நண்பர்களே,
வணக்கம். நமது மதிப்பிற்குரிய
பிரதமர் – Make in India; Digital
India என்றெல்லாம் அழகாய்
பல திட்டங்களை முன்வைத்திருப்பது நாடறிந்த விஷயம் ; அதனை இன்னும் சற்றே refine செய்து – ‘Make at home’; ‘Digital @ home’ என்றெல்லாம் நம்மவர்களுள் ஒரு சிறு பிரிவினர் பின்னிப் பெடலெடுத்து வருவது பற்றிய எண்ணச் சிதறல்களே இந்த
ஞாயிறின் பதிவு! ஜனவரிப் பொங்கல் புத்தக விழா சென்னையில் நடந்து முடிந்த சில
நாட்கள் கழிந்திருந்த நிலையில்- என் பெயரைத் தெளிவாக highlight செய்ததொரு parcel கூரியரில் நம் அலுவலகம் வந்திருந்தது! எல்லாமே ஆன்லைன் பணப்பட்டுவாடாக்கள்; போனிலும், வாட்சப்பிலும்,
மின்னஞ்சல்களிலும் ஆர்டர் & டெஸ்பாட்ச் விபரப் பரிமாற்றம் என்றாகிப் போன நிலையில் கடுதாசிகளும்,
இது போன்ற கூரியர் கவர்களும் நம்மவர்களிடம் அத்தனை கவனத்தைப் பெறுவதில்லை. அதிலும் “பெர்சனல்“ எனப்
பருமனான எழுத்துக்களில் பதிக்கப்பட்டிருந்த கவரைத் தொடக்கூடச் செய்யாமல் பத்திரமாக
என்னிடம் ஒப்படைத்தனர்! அதனிலிருந்த கடிதத்தை – அதாவது அவசியமான அதன் பகுதிகளை மட்டுமேனும் இங்கே உங்களோடு பகிர்ந்திடுவது
சுவராஸ்யமான அனுபவமாகயிருக்குமென்று தோன்றியது!
***************
டியர் எடிட்டர்,
வணக்கம். சுற்றி வளைத்து எழுத எனக்குத் தெரியாது என்பதை விட பிரியமில்லை என்று
வைத்துக் கொள்ளுங்களேன். என்னடா இப்படிக் கேட்கிறானே என்று நீங்கள் வருத்தப்பட்டால்
கூடப் பரவாயில்லை – ஆனால் ஒரு
விஷயத்தைக் கேள்விப்பட்ட பிறகு அதை நிஜமா ?– பொய்யா? என்று தெரிந்து கொள்ளாவிட்டால் எனக்குத் தலையே வெடிச்சிடும்
போல இருக்கிறது. உங்களுக்கு பழைய, கிடைக்க சான்ஸில்லாத முத்து காமிக்ஸ், திகில்
காமிக்ஸ் புக்குகளை சத்தமில்லாமல் கொள்ளை லாபத்துக்கு விற்கும் ஆட்களோடு தொடர்பு உள்ளதா?
2 ரூபாய் பழைய புக்கை ஆயிரம் ரூபாய்க்கு விற்பவர்களை பற்றி நான் கேட்கவில்லை. உங்க
புக்குகளை உங்கள் பெயர் போட்டே பிரிண்ட் போட்டு கிறுகிறுக்க வைக்கும் விலையில் விற்கிறார்களே
– அவர்களைப்
பற்றித் தான் உங்களிடம் கேட்கிறேன். இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டுமென்றால் முத்து
மினி காமிக்ஸ் புத்தகங்கள் எல்லாவற்றையும் செட்டாக அச்சு போட்டு செட் ஒன்றுக்கு 1800
என்று விற்கிறார்கள். இது உங்களுக்கு தெரியுமா ? தெரியாதா ? என்னிடம் இந்த புக் ஒன்று கூட கிடையாது என்பதால் நானும்
அவ்வளவு பணம் கொடுத்து தான் வாங்கினேன். யாரிடம் இருந்து? எந்த வழியிலிருந்து ? என்று கேட்காதீர்கள்-
ஏனென்றால் அவர்களோடு நான் உண்மையாகவே பல வருடங்கள் பழகியிருக்கிறேன். ஆரம்பத்தில்
கிடைக்காத புக்குகளை ஒருவருக்கொருவர் சுற்றில் விடுவது என்று ஆரம்பித்தது, அதன்
பின்னர் ஸ்கேன் போட்டு, ஜெராக்ஸ் போட்டு, ஸ்பைரல் போட்டு பரிமாறிக் கொண்டது வரை
எனக்கு தெரியும். ஆனால் திடீரென்று அந்த ஸ்கேன்கள் புத்தகங்களாக மாறி – நீங்கள், அதாவது உங்கள் தந்தை 60 பைசாக்குப்
போட்ட புக்குகளை இன்றைக்கு 200-250 என்று விற்கும் போது தான் எனக்கு வெறுத்து
விட்டது. நண்பர்கள் என்ற உரிமையில் இது எப்படி என்று கேட்ட போது – ‘ஜி... எல்லாமே விஜயன் சாருக்கும்
தெரியும்; அவரால் இதையெல்லாம்
பிரிண்ட் போட டைம் இல்லாததால் நாங்கள் போடுவதை அவர் கண்டுகொள்ள மாட்டார்!‘ என்று
சொன்ன போது கூட நம்பிக்கையில்லை. ஆனால் தண்டம் அழுது அந்த 8 புக்குகளையும் வாங்கி
பார்த்த போது, அதில் உங்கள் பழைய கம்பெனி பெயர் முதற்கொண்டு அச்சாகி இருப்பதைப்
பார்த்த பிறகு எனக்கே சந்தேகம் வந்து விட்டது! ஒரு வேளை நீங்களும் தெரிந்து கொண்டே
சும்மா இருக்கிறீர்களோ என்று. இதில் உங்களுக்கும் நேரடி பங்கு இருப்பதாய் நான்
சொல்லவில்லை சார்; ஆனால் தெரிந்தவர்கள்
தானே என்று பார்த்தும், பார்க்காதது போல இருக்கிறீர்களோ என்று!
சென்னையில் மழை, வெள்ளம், சேதம் என்பதில் என் புக் கலெக்ஷன் காலியாகி விட்டது. என்னைப் போலவே நிறைய
நண்பர்கள் இருப்பார்கள். அவர்கள் எல்லாம் இது மாதிரி தான் இனிமேல் பழசை சேகரிக்க
வேண்டுமா? உங்கள் பிரச்சனைகள் பற்றி நிறைய ப்ளாக்கில் எழுதியிருக்கிறீர்கள். ஆனால்
பழையதை சேகரிக்கும் ஆர்வம் எங்களைப் போன்றவர்களுக்கு குறையாது, நாங்கள் இப்படி
கொள்ளை விலைகளுக்கு தான் வாங்கி சந்தோஷப்பட்டுக் கொள்ளணும் போலும். வாரமலர்
கலரில், அப்புறம் ஏதோ திகில் புக்குகள்; அப்புறம் கிடைக்காத பழைய இதழ்கள் எல்லாவற்றையும் இதே போல சப்ளை
செய்ய முடியும் என்று இஷ்டத்துக்கு விலை பேசினார்கள். நீங்கள் சென்னை புத்தக
விழாவுக்கு வருவீர்கள் – நேரில் புக்குகளை காட்டி பேசலாம் என்று
நினைத்திருந்தேன். ஆனால் உங்கள் கடையில் இருந்தவர் இந்த முறை நீங்கள்
வரமாட்டீர்கள் என்று சொல்லி விட்டதால் இந்த கடிதம் எழுதுகிறேன். உங்கள் போன்
நம்பர் தந்தால் பேசுகிறேன்..."
************
இன்னமும் நிறையவே நீண்டு செல்லும் அந்தக் கடிதத்தோடு 8 புத்தகங்களும் விறைப்பாக இருந்தன!
‘வாயுவேக வாசு‘ ; ‘சூரப்புலி சுந்தர்‘ ; தபால்தலை மர்மம் etc. etc. என்ற அந்த 8 இதழ்களும் 1970-களின் மத்தியில் முத்து மினி காமிக்ஸ்
என்ற லேபிலில் வெளிவந்திருந்த இதழ்களின் டிஜிட்டல் பிரிண்டுகள் என்பது
பார்த்தவுடன் புரிந்தது. நமது லோகோ;அச்சகப் பெயர்,வெளியீடு நம்பர், தேதி, இத்யாதி என அட்சரசுத்தமாய்
உட்பக்கங்களில் கண்ணில்பட்ட போது தான் கடிதம் எழுதியவரின சந்தேகம் முகாந்திரமின்றி
இல்லை என்பது புரிந்தது!
பிப்ரவரி மாதத்து இதழ்களின் வேலைகள், திருப்பூர் புத்தக
விழாப் பணிகள் என்று தவிர்க்க இயலா விஷயங்கள் இடையே காத்திருந்தபடியால் இந்த சமாச்சாரத்தைத் தற்காலிமாகக் கிடப்பில் போடுவதெனத் தீர்மானித்தேன். பிப்ரவரி
இதழ்கள் வெளியாகி, அழகாய் உங்களிடம் வரவேற்பு பெற்று வரும் நிலையில் இதைப் பற்றி
போன ஞாயிறின் பதிவில் எழுதிடும் பட்சத்தில் – ஒளிவட்டம் பிப்ரவரி இதழ்கள் மீதிருந்து விலகிப் போய் விடக்கூடுமென்று பட்டது. So சென்ற வாரமும் வாய் மூடி இருந்து விடல் நலமென்று எண்ணியவன், இன்றைக்கு ஒரு
வழியாக இதற்கென கவனம் தந்திடத் தீர்மானித்தேன்!
முந்தைய இதழ்களுக்கென ஒரு சிறு மார்கெட் இன்றைக்கும் தொடர்வதும், அதனைப் பயன்படுத்திக் கொண்டு சேகரிப்புகளை யானைவிலை – குதிரைவிலை சொல்லி விற்பதும் OLX வரை பகிரங்கமாகவே நடந்து
வரும் விஷயங்கள் என்பதால் அது அவரவர் பிரியம் என்ற மட்டில் ஒதுங்கிக் கொள்கிறோம். ஆனால் சேகரிப்பின்
மீதான மோகத்தைக் கல்லாக்கட்டும் கருவியாகப் பார்த்திடுவது மட்டுமின்றி,
இவற்றிற்கு நமது ஆசீர்வாதங்களும் உண்டென்று உரக்கப் பேசிடும் ‘கெத்து‘ நிச்சயமாய்
ஆரோக்கியமானதல்ல என்பது புரிகிறது! இந்த சமாச்சாரங்கள் நண்பர்களுள் பலருக்கும் ஏக காலமாய்த் தெரிந்துள்ளது எனும் போது – நான் மட்டுமே ‘சிவாஜி செத்துட்டாரா?‘ என்ற ரேஞ்சிற்கு டியூப்லைட்டாக
இருந்திருப்பதும் புரிகிறது! தெளிவாக ஸ்கேன் செய்தால் போதும் – ஒரு பெரிய சைஸ் டிஜிட்டல் பிரிண்டரில் தேவைக்கேற்ப
பிரிண்ட்கள் போட்டு சுலபமாய் மேகி நூடுல்ஸ் கிண்டி விடலாமென்ற மகாசிந்தனைக்குச்
சொந்தக்காரர்கள் யாரென்பதைக் கண்டுபிடிப்பதற்கு பெரியதொரு ஷெர்லக் ஹோம்ஸ் தேவையில்லை ! கொஞ்சம் மெனக்கெட்டாலே ஸ்கேனிங் செய்வது யார் ? ; அச்சு வேலைகளைக் கவனிப்பது யார்?; மார்க்கெட்டிங் செய்வது யார் ? எந்த ரூட்டில் பணத்தைப் பெற்றுக் கொள்கிறார்கள் ? என்பதைத்
தெரிந்து கொள்வதில் சிரமமிராதுதான்! இதனை மாவட்டம்தோறும் மார்கெட் செய்திட “Help Wanted” என்றும்; தயாரிப்புத் தரப்பினரின் விலைக்கு (!!!)
மேல் ஒரு லாபம் வைத்து ஆங்காங்கே விற்றுக் கொள்ளலாமென்ற சட்டதிட்டங்களும் அமலில் உள்ளன
என்பதை தெரிந்து கொள்ள நேர்ந்த போது நிஜமாகவே சங்கடமாக இருந்தது! “எமது அடுத்த project-கள்“ என்று MC வாரமலர் தொகுப்பு; XIII – இரத்தப்படலம் தொகுப்பு
என்ற பலமான / பசையான திட்டங்களும் pipeline-ல் இருப்பதாய்க் கேள்விப்பட்ட போது – சில பல மாதங்களுக்கு முன்பாய் வருடத்திற்கு 48 புத்தம்புது இதழ்களை
வழங்கிட ஆண்டுச் சந்தாவென நாலாயிரம் ரூபாய் கோரிட நான் முழித்த பேய்முழி தான்
நினைவுக்கு வந்தது! இங்கேயோ 20 ரூபாய் சமாச்சாரத்தை 225-க்கு விற்பது மட்டுமின்றி இது
கூட ஒரு ‘சேவை அடிப்படையில்‘ என்ற பில்டப்போடு நடைபெறுவதாய்க் கேள்விப்பட்டபோது
அழுவதா-சிரிப்பதா என்று தெரியவில்லை!
சரி... இதற்கான தீர்வு என்னவாக
இருக்க முடியுமென்று யோசித்த போது தான் ‘if you can’t beat them – join them !’ என்று தோன்றியது!
எனது ஆசீர்வாதங்களோடு தான் அரங்கேறும் விஷயம் என்று விளம்பரப்படுத்தப்பட்ட பின்னர்
– அவர்களது ஆசையை முழுமைப்படுத்தி
விட்டாலென்னவென்று நினைத்தேன்! குருவி உட்கார பனம்பழம் விழுந்த கதையாக தொடர்ந்த நாட்களில் நமது முந்தைய பதிவுகளில் ஏதோ
ஒரு நிலையில் – புத்தகக்
கண்காட்சிகளுக்கு வருகை தரும் பள்ளி மாணவர்களுக்கென மலிவு விலைப் பிரதிகளைத்
தயாரித்தால் நன்றாக இருக்குமே என்ற ரீதியில் நண்பர்கள் எழுதி வைக்க – அக்கணமே தீர்மானித்தேன் – நிழலில் தயாரிக்கப்பட்டுள்ளதை நிஜவுலகிற்குக்
கொணர்வதென! So மறுபதிப்புப் படலத்தினுள் நாம் இறங்குகிறோம் – தீர்க்கமாய்!
பெரியதொரு எண்ணிக்கையி்னை அச்சிடுவதோ
– அவற்றை ஸ்டாக்கில்
வைத்திருந்து கங்காரூ குட்டியைப் போலச் சுமந்து திரிவதோ இம்முறை இந்த மலிவுவிலை மறுபதிப்புகளில்
இருந்திடப் போவதில்லை! சிறிதளவுப் பிரதிகளை, துவக்கத்தில் அச்சடுவோம், அவை
காலியாவதைப் பொறுத்து அடுத்து திட்டமிடுவோம்! And தற்போது சுடச்சுட மார்கெட் செய்யப்படும் நமது முத்து மினி காமிக்ஸிலிருந்தே
அரை டஜன் இதழ்களை முதல் சுற்றுக்கான மறுபதிப்பு இதழ்களாகத் தேர்வு செய்திடுவோம்! இவற்றுள் ஒற்றை இதழ் நீங்கலாக பாக்கி எல்லாமே மும்பை நிறுவனத்திடமிருந்து flat ரேட்களில் வாங்கப்பட்டவை என்பதால் மறுபிரசுரம் செய்வதில் தடைகளில்லை.தொடரும்
நாட்களில் விச்சு & கிச்சு தொகுப்பு; பரட்டைத்தலை ராஜா
தொகுப்பு ; ஸ்டீல்பாடி ஷெர்லாக் தொகுப்பு என்று பார்த்துக் கொள்ளலாம்.
இன்றைக்கு என் கையிலுள்ள 8 முத்து மினி இதழ்களுமே தெளிவான ஸ்கேன்களிலிருந்து digital பிரிண்ட் போடப்பட்டிருப்பதால் நேரடியாக அவற்றை நாம் அச்சுக்கு எடுத்துச் செல்வதில்
துளியும் சிரமமிராது! இந்த மலிவு விலைப் பதிப்புகள் மாணவர்களின் மீதான focus-ல் தயாரிப்பது நமது நோக்கமெனும் பொழுது இதனில்
வியாபார நோக்கத்தை பெரியளவில் நுழைத்திடுவதாக நாமில்லை! So, 64 பக்கங்கள்
கொண்ட ஒவ்வொரு புக்கும் ரூ.20 என்ற விலையில் வெளிவரும் ; புத்தக விழாக்களில் 10% கழிவுடன் விற்பனை செய்யப்படும். இந்த முயற்சியினில் நமக்கு
ராயல்டி, மொழிபெயர்ப்பு, இத்யாதி,எனத் தயாரிப்புச் செலவுகள் இல்லாததால் – அதன் பொருட்டு நாம் வசூலித்திடும்
தொகையினை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு உங்கள் சார்பிலும், நமது சார்பிலும்,மிகுந்த சிரத்தையோடு ஸ்கேன்னிங் செய்த நண்பர்களின் சார்பிலும் ஒரு சிறு அன்பளிப்பாய்ச் சேர்ப்பித்து விடுவோமே?! சென்றாண்டின் ஒரு பதிவில்
ஏதாவதொரு இதழிலிருந்து கிடைக்கும் சிறு தொகையினையாவது charity-ன் பொருட்டு
தந்திட முடிந்தால் நன்றாக இருக்குமே என்று நான் எழுதியிருந்ததும்
மறந்திருக்கவில்லை! அதனை நடைமுறைப்படுத்திட இது வாகான வாய்ப்பாகவும் எனக்குத்
தோன்றியது! So- ‘மினி‘மம் முயற்சிகளில், ‘மினி‘மம் எண்ணிக்கையிலான இதழ்களை அச்சிட்டாலும், முத்துமினி காமிக்ஸ் வாயிலாக ஒரு நல்ல விஷயத்திற்கு வழி பிறந்திருப்பதை சங்கடமான இந்த சூழலிலும் ஒரு வெளிச்சக் கீற்றாகப் பார்க்கத் தோன்றுகிறது. விற்பனை
எண்ணிக்கைகள் பற்றிய யூகங்கள் ஏதுமில்லா நிலையில் – நாம் வழங்கக் கூடிய தொகைகளைப் பற்றிப் பேசிடத் தயக்கமாகவுள்ளது!
ஆனால் இந்த முயற்சி take off ஆகும் சமயமே அந்த நம்பர்களை உங்களிடம் பகிர்ந்து கொள்வேன் என்பது எனது promise!
‘செய்வன திருந்தச் செய்‘ என்ற கோட்பாட்டை
வரும் நாட்களில் தீர்க்கமாகவும் செய்தே விடுவோமே? தற்போது ‘இல்லை... இல்லை‘ என்ற நிலையில்
– சேகரிப்பாளர்களிடையே
மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தி வரும் ‘இரத்தப் படலம்‘ வண்ண மறுபதிப்பின்
மீதாக விரைவில் பார்வையைப் பதிப்போம்! தற்சமயம் அமலிலுள்ள முறையில் அல்லாது – ‘முன்பதிவுகளுக்கு மாத்திரமே இவை‘ என்ற
ரீதியில் சிறிதளவு பிரதிகளை மட்டுமே அச்சிடுவோம் – தனித் தனி நம்பர்களிட்டு ! அதாவது 750 பிரதிகள் மட்டுமே அச்சிடப்
போகிறோம் என முன்கூட்டியே நிர்ணயம் செய்துவிடும் பட்சத்தில் இதழின் பின்னட்டையில்
– சலான்களில், டிக்கெட்டுகளில்
வருவது போல அடுத்தடுத்த நம்பர்களை 1 முதல் 750 வரை அச்சிட்டு விடலாம். So- இவை மெய்யான Limited Collector’s Editions களாக மாத்திரமே இருந்திடும் !
On the
flip side – printrun குறைவாய் அமைந்திடும் போது நாம் இதுவரைப் பழகியுள்ள ரீதியில் விலைகள்
(சகாயமாய்) இருந்திட வாய்ப்பிராது! ஆனால் தற்போது க்ரே மார்க்கெட்டில் நிலவிடும்
ஏழாயிரம், எட்டாயிரம் – பத்தாயிரம் என்ற
அபத்த விலைகள் நிச்சயமாய் நம்மிடம் இராது என்ற மட்டில் உறுதி!
சரியாகத் தேர்வு செய்து
மறுபதிப்பைத் திட்டமிடல்; எட்டிப் பிடிக்கக் கூடியதொரு சிறு printrun–ஐ மட்டுமே
நிர்ணயம் பண்ணுதல்; போதிய அவகாசமும்,
தவணைகளும் தந்து பணம் வசூலித்தல் – வாகான சந்தர்ப்பத்தில் ரிலீஸ் என்பதே நமது modus operandi ஆக இந்த limited editions மறுபதிப்புகளுக்கு
வைத்துக் கொள்ளலாம்! So ஞாபக மறதிக்கார நண்பர் XIII வண்ண அவதாரில் நம்மை சந்திக்கவொரு வேளை புலர்வதும் இவ்விதம் தான் இருந்திட வேண்டுமென விதிக்கப்பட்டிருப்பின் - அதனை மாற்றியமைக்க நாம் யார் ?!! (ஸ்டீல் பொன்ராஜ் சார் - என்ஜாய் !!!)
அதே சமயம்- ‘தட புட‘வென்று ராத்திரியோடு ராத்திரியாய் அத்தனை மறுபதிப்புகளையும்
களமிறக்கிடுவோமென்ற கற்பனைகளில் நானில்லை. புது இதழ்கள் தான் நமது எதிர்காலம் என்பதில்
துளி கூட மாற்றுக் கருத்தில்லை என்னிடம்! And நமது சொற்ப வசதிகளை, கையிருப்புகளைப் புது இதழ்களைத் தாண்டி
இந்த limited
editions அந்தர்பல்டிகளுக்குள் விதைத்திடும் எண்ணமும் என்னிடமில்லை. And முக்கியமாக இவற்றினுள் எனது உழைப்பைக் கூட முதலீடு செய்யும் நிலையிலும் நான் இல்லை என்பதால் - இதனை மட்டும் இனி நமது சீனியர் எடிட்டர் பார்த்துக் கொள்வார் - வரும் நாட்களில் ! ஏதேனும் டென்ஷன் இல்லாப் பணிகளுக்குள் ஆழ்ந்திட ஆர்வமாயிருக்கும் அவரும் நிச்சயம் இதனில் சந்தோஷம் கொள்வார் ! (இது அவருக்கே இதுவரையிலும் தெரிந்திருக்கா சேதி !)So- புதுசை நாங்கள்
பார்த்துக் கொள்கிறோம்; பழசை மறுபதிப்பாக்கிடும்
ஊக்கத்தை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் – இந்தக் கூட்டணி நிச்சயம் ஜெயம் காணும் என்ற நம்பிக்கை நிறைய உள்ளது !!
டெக்ஸ் கதைகளில் வரும் புகை சமிக்ஞைகளுக்குப்
போட்டியாக இன்றைக்கு என் புண்ணியத்தில் சிலபல செவிகளிலிருந்து வெப்பச் சலனங்கள்
வெளிப்படுவது உறுதியென்பது புரிகிறது! And எனது யோக்கியதாம்சங்களோ ; இன்மையோ தீவிரமாய் அலசலுக்கு உட்படுத்தப்படும் என்பதும், இனி வரும் நாட்களில் அழகான அர்ச்சனைகள் ஆங்காங்கே அமர்க்களமாக நடைபெறும் என்பதும் தெரியாமலில்லை! ஆனால் நடந்து
வரும் அபத்தங்களை ஏதோவொரு நிலையில் நிறுத்த முயற்சிக்காது போயின் – ஏற்கனவே நாலணா நாணயத்தைப் போலச்
சுருங்கிக் கிடக்கும் காமிக்ஸ் வாசகர் வட்டம் நாளாசரியாக மாயமாகவே மறைந்து
விடுமென்ற அச்சம் எழுகின்றது! ‘இதைச் செய்யுங்கள் – இதைச் செய்யாதீர்கள்‘ என்ற ரீதியில் அட்வைஸ் பண்ண
அவசியமிங்கே நிலவுவதாய் நான் நினைக்கவில்லை! யதார்த்தத்தின் தன்மையைப் புரிந்து கொள்ள
நான் தான் செம லேட் என்ற வகையில் இங்கே ஞானசூன்யம் அடியேனே! So அட்வைஸ் செய்யும் தகுதிகள்
எனக்குக் கிடையாது – சர்வ நிச்சயமாய்!
ஆனால் இத்தகைய முறையற்ற முயற்சிகளைக் காமிக்ஸ் நேசத்தின் இன்னுமொரு பரிமாணமாக
நியாயப்படுத்திடுவதை ஊக்குவிக்க வேண்டாமே ப்ளீஸ்? முந்தைய சேகரிப்புகளைப்
பத்திரமாக வைத்திருக்கும் நண்பர்கள் – நட்பு வட்டாரத்தின் பயனுக்காக அவற்றை
ஸ்கேன்களாக வலையேற்றம் செய்வது தான் இந்த “தொழில் முனைவோர்க்கு“ மூலதனம் என்பதை நான் சொல்லவும் வேண்டுமா ? தயைகூர்ந்து வரும் நாட்களில் உங்கள்
ஸ்கேன்களை நமக்கு அனுப்பித் தாருங்கள் – மொத்த வாசகர்களும் அதனிலிருந்து பலன் பெறும் வகையில் ஏற்பாடுகள்
செய்திடுவோம்! இத்தனை காலமாய் நண்பர்கள் ஜாடை மாடையாக இந்த grey market படலம் பற்றி என்னிடம்
தகவல் சொல்லியுள்ள போதிலும் – இது போல ஆதாரங்களுடன் எதனையும் பகிர்ந்திட்டிருக்கவில்லை. So யூகத்தின் பெயரில்
யாரையும் நோக்கி விரல்நீட்ட எனக்குத் தோன்றவில்லை. அது மட்டுமன்றி, சின்னதொரு
வட்டத்துக்குள் மௌன பாஷையில் வியாபாரமாகி வரும் இந்த சங்கதிகளை நானே ஊதிப் பெருசாக்கி,விளம்பரப்படுத்தி விட்டு – இது நாள் வரைக்கும் ‘சிவனே‘ என்று விலகி
நிற்கும் இதர வாசகர்களையும் இந்த விரயத்துக்குள் கால்பதிக்கச் செய்ய வேண்டாமே
என்பதே என் எண்ணமாகயிருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக – இதனைத் தோண்டித், துருவிப் பின்னணிகளை
அம்பலமாக்குவதன் மூலம் ஏற்கனவே கார்சனின் இளமையைப் போல் தேய்ந்து நிற்கும் காமிக்ஸ் ரசிக வட்டத்தினை – மேற்கொண்டும்
பலவீனமாக்குவது ரசிக்கக் கூடிய சிந்தனையாக எனக்குத் தோன்றவில்லை ! எல்லோருமே காமிக்ஸ் எனும் நேசத்தின் வாயிலாக அறிமுகம் கண்ட நண்பர்களே எனும் பொழுது யாரையும் கஷ்டப்படுத்திட மனதும் கேட்கவில்லை ! So இத்தனை காலமும் காற்றுவாக்கில்
காதுகளைத் தேடி வந்த கசப்பான சங்கதிகளை கண்டும் காணாது நகன்று செல்ல முயற்சித்ததன்
பின்னணி இதுவே. ஆனால் ஒரு கட்டத்தில் துளியும் கூச்சமின்றி இத்தகைய வேலைகள்
பகிரங்கமாய் செயலாவதற்கு எனது இத்தனை கால மௌனமும் முக்கிய காரணமென்பது புரியும்
போது – மௌன விரதத்தைக்
கலைப்பதைத் தவிர வேறு வழிதெரியவில்லை ! ‘நீ புதுசைப் போட்டுக்கி்ட்டே போ; அது காலியான பின்னே நாங்க பின்னாடியே
அறுவடை செய்து கொள்கிறோம்‘ !'என்ற சிந்தனையை இனியும் வளர்த்திடவோ, சகித்திடவோ
நம்மிடம் திராணியில்லை! புதிய பாணிக் கதைகளின் தேடலிலும் , உங்கள் ரசனைகளுக்கேற்ற படைப்புகள் முக்கியம் என்ற வேட்கையிலும் ஆயிரக்கணக்கில் செலவு செய்து வாங்கி வைத்துள்ள oldie கதைகளை நான் வருஷங்களாய்ப் பீரோவுக்குள் போட்டுப் பூட்டி வைத்திருக்க, இன்னொரு பக்கமோ அதே பழசைக் கடைவிரித்து,நம் பெயரைப் போட்டே சத்தமின்றி வியாபாரம் நடத்திடும் அந்த லாவகம் - phew !
|
இவை தற்போது வீட்டிலுள்ள எனது மேஜையில் வருஷங்களாய்த் தூங்கி வருபவை ! ஆபீசில் இன்னுமொரு வண்டி உள்ளது ! |
காமிக்ஸ் மீதான காதலின் பிரதிபலி்ப்பாய் ஏதாவது செய்திட வேண்டுமென்ற
அவா மேலோங்குகிறதா folks ? - please do join hands with us ; உங்கள் கைவண்ணங்களை நமது இதழ்களுள் வாகான தருணங்களில்
பயன்படுத்திக் கொள்கிறோம்-நமக்கு இயன்ற சன்மானங்களுடனும், அங்கீகாரங்களுடனும் ! இன்னும் ஒருபடி மேலே போய் maybe ஆண்டுக்கு ஒரு இதழினை அட்டைப்பட டிசைனிங்கில் துவங்கி, மொழியாக்கம், டைப்செட்டிங் வரையிலும் முழுக்க முழுக்க வாசகர்களின் கைவண்ணத்திலேயே இருக்கும் விதமாய் கூட
அமைத்திடலாம்! ‘அட்டைப்பட டிசைனிங்கில் பங்கேற்க வாருங்களேன் நண்பர்களே‘ என்று நான்
கூவும் போது மூன்றே நண்பர்கள் மாத்திரமே கைதூக்கும் அதே வேளையில், இந்த துல்லியமான ஸ்கேனிங்களின்
பொருட்டும், உயர்மட்ட software-களைப் பயன்படுத்தி கலரிங் செய்வதற்கு மாதக்கணக்கான உழைப்புகளை நல்கிடுவதும் நடந்து வருகிறது! உங்கள் திறமைகளை வெளிக்காட்ட ஒரு showcase தேவையென்று
தோன்றும் பட்சத்தில் – அதனை சரியான
விகிதத்தில் அணுகிடுவோமே இனியாவது? சீரியஸாகவே - மொழிபெயர்ப்புகளுக்கு கூடுதலாய் கரங்கள் கிட்டின் மகிழ்வேன் - தொடர்ச்சியாய் இந்தப் பளுவை இரண்டே பேராய் நாங்கள் சுமந்திடுவது சதாநேரமும் ஏதாவதொரு deadline-ன் பொருட்டு முட்டி மோதி ஓடிக்கொண்டே இருப்பது போலுள்ளது ! ஒவ்வொரு ஞாயிறையும் ஏதேனும் ஒரு காகித மலைக்குப் பின்னே புதைந்து கிடந்து கழிப்பதே எனது routine ஆகி நிற்கிறது ! So டிசைனிங்கில் மாத்திரமின்றி, மொழிபெயர்ப்பினில் ஆர்வம் காட்டிட நண்பர்கள் இருப்பின் - ஒரு பிள்ளையார் சுழி போடவும் இதனை ஒரு தருணமாக்கிக் கொள்ளலாம் ! ஒரு அழகான ரசனையை மிகக் குறுகிய வாசகவட்டத்தின்
துணையோடு உயிரோட்டத்துடன் தொடர்ந்திடச் செய்ய முயற்சிக்கும்போது – இத்தகைய ஸ்பீட் பிரேக்கர்கள் வேண்டாமே – ப்ளீஸ் ! என்ற ஒற்றைக் கோரிக்கையோடு – காத்திருக்கும் மார்ச் மாதத்தின் இதழ்கள் பக்கமாய்
பார்வைகளைத் திருப்புகிறேன்!
இதோ- மார்ச் மாதத்து சிரிப்புப்
புலி க்ளிப்டனின் இதழின் அட்டைப்பட first look ! ஒரிஜினலே சூப்பர் என்பதால் – அதனை அப்படியே ஈயடிச்சான் காப்பி செய்து நமது
அட்டைப்படமாக்கியுள்ளோம்!
And கதையைப் பொறுத்த வரை – வழக்கமான க்ளிப்டன் பாணி விறுவிறு கதை – laced with british humor என்ற தடத்தில் தான் வண்டி ஓடுகிறது! பரபரப்பான
கதைக்களத்தின் மத்தியினில் உறுத்தலின்றி நகைச்சுவையினைப் புகுத்திட படைப்பாளிகள்
எடுத்துக் கொண்டிருக்கும் சிரத்தையை இயன்றளவுக்குப் பின்பற்றிட நானும்
முயற்சித்திருக்கிறேன்! இந்த அழகான வண்ண ஆல்பம் உங்கள் முகங்களிலும் ஒரு மென்
புன்னகையை வரச் செய்திடும் பட்சத்தில் – நிச்சயம் திருப்தி கொள்வேன்! ஏற்கனவே சொன்னது போல – மாதமொரு கார்ட்டூன் இதழ் எனும் போது – பணியில் தொய்வுகளின்றிச் செயல்படுவது சாத்தியமாகிறது! இந்த எண்ணங்களை விதைத்த நண்பர்களுக்கும், இன்று அதனை பாராட்டுக்களால் குளிர்விக்கும் நண்பர்களுக்கும் நமது நன்றிகள்!
And இதோ - தளபதியின் காத்திருக்கும் "என் பெயர் டைகர்" ஸ்பெஷல் இதழின் உட்பக்கப் preview - வண்ணத்திலும், கறுப்பு வெள்ளையிலும் ! பார்த்து விட்டு - எது அழகாய்த் தெரிகிறதென்று சொல்லுங்களேன் ? எனக்கு இரண்டுமே ரம்மியமாய்த் தோன்றின !! மீண்டும் சந்திப்போம் guys ! Bye for now ! And oh yes,enjoy the day of love !!
P.S: விடிந்தும் விடியாமலும் இருக்கும் அதிகாலைகளிலேயே எழுந்தமர்ந்து தவறாமல் நமது
பதிவுகளைப் படித்து வரும் என் தந்தைக்கு நிச்சயமாய் இவ்வாரப் பதிவு சந்தோஷம்
தரப்போவதில்லை! என்றைக்கோ இந்த 74 வயது இளைஞர் துவக்கி வைத்த சிலபல முயற்சிகள் இவ்விதம்
திசைமாறிய கப்பல்களாய் பயணிப்பதை யார் தான் ரசித்திடுவர்? Please do spare a thought guys!