. சென்னை புத்தக திருவிழா விற்பனை பற்றிய அட்டகாசமான தகவல்கள். நன்றி சார்.

    ReplyDelete
  22. டேங்கோ விற்பனை நிலவரம் எப்படி சார்

    ReplyDelete
  23. @Edi Sir😘

    *ஜானி நீரோ & ஸ்டெல்லா* 😘

    என்பது

    ஜாக்கி நீரோ & ஸ்டெல்லா 🥰

    என்று உள்ளது 😘.

    ReplyDelete
    Replies
    1. தல... சரியா தான் கீது 🥹

      Delete
  24. //சிங்கிள் ஸ்டால் விற்பனைக்கு அநேகமாய் இம்முறை ஒரு புது ரெகார்ட் போட்டிருப்போம் என்பேன் - thanks to your பொம்ம புக் காதல்!//

    🔥🔥🔥

    ReplyDelete
  25. இரட்டை வேட்டையர் கதைகள்
    சேக்ஸ்டன் ப்ளேக் டிடெக்டிவ் ஸ்பெஷல்
    இவைகள் எப்போது ரிலீஸ் சார்

    ReplyDelete
  26. விற்பனையில் சாதித்தது 'ஆஹா' என்றாலும், சாதித்த ஆசாமிகளை நினைத்தால் 'க்கும்' என்றிருக்கிறது!

    தோர்கலின் நிலைமை நினைத்தால் 'சுச்சோ' என்றிருக்கிறது!

    கார்ட்டூங்களின் நிலைமை - ஹூம்!

    இளவரசியின் விற்பனை - ஊய்ய்!!

    ReplyDelete
  27. டின் டின் - கொஞ்சம் கொஞ்சமாக வாசகர்களை கவர ஆரம்பித்து உள்ளார், அதே நேரத்தில் பலர் அவரை வாங்க ஆரம்பித்து உள்ளது மகிழ்ச்சியான செய்தி. கூடிய விரைவில் டாப் செல்லர் பட்டியலில் இடம் பெறுவார் என்ற நம்பிக்கை உள்ளது.

    ReplyDelete
  28. கார்ட்டூன் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக பார்ப்பது, கபீஷ் மற்றும் நமது கைபுள்ளை பலரை கவர்ந்து, விற்பனையில் சாதிக்க ஆரம்பித்தது.

    அடுத்த புத்தக திருவிழாவில் இந்த இருவருக்கும் மீண்டும் ஒரு வாய்ப்பு கொண்டுங்கள் சார்.

    ReplyDelete
    Replies
    1. கைப்புள்ள வேற கதைகளே லேது சார் 🤕... முடித்துக் கொண்டு விட்டார்கள் தொடரை!

      Delete
    2. அட அப்படியா சார் 😒

      Delete
    3. இது போன்ற தொடர் வேறு ஏதாவது இருக்கா சார்? விடிய விடிய விஞ்ஞானி?

      Delete
    4. என்னது கைப்புள்ள ஜாக் அவ்வளவுதானா 😶😶😶

      Delete
  29. //விற்பனையில் சாதித்தது 'ஆஹா' என்றாலும், சாதித்த ஆசாமிகளை நினைத்தால் 'க்கும்' என்றிருக்கிறது!//

    YES .. I think end of road for SODA , MAK AND JAK , CISCO .. SAD NEWS ..

    ReplyDelete
    Replies
    1. சோடா வெறும் 2 புக்ஸ் விற்றுள்ளன 🤕🤕...

      Delete
  30. டைலன் - இந்த முறை வந்த கதை சுமார் என்னை பொறுத்தவரை. ஆனால் ஹாரர் கதை விரும்புவர்கள் இவரை புத்தக திருவிழாவில் வாங்கி செல்ல வாய்ப்புகள் அதிகம் சார். இவரின் இன்னும் சிறந்த சிறுகதைகளை தேர்வு செய்து வெளியீடுங்கள் சார்; இதற்கு முன்னால் நமது காமிக்ஸில் வந்த இவரின் சிறுகதைகள் ரொம்ப நன்றாக இருந்தன சார்.

    ReplyDelete
  31. சோடா மற்றும் சிஸ்கோ மற்றும் மேக் & ஜாக் மற்றும் ப்ளூக்கோட்ஸ் விற்பனையில் இந்த முறையும் சாதிக்க வில்லை என்பது கஷ்டமாக உள்ளது. இனிவரும் காலங்களில் அவர்களுக்கு மனதில் மற்றும் இடம் கொடுக்க என்னை தயார் செய்து கொள்கிறேன்.

    ReplyDelete
  32. மாயாவி கதைகளின் தலைப்பில் மனிதர்கள் என்று வரும் கதைகள் அதிகம், சமீபத்தில் வந்த, தவளை மனிதர்கள், களிமண் மனிதர்கள், மற்றும் இயந்தர தலை மனிதர்கள். மனிதர்கள் பெயர்கொண்ட வேறு மாயாவி கதைகள் உண்டா?

    அதே போல லாரன்ஸ் கதைகளில் மறைந்த என்று வரும் கதைகள், விண்ணில் மறைந்த விமானங்கள், காற்றில் கரைந்த/மறைத்த கப்பல்கள் ☺️

    ReplyDelete
  33. வேதாளர் - வேதாளர் பன்ச் டயலாக் அதிகம் இல்லாத சுவாரசியமான வாசிப்பு அனுபவத்தை கொடுத்த கதை. வண்ணகலவை இந்த கதைக்கு நன்றாக இருந்தது.

    ReplyDelete
  34. சூப்பர் சார்....உற்சாகப் பதிவு...நம்ம மிஸ்டர் நோவ சீக்கிரமா கரை சேருங்க...இந்த மாதத்தோட அதிரடி முடிஞ்சதேன்னு சோம்பிய மனதை மிஸ்டர் நோ துள்ளச் செய்யுது

    ReplyDelete
  35. Replies
    1. நான் ஒரு கமெண்ட் போடுவதற்குள் 5 கமெண்ட் போடும் உனது வேகம் என்ன என்ன 😀

      Delete
  36. கபீஷ்: நான் சிறிவயதில் இருந்து கபீஷ் ரசிகன், பூந்தளிர் புத்தகம் மூலம் அறிமுகம். நமது காமிக்ஸில் இப்போது வரும் கதைகளை படித்து வருகிறேன். பல கதைகள் ஏற்கனேவே படித்து இருக்கிறேன் ஆனால் மீண்டும் இது போன்ற கதைகளை படிக்கும் போது கிடைக்கும் சந்தோஷம் வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

    காடு, அங்கு உள்ள விலங்குகள் அனைத்தும் நண்பர்களாக ஒருவர்க்கு ஒருவர் உதவி செய்து இவர்களுக்கு எல்லாம் மிக பெரிய காவலாக கபீஷ். சூப்பர். குழந்தைகளுடன் சேர்ந்து இருக்க இந்த புத்தகம் மிகவும் சரியான தொகுப்பு.

    ReplyDelete
  37. அது என்ன சார் B டீம்? புரியவில்லையே?

    ReplyDelete
    Replies
    1. புரியாத வரை நலமே சார் 👍

      Delete
    2. அப்பாடி! பத்து சார் கூட சேர்ந்து நானும் நலமாக தான் இருக்கிறேன் 😊

      Delete
  38. கர்மாவின் சாலையில் - இன்னும் 10 பக்கங்கள் உள்ளன படித்து முடிக்க. ஒரு வித்தியாசமான வாசிப்பு அனுபவம். நாம் பார்ப்பது ஒரு கதாபாத்திரம் மட்டுமே ஆனால் அதனை வைத்து இப்படி ஒரு சுவாரசியமான கதையை கொடுத்த கதாசியரை கண்டிப்பாக பாராட்டாமல் இருக்க முடியவில்லை. அடுத்து என்ன நடக்குமோ, அவர்கள் முகத்தை ஏதாவது ஒரு இடத்தில் காட்டிவிட மாட்டார்களா என்ற ஆர்வம் படிக்கும் போது இருந்தது.

    இதுவரை நன்று.

    ReplyDelete
  39. Hi Editor sir,
    Very well planned for chennai book fair.Good to know that about sale sir.
    Good luck on next book fair sir

    ReplyDelete
  40. // கோடாலி மாயாத்மாவை வெளிச்ச வட்டத்தில் உறுதியாய் நிலைப்படுத்திட !! திட்டமிடுவோம் - ரொம்பச் சீக்கிரமே !! இத்தனை வீரியமான ஆட்டக்காரரை சோம்பி இருக்க அனுமதிக்கலாகாதே ? //

    சீக்கிரம் செய்யுங்கள் சார் வண்ணத்தில். ☺️

    ReplyDelete