வணக்கம். (நிர்மலா பெரியசாமியைப் போல வ-ண-க்-க-ம் !! என்று அழுத்தமாய்ச் சொல்ல ஆசை தான் ; but இங்கே sound effect -க்கு வழியில்லை என்பதால் அடக்கியே வாசிக்கிறேன் !!) சிரம் தாழ்த்துகிறோம் - சிந்தையில் நீச்சலடிக்கும் சந்தோஷத்தை வெளிப்படுத்த வார்த்தைகள் மாத்திரமே போதாதென்பதால் !! ஒரு அழகான வெற்றியை சாத்தியமாக்கியது உங்கள் முதல் சாகஸமெனில் ; அதனை ஒரு திருவிழாவாய் ஈரோட்டிலும், இங்கேயும் கொண்டாடியது தான் icing on the cake !! 1985-ல் ஸ்பைடரின் "சைத்தான் விஞ்ஞானி" துவக்கி வைத்த நமது 'ஆண்டுமலர்' கலாச்சாரத்தை - தொடர்ந்த வருடங்களில் நிறைய அழகான இதழ்கள் அலங்கரித்திருப்பினும், தற்போதைய LMS எனும் 'கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பாகு' ஏற்படுத்தியுள்ள impact முற்றிலும் மாறுபட்ட ரகம் என்பதில் ஐயமில்லை ! ஆனால் கோலம் எத்தனை அழகாய் வந்திருப்பினும், அதனை ரசிக்கவும், உற்சாகத்தின் உச்சியிலிருந்து முழு மனதாய்ப் பாராட்டவும் ஒரு பக்குவம் தேவை தானே ?! அதனில் துளியும் குறை வைக்காது கடந்த வாரத்தை ஒரு அசாத்தியக் காமிக்ஸ் மேளாவாய் மாற்றித் தந்த உங்கள் அனைவருக்கும் நன்றிகள் ஒரு கத்தையாய் !! You are an editor's dream folks !!! Thanks a ton...and more !!!
நிறைய இதழ்களுக்குப் பணி செய்து விட்டோம் ; ஸ்பெஷல் வெளியீடுகளுக்கு நாம் புதியவர்கள் அல்ல ; ஏகப்பட்ட சைஸ்கள் ; விலைகள் என்று வானரமாய் மரத்துக்கு மரம் தாவிய அனுபவமும் நமக்கு நிறையவே உண்டு - ஆனால் இம்முறை இந்த மெகா முயற்சிக்குள் தலை நுழைத்த போது எப்போதுமே இருந்திரா ஒரு புதுப் பளு எங்கள் தோள்களில் இருந்ததை உணர முடிந்தது ! உங்களின் எதிர்பார்ப்புகள் எனும் invisible சங்கதி தான் அது !! NBS வெளியான சமயம் - 'நாம் மீண்டு வந்ததே ஒரு பெரும் விஷயம் !' என்ற ரீதியில் ஒரு பச்சாதாப உணர்விலாவது தலை தப்பித்து விடும் என்ற நம்பிக்கை இருந்தது ! ஆனால் அதன் பின்னே ஒன்றரை ஆண்டுகளில் நாம் படிப்படியாய் ரசனைகளின் மேலோக்கிய பயணத்தில் ஆழ்ந்திருக்கும் வேளைதனில் - LMS உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு நியாயம் செய்யாவிடின் தர்ம அடி நிச்சயம் ! என்ற சிந்தனை தலைக்குள் இல்லாமலில்லை ! So LMS -ன் திட்டமிடல்கள் துவங்கிய போது - 'சிவனே' என்று 2 மெகா டெக்ஸ் வண்ண சாகசங்களோடு ரிஸ்க் ஏதும் எடுக்காமல் இந்த இதழை அமைத்து விடலாமே ! என்ற சிந்தனை எனக்குள் இருந்தது ! இன்னும் சொல்லப் போனால் தற்போதைய 'சட்டம் அறிந்திரா சமவெளி" + இன்னுமொரு புது டெக்ஸ் சாகசம் என்று கதைகளைக் கூட shortlist செய்து வைத்திருந்தேன் ! ஆனால் உங்களிடம் அது பற்றிய அபிப்ராயக் கோரலை முன்வைத்த தருணத்தில் "MIX N MATCH "-பாணியில் கதம்பமாய் ஒரு ஸ்பெஷலுக்கே எங்கள் ஒட்டு !' என்று பெரும்பான்மை வாக்களித்த பின்னர் - எனது துவக்கத்து சிந்தனையை கடாசி விட்டு combo தேடலைத் தொடங்கினோம் ! அதன் பின்னே போனெல்லி குழுமத்தின் கதைகள் நமக்கு வாகாய் அமைந்ததும், இந்த இதழ் ஒரு shape பெற்றதும் இனி லயன் 'மலரும் நினைவுகளின்' ஒரு அங்கம் தானே ?!
உங்களில் இன்னமும் முக்காலே மூன்று வீசத்தினர் LMS-ன் கதைகள் சகலத்தையும் படித்திருக்கவில்லை என்பதாலும் ; மெதுமெதுவாய் ஒவ்வொரு கதையினையும் நீங்கள் ரசித்து அசை போட்டு வருவதாலும் - LMS பற்றிய எனது review-ஐ ஒட்டு மொத்தமாய் இப்போதே, இங்கேயே எழுதி - உங்களின் சுவாரஸ்யத்துக்கு வெடி வைக்கப் போவதில்லை ! இத்தாலிய ஐஸ்க்ரீம் இதழின் முதல் 3 கதைகளை (Tex ; Dylan ; Robin) majority நண்பர்கள் கடந்து வந்து விட்டபடியால் அந்த மூன்றைப் பற்றி மட்டுமே நானும் இங்கே பதிவிடுகிறேன் ! ஆட்டத்தைத் துவக்குவது 'தல' டெக்சின் "
சட்டம் அறிந்திரா சமவெளி" எனும் போது எனது விமர்சனப் பார்வையையும் அங்கிருந்தே தொடங்கலாம் தானே ?!
|
Claudio NIzzi |
224 பக்கங்கள் ஓடும் இக்கதையின் மொத்தக் கருவையும் உள்ளங்கையில் எழுதிய பின்னே நிறைய இடம் மீதமிருக்கும் என்பதே நிஜம் ! அதுவும் கதை துவங்கிய முதல் ஐந்தாறு பக்கங்களுக்குள்ளாகவே plot என்னவென்று ஒப்பித்து விடுவது "டெக்ஸ்" எனும் இமயத்தின் மீது கதாசிரியருக்கு உள்ள அசைக்க இயலா நம்பிக்கையைப் பறை சாற்றுகிறது ! இன்னும் ஒரு படி மேலேசென்று சொல்வதாயின் கதாசிரியர் கிளாடியோ நிஸ்ஸி நிச்சயமாய் நம்மை விட ஒரு மகத்தான டெக்ஸ் காதலர் என்றே சொல்லுவேன் !! சமீபமாய் வெளியான '
நில்..கவனி..சுடு..' கூட ஒரு அதிரடி மேளா தான் என்ற போதிலும், இங்கே நாம் காண்பதோ ஒரு ஒற்றை மனிதனின் ரௌத்திர தாண்டவம் ! கதையில் மொத்தம் எத்தனை பேருக்கு டெக்சின் முஷ்டி முத்தம் பதிக்கின்றது ? என ஒரு போட்டியே நடத்தி விடும் அளவுக்கு இது ஒரு "கும்...ணங்..சத்.." படலம் ! So பெரிதாய் கதையையோ ; திருப்பங்களையோ எதிர்பாராமல் 'தல' ரசிகர்களாய் மாத்திரமே முன்வரிசையில் அமர்ந்து விசில் அடித்துப் பார்க்க வேண்டிய ஒரு action மசாலா இது ! இதற்குப் பெரும் மெருகூட்டுவது வண்ணங்களின் செழுமை என்பதில் எனக்கு சந்தேகமே கிடையாது ! அந்த பளீர் மஞ்சள் சட்டையை அப்பாவும் சரி , பிள்ளை கிட்டும் சரி கதை நெடுக போட்டு நடமாட - பின்னணி வர்ணங்கள் சகலமும் அழுத்தமான bright shades-ல் இருந்திட - ஒவ்வொரு பக்கமும் வசீகரிப்பது கண்கூடு ! So -
"சட்டம் அறிந்திரா சமவெளி" - "
ஒரு மஞ்சள் மசாலா மேளா "!! (
எங்களுக்கு அச்சு மை சப்ளை செய்திடும் விற்பனையாளர் இப்போதெல்லாம் டெக்சின் தீர ரசிகர் ஆகி விட்டார் என்பது கொசுறுச் சேதி !! )
LMS -ன் கதை # 2 தான் இத்தாலிய ஐஸ்க்ரீமின் டாப் flavour எனது பார்வையில் !
டைலன் டாக் தொடர் ரொம்ப ரொம்ப காலமாய் என் கைக்குள்ளும், காலுக்குள்ளும் சுற்றி வந்ததொரு தொடர் என்றே சொல்ல வேண்டும் ! 1985-ல் டெக்ஸ் வில்லரின் உரிமைகளுக்காக போனெல்லி குழுமத்தோடு தொடர்புகளைத் தொடங்கிய ஓராண்டுக்குப் பின்பாய் அறிமுகம் கண்ட இந்த dark தொடர் மீது எனக்கொரு லயிப்பு அந்நாட்களிலேயே இருந்தது ! ஆனால் அன்றைய நமது "ஆணழகர்" பிரிட்டிஷ் ஹீரோக்களின் மத்தியில் இந்த வத்தலான ஆசாமியோ ; சற்றே கீச்சலாய் (அந்நாள்களில்) தெரிந்த சித்திர பாணிகளோ எடுபடுமா ? என்ற தயக்கமும் நிறையவே இருந்தது ! தவிர இணைய தளம் இருந்திருக்கா அன்றைய நாட்களில் டைலனின் கதை பற்றியதொரு சரியான புரிதலோ ; அவற்றை நம்மால் சமாளிக்க முடியுமா ? என்ற ஊர்ஜிதமும் எனக்குக் கிட்ட வாய்ப்பிருக்கவில்லை ! So ஒவ்வொரு நாலைந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை டைலனின் சாம்பிள் பிரதிகளைப் புரட்டுவது ; பின்னே பரணில் போடுவது என்ற வாடிக்கை தொடர்ந்தது ! ஆனால் நம் ரசனைகளின் பரிமாணங்களைப் பற்றிய சந்தேகம் துளியும் இல்லா இத்தருணத்தில் டைலனை எப்படியும் களம் இறக்கியே தீர வேண்டுமென சென்றாண்டின் இறுதியில் தீர்மானித்தேன் ! 2014-ன் அட்டவணைக்கென போனெல்லியிடம் நாம் கொள்முதல் செய்த கதைகள் 3 ! அவற்றைத் தரம் பிரிப்பதெனில் - கதை # 1 : நிச்சயமாய் ரசிக்க முடியும் ; ஓவராக fantasy கலப்பிலா சாகசம் ; கதை # 2 : இதுவும் ஒரு ரசிக்கக் கூடிய கதை ; துளியூண்டு அமானுஷ்யத்தின் கலப்போடு ; கதை # 3 - ஏராளமாய் fantasy ; அமானுஷ்யம் ; கற்பனைகளின் எல்லைகளைத் தொடும் சங்கதிகள் கொண்டது ; புரிந்த மாதிரியும் இருக்கும் ; கேசக் கற்றைகளைக் கையோடு பிடுங்கச் செய்யவும் ஆற்றல் கொண்டது ! LMS -ல் டைலனை அறிமுகம் செய்வதென்று தீர்மானமான பின்னே, நான் முதலில் தேர்வு செய்தது ரிஸ்க் இல்லா - கதை # 2 தான் ! "
நள்ளிரவு நங்கை" என்ற பெயரோடு அதன் விளம்பரமும் கூட துவக்கத்தில் உலா வந்தது நினைவிருக்கலாம் ! ஆனால் டைலனின் கதைகளை அறிமுகம் செய்வதென்று துணிந்தான பின்னே, அதில் முழு மனதாய் இறங்கினால் போச்சு என்ற சிந்தனை மேலோங்க - சீக்கிரமே கதை # 3-ஐத் தேர்வு செய்தேன் ! அது தான் "
அந்தி மண்டலம்" ! விஞ்ஞானம் ; தெளிந்த சிந்தைகள் ; ஞானத்தின் எல்லைகள் சதா காலமும் விரிவாகிக் கொண்டே செல்லும் இந்த யுகத்திலும் கூட - '
மரணத்துக்குப் பின்னே என்ன ?' ; ஆன்மாவின் பயணம் எது நோக்கி ? என்ற கேள்விகளுக்கு நம்மிடம் பதிலேது ? So இதனைக் கையில் எடுத்துக் கொண்டு கதைகள் ; புதினங்கள் ; திரைப்படங்கள் மட்டுமல்லாது நிறையவே காமிக்ஸ் தொடர்களுமே உருவாகியுள்ளன ! டைலனின் 'அந்தி மண்டலமும்' இது போன்றதொரு முயற்சி தான் எனினும், கதாசிரியர் அதனைக் கையாண்டுள்ள விதம் அழகான (!!!) சித்திரங்களோடு ; கண்ணைப் பறிக்கும் வர்ணங்களோடு கை கோர்க்கும் போது கிடைப்பது ரொம்பவே மாறுபட்டதொரு படைப்பு ! "அபத்தம்" என்று ஒற்றை வார்த்தையில் இதனைப் புறம்தள்ளவும் முடியும் ; "என்னமோ சொல்றாங்களே....!!" என்று புருவங்களை சிந்தனையில் உயர்த்தவும் முடியும் ; "ஒ ..வாவ் ! " என பிரமிக்கவும் முடியும் ! எது எப்படி இருப்பினும், மீண்டுமொரு மழை நாளில் இதனைப் புரட்டும் ஆர்வம் மட்டும் மட்டுப்படாது என்பது என் அபிப்ராயம் ! ஹாரர் கதைகள் உருப்படியாய் நம்மிடம் இல்லையே என்பது ஒரு குறையாக இருந்து வந்த நிலையில் டைலன் அதனை நிச்சயம் நிவர்த்தி செய்வார் என்றே நினைக்கிறேன் ! (
டைலனின் தொடரும் சாகசங்கள் வண்ணத்திலா - black & white போதுமா folks ?) இங்கே ஒரு wow சேதியும் கூட !! டைலன் டாக் இத்தாலிய ரசிகர் மன்ற உறுப்பினர்கள் ஒன்று திரண்டு அவர்களது ஆதர்ஷ டைலனின் கதை இடம்பெற்றிருக்கும் நமது LMS புக் # 1-ல் 75 பிரதிகள் கோரியுள்ளனர் !!! மர்ம மனிதன் மார்டின் ரசிகர் மன்றம் இப்போது விபரம் கோரி மின்னஞ்சல் அனுப்பியுள்ளனர் !!
LMS -ன் வர்ணக் கதைகளில் # 3 - CID ராபினின் சாகசம் ! நெடியதொரு ஓய்வுக்குப் பின்னே திரும்பும் ராபின் தன ஆதர்ஷக் களமான நியூ யார்க்கிலிருந்து வெளியேறி - கிராமம் தேடிச் செல்லும் போதே இது high voltage ரக சாகசமாக இராதென்பது புரிகிறது ! அமைதியான கதை ; ரிபோர்டர் ஜானியின் பாணியில் இடியாப்ப நுணுக்கங்கள் இல்லா சீரான ஓட்டம் என நான் ரசித்தேன் இக்கதையை ! நண்பர்களில் சிலர் plot ரொம்பவே யூகிக்கக் கூடிய விதமாய் இருந்ததென்று குறைபட்டிருந்தனர் ; ஆனால் மொத்தமே ஐநூறோ ; ஆயிரமோ மட்டுமே வசிக்கும் ஒரு குக்கிராமத்தில் நிறைய முடிச்சுகளை இணைப்பது இயல்பாய் இராதே என கதாசிரியர் நினைத்திருக்கலாம் ! தவிரவும் ஒவ்வொரு நிஜ புலனாய்வின் பின்னணியிலும் நாம் கதைகளில் ; திரைகளில் பார்த்து ரசிப்பது போன்ற த்ரில் நிகழ்வுகள் ஏராளமாய்க் குவிந்து கிடக்குமா என்பது சந்தேகமே ! So யதார்த்தத்தின் பிரதிபலிப்பான இக்கதைக்கு 6/10 போடலாம் என்பதே எனது எண்ணம் ! வண்ணக் கலவை நெருடலாய் இதனில் இருந்ததை நானும் ஏற்றுக் கொள்கிறேன் ; ஆனால் அதனில் நமது பங்கு ஏதுமில்லை ! போனெல்லி தங்களது ராட்சச கதைகளின் வைப்பறையில் ராபினின் இக்கதைக்கான டிஜிட்டல் பைல்களை தேடி எடுக்க முடியவில்ல என கை விரித்து விட்டார்கள் கடைசித் தருணத்தில் ! So அவர்களே அச்சான இதழ் ஒன்றினை ஸ்கேன் செய்து அந்த பைல்களை நமக்கு அனுப்பித் தந்தார்கள் ! அவற்றை இங்கு நாம் லேசாக பட்டி-டின்கெரிங்க் பார்த்தாலும் கூட - ஒரிஜினலின் அழுத்தம் இதனில் கிடைக்காது போனது ! ராபினின் கதை # 100 & 200 மட்டுமே வண்ணத்தில் என்பதால் - கதை - 200-ஐ இதன் இடத்தில் அனுப்பவா ? என போனெல்லியிலிருந்து கேட்டார்கள் ; ஆனால் மீண்டுமொரு இத்தாலிய மொழிபெயர்ப்பிற்கு அவகாசம் இல்லாத வேளையில் இந்தக் கோப்புகளைக் கொண்டே தொடர வேண்டிய நெருக்கடி ! ராபினை b&w-ல் வெளியிட்டு விட்டு, அதன் பதிலாய் மார்டினையோ ; ஜூலியாவையோ வண்ணத்தில் வெளியிட்டுப் பார்ப்போமா ? என்ற சிந்தனை எழுந்த போதும் சிக்கல்கள் தொடர்ந்தன ! அதே மொழிபெயர்ப்புப் பிரச்னைகள் ஒருபக்கமிருக்க மார்டின் # 100 & ஜூலியா # 100 கதைகளின் சித்திர பாணிகள் செம சொதப்பலாய் இருந்தன ! So வேறு மார்க்கமின்றி தொடர்ந்தோம் ! Sorry guys !
இப்போதைக்கு LMS பற்றிய எனது பார்வையை இத்தோடு நிறுத்திக் கொண்டு - ஈரோடில் சென்ற சனிக்கிழமை நடந்த நண்பர்களுடனான குதூகலச் சந்திப்பைப் பற்றியும் புத்தக விழாவின் விற்பனை பற்றியும் பார்ப்போமே ? !
ஆகஸ்ட் 1-ஆம் தேதி மாலைக்குள் இங்கே நம் அலுவலகத்தின் திருவிழாக் கோலத்தை முழுமையாய் ரசித்த பின்னே ; உங்கள் LMS பிரதிகளை கூரியருக்கு அனுப்பி விட்டு ஈரோட்டுக்கு நானும் ஜூனியரும் ரயில் ஏறினோம். அரங்கம் நாங்கள் தங்கி இருந்த ஹோட்டலின் வாசலில் தான் என்பதால் சனிக்கிழமை காலையில் 10-30 மணிவாக்கில் அங்கே சென்றால் நமக்கு முன்பாகவே ஈரோட்டு நண்பர்கள் மட்டுமல்லாது வெளியூர் நண்பர்கள் மட்டுமல்லாது ; வெளிநாட்டு நண்பரும் அங்கே உற்சாகமாய், ஆஜராகி நிற்பதை காண முடிந்தது ! பிரான்சில் இருந்து வந்திருந்த நண்பர் ராட்ஜா மறு தினம் தன மகளின் பரத அரங்கேற்றத்தை பாண்டிசேர்ரியில் வைத்திருந்த நிலையிலும், இங்கு நண்பர்களை சந்திக்கும் பொருட்டு புறப்பட்டு வந்திருந்ததைக் கேட்டுத் தெரிந்து கொண்ட போது இந்த வாசகக் குடும்பத்தின் உறவுகளின் ஆழத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது ! 'பளிச்' மஞ்சள் டி-ஷர்டில் பெரியதொரு வேதாளர் படத்தோடு முன்வந்து தன்னை அறிமுகம் செய்து கொண்ட நண்பர் மாயாவி சிவா (!!) "மின்னும் மரணம்" முன்பதிவுக்கு உதவும் விதமாய் ஒரு டைகர் படம் கொண்ட பிரிண்ட் அவுட் + ஒரு பெரிய ப்ளெக்ஸ் banner சகிதம் அசத்தினார் !
அரங்க வாசலிலேயே நண்பர்கள் ஒவ்வொருவராய் சேர்ந்து கொள்ள, உள்ளே நம் ஸ்டாலுக்குச் சென்றோம் ! இந்தாண்டு நமது லயன் ; முத்து காமிக்ஸ் இதழ்களோடு - ஆங்கில காமிக்ஸ் ரகங்கள் சிலவற்றையும் வாங்கி நமது ஸ்டாலில் விற்பனைக்கு அடுக்கி வைத்திருந்தோம் ! ஒவ்வொரு புத்தக விழாவின் போதும் விறு விறு வென்று நம் ஸ்டாலுக்குள் நுழைந்து விட்டு - "இங்கிலீஷில் காமிக்ஸ் இல்லையா ?" என்ற கேள்வியோடு நடையைக் கட்டும் 'ஆங்கில ஆர்வல பெற்றோர்களின்' தேர்வுக்கென இம்முறை இந்த முயற்சி ! லக்கி லூக் ; மதியில்லா மந்திரியார் + ஆர்ச்சி (அமெரிக்க ஆர்ச்சி !!) காமிக்ஸ்கள் நம் ஸ்டாலின் ஒரு கோடியை ஆக்கிரமித்திருந்தன ! (
லக்கியார் மாத்திரம் கொஞ்சமே கொஞ்சமாய் விற்பனையாகின ; பாக்கி இதழ்கள் நம்மைப் பார்த்துப் புன்சிரிப்பை மாத்திரமே உதிர்க்கின்றன என்பது வேறு விஷயம் !! )
நம் ஸ்டாலில் LMS பிரதிகள் பண்டல்களில் காத்திருந்த போதிலும், அவை அதுவரை வெளியே எடுத்திருக்கப்படவில்லை! இனியும் தாமதம் வேண்டாமென நான் கையில் கொண்டு சென்றிருந்த gift wrapped LMS பிரதியினை நண்பர்களின் மத்தியில் பிரித்து வெளியெடுக்க hardbound கவர் + இதழின் அழகான பருமனில் அனைவரும் மெய்மறந்து போனதைக் காணும் அதிர்ஷ்டம் எங்களுக்குக் கிட்டியது ! தினுசு தினுசான செல்போன் காமெராக்களும், வீடியோ காமெராக்களும் பளிச் பளிச் என்று ஒளி உமிழ நம் ஸ்டாலின் முன்பாக நண்பர்களின் திரள் கூடிக் கொண்டே போனது ! காலை 11 மணி தான் விழாவின் துவக்க நேரம் என்பதால் பார்வையாளர்களின் வருகை இன்னும் துவங்கி இருக்கா நிலைதனில், இதர ஸ்டால்களின் மிகச் சன்னமான கூட்டமே ; ஆனால் இங்கு நமது ஸ்டாலில் நிமிடத்துக்கு நிமிடம் கூடிச் சென்ற நண்பர்களின் எண்ணிக்கையும், கரைபுரண்டோடும் உற்சாகமும், அக்கம்பக்கத்துப் புருவங்களை உயரச் செய்தன ! பள்ளிகளிலிருந்து வருகை தந்திருந்த சிறார்கள் நம் ஸ்டாலைத் தாண்டிச் செல்லும் போது - என்னமோ ; ஏதோவென மலங்க மலங்க வெறித்துப் பார்த்துக் கொண்டே சென்றதையும் பார்க்க முடிந்தது ! ஆளுக்கொரு LMS பிரதியை கையில் ஏந்திக் கொண்டு பக்கங்களைப் புரட்டுவது ; இது நாள் வரை இங்கு வெறும் பெயர்களாய் மாத்திரமே இருந்து வந்த தோழர்களோடு மெய்மறந்து அரட்டையடிப்பது ; போட்டோக்கள் எடுத்துக் கொள்வதென கொஞ்ச நேரத்தில் அந்த இடமே ஒரு காமிக்ஸ் சரணாலயமானதென்று சொன்னால் அது மிகையாகாது !
கொஞ்ச நேரத்துக்கெல்லாம் "ஸ்பைடர் எப்போ ? " ; "இரத்தப் படலம் எப்போ ?" ; "புதுசாய் என்ன வருது ?" ; "கிங் ஸ்பெஷல் இதழில் யார் ஹீரோ ?" ; "மில்லியன் ஹிட்ஸ் எப்படி இருக்கும் ?" என்ற ரீதியில் கேள்விகள் படலம் துவங்கியது ! நமது ஸ்டாலின் மறு பக்கமிருந்தது நடைபாதை என்பதால் அங்கே ஓரம்கட்டிட அரட்டை அதகளமானது !! LMS பற்றாதென "மின்னும் மரணம்" மறுபதிப்பும் அறிவிக்கப்பட்டிருந்ததால் நண்பர்களின் உற்சாகத்தின் அளவுகள் விண்ணைத் தொடும் நிலையில் இருப்பதை நன்றாகவே உணர முடிந்தது ! 'அதற்கும் hardcover தானே ?' ; 'இரத்தக் கோட்டை' 5 பாகங்களையும் மீள்பதிப்பு செய்து விடுங்களேன்' என்ற ரீதியில் வேண்டுகோள்களும், கேள்விகளும் டெக்ஸ் வில்லரின் தோட்டாக்களைப் போல 'விஷ்.'விஷ்' என்று எனது மொழு மொழு முன்மண்டையைத் தாண்டிப் பறந்து சென்றன ! நான் விடிய விடிய விளக்கங்கள் சொன்ன பிறகும் "இரத்தப் படலம் வண்ணத்தில் எப்போது சார் ?" என்ற கேள்வியை உடும்புப் பிடியைப் பிடித்து நின்றார் நமது இரும்புக்கரத்தார் !! போராட்டக் குழுத் தலைவரோ அமைதியாய் வேடிக்கை பார்த்து நின்றவர் இது வரை நமது இதழ்கள் பற்றிய செய்தித் தாள் குறிப்புகள் ; நமது சுவாரஸ்யமான பதிவுகள் என நிறைய printout எடுத்து அதனை ஒரு புக்காகவே பைண்டிங் செய்து கொண்டு வந்து காட்டி விட்டு, 'சிங்கத்தின் சிறுவயதில்' தொகுப்பு எப்போது ? எனக் கேள்வியினை முன்வைத்தார் ! அது என்றைக்கு முடிகிறதோ - அன்று ஒரு புக்காகப் போட்டு விடுவோம் என்று நான் பதிலளிக்க குழுத்தலைவர் போராட்டத்தைக் கைவிடுவதாக ஒப்புக் கொண்டார் ! வாழைப்பூக்கள் தப்பின !! இம்முறை நம்மை சந்திக்க வருகை தரும் நண்பர்களின் பெயர்கள் சகலத்தையும் குறித்துக் கொண்டாக வேண்டும் ; எனது காமெராவில் படங்கள் எடுத்தாக வேண்டும் என்றெல்லாம் நினைத்திருந்தேன் ; ஆனால் நண்பர்களின் உற்சாகத்தின் மத்தியினில் அத்தனையும் காற்றில் போயே போச்சு ! சேலம் நகரிலிருந்து வருகை தந்திருந்த நண்பர்கள் குழு - சேலம் ஸ்டீலின் பிரத்யேகத் தயாரிப்பான gift set ஒன்றினை என் கையில் திணிக்க ; சேலம் நகரிலிருந்து ஆண்டுதோறும் நம்மை சந்திக்கும் ஒரு அற்புதக் காமிக்ஸ் ஆர்வக் குடும்பம் 4 பாக்கெட் இனிப்புகளை தந்து அந்த இடத்தையே இன்னும் இனிப்பாக்கினார்கள் ! வாசக நண்பரும் , அவர்தம் தமக்கையும் நமது காமிக்ஸின் தீரா அபிமானிகள் ; இருப்பினும் அவர்களையும் விட ஒருபடி மேலே சென்று அவர்களது தந்தையார் மிகுந்த கரிசனத்தோடு நம்மை நலம் விசாரித்ததும், நமக்கு நல்லறிவுரைகள் சொன்னதும் மறக்க இயலா நிமிடங்கள் ! உங்களின் ஆசீர்வாதங்கள் எங்களை என்றும் வழிநடத்தும் !!
|
Salem Steel..!! |
தூரங்களைத் துளியும் பொருட்படுத்தாது எங்கெங்கிருந்தோ வருகை தந்திருந்த நண்பர்கள் குழாம் சந்தோஷமாய் தோளோடு தோள் சேர்த்து நின்றது நிச்சயமாய் ஒரு மறக்க இயலா அனுபவமே ! மதியத்துக்கு மேலே மீண்டும் அரட்டை களை கட்ட, மாலை வரை தொடர்ந்தது ! திருப்போர் நகரிலிருந்து நண்பர் சிபி அன்று மாலை வர இருப்பதாகவும், அன்றைய தினம் அவரது பிறந்த நாள் என்பதால் அங்கேயே கொண்டாடி விடுவோமா ? என நண்பர்கள் வினவ - அதற்கான ஏற்பாடுகள் துவங்கின ! அந்தி சாயும் சமயம் நண்பரும் வந்திட, அரங்கின் பின்னே இருந்த மரத்தினடியில் அவரை அதிரடியைக் கேக் வெட்டச் செய்தனர் ! நண்பருக்கு சந்தோஷத்தில் வார்த்தைகள் வரவில்லை என்பதை அருகில் நின்ற என்னால் புரிந்திட முடிந்தது ! காமிக்ஸ் எனும் ரசனையின் புதல்வர்கள் என்ற ஒரே அடையாளத்தை மட்டும் சுமந்து கொண்டு ; எவ்வித எதிர்பார்ப்புகளுமின்றி ; எங்கெங்கோ பிறந்து, வளர்ந்த 'முழு நிஜார் பாலகர்களால்' இத்தனை சந்தோஷத்தை பரிமாறிக் கொள்ள முடிவதை மாறா வியப்போடு நான் ரசித்தேன் ! Privileged to be a part of this family folks !!
மறக்க இயலா ஒரு நாளின் இறுதியில் விடைபெறும் வேளை நெருங்கும் முன்பாக ஈரோட்டில் 2015-க்கான அறிவிப்பு என்னவென்று நண்பர்கள் பட்டாளம் ஒட்டுமொத்தமாய் மறியல் செய்ய ; 'பெவிகால் பெரியசாமி' அவதாரத்தை சற்றே தளர்த்திடும் அவசியம் நேர்ந்தது ! 2015-ல் இரட்டை TEX மெகா சாகசங்கள் (தலா 336 பக்கம் !!) வரக்காத்திருக்கும் ரகசியத்தை (?!) போட்டு உடைத்தேன் - 'தல' ரசிகர்களின் உற்சாகக் கூக்குரல்களுக்கு மத்தியினில் ! டைகர் ரசிகர்களும் தங்கள் தளபதிக்கொரு "மின்னும் மரணம்" காத்திருக்கும் சந்தோஷத்தில் பெருந்தன்மையாய் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர் !! அன்றிரவு நானும், ஜூனியரும் ரூமுக்குத் திரும்பிய போது என் முதுகும், காலும் பிசாசாய் வலித்த போதும், மண்டைக்கு அது துளியும் பதிவாகவில்லை ! ஒருவித மிதக்கும் நிலையில் இருந்தது போன்றதொரு உணர்வு !"சந்தோஷம்" எனும் வார்த்தைக்கு ஒவ்வொருவரின் அகராதிகளிலும் வெவ்வேறு பொருள்கள் இருப்பது இயல்பே ; சூழல்களுக்கேற்ப அவை மாறும் என்பதெல்லாம் புரிகிறது தான் ! ஆனால் நாம் நேசிக்கும் இந்த சித்திரக்கதை உலகிற்கு சந்தோஷத்தை உற்பத்தி செய்திடும் ஆற்றல் இத்தனை கணிசமாய் உள்ளதென்பதை மீண்டும் ஒருமுறை உணர முடிந்த போது - இத்துறையினில் கால் பதிக்கும் ஒரு வாய்ப்பை நமக்குத் தந்த கடவுளுக்கு ஒரு மௌன நன்றியை சொல்வதைத் தவிர வேறு எதுவும் தோன்றவில்லை !
|
அடுத்த தலைமுறைகளும் மெள்ள மெள்ள நம் உலகினுள் வரும் மாயாஜாலம் நிகழாது இல்லை ! |
நண்பர்களின் ஆரவாரங்கள் என் காதில் இன்னமும் ஒலித்துக் கொண்டிருக்கும் போதிலும், மண்டைக்குள் அடுத்த மாதத்து இதழ்களின் பணிகள் பற்றிய அலாரம் அடிக்கத் துவங்கிடும் போது தான் புரிகிறது - LMS இனி நம் முதுகுக்குப் பின்னுள்ளதொரு மைல்கல் என்று ! தீராப் பசி கொண்ட நம் காமிக்ஸ் குடும்பத்திற்கென புதிதாய் இலக்குகளும், புதிதாய் பயணங்களும் காத்துள்ளன என்பதால் fresh guard எடுத்துக் கொண்டு ஆட்டத்தைத் தொடர வேண்டியது அவசியம் அல்லவா ? அடுத்த பந்தில் கிளீன் போல்ட் ஆனால் சதம் அடித்த சந்தோஷங்கள் வெறும் நினைவுகளாக மாத்திரமே இருந்திடும் என்பதால் இன்றைய தினத்தின் இந்த உத்வேகத்தையும், உற்சாகத்தையும் மாத்திரமே தக்க வைத்துக் கொண்டு இன்னும் வேகமாய் நடை போட விழைவோம் !! அடுத்த இலக்காய் '
மில்லியன் ஹிட்ஸ் ஸ்பெஷல்' வெகு வெகு விரைவில் காத்திருப்பதால் எங்களின் டீமுக்கு ஸ்டார்ட் மியூசிக் தான் மறுபடியும் !!
மீண்டும் சந்திப்போம் நண்பர்களே...!! ஒரு மறக்க இயலா அனுபவத்தை நல்கியமைக்கு என்றென்றும் எங்கள் நன்றிகள் !! We feel truly blessed & humble !!
Before I wind up சில happy சேதிகளும் !!
- டைலன் டாக் இத்தாலிய ரசிகர் மன்ற உறுப்பினர்கள் ஒன்று திரண்டு அவர்களது ஆதர்ஷ டைலனின் கதை இடம்பெற்றிருக்கும் நமது LMS -ல் 75 பிரதிகள் கோரியுள்ளனர் !!!
- மர்ம மனிதன் மார்டின் ரசிகர் மன்றம் இப்போது விபரம் கோரி மின்னஞ்சல் அனுப்பியுள்ளனர் !!
- ஈரோட்டில் முதல் இரண்டு நாட்களின் நமது LMS 170 பிரதிகள் விற்பனையாகியுள்ளன !!
- இது வரையிலான மின்னும் மரணம் முன்பதிவு எண்ணிக்கை 110-ஐத் தொட்டுள்ளது ! ஏழே நாட்களின் பதிவுகள் என்ற முறையில் great going !!!
- நமது ஈரோடு விற்பனையாளர் LMS-ல் 100 பிரதிகளுக்கு ஆர்டர் கொடுத்துள்ளார் !!
- LMS வெளியான தினத்தன்று நமது Worldmart தளத்தின் பார்வைகள் எண்ணிக்கை 1093 ! இங்கு நம் பதிவுப் பக்கத்தில் 3100 !!
- கடந்த பதிவிற்கு இது வரை கிட்டியுள்ள பார்வைகளே நமது record என்று நினைக்கிறேன் - இப்போது வரையிலும் 6430 !
P.S : எப்போதும் போலவே, ஈரோட்டில் நமக்கு அற்புதமாய் ஒத்தாசைகள் செய்து வரும் அத்தனை நண்பர்களுக்கும் ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ் !!