Powered By Blogger

Sunday, December 15, 2024

ஒரு பின்மதியப் பதிவு !

ஞாயிறின் மதிய வணக்கங்கள் நண்பர்களே,

"தோல்வி பயத்தை விட, வெற்றி மீதான நாட்டம் அதிகம் !"

"உன்னையொரு சாம்பியனாய் உலகம் கொண்டாடினால் மகிழ்ச்சி ; அதே சமயம் உன்னை ஒரு அற்புத மனிதனாய் இந்த உலகம் சிலாகித்தால் அதை விடப் பேருவகை வேறு எதுவும் இருக்க இயலாது !!"

"சுற்றியுள்ளோர் என்னைப் பற்றி நெகடிவாக பேசும் போதும் அது என்னைப் பெரிதாய் பாதிப்பதில்லை ; எனது ஆகப் பெரிய critic நானே தான் !"

"பணம் அல்ல - இதனில் நான் கால்பதித்ததன் காரணம் ! இந்த கேமின் மீதான தீராக் காதலே என்னை இயக்கி வருகிறது !!"

என்னடா - ஒரே பொன்மொழிப் பிரவாகமாக கீதே ; புள்ளையாண்டான் மதியத்துக்கு என்ன சாப்ட்ருப்பானோ ? என்ற கேள்வியா உள்ளுக்குள் ? வேறொண்ணுமில்லீங்க - பாடாய்ப் படுத்தி வரும் முதுகுவலியும், தோள்பட்டை நோவும் மனுஷனைக் கிடத்திப் போட்டிருந்த வேளைதனில், உலகின் லேட்டஸ்ட் & ஆகச் சின்ன வயது செஸ் சாம்பியனுமான நம்ம குகேஷின் YouTube பேட்டியினைக் கேட்டுக் கொண்டிருந்ததன் பிரதிபலிப்பே மேற்படி வரிகள் !! 4 நாட்களுக்கு முன்னே சிங்கப்பூரில் நடைபெற்று வந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெறும் 18 வயசே ஆன குகேஷ் கெலித்தது தான் நடப்பாண்டின் top moment என்று எண்ணியிருந்தேன் - இன்று காலை தம்பியின் YouTube பேட்டியினைப் பார்க்கும் வரை !! ஆனால் இன்னமும் டீன்ஏஜை கடந்திரா இந்த இளம் வயதிலும், குகேஷ் தந்த  ஒவ்வொரு பதிலிலும் மிளிர்ந்த நிதானம், பக்குவம், தன்னடக்கம், இயல்பு, விவேகம் - மொத்தமாய் சாய்த்து விட்டது !! அந்தப் போட்டியினை வென்றதை விடவும் இந்தப் பேட்டி அசாத்திய உச்சமாய் தென்பட்டது எனக்கு ! பொதுவாய் இங்கே நாம உண்டு, நம்ம காமிக்ஸ் உண்டு, நம்ம மூ.சந்து உண்டு என்று குப்பை கொட்டி வருபவன் நான் ! வந்தோமா - எதையாச்சும் சொல்லிப்புட்டு மூ.ச.வுக்கு ஒரு நடை போயிட்டு வந்தோமா ; அடுத்த வேலையைப் பார்த்தோமா என்றிருப்பவன் - ஒரு நாளும் உலகத்துக்கு சேதி சொல்ல முனைந்ததில்லை ! But இந்த செஸ் ஆட்டத்தின் மீது இளம் வயது முதலே ஒரு கிறுக்கு கொண்டதாலோ - என்னவோ, இந்தப் பாலகனின் அசாத்திய சாதனை பற்றி எழுதாது இருக்க முடியவில்லை ! நேரம் கிடைக்கும் போது இந்த யூடியூப் பேட்டியினை பாருங்களேன் மக்களே : https://www.youtube.com/watch?v=IASejdBmHoU

ரைட்டு....உலகத்துக்கு உபந்நியாசம் முடிஞ்சதுங்கிறப்போ நம்ம பிழைப்பை பாக்க ஆரம்பிக்கலாமா ? வியாழனும், வெள்ளியும் வெளியே தலைகாட்டவே முடியாத அளவிற்கு மழை பெய்து கொண்டே இருக்க, கடுப்பாய் பொழுதுகளை ஒட்டிக்கொண்டிருந்தோம் - simply becos சீக்கிரமே துவங்கிடவுள்ள சென்னை புத்தக விழாவிற்கான மறுபதிப்ஸ் ; சிறார் காமிக்ஸ் ; நம்மள் கி காமிக்ஸ் போன்றவற்றின் பணிகள் ஒரு அம்பாரம் குவிந்து கிடக்கின்றன ! இன்னமும் இரண்டே வாரங்கள் கூட இல்லையெனும் போது ஒவ்வொரு தினமும் பொன்னுக்கு நிகராய் தென்பட்டு வரும் நிலையில், 2 working days அம்பேல் ஆகிப் போனதில் சொல்லி மாளா கவலை ! Anyways அந்த அவகாசத்தினில் நம்ம இளம் தளபதியாரை ஜல்தியாய் ரெடி செய்திடல் சாத்தியமாகி விட்டதால் மொத்தத்துக்கும் நஷ்டம் அல்ல தான் !! 

இளம் தளபதி !! சமீபத்தில் மறுவருகை புரிந்த கையோடு, விற்பனையிலும் ஒரு காட்டு காட்டி விட்டு ஸ்டாக் அவுட் ஆகிச் சென்ற இந்த ஜாம்பவானின் டபுள் ஆல்ப சாகசம் - அடுத்த ஓரிரு நாட்களில் அச்சுக்குச் செல்கிறது !  இங்கே ஒரிஜினலாய் பேனா பிடித்திருந்த ஒரு புது வரவு, சமீபங்களது வாடிக்கையின்படி செமத்தியாகவே சொதப்பியிருக்க,முழுசையும் மாற்றி எழுதும் நோவு தொடர்கதையாகிப் போனது ! ஆனால் இதைச் சாக்காக்கி கதைக்குள் ஆழமாய் புகுந்திட இயன்றதில் மகிழ்ச்சியே - becos கதையின் knot அட்டகாசம் !! And இம்முறை ஓவராய் அந்த உள்நாட்டு கலக அரசியல் பற்றியெல்லாம் போட்டுத் தாக்கிடாது பரபர ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் தந்துள்ளனர் ! என்ன - டைகர் என்றாலே ஆராச்சும் ஒரு அழகுப் பாப்பா மேலே விழுந்து ஈஷிக்கணும் என்ற template கதாசிரியருக்கு நிரம்பப் பிடித்திருக்கும் போலும் ; ஒரு அழகியை கொணர்ந்து நம்ம யூத் புலிக்கு கணிசமாய் உம்மாவாய் குடுக்கச் செய்திருக்கிறார் !! And எப்போதும் போல இங்கே வரலாறும் பின்னிக் கிடக்க, கதை கணிசமான யதார்த்தத்துடனும் பயணிக்கிறது ! சித்திரங்களும், கலரிங்கும் இந்த ஆல்பத்துக்கொரு செம ப்ளஸ் என்பேன் !! இதோ - ஒரிஜினல் ராப்பர் in preview : 

உட்பக்க file கையில் லேது என்பதால் நாளை மறக்காது upload செய்கிறேன் ! And இது hardcover இதழ் என்பதால் அட்டைப்படத்தில் ஜிகினா effect ஜொலிக்கவும் செய்கிறது ! அப்புறம் அந்தத் தலைப்பு எழுத்துரு நம்ம ஜகத்தின் கைவண்ணமே !! "இப்புடி வேணும் ஜகத் ; அப்பிடி வேணும் !" என நான் குடலை உருவியதை கிஞ்சித்தும் பொருட்படுத்தாது பணி செய்து தந்த நண்பருக்கு இங்கொரு 'O' போட்டால் தப்பில்லை என்பேன் ! Thanks a ton ஜகத் !

ஜனவரியில் காத்துள்ள புது இதழ்கள் அனைத்துமே கலர் மேளாக்கள் என்பதால், இதோ - நம்ம V காமிக்சின் 2-வது ஆண்டுமலர் !! அட்டைப்படத்தில் துருக்கிய ஓவியரின் ஒரிஜினல் சித்திரம் இம்மி மாற்றமும் இன்றி மிளிர்ந்திட, இதோ - உட்பக்கத்தில் கலரில் வேதாளர் செய்திடும் அதிரடிகளைப் பாருங்களேன் : 



இந்த வர்ணக்கலவைகளை பார்க்கும் போதே புரிந்திடும் - பின்னணியில் பணியாற்றும் நபர் இந்தக் கலையில் ஒரு கில்லாடி என்பது ! வடக்கே வசிக்கும் மனுஷன், தீவிர Phantom ரசிகர் & கலரிங் செய்வது இவருக்கொரு ஹாபி !! கொஞ்ச காலம் முன்பே தொடர்பு கொள்ள முயன்று, சரி வர பதில் கிட்டாத காரணத்தால் மும்பையில் இருந்த இன்னொரு ஆர்டிஸ்ட்டிடம் பணிகளைத் தந்திருந்தோம். அகஸ்மாத்தாய் நண்பர் ரபீக்கிடம் இது பற்றிக் குறிப்பிட, அவர் வரிந்து கட்டிக்க கொண்டு தொடர்பு எல்லைக்கு அப்பாலிக்கா இருந்த மனுஷனுடன் தொடர்பினை ஏற்படுத்தித் தந்து விட்டார் ! அதைத் தொடர்ந்து நிரம்ப அவகாசம் எடுத்துக் கொண்டு, நிதானமாய் கலரிங் செய்து தந்திருக்கிறார் - மிக நியாயமான ஊதியத்திற்கு !! "வேதாளருக்கு கலர் செய்வதே ஒரு சந்தோஷ அனுபவம். பணம் இங்கு இரண்டாம் பட்சமே !!" என்கிறார் இந்த ஆற்றலாளர் !! அவருக்கும், நண்பர் ரபீக்குக்கும் இங்கு ஒரு பெரிய தேங்க்ஸ் !!

இங்கே கொடுமை என்னவெனில், இந்த amateur கலரிங் விற்பன்னரின் பணிக்கு முன்னே, ஒரிஜினல் King Features கலரிங் இரண்டாம் இடத்தினையே பிடிக்கின்றது !! ஜனவரியில் பார்க்கும் போது உங்களுக்கே புரியும் !

Moving on to சென்னை புத்தக விழா - இம்முறை டிசம்பர் 27 முதல் ஜனவரி 12 வரை அதே YMCA நந்தனம் மைதானத்தில் நடந்திடவுள்ளது ! பொங்கலுக்கு முன்பாகவே விழா நிறைவுற இருப்பதால் இந்தவாட்டி புத்தாண்டினில் நம்ம கேரவன் சென்னையில் நிலைகொண்டிருக்க வேணும் !! And ஏற்கனவே அறிவித்தது போல "கதை சொல்லும் காமிக்ஸ்" - தமிழிலும், இங்கிலீஷிலும் புதுப் பொலிவுடன் களமிறங்கவுள்ளது ! தமிழ் ஸ்கிரிப்ட் ஆந்தையன் கைவண்ணம் & இங்கிலீஷ் script - ஜூனியர் எடிட்டரின் உபயம். In fact - ஆங்கிலப் பதிப்புகளை Lion Books என்ற வரிசையில் முன்நகர்த்திச் செல்ல ஜூனியர் வசம் கணிசமாய் திட்டங்கள் உள்ளன ! 

So அந்த வரிசையில் எனது பணியானது - ஒரு மொக்கை மொழிபெயர்ப்பாளனாய் வலம் வருவது மாத்திரமே !! And இக்கட ஒரு சிறு குறிப்புமே : இவை நம்ம குட்டீஸ்களுக்கு மட்டுமென்றில்லை ; நமக்குமே ரசிக்கும் போலுள்ளது ! அதிலும் "பட்டாணி இளவரசி" கதை சூப்பராகத் தெரிகிறது !! ஜனவரியில் ப.இ. ஒரு செம சுவாரஸ்ய பேசுபொருளாகிட்டால் நான் ஆச்சர்யம் கொள்ள மாட்டேன் ! அடுத்த பதிவினில் previews folks !! 

சென்னை புத்தக விழா எனும் போது மாயாவிகாரு இல்லாமல் நந்தனம் திசையில் போகவாச்சும் முடியுமா ? So இம்முறையும் மறுபதிப்புகள் உண்டு தான் - சற்றே வித்தியாசமான பாணியில் !! மாயாவி மாத்திரமன்றி - க்ளாஸிக் நாயகப் பெருமக்களான CID லாரன்ஸ் & டேவிட் ; ஜானி நீரோவுமே சென்னை பயணிக்கவுள்ளனர் ! இந்த மும்மூர்த்திகளை முதலில் தயார் பண்ணி பேக் பண்ணினாலன்றி சென்னை நிச்சயம் களை கட்டாது !! 

And yes - இம்முறையும் 2 லக்கி லூக் மறுபதிப்புகள் உள்ளன தான் - புத்தம் புது அட்டைப்படங்களுடன் !! போன சென்னை புத்தக விழாவிலேயே லக்கியின் "தலைக்கு ஒரு விலை" was amongst the top sellers !! ஆகையால் இம்முறையும் நமது ஒல்லி கௌபாய் ரகளை செய்திடக் காத்துள்ளார் ! 

அப்புறம் புத்தக விழாக்கள்தோறும் "ஹாரர்" கதைகள் கேட்டு வரும் இளம் வாசகர்களுக்கென ஒரு தெறிக்கும் புது கி.நா. கூட ரெடியாகி வருகிறது !! இந்த நொடியில் அதற்குத் தான் பேனா பிடித்து வருகிறேன் ! அல்லாத்தையும் முடிச்ச கையோடு அடுத்த பதிவினில் சென்னை ஸ்பெஷல்ஸ் பற்றி முழுத் தகவல்களையும் போட்டுத் தாக்குகிறேன் folks ! இந்த நொடியில் எதையெல்லாம் பூர்த்தி செய்திட இயலுமென்பது எனக்கே தெரிந்திருக்கா நிலையில் எதையாச்சும் உளறி வைக்க பயம்மா கீது ! அது மட்டுமன்றி இன்னொரு செம சுவாரஸ்ய அறிவிப்புமே செய்திட கொஞ்சமே கொஞ்சமாய் பணிகள் வெயிட்டிங் ! அதனையும் முடித்து விட்டு, அடுத்த சனியன்று மொத்தமாய் கச்சேரியினை அரங்கேற்றிடலாமா guys ?

Before I sign out, நமது சந்தா 2025 பற்றி !! செம வேகத்தில் சந்தா சேர்க்கை தடதடத்து வருகிறது ! And இதனில் icing on the cake - இதுவரையிலுமான 97% நண்பர்கள் ரெகுலர் சந்தாவிற்கே டிக் அடித்துள்ளனர் ! அந்த சந்தா LITE பக்கமாய் மிக, மிக சொற்ப எண்ணிக்கை மட்டுமே உள்ளனர் !! நமது கதைத் தேர்வுகளுக்கான அங்கீகாரமாகவும், நம் மீதான உங்கள் அக்கறைகளின் வெளிப்பாடாகவும் இதனைப் பார்த்திடத் தோன்றுகிறது ! Thanks a ton all !! தொடரும் நாட்களில் சந்தா எக்ஸ்பிரஸ் இன்னமும் வேகமெடுக்கும் என்ற நம்பிக்கையோடு புறப்படுகிறேன் - பூமியின் பாதாளத்திலிருந்து புறப்பட்டு வருவோருடன் கைகுலுக்க !! தெறிக்க விட்டு வருகிறது கி.நா. !!

Bye all...see you around ! Have a lovely week ahead !!

Saturday, December 07, 2024

நண்பர்ஸ் + நம்பர்ஸ் !

 நண்பர்களே,

வணக்கம். வருஷத்தின் ஒரு அழகான வேளையினில் பயணம் பண்ணிக் கொண்டிருக்கிறோம்!! டிசம்பர்களுக்கும், மார்கழிகளுக்கும் ஒரு விவரிக்க இயலா யௌவனம் உண்டென்பேன் - at least எனது கபாலத்துக்குள்! சிலுசிலுவென்ற அந்த அதிகாலைப் பொழுதுகள்; தொலைவில் கேட்கும் மார்கழி பஜனைகள்; மப்பும் மந்தாரமுமான பகல் பொழுதுகள்; ஓராண்டின் இதழ்களை வெற்றிகரமாய்ப் பணிமுடித்த திருப்தி; புதிதாய் அடுத்த 12 மாதங்களுக்கென காத்திருக்கும் சவால்கள் தரும் பரபரப்பு; கூப்பிடு தொலைவிலிருக்கக் கூடிய சென்னைப் புத்தக விழா ; அதற்கென நாம் அடிக்கும் பல்டிக்கள் - என கடந்த ஒரு டஜன் ஆண்டுகளாய் இந்த வேளைகளை ரசித்திட நிரம்பவே காரணங்கள் இருந்து வந்துள்ளன!

And இந்த முறையோ கூடுதலாய் இரண்டு காரணங்களும் கிட்டியுள்ளன - நமது நண்பர்களின் உபயங்களில்!

- மூன்று தினங்களுக்கு முன்பாய் நண்பர் ரஃபீக் ராஜா அனுப்பியிருந்த தகவல் இது!

1972 முதலாய் இது வரை நமது குழுமம் வெளியிட்டிருக்கும் இதழ்களின் மொத்த எண்ணிக்கை : 1304

- And அதன் மறுநாளே சேலத்திலிருந்து நண்பர் டெக்ஸ் விஜயராகவன் அனுப்பியிருந்த புள்ளி விபரம் இது!

*2012 கம்பேக் ஆனதில் இருந்து பிரகாஷ் பப்ளிஷர்ஸ் வெளியீடுகள் ஆண்டுவாரியாக....*

2012---14

2013---24

2014---36

2015---48

2016---58

2017---52

2018---52

2019---52

2020---47

2021---46

2022---45

2023---61* (Record)

2024---67#(New Record)

ரெகார்டு பிரேக்கிங் இயர் மீண்டும்....🤩🤩🤩🤩🤩

நிறைய தபா கிரிக்கெட் போட்டிகளின் முடிவின் போது மைக்கை நீட்டி நிற்கும் ஊடகவியலாளர்களின் மாமூலான கேள்விக்கு வீரர்கள் மாமூலான ஒரு பதிலைச் சொல்லுவதைப் பார்த்திருப்போம்! “இல்லீங்க... பேட்டிங் பண்றச்சே ஸ்கோர்போர்ட்டை அடிக்கொரு தபால்லாம் பாக்குறது இல்லீங்க! சென்சுவரிக்குக் கிட்டே கீறேன் என்பது தெரியும் தான்; ஆனா எவ்ளோ நெருக்கத்திலே இருந்தேன்னு தெரியாது!" என்பது தானே அந்த டயலாக்? காது புளிக்க இதே வரியினை வெவ்வேறு ப்ளேயர்கள் ஒப்பிக்கும் போதெல்லாம் என் மூஞ்சில் சன்னமான ஒரு நக்கல் புன்னகை விரிந்திடுவதுண்டு! But இந்த நொடியில் லைட்டாக ஒரு கேள்வி தலைக்குள் ஓடுகிறது - அவுக சொன்னதுலாம் லுலாயிக்காக அல்ல ; மெய் தானோ?” என்று! Of course அந்த ஜாம்பவான்களோடு இந்த ஜாம் பஜார் ஜக்கு ஒப்பீட்டுப் போட்டிகளுக்குப் போகும் குடாக்குத்தனமான அபிப்பிராயங்களெல்லாம் கிஞ்சித்தும் நஹி; yet ஒரேயொரு சின்ன விஷயம் மட்டும் ஜாம்பவான்ஸ் & ஜா.ப.ஜ.வுக்கு மத்தியிலே ஒத்துப் போகிறதோ? என்ற எண்ணம் :

When in the midst of something engrossing - maybe we just tend to lose track of numbers! So மாதாமாதம் அடுத்தடுத்த பணிகளுக்குள் டைவ் அடிப்பது ஒரு தொடர்கதையாகவே கடந்த 144 மாதங்களும் இருந்து வந்திருக்க - நண்பர்கள் தோண்டியெடுத்திருப்பது போலான நம்பர்கள் சார்ந்த மைல்கற்களை இந்த ஆந்தைவிழிகள் கூட கோட்டை விட்டிருந்தன! Of course - 50வது ஆண்டுமலர்; 40வது ஆண்டுமலர்; இதழ் # 500; 400 போன்ற landmarks தாமாய் நம்மை எதிர்கொண்டு விடும்! So அவற்றை நினைவில் கொண்டிட பெரும் கம்பு சுத்தும் ஜாகஜங்களெல்லாம் அவசியமாவதில்லை! ஆனால் - ஒரு அரை நூற்றாண்டுப் பயணத்தினில் நமது குழுமம் தெறிக்க விட்டிருக்கும் மொத்த இதழ்களின் நம்பர்கள் பற்றியோ; ஒரு தெறி வேக ஆண்டின் ஒட்டுமொத்த output பற்றியோ track பண்ணிட தோன்றியதில்லை தான் ! So நண்பர்கள் தந்திருக்கும் நம்பர்களை பேந்தப் பேந்த முழித்தவாறே உள்வாங்கிட முனைந்து வருகிறேன்!!

- 1972 முதலாய் முத்து காமிக்ஸ் - 1987-ல் எனது பொறுப்பிற்கு வரும்வரை 166 இதழ்கள்

- 1982-ல் முத்து காமிக்ஸ் வாரமலர் - 21 இதழ்கள்

- நடுவே கொஞ்சமாய் முத்து மினி காமிக்ஸ் - maybe 7 இதழ்கள்

-இவை மூன்றுமாய் சேர்ந்து approx. 195 புக்ஸ்!

- So இவை நீங்கலாக பாக்கி 1110 நம்பள் கி கணக்கில்! நாற்பது ஆண்டுகளின் பணிக்கு இது அத்தனை அசுரத்தனமான நம்பராகத் தெரியாது போகலாம் தான்; பச்சே - நண்பர் STV தந்திருக்கும் புள்ளி விபரத்தின் ஒரு பகுதியைப் பாருங்களேன்!

- 2012 to 2024 வரை வெளியான மொத்த இதழ்கள் : 606

- Which means நமது மீள்வருகைக்குப் பின்பான கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாகவே, ஆண்டொன்றுக்கு சராசரியாய் 50 புக்ஸ் தொடர்ச்சியாய் வெளியிட்டிருக்கிறோம்!

- Which again means - ஒற்றை மாதம் பாக்கியில்லாமல் கடந்த 12 ஆண்டுகளில் - வாரத்துக்கு ஒரு புக் வீதம் போட்டுத் தாக்கியிருக்கிறோம்!

- I agree - இந்த நம்பரில் மறுபதிப்புகளும் நிரம்பவே இடம்பிடித்திருக்கும். தான்; ஆனால் பழசோ - புதுசோ ஒரு புத்தகத் தயாரிப்பினில் உள்ள பணிகள் கிஞ்சித்தும் மாறிடப் போவதில்லை! So நான் ஃபோகஸ்லைட்களுக்கு முன்னே நின்று அபிநயம் பிடிக்கிறேனோ - இல்லையோ, திரைக்குப் பின்னிருந்து நம்மாட்கள் நில்லாது பம்பரமாய் சுழன்று கொண்டே தான் வந்திருக்கிறார்கள்!

- So இந்த பன்னிரண்டு ஆண்டுகளின் "606" is as much their record too - as it's mine !

- And not to forget - இந்த “606“ உங்கள் ஒவ்வொருவருக்கும் பெருமை சேர்க்கும் சாகஸமுமே! நான் ஆடியது பரதமோ; பேட்டைக் குத்தோ - சகலத்தையும் ரஷ்ய பாலே டான்ஸர் ரேஞ்சுக்கு சிலாகித்து, ஊக்குவித்து, கரவொலி எழுப்பி நீங்கள் மட்டும் இல்லாது போயிருப்பின் - “ரா....ரா... சரசுக்கு ரா...ரா...” என்று சந்திரமுகி ஸ்டைலில் பூட்டியதொரு அறைக்குள் maybe ஒண்டியாய் ஆடிக் கொண்டிருந்திருப்பேன்  தான்!

- Most importantly - “இது பூட்ட கேஸ் மாமூ..” என்று நம் காதுபடவே மக்கள் பேசியதொரு காலகட்டத்திற்குப் பின்பாகவும் நம்பிக்கை வைத்து, ஊக்குவித்து, வண்டியைத் தள்ளி விட்டு ஸ்டார்ட் எடுக்கச் செய்த பெருமையும் உங்களதல்லவா? அந்த முதல் ஆண்டைக் கடந்திருக்காவிட்டால், 606 என்ன - பப்பரமிட்டாய் கூட சாத்தியமாகியிராது! So நம்பர்கள் சொல்லும் சேதிகளின் பின்னணியில் நமது நாயக / நாயகியரின் முகங்கள் ஒரு பக்கம் தெரிகின்றதென்றால், உங்கள் அனைவரின் புன்னகை முகங்கள் மறுபாதியை வெளிச்சமாக்கி வருகிறது!

- Of course - இந்த "606" படலத்தினூடே ஏகமாய் மூ.ச. + மு.ச. விசிட்கள் விரவிக் கிடந்திருப்பதை மறுக்கவோ, மறக்கவோ மாட்டேன் தான்! ஆனால் ஒவ்வொரு மூ.ச./ மு.ச. விஜயத்துக்கும் பிற்பாடு, புத்துணர்ச்சியோடு நமது பயணம் தொடர்ந்திருப்பதற்கு இந்த நம்பர்களே சாட்சி! மோதிர விரல்கள் ஐயா உங்களது ;  so நீவிர் டபுள் கொட்டு வச்சாலுமே, அவை வளர்ச்சிக்கான ரூட்டையே போட்டுத் தந்துள்ளன!

ரைட்டு...சென்டிமெண்ட்களைப் பிழிந்தது போதுமென்றால் நடப்பு ஆண்டின் மீதான ஒரு மீள்பார்வைக்குள் புகுந்திடலாமா folks ? இதோ - வரிசையாக 2024-ன் இதழ்களின் அணிவகுப்பு - நமது நினைவுகளைப் புதுப்பித்துக் கொள்ள! கவனமாய் அவற்றை உள்வாங்கிக் கொண்டு தொடரவுள்ள கேள்விப் படலத்துக்கான பதில்களைப் பதிவு செய்திடுங்களேன் - ப்ளீஸ்?!



















புதியவை : 53

மறுபதிப்புகள் : 14

நடப்பாண்டின் break-up இது! மறுபதிப்புகள் சகலமுமே புத்தக விழாக்களின் விற்பனைகளைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டவை என்பதால் அது குறித்து நான் கேள்விகள் எதுவும் கேட்டிடப்போவதில்லை!

1. My question is - இந்தப் புதுசு 53-ல் நீங்கள் வாங்கியது எத்தனை? வாசித்தது எத்தனை?

2. நடப்பாண்டின் TOP 3 இதழ்களாக எவற்றைச் சொல்வீர்களோ?

3. நடப்பாண்டின் 'crisp வாசிப்பு” என்ற தீமுக்கு இந்த ஆண்டினில்  ஓரளவுக்காவது நியாயம் செய்துள்ளோமா?

4. “அட்டைப்படம் of the year" என்ற பரிசைத் தருவதாயின் எந்த இதழுக்குப் பரிந்துரைப்பீர்கள்?

5. “அழுத்தமான கதைக்களம் of the year" என்ற தேர்வில் யாருக்கு முதல் மார்க் போடலாம் என்பீர்களோ?

6. 2024-ன் (புது) இதழ்களிலிருந்து மீள்வாசிப்புக்குத் தகுதி கொண்ட இதழ்களாய் எவற்றைப் பார்த்திடுகிறீர்கள்? Your Top 3 ப்ளீஸ்?

7. நடப்பாண்டின் 53 புது இதழ்களின் ஜான்ரா வாயிலான break up இது:

கௌபாய் கதைகள் : 12

அட்வென்சர் கதைகள் : 26

கார்டூன்ஸ் : 4

கிராபிக் நாவல்ஸ் : 6

டிடெக்டிவ் த்ரில்லர்ஸ் : 5

So ‘தல‘ டெக்ஸ் வில்லரோ; இன்ன பிற குருத பாய்ஸோ ஓவராய் இடங்களைக் கபளீகரம் செய்து வைத்திருப்பதான எண்ணங்கள் வெறும் பிரமைகளே என்றாகிறது! 

My question is : இந்த ஸிஸ்டில் இன்னும் எதற்கு இடங்களைக் கூட்டலாம்? எதற்குக் குறைக்கலாம்? என்பதே ?

8. காமிக்ஸ் வாசிப்புலகிற்கு முற்றிலும் புதுசானதொரு நண்பருக்கு நடப்பாண்டின் ஏதேனும் ஒற்றை புக்கை மட்டும் வாசித்துப் பார்க்கக் கொடுக்க நினைத்தால் - எந்த புக்கை எடுத்து நீட்டுவீர்கள்?

9. நடப்பாண்டின் கிராபிக் நாவல்களை rate செய்வதாயின் எவ்விதம் பண்ணுவீர்களோ?

10. 2024: உயரத்திலிருந்து ஒரு கழுகுப் பார்வையில் இந்த ஆண்டின் நமது காமிக்ஸ் பயண அனுபவத்தினை எவ்விதம் வர்ணிப்பீர்கள் folks? In one word ?

ரைட்டு... கணிசமான கேள்விகளைப் போட்டுத் தாக்கிய கையோடு, ஜனவரியின் பணிகளுக்குள் ஐக்கியமாகிடப் புறப்படுகிறேன் folks!

And எப்போதும் போலவே - சந்தாவுக்கானதொரு நினைவூட்டலுமே! புத்தாண்டுக்கு மூன்றே வாரங்கள் எஞ்சியிருப்பதால், சந்தா எக்ஸ்பிரஸில் உங்களுக்கான சீட்டைப் போட்டு வைக்க கொஞ்சம் நேரம் ஒத்துக்கிடலாமே - ப்ளீஸ் ?



Bye all... See you around! Have a Happy Weekend! 

P.S : சேலம் புத்தக விழாவினில் விற்பனைகள் தூள் கிளப்பி வருகின்றன ! வரும் திங்களன்று நிறைவுற உள்ள விழாவில் already போன வருஷத்தின்  விற்பனையை நெருங்கியாச்சு - சில பல செவிகளில் புகைப் படலங்கள் வெளிப்படுவதையும் மீறி !காத்திருக்கும் இந்த வாரயிறுதியிலும் புனித மனிடோவின் ஆசிகள்  + உங்களின் அன்பு தொடர்ந்திடும் பட்சத்தில், we just might be looking at a new sales record !!

போன ஞாயிறன்று ஸ்டாலில் நண்பர்களை சந்தித்தது மட்டுமன்றி, மதிய பிரியாணி விருந்திலும் கலந்து கொண்டது செம உற்சாக அனுபவமாய் அமைந்து போனது ! வழக்கமான அரட்டைகள் ; சந்தோஷங்கள் என்று அழகாய் பயணித்த தினம் அது !! And அன்றைய பொழுது அடைமழையின் மத்தியிலும் விற்பனையில் சாதித்த நம்பரானது - சேலத்தின் single day sales-க்கொரு புதிய உச்சமும் கூட !! இடையில் இரண்டோ, மூன்றோ தினங்கள் வருண பகவானின் அதீத கருணை மட்டும் கட்டையைப் போட்டிருக்காவிடின் - "சென்னைக்கு அடுத்தபடியான புத்தக விழா விற்பனை" என்ற இரண்டாமிடத்தினை இந்நேரத்துக்கே சேலம் தட்டிச் சென்றிருக்கும் !! இன்னமும் உள்ள 2 தினங்களில் ஈரோட்டைப் பின்னுக்குத் தள்ளி சாதனை செய்திட முடிகிறதாவென்று பார்ப்போமே ? God speed சேலம் !!! 

Thursday, November 28, 2024

கொஞ்சம் ஊதிக்கவா பீப்பீயை ?

 நண்பர்களே,

வணக்கம். ஒவ்வொரு மாதமும் ரகரகமான புக்ஸ் கூட்டணி போட்டுத் தயாராகும் போதெல்லாம், அவற்றை உங்களிடம் ஒப்படைக்கும் ஆர்வம் அலையடிப்பது வாடிக்கை தான் ! But இந்த தபாவோ - அலையெல்லாம் நஹி ; சுனாமி ரேஞ்சுக்கு உள்ளுக்குள் ஆர்வம் ஊற்றடிக்குது !! ஆண்டின் இறுதி மாதமும் அதுவுமாய் - அட்டவணையிலிருந்து மாறுபடும் சில புக்ஸ் ; சில புத்தக விழா ஸ்பெஷல் இதழ்கள் ; ஒரு க்ளாஸிக் தடத்தின் முதல் ஆல்பம் - என கைகொள்ளா எண்ணிக்கையினில் புக்ஸ் ரெடி !! And அவை ஒவ்வொன்றுமே தத்தம் பாணிகளில் தெறி மிரட்டு மிரட்டுகின்றன !! பீப்பீ smurf ரேஞ்சுக்கு நானே பீப்பீ ஊதிப்பது அபச்சாரமாய் தோன்றிடலாம் தான் ; but ஏழேழு கழுதை வயசான எனக்கே இந்த மாதத்து அணிவகுப்பைப் பார்க்கும் போது, ஜிலோன்னு கீது ; so எச்சூஸ் தி பீப்பீ this one time ப்ளீஸ் மக்களே !!  

ஊதுறதுன்னு ஆன பிற்பாடு முழுசாய் ஊதிப்புடுவோமே - சரி தானுங்களா  ? இம்மாதத்தின் பிரதான highlight - "அச்சுத் தரம்" என்று சொன்னால் அது நிச்சயம் மிகையே நஹி என்பதை நாளைய பொழுதில் பார்சல்களை உடைத்துப் பார்க்கும் போதே உங்களுக்கும் புரியும் folks !! 

தோர்கல் ஒரு பக்கம் fire விட....

இன்னொரு பக்கம் கபிஷ் கலக்கியெடுக்க.....

புதுயுக கலரிங்கில் நம்ம தானைத் தலைவர் ஸ்பைடர் 2.0 மிரட்ட....

இவர்களுக்கெல்லாம் நடுவே நம்ம 'தல' The Magic Moments ஸ்பெஷல் இதழில் வண்ணத்தில் அடிக்கிறார் பாருங்கோ ஒரு சிக்ஸர் - அது முற்றிலுமாய் வேறொரு ரகம் !! 

அந்த இதழைக் கையில் ஏந்தும் நொடியினில் உள்ளுக்குள் பொங்கிய பெருமை இருக்கே - அதனை எழுத்தில் வடிப்பது உலகச் சிரமம் !!சத்தியமாய் இப்படியொரு ஆல்பத்தினை இந்தத் தரத்தில், இந்த விலையில், இன்றைய இந்த மார்க்கெட் சூழலில் வெளியிட, நம்ம லயனைத் தாண்டி வேற ஆருக்கும் சாத்தியமே லேது என்று கூவிட வேண்டும் போல இருந்தது !! Absolute தெறி !! 


And ELECTRIC '80s தனி தடத்தில் க்ளாஸிக் சாகசங்களுடன், நம்ம தலைவர் பவனி வரும் மெகா சைஸ் இதழைப் பார்க்கும் போது Phewwwwwwwww என்ற பெருமூச்சே சாத்தியமாகிறது !! இருநூறு ரூபாய்க்கு காலத்துக்கும் பத்திரப்படுத்தக் கூடியதொரு இதழை நீங்கள் ஆதரித்தால், இவற்றைத்  தூக்கிக்கினு தொள்ளாயிரம், ஆயிரம் என்று காமிக்ஸ் சேவை புரிய விழையும் ஆர்வலர்கள் சற்றே அடக்கி வாசிக்க வாய்ப்பிருக்கக்கூடும் ! This is a book you simply must have மக்கா !! 


நாளை காலை புக்ஸ் உங்கள் இல்லத்தினை எட்டிடும் தருணத்தில் மொத்த இதழ்களோடும் selfie-க்களைப் போட்டுத் தாக்கினால் - கடந்த 3 வாரங்களின் உழைப்பிற்கு எங்க டீம் மொத்தமாய் மகிழ்வுறும் !!! So கொஞ்சமே கொஞ்சமாய் நேரம் எடுத்துக் கொண்டு selfies ப்ளீஸ் !!

அப்புறம் சந்தா சார்ந்த குட்டியானதொரு நினைவூட்டலுமே folks : 


Before I sign out - இதோ நமது சேலம் புத்தக விழா சார்ந்த update :

நாளை துவங்கவுள்ள விழாவினில் ஸ்டால் நம்பர் 94-ல் உங்கள் வரவினை எதிர்நோக்கிக் காத்திருப்போம் !! Please do visit with family !!

அப்புறம் "பிரபல டாக்டர் சேலம் விசிட்" ரேஞ்சுக்கு இல்லாவிடினும்,  நம்ம சத்துக்கு ஏற்ப வரும் ஞாயிறன்று சேலத்தில் ஆஜராகிட எண்ணியுள்ளேன் !! Hope to see you there மக்களே !! Bye for now !! Happy Reading !!


Saturday, November 23, 2024

டிசம்பரில் டைலன்!

நண்பர்களே,

வணக்கம். ‘தட‘ ‘தட‘வென சகலமும் fast forward-ல் ஓட்டம் எடுப்பது போலவே உள்ளது சமீப பொழுதுகளில்! 

**செப்டம்பரில் 4 புக்ஸ்

**அக்டோபரில் 4

**நவம்பரில் தீபாவளி மலர்கள் x 3

**இதோ - காத்திருக்கும் டிசம்பருக்கென இன்னொரு 4

**அப்பாலிக்கா சேலம் ஸ்பெஷல்ஸ்; 

**Electric '80s புக் # 1 

என சமீபத்தைய நமது திட்டமிடல்களில் புல்லெட் டிரெயினின் வேகம்! And அதற்கு மெருகூட்ட இதோ வரும் வார வெள்ளியன்று சேலத்தில் புத்தக விழா & டிசம்பரின் இறுதியிலேயே சென்னைப் புத்தக விழா என்ற அட்டவணைகளுமே அறிவிக்கப்பட்டிருக்க, வாரிச் சுருட்டிக் கொண்டு அவற்றிற்கான முஸ்தீபுகளிலுமே மூழ்கிடல் அவசியமாகிறது! இரண்டே ஆண்டுகளில் (நமக்கு) விற்பனையில் Top 3-க்குள் இடம்பிடித்து விட்டிருக்கும் சேலமும் இப்போதெல்லாம் ‘பெத்த தலைக்கட்டு‘ என்பதால் துளியும் அசட்டையாக இருக்கலாகாது தானே folks? So ஒரு கல்யாண வீட்டுக்கு ரெடியாகும் உற்சாகக் களேபரத்தில் நாட்கள் ஓட்டமெடுத்து வருகின்றன!

இதற்கு மத்தியில் நடப்பாண்டின் இறுதி batch சந்தா இதழ்களைப் பூர்த்தி செய்திடலில் கோட்டை விடலாகாது என்பதால் அக்கடவுமே நமது கவனங்கள் மையம் கொண்டுள்ளன! இதில் கொடுமை என்னவென்றால் வழக்கமாய் பெரிய சைஸ் புக்ஸ் / கலர் இதழ்களில் தான் பணிகள் ஜவ்விழுக்கும்! Black & White புக்ஸ்களில்; அதுவும் நூறு பக்கங்களுக்கு உட்பட்ட அந்த crisp வாசிப்புக்களம் சார்ந்த புக்ஸ்களில் பெருசாய் சிக்கல்கள் எழுந்திடாது தான்! ஆனால் சகலத்துக்குமே ஒரு முதல் தபா உண்டு தானே? அந்த முதல் முறை இதோ இந்த நொடியில் என் கேசத்துக்கு ஆபத்தை விளைவித்து வருகின்றது!

- The Magic Moments ஸ்பெஷல் ரொம்பச் சீக்கிரமே ரெடி! ‘தல‘ சாகஸங்கள் என்றைக்குமே ஒரு எடிட்டருக்கு கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர் பாகு போன்றவைகளே! சுவைகளிலும் சரி, சர்க்கரை வியாதிஸ்தனின் நாக்கில் வழுக்கிச் செல்லும் லாவகத்திலும் சரி, இரண்டுமே இணையற்றவை! So அக்கட துளியும் சிக்கலின்றி ரெடியாகி தற்போது புக் பைண்டிங்கில் உள்ளது!

- தோர்கலும் இந்த முறை இம்மி நோவுமின்றி ரெடியாகி, புக்காகி நம் ஆபீஸில் ஒரு வாரமாய் தேவுடா காத்து வருகிறது!

- Ditto for கபிஷ் ஸ்பெஷல் – 1! கலரில் கலக்கலாய் ரெடியாகி ஆபீஸில் பராக்கு பார்த்து நிற்கிறது!

- அதே போல க்ளாஸிக் சூப்பர் ஸ்டார்ஸ் ஸ்பெஷல் – 3 இதழுமே அச்சாகி, பைண்டாகி இன்னொரு திக்கில் குந்திங்க்ஸ்!

- Electric ‘80s – நம்ம ஸ்பைடரின் மெகா புக்கும் ரெடி!! 

அத்திரி பாச்சா – சிக்கலான சமாச்சாரங்களெல்லாம் ரெடியாகியாச்சு; இனி சிம்பிளான வேலைகள் மட்டுமே பாக்கி என்றபடிக்கே -

இளம் டெக்ஸ் – டெக்சாஸ் ரேஞ்சர்ஸ்

&

V காமிக்ஸ் – எழுந்து வந்த எதிரி (ஏஜெண்ட் ராபின்)

கதைகளுக்குள் புகுந்தால் – சலூனின் நடுக்கூடத்தில் ‘தல‘கிட்டே ‘ணங்‘ என்று குத்து வாங்கியது போலவே ஒரு பீலிங்கு! மூக்கில் ஒழுகிய நெத்தத்தை கர்சீப்பில் துடைத்தபடிக்கே பார்த்தால் – இளம் டெக்ஸில் களம் செம அழுத்தம்! மாமூலாய் தாண்டிப் போகும் துரிதத்தில் இங்கே பணிகளை முடிக்க சாத்தியமாகாது; நிரம்பவே நேரம் தந்து தான் எடிட்டிங் செய்திட வேணுமென்பது புரிந்தது. பற்றாக்குறைக்கு  இன்னிக்குக் காலையிலே போட்ட சொக்காய் எதுவென்று மதியமே மறந்து போயிருக்கும் எனும் போது, முந்தைய 2 இதழ்களின் கதை மாந்தர்கள்லாம் யாரென்று நமக்கு நினைவுக்கு வரவழைக்க செம பல்டி அவசியமாகிறது. So இளம் ‘தல‘ பணிகளை லாஸ்டாக முடிச்சுப்புடலாம் என்றபடிக்கே V காமிக்ஸின் ஏஜெண்ட் ராபினோடு பழகிப் பார்க்க புறப்பட்டேன்!

கதையை முழுசாய்ப் படித்துவிட்டு, மொழிபெயர்ப்பினை துவக்கிடும் பழக்கமே இல்லாது போனதன் கூமுட்டைத்தன பின்விளைவுகளை நிறையவே அனுபவித்துள்ளேன் தான்! & இது அதனது லேட்டஸ்ட் அத்தியாயம்! 

செம விறுவிறுப்பாய் புதுசாய் ஒரு டீமோடு நமது ராபின் 2.0 இந்த hi-tech கதையில் களமாட, எனக்கோ செம உற்சாகம்! புதுயுக பாணியில் கம்ப்யூட்டர்கள்; செல்ஃபோன்கள் கொண்டு அரங்கேற்றப்படும் கொலைகள் தான் கதையின் அச்சாணி என்ற போது – “ஹை... காலத்துக்கு ஏற்ற கதை தான் போல்!” என்று குஷியாகிப் போனேன். கொஞ்சம் டெக்னிகலான பத்தியொன்று வந்த போது நம்ம கார்த்திக் கிட்டே அது பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்ளவெல்லாம் செய்தேன்! அப்டிக்கா எழுதிக் கொண்டே போகப் போக, கதையின் மீதப் பக்கங்கள் சொற்பமாகிக் கொண்டே போக – “இன்னிக்கே முடிச்சுப்புடலாம் ; நாளை இளம் தல திக்கில் கவனத்தைத் திருப்பலாம்!” என்று மனசு கூவியது! ஆனால்... ஆனால்... பக்கங்கள் குறைந்து கொண்டே போனாலும், கதையின் முடிச்சு இன்னும் அவிழ்ந்த பாட்டைக் காணோமேடா என்று வயிற்றில் புளி கரைந்து கொண்டே போக – வேக வேகமாய் கடைசிப் பக்கத்துக்குப் போனால் – இருளில் ஒரு வில்லன் அமர்ந்து ‘கெக்கே பெக்கே‘ என்று சிரித்துக் கொண்டிருக்கிறான்! அவன் சிரிப்பது என்னைப் பார்த்தே என்பது போலவே இருக்க – அப்புறமாய் போனெலியில் விசாரித்தால் தான் தெரிய வந்தது – இது தொடரின் மத்தியிலுள்ளதொரு நெடும் சாகஸம் என்பது! ராபின் எப்போதுமே சிங்கிள் ஆல்பங்களில் தடதடத்து முடித்து விடுவார் எனும் போது; இப்படியொரு நெடும் த்ரில்லர் இருக்கும் சாத்தியம் மண்டையில் உறைத்திருக்கவே இல்லை!

அப்புறமென்ன – what next? இந்த இடத்தில் யாரைப் புகுத்தலாமென்று, V எடிட்டரும், நானும் பேந்தப் பேந்த யோசிக்கும் போது டைலன் டாகின் “சட்டைப்பையில் சாவு” ஆல்பத்தை V காமிக்ஸ் எடிட்டர் எடுத்து நீட்டியது பலனாகியது! இதற்கான ராப்பரும் ரெடியாகக் காத்திருக்க – இதோ இன்று காலை (சனி) முதலாய் மாங்கு மாங்கென்று எழுதிக் கொண்டிருக்கிறேன் இந்த 96 பக்க சாகஸத்தின் தமிழாக்கத்தை! இந்தவாட்டியோ முதல் காரியமாய் கடைசிப் பக்கத்துக்குப் போய் – அங்கே சுபம் போட்டிருக்கிறதா? என்று சரிபார்த்த பின்னரே பிள்ளையார் சுழியையே போட முனைந்தேன்! So இந்தப் பதிவை எழுத மட்டும் ப்ரேக் எடுத்துக் கொண்டு பள்ளி விடுமுறைகளின் கடைசி நாளில் assignment-களை மாங்கு மாங்கென்று ஒட்டுமொத்தமாய் எழுதும் புள்ளையாண்டனைப் போல டைலனை எழுதிக் கொண்டிருக்கிறேன்! எண்ட குருவாயூரப்பா!

And சும்மா சொல்லக் கூடாது தான் – கதை தாறுமாறு – தக்காளிச் சோறாய் பறக்கிறது! யூகிக்கக் கூடியதொரு கதைக்கரு தான் என்றாலும் அதனை கதாசிரியர் கையாண்டுள்ள விதம் செம தெறி! அதிலும் சித்திரங்களில் மிரட்டோ மிரட்டென்று மிரட்டியுள்ளார்கள்! இதோ – அட்டைப்பட preview & உட்பக்க ட்ரெய்லர்!


So இன்னிக்கு சாமக்கோடாங்கியாய் கூத்தடித்தால் நாளை காலைக்குள் நமது அமானுஷ்ய ஆய்வாளர் சாரை கரை சேர்த்து விடலாம்! அப்புறமாய் இளம் டெக்ஸோடு கைகுலுக்கக் கிளம்பிடும் பட்சத்தில் – காத்திருக்கும் வாரயிறுதிக்குள்ளாக டிசம்பர் புக்ஸை டெஸ்பாட்ச் செய்திட சாத்தியமாகிடும்! ஜெய் ராக்கோழி!

Moving on சென்னைப் புத்தக விழா சற்றே முன்கூட்டித் துவங்கி, பொங்கலுக்கு முன்பாகவே நிறைவும் பெறுவதால் அதற்கான திட்டமிடல்களையுமே இதே போல காலில் வென்னீர் ஊற்றியபடியே நாம் செய்திட வேண்டி வரும்! சென்னை முடிந்த சூட்டோடு சூடாகத் திருப்பூரும் வெயிட்டிங்காம்! So மறுபதிப்புகள்; புத்தக விழாக்களுக்கென்றான திட்டமிடல்கள் வேக வேகமாய் அரங்கேறி வருகின்றன!

- இரும்புக்கை மாயாவி ஏதோ ஒரு வடிவத்தில் கணிசமாய் இல்லாது இந்தப் புத்தக விழாக்களுக்குச் சென்றால் குமட்டிலேயே குத்துவார்கள் என்பது அனுபவப்பாடம் என்பதால் நமது மறுபதிப்புப் பட்டியலில் அவர் தவறாமல் இடம் பிடித்திடுவார்!

- இன்னொரு புத்தக விழா favourite ஆன லக்கி லூக்கின் ஏதாச்சுமொரு மறுபதிப்புமே புத்தக விழாவிற்கு அவசியமாகிடும்.

- And of course – CID ஜான் மாஸ்டரின் மறுபதிப்புமே ரேடாரில் உள்ளது!

- இவை தவிர, சிறார்களோடு நமது ஸ்டால்களுக்கு வருகை தரும் பெற்றோர்களின் கவனங்களை ஈர்க்கக்கூடிய சில இதழ்களையும் தயார் செய்திட உள்ளோம்! And இது முழுக்கவே ஜுனியர் எடிட்டரின் வைண்ணத்திலிருக்கும்!

So ஒரு வண்டி நிறைய புக்ஸோடு காத்திருக்கும் புத்தக விழாக்களில் சந்திப்போமா மக்களே?

சேலம் புத்தகவிழாவிற்கு முதல் சனி மாலை (30th நவம்பர்)அல்லது இரண்டாம் சனி (டிசம்பர் 8) மாலையில் ஆஜராகிடத் திட்டமிட்டுள்ளேன்! அடுத்த சில நாட்ளில் அதை உறுதிப்படுத்தி விட்டுச் சொல்கிறேன் – அப்பகுதி நண்பர்களைச் சந்தித்த திருப்தி கிட்டும் என்ற அவாவில் வெயிட்டிங் 🔥

Bye all! See you around! Have a lovely Sunday!

பின்குறிப்பு

🦁 2025 சந்தாக்களுக்கொரு reminder folks 🙏🙏

🦁 Electric '80s சந்தாவிற்குமே ஒரு reminder 🙏🙏

🦁சேலம் ஸ்பெஷல்ஸ் கூட காத்திருக்கும் folks 🙏🙏







Saturday, November 16, 2024

ஒரு மழைநாளின் நவம்பர் !

 நண்பர்களே,

ஒரு மழைநாள் மாலையின் வணக்கங்கள் ! அது இன்னா மாயமோ தெரியலை, மழை சொட்டும் அழகை ஜன்னல் வழியே ரசிக்கும் போது உலகுக்கே ஏதாச்சும் சேதி சொல்லணும் போலவே தோணுறது (எனக்கு) வழக்கம் ! அதுவும் அந்த rainy day ஒரு saturday-ல் அமைந்து போனால், உள்ளுக்குள் அடைபட்டுக் கிடக்கும் அரிஸ்ட்டாட்டிலும், சாக்ரடீசும் 'நானு..நீயு'ன்னு போட்டி போட்டுக்கினு வெளிப்பட முனைகிறார்கள் ! 'கொஞ்சம் அடங்குங்கப்பா...லோகத்துக்கு ஏற்கனவே கொள்ளை பேரு டிசைன் டிஸைனா சேதி சொல்லிப்புட்டாங்க - நாமளும் சேர்த்துப்புட்டா பூமி தாங்காது !' என்று கெஞ்சிக் கூத்தாடி அவர்களது வருகைகளுக்கு அணை கட்ட வேண்டியதாகிப் போச்சு ! 

வேறு ஒண்ணுமில்லீங்க - ஆண்டின் இறுதியினை நோக்கி உலகமே நடைபோட்டு வரும் இந்த வேளையினில், உலகெங்குமுள்ள காமிக்ஸ் பதிப்பகங்கள் 2025-க்கெனத் திட்டமிட்டுள்ள சிலபல அசாத்திய ஆல்பங்கள் கண்ணில் பட்டு வருகின்றன ! ஒவ்வொன்றும் ஒரு பாணியில், ஒரு ஜான்ராவில், ஒரு அழகில் மூச்சிரைக்கச் செய்து வர, மொழி தெரியாமலேயே அவற்றை ரசிக்கும் போதுமே இந்தப் பத்தியின் முதல் வரியானது நிஜமாகிட முனைகிறது !! இன்ன தான் ஒரு காமிக்ஸ் ஆக்கத்தின் வரம்பு என்றெல்லாம் இல்லாது, இப்போதெல்லாம் கதாசிரியர்கள் கையில் எடுக்கத் துவங்கியுள்ள களங்கள் மெய்யாலுமே மெர்சலூட்டுகின்றன !

காதலின் பற்பல பரிமாணங்களை தகிரியமாய் கையிலெடுத்து அலசுகிறார்கள் !! 

பிரபல புதினங்களைக் கையிலெடுத்து காமிக்ஸ் ஆல்பங்களாக்கி தெறிக்க விடுகிறார்கள் ! 

வரலாற்றுக்குள் புகுந்து செம்மையாய் ஒரு யு-டர்ன் போட்டு நாம் இதுகாரும் சிந்தைகளில் உருவகப்படுத்தி வைத்திருந்த சமாச்சாரங்களுக்கெல்லாம் புதுசாய் ஒரு கோணத்தில் விளக்கம் தர முற்படுகிறார்கள் ! 

சமகால உலக அரங்கில் அரங்கேறி வரும் அரசியல் சதுரங்கங்களை தோலுரித்து பட்டையைக் கிளப்புகிறார்கள் ! 

மருத்துவத்திற்கும் ஒரு காமிக்ஸ் பார்வையினை தந்து பார்க்கிறார்கள் ! 

கார்ட்டூன்களுக்கு புதுசாயொரு அர்த்தம் கற்பிக்கிறார்கள் !

அமானுஷ்யங்களை அசால்ட்டாக அரவணைக்கிறார்கள்...

And of course - நமக்குப் பிரியமான வெஸ்டர்ன் கதைகளையும் தடபுடலாக தாளித்துத் தள்ளுகிறார்கள் !!

So கடைவாயில் ஜொள்ளு ஒழுக இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் போது உள்ளுக்குள் கலவையாய் எண்ணங்கள் ஓட்டமெடுக்கின்றன !! பிரதானமானது - "நாம் இவுக உசரங்களுக்கு எண்ணிக்கைகளில், அளவீட்டில்  வளர முடியாங்காட்டியும், பன்முகத்தன்மையிலாச்சும் நெருங்கிட நினைத்தால் இன்னமும் எத்தனை ட்ரம் காம்பிளான் குடிக்க வேணும் ?" என்பதே !! 

இன்றைக்கெல்லாம் "அவை மேற்கத்திய ரசனைகள் !...நமக்கு ரசிக்காது !" என்றெல்லாம் சால்ஜாப்பு சொல்வது சரிப்படாது ! Netflix தளத்துக்குள் நுழைந்தால் அமெரிக்காவில் ஓடக்கூடிய டி-வி தொடர்கள் முதற்கொண்டு அணிவகுத்து நின்று சக்கை போடு போட்டு வருகின்றன ! So டாலர் தேசங்களும் சரி, யூரோ பூமிகளும் சரி, இன்றைக்கெல்லாம் ரசனைகளில் நமக்கு அந்நியமே அல்ல தான் ! யதார்த்தங்களும், மாறி வரும் பொழுதுபோக்கு பாணிகளும் புது ரூட்களில் சீறிப் பாய - நாம மட்டும் இன்னமும் "மாசிலா உண்மைக் காதலி !! மாறுமோ - செல்வம் வந்த போதிலே'ன்னு தலைவர் காலத்தின் மரங்களை சுற்றி டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கிறோமே ?!! அது why மக்கா ? எல்லாமே மாறி வரும் இந்த வேளைகளில் - ஒரு குட்டியூண்டு வட்டத்தின் காமிக்ஸ் வாசிப்புகள் மட்டும் ஒரு அகழி சூழப்பட்டதொரு இரும்புக்கோட்டையாய் ; பழசை ஆராதிக்கும் படையாய் ; மாற்றங்களை பகிஷ்கரிக்கும் பட்டாளமாய்த் தொடர்வது ஏனோ ? Why மக்கா ?

ஜன்னல் வழியே மழைத் தாண்டவங்களைப் பார்க்கும் போதே நமது ஜம்போ காமிக்ஸ் முயற்சியானது மனசில் 'ரா...ரா....சரசுக்கு ரா...ரா !!' என்று குதிக்கிறது ! ஜம்போ காமிக்ஸ் பின்னணியில் நாம் கொண்டிருந்தது - நாயக பிம்பங்களின் அவசியங்களின்றி, கதைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் தந்திடும் one-shots இங்கு அணிவகுத்திட வேண்டும் என்ற அவாவே ! I agree - அங்கு நமது கதைத்தேர்வுகள் எல்லா தருணங்களிலும் bang on target இருந்திருக்கவில்லை  தான் ; but அதே சமயத்தில் அந்த தனித்தடமே மூணு, நாலு ஆண்டுகளில் மூலை சேர்ந்திட வேண்டிய அளவிற்கு டப்ஸாவாக இருக்கவுமில்லை தான் ! So why did it not click ? என்ற கேள்வியே இந்த நொடியில் என்னுள் !! 

சாப்பாட்டு பாணிகளில் மாற்றங்களை ஆர்வமாய் அரவணைத்திருக்கிறோம் ! நம்மூர் உணவுகளில் "பனீர்" எனும் ஐட்டத்தை நான்லாம் ஒரு 20 வயதான பிற்பாடு தான் பார்க்கவே செய்திருப்பேன் ! "ஷவர்மா' என்றால் ஷவரில் குளித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை அம்மாவிடம் உணர்த்தும் வார்த்தையாக மட்டுமே என் காலத்தில் இருந்து வந்தது ! KFC ; Subway ; McDonalds ; Popeyes ; Dominos ; Pizzahut என்பனவெல்லாமே அமெரிக்கா போயிட்டுத் திரும்புவோரின் பீட்டர்களில் காணப்பட்டு வந்த பெயர்களாய் மாத்திரமே இருந்து வந்தன ! ஆனால் இன்றைக்கோ நிலவரம் என்ன சொல்லுங்களேன் ? நம் வீட்டு அரை டிக்கெட்கள் தாமாய் KFC-ல் ஆர்டர் போட முனைந்து வருகின்றன !!

பொழுதுபோக்கு வழிமுறைகளிலும் தான் எம்புட்டு மாற்றங்கள் ? தூர்தர்ஷனில் ராமாயணம் சீரியலைப் பார்க்க ஞாயிறு காலையில் தேசமே டிவி பெட்டிகளின் முன்னே குவிந்த காலங்களெல்லாம் இன்றைய OTT தலைமுறைக்கு என்னவென்று கூடத் தெரியாது தானே ? "கொரியன் சினிமா பிடிக்கும் ya ; I like Scorcese ; இரானியன் சினிமாக்கள் ரெம்போ different தெரியுமா ? என்ற சம்பாஷணைகள் இன்றைக்கு நார்மலே !! 

நமது விடுமுறைத்தல செலெக்ஷன்களில் ; நடையுடைகளில் ; ஓட்டும் வண்டிகளில் ; அரசியல் பார்வைகளில் - என சகலத்திலும் மாற்றம் நிரந்தரம் என்றாகி விட்டது ! பச்சே - ஈ பொம்ம பொஸ்தவ வாசிப்பில் மட்டும் கட்டுப்பட்டிகளாகவே நாம் தொடர்வது ஏனோ சேட்டா ? நூத்தியொன்றாவது தபாவாக இந்தக் கேள்வி என்னுள் ! I agree, கி.நா.க்கள் இன்று நமக்கு அந்நியமல்ல தான் ; XIIIதாத்தாஸ் / டெட்வுட் டிக் / நிஜங்களின் நிசப்தம் / கென்யா போன்ற செம offbeat கதைகளையும் இப்போதெல்லாம் ஏற்றுக் கொள்கிறோம் தான் ; but still நமது comfort zones மாயாவிகளோடும், ஸ்பைடர்களோடும், டெக்சோடும், டைகரோடும், லக்கி லூக்கோடும் ; ரிப்போர்ட்டர் ஜானிகளோடும் தானே பிரதானமாய் இருந்து வருகின்றன ? இந்த குட்டியூண்டு சமாச்சாரத்தினில் மட்டும் வெயிலடிச்சாலும், மழை பெய்ஞ்சாலும், புயல் வீசினாலும் நமது மைய ரசனைகள் இம்மியும் மாற்றம் காணாது தொடர்வதன் மாயம் தான் என்ன ? இது ஏற்கனவே நாம் பேசியுள்ள topic தான் என்றாலும், அகவைகளின் முன்னேற்றத்துடன் இதே கேள்வியினை மறுக்கா ஒருமுறை அணுகிப் பார்ப்பதில் தப்பில்லை என்றே தோன்றுகிறது ! 

இந்த வாரத்துக்கான கேள்வியாய் உங்களிடம் நான் முன்வைக்க விழைவது இதைத் தான் guys : என்றைக்கேனும் ஒரு கனவு ஆண்டினில் - ஒரு முழு வருஷச் சந்தாவிற்கும் big names இன்றி, புதியவர்களை ; புதுக் கதைகளை / தொடர்களை கொண்டு வெற்றிகரமாய் செதுக்கும் வாய்ப்பு அமையுமுங்களா ? அல்லாங்காட்டி - "வாய்ப்பில்லே ராஜா"ன்னு தான் நமக்கு நாமே சொல்லிக்கணுமா ? Your thoughts please ladies & gentlemen ?

ஆங்...மழை விட்டுப்புட, நமக்குள்ளான அந்த தத்துவ மேதைகளும் மண்டையை உள்ளுக்குள் இழுத்துக் கொள்ள, இதோ - டிசம்பரில் காத்துள்ள நமது fantasy நாயகர் தோர்கலின் பிரிவியூ !! In fact இந்த இதழ் போன வாரமே பிரிண்ட் ஆகி, பைண்டிங்கும் முடிந்து ரெடியாகி இருக்க - சும்மா அருண் ஐஸ்க்ரீமின் butterscotch 1 லிட்டர் bar போல புக் தகதகக்கிறது ! கருணையானந்தம் அங்கிளின் க்ளாஸிக் நடையில் இந்தக் கதையின் பணிகளை சுலபமாய் முடிக்க முடிந்ததால் - தோர்கல் இம்முறை ஜிலோவென்று ரெடியாகி விட்டார் ! இதோ - கெத்தாய் அம்மணி க்றிஸ் of வால்நார் காட்சி தரும் ஒரிஜினல் அட்டைப்படம் !! And உள்ளாற இந்த 2 அத்தியாய சாகசத்தில் கொஞ்சமே கொஞ்சமாய் 18+ சமாச்சாரங்களும் இடம்பெற்றுள்ளன ! No கத்திரி ; no எடிட்டிங் என படைப்பாளிகள் கறாராய் சொல்லிப்போட்டதால் உள்ளது உள்ளபடிக்கே !! எண்ட தெய்வமே !!  



தோர்கலின் இந்தக் குறிப்பிட்ட கதைச் சுற்று இன்னும் ஒரு ஆல்பத்தோடு நிறைவுறுகிறது ! So 2025-ன் துவக்க மாதங்களிலேயே அதனையும் வெளியிட்டு விடலாம் - கதை உங்களின் ஞாபகங்களில் இருக்கும் போதே ! அதையும் சேர்த்து 3 பாக ஆல்பமாய் இப்போதே போட்டிருக்கலாம் தான் - ஆனால் அவ்விதம் செய்திடும் பட்சத்தில் புக்கின் விலை ரூ.375 என்றாகியிருக்கும் ! And தோர்கலின் ஆல்பங்கள் அந்த விலைகளில் பெருசாய் ஸெல்ப் எடுப்பதே கிடையாது - என்பது தான் வார்னிஷ் இல்லாத நிஜம் ! 12 ஆண்டுகளுக்கு முன்பாய் துவங்கிய இத்தொடரின் சகல ஆல்பங்களும் இன்னமும் நம்மிடம் ஸ்டாக்கில் உள்ளன என்பதை நான் சொல்லவும் வேணுமா - என்ன ? So விற்பனை / வியாபார நோக்குகளும் உட்புகும் போது, கதைகளை பிரித்து வெளியிடுவதைத் தவிர்க்க இயலவில்லை guys !    உங்களின் புரிதல்களுக்கு முன்கூட்டிய நன்றிகள் !!

And இதோ - போன வாரம் போட விடுபட்டுப் போன இளம் டெக்சின் உட்பக்க preview !


Moving on, நவம்பரில் இறுதி வெள்ளியன்று சேலத்தில் புத்தக விழா துவங்கிடவுள்ளது என்பதால் அதற்கான முஸ்தீபுகளில் நம்மாட்கள் பிசி ! 

  • கபிஷ் ஸ்பெஷல் 1 - ரெடி !
  • க்ளாஸிக் சூப்பர்ஸ்டார்ஸ் ஸ்பெஷல் 3 - ரெடி !
  • ELECTRIC '80s - முதல் இதழான ஸ்பைடர் ஸ்பெஷல் - ரெடி ! 

தவிர, டிசம்பர் புக்ஸ் அனைத்துமே சேலத்தில் ஒன்றிரண்டு நாட்களிலேயே கிடைக்கும் என்பதால் அப்பகுதி நண்பர்களின் ஷாப்பிங்குக்கு நிறையவே புக்ஸ் இருக்கும் ! And இன்னமும் ELECTRIC 80's / சேலம் ஸ்பெஷல் இதழ்களுக்கு முன்பதிவு செய்திருக்கா நண்பர்கள் - இனியும் தாமதிக்க வேண்டாமே ப்ளீஸ் ? கபிஷ் ஸ்பெஷல் கலரில் சும்மா எகிறி அடிக்கிறது என்பது கொசுறுத் தகவல் !! 


And சேலம் முடிந்த சற்றைக்கெல்லாமே சென்னைப் புத்தக விழாவுமே இம்முறை டிசம்பரில் இறுதியிலேயே துவக்கம் காணக்கூடும் என்ற சூழலில், அதற்கான திட்டமிடல்களுக்கும் கணிசமாகவே நேரம் தர வேண்டியுள்ளது ! By now - சென்னையில் எது தேவை ? எது விற்கும் ? எது விற்காது ? என்பதெல்லாம் கொஞ்சமாய் புரிபட ஆரம்பித்திருப்பதால் அதற்கேற்ப யோசனைகள் ஓடிக்கொண்டுள்ளன !! So அதனைத் தொடர்ந்திட நான் கிளம்புகிறேன் folks ; இயன்றால் எனது துவக்கப்பத்திகளின் அனற்றலுக்கு உங்கள் பார்வைகளிலான பதில்களை பதிவிட கோருகிறேன் ! 

Bye all...see you around ! Have a cool weekend !


Saturday, November 09, 2024

மேஜிக் மொமெண்ட்ஸ்!

நண்பர்களே,

வணக்கம். தடதடத்து வரும் நடப்பாண்டு எக்ஸ்பிரஸ் மெதுமெதுவாய் அதன் இறுதி ஸ்டேஷனை நெருங்கிக் கொண்டிருக்கும் நேரமிது! டின்டின், லார்கோ ரகளை செய்த ஜனவரியெல்லாம் ரெம்போவே பின்னால் ஒரு தூரத்துப் புள்ளியாக மாத்திரமே இன்று நினைவுகளில் ஒட்டிக் கொண்டிருக்கின்றன! So இதோ - தொடும் அண்மையினில் காட்சி தந்து கொண்டிருக்கும் டிசம்பரின் மீதான பார்வைகளைப் படர விடலாமா folks?

The Magic Moments ஸ்பெஷல்!!

முழியாங்கண்ணனின் மேற்பார்வையினில் 1000+ இதழ்கள் உருவாகியிருப்பதைக் கொண்டாட நீங்கள் முன்மொழிந்து, பெயரிட்டும் தந்திருக்கும் இதழ் இது! (பெயரிட்ட நண்பரின் பெயர் மறந்து போச்சூ... தயைகூர்ந்து கரம் தூக்கி உங்களை அடையாளப்படுத்திக் கொள்ளுங்கள் நண்பரே - அந்த இதழினில் குறிப்பிட வேணும்!) 

நிஜத்தைச் சொல்வதானால் நம்ம STV இந்த மைல்கல் குறித்துப் பதிவிட்டிருக்காவிட்டால் இப்படியொரு சமாச்சாரம் பற்றியே எனது சிந்தனை போயிராது தான்! பல விதங்களில் எனது பணியானது ஒரு சர்க்கஸ் ரிங் மாஸ்டரின் பொறுப்பை ஒத்தது என்பேன்! "ஆங்... கூடாரம் செட் பண்ணியாச்சா? லைட்கள் பொருத்தியாச்சா? மரணக்கூண்டை மாட்டியாச்சா? அதிலே ஓட வேண்டிய மோட்டார் சைக்கிளை காயலான் கடையிலேர்ந்து எடுத்தாந்தாச்சா? கோமாளிகள் ரிகர்சல் பண்ணி விட்டார்களா? உசரத்திலே ட்ரபீஸில் கலக்க வேண்டிய கலைஞர்களுக்கான பாதுகாப்பு வலையெல்லாம் கச்சிதமா கீதா?" என்ற ரேஞ்சுக்கு வகைவகையான தயாரிப்புப் பணிகளுக்கு ஒரு உந்துதல் தருவதே எனது பிரதானப் பணி! Of course பேனா பிடிக்கும் பொறுப்பொன்றுமே எனக்குண்டு தான் – மறுக்க மாட்டேன்; ஆனால் ஒட்டுமொத்தமாய் சகல பணிகளையும் ஒருங்கிணைத்து ஒரு ஷோவை வெற்றிகரமாய் நடத்திக் காட்டுவதே ஒரு ரிங் மாஸ்டரின் முன்னுள்ள சவால்களின் உச்சம் என்பதைப் போல ஒவ்வொரு இதழினையும் பூர்த்தி செய்து கையில் ஏந்துவது தான் அடியேனின் மாதாந்திர சவால் quota! So இந்த நொடியில் 1000+ சர்க்கஸ் காட்சிகளை நமது டீமுடன் இணைந்து வெற்றிகரமாய் நடத்தி முடித்திருக்கும் மனநிறைவோடும், பணிவோடும் ரசித்து வருகிறேன்!

Looking back, இந்தப் பயண மும்முரத்தில் நாம் கடந்திருக்கும் தொலைவு குறித்தான புரிதல் என்னுள்ளே இருந்திருக்கவில்லை தான்! “ஆங்... இந்த மாசம் முடிஞ்சது; அடுத்து என்ன?” என்ற ரீதியிலேயே தான் நாட்களின் ஓட்டம் இருந்து வந்துள்ளது! So ஆயிரம் ப்ளஸ் இதழ்களைக் கடந்து 1100-ஐ நெருங்கிக் கொண்டிருக்கிறோம் என்று நம்ப நிரம்பவே கஷ்டமாகவுள்ளது! 

எத்தனை எத்தனை நாயகர்கள்... நாயகியர்! 

எத்தனை எத்தனை சைஸ்கள்... எத்தனை எத்தனை விலைகள்! 

எத்தனை எத்தனை உச்சங்கள்... எத்தனை எத்தனை பாதாளங்கள்! 

எத்தனை எத்தனை சந்தோஷங்கள்... எத்தனை எத்தனை சங்கடங்கள்? 

எத்தனை எத்தனை மைல்கல்கள்... எத்தனை எத்தனை அழுகிய முட்டைகள்! 

Phewww...! இதழியல் துறையினில் வாராந்திர, மாதம் இருமுறை இதழ்களை நடத்தி வரும் ஜாம்பவான்களுக்கெல்லாம் இந்த ஆயிரம் ப்ளஸ் என்ற நம்பரானது கொட்டாவியை வரவழைக்கவல்ல குயந்தைப்புள்ள மேட்டராக இருக்கக்கூடும் என்பது புரியாமலில்லை! ஆனால் குயந்தைப்புள்ளைகள் மாத்திரமே படிக்கும் ‘பொம்ம புக்குகள்‘ என்ற வெகு ஜன முத்திரை தாங்கி வரும் நமது துறைக்கு இந்த 1000+ ஒரு பெத்த மேட்டர் என்பதை மண்டை சொல்வதால் நெஞ்சம் ஏற்றுக் கொள்ள முயல்கிறது!

- இங்கிலாந்து

- அமெரிக்கா

- ப்ரான்ஸ்

- பெல்ஜியம்

- இத்தாலி

- ஹாலந்து

- டென்மார்க்

- ஸ்லொவேனியா

- ஜெர்மனி

- ஆஸ்திரேலியா

என்று உலக வரைபடத்தின் பல தேசங்களது கதைகள் / தொடர்களோடு அன்னம்-தண்ணீர் புழங்கியிருப்பது மகிழ்வின் ஒரு பகுதியெனில் – நாம் வெளியிட்டிருக்கும் எண்ணற்ற கதைகள் இந்தியாவில் மாத்திரமன்றி, ஆசியாவிலேயே முதல் தபாவாக வெளிவந்திருக்கின்றன என்பது இன்னொரு பகுதி! அட, ஒரு சில கதைகள் – ஒரிஜினலாய் வெளியான மொழிக்குப் பின்பாக நமது தமிழில் மட்டும் தான் வெளியாகியுள்ளன என்பதுமே ஒரு கொசுறுத் தகவல்!

நாற்பது ஆண்டுகளாய்த் தொடர்ந்திடும் பயணம் என்றாலுமே நமது வண்டி டாப் கியரைத் தொட்டு பந்தயக் குரிரையாய் பாய்ச்சல் எடுக்கத் துவங்கியிருப்பது நமது இரண்டாவது இன்னிங்ஸில் தான் என்பதில் ஏது இரகசியம்? 2012-க்கு பின்பான இந்தப் பன்னிரெண்டு ஆண்டுகளில் முதல் 28 ஆண்டுகளின் முயற்சிகளைக் காட்டிலும் ஜாஸ்தி சிக்ஸர்களை வெளுத்திருக்கிறோம்! So பழைய பாணிகளில் ஒரு பாதியும் புதுயுக பாணிகளில் மீதமும் நமது பட்டியலில் இருப்பது ஒரு சந்தோஷ முரண் என்பேன்!

இந்த ஆயிரம் இதழ் கண்ட அதகளப் பயணத்தில் எனது பெர்சனல் Top Moments பற்றி யோசிக்க முனைந்தால் – ‘மச மச‘ வென ஏகப்பட்ட சமாச்சாரங்கள் குறுக்கும் மறுக்குமாய் ஓடிவிளையாடி வருகின்றன!

- பிள்ளையார் சுழி போட்டுத் தந்த ‘கத்தி முனையில் மாடஸ்டி‘

- ‘எத்தனுக்கு எத்தன்‘ நான் – என்று கெத்து காட்டிய ஸ்பைடர் அறிமுக வேளை!

- முதல் தீபாவளி மலர்! பொங்கல் மலர்! கோடை மலர்!

- ‘தல‘ தாண்டவங்களைத் துவங்கிய “தலைவாங்கிக் குரங்கு” வெளியான தருணம்!

- ‘ட்ராகன் நகரம்‘ – லயனின் 50வது இதழ்!

- திகில்; ஜுனியர் லயன்; மினி லயன் அறிமுக நாட்கள்!

- முத்து காமிக்ஸ் எனது பொறுப்புக்கு வந்த பொழுது!

- லயன் தீபாவளி சூப்பர் ஸ்பெஷல் 1987!!

- XIII அதகளம் பண்ணத் துவங்கிய வேளைகள்!

- கேப்டன் டைகரின் வருகை!

- மெகா ட்ரீம் ஸ்பெஷலின் திட்டமிடல்!

- மின்னும் மரணம்!!

- நமது மீன்வருகையின் Comeback ஸ்பெஷல்!

- நெவர் பிஃபோர் ஸ்பெஷல் - சென்னை 2013

- LMS வெளியீடு – ஈரோடு 2014

- மின்னும் மரணம் – ஆயிரம் ரூபாயென்ற மைல்கல்லைத் தொட்ட அதிசயப் பொழுது...!

- இரத்தப் படல வண்ணத் தொகுப்புகள் – 2018 ஈரோடு

- கொரோனா லாக்டௌன் பொழுதுகளிலும் தடதடத்த மறக்கவியலா வேளைகள்!

- டின்டினின் அறிமுகம்!

- நடப்பாண்டின் ட்ரிபிள் தீபாவளி அதிரடிகள்!

என வாணவேடிக்கைகளாய் ஏதேதோ பளீரிடுகின்றன! Maybe இன்றிரவு படுத்துறங்கி விட்டு, நாளை கண்முழிக்கும் போது புதுசாய் இன்னொரு டஜன் அனுபவங்கள் மனசில் பிரதானப்பட்டும் இருக்கலாம் தான்! ஆனால் சகலத்துக்கும் மத்தியில் ஒற்றைச் சமாச்சாரம் மட்டும் பொதுவாக இருந்திடும்! And அது நாம் கூட்டாக உணர்ந்துள்ள மகிழ்ச்சிகளே!

காக்காய் தன்னோட குஞ்சுகளை எந்த ஊரில் அழகிப் போட்டிகளுக்கும் அனுப்பியதாய் எனக்குத் தெரிய தரவுகள் ஏதும் கிடையாது தான்; So ‘காக்காய் – பொன் குஞ்சு‘ என்ற உவமைகள்லாம் சொல்லி மொக்கை போட மாட்டேன்! மாறாக நமக்குப் பொருந்துகிற மாதிரியானதொரு உவமையை இறக்கி விடட்டுமா? ”ஆந்தையனுக்கு அவன் கைவண்ணமும் அதகளங்களே!” So என்னைக் கேட்டால் ஜடாமுடி ஜனநாதனின் கதைக்கே பில்டப் தருவேன் தான்! பச்சே இங்கே எனது அபிப்பிராயங்கள் பெருசாய் எதையும் சாதிக்கப் போவதில்லை! 

மாறாக – இந்த 1000+ இதழ்களின் மத்தியிலான உங்களின் Top 3 மறக்கவியலா தருணங்கள் எதுவென்று தெரிந்து கொள்ளத் தான் ஆர்வம்! So இந்தப் பயணப் படலத்தின் எந்தத் தருணத்தில் நீங்கள் இணைந்தவராக இருந்தாலும், உங்களை மகிழ்வித்த Top பொழுதுகள் எவையென்று அடையாளப்படுத்திடலாமே folks?

Moving on, இந்த MAGIC MOMENTS-க்கென காத்துள்ள நம்ம ‘தல‘ கலர் சாகஸ மேளாவின் first look இதோ!! ஒரிஜினல் போனெலி அட்டைப்படமே; துளி கூட கூட்டல் – குறைத்தலின்றி! ‘தல‘ firing squad முன்னே நிற்பதும், சாட்டையால் விளாசப்படுவதும் சில பாயாசப் பார்ட்டிகளின் கனவுகளில் மட்டுமே அரங்கேறியிருந்தாலும் – இதோ இந்த டிசம்பரில் அவற்றை ஜொலிக்கும் கலரில் பார்த்திடவுள்ளோம்! 

டெக்ஸ் தொடரில் ஒரு லாரி லோடு கதைகள் இருந்தாலும் – இந்த 40 ஆண்டு கால எடிட்டிங் அனுபவத்தில் ஒரு விஷயத்தை மட்டும் ஸ்பஷ்டமாய்ப் புரிந்து கொள்ள முடிந்துள்ளது :

- டெக்ஸின் சில சாகஸங்களில் அனல் பறக்கச் செய்யும் ஆக்ஷனிலும், பரபரக்கும் சம்பவக் கோர்வைகளிலுமே கதைகள் சிட்டாய்ப் பறந்து விடும்! So கதை நெடுக முகம் முழுக்கப் புன்னகையோடு பயணிக்க நமக்கு சாத்தியமாகிடும்!

- டெக்ஸின் மற்ற சாகஸங்களிலோ – நிறைய பில்டப்; கதைக்களங்களை நிறுவ நிறைய மெனக்கெடல்கள்; நிறைய கதைமாந்தர்கள்; அவர்களது பின்னணிகள் என்றிருக்கும்! So அங்கே கதையோடு ஒன்றி, சீரியஸான முகங்களோடு நாமும் ட்ராவல் செய்து கொண்டிருப்போம் – சமீபத்தைய “பனிமண்டலப் போராளிகள்” ஆல்பத்தைப் போல!

டெக்ஸ் ரசிகர்களாகிய நமக்கு இரண்டுமே புல் மீல்ஸ் போலானவை என்றாலும், எடிட்டர் என்ற குல்லாவோடிருக்கும் தருணங்களில் ரகம் # 1 செமத்தியாய் ரசித்திடும்! ‘ஆங்... குத்துங்க ‘தல‘! அவனைப் போடும்யா கார்சா! வுடாதே கிட் தம்பி! ‘இழுத்து வச்சு சாத்துப்பா டைகரு!‘ என்று குஷாலாய் குதி போட்டுக் கொண்டே எடிட்டிங்கை நகர்த்திச் செல்ல இயலும்!

இந்த MAGIC MOMENTS இதழில் காத்திருப்பதே இந்த breezy ரக அதிரடி! போன மாதம் நாம் படித்த நெடும் சாகஸமானது ஆர்டிக் துருவத்துக்கு இட்டுச் சென்றதென்றால் இந்த இதழோ நம்மை மெக்ஸிகோவுக்கு இட்டுச் செல்கிறது! பெரும் சூழ்ச்சியில் சிக்கிடும் டெக்ஸ் மெக்ஸிகோவில் கம்பி எண்ண நேரிட, தொடரும் பட்டாசுகள் பத்தாயிரம் வாலாவுக்கு சளைக்காதவை! And இந்த 250 பக்க சாகஸம் முழுவண்ணத்தில் வரவுள்ளதால் – ஒரு visual feast வெயிட்டிங்! ரூ.350 விலையில் காத்திருப்பது டெக்ஸ் தொடரின் ஒரு மைல்கல் இதழ் folks! So கூடியவரையில் இதனை உங்களிடம் ஒப்படைக்கும் ஆர்வத்தோடு வெயிட்டிங்!


And இதோ – இந்த இதழோடு குட்டியான விலையில் வரவிருக்கும் இளம் டெக்ஸின் சாகஸத்தின் அட்டைப்பட ட்ரெய்லருமே! இந்த 64 பக்க சிங்கிள் ஆல்பத்தோடு ஒரு கதைச் சுற்று நிறைவுறுவதால் ”டெக்ஸாஸ் ரேஞ்சர்ஸ்” solo சாகஸமாய் ரூ.50 விலையில் வரவுள்ளது.

இதனையும் MAGIC MOMENTS ஸ்பெஷல் இதழில் இணைத்து ரூ.400 விலைக்கு ஒரே புக்காய் வெளியிட்டிருக்கலாம் தான்; ஆனால் இளம் டெக்ஸ் ஏற்கனவே 2 black & white ஆல்பங்களில் தனித்தனியாய் வெளிவந்திருக்க, இந்த climax இதழை ஒரு பெரிய புக்குக்குள் நுழைத்தால் புத்தக விழாக்களில் வாங்கிடக் கூடிய புது வாசகர்களுக்கு சிரமமாகிடக் கூடும் என்று பட்டது! தவிர ஒரு fresh அட்டைப்படமும் சாத்தியமாகாது போயிருக்கும்! ஆகையால் 2 தனித்தனி இதழ்கள் எள்ற திட்டமிடல்! இதுவுமே ஒரிஜினல் அட்டைப்படமே! இதான் உட்பக்க preview அடுத்த வாரம்!

Before I sign out – சின்னதொரு தகவல்! 2024 அட்டவணையில் அறிவிக்கப்பட்டிருந்த

- மேற்கே போ மாவீரா – ரூ.250

&

- TEX – எல்லையோர ஓநாய்கள் – ரூ.160

ஆகிய 2 இதழ்களுக்குப் பதிலாகத் தான் Magic Moments ஸ்பெஷல் + டெக்ஸாஸ் ரேஞ்சர்கள் இதழ்கள் வெளிவருகின்றன! ஆகையால் “மேற்கே போ மாவீரா”வை விழுங்கிப்புட்டீங்களா? என்று நம்மாட்களின் சில்லுமூக்குளைச் சிதறச் செய்ய வேணாமே – ப்ளீஸ்?!

ரைட்டு... நம்ம தானைத் தலைவர் ஸ்பைடரின் “பாட்டில் பூதம்” எடிட்டிங் பணிகள் கூப்பிடுவதால் நடையைக் கட்டுகிறேன்! Bye all... See you around! Have a beautiful weekend ஆல்!

கடந்துள்ள வாரத்தினில் நமது சந்தா 2025 எக்ஸ்பிரஸ் செம வேகம் எடுத்துள்ளது! அதே துரிதத்தில் தொடரும் பொழுதுகளிலும் சந்தாக்கள் போட்டுத் தாக்கிடும் என்ற நம்பிக்கை நிரம்பவே உள்ளது! இன்னமும் இணைந்திருக்கா நண்பர்கள் - please do consider joining in at your earliest convenience 🙏


Saturday, November 02, 2024

நவம்பரும், நடப்புகளும்....!!

நண்பர்களே,

வணக்கம். இதோ - இரண்டே நாட்கள் தான் ஆகியுள்ளன - அதிரசங்களையும், முறுக்குகளையும் தொந்திக்குள் புகுத்தி! இரண்டே நாட்கள் தான் கடந்துள்ளன பட்டாசைப் போட்டு, தெருவுக்கே ஒரு தேவலோக எஃபெக்ட் தந்து! இரண்டே நாட்கள் தான் நகர்ந்துள்ளன! - ‘தம்‘ கட்டி தொப்பைகளை உள்ளிழுத்து, புதுசாய் வாங்கின ஜீன்ஸ்களை இடுப்பில் நிறுத்த பாடாய்ப் பட்டு! ஆனால் தீபாவளிக்கான நமது மூன்று ஸ்பெஷல்களும் வெளியாகி ஒரு மகாமகமே கழிந்தது போல் தோன்றுகிறது உள்ளுக்குள்! And அந்த மூன்று இதழ்களுமே தத்தம் பாணிகளில் - பண்டிகைப் பொழுதுகளை ஜாலியாக்கிட உதவியுள்ளதில் நாங்கள் செம ஹேப்பி அண்ணாச்சி! So இன்னொரு 350 நாட்களுக்கு அப்பாலிக்கா காத்திருக்கப் போகும் அடுத்த தீபாவளிக்கு இன்னும் ஒரு படி கூடுதலாய்க் கலக்கிட என்ன செய்திடலாமென்ற யோசனையோடே it's back to the drawing board!

ரைட்டு... நவம்பரின் ரெகுலர் இதழ்களும் ஆச்சு! நடப்பாண்டில் டிசம்பரின் batch புக்ஸ் தவிர்த்து வேறு ஏதேனும் உண்டாடா தம்பி? என்ற கேள்வியை நீங்கள் கேட்கிறீர்களோ - இல்லையோ; என்னை நானே கேட்டுக் கொண்டேன்! அடிச்சுப் புடிச்சி தீபாவளி மலர்களை before time ரெடி பண்ணி விட்டதால் கிடைத்திருக்கும் இந்த இக்ளியூண்டு ஓய்வினில், ரெகுலர் தடத்தில் அல்லாத இதழ்களைத் தடதடக்கச் செய்யும் மகாசிந்தனைகள் துளிர் விடத் துவங்கி விட்டன! And இதோ - நபம்பர் 29ல் சேலம் புத்தக விழாவும் தொடங்கிடவிருப்பதால் அதனை அனுசரித்த பொழுதுகளில் அவற்றைக் களமிறக்கினால் சிறப்பு என்று பட்டது! So அந்த 3 ஸ்பெஷல்ஸும் இந்த நவம்பரின் பொழுதுகளை டாலடிக்கச் செய்திடுமென்று எதிர்பார்க்கலாம்!

- Electric '80s தனித்தட புக் # 1 - "The ஸ்பைடர் ஸ்பெஷல்"

- சுட்டிக் குரங்கு கபிஷ் ஸ்பெஷல் - 1!

- ஸ்பைடர் 2.0 - க்ளைமேக்ஸ் பாகம்!

ஆக ‘புலி வருது... வருது‘ என்று மிரட்டிக் கொண்டிருந்த Electric '80s தனித்தடமானது - தனது முதல் ஆல்பத்தில் நம்ம தானைத் தலைவரின் "பாட்டில் பூதம்" + 2 சிறுகதைகள் என்ற காம்போவில் கலக்கவுள்ளது! இங்கொரு முக்கிய தகவல் folks! '90களில் இந்த “பாட்டில் பூதம்” ஒரிஜினலாய் நமது லயனில் வெளியான சமயத்தில் கணிசமாகவே ‘கத்திரி காத்தவராயன்‘ அவதாரில் உங்களது காதுகளை அதீத புய்ப்பச் சரங்களிலிருந்து காப்பாற்றிட முனைந்திருந்தேன்! ஆனால் இன்றைக்கு காமிக்ஸ் சேவை ஆற்றிட ஆவலாய் பறக்கும் ஆர்வலர் பார்ட்டீஸ் - ”விடுபட்ட பக்கங்களோடே பிரிண்ட் போட்டுத் தர்றோம் சார்... வாங்கோ சார்... வாங்கோ மா...!” என்று சபலமூட்டி வருவதால் காத்தவராயன் அவதாருக்கு டாட்டா சொல்லியாச்சு! ஆகையால் இம்மியும் குறைவின்றி - பூதத்தோடு நம்மவர் அடிக்கும் ரகளைகளை இந்த இதழில் பார்த்திடப் போகிறீர்கள்! ஜெய் பாட்டில்மணி! 

இதோ - MAXI சைஸிலான இந்த இதழுக்கு நமது அமெரிக்க ஓவியையின் டிஜிட்டல் ரீ-டச்சிங்கில் உருவாகியுள்ள அட்டைப்படம் & உட்பக்க preview!

And நினைவூட்டி விடுகிறேன் மக்களே - இது ELECTRIC `80s தனித்தட சந்தாவுக்கான இதழ் மாத்திரமே! So அதற்கான சந்தா செலுத்தியாச்சா? என்பதை மட்டும் சரிபார்த்து விடுங்களேன் ப்ளீஸ்!!






அடுத்ததாக மிரட்டக் காத்திருப்பது முழுவண்ணத் தொகுப்பில் முதன்முறையாக நமது சுட்டிக்குரங்கு கபிஷ்! அழகான, க்ளாஸிக் சிறுகதைகளை, ரம்யமாய் கலர் செய்து, ஒரிஜினல் ஓவியரிடமே அட்டைப்படமும் போட்டு வாங்கி கெத்தாய் களமிறக்கிடவுள்ளோம் - இந்த கபிஷ் ஸ்பெஷல் 1 இதழினில்! இங்கே நண்பர் ரபீக்கின் பங்களிப்பு மட்டும் இல்லாது போயின் இந்த இதழே சாத்தியமாகியிராது என்பதே யதார்த்தம்! Thanks a ton Sir! இதோ அட்டைப்படம் + உட்பக்க ப்ரிவியூ!

And இந்த இதழானது எந்தச் சந்தாவிலோ, தனித்தடத்திலோ இடம்பிடித்திடாத புத்தக விழா ஸ்பெஷல்! So சந்தாக்களின் அங்கமாகிடாது!


ஸ்பெஷல் # 3 - நமது தானைத் தலைவரின் 2.0 அவதாரின் க்ளைமேக்ஸ் அத்தியாயம்! ஏற்கனவே மாயாவியோடும், ஆர்ச்சியோடும் துப்பறியும் கம்ப்யூட்டரோடும், ஜேன் பாண்டோடும் ஒரண்டைகளை இரண்டு அத்தியாயங்களில் இழுத்து விட்டிருந்த ஸ்பைடர் ரகளையாய் மூன்றாவது அத்தியாயத்தோடு அந்த சாகஸத்தை நிறைவு செய்திடுகிறார்! க்ளாஸிக் நாயகர்களைத் தட்டி எழுப்புவது போதாதென, அவர்களுக்கான புதுப்புதுக் களங்களையுமே இன்று படைப்பாளிகள் தயார் பண்ணி வருகிறார்கள்! அந்த முயற்சிகளில் ஒன்று தான் இந்த கூட்டணிக் கதம்ப த்ரில்லர்! So “க்ளாஸிக் சூப்பர் ஸ்டார்ஸ் ஸ்பெஷல் - 3” preview இதோ!

And yes/ இந்த இதழுமே ஒரு புத்தக விழா ஸ்பெஷல் தான்!



டிசம்பரின் ரெகுலர் இதழ்கள் நவம்பர் 28-ம் தேதி டெஸ்பாட்ச் ஆகிடும்! அந்தக் கூரியர் டப்பியினில் ELECTRIC '80s-க்கு சந்தா செலுத்தியிருக்கும் பட்சத்தில் 'The ஸ்பைடர் ஸ்பெஷல்” MAXI சைஸிலான இதழும் இடம்பிடித்திடும்! And அவற்றோடே:

கபிஷ் ஸ்பெஷல் 1 (ரூ.100)

+

க்ளாஸிக் சூப்பர் ஸ்டார்ஸ் ஸ்பெஷல் 3 (ரூ.60)

இதழ்களைப் பெற்றிட விரும்பினால் சந்தாதாரர்கள் ரூ.160 மட்டும் அனுப்பினால் மதி!

சந்தாவில் அல்லாதோருக்கு மேற்படி 2 இதழ்கள் தேவையெனில் கூரியர் கட்டணம் சேர்த்து ரூ.200/- அனுப்பிட வேண்டியிருக்கும்!

Maybe இந்த புத்தகவிழா ஸ்பெஷல்களை சேலம் விழாவிலோ, தொடரக்கூடிய இன்னபிற புத்தக விழாக்களிலோ வாங்கிட எண்ணிடும் பட்சத்தில் no problems at all! நிச்சயம் ஸ்டாக் இருக்கும்!

Moving on,  நமது 2025 சந்தா சார்ந்ததொரு செம சுவாரஸ்ய தகவல்!! இதுவரைக்கும் கிட்டியுள்ள சந்தாக்களில், மொத்தம் இரண்டே நண்பர்கள் தான் - சந்தா LITE பிரிவினை தேர்வு செய்துள்ளனர்! பாக்கி அனைவருமே ரெகுலர், full சந்தாவில் தான் இடம் போட்டுள்ளனர்!! நமது 2025-க்கான பயணத்தினில் almost அனைவருமே ஒரே சந்தாப்பிரிவில் பயணிப்பர் எனும் போது - நம்ம front desk அம்மணியர் நிச்சயம் நிம்மதிப் பெருமூச்சிடுவர்! And தீபாவளிக்குப் பிற்பாடு சந்தாக்கள் வேகமெடுப்பது வழக்கம் ; இம்முறையும் அது தொடருமென்ற நம்பிக்கையில் காத்திருக்கிறோம்! இதோ - சின்ன நினைவூட்டலாய் சந்தா விபரங்கள் :


Before I sign out - இரு கேள்விகள் :

1.ஸ்பைடர் ஸ்பெஷல் : வாசிப்புக்கா? சேமிப்புக்கா?

https://strawpoll.com/XOgOV8QbQn3

2.2025-ன் ஏதாச்சும் ஒற்றை இதழை ஜனவரியிலேயே பார்க்க விரும்புவீர்கள் எனும் பட்சத்தில் what will be that?

Bye all... See you around! Have a great weekend!

P. S : நம்ம Youtube சேனலில் அடியேன் போட்டிருக்கும் லேட்டஸ்ட் மொக்கை  : https://youtu.be/inP9Stj7yVY?si=swwwLOPYHrbj6m59