நண்பர்களே,
உஷார் : இது மாமூல் பதிவல்ல !!!
வணக்கம். நொய்-நொய்யென்று பத்தி பத்தியாய் பதிவுகளை எழுதித் தள்ளிடும் பழக்கத்திலிருந்து இந்த வாரம் ஒரு சின்ன பிரேக் ; படங்களே இம்முறை நமக்குப் புகலிடமாக இருந்திடப் போகின்றன !! என்ன படங்களென்று கேட்கிறீர்களா ? சொன்னால்ப் போச்சு !!
சமீப காலங்களில் நமது காமிக்ஸ் ரசனைகளை ஒட்டு மொத்தமாய் குத்தகைக்கு எடுத்திருப்பவர்கள் வன்மேற்கின் முரட்டுக் கௌபாய்களே என்பதில் no secrets !! நம்ம உசிலம்பட்டிக்கு வழி தெரியுமோ இல்லையோ - நம்மில் பலருக்கு ஓக்லஹோமா எங்கிருக்கென்று தெரியும் ! இங்கிருக்கும் தாராபுரத்தைக் கண்ணில் கூடப் பார்த்திராதோருக்கும் டெக்ஸாஸ் ரொம்பவே பரிச்சயம் ! நெய்வேலிக்குப் பக்கத்து ஊரெது என்று தெரியாவிடினும், நமக்கு நெப்ராஸ்க்கா பற்றி நன்றாகவே தெரியும் ! So இந்த காமிக்ஸ் வன்மேற்கோடு ஊறிப் போன நமக்கு - அந்நாட்களது நிஜ வன்மேற்கையும் ஆராயப் பிடிக்குமென்று பட்டது !! அதன் பலனாய் நெட்டை நோண்டிய போது சிக்கியவைகளே இந்தப் புகைப்படப் பொக்கிஷங்கள் !! ஜாலியாய் ஒரு ரவுண்ட் அடிப்போமா guys - ஸ்டேஜ்கோச் ஒன்றில் ஏறி ?
சக்கரங்கள் 4 .....குதிரைகளும் 4 ...சவாரி செய்வோரோ....????
அமெரிக்கா ஒரு அகண்ட பூமி எனும் போது அங்கே பயணங்கள் துயரங்களுக்கான உத்திரவாதத்தோடு தான் வந்தன ! தண்டவாளங்கள் நிர்மாணிக்கப்பட்டு, அவற்றின் மீது ரயில் எஞ்சின்கள் தட தடக்கத் துவங்கிய வரையிலும், நெடுந்தொலைவுகளைக் கடக்க ஸ்டேஜ் கோச் ஒன்றே மார்க்கம் என்றாகிப் போனது !! காமிக்ஸ் கதைகளில் நாம் பார்த்து ரசிக்கும் சவுகரியமான சமாச்சாரங்களல்ல இவை என்பது தொடரும் போட்டோக்களைப் பார்க்கும் போதே புரிந்திடுமென்று நினைக்கிறேன் !! இம்மி இடம் கூட காலியிடம் இல்லாது - வண்டியின் உள்ளேயும் சரி, வெளியேவும் சரி ஜனம் நெருக்கியடித்து அமர்ந்திருப்பதைப் பாருங்களேன் ? "நடமாடும் நரகம்" இதழில் நமது 'தல' சிட்டிங்கில் வருவது ஏனென்று இப்போது புரிகிறது !!! கற்பனை பண்ணித் தான் பாருங்களேன் - இந்த முதல் போட்டோவிலுள்ள கோச்சு வண்டியில் நம்மவரை !!
அது மாத்திரமன்றி, டாப்பில் ; டிக்கியில் என்று சரக்கு பண்டல்களைப் போட்டுக் குமிக்கும் இன்றைய நமது ஆம்னி பஸ்களுக்கு முன்னோடிகள் அந்நாட்களிலேயே இருந்ததும் தெளிவாகிறது ! வண்டியின் பின்பக்கம் ஏற்றப்பட்டிருக்கும் பொதியினை பார்த்தாலே கிறுகிறுக்கிறது !! தகிக்கும் வெப்ப நாட்களில் பாலைவனங்களையும், பள்ளத்தாக்குகளையும் இவை லொடக்கு-லொடக்கென்று கடப்பதற்குள் அந்தப் பயணிகள் பட்டிருக்க வேண்டிய அவஸ்தைகளை கற்பனை செய்து பாருங்களேன் ? நாம் என்னடாவென்றால், இன்றைய AC ஸ்லீப்பர் பஸ்களில் மெத்தை சொகுசாயில்லை என்று விசனப்பட்டுக் கொள்கிறோம் !!
|
எத்தனை தபா ஜாலி ஜம்பரை இப்படிப் பார்த்துள்ளோம் ?!!
|
வன்மேற்கின் வசதிகள் !!
அதற்காக அந்நாட்களில் ஒட்டு மொத்தமாய் வாழ்க்கையே போராட்டமாய் இருந்ததென்றும் சொல்ல முடியாது போலும் ! பாருங்களேன் பளிச்சென்று டாலடிக்கும் அந்நாட்களது ஹோட்டல் ஒன்று ! Maybe டெக்ஸும், கார்சனும் இது போன்ற விடுதிகளில் தங்கித் தான் வறுத்த கறியை வெளுத்து வாங்குவரோ - என்னவோ ?
|
அந்நாட்களது வெள்ளையர் குடும்பத்தில் ஒன்று....! அபாச்சே பணியாளுடன் ! |
|
அன்றைய பள்ளிக்கூடம் !! இதில் தான் சுட்டி லக்கி படித்திருப்பானோ ? |
சலூன்களில்....!
நகரங்களும், நாகரீகங்களும் வேர் விடத் துவங்கிய பிற்பாடு நமது கௌபாய்களுக்கு தாகசாந்தி முக்கியமன்றோ ? பொழுது போக்கென்று வேறெதுவும் இல்லா அந்நாட்களில் சலூன்களில் 'சரக்கடிப்பது' ; சீட்டாட்டம் ; சூதாட்டம் ; குத்தாட்டம் என்று ஏகமாய் ரகளை கட்டியுள்ளது ! அடுத்த முறை நமது கதைகளில் சலூனில் தகராறு அரங்கேறும் காட்சிகள் வந்தால், அவற்றை இன்னமும் தத்ரூபமாய் உருவகப்படுத்திட இந்த போட்டோக்கள் உதவிடுமென்று படுகிறது !! So ஒரு லக்கி லூக் பார் கண்ணாடியைப் பார்த்துக் கொண்டே சுடுவதையோ ; ஒரு டைகர் சீட்டாட்ட மேஜையிலிருந்து கொண்டே ஏழரையை இழுத்து விடுவதையோ ; நம்ம 'தல' கம்பீரமாய் சவால் விடுவதையோ இந்த நிஜங்களோடு இணைத்திடும் போது, நிச்சயம் ஒரு சதவிகிதமாவது த்ரில் factor கூடிடும் - at least எனக்காவது !
|
அன்றைய டான்ஸ் அழகிகள் !! |
சட்டமும்....குற்றமும்...!
அந்நாட்களில் பூமியும் கரடுமுரடாயிருந்தது ; போக்கிரிகளும் கரடு முரடாயிருந்தனர் ; சட்ட பரிபாலனமுமே அதே லட்சணத்தில் தான் இருந்துள்ளது ! சிக்கிடும் முதல் புளிய மரத்திலோ, ஆலமரத்திலோ கழுத்தில் சுருக்கைக் கட்டித் தொங்க விடுவது மக்களுக்கொரு ஆதர்ஷப் பொழுதுபோக்காக இருந்து வந்துள்ளது ! கீழே உள்ள முதல் போட்டோவில் இருப்பது வன்மேற்கின் பிரசித்தி பெற்றதொரு நபரான ராய் பீன் எனும் நீதியரசரின் (!!!) நீதிமன்றம் ! அதாவது சலூனாய் இல்லாத நேரங்களில் நீதிமன்றமாக டபுள் ஆக்ட் கொடுத்ததென்று வைத்துக் கொள்ளலாம் ! சுவாரஸ்யமான இந்த ஆசாமியின் சட்ட ஞானமும் சரி ; தீர்ப்பு வழங்கும் துரிதமும் சரி - இன்றைய நீதியரசர்களைப் புல்லரிக்கச் செய்யும் ரகம் !! Revised Statutes of Texas என்ற ஒரேயொரு சட்டப் புத்தகம் மட்டுமே இவருக்குத் துணையாம் ; அதிலிருந்து மனுஷன் என்ன புரிந்து கொள்கிறாரோ - அதுவே அன்றைக்குத் தீர்ப்பு !! சட்டு புட்டென்று கேஸை முடித்து விட்டு சலூனை ஓட்டும் அவசரமோ - என்னவோ ? (இவர் சார்ந்ததொரு சாகசம் நமது லக்கி லூக் தொடரில் உள்ளது ; maybe அடுத்த வருஷம் அதை முயற்சித்துப் பார்க்கலாமா ?)
|
இந்த ஆசாமி யார் தெரியுமோ ? "கோச் வண்டியின் கதையில்" ஒரு வெள்ளை முகமூடி போட்டுக் கொண்டு கவிதை சொல்லியே கொள்ளையடிக்கும் ஒரு வில்லன் வருவானல்லவா ? அவனே இவன் ; இவனே அவன் !! பெயர் சார்லஸ் ஏர்ல் பௌல்ஸ் (அல்லது) ப்ளாக் பார்ட்) |
|
ஜெஸ்ஸி ஜேம்ஸ் |
|
1897 -ல் விர்ஜினியாவில் நடைபெற்ற கடைசி பொதுவெளித் தூக்குத்தண்டனை ! தூக்கு மேடைக்கு மேலேயும் சரி,,,கீழேயும் சரி, என்னவொரு கூட்டம் !!
வேகன் டிரெயின் ; அப்புறம் நிஜ டிரெயின் :
|
ஒற்றை ஸ்டேஜ் கோச் பற்றாது ; குடும்பங்கள் மொத்த மொத்தமாய் இடம் பெயரும் அவசியங்கள் நேரும் போது - வேகன் டிரெயின்களே பயன்படுத்தப்பட்டன ! (லக்கி லூக் Newlook ஸ்பெஷலின் கதை நினைவுள்ளதா ?) வரிசை கோர்த்து வண்டிகளில் மக்கள் புலம் பெயர்ந்தது அமெரிக்காவின் வரலாற்றில் ஒரு கஷ்டப் பக்கம் ! அப்புறமாய் இரும்புக் குதிரைகள் தலைகாட்டத் துவங்கிய பின்னே, தூரங்களை ஓரளவேனும் சொகுசாய்க் கடக்க சாத்தியமானது ! அந்த ரயில் தடங்களை நிர்மாணிப்பதில் தான் எத்தனை போட்டி ? எத்தனை களேபரங்கள் ? எத்தனை பலிகள் ?!!
|
தண்டவாளமிடுகிறார்கள்...! |
1830 -ல் துவங்கியது அமெரிக்காவின் முதல் ரயில் சவாரி - பால்டிமோர் & ஒஹையோ ரெயில்ரோடு என்ற நிறுவனத்தின் புண்ணியத்தில் ! ஆரம்ப நாட்களில் - இந்த நீராவிப் பிசாசுகள் கடினமான ஏற்றங்களில் சொதப்பவே போகிறதென்று ஜனங்கள் ஏளனம் கொண்டிருந்தனர் ; ஆனால் விஞ்ஞானத்தின் வேகத்தில் அந்தக் கேலிச் சிரிப்புகள் சீக்கிரமே ஆச்சர்யக்குறிகளாய் மாறிப் போயின !
மண்ணைத் தேடி :
தொடர்வன நாம் ஓக்லஹோமா கதையிலும் சரி ; ஒரு பட்டாப் போட்டியிலும் சரி, பார்த்து ரசித்த அந்த நில முன்பதிவுக்கான முஸ்தீபுகள் ! தேசம் விரிந்து கொண்டே செல்ல, புதுப் புது பூமிகளை முதன்முதலில் சென்றடையும் மக்களுக்கே அவை சொந்தமாகிப் போயின ! பின்னாட்களில் ஏலம் கேட்கும் முறையும் அமலுக்கு வந்தது !! April 22' 1889 - வரலாற்றில் இடம்பிடித்த அந்த Oklohoma Land Run நிகழ்ந்த தினம் !!
|
கலிபோர்னியாவில் ஏலம் - வருஷம் : 1904 |
"கௌபாய்"
இந்த வார்த்தையினை ஒரு லட்சம் தடவை உச்சரித்திருப்போம் தானே guys ? So இதோ சில நிஜ கௌபாய்க்கள் ! மாடுகளை மேய்ச்சலுக்கு இட்டுச் செல்வது ; பத்திரமாய்த் திரும்பக் கொணர்ந்து தொழுவத்தில் அடைப்பது ; பண்ணையில் வேலை செய்வது ; விவசாயத்தில் ஒத்தாசை ; கால்நடைகளை விற்பனைக்குக் கொண்டு செல்வது ; காவல் காப்பது - என்று இவர்களுக்கு ஏகமாய் முகங்களுண்டு !! தளரா மனங்களுக்கும் , அயரா உழைப்புக்கும் சொந்தக்காரர்கள் இந்த தொப்பிவாலாக்கள் !!
இந்தத் தேடலுக்குள், ஆராய்ச்சிக்குள் நுழைய-நுழையத் தான் நாமெல்லாம் வன்மேற்கின் வரலாற்றோடு எத்தனை தூரம் ஒன்றிப் போயிருக்கிறோம் என்பது புரிகிறது ! So அடுத்த தபா நீங்கள் காமிக்ஸ் படித்துக் கொண்டிருக்கும் போது யாரேனும் "ஹி..ஹி.." என்றால் - மூக்கோடு ஒரு குத்து வைத்து விட்டு - "American History-ல் ஆய்வு செய்து கொண்டிருக்கிறேனாக்கும் !!"என்று சொல்லி விடுங்கள் !! நாமெல்லாமே வன்மேற்கின் ஆய்வாளர்களாக்கும் !!
விடை பெறும் முன்பாய் கொஞ்சமாய் காமிக்ஸ் சேதிகளுமே :
1 .நெடு நாள் கழித்த லார்கோ சாகசம் என்பதாலா ? அல்லது லார்கோவின் கடைசி வான் ஹாம் சாகசம் என்பதாலா ? அல்லது பொதுவான "லார்கோ வசீகரம்" என்ற காரணமா ? சொல்லத் தெரியவில்லை ; ஆனால் ஆன்லைனில் ரொம்ப காலம் கழித்து நிஜமான விறுவிறுப்பு !!
2 .இரு தினங்களுக்கு முன்பாய்த் தான் நமது ஜூலை வெளியீடுகளுள் ஒன்றான TRENT மீதான பணிகள் நிறைவுற்றன !! "ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாது " என்பது அனுபவப் பாடம் என்றாலும், இந்தப் புது நாயகரின் முதல் ஆல்பம் முகத்துக்கு ஏகமாய்ப் பிரகாசத்தைக் கொண்டு வந்தது என்பதை பகிர்ந்திடாது இருக்க இயலவில்லை !! ரொம்பவே ரசித்தேன் guys !! More of it later !!!
3 . நடப்பாண்டின் அட்டவணையை எடுத்துப் புரட்ட நேரமிருப்பின் முயற்சித்துப் பாருங்களேன் ? அறிவித்துள்ள 36 இதழ்களுள் ஒரு கணிசத்தை ஏற்கனவே போட்டுத் தாக்கி விட்டோம் ! ஆண்டின் இறுதியினில் ஜம்போ தான் கைகொடுத்தாக வேண்டும் போலும் - ஒரு (காமிக்ஸ்) வறட்சியைத் தவிர்த்திட !! ரெகுலர் சந்தாவில் வெகு சொற்ப இதழ்கள் எஞ்சி நிற்கின்றன !!
4 . And the big news : இரத்தப் படலம் முழுமையும் அச்சாகி விட்டது folks !! ராப்பர்களின் டிசைனிங்குமே நிறைவுற்று விட்டதால் தொடரும் வாரத்தில் அவற்றையும் அச்சிட்டு - பைண்டிங்கைத் துவக்கிடத் திட்டமிட்டுள்ளோம் ! அப்புறம் அந்த slip case டிஸைனுமே அழகாய் வந்துள்ளதாய் மனதுக்குப் பட்டது ! உங்களிடம் மொத்தத்தையும் ஒப்படைக்கும் நொடியில் உங்கள் முகங்களும் மலர்ந்திடும் பட்சத்தில் ஆண்டவனுக்கு நன்றி சொல்லத் தவற மாட்டோம் !! இனி அடுத்த வேலை அந்த "இரத்தப் படல" முதல் 200 Early Birds-களுக்கு ஒரு பேட்ஜை தயார் செய்வதே !!
5. Lest I forget - அடுத்த வாரம் அந்தப் புலன்விசாரணை பற்றிச் சொல்கிறேன் !! நிறையவுள்ளது பேசிட !!
6 ஜூன் இதழ்களை review செய்திட நேரம் எடுத்துக் கொள்ளலாமே guys ? மூன்றுமே ஒவ்வொரு விதத்தில் பர பரப்பினை உண்டாக்கும் இதழ்கள் தானே ? For starters - நாளைய பொழுதை லார்கோவை அலசுவதில் செலவிடலாமா ஆய்வாளர்களே ? மாதந்தோறும் ஏதேனும் ஒரு புக்கைப் பிரதானமாய் அலசுவதை ஒரு வழக்கமாக்கிப் பார்த்தோமென்றால் பொழுதுகள் சுவாரஸ்யமாகிடக் கூடும் என்று நினைத்தேன் ! Let's try starting it off tomorrow - maybe பகலில் ??
7. ஜம்போவின் பணிகள் வேகமாய் நடைபெற்று வருகின்றன !! அட்டைப்படம் ரெடி ; கதையுமே !! எனது எடிட்டிங் நிறைவுற்று விட்டால் அச்சிட வேண்டிய வேலை மட்டுமே பாக்கி ! இந்த ஞாயிறை இளம் டெக்ஸோடு செலவிட வேண்டியது தான் !! இன்னும் சந்தா செலுத்தியிருக்காத பட்சத்தில் - இன்றே அதற்கென திட்டமிடலாமே - ப்ளீஸ் ?
இப்போதைக்கு கிளம்பும் முன்பாய் ஒரு வித்தியாசமான போட்டி ! இதோ - ஆங்கிலத்தில் ஒரு கவிதையுள்ளது - ஸ்டேஜ்கோச் பயணங்களை சிலாகித்தும், கலாய்த்தும் !! இந்தத் தேடல்களின் போது கண்ணில் பட்டது !! இதனை அழகாய்த் தமிழாக்கிப் பார்ப்போமா ? ஆய்வாளர்களுக்குள்ளே கவிஞர்களும் உறைகிறார்களா என்று பார்த்தது போலிருக்குமல்லவா ? Bye for now...see you around !!
Riding in a Stage
Creeping through the valley, crawling o’er the hill,
Splashing through the branches, rumbling o’er the mill;
Putting nervous gentlemen in a towering rage.
What is so provoking as riding in a stage?
Spinsters fair and forty, maids in youthful charms,
Suddenly are cast into their neighbors’ arms;
Children shoot like squirrels darting through a cage-
Isn’t it delightful, riding in a stage?
Feet are interlacing, heads severely bumped,
Friend and foe together get their noses thumped;
Dresses act as carpets-listen to the sage;
"Life is but a journey taken in a stage.”
---From: Six Horses by Captain William Banning & George Hugh Banning, 1928---