நண்பர்களே,
வணக்கம். 3 down ...2 to go ..! டிசெம்பரின் எஞ்சி நின்ற 2 இதழ்கள் + ஜனவரியின் ஆரம்ப 3 இதழ்கள் - ஆக மொத்தம் 5 ல் - வண்ண இதழ்கள் மூன்றும் தயாராகி விட்டன ! கறுப்பு-வெள்ளையில் வர வேண்டிய டயபாலிக்காரும், இளவரசியாரும் மட்டுமே நாளை & நாளை மறு நாள் அச்சுக்குச் செல்கிறார்கள் ! எப்போதும் போலவே இதழ்கள் அச்சான மறு கணம் முதல் நமது பைண்டிங் பணியாளர்களுக்கு நம்மவர்களது முகங்கள் தவிர்க்க இயலாக் காட்சிகளாய்ப் போகும் என்பதால் - அறிவித்தபடியே ஜனவரி 2-ம் தேதி இங்கிருந்து 5 இதழ்களையும் அனுப்பிடுவோம் ! Packing செய்ய அட்டைப்பெட்டிகளும் தயார் என்பதால் - we are all set! 'இந்தக் கதை ! ...கதை மட்டும் தான் தேவை !' என்று சுற்றித் திரியும் 'காதலிக்க நேரமில்லை' நாகேஷைப் போல - "இந்தச் சந்தா !.....சந்தாக்கள் மட்டும் தான் இன்னமும் தேவை guys....." என்ற கானா பாடிக் கொண்டே ஜனவரியின் பாக்கி நிற்கும் டிரைலர்களுக்குள் உங்களை இட்டுச் செல்கிறேன்..!
ப்ளூகோட் பட்டாளத்தின் கதைத் தொடரில் பிரெஞ்சிலும் சரி ; ஆங்கிலத்திலும் சரி - ஒரு முக்கிய இடம் பிடிக்கும் இந்தக் கதைக்கு ஒரிஜினல் டிசைனையே பயன்படுத்தியுள்ளோம் - லேசான கலர் மாற்றங்களோடு ! Hope you like our cover ! தொடர்வது உட்பக்கத்தின் ஒரு டீசர் !
வழக்கம் போல் வடக்கும்-தெற்கும் முட்டிக் கொள்ளும் உள்நாட்டுப் போரே கதையின் களம் ! நிஜ சம்பவங்களை கதையின் போக்கினூடே லாவகமாய் இணைத்து யுத்தங்களின் அர்த்தமின்மையை ; தோல்வி தரும் தண்டனைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவது கதாசிரியர் கௌவினின் ஸ்பெஷல் பாணி ! இந்தக் கதையிலும் 1850-களில் அமெரிக்காவில் நிறுவப்பட்டிருந்த Andersonville சிறைக்கூடத்தையும் அங்கே நிலவிய கொடூரமான வாழ்க்கையையும் தழுவி சம்பவங்களை அமைத்துள்ளார் ! கார்ட்டூன் பாணியில் சொல்லப்பட்டுள்ள கதை என்பதால் படித்து ; சிரித்து விட்டு நாம் நகன்று விடுவோம் ; பின்னணியில் நிற்கும் அந்த வரலாறோ ஏராளமான ரணங்களுக்கு சாட்சி ! இது அந்தச் சிறையின் அந்நாட்களது போட்டோ !
ஜனவரியின் black & white கச்சேரிக்கு அச்சாரம் போடக் காத்திருக்கும் நமது இளவரசியின் முறை இப்போது - அட்டைப்படத்தில் தன வதனத்தை நமக்குக் காட்ட ! இதோ - நீண்டதொரு இடைவெளிக்குப் பின்னே ஆஜராகும் மாடஸ்டி ப்ளைசியின் "நிழலோடு நிஜ யுத்தம்" இதழின் அட்டைப்படம் ! இது நமது ஓவியர் மாலையப்பன் கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பாக வரைந்திருந்த டிசைன் ! இடையில் ஒரு கும்பகர்ணத் தூக்கத்தில் நாம் லயித்துப் போனதாலும் ; 2012-ல் விழித்து எழுந்த பின்னேயும் கூட மாடஸ்டிக்கு அதிக வாய்ப்புத் தராக் காரணத்தால் இந்த டிசைன் உள்ளேயே துயில் பயின்று வந்தது ! இதோ - கிடைத்த முதல் சந்தர்ப்பத்தில் 'ஜிங்' என வெளியே பாய்ந்து விட்டார் !
எப்போதோ ஒரு பதிவில் மாடஸ்டியின் கதைகளுக்கான வானுயர்ந்த ராயல்டி கட்டணங்கள் பற்றி நான் பதிவிட்டிருந்ததாய் ஞாபகம் ! இங்கிலாந்தின் படைப்பான மாடஸ்டிக்கு நாம் அனுப்பும் பணமும் அவர்களது கரன்சியான பௌண்ட் ஸ்டெர்லிங்கில் இருந்தாக வேண்டும் ; 'ஜம்'மென்று 100 ரூபாயில் அமர்ந்திருக்கும் பௌண்ட் நம் முதுகை செமையாய்ப் பதம் பார்க்கிறது ! இதன் பலனாய் மாடஸ்டியின் கதைகள் தாங்கி வரும் இந்தாண்டின் 2 black & white இதழ்கள் மட்டும் குறைவான பக்கங்களோடு வெளிவரும். So - 'விலை-பக்கங்கள் தொடர்பான equation ' மாடஸ்டிக்கு மாத்திரம் ஒத்து வராது ! Hope for your understanding please..! 'அவ்வளவு பணம் தந்து மாடஸ்டியைப் போட்டுத் தான் தீரணுமா ? ' என்று உங்களில் சிலரின் மைண்ட்வாய்ஸ் கேள்வி எழுப்பத் தயாராகும் முன்பாகவே நானே பதில் சொல்ல முந்திக் கொள்கிறேனே ! மாடஸ்டிக்கு இன்னமும் நம்மிடையே நிறைய ரசிகர்கள் உள்ளனர் என்பதோடு - மகளிர் அணியிலும் இதற்கென ஒரு ஈர்ப்பும், வரவேற்பும் உள்ளது என்பதை நானே பார்த்திருக்கிறேன் ! கடந்த 3 சென்னைப் புத்தக விழாக்களிலும் 'மாடஸ்டி இல்லையா ?' என்ற ஏமாற்றக் குரல்களை நிறைய முறை கேட்டவன் என்ற முறையில் மாடஸ்டிக்கு சின்னதாய் ஒரு சாளரத்தைத் திறந்து வைப்பதில் தவறில்லை என்றே நினைத்தேன் ! அவசரம் அவசரமாய் மாடஸ்டியை ஜனவரிப் பட்டியலுக்குள் நான் நுழைத்ததும், சென்னை விழாவினை மனதில் கொண்டே ! (விழா நடக்கவிருக்கும் மைதானத்தில் நமக்கு இடமிருக்குமா ? - அல்லது அமைப்பாளர்களின் இதயத்தில் மட்டுமேவா ? என்பது இன்னமும் விடையறியாக் கேள்வி ! )
அப்புறம் - ஜனவரியின் முதல் 5 -ல் எனது பணிகள் ஏதும் பாக்கியில்லை என்பதால் அடுத்த 5-ன் மீதான லயிப்பில் எனது நாட்கள் நகர்கின்றன ! நமது கூர்மண்டையருக்கும் ; CID லாரன்ஸ் சாகசதிற்கும் அட்டைப்படங்கள் சூப்பராக அமைந்திருப்பதாய் மனதுக்குப்பட்டது ! அதையும் இப்போதே இங்கே களமிறக்க ஆசை தான் எனினும், தொடரும் நாட்களுக்கு ஒரு சின்ன சுவாரஸ்யத்தைத் தக்க வைக்கும் பொருட்டு அடக்கி வாசிக்கச் சொல்கிறார் பெவிகால் பெரியசாமி ! மாயாவி & ஜானி நீரோவின் பட்டி டின்கெரிங்க் வேலைகள் தொடரும் வாரத்தில் நடக்கும் என்பதால் - அவையும் அழகாய் அமைந்துவிட்டால் சந்தோஷப்படுவேன் ! இந்த மறுபதிப்புப் படலத்தின் தொடர்பானதொரு மிகப் பெரிய சந்தோஷம் ஒன்றினையும் உங்களோடு பகிர்ந்திடா விட்டால் - என் தலை 'பூம் பூம் படலத்தில்' வரும் நைட்ரோ இல்லாமலே வெடித்துப் போய் விடும் ! 2013-ன் துவக்கத்தில் இதே மறுபதிப்புப் ப்ரொஜெக்ட் துவங்கிய சமயம் - ஆறு மாதக் காத்திருப்பின் பின்பும் கூட 75 சந்தாக்கள் கூடத் தேறாது போனதும் ; அந்த முயற்சியையே ஓரம் கட்டியதும் நிச்சயம் நான் மறந்திருக்கவில்லை ! இம்முறை அதே மறுபதிப்புச் சங்கதியை தைரியமாகத் தூக்கிப் பிடிப்பது போல் வெளிப்பார்வைக்கு 'பில்டிங் செம ஸ்ட்ராங் ' என்று உடான்ஸ் விட்டுத் திரிந்த போதிலும், உள்ளுக்குள்ளே ' ஆத்தா..மகமாயி...இந்தத் தடவையாச்சும் மண்ணைக் கவ்வாமல் தப்பிச்சால் தேவலையே !!' என்ற சிந்தனை ஓடாமலில்லை ! இம்முறையோ - ஒரு 20 நண்பர்கள் நீங்கலாக - பாக்கி அத்தனை பேருமே மறுபதிப்புக்கும் சேர்த்துப் பணம் அனுப்பியுள்ளனர் ! அதே போல கிராபிக் நாவல்களுக்குமே சிறிதும் தொய்வில்லா சந்தாக்கள் ! மொத்த எண்ணிக்கை இன்னமும் 2014-ன் நம்பரை எட்டிப் பிடிக்கவில்லையென்றால் கூட - இதுவரையிலான பெரும்பான்மை A+B+C -என மூன்று packages-க்கும் சேர்ந்தே பதிவாகியுள்ளது மனதுக்கு நிறைவைத் தருகிறது ! Thanks a ton all !
ஜனவரியின் second 5-ன் இறுதி வெளியீடான பௌன்சரும் கிட்டத்தட்ட ரெடி என்றே சொல்லலாம் ! இதழின் பணிகளோடு மாத்திரமே நாங்கள் தயாரென்று இல்லாமல் - வானவில்லின் வர்ணங்களைப் போல படு கலர்புல்லாக அதற்குக் கிட்டப் போகும் வரவேற்புக்கும் / விமர்சனங்களுக்குமே சிறிது சிறிதாய்த் தயாராகி வருகிறோம் ! கதையின் சுவாரஸ்யத்துக்கு சிறிதும் சளைக்காது பௌன்சரின் aftermath இருந்திடுமென்பதைப் புரிந்திட நிச்சயமாய் ஞாபக மறதிக்கார நண்பர் XIII -க்குக் கூட சிரமம் இராது ! So வழக்கம் போல - 'fingers crossed ' என்பதோடு திருப்திப்பட்டுக் கொள்ளாமல் - arms, legs, fingers & toes crossed !! என்று சொல்லி வைத்துக் கொள்கிறேன் !
கடந்த பதிவின் பின்னூட்டங்களில் நண்பர் செல்வன் அபிராமி - நமது இந்த blog -க்கு வயது 3 என்பதைச் சுட்டிக்காட்டியிருந்தார் ! அங்கேயே சந்தோஷப் பகிர்வாய் இரண்டு வரிகளை டைப்படித்து விட்டு நான் நகர்ந்திருக்கலாம் தான் ; ஆனால் சூப்பர்மேனுக்கு அவதாரம் மாற்றிடக் கிட்டும் டெலிபோன் பூத் போல - கடந்த மூன்றாண்டுகளாய் எனக்கு ரீசார்ஜ் செய்யும் தளமாய் / களமாய் இருந்து வரும் இந்த வலைப்பக்கத்திற்கும் ; அதனை தளராது நகரச் செய்யும் உங்களுக்கும் ஒரு casual நன்றி சொல்லி விட்டு நகர்வது நியாயமாகாதே !
'இது இத்தனை பெரிதாய் வளரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை ; ஆனை-பூனை...blah blah ' என்றெல்லாம் தியாகராஜ பாகவதர் காலத்து டயலாக்குகளை நான் எடுத்து விடப் போவதில்லை ! Simply because - இந்த வலைப்பதிவைத் துவக்கிய தருணங்களில் காமிக்ஸ் என்றொரு சமாச்சாரத்தையே 2012-ன் நடுப்பகுதி வரையிலாவது தொடர்வேனா என்பதே எனக்குத் தெரிந்திரா ஒரு விஷயமாக இருந்தது ! மலை போல முந்தைய இதழ்களின் கையிருப்பு (கிட்டத்தட்ட 140 ரகங்கள் !!) ; மளிகைக் கடைச் சிட்டையைப் போல நீளும் ஏஜெண்ட்களின் நிலுவைப் பட்டியல் ; பத்து ரூபாய்க்கு வெறும் 4000 பிரதிகள் அச்சிட்டால் அதனில் பாதி நம்மிடமே குந்திக் கொண்டு பல்லைக்காட்டும் நோவு ; நம் ஓவியர்கள் அனைவருமே எங்கெங்கோ சிதறிச் சென்றிருந்த நிலை என்ற சூழலுக்கு மத்தியில் பெருசாய் கற்பனைகளுக்கோ ; ஆடம்பரத் திட்டமிடல்களுக்கோ என்னிடம் அன்றைக்கு துளியும் 'தம்' இருக்கவில்லை என்பது தான் யதார்த்தம் ! கடையை மொத்தமாய் மூடி விட்டால் - ஏஜெண்ட்களிடம் நிற்கும் பாக்கித் தொகை ஊற்றி மூடி விடுமே என்ற பயம் மேலோங்கி நின்றதால் தான் தட்டுத் தடுமாறியபடி வண்டியை ஒட்டிக் கொண்டிருந்தோம் ! 2012-ன் ஜனவரியில் சென்னை புத்தக விழாவிற்கு COMEBACK SPECIAL இதழினைத் தயார் செய்த போது கூட 'என்னத்த comeback ; என்னத்த ஸ்பெஷல்...!' என்ற ஒரு வித நெகடிவ் மனப்பாங்கிலேயே தானிருந்தேன் ! 2011-ல் என்னுள் விரவிக் கிடந்த அந்த நம்பிக்கையின்மையை அவ்வப்போது கரைத்து வந்த புண்ணியம் நமது இன்றைய ஜூனியர் எடிட்டரையே சாரும் ! ஒவ்வொரு காக்கைக்கும் அதனதன் குட்டிகள் தங்கமாய்த் தோன்றுவது சகஜமே என்ற ரீதியில் எனது சிலாகிப்பும் சில amused looks & புன்னகைகளை உருவாக்கலாம் தான் - ஆனால் நான் சிறிதும் மிகைப்படுத்தலின்றிச் சொல்லும் நிஜமிது ! கீழ்க்கண்ட இந்த MS Word பைல் 2011 ஜூலையில் விக்ரம் டைப் செய்து எனக்கொரு பிரிண்ட் அவுட் எடுத்துக் கொடுத்த பக்கம் ! இன்று வரை எனது வீட்டுக் கம்பியூட்டரில் இதனைப் பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டு அவ்வப்போது இதை நான் பார்ப்பது எனது பிரியமான பொழுதுபோக்கு ! இன்று நடைமுறையில் நாம் அரங்கேற்றி வரும் அத்தனை விஷயங்களும் அவன் அன்றைக்கே டைப் செய்த பைலில் உள்ளதைப் பார்க்கும் போது இன்றைய தலைமுறைகளின் சிந்தனை வேகங்களை எண்ணி மலைக்காது இருக்க முடியவில்லை !
25+ ஆண்டுகளின் அனுபவம் கொண்டிருந்த ; நாலு எருமை வயதிலான எனக்கு - இவை சகலமும் ஒரு விளையாட்டுப் பிள்ளையின் பொழுதுபோகா தருணத்தின் சிந்தனையாய் மட்டுமே அன்றைக்குத் தோன்றியது ! ஆனால் விடாப்பிடியாய் அவன் செய்த நச்சரிப்புகள் என்னை சிறுகச் சிறுக அசைத்துப் பார்க்க ; நமது சென்னை நண்பர்களின் நச்சரிப்பும் அதே வேளையில் இணைந்து கொள்ள - ஒரு மாதிரியாய் 2012 ஜனவரியில் சென்னைப் புத்தக விழாவினில் ஒரு இரவல் ஸ்டாலில் தலைகாட்டினோம் ! அது நாள் வரை மண்ணுக்குள் தலை புதைத்துக் கிடக்கும் தீக்கோழியைப் போன்றிருந்த எனக்கு முதன்முறையாக அங்கே கிட்டிய விற்பனையும், வரவேற்பும் ஒரு eye -opener என்று சொல்லலாம் ! கையில் குவிந்து கிடந்த முந்தைய இதழ்களை பண்டல் பண்டலாய் அந்த வருடம் விற்ற நினைவுகள் ஒரு பக்கம் ; அது கொண்டு வந்த 2.50 லட்சங்களை நினைத்து பட்ட சந்தோஷம் இன்னொரு பக்கமென அவை எதுவுமே இன்னமும் நினைவை விட்டு அகலவில்லை !
அதற்கு ஓரிரு வாரங்கள் முன்பாகத் தான் என் பிள்ளையின் அனற்றலின் இன்னொரு பரிமாணமாக இருந்து வந்த 'blog கோரிக்கைக்கு' நான் ஒரு மாதிரியாகத் தலையசைத்து எழுதத் துவங்கியிருந்தேன் ! 'முக்கி-முக்கி எழுதினால் 2 மாதம் ; அதன் பின்னே வழக்கம் போல் முருங்கை மரம் ஏறி விடுவோம் ; புள்ளையாண்டனும் அதுக்குள் மறந்து போய் விடுவான் !' என்பதே அன்றைக்கு என் அடிமனது மைண்ட் வாய்ஸ் ! ஆனால் எனக்குள் லேசாய் சில மாற்றங்கள் நிகழ்ந்திருந்ததை சிறுகச் சிறுக உணர முடிந்தது ! சென்னையில் உங்களை சந்தித்தான அனுபவங்களும் ; COMEBACK ஸ்பெஷல் இதழுக்குக் கிடைத்த வரவேற்பும் ; உடனிருந்து கொண்டு என்னை நச்சரித்தே வேலை செய்யச் செய்து கொண்டிருந்த ஜூனியரின் பிடிவாதமும் காமிக்ஸ் பக்கமாய் திரும்பவும் ஒரு உத்வேகத்துடன் என்னைத் திரும்பிப் பார்க்கச் செய்தது ! சரியாக அதே தருணத்தில் இந்த வலைப்பதிவில் நீங்களும் படு உற்சாகமாய் பங்கேற்கத் துவங்கிய போது எனது தளர்நடை ஒரு துள்ளலாக மாற்றம் கண்டது ! Guys....உங்கள் முதுகுகளை வருடி விட்டு - உங்களிடம் 'செண்டிமெண்ட் சீன' போட்டு நல்ல பிள்ளையாகும் முயற்சியல்ல நிச்சயமாய் ! ; மனதின் ஆழத்திலிருந்து வரும் நிஜத்தின் வெளிப்பாடே இது !சமீப காலங்களில் "வெற்றி" என்று நாம் ஏதேனும் ஈட்டி இருப்போமெனில் அதன் முழு முதல் பங்கும் இங்குள்ள ஒவ்வொருவரையுமே தான் சாரும் !
கிட்டத்தட்ட 200 பதிவுகளை நெருங்கும் இந்த 3 ஆண்டு அவகாசத்துள் நான் படித்துள்ள பாடங்கள் தான் எத்தனை ! ஒவ்வொரு கதையையும் நான் இத்தனை நாளாய்ப் பார்த்து வந்த கோணங்களுக்கும் , இன்று உங்களின் இடங்களிலிருந்து பார்க்க முயற்சிக்கும் வேளையில் புலனாகும் கோணங்களுக்கும் மத்தியில் எத்தனை வேற்றுமைகள் ! 'முணுக்' என்ற மாத்திரத்தில் கோபப்படும் எனக்குப் பொறுமையைக் கற்றுத் தந்துள்ளது இந்தத் தளம் ! 'அட..நான் பார்க்காத காமிக்ஸ் உலகா..?' என்று காலரைத் தூக்கித் திரிந்தவனது திமிரை உங்கள் ஒவ்வொருவரின் விஷய ஞானமும் கரைத்தது இங்கே தானே ?! 'ஈகோ'வை go ! go ! என்று சொல்வதால் கிடைக்கும் நட்பை நான் உணர்ந்தது இங்கே தானே ?! எங்கெங்கோ தூரங்களில் ; தேசங்களில் வசிக்கும் முகம்பார்த்திரா வாசகர்களும் என்னை ஒரு தோழனாய் ஏற்றுக் கொள்ள வழி செய்து தந்ததும் இந்த வலைப்பக்கம் தானே ! அசாத்திய உற்சாகங்களோடு இந்தத் தளத்தை ஜீவிக்கச் செய்து வரும் நண்பர்கள் அனைவருக்கும் இங்கே ஒரு ராட்சச 'தேங்க்ஸ்' சொல்லும் கடமை எனக்குண்டு !
அதே போல - ஏதோ காரணங்களினால் எனது அணுகுமுறைகளோ ; எனது அபிப்ராயங்களோ ; நண்பர்களில் சிலருக்கு மனத்தாங்கல்களை ஏற்படுத்தி இருக்கலாமென்பதில் ரகசியம் ஏதும் கிடையாது தான் ! ஒவ்வொரு புதிய நாளும் ஒரு புதிய விடியல் என்ற முறையில் நான் நேற்றைய சங்கடங்களை மறு நாளுக்குச் சுமந்து செல்ல விரும்புபவனல்ல ! So மாற்றுக் கருத்துக்கள் கொண்டிருக்கும் நண்பர்கள் கூட தத்தம் விதங்களில் நம் வளர்ச்சிக்கு உதவும் தூண்டுகோல்கள் என்பதை நான் ஒரு போதும் மறக்க மாட்டேன் ! அவர்களுக்கும் நன்றி சொல்லாது போனால் அது நியாயமாகாதே !! நிறைய சந்தோஷங்கள் ; நிறைவான தருணங்கள் மட்டுமன்றி சில சங்கடமான வேளைகளையும் நாம் கடந்து வந்திருப்பதால் இங்கு எனக்குக் கிட்டியுள்ள அனுபவம் ஒரு அசாத்திய ரகம் என்பதில் துளியும் சந்தேகமில்லை !
பலருக்கு சந்தோஷக் காரணியாய் ; சிலருக்கு எரிச்சலின் ஊற்றாய் ; இன்னும் சிலருக்குப் பரிகாசத்தின் பண்டமாய் நான் காட்சி தந்தாலும் - எங்கோ ஒரு சிறுநகரில் முகமின்றித் திரிந்தவனுக்கு இத்தனை மாந்தர்களின் அண்மையை ஈட்டித் தந்த வகையில் இந்தத் தளத்துக்கு நான் என்றும் கடமைப்பட்டிருப்பேன் ! This has been a wonderful experience without a doubt !
நமது பயணத்தில் ஒரு மறக்க இயலா ஆண்டுக்கு விடை கொடுக்கும் இந்தப் பதிவை இத்தோடு 'சுபம்' போட்டுவிட்டு புறப்படுகிறேன் - மீண்டும் அடுத்த வாரம் ; புத்தாண்டின் முதல் பதிவோடு சந்திக்கும் பொருட்டு ! அது வரை adios amigos & muchas gracias ! And அனைவருக்கும் அட்வான்ஸ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !
P.S :www.lion-muthucomics.com என்ற நமது வலைத்தலதினில் இனி உங்களின் Debit Cards / Credit Caards பயன்படுத்தி நமது இதழ்களை வாங்கிடலாம் ! Paypal முறையும் சீக்கிரமே அமலுக்கு வந்திடும் ! அதற்கான ஏற்பாடுகளை நமது டாக்டரின் புதல்வரின் உதவியோடு செய்துள்ளோம் !
அதே போல www.lioncomics.in என்ற நமது புதுத்தளத்திலும் ஆன்லைன் விற்பனைக்கான ஏற்பாடுகள் சீக்கிரமே ரெடியாகி விடும் ! இது ஜூ.எ.வின் கைங்கர்யம் !