Powered By Blogger

Friday, June 30, 2017

நன்றிகள் - குங்குமத்துக்கு !!

காமிக்ஸ் குடும்பத்தார்!





-யுவகிருஷ்ணா

இரும்புக்கை மாயாவியை தெரியாதவர்கள் தமிழ்நாட்டில் இருக்க முடியுமா? லாரன்ஸ் டேவிட், ஜானி நீரோ, ஸ்பைடர், டெக்ஸ் வில்லர், லக்கிலுக் என்று கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலமாக தமிழ் வாசிப்பில் ரசனையை கூட்டும் காமிக்ஸ் ஹீரோக்கள் அத்தனை பேருக்குமே சிவகாசியில்தான் டப்பிங் கொடுக்கப்படுகிறது. 

எழுபதுகளின் தொடக்கத்தில் ‘முத்து காமிக்ஸ்’, எண்பதுகளின் மத்தியில் ‘லயன் காமிக்ஸ்’ என்று தொடரும் இந்த காமிக்ஸ் பயணத்துக்கு முடிவே இல்லை. இப்போது சர்வதேசத் தரத்தில் வழுவழு தாள்களில் முழுவண்ணத்தோடு புதுப்பொலிவோடு பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

தாத்தா சவுந்தரபாண்டியன், ‘முத்து காமிக்ஸ்’ தொடங்கினார். அப்பா விஜயன், ‘லயன் காமிக்ஸ்’ ஆரம்பித்தார். மூன்றாவது தலைமுறையாக இப்போது இத்தொழிலில் புதுமுகமாக களமிறங்குகிறார் விஜயனின் மகன் விக்ரம். ‘முத்து காமிக்’ஸின் 400வது இதழ், ‘லயன் காமிக்’ஸின் 300வது இதழ் என்று ஒரே மாதத்தில் - ஜூலையில் - இரண்டு இதழியல் துறை மைல்கற்களை எட்டியிருக்கிறார்கள்! 
லயன் காமிக்’ஸின் ஜூனியர் எடிட்டரான விக்ரம் விஜயனை, தீபாவளிக்காக பரபரப்பாக தயாராகிக் கொண்டிருக்கும் கந்தக பூமியான தகதக சிவகாசியில் ஒரு மதியவேளையில் சந்தித்தோம். 

“இருபத்தைந்து வயதை இப்போதான் எட்டப்போறேன். நான் கொஞ்சம் லேட்டு. அப்பா விஜயன், பதினேழு வயசிலேயே ‘லயன் காமிக்’ஸுக்கு ஆசிரியராகி சாதித்தவர். சிவகாசியில் ஸ்கூல் முடிச்சேன். சென்னையில் பி.டெக் படிச்சேன்.

தாத்தா, அந்தக் கால ஐரோப்பிய காமிக்ஸ்களின் பரம ரசிகர். காமிக்ஸ் புத்தகங்களை தமிழில் வெளியிடுவதை ஒரு தொழிலாக இல்லாமல் தன்னுடைய கடமையாகத் தொடங்கினார். அப்பா, அதை விரிவுபடுத்தினார். சின்ன வயசுலே எங்க வீடு முழுக்கவே காமிக்ஸ் நிறைஞ்சி கிடக்கும். காமிக்ஸ் தவிர்த்து கார்ட்டூன் சேனல்கள் பார்த்துக்கிட்டிருப்பேன். 
லக்கிலுக், டின்டின்னு கார்ட்டூன் ஹீரோக்கள் என் மனசுக்குள்ளேயே எப்பவும் வசிக்கிறாங்க. எங்க குடும்பத்துக்கு உலகம் முழுக்க இருக்குற தமிழர்கள் மத்தியில் அடையாளம் கொடுத்தது காமிக்ஸ்தான். அப்படியிருக்க எனக்கு மட்டும் எப்படி இதில் ஆர்வம் வராமல் போகும்?”  கேள்வி கேட்கப் போன நம்மையே கேள்வியோடு எதிர்கொண்டார் விக்ரம்.

உங்க ஊரு பட்டாசுகளை வெடிச்சி, காசை கரியாக்குறோம்னு எங்களைத்தான் எல்லாரும் சொல்லுவாங்க. நீங்க காமிக்ஸிலே பெரிய முதலீடு போட்டு காசை கரியாக்குறீங்களே?

கரியாக்குறோம்னு சொல்ல முடியாது. மத்த தொழில் மாதிரி இதுலே பெருசா லாபமெல்லாம் பார்க்க முடியாது. ஆனா, பெரிய முதலீடு தேவைப்படும் தொழில்தான் இது. தமிழில் காமிக்ஸ் வெளியிட, ஒரிஜினல் கதைகளின் அயல்நாட்டு தயாரிப்பாளர்களுக்கு பெரிய ராயல்டி தொகை தருகிறோம். 

அதைத் தவிர்த்து மொழிபெயர்ப்பு, அச்சு என்று நிறைய செலவாகிறது. இதைத் தொழிலாக லாபம் எதிர்பார்த்து செய்வதாக இருந்தால், நிச்சயமாக வாசகர்களுக்கு இவ்வளவு குறைந்த விலையில் எங்களால் காமிக்ஸ் வழங்க முடியாது. என் அப்பாவும், தாத்தாவும் பயங்கரமான காமிக்ஸ் ஆர்வலர்கள். இப்போ தாத்தா ஓய்வில் இருக்க அப்பாவும், சித்தப்பாவும்தான் எங்க தொழில்களை நிர்வகிக்கிறார்கள். சித்தப்பாவுக்கும் காமிக்ஸ் ஆர்வம் உண்டு. அவங்க ரசனை அப்படியே எனக்கும் வந்திருக்கு.

எங்க குடும்பம் பாரம்பரியமா அச்சுத்தொழில் செய்துகிட்டு வருது. அது தொடர்பான நெடிய அனுபவம் எங்களுக்கு இருக்கு. சிவகாசி மாதிரியான தொழில் நகரத்தில் இயங்குறோம் என்பதால் மார்க்கெட் நல்லா அத்துப்படி ஆகியிருக்கு. திடீர் விலையேற்றங்களை எதிர் பார்த்து, அதற்கேற்ப புதிய தொழில் யுக்திகளை கையாண்டு எங்க செலவுகளை கட்டுக்குள் வெச்சிருக்கோம். 

அதனால்தான் மூன்று தலைமுறைகளாக, நாற்பத்தைந்து ஆண்டுகளாக நாங்கள் தொடர்ச்சியா செயல்பட முடியுது. இப்போ எங்க காமிக்ஸ்களில் என் அப்பாவின் ஈடுபாடும், உழைப்பும்தான் நூறு சதவிகிதம். ஆன்லைன் விற்பனையை நிர்வகிப்பது, சமூக வலைத்தளங்களில் மார்க்கெட்டிங் செய்வது போன்றவற்றில் நான் இறங்கியிருக்கிறேன்...

வாசகர்கள் இன்னமும் அதே ஆர்வத்தோடு காமிக்ஸ் புத்தகங்களை வாசிக்கிறார்களா?

அப்பா, தாத்தா காலத்து காமிக்ஸ் வரவேற்பைப் பற்றி நான் நேரடியாக அறியவில்லை. இப்போ அஞ்சு வருஷமாதான் தயாரிப்பு, திட்டமிடல் போன்றவற்றில் அப்பாவுக்கு துணையா இருக்கேன். எண்பதுகளைத்தான் காமிக்ஸ்களின் பொற்காலம் என்று வாசகர்கள் பலரும் சொல்றாங்க. 

ஆனா, இப்போ முன்பு எப்போதும் தமிழ் காமிக்ஸ் துறையில் இல்லாத அளவுக்கு புதுமைகளையும், தரத்தையும் எட்டியிருக்கோம். ஆக்‌ஷன், கெளபாய், கார்ட்டூன், சூப்பர்ஹீரோக்கள், கிராஃபிக் நாவல்கள் என்று வாசகர்களுக்கு வெரைட்டியா விருந்து பரிமாறுகிறோம். எங்களுக்கு வரவேற்பு எப்படியிருக்கிறது என்று நீங்களே புத்தகக் காட்சிகளின்போது எங்க ஸ்டாலுக்கு வந்து பார்க்கலாம். ஒருவேளை இன்னும் இருபது வருஷம் கழிச்சி இப்போதைய காலம்தான் காமிக்ஸ்களின் பொற்காலம் என்றுகூட சொல்லப்படலாம்!

காமிக்ஸ்களுக்கு என்று பிரத்யேகமாக நடத்தப்படும் comic con போன்ற புத்தகச்சந்தை நிகழ்வுகளில் பங்கேற்கிறீர்களா ?

நாங்களும் நம்முடைய தமிழ் காமிக்ஸ்களை எடுத்துக்கொண்டு ஆரம்பத்தில் இரண்டு ஆண்டுகள் பங்கேற்றோம். பெங்களூர், மும்பை, டெல்லி, ஹைதராபாத், பூனே என்று எங்கெங்கோ அவற்றை நடத்துகிறார்கள். சென்னைக்கு மட்டும் வரமாட்டேன் என்கிறார்கள். தமிழர்களுக்கும் நீண்டகால காமிக்ஸ் வாசிப்பு உண்டு என்பதை அவர்கள் அறியவேண்டும். என்றேனும் ஒருநாள் இங்கும் நடத்துவார்கள் என்று நம்பிக்கை இருக்கிறது. இப்போதைக்கு தமிழகத்தில் நடக்கும் பெரிய புத்தகக்காட்சிகளில் நாங்க பங்கேற்கிறோம். புத்தகக்காட்சி  அமைப்பாளர்களும் நாங்க பங்கேற்பதை விரும்பறாங்க...

முன்பெல்லாம் பெட்டிக்கடைகளிலும் கூட ‘முத்து’ / ‘லயன்’ காமிக்ஸ்கள் தொங்கும். இப்போது அப்படியில்லையே..?

சின்ன வாசகர் வட்டம். போதுமான அளவுக்கு விற்பனை என்று நாங்களே எங்களை வரையறைத்து வைத்திருக்கிறோம். பெரியளவில் விளம்பரம் செய்து விற்பனை செய்யும் சக்தி எங்களுக்கு இல்லை. வாட்ஸப் குழுமங்கள், சமூக வலைத்தளங்கள் மூலம் எங்கள் வாசகர்களே எங்களுக்கு விளம்பரம் கொடுக்கிறார்கள். புத்தகக் காட்சிகளின் போது புதிய வாசகர்கள் உருவாகிறார்கள். 

எல்லாத் துறையிலும் ராக்கெட் வேக மாற்றங்கள் நடைபெறுகின்றன. நம் தமிழ் காமிக்ஸ் துறை அந்தளவுக்கு வேகமாக மாறமுடியவில்லை என்றாலும், போட்டி நிறைந்த சூழலில் நாங்களும் எங்களுக்கான ராஜபாட்டையில் கம்பீரமாக நடை போடுகிறோம். இன்டர்நெட் மூலமாவே எங்க வாசகர் வட்டத்தை ஊக்கமாக செயல்பட வைக்கிறோம். வாசகர்களின் ரசனை மாற்றங்களை இப்போ உடனுக்குடன்  தெரிஞ்சுக்கவும் இன்டர்நெட் உதவுது.

இன்றைக்கும் முக்கிய நகரங்களில் எங்களுக்கு ஏஜெண்டுகள் இருக்கிறார்கள். எங்களது இப்போதைய வெளியீடுகள் நல்ல ஆர்ட் பேப்பரில், முழு வண்ணத்தில் சர்வதேசத் தரத்தில் உருவாக்கப்படுகின்றன. விலையை தொடர்ச்சியாக ஒரே மாதிரி கட்டுக்குள் வைக்க முடிவதில்லை. ஒரு இதழ் 50 ரூபாய் என்றால் அடுத்த இதழ் 100 ரூபாயாக இருக்கும். எனவே சிறிய கடைகளில் விற்க முடிவதில்லை.

வாசகர்களின் நேரடி சந்தா, ஆன்லைன் விற்பனை, புத்தகக் காட்சிகளில் பங்கேற்பு போன்ற முறைகளில் விற்பனை செய்து வருகிறோம். பல்லாயிரம் ரூபாய் செலவழித்து உரிமை வாங்கும் கதைகளை, இங்கே மிகக்குறைவான வாசகர்  வட்டத்துக்குத்தான் கொண்டு செல்ல முடிகிறது என்கிற சங்கடம் எங்கள் குடும்பத்துக்கு உண்டு! 


http://www.kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=12325&id1=4&issue=20170630     
=====================================================

குங்குமம் குழுமத்துக்கும், ஆர்வமெடுத்து இதனை சாத்தியமாக்கிய நண்பர் யுவகிருஷ்ணாவுக்கும் நமது உளமார்ந்த நன்றிகள் !! 

Sunday, June 25, 2017

க்யூபாவுக்குப் போவோமா..?

நண்பர்களே,
வணக்கம். என் தாய்வழித் தாத்தா ஒரு கதர் பிரியர். சொட சொட சொடக்கும் வெள்ளை கதர் சட்டையும், வெள்ளை வேஷ்டியும் அவருக்கொரு அடையாளமாகவே ஆகிப் போயின ! ஆனால் தமிழகத்தைத் தாண்டி, பணி நிமித்தம் பயணம் செல்ல நேரிடும் போதெல்லாம், வேஷ்டி, சட்டைக்கு வி்டைகொடுத்து விட்டு, பேண்ட் & ‘இன்‘ செய்யப்பட்ட சட்டைக்கு மாறி விடுவார். 1984-ல் என்னோடு டெல்லிக்கு இரயிலைப் பிடிக்கும் நேரத்தில் இந்த ‘மாடர்ன்‘ லுக்கில் அவரைப் பார்த்த போது ஒரு நொடிக்கு ‘பக்‘கென்றது எனக்கு ! அந்த நாட்கள் தான் நினைவுக்கு வந்தன- இம்மாதம் ! அதுவும் நமது ‘தல‘யின் புண்ணியத்தில் ! மடிப்புக் கலையாத மஞ்சள் சட்டை; கழுத்தில் டிரேட் மார்க் கறுப்பு ஸ்கார்ப் ; நீல ஜீன்ஸ் ; இடையில் பிஸ்டல் பெல்ட் என முக்காலே மூன்று வீச நாட்களில் மாறாத 'லுக்கில்' வலம் வருபவர், நவஹோ குடியிருப்புகள் பக்கம் தலைகாட்டும் போது அவர்களது பாரம்பரிய உடையோடும் காட்சி தருவாரென்பது நமக்குத் தெரியும் ! ஆனால் லார்ட் லபக்தாஸ் போல பேண்ட்; சட்டை; கோட்; தொப்பி; உதட்டில் சுருட்டு என்று மனுஷன் நம் முன்னே ஆஜரானால் - மெர்சலாகிப் போகாது என்ன செய்வதாம் ? ஓ... யெஸ்... காத்திருக்கும் “க்யூபா படலம்” சாகஸத்தில் தான் நம்மவர் இப்படித் தோரணையாய் அசத்திடக் காத்திருக்கிறார்!

நமது ஜுலை மாதப் பணிகளில் முக்கால்வாசி நிறைவுற்று விட்ட நிலையில்-  லயன் # 300 தான் மிரட்டலாய் இன்னமும் எஞ்சி நிற்கிறது ! சில பல சொந்தப் பணிகள் காரணமாய் இடையில் 4 நாட்கள் லீவு போடும் அவசியம் நேர்ந்திட- இப்போதோ நேரத்தோடு போட்டி போட்டுக் கொண்டு ஓடிய பிழைப்பாக உள்ளது - லயனின் இந்த 'லேண்ட்மார்க்' இதழினைப் பூர்த்தி செய்திடும் பொருட்டு ! And அதன் பிரதான highlight – இரவுக் கழுகாரின் “க்யூபா படலம்” தான் என்பதில் துளியும் சந்தேகம் கிடையாது ! நடப்பாண்டில் டெக்ஸின் கதைகள் வைகையைத் தீப்பற்ற வைத்திருக்கவில்லை என்பதை ஏற்றுக் கொள்ளும் முதல் ஆள் நானே ! தெர்மோகோல் போட்டு மூடப்படாதது தான் காரணமா ? அல்லது சற்றே துவக்க நாட்களது கதைகள் பக்கமாய் ஷண்டிங் அடித்ததன் பலனாக கதைகளில் ஒரு fire குறைவாகத் தட்டுப்பட்டதா ? என்று தெரியவில்லை ; ஆனால் விட்ட குறையைத் தீர்த்திட “க்.ப”வில் நம்மவர் அடித்து ஆடியுள்ளார் !என்னவோ ஒற்றை வரிக் கதை தான்; ஆனால் அந்த ஒற்றை வரியைக் கதாசிரியர் போசெல்லி பதித்துள்ளதோ நமக்கு ரொம்பவே புதுசான க்யூபாவில்!! அமெரிக்காவின் வால் பகுதியில் குந்தியிருக்கும் மெக்ஸிகோ தேசமானது - நமது கௌபாய் கதைகளின் ஏகத்துக்குப் பின்புலமாக இருந்ததுண்டு ! போன மாதத்து டெக்ஸ் சாகஸமே கூட அதற்கொரு உதாரணம் தானே ? ஆனால் மெக்ஸிகோவுக்கும், கீழே – ஷேப் இல்லாத சப்பாத்தியைப் போல படர்ந்து கிடக்கும் க்யூபா தேசம் அத்தி பூத்தாற் போல் மட்டும் காமிக்ஸ்களின் களமாகியிருந்துள்ளது ! இம்முறையோ அந்த மண்ணின் பாரம்பரியம் ; வரலாறு; பூகோளம்; அரசியல்; மத நம்பிக்கைகள்; ஊடூ சூன்யத் தாக்கம் ; அடிமைக் கலாச்சாரம் ; சுதந்திரப் போராட்டம் என சகலத்தையும் துளி கூட நெருடலின்றி – ஒரு திகிலூட்டும் டெம்போவில் போசெல்லி நமக்குச் சொல்லவிருக்கிறார்! கதைக்களமே ஒரு இருண்ட மர்ம பூமி என்பது பற்றாதென்று – ஊடூ மாந்த்ரீக நம்பிக்கைகள் சார்ந்த அதிரடிகளோடு இந்தப் பயணம் தடதடக்கும் போது நம்மையும் அறியாமல் மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு பக்கங்களைப் புரட்டப் போகிறோமென்பது உறுதி ! அதிலும் சித்திர பாணி – புதியதொரு ஓவியரின் கைவண்ணத்தில் அசாத்தியமாய் மிளிர்கிறது! 

‘கடல் சார்ந்த சாகஸம்‘ எனும் போது அந்த மாமூல் பாலைவன உடுப்புகளுக்கும், குதிரைகளுக்கும் விடை தந்து விட்டு, கப்பலில் கோட் சூட் சகிதம் சுற்றி வருவதும்; க்யுபாவில் ரயிலில் பயணம் செய்வதும் ஒரு பக்கமென்றால் – 'நீரும்-நெருப்பும்' எம்.ஜி.ஆரைப் போல வாள் சண்டையில் பட்டையைக் கிளப்புவது இன்னொரு பக்கம் ! தீவிர டெக்ஸ் ரசிகர்களுக்கு ஒரு மாறுபட்ட  ட்ரீட் காத்துள்ளது! அதே நேரம் மேம்போக்கான ஆக் ஷன் கதையாக மட்டும் இருந்திடாது – உலகின் மறுகோடியிலுள்ளதொரு புதிர் தேசத்தைப் பற்றி மேற்கொண்டும் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை நம்முள் கிளறிட இங்கே ஏகமாய் வாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன! So- ஊடூ ஆண்டவர் தேசத்தின் ஆராய்ச்சிக்கு, கூகுள் ஆண்டவரைத் தயார்ப்படுத்திக் கொள்ளலாமே ?

டெக்ஸின் அதிரடி ஒரு பக்கமெனில் பென்சில் இடையழகி ஜுலியாவின் த்ரில்லரோ முற்றிலும் வேறொரு பாணி! நம்மிடையே இந்த க்ரிமினாலஜிஸ்ட் இப்போது தான் சிறுகச் சிறுக மவுசு ஈட்டி வருகிறார்; ஆனால் இத்தாலியிலோ இவர் இப்போதொரு established சாதனையாளர்! 220+ ஆல்பங்கள் இவரது கதைத்தொடரில் இருந்திட – அங்குள்ள புக் ஸ்டோர்களில் பிரத்யேக “ஜுலியா ரேக்குகள்” ஏற்பாடாகும் அளவிற்கு இவரொரு அம்மாடக்கராகி இருப்பது தான் யதார்த்தம்! லயன் # 300-ல் இவரது கதை – பேசப்படும் ஒன்றாக அமைந்திடுமென்ற நம்பிக்கை நிறையவே உள்ளது எனக்கு ! "ஆ....இவரது கதையா ? மொக்கை தான் !! " என்ற தீர்மானங்களை முன்கூட்டியே எடுத்துக் கொள்ளாது - கதைக்குள் பொறுமையாய்ப் புகுந்திட ஒரு வாய்ப்பு தந்து தான் பாருங்களேன் ? 

ஒரு பெண் புலியின் பாணி ஓசையில்லா தாண்டவமென்றால் – கைகோர்க்கும் மற்றொரு பெண் வேங்கையோ அதிரடியின் மறு பெயர் ! யெஸ் – ஆண்டில் இரண்டாவது தடவையாகத் தலைகாட்டும் தங்கத் தாரகை மாடஸ்டி – “சிறையில் ஒரு சிட்டுக் குருவி”யில் வழக்கம் போல போட்டுத் தாக்குகிறார்! சித்திரங்களில் வழக்கம் போல ஏகக் காற்றோட்டம் மிளிர, நமது DTP அணி நொடியில் கண்ண பரமாத்மாவாக உருமாறி – போத்தீஸ் போகாமலே மீட்டர் மீட்டராய் துணியை வரவழைத்து விட்டிருந்தனர்! “ஆஹா... அந்த டெய்லர் பொறுப்பை என்னிடம் விட்டு விடுங்கள்!” என்று சொல்லி, மறுபடியும் இளவரசிக்கு வியர்க்காத வகையில் ventilation-க்கு வழி செய்திருக்கிறேன்! நாளை தீர்மானிக்க வேண்டும் – திருப்பூரில் சிபிஜியிடம் சொக்காய் ஆர்டர் சொல்வதா ? வேண்டாமாவென்று !

முன்னூறின் – இறுதிக் கதையொரு ராபின் டிடெக்டிவ் த்ரில்லர்! நியூயார்க் எனும் பரிச்சயமான களம்... NYPD-ன் வழக்கமான துப்பறியும் அணி என்று crisp ஆன சித்திரங்களில், சுறுசுறுப்பாய் நகரும் கதையிது! And நிறைய காலம் கழித்தொரு அக்மார்க் டிடெக்டிவ் த்ரில்லர் நமது வாசிப்பிற்குக் கிட்டியிருப்பது highlight.

“டிடெக்டிவ் த்ரில்லர்கள்” என்ற topic–ல் இருக்கும் போது – எனக்குள்ளே லேசானதொரு ஏக்கப் பெருமூச்சும் கூட! Once upon a time – நமது இதழ்களுள் திரும்பின திசையெல்லாம் துப்பாக்கி ஏந்தும் டிடெக்டிவ்கள் சுற்றி வந்தது வரலாறு! ஆனால் அவர்களெல்லாமே பெருந்தலைவர் காலத்து அரசியல் நாணயத்தைப் போல காலாவதியாகிப் போய் விட்டது தான் இன்றைய நிலைமை ! இப்போதும் பிஸ்டல்கள் சரளமாய் கண்முன்னே நடமாடுகின்றன தான் - ஆனால் நமது வன்மேற்குப் பார்ட்டிகளின் கரங்களில் ! சமீபமாய் இந்தத் “துப்பறிவாளர்களின் பஞ்சத்துக்கொரு” தீர்வு காண ரூம் போட்டு யோசித்த போது சில பல டிடெக்டிவ் பெயர்கள் முன் நின்றன! அவர்களுள் முக்கால்வாசிப் பேர் வெவ்வேறு காரணங்களின் பொருட்டு சுகப்படாது போவது புரிந்த போது – “you are unselected!” என்று தான் சொல்ல முடிந்தது. இறுதியாய் எஞ்சி நின்றதொரு 'பிஸ்டல் பார்ட்டிக்கு' யாருமே மறுப்பு சொல்ல முடியாதென்று தோன்றியதால் – அவருக்கு மட்டும் “you are unrejected” என்று சொல்லி வைத்தேன்! So கான்டிராக்ட் போடும் படல சம்பிரதாயமும் சுபமாய் நடந்தேறிட  – 2018-ல் எதிர்பார்த்திடலாம் இந்த அழகரை !

அவருக்கு இம்மி கூட குறைவில்லா இன்னொரு அதிரடி நாயகருமே நம் தேடலில் தட்டுப்பட – அவரையும் தமிழ் 'மாட்லாட' அழைத்திருக்கிறோம். ஒரே சிக்கல் என்னவெனில் அவரது கதைத் தொடரில் இது வரையிலும் இரண்டே ஆல்பங்கள் தான் வெளியாகியுள்ளன ! # 3 ரிலீஸ் ஆகும் தினத்துக்கு மனுஷனை ஒரு கோணிச் சாக்குக்குள், மரத்தடிப் பிள்ளையாரைப் போல போட்டு அடைத்து தூக்கி வந்திட முஸ்தீபுகள் தயாராக உள்ளன! இந்தாண்டின் இறுதிக்கு ஆல்பம் # 3 ரிலீஸாகி விடும் என்று படுவதால் – 2018-ல் நம்மை மிரட்ட இவருமே தயாராகி விடுவாரென்று படுகிறது ! Fingers Crossed!

Back on track – லயன் # 300-ல் இம்முறை காத்திருக்கும் black & white விருந்தானது நிச்சயமாய் ரமலான் பிரியாணி போல சுவையாக இருக்குமென்ற நம்பிக்கை ஏகமாயுள்ளது ! என்ன ஒரே சிக்கல் – தயாரிப்பில் நாக்கு... மூக்கு.... காது.... என்று சகல அவயங்களும் தரையைச் சுத்தம் செய்யக் கிளம்பி விடுகின்றன! காத்திருக்கும் வாரமானது கோரிடும் பணிகளின் தன்மையை நினைக்கும் போதே மூச்சிரைக்கிறது ! Phew ! And இதோ – லயன் # 300 ன் அட்டைப்பட முதல் பார்வையும் :
இது வழக்கமான பெரிய சைஸ் அல்லாது – மாமூலான டெக்ஸ் சைஸிலான இதழ் எனும் போது முன்னட்டையில் அத்தனை நாயக / நாயகியரின் collage ஒன்றினை உருவாக்கத் தோன்றவில்லை - ஏகமாய் இடநெருக்கடி எழுந்து விடுமென்பதால் ! And முன்னட்டையில் இருக்க வேண்டியது நமது சூப்பர் ஸ்டாரே என்பதிலும் ஐயமிருக்கவில்லை ! So அவரது ‘ஹாயான‘ போஸ் ஒன்றினை நமது ஓவியரைக் கொண்டு உருவாக்கி அட்டைப்படமாக்கிப் பார்த்தோம் ! ஆனால் பின்னணியில் டிசைனர் பொன்னன் ரொம்பவே கைவண்ணத்தை காட்டிட – அத்தனை சோபித்தது போலப் படவில்லை !
தவிர, டிசைனை ஆற, அமர ஆராய்ந்த போது ‘தல‘யின் இடது கை – குளிருக்கு இழுத்துக் கொண்டிருப்பது போலத் தோன்றியது! அட... அரிசோனாவில் அடிக்கும் வெயிலில் கை இழுக்க வாய்ப்பு லேதாச்சே? என்ற ஞானத்தோடு இன்னொரு டிசைனைப் போடுமாறு ஓவியரைக் கோரினோம் ! இம்முறை கதையின் சம்பவங்களையுமே பின்னணியில் இணைக்கச் சொல்லி விபரம் சொல்லிட, ‘பச்சக்‘கென்று போட்டுத் தாக்கினார் மாலையப்பன். அந்த டிசைனை கொஞ்சம் மெருகூட்டி, எழுத்துக்களை இணைத்த போது – LION 300 ராப்பர் உருப்பெற்றது. வழக்கமான நகாசு வேலைகளும் இடம்பிடித்திடும் என்பதால் இதழைக் கையிலேந்தும் வேளையில் எப்போதும் போலவே அந்தத் 'தடவிப் பார்க்கும் படலம்' காத்திருக்கும் உங்களுக்கு!
அட்டைப்படப் பணிகளில் இதோ – ஆகஸ்டின் அதிரடிக்கும் இன்னொரு முயற்சி! கேப்டன் டைகரின் ”இரத்தக் கோட்டை”க்கென தொடர்ந்து முயற்சித்து வரும் அட்டைப்பட டிசைன்களுள் இதோ நமது லேட்டஸ்ட்! 
ஏற்கனவே 2 டிசைன்களைப் பார்த்திருக்கிறீர்கள்... and இது நம்பர் 3! இன்னமுமே ஓய்ந்தபாடில்லை நமது தேடல்கள்! So ஆகஸ்டில் ஈரோட்டில் நீங்கள் பார்த்திடவுள்ள ராப்பர் எதுவாகயிருக்குமோ என்பது இப்போதைக்கு எனக்கே தெரியாது !

சரி... இளவரசியின் பஞ்சாயத்தும், ஜுலியாவின் அதகளமும் அழைப்பதால் இப்போதைக்கு விடைபெறுகிறேன் ! See you around guys! Have a great Sunday! 

Wednesday, June 21, 2017

நாங்களும் ஆட்டத்தில் உண்டுங்கோ...!

நண்பர்களே,

வணக்கம். ஆபிரஹாம் லிங்கனிலிருந்து, அமெரிக்க உள்நோட்டுப் போர் ; தங்க விலையேற்றம் ; டாலர் மதிப்பு ; பொருளாதாரம் ; அரசியல் என்று எங்கெங்கோ ரவுண்ட் கட்டியடிக்கும் விவாதங்கள், மூக்கும், மூக்கும் ஒட்டுமா ? என்ற விஞ்ஞான சிந்தனையையும் உள்ளடக்கி நிற்பதை நானுமே வாய் திறந்து வாசித்து வருகிறேன் ! ஒரு "பொம்மை புக்"கானது இத்தனை சிந்தைகளுக்கு இறக்கைகள் தருமா ? என்பதை இந்த உலகிற்கு தூரத்தில் உள்ளோர் அறிந்திட சத்தியமாய்  வாய்ப்பே கிடையாது ! நம் வட்டமானது சிறுகச் சிறுகக் கூடிடும் ஒரு நாளில் - அதகளம் எவ்விதமிருக்கும் என்று கற்பனை செய்து தான் பாருங்களேன் ? Phew !!

இந்த மாதம் மிஸ்டர் டெக்ஸ் வில்லர் என்றொருவருமே சந்தாப் பிரதிகளின் டப்பாவுக்குள் இடம்பிடித்திருந்தார் என்பதால்,  "அடியிலிருந்து எடுப்பவரை" அலசிடும் அதே கையோடு  - நவஹோ தலைவர்பாலும் சிறிதே கவனத்தைத் திருப்புவோமா ? 

Maybe தலையும் ஆட்டத்தில் இருக்கிறார் இம்மாதம் ; விரைவிலேயே தளபதியும் இணையவிருக்கிறார் அட்டவணையில் - என்பதை உணர்த்தும் இந்த டிசைனுக்கு caption எழுதுவோமா - ஞாயிறு வரைக்கும் ?
"இது பரிசு--அது பரிசு" என்று நான் கதைவிட்டு விட்டு , அடுத்த வேலைக்குள் மூழ்கிய கணமே மறந்து போக இம்முறை வழிதராது - இந்த caption போட்டியின் வெற்றி நாயகருக்கு ஈரோட்டில் ஒரு பெயின்டிங் (மோனா லிசாலாம் கிடையாதுங்கோ ; நம்ம மாலையப்பனின் கைவண்ணத்தில் ஏதோவொன்று தான் !!) அன்பளிப்பு ! So - விமர்சனங்களோடு, விவாதங்களோடு, caption-களும் களை கட்டட்டுமே ?!!  Bye all ! Catch you over the weekend !!

Sunday, June 18, 2017

பயணத்தின் பன்முகங்கள் !!

நண்பர்களே,

வணக்கம். லேட்டாய்த் தலைகாட்டினாலும் , லேட்டஸ்ட் வரவானது ஷிகர் தவனைப் போல அடித்து ஆடி வருவதைப் பார்க்கும் போது குஷியாக உள்ளது ! Yup -   வருஷம் தொடங்கி மாதங்கள் 5 ஓடிய பின்னரே தலைகாட்டிய  சந்தா E -  ஒரு வித்தியாசமான அனுபவத்தினை இதுவரையிலுமாவது தந்து வருவதைப் பற்றியே சிலாகிக்கிறேன் ! அதிலும் இந்த நடப்பு மாதத்தில் - ஒரு 'தல' முழுநீள சாகசத்துடன் போட்டி போடும் நெருக்கடி உருவாகினும், அந்த வெட்டியான் தம்பியே thumbs up காட்டிடும் சூழலை வியப்போடே பார்த்து வருகிறேன் ! அதிலும் நண்பர்கள் கடந்த பதிவில் அண்டர்டேக்கர் தொடர்பாய்    முன்வைத்திருக்கும் அலசல்களைப் பார்க்கும் போது மலைப்பாகவும் ; நிம்மதியாகவும் இருந்தது ! மலைப்பு : ஒரு சித்திரக் கதையை நீங்கள் ஒவ்வொருவரும் அணுகிடும் கோணங்களையும், ஆழங்களையும் கண்டு ! நிம்மதி : "நல்ல வேளைடா சாமி - திருவிளையாடல் தருமியைப் போல "எனக்குக் கேள்விகளைக் கேட்க மட்டும் தான் தெரியும் !" என்று ஓரத்திலிருந்து வேடிக்கை பார்க்க சாத்தியமாவது குறித்து !! ஒற்றைக்கை பௌன்சருக்கு அப்புறமாய் இத்தனை விவாதங்களை அவசியப்படுத்தியுள்ள பெருமையைத் தனதாக்கியுள்ள அண்டர்டேக்கருக்குப் பின்னே சின்னதொரு சுவாரஸ்யக் கதையுள்ளது ! 

முதன்முதலாய் இந்த மயானத்து மீசைக்காரரை நான் பார்த்தது 2014-ன் மத்தியில் ! படைப்பாளிகளின் ஆபீசுக்குள் நுழையும் போதே கண்களிரண்டுமே பழைய அம்பாஸடர் காரின் முகப்பு விளக்குகளை போல 'டொய்ங்' என துருத்திக் கொள்வது வாடிக்கை & அன்றைய பொழுதுமே ஒரு விதிவிலக்கல்ல ! அவர்களது வரவேற்பறையில்- வரவிருக்கும் மெகா ஸ்டார் நாயக ஆல்பங்களின் விளம்பரப் போஸ்டர்கள் ; கட்-அவுட்கள் என்று இரைந்து கிடப்பதை ரசிப்பதற்கும், போட்டோ எடுப்பதற்குமே 10 நிமிடங்களைச் செலவிட்டால் தப்பில்லை என்று தோன்றும் ! அன்றைக்கு மிரட்டலாய் அங்கே நிற்க நான் பார்த்த மனுஷன் தான் நமது அண்டர்டேக்கர் ! இன்றைய ரசனைகளோடு ஒப்பிடுகையில் - 2014-ல் நாம் கொஞ்சமாய்ப் பின்தங்கியே இருந்தோம் தானே ? So இந்தப் புதுவரவை லேசாய் ஒரு நோட்டம் விட்டுவிட்டு, எனது கவனங்கள் முழுசையும் நான் தர விழைந்தது நமது XIII-ன் இரண்டாம் சுற்றின் முதல் ஆல்பத்தின் அட்டைப்படத்துக்கே ! MAYFLOWER என்ற பைபாஸ் ரூட்டைப் பிடித்து ; புதியதொரு ஓவியர் - கதாசிரியர் கூட்டணியோடு XIII மீள்வருகை செய்திடவுள்ளார் என்பதே எனக்கு அப்போதைய மின்சாரச் செய்தியாகத் தோன்றியது ! (பின்னாட்களில் அதே சேதியானது மின்சார ஓட்டைக்குள் தெரியாத்தனமாய் விரலை நுழைத்து விட்டு மிச்சம் சொச்சம் கேசமெல்லாம் அந்தரத்தில் நிற்க  'ஆர்வக்கோளாறு அப்புசாமியாய்' உணரச் செய்தது என்பது தனிக் கதை !) மேலே சென்று அவர்களது conference அறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போதுமே எனது கேள்விகளெல்லாமே XIII பற்றியே இருந்தன ! அவர்களாகத் தான் UNDERTAKER என்றதொரு 2 பாக cowboy graphic novel தயாராகி வருவதாய்ச் சொல்லி வைக்க - நானும் சுவாரஸ்யம் காட்டுவது போல் தலையாட்டி வைத்தேன் ! 2015-ன் துவக்கத்தில்  இதன் முதல் ஆல்பம் வெளியான சமயமுமே, ரொம்பவே உற்சாகமாய்ப் பேசினர் - இந்தக் கதைக்களத்தைப் பற்றியும், முதல் ஆல்பத்தின் விற்பனை அமர்களத்தைப் பற்றியும் ! ஆனால் 2015-ல் எனக்கு பௌன்சரை கூடையைப் போட்டுக் கவிழ்ப்பதைத் தவிர்த்து வேறெதுவும் முக்கியமாய்த் தோன்றவில்லை என்பதால் இந்தத் தடவையும் - only தலையாட்டல் என்பதோடு முடித்துக் கொண்டேன் ! வருஷத்தின் இறுதியில் அவர்களை மீண்டும் சந்திக்க வாய்ப்புக் கிட்டிய போதோ - அண்டர்டேக்கர் பாகம் 2 ம் வெளியாகி தூள் கிளப்பிக் கொண்டிருந்தது ! கழுகுகளோடு மனுஷன் ஜாலியாய்க் குந்தியிருக்கும் ஒரு  சிகப்பு பேக்கிரவுண்ட்  டிசைனை எட்டடி உயர போஸ்டராய் ஒட்டி வைத்திருந்தார்கள் ! ஆனால் 2016-ன் முழுமைக்கும் இரவுக் கழுகாரின்விஸ்வரூபம் திட்டமிடப்பட்டிருந்ததால்- வேறெந்தக் கௌபாயும் அச்சமயம் சுகப்படமாட்டார்கள் என்ற தீர்மானத்திலிருந்தேன் ! So அப்போதுமே பாராமுகம் ! ஆனால் 2016-ல் அவர்களது ஆபீசில் உருட்டல்களைச் செய்து கொண்டிருந்த போது கண்ணில் பட்டது ஒரு black & white சித்திரம் ! அண்டர்டேக்கரின் உட்பக்கங்களுள் ஏதோவொன்று - வர்ணம் தீட்டப்படாத நிலையில் - இந்தியன் இங்க் டிராயிங்காகவே பிரம்மாண்டமாய்க் காட்சியளித்தது ! அந்தச் சித்திரத்தின் வசீகரத்தைப் பார்த்த போதே ஸ்தம்பித்துப் போனேன் !! And சந்தா E என்ற திட்டமிடல் என்னுள் ஏற்கனவே உறுதியாகியிருந்த நிலையில் - yesssssssssss என்று பூம் பூம் மாடாய்த் தலையாட்டி வைத்து, அண்டர்டேக்கருக்கான கான்டிராக்டைத்   தயார் செய்திடக் கோரினேன் ! So இன்றைக்குத் தமிழ் பேசிடும் இந்த மயானத்துக் காவலன்ஓராண்டுக்கு முன்பே கூட நம் பக்கம் ஒதுங்கியிருக்கக்கூடும் - நான் மட்டும் அந்த ஆந்தை விழிகளை இன்னும் கொஞ்சம் திறந்து வைத்திருக்கத் தயாராக இருந்திருக்கும் பட்சத்தில் ! Better late than never என்று நினைத்துக் கொண்டேன் ! 

நமது பயணத்தின் ரம்யமே - ஒற்றை நொடி செம  சீரியஸ் ; மறு கணம்  ஜாலிலோ ஜிம்கானா !! என்ற கும்மாளம் தானென்பேன் ! So பிணம்.,,,பணம்,,,,தங்கம்....மயானம் என்றபடிக்கு ஒரு ஆல்பத்தை மங்களம் பாடிவிட்டு நிமிர்ந்து பார்த்தால் வெள்ளந்தியாய்ச் சிரித்து நிற்பது நமது பெல்ஜியத்து கவுண்டரும் - செந்திலும் !! நல்ல நாளைக்கே எனது ஞாபக சக்தி மீது புல்டோசர் ஓட்டலாம் ; இந்த நிலையில் ஆண்டுக்கு 50 இதழ்களெனும் நெருக்கடியில் மேரா ஞாபக சக்தி கண்ணாமூச்சி ஆடுவதில் வியப்பில்லை ! ஏதோ ஒரு யுகத்தில் வெளியான "இரும்புக் கௌபாய்" இதழும் சரி ; "விண்ணில் ஒரு எலி"யும் சரி - ஒட்டுமொத்தமாய்ப் புத்தம்புது கதைகளாய்த் தோன்றிட - சும்மா செம ஜாலியாய் பணிகளுக்குள் புகுந்திட முடிந்தது ! பற்றாக்குறைக்கு "விண்ணில் ஒரு எலி" கதைக்கு ஒட்டு மொத்தமாய்ப் புதுத்  தமிழாக்கமும் என்றாக - சூப்பர் 6 -ன் நான்காம் இதழ்  என் பணியிடத்தை உட்ஸிடியாக மாற்றித் தந்தது ! பாருங்களேன் - காத்திருக்கும் hardcover இதழின் அட்டைப்படத்தினை - நம் டிசைனர் பொன்னனின் கைவண்ணத்தில் :  
இந்த இரண்டினில் நாம் தேர்வு செய்திருப்பது எந்த டிசைனாக இருக்கும் என்று any guesses folks ?

And இதோ - இரு கதைகளிலிருந்துமே வண்ணத்தில் உட்பக்க previews ! 
தொடர்வது - முற்றிலும் புது மொழியாக்கத்தோடு வரவிருக்கும் "விண்ணில் ஒரு எலி" உட்பக்கம் : 
நீங்கள் பழைய வாசகரோ - புது வாசகரோ -  இந்த இதழில் உங்களுக்கோர் முற்றிலும் புது வாசிப்பு உத்திரவாதம் என்று மட்டும் சொல்வேன் - simply becos "விண்ணில் ஒரு எலி" கதையானது ஒரிஜினலாகவே  வெறும் 30 பக்கங்கள் கொண்டதே ! அந்நாட்களில் அதனை  நாம் 64 பக்கங்களை வெட்டி-ஒட்டி இதழினை black & white-ல் உருவாக்கியிருந்தோம். ஆனால் இன்றோ இந்த சூப்பர் 6 ஆல்பத்தில் - கதைகளுக்கு 44 + 44 பக்கங்கள் + filler pages என்ற பார்முலா அமலில் இருப்பதால் - இரும்பு கௌபாய் - 44 பக்கங்கள் + விண்ணில் எலி - 30 பக்கங்கள் என்று மட்டுமே எழுதிட முடியாதல்லவா ? So  இந்தாண்டில் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருக்கும் "ஒரு ஷெரீப் சிப்பாயாகிறார்" கதையினில் இருந்ததொரு 14 பக்க சிக் பில் சிறுகதையை இங்கே இணைத்துளோம் ! ஆகையால் பழசினுள், புதுசும் உண்டு இம்முறை ! அழகாய் அட்டைப்படம் ; ஜாலியான கதைக்களம் ; அதிலும் ஒரு ஆதர்ஷ கார்ட்டூன் கும்பல் எனும் பொழுது தலைக்குள் 'ஜிவ்வ்' வென்ற எதிர்பார்ப்பு இப்போதே மேலோங்குகிறது - இந்த ஆல்பத்தை உங்கள் கைகளில் ஒப்படைக்கும் நாளை நினைத்து !! And a kind reminder folks : இது நம்பர் போடப்பட்டு மிகக் குறைவான பிரிண்ட்ரன் கொண்டதொரு collector's ஆல்பமாகவே இருந்திடும் ! 

LADY S அச்சுப் பணிகள் நிறைவுற்று பைண்டிங் நோக்கிப் புறப்படுகின்றன திங்களன்று ! ஓவியர் Aymond-ன் சித்திரங்கள் நவீன பாணி வர்ணங்களில், ஆர்ட்பேப்பரில் சும்மா தகதகப்பதைப் பார்க்கும் போது கைகள் நம நமக்கின்றன - இதனைப் புத்தக வடிவில் தரிசித்திட !! இன்னும் எத்தனை கழுதை வயசானாலுமே, இந்த first copy thrill மட்டும் விட்டு விலகாதென்பதை மீண்டுமொருமுறை உணர்ந்தேன் நேற்றைக்கு ! 

லயன் # 300 -ன் பணிகள் தான் தற்சமயம் ஒட்டு மொத்தமாய் எங்களது குறுக்கெலும்புகளைப் பதம் பார்த்து வருகின்றன ! முழுவதுமே black & white தானென்றாலும் 512 பக்கங்கள் என்ற கத்தைக்குள் கதக்கழி ஆடுவது கிறுகிறுக்கச் செய்யும் சவாலாய் முன்னிற்கிறது !! ராபினும், மாடஸ்டியும் நிறைவு பெற்றிருக்க, டெக்ஸும், ஜுலியாவும் ஆபீசுக்குள் மேஜைக்கு மேஜை தாவித் திரிகின்றனர் தற்போதைக்கு ! சரியான சமயத்தில் பணிகளை நிறைவு செய்திடும் ஆற்றலைக் கோரி புனித மனிடோவை தான் வேண்டிக்கிடக்கிறோம் ! 

புனித மனிடோ இம்மாதம் மட்டுமன்றி, ஆகஸ்டிலும் நம் மீது கருணை காட்டல் அவசியமென்பேன் - காத்திருக்கும் "இரத்தக் கோட்டை" யின் பொருட்டு ! அதன் பணிகளும் ஜரூராய் நடைபெற்று வருகின்றன = இணைத் தடத்தினில் ! Maybe இங்கே நண்பர்கள்  எனக்கொரு சகாயம் செய்திடலாம் - உட்பக்கங்களின் பிழைதிருத்தப் பொறுப்பைக் கையில் எடுத்துக் கொள்வதன் மூலம் ! ஒற்றையாளாய் இதனைச் செய்வது கடினமே என்பதால் - at least 2 அல்லது 3 பேர் இணைந்து ஒருசேர பணியாற்றும் வாய்ப்பினை உருவாக்கிடக் கூடிய நண்பர்கள் ஒரு மின்னஞ்சலைத் தட்டி விடலாமே, ப்ளீஸ் ! அப்புறம் அதற்கான அட்டைப்படப் பணிகளுமே நடந்தேறி வருகின்றன ! Here's one.....!

Before I sign off - சில குட்டிச் சேதிகள் :
  • நெய்வேலியில் ஜூன் 30 முதல் துவங்கும் புத்தக விழாவினில் நமக்கு ஸ்டால் உறுதியாகியுள்ளது ! So முதன்முறையாக நிலக்கரி நகருக்கு நம் கேரவன் நகர்கிறது ! புதுக் களம் , முற்றிலும் புது  மார்க்கெட் என்பதால் ரொம்பவே excited !! இதுவரையிலும் கிட்டியிரா வாய்ப்பு முதன்முறையாக நமதாகி இருப்பதால் - அந்தப் பகுதியினில் காலூன்ற பிரயத்தனம் செய்வோம் !! நம் நண்பர்கள் யாரேனும் அங்கிருப்பின், உங்களின் ஒத்தாசைகள் நமக்குத் பெரிதும் பயன் தந்திடும் ! 
  • ஆகஸ்டில். ஈரோட்டிலும் நமக்கு ஸ்டால் வழங்கிட மக்கள் சிந்தனைப் பேரவை அன்புடன் இசைவு தெரிவித்துள்ளது நமக்கு அடுத்த சந்தோஷத் தகவல் ! கொஞ்சம் ஆர்வக் கோளாறில் - இரட்டை ஸ்டால் கேட்டு விண்ணப்பித்திருந்தோம் - சென்னையின் பாணியில் ! ஆனால் அரங்க எண்ணிக்கை பெரிதாய்க் கூடாத சூழலில், ஈரோடை நோக்கி சகல பதிப்பாளர்களும் படையெடுக்கும் நிலையில், ஒரு ஸ்டாலுக்கு மேல் ஒதுக்கிடல் சாத்தியமாகாது என்று நமக்குத் பொறுமையாய் விளக்கிய மக்கள் சிந்தனைப் பேரவைக்கு நமது நெஞ்சார்ந்த நன்றிகள் ! 
  • புதியதொரு கௌபாய் கிராபிக் நாவல் கண்ணில் பட்டுள்ளது !  கௌபாய் ஓவர்டோஸ் ஆகிடக் கூடாதே என்ற மெல்லிய பயம் கட்டிப் போடுகிறது நம நமக்கும் கைகளை !! 
Bye all ! ஞாயிறு நமக்கொரு கோப்பை நாளாகிடுமென்ற நம்பிக்கையில் விடைபெறுகிறேன் !! (நிச்சயமாய் நான் குறிப்பிடும் கோப்பை எதுவென்பதில் சந்தேகம் இராது தானே !!) See you around ! 


Sunday, June 11, 2017

300 + 400 ...!

நண்பர்களே,

வணக்கம். ஆண்டின் அட்டவணைகளை முன்கூட்டியே நிர்ணயம் செய்வதில் ஒரு வசதியுமுண்டு ; சிக்கலுமுண்டு என்பதை ஒவ்வொரு வருஷமும், ஒவ்வொரு விதத்தில் உணர்ந்து வருகிறேன் ! வசதி என்று அடையாளம் காட்டுவதானால் - திட்டமிடக் கிடைக்கும் அவகாசத்தையும், பட்ஜெட் போட முடியும் சாத்தியத்தையும் சொல்லலாம் ! சிக்கலென்று சொல்வதானால் - கீழே வரவேண்டிய கூட்டுத்தொகையினை முதலில் எழுதி வைத்துக் கொண்டு, அதற்கேற்ப மேலே இடம்பிடிக்க வேண்டிய   இதழ்களை அமைத்திட முனைவதைச் சொல்லலாம் ! அந்தக் கட்டுப்பாட்டின் அவசியமில்லாது, ஓரிரண்டு மாதத்துத் தொலைவுக்கு மாத்திரமே பார்வைகளை ஓடச் செய்யும் நாட்களில், மண்டைக்குள் அவ்வப்போது உதயமாகும் மகா சிந்தனைகளையெல்லாம் 'ஜாலிலோ-ஜிம்கானா' என்று சுடச் சுடக் களமிறக்கும் வாய்ப்புகள் இருந்திடும் ! கட்டிலிலிருந்து மேற்காலே பார்த்துக் கீழே இறங்கினால் - "மேற்காலே ஸ்பெஷல்" என்றும் ; கிழக்காலே பார்த்திறங்கினால் - "கிழக்குச் சீமை ஸ்பெஷல் !" என்றும் எதையாச்சும் செய்யத் தோன்றும் !  பட்ஜெட் போட்டுத், திட்டமிட்டு, சீராய் வண்டி ஓட்டும் இன்றைய நாட்களில் நான் மிஸ் பண்ணும் ஒரே சமாச்சாரம் - அந்த go as you please சுதந்திரத்தைத் தானென்பேன் !  அந்த சுதந்திரம் மட்டுமிருந்திருப்பின், காத்திருக்கும் மைல்கல் தருணங்கள் ஒவ்வொன்றுக்குமே பிரித்து மேயும் ஸ்பெஷல் இதழ்களை all the way through போட்டுத் தாக்கியிருப்பேன் ! ஆனால் பட்ஜெட் என்றதொரு கால்கட்டு மாத்திரமின்றி - கார்ட்டூன் ; கவ்பாய் ; கிராபிக் நாவல் ; மறுபதிப்புகள் என்று வெவ்வேறு பாணி இதழ்கள் என்ற சமாச்சாரமும் நம் நேரங்களை நிறைய எடுத்துக் கொள்வதால் - 'பப்பரக்கா'  என்று அகலமாய் கால்களை விரிக்க பயமாகிப் போகிறது ! Anyways - ஓவர் ஆசையும், ஆர்வக் கோளாறும் உடம்புக்கு ஆகாதென்பதால் வாயோரம் பொங்கும் H2O-வை லைட்டாக துடைத்துக் கொண்டே ஆகவேண்டிய வேலைகளுக்குள் மூழ்கிட முனைகிறேன் ! 

ஜூலை நமக்கு எப்போதுமே ஒரு ஸ்பெஷல் மாதமே என்றாலும், காத்திருக்கும் இந்த ஜூலையானது ஒரு three-in -one தருணமென்பேன் ! நம்பர்களுடனான நமது காதல் ஒருநாளும் ஓயாதென்பதாலோ - என்னவோ இந்தாண்டின் ஆண்டுமலர் தருணத்தை ஒரு 300 + 400-ன் தருணமாகவும் சேர்த்து அமைத்திட  பிரயத்தனம் மேற்கொண்டேன் ! So லயனின் 33 வது ஆண்டுமலர் + லயன் இதழ் # 300 + முத்து காமிக்ஸ் இதழ் # 400  என்று 'ஏக் தம்' மைல்கல் moments இன்னமும் 20 நாட்களில் நம்மை சூழ்ந்து நின்றிடும் !!

சாவகாசமாய்த் திரும்பிப் பார்க்கையில், ரெண்டு விஷயங்கள் எனக்கே ஒரு உறுத்தலாய் உள்ளதை நான் ஒத்துக் கொண்டே தீர வேண்டும் ! முதலாம் சமாச்சாரம் - முத்து காமிக்ஸ் சார்ந்தது ! 1987 க்குப் பின்னே என்னிடம் பொறுப்புகள் கைமாறின ! ஆனால் NBS வெளியிட்ட 2013 வரைக்கும் முத்துவின் ஆண்டுமலரை நாம் கொண்டாட பெரிதாய் முனையவே இல்லை என்பது நிதர்சனம் !  நமது கவனங்கள் அந்நாட்களில் தீபாவளி மலர் ; கோடை மலர் என்றே பெரும்பாலும் லயித்து நின்றதாலோ-என்னவோ முத்து காமிக்ஸ் ஆண்டுமலருக்கு சிந்தனை தரவே தோன்றியிருக்கவில்லை ! And அன்றைக்கு என் நடுமூக்கில் குத்த உங்களுக்கும் மார்க்கங்கள் லேது என்பதால் - சிவன் போக்கு ; சித்தன் போக்கென்று என்னால் தொடர முடிந்தது ! உறுத்தல் # 2 - லயனிலுமே பெயரளவிற்கு "ஆண்டுமலர் " என்று பீலா வீட்டுக் கொண்டு, கேக் முன்னே குந்தியிருக்கும் சிங்கத்தை உங்கள் கண்ணில் காட்டியிருந்தாலும் - சீரியஸான ஸ்பெஷல் இதழ் எதுவும் ஆண்டுமலரென ஜொலித்ததாய் ஞாபகமில்லை !

லயனின் first ever ஆண்டுமலரை நமது துவக்கநாட்களது வாசகர்களுக்கு மறந்திருக்காது - simply becos அந்நாட்களது பாகுபலியும், பல்லாளதேவனுமாய் நம் உலகினில் உலாற்றி வந்த கூர்மண்டையரும், சட்டித் தலையனும் ஒருங்கே ஒரே இதழில் சாகசம் செய்ய நேரிட்டது- நமது முதன்முதல் ஆண்டுமலரினில் தான் ! (அது பற்றி முந்தைய ஆண்டுகளில் ஏதேனும் ஒரு தருணத்தில் நானிங்கு பதிவிட்டிருக்கவும் கூடும் தான்  ; so மறு ஒலிபரப்பாக இருப்பின் பொருத்தருளக் கோருகிறேன் ! நம்மள்  கி ஞாபக சக்தி அப்பப்போ foreign டூர் போயிடுறான் !! ) தண்ணீரிலும் நடக்க முடியும் ; ஆகாசத்திலும் றெக்கையின்றிப் பறக்க முடியுமென்ற தெனாவட்டு என்னுள்ளே ஊற்றெடுத்த நாட்களவை !  ஒரு சிகப்பு உடுப்பையும், முதுகில் ஒரு கொசு மருந்து டப்பியையும் மாட்டிக் கொண்டு நானே அட்டைப்படத்தில் குந்திக் கொண்டிருந்தாலுமே அந்த இதழ் சூப்பர்-டூப்பர் ஹிட் தான் என்று கணிக்கும் அளவிற்கு ஸ்பைடர் மேனியா நம்மை ஆட்கொண்டிருந்தது ! And அண்ணன் ஆர்ச்சியுமே ஓட்டப் பந்தயத்தில் அதிக தொலைவில் பின்தங்கியிருக்கவில்லை ! So அன்றைய காலகட்டத்தில் இந்த ஜோடியை ஒரே இதழில் - அதுவும் நமது ஆதர்ஷ பாக்கெட் சைசில் களமிறக்குவது அரை நொடி யோசனையைக் கூட அவசியமாக்கிடா தீர்மானமாகிப் போனது !

அட்டைப்படங்கள் இரண்டுமே கலக்கிட வேண்டுமென்ற ஆர்வத்தில் நமது ஓவியர் மாலையப்பனுக்கு ஊக்க போனஸும் தருவதாய் வாக்களித்திருந்தேன் ! எல்லாமாய்ச் சேர்த்து - டிசைன் ஒன்றுக்கு ரூ.200 என்பது தான் 3 x 10 ஆண்டுகளுக்கு முன்பான சன்மானம் !! மாதச் சம்பளங்களே ரூ.300 என்றிருந்த நாட்களில், ஒரு வார உழைப்பிற்கு இருநூறு ரூபாய் ஈட்ட முடியும் வாய்ப்பு அசாத்தியமானது என்றே நினைப்பேன் அப்போதெல்லாம் ! சும்மா அதிரடியாய் 2 டிசைன்கள் பத்தே நாட்களில் தயாராகி என் முன் நின்ற போதே எனக்கு இந்த இதழ் சார்ந்த எதிர்பார்ப்புகள் உச்சத்தைத் தொடத் துவங்கின ! சும்மா கட்டம் போட்ட கலர் சொக்காயும், வெண்புரவியுமாய் ஆர்ச்சியைப் பார்க்கும் போது எனக்கே 'பிகில்' அடிக்கணும் போலத் தோன்றியது ! ஸ்பைடரை கருணையானந்தம் அவர்களும், ஆர்ச்சியை நானும் எழுதியது ; பர பர வென அச்சுக் கோர்த்து  ; நமது ஆர்டிஸ்ட்களிடம் ஒப்படைத்தது ; கடைசி 32 பக்கப் பணிகள் நிறைவானது இரவு 12-30 மணிக்குத் தானென்றாலும், அதுவரையிலும் (எனது அண்ணனின்) அச்சகத்தில் வேறு வேலைகளை அவர்கள் துவங்கிடாதிருக்க லஞ்சமாய் அனைவருக்கும் சுடச் சுட  புரோட்டா வாங்கி கொடுத்து காத்திருக்கச் செய்து, சுடச் சுட அச்சிட்டது - என்று எல்லாமே ஸ்பஷ்டமாய் நினைவில் நிற்கின்றன ! அந்த 32 பக்கங்களை நெகட்டிவ் எடுக்க மொத்தமே ரூ.100 ஆகியிருக்கும் ; ஆனால் அதன் பொருட்டும் இரவு 12-30 வரையில் வெளியிலுள்ள பிராசசிங் கூடத்தினர் நமக்காகக் காத்திருப்பர் !! ஒரு சைடில் அச்சாக வேண்டிய 16 பக்கங்களை நெகட்டிவ் எடுக்க அனுப்பி விட்டு, அதனை அவர்கள் முடிக்கும் அவகாசத்திற்குள் பின்பக்க 16 பக்கங்களை பிழைதிருத்தம் செய்து ; டமால்-டுமீல் களை இணைத்து, ஓட்டமும், நடையுமாய் நம்மவர்கள் தூக்கிக் கொண்டு ஓடுவார்கள் !  எத்தனை எத்தனை கரங்கள் இந்தப் 18 வயதுப் புள்ளையாண்டானை அன்றைக்கு ஏந்திப் பிடித்திருக்கின்றன என்பதை இப்போது யோசித்துப் பார்க்கும் போது- அவர்கள் ஒவ்வொருவரின் திசைக்கும் நமஸ்கரிக்கத் தோன்றுகிறது ! எத்தனையோ நாட்கள், கையில் போஸ்டர் கலர் white & brush சகிதம் அந்நாட்களது ஓவியரான காளிராஜன் பிராசசிங் கூட்டத்திலேயே போய் கடைசி நிமிஷத் திருத்தங்களையும் செய்ததுண்டு ! எனது சமவயதுக்காரன் ; எனது முதன்முதல் ஊழியன்  என்ற வகையில் எனக்கு என்றைக்குமே அவன் மீதொரு தனி வாஞ்சையுண்டு !! ஓரிரு மாதங்களுக்கு முன்பாய் பஜாரில் அவனைப் பார்க்க முடிந்த போது ரொம்பவே சந்தோஷமாக இருந்தது ! 3 குழந்தைகளோடு வாழ்க்கை சகஜமாய் ஓடுவதாய்ச் சொன்னதைக் கேட்ட போது மனதெல்லாம் நிறைவாய் உணர்ந்தேன் !

2 டக்கர் கதைகள் ; அப்புறம் நிறைய filler pages என்று இதழ் அமைந்திருப்பதை நம்மிடமுள்ள file copy -ஐப் புரட்டும் போது தெரிகிறது ! "கொலைகாரக் குரங்கு" என்ற பெயரோடு விளம்பரப்படுத்தப்பட்ட TEX கதை ; அப்புறம் டயபாலிக் விளம்பரம் என்பதோடு சில பல பரிசுப் போட்டிகளின் முடிவுகளும் உள்ளன !  சித்தர் A .முகமது ஹனீபா என்ற நெல்லை வாசகரின் மினி கவிதைக்கு பரிசும், அவரது போட்டோ பிரசுரிப்பும் செய்திருக்கிறோம் ! பாருங்களேன் !!
அது மாத்திரமின்றி CID ஜான் மாஸ்டரை சிலாகித்து எழுதியிருந்த வாசகர் D .சோமசுந்தரம் - ரூ.25  பரிசை தட்டிச் சென்றிருந்தார் ! நமது சாத்தான்ஜியா அது ?? அப்புறம் 2 பக்கங்களுக்கு "வாசகர் கடிதம்" + பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வந்த "யார் அந்த மினி-ஸ்பைடர் ?" விளம்பரம் என அதிரடிகள் தொடர்ந்துள்ளன !! அந்நாட்களது கை அச்சுக்கோர்ப்பையும், ஓவியர்களின் கைவண்ணங்களையும் பார்க்கும் போது மூன்று decades க்கு முன்பான human skills எத்தனை அசாத்தியமானவை என்பது புரிகிறது ! இயந்திரங்கள் சகலத்தையும் கபளீகரம் செய்வதற்கு முந்தைய அந்த இறுதித் தலைமுறை ஆற்றலாளர்களோடு தோளோடு தோள் நின்று பணியாற்றியதை இப்போது நினைக்கும் போது பெருமிதமாக உள்ளது ! இன்றைய நவீன உலகினில் 'லொஜக்-மொஜக்'  என்ற  நொடிப் பொழுதய மவுஸின் திருகல்களில். வர்ண ஜாலங்கள் கம்பியூட்டரில் விரிவதை நான் பட்டிக்காட்டான் மிட்டாய்க்கடையைப் பார்ப்பது போல பராக்குத் தான் பார்க்க முடிகிறது ; ஆனால் 30 ஆண்டுகளுக்கு முன்பான நாட்களில் என்னாலும் பணிகளின் ஒவ்வொரு நிலைகளிலும் பங்கெடுத்துக் கொள்ள சாத்தியப்பட்டது ! ஹ்ம்ம்ம்....பழைய நினைப்பு பேராண்டி ...!! என்று தான் முணுமுணுக்கத் தோன்றுகிறது இப்போது ! தொடர்ந்த ஆண்டுகளில் ஏதேதோ இதழ்கள் ஆண்டுமலராய் வெளிவந்திருந்தாலும் - என்னளவிற்கு நினைவில் பிரதானப்படுவது இந்த first ever முயற்சியே !

உங்களுக்கு எனது 3 கேள்விகள் இங்கே guys :

1 .இந்த இதழினை ஒரிஜினலாய் வாசித்த அனுபவம் உங்களுள் எத்தனை பேருக்கு ?

2 . அதன் பின் வந்த லயன் ஆண்டுமலரில் - உங்களது TOP 3 இதழ்களென்று ஏதேனும் தேறுமா ? (அதாவது நமது மீள்வருகைக்கு முன்பான காலகட்டத்திலிருந்து)

3 . அன்றைக்கு மட்டும், இப்போதுள்ளது போல, உங்கள் குரல்களும் கேட்கப்படும் ஒரு சூழல் நிலவியிருப்பின், 1985 -ல் எனக்கு நீங்கள் சொல்ல விளைந்திருப்பது என்னவாக இருந்திருக்கும் ? (ஏதேனும் washing & pouring சமாச்சாரமாயிருந்தால் லேசாய் கோடி மட்டும் காட்டுங்கள் - புரிந்து கொள்வேன் !!)

Back to the present - இதோ காத்திருக்கும் முத்து காமிக்ஸின் இதழ் # 400 -ன் அட்டைப்பட first look !
இந்தாண்டின் பாணித் தொடர்ச்சியாய் ஒரிஜினல் டிசைன்களே இம்முறையும் அமலில் ; சின்னச் சின்ன நகாசு வேலைகளோடு ! LADY S -என்ற எழுத்துக்கள் கிட்டத்தட்ட இந்தத் தொடருக்கொரு trademark போலாகிவிட்டதால் - அதனை ஆங்கிலத்திலேயே தொடரச் செய்ய நினைத்தேன் ! கண்ணை உறுத்தா விதத்தில் தலைப்பையும், இதர text களையும் அமைப்பது மட்டுமே பாக்கி வேலையாக இருந்தது ! So கொஞ்சமாய் நமது inputs + 90 % ஒரிஜினல் artwork என்ற கூட்டணியின் பலனான ராப்பர் இது !

And இதோ - உட்பக்கத்திலிருந்து preview -ம் கூட !!
இதனை ஏற்கனவே ஆங்கிலத்திலோ, பிரெஞ்சிலோ படித்திருக்கக்கூடிய நண்பர்கள் வான் ஹாம்மேவின் கைவண்ணத்தை நிச்சயமாய் ரசித்திருப்பார்களென்பது உறுதி ! Spythrillers என்று வந்து விட்டால் மனுஷன் வேறொரு லெவெலுக்குப் போய் விடுகிறார் தான் ! கதையைப் பொறுத்தவரை - பில்டப் அவசியப்படாது என்பதே எனது அபிப்பிராயம் ! ஒற்றை வரியில் சொல்வதானால் - watch out இளவரசி !!

ஒரே மாதத்தில் மூன்று பெண்புலிகளும் களமிறங்குவதுமே ஒரு சந்தோஷ coincidence !! So ஆற்றலில் யார் டாப் ? என்ற கேள்வியை ஜூலைக்கான பட்டிமன்றமாய் வைத்துக் கொள்ளலாம் தான் ! Maybe இப்போதைக்கு "கண்ணுக்குக் குளிர்ச்சியில் யார் டாப் ?" என்ற மகா ரோசனைக்குள் மூழ்கிட முனையலாமோ ?

Before I sign off - சமீபமாய் வந்ததொரு வாசக மின்னஞ்சலை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேனே ? நடப்பாண்டின் ஒரு பொதுவான அலசலாய் பார்த்திடலாமே ? Bye all ! See you around !
------------------------------------------------------------------------------------------------------------
ஜனார்தனன்.ஜ மேட்டூர் அணை-1
(மலேசியா)

அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு மற்றும் உங்களை சார்ந்து உள்ள அனைவருக்கும் என் வாழ்த்துக்களும் மற்றும் முகமன் கூறுகிறேன்...

ஜனவரி தொடக்கத்தில் 'ட்யுராங்கோ'அதிரடி என்று வந்தார். தூங்கு மூஞ்சி சாயலோடு கதை ஆரம்பம் ஆனது.எங்கும் ஒற்றை ஆளாக ஆஜர் ஆகும் ஆசாமி.துப்பாக்கிகளை அசாரதணமாக கையாளும் ஆசாமி, யுவதிகளை கவர்ந்திழுக்கும் காந்த கண்ணழகன். திறமையே இவருக்கு துணை! முதல் கதையை ஒரு 'மாதிரியாக ' முடித்துக் கொண்டு சூரிய வெளிச்சத்தில் இரண்டாவது ஆல்பத்தில், சுமாரான சாகசமாகத்தான் இருந்தது. இரண்டு கதைகளுக்கும் மெல்லிய நூலிழை தொடர்பு மட்டுமே இருந்தது உண்மைதான்!மூன்றாவது ஆல்பம் அதிரடி தொடக்கமாக ஆரம்பமானது. பாலைவனம் மட்டுமே வன்மேற்கை வசந்தமாக காட்டும்?இரயிலில் வந்து இறங்கியவர் பல தடைகளை தகர்த்து ஆல்பம் நான்கில் வெறி கொண்டு துரத்திய வெகுமதி வேட்டையர்களுக்கே டிமிக்கி கொடுத்து கைகளில் விலங்கிட்டு 'மரியாதை' பெற்று செல்கிறார்!!ஓவியர் (கதாசிரியர்) இரண்டுக்குமே அதிக முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கி உள்ளார் இத்தொடரை... ஆனால் சித்திரங்கள் ஒரு படி மேலே கதையை விடவும்!தரம் என்று சொன்னால் இவர் ஒரு தனி ஜாதி தான். இந்த அழுத்தக்கார நாயகரை எனக்கு மிகவும் பிடித்து விட்டது. அடுத்த முறையும் இது போல நான்கு ஆல்பம் ஒரே புத்தகம்... 

ஜேசன் ப்ரைஸ் பிப்ரவரியில் வந்தார்...
ஆனாலும் தாங்கள் கடைசி வரை இறுதி பாகம் இன்னும் படிக்கவில்லை என்றே சமாளித்து காலத்தை ஓட்டியது ஒரு புறம் அப்புறம் அச்சுக்கு செல்லும் முன்புதான் உங்களுக்கு சஸ்பென்ஸ் தெரிந்தது என்று ஏக  பில்ட்-அப்..நானும் மீண்டும்  இரண்டு பாகங்கள் படித்து மூன்றாவது பாகமும் படித்து முடித்த போது'ஙே' என்றுதான் கிளைமாக்ஸ் இருந்தது... ஆனாலும்  கம்சனை டெக்னிக்காக உயிர் எடுக்கும் அதே யுக்தி இந்த கதையிலும் மிக சுலபமாக கையாண்டு முடித்தது...என்னுடைய கை தட்டல்களை அள்ளிக் கொண்டது."விதி உன் பக்கம் ஒரு வாளை வீசினால் பயந்து நடுங்காதே அதன் கைப்பிடி-ஐ பற்றிக் கொண்டு போராடு" என்று வசனம் பேசிய அவருக்கே ஆப்பாக அமைந்து போனதுதான் பரிதாபம். இந்த கதையில் நாயகனை விட வில்லன் ஒரு படி மேலே நிற்கிறார்! அவர் ஆஜராகும் இடம் எல்லாம் ஒரு மாஸ் இருக்கிறது.வாழ்வில் நிறைவேறாத ஆசை,விரக்தி என்று வாழ்வின் எல்லையில் இருக்கும் அனைவரையும் மீட்டு எடுத்து மறுவாழ்வு கொடுப்பது, நச் என பேசும் வசனங்கள்... ஜேஸன் ஆஜராகும்  போதெல்லாம் சிடு சிடு வென்றும்.. உர்ரர்ரர..எனவும் தான் இருக்கிறார்...நானும் பெருமை பட்டு கொள்கிறேன். ஜே.பி...ஆல்பம் படித்து விட்டேன் என்று..தமிழில் வெளியிட்டு சத்தமில்லாமல் சாதணை புரிந்து உள்ளீர்கள்.

TEX @ தல...
இவர் மீது முதல் இரண்டு மாதம் நீங்கள் சரியாக டார்ச் அடிக்கமால் விட்டது போல் இருந்தது. ஒளி வட்டம் ஒன்றும் அவ்வளவு பிரகாசமாக இல்லை.

"ஆவியின் ஆடுகளம்"-குடும்ப கதை இங்கே கௌபாய்க்கு துப்பாக்கி உயர்த்தும் வேலை அதிகம் இல்லை.இறுதி அத்தியாயம் செம விறுவிறுப்பு கதவை எல்லாம் இழுத்து மூடி விட்டு முடிச்சு விடுவிப்பது.இங்கு அறவே துப்பாக்கி தூக்கும் வேலை இல்லாமல் போனது. கண்ணீர் வரவழைக்கும் ஒரு முடிவு என அமைந்து விட்டது.கனத்த இதயத்துடன் நம்மவர்கள் கிளம்புவது போல நானும் கதையை முடித்தேன்.. அக்மார்க் முத்திரை கொண்ட தரமான கதை.

"அராஜகம் அன்லிமிடெட்.." தலைப்பு தேர்வு செய்யும் நேரத்தில் ஏதாவது லிமிடெட் கம்பெனியில் இருந்தீர்களா? புத்தகத்தை மேலோட்டமாக புரட்டினால் சித்திரங்கள் பழைய  பாணியில் இருந்தன. ஒரு ஒற்றை கண்ணன் மட்டுமே கதை முழுதும் இருக்கிறானே? டெக்ஸ் எங்கே என்று சலிப்போடு படிக்க ஆரம்பித்தேன்... ஆரம்பமே டுமீல்,டுமீல் என்று உற்சாகம் கிளம்பியது.. கதையும் களை கட்டியது...ஒற்றை கண்ணன் யார் என்று பார்த்தால் நம்ம தல அவதாரம் தான்.திருடர் நகரம் என்று பேச்சு கிளம்பிய போதே எனக்கு சிரிப்பும் கிளம்பி விட்டது..கதை முழுதும் ஏட்டிக்கு போட்டியாகவே செய்து கொண்டு,பேசி கொண்டு திரிவது...என்று ஒரு நகைச்சுவை ஓட்டம் கதை முழுவதும் இருந்தது.. நான் மிகவும் ரசித்தேன்.. தல தனிஆளாக செல்வது... கார்ஸன் நண்பனை நினைத்து விசனப்பட்டு கொண்டே இருப்பது...வங்கி கொள்ளைக்கு உதவுவது..."ஆக வங்கியில் கொள்ளை அடிப்பது எல்லாம் சந்தையில் கத்தரிக்காய் வாங்கும் சமாச்சாரம் உனக்கு""அதை விட சுலபமானது"  விழுந்து  விழுந்து சிரித்தேன்.வில்லன் அநியாயத்திற்கு ஜென்டில் மேனாக இருந்தார். ஒரே காமெடி கதைதான்....இங்கேயும் டெக்ஸ் பொருட்டு ஒரு அப்பாவி பலியாவது.நெருக்கடி முற்றுவது என அனைத்தும் இருந்தது...
சுமார் கதைகளிலும் டெக்ஸ் முத்திரை பதிப்பார் என்பதை புரிந்து கொண்டேன்...

'பனியில் ஒரு கண்ணாமூச்சி' ; இரும்புக் குதிரையில் ஒரு தங்கப் புதையல்...அட்டைப்படம் அடி தூள்,புரட்டி கதை வாசிக்க ஆரம்பித்த போது அதை விட தூள்..நறுக்கியது போல் இருக்கும் குறைவான வசனங்கள்.சித்திரங்கள் அதிகம் கதை சொல்லின.. கார்ஸன் தன் பங்கு காமெடியை சிறப்பாக செய்து இருக்கிறார்.சீரியஸ் மூடிலும் கலகலப்பாக்கி விடுகிறார்.தல,தாத்தா?வை போலவே நானும் கதை முழுக்க மூச்சிரைக்க பயணித்தேன்..

அப்புறம் கார்ட்டூன் கதைகள் :
மாமன்னர் கலீபா நேரடியாக களத்தில் இறங்கிய கதை. அந்தண்டை,இந்தண்டை... நானும் கலீபாதான்..காரட் வாங்கி வர..சமையல்காரர் சொதப்ப..நல்ல கலகலப்பாக இருந்தது. அயல்கிரக வாசிகள் கதை நான் ஏற்கனவே படித்து விட்டேன்.. மறு வாசிப்பு,   

இதே போல் 'தோர்கல்' கதையும் நான் ஏற்கனவே படித்து விட்டேன்.. முத்து காமிக்ஸ் அல்லது ராணி காமிக்ஸ்-ஆ என்பது நினைவு இல்லை..கடைசி கதை 'மனத்தொலைநோக்கி' படித்தது போல் நினைவு இல்லை. 'தோர்கல்' புதிய ஆல்பம் இருந்தால் மட்டும் வெளியிடவும்.

புளூ கோட் பட்டாளம்.. 'டாஸ் மாக்' சரக்கு கலந்த ரகளைகள் ஏகமாக இருந்ததால் கதை ஏக வெற்றி அடைந்து விட்டது நன்றாகவே தெரிகிறது! இந்த கதையில்தான் கறிக்கடை, வீடு,தெரு,குடும்பம், 'சிஸ்டர்' என எல்லாவற்றையும் காண முடிந்தது. இல்லை என்றால் பீரங்கி முழக்கம், சீருடைகள், கூரான வாள்கள் என்றுதான் இருந்து இருக்கும்.

சுட்டி பயில்வான் பென்னி...மோசமில்லை,

லக்கி லூக்..சரியான களம் அமையாது போய் விட்டதால் இந்த கதை கச்சா எண்ணெய் போலவே அமைந்து விட்டது. ஆனாலும் லக்கியை பார்க்கும்போது எப்போதுமே எனக்கு சந்தோஷமே(இதை ஈடுகட்டும் விதமாக அப்சல்யூட்லி கிளாசிக்ஸ் அமர்க்களப்படுத்தி விட்டது)

கார்ட்டூன் கதைகள் மட்டும் மாதம் தவறாமல் பொலிவோடு வந்து விடுவது,கொஞ்சம் சிரிக்கவும் செய்கிறது.

அட்டவணை பார்க்கும்போது ஏதோ கனம் குறைவாக உள்ளது போல் தெரிந்தாலும் சூப்பர் 6, அப்ஸல்யு.கிளாசிக்ஸ் என சேர்ந்து கொள்ளும் போது கனம் கூடுதலாகத்தான் உள்ளது?அடுத்து நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் விமர்சனம்!!!???

ஜெரமயா...

கிட்டத்தட்ட நான் எனது எட்டு வயதில் இருந்தே படிக்கும், வாசிக்கும் பழக்கம் உடையவன்.. எட்டனா விற்கு வெளி வந்த ************நாவலில் இருந்து(ரொம்ப மட்டமான எழுத்தாளர்)யார்,யார் எழுதிய கதைகள் விதவித gener கள். எல்லாம் எழுத்து வடிவம்தான்..கற்பனையில் காட்சிகளை பார்த்துக் கொள்ளலாம். அது தலையனை மொத்த ஆங்கில நாவலாக இருந்தாலும் இந்த நிலைதான். ஆனால் காமிக்ஸ் என்பது அப்படி அல்ல,அதனால்தான் இன்றும் புதிது புதிதாக அவதாரம் எடுத்து வளர்ந்து வரும் துறை.. கற்பனைகளை ஓவியங்களாக வடிக்கலாம் அதில் மனதிற்கு பிடித்தது போல் உருவங்கள் வரைந்து பேச வைக்கலாம், எல்லைகள் இல்லாமல் பயணித்து கொண்டே இருக்கலாம்....இதனுடன் ஒப்பிடுகையில் சினிமா ஒரு படி பின் தள்ளப்பட்டு தான் உள்ளது இல்லையெனில் சார்ந்து நிற்கிறது (தமிழ் காவியங்களுக்கும்! மேற்கண்ட சமாச்சாரங்களுக்கும் துகள் அளவு கூட சம்பந்தம் கிடையாது)

ஜெரமயா-இத்தொடரை பொறுத்த வரை வரையரைகளுக்கு  உட்படுத்த முடியாது.. கதையில் வர்ணங்கள் கூட ஒரு normal mode இல்லை.இப்பொழுதே இது அப்படி, இப்படி என்று பேசுவதை விட மேற்கொண்டு மீதம் உள்ள கதைகளையும் படித்து விட்டு ஒரு நான்கு சுற்றுக்கு பிறகு(தொடரின் மத்தியில் இருப்போம்) அப்பொழுது பேசினால்,ஜெரமயா பற்றி ஒரு புரிதல் இருக்கும். So now no comments, I want moorrrreeee.

சரி...2018?

-மறுபதிப்புகள் இந்த ஆண்டே கடைசி என்று எதிர்பார்த்து இரண்டு ஆண்டுகளாக ஏமாந்து கொண்டுதான் உள்ளேன். அதுதான் option உள்ளதே தம்பி ? D வேண்டாம் என்றால் விட்டு விடலாமே என்பீர்கள்? அதில் 'டிராகன் நகரம்' சேர்ந்து உள்ளதே எப்படி விடுவது?இது ஒன்றும் பெரிய பிரச்சனை இல்லை ஒரு போன் கால் போதும்,ஆர்டர் கொடுத்தால் அனுப்பி வைத்து விடுவார்கள். ஆனால் புகைப்படம் அச்சிட்டு வருமா?என்று குழப்பம்.. சரி என்று டிக் அடித்து விட்டேன் சந்தாவில்.

ஜானி நீரோ கதைகள் இப்பொழுது தான் எனக்கு அதிகம் பரிச்சயமாக உள்ளது.அவர் மீது உங்களுக்கு என்ன 'காண்டு' என புரியவில்லை தாளித்து தள்ளுகிறீர்கள். எனக்கு நன்றாக இருக்கிறது படிக்க..அதிலும் 'காணாமல் போன கைதி' AWESOME!

பற்றாக்குறைக்கு 'ஜான் சில்வர்' அறிமுகம்..பல ஆண்டுகளாக வாசக நண்பர்கள் (என் அவாவும்) ஆர்ச்சி -ஐ களம் இறக்க சொல்லி போராடி வருகிறார்கள். எந்த பதிலும் செல்லாமல் மவுனமாக இருந்து வருகிறீர்கள்.

ஒரே புத்தகம் ஆர்ச்சியின் மூன்று மெகா கதைகள்
புரட்சி தலைவன் ஆர்ச்சி, ஆர்ச்சியோடு மோதாதே..மற்றும் இன்னொரு கதை நேர்த்தியாக அச்சிட்டு வெளியிட்டு விடலாமே!பரிசீலிக்கவும்.

-சந்தா A  ஒன்றும் அவ்வளவு பலமான நாயகர்கள் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ட்யுராங்கோ இந்த ஆண்டுதான் அறிமுகம் மற்றபடி லார்கோ ஒரு வெளியீடு தான்.வேய்ன் சிங்கிள் ஆல்பம் சிங்கிள் கதை,மர்ம மனிதன் மார்ட்டின் என்று எல்லோரும் தனி தனி தீவுகளாக நிற்கிறார்களே தவிர...லேடி S  ? பெண் பிள்ளையாக இருக்கிறாரே! போதாது, ஜானி புது தொடர், ஷெர்லக் ஹோம்ஸ் புது தொடர் என்று  பெரும்பாலும் டபுள் ஆல்பங்கள் ஆக வெளியிடுங்கள்.கமான்சே வை விட பெரிய தாதாக்கள் எல்லாம் களத்தில் உள்ளதால் விரைவில் முடிக்க பார்க்கவும்.

-சந்தா B டெக்ஸ் எப்போதும் தனித்து நின்றாலும் மாமலை போலதான் நிற்பார்.

-சந்தாC கொஞ்சம் குறைக்கலாம் என்கிறேன். இரண்டு கதைகளாக ஐந்து இதழ்கள் என்று வெயிட்டாக வெளியிடலாம்.

-சந்தாE இந்த ஆண்டு முடிவில் தீர்மானம் செய்யலாம். ஆறு கதைகளும் சைக்கோ திரில்லர் என ஒரே ரகமாக படுகிறது.
'ஒரு முடியா இரவு' நன்றாக இருந்தது. அடுத்து என்ன என்று புத்தகத்தை கவிழ்த்து வைக்க முடியாமல் என்னை கண் விழித்து படிக்க வைத்தது.வேகமாக பக்கங்களை புரட்டினாலும் சித்திரங்கள் மீண்டும் திருப்பி பார்க்க வைத்தது. கறுப்பு வெள்ளையிலும் அவ்வளவு நுணுக்கமான வேலைப்பாடுகள்.

-ஆண்டுக்கு 40 இதழ்கள் வந்தாலும் 'வெயிட்' ஆக இருக்க வேண்டும் நமது வெளியீடுகள்.

நான் இங்கு என்னதான் மேதா(ஆ)வி போல் ஆலோசணை கொடுத்தாலும் நிதர்சனம் என்று ஒன்று உண்டு. மற்ற மற்ற ஏனையோரின் விருப்பங்களும் உண்டு.எது நல்லதோ உங்களுக்கு சரியாக வருகிறதோ பார்த்து செய்யுங்கள்!இந்த ஆண்டின் ஆறாவது மாதம்தனில் வந்து விட்டோம்.ஆச்சர்யப்பட எல்லாம் எதுவும் இல்லை.நம் காலத்தோடு நம் காரியத்தை  சரியாக செய்து முடிப்போம்.

அப்புறம் என்ன ? ஜூலை மாதம் லயனிற்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லி.தீபாவளி வாழ்த்துக்களும் அட்வான்ஸாக(ரொம்ப அட்வான்ஸாக உள்ளதா?) சொல்லிக் கொண்டு...'ஒரு தலைவன்,ஒரு சகாப்தம்' இருக்கும் நம்பிக்கையில் விடை பெற்று கொள்கிறேன்.

JANARTHANAN. J
------------------------------------------------------------------------------------------------------------

Sunday, June 04, 2017

ஐந்தின் கதை...!

நண்பர்களே,
வணக்கம். பளபளக்கும் பலவண்ண மசிகளும் மிரட்டும் அடர் கறுப்பும் இன்னமுமே காய்ந்திருக்கக் கூடச் செய்திராத ஜுன் இதழ்களை உங்களிடம் ஒப்படைத்த கையோடு எழுதும் பதிவிது ! So எனது ஓட்டைவாய் மீதல்லாது - இம்மாதப் படைப்புகளின் மீதே ஒளிவட்டம் நிலைத்திடல் நலமென்பதால் அடக்கி வாசிக்க முனைந்திடுவேன் ! ஒற்றை மாதத்தில் 5 இதழ்கள்- வித வித genre-களில் என்பது நமக்கு அன்றாடமல்ல எனும் போது. இந்த சந்தா A to E அணிவகுப்பை ரசிக்கவும், விமர்சிக்கவும் இந்த வாரத்தையும், தொடரும் நாட்களையும் செலவிட இயன்றால் சந்தோஷமே !

Fresh off the Oven என்பதால் ஒவ்வொரு இதழின் தயாரிப்புப் பின்னணிகளைப் பற்றிக் கொஞ்சமாய் பேசலாமே ? ஆங்கிலத்தின் முதல் எழுத்திலிருந்து பார்வைகளை ஓடவிடுவதென்றால் - ரிப்போர்ட்டர் ஜானியின் “ஒரு சிலந்தியின் வலையில்” கைஉயர்த்துவதை காணலாம் ! ஜானியின் கதைகள் எப்போதுமே எனக்கு எங்கள் பகுதிகளின் ‘விருதுநகர் புரோட்டாவை‘ நினைவுபடுத்தத் தவறுவதில்லை ! பசியில் வயிறு கச்சேரி நடத்த ஆரம்பிக்கும் போது, எண்ணெயில் பொரித்தெடுக்கப்படும் அந்தப் புரோட்டாக்களை நினைத்தாலே கடவாய் ஓரமாய் வடகிழக்குப் பருவ மழையின் தாக்கம் தெரியத் தொடங்கும் ! ஒரு ஃபுல் கட்டு கட்டி விட்டு, லேசாய் தொந்தியை சமனப்படுத்திக் கொள்ள ஒரு பீடாவை குதப்பத் தொடங்கும் போது -  தீனி கொஞ்சம் ஓவர் தானோ ? என்ற சந்தேகம் மண்டையையும், தொப்பையையும் ஒருங்கே குடையத் தொடங்கும் ! நமது ஜானிகாருவுமே இந்த ‘புரோட்டா இலக்கணத்தை‘ அட்சர சுத்தமாய் பின்பற்றுபவர் - at least என்னளவிற்காவது ! பணியாற்றத் தொடங்கும் போது, அந்தப் ‘பர பர‘ கதையோட்டம்; சித்திர லாவகம்; கதைகளின் ஜெட் வேகம் மனுஷனை முழுமையாய் ஆக்கிரமிக்கத் தொடங்கி விடும் ! பணி முடித்து எழும் போது - “ஷப்பா.. இடியாப்ப முடிச்சுகள் கொஞ்சம் ஓவரோ - ஓவர் தானோ ? இவன் அவனைப் போட்டுத் தள்ளினான்... அவன் அப்புச்சியைப் போட்டுத் தள்ளினான்... அப்பத்தா பெரிய அப்பச்சியின் சின்னத் தம்பியோட ஒன்றுவிட்ட கொள்ளுப் பேரனைப் போட்டுத் தள்ளுச்சு... சரி... இப்போ வில்லன் யாரு ?” ங்கிற ரீதியில் ஒரு ஆதங்கம் ‘கொய்ங்ங்ங்‘ என்று மண்டையை முழுசாக takeover செய்து கொள்ளும் ! இம்மாத இதழும் இதற்குத் துளியும் சளைத்ததல்ல ! ஜானியை ஒட்டுமொத்தமாய் சந்துக்குள் போட்டு, பெருச்சாளியைச் சாத்துவது போல ஆளாளுக்கு சாத்த முனைவதை திறந்த வாய் மூடாது ரசிக்கலாம் - மலைப்பாதைகளில் எதிர்ப்படும் கொண்டை ஊசி வளைவுகளைப் போன்ற கதைத் திருப்பங்களின் மத்தியினில் ! இந்த இதழின் highlight என்று நான் சொல்வது இதன் மொழிபெயர்ப்பே ! முன்கூட்டியே பணிகளைச் செய்து வைக்கும் நமது சமீப காலத்துப் பழக்கப்படி இந்த இதழின் பிரெஞ்சு மொழிபெயர்ப்பு நிறைவு கண்டது 2016-ன் மத்தியிலேயே ! தமிழுக்கு மாற்றம் செய்திடுவதை அந்தந்த மாதத்து அட்டவணைக்கு ஏற்ப சாவகாசமாய்த் தான் நான் கையில் எடுப்பதுண்டு ! சென்றாண்டின் ஏதோவொரு தருணத்தில் "மொழிபெயர்ப்புகளில் ஒத்தாசை செய்திட வாசக நண்பர்களுக்கு ஆர்வமிருக்கக் கூடுமா ?" என்ற கேள்வியை முன்வைத்திருந்தது நினைவிருக்கலாம். அந்நேரம் நண்பர்களில் மூன்று பேர் சீரியஸாக விண்ணப்பித்து, அவர்களுக்குக் கதைகளும் அனுப்பப்பட்டிருந்தன. ஆனால் தவிர்க்க இயலாச் சொந்த அலுவல்களின் மத்தியில் பேனா பிடிக்க உரிய அவகாசம் தந்திட அதனில் இரு நண்பர்களுக்கு சாத்தியமாகாது போக - ஒருவரின் பேனாக்கு மட்டுமே வாய்ப்புக் கிட்டியது. அந்தப் பேனா பணி செய்த கதையே “ஒரு சிலந்தியின் வலையில்...!” அடித்துக் கேட்டாலும் அந்தச் சென்னைக்காரர் பற்றியோ ; ஆதி காலத்துப் பாணிகளில் அல்லாது அமர்க்களமாய் தற்போதைய சூழலுக்கேற்ற அவரது எழுத்து ஸ்டைலைப் பற்றியோ பகிரங்கப்படுத்த மாட்டேன் தான் ! ஆனால் நீங்களாக அது இன்னார்... அன்னார் தான் என்று அடையாளம் காட்டினால் நிச்சயம் மறுக்கவும் மாட்டேன் தான்! Of course- நமது வழக்கமான பாணிக்கு நெருங்கிட வேண்டியதன் பொருட்டு, முழுக்கதை மீதும் நான் கைவைத்துள்ளேன் தான் ; ஆனால் இந்தக் கட்டுமானத்தின் பெரும்பகுதி நண்பரது பங்களிப்பே ! நண்பருக்கு நன்றிகளும், வாழ்த்துக்களும் !   அட்டைப்படத்தைப் பொறுத்தவரை ஒரிஜினல் டிசைனை, அதன் நீலப் பின்னணியோடே உறுதி செய்திருந்தோம் ! ஆனால் சமீப ஜானி சாகஸம் (அந்த ராசிபலன் கொலைக் கதை... ஆங்... பெயர் ஞாபகம் வரமாட்டேன்குதே?!!) இதே போன்ற ப்ளு பேக்கிரவுண்டோடு வந்திருந்ததால் - இம்முறையும் அதே கலர் கூட்டணி வேண்டாமென்று தோன்றியது ! So டாலடிக்கும் சிகப்பைப் போட்டுப் பார்த்த போது அமர்க்களமாய் தோற்றம் தந்தது போலிருக்க - ‘பச்சக்‘ என்று அதனையே உறுதி செய்தும் கொண்டோம் ! வண்ண அச்சைப் பொறுத்தவரை, கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு முன்பான இந்த வண்ணச் சேர்க்கையானது ‘பளீர்‘ ‘பளீர்‘ பஞ்சு மிட்டாய் வர்ணங்களில் இருந்ததால் ரொம்பபே கவனமாய்க் கையாள வேண்டியிருந்தது! கண்ணை உறுத்தாமல் பக்கங்கள் அமைந்திட வேண்டுமென நிறையவே மெனக்கெட்டோம் ! அதற்கான பலன் கிட்டியிருப்பின் சந்தோஷமே !
சந்தா B-ன் TEX “க.மா.க.” இம்மாத highlight களுள் பிரதானமாய் அமைந்திடின் வியப்பு கொள்ள மாட்டேன் தான் ! டிசைனில் பார்த்ததை விடவும் நேரில் அந்த நீல வானப் பின்னணியோடு அட்டைப்படம் டாலடிப்பதாய் எனக்கு மாத்திரமே தோன்றுமென்று சொல்ல மாட்டேன் ! ஒரிஜினல்களின் அழகு என்றைக்குமே அலாதி தான் என்பதை மீண்டுமொரு முறை புரியச் செய்த அட்டைப்படம் ! கதை & சித்திரங்கள் இரண்டுமே இம்மாதம் போட்டி போடுமென்பது உறுதி - உங்கள் கவனங்களை ஈர்த்திடுவதில்! மெக்ஸிகோவை நாம் நிறையவே கதைகளுள் பார்த்திருப்போம் தான் ; ஆனால் இந்த bullfight சமாச்சாரம் நமது கௌபாய் ரசனைகளுக்கேயும் ஒரு புதுப் பரிமாணம் தானல்லவா ? சென்றாண்டு இந்தக் கதையை அட்டவணைக்கு டிக் அடித்த போதே, என் கைகள் பரபரத்தன ; இதனை சடுதியில் தயாரித்து உங்களிடம் ஒப்படைக்கும் பொருட்டு ! அந்த வித்தியாசமான கதைக் களமும், நிறைய இணைய தளங்களில் படிக்க இயன்ற கதை விமர்சனங்களும் எனது ஆர்வத்துக்கு பெட்ரோலாகி இருந்தது !  மொழிபெயர்ப்பு நமது கருணையானந்தம் அவர்கள் என்பதால் பழக்கமான பாணிகள் தொடர்ந்திடும் !

சந்தா C-ன் கார்ட்டூன் கதை இம்மாதம் கடைசி நேர டென்ஷனுக்கு ஆளாக்கியதோடு - ஒரு ராப்பொழுதை மொச்சைக்கொட்டை போல விழித்திருந்தே செலவிடச் செய்த இதழும் கூட ! எப்போதுமே ரின்டின் கேனை மொழிபெயர்ப்பதென்பது ஒரு ஜாலியான அனுபவமே - ஒரு நாயின் கண் வழியாக உலகைப் பார்க்கும் பாணிதனில் ! இம்முறையோ சின்னதொரு கதைக்களத்தினுள் ரி.டி.கே. சற்றே ஞானத்தோடு சுற்றி வருவது தான் template என்பதால் வழக்கமான கெக்கே பிக்கே சிரிப்புகளோடு மட்டுமே குப்பை கொட்ட முடியாதென்பதை ஆரம்பத்திலேயே உணர்ந்திருந்தேன் ! முதல் பதினைந்தோ - பதினாறோ பக்கங்களை எழுதி மற்ற பணிகளுக்குள் மும்முரமாகிப் போனதால் - ‘அட... நம்ம ரி.டி.கே. தானே...? சாவகாசமாய்ப் பார்த்துக் கொள்ளலாம் !‘ என்ற மெத்தனத்தில் இதர பணிகளுக்கென நேரம் ஒதுக்கினேன். சரி... ஐரோப்பிய பயணத்தின் போது, கிடைக்கும் சைக்கிள் கேப்களில் இதை எழுதி முடித்து விடலாமென்று, ஆங்கில மொழிபெயர்ப்பையும், பக்கங்களையும் உடன் தூக்கிச் சென்றிருந்தேன் ! ஆனால் ஏழுக்கும், எட்டுக்கும் நடுவாக்கிலான சமாச்சாரம் - இரு களவாணிக் கிழவிகள் ரூபத்தில் குறுக்கிட - ஊர் திரும்பும் வரை ரின்னையும் பார்க்கத் தோன்றவில்லை ; டின்னையும் திறக்கத் தோன்றவில்லை ! இங்கே ஊர் திரும்பிய பிற்பாடோ அண்டர்டேக்கர் பணி ; அண்டாவுக்குள் தலை நுழைக்கும் பணி என்று பக்கங்களில் / பருமன்களில் பழு கூடுதலான சமாச்சாரங்களுக்கு முன்னுரிமை தர நேரிட - கடைசி வரை “தடை பல தகர்த்தெழு” – தத்தா புத்தாவென்று தவழ்ந்து கொண்டே திரிந்தது. நாட்களும் ஓட்டமெடுக்க, அண்டர்டேக்கர் பிரிண்டிங் முடிந்து ; ஜானியும் முடிந்து - what next ? என்று நம்மவர்கள் சோம்பல் முறித்த போது தான் முழி பிதுங்கியது எனக்கு ! தேதியோ 26... மொழிபெயர்ப்போ இன்னமும் சுமார் 30 பக்கங்கள் காத்துள்ளன என்ற நிலையில் “ஒரு முடியா இரவு“ தொடர்ந்தாலொழிய இம்மாத கோட்டாவில் துண்டு விழுந்து விடுவது நிச்சயம் என்று அப்பட்டமாய்த் தெரிந்தது ! வேறு மார்க்கமில்லை எனும் போது கொட்டாவிகள் மாயமாவதும் ; கூர்க்கா ‘பிகில்‘ ஊதும் நடுச்சாமம் நார்மலான வேளையாய்க் காட்சி தருவதும்; பக்கத்து வீட்டு வாட்ச்மேனின் குறட்டையொலி கூட நாராசமாயல்லாது காதில் சகஜமாய் புகுந்து வெளியேறுவதும் சாத்தியமே என்பதெல்லாமே புரிந்த இரவின் புண்ணியத்தில் மொழிபெயர்ப்பு பூர்த்தி பெற்றிருந்தது. எழுதி முடிக்க மாதத்தின் முக்கால்வாசியை விழுங்கிக் கொண்டாலும், அதன் மீது பணி செய்ய நம்மவர்களுக்கு முக்கால் நாள் தரவே சிரமமாயிருந்தது ! சும்மா சொல்லக் கூடாது ; சில மணி நேரங்களிலேயே இருவராய் DTP பணிகளை நிறைவு செய்து தந்திட, பிழைதிருத்தம்- எடிட்டிங் என்று சகலமும் “வாம்மா... மின்னல்...!” ஸ்பீடில் அரங்கேறிட - தடைகள் பலவும் தகர்ந்தன ! ஏற்கனவே நண்பர் பிரதீப் அட்டைப்படப் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டிருக்க - 28-ம் தேதி இரவில் அச்சுப் பணிகளை முடித்த கையோடு - 29-ம் தேதி பைண்டிங் ஆபீஸ் வாசலில் தவம் கிடக்கத் தொடங்கினோம் !

சந்தா D-ன் மறுபதிப்புப் படலத்திலோ நேர் எதிர் அனுபவம்- துளியும் சிரமமிலா வகைதனில் ! நிச்சயமாய் “தங்க விரல் மர்மம்” இதழின் அந்நாளைய மொழியாக்கத்தை நமது கருணையானந்தமே செய்திருக்க வேண்டும் என்பது நெருடலிலா வரிகளைப் படிக்கத் தொடங்கிய போது எனக்கது புரிந்தது. அந்நாட்களது வரிகளை சன்னம் சன்னமாய்ப் பட்டி டிங்கரிங் பார்த்தாலே போதுமென்று பட்டதால் அந்தப் பணிகளைத் தாண்டிப் பெரிதாய் வேறெந்தச் சிரமமும் எழவில்லை எனக்கு ! இருந்தாலும், எல்லா வேலைகளையும் செய்து முடிக்கும் ஸ்டெல்லாவுக்கு "காரியதரிசி" என்ற அடைமொழியும், மண்ணுக்குள் தீக்கோழி போல் புதையுண்டு கிடந்துவிட்டு, சிக்கும் மாக்கான்களிடமெல்லாம் நாலு சாத்து வாங்கி விட்டு சுற்றி வரும் பார்ட்டிக்கு "தொழிலதிபர்-ரகசிய ஏஜெண்ட்-ஹீரோ" என்ற பில்டப் எல்லாம்  கொஞ்சம் ஓவரோ ? என்ற  சந்தேகம் மாத்திரம் போகவே மாட்டேனென்றது !! அது ஏன்க்கிறேன்...?

அதற்கு மறுஎதிர்முனை என்பேன் - மயானத்தின் காவலருக்கு முதல் மரியாதை செய்ய முற்பட்ட போது ! அட்டைப்படங்கள் துளியும் சிரமம் தராது போய் விட, மொழிபெயர்ப்பில் தான் துவங்கியது நெட்டி முறிப்பு ! கருணையானந்தம் அவர்கள் இதனையும் மொழிபெயர்த்திருக்க, எனக்கோ அவரது ஸ்க்ரிப்ட்டைப் பார்த்தபோது அந்த பாணி ரொம்பவே ஜென்டில்மேன்லியாகத் தென்பட்டது. கழுகுக்கு சுக்கா ரோஸ்ட் வாங்கிப் படையல் பண்ணும் ஒரு கடாமுடாப் பார்ட்டிக்கு அந்த நாசூக்கெல்லாம் சரிப்படாதென்று நினைத்தேன் ! So வேறு மார்க்கமின்றி ஒரு ஒட்டுமொத்த makeover படலம் அவசியமென்று தீர்மானித்த கையோடு மாற்றியெழுதும் படலம் தொடங்கியது ! புதுசாய் எழுதுவதை விடவும் இந்த ரிப்பேர் பணிகளின் பழு எப்போதுமே ஜாஸ்தி என்பதால் இரு பாகங்களுக்கும் சேர்த்து எக்கச்சக்க நேரம் பிடித்தது ! புது வரவு என்பதால் மாத்திரமின்றி, கதையின் ஒவ்வொரு மனுஷனும், மனுஷியும், ரொம்பவே வித்தியாசமான படைப்புகளென்பதால் பயந்து, பயந்து பணியாற்ற அவசியமானது. இதன் scanlation-ம் எட்டும் தூரத்தில் இருக்கிறதால் ஒப்பீடுகள் தவிர்க்க இயலாது போகுமென்பது தெரியும் ! அதன் பொருட்டும் நிறையவே கவனம் அவசியமானது ! இன்னமுமே இதனைப் பிழையிலா பதிப்பென்று சொல்ல மாட்டேன் தான் ; ஆனால் இயன்ற கவனங்கள் சகலத்தையும் தந்துள்ளோம் என்ற சன்னமான திருப்தி எங்களுள் ! ஒரு மாதிரியாய் நாலைந்து நாள் மொக்கை போடும் படலத்துக்குப் பின்பாய் ஸ்கிரிப்ட் மாற்றம் கண்டிருந்தது ; அப்புறமாய் இதர பணிகள் முடிந்து, அச்சுக்குத் தயார் ஆன போது, ஒரு மார்க்கமான அந்த அடரிருள் கலரிங் பாணிக்கு நியாயம் செய்திடும் பொருட்டு நிறையவே தடுமாறினோம் ! மஞ்சள் வர்ணம் கூடுதலானால், பின்னணியின் இருட்டு மட்டுப்பட்டது போல் பட்டது ; ப்ளூ வர்ணம் கூடிப் போனால் -  அத்தனை பயல்களும் இருட்டுக்குள் உலாற்றுவது போல் தோற்றமே மிஞ்சியது ; சிகப்பு கூடினால் -அவ்வளவு முகரைகளும் செங்குரங்குச் சாயல்களை ஓத்திருக்கக் கண்டோம் ! "இதைக் கூட்டி..அதைக் குறைத்து.." என்று ஏகமாய் யானையின் அகன்ற தூரைத் தடவிப் பார்க்கும் பாணிகளில் பரிசோதனைகள் செய்தான் பின்னர் ஒரு printing template குத்த தயாரானது ! 

ஆக இம்மாதப் "பஞ்ச புத்தக" ஆக்கத்தின் பின்னணி இதுவே ! எல்லாம் முடிந்திருந்த கடைசி நாளில் தான் ஞானம் புலர்ந்தது - "இம்மாதம் சர்ப்ரைஸ் இல்லை என்பது தான் சர்ப்ரைசே" என்று !!' கிழிஞ்சது போ ; என்ன செய்யலாமென்று மண்டையை உருட்டிய போது ஜூனுக்கு உகந்த சிறு அன்பளிப்பாய் நேம்ஸ்லிப்கள் அமைந்திடக்கூடுமென்ற மகா சிந்தனை உதயமானது ! தடா புடாவென - "டிசைனைப் போடு ; ஸ்பைடரைப் போடு ; ஆர்ச்சியைப் போடு " என்று வெண்கலத்தொண்டையில் கூவத் துவங்க - வழக்கம் போலவே மௌனமாய் பணிகளுக்குள் மூழ்கினர் நம் DTP பெண்கள் ! இப்போதெல்லாம் ஆபீசுக்குள் நுழையும் போதே  இந்த அரைலூசு ஆசாமி எந்த சஞ்சீவிமலையைப்  புதுசாய்த் தூக்கித் தலையில்  ஏற்றுவாரோ ? என்ற சந்தேகம் அவர்களுக்கு எழுந்திருப்பின், தவறு நிச்சயம் அவர்களது அல்ல தான் ! So ஒரு rollercoaster பணியனுபவத்தின் இறுதியில் 5 வித்தியாசமான கதைகள் கைகளில் மினுமினுத்தன ! இனி அவை மீது தீர்ப்பெழுத வேண்டிய பொறுப்பு உங்கள் வசம் கனம் ஜுரிக்களே !! ஏதோ டெம்போலாம் வைத்துக் கடத்தியுள்ளதையும் கருத்தில் கொண்டு  மார்க் போடுவீர்களென்ற நம்பிக்கையுள்ளது ! Please do write !!

Before I sign off - குட்டிக் குட்டி updates :
  • ஜூன் 30 -ல் நெய்வேலியில் புத்தக விழா துவங்குகிறது ! நம்பிக்கையோடு இம்முறையும் விண்ணப்பித்துள்ளோம் ! சீக்கிரமே அது பற்றித் தெரியுமென்று நினைக்கிறேன் ! 
  • ஆகஸ்ட் 4 - 15 என ஈரோட்டின் புத்தக விழாத் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன ; and நமக்கு ஸ்டால் கிடைத்திடுவதில்  நெருடல் இராதென்றே நினைக்கிறேன் ! 

இரு புத்தகவிழாக்களிலுமே உங்களை ஆவலாய் எதிர்நோக்கியிருப்போம் guys ! 
  • அப்புறம் - நமது ஜெரெமியா இதழினைப் பார்த்துள்ள படைப்பாளிகளும் சரி ; அதற்கு மான்யம் தந்துதவிய பிரெஞ்சுக் கலாச்சார மையமும் சரி - செம ஹேப்பி !! இதழின் தயாரிப்புத் தரத்துக்கும், மொழிபெயர்ப்புக்கு ஒரு பெரிய thumbs up தந்த கையோடு - இன்னொரு அட்டகாச சேதியையும் சொல்லியுள்ளனர் ! முதல் தொகுப்பிற்கு செய்துள்ள மான்ய உதவியினை ஜெரெமியா - Part 2-விற்கும் தொடர்வதற்கு பிரெஞ்சு மையம் உறுதியளித்துள்ளனர் !! வாசகர்களின் கொடையைத் தாண்டி, வேறெந்த வித ஒத்தாசைகளையும் ஆயுசுக்கும் பார்த்திரா நமக்கு, இந்த தேசத்தின் வாஞ்சை மெய்சிலிர்க்கச் செய்கிறது !! சிரம் தாழ்த்துகிறோம் இந்த நம்பிக்கைக்கும், அங்கீகாரத்துக்கும் !! 

  • ஜூன் இதழ்களின் ஆன்லைன் லிஸ்டிங் இங்கே உள்ளது : http://lioncomics.in/monthly-packs/398-june-2017-pack.html

மீண்டும் சந்திப்போம் ; அதுவரையிலும் have a great Sunday & a week ahead ! Bye for now !

Friday, June 02, 2017

ஜூன் சமாச்சாரம்.. !

நண்பர்களே,

வணக்கம். நேற்றைய தினமே டெஸ்பாட்ச் என எல்லா ஏற்பாடுகளும் செய்த கையோடு ஊர் சுற்றக் கிளம்பியிருந்தேன். இங்கோ கடைசி நிமிடத்தில் நமது பைண்டிங் பிரிவினில் புத்தகங்களைக் கட்டிங் செய்திடும் இயந்திரத்தில் பழுதாகிப் போக - நேற்றைய திட்டமிடல் பணாலாகிப் போய் விட்டது !! பழுது சரிசெய்யப்பட்டு பிரதிகள் நம்மை வந்து சேர்ந்த போது மாலையை நெருங்கியிருக்க - நிச்சயமாய் பேக்கிங் செய்து அனுப்புவதற்குள் கூரியர் டயமும் முடிந்து விடுமென்று தோன்றியது ! So இன்று காலையே கூரியர்கள் கிளம்புகின்றன ஒரு கத்தை  இதழ்களோடு !

And இதோ- இதுவரையிலும் நீங்கள் பார்த்திராத ரிப்போர்ட்டர் ஜானியின் அட்டைப்படமும், உட்பக்க preview -ம் !! ஒரிஜினல் டிசைன் ; வர்ண மாற்றத்தோடு மட்டும் !! பளீரென்று உள்ளது இதழில் பார்க்கும் போது !! 

நாளைக் காலை உங்கள் கூரியர்களை எதிர்பார்த்திடலாம் guys !! உங்கள் விமர்சனங்களுக்கு ஆவலாய்க் காத்திருப்பேன் ! Bye for now !