நண்பர்களே,
வணக்கம். கார்த்திகை மாதங்கள் எப்போதுமே ரம்யமானவை ; வாசல்தோறும் அகல்விளக்குகள் ; அந்தப் பொரிகடலை உருண்டைகள் ; மப்பும் மந்தாரமுமான வானிலை என்று ரசிக்க நிறைய விஷயங்களைத் தன்னில் கொண்டது ! இம்முறையும் பொரிகடலை உருண்டைகளும், அகல்விளக்குகளும் இருந்தன தான் ; ஆனால் அந்த அகல்விளக்குகள் வாசலுக்கு மட்டுமல்ல - வீட்டுக்கும் சேர்த்தே ஒளி தர ஓவர்டைம் உத்தியோகம் பார்க்க வேண்டிப் போய் விட்டது தான் பரிதாபமே ! சுருக்கமாய்ச் சொன்னால் - நித்தமும் 10 மணி நேர மின்வெட்டு ; அதிலும் பணி செய்திடக் கூடிய பகல் வேளைகளில் 6 மணி நேரங்கள் சுத்தமாய் மின்சாரம் கிடையாது ! மாலைகளில் ஆறு முதல் நள்ளிரவு வரை ஒரு மணிக்கொரு தடவை கண்ணாமூச்சி ஆட்டம் - மின்சாரத்தோடு ! எங்கே அடித்தாலும் தாக்குப் பிடிக்கும் ஆற்றல் சிவகாசிக்கு உண்டு என்ற ஒரு வித இறுமாப்பு எங்கள் நகரத்துக்கு உண்டென்பதில் ரகசியம் கிடையாது தான் ; ஆனால் பிராண வாயுவை நெரிக்கும் போது எங்களுக்கும் மரண பயம் நேருமென்பதை கோடையின் 16 மணி நேர மின்வெட்டு உச்சங்கள் அப்பட்டமாக்கின என்றால் - தற்சமய இருள் போர்வைகள் அதனை மீண்டுமொருமுறை பூதாகரமாக்கி வருகின்றன ! நம்மிடம் ஜெனரேடர் வசதி உண்டென்ற போதிலும், இதர பணிகள் சகலமும் வெளியிலுள்ள வெவ்வேறு துறைகளில் இருந்து பூர்த்தி ஆகிட வேண்டும் எனும் போது அங்கெல்லாம் சொல்லி மாளா சுணக்கங்கள் ! தட்டுத் தடுமாறி டிசம்பரை கரை சேர்க்கும் முன்பாக எங்கள் டீமின் அனைவருக்கும் திடுமென்று தலை நரைத்திடும் போலொரு பிரமை ! (அடடே --கேசத்தின் வெண்மைக்கு இப்படியும் ஒரு விளக்கம் தரலாமோ ?)
ரிப்போர்டர் ஜானி ஸ்பெஷல் + டைகரின் "வேங்கையின் சீற்றம்" + சிக் பில் ஸ்பெஷல் அச்சுப் பணிகள் முடிந்து வாரம் ஒன்றுக்கு மேலாகி விட்டது ; பைண்டிங்கில் பணி முடிக்க தாமதம் ஆகி வரும் போதிலும் இவ்வார இறுதியினில் மூன்றுமே நம்மிடம் வந்து சேர்ந்திருக்க வேண்டும் ! இதழ் # 4 - கூர்மண்டையர் டயபாலிக் தோன்றும் "OPERATION சூறாவளி " வரும் செவ்வாய்க்குள் எப்படியேனும் தயார் ஆகி விடும். So டிசம்பர் 4 தேதிக்கு அனைத்து இதழ்களையும் despatch செய்திடுவோம். அருள் கூர்ந்து அது வரை பொறுமை காத்திடக் கோருகிறேன் ப்ளீஸ் ?! கோடையின் உச்ச பட்ச மின்வெட்டு வேளைகளில் கூட, பகலில் 6 மணி நேர மின்சாரம் இருந்து வந்தது ; ஆனால் இம்முறையோ அந்தக் கருணைக்கும் வழி இல்லை என்பதால் - காலை முதல் மாலை வரை ஆபீசில் ஈயோட்டும் வேலை மட்டுமே சாத்தியமாகிறது ! Anyways, 2013-ன் இறுதி black & white இதழின் preview இதோ :
முன்னட்டை நம் ஓவியரின் கைவண்ணம் - டிஜிட்டல் சேர்க்கைகள் ஏதுமின்றி ! பின்னட்டையோ - சில மாதங்கள் முன்பாக நமது வாசக நண்பர் சண்முகசுந்தரம் தயார் செய்து அனுப்பி இருந்ததொரு டிசைன் ! அந்த metalic வண்ணம் அச்சிடச் சிரமம் தரக் கூடியதென்பதால் இதனை பயன்படுத்திடாது இருந்தோம் ; but this is too good a design to hibernate என்று தோன்றியதால் பின்னட்டையிலாவது போடுவோமே என நினைத்தேன் ! நண்பருக்கு நமது நன்றிகள் ! வழக்கம் போல் டயபாலிக் பரபரப்பானதொரு action மேளாவோடு உங்களைச் சந்திக்கக் காத்துள்ளார் ! 'நொடிக்கொரு முகமூடி' - என்ற அந்த டயபாலிக் முத்திரை இக்கதையில் அ-ழு-த்-த-மா-க பதிந்திருப்பதைப் பார்த்திடப் போகிறீர்கள் ! சித்திரத் தரம் as always awesome ! பாருங்களேன் ஓவியரின் மாயாஜாலங்களை !!
Creativity பற்றிய தலைப்பில் நாமிருக்கும் போதே நம்மிடையே உறையும் திறமைகளுக்கு லேட்டஸ்ட் மாதிரி ஒன்றினை உங்களுக்குக் காட்டியே தீர வேண்டும் நான் ! "புதிய தலைமுறை" இதழினில் முழுப்பக்க வண்ண விளம்பரம் செய்திட திட்டம் இருப்பதாக நான் கடந்த பதிவில் எழுதி இருந்தேன் அல்லவா - இதோ அதற்கென நண்பர் ரமேஷ் குமார் தயார் செய்து அனுப்பி இருக்கும் அட்டகாசம் !
சென்னை புத்தக விழாவினில் நமக்கொரு ஸ்டால் கிட்டிடும் பட்சத்தில் அங்கு display செய்திடக் கூடிய banner களில் இந்த டிசைனும் ஒன்றாக இருந்திடும் ! Wonderful job sir ! Thanks a ton ! அதே மூச்சோடு - நண்பர்களின் creativity -க்கு இன்னமும் ஒரு சவாலை முன்வைக்கப் போகிறேன் ! "சன்ஷைன் கிராபிக் நாவல்" இதழ்களுக்கென ஒரு பிரத்யேக logo டிசைன் பண்ணி அனுப்பிடுங்களேன் ? அழகாய் அமைந்திடும் logo ஜனவரி முதலாய் துவங்கிடவிருக்கும் இந்த கிராபிக் நாவல் இதழ்களின் அட்டைப்படங்களை அலங்கரிக்க உதவிடுமே ?
கிராபிக் நாவல்கள் பற்றிய mention எழும் போது அதனில் தலை காட்டிடக் காத்துள்ள இன்னுமொரு ஆசாமியை அறிமுகம் செய்திடும் கடமை எனக்குள்ளது ! இவர் நமக்கு ரொம்ப காலமாகவே தெரிந்தவர் தான் ...ஆனால் இவருக்கென ஒரு தனி இதழ் ஒதுக்கிடப்படும் என்று நிச்சயமாய் நாம் எதிர்பார்த்திருக்க மாட்டோம் - ஏனெனில் ஆசாமியின் தொழில் அத்தகையது ! Yes , "இரத்தப் படலம்" கதைத் தொடரில் ஜனாதிபதி ஷெரிடனை சுட்டு வீழ்த்தும் ஒரிஜினல் கொலையாளியான ஸ்டீவ் ரோலாண்ட்டின் கதை "காலனின் கைக்கூலி " என்ற பெயருடன் ஒரு single shot album ஆக முழு வண்ணத்தில் வரவிருக்கிறது ! சதித் திட்டத்தில் இவனது பங்கு பற்றிய சித்தரிப்பு மிக சுவாரஸ்யமாய்ச் சொல்லப்பட்டுள்ளதை இந்த ஆல்பம் நமக்குக் காட்டவுள்ளது. ! Don't miss it !
2013-ன் சகல இதழ்களும் ஒரு வழியாய் நிறைவு காண்பதால் - எங்களின் focus ஏற்கனவே 2014-க்குத் தாவியாகி விட்டது ! ஜனவரியில் வெளிவரக் காத்துள்ள இதழ்களின் பட்டியல் இதோ :
- லயன் காமிக்ஸ் : "யுத்தம் உண்டு...எதிரி இல்லை" (கமான்சே) - ரூ.60
- முத்து காமிக்ஸ்: "சாக மறந்த சுறா" (ப்ரூனோ பிரேசில் ) - ரூ.60
- சன்ஷைன் லைப்ரரி : "பயங்கரப் புயல் "(கேப்டன் பிரின்ஸ்) - ரூ.60
- சன்ஷைன் கிராபிக் நாவல் : "பிரபஞ்சத்தின் புதல்வன் " - ரூ.60
இவற்றிற்கான பணிகள் ஏற்கனவே பாதிக்கும் மேல் நிறைவாகி விட்டன ! தொடரும் நாட்களும் இதே இருளில் தான் தொடர்ந்திடக் காத்திருக்கும் பட்சத்தில் - மாதாமாதம் 'டிரௌசரைக் காணோம் நண்பர்களே !' என கானம் பாட நிச்சயம் எனக்கு உத்தேசம் இல்லை ! உங்களின் சந்தாக்களை ஆவலாய் நாங்கள் எதிர்பார்க்கும் வேளை இதுவே என்பதால் - இம்மாத பட்ஜெட்டில் நம்மையும் கணக்கில் இணைத்துக் கொள்ளுங்களேன் - ப்ளீஸ் ?
Before I sign off - இதோ இன்னுமொரு போட்டி - KBGD 2 (Kaun Banega Graphic Designer 2) ! ஜனவரியின் "பயங்கரப் புயல்" மறுபதிப்புக்கு அட்டைப்படம் டிசைன் செய்திட ஆர்வம் கொண்ட நண்பர்கள் விண்ணப்பிக்கலாம் ! டிசம்பர் 10 தேதிக்குள்ளாக உங்களின் ஆக்கங்கள் நம்மைச் சேர்ந்திட வேண்டும் ! இம்முறை வெற்றி பெறும் போட்டியாளரின் போட்டோ அந்த இதழினில் பிரசுரமாகும் ; ரூ.1000 கிப்ட் செக் எனும் கொசுறோடு ! Give it a shot guys ? KBT -3 (மொழிபெயர்ப்புப் போட்டி )-ன் முடிவுகளை டிசம்பர் இதழ்களை despatch செய்திடும் காலையில் இங்கு அறிவிக்கிறேன் ; நிச்சயம் அதனில் சுவாரஸ்யங்கள் காத்துள்ளன என்பது மட்டும் உறுதி ! Bye for now....see you soon folks !