நண்பர்களே,
வணக்கம். சகோதரியின் மைந்தனுக்குத் திருமணம் என்பதால் இந்தப் பதிவை நீங்கள் பார்க்கும் நேரத்திற்கு நான் ஏதேனுமொரு பந்தியில் இட்லி குண்டாக்களைத் தூக்கிக் கொண்டிருக்கக்கூடுமென்பேன் ! So சிலபல நாட்களுக்கு முன்பாகவே எழுதிய பதிவிது என்பதை யூகிக்க மதியூக மந்திரிகள் அவசியப்பட மாட்டார்கள் தான் ! And இந்தப் பதிவு அத்தனை நீளமானதாய் இராதென்றாலுமே, நாம் பயணிக்கவுள்ள பாதை சார்ந்தது என்ற விதத்தில் நிரம்பவே முக்கியமானதென்பேன் ! So இயன்றமட்டிலும் மௌனப் பார்வையாளர்களுமே தத்தம் two cents worth கருத்துக்களைப் பகிர்ந்திட்டால் நலம் – நமக்கெல்லாம் ! பீடிகையும், பில்டப்பும் போதுமென்பதால் – விஷயத்துக்குள் குதிக்கிறேனே…?!
“ஜம்போ காமிக்ஸ்” எனும் 6 சீட்டுக்களைக் கையில் வைத்திருந்து – அவற்றை ஒன்றொன்றாய் உங்கள் முன்னே இறக்குவது சுவாரஸ்யமானதொரு அனுபவமாகவே இருந்து வந்துள்ளது – சீஸன் 2-ன் துவக்கத்தின் விளிம்பில் நிற்கும் இந்த தருணத்தில் ! In hindsight – இதுவரையிலும் கதைத் தேர்வுகளில் நிகழ்ந்திருக்கக்கூடிய பிசிறுகளை அலசிட சாத்தியமாவதால் – அவை தொடர்ந்திட இடம் தரக்கூடாதென்ற வைராக்கியமும் முன் எப்போதையும் விட ஜாஸ்தி ! கதைகளின் அறிவிப்பை வெளியிடாமலே கூட உங்களுள் 75% சந்தாதாரர்கள் சீஸன்-2க்கும் thumbs-up தந்திருக்கும் போது – நீங்கள் எங்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கைக்கு நியாயம் செய்திட வேண்டுமென்ற பரபரப்பு அனலாய்த் தகிக்கிறது உள்ளுக்குள் ! இதன் பொருட்டு எக்கச்சக்கமான தேடல்கள் ; லோடு லோடான கதைக் கோரல்கள் ; வண்டி வண்டியாய் பிரிண்ட்-அவுட்கள் ; தலையணைக்குப் பதிலாய் மொத்த மொத்தமாய் புதுக்கதைகள் என்று கடந்த மூன்று வாரங்களும் தடதடத்துள்ளன ! “மார்ச் ‘19-ல் ஜம்போ சீஸன் 2-ன் கதைகள் அறிவிக்கப்படும் !” என்று கெத்தாக விளம்பரத்தைப் போட்டு வைத்திருக்க – முதல் 4 ஸ்லாட்களுக்கு அதிகம் குளறுபடிகளின்றி கதைத் தேர்வுகள் தாமாய் அமைந்து போயின ! அவை ஒவ்வொன்றுக்குமே ஒரு அடையாளம் இருப்பதாய் எனக்குப்பட்டது!
⍐ இளம் டெக்ஸ் – காலத்தின் கட்டாயம் !
⍗ ஜேம்ஸ் பாண்ட் # 3 – நவீனத்தின் அடையாளம் !
⍗ லக்கி லூக் கிராபிக் நாவல் –கார்ட்டூன் படைப்புலகின் இன்னொரு முகம் !
⍗ மார்ஷல் சைக்ஸ் – வன்மேற்கின் yet another யதார்த்தப் பார்வை - இம்முறையோ ஒரு தடுமாறும் ஹீரோவுடன்!
ஆக எஞ்சி நின்ற 2 ஸ்லாட்களுள் புகுத்த – தற்போதைய பாராளுமன்றத் தேர்தல் கூட்டணிக்கு முண்டியடிக்கும் குட்டிக் கட்சிகள் போல ஏகப்பட்ட one-shots / தொடர்கள் கைதூக்கி நிற்பது புரிந்தது ! ஒவ்வொரு ஆண்டுமே ஜுலைவாக்கில் தொடங்கும் கதை வேட்டையானது இம்முறை ஜம்போவின் பெயரைச் சொல்லி ரொம்ப முன்கூட்டியே துவங்கியிருக்க – மண்டையெல்லாம் காய்ந்து போய் விட்டது – ஒவ்வொரு மெகாப் பதிப்பகமும் இடைப்பட்டுள்ள இந்த ஏழெட்டு மாதங்களுக்குள் குவித்துத் தள்ளியிருக்கும் ஆல்பங்களின் variety-களைப் பார்த்த போது ! ஜம்போ தவிர்த்து – “ஈரோடு ஸ்பெஷல்” என்றதொரு வாய்ப்பும் காத்திருக்க, “இந்தக் கதையை இங்கே நுழைக்கவா?” அந்தத் தொடரை அங்கே புகுத்தவா?” என்ற குழப்பத்தில் சட்டையைக் கிழிக்காத குறைதான் ! இதில் வேடிக்கை என்னவெனில் காலியுள்ள shots மொத்தமே 4 தான் & கைவசமுள்ள பட்ஜெட்டுமே மிதரகம் தான் ! ஆனாக்கா – “ஐஃபெல் டவரை வாங்கிப்புடலாமா ? வெள்ளை மாளிகையை ஒத்திக்குக் கேட்கலாமா ?” என்றபடிக்கு பாயைப் பிறாண்டிக் கிடப்பதைப் பார்க்க எனக்கே சிப்பு-சிப்பாய்த் தான் வருது ! ஆனால் என்ன செய்ய ? திருவிழாவில் கலர் கலராய் பலூன்களையும், பானங்களையும், பொம்மைகளையும் பார்க்கும் போது அத்தனையையும் சொந்தமாக்கிட வேண்டுமென்ற ஆசை யாரைத் தான் விட்டது ?! இதில் இன்னொரு மெகாக் கொடுமை என்னவெனில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்குள் அங்கும், இங்கும் வாங்கிப் போட்ட கதைகளுமே ஒரு கணிசமான கையிருப்பில் உள்ளன ! அவற்றைக் கொண்டே ஜம்போவின் மிஞ்சிய 2 ஸ்லாட்களையும் மட்டில்லாது ஈரோடு / பொள்ளாச்சி / உடுமலைப்பேட்டை ஸ்பெஷல்களையும் கூடத் தயார் செய்து விடலாம் தான் ! ஆனால் current ஆகக் குவிந்து வரும் கதைகள் என்னவென்று பார்த்திடும் ஆர்வம் ஆட்டிப் படைப்பதால் – ஆந்தைவிழிகளை பரபரக்க அனுமதித்து வருகிறேன்!
பொதுவாய் வேக வேகமாய் கதைகளை வரவழைத்து பிரிண்ட் போட்ட கையோடு அவற்றை கெத்தாய் ; கொத்தாய், கத்தையாய் வீட்டுக்குத் தூக்கிப் போன கையோடு படித்து, முடித்து, பரிசீலித்து விட வேண்டுமென்று எனக்கே சொல்லிக் கொள்வேன் தான் ! ஆனால் நடுராத்திரியில் 10 பக்கங்களைப் புரட்டுவதற்குள் – 20 கொட்டாவிகள் பிராணனை வாங்கிடுவதும் ; தலைமாட்டிலேயே பக்கங்களையும் கிடத்திய கையோடு குறட்டை லோகத்துக்கு டிராவல் பண்ணுவதுமே நடைமுறைகள் தான் ! பொதுவாய் கதைகளின் சுவாரஸ்யமோ – சுவாரஸ்யமின்மையோ இதற்கொரு காரணமாய் இருப்பதில்லை ; ஏழு கழுதை வயதின் தாக்கமே கொட்டாவிகளின் புண்ணியப் பின்னணி ! ஆனால் முதல் முறையாக ஒரு 132 பக்க ஆக்ஷன் த்ரில்லரை கையிலேந்திய 30 நிமிடங்களுக்குள் மெய்மறந்து படிக்க சாத்தியமாயிற்று நேற்றைக்கு ! அதைப் படித்து முடித்த கையோடு எனக்குள் ஓட்டமெடுத்த எண்ணங்களைச் சுடச் சுட பதிவாக்கவும் செய்கிறேன் – உங்களிடம் கேட்க அது சார்ந்த கேள்விகள் எனக்கிருப்பதால் !! பில்டப்புகளின் பெரியண்ணன் நான் என்பதில் ரகசியங்கள் லேது ! “துயிலெழுந்த பிசாசு” கதைக்கே ஆனை-பூனை என்ற intro தந்தவன் தானே ? So வழக்கம் போல இம்முறையும் சிலாகிப்புப் படலத்துக்குள் நான் வரிந்து கட்டிக் கொண்டு நுழையும் போது – நீங்கள் கொட்டாவி விடத் தொடங்கினால் நிச்சயம் ஆச்சர்யப்பட மாட்டேன் ! ஆனால் trust me when I say this guys – இது “புலி வருது” சமாச்சாரமல்ல ; புலியே தான்! (இதுவொரு உவமையே தவிர, புலியென்ற மறுநொடியே - "தங்கத் தலைவன் மறுக்கா வர்றாருடோய்!” என்று யூகித்திட வேண்டாமே – ப்ளீஸ்?!)
பொதுவாய் நாம் பார்த்தும், ரசித்தும் வரும் ஆக்ஷன் த்ரில்லர்களில் / டிடெக்டிவ் த்ரில்லர்களில் ஒரு மத்திய நாயகரோ – நாயகியோ இருப்பதுண்டு ! போலீஸ் இலாக்காவினில் அதிரடியாளராக வலம் வர, கெத்தாய் துப்பு துலக்கி – க்ளைமேக்ஸில் வில்லன் கோஷ்டியை முட்டியில் தட்டி – “சுபம்” போட உதவிடுவர் ! நான் படிக்க நேர்ந்த இந்தக் கதையிலுமே களம் கிட்டத்தட்ட அதே போலத் தான் என்று வைத்துக் கொள்ளுங்களேன் ! அமெரிக்காவின் வாஷிங்டன் D.C. போலீஸ் இலாக்காவின் டீம் நடுநாயகமாய் இந்த ஆல்பம் முழுக்க பயணிக்கிறது ! Star TV ; HBO போன்ற இங்கலீஷ் சேனல்களில் அமெரிக்க குற்றப் புலனாய்வு சீரியல்களைப் பார்த்துப் பழகியிருப்போருக்குப் பரிச்சயமாகியிருக்கக் கூடிய பாணியில் இங்கே கதை நகர்த்தலுள்ளது ! மிகைப்படுத்தல்களின்றி ; போலீ்ஸ் டிடெக்டிவ்களை சூப்பர்-டூப்பர் ஹீரோக்களாகக் காட்டிடாது – அவர்கள் இலாக்காவினுள் சந்திக்கும் சவால்கள்; மேலதிகாரிகளோடு நேர்ந்திடும் உரசல்கள் ; ஒரு புலனாய்வை அதன் அத்தனை யதார்த்தப் பரிமாணங்களோடும் முன்எடுத்துச் செல்லும் பாங்கு – என்று இந்த ஆல்பம் ஒரு டி-வி சீரியலைப் போல தட தடக்கிறது !
- எனது கேள்வி # 1: : ஒரு க்ரைம் த்ரில்லரின் யதார்த்த முகத்தையும் தரிசிக்க / ரசிக்க நாம் தயாரா ? என்பதே ! இது சத்தியமாய் நாம் இதுவரைக்கும் (நமது காமிக்ஸ்களில்) சந்தித்திரா ரகம் guys ! ஆனால் சந்திக்க வேண்டுமென்று நான் விரும்புமொரு ரகம் !! போலீஸ் பணிகளோடு இணைத்தடமாய் ஓடும் அரசியல் ; அதன் குறுக்கீடுகள் என்றும் படு இயல்பான இழைகளே கதைநெடுக எனும் போது, ஒரு மாமூலான “காமிக்ஸ் க்ரைம் த்ரில்லர்” சமாச்சாரங்களிலிருந்து இது மாறுபட்டுத் தெரியும் ! அதற்காக தூர்தர்ஷனின் டாக்குமென்ட்ரி படம் போல வறண்ட களமல்ல இது ! பக்கம் 1-ல் ஆரம்பிக்கும் ஓட்டமானது 132-ல் நிறைவுறும் போது நமக்கே மூச்சிரைக்கத் தான் செய்யும் ! So கதையில் இம்மி கூடத் தொய்வு நஹி ; ஆனால் கதை சொல்லியுள்ள பாணி நமக்கு ரொம்ப ரொம்பப் புதுசு ! So ஆண்டாண்டு காலமாய் நாம் பார்த்து வந்திருக்கும் "காமிக்ஸ் போலீஸ் டிடெக்டிவ்" கதைகளைத் தற்காலிகமாகவேணும் மறந்துவிட்டு - இந்த யதார்த்த உலகினுள் நுழைந்து பார்க்க ரெடியா guys ?
எனது கேள்வி # 2 – ஒரு அதிரடி ஆல்பத்தை அட்டகாசமாய் ரசித்திட அதன் சித்திரங்களின் பங்கு எத்தனை சதவிகிதம் என்பீர்கள் ? என்பதே ! இங்கே ஓவியங்கள் – வில்லியம் வான்ஸின் தரத்திலோ ; பராகுடாவின் பிரம்மாண்டத்திலோ ; சிவிடெல்லியின் அழகிலோ நிச்சயமாய் இல்லை ! ஆனால் அதற்காக “மோசம்” என்றும் சொல்வதற்கில்லை ! இப்படி வைத்துக் கொள்வோமே : இதே ஆல்பத்துக்கு சித்திரங்களை இன்னும் சற்றே தேர்ந்ததொரு ஓவியர் போட்டிருந்தால் – அள்ளியிருக்கும் என்பதில் no மாற்றுக் கருத்துக்கள் ! தற்போதைய ஓவியர் ஒரு decent தரத்திலேயே பக்கங்களை நகர்த்தியுள்ளார் என்றாலும், சமீபமாய் நாம் பார்த்தும் பழகியும் வந்துள்ள ஓவிய அளவுகோல்களை இங்கே இட்டுப் பார்க்கும் பட்சத்தில் ஒரு மாற்று குறைச்சலாய் தென்படும் தான் ! அதனைப் பெரிதுபடுத்தாது இந்த ஆல்பத்தை வாங்க நாம் முயற்சிப்போமா folks ? அல்லது "மித சித்திரங்களெனில் மறுக்கா யோசிக்கலாம் !” என்பீர்களா?
கேள்வி # 3 : கதையோட்டமும், சொல்லப்பட்டிருக்கும் விதமும், களமும் நிச்சயமாய் சற்றே புருவங்களை உயரச் செய்யும் தான் ! தெறிக்கும் வன்முறை ; யதார்த்த குற்றவுலகின் விகார முகம் என்று முகத்தில் அறைந்தாற் போல கதை சொல்லியுள்ளனர் எனும் போது “18+ வாசகர்களுக்கே உகந்தது” என்ற ஸ்டிக்கர் அவசியப்படலாம் ! இதனை எவ்விதம் பார்த்திடுவீர்களோ guys ? “ஜனரஞ்சகத்தை விட்டு சிறுகச் சிறுக விலகுகிறோம் ! இந்தப் போக்கு நம் பயணத்துக்கு சுகப்படாது!” என்பீர்களா? அல்லது – வாசக வட்டத்தின் தற்போதைய அகவைகளையும் ரசனைகளையும் மனதில் கொண்டு - "இத்தகைய முதிர்ந்த பாணிகளைத் தேடிப் போவது தப்பில்லை !" என்பீர்களா ? அதே போல தொட்டதுக்கெல்லாம் “முன்பதிவுக்கு மட்டுமே” என்ற அஸ்திரத்தைக் கையிலெடுக்க எனக்கு அத்தனை இஷ்டமில்லை என்பதில் இரகசியமில்லை folks ! ஆனால் – இது மாதிரியான கதைகள் எந்தவொரு சந்தாப் பிரிவினுள்ளும் கட்டாயத் திணிப்பாய் இல்லாது – “பிடித்தால் வாங்கிக்கலாம்” என்று அமைவதே நல்லதென்பீர்களா? Enlighten me please…!
ஏகப்பட்ட புதுக்கதைகளைப் படிக்கத் தொடங்கும் போது ஆரம்பம் பிரமாதமாக இருந்திடுவதுண்டு ! "ஆஹா… இதைப் போடறோம் ; ஹிட் அடிக்கிறோம்; வாசகர்கள் பாராட்டும் போது அதெல்லாம் ஒண்ணுமில்லீங்கோ… எல்லாமே கதாசிரியரின் கைவண்ணம் !” என்று ஜாலியாய்ப் பதிவிடுகிறோம்!” என்ற ரேஞ்சிற்குக் கற்பனையில் திளைத்திடுவதுண்டு ! ஆனால் பாதிக் கதையைத் தாண்டும் போதே – தம்மாத்துண்டு மாவை மட்டுமே கையிருப்பில் வைத்துக் கொண்டு படைப்பாளிகள் வடை சுட வந்திருப்பது புரியத் துவங்கிட்டால் “ஙே” என்ற முழியே மிஞ்சிடும் ! கதையை முடிக்கும் போது யாரையாச்சும் மூக்கில் குத்துவோமா ? என்பது மாதிரியானதொரு இனம் சொல்லத் தெரியா எரிச்சல் ஓட்டமெடுக்கும் ! So இம்முறையும் அதே பாணியில், இந்தக் கதையின் அட்டகாச ஆரம்பத்தைப் பார்த்த கணமே எனக்குள் சன்னமாய் ஒரு வேண்டுதல் துளிர் விட்டது! “தெய்வமே… இதுவுமொரு பப்படமாய் முடிந்திடக் கூடாதே!” என்று ! பக்கங்களைப் புரட்டப் புரட்ட கதையில் பரபரப்பு ஒரு பக்கமெனில் – அதைக் கடைசி வரைக்கும் தொய்வின்றிக் கொண்டு செல்லும் ஆற்றல் கதாசிரியருக்கு வாய்த்திருக்க வேண்டுமே என்ற எனது பதைபதைப்பு இன்னொரு பக்கம் ! “சுபம்” என்ற வேளையைத் தொட்டு நின்ற போது எனக்குள் 90% நிறைவு !! நூற்றுக்கு - நூறு ; சதம் ; என்றெல்லாம் பீலா விட மாட்டேன்; ஆனால் 90% மார்க் போடத் தயங்கவும் மாட்டேன் !
இந்தக் கதையினை வாங்க நீங்கள் பச்சை விளக்கை ஆட்டிடும் பட்சத்தில் நிச்சயமாய் இன்னொரு ஒத்தாசையும் செய்ய வேண்டியிருக்கும் guys ! ஐரோப்பியப் படைப்பாளிகளின் கைவண்ணம் இதனில் இருப்பினும், இது முற்றிலும் அமெரிக்க மண்ணில் அரங்கேறும் அதகளமெனும் போது – கதைநெடுக பயன்படுத்தப்பட்டிருக்கும் மொழிநடை true blue yankee ரகமே ! அதுவும் போலீஸ் புலனாய்வு சார்ந்த கதையெனும் போது – வசனங்கள் செம crisp ! நிச்சயமாய் அமெரிக்கப் பேச்சுவழக்கில் புரிதலும், பரிச்சயமும் கொண்டதொரு திறன் வாய்ந்த மொழிபெயர்ப்பாளராலே தான் இந்தக் கதைக்கு நியாயம் செய்திட முடியும் ! So உங்களுள் யார் அந்த அமெரிக்க மாப்பிள்ளை ? சாரி… சாரி… அமெரிக்க மொழிபெயர்ப்பாளர் ? என்பதே எனது கேள்வி ! அல்லது - இப்பணிக்கென தேர்ந்த எழுத்தாளர்களுள் யாரையேனும் பரிந்துரைப்பீர்களா ? சராசரிகளுக்கெல்லாம் ரொம்ப ரொம்ப மேலுள்ள மொழித்தரம் இங்கே அத்தியாவசியம் என்பதால், இந்த ஆல்பத்தை நாம் கையிலெடுக்கத் தீர்மானித்தால் அதற்கான ஏற்பாடுகளும் கையிலிருப்பது கட்டாயமாகிடும் guys !
உப்ப்ப் ! “பில்டப் பரமானந்தா” அவதார் நீண்டு கொண்டே போகிறதென்று உறுத்தினாலும், இன்றைக்கு உங்களை விடுவதாகயில்லை ! மேலும் ஒரு கேள்வி waiting ! இதுவோ – இன்னொரு முற்றிலும் புதியதொரு ஆல்பம் சார்ந்தது !! So உங்களின் ஞாயிறு காலைத் தேநீர்க் கோப்பை காலியாகியிருக்கும் பட்சத்தில் – வீட்டில் இன்னுமொரு அரை கப் மட்டும் வாங்கி விட்டுப் படிக்கத் தொடருங்களேன்?
“ஒரு நல்ல கார்ட்டூன்” என்று அடையாளப்படுத்திட உங்களது அகராதியில் என்னவெல்லாம் இடம்பிடித்திட வேண்டுமென்பீர்கள் folks ?
- பக்கத்துக்குப் பக்கம் சிரிப்பு வெடிகள் சிதற வேண்டும் !
- வேடிக்கையான சித்திர பாணி கட்டாயம் தேவை !
- ஜாலியான களம் இருக்கணும் !
மேற்படி 3 புள்ளிகளுமே தேவை தான் – இல்லையா ?
சரி, ஓ.கே…. “ஒரு விறுவிறுப்பான கதை” என்று சொல்லிட என்னவெலாம் அத்தியாவசியப்படக் கூடும் folks?
- பஞ்சமிலா ஆக்ஷன் !
- சுறுசுறுப்பான கதை நகர்த்தல் !
- படித்து முடிக்கும் போது ‘அட‘ என்ற புருவ உயர்த்தல் சன்னமாகவேணும் நிகழ்ந்திட வேண்டும் !
ரைட்டு ! இப்போது முதல் மூன்றில் கொஞ்சமும், இரண்டாவது மூன்றில் கொஞ்சமுமாய் சேர்ந்தொரு ஆல்பம் அமைந்தால் அதை என்னவென்பது? “ஒரு விறுவிறுப்பான கார்ட்டூன்” என்றா ? அல்லது “ஒரு ஜாலியான விறுவிறுப்பு” என்றா ? சரி – என்னமோவொரு பெயரை யோசித்துக் கொள்வோமென்றே வைத்துக் கொள்ளுங்களேன் ! சரி- இந்த ஆராய்ச்சியெல்லாம் ஏனோ ? என்ற கேள்வியா உங்கள் வசம் ? Simple guys – சமீப வாசிப்புகளின் ஒரு அங்கமாய் புதியதொரு நெடும் one-shot கையில் சிக்கியது ! சிரிக்கவும் செய்து, சிந்திக்கவும் வைத்தது ! லக்கி லூக் பாணியிலோ ; மேக் & ஜாக் ஸ்டைலிலோ ரெண்டு பக்கத்துக்கொரு gag ; ஒரு வெடிச் சிரிப்பு என்றெல்லாம் இருக்கவில்லை – ஆனால் கதை நகர்த்தலுக்குத் தேவைப்படும் மாந்தர்களுள் சிலர் இயல்பாகவே காமெடி பீஸ்களாக அமைந்திருக்க, அவர்கள் தலைகாட்டும் தருணங்களில் சிரிப்புத் தோரணங்கள் களைகட்டுகின்றன ! அதே சமயம் சொல்ல வரும் கதையின் தன்மை செம வலுவானதெனும் போது, காமெடிகளின் ஒட்டுமொத்த இலகுத்தன்மை இங்கே இராது ! மாறாக – ரொம்பவே intense ஆனதொரு வாசிப்பை இது கோரிடும் ! My questions here are :
- இப்படியொரு hybrid கதை பாணியை ரசிக்கலாமென்று தோன்றுகிறதா guys?
- “ஒரு கார்ட்டூன் ஸ்பெஷல்” என்ற இடத்தினில் இந்த “ஜாலியான விறுவிறுப்பு” இடம்பிடிக்க அனுமதிக்கலாமா?
- குழம்பு ருசியாக உள்ளவரைக்கும் சமையல் பாணி நம்மூர் ரகமா ? வடநாட்டு ரகமா? என்றெல்லாம் பார்க்கத் தேவையில்லை என்பீர்களா ? அல்லது – நாம் ரசித்துப் பழகிய அதே சாம்பாரையும், ரசத்தையும் நோண்டுவானேன் ? என்பீர்களா guys ?
- “ஓவர் விஷப்பரீட்சை உடம்புக்கு ஆகாது !” என்பதே எனக்கான உங்களது பரிந்துரையாக இருக்குமா ? அல்லது – “போவோமே… போய்த் தான் பார்ப்போமே!” என்பீர்களா guys?
சரி- இந்த பில்டப்பெல்லாம் எந்தெந்தக் கதைகளுக்கானவை என்று கேட்கிறீர்களா ? உங்கள் பதில்களுக்கேற்பவே நமது ஏற்பாடுகள் அமைந்திட வேண்டும் & அவற்றின் பின்னர் படைப்பாளிகள் மனது வைத்தாலே இவை நனவாகிடும் என்பதால் இப்போதைக்கு பில்டப் பரமானந்தாவுடன், பெவிகால் பெரியசாமியே கைகோர்த்துக் கொள்கிறான் ! ஆனால் நாமொரு மரியாதைப்பட்ட முன்மொழிவைப் படைப்பாளிகளிடம் ஒப்படைத்தால் கதைகளை வாங்கிடுவதில் சிரமங்கள் இராது என்றே தோன்றுவதால் தற்சமயம் வாசக சமூகங்களின் பிரியங்களே பிரதானம் என்ற சூழல் ! So ப்ளீஸ்… ஞாயிறின் தூக்கத்தைத் தொடரும் முன்பாய் உங்களின் அபிப்பிராயங்கள் ப்ளீஸ் ! சிம்பிளாய் மட்டுமே பதில் சொல்ல நினைப்போர் - "குரங்கு சேட்டை இப்போ தேவை நஹி !!" என்றோ - "ஆட்ரா ராமா...தாண்ட்ரா ராமா !!" என்றோ சொன்னால் கூடப் போதும் - புரிந்து கொள்வேன் ! மற்றபடிக்கு விவரமாய் கருத்துக் சொல்ல விழையும் நண்பர்களும் - most welcome !! Am all ears here !!
அப்புறம் – ஓவியர் ஹெர்மனின் one-shot ஆல்பங்கள் ஏகமாய்த் ததும்பிக் கிடப்பதைப் பார்க்க முடிகிறது ! அவரது மகனான Yves கதையெழுத – தந்தை சித்திரம் தீட்ட – எக்கச்சக்கமான ஜானர்களில் இந்தக் கூட்டணி கலக்கி வருகிறது ! (Yves ஏற்கனவே நமக்குப் பரிச்சயமே; கேப்டன் பிரின்ஸின் ஆல்பமொன்றிலும், XIII – இரண்டாம் சுற்றிலும் கதாசிரியராய்ப் பணியாற்றிய வகையில்) So இந்த பிரான்கோ-பெல்ஜிய ஜாம்பவான்களின் கதைகளை விதவிதமாய் ரசிக்கத் தேவையான ரோடு போட ஜல்லி ; தார் ; சிமெண்ட் என சகலமும் ரெடி! ஜல்லியை விரித்து, தாரைத் குழைக்க வாகான வேளைக்கு மட்டுமே வெயிட்டிங் ! ஏற்கனவே சில கதைகள் கைவசமிருக்க, தற்போது இன்னும் சிலவற்றில் துண்டை விரித்து வைத்துள்ளோம் என்பதால் – தொடரும் சந்தர்ப்பங்களில் பலரகப்பட்ட ஹெர்மென் ஸ்பெஷல்கள் on the way ! ஜெரெமியா தொடரில் சற்றே ஜெர்க்கடித்துக் கிடக்கும் நண்பர்களும் கூட இந்த one-shots களை ரசித்திடச் சிரமப்பட மாட்டார்களென்பது எனது கியாரண்டி !
Before I sign out - மார்ச் இதழ்கள் & others பற்றிய updates :
1. ஜேம்ஸ் பாண்டின் ஜம்போ (Season 1) – முழுவண்ணத்தில் ரெடி ! இத்துடன் சீசன் 1 நிறைவுறுகிறது !!
2. அப்புறம் மாறுவேஷச் சிங்கம் ; துப்பறியும் புலியுமே முழுவண்ண மறுபதிப்பில் ரெடி ! Herlock Sholmes !!
3. இரவுக் கழுகார் மிரட்டலாயொரு 260 பக்க சாகஸத்தோடு waiting – எடிட்டிங்கின் பொருட்டு !
4. Ditto – “"முடிவிலா மூடுபனி"” கிராபிக் நாவலுக்கும் !
5. அப்புறம் - இதோ ஜம்போ சீசன் 2-ன் இறுதிப் பட்டியல் ! தி லோன் ரேஞ்சரின் ஒரு முழுவண்ண-முழுநீள ஆல்பம் slot # 5-ஐக் கைப்பற்ற - கடைசி சீட்டைத் தனதாக்கிக் கொள்வதொரு அதிரடி ஆக்ஷன் த்ரில்லர் ! மர்ம மனிதன் மார்ட்டின் பாணியில் இங்கே ஒரு மெர்செலாக்கும் கதைபாணி வெயிட்டிங் ! :"கால வேட்டையர்" - உங்கள் உள்ளங்களை வேட்டையாட - சீசன் 2-ன் முதல் இதழாக ஏப்ரலில் களமிறங்குகிறது !! So இன்னமும் ஜம்போ - சீசன் 2-ன் சந்தாவில் இணைந்திரா நண்பர்கள் இனியும் தாமதித்திட வேண்டாமே - ப்ளீஸ் ?
அது சரி - ஜம்போவின் இடங்களை முழுசாய்ப் பூர்த்தி செய்தான பிற்பாடு மேலே பத்தி பத்தியாக கடைவிரித்துள்ள இதழ்கள் தேர்வாயின் அவற்றை எங்கே நுழைப்பதாம் ? என்ற கேள்வி ஓடுகிறதா உங்களுள் ? இருக்கிறதே slots - "ஈரோடு ஸ்பெஷலில் " !!
6.
நாகர்கோவிலில் பிப்ரவரி 15 to 25 வரை நடைபெற்றிடும் புத்தக விழாவினில் நமது ஸ்டால் நம்பர் 100 guys ! And இங்கேயும் நமது CINEBOOK ஆங்கில காமிக்ஸ் இதழ்களும் விற்பனைக்கு (கொஞ்சமாய்) இருக்கும் ! அந்தப் பக்கத்து நண்பர்கள் ஒரு visit அடிக்கக் கோருகிறோம் !! Please do drop in folks !!
திருமணத்து ஜாலிகள் நிறைவுற்ற பின்பாக 2 black & white இதழ்களையுமே பரபரவென பணிகளுக்கு உட்படுத்தினால் – பிப்ரவரி 28-க்கு டெஸ்பாட்ச் சாத்தியமே என்று தோன்றுகிறது ! Too early for now – அதனால் சாம்பார் வாளியைத் தேடிப் புறப்படுகிறேன் இப்போதைக்கு! See you around all ! Have a fun Sunday !