நண்பர்களே,
வணக்கம். இப்போதெல்லாம் 4 வாரங்களைக் கடத்துவது ஒரு யுகமாய்த் தோன்றுவது எனக்கு மட்டும் தானா ? என்று தெரியவில்லை......! ஜில் ஜோர்டனையும், அட்டையில் 'வரக்..வரக் ' என சொரிந்து கொண்டே நடை போட்ட ப்ளூகோட் பட்டாளத்தையும் உங்களுக்கு அனுப்பியதெல்லாம் நான் ஏழாம் வகுப்புப் படித்த நாட்களின் தூரத்து நினைவுகள் போல் நிழலாடுகின்றன மண்டைக்குள் ! "இதழ் வந்தது ; பிரித்தோம் ; படித்தோம் - what next ?" என்ற கேள்விகள் உச்சரிக்கப்படாவிட்டாலும், அரங்கேறும் அரட்டைகளுக்கு மத்தியில் அவை இங்கே மௌனமாய் எழுந்து நிற்பது போலொரு உணர்வு கூட எனக்குத் தோன்றுகிறது ! தொடரவிருக்கும் நமது 'தல ஸ்பெஷல்' கொஞ்ச வாரங்களுக்காவது உங்களை பிசியாக வைத்திருக்கப் போவது உறுதி என்பதால் - அந்த "what next ?" கேள்வியானது இம்மாதம் அத்தனை துரிதமாய்த் தலை தூக்காது என்றே நினைக்கிறேன் ! பைண்டிங் பணிகள் முடிந்து - இதற்கென ஆர்டர் கொடுத்துத் தயார் செய்யப்பட்டிருக்கும் ஸ்பெஷல் டப்பாக்களுக்குள் தஞ்சம் புகுந்து THE LION 250 இங்கிருந்து ஜூலை 3-ஆம் தேதி புறப்படும் ! நெய்வேலி புத்தக விழாவினில் இதனை வெளியிடுவது என்பதே ஒரிஜினல் பிளான் ; அப்படிப் பார்த்தால் - we are on target - becos நெய்வேலி விழா துவங்குவதும் 3-ம் தேதி தான் ! சமீப சமயங்களின் பாணியில் -" ஸ்பெஷல் இதழ்கள் - அச்சமயத்து ஒரு புத்தக விழாவில் வெளியீடு ; நம் சந்திப்பு" என்பது இம்முறை சாத்தியமில்லாது போய் விட்டதில் வருத்தமே எனினும், ஈரோடு கூப்பிடு தொலைவில் உள்ளதென்ற விஷயத்தை நினைவுக்குக் கொணர்ந்து மனதைத் தேற்றிக் கொள்கிறோம் ! ஈரோட்டில் நமக்கு அதிர்ஷ்டமும், ஸ்டாலும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் CCC ஜரூராய் தயாராகி வருகிறது ! அதற்குள் தாவும் முன்பாக - நெய்வேலி புத்தக விழாவில் நமது இதழ்கள் 2 வெவ்வேறு விற்பனையாளர்களின் ஸ்டால்களில் பிரதானமாய் விற்பனைக்குக் காட்சி தரும் என்ற (ஆறுதல்) சேதியைப் பகிர்ந்து கொள்கிறேன் ! நம் பணியாளரும் சில நாட்களுக்கு நெய்வேலியில் தங்கியிருந்து அந்த ஸ்டால்களில் நமது விற்பனைகளுக்கு முன்னுரிமை தந்திடும் முனைப்பில் செயல்பட்டிடுவார் ! So அந்தப் பக்கங்களுக்கு முற்றிலும் முதன்முறையாய் நம் இதழ்கள் அடியெடுத்து வைக்கக் காத்துள்ளன ; நிலக்கரி நகர் வாசகர்களிடம் கொஞ்சமேனும் ஒரு முத்திரை பதிக்க சாத்தியமாகிடும் பட்சத்தில் அதுவொரு சந்தோஷ முன்னேற்றமாய் இருந்திடும் ! Fingers crossed...!
வெளிச்ச வட்டத்தின் அடுத்த வாடிக்கையாளர்கள் நமது CCC -ன் கார்ட்டூன் கும்பலே என்பதால் நிஜமாகவே ஒரு ஜாலியான வேகத்தில் பணிகள் அரங்கேறி வருகின்றன ! CCC -ன் புக் # 3-ன் நாயகர் பற்றிய அறிமுகத்தை இந்த வாரம் வைத்துக் கொள்ளலாம் என்று தோன்றியதால் அந்த வேலையைப் பார்ப்போமா ? ஆசாமி உங்களுக்கு முற்றிலும் புதியவர் என்று சொல்ல முடியாது ; இவரொரு 'கெக்கே பிக்கே' சிரிப்புப் பார்ட்டி மட்டுமே என்றும் முத்திரை குத்திட முடியாது ! கார்டூன் ஸ்டைல் ஓவியங்களுடன், ஜாலியான கதை நகர்த்தலுடன், ஒரு உருப்படியான கதையையும் தாங்கி வரும் இந்தக் கட்டிளன்காளைக்குக் "கர்னல் க்ளிப்டன்" என்பதே நாமகரணம் ! ஏற்கனவே ஒரு நரை முடி கொண்ட மீசைக்காரர் நம் மத்தியில் சீரியசான பாணிகளில் சாகசம் செய்து வர ; இந்த மீசைக்கார பிரம்மச்சாரியோ அதே சாகசங்களை சற்றே கோணங்கித்தனப் பாணியில் நடத்துவதை விரைவில் பார்த்திடப் போகிறீர்கள். "காமெடி கர்னல்" என்ற பெயரில் ஏதோ ஒரு மாமாங்கத்தில் மினி-லயனில் (சரி தானா ?) ஒற்றை சாகசத்தில் மட்டுமே தலைக்காட்டிய இந்த பிரிட்டிஷ் துப்பறியும் சிங்கம் 2016-ல் கொஞ்சம் active ஆக நம்மிடையே வலம் வரும் சாத்தியங்கள் பிரகாசம் ! Of course இவருக்கு நீங்கள் தந்திடப் போகும் வரவேற்பு தான் long run-ல் இவரது தலைவிதியை நிர்ணயம் செய்திடும் முக்கிய அம்சமாக இருக்கப் போகின்றது என்றாலும் - இவர் தாக்குப் பிடிப்பார் என்றே எனக்குத் தோன்றுகிறது ! Cinebooks-ல் சில காலமாகவே வெளிவந்து கொண்டிருக்கும் க்ளிப்டன் அங்கே decent விற்பனைகளைச் சந்தித்து வருகிறாராம் ; அவற்றுள் சுவாரஸ்யமான கதைகளையாய் கடந்த முறை படைப்பாளிகளைச் சந்தித்த போது அள்ளிக் கொண்டு வந்திருப்பதால் என் மேஜை நிறைய இந்த மீசைக்காரர் விரவிக் கிடக்கிறார் ! பாரிஸ் செல்லும் சமயங்களில் எல்லாம் படைப்பாளிகளின் சமீபத்திய பிரெஞ்சு ஆல்பங்களைப் புரட்டிப் படம் பார்ப்பது எனது பொழுதுபோக்கு என்றாலும், அவர்களின் தலைமை நிர்வாகி அலுவலகத்தில் இருக்கும் பட்சத்தில் எனக்குப் பிரத்தியேக அழைப்பு வந்து விடும் - ததும்பி வழியும் அவரது ஷெல்புகளிலிருந்து ஆங்கில ஆல்பங்களை அப்புறப்படுத்தி இடத்தைக் கொஞ்சம் காலி செய்திடும் பொருட்டு ! "இவையெல்லாம் புதுசாய் வந்தவை...இது வேணுமா ? இது ஏற்கனவே உள்ளதா உன்னிடம் ?" என்று அக்கறையாய் விசாரித்து குறைந்த பட்சம் பத்து கிலோ எடையிலான ஆல்பங்களை நான் தோளில் போட்டுத் தூக்கிச் செல்வதை புன்சிரிப்போடு வேடிக்கை பார்ப்பது அவர் வழக்கம் ! குவிந்து கிடக்கும் ஆங்கில பதிப்புகளிலிருந்தும் ; வேறு சில அமெரிக்கப் பதிப்புகளிலிருந்தும் மாதிரிகளை அள்ளி வந்து விடும் போது நம் கதைத் தேர்வுகள் ; மொழிபெயர்ப்பு என சகலமுமே சுலபமாகி விடுகிறது என்பதால் - புஜமே கழன்று போனாலும் பரவாயில்லைடா சாமி ! என்று நான் தேட்டை போடுவது வாடிக்கை ! அதன் சமீபத்தைய பலனே க்ளிப்டன் !
க்ளிப்டனின் பின்னணியிலும் சரி, இம்மாதம் அறிமுகம் காணும் நம் லியனார்டோ தாத்தாவின் பின்னேயும் சரி - பெல்ஜிய காமிக்ஸ் படைப்புலகின் 2 ஜாம்பவான்களான டெ க்ரூட் & டர்க் தான் உள்ளனர் ! இந்த ஆற்றல்மிகு ஜோடியின் படைப்புகள் நிச்சயமாய் சோடை போகாதென்ற நம்பிக்கை எனக்குள்ளது !
ஜில் ஜோர்டான் கூட இதே போன்ற அடையாளங்களுக்குச் சொந்தக்காரரே ; அவருக்கும் கார்டூன் பாணி சித்திரங்கள் ; அவரும் ஒரு துப்பறிவாளர்; அங்கேயும் கதைக்கு மத்தியினில் humor ! ஆனால் ஜில்லாரை விட கிளிப்டன் சற்றே மாறுபட்டு எனக்குத் தோன்றுகிறார் - கதைகளில் புராதன நெடி அந்தளவுக்குத் தூக்கலாய் அடிக்காத காரணத்தால் ! So இந்தத் துப்பறியும் திலகம் நம்முடன் எத்தனை தொலைவு பயணிக்கிறார் என்பதை தொடரும் நாட்களில் அறிந்து கொள்ளும் ஆவலில் உள்ளேன் ! Fingers crossed once more !
அடுத்த மாதம் CCC என்பதால் லேசாகப் பின்சீட்டுக்குச் செல்லும் நம் ஒற்றைக்கையார் பற்றியும் இங்கே லேசாகப் பார்ப்போமே ? ஏற்கனவே நான் சொன்னபடி இந்தத் தொடரின் மிகச் சங்கடமான கதைகள் தொடரும் 2 பாகங்களின் தொகுப்பான :கறுப்பு விதவை" தான் என்பதில் துளியும் ஐயம் கிடையாது ! போட்டுத் தாக்கும் வன்முறை ; கையாளக் கஷ்டமான கதைக் களம் என இதன் ஆக்கத்தின் போது -கதாசிரியர் சீற்றமானதொரு மூடில் இருந்திருக்க வேண்டும் ! பெருசாய் சென்சார் செய்து கதையின் ஓட்டத்தைச் சீர்குலைக்கும் பாதையையும் தேர்வு செய்திடாமல் ; அப்படியே போட்டு பிய்ந்த விளக்குமாற்றுச் சாத்துக்கள் வாங்கும் ரஸ்தாவுக்குள்ளும் அடியெடுத்து வைக்காமல் இடைப்பட்டதொரு அந்தி மண்டல பாணியைக் கடைபிடிக்க முயற்சித்து வருகிறேன் ! செவ்விந்தியர்களின் இஷ்ட தெய்வம் குண்டக்க மண்டகானந்தா தான் என்னை இம்முறை காப்பாற்றியாக வேண்டும் ! (ஜெயசித்ராவிடம் 'லெப்ட்' வாங்கி விட்டு பட்டாப்பட்டி டிரௌசரொடு ஓரமாய்க் குந்தி இருக்கும் கவுண்டர் இப்போவே என் மனக்கண்ணில் முன்னும் பின்னும் ஓடிப் பிடித்து விளையாடி வருகிறார் !!!) Fingers crossed yet again !!!
இந்த அழகில் - பௌன்சர் தொடரில் இறுதி 2 ஆல்பங்கள் வேறொரு பதிப்பகத்தின் கூட்டணியில் ஏற்கனவே வெளியாகியுள்ளன ! அவற்றுக்கும் உரிமைகளை வாங்குவதா ? அல்லது 'சிவனே' என்று அந்த slot -ல் தளபதியைப் புகுத்தி விடுவதா ? என்ற ரோசனை மண்டைக்குள் !!
ஆகஸ்டில் இந்தக் களேபரங்களுக்கு மத்தியில் நமது சிரசாசனத் தலைவரும், மின்சாரக் காதலரும் தலை காட்டுகிறார்கள் - மறுபதிப்புக் கோட்டாக்களோடு ! "உறைபனி மர்மம்" இதழின் பணிகளை நேற்றிரவு பார்த்துக் கொண்டிருந்த பொழுது நிஜமாகவே என் காதுகளில் மல்லிகைச் சரங்களின் மணம் தூக்கலாய் வீசியது போலொரு பிரமை ! But இதுவும் கூட CCC வெளியாகும் ஒரு ஜாலி மாதத்தில் அந்த feel good factor -ஐ உச்சப்படுத்த உதவினால் சூப்பரே என்று நினைத்துக் கொண்டேன் ! ஸ்டாக் நிலவரங்களை நோட்டம் விட்ட பொழுது - 'நயாகராவில் மாயாவி" கையிருப்பு அதள பாதாளத்தில் இருப்பதைப் பார்த்தேன் ; மறு கணம் அந்த மல்லிகைச் சரம் காதுகளில் மட்டும் என்றில்லாது மேஜையில், நாற்காலியில் சுற்றிக் கிடந்தாலும் ஒ.கே. ஒ.கே. என்று நினைக்கத் தோன்றியது ! The man is sheer magic !
பற்றாக்குறைக்கு நியூயார்க் நகரத்தை அப்பத்தைப் பிய்த்துக் கொள்வதைப் போல அடியிலிருந்து லவட்டிச் செல்ல முயற்சிக்கும் ஆசாமியும் ஆகஸ்டில் உண்டெனும் போது கொத்துக்களுக்குப் பஞ்சமிராது ! நேற்றைக்கு இந்தக் கதையை முதன்முறையாகப் படித்துப் பார்த்த ஜூனியர் எடிட்டர் "செம சூப்பர் !!" என்று சான்றிதழ் வழங்கியுள்ளார் ! So என்றேனும் ஒரு புது வருடத்தில், திடீரென்று ஒரு 200 பக்க மொக்கை இதழில் நம் கூர்மண்டையரின் எஞ்சி நிற்கும் புதிய கதை வெளிச்சத்தைப் பார்க்க நேரிட்டாலும் ஆச்சர்யம் கொள்ளாதீர்கள் ! Fingers crossed - இம்முறையோ தமிழ் பேசும் நல்லுலகத்துக்கு அத்தகைய சோதனை புலர்ந்திடக் கூடாதே என்று !!
நாளைய பொழுது எனக்கொரு பயணப் பொழுது என்பதால் இரவில் ஆஜராக முயற்சிப்பேன் ! Have fun guys ! Enjoy the day & the week ahead !
Updates !! இன்னமுமொரு புது ஆக்ஷன் கௌபாய் கதைத் தொடருக்கும், ஒரு கார்டூன் தொடருக்கும் உரிமைகள் கிட்டியுள்ளன !
கடந்த 3.5 ஆண்டுகளாய் நம் அலுவலகத்தில் ஆர்வமாய்ப் பணி செய்து வந்த ஸ்டெல்லா மேரி நேற்றோடு விடை பெற்றுச் சென்று விட்டார் ! திருமணத்தைத் தொடர்ந்து குடும்ப இடமாற்றம் !! ஏற்கனவே பணியாற்றி வரும் Ms .துர்கா + புது வரவான Ms .வாசுகி தான் இனி front office -ல் இருப்பர் !
Caption எழுதும் போட்டிக்கான முடிவை வரும் ஞாயிறுப் பதிவில் பார்ப்போமே ?!
Updates !! இன்னமுமொரு புது ஆக்ஷன் கௌபாய் கதைத் தொடருக்கும், ஒரு கார்டூன் தொடருக்கும் உரிமைகள் கிட்டியுள்ளன !
கடந்த 3.5 ஆண்டுகளாய் நம் அலுவலகத்தில் ஆர்வமாய்ப் பணி செய்து வந்த ஸ்டெல்லா மேரி நேற்றோடு விடை பெற்றுச் சென்று விட்டார் ! திருமணத்தைத் தொடர்ந்து குடும்ப இடமாற்றம் !! ஏற்கனவே பணியாற்றி வரும் Ms .துர்கா + புது வரவான Ms .வாசுகி தான் இனி front office -ல் இருப்பர் !
Caption எழுதும் போட்டிக்கான முடிவை வரும் ஞாயிறுப் பதிவில் பார்ப்போமே ?!