நண்பர்களே,
வணக்கம். கூப்பிடு தொலைவிற்கு அக்டோபர் நெருங்கியிருக்க, நாலில் மூன்று இதழ்கள் அச்சுப் பணிகள் நிறைவுற்று மினுமினுக்கின்றன ! And வழக்கம் போலவே கிராபிக் நாவலின் மீது மட்டும் சற்றே கூடுதலாய் கவனம் அவசியமாவதால் இன்றும், நாளையும் அதற்கென நேரம் ஒதுக்கித் தயார் செய்து, புதன் காலையில் உங்கள் கூரியர் பார்சல்களை அனுப்பிடுவதாகத் திட்டமிட்டுள்ளோம் ! நமது சர்வீஸில் - ஆயுத பூஜைக்கே தீபாவளி மலர் தயாராவது இது தான் முதல்முறை என்று சொல்வேன் !! அந்த என்னமோ போடா மாதவா moment #
இதோ - ஆண்டின் முதல் புது சாகசத்தோடு உட்ஸிடியின் பட்டாளம் உங்களைச் சந்திக்கத் தயாராகிடும் இதழின் அட்டைப்பட preview :
வழக்கம் போலவே ஒரிஜினல் டிசைனே நமது ராப்பராகியுள்ளது ; பின்னட்டை மாத்திரமே நமது கைவண்ணம் ! கதையைப் பொறுத்தவரைக்கும் - இது ஒரு முழுநீளக் கெக்கேபிக்கே தோரணம் என்று சொல்வதை விடவும், நகைச்சுவையாய்ச் சொல்லப்பட்டதொரு ஜாலியான adventure என்று சொல்லலாம் ! ஒரு முழுநீள சாகசம் + குட்டிக் கதைகள் என்ற ஆரம்ப நாட்களின் template இந்த இதழிலும் நடைமுறை காண்கிறது ! இதோ உட்பக்க டீசர் :
And இதோ - லயன் கிராபிக் நாவலின் இதழ் # 4-ன் அட்டைப்பட முதல்பார்வையும் !
இந்த இதழும் போனெல்லியின் கறுப்பு-வெள்ளை Le Storie வரிசையினைச் சார்ந்தது என்பதால் - வழக்கம் போலவே ஒரு மாறுபட்ட களத்தில்கதை அரங்கேறுவதைப் பார்த்திடலாம் ! "இது தான் கதையின் pattern " என்று எவ்வித வட்டத்தினுள்ளும் இந்தத் தொடரினை அடைக்க இயலாது என்பதே இதன் பிரத்யேகத்தனம் என்பேன் ! இம்முறையுமே நாம் இதுவரையிலும் பார்த்தேயிரா ஒரு setting ! இங்கிலாந்தின் வேல்ஸ் பிராந்தியமும், அங்கு மக்களின் வாழ்வாதாரமாய் இருந்து வந்த சுரங்கத் தொழிலும் தான் இந்த ஆல்பத்தின் ஜீவநாடி ! அந்த மண்ணில் அரங்கேறும் ஒரு படு வித்தியாசமான சாகசமே நமது அக்டோபரின் "கனவுகளின் கதையிது" ! பார்த்திட வேண்டும் - "க.க." எவ்விதம் score செய்கிறதென்று !!
So தமிழக அரசியலை விடவும் அதிரடியான புதுப் புதுக் கூட்டணிகளோடு வலம் வந்திடும் yet another month நம் முன்னே ! ஒரு கௌபாய் சாகசம் ; ஒரு கார்ட்டூன் ; ஒரு சூப்பர் ஹீரோ tale ; ஒரு கிராபிக் நாவல் என்று இம்மாத combo அமைந்துள்ளதைப் பார்க்கும் போது கேள்வியொன்று உதித்தது தலைக்குள்ளே ! இத்தனை variety என்பது இல்லாது - ஒரே நாயகரின் சாகஸங்களைத் தொடர்ச்சியாய் ஆண்டாண்டு காலமாய் வெளியிட்டு வரும் நிறுவனங்களின் வாசகர்களின் ரசனைகள் எவ்விதம் shape ஆகியிருக்குமோ ? என்பதே அந்தக் கேள்வி ! போனெல்லியையே எடுத்துக் கொள்ளுங்களேன் - மாதா மாதம் ஒரு TEX ; ஒரு ஜூலியா ; ஒரு மர்ம மனிதன் மார்ட்டின் etc..etc..என்று போட்டுத் தாக்கி வருகின்றனர் ! மெஜாரிட்டி வாசகர்கள் டெக்சின் ரசிகர்கள் என்ற போதிலும், இதர நாயக / நாயகியரின் ஆல்பங்களை வாங்குவோர் predominantly அந்தந்த ஹீரோக்களின் ரசிகர்கள் மட்டுமேவாம் ! நமக்கெல்லாம் ஒரு முக்கால்வாசி TEX சந்தாவினை எட்டிப்பிடிக்கவே இத்தனை ஆண்டுகள் பிடித்துள்ளது ; variety என்றில்லாது, மாதந்தோறும் ஒரே நாயகரை நாமும் தரிசிப்பதாயின் அது எப்படிப்பட்ட அனுபவமாக இருக்கக் கூடுமென்பீர்கள் guys ? யோசித்துத் தான் பாருங்களேன் ? And அப்படியே ஒரே நாயகரை 12 மாதங்களும் ரசித்திடுவதாயின் - நமது தற்போதைய அணிவகுப்பில் TEX தவிர்த்து வேறு யாரையெல்லாம் இதற்கெனத் தேர்வு செய்திட முடியுமென்பீர்கள் ? இது strictly சும்மா ஜாலிக்காண்டியான கேள்வியே என்பதால் ஜாலியாக மட்டுமே இதனுள் புகுந்திடலாமே ?
Looking ahead - 2018-ன் அட்டவணை பற்றி நிறையவே பில்டப் கொடுத்திருக்கும் நிலையில் மேற்கொண்டு பிட்டு போடும் வேலையைச் செய்யப் போவதில்லை நான் ! மாறாக - கேட்லாக்கின் முன்னட்டை first look-ஐ உங்களிடம் காட்டினாலென்னவென்று தோன்றியது !
ஒவ்வொரு வருடமும் இந்த அட்டவணைத் தயாரிப்பென்பது நமது DTP அணியை போட்டுப் பிழிந்தெடுக்கும் படலமே ! என்னளவிற்கு ஏகமாய் ரோசனைகள் செய்து முடித்த கையோடு - வரிசையாய் அத்தனை கதைகளின் பட்டியலையும் ; அந்நேரத்துக்கு எனக்குத் தோன்றியிருந்த பெயர்களோடு எழுதிக் கொடுத்து விட்டு, அவை ஒவ்வொன்றுக்குமான விளம்பரப் படங்களைத் தேடிப் பிடித்து தேற்றித் தந்தாக வேண்டும் ! சில சந்தர்ப்பங்களில் நெட்டில் படங்கள் சிக்கும் ; பல சந்தர்ப்பங்களில் படைப்பாளிகளைக் கதற கதற அழ வைத்துகாரியம் சாதிக்க வேண்டி வரும் ! அப்புறமாய் ஆரம்பிப்பது தான் ஒரிஜினல் குலை குலையா முந்திரிக்கா ஆட்டமே ! "இந்தக் கதைக்கு பெயர் சரியில்லை ; இந்தக் கதைக்கு சித்திரங்கள் சரியில்லை ; இந்தக் கதையே சரியில்லை" ; அய்யய்யோ - திட்டமிடலில் ஆண்டுமலரைக் காணோமே ? ; இந்த ஹீரோவே வேண்டாம் ; அந்த அம்மணிக்கு VRS கொடுப்போம் ; கிழிஞ்சது போ - பட்ஜெட் எகிறுது ; இந்தக் கதையைத் தூக்கி அங்கே போடு ; அதைத் தூக்கி தூர போடு ! " என்று நித்தமொரு 'ஆட்றா ராமா....தான்றா ராமா!!" கூத்து அரங்கேறத் துவங்கும். நான் காலையில் ஆபீசுக்குள் நுழையும் போதே 'இன்னிக்கு முழியாங்கண்ணன் என்ன செய்யக் காத்திருக்கானோ ?" என்ற பீதியோடே DTP அணி இருப்பதுண்டு ! இந்தாண்டு அட்டவணையின் வடிவமைப்பு முழுக்கவே கோகிலா தான் ! இதுவரையிலும் அரை டஜன் பிரிண்ட்களாவது போட்டிருப்போம் முழு அட்டவணையையும் - வண்டி மாற்றங்களோடு ! இப்போதைய நிலவரப்படி குறைந்த பட்சம் 4 புதியவர்களுண்டு - 2018-ன் பயணத்திற்கு ! அந்த நம்பர் கூடவும் செய்யலாம் ; குறையவும் செய்யலாம் - தீபாவளிக்கு மறுதினம் ஆன்லைனில் 2018-ன் planner-ஐ உங்களிடம் காட்டுவதற்குள்ளாக !
Maybe ஏதேனுமொரு வருஷம் மட்டுமாவது அட்டவணையின் திட்டமிடலை எங்கள்மட்டிற்குச் செய்து விட்டு - அதனை உங்களிடம் அறிவிக்காமலே ஆண்டைத் துவக்கிட்டால் எப்படியிருக்கும் என்று நினைத்துப் பார்ப்பேன் !! மாதந்தோறும் கூரியர் டப்பாக்களுக்குள் என்ன இதழ்கள் உள்ளனவோ ? என்பதே தெரியாது காத்திருக்கும் சஸ்பென்ஸ் எத்தகையதாக இருக்குமென்று சொல்வீர்கள் guys ? காத்திருக்கும் புது இதழ்களின் அறிவிப்புகளைக் கொண்டே மாதத்தின் பாதிப் பதிவுகளை ஒப்பேற்றும் எனக்கு, முன்கூட்டிய அறிவிப்புகளில்லை எனும் பட்சத்தில் சமாளிக்கத் திணறிப் போய் விடும் என்பதே இதனில் எனக்குத் தட்டுப்படும் உடனடிச் சிக்கல் !! Again - இதுவும் ஒரு லூட்டிக்காண்டி சிந்தனை மாத்திரமே என்பதால் சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாமே ? !
முன்னே கொஞ்சம் பார்த்தாகி விட்ட நிலையில் - பின்னேயும் கொஞ்சமாய் பார்வையினை ஓடச் செய்வோமா ? Moreso - சரியாய் 30 ஆண்டுகளுக்கு முன்பாய் இதே தருணத்தில் தான் - நானும், இன்றுவரைக்கும் உங்களில் பலரும் ஆராதிக்கும் இதழொன்று வெளியானதெனும் போது !! Oh yes - சாதனை படைத்த "லயன் சூப்பர் ஸ்பெஷல்" 1987-ன் தீபாவளிக்கு ரூபாய் பத்து என்ற விலையோடு அட்டகாசமாய் களமிறங்கி 30 ஆண்டுகள் ஓடிவிட்டன ! இன்றைக்கு ஆயிரம் ; இரண்டாயிரம் என்ற விலைகளெல்லாம் நமது அகராதியினில் சகஜமாகிவிட்ட நிலையில் அன்றைய பத்து ரூபாய் இதழுக்கு அப்படியென்ன craze இருந்திருக்க முடியுமென இந்தத் தலைமுறையைச் சார்ந்த புது வாசகர்கள் நினைத்திடக்கூடும் ! ஆனால் ஒரு ரூபாய்த் தாள்களுமே புழக்கத்தில் இருந்துவந்த அந்த நாட்களில் அதுவொரு அசாத்திய விலை - at least ஒரு காமிக்ஸ் இதழுக்கு !!
ஒரு ஞாயிறு காலையில் "இதுதான் விலை ; இதுதான் புக்" என்று மேக்கி நூடுல்ஸ் வேகத்தில் கிண்டிவிட்ட கையோடு பணிகளுக்குள் நான் மூழ்கிப் போனது நினைவுள்ளது ; ஆனால் எனது தாத்தாவோ பதறிப் போய் விட்டார் ! என்னிடம் தனது கலக்கத்தை நேரடியாய்க் காட்டாது - தைரியம் சொல்வது போல் அவர் நடந்து கொண்டாலும், உள்ளுக்குள் "பேரப் பிள்ளை ஏழரையை இழுத்து விட்டுட்டானோ !!" என்ற மிரட்சி மிகுந்திருந்ததை நானறிவேன் ! பயமெனும் தொற்று நோய் தான் சைக்கிள் கேப்பில் கிடா வெட்டி விடுமே ? ; என்னை மட்டும் விட்டு வைக்குமா - என்ன ? "ஆங்...அதுலாம் பாத்துக்கலாம் !" என்றபடிக்கே ஆபீசில் அவர் பங்குக்கு உடுக்கையடித்த சீனியர் staff பொன்னுச்சாமியைச் சமாளித்துவிட்டாலுமே - எனக்குள் அடிமட்டம் ; நடுமட்டம் மேல்மட்டம் என்று சகல மட்டங்களிலும் ரிக்டர் ஸ்கேலில் 8.0 நிலநடுக்கம் நேர்ந்தது போலொரு ஆட்டம் இருந்ததை இன்றளவும் மறக்க இயலவில்லை !
BATMAN ; ஸ்பைடர் ; ஆர்ச்சி ; மாயாவி ; இரட்டை வேட்டையர் ; நார்மன் என்று ஏகப்பட்ட ஸ்டார் நாயகர்களோடு துளி ரிஸ்கும் இல்லாது வண்டியோட்ட வாய்ப்புகள் சல்லிசாய் இருந்த நாட்களவை ! So இந்தக் குரங்கு பல்டி அடித்து மண்டையை புடைக்கச் செய்து கொள்ள முகாந்திரங்கள் இருக்கவில்லை தான் ! ஆனால் கைவசம் குவிந்து போய் விட்ட கதைகளை இது போலொரு தருணத்தில் 'ஏக் தம்மில்' காலி செய்யாது போனால் கடும் பண வறட்சிக்கு அது காரணமாகி விடுமோ என்ற பயமே என்னை இந்தக் கூத்துக்குத் தயாராக்கியது ! தொடர்ந்த மாதங்களின் ஒவ்வொரு நாளிரவுமே இப்போதும் எனக்கு நினைவில் உள்ளது ! நமது ஓவிய அணி முழு வீச்சில் + அச்சுக் கோர்க்கும் பணியாளர்களும் ஒவ்வொரு நாளிரவும் 2 மணி வரைக்கும் கொட்டாவிகளையும், கொசுக்களையும் போராடிக் கொண்டே பணியாற்றுவார்கள் ! நான் நள்ளிரவைத் தொடும் வேளைக்கு சாவகாசமாய் புரோட்டா ஸ்டால்களை தினமொன்றாய் படையெடுத்துவிட்டு, பணியாளர்களுக்கு பார்சல்கள் ஏற்பாடு செய்திடுவேன் ! அந்த 500+ பக்க ஸ்பெஷல் இதழுக்குப் பின்னே குறைந்த பட்சம் ஓராயிரம் புரோட்டாக்களாவது பதுங்கி கிடப்பது நிச்சயம் !! கம்பியூட்டர்கள் கிடையாது ; சகலமும் மனிதத் திறன்களின் பலன்களே எனும் பொழுது - அவர்கள் ஒவ்வொருவருமே ஆத்மார்த்தமான ஈடுபாட்டோடு களமிறங்கிடாவிடின் சர்வ நிச்சயமாய் அந்த இதழ் கரை சேர்ந்திருக்காது !
கதைச் சுருக்கங்கள் ; பிட் நோட்டீஸ்கள் என்று ஏதேதோ அந்த இதழின் teaser ஆகத் திட்டமிட்டது ; சுடச் சுட டிசைன் செய்தது ; டிசைனின் இந்தியன் இன்க் காயும் முன்பாகவே பிராசஸ் செய்து சிக்கிய சிக்கிய கலர்களிலெல்லாம் அவற்றை அச்சிட்டது என்று என்னென்னெவோ செய்தோம் இந்த "மெகா" இதழை சொதப்பாது காப்பாற்ற வேண்டுமென்ற முனைப்பில் !
அதை விடவும் இந்த ராக்கூத்துக்களின் பின்னணியில் வேறொரு காரணமும் இருந்தது ! வீட்டுக்குக் காலத்தோடு போய் விட்டால் எனது தாத்தா முழித்திருப்பார் ; ஏதேனும் கேள்வி கேட்பாரோ என்ற பயம் ! திருடன் கோணிப்பையைத் தூக்கித் திரியும் இரவு இரண்டு மணிவாக்கில் வீடு திரும்பினால் தூக்கக் கலக்கத்தில் அம்மா தான் கதவைத் திறப்பார்கள் ; சத்தமின்றிப் போய் படுக்கையில் விழுந்து விடலாம் ! அதே போல காலையிலும் "பிள்ளை 2 மணிக்குத் தான் வீடு திரும்பிச்சு ; தூங்கட்டும்" என்று தொந்தரவு செய்ய மாட்டார்கள் ! So தாத்தா வீட்டிலிருக்கும் அந்த சீக்கிரப் பொழுதுகளை நான் குறட்டை உலகில் கழித்து விடுவேன் ! ஒரு மாதிரியாய் உங்களது உற்சாக வரவேற்பு - ஆர்டர்களாக ; முன்பதிவுகளாக ஏஜெண்ட்களிடமிருந்து வரத் துவங்கிய பொழுது சன்னம் சன்னமாய் என் ஜீவன் திரும்பத் துவங்கியது !
அப்போதெல்லாம் யாருக்கும் கடன் என்ற பேச்சே கிடையாது ; முழுத் தொகையும் முன்பணமாய்க் கிட்டாது போனால் - "ரிஜிட்ட் " என்று அந்த ஊர் முகவரின் கடுதாசியை ஓரம் கட்டி விடுவேன் ! தினமும் காலையில் கடிதங்களைக் கையில் தொட்டுப் பார்க்கும் கணமே எனக்கு யூகிக்க சாத்தியமாகியிருக்கும் - "ஆங்..இது திண்டுக்கல் ஏஜெண்ட் கவர் ; கனமா இருக்கு ; LVB பேங்க் டிராப்ட் உள்ளே இருக்கும் ; இது கோவை முகவரோட லெட்டர் - அரிசி மணிகள் போன்ற எழுத்துக்களில் ஆர்டர் குறிப்பிடப்பட்டிருக்கும் ; IOB டிராப்ட் ரூ.3000 க்கு இருக்கும்" என்ற ரீதியில் !! கவர்களை உடைத்து, டிராஃப்டுகளை ஒன்றொன்றாய் வெளியே எடுத்து டோட்டல் போட்டு அவற்றை பேங்குக்கு எடுத்துப் போகும் போது மனசு றெக்கை கட்டிப் பறக்கும் பாருங்களேன் - Lufthansa வாவது ; ஏர் இந்தியாவாவது - விமானங்களெல்லாம் பிச்சை எடுக்க வேண்டிவரும் அந்த மானசீகப் பறக்கும் படலங்கள் முன்னே !
And இந்த ஸ்பெஷல் வெளியீட்டின் விலை வழக்கத்தை விடவும் 5 மடங்கு கூடுதல் என்பதால் கிட்டும் டிராஃப்டுகளின் கனமும் பன்மடங்கு ஜாஸ்தி என்பதால் தினமுமே காது வரை விரிந்து கிடக்கும் சிரிப்பு ! வழக்கமாய் பில்களுக்குப் பணம் கேட்டு வருவோர்க்கு அதிக அலைச்சல்களை உண்டாக்காது ஒரு மாதிரியாய்ப் பணம் தந்து விடுவேன் அந்நாட்களில் ! ஆனால் அந்த குறிப்பிட்ட அக்டோபர் மாதத்திலோ - அத்தனை பேருக்குமே இரும்புச் செருப்புக்கள் வாங்கிடும் அவசியத்தை ஏற்படுத்திவிட்டேன் - வங்கி கணக்கில் கணிசமாய்ப் பணம் இருந்துமே !! வாழ்க்கையில் முதன்முறையாக ஒரு லட்சத்துக்கு மேலான தொகை என்னிடம் இருப்பில் இருந்த அந்த சந்தோஷத்தை அத்தனை சீக்கிரத்தில் இழக்க மனமில்லை என்பதே அத்தனை பேருக்கும் தற்காலிகமாய் அல்வா கிண்டியதன் பின்னணி ! பில்களுக்கு மளமளவென்று பணம் கொடுத்து இருப்பைக் கரைத்து விடாமல் - பேங்க் பாஸ்புக்கை இலட்சத்திச் சொச்சம் என்ற மோன நிலையிலேயே கொஞ்ச நாட்களுக்காவது தொடரச் செய்ய நினைத்தது இன்றைக்கு டுபுக்குத்தனமாய்த் தோன்றுகிறது ! ஆனால் 30 ஆண்டுகளுக்கு முன்பான லோகத்தில் சகலமுமே வேறொரு விதமன்றோ ?
பலரின் அசுர உழைப்பின் பலனாய் ஒருவழியாய் இதழ் வெளியானது ; தட்டுத் தடுமாறியேனும் சொன்னதைச் செய்து விட்டேனென்ற குஷியில் சுற்றித் திரிந்தது ; நான் கவனிக்கவில்லை என்ற எண்ணத்தில் - பருமனான இதழைக் கையில் தூக்கிப் புரட்டிப் பார்த்தவாறே "பரவாயில்லேலே டா ராதாகிருஷ்ணா ? புக்க நல்லா போட்டிருக்கான்லே பய ? " என்று கேட்டபடிக்கே "ஆர்டர்லாம் நெறய வருதுலே ?" என்று வினவிய தாத்தாவை மிஷின் ஹாலிலிருந்து வேடிக்கை பார்த்தது என்று வாழ்க்கையின் சந்தோஷங்களையும், பாடங்களையும் ஒட்டு மொத்தமாய் உணர வழிதேடித் தந்த அந்த "சூப்பர் ஸ்பெஷல்" நாளை 30 years down the line நினைவு கூர்ந்து பார்க்கிறேன் ! வாழ்கைக்குத் தான் எத்தனை எத்தனை வர்ணங்கள் !!
மீண்டும் சந்திப்போம் guys - bye for now ! அந்த சூப்பர் ஸ்பெஷல் நாட்களில் நம்மோடு இணைந்திருந்த நண்பர்கள் இருப்பின், அவர்களது மலரும் நினைவுகளை பகிர்ந்திடலாமே ? Have an awesome weekend !