Powered By Blogger

Sunday, June 29, 2014

ஒரு காமிக்ஸ் மண்டலம் !

நண்பர்களே,

வணக்கம். இப்போதெல்லாம் மேஜையில் வறுத்த கறியும் பீன்சும் இருக்கிறதா என்று பார்க்கத் தோன்றுகிறது ; வட்ட வட்டமாய் இட்லிக்களை அங்கே பார்க்கும் போது 'உர்ர்' என்ற முறைப்பு தான் எழுகிறது ! பீரோவைத் திறந்தால் மஞ்சளில் சட்டையுள்ளதா ? ; பச்சையில் கால் குழாய் உள்ளதா ? என்று ராமராஜன் பாணியில் கண்கள் தேடலை நடத்துகின்றன! ஆபீசுக்கு 'அக்கடா'வென வசூலுக்கு வரும் ஆசாமிகளிடமோ  ஆவேசமாய்ப் பேச திடீர் திடீரென  'பஞ்ச்' டயலாக்குகள் மண்டைக்குள்ளே உதிக்கின்றன ; அவசரம் அவசரமாய் சுதாரித்துக் கொண்டு வந்தவர்களை குசலம் விசாரித்து அனுப்பி வைத்த வண்ணம் உள்ளேன்  !  நடுச்சாமங்களில் பிரேசிலின் ஆடுகளங்களில் ஒரு உருண்டைப் பந்தை துரத்திக் கொண்டு 22 பேர் மாங்கு மாங்கென்று ஓடுவதை கண் விழித்துப் பார்க்கும் போதும், எனக்குள் பதிவாவதோ நமது டைப்செட்டிங் பணியாளர்களைத் தேடி மைதீன் ஓடி வரும்  தொடர் ஓட்டம் தான் ! கொஞ்ச நேரம் மண்டைக்குள்ளே சவடாலான கௌபாய் பாஷை ஓட ; பிறிதொரு வேளைதனில் உயர்மட்ட புராதன ஆங்கிலம் ஒலிக்க ; இன்னொரு சமயமோ  'லோக்கல்' காமெடி டிராக்கில் நானே பேசிக் கொள்ள  - எனக்கே என் மண்டைக்குள் அம்மன்கோவில் திருவிழாவின் மைக் செட் ஓடுவது போன்றதொரு பிரமை ! இவை அத்தனையும் 'பீலா பாண்டி'யின் பீற்றல்களாய் தோன்றக்கூடியவை என்பது நன்றாகவே புரிகின்ற போதிலும் வாயை மூடிக் கொண்டிருக்க முடியவில்லை தான் ! LMS பணிகளின் உச்சக்கட்டங்கள் அரங்கேறி  வரும் இந்நாட்களில் எங்கள் உலகங்கள் முற்றிலுமாய் ஒரு காமிக்ஸ் மண்டலமாய் உருமாறி விட்டதன் பிரதிபலிப்பை உங்களிடம் பகிர்ந்திடாமல் இருக்க முடியுமா - என்ன ? But first things first என்பதால் - நாளைய தினம் இங்கிருந்து புறப்படக் காத்துள்ள ஜூலையின் 4 இதழ்களைப் பற்றிப் பேசி முடித்துவிடுவோமே ?

எப்போதோ - எந்த மாமாங்கத்திலோ உருவாக்கியதைப் போன்று நினைவில் நிழலாடும் (மறுபதிப்பு) லக்கி லூக்கின் "பூம் பூம் படலம்" இதழின் ராப்பரை உங்கள் கண்களில் காட்டினேனா - இல்லையா என்பது கூட ஒழுங்காக நினைவில்லை !  இதோ - ஒரிஜினலை சிற்சிறு வண்ண மெருகூட்டல்களோடு நாம் adopt செய்து கொண்டுள்ள அட்டைப்படத்தின் முதல் பார்வை ! 

பின் அட்டை  சற்றே காலியாய் இருப்பதாய் தோன்றினால் LMS -ன் பணிச் சுமைகளைக் காரணம் காட்டித் தான் நான் தலை தப்பித்தாக வேண்டும் ! நமது லயனின் 11-வது ஆண்டுமலராய் 1995-ல் வெளியான இந்த இதழ் உங்களில் நிறையப் பேரின் சேகரிப்பில் இருக்கும் தான் ; ஆனால் ரெட்டை வண்ணங்களில் கொஞ்சம் ; black & white -ல் கொஞ்சமென நியூஸ்பிரிண்டில் பல்லைக் காடியதொரு கதையை அழகாய் முழு வண்ணத்தில் ரசிப்பது ஒரு இதமான அனுபவமே என்று தோன்றியது ! இதோ உட்பக்கங்களின் ஒரு ட்ரைலரும் கூட !  

ஒரிஜினலாய் 1995-ல் வெளியான 'பூம்-பூம் படலம்' இதழ் வண்ணத்தில் மிளிராது போனால்  கூட - அந்நாட்களது filler pages களைப் பார்க்கும் போது சுவாரஸ்யமாய் இருந்தது ! ஹாட்லைன் ; மாதம் ஒரு ஹீரோ ; லயன் ஸ்பாட்லைட் ; வாசகர் கடிதம் ; வாசகர் ஹாட்லைன் ; மாதம் ஒரு வாசகர் ; இன்ஸ்பெக்டர் டேஞ்சரின் கிரைம் க்விஸ் ; புக் மார்க்கெட் ; சிரிப்பின் நிறம் சிகப்பு ; என்று புரட்ட புரட்ட நிறையவே சமாச்சாரங்கள் அந்நாட்களில் இருந்ததைப் பார்க்க முடிந்தது !! அவற்றுள் ஏதேனும் ஒரு பகுதிக்கு ஒரு இரண்டாம் இன்னிங்க்ஸ் வாய்ப்புத் தருவோமா என்று நான் நினைத்திருந்த வேளையில் நண்பர் அஜய் சாமியிடமிருந்து வந்திருந்தது ஒரு படைப்பு ! பாருங்களேன் இன்றைய வாசகர் ஸ்பாட்லைட் !! 

Artwork : Ajay Sami. Bengaluru
ஜூலையின் இன்னுமொரு அறிமுகமாகியிரா இதழின் preview அடுத்ததாக ! ஆண்டாண்டு காலங்களாய் விளம்பரமாய் மாத்திரமே இருந்து வந்துள்ள நமது இரவுக் கழுகாரின் solo சாகசமான "காவல் கழுகு" தான் அந்த இதழ் # 2 ! 110 பக்கங்களில் நிறைவுறும் ஒரு முழு நீள black & white சாகசத்தில் நமது டாப் ஸ்டாரைப் பார்த்து ஏக காலமாகி விட்டதல்லவா ? கடுகு சிறுத்தாலும் காரம் தூக்கலாகவே இருக்குமென்பதை உணர்த்தக் காத்திருக்கும் இந்த இதழின் அட்டைப்படம் இதோ !


ஒரு ஆறேழு ஆண்டுகளுக்கு முன்பாகவே நமது ஓவியர் தீட்டிய இந்த ஓவியத்தோடு - இந்த இதழை சின்ன சைசில் - நியூச்ப்ரிண்டில் வெளியிடும் பொருட்டு ரூ.15 விலையில் அட்டைப்படமெல்லாம் அச்சிட்டு வைத்திருந்தோம் அந்நாட்களில் ! இன்னமும் நமது கிட்டங்கியில் துயில் பயிலும் அவற்றைத் தூக்கிக் கடாசி விட்டு - அதே டிசைனை தற்போதைய பெரிய சைசுக்கு மாற்றங்கள் செய்து தயாரித்துள்ளோம் ! So இரு முறை - வெவ்வேறு அளவுகளில் அச்சானதொரு ராப்பர் என்ற "பெருமை" இதற்குச் சேரும் !!  !! இதோ உட்பக்கத்தின் ஒரு teaser கூட...  "நில் கவனி..சுடு..." பாணியிலான ஓவியங்கள் இம்முறை கிடையாதென்பதை நிரூபித்திட !!

The Book Fair Special என்ற நாமகரணத்தோடு வரக் காத்திருக்கும் இரட்டை இதழ்களின் மறு பாதியான "ஆத்மாக்கள் அடங்குவதில்லை" & ஜூலையின் இதழ் நம்பர் 4 - "விரியனின் விரோதி"  பற்றிய ட்ரைலர்களை  ஏற்கனவே நாம் பார்த்தாகி விட்டதால் நாளைய தினம் இதழ்கள் நான்கும் உங்களைத் தேடித் புறப்படும் என்ற சேதியோடு LMS -க்கு 'ஜம்ப் பண்ணுகிறேன் !

இத்தாலிய ஐஸ்க்ரீமின் வண்ணப் பக்கங்கள் சகலமும் (ஹாட்லைன் நீங்கலாக) அச்சாகி விட்டன !! டைலன் டாகும் டெக்சுக்கு துளி சளைக்காமல் வண்ணத்தில் அதகளம் செய்திருக்கிறார் !! கலரில்  பக்கத்துக்குப் பக்கம் டைலன் டாக் செய்யும் அமர்க்களத்தைக் கொஞ்சமாய் நீங்களும் தான் பாருங்களேன் :
கதையைப் படித்தான பின்னே கொஞ்ச நேரத்துக்கு மலங்க மலங்க முழிக்கப் போகிறீர்கள் ; பர பர வென்று தலையைச் சொறிந்து விட்டு கதைக்குள் இன்னொரு முறை மூழ்கப் போகிறீர்கள் !! எது மாதிரியும் இல்லாததொரு புது மாதிரி என்பதால் LMS -ன் புதிர் package -ல் இதற்கு முதலிடம் ! இந்தாண்டில் வரக் காத்திருக்கும் 3 டைலன் கதைகளும் ஒன்றுகொன்று மாறுபட்டு  விதம் விதமாய் இருப்பதால் - இந்தத் தொடரை - "அமானுஷ்யம்" ; " மர்மம்" ; திகில்" ; என்று குறிப்பிட்டதொரு genre க்குள் அடைப்பது சிரமம் என்றே தோன்றுகிறது ! எது எப்படியோ - ஒன்று மட்டும் நிச்சயம் : போனெல்லி குழுமத்தின் இரு dark நாயகர்களை (டைலன் + மேஜிக் விண்ட்) கிட்டத்தட்ட ஒரே தருணத்தில் பரிச்சயம் செய்து கொள்ளக் கிடைத்திருக்கும் இந்த நாட்கள் ரொம்பவே வித்தியாசமாய் இருக்கப் போவது உறுதி

போனெல்லியின் இன்னுமொரு வண்ணப் புதல்வரான CID ராபினின் கதையும் கூட அச்சாகி முடிந்து விட்டது ! துப்பறியும் நாயகர்களின் பஞ்சம் தலைவிரித்தாடும் இத்தருணத்தில் ராபினின் மறு வருகை நிச்சயமாய் அந்தக் குறையைத் தணிக்கும் என்று தோன்றுகிறது ! சமீபமாய் நான் ரசித்துப் படித்ததொரு smooth & crisp கதையிது !  ஏற்கனவே சொன்னது போல - வர்ணங்கள் வெகு subtle ஆக - பளீர் பளீர் என்று டாலடிக்காது இருக்கப் போகும் இக்கதையின் சின்னதொரு teaser இதோ :


இத்தாலிய ஐஸ்க்ரீமின்  black & white கதைகளில் மார்டின் முடிந்து என் மேஜைக்கு வந்து ஒரு வாரமாகிறது ! ஜூலியா தொடரும் நாட்களில் முடிந்து விடுவார் என்பதால் எஞ்சி இருக்கும் கிராபிக் நாவலில் மாத்திரமே பணிகள் காத்திருக்கும் !! ஜூலை 10-12க்குள் அதனையும் முடித்து விட்டால் - பைண்டிங் பணிக்குள் தலை நுழைக்கத் தயாராகி விடுவோம் ! பைண்டிங் பற்றிய பேச்சினில் இருக்கும் போது - நேற்று நான் உணர்ந்ததொரு விண்ணில் பறக்கும் உணர்வைப் பற்றியும் பீற்றி முடித்து விடுகிறேனே - ப்ளீஸ் ? ! LMS -ன் அட்டைப்படப் பணிகள் துவங்கி ; டிசைனிங் வேலைகள் ஓடிக் கொண்டுள்ள நிலையில் -  750+ பக்க இதழுக்கு முதுகின் கனம் எவ்வளவு இருந்திடும் ? ; அதற்கென ஒதுக்க வேண்டிய இடைவெளி எவ்வளவு ? என்று கண்டறிய ஒரு சாம்பிள் பிரதியை தயாரித்துப் பார்த்தோம் ! சத்தியமாய்ச் சொல்கிறேன் - இதழின் திண்மையைப் பார்த்த போது மயிர்கால்கள் சகலமும் எழுந்து நிற்பதை உணர முடிந்தது !! திகைத்துப் போய் விட்டோம் என்பது ஒரு understatement ! ஏற்கனவே 6 மாதங்கள் முன்பே ஒரு மாதிரியை போட்டுப் பார்த்ததெல்லாம் நிஜமே ; ஆனால் watching the real thing felt incredible !! பெல்ஜியக் கதைகளையும் இதே சைசில் - இதே இதழுக்குள் நுழைத்திருந்தால்  - தலை சுற்றிப் போய் இருக்கும் ; அதே சமயம் படிக்கும் போது கைகளின் வலிமைக்கும் ஒரு சரியான சவாலாய் இருந்திருக்கும் ! தற்சமய 750+ பக்க இதழைச் சுமக்கவே நண்பர் பரணிதரன் போன்ற 'ஜாம்பவான்கள்' நிறையவே பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டி இருக்குமென்பது உறுதி !!

நேற்று நான்  உணர்ந்த பரவசத்தை மட்டும் ஆகஸ்ட் 2-ஆம் தேதி நீங்களும் உணர சாத்தியமாகிடும் பட்சத்தில் எங்களது இந்த 120 நாள் பிரயத்தனங்களுக்கு ஒரு அர்த்தம் கிடைத்து விடும்  !! "எல்லாம் நலமாய் நடந்தேற ஆண்டவா துணை செய் !!" என்ற பிரார்த்தனை எங்கள் உதடுகளில் எப்போதையும் விட இப்போது பலமாய் ஒலிக்கிறது ! அப்புறம் கிட்டத்தட்ட 4 மாதத்து பட்ஜெட்டில் இந்த LMS ஒற்றை இதழ் மாத்திரமே தயார் ஆகி வருவதால் நமது வங்கிக் கையிருப்புகள் 1984 டிசெம்பரில் வெளியான ஸ்பைடரின் கதைப்பெயரினை தான் தற்சமயம் நினைவு படுத்துகிறது ! Yes  - "பாதாளப் போராட்டம்" தான் நமது பேங்க் பாலன்சில் !! இன்னமும் சூப்பர் 6-க்கான  சந்தாக்கள் செலுத்தி இருக்கா சுமார் 200+ நண்பர்கள் சற்றே மனது வைத்தால் நமது தினங்கள் இன்னமும் கொஞ்சம் வெளிச்சமாய்ப் புலர்ந்திடும் ! தவிர சூப்பர் 6-ல் காத்திருக்கும் கதைகள் ; களங்கள் சகலமுமே ரசிக்கும் விதமாய் இருக்குமென்பதால் அதன் சந்தாவை தவிர்க்க வேண்டாமே ? இன்னுமொரு teaser -ஐ உங்கள் முன்வைத்து விட்டுக் கிளம்புகிறேனே ?  அடுத்த ஞாயிறு சந்திப்போம் - இன்னும் நிறைய updates சகிதம் !  Bye for now folks !

P.S : இத்தருணத்தில் சின்னதாய் ஒரு வேண்டுகோளும் guys !! இதழின் பணிகள் எப்போதையும் விட இம்முறை அசாத்திய அழுத்தம் என்பதால் - கதைகளைத் தாண்டிய filler pages பக்கமாய் இது வரை கவனம் கொடுத்திட நேரம் கிட்டவில்லை ! நண்பர்கள் எவ்விதத்திலாவது சுவாரஸ்யம் தரும் விதமாய் சில பக்கங்களை contribute செய்திட இயலுமெனில் - பெல்ஜிய சாக்லேட் இதழோடு ஒரு 8 பக்கங்களை ஒட்டு சேர்த்து விடுவேன் ! நமது முந்தைய இதழ்களின் highlights பற்றியோ ; நம் பயணத்தின் memorable moments பற்றியோ ;  வாசகர் ஸ்பாட்லைட் பாணியிலான ஆக்கங்களாகவோ ; இல்லை வேறு ஏதேனும் புது சங்கதிகளைக் கொண்டோ இந்தப் பக்கங்கள் இருந்திடலாம் !  இந்த landmark இதழில் நண்பர்களின் பங்களிப்பும் இருந்ததென்ற மகிழ்விற்கு வித்திடும் வகையில் தனித்தனியாகவோ ; இணைந்தோ செயல்பட்டு ஏதேனும் உருவாக்கிட நேரமுண்டா folks ? ஆவலாய்க் காத்திருப்போம் !

Sunday, June 22, 2014

ஒரு வண்ணமயமான வாரம் !

நண்பர்களே,

வணக்கம். வாரத்தின் நீளம் போதவில்லை இப்போதெல்லாம்...! "பூம்-பூம் படலம்" + "ஆத்மாக்கள் அடங்குவதில்லை" & "விரியனின் விரோதி"  வண்ண அச்சுப் பணிகள் ஒன்றன் பின் ஒன்றாய்ப் பூர்த்தியாக - இந்த வாரத்தில் LMS-ன் (இத்தாலிய)  வண்ணப் பக்கங்களின் அச்சு வேலைகளைத் துவங்கியுள்ளோம் !  தடிமனான இந்த இதழின் பணிகளில் இவை துவக்க நாட்களே என்ற போதிலும் - touch wood , இது வரையிலான results அற்புதமாய் வந்துள்ளன  ! "வர்ணங்கள் ஜாஸ்தி" ; "அடர்த்தியாய் உள்ளன " என்று சமீப நாட்களில் அச்சுத் தரம் பற்றி எழுந்த விமர்சனங்கள் இம்முறை எழ வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது..! இதன் பின்னணிக் காரணங்கள் 2 ! காரணம் # 1 - இம்முறை நாம் பயன்படுத்தியுள்ளது சற்றே matte finish கொண்டதொரு ஆர்ட் பேப்பர் ! விலை கொஞ்சம் கூடுதல் என்ற போதிலும், டாலடிக்கும் வர்ணங்கள் அச்சாகும் போது கூட நெருடலாய்த் தெரியாது இந்தக் காகிதத்தில் ! Reason # 2 : நமது "மஞ்சள் சட்டை மாவீரர் "!! Yes - மஞ்சள் சட்டையாரின் "சட்டம் அறிந்திரா சமவெளி" கதைக்கு படைப்பாளிகள் பூசியுள்ள வர்ணக் கலவை அபாரமாய் உள்ளது ! ஒரிஜினலாய் கருப்பு & வெள்ளையில் தயார் செய்யப்படும் கதைகள் பின்னர் கலருக்குக் கொண்டு செல்லப்படும் போது கலரிங்கில் ஒரு விதமான செயற்கைத்தனம் தெரிய வாய்ப்புண்டு ; ஆனால் டெக்சின் இந்த சாகசத்திற்கு அவ்விதக் குறைகள் தோன்றாதிருக்க அட்டகாசமாய் உழைத்துள்ளனர்  ! அதன் பலன்களை அச்சின் போது பிரவாகமாய் உணர முடிகின்றது !! ஒவ்வொரு பக்கத்திலும்  அப்பாவும், பிள்ளையும் மஞ்சள் சட்டைகளோடு உலா வர - கண்ணைப் பறிக்கிறது ; மஞ்சள் மையும் வண்டி வண்டியாய் செலவாகிறது !! (புண்ணியத்துக்கு கார்சனின் நிஜாரும், சொக்காயும் mild ஆன கலர்களில் உள்ளன !! ) இதோ இன்னொரு பக்கம் சாம்பிளுக்கு !

டெக்சின் கதையின் வர்ணங்களுக்கு சவால் விடும் விதமாய் டைலன் டாகின் கதையிலும் ஒரு வானவில் கூட்டணி !! இதன் பக்கங்கள் தொடரும் நாட்களில் அச்சாகக் காத்துள்ளன என்ற போதிலும் முடிக்கப்பட்ட பக்கங்களை monitor -ல் பார்க்கும் போது 'ஜிவ்' வென்று உற்சாகம் எழுவதை உணர முடிந்தது ! பிரான்கோ-பெல்ஜியக் கதைகள் ஆழமாய் - அழகாய் - ஸ்டைலான ஓவியங்கள் + வர்ணங்களோடு இருந்தாலும், இத்தாலியின் படைப்புகளில் உள்ளதொரு எளிமை ; கதைகளில் உள்ளதொரு சுலப flow + இப்போது வர்ணங்களில் தெரியும் ஒரு வீரியம் என்னை லயிக்கச் செய்தன என்றே சொல்ல வேண்டும் !! டைலனும் அச்சில் இதே போல் ஸ்கோர் செய்து விட்டால் இன்னும் கொஞ்சம் இலகுவாகும் என் மண்டை !!  அதன் பின்னே காத்திருக்கும் CID ராபின் கதையில் இது போன்ற ஆளை அடிக்கும் வர்ணங்கள் இல்லாது - கதையின் பாணியைப் போலவே soft pastel shades தான் தூக்கலாய் உள்ளன ! கதையின் மூடுக்கு ஏற்ப வர்ணக் கலவைகள் அமைக்கும் அந்தக் கலையை இம்முறை நாம் LMS மார்க்கமாய் முழு வீச்சில் பார்க்கப் போகிறோம் !! டெக்சின் சரவெடி கதைக்கு அதிரடி bright வர்ணங்கள் ; டைலனின் விறு விறு த்ரில்லருக்கு அதே போல் விறுவிறுப்பான கலரிங் ; அமைதியான ராபின் கதைக்கு சலசலக்கும் நீரோடையைப் போன்ற ஆர்ப்பாட்டமில்லா வர்ணங்கள் !! 

இத்தாலிய சிலாகிப்பு இன்னமும் முடிந்தபாடில்லை !! டிடெக்டிவ் ஜூலியாவின் "விண்வெளி விபரீதம்" கதையின் தமிழாக்கத்தை முடிக்கும் தருணத்தில் தற்சமயம் உள்ளேன் ! இந்தக் கதையின் தயாரிப்புப் பின்னணியில் எங்களுக்குள் கொஞ்சம் குழப்பம் இருந்ததை நான் சொல்லியே ஆக வேண்டும் ! இத்தாலிய மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட ஆங்கில ஸ்க்ரிப்டை முதலில் நமது கருணை ஆனந்தம் அவர்களுக்குத் தான் அனுப்பி இருந்தேன் - மொழிபெயர்ப்பின் பொருட்டு !ஆனால் கதையைப் படிக்க முயற்சித்த போது அவருக்குக் கதையோட்டம் அவ்வளவாய் ரசிக்கவில்லை  ! இத்தாலிய மொழிபெயர்ப்பும் சற்றே complicated ஆக உள்ளதால் - அவகாசம் குறைவாய் உள்ள இத்தருணத்தில் இதோடு மல்லுக் கட்ட வேண்டாமே - இதற்குப் பதிலாய் வேறு கதை எதையாவது தேர்வு செய்யலாமே ? என்று சொல்லி கதையினை திருப்பி அனுப்பி விட்டார் ! நானோ லக்கி லூக் : அடுத்த லார்கோ என்று எதெதிலோ மூழ்கிக் கிடந்ததால் - இது என்னடா புதுக் குழப்பம் ? என்று ஓரிரு நாட்கள் தயங்கியிருந்தேன் ! சரி - ஜூலியாவுக்குப் பதிலாய் வேறொரு கதையை நுழைப்பது என்றெல்லாம் ஒரு மாதிரியாகத் தீர்மானம் செய்து - அந்தக் கதையையும் எடுத்து வேலை செய்ய ஆரம்பித்து விட்டோம். ஆனால் அது இத்தாலியத் தயாரிப்பல்ல என்பதால் - நமது "இத்தாலிய ஐஸ்க்ரீமில்" கொஞ்சமாய் கலப்படம் செய்தாற் போல் ஆகிடுமே என்பதோடு - ஒரு புதுத் தொடரை (ஜூலியா) ஓடத் தொடங்கும் முன்பே முடக்கிப் போட்டது போலாகிடுமே என்றும் நெருடியது ! So - ஆனதைப் பார்ப்போமே என்று ஜூலியாவைக் கையில் எடுத்து வாசிக்கத் தொடங்கினேன். ஒரு நீண்டு செல்லும் கதை வரிசையில் நாம் வெளியிடப் போவது கதை # 102 என்பதால் அதன் பிரதான கதாப்ப்பாதிரங்கள் யார்-யார் என்பதைப் படித்தறிய கொஞ்சம் நேரம் செலவிட வேண்டியிருந்தது ! கதையின் ஓட்டம் துவங்க சிறிது நேரமாகிறது என்பதாலும்  ; நமது வழக்கமான அதிரடி பாணியில் கதை பயணிக்காததாலும் தான் கருணைஆனந்தம் அவர்களுக்கு இது அத்தனை பிடிக்கவில்லை என்பதை புரிந்து கொண்டேன் ! பொறுமையாய் திரும்பப் படித்த போது - மனித உணர்வுகளின் வெவ்வேறு முகங்களை தனது கதைகளின் மூலம் கதாசிரியர்  வெளிப்படுத்த விரும்புவதை உணர முடிந்தது ! ஜூலியா ஒரு லேடி ஜேம்ஸ் பாண்ட் கிடையாது ' மாடஸ்டி ப்ளைசி கிடையாது ; XIII -ன் ஜோன்ஸ் கிடையாது - ஆனால் மனித உணர்வுகளைப் புரிய முயற்சிக்கும் ஒரு விவேகமான பெண் ! இந்தக் கதையின் கிளைமாக்ஸ் பக்கங்களில் இத்தாலிய மொழிபெயர்ப்பு எனக்கும் குழப்பமாய் இருந்திடவே - நமது படைப்பாளிகளையே தொடர்பு கொண்டேன் - சிற்சிறு சந்தேகக் கேள்விகளுடன் ! அதன் பதில்கள் கிட்டிய பின்னே jigsaw puzzle -ன் விடை கிடைத்த தெளிவு கிட்டிய போது மொழிபெயர்ப்பை துரிதமாய்ச் செய்ய முடிந்தது ! கதையும் ரொம்பவே யதார்த்தமாய் நகர்வதாலும் ; நிறையப் பக்கங்களில் வசனங்களே கிடையாதென்பதாலும்  (!!)  எழுதும் போது சோர்வே தெரியவில்லை - 4 நாட்களில் 120+ பக்கக் கதையை wrap up செய்ய முடிந்ததுள்ளது ! LMS -ல் இக்கதையைப் படிக்கும் போது ஒரு அதிரடி த்ரில்லரை எதிர்பார்க்காதீர்கள் - ப்ளீஸ் ! மாறாக - சூப்பர் ஹீரோக்களோ ; ஒரே உதையில் இருபது பேரை பறக்கச் செய்யும் (உடான்ஸ்) ஹீரோக்களோ இல்லாததொரு சூழ்நிலையில் ஒரு சிக்கல் எழுந்திடும் போது சராசரியான மக்கள் அதனை எவ்விதம் சமாளிப்பார்கள் என்பதைச் சொல்லும் கதையாக இது இருக்கும் !  Personally I loved Julia....பார்க்கலாமே - உங்களுக்கும் ஜூலியாவைப் பிடிக்கிறதா என்று! அடுத்த ஞாயிறன்று ஜூலியாவின் teaser இங்கு உங்கள் பார்வைக்கு வந்திடும் ! 

சரி - இத்தாலியப் புராணம் போதுமென்று நினைக்கும் போது மார்டினின் கதை முடிந்து printouts என் கைக்கு வந்து சேர்ந்துள்ளன ! (ஞாயிற்றுக் கிழமைகளும் அதே புன்சிரிப்போடு செயலாற்றும் மைதீன் இருக்கும் வரை என் வண்டி ஓடி விடும் !! )இதோ பாருங்களேன் மார்டினின் first look  ! அடுத்த வாரம் மார்டின் பற்றி இன்னும் கொஞ்சம் விரிவாய் எழுதுகிறேன் !


பணிகள் முடிந்து வரும் இன்னொரு கதையும் என் மேஜைக்கு வந்திருந்தது ! அது பெல்ஜிய சாக்லெட்டின் ஒரு பகுதியான ரின் டின் கேன் ! ஒரு கூமுட்டை பிராணியும் கூட ஒரு முழு நீளக் கதையைச் சுமந்து செல்லும் ஆற்றல் கொண்டதென்பதை உணர்த்த வரும் "அதிர்ஷ்டம் தரும் அண்ணாத்தே"வின் ஒரு பக்க ட்ரைலர் இதோ !  படங்களில் கிரே கோட் அணிந்த ஆசாமி தான் அமெரிக்க ஜனாதிபதி !!  

ஆகஸ்டின் LMS -க்கு முன்பாக நெய்வேலி + நெல்லை புத்தக விழாக்கள் காத்துள்ளன ! இரண்டுக்கும் நாம் விண்ணப்பித்திருந்த போதிலும் நெய்வேலியில் "இடம் லேது!" என்று ஓலை வந்து விட்டது நமக்கு ! So BOOK FAIR SPECIAL இதழ்களை நெய்வேலியில் ரிலீஸ் செய்வதென்பது சாத்தியமில்லை என்பதால் வழக்கம் போல் ஜூலை இதழ்களோடு சேர்த்தே அனுப்பப்படும் ! நெல்லை புத்தகவிழா புது டில்லியிலுள்ள நேஷனல் புக் ட்ரஸ்ட் மேற்பார்வையில்  ஜூலை 18-27 தேதிகளில் நடைபெறுகிறது ; இங்கு நமக்கு நிச்சயமாய் ஸ்டால் கிடைக்கும் என்ற நம்பிக்கையுள்ளது ! அது மட்டுமல்ல - ஆகஸ்டில் நடக்கவிருக்கும் ஈரோடு புத்தகத் திருவிழாவினிலும் நாம் பங்கேற்க உள்ளோம் !!!     சென்னைக்கு இணையாக அற்புதமாய் நடத்தப்படும் இந்த விழாவினில் நாமும் கலந்திட மீண்டும் வாய்ப்புத் தந்துள்ள (அமைப்பாளர்கள்) மக்கள் சிந்தனைப் பேரவைக்கும், அதன் தலைவர் திரு.ஸ்டாலின் குணசேகரன் அவர்களுக்கும் நமது மனமார்ந்த நன்றிகளைப் பதிவு செய்திடுவது மிக மிக அவசியம் ! திரு குணசேகரன் அவர்கள் அந்நாளைய இரும்புக்கை மாயாவி ரசிகர் என்பது கொசுறுச் செய்தி !! சென்னையில் நமக்கு ஸ்டால் கிடைக்க நண்பர் விஷ்வா உதவுவது போல் ஈரோட்டில் நமக்குக் கை கொடுத்து வருவது நண்பர் ஸ்டாலின் ! ஆங்காங்கே நமக்கு உதவ இது போன்ற நல்லுள்ளங்கள் உள்ளவரை நமக்கெது கவலை ? மறவாது உங்களது ஆகஸ்ட் 2-ம் தேதிகளை நமக்காக ப்ரீயாக வைத்துக் கொள்ளுங்களேன் folks ? அன்றைய தினம் ஈரோட்டில் உங்களை சந்திக்க எப்போதும் போல் மிகுந்த ஆவலாய்க் காத்திருப்போம் - LMS  சகிதம் !! 

கொசுறுச் சேதிகளில் இன்னும் சில : தமிழகத்தின் பெருநகரங்களை ஒவ்வொரு வாரமும்   நமது பணியாளர்கள் explore செய்து வருகின்றனர் - விற்பனைக்குக் கடைகளை ஏற்பாடு செய்திடும் பொருட்டு ! இப்போதைக்கு (புதிதாய்) நம் இதழ்கள் கிடைக்கும் ஊர்களின் பட்டியல் பின்வருமாறு : சாத்தூர்   ; கோவில்பட்டி ; தூத்துக்குடி ; நாகர்கோவில் ; வள்ளியூர் ; தென்காசி ; தஞ்சாவூர் ; மாயூரம்   ; கும்பகோணம் ; சிதம்பரம் ; நாகப்பட்டினம் ; திருச்சி ; திருமயம் ; பட்டுக்கோட்டை ; காரைக்குடி ! வாங்கும் எண்ணிக்கைகள் பெரிதாக இல்லையென்ற போதிலும், சிறு துளிகளே - பெரு வெள்ளமாகும் என்ற நம்பிக்கையில் தொடர்கிறோம். ஆங்காங்கே உள்ள நம் நண்பர்கள் தங்களால் ஆன எல்லா உதவிகளையும் செய்து நமது பணியாளர்களின் வேலைகளை சுலபமாக்கி வருங்கின்றனர் ! Thanks ever so much guys !!    அடுத்த வாரத்தில் பொள்ளாச்சி ; கோவை ; திருப்பூர் ; சேலம் பகுதிகளில் நம்மவர்களின் பணிகள் / பயணங்கள் தொடரும் ! See you around folks ! Bye for now !

P.S : கடந்த பதிவின் உங்களின் பின்னூட்டங்களை இன்று இரவு முழுவதுமாய்ப் படித்து விட்டு அவற்றிற்கான பதில்களை ; எனது அபிப்ராயங்களை இங்கே பதிவிடுகிறேன் ! Thanks for the patience !!

Sunday, June 15, 2014

ஸ்பைடர் மண்டையனா ? சட்டித் தலையனா ?

நண்பர்களே,

வணக்கம். தலைப்பைப் பார்த்து விட்டு - 'ஆஹா....நம்ம கண்மணிகள் திரும்பவும் வரப் போறது பற்றிய சேதியா ?' என்ற அதீத ஆவலோ ; "அய்யய்யோ" என்ற பீதியோ வேண்டாமே - ப்ளீஸ் ! பதிவின் தலைப்பின் காரணம் இறுதியில் உங்களுக்கே புரியும் ! 'இன்னொரு ஞாயிறு- இன்னொரு பதிவுக்கு நேரமாச்சு !' என்ற அலாரம் தலைக்குள் ஒலிக்க - here I am ! கடந்த பதிவினில் எக்கச்சக்கமாய் எழுதித் தள்ளியாகி விட்டது ; அதற்குள் புதிதாய் என்னத்தை சொல்லப் போகிறோம் ? என்ற கேள்வி எழுந்த போதிலும், ஒரே வேளையில் ஒரு வண்டிக் கதைகளில் பணியாற்றி வருவதால் அனுபவங்களுக்கும், எண்ணங்களுக்கும், முன்னோட்டங்களுக்கும் பஞ்சமே இல்லை ! 

ஜூலை பட்டியலுக்கான  மேஜிக் விண்ட் + விரியனின் விரோதி + பூம்-பூம் படலம் தயார் நிலையில் உள்ளன ; இன்னும் ஓரிரு நாட்களுக்குள் பைண்டிங் செல்லும் நிலையினை எட்டி விடும். எஞ்சி நிற்கும் "காவல் கழுகு " (டெக்ஸ் வில்லர்) கதையும் என் மேஜையில் தயாராய்க் காத்திருக்க ; இறுதி ரவுண்ட் எடிடிங் பணிகள் மட்டுமே அதனில் பாக்கி ! கருப்பு-வெள்ளை இதழ் தான் அது என்பதோடு பக்கங்களும் குறைவு என்பதால் - பெரியதொரு அவகாசம் தேவை இல்லை அதனை முழுமைப்படுத்திட ! So LMS -ன் பக்கமாய் தான் முழுமையாய் மூழ்கிக் கிடக்கிறேன் நான் - நமது சின்ன டீமோடு ! LMS -ல் இத்தாலிய ஐஸ்க்ரீம் தான் புக் # 1 என்பதாலும், பக்கங்களின் எண்ணிக்கை அதனில் தான் ஜாஸ்தி என்பதாலும் - அங்கு தான் எனது focus நிலைகொண்டுள்ளது தற்சமயமாய் ! டெக்சின் 224 பக்க வண்ண சாகசம் + ராபினின் 92 பக்க (வண்ண) சாகசம் + டைலன் டாக்கின் 96 பக்க கலர் விருந்து முழுமையைத் தயாராகி விட்டன ! அதே புக்கில் இடம் பிடிக்கக் காத்துள்ள black & white கதைகளுள் மர்ம மனிதன் மார்டின் தொடரும் நாட்களில் தயாராகி விடும் ; இரவு பகலாய் நமது 2 DTP பணியாளர்களும் கம்ப்யூட்டர் கீ போர்டுகளைத் தட்டி வருகின்றனர் ! (இதில் ஒரு குட்டியான சந்தோஷ சேதியும் கூட - நமது இதழ்களின் 80% பணிகளைச் செய்து வரும் Ms .அருணா தேவி சீக்கிரமே Mrs ஆகக் காத்திருக்கிறார் ! திருமணம் நிச்சயமாகியுள்ள போதிலும், நம் அவசரங்களைப் புரிந்து கொண்டு எப்போதும் போல் பணி செய்து வருகிறார் !! மணமான பின்பும் பணிகளைத் தொடர்வதாய் சொல்லியுள்ளார் ! Such dedication in someone so young !!) இதோ தயாராகியுள்ள தலைவரின் சாகசத்திலிருந்து சின்னதொரு teaser !

கடந்த பதிவிலேயே நான் டைலன் டாக் கதையைப் பற்றி கொஞ்சமாய்க் கோடிட்டிருந்தேன் ! மீண்டும் சொல்கிறேன் - இது உங்கள் தலைகளைக் கிறுகிறுக்கச் செய்யவிருக்கும் கதையே ; ஆனால் கீழே வைக்க முடியாது பக்கங்களைப் புரட்டச் செய்யும் மாயாஜாலத்தையும் தன்னில் அடக்கியது !  கதையின் ஒரு சில sequences சித்தரிப்பில் சற்றே கோரமா இருப்பதால் - இந்தக் கதையினை மாத்திரம் உங்கள் வீட்டுக் குட்டீஸ்கள் கையில் தரலாமா - வேண்டாமா ? என்ற தீர்மானம் உங்களதாக இருக்கத் தேவைப்படும். கதையை 2 முறை முழுமையாய்ப் படித்த பின்னரும் என் கிறுகிறுப்பு அடங்கியபாடில்லை என்பதால் - விரைவிலேயே why blood ? same blood-க்கு ஒரு வாய்ப்புக் கிட்டப் போகிறது ! இதோ 'அந்தி மண்டலத்தின்' ஒரு ட்ரைலேர் !

நீண்டதொரு break -க்குப் பின்னதை தலை காட்டும் CID ராபினுக்கு இம்முறை வர்ணத்தில் வாய்ப்பு ! இது ராபின் கதை வரிசையில் ஆல்பம் # 100 என்பதால் ஒரிஜினலாகவே அங்கு வர்ணத்தில் வெளி வந்த கதை ! வழக்கமான நியூ யார்க் நகரின் பரபரப்புக் குற்றத் தெருக்கள் இம்முறை ராபினின் களமாக இருக்கப் போவதில்லை ! மாறாக தன வேர்களைத் தேடி இத்தாலி செல்லும் ராபின், அங்கு நடத்திடும் ஒரு அழகான புலனாய்வே     "நிழல்களின் நினைவுகளில்..!"  தடாலடியான வில்லன்களோ ; உய்ய..உய்ய..என்ற கார் விரட்டுக்களோ இம்முறை கிடையாது ; ஆனால் ஒரு போலீஸ்காரர் யதார்த்தத்தில் துப்பறிந்தால் என்னென்ன சம்பவங்கள் அரங்கேறும் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டப் போவதே ராபினின் இந்த சாகசம் !  Makes for an engrossing read !! 
வண்ணக் கதைகளே - பெல்ஜிய சாக்லேட்டின் முழுமைக்கும் என்பதால் - அதன் முதல் சாகசமான லக்கி லூக் தோன்றும் "பேய் நகரம் தயார் பட்டியலில் உள்ளது ! கலாமிட்டி ஜேன் மட்டுமல்லாது ஜாலி ஜம்பரும், அதன் ஒரு குதிரைத் தோழனும் இந்த இதழின் மேஜர் பகுதிக்கு சிரிப்புக் கண்ணி வெடிகள் பதிக்கும் பொறுப்பினை எடுத்துக் கொண்டுள்ளார்கள் ! வழக்கம் போலவே வண்ணத்தில் தூக்கலாய்த் தெரியக் காத்திருக்கும் ஒரு கார்ட்டூன் சாகசம் ! "மார்ஷல் டைகர்" டைப்செட்டிங் செய்ய வேண்டிய பட்டியலில் உள்ளதால் அடுத்த ஞாயிறு பதிவுக்குள் தயாராகி இருக்குமென்று எதிர்பார்க்கிறேன் ! பெல்ஜிய சாக்லேட்டின் கதை # 3 ஆன ரின்-டின்-கேன் மாத்திரம் எனது மேஜையில் பாதி மொழிபெயர்ப்போடு நிற்கிறது ! இன்று தம் கட்டி எப்படியாவது பாக்கியுள்ள 20 பக்கங்களை முடித்தே தீர வேண்டுமென்ற வேகத்தில் உள்ளேன் ! ஒரு திறமைசாலியின் கையில் சிக்கினால் - ஒரு மக்கு நாய் கூட ஒரு வெற்றித் தொடராக காமிக்ஸ் உலகில் மிளிர முடியும் என்பதை ரின் டின் கேன் நிரூபித்து வருகிறது ! நிரம்ப ரசித்து எழுத சாத்தியமாகும் கதைகளில் இதுவும் ஒன்று ! சென்றாண்டு இதே வேளையில் அறிமுகம் கண்ட சுட்டி லக்கிக்குக் கிட்டிய அதே வரவேற்பு ரி.டி.கே -க்குக் கிட்டும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது !  
எஞ்சியுள்ள 2 black & white கதைகள் நமது கருணைஆனந்தம் அவர்களது மேஜையில் உள்ளன - மொழிபெயர்ப்புக்காக ! அவற்றை சடுதியாய் முடித்து வாங்கி - அவற்றின் மேல் நான் ஒரு பட்டி-டின்கெரிங்க் பார்த்து - நமது DTP பணியாளர்களின் குடல்களை உருவியாக வேண்டும் !!இவையெல்லாமே ஆன பிற்பாடு தான் அச்சு + பைண்டிங் பணிகள் !! Phew !! நினைக்கும் போதே லேசாகத் தள்ளாடுகிறது ; but என் நேரடிப் பொறுப்பில் உள்ள சங்கதிகளை முடிக்காத வரை அடுத்த phase பற்றி சிந்திப்பது வீண் தலைநோவே என்பதால் இப்போதைக்கு ரொம்பத் தொலைவுக்கு பார்வையை நான் ஓட விடுவதாக இல்லை ! கடிகாரத்தின் சுழற்சி வேகத்தை மட்டுப்படுத்த எதாச்சும் வழிமுறை இருந்தால் சொல்லுங்களேன் - யாராவது !! இந்தக் கூத்தில் ஜூலையின் துவக்கத்தில் நமது மிஷினரி பிரிவின் பணிகளின் நிமித்தம் ஒரு 4 நாள் பயணமாய் ஜெர்மனி செல்லவும் வேண்டிய சூழல் உருவாகி வருகிறது !! சுருங்கச் சொல்வதானால் - ஆகஸ்டில் ஈரோடில் வழக்கமான ஸ்பைடர் மண்டையனை எதிர்பார்த்து வராதீர்கள் .....அங்கு காத்திருக்கப் போவதொரு சட்டித் தலையனே !!! Ervamatin - Ervamatin அப்டின்னு சொல்றாங்களே - அதை யாராச்சும் முடிஞ்சா வாங்கிட்டு வாங்கப்பா !! இப்போதைக்கு நடையைக் கட்டுகிறேன் !! Adios guys...see you next sunday ! 

Sunday, June 08, 2014

முப்பது நாட்களில் பாலே நடனம் !

நண்பர்களே,

வணக்கம். பத்தி பத்தியாய் ; பக்கம் பக்கமாய் ஏதேதோ எழுதியுள்ள போதிலும், என்னை நான் ஒரு எழுத்தாளனாய் என்றைக்குமே பார்த்துக் கொண்டதில்லை ! ஆனால் முதன்முறையாக ஒரு புத்தகத்தை எழுதும் தேர்ச்சி எனக்கு வந்து விட்டதாய் கடந்த சில-பல வாரங்களாய் எனக்குள் ஒரு நம்பிக்கை ! சரி...அந்தப் புத்தகத்துக்கு என்ன பெயர் சூட்டலாம் ? என்று யோசித்த போது பொல பொல வென்று பெயர்களை உதித்தன தலைக்குள் ! "முப்பது நாட்களில் பாலே நடனம் பயில்வது எப்படி ?" " வாய் நிறைய கொழுக்கட்டையை வைத்துக் கொண்டே சாதாரணமாய்ப் பேசுவது எப்படி ?" ; " விழிகள் பிதுங்கினாலும் வீராப்பாய் நடை போடுவது எப்படி ?" என்பன தான் அந்தப் பெயர் தேர்வுகள் !! ஒற்றைக்காலை ஒயிலாய் தூக்கிக் கொண்டு இங்கும் அங்கும் நளினமாய் நகரும் பாலே கலையை நிச்சயம் நான் கற்றுத் தேர்ந்திடவில்லை தான் ; ஆனால் வழக்கமான கட்டைவிரலை மாத்திரமின்றி கணுக்காலையும் சேர்த்து தொண்டைக்குள் இம்முறை  திணித்துக் கொண்டு ஒற்றைக் காலிலேயே உலா வரும் சாகசத்தை கடந்த 4 வாரங்களாய் கொஞ்சம் கொஞ்சமாய் படித்து வருவதால் ஒரு விதமான "பாலே பாண்டி" ஆகி விட்டதாக உணர்கிறேன் ! 

நமது லயனின் 30-வது ஆண்டுமலரை பிரம்மாண்டமாய் அறிவித்த போதே எங்கள் முன்னே நிற்கும் பணிகளின் பரிமாணத்தை நான் உணராமல் இல்லை ! ஆனால் 2013-ன் NBS வேலைகளை படபடப்போடு ; ஆனால் பெரியதொரு சிரமமின்றிச் செய்து முடித்த அனுபவத்தில் எனக்குள் ஒரு மெல்லிய தெனாவட்டு குடிகொண்டிருந்தது என்பதை இப்போது உணர்கிறேன் ! நான் கணக்கில் எடுத்துக் கொள்ளத் தவறியதொரு விஷயம் சமீப நாட்களில் என் முன்னே "கெக்கே - பிக்கே ' சிரிப்போடு நர்த்தனம் ஆடி வருகிறது ! NBS ன் வெளியீட்டிற்கு முந்தைய மாதங்களில் பெரியதொரு பணிக்கு அவசியம் தரும் வெளியீடுகள் ஏதும் இருந்திருக்கவில்லை ! நவம்பர் 2012-ல் (மறு பதிப்பு) தங்கக் கல்லறை வெளியான பின்னே ஜானியின் "மரணத்தின் நிசப்தம்" (ரூ.10) மட்டுமே காத்திருந்ததால் - செப்டெம்பர் 2012 முதலே NBS -ல் பிரத்யேகக் கவனம் செலுத்துவது சாத்தியமானது ! ஆனால் இம்முறையோ நிலைமையே தலைகீழ் அல்லவா ? 2014-ன் துவக்கம் தொட்டு ஒவ்வொரு மாதமும் 3 அல்லது 4 இதழ்கள் ; அதிலும் ஜூலையில் SUPER 6 -ன் முதல் தவணையான BOOKFAIR SPECIAL இதழ்களும் அட்டவணைக்குள் இருப்பதால் கிறுகிறுக்காத குறை தான் ! இது போதாதென்று இடைப்பட்ட லார்கோ இதழுக்கு எடுத்துக் கொண்ட அவகாசமும் நிரம்பவே ஜாஸ்தி ! So கூட்டிக் கழித்துப் பார்த்தால் LMS ன் பணி அசுரத்தனமாய்த் தோற்றம் தருவதைத் தவிர்க்க இயலவில்லை ! 

மந்திரித்து விட்ட கோழியைப் போல் 'திரு திரு' விழியோடு சுற்றித் திரிகிறேன் என்றால் அது தலைக்குள் ஓடி வரும் non stop பெல்ஜிய + இத்தாலிய காமிக்ஸ் மேளாவின் உபயமே ! ஷவருக்கு அடியே நிற்கும் போது - 'அட..லக்கி கதையில் அந்த வசனத்தை இப்படிப் போட்டிருக்கலாமே ?!' என்ற சிந்தனை ! அண்டை வீட்டாரின் திருமணத்துக்கு மனைவியோடு போனால் என் கண்ணுக்கு பெண்ணோ - மாப்பிள்ளையோ தெரியக் காணோம் - டைலன் டாக்கும், அந்தி மண்டலத்தில் உலவும் பிறவிகளுமே எனக்குக் காட்சி தருகிறார்கள் ! ஆபீசில் பிற பணிகளுக்காக என்னை சந்திக்கும் நபர்களிடம் என் உதடுகள் ஏதோ பேசினாலும், என் தலைக்குள்ளே டெக்சும், கார்சனும் பேசும் டயலாக் வெள்ளோட்டம் தான் ஓடுகின்றது ! என் மேஜையில் உள்ள டயரியில் பணிகளது வரிசைக்கிரமத்தைக் குறித்து வைத்து விட்டு, அவை முடிய, முடிய நான் 'டிக்' அடிக்கும் வேகத்தை விட - அந்தப் பட்டியல் நீண்டு செல்லும் துரிதம் ஜாஸ்தியாக உள்ளது !  "சட்டம் அறிந்திரா சமவெளியை " (224 பக்கங்கள்) ஒரு மார்க்கமாய் நான் கடந்து முடிப்பதற்குள் விரியனின் விரோதிகளும், அடங்க மறுக்கும் ஆத்மாக்களும் குறுக்கே வண்டிகளை நுழைப்பதால் மஞ்சள் சட்டை மாவீரரை சற்றே ஆறப் போட்டு விட்டு ஜூலைப் பணிகளைக் கையில் எடுத்தேன் ! XIII மர்மம் வரிசையில் முதல் இதழான "விரியனின் விரோதி" ஒரு மாறுபட்ட கதையாய் இருந்ததால் அதனைப் பூர்த்தி செய்வது பெரும் கடினமாக இருக்கவில்லை ! இக்கதையை முதன்முறையாகப் படிக்கக் காத்திருக்கும் நண்பர்களுக்கு ஒரு சின்ன preview  மாத்திரம் : இந்த இதழைப் படித்தான பின்னர் கூர்மண்டையர் மங்கூசை நாம் சன்னமாய் ரசிக்காதிருப்பது சிரமமே ! 

பணி # 2 ஆகக் கையில் எடுத்தது மேஜிக் விண்டின் "ஆத்மாக்கள் அடங்குவதில்லை" இதழையே ! இதன் பரபரப்பான வேகம் எழுதும் போதே என்னைத் தொற்றிக் கொண்டிருந்ததால் 96 பக்கக் கதையை இரண்டு நாட்களிலேயே எழுதி முடிக்க முடிந்திருந்தது ! So - எடிட்டிங் + இன்ன பிற வேலைகளுக்கும் அதிகமாய் நேரம் அவசியப்படவில்லை ! இதோ - அந்த இதழுக்கு நமது ஓவியர் போட்டுள்ள சித்திரத்தின் முதல் பார்வை ! 

சமீப முறைகளைப் போலவே - இந்த டிசைனைப் பார்த்த இரண்டாம் நிமிடம் ஒரே ஒரு smiley மட்டும் பதிலாகக் கிட்டியது நமக்கு - போனெல்லி நிறுவனத்திலிருந்து ! ஒரிஜினல் அட்டைப்பட டிசைன்களின் ரசிகர் மன்ற' நண்பர்கள் - "புதிதாய் டிசைன் போட வேண்டியதன் அவசியமென்ன ?" என்ற கேள்வியை எழுப்பும் முன்பாக அதன் விடையோடு நான் முந்திக் கொள்கிறேனே ? இத்தாலிய ஒரிஜினல் அட்டைப்படம் மிதமான பார்வையோடு மாத்திரமே இருந்ததாகப்பட்டதால் அதனை முன்னட்டைக்குப் பயன்படுத்த முனையவில்லை ! ஆங்கிலத்தில், அமெரிக்காவில் வெளியான இதழின் ராப்பர் அற்புதமாய் இருந்த போதிலும், அது அங்குள்ள பதிப்பகம் தயாரித்திருந்த பிரத்யேக டிசைன் என்பதால் அதனை அப்படியே பயன்படுத்த நமக்கு உரிமை கிடையாது ! So - அதனை ஒரு inspiration ஆக வைத்துக் கொண்டு நமது மாலையப்பன் உருவாக்கிய டிசைனே முன்னட்டை ! உங்களது பார்வைகளில் இது பெறக் காத்திருக்கும் மார்க்குகள் என்னவாக இருக்குமென்று அறிந்திட நானும், நமது ஓவியரும் ஆவலாய் இருப்போம் ! தொடர்வது உட்பக்கத்தின் preview -ம் கூட ! 

இத்தருணத்தில் சின்னதாய் ஒரு இடைச்செருகலும் கூட ! கடந்த மாதம் முதல் நமது இதழ்களில் ஒரு copyright notice புதிதாய் இடம்பிடிப்பதைக் கவனித்திருப்பீர்கள் ! இணையதளம் நம் உலகை ரொம்பவே சிறிதாக்கி விட்டபடியால் - இங்கு நாம் தும்முவதும் கூட சில சமயங்களில் ஐரோப்பாவில் கேட்கிறது ! நண்பர்கள் அவ்வப்போது தங்களது வலைப்பதிவுகளில்  ஆர்வமிகுதியில் நமது இதழ்களின் பக்கங்களை ஸ்கேன் செய்து வெளியிட்டு வருவது அங்குள்ள படைப்பாளிகளின் புருவங்கள் உயரக் காரணம் ஆக வாய்ப்புள்ளது ! நாம் கருப்பு-வெள்ளையில் குப்பை கொட்டி வந்த நாட்களில் நம்மை அவர்கள் பெரிதாய் எடுத்துக் கொண்டதுமில்லை ; அன்றைய நாட்களில் வலையின் தாக்கமும் அத்தனை பெரிதாய் இருந்திருக்கவில்லை ! ஆனால் இன்றோ நிலைமை தலைகீழ் ! அட்டைபடத்திலிருந்து, உட்பக்கங்களில் இடம் பிடிக்கும் filler pages வரை அவர்களது approval அவசியம் ! அது மட்டுமல்லாது இணையதளக் கண்காணிப்பிற்கென ஒரு தனிப்பட்ட பிரிவை உருவாக்கி வலையில் தங்களது படைப்புகள் தேவைக்கு அதிகமாய் பயன்படுத்தப்படுவதை சீர் செய்ய சமீப வாரங்களாய் முயன்று வருகின்றனர் ! So முடிந்த மட்டிலும், நம்மால் அவர்களுக்கு தொல்லை நேராது பார்த்துக் கொள்வோமே guys - ப்ளீஸ் ? அட்டைப்படம் ; உட்பக்கத்தின் ஏதாவது ஒன்றிரண்டு என சிக்கனமாய் review-களுக்குப் பயன்படுத்திக் கொண்டால் நம் பொருட்டு பெரியதொரு நெருடல்கள் நேராது அல்லவா  ? 
மேஜிக் விண்ட் கதை ஒரிஜினலாய் உருவாக்கப்பட்டது முழுக்க-முழுக்க black & white பாணியினை மனதில் கொண்டே என்பதாலும் ; கதையின் பெரும்பான்மை நிகழ்வது இருளுக்குள் என்பதாலும், பொதுவாகவே கதைக்கு ஒரு இறுக்கம் அவசியமாவதாலும் இதன் வர்ணக் கலவை பெரும்பாலும் dark shades-ல் தான் உள்ளது ! ஆகையால் 'பளிச்' ஆர்ட் பேப்பரில் படிக்க நேரிடும் போது "வர்ணங்கள் அப்பியுள்ளன !" என்ற சிந்தனையை லேசாகப் புறம் தள்ளிடல் அவசியமாகும். டெக்ஸ் வில்லர் கதைகள் கூட முழுக்க முழுக்க b&w ஆக்கங்களே என்ற போதிலும், அவரது கதைகளிலேயே ஒரு மெல்லிய positiveness + கலகலப்பு இழையோடுவதால் background-களில் அடர்கருப்பு அவசியப்படுவதில்லை ! தவிர டெக்சின் மஞ்சள் சட்டை + ப்ளூ பேன்ட் combination பக்கத்துக்குப் பக்கம் டாலடிக்க - இந்தக் கதை வரிசையில் வர்ணத்தில் வேறுபாடு தெரிவதில்லை ! 

மேஜிக் விண்ட் பணிகளும் முடிந்து விட்ட நிலையில் "பூம்-பூம் படலம்" அதிக நேரம் எடுத்துக் கொள்ளவில்லை - மறுபதிப்பு என்ற காரணத்தினால் ! சில மாதங்களுக்கு முன்பாக இந்தக் கதைக்கு வாசகர்கள் ஒரு புது மொழியாக்கத்தை உருவாக்கும் வாய்ப்பை வழங்கலாமே ? என்று நான் அபிப்ராயப்பட்டிருந்தது நினைவிருக்கலாம் ! ஆனால் அதற்குப் பெரியதொரு சுவாரஸ்யம் காட்டி நண்பர்கள் முன்வரவில்லை என்பதோடு - நம்மிடையே நிலவும் அந்தப் "பழமையைப் போற்றுவோம் ; பழமையே பொன்னானது!"  கோட்பாடுகள் தலைதூக்கியதால் 'புது மொழிபெயர்ப்பு' என்ற எனது எண்ணம் கோவிந்தாவாகிப் போனது ! போதாக்குறைக்கு மின்னஞ்சல்களிலும், கடிதங்களிலும் நண்பர்களில் சிலர் - 'அந்த மறுபதிப்புக்கு புது மொழியாக்கம் என்ற சிந்தனை எழாதது ஏனோ ? ; இதற்கு மட்டும் அப்படி என்ன அவசியம் ? ; நாங்கள் 'சிவனே' என்று படித்துச் சென்றிருப்போம் - நீங்களாய் நினைவுபடுத்தி மொழிபெயர்ப்பில் உள்ள நெருடல்களை சுட்டிக் காட்டுவது இப்போது அவசியம் தானா ?" என்ற ரீதியில் கேள்விக்கணைகள் தொடுத்திருந்தனர் ! காமிக்ஸ் வாசிப்புக்கு என்று வரும் போது மட்டும் 'மாற்றங்கள் என்றாலே விரோதமானவையே !' என்ற அந்தப் பரவலான அபிப்ராயம் தழைத்து வருவது ஏன் ? என்பது இன்றளவுக்கும் எனக்குப் புரியாததொரு புதிரே ! ஏற்கனவே படித்த கதையை ; அதே அன்றைய மொழிபெயர்ப்போடு மீண்டும் படிப்பதை விட - காலத்துக்கேற்ற மாற்றங்கள் + முன்னேற்றங்களோடு படிப்பதில் சுவாரஸ்யம் கூடிடாதா ? Nostalgia நம்மைக் கட்டிப்போடுவதெல்லாம் சரி தான் ; ஆனால் அதுவே காலைக் கட்டிக்கொண்டே சாக்கு ரேசில் ஓடும் அளவிற்கு வளர்ந்திட இடம் தருவது தேவை தானா ? தலையைச் சொரியத் தான் முடிகிறது இவ்விஷயத்தில் ! 

Getting back to LMS - டெக்சின் முழு நீள சாகசத்தின் பணிகளும் ; டைலன் டாக்கின் பணிகளும் ; ராபினின் கதை + லக்கி லுக்கின் கதையும் கிட்டத்தட்ட தயாராகி விட்டன ! டெக்சின் கதையின் அடித்தளத்தை எழுதியவர் நமது கருணையானந்தம் அவர்கள்  ; டெக்ஸ் - கார்சன்-டைகர் - கிட் கூட்டணியின் வசனங்கள் + finishing touches எனது பொறுப்பு என்பதால் - இந்தக் கதையில் நான் பணி செய்த நாட்கள் முழுவதுக்கும் ஒரு சண்டியரைப் போலவே விறைப்பாகச் சுற்றித் திரிந்தேன் என்றே சொல்லலாம் ! 'ஏன் ?' என்றால் உதை '; எதற்கென்றால் குத்து ! 'ஐயோ என்றால் மொத்து ! 'என்பது தான் இக்கதையின் முழுமைக்கும் டெக்சின் தாரக மந்திரம் ! மனுஷன் வீட்டுக்காரம்மாவிடம் சண்டை போட்டு வந்திருந்த வேளையில் செய்த சாகசமோ - என்னவோ - ஓங்கிய முஷ்டியானது 224 பக்கங்களுக்கும் இறங்கிய பாட்டைக் காணோம் ! எழுதி முடித்த போது விரல்கள் வலித்ததை விட, வில்லன்கள் வாங்கிய உதைகளை கிட்டே இருந்து பார்த்தது போல் என் தாடை தான் வலித்தது ! ஆக்ஷன் ருத்ரதாண்டவம் தான் ! 

டைலன் டாக் உங்களை ஒரு வித மெஸ்மெரிச வசியத்தில் ஆழ்த்தப் போவது உறுதி ! இந்த ஹீரோவின் கதைகளுக்குப் புதியவர்களுக்கு சின்னதாய் ஒரு சேதி : இவரை ஒரு மாமூலான டிடெக்டிவாகவோ ; இந்தக் கதைகளை பேய்-பிசாசு-ஆவிகளின் கலவையாக இருக்குமென்றோ எதிர்பார்க்காதீர்கள் ! மாறாக - எதிர்பாரா எல்லாவற்றையும் இவரிடம் எதிர்பாருங்கள் ! "அந்தி மண்டலத்தை" எடிட் செய்து முடித்த கையேடு இந்தப் பதிவை எழுதுகிறேன் ; இன்னமும் அந்தக் கதையின் தாக்கம் என்னுள் ப்ரெஷ் ஆக உள்ளது ! 

லக்கி லூக், கலாமிட்டி ஜேனோடு இணைந்து அடிக்கும் கூத்துக்கள் தான் "பேய் நகரம்" கதைக்களம் ! ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் சிரிப்பு வெடிகள் சிறிதும் சோர்வைத் தராமல் பேனா பிடிக்க உதவியது என்று தான் சொல்ல வேண்டும் ! ஒரு நாள் பயணமாய் இரவு ரயிலில் பெங்களுரு செல்ல ஏறி அமர்ந்த போது upper berth-ல் சாய்ந்து கொண்டே லக்கியை நான் எழுதிச் சென்றதை எதிர் பெர்த்தில் இருந்த பெண்மணி வினோதமாய்ப் பார்த்து வந்தார் ! என் கையிலிருந்த ஜெராக்சின் முகப்பில் லக்கியின் முகத்தைப் பார்த்த போது ஆவலாய் என்னிடம் பேச்சுக் கொடுத்தார் ! அவர் தமிழ் பேசுபவரல்ல என்பதையும், லக்கி லுக்கின் ரசிகை என்பதையும் அறிந்து கொண்டேன் ! ஜெராக்ஸ் பக்கங்களை என்னிடம் இரவல் வாங்க அவர் சந்கோஜப்படுவதை உணர முடிந்தது ! 'படித்து விட்டுத் தாங்களேன்.." என்று நானாகக் கொடுத்த போது அவர் முகத்தில் தெரிந்த பிரகாசம் - காமிக்ஸ் எனும் இந்த அற்புதம் பரப்பிடும் சந்தோஷத்தை மீண்டுமொருமுறை நிதர்சனமாய் பார்க்கும் தருணமாகிப் போனது ! அந்த சந்தோஷத்தை ஏதோ ஒரு சிறு விதத்தில் பகிரவும், பரப்பவும் நாமெல்லாம் இங்கு கூடுவதை அப்போது நினைவு கூர்ந்த போது என் முகத்திலும் ஒரு ஒளிவட்டம் ! ஒற்றைக் கால் நாட்டியங்கள் கூட ரசிக்கும் விஷயங்களே என்ற புரிதலோடு - அந்த ஒளிவட்டத்தோடு இப்போதைக்குப் புறப்படுகிறேன் - ரின் டின் கேன் அவர்களோடு கரம் கோர்க்க ! மீண்டும் இடைப்பட்டதொரு தருணத்தில் சந்திப்போம் folks ! Bye for now !

P.S: கடந்த பதிவின் 150+ பின்னூட்டங்களுக்குப் பின்னராய் எட்டிப் பார்க்க நேரம் கிடைக்கவே இல்லை ! அங்கு நீங்கள்  ஏதேனும் கேள்விகளை  எழுப்பியிருக்கும் பட்சத்தில் சிரமம் பாராது இங்கே மீண்டும் கொண்டு வர முடியுமா - ப்ளீஸ் ?