நண்பர்களே,
வணக்கம். வாரயிறுதி புலர்ந்து விட்டதென்பதை இப்போதெல்லாம் காலெண்டர் சொல்கிறதோ, இல்லையோ - தலைக்குள் பதுங்கிக் கிடக்கும் ‘வலைப்பதிவு அலாரம்‘ சத்தமாய் பிரகடனம் செய்து விடுகிறது! சனிக்கிழமைகள் காலைகளில் கண்ணைத் திறக்கும் சமயமே – ‘ஹை.... இன்றைக்குப் புதுசாய் என்ன எழுதுவதாம்?‘ என்ற ‘ரோசனையும்‘ புலர்ந்து விடுகிறது! மே மாதத்து இதழ்கள் பற்றிய preview-கள் இப்போது வரை ‘கோஷாப் பெண்களைப்‘ போல திரைமறைவிலேயே இருந்து வருவதால் – அவற்றை வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதே இவ்வாரக் quota என்று தீர்மானித்தேன்! So here goes!
“பாலைவனத்தில் பணயக் கைதி“ ஷெல்டனின் இன்னுமொரு one-shot என்பதைப் போன வாரம் சொல்லியிருந்தேன். இதோ- அந்த ஆல்பத்தின் அட்டைப்படம் – ஒரிஜினலின் வார்ப்பிலேயே! பின்னணி வர்ணங்களை மட்டுமே லேசாய் மேம்படுத்தியுள்ளோம் என்பதை அசல் + நகல் என இரண்டையும் ஒருசேரப் பார்க்கும் போது புரிந்து கொள்வீர்கள்! And பணிகள் சகலமும் முடிந்து அச்சு வேலைகள் தற்சமயம் நடந்து வருகின்றன...!
And இதோ- இம்மாதத்து “ரேஞ்சர் quota“ வின் அட்டைப்படமும், உட்பக்கப் preview –ம்!
இதுவும் கூட ஒரு ‘டெக்ஸ்‘ original சித்திரத்தின் உல்டாவே ; ஆனால் முழுவதுமாய் நமது ஓவியரைக் கொண்டு வரைந்து, பின்னணியில் பொன்னனைக் கொண்டு வர்ணம் ஏற்றியுள்ளோம்! (Background-ல் போஸ் கொடுக்கும் நாலுகாலார் கதையில் இடம்பிடிக்கப் போவதில்லை; ஒரிஜினல் டிராயிங்கில் இருந்த ஈயை அப்படியே அடித்து விட்டிருக்கிறோம்!!) “டாக்டர் டெக்ஸ்“ – ஒரு 110 பக்க டெக்ஸ் சாகஸமே எனும் விதத்தில் இந்த வருடத்தின் மிகச் சிக்கனமான கதையிது என்று சொல்லலாம்! ஆனால் ஆண்டு பிறந்த முதல் 120 நாட்களுக்குள்ளாகவே 1030 பக்கங்களை இரவுக்கழுகார் & கோ.விற்கென ஒதுக்கியான பின்பு – இந்தப் ‘பத்தியச் சாப்பாடு‘ தவறில்லை என்றே நினைத்தேன்! And இந்த இதழின் கதைக்களமும் ரொம்பவே மாறுபட்ட ரகம் ; துளி கூட முந்தைய சாகஸங்களின் நினைவூட்டல்களாய் அமைந்திடாது என்பது உறுதி! இந்த இதழில் இன்னுமொரு ஸ்பெஷல் சமாச்சாரமும் உண்டு; அது என்னவென்பதை தொடரும் வாரங்களது பதிவினில் எழுதிடுவேன்!
சந்தா C சார்பாய் சகலர் வதனங்களிலும் ஒரு அகலமான புன்னகையைக் கொணரும் பொறுப்பைக் கையிலெடுத்து நிற்பவர்களோ நமது நீலக்குட்டி மனுஷர்கள்! “தேவதையைக் கண்டேன்“ என ஒரு கிராமமே காதலில் விழுந்து கசிந்துருகும் SMURFS கலாட்டாவே இம்மாதத்து highlight என்று தைரியமாகச் சொல்லலாம்!
பொம்மை போன்று முகங்கள் கொண்ட சுண்டுவிரல் மனுஷர்கள்; அத்தனை பேரும் ஒரே மாதிரியாய் காட்சி தரும் கதையமைப்பு – ஆனாலும் இது அத்தனையையும் மீறி ஒரு உயிரோட்டமான சித்திர அதகளத்தை உருவாக்க இதன் படைப்பாளிகளுக்கு எப்படித் தான் சாத்தியமாகிறதோ- நானறியேன்! சீனியர் ஸ்மர்ஃப் & ஜீனியஸ் ஸ்பமர்ஃப் தவிர மற்ற நீலப் பொடியர்கள் அத்தனை பேரும் அதே சைஸ்; அதே உடல் / முக அமைப்புகள் கொண்டவர்கள் !! ஆனால் ஒவ்வொருவருக்கும் மாறுபட்ட குணாதிசயம்! இதை சித்திரங்களில் highlight செய்வது மட்டுமன்றி, கதை நெடுகிலும் ஒரு துளிகூட அயர்வு எட்டிப்பார்க்க இடம் தராமல் கொண்டு செல்வதென்பது எத்தனை அசகாய ஆற்றல்? சென்றாண்டு பெல்ஜியத்தில் இவர்களது அலுவலகத்திற்குச் சென்ற போது basement-ல் இருந்த SMURF ஸ்டூடியோவிற்கும் இட்டுச் சென்றனர் ! சமீபமாய் வெளிவந்துள்ள புதிய ஸ்மர்ஃப் ஆல்பத்தின் பணிகளில் ஓவியர் ஜெரோயென் மும்முரமாக இருந்த போதிலும், ரொம்ப ஜாலியாகப் பேசினார் மனுஷன்! அவர் கண்களில் கொப்பளித்த உற்சாகமும், குறும்பும் ஸ்மர்ஃப்களாக உருமாறுவதை அவரருகே அமர்ந்து ஒருசில நிமிடங்கள் ரசித்திட முடிந்தது! புதுக் கதையின் தயாரிப்புப் பற்றிய விஷயங்கள் துளிகூட வெளியே கசிவதை அவர்கள் விரும்புவதில்லை என்பதால் நான் செல்போனில் போட்டோ எடுக்கக் கோரிக்கை வைத்திடவில்லை !
இந்த நீலக்குட்டி மனிதர்களின் பின்னணியில் பிரவாகமெடுக்கும் கற்பனை வளத்தின் வலிமையையும், கதைநெடுகிலும் நிலவிடும் சந்தோஷச் சூழல்களை ரசித்திடவும் வயது வரம்புகள் உலகெங்கும் கிடையாதென்பதை ‘பளிச்‘சென்று புரிந்து கொள்ள முடிகிறது! “தேவதையைக் கண்டேன்“! ‘7 முதல் 77 வரை‘ என்ற நமது tagline-க்கு சத்தியமாய் நியாயம் செய்திடும் ஆல்பம்! தற்போது இவர்களது ஆல்பம் நம் அச்சகத்தில் ஜரூராய் பிரிண்ட் ஆகி வருவதால் - ப்ளூ ink கணிசமாகவே ஆர்டர் செய்துள்ளோம் ! All is Blue !!
Last of the lot – மறுபதிப்புப் பிரதிநிதியாய் ஸ்டெல்லாவின் முதலாளி – “சதிகாரர் சங்கம்“ வாயிலாக தலைகாட்டுகிறார்! சகோதரி கடல்யாழ் இந்த இதழின் proof-reading செய்துள்ளது ஒரு பக்கமெனில் – நண்பர் பொடியன் உருவாக்கியுள்ளதொரு அட்டைடிசைன் இதோ!
ஏகப்பட்ட காலத்திற்கு முன்பாய் வெளியான கதையென்பதால் எனக்கு மேலோட்டமாய் மட்டுமே கதை நினைவிலிருந்தது ! ஆனால் இப்போது முழுசுமாய் படிக்கும் போது – காலச்சக்கரத்தின் சுழற்சியில் இது போன்ற சாகஸங்கள் படும் பாட்டை நினைத்து மண்டையைச் சொறிந்திடத்தான் முடிகிறது! “கிண்டி போலாம்... ரைட்...!“ என்று ஒரு நிமிஷமும்; மறுநொடி... “இல்லே.... வேண்டாம்... வேண்டாம்... பெசண்ட் நகர் சலோ“ என்றும்; “ஐயோ... அங்கேயும் வேணாம் – ஆவடிக்குப் போலாம்!“ என்று சொன்னால் உள்ளுர் டாக்ஸி டிரைவரே கீழ்ப்பாக்கத்திற்கு வண்டியை செலுத்துவது நி்ச்சயம்! ஆனால் நம்மவர் ஜானி நீரோவோ – “ஸ்வீடன் போலாம்; அப்புறம் அமெரிக்கா; அப்புறம் ஜப்பான்“ என்று டவுண்பஸ் ஷண்டிங் அடிப்பதையெல்லாம் படிக்கும் சமயம் 'திரு திரு'வென்று விழிக்கத் தோன்றுகிறது ! பாவம் ஸ்டெல்லா.... இவருக்கு டிக்கெட் போட்டே ஓய்ந்து போயிருப்பது உறுதி! 40+ ஆண்டுகளுக்கு முந்தைய சூழலில் செம fresh ஆகத் தோன்றிய இக்கதைகள் – காலத்தின் மாற்றங்களுக்கு ஈடுதர இயலாது தடுமாறுவது புரிகிறது! இங்கே தான் நமது குதிரைவாலாக்கள் score செய்கிறார்கள் என்பேன்! கதைக்களமே ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முன்பான வன்மேற்கெனும் போது – அதனை என்றைக்குப் படித்தாலும் பெரியதொரு பிசிறடிக்கப் போவதில்லை தானே? Maybe இன்றைக்கு ஜானி நீரோவும், லாரன்ஸும் படும் அவஸ்தைகளை முப்பது, நாற்பது ஆண்டுகளுக்குப் பின்பாய் லார்கோக்களும், ஷெல்டன்களும் மறுபதிப்பாகிடும் பட்சத்தில் சந்திப்பார்களோ- என்னவோ? கருணை காட்டா முதலாளி – இந்தக் காலச் சக்கரங்களைச் சுழலச் செய்பவர்!!!!
மே மாதத்து preview-களை 'ஏக் தம்மில்' பார்த்து விட்ட திருப்தியில் அடுத்த topic பக்கமாய் வண்டியைத் திருப்புவோமா? ஜுன் 1-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை சென்னைத் தீவுத் திடலில் நடைபெறவுள்ள புத்தக விழாவினில் பங்கேற்க ஆர்வமாய் விண்ணப்பித்துள்ளோம்! நமக்கு ஸ்டால் கிடைத்திடும் பட்சத்தில் ஜுன் 3 & 4 தேதிகளில் (சனி & ஞாயிறு) சென்னையில் ‘டெண்ட்‘ அடிப்பதென்று எண்ணியுள்ளேன்! “என் பெயர் டைகர்“; முத்து மினி காமிக்ஸ் ரிலீஸ் என 2 வாகான வாய்ப்புகள் அமைந்துள்ளதால்- நண்பர்கள் சந்திப்பை அதனோடு இணைத்திடுவது சிறப்பாக இருக்குமென்று தோன்றியது! உள்ளுர் நண்பர்கள் + வெளியூர் நண்பர்கள் என அனைவரும் ஆஜராகிட இயன்றால் சூப்பராக இருக்கும் என்பதால் – the welcome mat is out folks!! Please do visit all !! தொடரும் நாட்களில், நமக்கு ஸ்டால் கிடைப்பது உறுதியான பின்பாய், "எங்கே? எப்போது?" என்ற ஏற்பாடுகளைக் கவனித்துக் கொள்ளலாம்! So- ஜுன் துவக்கத்தினில் சென்னைப் பயணத்திற்கென உங்கள் விசா விண்ணப்பங்களை உங்கள் இல்லத்துத் தூதரகத்தில் இப்போதே சமர்ப்பிக்கலாமே?!!
போனவாரப் பதிவினில் – காத்திருக்கும் “இரு மில்லியன் ஹிட்ஸ்“ ஸ்பெஷலுக்கு உங்களது தேர்வுகள் / அபிப்பிராயங்கள் பற்றிக் கோரியிருந்ததற்கும், ஆன்லைன் voting-க்கும் – “தோர்கல்“ தான் எங்கள் வேட்பாளரென்று ஏகோபித்த குரல்கள்!! இந்த fantasy நாயகருக்கு நம்மிடையே துளிர்விட்டுள்ள ரசனை நிஜமாக ஆச்சர்யமூட்டுகிறது! Again – ‘7 முதல் 77 வரை‘ எல்லோருக்குமே ஏற்ற கதைகளிவை என்பது இவற்றின் வெற்றியின் ரகசியமோ? Anyways – MMS இதழில் (MILLION & MORE SPECIAL) இடம்பிடிக்கவிருக்கும் நாயகரின் தேர்வு – வலைக்கு அப்பாலுள்ள நண்பர்களின் அபிப்பிராயங்களையும் அறிந்த பிற்பாடு இறுதி செய்யப்படுமென்பதால் we will wait a wee bit more! எது எப்படியாயினும் இந்தாண்டின் இரண்டாம் பாகத்தில் தோர்கல் நிச்சயமுண்டு என்ற உறுதியைத் தர முடியும் என்னால்!
And இங்கே உங்களிடம் நான் கேட்க விரும்பும் இன்னுமொரு கேள்வியுள்ளது! 2015-ன் ஒரு highlight பௌன்சரின் வரவே என்று சொல்லலாம்! ஆல்பம்கள் 1-7 வரை போன வருடம் வெளியிட்டிருந்தோம். “அவற்றின் தொடர்ச்சி எப்போது?“ என்று நண்பர்கள் அவ்வப்போது வினாக்கள் எழுப்பி வருவது தொடர்ந்து வருகிறது! ஆல்பம் 8 & 9 ஏற்கனவே வெளிவந்துள்ள நிலையில் – புதியதொரு ஆல்பமும் சீக்கிரமே வெளிவரக் காத்துள்ளது! So - இந்தாண்டின் பிற்பகுதியினில் நாம் இதுவரைப் படித்திரா 3 ஆல்பங்கள் பௌன்சர் தொடரினில் இருந்திடும்!
இந்த ஒற்றைக்கையாரின் சாகஸங்கள் எப்போதுமே பிடரியில் அடிக்கும் ரகங்கள் என்பதில் ஒளிவில்லை! இவரது கதைகள் வெளியான தருணங்களில் ஏகமாய் விவாதங்களும் நம்மிடையே எழுந்திருந்ததையும் மறுப்பதற்கில்லை! இந்நிலையில் ஆல்பம் 8 & 9 இணைந்த சாகஸமானது வழக்கத்தை விடவும் சிலபல படிகள் கூடுதலாய் ‘அடல்ட்ஸ் ஒன்லி‘ சமாச்சாரங்களோடு ரவுண்ட் கட்டி அடித்திடும் விதமாய் உள்ளது ! சித்திரங்களை ரொம்பவே கத்திரி போட இங்கே வாய்ப்புகள் குறைச்சல் எனும் போது- இவற்றினுள் நாம் கால்பதிக்கும் பட்சத்தில் என்பாடு திண்டாட்டமோ திண்டாட்டம் தான்! இவற்றை ‘சிவனே‘ என்று ஓரம்கட்டி விடலாம் என்று தான் நான் இதற்கென பெரிதாய் மெனக்கெடாது இருந்து வந்தேன்! But புதியதொரு ஆல்பமும் தயாராகி வரும் நிலையில் – “ஆல்பம் 8 & 9 எப்போது போட உத்தேசம்?“ என்று கேள்வி எழுப்பியுள்ளனர் படைப்பாளிகள்! முதல் 7 கதைகள் Humanoids பதிப்பகத்திலும்; பாக்கிக் கதைகள் Glenat எனும் இன்னுமொரு பதிப்பக ஜாம்பவானிடமும் உள்ளதென்ற போதிலும் – இருவருமே நமக்கு நன்கு அறிமுகமானவர்கள்! So பௌன்சர் தொடர்பாய் நம் பக்கம் வீசப்பட்டுள்ள இந்தக் கேள்வி பௌன்சரை எவ்விதம் ஆடலாமென்று நீங்கள் தான் சொல்லுங்களேன்? நல்லபிள்ளையாய் குனிந்து கொண்டு பந்து விக்கெட்-கீப்பரைச் சென்றடைய அனுமதிப்போமா? அல்லது ‘ஒரு கை பார்த்து விடுவோம்‘ என்று hook பண்ண முயற்சிப்பதா? Hook செய்ய முயற்சித்தால் சில்லுமூக்கில் தக்காளிச்சட்னிக்கும் வாய்ப்புண்டு;! பவுண்டரி லைனில் ‘கேட்ச்‘ பிடிக்கப்படும் வாய்ப்புமுண்டு ; சிக்ஸருக்குப் போகும் வாய்ப்புமுண்டு என்பதும் புரிகிறது! What say folks?
பதிவை நிறைவு செய்யும் முன்பாகச் சின்னதாயொரு interlude! இந்த வாரத்தின் ஒரு நாளில் நமக்கு வந்திட்ட மின்னஞ்சல் இது! நமது நலம் நாடும் ஏராளமான நண்பர்களுள் இவரும் ஒருவர் என்ற அறிமுகம் போதும்! படித்துப் பாருங்களேன்!
--------------------------------------------------------------------------------------------------------------------------
டியர் விஜயன் சார்,
இது உங்கள் தனிப்பட்ட விஷயம். இதில் கருத்து சொல்ல வேண்டாம் என்றுதான் நினைக்கிறேன், இருந்தாலும் ஒரு சின்ன ஆற்றாமைதான். தவறாகக் கொள்ளவேண்டாம்.
தங்களது வெற்றிக்குத் தங்களுடைய வெளிப்படையான தன்மைதான் காரணம் என்றும், அதுவே தங்களது பலம் என்றும் நான் நினைக்கிறேன். அது உண்மையாகவும் இருக்கலாம். ஆனால், அதுவே சில தருணங்களில் பலவீனமாகவும் அமைந்திடுகிறதோ என்று நினைக்கிறேன். இந்த வார டாப்பிக், பேஸ்புக்கிலும், வாட்சப் உரையாடல்களிலும் கிண்டலுக்கு ஆளாகி நிற்கிறது.
விலையேற்றம் என்பது எந்த தொழிலுக்குமே, பல்வேறு காரணிகளால் தவிர்க்க இயலாத ஒன்று. சில தவிர்த்து, அதையெல்லாவற்றையுமே வாடிக்கையாளர்களுக்கு விளக்கிக்கொண்டிருக்க அவசியமில்லை என்பது என் எண்ணம். ஒரு வெளியாளாக தங்கள் பிரச்சினையைப் நான் படித்தால், குடோன் இடப்பற்றாக்குறைதான் பிரச்சினை எனில், குடோனை விரிவாக்கம் செய்வதுதான் சரியான தீர்வாக இருக்கமுடியும் என்று சொல்வேன். அதோடு விற்பனை குறைவு, விற்பனை வேகக்குறைவு, அதிக பிரிண்ட் ரன் இது போல ஏதோ ஒன்று அல்லது பல காரணங்கள்தான் சிக்கலுக்குக் காரணமே தவிர குடோன் அளவு காரணமா என்பதை தாங்கள்தான் விளக்க வேண்டும்.
இதுபோன்ற அவசியப்படுகின்ற பொழுதுகளில் சத்தமில்லாமல், நியாயமான விலையுயர்வை செய்துவிட்டு போய்க்கொண்டே இருப்பதுதான் சிறப்பாக இருக்கும்... என்பது என் கருத்து!! :-))))
--------------------------------------------------------------------------------------------------------------------------
ஓசையின்றி இதற்குப் பதில் போட்டுவிட்டு நான் நடையைக் கட்டியிருக்கலாம் தான் ; ஆனால் நண்பரைப் போலவே உங்களுள் இன்னும் வேறு சிலரும் இருக்கக்கூடுமென்பதால் எல்லோருக்குமாய் பதில் தந்தது போலிருக்குமேயென்று நினைத்தேன்! So அந்த மின்னஞ்சலை இங்கே வெளியிடும் உரிமையை எடுத்துக் கொண்டேன்! கூடவே எனது பதிலும் :
Yes – of course! வெளிப்பார்வைக்கு “கிட்டங்கியில் இடமில்லை என்பதால் விலையேற்றம் செய்ய வேண்டி வரும்!“ என்ற போன வாரத்து statement சிலபல பரிகாசங்களை ஏற்படுத்தியிருப்பதில் வியப்பில்லை தான்! மேலோட்டமாய்ப் பார்த்தால் ; நமது பயணத்தின் ஒவ்வொரு அடியையும் பின்தொடர்ந்திடாது பார்த்தால் – எனது பதிவு அபத்தமாகக் கூடத் தெரியலாம்! ஆனால் அதன் பின்னணி யதார்த்தத்தைப் புரிந்திடுவதில் பெரிய சிரமம் இருந்திடாது என்ற தைரியத்தில் தான் போன வாரம் எனது கருத்தைப் பதிவிட்டிருந்தேன்!
சரி, ஒரு கிட்டங்கியைப் புதுசாய் பிடித்து விடலாம் தான்; அதில் சிக்கலில்லை! ஆனால் மாதம் பத்தாயிரம் வாடகைக்குக் குறைச்சலாய், பத்திரமான; கரையான் தொல்லைகள் இல்லாப் புதியதொரு குடவுனைப் பிடிக்க சாத்தியமாகாது! And 6 மாத அட்வான்ஸ்; அங்கே புத்தகங்களைப் பத்திரமாய் அடுக்கிட குறைந்த பட்சம் 30 ராக்குகள் ; அந்த இடத்தையும் கண்காணிப்பில் வைத்திருக்க CC டி.வி. ஏற்பாடுகள் என ஒட்டுமொத்தமாய் ஒரு இலட்சம் முடக்கியாக வேண்டும்! “அட... அதையும் கூட செய்தே விடுவோம் சார்! நடைமுறையில் வேறு சிரமங்கள் இல்லாதபட்சத்தில் அதற்கு நாங்கள் ஓ.கே. தான்! என்றே நான் தீர்மானிப்பதாகவே வைத்துக் கொள்ளுங்களேன் – அதன்பின் தொடரும் நடைமுறைகள் என்னவாக இருக்குமென்றும் நான் சொல்கிறேன்! தினமும் வரும் ஆன்லைன் ஆர்டர்களுக்கும் சரி; ஏஜெண்ட்களின் ஆர்டர்களுக்கும் சரி – பழசு + புதுசு என்று விதவிதமான combination களில் புத்தகங்களைத் தேடிப் பிடித்து despatch செய்து வருகிறார்கள் நமது அலுவலகப் பெண்கள்! தற்போது சகலமும் எங்களது இடத்திலேயே எனும்போது பெரிய சிரமங்களின்றி வேலைகள் நடந்து வருகின்றன! இனி Godown 1; Godown 2 என்றிருப்பின் இங்கும் அங்குமாய் ஷண்டிங் அடித்திட நிச்சயமாய் கூடுதலாய் (wo)man power தேவையாகிடும்! சரி, அதையும் பார்த்துக் கொள்ளலாம் என்றே வைத்துக் கொள்ளுங்களேன் – இதிலுள்ள இன்னொரு சிக்கலைப் பற்றி பரிகாச ஆர்வலர்கள் அறிவார்களா – என்ன? ஒவ்வொரு ஆண்டின் annual stock taking-ன் போதும் குறைந்தபட்சம் 8% சேதாரம் இல்லாது போகவே போகாது! புத்தக விழாக்களுக்கு நாங்கள் அனுப்பும் பிரதிகள்; அங்கே விற்பனையாகின்றவை ; திரும்ப எடுத்துவருபவை ; அதே போல ஏஜெண்டுகளுக்கு அனுப்பும் பிரதிகள்; கடன் வசூலிக்க இயலாது போகும் தருணங்களில் அங்கிருந்து திரும்ப எடுத்து வரும் unsold பிரதிகள் – என சகலத்தையும் "உள்ளே-வெளியே" என்ட்ரி போட்டு அடிக்கும் அந்தர்பல்டிகளில் ஏற்படும் சேதாரமாய் அதைக் கருதுவது தவிர நமக்கு வேறு மார்க்கம் கிடையாது! ஒரு MNC ரேஞ்சுக்கு ஸ்டாக் maintenance ; godown keeper என்றெல்லாம் நமது operations இருந்திடுவதில்லை என்பதை இங்கே நான் சொல்லத் தான் வேண்டும் ! ஒவ்வொரு புத்தக விழாவின் போதும் நேரும் திருட்டுக்கள் , பில்லிங்கில் நேரும் தவறுகள், இழப்புகளை மட்டுப்படுத்திட ஆனமட்டிலும் முயற்சிக்கத்தான் செய்கிறோம் ! இந்த சென்னைவிழாவிற்கு - லேப்டாப் ; barcode scanner என்ற ஏற்பாடுகள் செய்துவருகிறோம் ! இந்நிலையில் 2 தனித்தனிக் கிட்டங்கிகள் என்றாகிடும் பட்சத்தில் இது போன்ற நடைமுறை நஷ்டங்களைச் சமாளிப்பது எத்தனை சிரமம் என்பதை நான் சொல்லிடவும் வேண்டுமா- என்ன? 20,000 -30,000 என பிரதிகள் குவிந்து கிடக்குமொரு கிட்டங்கியில் நாம் நித்தமும் போய் எண்ணிப் பார்க்க இயலாதெனும் போது - சகலமும் நமது கைகளுக்குள் இருத்தலே தேவலை என நான் எண்ணுவது தவறாகுமா ? அடுத்த ஓராண்டுக்குள் நமது அலுவலகத்திலேயே ஒரு மாடி கட்டும் திட்டமிடல் உள்ளது ; அது நனவாகும் வேளை இந்த storage பிரச்சனை தீர்வு கண்டிருக்கும் ! And “கிடைச்சது கிட்டங்கி!“ என்று அதனை ரொப்பிக் கொண்டே சென்றால் அதனுள் புதைந்திடும் முதலீட்டின் கதி என்னவாகும் ? என்ற long term கேள்விக்கே நான் வரவில்லை இப்போதுவரையிலும் !
‘டாலர் மதிப்பு கூடி விட்டது... யூரோ மதிப்புக் கூடி விட்டது; பேப்பர் விலை கூடி விட்டது... சம்பளங்கள் கூடி விட்டன‘ என்று மாமூலாய் காரணங்களைச் சொல்லி விட்டு விலையேற்றம் செய்திட நான் நினைத்திருக்கும் பட்சத்தில் அதற்கு நிச்சயமாய் பெரியதொரு மாற்றுக் கருத்து இருந்திடாது தான்! ஆனால் எனது இன்றைய தலையாய சிரமமே இடநெருக்கடியும்; அவை சார்ந்து வரும் நிர்வாகக் சிரமங்களுமே எனும் போது அதனை எழுதிட நான் தயக்கம் காட்ட அவசியமேது? Of course – வெளிப்படையாய் இருப்பதில் சகாயங்களுமுண்டு; சிரமங்களுமுண்டு என்பதை அறியாதவனல்ல நான்! நீண்ட நாள் கடைமூடி விட்டு மறுபடியும் கடை திறக்கும்போது “Comeback ஸ்பெஷல்“ என்று பெயரிடுவதே தவறென்று நண்பர்கள் அந்நாட்களில் சொன்னது நினைவுள்ளது! ஆனால் உள்ளதை உள்ளபடிக்குச் சொல்வதில் தவறென்ன ?என்றுதான் நான் நினைத்தேன்! இன்றைக்கும் போலியாய் சிலபல சாக்குபோக்குகளை நோக்கி விரல் நீட்டுவதைவிட நிஜத்தை பதிவிடுவதில் தவறிருப்பதாய் எனக்குத் தோன்றிடவில்லை ! Moreover இன்றைக்குப் பதிவிட்டு விட்டு, நாளைக் காலையே விலையேற்றம் செய்திடுவதாகவும் நாம் இல்லையே ? இந்தாண்டின் பாக்கி 7 மாதங்களையும் அதே விலைகளில் தானே தொடரவிருக்கிறோம் ? இந்த அவகாசத்தினுள் நமது விற்பனைகளைத் துரிதப்படுத்த இயலாது போனால் ; ஆண்டின் இறுதியில் நமது கிட்டங்கி வாய்விட்டு அழும் நிலையில் இருந்தால் மாத்திரமே 2017-ல் விலையேற்றத்தை அமல் செய்ய வேண்டி வரும் என்று தானே சொல்லியிருந்தேன் ? யதார்த்தம் இதுதான் எனும் போது இதனில் பரிகசிக்க விஷயமிருப்பதாய் சில நண்பர்களுக்குத் தோன்றும் பட்சத்தில் அவர்களது நகைச்சுவை உணர்வுகள் overdrive -ல் உள்ளதென்று புன்னைகைப்பதைத் தவிர, நான் செய்திடக்கூடியது வேறென்னவாக இருக்க முடியும் ?
32 ஆண்டுகளாய் பழகிப் போனதொரு சுபாவத்தை – சிலபல நையாண்டிகளுக்காய் மாற்றிக் கொள்ளும் அவசியம் இருப்பதாய் நான் எண்ணிடவில்லை சார் ! விமர்சனங்கள்; பகடிகள்; எள்ளல்கள் எல்லாமே இன்றைக்கு a way of life என்றான பின்னே – அதையெண்ணி தூக்கத்தைத் தொலைப்பானேன்? எல்லாவற்றிற்கும் மேலாய் பரிகாசம் செய்திடுவோர் எவருமே நம் சிரமங்களை அறியாதோரே அல்ல என்பது தான் beauty! இந்தத் துறையின் சிறுவட்டம் பற்றியோ; இதனில் தாக்குப்பிடிப்பதன் சிரமங்கள் பற்றியோ; நமது நோக்கங்களில் நேர்மை பற்றியோ நிச்சயமாய் அவர்களுக்கும் தெரியும் தான்! ஆனால் ஜாலியான கலாய்ப்புகளுக்கு யாருமே விதிவிலக்கல்ல என்றான பின்னே நம் தலையும் அவ்வப்போது உருண்டிடுவது just one of those things!
On a lighter note – இந்தாண்டின் நமது இலட்சியமே – “ஒவ்வொரு முகத்திலும் ஒரு சந்தோஷப் புன்னகை“ என்பது தானே? நமது இதழ்களைப் படிக்கும் முன்பாகவே இவ்விதமாய் சிலபல (பரிகாசப்) புன்னகைகளும் உற்பத்தியாகும் பட்சத்தில் அதையெண்ணி நானும் சந்தோஷப்படுவதுதானே முறையாக இருக்கும்? Maybe அவ்வப்போது என் பொருட்டு சாத்தியமாகும் இந்தக் கேளிக்கைகளுக்கொரு சந்தாவை நிர்ணயித்து விடலாமோ? ‘சந்தா ப‘ ??!! Any takers? :-) :-)
மீண்டும் சந்திப்போம் folks! அது வரை – have an awesome time!
P.S.: டி-ஷர்ட் அளவுகள் இன்னமும் சுமார் 300 நண்பர்கள் சொல்லாதுள்ளனர்! அடுத்த சில நாட்களில் கிடைக்காத பட்சத்தில் சைஸ் ‘L’ என்று எடுத்துக் கொள்வோம்! Please do mail us !!