Powered By Blogger

Saturday, November 28, 2020

படைத்தவருக்கும்....நம்மைப் படித்தவர்களுக்கும் ...!!

 நண்பர்களே,

வணக்கம். நிறைய விஷயங்களைப் பகிர்ந்து ஒரு பெரிய பதிவை உருவாக்கலாம் தான் – இத்தனை நாட்களாய் நான் செய்து வந்ததைப் போல ; God willing தொடரும் நாட்களிலும் நான் செய்யப் போவதைப் போல ! அதே சமயம் பெரிய விஷயங்களைச் சுருக்கமாய்ப் பகிர்ந்துமே நிறைவானதொரு பதிவை உருவாக்க முடியுமா ? முடியும் என்பேன் ! Read on please...!!

ரொம்பச் சமீபத்தில் எனக்கொரு வாட்சப் சேதி :

ஸ்பைடரின் “சர்ப்பத்தின் சவால்” புக்கில் நண்பர் JSK-க்கு நீங்கள் எழுதியிருந்த tribute--ஐப் படித்த கையோடு இதை எழுதத் தோன்றுகிறது !” என்று ஆரம்பித்தது அந்த மெசேஜ் ! 

ரொம்பவே பரிச்சயமான நண்பரே எனும் போது - ‘அட... என்ன சொல்ல வருகிறாரோ?‘ என்று அறியும் ஆவலில் தொடர்ந்து படித்தேன் ! 

மறைந்த நண்பருக்கென ஒரு ஸ்பெஷல் இதழ் போட்டிருப்பது பிரமாதம் ; ஆனால் அவரது குடும்பத்துக்கென ஏதேனும் செய்திட சாத்தியப்பட்டுள்ளதா ?" என்று நண்பர் வினவினார் ! 

சின்னதொரு தயக்கத்துக்குப் பின்னே- "பெரிதாய் எதுவும் நடைமுறை கண்டிருக்கவில்லை சார் ! ஏற்கனவே JSK-ன் மருத்துவ சிகிச்சைக்கென நண்பர்கள் இயன்ற சிறு பங்கினை செய்திருக்கும் நிலையில், அவர்களை மேற்கொண்டும் சங்கடப்படுத்த நான் விழையவில்லை!” என்றேன்!

அதுவும் சரி தான்; இந்தக் கொரோனோ காலத்தில் யாரது நிலவரமும் சொல்லிக் கொள்ளும் விதமாய் இருக்கலை தான் ! என்று நண்பரின் பதில் வந்தது !

ஆமாம் சார் ! மேலோட்டமாய் இது குறித்து நான் பேசி விட்டு நண்பர்களது பிரியங்களுக்கு விட்டு விட்டேன் !” என்றேன் !

இழப்பைச் சந்தித்திருக்கும் அந்தக் குடும்பத்துக்கு நம் காமிக்ஸ் குடும்பத்தின் சார்பாக ஏதாச்சும் செய்யணுமே சார் !” என்று தொடர்ந்தது நண்பரின் அடுத்த மெசேஜ் !

எனக்கும் அந்த அவா உள்ளது தான் சார் ! Maybe ஒரு வாகான சந்தர்ப்பத்தில் நம்மிடமிருக்கக்கூடிய ஒருசில அட்டைப்பட பெயிண்டிங்குகள் ; முந்தைய artwork போன்றவற்றை நம்மவர்கள் மத்தியில் ஒரு ஏலம் போல நடத்தி, அதனில் கிடைக்கும் தொகைகளையும், நமது பங்களிப்பையும் இணைத்து நண்பரின் குடும்பத்துக்குத் தரலாமா ? என்ற ரீதியில் எண்ணமுள்ளது சார்!” என்றேன்!

”போச்சு போங்க – நீங்களும் கடைவிரிச்சு விற்க ஆரம்பிச்சாசா...? நாங்க விற்றா குற்றம்... நீங்க வித்தா மதர் தெரசாவா..? ன்னு  அதுக்கும் உங்களைத் துவைத்து தொங்க விடுவாங்க சார் ! வேண்டாமே அந்த எண்ணம் !” என்றார் !

அட... நம்மளைத் துவைப்பதுலாம் துவையல் அரைக்கிறதை விடச் சுளுவாச்சே சார்...?! தவிர நான் விற்கலாம் என்று நினைப்பவையுமே அட்டைப்படங்கள் ; ஆர்ட்வொர்க் என collector’s value கொண்டவை மாத்திரம் தானே ? அதில் பெருசாய் என்ன சர்ச்சை நேரக்கூடும் ?” என்றேன் !

"வேண்டாம் சார்! ஒரு நல்ல காரியத்துக்கு எதையேனும் செய்யப் போய் அதுவுமே விவாதப் பொருளாகிட வேண்டாமே ! மாறாக – ஏதேனும் ஒத்தாசை செய்திட ஆண்டவன் அருளால் நல்ல நிலையில் உள்ள மிகச் சிறிய வட்டத்திடம் நானே கேட்டுப் பார்க்கட்டுமா ? இந்த ”சர்ப்பத்தின் சவால்” புக்கின் மூலமாய் உங்களுக்குக் கிடைக்கக்கூடிய லாபத்தை உங்கள் பங்களிப்பாக வைத்துக் கொள்ளலாம் ; நான் உட்பட இன்னும் இருவர் – ஆக மொத்தம் 3 வாசகர்கள் அதே அளவுத் தொகையினை அவரவரது பங்களிப்பாகச் செய்திடுகிறோம் ! ஆக 4 பங்குத் தொகையினையும்  லயனின் அன்புடன் JSK-ன் குடும்பத்துக்கு வழங்கிடலாமே சார் ?! என்ற மெசேஜைப் படித்த போது எனக்கு விக்கித்துப் போனது !

“இல்லை சார்! யாரையும் தர்மசங்கடத்தில் ஆழ்த்திட வேண்டாமே... ஏற்கனவே சிரமத்திலுள்ள நண்பர்களின் சந்தாக்களுக்கு ; ”கழுகு வேட்டை” விலையில்லா இதழுக்கென ஏகமாய் தயாள முகங்களைக் காட்டியுள்ள நிலையில் மேற்கொண்டும் சிரமப்படுத்த வேண்டாமே ?!” என்றேன்!

அப்படியில்லை சார்; நான் மனதில் வைத்திருக்கும் இருவருமே துளி கூடத் தயக்கமின்றி உதவத் தயாராக இருப்பார்கள் ! இழப்பின் வலியானது முதல் ஆண்டில் தான் ரொம்பவே ரணமாய்ப் படுத்திடும் அந்தக் குடும்பத்தை ! இந்தச் சமயத்தில் ஏதேனும் உதவிட முடிந்தால் அது அவர்களுக்கு ஏதேனுமொரு விதத்தினில் பிரயோஜனப்படக்கூடும் !” என்றார் ! 

தொடர்ந்த சேதிப் பரிமாற்றத்தில் தொகைகள் ; யார்-யாரிடமிருந்து ஒத்தாசை கோரிடவுள்ளார் ? எப்போது பணம் அனுப்புவது ? என்ற தகவல்கள் பரிமாறிடப்பட்டன !

And இது நடந்து ஒரு வாரம் பின்பாய் – இந்த புதனன்று மீண்டும் வாட்சப் சேதி ! ”சார்... மூவரது பங்களிப்பும் உங்கள் அக்கவுண்டில் சேர்ப்பித்தாயிற்று !!” என்று ! 

ஏற்கனவே வங்கியிலிருந்து வந்திருந்த குறுந்தகவலும் அதை ஊர்ஜிதப்படுத்தியிருக்க – கரம் கூப்பும் படங்களை அனுப்பி வைப்பதைத் தாண்டி வேறெதுவும் செய்யத் தோன்றவில்லை !

அப்புறம் ஒரு சின்ன வேண்டுகோள் சார் ! தயவு செய்து மூவரது பெயர்களையும் வெளியிட வேண்டாம் ! இது லயனின் ஒத்தாசையாகவே களம் காணட்டும் !” என்று...!

மறுபடியும் தொண்டை அடைத்தது எனக்கு !! ”சார்... தெருமுனையில் ஒரு கேன் கபசுரக்குடிநீர் தருவோரே 40 அடி உசரத்துக்கு பேனர் வைக்கும் நாட்களிவை ! இந்த வேளைகளில், அனாமதேயர்களாய் நீங்கள் தொடர்ந்திட விரும்புவது வேண்டாமே ?! இந்த அன்புகள் அங்கீகாரம் காண வேண்டுமே !” என்றேன் !

நொடியும் தாமதமின்றி வந்த பதில் இது தான் : 

Lion is a family sir !!

சுருக்கமாய் கிட்டிய நண்பரது பதில் என்னைச் சாய்த்து விட்டது ! 

உடன்பிறந்தோருக்குச் செய்யவே கணக்குப் பார்க்கும் உலகமிது...! நம் குடும்பம்... நம் பிள்ளைகள்... நம் வட்டம் ! என சகலமுமே ஒரு சிறு வளையத்தினுள் அடங்கிப் போயிருப்பது யதார்த்தம் ! And இதன் பொருட்டு சத்தியமாய் யாரையும் குறை சொல்வதில் அர்த்தமும் கிடையாது என்பதை இந்தப் பேரிடர் காலமும் உணர்த்தியுள்ளது ! ஒற்றை வைரஸின் வருகையால் தடம்புரண்ட தொழில்கள் ; உத்தியோகங்கள் ; பிழைப்புகள் தான் எத்தனை – எத்தனை ? என்பதை நாம் தான் நித்தமும் பார்த்து வருகிறோமே ?! So ‘தனக்குப் போகவே தர்மம்‘ என்பது ஒரு எழுதப்படா விதியாகிவிட்டிருக்கும் இந்தக் காலகட்டத்தினில் – ஒரு பொம்மை புக் மீதும், அதன் குறுகிய வாசக வட்டத்தின் மீதும் இத்தனை நேசமும், அபிமானமும் கொண்டிட சாத்தியப்படுகிறதெனில் அதனை விளக்கிட வார்த்தைகள் பற்ற மாட்டேன்கின்றன ! And to top it all இப்போது உதவியுள்ள 3 நண்பர்களுக்கும் நண்பர் JSK உடன் நேரடிப் பரிச்சயம் இருந்திருக்க வாய்ப்புகள் ரொம்ப ரொம்ப சொற்பம் ! Makes it all the more awesome !!

இந்தக் காமிக்ஸ் பயணத்தை ஒருங்கிணைக்கும் பொறுப்பிலிருக்கும் எனக்கு, “காமிக்ஸ் குடும்பம்” ; ”வாசகக் குடும்பம்” என்ற பதங்களைப் பயன்படுத்துவது பழகிப் போனதொரு சமாச்சாரமே ! ஆனால் – அதனை மெய்ப்பிக்கும் இத்தகைய தருணங்கள் இந்த ஒட்டுமொத்தப் பயணத்துக்குமே ஒரு புது அர்த்தத்தை வழங்குகின்றன ! ஒரு பேரிடரின் மத்தியிலும் ; மழையும் ; புயலும் வதைக்கும் நாட்களிலும் கூட, வாழ்க்கை தனது சந்தோஷப் பரிமாணத்தைக் காட்டுவது ஆண்டவனின் அசாத்தியத் திட்டமிடல்களை yet again புரியச் செய்கிறது ! கரம் கூப்புகிறேன் - படைத்தவருக்கும் ; நம் முயற்சிகளைப் படிப்பவர்களுக்கும் !

நிதியாய் உதவிடும் சூழலில் இல்லாத நமது இதர நண்பர்களுமே இந்தச் சந்தோஷங்களின் ஒரு இன்றியமையாப் பங்கென்பதில் எனக்குக் கிஞ்சித்தும் சந்தேகங்களில்லை ! ஒவ்வொரு ஓவியத்திலும், ஒவ்வொரு வர்ணமும் சமஅளவில் முக்கியம் தானே guys ? நீங்கள் ஒவ்வொருவரும் இணைந்திடும் போது தானே "லயன்" எனும் கோலம் பூர்த்தி காண்கிறது ?!! So உங்கள் ஒவ்வொருவரின் சார்பிலும் modest ஆன அந்தத் தொகையினை நண்பர் JSK–ன் குடும்பத்துக்கு வரும் புதனன்று  அனுப்பிடவுள்ளோம் – ஏதோ ஒரு சிறு விதத்தில் அது அவர்களுக்கு உதவிடக்கூடுமென்ற நம்பிக்கையில் ! நண்பர் கரூர் குணா – விபரங்களை ஈ-மெயிலில் அனுப்பிடுங்கள் ப்ளீஸ் !

So முன்னோட்டங்கள்; பின்னோட்டங்கள்; சைடு ஓட்டங்கள் என்ற எந்தச் சமாச்சாரமுமில்லாத ஒரு பதிவை நிறைவுக்குக் கொணர்வதில் முதன்முறையாய் முழு நிறைவு எனக்குள் !

‘இதுவும் கடந்து போகும்...!‘ என்பது நாமெல்லாம் உணர்ந்துள்ள வேதவரிகள் ! ஆனால் கடப்பது துயர்களாக மட்டும் இருந்திடும் ; மனிதமாக ஒருபோதும் இருந்திடாது என்பதை நிலைநாட்டிய அன்புகளுக்கு சிரம் தாழ்த்திடுகிறேன் !

Bye all... See you around !

ஆங்...அப்புறம் பதிவோடு ஏதாச்சும் படம் வந்திட வேண்டுமல்லவா ? Surprise entry தரவிருக்கும் நமது கேரட் மீசைக்காரரின் அட்டைப்பட preview இதோ ! 

Sunday, November 22, 2020

கேள்விகள் கணிசம் !

 நண்பர்களே,

வணக்கம். தீபாவளியும் முடிந்து ; விடுமுறைகளும் முடிந்து ; பலகாரங்களை விழுங்கியதன் பலனான புளிச்ச ஏப்பங்களையும் மறந்து, பணிகளுக்குத் திரும்பிய நிலையில் நமது நவம்பர் இதழ்களும் உங்களின் அலமாரிகளுக்குள் ஒன்றன்பின் ஒன்றாய்த் தஞ்சம் புகத் துவங்கியிருக்கும் என்று நினைக்கிறேன் ! Maybe இன்னமும் "குண்டு புக்" பக்கமாய் முழுசும் நேரத்தைத் தந்திட இயலா நண்பர்கள் கூட "அமாயா" அம்மிணியினையும் ; கால வேட்டையரின் ரவுசு பார்ட்டிகளையும் "கண்டுக்காது " போயிருக்க மாட்டார்கள் என்றே நினைக்கிறேன் ! Anyways - நம்மைப் பொறுத்தவரைக்கும் சக்கரங்கள் நின்று நிதானிக்க என்றைக்குமே நேரம் லேது என்பதால் டிசம்பரின் கத்தைக்குள் மண்டையை நுழைத்துக் கிடக்கிறோம் ! ஆனால் இந்த வாரத்துப் பதிவு டிசம்பரின் முன்னோட்டம் பற்றியானது அல்ல ; மாறாக சில கேள்விகள் + சில பல புது வருகைகள் (வரவுகளல்ல !!) பற்றியது !

புது அட்டவணையினை அறிவித்த கையோடு, உங்களின் சந்தாத் தொகைகளை கிடைக்கப் பெற்ற பொழுதே கதைகளுக்கான கோரிக்கைகளை அனுப்பும் பணியில் ஜரூராகி விட்டேன் ! இப்போதெல்லாம் மொழிபெயர்ப்புகள் & கதைகளின் கோப்புகள்  கைக்குக் கிட்டுவதில் நிறையவே சுணக்கங்கள் நேர்ந்து வருகின்றன - simply becos ஐரோப்பாவில், குறிப்பாக பிரான்சிலும், இத்தாலியிலும் கொரோனாவின் இரண்டாம் அலை போட்டுத் தாக்கி வருகிறது ! ஆகையால் நமது பதிப்பகங்களின் பெரும்பான்மை & இத்தாலிய மொழிபெயர்ப்பாளர்கள் இன்னொரு லாக்டௌனில் உள்ளனர் ! So இயன்றமட்டுக்குச் சீக்கிரமாய்க் கோப்புகளை வரவழைத்து விட்டால், முன்கூட்டியே அட்டைப்பட டிசைனிங் ; மொழிபெயர்ப்பு போன்ற வேலைகளைத் தூங்கி விடலாமல்லவா ? அந்த முயற்சிகளுக்கு உதவியுள்ள நமது first batch சந்தா நண்பர்களுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி !! ஏற்கனவே இவற்றின் முன்னோட்டங்களைப் பார்த்தே கதைத்தேர்வுகளைச் செய்திருந்தேன் என்றாலுமே, முழுசாய் கதைகளை ஒருசேரப் பார்க்கும் போது - கண்ணாடிக் குடுவை நிறைய சோன்பப்டியை நிரப்பிக் கொண்டு 'டிங் .டிங்' என்று மணியடித்தபடிக்கே தெருவுக்குள் போகும் வண்டியை ஒரு 45 வருஷங்களுக்கு முன்னே பார்த்த அதே குஷி கிளம்புகிறது ! அவற்றிலிருந்து சில சுவாரஸ்யங்களே இவ்வாரத்து highlights : 

நமது மறதிக்காரரே பட்டியலில் முதல்வர் ! பத்து நாட்களுக்கு முன்பே கோப்புகள் முழுசாய் வந்திருப்பினும், தீபாவளி பணிகள் + விடுமுறைகளின் மும்முரத்தில் இதனுள் ரொம்பவே தலை நுழைக்க முடியவில்லை ! இந்த வாரத்தில் சாவகாசமாய் அவற்றைப் புரட்டினால் - ஆக்ஷன் + சித்திர அதகளம் பிரித்து மேய்வதைப் பார்த்திட முடிந்தது ! செம இக்கட்டான கட்டத்தில் "தொடரும்" போட்டிருந்த 2132 மீட்டர் இதழுக்குச் சந்தனமும் சளைத்ததில்லை போலும் இந்த பாகம் 27 ! And எனக்கு மனசுக்குப் படுவது - சித்திர தரங்களில் இந்த இரண்டாம் சுற்றின் தயாரிப்புத்தரம்  பிதாமகர் வில்லியம் வான்ஸையே தூக்கிச் சாப்பிட்டு விட்டுள்ளது என்பதே ! Of course - 'அபச்சாரம் ; வான்சோடு ஒப்பிடுவதா ?' என்று புருவங்கள் உயரும் என்பது புரியாதில்லை - ஆனால் இங்கு நான் குறிப்பிடுவது வெறும் சித்திரங்களின் தர அளவுகோல்களை மனதில் கொண்டு அல்ல ! ஒவ்வொரு பிரேமுக்கும் கதாசிரியர் + ஓவியர் கூட்டணியானது அமைக்க உத்தேசித்திடும் ஷாட்களே அந்த ஆல்பத்தின் ஒட்டுமொத்த flow + தரத்தை நிர்ணயிப்பவை ! அந்த விதத்தில் பார்த்தால் புதியவர்கள் 16 அடி பாய்ந்துள்ளனர்  என்பது கண்கூடு ! பாருங்களேன் இந்தச் சித்திர அதகளங்களை !! And எல்லாவற்றையும் விட ஒரு செம ட்விஸ்ட் இந்த ஆல்பத்தின் இறுதியில் காத்துள்ளது ! So இந்த இரண்டாம் சுற்று இத்தோடு முற்றுப் பெறுவதாகவெல்லாம் இல்லை ; டாப்கியரில் ஆல்பம் 28-ம் அடுத்த டிசம்பரில் வரும் போலும் !! 


பார்ட்டி # 2 கூட நமக்கு ரொம்பவே அறிமுகமானவரே & ஓவியர் வில்லியம் வான்சுக்குமே இங்கு சம்பந்தமுண்டு ! Yes - முதலைப்பட்டாளமும், ப்ருனோ ப்ரேஸிலும் ஒரு புத்தம்புது அவதாரத்தில் மறுவருகை காண்கின்றனர் ! சாகச வீரர் ரோஜர் 2 .0 ; ரிப்போர்ட்டர் ஜானி 2 .0 போல - இது ப்ருனோ 2 .0 ! ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னமே இந்த முயற்சியின் துவக்க ஆல்பம் வெளிவந்துள்ளது ! அது பற்றி அப்போதே திருவாய் மலர்ந்தேனா ? என்ற நினைவு இல்லை ; so at the risk of sounding repetitive - இதோ அதன் விபரங்கள் ! இம்மாதம் பாகம் # 2 வெளியாகியதால், அவற்றின் கோப்புகளை வாங்கிப் பராக்குப் பார்க்கும் ஆவலை அடக்க முடியவில்லை ! ரகளையான ஆக்ஷன் ; கிட்டத்தட்ட அதே மாதிரியான ப்ருனோ ; புராதனமில்லா கதைக்களம் என்று மினுமினுத்ததால் - சூட்டோடு சூடாய் அவற்றை நமது பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளருக்கு அனுப்பி கருத்துக் கேட்டிருந்தேன் ! "ஏகமாய் ஆக்ஷன் ; its alright as an adventure story !!" என்ற குறிப்பினை  அனுப்பியிருந்தார் ! பற்றாக்குறைக்கு நம்ம ப்ருனோ சார் ஒரு டாடியாகவும் வலம் வருவது போல் கதையோட்டம் உள்ளதாம் ! படைப்பாளிகளிடம் "இந்தத் தொடரும் இனி ரெகுலராக வெளிவருமா ?" என்று கேட்டிருந்தேன் ! அடுத்தாண்டில் இன்னுமொரு சிங்கிள் ஆல்பம் திட்டமிடப்பட்டுள்ளதாம் இந்த வரிசையினில் ! So ஒட்டுமொத்த வரவேற்பிற்குப் பின்பாய் தொடர்வதா ? வேண்டாமா ? என்ற தீர்மானத்துக்கு வருவார்கள் போலும் ! 

MY QUESTION # 1 IS இன்னா பண்ணலாம் இந்தப் புதுப் படைப்புகளை ? இந்த உட்பக்க preview-களைப் பார்த்தபடிக்கே யோசிச்சுச் சொல்லுங்களேன் !  போடலாமே ! என்றால் கலரிலா ? ப்ளாக் & ஒயிட்டிலா ? முதல் பக்கத்தைப் பாருங்களேன் - b&w-ல் கூட தெறிக்கின்றது ! 

பார்ட்டி # 3 கூட நமது சமீபத்தைய தோஸ்த்தே ! அவர் வேறு யாருமில்லை - நமது திடகாத்திர அண்டர்டேக்கர் தான் ! ஏற்கனவே வெளிவந்து விட்டுள்ள ஆல்பம் # 5-ன் முழுமையையும், அதன் க்ளைமாக்ஸ் பாகம் பற்றிய குறிப்புகளையும் அனுப்பியுள்ளனர் ! As always - கதைக்களமும், சித்திரங்களும் மெர்சலாக்குகின்றன ! அடுத்த ஒன்றரை மாதங்களுக்குள் க்ளைமாக்ஸ் ஆல்பமும் ரெடியாகிடும் என்று தெரிவதால் 2021-ல் மனுஷன் மறுக்கா நம்மிடையே களம்காண்பதில் சந்தேகங்களில்லை !  இங்குமே கூட black & white-ல் அனல் பறக்கிறது பாருங்களேன் !! இந்தச் சித்திரங்களது கறுப்பு-வெள்ளை ஒரிஜினல்கள் இந்த வாரம் ஏதோவொரு நற்காரியத்துக்கென ஏலத்திற்கு வந்துள்ளது போலும் ! பெரிய விலைகள் கிட்டியிருக்குமென்று நினைக்கிறேன் !! 



தொடர்வதோ - நமது ஆதர்ஷ 'தல' சார்ந்த சேதி ! Or rather - 'தல' டெக்சின் சகோதரர் சார்ந்த சேதி ! இரவுக்கழுகாரின் குடும்பமே படுகொலை செய்யப்பட்டது பற்றியெல்லாம் இளம் டெக்சின் கதையிட்டங்களில் குறிப்புகளைப் பார்த்திருப்போம் நாம் ! And "சிங்கத்தின் சிறுவயதில்" இதழில் இது பற்றி கொஞ்சம் நிறையவே குறிப்புகளிருந்தன ! இப்போதோ ஒரு படி மேலே சென்றுள்ளனர் போனெல்லியில் - டெக்சின் சகோதரருக்கென ஒரு ஆல்பம் ஒதுக்கியுள்ள வகையினில் ! பாருங்களேன் - அதன் டிரெய்லரை !! "வில்லர்" குடும்பத்துப் பிரதிநிதி எனும் போது நிச்சயமாய் இவர் சோடை போக மாட்டாரென்று தைரியம் கொள்ளலாம் ! 

MY QUESTION # 2 IS : தொடரும் மாதங்களில் இவரையும் நம் அணிவகுப்பினில் இணைத்திடலாமா என்பதே ! What say people ?




Next in line - இன்னொரு ஜாம்பவானே !! நமது evergreen மாயாவியாரே !! பிப்ரவரியில் மாயாவியின் ஒரு black & white தொகுப்பினை இங்கிலாந்தில் அழகாய் மறுபதிப்பிடவுள்ளனர் ! 40 பக்கங்கள் + 40 பக்கங்கள் + 22 பக்கங்கள் + 8 பக்கங்கள் + 8 பக்கங்கள் - என 118 பக்கங்களுடனான ஆல்பமாக இது இருந்திடவுள்ளது ! இதோ - அதற்கென அவர்கள் தயார் செய்துள்ள அட்டைப்படமும் ! 

MY QUESTION # 3 IS : மறுபதிப்புகளே என்றாலும் - சூட்டோடு சூடாய் நாமும் இங்கே துண்டை விரித்திடலாமா folks ? என்பதே !



அடுத்த வரவும் பிரிடிஷ்காரரே & இவரும் நாம் அறிந்தவரே !! என்ன ஒரே வித்தியாசம் - மனுஷன் இப்போது கலரில் மறுபதிப்பு காண்கிறார் ! யெஸ் - ரகசிய ஏஜென்ட் ஜான் ஸ்டீல் போன மாதம் முழுவண்ணத்தில் - 2 சாகசங்கள் கொண்டதொரு ஆல்பத்தோடு வெளிவந்துள்ளார் ! அவற்றுள் ஒரு கதை நாம் ஏற்கனவே திகில் காமிக்ஸில் படித்தது & இன்னொன்று புதுசு ! என் மட்டிற்கு இவர் ஒரு favorite நாயகரே ; ஆனால் நிங்கள் என்ன நினைச்சூ ? என்பதே ஐநூறு டாலர் கேள்வி ! 

MY QUESTION # 4 IS : இந்த பஸ்ஸிலும் ஒரு சீட் போட்டு விடலாமா ? இல்லாங்காட்டி நாங்க நடந்தே வந்துடறோமே ?' என்று சொல்லி விடலாமா ?


அடுத்த 2 கேள்விகளுமே identical & அந்தக் கேள்விக்குரியவர்களுமே பிரிட்டிஷ்காரர்களே & நமக்குப் பரிச்சயமானவர்களே ! முதலாமவர் - துப்பறிவாளர் செக்ஸ்டன் ப்ளேக் !! முத்து காமிக்ஸில் இவரது சாகசங்கள் சில வெளி வந்திருந்தது நினைவிருக்கலாம் ! நாம் இன்னமும் பார்த்திராக் கதைகள் இக்கட நிறையவே உண்டு ! 2021-ல் ஒரு செக்ஸ்டன் ப்ளேக் தொகுப்பினை இங்கிலாந்தில் வெளியிடவுள்ளனர் என்பதால் - இதனில் நமக்கும் ஆர்வம் இருந்திடக்கூடுமா ? என்ற கேள்வி என்னுள் எழுந்தது ! 

அதே போல - நமது துவக்க நாட்களது திகில் காமிக்ஸில் வெளியான அந்தத் திகில் சிறுகதைகள் அனைத்துமே அந்நாட்களில் வெளிவந்து கொண்டிருந்த MISTY எனும் fleetway வாராந்திர இதழினில் வெளியானவைகளே ! கடந்த 2 ஆண்டுகளாகவே அதனில் வந்த தொடர்கதைகளை black & white -ல் மறுபதிப்பு செய்து வருகின்றனர் படைப்பாளிகள் ! இந்தாண்டு வண்ணத்தில், நாம் இதுவரையிலும் கண்ணில் பார்த்திரா 2 திகில் கதைகளோடு ஒரு வின்டர் ஸ்பெஷல் வெளியிடுகின்றனர் ! இதோ அவற்றின் previews : 


MY QUESTIONS # 5 & 6 ARE : 

செக்ஸ்டன் ப்ளேக்குக்கு 'ஜே' போட்றதா ? தொடர்பு எல்லைக்கு அப்பாலிருப்பதா ? 

மிஸ்டி வண்ணக் கதைகள் worth a try என்பீர்களா ? 

இந்த ஞாயிறுக்கு உங்கள் பதில்களே உரமூட்டவுள்ளன என்பதால் - கொசுறாய் ஒரு கேள்வியையும் கேட்டு வைத்து விட்டு நடையைக் கட்டுகிறேனே : அது அம்மிணி அமாயா பற்றியது ! ஏற்கனவே ராணி காமிக்ஸின் உபயத்தினில் உங்களில் பலருக்குப் பரிச்சயமான கதையே என்பதால், கொஞ்சம் தகிரியமாய் இந்தப் புரட்சிப் பெண்ணை (ஹி..ஹி..பில்டப் முக்கியமில்லீங்களா ?) உலவ விட்டேன் ! கோகிலாவின் உபயத்தில் சித்திர சென்சாரும் ; ஏவாஞ்செலின் உபயத்தில் முதல்நாள் 'தளபதி' படப்போஸ்டர்களைப் போல 'சப்பக்..சப்பக்' என வசன பலூன்களை strategic இலக்குகளில் ஓட்ட முடிந்ததாலும் சேதாரமுமின்றி சிரம் தப்பித்த மாதிரியொரு பிரமை எனக்கு ! பற்றாக்குறைக்கு உள்ளாற இருந்த வசனங்களின் பெரும்பான்மையினை, ஒரிஜினலின் ஜாடைகளிலேயே  வர அனுமதித்திருப்பின் செவுளில் நிச்சயம் சத்துக்கள் இறங்காது போயிராதென்பேன் ! ஆனா..வூனா..என்றால் 'உன்னைய கூட்டிட்டுப் பொய் பிள்ளை பெத்துக்க வைக்கப் போறேன் ; இது புல்லை பெத்துக்கும் சென்ட்டர் ; நான் பிள்ளை பெத்துக்கும் மிஷின் இல்லே ' என்ற ரீதியிலேயே இருந்த வசனங்களை படித்த போது ஏதோ பிரசவ ஆஸ்பத்திரிக்குள் நுழைந்த பீலிங்கே வந்தது எனக்கு ! அவற்றை வேறு தினுசாய் மாற்ற என்ன செய்யலாமென்று மண்டையைச் சொரிந்த போது தோன்றியது தான் - பெண்ணியம் பேசச்செய்யும் அந்த வரிகள் ! அவற்றைப் பாராட்டி ஆங்காங்கே ஓரிரு பின்னூட்டங்களை பார்த்த போது 'ஹை' என்றிருந்தது ! 

MY QUESTION # 7 IS : அம்மணி அமாயாவை தொடர்வதா ? Waiting  லிஸ்டில் போட்டு வைப்பதா  ?என்பதே ! 

2021-ன் நிறைவு வரையிலும் அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் - ஒற்றை நாள் ராவினில் இந்தக் கேள்விகளின் பதில்களைக் கொண்டு இந்த நாயக / நாயகியரை உள்ளே எக்கட புகுத்துவதாம் ? என்ற கேள்வி உங்களுக்குத் தோன்றிடலாம் தான் ! Simply put - திட்டமிடல்கள் ஒரு தொடர்கதையே எனும் போது - எவை உங்களுக்கு ரசிக்கின்றன ? ; எவை no no ? என்ற புரிதல் எனக்கிருந்தாலே போதுமானது ; அவற்றை நுழைக்கும் தருணங்களை நான் சந்தர்ப்பங்களுக்கேற்பத் திட்டமிட்டுக் கொள்வேன் ! 

So கேள்விகள் கணிசமான இந்த ஞாயிறை உங்கள் பதில்களோடு தெறிக்க விடுங்கள் ! நான் "கோழைகளின் பூமி" கிராபிக் நாவலுக்குப் பேனா பிடிக்கப் புறப்படுகிறேன் ! 

Bye all ! See you around ! Have a chill Sunday !!

Saturday, November 14, 2020

ஒரு தல + ஒரு தானைத் தலீவர் !!

 நண்பர்களே,

வணக்கம். தீபாவளியின் ஒளி வெள்ளம் இல்லங்களிலெங்கும் பரவட்டும் ; நலமும், வளமும், மகிழ்வும் இனித் தொடரும் நாட்களில் நமதாகிட வேண்டிக் கொள்வோமே folks !! 

இம்மாதத்துப் புஷ்டியான கூரியர் டப்பிகள் ஒரு மாதிரியாய் அனைவருக்கும் கிடைத்து விட்டது போலத் தெரிவதால், இந்தப் பண்டிகை தினத்துக்கு நமது உழைப்பின் பலன்கள் உங்கள் இல்லங்களை அலங்கரிக்க வேண்டுமென்ற எங்கள் அவா பூர்த்தி கண்டுள்ளதென்பேன் ! மாதத்தின் முதல் நாளே புக்ஸை அனுப்பியிருப்பின், பண்டிகை நேரத்துக்கு அது ஆறிப் போன ராயர் கடை தோசை போலாகியிருக்கும் ! இப்போதோ அந்தச் சிக்கலில்லை ; L&T சிமெண்டுக்குப் போட்டி தரவல்ல உறுதியான சீடைகளையும், முறுக்குகளையும் தட்டில் போட்டுத்தரும் இல்லத்தரசிகளிடம் "ஏ..ஜுப்பரு !!"  என்று வழிவதை  - இப்டிக்கா அமாயாவோடோ ; யுலாவோடோ தொடரவும் செய்யலாம் ! 'மொடேர் ..மொடேர்...' என பக்கத்துப் புதுவீட்டுக்காரன் வெடிக்கும் வெடிகளின் முன்னே நம்ம போடும் வெங்காய வெடிகள் 'புஸ்க்..புஸ்க்.." என பூனைக்குட்டியாட்டம் முனகுவதை மறக்க நினைத்தால் Tex & டீமோடு களமிறங்கினால் போதும் - ஒரு தோட்டாக் கச்சேரியே அரங்கேறிடும் மனசுக்குள் ! பண்டிகை நாளுக்கு டி-வியில் போடும் படம் மொக்கை போட்டால் - no worries ; பருந்து சர்ப்பத்தில் ஏறி ஜிலோன்னு ஆஜராகும் நம்ம ஸ்நேகிபாபு  கூட  பொழுதைக் கழிக்கலாம் ! So இந்த மாதத்துக் கூட்டணி உங்களின் தீபாவளிக் கொண்டாட்டத்தின் ஒரு அங்கமாகிடுவதில் நாங்க ஹேப்பி !!

பால்ய நினைவுகளைக் கிளறும் ஒரு சூப்பர் ஹீரோ ; ஒரு sci-fi ரக ஒன் ஷாட் ; ஒரு புயட்சிக்கார அம்மிணி + ஒரு towering சூப்பர் ஸ்டார் என்பதே இம்மாதத்து இதழ்களின் தொகுப்பு எனும் போது - இங்கே ஒளிவட்டம் முதலாமவர் + இறுதியானவர் மீதே பாயும் என்பதில் ஐயங்களில்லை ! நம் பால்யங்களது சூப்பர் ஸ்டாரும், இன்றைய சூப்பர் ஸ்டாரும் இதற்கு முன்பாய் ஒரே மாதத்தில் இதுபோல் கரம் கோர்த்து வந்துள்ளனரா ? என்று யோசிக்க முயற்சிக்கிறேன்.....NO என்றே எனக்குத் தோன்றுகிறது ! So முதன்முறையாக இரு மாஸ் நாயகர்கள் ஒருசேர கெத்து காட்டும் மாதமிது என்பதும் ஒரு சன்னமான highlight தானே ? 

எது எப்படியோ - இந்த வாரத்தின் இதுவரையிலுமான 5 நாட்களுமே நம் அலுவலகத்தினில் தீபாவளி தான் !! இந்த கொரோனா தாண்டவங்களும் ; லாக்டௌன் கூத்துக்களும் துவங்கிய காலம் முதலாகவே நான் ஆபீசுக்குச் செல்வது என்பது - கார்சன் புலம்பாமல் இருப்பதற்குச் சமமான அரிய நிகழ்வாகி விட்டுள்ளது ! அதற்கு மீறிப் போனாலுமே மதியமாய்ப் போய் விட்டு, மாலைக்குள் திரும்பி, வீட்டுக்குள் அடைந்து கொள்வது வழக்கம். ஆனால் இந்த டெஸ்பாட்ச் தினத்  திங்களன்று காலையே ஆபீசுக்கு வந்து விட்டிருந்தேன் - சிலபல ஸ்பாஞ்கேக் டப்பிகளைப் பார்வையிடவும், உங்களின் பார்சல்கள் ஏக் தம்மில் புறப்படத் தயாராகிடும் மும்முரத்தை ரசித்திடவும் ! பேக்கிங்  நடந்து கொண்டிருக்கும் போதே ஆரம்பித்த செல்போன் ரணகளங்களை நானே நேரில் பார்த்திராவிடின் நம்பியிருக்க மாட்டேன் !! இரண்டு செல் போன் நம்பர்கள் + 1 லேண்ட்லைன் நம்பர் - என மூன்றுமே ஏக காலத்தில் போட்ட கூப்பாடுகளை நம்மாட்கள் ஆளுக்கொன்றாய் காதுகளுக்குள் செருகியபடி கவனித்துக் கொண்டே - மறுபக்கம் டப்பாக்களை பிரிக்கவும், ஒட்டவுமாய் இருந்தனர் ! நான் ரூமுக்குள்ளாற குந்திக் கிடக்க முயற்சித்தாலும் முன்னே கேட்டு வந்த களேபரங்களை ஒட்டுக்கேட்கும் ஆர்வத்தை அடக்கில்லா !! கிட்டத்தட்ட அத்தனை அழைப்புகளுமே - "இப்போவே பணம் போட்டு விட்டுடுறேன் ; இன்னிக்கே தீபாவளி மலர் புக்கை அனுப்பிடலாமா ?" என்றோ ; "சந்தாவிலே ஏற்கனவே  இருக்கேன் ; 90 ரூபாய் இப்போ போட்டு விடறேன், ஸ்பைடர் புக்கையும் சேர்த்துப்புடலாமா ? " என்ற ரீதியினில் தான் !! And நம்மவர்களையும் சும்மா சொல்லக்கூடாது சாமியோவ்  ; பிரவாகமெடுத்து ஓடும் தக்காளிச்சட்னிக்களை துடைத்துக் கொண்டே முகத்தில் புன்சிரிப்புகள் மாறாது பதில் சொல்லிக் கொண்டே இருந்தனர் ! போனை வைத்த கணத்தில் நோட்டில் அந்த விபரத்தைக் குறித்துக் கொண்டே, மறுக்கா பேக்கிங்கில் மும்முரமாகிட முனைவதற்குள் "அலோ...பிரபா ஒயின்சா ?" என்று அடுத்த அழைப்பு துவங்கியிருக்கும் ! 

இதனிடையே நமது ஏஜெண்ட்களோ - "தீவாளி மலராச்சும் இன்னிக்கே பண்டல் போட்டிருவியளா அண்ணாச்சி ?" என்று பிரித்து மேய்வதும் அரங்கேறியது ! இந்த லாக்டௌன் இடர்கள் துவங்கிய பிற்பாடு நமது விற்பனைகளில் சுணக்கம் ; வசூல்களில் தேக்கம் ; ஆன்லைன் விற்பனையினில் மந்தம் என்று ஏகப்பட்ட "ம்ம்ம்ம்ம்"கள் ஆக்கிரமித்திருந்தது பற்றிப் புலம்பியிருக்கிறேன் தான் !   அக்டோபர் துவக்கத்தினில் நமது ஆன்லைன் புத்தக விழாவின் போது முதல் முறையாய் ஒரு வெளிச்சக் கீற்று லேசாய் கண்ணில்பட்டது ! And இதோ - இந்த நவம்பரின் ஒரு திங்கட்கிழமையன்று பிடரியில் சாத்தி ஊர்ஜிதம் செய்துள்ளீர்கள் நம் காமிக்ஸ் நேசத்தினில் all is well என்று ! நிறையவே தொழில்கள் நசிந்து நிற்கின்றன தான் ; நிறையவே பணிகள் காற்றோடு கரைந்துள்ள தான் ; நிறையவே பதில்களை விடவும், நிறையவே கேள்விகளே நம் முன்னே நிற்கும் தருணமிது தான் ; ஆனால் இந்த இடர்களுக்கு மத்தியிலும் உங்களின் பொம்மை புக் காதல்களோ ; நம் மீதான அக்கறைகளோ - கிஞ்சித்தும் சேதம் கொண்டிருக்கவில்லை என்பதை அழுத்தம் திருத்தமாய் பதிவு செய்து விட்டுள்ளீர்கள் folks - நானூற்றி நாற்பத்தி ஏழாம் தபாவாக ! 

And சகலத்துக்கும் க்ரியாஊக்கியாய் நின்று, எவ்விதச் சூழலிலும் நம்முள்ளே உற்சாகத்தைக் கொப்பளிக்கச் செய்து வரும்  ஒற்றை உருவம் - TEX என்ற பெயருக்குப் பதில் சொல்லும் ஜாம்பவான் என்று சொன்னால் அது சத்தியமாய் hype கிடையாது ! கடைசியாய் ஆபீசில் இது மாதிரியான பரபரப்பை நான் பார்த்தது "டைனமைட் ஸ்பெஷல்" வெளியான தருணத்தினில் தானென்பேன் ! இதில் மெகா கூத்து என்ன தெரியுமோ ? வளர்ந்த பெரும் புள்ளிகளான நாமெல்லாமே திடு திடுப்பென பாலக அவதார்களெடுப்பதன் காரணங்கள் நம் அலுவலகத்தினில் உள்ள எவருக்குமே புரிந்திடாது என்பதே !! Simply becos இக்கட யாருமே அடைமழைக்கு கூட காமிக்ஸ் எனும் குடையின் கீழே ஒதுங்கிடும் பழக்கம் கொண்டோரில்லை ! "நானும் இது வரைக்கும் ஏதாச்சும் ஒரு புக்கையாவது படிக்கணும்னு பாக்குறேன் சார் ; ஆனா 4 பக்கத்தைத் தாண்டுறதுக்குள்ளாற தூக்கம், தூக்கமா வருது !" என்பதே அவர்களின் ஏகோபித்த பதில்கள் ! So "நாலே பக்கங்களில் சயனத்தை சாமரம் வீசி வரவேற்கும் சமாச்சாரங்களுக்கோசரம் அமெரிக்காலேர்ந்து கூப்பிடுறாங்க ; ஆஸ்திரேலியாவிலிருந்து கூப்பிடுறாங்க ; லட்ச ரூபாயைத் தூக்கி அனுப்புறாங்க ; விடிய விடிய பின்னிப் பெடல் எடுக்கிறாங்களே ..?!! என்று பெண்பிள்ளைகளின் மைண்ட்வாய்ஸ்கள் ஓடாது இருந்தால் தான் வியப்பே ! திங்கள் மாலையில் நம்மாட்கள் வீடு திரும்பிய போது அத்தினி பேருமே 'மிருதன்' படத்தில் வந்த zombies போலவே இருந்தனர் என்பதனில் வியப்பே இருக்கவில்லை எனக்கு ! 

செவ்வாயும் வந்தது - இன்னமுமே வீரியமாய் அலறும் தொலைபேசிகளோடு !! "எனக்கு கூரியர் இன்னும் வரலே !! டிராக்கிங் நம்பர் இருக்கா ? அங்கேயே டப்பா கிடக்கான்னு பாருங்களேன் !! " என்ற பெரும்குரல்கள் நாள் முழுக்கவே தொடர்ந்தன ! இன்னொரு பக்கமோ "கேட்லாக் தனியா விலைக்குத் தருவீங்களா ? வின்டர் ஸ்பெஷல் இன்னொரு புக் தருவீங்களா ?" என்ற ரீதியில் புதிரான கேள்விகளும் !! குடு குடுவென ஆள்மாற்றி ஆள் என் அறைக்கு ஓடி வருவர் - ஒவ்வொன்றுக்கும் என்ன பதில் சொல்வதென்ற வினவல்களோடு ! And செவ்வாயன்று இன்னொரு சந்தோஷ அத்தியாயத்தையும் பார்க்க முடிந்தது !! இந்த இன்னல்மிகு நாட்களில் கரைந்து போயிருந்த முகவர்கள் பலரும் - ஒருவர் பின் ஒருவராய் போனில் அழைத்து - "ஏதோ தீவாளி மலர் பொஸ்தவம் வந்திருக்கலாம்லே மக்கா ? யே...அது என்ன வெல ? பழைய பாக்கிலே பாதியே இன்னிக்கு போட்டுவிடுறேன் ...அந்த புது பொஸ்தவத்தைப் போட்டு விட முடியுமா ?" என்ற கோரிக்கைகள் ! சத்தியமாய் டெக்ஸ் என்ற அந்த அசாத்தியனைத் தாண்டி வேறு யாருக்கும் இத்தகைய ஜாலங்களைச் செய்திடும் ஆற்றல்கள் இருக்குமென்ற நம்பிக்கை எனக்கில்லை ! Oh yes - துக்கனூண்டு சட்டிக்குள் தம்மாத்துண்டு குதிரையையே ஒட்டுகிறோம் நாம் ; so ஏழரைக்கோடி ஜனத்தின் சார்பில் ஏதோ நிஜமான 'தல'க்குரிய பில்டப்களை தருவது போல் நான் எழுதுவது போங்காகத் தென்படலாம் தான் ; காமிக்ஸ் வாசனையறியா வட்டத்தினிடம் "டக்ஸ் வில்லரோ...டெக்ஸ் வல்லரோ' வீசம்படிப் பரிச்சயம் கூட இல்லாப் பெயராகவே தொடர்ந்திடும் தான் ; ஆனால் இந்தக் குட்டி வட்டத்தைப் பொறுத்தவரையிலும் யார் சாம்ராட் ? என்பதில் கிஞ்சித்தேனும்  சந்தேகங்கள் இருந்திருப்பின், இத்தீபாவளி வேளையானது அதனைப் பூரணமாய் நிவிர்த்தித்து விட்டது !

புதனன்றோ ஆன்லைன் ஆர்டர்கள் ஒரு சமீப உச்சத்தைத் தொட்ட நாள் ! Of course - கோவிடுக்கு முந்தைய நாட்களின் விற்பனைகளை இன்னமும் பெருமூச்சுகளோடே தான் பார்த்து வருகிறோம்  ; ஆனால் புதன்கிழமையின் அதகளம் பழைய நாட்களுக்கு  ரொம்பத் தொலைவினில் இருந்திடவில்லை ! கை கடுக்க செய்த பேக்கிங் முடிந்து மாலை கூரியருக்குச் சென்ற டப்பிக்கள் ஒரு குட்டியான LIC உசரம் இருந்தன ! And அவற்றுள் முக்கால்வாசி டப்பிக்கள் 'தல' + தானைத் தலீவர் கூட்டணிகளே !!

வியாழனுமே பழைய நினைவுகளை ; ரொம்பவே பழைய நினைவுகளைக் கிளறிய நாளாக அமைந்தது - முகவர்களின் புண்ணியத்தில் ! நமது ஆரம்ப நாட்களில் ஸ்பைடர் புக்ஸ் கடைக்குப் போன இரண்டாம் நாளே - அரக்கப் பரக்க போன் வந்திடும் - "யே..இன்னொரு அம்பது புக்கை போட்டு விடு...நூறு புக்கை அனுப்பு !" என்ற ரீதிகளில் ! மறந்தே போயிருந்த அந்த நடைமுறையை வியாழனன்று பார்க்க முடிந்தது - 'தல' தீபாவளி மலருக்கு கிட்டிய அதிரடி repeat ஆர்டர்கள் மார்க்கமாய் ! "தெய்வமே...லாரி ஷெட் எல்லாமே பூட்டியாச்சு ; இனிமே  திங்கள்வரைக்கும்    பண்டல் வாங்க மாட்டாங்க !!" என்று அண்ணாச்சி விளக்க முற்பட்டாலும் - "எப்பிடியாச்சும் அனுப்புங்க ப்ளீஸ் !!" என்ற ஆதங்கக் கோரிக்கைகள் ! முடிந்த கரணங்களை அடித்துக் கொண்டிருக்கும் அந்த மாலையே ஓசையின்றியொரு கனக்குப் பார்க்கச் செய்தேன் - "தீபாவளி with டெக்ஸ்" இதழின் விற்பனை & கையிருப்பு குறித்து !! இந்த மே முதலாகவே கழுதையின் அளவிலான நமது பிரிண்ட்ரன்னை கட்டெறும்பாக்கியுள்ளோம் தான் ; இந்த ஒற்றை ஆண்டினில் பெருசாய் costing ; கத்திரிக்காயெல்லாம் பார்த்திட வேண்டாம் ; குடவுனை நிரப்பாது இருந்தாலே உத்தமம் ! என்று தீர்மானித்திருந்தேன் தான் ! அந்த பாலிசிபடியே இம்மாத புக்ஸ் நான்குமே குறைந்த பிரிண்ட்ரன்னேகொண்டிருந்தன தான் ; ஆனால் surprise ..surprise ...."தீபாவளி மலர்" நடப்பாண்டின் இறுதியைத் தாண்டியும் கையிருப்பில் இருப்பின், நான் ரொம்பவே ஆச்சர்யம் கொள்வேன் என்பதே நிலவரம் !! ரொம்ப ரொம்ப நாளாகிவிட்டது இதுபோலொரு நிகழ்வைப் பார்த்து  - எனும் போது வியாழன் மாலை மழையில் நனைந்தபடிக்கே வீடு திரும்பும் போது - இளையராஜாவின் மெட்டுக்கள் பேக்கிரவுண்டில் ஒலிப்பது போலிருந்தது ! 

வெள்ளிக்கிழமை புலர்ந்ததோ நம்மாட்களுக்கு தீபாவளி போனஸ் என்ற சந்தோஷங்களோடு ! சமீப மாதங்களில் இரண்டாம் முறையிது - நண்டு பிடிக்க அவசியங்களின்றி, சம்பளங்களை ; இன்ன பிற பட்டுவாடாக்களை செய்திட சாத்தியப்பட்டது !  And நண்பர் PFB அனுப்பியிருந்த தொகையினையும்  ஆளுக்கொரு பங்காய்ப் பிரித்துத் தந்த போது ஒவ்வொருத்தரின் முகங்களிலும் வெகுகாலத்துக்குப் பின்பாய் சன்னமான வெளிச்சங்கள் ! அக்டோபர் முதல் தேதியிலிருந்தே நம்மவர்களை தினமும் பணிக்கு வரச் செய்யும் நடைமுறை சாத்தியமாகியிருந்தது - ஆன்லைன் புத்தக விழாவின் எதிர்பாரா வெற்றியின் உபயத்தில் & முறையாய் போனஸ் போடவும் இப்போது சாத்தியப்பட்டிருக்க - 'தல' வசிக்கும் இத்தாலியை நோக்கியொரு வணக்கம் போட்டால் தப்பே இல்லையென்று பட்டது ! 'ரைட்டு..மதியம் 2 மணிக்கு எல்லாரும் கிளம்புங்க ; கூட்டத்துக்குள்ளே கடைவீதிகளில் திரியாதீங்க ; மாஸ்க் போடுங்க !" என்றபடிக்கே ரூமைப் பூட்டிவிட்டு நான் கிளம்ப எத்தனித்த கணத்தில் ஒரு முரட்டு பெட்டியைத் தூக்கிக் கொண்டு வந்தான் AMAZON கூரியர் பையன் ! "இது என்னாது ???" என்றபடிக்கே பார்சலை உடைத்தால் - phewwwwwwww !!! 15 காட்பரி சாக்லெட் gift boxes !!! சென்னை சூளைமேட்டிலிருந்து நண்பர் சத்ய சாய்நாத்தின் அன்புடன் !! (சத்யாவுக்கு  கால்வினும் பிடிக்கும் ; காமிக்ஸ்சும் புடிக்கும்). மிரண்டே போய் விட்டோம் இந்த அன்பின் பிரவாகத்தினில் !! 

ஆளுக்கொரு டப்பாவை ஒப்படைத்த போது உள்ளுக்குள் இனம்புரியா உணர்வுகள் - இத்தனை அன்புக்கும், நேசத்துக்கும் நாம் அருகதையானவர்கள் தானா ? என்று ! வீட்டுக்குப் புறப்பட்ட நம்மவர்களின் கைகளில் பளபளக்கும் சாக்லெட் டப்பாக்கள் இடம்பிடிப்பதை இமைதட்டாது பார்த்துக் கொண்டே நின்றவனுக்கு வீடு திரும்ப நேரமாகியது !! "Thanks a ton " என்று மட்டும் சொல்லி இந்தாண்டினில் நீங்கள் ஒவ்வொருவரும் ஏதேதோ ரூபங்களில் நம்மை நனைத்துவரும் அன்பிற்கு நியாயம் செய்திடவே இயலாது என்பது சர்வ நிச்சயம் ! பணமோ ; பொருளோ ; ஆதரவான வார்த்தைகளோ ; நம் நிலைகளின் புரிதல்களோ ; இதழ்கள் சார்ந்த சிலாகிப்புகளோ ; சந்தக்களோ ; முன்பதிவுகளோ - ஒரு பேரிடரின் மத்தியில்  இவை சகலமுமே  தங்கத்துக்கு நிகரானவை !! And இந்த அன்பின் பரிமாற்றங்களுக்கு பட்டிருக்கும் கடன்களை வெறும் வாய் வார்த்தைகளின் ஜாலங்களை தாண்டி எவ்விதம்  சமன் செய்யப்போகிறேனோ - புனித மனிடோவுக்கே வெளிச்சம் !!   

'அட..போங்கப்பா,,,,இந்தக் கூட்டத்துக்குள்ளாற போயி எந்தப் புதுத் துணிய வாங்க ? இந்த வருஷம் புதுசில்லாமலே பண்டிகையைக் கடப்பதில் தப்பில்லை !" என்று இருந்தவனுக்கு சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சியே தமன்னாவோடு ஒரு செம டான்சைப் போட்டபடிக்கு வீட்டு வாசலுக்கே கடையைக் கொணர்ந்துவிட்டது போலொரு சந்தோஷம் இந்த நொடியினில் அலையடிக்கிறது ! ஒரு கோடி ரூபாய் ஈடாகாது guys உங்கள் அன்பு கொணரும் இந்த மன நிறைவுக்கு ! நம் சார்பிலும், நம்மவர்கள் சார்பிலும் , 'தல' சார்பிலும் ; தானைத் தலீவர் சார்பிலும் - சந்தோஷ தீபாவளி நல்வாழ்த்துக்கள் folks !! ஆண்டவன் அருளட்டும் இந்த நேசம் நாளும் தொடர்ந்திட !! Have a Safe & Fun filled Diwali all !! See you around ! Bye for now !!



Monday, November 09, 2020

தீபாவளி வந்தாச்சூ !!

 நண்பர்களே,

வணக்கம். "தீபாவளி வாரமிதுடோய்" என்பதை அழுத்தம் திருத்தமாய் உணர்த்தும் விதமாய் தெறிக்கத் துவங்கிவிட்டுள்ளது சிவகாசி பஜார் ! And நம் பங்குக்கு குண்டு குண்டான கூரியர் டப்பிக்கள் சகலத்தையும் இன்றைய பகலில் அனுப்பிய கையோடு - அவற்றை இன்றைய லோடிலேயே ஏற்றுவதை உறுதி செய்ய அக்கடவே காவல் நின்று வருகிறோம் ! Maybe புதன்கிழமை வரையிலும் கூரியர் புக்கிங்குகள் வாங்குவார்களென்று தோன்றுகிறது ; அதன் பின்பான பார்சல்கள் எல்லாமே தீபாவளிக்குப் பின்னே தான் இங்கிருந்து புறப்படும் போலும் ! So ஆன்லைனில் ஆர்டர் செய்திட எண்ணும் நண்பர்கள் இந்த ஒருமுறை மட்டும் தாமதிக்க வேணாமே - ப்ளீஸ் ! 

ஸ்பைடரும் சேர்ந்த 4 புக்ஸ் கூட்டணியானது - DIWALI '20 Pack என்ற பெயரில் லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது : 

https://lioncomics.in/product/2020-diwali-pack/

https://lion-muthucomics.com/latest-releases/649-2020-diwali-pack-.html

"ஸ்பைடர் வேணாம்" என்போருக்கும் ; ஏற்கனவே அதற்குப் pre-booking செய்துவிட்டோருக்கும், ஸ்பைடர் இல்லாத 3 இதழ்கள் "NOVEMBER '20 Pack" என்ற பெயரினில் இருந்திடும் : 

https://lioncomics.in/product/2020-november-pack/

https://lion-muthucomics.com/latest-releases/650--2020-november-pack.html


So ஒரு வழியாய் எங்களின் அந்தப் 17 நாள் மெகா குட்டிக்கரணங்களின் பலன்களை  உங்களிடம் ஒப்படைத்தாச்சூ !! நாளையோ, மிஞ்சிப் போனால் அதன் மறு நாளோ உங்களை அவை எட்டிப்பிடித்திட வேண்டும் ! சூட்டோடு சூடாய் புக்ஸைப்  படிக்க  நேரம் ஒதுக்குவது சிரமமே என்பது புரிகிறது ; maybe புரட்டிப் பார்க்க ; தடவிப் பார்க்க ; மேலோட்டமாய் ஒரு வாசிப்பு விட முனைந்திட்டால் தொடரும் நாட்கள் இங்கு சுவாரஸ்யமாகிடும் ! 

அப்புறம் போன மாதத்து early birds-களுக்கு வாக்குத் தந்தபடியே ஸ்பாஞ் கேக்குகளும் ; ப்ளம் கேக்குகளும், இன்றைக்கு புறப்பட்டாச்சு ! இம்முறை - இந்தப் பண்டிகை மாதத்து மெகா டெக்சினுள் முந்திக்கொண்டு மண்டையை நுழைப்போர்க்கு கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நெய் மைசூர்பாகைப் போட்டுத் தாக்கிடலாமா ?  Sweet Reading folks !!

Saturday, November 07, 2020

938 !!

 நண்பர்களே,

உஷார் : நெம்ப பொறுமையுடையோருக்கு மாத்திரமே இது !! பாக்கிப்பேர் அட்டைப்படங்களையும், preview-க்களையும் பார்த்த கையோடு அமெரிக்க எலெக்ஷன் காமெடிகளை ரசிக்கக் கிளம்பிடலாம் ! Don't tell me that I didn't tell you !!

வணக்கம். மிக்ஸி… க்ரைண்டர்ளோடு மட்டுமே பரிச்சயம் கொண்ட புதிய தலைமுறையினராக நீங்கள் இருந்திடும் பட்சத்தில், அந்தக் காலங்களது ஆட்டுஉரல்களை நீங்கள் பார்த்திருக்க வாய்ப்புகள் குறைச்சல் தான் ! Ditto with அம்மிக்கல் ! ஒரு காலத்தில் இவையின்றி சமையலறைகளே இயங்கிடாது ! ரைட்டு… "அது எதுக்குடா அம்பி இப்போ ?” என்ற கேள்வியா ? சின்ன வயதுகளில் தாத்தா-பாட்டி-அப்பச்சி வீடுகளிலோ ; ஏதேனும் படங்களிலோ ; வாசிப்புகளிலோ இந்தக் கனமோ கனமான வஸ்துக்களை நீங்கள் சந்தித்திருந்தால் அந்த நினைவுகளைச் சேகரித்துக் கொள்ளுங்கள் ! அது தான் Step # 1 ! பிடாரியாய்க் கனக்கும் அந்த ஆட்டு உரலை தலைச் சுமையாய் ஏற்றிக் கொள்வது Step # 2. வலது தோளில் அம்மிக்கல்லைக் கட்டித் தொங்கச் செய்வது Step # 3 ! இடது புஜத்தோடு அம்மிக் குழவியைக் கோர்த்து விடுவது Step # 4. "அட… முதுகுப் பக்கம் காலியாத் தானே கீது…? உரலுக்கான உலக்கையைக் கட்டிப்புடலாம் !" என்பது Step # 5. இவை ஐந்தையும் செய்த கையோடு – “டேய் தம்பி… பார்த்துப் பத்திரமா 3 வாரத்திலே இதையெல்லாத்தையும் கொண்டு போய் புள்ளீங்க வூட்டிலே சேர்த்துப்புடணும் ! தீவாளிக்குப் பலாரம் சுடணுமாம் !” என்று ஒரு சுமாரான உடம்புக்காரனை வழியனுப்புவதை visualize செய்து கொள்ளுங்களேன் - Step # 6 பூர்த்தியாகிவிடும் !  And கடந்த 3 வாரங்களாய் இவ்விடம் நான் / நாங்கள் அடித்து வரும் கூத்துக்கள் பற்றி லேசாய் ஒரு ஐடியா கிடைத்திட மேற்படி 6 ஸ்டெப்கள் ரெம்போவே உதவிடும் என்பேன் ! 

ஆரம்பிச்சுட்டான்டா… பீற்றல் படலம் # 774’ என்று தோன்றுகிறதா folks ? On the contrary இது பீற்றல் புராணமேயல்ல… கழன்று போனதொரு புஜம் சார்ந்த புலம்பல் புராணம் ; and ஒரு  ஓமக்குச்சி நரசிம்மன் சைசிலான டீம் விஸ்வரூபமெடுத்து சுமோ மல்யுத்த வீர்களின் சாகசங்களை செய்திட்ட பெருமிதக்  கதை  ! இதன் துவக்கம் மே மாதத்தினில் ஒரு சுபமுகூர்த்த லாக்டௌன் தினத்தில் நமது DTP அணியின் முக்கியச் சக்கரமான கோகிலா திருமணமாகிக் கிளம்பிச் சென்று விட்டதில் இருந்து எனலாம் ! தவிர்க்க இயலா சந்தோஷ வாழ்க்கை முன்னேற்றமது என்பது புரிந்தது ; ஆனால் நமது பணிகளில் ஒற்றை நாளில் விழுந்த சுணக்கங்களின் பரிமாணங்கள் தொடரும் நாட்களில் தெரிந்தனவோ – இல்லையோ - இதோ இந்த தீபாவளியின் நவம்பரின் போது அசுரத்தனமாய், விஸ்வரூபமெடுத்துத் தெரியத் துவங்கி விட்டன ! To her lasting – credit – நமது DTP அணியின் இன்னொரு அங்கமான இவாஞ்சலின், post lockdown பணிகள் மறுதுவக்கம் கண்ட ஜுன் முதலாய் – ஒற்றையாளாய் இத்தனை மாதங்களது பணிகளையும் சமாளித்து வந்திருக்கிறார் ! கிட்டத்தட்ட கடந்த 5 மாதங்களாக அத்தனை ஞாயிறுகளிலும்  நமது அலுவலகத்தில் DTP பணிகள் ஓடிவந்துள்ளன…! வாரத்தின் ஏழு நாட்களும் பணிகளே ; மாதத்தின் முப்பது நாட்களும் பிசியே ! 

And then approached நவம்பர் !!!!

ஒவ்வொரு மாதமுமே ‘இழுத்துக்கோ-பறிச்சுக்கோ‘ என்ற கதையாய் வேலைகள் நிறைவுற்று வந்த நிலையில் – என் அடிமனசில் நவம்பர் சார்ந்த பீதி ஏகமாய்க் குடி கொண்டிருந்தது ! 672 பக்கங்கள் ‘டெக்ஸ் தீபாவளி மலரில்‘ மட்டுமே எனும் போது, இங்கே செமத்தியாய் மாட்டுவோம் என்பதை ஷெரீப் டாக்புல் கூட யூகித்திருக்க முடியும் தான் ! 'ஏன்டா  பேமானி - அது தான் தெரியுதுலே ? வேலைக்கு இன்னொரு ஆளை போட்டா என்னவாம் ?" என்ற மைண்ட்வாய்சா ? சிக்கலே வேலைக்குப் புதிதாய் பணியாட்களைத் தயார் செய்வதில் தான் இருந்து வருதுங்கண்ணா ! படித்து முடித்த கையோடு “டிசைனிங் தெரியும் சார்… Photoshop தெரியும் சார்!” என்று ஆர்வமாய் விண்ணப்பிப்போர்க்குப் பஞ்சமேயில்லை தான் ; ஆனால் தமிழில் டைப்பிங் ; வண்டி வண்டியாய் – லோடு லோடாய் டைப்பிங் என்பதைப் பார்த்த கணத்தில் தெறித்து ஓடுபவர்களை உசேன் போல்ட்டால் கூடத் துரத்திப் பிடிக்க இயலாது என்பேன் ! அதற்கு மீறி இரண்டோ – மூன்றோ நாட்களுக்குப் பணி செய்ய வருவோர் – மூணாம் நாளே ‘கண்ணெல்லாம் இருட்டிக்கிட்டு வருது சார்‘ என்றபடிக்கு ஜகா வாங்கிடுகின்றனர் ! “டமில்” “டமில்” என்று எத்தனை மேடைகள் போட்டு ; ஸ்பீக்கர் கட்டிப் பேசினாலும் – நம் புதிய தலைமுறைக்கு அதன் மீதுள்ள பாசம், பரீட்சைகளில் பாஸாவதைத் தாண்டி பரவலாய் இருப்பதில்லை என்பதே என் மட்டிலான observation ! So மேற்கொண்டு ஆள் கிட்டும் வரையிலும் ஒத்தாசை செய்யும்படி கோவையில் செட்டிலான கோகிலாவிடம் குடலை உருவும் படலத்தைப் போன மாதமே துவக்கியிருந்தோம் !

 ஆட்டு உரலின் கதை :

தீபாவளி with டெக்ஸ் ! 2 மாக்ஸி நீளத்து டெக்ஸ் ட்ரிபிள் ஆல்பங்கள் – so மொத்தமாய் 640 + பக்கங்கள் !! சரியாக மூன்றரை  வாரங்களுக்கு முன்னே இதனைக் கையில் எடுத்த போதே நான் தீர்மானித்திருந்தேன் – புக்ஸ் டெஸ்பாட்ச் இம்முறை நவம்பர் 10-க்கு முன்பாகவே இருந்தி்ட வேண்டுமென்று ! And இது ஹார்ட்கவர் பைண்டிங் எனும் போது, சுத்தமாய் ஒரு வாரம் பைண்டிங்கிற்கே அவசியமாகிடும் ! So நிதரிசனமாய்ப் பார்த்தால் பதினேழு நாட்களிலிருந்தன – நவம்பரின் 906 பக்கங்களையும் டைப்செட் செய்து ; எடிட்டிங் செய்து ; அச்சிட்டு ; பைண்டிங் முடித்து ; மாமூலான மறந்து போன சமாச்சாரங்களுக்கோசரம் ஸ்டிக்கர்களும் ஒட்டி ; டப்பிக்குள் அடைத்து அவற்றை டெஸ்பாட்ச் செய்தி்ட !! And இந்த மொத்தக் கூத்தையும் அரங்கேற்ற நம் வசமிருந்ததோ - 75 அகவைகளைக் கடந்ததொரு மொழிபெயர்ப்பாளர் ; ஒற்றை DTP பணியாளர் ; ஒற்றை ஆல்-இன்-ஆல் அழகுராஜா & ஒற்றை முழியாங்கண்ண எடிட்டர் plus நமது front office !! குட்டிக்கரணங்கள் நமக்குப் புதிதேயல்ல தான் ; ‘மூன்றாம் பிறை‘ கமலஹாசன் பிச்சையெடுக்குமளவுக்கு ரக ரகமாய் ; விதவிதமாய் ; வீதி வீதியாய்க் கரணங்கள் போட்டிருக்கிறோம் தான் ! ஆனால் இம்முறையோ முற்றிலுமே வேறொரு லெவல் !

இங்கே எல்லாமே நேர்கோடுகளே; பெருசாய் மண்டையைப் பிய்க்க முகாந்திரங்கள் இராது ; உள்ளாற புகுந்திடறோம் ; வூடு கட்டி டெக்ஸ் & கோ அடிக்கிறதை ரசிக்கிறோம் ; அப்டியே அச்சுக்குக் கொண்டு போறோம் !” என்பதே எனது நம்பிக்கையாக இருந்தது - டெக்ஸோடு பணி துவக்கிய தருணத்தினில் ! ஐயகோ.. ஐயகோ... பெரும் தேவன் மனிடோ காமிக்ஸ் காதலர் மட்டுமல்ல ; காமெடிகளின் காதலருமே என்பதைப் புரிந்து கொள்ள பரபரவென சந்தர்ப்பம் வாய்த்தது – எனது எதிர்பார்ப்புகள் ஒவ்வொன்றாய் பொய்த்த நொடிகளில் ! மேலிருந்து ஆட்டுவிப்பவர் சத்தியமாய் சத்தமாய்ச் சிரித்திருப்பார் – எனது முட்டைக்கண்கள் ஆனை முட்டை சைஸுக்கு விரிந்ததைப் பார்த்து !

யுத்த பூமியில் டெக்ஸ்” – அமெரிக்க உள்நாட்டு யுத்தம் சார்ந்த கதையாக இருக்குமென்பதை யூகித்திருந்தேன் தான் ! இரண்டு பிடிவாதக்கார மீசைமாமா கர்னல்களைச் சாத்துவார் ‘தல‘ ; நாலு எதிரி முகாமில் குண்டு வைத்துத் தெறிக்க விடுவார் என்ற ரீதியில் கதையிருக்குமென்றும் யூகித்திருந்தேன் ! ஆனால்... ஆனால்... அங்கு தான் டெக்ஸின் பிதாமகர் G.L. போனெலியின் கதை சொல்லும் ஆற்றல் விஸ்வரூபமெடுப்பதை உணர முடிந்தது ! நடந்த யுத்தத்தின் வரலாற்றுத் தகவல்களை ; பின்னணிகளைப் பிசகின்றித் தக்க வைத்துக் கொண்டு – நிஜத்தையே பின்புலமாக்கி ; நிஜ மனிதர்களையும் கதைக்குள் பிசிறின்றிப் புகுத்தி ; அவர்களோடு அற்புதமாய் டெக்ஸை sync ஆகச் செய்து களமாடச் செய்துள்ளார் எனும் போது, “ஐயா... தெய்வமே... கூகுள் ஆண்டவா!” என்றபடிக்கே இம்மாதமும் இன்டர்நெட் தேடலுக்குள் ஐக்கியமானேன் - 2 பதிவுகளுக்கு முன்னமே விவரித்திருந்தபடி ! அமெரிக்க யுத்த வரலாறு ; வடக்கு vs. தெற்கு மோதலின் பின்னனி ; யுத்தத்தின் உச்சம் என்று வரிசையாகத் தோண்டித் துருவ வேண்டிப் போனது ! நான் பாட்டுக்கு எதையேனும் புரிதலின்றி எழுதி வைத்துத் தாண்டி விட்டால், அவை factual errors ஆகிடுமென்ற பயம் ! So மின்சார வேகத்தில் பாய்ந்தோடும் கதையோடு ஈடு கொடுத்த படிக்கே ; சைடில் கூகுளின் துணையோடே இந்த 320 பக்க சாகஸத்தோடு நான் உருண்ட உருளை ‘முதல்வன்‘ படத்து சேற்றுக்குள் சண்டை sequence–ல் ஆக்ஷன் கிங் அர்ஜுன் கூட உருண்டிருக்க மாட்டார் ! புரட்டப் புரட்டப் பக்கங்கள்... பார்க்கப் பார்க்க எழுத்துப் பிழைகள் ; தோண்டத் தோண்ட நிஜம் சார்ந்த தரவுகள் என்று நாட்களை சகட்டுமேனிக்கு விழுங்கிய “யுத்த பூமியில் டெக்ஸ்” சாமான்யத்துக்கு எனக்கு மறவாது !

அச்சா ஹை... சிக்கல் தீர்ந்துச்சு ; இனி காத்திருப்பது நம்பள் கருணையானந்தம் அவர்களின் மொழிபெயர்ப்பிலான “பனிவனப் படலம்” ! இதிலே கூகுளும் தேவைப்படாது ; கும்மிடிப்பூண்டிக்குப் போகவும் தேவைப்படாது !” என்று பரபரவென பணிகளுக்குள் புகுந்தேன் – எடிட்டிங் செய்திட! ஐயகோ... ஐயகோ... இம்முறையும் விண்ணிலிருந்து ஒரு எக்காளச் சிரிப்பு காதில் விழுந்தது ! டெக்ஸ் கதைகளுக்கு அங்கிள் பேனா பிடித்து கிட்டத்தட்ட மூன்றாண்டுகள் இருக்கும் ! அவரது க்ளாஸிக் எழுத்துக்கள் டெக்ஸின் ஜனரஞ்சக / கமர்ஷியல் பாணிக்கு சற்றே அந்நியமாய்ப்படுவதாகத் தோன்றியதால் – டெக்ஸைத் தக்க வைத்துக் கொண்டு ; அவரது நடைக்கு suit ஆகிடும் கதைகளை மட்டுமே அவரிடம் ஒப்படைப்பது என்ற policy decision பரஸ்பரப் புரிதலின் பேரில் கொஞ்ச காலத்துக்கு முன்னமே எடுத்திருந்தோம் ! இதுவோ சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்பாகவே எழுதி முடிக்கப்பட்ட ஆல்பம் எனும் போது திருதிருவென முழிக்கத் தோன்றியது simply becos ஒரே ஆல்பத்தின் முதல் முன்னூறு பக்கங்களுக்கு சகஜமாகவும் ; தொடரும் முன்னூறு பக்கங்களுக்கு இலக்கிய நடையிலும் ஒரே நாயகர் வாயசைத்தால் ரொம்பவே இடருமே என்ற ஞானோதயம் புலர்ந்தது ! And ரொம்ப காலம் கழித்து இந்த ஆல்பத்தில் கார்சனுக்கு துவக்கம் முதலே வேலைகள் இருப்பதும், மனுஷன் செமத்தியாய் score செய்திட ஏகப்பட்ட டயலாக் வாய்ப்புகள் இருப்பதும் கண்களில்பட்டன ! நடையில் பெரிதாய் நெருடல்கள் தெரியலாகாது ; அதே சமயம் கார்சனின் வரிகளில் நகைச்சுவை + வீரியம் ஏற்றிடல் அவசியம் என்ற 2 point agenda பிடாரியாய் முன்நிற்க – ஏற்கனவே தரையைப் பெருக்கிக் கொண்டிருந்த நாக்கைச் சுருட்டி வாய்க்குள் திணித்த கையோடு - கோட்டை மொத்தமாய் அழிச்சுப்புட்டு இன்னொரு 320 பக்க பரோட்டாவை விழுங்கத் தயாரானேன் ! 

அங்கே யுத்த பூமி...அரிசோனா..கென்டக்கி...டெக்ஸாஸ் என அமெரிக்க மத்திய மண்டலங்களெனில் - இக்கடவோ அலாஸ்கா ; கனடா ; வட துருவம் - என மெர்சலூட்டும் குளிர்ப்பின்னணி ! அங்கேயோ - 'பீப்ப்பீ " என்றபடிக்கே குழல் ஊதிக்கொண்டு, குதிரைப் பண்ணைகளையே கண்ணில் காட்டியபடிப் பாயும் சிப்பாய்களெனில் - இங்கேயோ மருந்துக்குக்கூடக் குதிரைகள் கிடையாது ! முழுக்கவே ஸ்லெட்ஜ் இழுக்கும் நாய்களின் ராஜ்ஜியமே ! ஆளுக்காள் முரட்டு-முரட்டுப் பனி அங்கிகளோடு - காலில் டென்னிஸ் மட்டைகள் போலான பனிக்காலணிகளோடு வலம் வந்துகொண்டிருந்தனர் !  அங்கே பூம்-பூம் டிக் என்றதொரு மொட்டை பாஸ் தான் டெக்சின் தோழனெனில், இங்கே நமது ஆதர்ஷ வெள்ளிமுடித் தாத்தா ! So முதல் கதைக்கும், தொடர்ந்திட்ட இரண்டாம் கதைக்கும் மத்தியில் தம்மாத்துண்டு ஒற்றுமை கூட லேது ! 

மௌரோ போசெல்லியின் இந்த த்ரில்லருக்குள் மெது மெதுவாய்ப் புகுந்தபடிக்கே,  ரொம்பவே உயர்நடையிலான சொற்களை   மாற்றிக் கொண்டே ; டெக்ஸ் & கார்சனுக்கு வரிகளில் வேகத்தையும், கொஞ்சமாய் காமெடியையும்  நெடுக நுழைத்துக் கொண்டே போக, பக்கங்கள் முளைத்துக் கொண்டே ; முளைத்துக் கொண்டே வந்தது போலவே தோன்றியது ! எப்போதுமே டெக்சில் பணிகள் சுலபத்தன்மையோடு இருந்திடும் தான் ; ஆனால்  அந்த 200 + பக்க நீளங்களோ பணியாற்றும் போது புரட்டியெடுத்திடும் ! இம்முறையோ 320 பக்க ட்ரிபிள் ஆல்பங்கள் எனும் போது - திறக்கத்திறக்கக் குவியும் ஜோ பைடெனுக்கான தபால் ஓட்டுகள் போல - முடிவின்றி நீண்டு சென்றன பணிகள் ! கதை மட்டும் அசுர வேகத்தில் இல்லாது போயின், சத்தியமாய் ஏதாச்சுமொரு கரடி விட்டுப்புட்டு நடுவாக்கில் கம்பிநீட்டிடலாமா ? என்ற சபலம் தலைதூக்கியிருக்கும் ! 320 பக்கங்களுக்குள்ளும் திருத்தங்கள் ; வசன மாற்றங்களை போட்டு விட்டு, 'அக்கடா' என ஓய்ந்திருக்கவும் மார்க்கங்களில்லை - becos உங்கள் கண்களில் தட்டுப்படும் எழுத்துப் பிழைகளின் பெரும்பான்மையே நான் பார்த்துத் தரும் பிழைத்திருத்தங்களினில் விடுதல்கள் + நான் மாற்றி எழுதுவதனை டைப்செட் செய்திடும் சமயங்களில்  நிகழும் புதுப் பிழைகளே ! இங்கேயோ ஏகமாய் மாற்றி எழுதும் படலம் அரங்கேறியிருப்பதால் - இந்த வம்பே வேணாமென மறுக்கா 320 பக்கங்களையும் இரண்டாவதுவாட்டியும் வரவழைத்து மூக்குக்கண்ணாடியை மாட்டிக்கொண்டு வாசிக்கும் படலங்கள் அரங்கேறின ! நான் பிழைத்திருத்தம் செய்து முடிக்கும் பக்கங்களை அப்பாலிக்கா ஆபீசில் proof reader சங்கவி பார்த்த பிற்பாடு அச்சுக்கு எடுத்துக் போக ஏற்பாடு ! So கடந்த ஒரு வாரமாய் 'தல' கூடவே முழுக்க முழுக்கக் குப்பைகொட்டியதில் நம் அலுவலகக் கம்பியூட்டர்களுக்கும் சரி ; நமக்கும் சரி - காது, மூக்கு, என நவதுவாரங்களிலும் மஞ்சளாய்ப் புகை வராத குறை தான் !! And தொடர்கதையாய்த் திருத்தங்கள் போட்ட எனக்கே நாக்குத் தொங்கியதெனில் - அவை சகலத்தையும் நடைமுறை செய்த இவாஞ்செலினின் பாடை நினைத்தாலே கிறுகிறுக்கிறது ! இது அத்தனைக்குப் பிறகுமே எழுத்துப் பிழைகள் தலைதூக்கும் போது தான் யாரையாச்சும் 'தல' பாணியில் நடுமூக்கிலேயே குத்தணும் போல் பரபரத்திடும் ! 

டாஸ்மாக் வாசலில் பரதநாட்டியம் பயிலும் பொறுப்பான குடிமகனைப் போல ஒரு மாதிரியாய் 640 பக்கங்களையும் முடித்து விட்டு ஒரு ஓரமாய்க் கட்டையைக் கிடத்தத் தயாரான போது மைதீனின் நிழல் தெரிந்தது ! 'கிழிஞ்சது போ..! இன்னும் என்ன  குண்டைப் போடப்போறானோ ?'  என்ற பதட்டத்தோடு நிமிர்ந்தால் - "அந்த 32 பக்க கலர் டெக்ஸ் கதையை எழுதித் தரேன்னு சொன்னீங்களே அண்ணாச்சி !!" என்றபடிக்கே ஒரு கத்தையை நீட்டினான் ! இதுவோ - கலரிலான ஆக்கம் எனும் போது பிராசஸிங் ; அச்சு என சகலத்துக்குமே கொஞ்சமாச்சும் டயம் அவசியப்படும் ! பேஸ்தடித்துப் போய் நான் நின்ற போது இரவு மணி ஒன்பதரை ! 'விடாதே..பிடி..!!' என அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் நம்ம 'தல' தெறிக்க விடும் அந்த 32 பக்கங்களையும் எழுதி இவாஞ்செலினின் வீட்டுக்கு ராவோடு ராவாய் அனுப்பி டைப்செட்டிங் செய்து வாங்கி, அதிகாலையில் திருத்தங்கள் போட்டு - அச்சகம் திறக்கும் நேரத்துக்கு ரெடி செய்திருந்தான் மைதீன் !! 320 + 320 + 32 = 672 பக்கங்கள் கொண்ட ஆட்டு உரலை நாங்கள் சுமந்த கதை இது தான் !! 

அம்மிக் கல்லின் கதை ! 

ஆட்டு உரலைச் சுமந்தது நானும், நம்மவர்களுமெனில், அம்மிக்கல்லை ஒப்படைத்தது நமது கருணையானந்தம் அவர்களிடமே !! போன மாதமே வந்திருக்க வேண்டிய நம்ம கூர்மண்டை சாரின் "சர்ப்பங்கள் சாபம்" சத்தியமாய் ஸ்பைடர் ரசிகர்களுக்கொரு தலப்பாக்கட்டி விருந்து என்பதில் துளியும் ஐயமில்லை எனக்கு ! நண்பர் JSK-ன் tribute ஆக வெளிவந்திடவுள்ள இந்தக் கதை மட்டும் 30 வருஷங்களுக்கு முன்பாய், ஸ்பைடர் மேனியா உச்சத்தினில் இருக்கும் நாட்களில் வெளியாகியிருப்பின்- கூரையைப் பிய்த்துக் கொண்டு போயிருக்கும் சேல்ஸ் ! ஸ்பைடரின் ரகளையான template-ல் ரவுசு விடும் இந்தக் கதையினை நான் ஆங்கிலத்தில் படித்த போதே தீர்மானித்து விட்டேன் - இதற்குப் பேனா பிடிப்பது ஒரு டஜன் கி.நா.க்களை விடவும் சிரமமென்று ! 72 பக்க நீளம் ; and பக்கத்துக்குப் பக்கம் டிரம்ப்பை விடவும் ஜாஸ்தி வசனம் பேசும் கதை மாந்தர்கள் என்பதைக் கவனித்த போதே - 'ஆத்தாடி.... கடைசி நிமிடம் வரைக்கும் ஜவ்விழுக்கும் நமக்கெல்லாம் இது சுட்டுப்போட்டாலும் ஒத்து வராது ! எழுதுவதனில் ஒரு அசாத்திய discipline கொண்ட அங்கிளால் மட்டுமே இதைச் சமாளிக்க முடியும் !" என்பது புரிந்தது ! நிஜத்தைச் சொல்வதானால் அவருக்கே தண்ணி காட்டிப்புட்டான் நம்ம 'எத்தனுக்கு எத்தன்' ! ஒரு முரட்டுக் கத்தைப் பக்கங்களோடு ஸ்பைடரின் தமிழாக்கம் நம்ம ஆபீசுக்கு வந்த சேர்ந்த தருணத்திலோ - இக்கட TEX மேளா செமத்தியாய் ஓடிக்கொண்டிருந்தது ! நிமிர்ந்து பார்க்கக்கூட நேரமில்லை என்ற நிலையில் -வேலையினை outsource செய்திட எண்ணிய நேரத்தில் - சில ஆண்டுகளுக்கு முன்பாய் நமக்கு பணியாற்றியதொரு அம்மணி, " வேலை ஏதாச்சும் உள்ளதா ? வீட்டில் வைத்துப் பணிசெய்து தரலாமா ?" என்று கேட்டிட - எக்குத்தப்பான நிம்மதிப் பெருமூச்சு  எனக்கு ! ரைட்டு - ஒரு நோவு தானாய்த் தீர்ந்தது என்று நான் துள்ளிக்குதித்து என்னவோ நிஜம் தான் ! ஆனால் நமது மனிடோ பெரும் தேவனின் திருவிளையாடல்களை அந்த நொடியில் நான் அறிந்திருக்கவில்லை ! முழுசாய் 2 வாரங்களுக்குப் பணியினைக் கையில் வைத்திருந்துவிட்டு - இது இப்போதைக்கு எனக்கு முடியாது போலிருக்கு ! என்று கையை விரித்தே விட்டார் - வெறும் 15 பக்கங்களை மட்டும் முடித்திருந்த நிலையில் ! இவ்ளோ தமிழா ?? என்ற கேள்வி வேறு இந்த அழகில் !! வெறுத்தே போச்சு எனக்கு ! "இந்த மாசமும் இந்த புக்குக்கு பீப்பீ தானா ?  அசிங்கமாகிடுமே !!" என்று உள்ளுக்குள் பதறத் துவங்கியது ! என்ன செய்வதென்று கையைப் பிசைந்தபடிக்கே , நமக்கு அவ்வப்போது கொஞ்சம் உதவிடும் குருமூர்த்தியின் கதவுகளைத் தட்டினோம் ! சமீபமாய் ஆர்ச்சி கலரிங் + டைப்செட்டிங் இவரது கைவண்ணமே ! மனுஷன் பிசியாக இருந்த போதிலும் மறுக்காது பணியை ஏற்றுக்கொண்டார் ! So உள்ளே டெக்ஸ் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்த அதே தருணங்களில் வெளியே ஸ்பைடரும் ஓடிக்கொண்டிருக்க - உள்ளுக்குள் எனக்கோ - "தேதிகள் ஓட்டமாய் ஓடியவண்ணமுள்ளன ; வேலைகள் இழுத்துக் கொண்டே செல்கின்றனவே" என்ற டென்க்ஷன் ! கூர்மண்டையருக்குப் பிழைத்திருத்தங்கள் போடவும் இக்கட நேரமில்லை எனும் போது - அந்தப் பொறுப்பையும் பேனா பிடித்திருந்த கருணையானந்தம் அங்கிளிடம் மறுக்கா ஒப்படைத்தேன் ! அவரும் இயன்ற மட்டிலும் பார்த்துத் தந்த பக்கங்களுக்கு - 'டமால்..பணால்' என்ற அறிவுபூர்வமான ஓசைகளை இணைத்தது மட்டுமே எனது பொறுப்பாகியது ! வியாழன் மாலை சகலமும் முடிந்து, வெள்ளி காளைக்கு அச்சில் ஏறிட - 2 down ; 2 more to go என்று மண்டைக்குள் ஒலித்தது ! Maybe இந்த இதழினில் பிழைகள் கொஞ்சம் கூடுதலாய்க் கண்ணில்பட்டால் - மன்னிச்சூ ப்ளீஸ் !! And இதோ - நமது பிரிட்டிஷ் ஜித்தரின் அட்டைப்பட முதல்பார்வை : 


இந்த அட்டைப்படத்தின்பின்னுள்ள கதையைக் கேட்டால் தெறித்தடித்து ஓடி விடுவீர்கள் என்பதால் I'll make it simple !! துவக்கத்தினில் நாம் தயார் செய்திருந்த டிசைன் இதுவல்ல ; புதிதாய் நமக்கு ஒத்தாசை செய்திடும் சென்னையின் டிஜிட்டல் ஓவியருக்கு நான் வேறொரு ஸ்பைடர் டிசைனைத் தந்திருக்க, அவருமே அதனை நீட்டாக முடித்துத் தந்திருந்தார் ! நானும் குஷியாய் அதனை படைப்பாளிகளின் பார்வைக்கு அனுப்பிவிட்டு, "இது ஜுபரா கீதாங்க சார் ?" என்று கேட்டிருந்தேன் ! ரைட்டு - proceed என்ற பதில் வருமென்று காத்திருந்தால் - வந்ததோ -"ஐயகோ...ஸ்பைடர் ஏதோ பாங்க்ரா டான்ஸ் ஆடுற மாதிரியிருக்கே ; இதையா அட்டைப்படமாக்கப் போறீங்க ? என்ற பதில் ! "இல்லீங்க சார் ; இதுவும் ஸ்பைடரின் ஒரிஜினல் டிசைன் தான் ; பாருங்க - இதோ இருக்கு நாங்க பயன்படுத்திய reference !" என்று நான் அந்த ஒரிஜினலை அனுப்பியிருப்பினும் அவர்களுக்குத் திருப்தியே இல்லை என்பது புரிந்தது ! "ஸ்பைடர் போன்றதொரு ஆக்ஷன் நாயகருக்கு அட்டைப்படத்தில் தெறிக்கும் வீரியம் தென்படணுமே !" என்பது அவர்களது உணர்வாக இருந்தது ! Moreover - இதே சாகசத்தை அவர்கள் வெகு சீக்கிரமே இங்கிலாந்தில் வெளியிட உள்ள நிலையில், நாம் ஏதேனும் சுமாரான ராப்பரோடு களமிறங்கிடக்கூடாதே  என்ற பதைபதைப்பும் அவர்களுக்கு ! நொடியும் யோசிக்காது - நமது புது ஓவியரை மறுக்கா தொடர்பு கொண்டோம் சர்ப்பங்களோடு மல்யுத்தம் செய்திடும் இந்த டிசைனோடு ! அவருமே நமது அவசரம் புரிந்து சடுதியில் பணியாற்றித் தர - எனக்கோ அதன் பின்னணி வர்ணத்தில் திருப்தியில்லை ! 'ஓடு...ஓடு...கோகிலாவைப் பிடி !' என்று டிசைனை அவரிடம் ஒப்படைத்து, பின்னணியை மட்டும் இன்னும் glitzy ஆக்கி வாங்கிய கையோடு லண்டனுக்கு மறுக்கா மெயில் அனுப்பினோம் ! இம்முறையோ - "சூப்பர் !!" என்று பதில் கிட்டிட, அடித்துப் பிடித்து அட்டைப்படத்தினை அச்சிட விரைந்தோம்  ! இதோ உள்ளது - முதலில் போட்ட பாங்க்ரா டான்ஸ் போஸ் & the others !!



So ரகம் ரகமாய் பல்பு வாங்கிய கதை இதுவே - நமது இஸ்பைடராரோடு !! இதோ - உட்பக்க preview : 


அம்மிக் குழவியின் கதை :

புக் # 3 ஆக வந்திருக்க வேண்டியதோ - கார்டூனான "ஹெர்லக் ஷோம்ஸ்" & இதற்குப் பேனா பிடித்திருக்க வேண்டியவன் நானே ! ஆனால் தீபாவளி மலரின் களேபரங்கள் நிறைவுற்ற நொடியில் கன்னித்தீவு சிந்துபாத்துக்கு நாலு வரிகள் எழுதிடும் 'தம்' கூட என்னிடம் எஞ்சியிருக்கவில்லை ! Herlock மறுக்கா எழுத ஆரம்பித்து & டைப்செட்டிங் மண்டகப்படிகளை மறுக்கா அரங்கேற்ற சத்தியமாய் நேரமும் இல்லை என்ற போதே டிசம்பருக்கென நான் திட்டமிட்டிருந்த ஜம்போவின் இதழ் # 5 தயாராகயிருப்பது நினைவுக்கு வந்தது !! And இது நமக்கு ஏற்கனவே பரிச்சயமானதொரு இதழே !! And இதனை நாம் பின்சீட்டிலிருந்து முன்னுக்குக் கொணரத் துணிந்ததற்கு நமது ஜாகஜ வீரர் ரோஜரும் ஒரு காரணமென்பேன் ! Simply becos - ரோஜரின் "நேற்றைய நகரம்" இதழினை நீங்கள் மத்தளம் கொட்டித்தள்ளி விடுவீர்கள் என்ற பயத்திலேயே அதனை ஒரிஜினலாக அறிவித்த தருணத்தில் வெளியிடவில்லை நான் ! இப்போது ஆன்லைன் புத்தக விழாவிற்கு அதனை வெளியிட்ட போதுமே 'மடக்..மடக்;க்கென எச்சிலை கணிசமாய் விழுங்கத்தான் செய்திருந்தேன் ! ஆனால் Surprise ...surprise ....'கதை சூப்பர் ; சித்திரங்களும் சூப்பர் ; கலரில் இதை வெளியிடாமல் சொதப்பிப்புட்டியே !!" என்ற கண்டனங்கள் !! ரொம்பவே பெரியதொரு pleasant surprise என்றே சொல்லுவேன் உங்களின் அந்த ரியாக்ஷன்ஸ் ! நிச்சயிக்கப்பட்ட சப்பல்ஸ் சாத்துக்களின்றித் தலைதப்பியது மட்டுமன்றி, பண நெருக்கடிகளின் மையத்தில் நிற்கும் வேளையில், கொஞ்சமே கொஞ்சமாய் ராயல்டி மீட்பும் சாத்தியமாயிற்றே என்று ஓசையின்றி சந்தோஷப்பட்டுக் கொண்டேன் ! 

அந்த நொடியில் தீர்மானித்தது தான் "கால வேட்டையர்" இதழினை இனியும் பதுக்கிப் போட வேண்டாமென்பது ! கதையும் வாங்கி ; அச்சைத் தவிர்த்து தயாரிப்புப் பணிகளின் சகலத்தையும் செய்து முடித்து ; பற்றாக்குறைக்கு அட்டைப்படத்தையும் அச்சிட்டு வைத்திருக்கும் நிலையினில் - அதனில் லாக் ஆகிக் கிடக்கும் கணிசமான தொகையானது மனசுக்குள் நெருடலாகவே தொடர்ந்தது ! ரோஜரே தலைதப்பி விட்டார் எனும் போது இந்த மிரட்டும் ஆக்ஷன் த்ரில்லர் நிச்சயமாய் நான் பயந்தது போல் சோடை போகாதென்ற நம்பிக்கை பிறந்தது ! தவிர, ஜம்போ சீசன் 3-ன் சந்தாத் தொகையான ரூ.900-க்கு நாம் வழங்கிட வேண்டியது இன்னமும் ஒரேயொரு அறுபது ரூபாய் புக் மட்டுமே என்பது நினைவில் நின்றது ! (இதுவரை வந்துள்ளவை : பிரிவோம் சந்திப்போம் - ரூ.120 + ஜேம்ஸ் பாண்ட் ரூ.200 + மா துஜே ஸலாம் - ரூ.180 + தனித்திரு..தனித்திரு - ரூ.90 + (காத்துள்ள) Lone ரேஞ்சர் - ரூ.250)  அந்த அறுபது ரூபாய் புக்கின் இடத்தினில் ரூ.120 விலையிலான "கால வேட்டையர்" புக்கை வழங்கிடும் பட்சத்தில் - உங்களுக்கு அந்தக்கதை ரசிக்காமலே போய் விட்டாலும் no big deal என்று தோன்றியது ! டைப்செட்டிங் செய்து ; ராப்பரும் ரெடியாக உள்ளதெனும் போது - ஒரேயொரு நாள் எடிட்டிங்கினில் மெனெக்கெட்டால் ஒரு முழு புக் தேறிவிடும் என்று பட்டது ! கண்முழி பிதுங்கிய நிலையில் deadlines உடன் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தவனுக்கு இந்த டீலை மறுக்க திராணியில்லை ! So அவசரம் அவசரமாய் எடிட்டிங் ; அச்சு & அதே கையோடு அட்டைப்படத்தின் முகப்பில் ஸ்டிக்கர் ; உட்பக்கத்தில் ஸ்டிக்கர் ; கடைசி உட்பக்கத்தினிலும் ஸ்டிக்கர் என்று நம்மாட்கள் புஜங்களையும் இன்றைக்குப் பதம் பார்த்தாயிற்று !! இதோ - பொன்னனின் கைவண்ணத்தில் ஓராண்டுக்கு முன்னமே ரெடியாகிக் காத்திருக்கும் அட்டைப்பட முதல்பார்வை - with the Season 3 sticker : 

 
And இதோ - அசாத்தியச் சித்திரங்களுடனான அதன் உட்பக்க preview !மேற்கொண்டு டைப்படிக்க சத்தில்லை என்பதால் கதை பற்றிய விளக்கங்களை இன்னொரு மழை நாளுக்கென ஒத்திப் போடுகிறேன் guys ! So உங்களின் கூரியர் டப்பிக்கு கனம் சேர்க்கக் காத்திருப்பது இந்த black & white த்ரில்லரே ! 

உலக்கையின் கதை !!

எஞ்சியிருந்த ஒற்றை இதழ் - ஹி..ஹி..!!!! ."இரவின் மழை" என்ற பொருள்படும் பெயரோடு மச்சான்ஸைச் சந்திக்கக் காத்திருந்த அமாயா தோன்றும் - "வானமும் வசப்படும் !" "புரட்சிப்பெண் ஷீலா" என்று ராணி காமிக்சில் இவர் ஏற்கனவே ஒரு ரவுண்டு வந்துவிட்டார் என்பதை நண்பர்கள் சொல்லியே தெரிந்து கொண்டேன் ! ரைட்டு...தீபாவளி ஜோரில் கூட்டத்தோடு அம்மணியை இறங்கிவிட்டால், எப்படியாச்சும் கரை சேர்ந்திடுவார் என்ற நம்பிக்கையோடு - டைப்செட் செய்யப்பட்டு தயாராக இருந்த 30 பக்கங்களைக் கையில் எடுத்த போது - மூச்சிரைத்தது ! அம்மணி எதனில் புரட்சி செய்கிறாரோ இல்லியோ - கதை நெடுக சிக்கன உடுப்புகளோடு 'சிக்'கென்று வலம் வருவதைக் கச்சிதமாய்ச் செய்து கொண்டிருந்தார் ! பற்றாக்குறைக்கு வசன வரிகள் அனைத்துமே ஒரிஜினலின் அதே அர்த்தங்கள் தொனிக்கும் விதத்தினில் இருந்திட, அவையும் ஏகமாய் விரசத்தில் நெருடின ! So கோகிலாவைக் கொண்டு அமாயாவுக்கு ஆடைதானங்கள் நடத்திய அதே நேரத்தில் - பெருமூச்சோடு மறுக்கா எழுதும் பேடைத் தூக்கி வைத்துக் கொண்டே விரச ஜாடை தொனித்த வரிகள் சகலத்துக்கும் வீரிய வார்னிஷ் பூச ஆரம்பித்தேன் ! படிக்கும் போது பெரிதாய் நெருடாது ; இன்னும் சொல்லப்போனால் சற்றே feminist ஜாடையிலும் டயலாக்குகளை நான் அமைத்து முடித்தது நேற்றிரவினில் ! (வெள்ளியிரவினில்) And சனி பகலில் அச்சாகி, பைண்டிங்குக்கும் புறப்பட்டு விட்டன !! இதோ - அம்மணியின் அட்டைப்பட முதல்பார்வை - நமது சென்னை ஓவியரின் கலரிங்கில் : 


இந்தக் கூத்துக்கள் அனைத்தும் ஓடிக்கொண்டிருக்கும் அதே நேரங்களில் - அந்நியன் ரெமோ ஜாடையில் எனக்கு இன்னொரு பணி ராப்பொழுதுகளில் காத்திருந்தது !! And அது தான் நமது புது அட்டவணைக்கான பாம்பன் பாலத்து நீளத்திலான பதிவைத் தயார் செய்து டைப்பிடிக்கும் ராக்கூத்துக்கள் ! அத்தனை பேருமே  ஏதேதோ பணிகளில் நம் சார்பில் பிசியே எனும் போது யாரையும் டைப்பிடித்துத் தரச்சொல்ல இயலவில்லை ! And அட்டவணையை ஒத்திப் போடுவோமா ? என்றால் - உங்களை disappoint செய்தது போலாகிடுமே என்று அதற்கும் மனசு ஒப்பவில்லை ! பின்னென்ன - பகலெல்லாம் தயாரிப்பினில் மூழ்கியிருந்தது விட்டு, ராவினில் பதிவுக்குள் உலா வந்தேன் ! அதனில் ஒரு இரவில் எதிர்வீட்டு வாசலில் ராத்திரி 2 மணிக்கு குடுகுடுப்பைக்காரன் நின்று ஜக்கம்மாவை அழைத்துக் கொண்டிருக்க, சத்தமின்றி லைட்டை அணைத்துவிட்டு இருட்டுக்குள் டைப்படித்த கூத்துக்களும் அடக்கம் !  And உங்களின் பின்னூட்டங்களுக்கு இயன்றமட்டிலும் பதில் ; மீதமிருக்கும் நேரத்தில் எடிட்டிங் என இந்தக் கடைசி ஒரு வாரம் கரணங்களின் உச்சமென்பேன் ! And இதோ - இன்று மாலை டெக்சின் தீபாவளி மலர் + கலர் டெக்ஸ் + ஸ்பைடர் + காலவேட்டையர் என 4 புக்குகள் பைண்டிங்கிலிருந்து வந்திறங்கிய நொடியில் - கடந்த 3 வாரங்களது நோவுகள் எல்லாமே போனயிடம் தெரியவில்லை ! பாக்கியுள்ள அமாயா + 2021 கேட்லாக் இரண்டுமே திங்கள் காலை பைண்டாகி வந்து விடுமென்ற நம்பிக்கையில் திங்களன்று despatch செய்திட we are all set !! 

ஒரு ஓமக்குச்சி டீம் பாஹுபலி அவதாரமெடுத்திருக்கும் இந்த தீபாவளி வேளையினை சத்தியமாய் சீக்கிரத்துக்குள் மறக்க மாட்டேன் ! அடிக்கடி சொல்லியிருக்கிறேன் - எங்கள் அணியே என் பலமென்று ! அவர்களை எண்ணி நான் பெருமிதம் கொள்ள இதைவிடப் பெரியதொரு வாய்ப்பு சர்வ நிச்சயமாய் அமையாது என்பது உறுதி !! 938 !! இம்மாதத்து output !!! Phew !!! Absolutely remarkable my team !!


Tuesday, November 03, 2020

The Day after....!

 நண்பர்களே,

வணக்கம். The day after .....! எப்போதுமே பண்டிகைகளுக்கு மறுநாள் ; பரீட்சைகளின் ரிஸல்ட்கள் வந்த மறுநாள் ; எதிர்பார்த்துக் காத்திருந்த நெடும் விடுமுறைகள் நிறைவுற்ற மறுநாள் - ஒருவித இனம்புரியா மௌனம் குடிகொள்வது வாடிக்கை ! இனி இந்த எதிர்பார்ப்புப் படலம் ஒரு வருஷம் கழிந்த பின்னேயே என்ற புரிதல் ; சில நேரங்களில் தேட்டையை விடவும் தேடலே ரொம்ப சுவாரஸ்யமானது என்ற உணர்தல், இந்த மோன நிலைக்குக் காரணமாகிடலாம் ! 'பண்டிகையும் வந்தாச்சு ; புதுத்துணியையும் போட்டாச்சு ; பலகாரத்தையும் ருசிச்சாச்சு ; பட்டாசையும் வெடிச்சாச்சு' எனும் போது மறுதினம் அவரவர் மாமூலான வாழ்க்கைகளுக்குத் திரும்பிடத் தானே வேணும் ? ஒவ்வொரு ஆண்டின் அட்டவணை ரிலீசுக்குப் பின்பாய் எனக்கு இவ்விதம் தோன்றுவது மாமூல் ! அட்டவணையில் விட்டிருக்கும் உதார்களை இனி நிஜமாக்கிக் காட்டும் பொறுப்புகள் ஒன்றன் பின் ஒன்றாய் உறைக்கத் துவங்கிடும் ; "ஆஹா...இங்கே கொஞ்சம் ஓவராய் ஆவேசப்பட்டுப்புட்டோமோ ? இதைக் கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கலாமோ ?" என்றெல்லாம் தோன்றத் துவங்கும் ! 

ஆனால் for a change - இம்முறை the day after syndrome என்னுள் இல்லை ; அச்சோ...ரொம்ப ஓவராய் இழுத்துப் போட்டுக்கிட்டோமோ ? என்ற டர்ருமே இல்லை ! "இதுக்குப் பதிலா - அதை பண்ணியிருக்கலாமோ ? அதுக்குப் பதிலா இதை நுழைச்சிருக்கலாமோ ? என்ற குழப்பங்கள் பெரிதாய் இல்லை ! So கொஞ்சம் தொலைவில் நின்றபடிக்கே எனது தேர்வுகளை நானே விமர்சிக்க முயன்றால் ; எனது அட்டவணையினை நானே decode செய்திட முனைந்தால் பலன் இவ்விதமிருக்கும் : 

சந்தா A - 

கிட்டத்தட்ட மாற்றங்களுக்குத் துளியும் முகாந்திரங்களில்லா affair என்பேன் ! ஒன்பது புக்ஸ் கொண்ட சந்தாவினில் கிட்டத்தட்ட ஆறேழு நாயகர்களுமே தம்மைத் தாமே தேர்வு செய்துகொள்கிறார்கள் ! Maybe எடிட்டர்கள் & டாக்டர்கள் & தொழிலதிபர்களின் ஆதர்ஷ அம்மணிக்கு  007 உடனொரு இருக்கையைப் போட்டு வைத்ததை நீங்கள் யூகித்திருக்க மாட்டீர்கள் ! இதற்கொரு சுவாரஸ்யப் பின்னணி உண்டு ! 

சொல்லப்போனால் இது முட்டை ரெடியானதால் கோழியும் ரெடியாகிய  மாதிரியொரு சமாச்சாரம் ! நமது அமெரிக்க ஓவியை ஒவ்வொரு பணியையும் ஒரு வாரத்திலோ, மிஞ்சிப் போனால் பத்து நாட்களிலோ முடித்துத் தூக்கிப் போடுவது வழக்கம். "அடுத்து வேலை இருக்கா ?" என்ற கேள்வியும் இணைந்தே வரும். So இத்தனை சுறுசுறுப்பாய்ப் பணியாற்றுபவரின் வேகத்துக்கு நாமும் ஈடுதந்திட வேண்டுமே என முன்கூட்டியே அடுத்தடுத்த அட்டைப்படச் சித்திரங்களுக்கு references சேகரித்துத் தயாராக வைத்திருப்பேன் ! சில தருணங்களிலோ - "எப்போனாச்சும் பயன்படுமே !' என்ற ரீதியில் டெக்ஸ் கவர்களையோ ; ஜேம்ஸ் பாண்ட் கவர்களையோ தயார் செய்திடத் தீர்மானிப்பேன் ! அந்த ரீதியில் ஒருவாட்டி இளவரசியின் செம cool படம் கண்ணில் தட்டுப்பட்டது ! 'அட..இந்த அட்டைக்காககவாச்சும் அம்மணியை இட்டாந்தா தேவலையோ ? என்று நினைப்போடு அதை வரைந்தும் வாங்கினேன். அட்டவணையை இறுதி செய்யும் வேலை / வேளை புலர்ந்த போதோ கடுமையான இடநெருக்கடி & ஸ்லாட்டுக்குப் போட்டி நிலவுவதைக் கவனித்த போது - 'ரைட்டு...நமது முதல் ஈரோயினிக்கு மன்ஸ்லே தான் இடம் போலுமென்று பட்டது ! ஆனாலும் அந்த டிசைனை ஆறப்போட மனசு கேட்டில்லா ! அப்போது பிறந்த மகா சிந்தனை தான் - ஒரிஜினல் ஜேம்ஸ் பாண்டையும் ; அந்நாட்களில் நம்மால் "லேடி ஜேம்ஸ் பாண்ட்" என்று பில்டப்பிக்கப்பட்ட  இளவரசியையும் ஒரே இதழுக்குள் அடைத்தால் அம்மணிக்கான ஸ்லாட் பிரச்னையும் தீர்ந்திடும் ; அட்டைப்படத்தையும்  கண்ணில் காட்டியது போலாகிடுமே என்பது ! ஏப்ரலின் லாக்டௌன் வேளையில் சிக்கிய சிக்கிய சகலத்தையும் வாசிக்க முடிந்த போது மாடஸ்டியின் ஒரு செம crisp சாகசம் கண்ணில்பட்டது ! சித்திரங்களும் ஷார்ப்பாக இருந்திட, பணத்துக்கு சிங்கியடித்துக் கொண்டிருந்த மே மாதமே எப்படியோ கதையையும் வாங்கிவிட்டோம் ! So அந்த B & B ஸ்பெஷல் உருவான பின்னணி இதுவே ! And 

And அந்தப் புது வரவு மேகி உங்கள் ரேடார்களில் இருந்திருக்க வாய்ப்பிராது ! 2017 முதலே இந்த புஷ்டியான புலியை நான் வெயிட்லிஸ்டிலேயே வைத்து வந்ததால், நடப்பாண்டின் அறிமுக  இருக்கையை இவருக்குப் போட்டுத் தரத் தீர்மானித்தேன் ! நெட்டில் பார்த்த மட்டிற்கு reviews எல்லாமே பாசிட்டிவாக இருந்தது மட்டுமல்லாது - நமது பெல்ஜிய ஆலோசகரும் thumbs up தந்திட, சீட் உறுதியானது ! இக்கட LADY S-க்கு ஒரு வாய்ப்புத் தந்து பார்க்கும் சபலமும் இருந்ததை நான் சொல்லிட வேண்டும் ! ஒரு வான் ஹாம் தொடரை இப்படி அம்போவென abandon செய்துள்ளோம் என்பதை இன்னமுமே என்னால் நம்ப முடியவில்லை தான் ! என்னமோ போம்மா ஷானியா ! 

அது தவிர அங்கிருந்த ஒரே சர்ப்பரைஸ் - நமது தளபதி தீபாவளி மலர்  ! அது முழுக்க முழுக்கவே ஒரே routine-ல் தங்கிடுவது எனக்கு ரொம்பச் சீக்கிரமே போர் அடித்துப் போய் போவதன் பலனே ! வருஷமாய் தீபாவளிகளை ஒரே தடத்தில் கொண்டாடிப் பழகியான பின்னே ஏதாச்சும் மாற்றிப் பார்ப்போமே ? என்ற குடைச்சல் தலைக்குள் எழுந்ததன் பலனே அந்தத் தேர்வு ! And 2014 ஈரோடு ஸ்பெஷலாய் LMS வெளியான நாட்களுக்குப் பின்பாய், இந்த 'தல vs தளபதி ' ஜாலி மோதலுக்கு வாய்ப்பே அமைந்திருக்கவில்லை என்பதால் - 2021 -ல் அதனை நடைமுறைப்படுத்திப் பார்க்கும் ஆசையின் பலனே அந்த surprise தீபாவளி மலர் ! 

சந்தா B -ல் 'தல' தான் பிரதானமாய் இடம்பிடித்திடுவார் என்பது ஊருக்கே தெரிந்த ரகசியம் எனும் போது - அவருக்கு எத்தினி ஸ்லாட் என்பது மட்டுமே கேள்வியாக இருந்திருக்க முடியும் ! "இளம் டெக்ஸ்" ஒரு இன்றியமையா அங்கமாகிப் போயிருக்க "திக்கெட்டும் பகைவர்கள்" முதல் தேர்வாகியது ! அப்புறம் தொடர்ந்த இதர டபுள் ஆல்பங்கள் மூன்றுமே, அதனதன் மட்டில் ரவுசு கிளப்பும் கதைகள் என்பதால் no surprises again ! "கண்ணே..கொலைமானே" & Tex & Tesha ஸ்பெஷல் ஆகிய 2 கதைகளுமே நடப்பாண்டிலேயே ரெகுலர் தடத்திலும், ஈரோடு சர்ப்ரைசாகவும் வெளிவந்திருக்க வேண்டியவைகள் என்பதால் கைவசம் கோப்புகள் ரெடியாகவே இருந்தன ! அவற்றை வாகாய் நுழைக்க வேண்டியது அடுத்த ஆட்டோமேட்டிக் பொறுப்பானது ! முன்போல ராயல்டி செலுத்தித் துயில் பயிலும் பாணிகளை  இந்த இடர்நாட்களிலும் தொடர்வது இயலாக்காரியமாச்சே ! So ஏதேதோ காரணங்களின் பொருட்டு "அப்பாலிக்கா பாத்துப்போம்" என்று ஆறாமாய் விட்டு வைத்திருந்த படைப்புகள் இனி அவ்வப்போது களம்காண்பது தவிர்க்க இயலா நிகழ்வாகிடும் ! 


சந்தா B -ன் முதல் சர்ப்ரைஸ் நம்ம டைலன் + மார்ட்டின் கரம்கோர்க்கும் ஆல்பம் எனலாம் ! இங்கே குருவி உட்காரப் பனம்பழம் விழுந்த கதை தான் ; because நான் ஒரிஜினலாக டைலனின் சாகசம் ஒன்றையும் ; மார்டினின் சாகசம் ஒன்றையும் தேர்வு செய்தெல்லாம் முடித்திருந்தேன் - 2 தனித்தனி புக்குகளாய் வெளியிடும் எண்ணத்தில் ! CID ராபினுக்கு இம்முறை ஏதாச்சும் குருவி ரொட்டி தந்து கொள்ளலாம் - டைலனையும், மார்ட்டினையும் நுழைப்பதால் என்பதே planning ! ஆனால் படைப்பாளிகளின் இந்தப் புத்தம்புது கூட்டணி ஆல்பம்  2020 செப்டெம்பரில் வெளியானது என் முட்டைக்கண்களில் அகஸ்மாத்தாய் விழுந்து வைக்க - ராபினும் உண்டு ; மார்டினும் உண்டு ; டைலனும் உண்டு என்ற சமரசம் சாத்தியமானது ! என்னைப் பொறுத்தவரையிலும் சந்தா B -ன் highlight புதுவரவான "டபுள் D " தான் (Deadwood டிக்) ! போனெல்லியின் 'அடுத்த லெவல் படைப்புகள்' என்ற அடையாளத்தோடு 2018 -ல் மார்க்கெட்டுக்கு வந்த சில பல புதுப் படைப்புகளுள் இந்தக் கறுப்பினச் சிப்பாயும் ஒருவர் ! 20198-ல் சூட்டோடு சூடாய் இவரை தமிழ் பேச வைக்க விழைந்தேன் ; ஆனால் 'தல' Dynamite Special குறுக்கால பெரும் பட்ஜெட்டில் அன்று நின்றதால் - தள்ளிப்போனது DD திட்டமிடல் ! இந்தாண்டு குறும் அட்டவணையெனினும், சுவாரஸ்யங்களுக்குப் பஞ்சமிருக்கலாகாது என்ற குடைச்சல் மண்டைக்குள் குடியிருந்தால் புதியவரை கையைப் பிடித்து இழுத்து வராத குறையே ! இங்கும் 'இளம் டெக்ஸ்' பாணியிலானதொரு சிறு குழப்பம் இருந்தது - becos 4 சிங்கிள் ஆல்பங்கள் சேர்ந்தே ஒற்றை முழு சாகஸமாகிடுகிறது ! இத்தாலியிலோ அவர்கள் மாதமொன்று என்று சிங்கிளாகவே வெளியிட்டிருந்தனர் - தனித்தனி அட்டைப்படங்களோடு ! இந்தவாட்டியும்   "இளம் டெக்ஸ்" விஷயத்தினில் நிகழ்ந்த குளறுபடியினை நாம் அனுமதிக்கப்படாதென்பதால் மருவாதையாய் ஒரே இதழாய் அறிவித்துள்ளேன் ! ஆனால் இந்த டீலிங்கில் 3 அட்டைப்படங்கள் மிஸ் ஆவது தான் நெருடலே ! 

கடைசிக்கு நான் விட்டு வைத்திருந்தது லயன் 400 -க்கான தேர்வினை ! ஒவ்வொரு ஆண்டிலும் கலர் டெக்ஸ் + ஹார்ட் கவர் என்ற கூட்டணி யாருக்கு ரசிக்கிறதோ இல்லையோ - நம் முகவர்களில் நிறையப்பேருக்கு இவை பஞ்சாமிர்தங்களாய்த் தித்திக்கின்றன ! அவரவர் கடைகளில் வைத்தே பத்தோ - இருபதோ புக்ஸ் விற்க முடியும் போது - அதனில் கிட்டும் கமிஷன்கள், நமது இதர பரீட்சார்த்த லொடுக்கு பாண்டி இதழ்களின் சுணக்கங்களை ஈடுசெய்வதாய் அவர்கள் உணர்கிறார்கள் ! ஆனால் பட்ஜெட் கருதி நாம் TEX Color biggies களை ஊறுகாய்களாகவே பயன்படுத்திடுகிறோம் - unless there is a true occasion like this !! துவக்கத்தில் "திக்கெட்டும் பகைவர்கள்" இத்தலையே இன்னொரு டெக்ஸ் சாகசத்தோடு combine செய்து லயன் 400 என ரூ.250 விலையில் வெளியிட உத்தேசித்திருந்தேன் ! ஆனால் மூத்த பிள்ளைக்கு பளபளக்கும் கலரில் Allen Solly சட்டையை பிறந்தநாளுக்குப் போட்டு விட்டு, இளசுக்கோ - உள்ளூர் குருசாமி டெய்லரிடம் துணியெடுத்துக் கொடுத்து தைத்து வாங்கித் தர மனசு கேட்கவில்லை ! ஆனால் பட்ஜெட் 4000 என்ற நம்பரைத் தாண்டுவது தவிர்க்க இயலாமலே இருந்து வந்தது ! ரைட்டு - 'கி.நா.' வூட்டிலே  கொஞ்சம் பியூஸ் பிடுங்கினாக்கா  - 'தல' வூட்டிலே சீரியல் செட் மாட்டிப்புடலாம் !' என்ற நினைப்பு மெது மதுவாய்க் குடிகொண்டது ! And அதுவே - கி.நா.வினில் 3 black & வைட் ஆல்பங்கள் காணாது போனதன் பின்னணி ! அவை மூன்றுமே சற்றே இறுக்கமான ; இருண்ட களங்கள் என்பதுமே எனக்குள் லேசான உறுத்தலாய் நின்றதால் - நிறைய யோசனைக்குப் பின்பாய் சந்தா E அரை டஜன் இதழ்களென்பது - கால் டஜனானது ! 

பாதையினில் இருந்த ஆக்கிரமிப்புகள் காலியான பின்னே 'தல' தாண்டவத்திற்கு ரூட் க்ளியர் என்றான பின்னே - சில காலமாகவே நான் துண்டை விரித்து வைத்திருந்த "புத்தம் புது பூமி வேண்டும்" மெகா சாகசத்தை அங்கே நிலைகொள்ளச் செய்து விட்டேன் ! 'ஓக்லஹோமா' ; 'பந்தம் தேடிய பயணம்' பாணிகளில்  இதுவுமே ஒரு  புது வாழ்க்கையைத் தேடி ; புது பூமிகளைத் தேடி கேரவன்களில் புறப்படும் குடும்பங்களின் கதை என்பதால் ஆக்ஷன் + செண்டிமெண்ட் + varied கதைப்பின்புலங்கள் இங்கு சாத்தியமாகிடும் என்பது புரிந்தது ! டக்கென்று டிக் அடித்தேன் ! And by the way - இந்த இதழின் விலைக்கு, புஷ்டி காணாது என்ற நண்பர்களின் சிறு நெருடல்களைக் கவனித்தேன் ! Rest assured guys - இதழுக்கு Complan ஊட்டிப்புடலாம், இன்னமும் ஆரோக்கியமாக்கிட ! 

கார்ட்டூன் சந்தாவினில், கதைகளின் தேர்வுகளைத் தாண்டி, நாயகத் தேர்வுகளில் எனக்குத் துளி கூட ஜோலிகள் இருக்கவில்லை ! இருக்கும் ஆறு பேருக்கு ஆளுக்கொரு ஸ்லாட் ; லக்கிக்கு அதனில் prime slot என்பதோடு கடையைச் சாத்தி விட்டேன் வெகு சுலபமாய் ! பணியாற்றும் வேளைகளில் மட்டுமன்றி, தேர்வுகளிலுமே நோவு தரா டார்லிங்ஸ் !! 2022-ல்  தான் இருக்குது வேடிக்கையே - ஹெர்லாக் ஷோம்ஸ் காலி & clifton out of the selection race எனும் போது !!

சந்தா E தேர்வுகள் தான் தினத்துக்கு ஒரு கிளையாய் பயணித்த எனது சிந்தனைகளால் ஏகப்பட்ட அடித்தம்  & திருத்தம் கண்டது ! One shot கிராபிக் நாவல்களுக்கு வானமே எல்லை எனும் போது இங்கே அலிபாபா குகைக்குள் புகுந்த புலவன் தருமியைப் போல - 'ஐயோ...இது ஜொலிக்குதே ; ஆத்தி...அது மினுமினுக்குதே ; அச்சச்சோ...அது கண்ணைக் கட்டுதே !!' என்று உருண்டு புரளாத குறை தான் ! இவற்றிற்கென நான் shortlist செய்த கதைகளைக் கொண்டே 2 ரெகுலர் ஆண்டுகளுக்கு முழுவீச்சிலான சந்தாக்களைத் தேற்றிட முடியும் தான் ! இறுதியில் மூணே slots தான்டா மாப்பு...என்றான பின்னே கலரில் இருந்த மூவரை மட்டும் டிக் அடித்தேன் ! அந்த "தாத்தாக்கள் பட்டாளம்" கதையானது at any cost உள்ளுக்குள் நுழைத்திருப்பேன்  - becos அந்தக் களத்தில் பணி செய்யவும், அதனை உங்களுக்கு அறிமுகம் செய்யவும் உள்ளுக்குள் ஓராண்டாய் ஆசை ! அதே போல அந்த இன்னொரு வெட்டியானுமே ! இப்போதெல்லாம் சித்திர பாணி breezy ஆக இருக்கும் கதைகளைப்  பார்த்தாலே ஒரு வாஞ்சை பிறந்து விடுகிறது ! இங்கு artwork-ம் அழகு ; வர்ணங்களும் அழகு ; நமக்குத் பிடித்த வன்மேற்கே பின்புலம் என்ற போது, சில காலமாகவே ஜம்போவுக்கென நான் அடையாளமிட்டு வைத்திருந்த இந்த ஆல்பம் இம்முறை உள்ளாற புகுந்தது ! And அந்த மூன்றாம் கலர் ஆல்பம் - ஒரு நிஜமான கி.நா. என்பேன் ! புக் வரட்டுமே - மேற்கொண்டு பில்டப்களின்றி !

So எனது அட்டவணையின் பின்னுள்ள ; சைடிலுள்ள ; உசக்கேயுள்ள மஹாசிந்தனைகள் இவையே ! பட்டியலை விளம்பரங்களாக்கி, கண்ணில் காட்டி முடிக்கும் போது - 'அடங்கொன்னியா ..இதுக்குப் போயி இந்த முக்கு முக்குனியாக்கும் ?" என்று எப்போதும் போலவே இம்முறையும் தோன்றுகிறது ! ஆனால் தேர்வு செய்திடும் போது தலைக்குள் வந்து செல்லும் ஓராயிரம் எண்ணங்கள் ; நிறைகள்-குறைகள் ; குழப்பங்கள்-தெளிவுகள் எல்லாமே என்ன மாதிரியான சித்து விளையாட்டுக்களை ஆடும் என்பது தனிக்கதை !  

இயன்ற வரையறைகளுக்குள், வாசக அபிலாஷைகள் ; விற்பனைக்கட்டாயங்கள் ; கதைக்கொள்முதலின் சாத்திய - அசாத்தியங்கள் ; பணியாற்றக்கூடிய ஆக்கங்கள் ; பளுநிறைந்த ஆக்கங்கள் - என நிறைய சங்கதிகளுக்கு weightage தந்திடும் போது  ஒரு குறுகிய கால அட்டவணை என்ற விதத்தில் இது ஓ.கே. என்று எனக்குப்பட்டது ! ஆனால் உள்ளுக்குள் குடியிருந்தபடிக்கே என்றைக்குமே நமக்கான உசரங்களை 'இன்னும் கொஞ்சம் மேலே..இன்னும் கொஞ்சம் மேலே..' என்று நகர்த்திட விழையும் ambitious ஆராவுமுதன் - "இன்னும் பெட்டராப் பண்ணியிருக்கலாமோடா அம்பி ?' என்ற கேள்வியினைக் கேட்கத் தவறுவதேயில்லை ! ஆண்டுதோறும் ; மாதம்தோறும் ; வாரம்தோறும் ; தினந்தோறும் இந்தக் கேள்வியினை repeat செய்திட இவர் மட்டும் இல்லையெனில், 'பெருசாய் கிழிச்சாச்சு !" என்ற லயிப்பில் நான் கொஞ்சம் லாத்தலாகிடக்கூடும் என்பதால் - ambitious அம்பி எப்போதுமே எனக்கு ரொம்ப வேண்டப்பட்டவர் !! "இருக்கவே இருக்கு 2022 அண்ணாச்சி ; இன்னும் பேஷாப் பண்ணிப்புடலாம் !' என்றபடிக்கு இப்போவே புதியதொரு நோட்டை வாங்க ஆள் அனுப்பிவிட்டேன் - மஹாசிந்தனைகளின் அத்தியாயம் நானூற்றி எழுபத்திஎட்டுக்கோசரம் ! 

Bye folks !! See you around !! A nd here's the online listing :

https://lioncomics.in/product/jumbo-falooda-subscription-2021-april-to-december-abce-tamilnadu-copy/