Powered By Blogger

Saturday, November 01, 2025

நானூற்றி எண்பத்தி நான்கு கோடியில் ஒருத்தன்..!

 நண்பர்களே,

வணக்கம்! நியூஜிலாந்தின் க்ரிக்கெட் டீமானது கொஞ்சம் வித்தியாசமானது! நம்மூரின் சூப்பர் ஸ்டார்கள் கலாச்சாரம் அங்கே மருந்துக்கும் கிடையாது! தாரை தப்பட்டைகள் கிழிய இங்கே நமது ஜாம்பவான்கள் களமிறங்கும் அதே சமயத்தில்- "யார்டா இவன்?' என்று நம்மை வினவச் செய்யும் நார்மலான பல ப்ளேயர்களோடு நியூஸிலாந்து எதிரே நிற்கும்! ஆரவாரமின்றி வருவார்கள்; பெரிய, பெரிய டீம்களையெல்லாம் தண்ணீர் குடிக்கச் செய்துவிட்டு புன்னகையோடு கிளம்பியும் போய்விடுவார்கள்! Sometimes, star power is a luxury & not a necessity...! நவம்பரில் நமக்கென காத்துள்ள கூட்டணி கூட இந்த நியூஜிலாந்து டீம் போலவே தான்!

* அதிரடி, சரவெடி big names கிடையாது!

* நாம் தோளில் கைபோடும் அண்மையில் இருக்கக் கூடிய டீசென்டான, நார்மலான ஹீரோக்களாகவே இருப்பர்!

* ஆனால்- சில தருணங்களில் ஸ்டார்களால் தர இயலாத வெற்றிகளை இந்த journey men கில்லாடிகள் சாதித்துக் காட்டுவர்!

So நவம்பரில் முக்கூட்டணியில் காத்துள்ள மூன்று அணிகளிலுமே "தல- தளபதி- உலக நாயகன் - சூப்பர் ஸ்டார்' என்ற ரீதியில் மெகா ஸ்டார்கள் இல்லாது போகலாம் தான்; ஆனால் இவர்களது படம் ஓடப் போகும் ஒவ்வொரு தியேட்டரிலும் கலகலப்பிற்குப் பஞ்சமே இராது என்பேன்!

இதோ- உங்கள் ஞாபகத்திற்கென நவம்பரின் இதழ்கள்;

  1. குருதியில் பூத்த குறிஞ்சி மலர் ( அறிமுகம்: Catamount )
  2. ப்ளூகோட் பட்டாளத்தின்- ஊழியம் செய்ய விரும்பு..!
  3. மிஸ்டர்.நோ- "சதுப்பில் ஒரு சடுகுடு...!''

போன வாரமே "குருதியில் பூத்த குறிஞ்சிமலர்" பற்றிய preview பார்த்துவிட்டதால், மீத இருவரை இம்முறை பார்த்திடலாமா folks?

"ஊழியம் செய்ய விரும்பு''...! 

நடப்பாண்டின் இளைத்துப் போன கார்ட்டூன் கோட்டாவின் இறுதி ஸ்லாட்டில் பயணிக்கிறார்கள்- நமது ப்ளூகோட் பட்டாளத்தினர்! நம்மிடையே இந்த ஜோடி கூத்தடிக்கத் துவங்கி பத்து ஆண்டுகளுக்கு மேலாகிறது! ஆனால், ஒரிஜினலாக இவர்களோ 55+ ஆண்டுகளாய் வலம் வந்து கொண்டிருக்கின்றனர்! 1861 முதல் 1865 வரை அமெரிக்காவில் நடந்த வடக்கு vs தெற்கு என்ற உள்நாட்டுப் போர் சார்ந்த அக்கப்போர்களைப் பகடி கலந்து சொல்ல முனையும் இந்தத் தொடரில் இதுவரையிலும் 68 ஆல்பங்கள் வெளிவந்துள்ளன! இன்னமுமே ஆண்டுக்குக் குறைந்தபட்சமாய் ஒரு ஆல்பமாவது ரிலீஸ் ஆகிய வண்ணமுள்ளது! And கிட்டத்தட்ட பத்து ஐரோப்பிய மொழிகளில் வெளிவந்து கொண்டிருக்கும் இந்தத் தொடரானது, ஆசியாவில் அநேகமாய் நம்மள் கி தமிழில் மட்டுமே வெளிவந்து கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன்! So நாற்பத்திஎட்டரைக் கோடி ஜனம் ( 4.840.000.000)  வாழும் ஒரு கண்டத்தினில் இந்தப் படைப்பை தாய்மொழியில் ரசிக்கும் வரம் பெற்ற இக்ளியூண்டு அணி நாமே என்று பெருமைப்பட்டுக் கொள்வோமே folks? "நானூற்றி எண்பத்தி நான்கு கோடியில் ஒருத்தன்..!'' என்று வாட்சப் ஸ்டேட்டஸில் போட்டால் சும்மா லைக்ஸ் அள்ளிடாதோ? போட்டுப் பார்க்கலாமா guys ?

Coming back to the story- சீருடை அணிந்திருக்கும் நம்ம கவுண்டர்- செந்தில் ஜோடியானது இம்முறை மெக்ஸிகோவினுள் புகுந்திட நேர்கிறது! And அங்கே உயிர் பிழைக்க வேண்டுமெனில் இறை ஊழியம் செய்தாலே ஆச்சு என்றதொரு நெருக்கடியில் சிக்கிடுகின்றனர்! தொடர்ந்திடும் கூத்துக்கள் கண்ணைப் பறிக்கும் வண்ணச் சித்திரங்களில், மெக்ஸிக மண்ணிலேயே அரங்கேறிடுகின்றன! இம்முறை கதையின் பின்புலம் பிரதானமாய் யுத்த களமல்ல என்பதால் முழுக்க முழுக்கவே மெக்ஸிக மாக்கான்களின் லூட்டிகளோடு, யுத்த இழப்புகள், கோரங்கள் என்று எதுவுமே இல்லாது பயணிக்கிறது! Breezy reading-க்கு உத்திரவாதம் தரும் இந்த ஆல்பத்தில்- கட்டத்துக்குக் கட்டம், வசனத்துக்கு வசனம் சிரிப்பைத் தேடும் முனைப்பின்றி ஜாலியாக வாசித்திட்டால் அரை அவருக்கு "ஜிலோன்னு'' பொழுது ஓடிவிடும் என்பது உறுதி! But "இங்கே கிச்சுக்கிச்சு மூட்ட ஒண்ணும் இல்­லியோ? அங்கே ஏதாச்சும் இல்லியோ?'என்று துளாவத் தொடங்கினால் - அந்த "நானூற்றி எண்பத்தி நான்கு கோடியில் ஒருத்தன்..!'' என்ற நம்ம கெத்துக்கு சீக்கிரமே ஆபத்து வந்து சேர்ந்திடும்! 

And இந்த ஆல்பத்தின் மொழிபெயர்ப்பினை செய்திருக்கும் நம்ம மேச்சேரியார்- உங்களுக்குக் கிச்சுகிச்சு மூட்டிடும் முனைப்பினில் முனைப்புடன் சில வஜனத் திணிப்புகளோடும்,  கடுமையான இசைச்சேவை செய்திடும் பேரார்வத்தோடும் முயற்சித்திருந்தார் ! இரண்டுமே வேலைக்கு ஆகாதே என்ற டர்ர்ர் எனக்கு ! விட்டால் "மாசிலா.. உண்மைக் காதலி­..!'' ரேஞ்சுக்கு ஸ்கூபியும், ரூபியும் பாடிப்புடுவாங்க என்று தென்பட, அவசரம் அவசரமாய் அந்த வெள்ளத்துக்கு அணை போட்டிருக்கிறேன்! சும்மாவே "கார்ட்டூன்னா வெளுப்போம்'' என்ற காண்டில் உள்ள நம்ம மக்களிடம் நெருடக்கூடிய விதமான மொழியாக்கத்தோடு ஒரு கார்ட்டூனை ஒப்படைத்தால், ஹெல்மெட் போட்டாலுமே கபாலம் தேறாது என்பது அனுபவப் பாடமாச்சே?! So கதையோட்டத்தில் மட்டுமன்றி, பிரார்த்தனைத் தருணங்களில் வந்திடும் பாடல் - ஸ்தோத்திர வரிகளிலும் "ஆர்வத்தைக் கட்டுப்படுத்துங்க - அந்த SPB இசை வேட்கையை மூடி போட்டு அடையுங்க'' என்று மேச்சேரியாரிடம் சொல்லி வைத்தேன் ! நண்பர் ஜான் சைமனுக்குப் பரிச்சயமானதொரு ஃபாதரிடம் கிருத்துவ வரிகளின் மொழிபெயர்ப்பினைக் கேட்டுப் பெற்று- நார்மலாக அந்த இடங்களில் இட்டு நிரப்பியுள்ளோம்! எல்லாம் சரியாக வந்திருக்க கர்த்தர் ஆசீர்வதிப்பாராக! And இதோ- ஒரிஜினல் அட்டைப்படம்+ உட்பக்க preview!


                                                                                       
                                                                   

Moving on, நவம்பரின் ஒரே Black & White இதழான மிஸ்டர்.நோவின் ஆக்ஷன் மேளா பற்றி இனி பார்க்கலாமா? இங்கேயும் கொஞ்சம் பின்னணித் தகவல்கள் will be in order என்று படுகிறது guys! பெரியவர் செர்ஜியோ போனெ­லியின் கைவண்ணத்தில் 1975-ல் துவங்கிய இந்தத் தொடரானது- இதோ தனது ஐம்பதாவது ஆண்டில் இன்று கம்பீரமாய் நின்று வருகிறது! தற்சமயம் இது லைவ்வாக இல்லாத போதிலும், கிட்டத்தட்ட 400+ கதைகள் இத்தொடரில் உள்ளன! எனது தீரா வருத்தமே - இத்தொடரையும், ஸாகோரையும் 1990-களிலேயே நாம் அறிமுகப்படுத்தாமல் போய்விட்டோமே என்பது தான்! அந்தக் காலகட்டத்திலேயே இவர்களும் களமிறங்கியிருக்கும பட்சத்தில், தாறுமாறு- தக்காளிச் சோறு உறுதியாகியிருக்கும் என்பேன்! ஆனால், வருஷத்துக்கு இருபது புக்ஸ் போட்டாலே பெரிய சாதனை என்றான அப்போதைய சூழ­லில் புதுசாய் எதையும் தேடிடும் முனைப்பே இந்த ஆந்தை விழிகளுக்கு இருந்திருக்கவில்லை! உள்ள டெக்ஸ் வில்லரையும், டைகரையும், லக்கி லூக்கையும், சிக் பில்லையும், மாயாவியையும் கொண்டு வண்டியை ஒட்டினாலே தெய்வச் செயல் என்று நினைக்கத் தோன்றிய நாட்களவை! எது எப்படியோ- இந்த அமேசான் கானக நாயகருமே நமக்கு "நானூற்றி எண்பத்தி நான்கு கோடியில் ஒருத்தன்..!'' என்ற கெத்தை நல்கிடும் ஜாம்பவான்! And இந்த black & white சாகஸத்தில் - நேர்கோட்டிலும் எத்தனை சிக்ஸர்கள் அடிக்கலாம் என்பதை அப்பட்டமாகப் புரியச் செய்கிறார்! போனெலி ­குழுமமே இதனில் அட்டகாசமான விற்பன்னர்கள் என்றே சொல்லுவேன்! வாசகர்களின் நாடித்துடிப்பை அட்சர சுத்தமாய்ப் புரிந்து, அதற்கேற்ப ஒவ்வொரு நாயகரையும் செதுக்குவது அவர்களுக்குக் தண்ணீர் பட்ட பாடாச்சே!

And இந்த ஆல்பத்தின் மொழியாக்கமும்  நம்ம மேச்சேரியார் தான் & இங்குமே அவரது இசைச்சேவை கரை புரண்டோட முயற்சித்ததை மேட்டூர் டேம் கட்டித் தடுத்துள்ளேன்! ப்ளூகோட்டில் எம்.ஜி.ஆர் படப்பாட்டு என்றால், மிஸ்டர்.நோவுக்கு ஜிவாஜி படப்பாட்டு என்ற ரேஞ்சுக்கு போட்டுத் தாக்கியிருந்தார்! ஆஹாகா.. மொத்துக்கள் ஒரு தொடர்கதையாகிப் போகுமே என்ற பயத்தில், அவசியப்பட்ட இடங்களின் முழுமையிலும் பட்டி-டிங்கரிங் பார்த்து முடித்தேன்! 

Yet க்ளைமேக்ஸை நெருங்கும் ஓர் கட்டத்தில் கதையில் ஏதோ உதைப்பது போலவே பட்டது! ஆங்கில மொழிபெயர்ப்பு; அதன் பின்பாய் ஒரிஜினல் இத்தாலி­யப் பக்கங்கள்- என சகலத்தையும் தோண்டியெடுத்துச் சரிபார்க்கும் படலத்தைத் துவங்கினேன்! ஒரிஜினலாகவே கோர்வையில் ஏதோ லைட்டாக உதைப்பது புரிந்தது! And நமது மேச்சேரி இசைப்புயலாரோ- "மேலே இருக்கவன் பார்த்துக்குவான்'' என்று அதை அப்படியே, குழப்பத்தோடே, நான் பார்த்துக்குவேன் என்ற நம்பிக்கையில் எழுதி அனுப்பியிருந்தார்! வியாழன் இரவே இதன் மீதான பணிகள் முடிந்திருக்க, எனக்கோ அந்தப் பிசிறை அப்படியே விட்டுவிட மனம் ஒப்பவில்லை! யதார்த்தத்திலும், ப்ளாஷ்பேக்கிலும், ப்ளாஷ்பேக்கில் இன்னொரு ப்ளாஷ்பேக்கிலும் நகர்ந்திடும் அந்தப் பகுதியினில்  சின்னதாய் எதுவோ, நம்ம புரிதலுக்கு எட்டலை என்பது பல்லி­ல் சிக்கின கொய்யா விதை போலவே உறுத்திக் கொண்டிருக்க, இசைப்புயலாரிடம் மறுக்கா போனில் பேசிப் பார்த்தேன்! நான் எழுப்பிய சந்தேகங்கள் சார்ந்த புரிதலோ, பதிலோ அவரிடம் லேது என்றாக, மறுபடியும் மண்டைக்குள் அசைபோட்டுக் கொண்டே இருந்தேன்! அப்போது வந்து சிக்கிய V காமிக்ஸ் எடிட்டரிடம் அங்கே இடறுவது ஏனென்று விளக்கி அவரது பார்வையில் ஏதாச்சும் புரிபடுகிறதா? என்று பார்க்க விழைந்தேன்! முத­லில் விக்ரமுமே முழித்த கதை தான்.. ஆனால், கொஞ்ச நேரத்துக்கு நான் பொறுமையாய் வீசிய கேள்விகளை process செய்த பின்னே அந்த இடத்தில் படைப்பாளிகள் மனதில் கொண்டிருந்த சமாச்சாரம் இதுவாக இருக்குமோ? என்று ஒரு கோர்வையை முன்வைக்க- ஆகாகா...நம்ம ­லியனார்டோ தாத்தாவின் தலைக்குள் பல்ப் ஒளிவிட்டது போலி­ருந்தது எனக்கு! "அட.. ஆமால்லே..! இந்த sequence-ல் இதுதான் நடந்திருக்கணும்!' என்பது புரிபட, பரபரவென சனி காலை அதைத் திருத்திக் தந்தேன்.. அப்படியே டீம் V மடமடவென ஆக வேண்டிய பணிகளைப் பார்க்க ஆரம்பிக்க, இந்தப் பதிவை நான் எழுதிக் கொண்டிருக்கும் நேரத்துக்கு மிஸ்டர்.நோ.அச்சாகியே முடிந்துவிட்டார்! கதையைப் பொறுத்தவரை - அனல் தான் !! Absolute cracker !!

So ப்ளூகோட்ஸ்+ மிஸ்டர்.நோ ப்ரிண்டிங் முடிந்து பைண்டிங் போயாச்சு! இன்னமும் பெண்டிங் இருக்கும் "குருதியில் பூத்த குறிஞ்சிமலர்" மட்டும் திங்கட்கிழமை மொழிபெயர்ப்பு + சுடச்சுட டைப்செட்டிங் நிறைவு பெற்று விடும் பட்சத்தில், அடுத்த வார இறுதிக்கு முன்பாக மூன்று இதழ்களும் உங்கள் கைகளை எட்டியிருக்க வேணும்! மீதமிருக்கும் பணிகளுக்குள் ஐக்கியமாகிட இதோ- ஓட்டம் பிடிக்கிறேன் folks ! Before I leave, இதோ மிஸ்டர்.நோ அட்டைப்படம் &  உட்பக்க previews!


கிளம்பும் முன்பாய் வழக்கம் போல சந்தா சார்ந்த நினைவூட்டல் folks ! இதுவரைக்குமான சந்தாக்களில் இரண்டே இரண்டு LITE சந்தாஸ் & ஆறோ-ஏழோ SINGLES சந்தாஸ் ! பாக்கி சகலமுமே FAMILY சந்தாஸ் !! So புத்தாண்டு முதலாய் உங்கள் ஜூனியர்களும் நமது யுனிவெர்சுக்குள் அடியெடுத்து வைக்கப் போவதில்லை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம் !! இன்னமும் சந்தா ரயிலில் முன்பதிவு செய்திருக்கா நண்பர்கள், இந்த வாரயிறுதியினை அதற்கென பயன்படுத்திட்டால் அற்புதமாக இருக்கும் ! Please do join in folks !! இம்முறை சில புது நண்பர்களும் சந்தாவினில் இடம் போட்டிருப்பது icing on the cake !! 4.84 பில்லியனில் ஒருவராய் திகழும் உங்கள் ஒவ்வொருவரையும் இந்தப் பயணத்தினில் வரவேற்க செகப்பு கம்பளத்தை அர்ஜெண்டாக வாஷ் பண்ணி வாங்கி விரித்து வைத்திருக்கிறோம் !! Stage is all yours people !!

Bye all...see you around ! Have a beautiful weekend !

And இதனை வாட்சப் ஸ்டேட்டஸில் வைத்துப் பார்ப்போமா ? 😀😀

124 comments:

  1. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  2. // அடுத்த வார இறுதிக்கு முன்பாக மூன்று இதழ்களும் உங்கள் கைகளை எட்டியிருக்க வேணும்! //
    ஆவலுடன் சார்...

    ReplyDelete
    Replies
    1. ஆமா ஆமா அதும் குருதியில் பூத்த குறிஞ்சி மலர் செம்ம

      Delete
    2. ஆமாங்க சகோதர்களே
      Catamount படிக்க ஆவலுடன்

      Delete
  3. //இத்தொடரையும், ஸாகோரையும் 1990-களிலேயே நாம் அறிமுகப்படுத்தாமல் போய்விட்டோமே என்பது தான்//

    மிஸ்டர் நோ வின் முதல் கதை படித்து போது ஏற்படட எண்ணம் இதுவே, சார்

    அமேசான் சாகாஸங்கள் சுவாரசியமாக உள்ளன

    ReplyDelete
  4. சார், ப்ளூகோட்டின் அந்த கலரிங் சும்மா அள்ளுகிறது. நீண்ண்ண்ட இடைவெளிக்குப் பின் தலைக் காட்டும் BC காக ஆவலுடன் waiting.

    ReplyDelete
  5. ஜமீனய்யா-விற்கு வாழ்த்துகள்
    சூப்பர் சகோ 💐💐💐

    ReplyDelete
    Replies
    1. டான்ஸ் நல்லா ஆடி இருக்காரான்னு பார்ப்போம்...🤣🤣🤣

      Delete
  6. உள்ளேன் ஐயா...🏃🏃🏃🏃🏃

    ReplyDelete
    Replies
    1. நின்னுக் கோரி வர்ணம்...

      Delete
    2. /நின்னுக் கோரி வர்ணம்//

      😂😂😂

      நீ சொல்லா விடில் யார் சொல்லுவார் நிலவே 🤣🤣

      Delete
    3. ஹாஹா... ஞாபககிருக்கா செனா.. 😂😂😂

      Delete

    4. மறக்கவே முடியாது கண்ணன். எங்க எப்பன்னு தெரியல ஆனா நீங்க முதன் முதலில் இந்த பாட்ட பத்தி சொல்லி இருந்தீங்க.

      இதை எப்படியோ தேடி கண்டுபிடிச்சு நானும் எங்க வீட்டுக்கார அம்மாவும் சேர்ந்து பார்த்தோம்.

      கண்ணுல தண்ணி வர அப்படி சிரிச்சோம்....

      அதனால மறக்கவே முடியாது.

      சமீபத்தில் அதே மாதிரி சிரிச்சது மைக்கேல் ஜாக்சனை தூக்கி குப்பையில் போட்டுட்டு ஒரு கமெண்ட் போட்டீங்களே

      "லேலக்கு லேலக்குலே லே லே லே லே " அதுக்குதான்.. 🤣🤣🤣🤣🤣

      Delete
    5. அதெல்லாம் சின்னப்பசங்க சமாச்சாரம்.. பெரியவங்களுக்கு சொல்ல முடியாது..😇

      Delete
    6. சரிங்க சின்ன ஜமீன்ந்தாரே

      Delete
  7. வணக்கம் அனைவருக்கும்...

    ReplyDelete
  8. ப்ளுகோட் & மிஸ்டர் நோ பின்னட்டை டிசைனிங் செம சார்

    ReplyDelete
    Replies
    1. இந்த இரு அணிகளும் வெகு நாட்கள் கழித்து மீண்டும் படிக்க போகிறோம்

      Missed them

      Delete
  9. மேச்சேரிஜமீனைய்யா விற்க்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. ஜமீனையா சீக்கிரமே ஒரு யூ ட்யூப் சேனல் ஆரம்பிச்சு கலைச் சேவை ஆத்துக்கு. நாங்க இத்தனை folowyersஇருக்கோம் உங்கள் பின்தொடர

    ReplyDelete
    Replies
    1. கலைச்சேவையா...? சிறப்பா செஞ்சிடலாம் சார்...😂

      நீ சொல்லாவிடில் யார் சொல்லுவார்... நிலவே..😂

      Delete
    2. இந்த பாடலை கவுண்டமணி பாடும் போது செம காமெடி, அவர் கடையில் வந்து எல்லோரும் வாங்காமல் செல்வார்கள்.

      எனது ஐய்யா (அப்பா) இந்த சீனை பார்த்து விட்டு அதன் ஒரிஜினல் பாட்டு நல்லாக இருக்கும், சிவாஜிகணேசன் குறவஞ்சி படத்தில் பாடியது என்று சொல்லி இருக்கிறார்கள். அதன் பிறகு அவர்களுக்கும் இந்த பாடலை தேடி கேசட்யில் ரெக்கார்ட் செய்து கொடுத்தேன். எனது அம்மாக்கும் இந்த பாடல் பிடிக்கும்.

      Delete
  11. வணக்கம் நண்பர்களே!!

    ReplyDelete
  12. நியூஸ்லாந்து டீம் first பேட் புடிச்சாலும் 230-240க்கு மேல் அடிக்கமாட்டாங்க எதிர் அணி firstபேட்டிங் அப்படினா அவங்களயும்230-240க்கு மேல் அடிக்க விட மாட்டாங்க அவங்க இன்னிங்ஸ் 250தாண்டாம அதுக்குள்ளயே முடியும்

    ReplyDelete
  13. அந்த கவுண்டமணி சத்யராஜ் மீம்

    😂😂😂😂😂😂

    ReplyDelete
  14. டெக்ஸ் டைகர் ஸாகோர் னு ஒரு கௌ பாய் மும்மூர்த்தி கல்ட் கிளாசிக்க கொண்டாடி இருப்போம் வட போச்சே.

    ReplyDelete
  15. இந்த பதிவுல - பாராட்டுக்களை எதிர்பார்ப்பதை விட, "கார்டூன் கதைக்கு ஏதாவது குறை சொல்வார்களோ?' என்ற பீதிதான் மெயினாக தெரிகிறது சார்...

    ப்ளூகோட் பட்டாளம் ஒரு அருமையான காமெடி ஜானர்.
    55+ ஆண்டுகள் யப்பா...👏👏👏👏👏❤️.
    இங்க நம்மாளுங்க மாசம் 1 வர்றதுக்கே தலதலயா அடிச்சு கதர்றாங்க, அதுக்கே அடிதுடி, இனி 68 ஆல்பங்கள் நாம போட்டு முடிக்கறதுக்குள்ள.....
    அங்க 55+ வருசம்னா பிரமிப்பான விசியம்தான்,
    உண்மையில் ரசனையுள்ளோர் இல்லைனா இத்தனை வருடங்கள் தாக்குபிடித்திருக்க முடியாது. இவர்களை பாத்தாவது நம்மாட்கள் பலர் கார்ட்டூனை ரசிக்க கற்றுக்கனும்.
    அங்கே சக்கைபோடு போடும் மெகா ஆல்பங்கள் இங்கே கால்வாசியாவது தொட முடியாதபடி இருப்பது வருத்தமான விசியம்.
    நல்லவேலை "ஏதோ நாமளாவது தமிழ்ல போடறோம்" என நெனச்சு ஆறுதல்பட்டுக்க வேண்டியதுதான்.
    இதெல்லாம் வருசத்துக்கு 3 புக் வரலாம் சார்.
    அட்லீஸ்ட் "6 மாசத்துக்கு ஒண்ணு" என 2 புக் தரலாம்.

    நவம்பர் மாசம் பெரிய ஸ்டார்ஸ் இல்லாட்டியும் இவங்களே அள்ளுறாங்களே சார். ஊ செ வி கலர் சும்மா அள்ளுது, கு பூ கு ம க்கு செம்ம டஃப் கொடுக்கும். இந்த இருவருக்கு மத்தியில் மிஸ்டர் நோ என்ன செய்ய காத்திருக்கிறார் என்பதை காண ஆவலுடன்.....

    மிஸ்டர் நோ லேட்டாக வந்தாலும் அந்த காரம் இன்னும் குறையவே இல்லை என்பதால் இவருக்கும் 2,3 ஸ்லாட் போடலாம். மேலும் இது அவருக்கு 50 வது ஆண்டுங்கறப்ப ஒரு மெகா ஸ்பெஷல் போட்டால் அவருக்கும் கெளரவமாக இருக்கும், நாங்களும் கொண்டாடுவோம்.

    நவம்பர் இதழ்கள் மூன்றும் இம்முறையும் முத்தாக இருப்பதில் நோ டவுட்
    ஆவலுடன் waiting.....

    ReplyDelete
    Replies
    1. அட, வருஷம் ஒரு ஸ்லாட் ஒதுக்குறதுக்கே ஓரமா இஸ்துக்கினு போய் ஒரு பாட்டம் மொத்தி எடுக்குறாங்க சார் - இதிலே வருஷத்துக்கு மூணா?

      மூணுக்கும் மொத எழுத்து 'மூ'... பிக்னிக் ஸ்பாட்டுக்கும் மொத எழுத்து 'மூ'...பேஷா பொருந்தி போகும் 🤕🤕

      Delete
    2. இதவிட காமெடி கதைகள் வேணும்னா அவங்களே அவங்களுக்கு காமெடி பண்ணிக்க வேண்டிதுதான். இங்க வந்து "அது வேணாம் இது வேணாம்னு" அழுது ஒப்பாறி வைக்காம இருந்தா நல்லாருக்கும்.

      Delete
    3. Sree @ உண்மையோ உண்மை.

      Delete
  16. // Yet க்ளைமேக்ஸை நெருங்கும் ஓர் கட்டத்தில் கதையில் ஏதோ உதைப்பது போலவே பட்டது! ஆங்கில மொழிபெயர்ப்பு; அதன் பின்பாய் ஒரிஜினல் இத்தாலி­யப் பக்கங்கள்- என சகலத்தையும் தோண்டியெடுத்துச் சரிபார்க்கும் படலத்தைத் துவங்கினேன்! ஒரிஜினலாகவே கோர்வையில் ஏதோ லைட்டாக உதைப்பது புரிந்தது!//

    காமிக்ஸின் ஒரிஜினல் மற்றும் முதல் ரசிகன் என்பதற்கு இதைவிட வேறென்ன சான்று வேண்டும்? 👏👏

    புளூகோட் பட்டாளத்தின் ஓவியங்கள் மற்றும் கலரிங் நன்றாக உள்ளது. 👍

    மிஸ்டர் நோவின் அட்டைப் படம் மிரட்டுகிறது. Wow! 😳

    ReplyDelete

  17. மிஸ்டர் நோ..

    முதன் முதலில் அறிவிக்கப்பட்ட போது ஒரு அலுப்புணர்வு தான் மேலோங்கியது..

    காகிதப்பூ என்ற எண்ணத்தில் ஏந்திய முதல் இதழ் மல்லிகை பூவாய் மணத்தது.

    தொடர்ந்து வந்த இதழ்களும் ஒரு கதம்பமாய் மணம் வீசி மனதைக் கவர்ந்திருக்கிறது.

    வித்தியாசமான கதை நிகழும்
    களமா, அல்லது வேறு எதுவுமா என்று தெரியவில்லை.. ஈர்ப்பு விசை தொடர்ந்து செயல்பட்டு கொண்டே இருக்கிறது..

    ஆவல் மிக்க எதிர்பார்ப்புகளுடன்.


    குடும்பக் கட்டுப்பாடு பிரச்சார சின்னம் போல் ஒரு இதழுக்கும் மறு இதழுக்கும் போதிய இடைவெளியுடன் வரும் ஊதா
    சட்டைக்காரர்களுடைய மெக்ஸிகோ அதகளம் பற்றி படிக்கவும் மிகவும் ஆவல் பீறிடுகிறது..

    ReplyDelete
    Replies
    1. ///குடும்பக் கட்டுப்பாடு பிரச்சார சின்னம் போல் ஒரு இதழுக்கும் மறு இதழுக்கும் போதிய இடைவெளியுடன் வரும் ஊதா
      சட்டைக்காரர்களுடைய மெக்ஸிகோ அதகளம் பற்றி படிக்கவும் மிகவும் ஆவல் பீறிடுகிறது..///

      😁😁😁

      Delete
    2. ஜமீனய்யா பாட்டும் உள்ளதாம்
      நின்னுகோரி இல்லை எம்.ஜிஆர் காலத்து பாட்டாம்
      ஆவலுடன் காத்திருக்கவும், செல்வம் அபிராமி சகோ

      Delete

  18. கிங்ஸ் ஸ்பெஷல்..

    கிர்பி ஸ்பெஷல்,வேதாளர் ஸ்பெஷல்,காரிகன் ஸ்பெஷல்
    என்பதை விட இது போன்ற பல நாயகர்கள் கூட்டு வடிவமைப்பு மனதை மிகவும் கவர்கிறது..

    தீபாவளி விடுமுறையில் அனைத்து கதைகளையும் ஆர அமர வாசிக்க முடிந்தது.

    பௌதீக விதிகளையும் மீறி கருப்பு வெள்ளையில் ஒரு வானவில் 💐

    ReplyDelete
    Replies
    1. // பௌதீக விதிகளையும் மீறி கருப்பு வெள்ளையில் ஒரு வானவில் 💐//

      அடடே! இது நல்லாருக்கே! 😊
      கிங்ஸ் ஸ்பெசல் நன்று! 👍

      Delete

  19. தீவிரவாதி சிக்பில்..

    திரையில் நாட்டியமாடும் கதாநாயகியை விட அதிக வனப்புடனே இருந்து நளினமாகவும் நடனமாடும் துணை நடிகையின் பால் விழிகள் செல்வதைப் போல தலைப்பில் சிக் பில் இருந்தாலும் நேத்திரங்கள் நாடுவதென்னவோ ஷெரிப்பையும் டெபுடி ஷெரிபையும் தான்..

    ****/*****

    ReplyDelete
    Replies
    1. உலகின் no 1 கலா ரசிகர் நீங்கதான் செனா அனா!😍😍😍😁😁

      Delete

  20. மழையை நீ வேண்டுவாயாயின் சேறினை எதிர்கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும் என்ற முது மொழியைப் போல் விஞ்ஞானம் கொண்டு வரும் எத்தனையோ பலன்களின் ஊடாக அணு ஆயுத பிரயோகம் என்ற
    சேறும் உடன் வருகிறது.


    ஒரு அதிக அற்புதமான படைப்பின் மேல் மனம் ஏன் ஒட்டவில்லை என்பது புரியவில்லை.

    ஓவியரின் தூரிகை மேகங்களிலிருந்து அற்புதமான சித்திர மழை பொழிந்திருப்பினும் மழையை தவிர்க்க மேகங்களின் மேலாய் பறக்கும் கழுகை போல் மனம்..

    9.7/10

    ReplyDelete
    Replies
    1. என்ன கதை இது?!🤔

      Delete
    2. மழையில் நனைந்து விடுவோம். மனது பாதிக்கப்படும் என்ற பயம்தான், மனம் கதையோடு ஒட்ட பயப்படுகிறது.
      யதார்த்தை எதிர் கொள்ளுங்கள். 👍

      Delete
    3. // மழையில் நனைந்து விடுவோம். மனது பாதிக்கப்படும் என்ற பயம்தான், மனம் கதையோடு ஒட்ட பயப்படுகிறது. //
      Yes. May be!

      Delete
  21. மேச்சேரியாரின் இசை பிரளயத்தை மேட்டூர் டேம் கட்டி தடுத்தீர்களா... 😄😄😄😄😄😄
    Amezing... 😄😄😄❤️👍

    ReplyDelete
    Replies
    1. அவர் இருப்பதே மேட்டூர் டேம் அருகில் தான். பிரளயம் வந்தது 16 கதவுகள் வழியே வந்த அதிகப்படியான நீர்தான்.
      அதை எப்படி தடுக்க முடியும்? 😜

      Delete
    2. அல்ல சகோ... உலகில் உள்ள அனைத்து ஆறுகளும் முதலில் "காட்டாறு "என்று சொல்லப்படும் மழைக்கால நீர் போகும் ஆறுகளாகவே இருந்தன...திடீர்னு ஊரை அடித்துக்கொண்டு போகும்.. கடலில் கலக்கும்... மனிதன் அந்த வெள்ள பிரவாக, பிரளய, பயங்கரத்துக்கு தடை போட விரும்பி கட்ட ஆரம்பித்ததே
      அணைக்கட்டுகள்... ❤️👍🙏...

      Delete
    3. ஆகா! விளக்கம் அருமைதான்.
      நான் சொன்னது,
      மேட்டூர் அணையே நிரம்பி விட்டால், 16 கதவுகள் வழியே அதிகப்படியான நீரை வேறு வழியில் திருப்பி விடுவார்கள். அதை யார் தடுப்பது! என்றுதான் கேட்டேன். 😆

      Delete

  22. மாடஸ்டி ஸ்பெஷல்

    ஹனிகன்

    தூக்கு தண்டனை கைதிக்கு கால் முறிந்தால் காலை சரி பண்ண மூன்று மாதங்கள் எடுத்து சரியான பின் மறுபடியும் தூக்கில் போடுவது போல வலது கை துப்பாக்கியால் ஹனிகனை காப்பாற்றி இடது கை காங்கோவால் ஹனிகனை வீழ்த்தும் மாடஸ்டியின் வித்தியாசமான கதை.

    மரணப் பொறி

    வெள்ளை சுறாவை வீட்டின் குளிக்கும் தொட்டியில் வளர்க்க நினைக்கும் வீணனைப் போல மாடஸ்டியை பணைய கைதியாக
    நினைக்கும் ஒரு மதியற்றவனின் செயல் குறித்த மற்றும் ஒரு வித்தியாசமான கதை.

    ReplyDelete
    Replies
    1. வெள்ளைச் சுறா. ஆகா!
      சுறான்னா கொஞ்சம் யோசிக்கனும். டால்பின்.
      டால்பின் மாடஸ்டி. இது எப்படி இருக்கு? 🤔

      Delete

  23. எட்டும் தூரத்தில் யுத்தம்

    மெக்சிகோவில் ஒரு மாய ரயில்
    ராபினின் இரண்டு புத்தகங்கள் ஆகியவற்றை முன்னரே படித்து முடித்து விட்டபடியால் எஞ்சி இருந்த அனைத்து புத்தகங்களையும் தீபாவளி விடுமுறையில் படித்து முடித்து ஆகிவிட்டது.

    அப்படி படித்து முடித்ததில் மனதை மிகவும் கவர்ந்த கதை எட்டும் தூரத்தில் யுத்தம் தான்.

    இளம் டெக்ஸ் மற்றும் ஸாகோர் என்பதை விட மிகவும் இயல்பான கதை அம்சம் அதற்கு ஒரு காரணமாக இருக்க முடியும்.

    மிகவும் அற்புதமான ஒரு இதழ்.

    ReplyDelete
  24. வதம் செய்வோம் வேங்கைகளே இதழின் பின்னணி குறித்து பின்னர் எழுத உத்தேசித்து உள்ளேன்...

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்காக இஷி தாத்தா காத்திருக்கிறார்...

      Delete
    2. அது என்ன பின்னணி? ஆர்வத்தை தூண்டுகிறீர்களே!

      Delete
  25. சூப்பர் சூப்பர் மிக்க மகிழ்ச்சி சார். ஆவலுடன் அனைத்து கதைகளுக்கும் காத்திருக்கிறேன்.. அனைவருக்கும் மெர்சல் நவம்பர் நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  26. ப்ளூ கோட் - செவ்விந்தியர்கள் சந்திப்பு ஃபோர்சன் காமெடி கலக்கலாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  27. . வதம் செய்வோம் .வேங்கைகளே&ஸகுவேரா ராபினின் தீபாவளி மெகா அதிரடி.
    2025 ன் ஹிட்ஸ் வரிசையில் கு.பூ.கு. மலரும் அசத்துமா ?ஆவலுடன் வெய்ட்டிங்

    ReplyDelete
  28. // உள்நாட்டுப் போர் சார்ந்த அக்கப்போர்களைப் பகடி கலந்து சொல்ல முனையும் இந்தத் தொடரில் இதுவரையிலும் 68 ஆல்பங்கள் வெளிவந்துள்ளன! //
    இது பகடி என்பதே வாசிப்பாளர்களின் கண்களுக்கு புலப்படவில்லையோ ????!!!

    ReplyDelete
  29. மிஸ்டர் நோ👍👍👍
    ஸாகோர்...............................🤔🤔

    ReplyDelete
  30. இரண்டு அட்டைப்படங்களும் அழகு சார்...ப்ளுகோட் சாகஸ அட்டையில் இந்த முறை தான் யூனிபார்ம் இல்லாமல் காட்சி தருகிறார்கள் என நினைக்கிறேன்...ஆரம்பத்தில் திடீரென பார்த்தவுடன் கிட் ஆர்ட்டின் இதழா இந்த மாதம் என நினைக்க வைத்தது..ப்ளுகோட் மற்றும் சிக்கல் எப்பொழுதும் என்னை பொறுத்த வரை மிகுந்த வரவேற்பை பெற வேண்டும் என நினைக்கிறேன்..

    ஆவலுடன் காத்திருக்கிறேன்..

    ReplyDelete
  31. சூப்பர் சார்....அட்டைப் படங்கள் மூன்றுமே வேற லெவல்...ஊழியம் செய்ய விரும்பு ப்ளூஅட்டைபட வரிசையை டாப்னா குருதியோடு பூத்த மலரோடு போட்டி போடுது மிஸ்டர் நோ....கிட்டார்...ஜுனியருக்கு வாழ்த்துக்கள்....எப்படா வரும்னு ஆவலில்

    ReplyDelete
  32. மிஸ்டர் நோ பாக்கைல தொன்னூறகள்ல இறக்கியிருந்தா நிறைய வாசகர்கள இழுத்து வைத்திருந்திருக்கும்

    ReplyDelete
  33. ப்ளுகோட்ஸில் ஸ்கூபி & ரூபி குதிரைகளின் முகபவனைகள் செம ரசனையாக இருக்கும்
    அதுவும் ஸ்கூபியின் குதிரை 😂😂😂

    ReplyDelete
    Replies
    1. உண்மை. செம்ம கடல்

      Delete
    2. இதை எல்லாம் கவனித்து பார்த்தால் எல்லா கதையும் ரசிக்க முடியும், காமிக்ஸ் என்பதன் ஒரு சிறப்பு இது தான்.

      Delete
  34. நானும் சிப்பாய் தான்!ல "குதிரை சாப்ஸ்" கிடைக்கும். ஃபோர்ட் பாத்த உடன் முகத்தில் ஒரு ரியாக்ஷனுடன் மயங்கி விழும் பாருங்க! ஓவியத்துல அசத்தியிருப்பாங்க

    ReplyDelete
  35. வதம் செய்வோம் வேங்கைகளே

    தமிழில் இதுவரை பார்த்திராத புதிய வகை அட்டைப்படம், உள்ளிருக்கும் சித்திரங்களில் தமிழில் இதுவரை பார்த்திராத புதிய வகை கதை நிகழிடம், மற்றும் புதிய விதமாய் தோற்றமளிக்கும் கதை மாந்தர்கள் என துவக்கமே ஆர்வத்துடன் படிக்கத் தூண்டியது.


    கதையின் நாயகனாக பின்னர் பரிணமிக்க போகும் டெட்சுவோ தனக்கும் தனது ஆசானுக்கும் எஜமானான பிரபு பிறப்பித்த கட்டளையை தனது ஆசான் ஷிமாடா நிறைவேற்றாதபடியால்
    அதற்கான இழிவைத் தான் ஏற்றுக்கொண்டு தனது
    வாளாலேயே தனது வயிற்றைக் கிழித்துக்கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சிக்கும் செயல் வியப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

    பக்கம் 17, 22,23,34 என அடுத்தடுத்த பக்கங்களில் இடம்பெற்ற டேய்ம்யோ என்ற சொல் வேகமாக சென்று கொண்டிருக்கும் ஒரு விரைவு ரயில் அபாய சங்கிலி இழுக்கப்பட்டதால் சொடுக்கு போட்டு நிற்கும் நிலை போல வாசிப்பின் வேகத்தை மட்டுப்படுத்தியது.

    ReplyDelete
    Replies
    1. இந்த இரண்டு பாராக்களில் குறிப்பிட்டவை பற்றி மட்டுமல்லாமல் கதையின் பின்பகுதிகளில் நிகழும் சம்பவங்களும் -கதை நிகழிடம், நிகழும் காலம், கதை நிகழும் சூழல் இவற்றைப்பற்றி வாசிக்கத் தூண்டியது.

      இது இடைக்காலத்தில் ஜப்பானின் நிலபிரபுத்துவம் (FEUDALISM IN MEDIEVAL JAPAN) பற்றிய வாசிப்பில் போய் முடிந்தது.

      பொதுவாக இடைக்காலம் என்பது ஐந்தாம் நூற்றாண்டில் இருந்து 15 ஆம் நூற்றாண்டு வரை என்பதாக இருந்தாலும் ஆரம்ப நவீன காலம் என்பது பதினெட்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் துவங்குவதால் நமது கதை நிகழும் காலம் 17 ஆம் நூற்றாண்டு என வைத்துக் கொள்ளலாம். எனவே இதனை இடைக்காலம் என்று சொல்ல இயலும்.

      "" ஈடோவில் இருக்கும் ஆட்சியர் வந்து விசாரிக்கும் வரை உன்னை வீட்டு காவலில் வைத்திருக்க உத்தரவிடுகிறேன்"" என்ற வாசகம் பக்கம் 107 இல் இடம் பெற்றுள்ளது.

      ஈடோ காலம் அல்லது
      டோகுகாவா காலம் என்பது கிபி 1603 இல் இருந்து கிபி1868 வரை உள்ள காலமாகும்.

      ஜப்பானின் மேற்கு பகுதியில் இருந்த கியோட்டோ ஜப்பானின் பேரரசர் வசிப்பிடமாக இருந்து வந்தது. இதுவே தேசத்தின் தலைநகரமாகவும் இருந்து வந்தது.

      விரிகுடாவின் முகத்துவாரம் எனும் பொருளைத் தாங்கி நின்று ஜப்பானின் மையப்பகுதிக்கு சற்று கிழக்கே அமைந்திருந்த ஈடோ நிர்வாக தலைநகராக இருந்து வந்த காலம் அது. எனவே தான் ஈடோவில் இருந்து ஆட்சியர் வருவார் என்று சொல்லப்படுகிறது.

      Delete
    2. உணவு விடுதியின் உரிமையாளர் தங்க நாணயங்களை மிரட்டி பணம் பறிக்க நினைக்கும் ரோனின் சாமுராய்க்கு கப்பமாக செலுத்த முயல்கிறார். தங்க நாணயங்களை அச்சிட்டு முதன் முதலில் புழக்கத்திற்கு விட்டது டோகுகாவா காலத்தில் தான். தங்கம் வெள்ளி மற்றும் செப்பு காசுகளை முதன் முதலில் வெளியிட்டவர்
      டோகுகாவாவே. ( 17 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் இது நடந்தது ). எனவே கதை நிகழும் காலம் 17 ஆம் நூற்றாண்டு என சொல்லிவிடலாம்.

      Delete

    3. நில பிரபுத்துவம்

      பன்னிரண்டாம் நூற்றாண்டின் துவக்கத்தில் இருந்தே நில பிரபுத்துவம் ஜப்பானில் இருந்தாலும் நமது கதை நடக்கும் காலகட்டத்தில் இருந்த அரசியல் சமூக சூழ்நிலை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு படிநிலை வடிவத்தில் (Hierarchy) அமைந்துள்ள இது கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

      1. பேரரசர்

      2. ஷோகன் ( ராணுவ, நீதி,நிர்வாக மற்றும் அரசியல் தலைமை போன்ற அனைத்து அதிகாரங்களையும் உள்ளடக்கியவர்)

      3. டேய்ம்யோ உள்ளூர் பிரபுக்கள்.
      குறிப்பிட்ட நிலப்பரப்புகளை
      ஷோகன் இவர்களிடம் ஒப்படைத்து நிர்வகிக்க சொன்னார்.

      4. குடிமக்கள்

      இவர்களில் இந்த வரிசையில் இருப்பவர்கள்

      அ. விவசாயிகள்

      ஆ. கைவினை கலைஞர்கள்.

      ( மரத்தச்சு வேலை செய்பவர்கள்,
      உலோகங்களை கையாளும் கொல்லர்கள் போன்றவர்கள்)

      இ. வணிகர்கள் ( இவர்கள் தாமே எதையும் உற்பத்தி செய்யாததால் கீழ் நிலையில் வைக்கப்பட்டார்கள் )

      Delete
    4. பேரரசர்

      நமது கதை நடக்கும் காலகட்டத்தில் பேரரசர் எந்தவித அதிகாரமும் இல்லாமல் ஒரு ஆன்மீக அடையாள சின்னமாக மட்டுமே கருதப்பட்டார்.

      ஜப்பானின் மேற்கு பகுதியான கியோட்டோவில் பேரரசரின் அரண்மனை இருந்தது. அங்கேயே அவர் வசித்து வந்தார்.

      ஜப்பானின் கிழக்கு பகுதியில் உள்ள ஈடோவில் ஷோகன் வசித்து வந்தார். தேசத்தின் அனைத்து அதிகாரங்களும் ஷோகன் வசமே இருந்து வந்தது.

      ஷோகன்கள் பேரரசரை அகற்றி விட்டு தாமே அந்த இடத்திலிருந்து ஏன் ஆட்சி செய்ய முற்படவில்லை என்ற கேள்வி எல்லோர் மனதிலும்
      எழலாம்.

      பின்வரும் இரண்டு உதாரணங்கள் அந்த கேள்விக்கான விடையை அளிக்கக்கூடும்.

      1.1868 ல் ஜப்பானிய பேரரசர் மேஜி அப்போதைய ஷோகனை எதிர்த்து
      படையுடன் கிழக்கு நோக்கி கிளம்பிய போது அவரது வாசஸ்தலமான கியோட்டோவை சுற்றி இருந்த டேய்ம்யோக்கள் மட்டுமே அவருக்கு ஆதரவளித்தன.

      கிழக்குப் பகுதி பெரும்பான்மையான
      டேய்ம்யோக்கள் ஷோகனை ஆதரித்து நின்றன. ஷோகன் சார்பான படைபலம் மிகவும் அதிகம். சற்று மேம்படுத்தப்பட்ட ஆயுதங்கள் பேரரசர் வசம் இருப்பினும் படைபலம் குறைவு.

      ஆனால் பேரரசர் கிழக்கு நோக்கி படையை நடத்திச் சென்றபோது ஷோகனின் சார்பாக நின்ற பல
      டேய்ம்யோக்கள் பேரரசர் சார்பாக இடம் மாறி விட்டன. இதற்குக் காரணம் பேரரசர் தெய்வாம்சம் பொருந்தியவர் என்ற பொது மக்களின் நம்பிக்கையே காரணம்.
      மக்களின் மனோ நிலையை அறிந்த பல டேய்ம்யோக்கள் இதன் காரணமாகவே பேரரசர் சார்பாக திரும்பி விட்டன.

      அதிக ரத்தக் களறி இன்றியே
      மேஜி முழு ஜப்பானையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். நில பிரபுத்துவ முறையை முழுவதுமாக ஒழித்துக்
      கட்டியவரும் இவரே.

      Delete
    5. 2. 1945-ல் இரண்டாம் உலகப் போரின் முடிவில் ஜப்பான் சரணடைந்த போது ஜப்பானிய பேரரசர் ஹிரோஹிட்டோவை டோக்கியோவின்( 1868 ல் பேரரசர் மேஜி ஈடோவை பேரரசின் தலைநகராக அறிவித்து கிழக்காசிய நாடுகளின் மரபின்படி டோக்கியோ என்ற பெயர் மாற்றிவிட்டார் ) அமெரிக்க தூதரகத்தில் அமெரிக்க ஜெனரல் டக்லஸ் மெக்கார்தர் சந்தித்தபோது பேரரசரின் உதவியாளர் அரசரை தொடாமல் பேசவும் என்று மெக்கார்தரிடம் சொன்னபோது அமெரிக்க ஜெனரலின் இதழ்களில் புன்முறுவல் தவழ்ந்திருக்க கூடும்

      போர்க்கால குற்றங்களுக்காக நேசப்படைகளின் ராணுவ நீதிமன்றம் ஜப்பானிய படைகளின் போர் வீரர்கள் தளபதிகள் என அனைவரையும் தண்டித்த போதும் பேரரசர் ஹிரோஹிட்டோவை நோக்கி எந்த விரலும் உயர்த்தப்படவில்லை. அவர் தண்டிக்கப்படவும் இல்லை. அவருடைய அரண்மனையிலே அவருடைய இயல்பான வசதிகளுடனே வாழ்வதற்கு அனுமதிக்கப்பட்டது. அரச குடும்பமும் எந்தவித தண்டனைக்கும் உட்படுத்தப்படவில்லை.( ஜப்பானிய பேரரசர் ஹிரோகிட்டோ வும் அமெரிக்க ஜெனரல் டக்லஸ் மெகார்தரும் சேர்ந்து இருக்கும் புகைப்படம் ஜப்பானிய மக்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது)

      இது அமெரிக்க ஜெனரல் டக்லஸ் மெக்கார்தரின் அரசியல் மாஸ்டர் ஸ்ட்ரோக் என்பதை வரலாற்று நிபுணர்கள் ஆமோதிக்கிறார்கள்.

      ( போருக்கு பிந்தைய ஜப்பானின் நிர்வாகத்திலும், ஜப்பானின் புனரமைப்பு பணியிலும் ஜெனரல் டக்லஸ் மெகார்தரின் பங்கு அளப்பரியது )

      ஜப்பானிய பேரரசரின் அதிகாரங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டு விட்டபோதிலும் ஜப்பானிய மக்களின் அடையாளமாக அவர் கருதப்பட்டதில் எந்த மாற்றமும் நிகழவில்லை. ஒருவேளை ஜப்பானிய பேரரசர் ஹிரோ ஹிட்டோ நேசப்படைகளினால் தண்டிக்கப்பட்டு இருந்தால் அரசு விசுவாச படைகளினாலும் பொதுமக்கள் தரப்பிலிருந்தும் ஒரு நெடிய ரத்தக்களரியான போராட்டத்தை நேசப்படைகள் சந்தித்திருக்க கூடும்.( அமெரிக்கா மற்றும் நேசப்படைகளால் ஜப்பான் குடியரசு தாங்கும் முடியரசாக மாற்றம் கண்டது. [ constitutional monarchy ]

      தற்போதைய ஜப்பானின் பேரரசர் நருகிட்டோ.

      Delete
    6. ஷோகன்

      1603 இல் துவங்கி 1868 வரை
      டோகுகாவா மற்றும் அவரது வம்சாவளியினர் ஜப்பானிய தேசமெங்கும் சுமார் இரண்டரை நூற்றாண்டு காலம் தங்கள் அதிகாரத்தை செலுத்தினார்கள்.

      ஷோகனை நியமிப்பது பேரரசர் என்றாலும் அது ஒரு அலங்கார நிகழ்வே.

      தனக்கு கீழே இருக்கும்
      டேய்ம்யோக்களுக்கு நிலப்பகுதியை வரையறுப்பதும் அந்த நிலப்பகுதிக்கான பிரபுவை நியமிப்பதும் ஷோகனே. ஒரு
      டேய்ம்யோக்கான பிரபுவை நீக்கி அந்த இடத்தில் வேறு ஒரு பிரபுவை நியமிப்பதும் நடந்திருக்கிறது.

      தேசமெங்கும் நடக்கும் நிகழ்வுகளின் பெரும்பகுதி ஷோகனுக்கு தெரியாமல் இருப்பதில்லை.

      டேய்ம்யோ- சாமுராய்

      இது ஒரு குறிப்பிட்ட நிலப் பகுதியை domain குறிக்கிறது.
      இதன் அதிகாரியாக நியமிக்கப்படும் பிரபு அந்த நிலப்பகுதியில் வசிக்கும் அனைவரின் மேலும் தனது அதிகாரத்தை செலுத்த முடியும்.

      விவசாயிகளுக்கு நிலத்தை வழங்கும் பிரபு அதற்கான வரியை பெறுகிறார். இது மத்திய அரசுக்கு செலுத்தப்படுகிறது. அந்த நிலப் பகுதியில் வசிக்கும் பிற தொழிலாளிகளும் கைவினை கலைஞர்களும் வரி செலுத்த வேண்டியவர்களே. மத்திய அரசுக்கு வரியை பெற்றுத் தரும் பணி மட்டுமல்லாது இதர நிர்வாகம் நீதி பரிபாலனம் போன்றவற்றையும் இந்த பிரபுக்களை செய்கிறார்கள். தனது நிலப் பகுதிக்கு உட்பட்டு வசிப்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதும் இந்த
      பிரபுக்களே. நமது கதை நிகழும் காலத்தில் ஏறக்குறைய 300
      டேய்ம்யோக்கள் இருந்தன

      Delete
    7. தங்களது அதிகாரத்துக்கு உட்பட்ட நிலப்பகுதியை பாதுகாக்க பிரபுக்கள் சாமுராய் அமைப்பை ஏற்படுத்தினார்கள். சாமுராய்கள் தங்கள் பிரபுக்களுக்கும்
      ஷோகனுக்கும் நேரடியாக கட்டுப்பட்டவர்கள். சாமுராய் என்பதற்கு சேவை செய்பவன் என்பது பொருள் ( one who serves)

      சாமுராய்களுக்கு ஏழு குணாதிசயங்கள் உண்டு.. இது சாமுராயின் வாழ்வியல் முறை என கருதப்பட்டது

      1. விசுவாசம்: தனது பிரபு குடும்பம் மற்றும் தனது சமூகம் இவற்றின் மேல் மாறாத விசுவாசம்

      2. கௌரவம் : ஒரு சாமுராயன் கௌரவம் அவனது உயிரை விட மேலானது. கௌரவம் இழந்துவிட்டால் 'செப்புக்கு '(seppukku) என்ற முறையில் நமது ஷிமாடா செய்வது போல் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்.

      3. துணிவு : போர்க்களத்தில் என்று மட்டுமல்லாமல் எது சரியானது என்பதை உணர்ந்து எந்த இடத்திலும் அதை செய்ய வேண்டிய துணிவு வேண்டும்.

      4. நேர்த்தியான நியாயவழியை பின்பற்றுதல்

      5. கருணை: பிறர் மேல் கருணை பரிவு காட்டுதல் குறிப்பாக தன்னைவிட வலி குறைந்தவர்கள் மேல்.[ இது நமது கதையில் குறிப்பிடப்படுகிறது ]

      6. மரியாதை செலுத்துவது:
      எதிரியாய் இருந்தாலும் மரியாதையுடன் நடத்துவது.

      7. நேர்மை

      சுய கட்டுப்பாடும் இதில் வரும்.

      புஷிடோ என்று அழைக்கப்படும் சாமுராயின் வாழ்வியல் முறை பின்னாட்களில் கற்றுக்கொள்ளுதல், சுய முன்னேற்றம் ஆகியவற்றையும் உள்ளடக்கியதாய் மாறியது

      Delete
    8. 47 ரோனின்

      தங்கள் பிரபுவின் மீதான தங்கள் விசுவாசத்தை காட்டிய 47 சாமுராய் களின் உண்மை சம்பவத்தை வரலாறு பதிவு செய்திருக்கிறது.

      கியோட்டோ அரண்மனையில் இருந்து ஈடோவுக்கு பேரரசின் குழு ஒன்று 1701 ஆம் ஆண்டு வந்திருந்தது.

      அவர்களைச் சந்திக்க மூன்று
      டேய்ம்யோ பிரபுக்கள் வந்திருந்தார்கள். அவர்களில் அசாநோவும் ஒருவர். அகோ பிராந்தியத்திற்கான அதிபதி

      பேரரசரின் அரசு குழுவுக்கு முன்னால் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கற்றுக் கொடுப்பதற்காக அவர்கள் கிரா யோஷினாக்கா என்ற ஈடாவைச் சேர்ந்த அரசு நிர்வாக உறுப்பினர் ஒருவரிடம் அனுப்பப்பட்டார்கள்.

      மற்ற இரு பிரபுக்களும் கிராவுக்கு நிறைய வெகுமதிகளை வழங்கினார்கள். அசானா அப்படி செய்யவில்லை. அதனால் எரிச்சல் அடைந்த கிரா எல்லார் முன்னிலையிலும் அசாநோவை தொடர்ந்து அவமானப்படுத்திக் கொண்டே இருந்தார். பேரரசரின் அரசவை கூடி இருந்த இடத்தில் கிரா தொடர்ந்து அசாநோவை அவமானப்படுத்த அசாநோ கோபம் கொண்டு தன் குறுவாளை உருவிக்கொண்டு கிரா மேல் பாய்ந்து அவரை காயப்படுத்தி விட்டார். லேசான காயம் தான் கிராவு க்கு என்றாலும் பேரரசரின் அரசவைக் குழுவுக்கு முன்பாக நடந்த சம்பவம் அப்போதைய
      ஷோகான் டோகுகாவா சுனாயோஷி க்கு தெரிவிக்கப்பட்ட போது அவர் கோபமடைந்து அசாநோவை 'செப்புக்கு' செய்து கொள்ள சொல்லி உத்தரவிட்டு விட்டார்.

      அசாநோவும் அதுபோலவே தற்கொலை செய்து கொண்டு விட்டார்.

      மேலும் அகோ பிராந்தியத்தின்
      அலுவலகமும் சொத்துக்களும் முடக்கப்பட்டு விட்டன. வேறு ஏற்பாடு செய்ய ஷோகானுக்கு கால அவகாசம் தேவைப்பட்டது

      அசாநோவுக்கு கீழே பணிபுரிந்த ஓய்சி யோசியோ தலைமையிலான 47 சாமுராய்கள் பிரபுவை இழந்து 47 ரோனின்களாக மாறினர்.

      இந்த 47 ரோனின்களும்
      ஷோகனின் கண்காணிப்பு குழுவின் கூர்மையான பார்வையில் இருந்து தப்பிக்க சுமார் இரண்டு வருட காலம் வரை பொறுத்து இருந்து 1703 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கிராவின் இருப்பிடத்தில் நுழைந்து அவரை கொன்று அவரது தலையை தனது பிரபுவின் சமாதியில் வைத்தார்கள்.

      மக்கள் இந்த 47 ரோனின்களின் மேல் அபிமானம் காட்டியதால் ஷோகன் அவர்களை மரண தண்டனைக்கு உட்படுத்தாமல் "செப்புக்கு" செய்து கொள்ள அனுமதித்தார்.

      ( இந்த 47 ரோனின்களின் கல்லறையும் இன்றைக்கும் டோக்கியோவில் உள்ள செங்காக்கு கோயிலின் வளாகத்தில் உள்ளன )

      Delete
    9. இரண்டாம் உலகப் போரிலும் சாமுராய்களின் பண்புகளை பின்பற்றி பல ஜப்பானிய வீரர்கள் சரணடைய மறுத்தார்கள். பலர் தற்கொலை செய்து கொண்டார்கள் எதிரிகளிடம் பிடிபடுவதை
      தவிர்க்க.

      ஒரு சாமுராய் தந்தைக்கு மகனாய் பிறந்து 1944 டிசம்பரில் பிலிப்பைன்ஸ் தீவுக்கு கொரில்லா யுத்தம் நடத்த அனுப்பப்பட்ட ஹிரூ ஒனடோ யுத்தம் 1945 ஆகஸ்டில் முடிவடைந்தது தெரியாமல் 1974 வரை யுத்தம் நடத்திக் கொண்டிருந்தது ஒரு சாமுராயின் வளர்ப்பின் அடையாளமாகும்.

      அவரை பிலிப்பைன்ஸ் அனுப்பிய மேஜர் மறு உத்தரவு வரும் வரை சரணடைய கூடாது தற்கொலை செய்து கொள்ளவும் கூடாது என எழுத்துப்பூர்வ உத்தரவு பிறப்பித்தமையால் நடந்த வினோத சம்பவம் இது.
      .

      இந்த சமூகப் படிநிலையின் அடித்தட்டில் இருந்த விவசாயிகளும் கைவினை கலைஞர்களும் வணிகர்களுமே அதிக துன்பத்திற்கு ஆளானார்கள்.

      Delete
    10. இந்த நிலபிரபுத்துவம் ரஷ்யா இந்தியா இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற ஆசிய ஐரோப்பிய நாடுகளிலும் நிலவி இருந்தது.

      அடிப்படை தத்துவம் ஒன்றாகவே இருந்தாலும் அந்தந்த தேசங்களின் கலாச்சார அடிப்படையில் சில வேறுபாடுகளும் இருந்தது. உதாரணமாக இந்தியாவின் நில பிரபுத்துவம் வர்ணாசிரம அடிப்படையில் இருந்தது.

      இந்தியாவின் பொற்காலம் என்ற கருதப்படும் குப்தர்களின் ஆட்சி காலத்தில் நில பிரபுத்துவம் இருந்தது. ஆனால் வலிமையான மத்திய அரசு, மத்திய அரசின் நகரமயமாக்கல் மற்றும் தொழில்மயமாக்கல் முயற்சிகளால் வர்ணாசிரம தத்துவம் இருந்த போதிலும் அதில் ஒரு நீர்ம நிலை இருந்தது (Fluidity). வர்ணாசிரம தத்துவத்தின் ஒரு பிரிவில் இருந்தவர்கள் வேறு ஒரு தொழிலிலும் ஈடுபட முடியும்.

      ஹூணர்களின் படையெடுப்பால் சரியத் தொடங்கிய குப்தர்களின் ஆட்சிக்குப் பின் ராஜபுத்திரர்களின் எழுச்சி, டெல்லி சுல்தான்களின் ஆட்சி, பின்னர் முகலாயர்களின் வருகை ஆகிய காலங்களில் நில பிரபுத்துவம் மோசமான நிலையை நோக்கி செல்ல துவங்கியது.

      ( இதர தேசங்களின் நில பிரபுத்துவம் பற்றி எழுத முனைவது இந்த கட்டுரையின் நோக்கத்தில் இருந்து விலகிச் செல்வதாக இருக்கும் என்றபடியால் அது தவிர்க்கப்படுகிறது )

      வதம் செய்வோம் வேங்கைகளே இதழ் தொடரக்கூடிய சாத்திய கூறுகள் அதிகமாகி விட்டபடியால் கதையின் பின்னணி பற்றி அறிய இந்த கட்டுரையின் ஒரு சில தகவல்களாவது ஒரு சில பேருக்காவது உதவி இருக்குமாயின் கட்டுரை எழுதப்பட்ட நோக்கம் பூர்த்தி அடைகிறது.

      Delete
    11. இத ஒரு பதிவாகவே போடலாம். அருமை. பாராட்டுகள் சார்.

      Delete
    12. அருமையான தகவல்கள்...

      Delete
    13. அட்டகாசம் செனா அனா சார். Simply brilliant and what an effort.

      Delete
  36. .செனா.அனா.ஜி இந்தப் பதிவுகளுக்கான உங்கள் உழைப்பை பாராட்ட வார்த்தைகளில் லை . வியந்து நிற்க்கிறேன்🙏🙏🙏

    ReplyDelete
  37. வழக்கம் போலவே செதுக்கப்பட்ட வார்த்தைகளால் விளையாடி இருக்கீங்க சார்... நிலப்பிரபுத்துவ அரசியல் குறித்து நேரில் நிறைய விளக்கங்களை கேட்கப் போகிறேன்... மொத்தத்தில் அருமை..

    ReplyDelete
  38. விளக்கங்களைநேரில் கேட்கும் போது கிட்ட இருந்து கேட்கப் போகிறோம்

    ReplyDelete
  39. சார், இன்னிக்கு சனிக்கிழமை சார். குமார் கொஞ்சம் பிஸி சார். ரம்யா பாப்கார்ன் சாப்பிடுறதுல ரொம்ப பிஸி சார்.

    ReplyDelete
  40. சார் இன்று பதிவுக் கிழமை...

    ReplyDelete
  41. சனிக்கிழமை போய் இன்று ஞாயிற்று கிழமை. இன்றாவது பதிவு உண்டா சார்.

    புத்தக பார்சல் நேற்று கிடைத்து விட்டது. மகிழ்ச்சி. இன்று எனக்கு மிகவும் பிடித்த ப்ளூ கோட் பட்டாளத்தை படிக்க போகிறேன்.

    ReplyDelete
  42. சார் கலக்கல் இதழ்கள்....நான்கு அட்டைகள்....கபால வேட்டை கூட...ஸ்லிப் கேஸ் என...லார்கோ வரும் மாதம் போல....குருதியில் பூத்த மலர் அட்டை மிரட்டினாலும்....நம்ம மிஸ்டர் நோ கோடானாலும் அள்ளுறார்....உள்ளபுரட்டுனா...வண்ண வேதாளர சொல்லவா...எண்ணமெல்லாம் வண்ணம் பாய்ச்சும் அட்டகாச மிஸ்டர் நோவ சொல்லவா...அப்படியே கட்டி கண்களை உறையச் செய்யும் குருதி வண்ணத்தில் பூத்த பக்கங்களை அல்லவா...இது போல் நிறம் நம்ம ஸ்பெசல் நிறங்கள் வருவித்ததா சொன்ன அந்த ஜேசன் ப்ரைஸ் ஓர் கதையில் பார்த்தாய் ஞாபகம்.....அடுத்த ஆச்சரியம் நம்ம ஸ்கூபிய புரட்ட புரட்ட மனதை அள்ளும் வண்ணங்கள்...எத்தனை கோடி இன்பங்கள் வைத்தாய் விஜயான்னு துள்ளுது...சத்தியமா கே ஆர் விஜயா இல்ல சார் அந்தக்கலா...
    அனைத்தும் வேற லெவல்...அட்டகாசம் சார்...மிஸ்டர் நோவ தூக்குறேன் முதலில் மனம் போன படி

    ReplyDelete
  43. குருதியில் பூத்த குறிஞ்சி மலர்!

    படித்து முடித்த உடன் சுடச் சுட விமர்சனம் எழுத இங்கே ஓடி வந்திருக்கிறேன். அதுவும் மிக நீண்ட காலத்துக்கு பிறகு. அந்தளவுக்கு இந்த 'வைல்ட் கேட்' டின் முதல் இதழ் சும்மா பட்டையை கிளப்பி இருக்கிறது. டெக்ஸ் கதைகள் போல் இதுவும் இரு நேர்கோட்டு கதைதான். ஆனால் பக்கத்துக்கு பக்கம் அனல் பறக்கிறது. ஒவ்வொரு பக்கமும் குருதி வழிந்தோடும் கதையாக இருந்தாலும், கதை செல்லும் வேகத்தில் அது ஒரு குறையாக தெரியவில்லை.

    இந்த இதழ் பிளாக்பஸ்டர் வெற்றிக்கு கண்டிப்பாக இதன் ஆர்ட் ஒர்க்கும், பிரமிப்பூட்டும் கலரிங்குமே காரணமாக இருக்கும். அப்பப்பா என்ன ஒரு உழைப்பு. சான்ஸே இல்ல. ஆசிரியரின் வழக்கமான பொழிபெயர்ப்பில் இருந்து சற்று மாறுபட்ட எழுத்து நடையுமே இந்த கதைக்கு நியாயம் சேர்க்கிறது. அது வாசிக்கும்போது நன்றாகவும் இருக்கிறது. படித்து முடிக்கும்போது வைல்ட் கேட்டின் அடுத்த இதழுக்கு கண்டிப்பாக ஏங்க வைக்கிறது என்றால் மிகையாகாது.

    மொத்தத்தில் இது ஒரு குறிஞ்சி மலர் இதழ்தான். இந்த மலர் தொடந்து பூக்கவேண்டும். இதனை வெளியிட்ட ஆசிரியர் விஜயன் அவர்களுக்கு நன்றி !

    ReplyDelete
  44. ரொம்ப அருமையா எழுதி இருக்கீங்க கார்த்திகேயன்.. 💐குறிஞ்சி மலரின் நறுமணம் உங்களை அப்படி கவர்ந்து இழுத்து இருக்கிறது போல..

    ReplyDelete