நண்பர்களே,
வணக்கம். ஒன்றிரண்டு பதிவுகளுக்கு முன்பாக - டெக்ஸ் கதைக் குவியல்களுக்குள் உலாற்றிய வேளையில் கண்ணில் பட்டதொரு தொகுப்பு பற்றி எழுதியிருந்தேன்! “நான் பயணம் போகும் படகு, கடலில் மல்லாந்து போய், ஆளில்லாத் தீவில் நான் ஒதுங்க நேரிட்டால் – கையோடு எடுத்துப் போக விரும்பும் காமிக்ஸ் இதழ்கள்” என்பது அந்தத் தொகுப்பின் தலைப்பு! ஏகப்பட்ட டெக்ஸ் ஆல்பங்களை அதனில் மனுஷன் பட்டியலிட்டிருந்தார்! அதையே லயித்துப் படித்துக் கொண்டிருந்த போது – அட… நாமும் இப்படியொரு லிஸ்ட் ஒன்றைத் தயாரிக்க முனைந்தாலென்னவென்று தோன்றியது! “எனது Top 10" என்ற ரீதியில் – வெவ்வேறு தேர்வுகளை இதற்கு முன்பாய் நான் செய்துள்ளது நினைவுள்ளது தான்! ஆனால் நமது மறுவருகைக்குப் பின்பாய் இது போன்றதொரு memory lane பயணத்தில் ஈடுபட்டதாய் ஞாபகமில்ல! அது மட்டுமன்றி, வயது ஏற ஏற – நமது ரசனைகளிலும் மாற்றங்கள் புகுவது இயல்பெனும் போது – 10 ஆண்டுகளுக்கு முன்பாய் ரசித்த சமாச்சாரம் இப்போது ‘ஙே‘ என்று முழிக்கச் செய்யவும் வாய்ப்புண்டல்லவா? So – இதனை எனது “நவீன பட்டியல்” என்று எடுத்துக் கொள்ளலாம்! அதாவது 2012-க்குப் பின்பாய் வண்ணம்; பெரிய சைஸ் என்ற தரங்களைத் தொட்டதன் பிற்பாடு வெளியான இதழ்களுள் எனது favourites! (அட… இதைத் தெரிந்து இப்போது எந்த மாநிலத்து சட்டசபையைத் தூக்கி நிறுத்தப் போகிறோமோ? என்று கேட்கிறீர்களா? நமக்கும் பொழுது போக வேண்டுமல்லவா guys?)
இந்த யோசனை வெள்ளிக்கிழமை மாலை தோன்றிட – நமது சென்றாண்டின் காமிக்ஸ் பாஸ்போர்ட்டைப் புரட்டியெடுத்து – சமீப இதழ்களின் பெயர்களை மேயத் தொடங்கினேன்! நிஜத்தைச் சொல்வதானால் – நிறைய கதைகளின் பெயர்களை மட மடவென்று வாசிக்கும் போது – ”ஙே… இது யாரோட கதை? எந்த ராப்பரை இதுக்குப் போட்டோம்?” என்று மலங்க மலங்க முழிக்க வேண்டியிருக்குமோ? என்ற பயமிருந்தது என்னுள்! ஆனால் surprise… surprise… ஒன்றிரண்டு இதழ்கள் தவிர்த்து பாக்கி எல்லாமே ‘சட்‘டென்று நினைவுக்கு வந்து விட்டன ! ஒவ்வொரு இதழையுமே நாமிங்கு preview செய்வது; அப்புறமாய் surf excel போட்டு துவைத்துக் காயப் போடுவதெல்லாமே வழக்கமாகி விட்டதால் ஒவ்வொன்றும் ஏதேனுமொரு வகையில் மண்டையில் தங்கி விட்டன என்பேன்! அரை மணி நேர பட்டியல் அலசலின் முடிவில் நான் ‘டிக்‘ அடித்து வைத்திருந்த இதழ்களின் எண்ணிக்கை 12 ஆக நின்றது! அட… தீவுக்குப் போகும் போது 2 புக் கூடுதலாயிருந்தால் குடியா முழுகிடப் போகிறதென்ற எண்ணத்தில் – எனது “Top 12” என்று லிஸ்டின் தலைப்பை மாற்றிக் கொண்டேன்! And தொடரும் வரிசையானது எனக்குப் பிடித்தவைகளின் தரவரிசையில் என்றாகாது; நினைவுக்கு வர வர எழுதியவைகளே! So இது நம்பர் 1; இது நம்பர் 2 – என்ற வரிசைக்கிரமங்களில் பார்த்திட வேண்டாமே? Here goes:
பழசிலும் இடம்பிடித்து; புதுசிலும் இடம்பிடித்திடும் வாய்ப்பு நிறைய இதழ்களுக்கு வாய்ப்பதில்லை! ஆனால் கேப்டன் டைகரின் பல சாகஸங்களுக்கு அந்த சான்ஸ் சுலபமாய் கிட்டியுள்ளது – வண்ணத்தில் மறுபதிப்புகளாக நாம் வெளியிட்டதால்! தங்கக் கல்லறை; மின்னும் மரணம்; இரத்தக் கோட்டை என 3 ஸ்பெஷல் தொகுப்புகள் இந்த வரிசையில் வெளிவந்திருப்பினும் என்னைப் பொறுத்தமட்டிலும் போட்டி முதலிரண்டு இதழ்களுக்கு மத்தியிலேயே! And நிறையவே யோசித்தாலும் இவற்றுள் ஏதேனும் ஒன்றை இரண்டாமிடத்துக்கு அனுப்ப எனக்கு மனம் ஒப்பவில்லை! So நான் கரை ஒதுங்குவதாயின் கையோடு எடுத்துப் போக விரும்பும் முக்கிய இதழ்களுள் தங்கக் கல்லறை & மின்னும் மரணம் நிச்சயம் இடம்பிடிக்கும்!
தங்கக் கல்லறை:
ஒரு லட்சம் தடவை நாம் அலசி முடித்து விட்டிருக்கக் கூடிய கதையிது என்பதால் புதுசாய் நான் இதனில் சேர்ப்பதற்கு ஏதுமிராது தான்! ஆனால் இந்த ஆல்பத்தினை கலருக்குக் கொணரப் பணியாற்றிய சமயம் தான் வன்மேற்கின் கொடூரங்களை நேரில் உணர்ந்தது போல் மனதுக்குப் பட்டது. ஆங்கிலத்தில், கலரில் படிக்கும் போது இதெல்லாம் வழக்கமான சமாச்சாரங்கள் தானே என்பதைப் போல பக்கங்களைப் புரட்ட முடிந்தது! ஆனால் நாம் கலருக்குள், உயர்தரத்துக்குள் கால் வைக்கத் துவங்கிய பிற்பாடு வெளியான முதல் கமர்ஷியல் கௌபாய் ஆல்பம் தங்கக் கல்லறையே என்ற போது – இதனை வழக்கத்தை விட நுணுக்கமாய்க் கவனித்ததன் பலனோ என்னவோ தெரியலை – லக்னரும், ஜிம்மியும், டைகரும் உழன்று திரிந்த பாலைவனத்தின் வெப்பமும், புழுதியும் என்னையும் தாக்கியது போலிருந்தது!
பொதுவாய் டெக்ஸ் கதைகளில் கதையின் மாந்தர்களுக்கும், கதையில் ஓட்டத்துக்குமே நிரம்ப முக்கியத்துவமிருக்கும்! ஆனால் டைகர் கதைகளில், அந்தக் களத்துக்குமே அதீத கவனிப்புக் கிட்டுவது வாடிக்கை! பாலைவன இரவுகளின் நடுங்கும் குளிர்; உரித்தெடுக்கும் வெப்பம் என்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் அந்த வனாந்திரங்களின் தனிமையை இந்த ஆல்பத்தில் கதாசிரியர் சொல்லியுள்ள விதம் எனக்கு அட்டகாசமாய்ப் பட்டது! அந்தப் புராதன செவ்விந்தியக் குடியிருப்பில் லக்னரும், குஸ்டாவும் ஆடும் கண்ணாமூச்சி ஆட்டம் ஒரு அசாத்திய ஸ்க்ரிப்ட்-ரைட்டருக்கு மட்டுமே சாத்தியமென்பேன்! அதிலும் குடிதண்ணீருக்குள் ஒரு முரட்டுப் பல்லி மிதக்கும் சீனும் சரி, பாடம் செய்யப்பட்ட ஒரு அபாச்சேயின் சடலத்தோடு கட்டிப் போடப்பட்டிருக்கும் ராட்சஸப் பல்லி தென்படும் ஃப்ரேமும் சரி, மனதை விட்டு லேசுக்குள் அகலா கணங்கள் – இந்த ஆல்பத்தைப் பொறுத்தவரையிலும்! So வண்ணத்தில், இந்த அதகளத் த்ரில்லரை வெளியிட்ட நாட்கள் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல்! Of course – “மாப்பிள்ளை இவர் தான்… ஆனாக்கா அவர் போட்டிருக்கிற சட்டை அவரது இல்லை” என்ற கதையாக – தங்கக் கல்லறையின் திருத்தப்பட்ட தமிழ் வசனங்களுக்குக் கிடைத்த சாத்தல் படலங்களுமே எனது நினைவுகளுக்கு spice சேர்த்திடும் காரணிகள்!
மின்னும் மரணம் !
ரூ.2200/- என்ற நம்பரையெல்லாம் பார்த்துப் பழகி விட்டுள்ள இந்நாட்களில் ரூ.1000 என்பது அத்தனை பெரிய சமாச்சாரமாய்த் தோன்றாது தான்! ஆனால் முதன்முறையாக ஒரு நாலு இலக்க விலையை நமது இதழ்களுக்கு நிர்ணயம் செய்யச் சாத்தியமாக்கிய அந்த “மின்னும் மரண” நாட்களை மறக்கவாவது முடியுமா? ஈரோட்டில் பந்தாவாய் அறிவித்த கையோடு, அன்றைக்கே 100+ முன்பதிவுகளையும் பார்த்திருந்தாலும், உள்ளுக்குள் என்னமோ ஏகமாய் பயமிருந்தது! And பணியின் பரிணாமம் இன்னொரு பக்கம் செமையாக உடுக்கை அடிக்கச் செய்தது! ஆனால் அந்தக் கதைக்குள் மறுபடியும் நுழைந்த நொடியில் எல்லா பயங்களுமே கரைந்து போனது போன்றதொரு உணர்வு! அந்த மெக்ஸிகன் புதையல்; தங்கத் தேட்டை; confederate gold என்ற கதைக்கரு நிஜ சம்பவங்களின் பின்னணியே எனும் போது – Charlier போன்றதொரு அற்புதக் கதாசிரியருக்கு ரவுண்டு கட்டி அடிக்க சூப்பரான மைதானம் ஆகிப் போகிறது! வடக்கத்திய – தெற்கத்திய உள்நாட்டுப் போர்; மெக்ஸிகன்கள்; அபாச்சேக்கள்; அமெரிக்க பிரஸிடெண்டைக் கொலை செய்ய முயற்சி; ரயில் வண்டிகள்; பிடிவாதங்கள்; இராணுவத் தளபதிகள்; சிகுவாகுவா சில்க்; வெகுமதி வேட்டையன்; முதிர்ந்த செவ்விந்தியத் ‘தல‘ என்று கதைநெடுகிலும் நாம் பார்த்திடக் கூடிய ஒவ்வொரு சமாச்சாரத்திலும் வன்மேற்கின் வரலாறு அட்சர சுத்தமாய் ஒட்டிக் கொண்டிருப்பதை உணர முடிந்தது! எந்தவொரு இடத்திலுமே இதுவொரு மிகைப்படுத்தப்பட்ட கற்பனையாகப்படவேயில்லை எனக்கு! முழுசுமாய் எடிட் செய்து இந்த இதழை அச்சுக்கு ரெடி செய்ததே ஒரு நாக்குத் தள்ளச் செய்த அனுபவமாயிருந்தாலும் – இந்தக் கதையை ஒட்டு மொத்தமாய், ஒரே ஆல்பமாய்க் கையிலேந்திப் புரட்டிய போது – பிரான்கோ பெல்ஜியப் படைப்புகளின் உச்சங்களுள் ஒன்றை வெளியிட்டுள்ள அதிர்ஷ்டம் நமதாகியுள்ளது புரிந்தது!
இந்த இதழின் தயாரிப்பின் போது எனக்கு ரொம்பவே மண்டை காய்ந்து போனது அட்டைப்படத் தயாரிப்பினில் தான்! இதற்கென மொத்தம் 3 பெயிண்டிங்குகள் போடச் சொல்லியிருந்தேன் நம் ஓவியரிடம்! ஆனால் எதிலுமே எனக்கு அவ்வளவாய்த் திருப்தி இல்லை! அதிலும் NBS ராப்பருக்குக் கிடைத்திருந்த பல்புகள் நினைவில் பசுமையாயிருக்க – மின்னும் மரணத்துக்கும் அதே கதியாகிடக் கூடாதென்று விழைந்தேன்! Of course – மின்னும் மரணம் ராப்பருக்குமே நண்பர்களுள் சிலர் – “யார் அந்த அட்டைப்படத்திலுள்ள கூர்க்கா?” என்று வாரியிருந்தனர் தான்! ஆனால் என்னளவுக்கு அந்த டிசைனில் நிறைவே! And அந்த மினுமினுக்கும் அட்டைப்படத்தை அச்சிடும் பொருட்டு – சிவகாசியிலுள்ள ராட்சஸ அச்சகமொன்றில் படையெடுத்த நாட்களும் நினைவில் நிற்கின்றன! நமக்கே அந்த டெக்னாலஜி கொஞ்சம் புதுசு என்பதால் – ‘ஆஆ‘வென்று பராக்குப் பார்த்துக் கொண்டே பணிகளின் பரிமாணத்தை உள்வாங்கிக் கொள்ள முயற்சித்தேன்! பொதுவாய் இது போன்ற பெரிய அச்சகங்களில் உள்ளே இயந்திரங்களிருக்கும் ஹால் பக்கமே யாரையும் அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் அந்த அச்சக உரிமையாளரோ நம்மிடம் நிறைய மிஷின்கள் வாங்கிய கஸ்டமர் என்பதால் தாராளமாய் உள்ளே போய்ப் பார்க்க அனுமதித்தார்! அந்த ராப்பர் அச்சாகிய தினம் வீட்டுக்கு ஒரு தாளை எடுத்து வந்து அதனை நடுக்கூடத்தில் தரையில் போட்டு விட்டு, நடுச்சாமத்தில் இந்தப் பக்கம் நின்றும், அந்தப் பக்கம் நகன்றும் பார்த்துப் பார்த்து ரசித்த கதையும் நிகழ்ந்தது. அவ்வப்போது இந்த நள்ளிரவு பாலே நடனத்தை நான் சோலோவாய் அரங்கேற்றுவது வாடிக்கையே என்பதால் என் இல்லாள் – “ரைட்டு… பௌர்ணமி நெருங்குதுடோய்” என்றபடிக்கு அகன்று விடுவதுண்டு! ஆனால் காலையில் எழுந்த போது எனக்கு அந்த மினுமினு ராப்பரில் லேசான நெருடல்! டைகரின் பின்னணியில் pure white பேக்கிரவுண்ட் இருப்பது போல டிசைன் செய்திருந்தோம்! ஆனால் அந்த மினுமினுப்பு effectன் மோகத்தில் ஒட்டுமொத்தமாய் போட்டுத் தாளிக்கச் செய்திருந்தேன்! காலையில் எழுந்து அதே தாளை மறுக்கா தரையில் போட்டுப் பார்க்கும் போது – “கொஞ்சம் ஓவராத் தான் போய்ட்டோமோ?‘ என்றுபட்டது! அப்புறமென்ன – இருக்கவே இருக்கிறது dust jacket! இம்முறை பின்னணியை ‘மொழுக்கடீர்‘ என்று வெள்ளையாக விட்டு, அச்சிட்டு – அரும்பாடும் நிறைய செலவும் செய்து அச்சிட்ட டாலடிக்கும் ராப்பரை கவர் செய்தோம்! இன்றைக்கு உங்களில் எத்தனை பேரிடம் இந்த dust jacket மிஞ்சியிருக்கிறதோ தெரியவில்லை; ஆனால் அன்றைக்கு எனக்கு ரொம்பவே அத்தியாவசியப்பட்ட விஷயமிது! So டஸ்ட்-கவரோடோ; இல்லாமலோ – தீவில் ஒதுங்கும் சமயம் எனது பெட்டிக்குள் ”மின்னும் மரணம்” நிச்சயமாயிருக்குமென்பேன்!
சிகப்பாய் ஒரு சொப்பனம்!
‘தளபதி‘ பையிலிருக்கும் போது – ‘தல‘ இல்லாது போவாரா- என்ன? But எனது இந்தத் தேர்வு பலருக்கு ஆச்சர்யமூட்டுவதாய் இருக்கலாம் தான்! ”சர்வமும் நானே”; ”Lion 250”; ”தீபாவளி with டெக்ஸ்” என்று பல டெக்ஸ் ஹிட்கள் இருக்கும் போது – இந்த நார்மலான ஆல்பத்தைத் தேர்வு செய்வானேன்? என்று தோன்றலாம்! சன்னமான காரணம் உள்ளது அதன் பின்னணியில்!
நமது டெக்ஸ் கதைகளுள் செவ்விந்தியப் புரட்சி; ஆயுதக் கடத்தல் இத்யாதிகள் புதிதேயல்ல தான்! இந்த ஆல்பமுமே ஹுவால்பைகளின் தலைவனின் இரத்தவெறி சார்ந்தது என்றாலுமே – கதை துவங்கும் விதமே செம dramatic! அது மட்டுமல்லாது ரேஞ்சர்களின் முழு அணியுமே கதைநெடுக ஆரவாரமாய் – ஓவியர் மாஸ்டாண்டுவோலோவின் சிம்பிள் & neat சித்திரங்களில் மிளிர்வதை நான் ரொம்பவே ரசித்தேன்! எப்போதும் போல நேர்கோட்டுக் கதை; தெறிக்கும் க்ளைமேக்ஸ் என சலிப்பே ஏற்படுத்தாவிதத்தில் 224 பக்கங்களுக்குத் தடதடப்பதை இந்த ஆல்பத்தில் உணர முடிந்தது! இவையெல்லாவற்றையும் விடவும், இந்த ஆல்பம் எனக்கு ஸ்பெஷலாகப்படுவதற்கு இன்னொரு காரணமும் உண்டு! அது தான்- டெக்ஸ் கதைகளைக் கையாள்வதிலான பாணியில் நாம் கொண்டிருந்த மாற்றம்! அதுவரைக்குமான நமது முதல் இன்னிங்ஸ் டெக்ஸ் கதைகளில் – ஒரிஜினல்களின் டயலாக் பாணிகளைப் பின்பற்றியே நமது மொழிபெயர்ப்புகளும் இருந்திருந்தன! ஆனால் post 2012 – நமது வாசகவட்டம் மிகச் சிறிதே என்பதும் அந்த வட்டமானது முதிர்ந்த வாசகர்கள் நிரம்பியதே என்பதும் புரியத் தொடங்கிய போது – டெக்ஸ் கதைகளைக் கொஞ்சம் வித்தியாசமாய்க் கையாண்டால் தேவலாமோ? என்று எனக்குத் தோன்றத் தொடங்கியது! வலைப்பதிவில் உங்களோடு நான் செய்யத் துவங்கியிருந்த interactions இதற்கொரு முக்கிய க்ரியா ஊக்கி என்பேன்! எது எப்படியோ- TEX the hero-வுக்கு வரிகளில் அழுத்தமும்; கார்சனுக்கு சகஜமான humour-ம்; அதே சமயம் தன் நண்பன் மீது அசாத்திய பிணைப்பு உள்ள விதமாய் டயலாக்குகள் இருந்தால் – அந்த வன்மேற்கின் வறண்ட களங்களை இன்னும் சுவாரஸ்யமாக்கிடலாமோ என்று பட்டது! So முதன் முறையாக கதையின் முக்கியப் பகுதிகளில் டெக்ஸ் & கார்சனின் வரிகளைத் தனியாக எழுதும் பணி / பாணி தொடக்கம் கண்டது இந்த ஆல்பத்திலிருந்தே!
- Tex : குறைந்துள்ளது உன் முடியின் நிறம் தானே தவிர, உன் நெஞ்சின் உரமல்ல நண்பா!
- Tex : மிகப் பணிவாக நான் சொல்லிக் கொள்ள விரும்புவது என்னவெனில் - உயிரை பணயம் வைப்பது எங்களுக்கு ஒரு உற்சாகமான பொழுதுபோக்கு!
கார்சன் (மைண்ட் வாய்ஸ்) : ஆங்! பொழுது போகவில்லையெனில் போக்கர் ஆடிவிட்டுப் போவது தானே?
- கிட் வில்லர் : அங்கிளின் பசி ரொம்பப் பிரசித்தமானது! செய்தி எவ்வளவு மோசமானதாக இருந்தாலும் சுக்காவில் குறை வைக்க மாட்டார்!
- கார்சன் : விரியன் பாம்புகளுக்கிடையே வெறும் காலோடு நடந்து செல்வதில் உள்ள ஆபத்து இதில் உண்டல்லவா?
Tex : நம்மைக் கிளர்ந்தெழச் செய்வதே ஆபத்தின் நெடி தானே தோழா?
- கார்சன் : என்றைக்காவது ஒரு நாள் உன் தந்தையை ஓங்கி மண்டையில் நான் ஒரு போடு போட்டால்- ஏன், எதற்கென்று கேள்வி கேட்கக் கூடாது! புரிந்ததா?
கிட் வில்லர் : அதற்குள் டாடி உங்கள் மீசையினை, பூட்ஸ் கயிற்றோடு முடிச்சுப் போட்டிருப்பாரே அங்கிள்? பரவாயில்லையா?
------------------------------------------------------------------------------------------------------------
இது மாதிரியான டயலாக்குகளை கதையின் ஒரு ஓட்டத்துக்குப் பயனாகும் உத்தியாக நான் கையிலெடுக்கத் தொடங்கியது சி.ஒ.சொ. முதலாய் தான்! “எக்ஸ்ட்ரா நம்பர் கேட்டேனா?” என்று நண்பர்களுள் சிலர் கேள்வியெழுப்புவது நிச்சயம் என்பது புரியாதில்லை! 'ஒரிஜினல் வரிகளை ‘சிவனே‘ என்று அப்படியே போட்டுப் போக வேண்டியது தானே?' என்று அவர்கள் கேட்பது எனக்கும் கேட்கிறது! ஆனால் மிகைப்படுத்தப்பட்ட கற்பனைகளே ஒவ்வொரு ஆக்கமும் எனும் போது – அவற்றை இக்ளியூண்டு கலர்புல்லாக்கிட இது பிரயோஜனப்படுவதாய் நான் பார்க்கிறேன்! Anyways – இந்த இதழ் முதலே டெக்ஸ் & கார்சன் டயலாக்குகளில் ஒரு பன்ச்; கொஞ்சம் கலாய்ப்பு; நிறைய நேசம் என்று அலங்கரிக்க முயன்று வருகிறோம் ! அதற்கு பிள்ளையார் சுழி போட உதவிய இதழ் என்ற வகையில் “சிவப்பாய் ஒரு சொப்பனம்” எனது பயணப் பைக்குள் இடம்பிடிப்பது உறுதி!
ஆகாயத்தில் அட்டகாசம் !
மறுபடியும் ஒரு புருவத்தை உயரச் செய்யும் தேர்வு தான் guys!! ப்ளுகோட் பட்டாளத்தின் நம்மிடையிலான அறிமுகம் இந்த இதழ் மூலமாகத் தான்! நிஜத்தைச் சொல்வதானால் இந்த ஜோடியின் கதைகளை முயற்சித்துப் பார்க்கலாமே என்று நண்பர் ரபீக் & இன்னும் சிலர் என்னிடம் சென்னையிலோ; பெங்களுரிலோ சொல்லியிருந்த போதெல்லாம் நான் தயக்கத்தையே பதிலாக்கியிருந்தேன். Oh yes – இன்றைக்கும் இந்த ஜோடியை நம்மில் ஒரு பகுதி வாசகர்களே ஏற்றுக் கொண்டுள்ளனர்; இன்னமுமே நிறையப் பேருக்கு இவர்களை அத்தனை பிடிக்கவில்லை தான்! ஆனால் Cinebook இவர்களது கதைகளை இங்கிலீஷில் வெளியிட உள்ள தகவலும்; ஆங்கில மொழிபெயர்ப்பின் ஒரு அட்வான்ஸ் பிரதியும் படைப்பாளிகளிடமிருந்து நமக்குக் கிடைத்திருந்தது. “சிறைக்குள் சடுகுடு” கதையின் இங்கிலீஷ் ஒரிஜினலது! அதைப் படித்துப் பார்த்த போது – ”முயற்சித்தால் தப்பில்லை!” என்றுபட்டது! அப்புறமாய் நெட்டில் இந்தத் தொடரின் இதர ‘ஹிட்‘ கதைகளைப் பற்றிய தேடலைச் செய்த போது, ஒரு பெல்ஜிய ரசிகையின் பரிச்சயம் கிட்டியது! அவரொரு diehard ப்ளுகோட் விசிறி! தொடரில் வெளிவந்துள்ள ஒட்டுமொத்த ஆல்பங்களையும் கரைத்துக் குடித்தவர்! அவரிடமே இந்தக் கேள்வியை முன்வைத்தேன் – “ஒரேயொரு ப்ளுகோட் கதையை மட்டும் பயணத்தின் போது கையில் எடுத்துப் போக முடியுமென்றால் எதைத் தேர்வு செய்வீர்களோ?” என்று! தயக்கமின்றி – ”ஆகாயத்தில் அட்டகாசம்” என்ற பெயரில் நாம் வெளியிட்ட கதையின் ஒரிஜினல் பிரெஞ்சுப் பெயரைக் குறிப்பிட்டு மெயில் அனுப்பியிருந்தார். இந்தக் கதையின் ஆங்கில version எனக்கு எப்படியோ கிட்டியிருந்தது (scanlation ? cinebook ?) என்பதால் அதைப் படித்த கணமே ‘டிக்‘ போட்டு விட்டேன் – இந்தப் புது வரவுகளை அறிமுகம் செய்திட இது உருப்படியான ஆல்பமே என்று!
எழுதத் தொடங்கும் போது – சுத்தமான தமிழா? பேச்சு வழக்குத் தமிழா? என்ற கேள்வி எழுந்தது! இரண்டு மாதிரியும் முதல் 4 பக்கங்களை எழுதி, டைப்செட்டும் செய்து படித்துப் பார்த்த போது – சுத்தத் தமிழ் சுகப்படுவது போலத் தெரியக் காணோம்! பேச்சுவழக்கே ஓ.கே. என்ற மட்டில் வண்டியை ஓட்டத் துவங்க – சிறுகச் சிறுக அந்தக் கதைகளத்துக்குள் ஐக்கியமானேன்! அதுவரையிலும் லக்கி லூக் & சிக் பில் தான் நமது கார்ட்டூன் பட்டியலில் heavyweights எனும் போது இந்தப் புதுப்பாணி கார்ட்டூனுக்குப் பேனா பிடிப்பது வித்தியாசமான அனுபவமாய் இருந்தது. ஓவராக slapstick காமெடியாக எழுதிடவும் கூடாது; காமெடி வறட்சியும் தட்டுப்பட்டு விடக் கூடாது என்று மனதில பட, தத்தா-பித்தாவென்று தட்டுத்தடுமாறி manage செய்த இதழ்! And கதையைப் பொறுத்தவரை மெய்யாகவே அந்த பலூனில் வேவு பார்க்கும் பாணி; ஸ்கூபியும், ரூபியும் மேலே-கீழே என்று அடிக்கும் கூத்துக்கள்; கோமாளித்தனமான இராணுவ கர்னல்கள் என்று ரசிக்க ஏகப்பட்ட சமாச்சாரங்கள் இருப்பதாய் எனக்குத் தோன்றியது! அதிலும் அந்த அரை லூசு கர்னல் ஸ்டார்க் கதையின் மூன்றாவது ஹீரோவாக என் கண்களுக்குத் தோன்றினார்! பலூனின் கயிற்றை இறுகப் பிடித்துக் கொண்டே “சார்ஜ்ஜ்ஜ்” என்று முழங்கும் மனுஷனை என்னவென்பது? ரொம்பவே மாறுபட்ட காமெடி என்ற காரணத்தினால் எனது பைக்குள் இந்த இதழுக்கும் ஒரு ஓரமிருக்கும்!
ஆதலினால் அதகளம் செய்வீர் !
லார்கோ தொடரில் ஒவ்வொரு கதையுமே ஒவ்வொரு விதத்தில் மாஸ் ஹிட் தான் என்றாலும் – என்னைப் பொறுத்தமட்டில் நண்பன் சைமனுக்காக பர்மாவின் கானகத்தினுள் லார்கோ செய்யும் அதகளம் a class apart! Oh yes – NBS-ல் வெளியான கான்க்ரீட் கானகம் நியூயார்க் ஆல்பமும் ஒரு அட்டகாச த்ரில்லரே; “துரத்தும் தலைவிதி” செம racy சாகஸமே! ஆனால் கோடீஸ்வரக் கோமகன் அந்தப் பெருநகரங்களிலிருந்து வெளியேறி வனாந்திரத்தில் சுற்றித் திரிவதில் ஒரு இனம் சொல்லத் தெரியா த்ரில் இருப்பதாய் எனது அபிப்பிராயம்! பற்றாக்குறைக்கு கதை நெடுக சைமன் வளைய வருவது கதையை இலகுவாக்கிட உதவியதென்பேன்! And அந்த க்ளைமேக்ஸில் அரங்கேறிடும் action sequences – ஜேம்ஸ் பாண்ட் பாணிக்குத் துளி கூடக் குறைச்சலில்லாதது தானே guys? வழக்கமாய் கதையில் கவர்ச்சிக்கோசரம் பெண்கள் தலைகாட்டுவது வாடிக்கை; ஆனால் இந்த ஆல்பத்தில் லார்கோவோடு தோள் சேர்த்து நிற்கும் மாலுனாய் ரொம்பவே வலுவானதொரு கதாப்பாத்திரம்! மெலிதான காதல்; கடமையுணர்வு; தேசபக்தி என்று அவருக்குக் கதாசிரியர் தந்துள்ள வர்ணங்கள் எக்கச்சக்கம்! நாம் ரசிக்கும் கதைகளை மொழிபெயர்ப்பது எப்போதுமே ஒரு ஜாலியான அனுபவம்! அந்த வகையிலும் இந்த ஆல்பம் சார்ந்த என் நினைவுகளில் சகலமும் சந்தோஷமானவை! Icing on the cake – இந்த ஆல்பத்தின் பின்பகுதியில் வெளிவந்திருந்த 7 பக்க லக்கி லூக் சாகஸத்தை மொழிபெயர்த்தது ஜுனியா எடிட்டர்! அது மிதமோ – சொதப்பலோ – அன்றைக்கு எனக்கு அசாத்தியமாய்த் தென்பட்டதென்னவோ – நிஜமே!
நிஜங்களின் நிசப்தம் !
‘ஙே‘ என்று சிலரையும்; ‘ஙே...ஙே...ஙே...‘ என்று பலரையும் கிறுகிறுக்கச் செய்த இந்த கிராபிக் நாவல் இல்லாது எனது பயணப்பை முழுமை காணாது! வெகு சமீப இதழ் என்பதால் எக்கச்சக்க அலசல்கள் இதன் மீது அரங்கேறி விட்டன என்ற போதிலும் இது பற்றியும் லேசாகவேணும் எழுதாது விட மனதில்லை! நான் சிறுவயதில் ரசித்துப் படித்த War Comics இதழ்கள் தான் காரணமாவென்று சொல்லத் தெரியவில்லை; ஆனாலும் உலக யுத்தங்கள் சார்ந்த தகவல்கள்; நிகழ்வுகள்; கதைகள் மீது எனக்கு எப்போதுமே எக்கச்கக்க அபிமானமுண்டு! மிஷினரி தொழில் காரணமாய் ஒரு காலகட்டத்தில் கிழக்கு ஐரோப்பாவுக்கு அடிக்கடி பயணிக்க வேண்டியதிருந்துள்ளது! செக் குடியரசு; போலந்து; கிழக்கு ஜெர்மனி; ரஷ்யா ஹங்கேரி என்று முன்னாள் கம்யூனிஸ்ட் நாடுகளுக்குள் கால்பதிக்கும் போதெல்லாம் வரலாற்றின் ஒரு பக்கத்துக்குள் நுழைந்து பார்ப்பது போலொரு உணர்வு எழும்! ஊர்களில் ஒரு மெல்லிய சோகம் கப்பிக் கிடப்பது மாதிரியே எனக்குத் தோன்றும். அங்கே கொஞ்சமாய் ஓய்வு நேரம் கிடைத்தால் – போரில் சிதிலமடைந்த தேவாலயங்கள்; கைதிகளை அடைத்துப் போட்ட கொட்டடிகள் போன்ற landmark-களை மௌனமாய்ப் பராக்குப் பார்த்து நிற்பேன்! So யுத்தம்... அது சார்ந்த இருண்ட நாட்கள் என்றாலே எனக்கொரு soft corner உண்டு! கதைத் தேர்வுகளின் போது அந்த ரசனை என்னையுமறியாது கலந்துவிடுவது உண்டு தான்! “விண்ணில் ஒரு வேங்கை” போன்ற விளக்குமாற்றுச் சாத்து அனுபவங்கள் அரங்கேறினாலும் எனக்குள்ளிருக்கும் அந்த noir tales-களின் ரசிகன் முழுசுமாய் ஜகா வாங்குவதில்லை! அந்த விதத்தில் “நிஜங்களின் நிசப்தம்” எனக்கு செம பிடித்தமானதொரு ஆல்பம் ! அதில் பணியாற்றியது; கதைப் பின்னணிகள் என்று நிறையவே பேசிவிட்டேன்! So மேற்கொண்டும் அதையே மறுஒலிபரப்பு செய்யப் போவதில்லை! ஆனால் இந்தக் கதைக்கு இன்னுமொரு காரணமும் உண்டு – எனக்கு ரொம்பப் பிடித்தமானதாய் அமைந்து போக! அது 2013 வரை பின்னே போகுமொரு காரணம் & அதனில் ஒரு முக்கிய பங்குண்டு உங்களுக்குமே! என்றேனும் ஒரு சந்திப்பின் போது அது பற்றிச் சொல்கிறேன்!
சரி, நீண்டு செல்லும் பதிவுக்கு இங்கே தற்காலிக ‘சுப மங்களம்‘ போட்ட கையோடு கிளம்புகிறேன் folks! Top 12-ல் அடுத்த அரை டஜன் பற்றி அடுத்த வாரம் ! அதற்கு மத்தியில் நீங்களும் ஒரு பயணப் பையை ‘பேக்‘ செய்து ஒத்திகை பார்க்கலாமே – யாருக்கு எது அத்தியாவசியப்படுகிறது? என்ற ஆராய்ச்சிகளோடு!
Before I sign off - இதோ - ஜூன் மாதத்து டெக்சின் அட்டைப்பட முதல் பார்வை ! நம் ஓவியரின் பெயின்டிங் இது - போனெல்லியின் போஸ்டர்களில் ஏதோவொன்றின் inspiration-ல் ! And கதையைப் பொறுத்தவரை அனலாய்ப் பொரிந்து தள்ளப் போகும் அக்மார்க் த்ரில்லர் இது ! ஒரு ஸ்டேஜ் கோச் பயணம் ; நம்மவர்களின் entry ; அதகள ஆக்ஷன் ; தெறிக்கும் கிளைமாக்ஸ் என்று ஒரு full meals காத்துள்ளது guys !! அப்புறம் ரொம்ப நாட்களுக்குப் பின்னே ஓவியர் காலப்பினியின் clean ஓவிய பணிகளோடு டெக்ஸ் & கார்சன் செம handsome ஆகத் தோன்றுவதாக எனக்குப்பட்டது !
நடமாடும் நரகம் - a fireball !! Bye guys! See you around!