வணக்கம். நல்ல நாளைக்கு நான் தூங்கினாலே ஒன்றரைக்கண் மட்டுமே மூடியிருக்க, கிட்டே இருப்போர்க்கு நான் முழித்திருக்கிறேனா ? தூக்கத்தில் ஆழ்ந்து கிடக்கிறேனா ? என்ற சந்தேகம் எழுவது சகஜம் ! In fact நண்பர்களாய் எங்கேனும் ஊர்களுக்குப் போகும் போது நான் முழித்துக் கிடக்கிறேன் என்ற நினைப்பில் என்னுடன் பேசுவதாக நினைத்தபடிக்கே யாராவது எதையாவது பேசிக் கொண்டிருப்பதும், ரொம்ப நேரமாய் 'ஊம்' கொட்டக் காணோமே என்ற சந்தேகத்தில் கிட்டக்க வந்து பார்த்து நான் தூங்கி மாமாங்கம் ஆனதை உணர்ந்து கடுப்பான அனுபவங்கள் எக்கச்சக்கம் ! இந்த அழகில் பின்னிரவு மூன்று மணிக்கு பிசாசாட்டம் எழுந்து உட்கார்ந்தபடிக்கே இந்தப் பதிவை டைப்பும் போது - கால்வாசிக் கண்ணே திறந்து கிடப்பதால் - இம்மாத லக்கி லூக் சாகசத்தில் தலைகாட்டிடும் 'கிறுக்கு ஓநாய் - முறுக்கு ஓநாய்' பாணியில் சில பல எழுத்துப் பிழைகள் தலைக்காட்டிடக்கூடும் ; மன்னிச்சூ ப்ளீஸ் !!
இந்தியா ஸ்ரீ லங்காவைத் துவைத்துத் தொங்கப் போடுவதைப் பார்த்த கையோடு மருவாதையாய் 11 மணிக்கே படுக்கைக்குப் போயெல்லாம் விட்டாச்சு ! ஆனால் நள்ளிரவைத் தாண்டிய வேளையில் - 'அ
ட..தென் ஆப்ரிக்காவும், ஆஸ்திரேலியாவும் ஆடும் இன்னொரு மேட்ச் என்னாச்சோ ?' என்ற curiosity-ல் போனை லேசாய் நோண்டத் துவங்கினால், அங்கே ரவுசு கிளப்பும் ஆட்டம் தீயாய் ஓடிக் கொண்டிருப்பது புரிந்தது ! அப்புறமென்ன - அந்த மேட்சின் தலைவிதியோடு, நம்மவர்களின் தலைவிதியும் பின்னிக் கிடப்பதால், கோட்டான் போல இரண்டரை வரைக்கும் தூக்கத்துக்கு டாட்டா காட்டியது தான் பலனாகியது !
'அட்ரா சக்கை..அட்றா சக்கை...அரையிறுதியில் நியூஸிலாந்தோடு மல்லுக்கட்டினால் போதும் !!" என்பது புலனாகிய போது, அகலத் திறந்த ஆந்தை விழிகளுக்கு தூக்கம் திரும்பக் காணோம் என்பதால் லேப்டாப்பைத் தூக்கிக் கொண்டு ஐக்கியமாகி விட்டேன் !!
இந்த ஒன்றரை மாதங்களாய் நம்மவர்களின் "இங்கிலாந்துக் காதல்" தொடர்ந்திடும் சூப்பர் சந்தோஷத்தை உணர்ந்த கையோடு - அரையிறுதியில் சற்றே இலகுவான நியூசி எதிராளிகளைச் சாய்த்து விட்டால் 'சலோ லண்டன்...அப்பாலிக்கா ஒரே வெற்றியே கோப்பைக்கும் நமக்குமிடையே !!" என்ற புரிதலும் கைகோர்க்க - அந்தக் காலத்து சினிமா flashback பாணியில் எனது நினைப்புகள் சகலமும் இங்கிலாந்து மண்ணை நோக்கிப் புறப்பட்டன !! So ஒரு அர்த்தஜாமத்து லண்டன் டயரி 2 இந்த ஞாயிறும் உங்களைப் பதம் பார்க்கக் காத்துள்ளது ! உஷார் people !!
1985 -ல் நமது வண்டி முழுக்க முழுக்க Fleetway குழுமத்தின் அந்த அசாத்தியப் படைப்புகளோடு ஓடிக்கொண்டிருக்க - மாயாவிகளும், லாரன்ஸ்-டேவிட்களும் ; ஸ்பைடர்களும் ; ஆர்ச்சிகளும் நம்மை உந்தி இழுத்துச் சென்று கொண்டிருந்தனர் ! அப்போதெல்லாம் இன்னொரு காமிக்ஸ் பிறப்பிடம் பற்றிய நினைப்பே பெருசாய் எழுந்ததில்லை ! அந்நாட்களில் என் தலைக்குள் ஓடிக்கொண்டிருந்ததெல்லாமே - Fleetway எனும் கரைகளிலா சமுத்திரத்தில் இயன்ற முத்துக்களை ஒன்று பாக்கியின்றிச் சேகரித்து விட வேண்டுமென்ற அவா தான் ! அதிலும் அந்நாட்களில் ராணி காமிக்ஸ் செம வேகமாய்க் களத்தில் நின்று கொண்டிருந்தனர் & அவர்களும் நாம் வாங்கிடும் அதே டில்லி ஏஜெண்டிடமே கதைகளைக் கொள்முதல் செய்து வந்தனர் என்பதால் - தப்பித் தவறி கூட நல்ல தொடர் அவர்கள் பக்கமாய்ப் போய் விடக்கூடாதே என்ற ஆதங்கம் தலைமுழுக்க !! ஏற்கனவே James Bond தொடரை நமக்கு முன்பாக அமுக்கி விட்டார்களே என்ற கடுப்ஸ் விடிய விடிய படுத்தி எடுக்கும் நிலையில் Fleetway ன் ஸ்டார் நாயகர்களை கோட்டை விட்டுடக்கூடாது என்ற தீவிரமே என்னை 1985 ன் பெரும் பகுதிக்கு ஆட்டிப் படைத்து வந்தது !! எனக்கிருந்த ஒரே ராட்சச plus point - Fleetway நிறுவனத்தின் படைப்புகளை ஒரு கேட்டலாக்கில் அடைந்திட எண்ணினால் 1000 பக்கங்கள் கூடப் போறாது என்பதே ! So இதர பதிப்பகங்களைப் போல அவர்கள் ஒருநாளும் பெரிதாய் தமது படைப்புகளை விளம்பரப்படுத்தி கேட்டலாக் ஒன்றை உருவாக்கியதில்லை ! ராணி காமிக்சிலோ Fleetway இதழ்களின் அம்பாரக் குவியல் பற்றிய ஞானம் கொண்டோர் யாரும் லேது என்பதால் - டில்லி ஏஜெண்ட் கைவசம் வைத்திருக்கும் சரக்குகளைத் தாண்டி வேறெதுவினுள்ளும் புகுந்திட அவர்கட்கு சாத்தியப்பட்டதில்லை ! நானோ வீட்டில் இறைந்து கிடந்த British காமிக்ஸ் வாரயிதழ்களுள் புகுந்து வாரா வாரம் எதையாவது தோண்டுவதையே பிழைப்பாகக் கொண்டிருந்தவன் ! "1963-லே Valiant வாரஇதழிலே ஏப்ரல் 12 -ம் தேதி ஆரம்பிக்கிற இஸ்பய்டர் தொடருக்கு ஆர்டர் போடுங்கோ ; 1967-லே டைகர் வாரயிதழிலே வெளியான "குண்டன் பில்லி" க்கு ஆர்டர் போடுங்கோ !" என்று டில்லிக்கு மாசத்துக்கு நான்குவாட்டியாவது ஓலை அனுப்புவது எனது வாடிக்கை ! அவர்களும் எனது ஆர்டரை அப்படியே அட்சரசுத்தமாய் லண்டனுக்கு அனுப்புவார்கள் ; அங்கிருக்கும் அவர்களது records library-ல் மேற்படித் தேடலைச் செய்து, வரிசையாய்க் கதைப் பக்கங்களை தோண்டியெடுத்து - உயர்தர கனத்த ஆர்ட்பேப்பரில் பிரிண்ட் போட்டு டில்லிக்கு அனுப்பிடுவார்கள் ! அங்கிருந்து நம்மை வந்து சேரும் ! So 1984 முதலே இந்தக் குரங்கு வேலையைத் துவக்கியிருந்ததால் - Fleetway-ல் உள்ளோர்க்கு நம்மிடம் நேரடிப் பரிச்சயமில்லாவிடினும் "பிரகாஷ் பப்ளிஷர்ஸ்" என்ற நிறுவனம் குடல் உருவும் குத்தகையை ரெகுலராய் எடுத்து வருவோர் என்ற மட்டுக்கு நன்றாகவே பரிச்சயம் ! சீனியர் எடிட்டர் காலத்திலிருந்தே டில்லியிலிருந்த ஏஜெண்ட்களும் நமக்கு நல்ல பழக்கம் என்பதால் நான் அடிக்கச் செய்யும் அத்தனை லூட்டிகளுக்கும் மறுப்புச் சொல்லாது உடன்படுவர் ! இது தான் நிலவரம் என்றிருக்க, ஒரு சுபயோக சுபதினத்தில் தலை முழுக்க புசு புசுவென கேசம் கொண்டிருந்த ஒரு மீசைக்கார இளம் தொழிலதிபர் பிராங்கபர்ட் புத்தக விழாவுக்குப் பயணமாகிடத் தீர்மானம் ஆன பொழுது - பட்டியலின் உச்சத்திலிருந்து Fleetway நிறுவனத்தினரோடு புத்தக விழாவிலேயே சந்திப்பு நடத்துவது & தொடரும் நாட்களில் லண்டனுக்கே நேரில் போய் இத்தனை காலமாய்த் தொலைவிலிருந்து உருவி வந்த குடல்களின் பரிமாணங்களை நேரடியாய் ஆராய்வது தான் !!
Frankfurt-ம் வந்தது ; அழகானதொரு டபுள் ஸ்டாலில் Fleetway-ன் பிரதிநிதிகளை வெட வெடப்போடு சந்திக்கவும் செயதேன் ! தயங்கித் தயங்கி நமது விசிட்டிங் கார்டை நீட்டியவனை நிமிர்ந்து பார்த்த மனுஷனின் முகத்தில் மறு கணமே ஒரு விசாலமான புன்னகை விரிந்தது !! "
ஆஹ்ஹா.....எங்களது காமிக்ஸ்களை பற்றி, எங்களை விடவும் ஜாஸ்தி ஆராய்ச்சி செய்து வரும் நிறுவனத்திலிருந்து வருகிறீர்களாக்கும் ?" என்றபடிக்கே கையை இறுகப் பற்றிக் குலுக்கியவர் தான் Fleetway-ன் காமிக்ஸ் உரிமைகள் விற்பனைப் பிரிவின் பிரதிநிதி Mr.Bas Sprately என்பதை தொடர்ந்த நிமிடங்களில் தெரிந்து கொண்டேன் ! அவருக்கு கிட்டத்தட்ட 45 வயதிருக்கும் என்ற யூகம் எனக்கு ; கனத்த பிரிட்டிஷ் உச்சரிப்பில் மட மடவென்று பேசிக்கொண்டே போக - எனக்கோ அதுவரையிலும் தலைக்குள் ஓடிக்கொண்டிருந்த ஒரு நூறு வினவல்கள் போனயிடம் தெரியலை ! 'பேபே பேபேபே' என்று எதையோ பேசி வைத்துக் கொண்டிருந்தேன் ! "
புத்தகவிழா முடிந்த பிற்பாடு எப்படியும் லண்டன் வருவதாக உள்ளாய் தானே? - அங்கே விரிவாய்ப் பேசிக் கொள்ளலாம் !" என்று அவர் நாசூக்காய்ச் சொன்னபோது நானும் தலையாட்டி விட்டு, விடை பெற்றேன் ! தொடர்ந்த புத்தக விழா நாட்களின் போது அவர்களது ஸ்டாலைத் தாண்டி போகும் தருணங்களில் எல்லாம் ஒரு ஸ்நேஹப் புன்னகையை வீசிடுவார் என்பக்கமாய் ! ஒரு மாதிரியாய் புத்தக விழாவும் நிறைவு காண - லண்டனில் அவர்களை சந்திக்கும் தேதியையும், நேரத்தையும் மட்டும் கேட்டு வாங்கி கொண்டு நானும் மூட்டையைக் கட்டினேன் ! ஆறு நாட்கள் இடைவெளிக்குப் பின்பாய் இலண்டனில் அவர்களை சந்திப்பது திட்டம் !
இடைப்பட்ட அந்த நாட்களில் சனி, ஞாயிறு விடுமுறைகள், அப்புறமாய் பெல்ஜியத்தில் பதிப்பகங்களோடு சந்திப்பு ;அதைத் தொடர்ந்து லண்டனுக்குள் புகும் முயற்சியில் சிக்கி சில்லுமூக்கு சிதறியதெல்லாம் அரங்கேறியது ! ஒரு மாதிரியாய் முதல் பொழுதை இங்கிலாந்தின் மண்ணில் முழுசாய் ஒப்பேற்றி முடித்த போதே எனக்குள் ஓடிக்கொண்டிருந்த பிரதான சிந்தனை - சல்லிசாய்த் தங்கக்கூடிய இடமொன்றைத் தேடிக் கண்டு பிடிக்க வேண்டுமென்பதே !! இப்போது யோசித்தாலும் மிரட்சியாகத் தானுள்ளது - ஆனால் இங்கிலாந்தில் மட்டும் 11 நாட்கள் தங்குவதென சீனியர் எடிட்டர் எனக்குப் பயணத்திட்டத்தைப் போட்டிருந்தார் ! கோட்டும், சூடும் போட்ட ஆடு போல புறப்பட்ட எனக்கும் - "அத்தினி நாட்கள் அங்கே என்ன செய்றதோ ?" என்று கேட்கவும் தோன்றவில்லை ! நான் பாட்டுக்கு ஏதேனும் ஹோட்டலில் அத்தனை நாட்களைக் குப்பை கொட்டத் தீர்மானித்தால் கைவசமிருந்த டப்பு நிச்சயம் பணாலாகிப் போகுமென்பது புரிந்தது ! அந்நேரம் பயணம் புறப்படுவதற்கு முந்தைய தினம் டில்லியில் என்னை சீனியர் எடிட்டர் இட்டுச் சென்றிருந்த சர்வதேச Youth Hostel பற்றிய ஞாபகம் வந்தது ! பெயரளவிற்கே Youth ஹாஸ்டல் ; ஆனால் யூத்தைத் தொலைத்து யுகங்களான பெருசுகளுமே அங்கே சர்வ சாதாரணமாய் தங்கிக் கொள்கின்றனர் என்பதை பின்னாட்களில் தான் புரிந்து கொண்டேன் ! எது எப்படியோ - ஏதோவொரு சிறு கட்டணம் கட்டி என்னை அதனில் ஒரு உறுப்பினராக்கியிருந்தார் சீ.எ. அந்த ஹாஸ்டலின் கிளைகள் ஐரோப்பாவில் எங்கெல்லாம் உள்ளன என்ற விபரங்கள் அடங்கிய சின்ன டைரெக்டரியும் பெற்றுத் தந்திருந்தார் ! அதை நான் கையோடு கொண்டு வந்திருக்க - அதனைப் புரட்டிய போது லண்டனில் மட்டுமே 5 வெவ்வேறு இடங்களில் அவர்களுக்கு கிளைகள் இருப்பது தெரிய வந்தது ! இலக்கொன்றில், 5 தினங்கள் மட்டுமே தங்கிடலாம் என்றும் போட்டிருந்தது ! (அநேகமாய் அந்த விதிமுறைகளைக் கடைப்பிடித்த ஒரே பேமானி அடியேனாகத் தானிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் ; ஆனால் அந்நாட்களில் ரூல்ஸ் ராமானுஜம் ஆச்சே !!) மறு நாள் காலையில் அந்த 5 இடங்களுள் ஊருக்குள் மையமாய் இருக்கக் கூடிய ஹாஸ்டல் எதுவென்று விசாரித்துக் கொண்டேன் !! இன்டர்நெட்டோ ; பையில் செல்(ல)போனோ இலா நாட்களில் புதுசாயோரு ஊரில் குப்பை கொட்டிட முயற்சிப்பது எத்தனை கஷ்டம் என்பது இந்த smart phone தலைமுறைக்குத் தெரிந்திருக்க வாய்ப்புகள் நஹி ! Trust me guys - நாக்குத் தொங்கிப் போகும் வழி கேட்டு விசாரித்தே !!! அதிலும் எவனாச்சும் ஆத்துக்காரியிடம் துடைப்ப மசாஜ் வாங்கி வந்து கடையில் பிரெஷாக அமர்ந்திருக்கும் நேரமாய்ப் பார்த்து "அண்ணாச்சி...இந்த டோர் நம்பரும், தெருவும் காங்கலியே ?...சித்தே பார்த்துச் சொல்றியளா ? " என்று கேட்டு நாம் போய் நின்றோமென்றால் காதெல்லாம் தக்காளிக் சட்னி கரை புரண்டு ஓடிடுவதுண்டு !! ஒரு மாதிரியாய் விசாரித்துப் போய் Earl 's Court என்ற சதுக்கத்திலிருந்த ஹாஸ்டலில் 5 நாட்களுக்கு கட்டையைக் கிடத்த ஒரு இடத்தை வாங்கி விட்டேன் ! தனி அறையெலாம் நஹி ; எட்டோ - பத்தோ பேர் ஒரே அறையில் இரட்டை அடுக்குப் படுக்கையில் தங்கிக் கொள்ளும் டார்மிட்டரி தான் ! சின்னதாயொரு லாக்கர் மட்டும் தருவார்கள் முக்கிய பொருட்களைப் பத்திரப்படுத்திக் கொள்ள ! மற்றபடிக்கு காலைக்கடன்களை ; குளியல்களை பொதுவான பாத்ரூமில் வைத்துக் கொள்ள வேண்டியது ! முதல் நாள் நாய்க்கடி வாங்காத குறையாய் லண்டனுக்குள் புகுந்தவனுக்கு அந்த ஹாஸ்டலின் கல கல atmosphere ரொம்பவே இதமாய்த் தோன்றியது ! அதுவரையிலும் எங்கேயுமே இது போல் தங்கிய அனுபவம் கிடையாதென்றாலும், வெவ்வேறு தேசங்களிலிருந்து வந்திருந்த இளைஞர்களோடு ஒரே கூரையின் கீழே தங்கிடும் அந்த வாய்ப்பு ரசிக்கவே செய்தது ! முக்கியமாய் நாளொன்றுக்கு ஏழோ-எட்டோ பவுண்டுகள் தான் கட்டணம் என்பது தேனாய்க் காதில் பாய்ந்திருந்தது ! அங்கு வந்து தங்கியிருந்த அத்தனை படங்களுமே tourists என்பது அப்பட்டமாய்த் தெரிந்தது ! ஒரு ஆசாமி சைக்கிளேலேயே கிரீஸ் நாட்டிலிருந்து வந்திருக்க - தலைமாட்டோடு சைக்கிளைக் கட்டி வைத்திருந்தான் ! நான் ஒற்றை ஆள் தான் அங்கே "தொழிலதிபர்" !!! அவனவன் அரை நிஜாரும், கிழிஞ்ச பனியனுமாய்ச் சுற்றி வரும் அங்கே - லார்ட் லங்கோட்டுதாஸ் போல கோட்டையும், சூட்டையும் மாட்டிக் கொள்ள எனக்கு செம கூச்சமாயிருந்தது ! So ஒரு கவருக்குள் டையையும், கோட்டையும் திணித்து வைத்துக் கொண்டு, வெளியே சாலைக்கு வந்த பிற்பாடு, ஏதேனுமொரு சந்தைத் தேடிப்பிடித்து அங்கு நின்று கோட்டை மாட்டிக் கொள்வேன் தினமும் ! அதே போல மாலை ஹாஸ்டலுக்குத் திரும்பும் தருணத்திலும், அதே சந்து ; அதே கவர் ; அதே கோட் திணிப்பு !
ஒரு மாதிரியாய் Fleetway நிறுவனத்தை சந்திக்க வேண்டிய காலையும் புலர்ந்திட - வேக வேகமாய் மெட்ரோ ரயிலைப் பிடித்து ஓட்டமெடுத்தேன் ! இரண்டே தினங்களுக்குள் லண்டன் ஒருமாதிரிப் பழகிப் போயிருக்க - இந்த ஊரே என்னைப் பார்த்து முறைப்பது போலான எனது பிரமை விலகத் துவங்கியிருந்தது ! எல்லாமே தெரிந்த பாஷையில் இருந்ததால் - ஜெர்மனியில் ; பெல்ஜியத்தில் போல் சைகை பாஷையில் பேசும் அவசியங்கள் எழுந்திடாதது ரொம்பவே உதவியது ! Tube Train எனப்படும் அவர்களது தரைக்கடி ரயில்களிலும், பஸ்களிலும் ஒரு வாரத்துக்கான பாஸ் ஒன்றை வாங்கியிருந்தேன் சல்லிசாய் ! So புசுக் புசுக்கென்று ஏதாவது ஒன்றில் தொற்றிக் கொண்டு ஊரின் எந்தப் பகுதியையும் எட்டிப் பிடிக்கச் சிரமமுமில்லை ; செலவுமில்லை ! லண்டனின் கிழக்குப் பிராந்தியமே அதன் வியாபார மையம் & Fleetway நிறுவன அலுவலகமும் அங்கு தானிருந்தது ! அலுவலகம் என்று நான் குறிப்பிடுவது அவர்களது பதிப்பக அலுவலகம் நஹி ; உரிமைகளை சந்தைப்படுத்தும் பிரிவின் அலுவலகமே ! Syndication International என்ற பெயரில் இயங்கி வந்த நிறுவனத்தின் ஆபீசை ஒரு மாதிரித் தேடிப்பிடித்து உள்ளே புகுந்த போது ஜிலீரென்று இருந்தது !! கனவில் அப்போதெல்லாம் வந்த சொப்பன சுந்தரிகளை விடவும் - ஜிங்கு ஜிங்கென்று தாண்டவமாடிய சட்டித் தலையன்களும், வலைமன்னன்களுமே ஜாஸ்தி எனும் போது - அவர்களின் வசிப்பிடத்தில் கால்பதிப்பது ஏதோ ஒருவித உற்சாகத்தைக் கரைபுரளச் செய்தது !! ரொம்பப் பெரிய ஆபீஸெல்லாம் கிடையாது ; அதே போல பழமையான கட்டிடமே ! ஆனால் அதன் ஏதோ ஒரு பகுதியில் நமது ஆதர்ஷ காமிக்ஸ் புதையல் கரைபுரண்டோடுவதை நினைக்கும் போது வேறெதுவும் முக்கியமாய்த் தென்படவில்லை ! நான் போன போதே பகல் 11 -30 இருக்கும் ! நெடுநாள் பரிச்சயத்தை வரவேற்பது போல் என்னை வரவேற்றவர்கள் - எனது பயணம் பற்றி ; தங்கள் தேசம் பற்றிய எனது அபிப்பிராயத்தையெல்லாம் விசாரித்தார்கள் ! 24 மணி நேரங்களுக்கு மும்பாய் இதே கேள்வியை என்னிடம் யாரேனும் கேட்டிருந்தால் கலாமிட்டி ஜேனுக்குப் போட்டியாய் நானும் பேசியிருப்பேன் தான் ! ஆனால் ஒற்றை தினத்தில் சாந்தம் கண்டிருந்த மனசு நிதான பதிலையே முன்வைக்கச் செய்தது ! "சரி,இப்போதே நண்பகல் ஆகப் போகுது....லஞ்ச் சாப்பிட்டு விட்டு வந்து records room -ல் புகுந்து வேலையைப் பார்த்துக் கொள்ளலாமே ?" என்று மிஸ்டர்.ஸ்ப்ராடெலி கேட்ட போது நானும் சரியென தலையாட்டினேன் ! அவரும், அவரது உதவியாளரான Mr மார்ட்டின் மார்கனும் இணைந்து கொள்ள - மூவருமாக அருகாமையிலிருந்த Pub ஒன்றிற்குப் போனோம் ! பொதுவாய் இங்கிலாந்தில் புட்பால் அல்லது கிரிக்கெட் மேட்ச்களை பார்த்துக் கொண்டு கிளாஸ் கிளாஸாய் பீரை உள்ளே இறக்கிக் கொண்டே, இறுதியாய் வயிற்றுக்கும் ஏதாச்சும் போட்டுக் கொண்ட பிற்பாடு வீடு திரும்புவது வாடிக்கை ! So அங்குள்ள Pub களில் சாப்பட்டுச் சமாச்சாரங்களும் இருப்பதுண்டு ! மதியப்பொழுது ; காற்று வாங்கிக்கொண்டிருந்த pub க்குள் புகுந்து ஒரு மூலையில் இடம்பிடித்தபடிக்கு மெனுவை என்னிடம் நீட்டினார்கள் - ஆர்டர் செய்திடும் பொருட்டு ! பிரிட்டிஷ் உணவுமுறைகளுக்கும், நமக்கும் ஏழாம் பொருத்தம் என்பதை நான் அனுபவப்பூர்வமாக உணர்ந்த முதல் தருணமிது என்பதால் - சிக்கன் என்று தென்பட்ட ஏதோவொரு சமாச்சாரத்தை ஆர்டர் பண்ணி வைத்தேன் ! சாப்பாட்டுக்காகக் காத்திருந்த வேளையில், நமது மார்க்கெட் பற்றி ; நமது சர்குலேஷன் பற்றியெல்லாம் அக்கறையாய் விசாரித்தார்கள் ! அவையெல்லாம் நாம் 20000 பிரதிகள் விற்று வந்த நாட்களெனும் போது பந்தாவாய் "டொன்டி தவுசண்ட்" என்று சொன்னேன் ! "ஓஹோ.." என்றவர்களிடம் - "நீங்கல்லாம் எவ்ளோ விற்பீங்க சார் ?" என்று கேட்டேன் ! ஆறிலக்கங்களில் ஒரு முரட்டு நம்பரை அவர் சொன்ன போது "ஹி..ஹி.." என்றபடிக்கே சகல துவாரங்களையும் மூடிக் கொண்டேன் !! அதற்குள் சப்லையர் ஒரு முரட்டு கும்பா நிறைய ஏதோ பசை மாதிரியான திரவத்தைக் கொணர்ந்திருக்க - எனக்கு பார்க்கும் போதே கிறுகிறுத்தது !! முட்கரண்டியையும், கத்தியையும் கையில் தந்து விட்டு அவர் அகல - "இதில் சிக்கனைத் தேடித் பிடிக்க ஒரு மீன்பிடி வலையிலே பொருத்தமாயிருக்கும் ?" என்ற நினைப்பு தான் மண்டைக்குள் ஓடியது ! கிளம்பும் முன்பே முட்கரண்டியால் சாப்பிடும் வித்தைகளை புளியோதரையிலும், சாம்பார் சோற்றிலும் முயற்சித்திருந்தேன் தான் - வீட்டில் ! ஆனால் கொழ கொழ வென்றிருக்கும் அந்தப் பசையை மடக் மடக்கென்று குடித்து விட்டால் தேவலாமோ என்றே தோன்றியது ! வாயில் வைத்தால் - உப்புமில்லை ; காரமுமில்லை ; சுத்தமான வெண்களிமண்ணைச் சுவைத்தது போலவே இருந்தது ! அவர்களோடு ஒரு பக்கம் பேசிக் கொண்டேயிருந்தாலும், மண்டை முழுக்க - இந்தக் கொப்பரை நிறைய மிதக்கும் கன்றாவியை விழுங்கிவிட்டு வாந்தியெடுக்காது வண்டியோட்ட வேண்டுமே - தெய்வமே !! என்ற பயம் தான் நீந்தியது ! அடுத்த 15 நிமிடங்களுக்கு எனது நாக்கை நான் படுத்திய பாடை இன்றைக்கு நினைவு கூர்ந்தாலும் அழுகாச்சி தான் மிஞ்சும் !! பரோட்டாவும், குஸ்காவும், வக்கணையாய்த் தின்று பழகியது - அன்றைக்குப் பட்ட அவஸ்தை ரணமே !! ஒரு மாதிரியாய் சாப்பாட்டுக் கூத்து நிறைவுற - அடுத்து dessert ? என்று எதையெதையோ பட்டியலிட்டிருந்ததொரு மெனுவை நீட்டினார்கள் ! எனக்கோ - '
மொட்டையும் போட்டாச்சு..காதும் குத்தியாச்சு...ஆனைகிட்டே ஆசீர்வாதமும் வாங்கியாச்சு ! இனியாச்சும் கிடா வெட்டிடலாமே ?" என்ற கவுண்டரின் பதைபதைப்புத் தான் !! "காமிக்ஸ் குவிந்து கிடக்கும் records room-க்குப் போவோமே - வயிற்றுக்குப் போட்ட பெட்ரோல் அடுத்த புத்தகவிழா வரைக்கும் தாங்குமே சார் !!" என்ற ரீதியில் எனது முட்டைக்கண்கள் சேதி சொன்னனவோ - என்னவோ, அவர்களே புறப்படலாம் என்று எழுந்தார்கள் !
அடுத்த பத்தாவது நிமிடத்தில் நிலவறையிலிருந்ததொரு நீளமான ஹாலுக்கு என்ன இட்டுச் சென்ற போது எனக்கு நெஞ்சு அடித்துக் கொண்டது Big Ben கடிகார மணிச்சத்தத்தை விடவும் ஜாஸ்தியாக இருந்தது !! Uffffff !! அங்கே குவிந்து கிடந்த காமிக்ஸ் இதழ்களின் அசத்தியத்தை கண்களால் அளவிட்ட அந்த முதல் நொடியினை இன்றைக்கு நினைத்துப் பார்த்தாலும் புல்..செடி..கொடி..மரம்..மட்டை..என சகலமும் அரிக்கும் !! வார்த்தைகள் போறாது - அங்கே வரிசை வரிசையாய்....ரேக் ரேக்காய்....அட்டியல் அட்டியலாய்....அம்பாரம் அம்பாரமாய்க் குவிந்து கிடந்த காமிக்ஸ் வாரயிதழ்கள் ; Annuals ; இத்யாதிகளின் கம்பீரத்தை வர்ணிக்க !! அங்கிருந்ததொரு மூத்த பணியாளர் என் கையில் ஒரு கத்தைக் காகிதங்களைத் தந்து விட்டு - "
ஏதேனும் தேவையென்றால் கூப்பிடு !" என்றபடிக்கே கிளம்பிவிட்டார் ! அந்த ஒட்டு மொத்த சேகரிப்பிற்கும் ஏக பொறுப்பாளர் அந்த ஒற்றை மனுஷனே என்பதை உணர்ந்த போது பிரமிப்பாய் இருந்தது ! நான்பாட்டுக்கு ஊரிலிருந்தபடிக்கு அனுப்பும் குடாக்கு ஆர்டர்களுக்கு முக்கியத்துவம் தந்து அவற்றைச் சேகரிக்க அந்த ராட்சஸக் குவியலினுள் அவர் என்னமாய்த் தத்தளித்திருப்பாரோ ? என்று நினைக்கும் போதே பாவமாயிருந்தது !! ஒரு பக்கம் முழுக்க பெண்பிள்ளைகள் காமிக்ஸ் ; இன்னொரு பக்கம் முழுக்க Football சார்ந்த காமிக்ஸ் (அந்நாட்களில் அவை இங்கிலாந்தில் செம பிரபலம் !!) ; இன்னொரு பக்கம் Boys காமிக்ஸ் என்று பிரித்திருந்தனர் ! நேராக Boys காமிக்ஸ் பகுதியினுள் புகுந்தவன் - வாயை அகலத் திறந்தது மாத்திரமே நியாபகமுள்ளது ! தொடர்ந்த மணி நேரங்கள் ; தினங்கள் எல்லாமே - விரல்கள் நோகும் வரை, கைகள் கடுக்கும் வரை ; கண்கள் சொக்கும் வரை அவர்களது எல்லையற்ற தொகுப்புகளை புரட்டோ புரட்டென்று புரட்டுவதிலேயே செலவானது ! 1985-ன் இறுதி முதல் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் நாம் வெளியிட்ட Fleetway கதைகள் / குட்டிக் கதைகள் / தொடர்கள் / oneshots என சகலமும் அப்போதைய தேடல்களில் உருப்பெற்றவை என்று சொன்னால் மிகையில்லை ! நமக்கு ஆகக்கூடிய கதைகள் ; தொடர்கள் எனில், பர பரவென அவை எந்த வருடத்தில் ; எந்த இதழில் துவக்கம் கண்டது - எப்போது முடிவுற்றது ? என்று மட்டும் குறித்துக் கொள்வேன் ! அன்றைய மாலை மொத்த லிஸ்டையும் அந்த records பராமரிப்பாளரிடம் தந்தால் அவர் அதைத் தனது ஆர்டர் லிஸ்டில் சேர்த்துக் கொள்வார் ! நேரம் கிடைக்கும் பொழுது அவற்றை நகலெடுத்து இந்தியாவுக்கு அனுப்பிடுவார் ! தொடர்ந்த 3 நாட்களுக்கு இதே வேலை ஓடிட - எனக்கோ மண்டை முழுக்க கலர் கலரான முன்னோட்டங்கள் ஓடிக் கொண்டேயிருந்தன ! இத்தனை தொடர்களையும் கொணர்ந்து உங்கள் முன்னே கடைவிரிக்கும் நாள் பற்றிய கனவுகளில் ஒரே மிதப்பு தான் !! 1985 டிசம்பரில் வெளியான "
ஆப்பிரிக்க சதி" இதழில் "வருகிறது" விளம்பரங்கள் ஒரு வண்டி களமிறங்கியது நினைவுள்ளதா folks ? எல்லாமே அந்த நிலவறை உருட்டிய மூன்று நாட்களின் பலனே !
விட்டால் அங்கேயே குடியிருந்து விடுவேன் என்ற பயத்தில் மூன்றாவது நாள் கைகுலுக்கி என்னை வழியனுப்பி வைத்தனர் !! அதன் முன்பாய் அவர்களது MD என்னைச் சந்திக்க விரும்புவதாய்ச் சொல்ல - அவர் முன்னேயும் ஆஜரானேன் ! அவருக்கோ சத்தியமாய் நம்ப முடியவில்லை - ஒரு சுள்ளான் பயல் தங்களது காமிக்ஸ் சேகரிப்பினுள் புகுந்து முத்துக் குளிக்கவே இத்தனை தொலைவு பயணமாகியிருக்கான் !! என்பதை !! அவர்களுக்கு நம் மண்ணில் இரும்புக்கை மாயாவிக்கு உள்ள வரவேற்பு பற்றி நன்கு தெரியும் என்பதால் அது பற்றியும் விசாரித்தார் ! நானோ தற்போதைய டாப் நாயகர் "ஸ்பைடர்" தான் என்று சொல்ல - "மெய்யாலுமா ?" என்று இடிச்சிரிப்போடு கேட்டுக் கொண்டார் ! "அட...என்னோட லிஸ்டைப் பாருங்களேன் !" என்று அவர் முன்னே records அறையிலிருந்து நான் தோண்டியெடுத்திருந்த ஸ்பைடர் கதைகளின் பட்டியலைக் காட்டிட ஏக குஷி அவருக்கு ! அடுத்த முப்பதாவது நாளுக்குள் இந்தப் பட்டியலின் ஒட்டுமொத்த பக்கங்களும் டில்லிக்குச் சென்றிருக்கும் ! சந்தோஷமாய்ப் போய் வா !!" என்று விடைகொடுத்தார் !! எனக்கோ உலகமே வசந்தம் வீசும் பூமியாய்க் காட்சி தந்தது !! ஆனால் 30 நாட்களுக்குள் மொத்தக் கதைகளும் டில்லி வந்துவிடுமென்று கேட்ட போது வயிற்றில் புளியைக் கரைத்து - "தெய்வமே...அத்தனைக்கும் ஒட்டு மொத்தமாய்ப் பணம் புரட்டணுமே !! இல்லாங்காட்டி டில்லி ஏஜெண்ட் ராணி காமிக்ஸுக்கு எதையாச்சும் தள்ளி விட்டிடக் கூடுமே !!" என்று ! ஏதேதோ கூத்தடித்து பின்னாட்களில் அவற்றை வாங்கினோம் என்பது மட்டும் நினைவுள்ளது !! 1985 -ல் செய்த அதே பாணியில் மறு வருடமும் ஜெர்மனியில் புத்தக விழா ; லண்டனில் காமிக்ஸ் நிலவறைப் படையெடுப்பு என்று தொடர்ந்திட - நமது காமிக்ஸ் கையிருப்போ அசாத்திய கனம் கொள்ளத் துவங்கியது ! தட்டுத் தடுமாறியவன் அவற்றை களமிறக்க மாமூலான லயன் காமிக்ஸ் மாத்திரமே ஒருபோதும் பற்றாதென்ற புரிதலில் "திகில்" ; அப்புறம் "மினி-லயன்" ; "ஜூனியர் லயன்" என்றெல்லாம் அடித்த ரவுசுகள் நாமறிவோம் ! 1988 -ன் வாக்கில் மறுபடியும் ஊர்சூற்றும் ஆசை தலைதூக்கிய போது - "Fleetway-க்கு மறுக்கா போலாமா ?" என்று அனுமதி கோரி டில்லி ஏஜெண்டுக்கு கேட்டு வைத்தேன் ! மறுநாள் அவரிடமிருந்து கிட்டிய பதில் என் ஈரக்குலையைப் பதறச் செய்தது இன்றும் நினைவுள்ளது ! "ஒரு வாரயிறுதியின் போது கட்டிடத்திலிருந்த தண்ணீர் பைப்கள் வெடித்து வைக்க, நிலவறை முழுசும் தண்ணீர் கட்டி விட்டதால் - அங்கிருந்த records கிட்டத்தட்ட முக்கால் பங்குக்கு மேல் நீரில் மிதந்து போச்சாம் !!" என்று பதில் வந்தது !! அதனுள் இன்னமும் நாம் ரசித்திரா முத்துக்கள் எத்தனை புதைந்து கிடந்தனவோ - ஆண்டவனுக்கே வெளிச்சம் !! ஒரு மாதம் வரைக்கும் மனசே ஆறவில்லை அந்தத் தகவல் தெரிந்தது முதலாய் !! All good things must come to an end I guess !!
இன்றைக்கு - எக்கச்சக்க ஆண்டுகள் கடந்திருக்கும் நிலையில் Fleetway நிறுவனமும் மூன்று முறை கைமாறிய பிற்பாடு - புதிதாய் வாங்கியிருக்கும் நிறுவனமானது அரும்பாடுபட்டு பழைய கதைகளை சேகரித்து, அவற்றையெல்லாம் மேம்படுத்தி, டிஜிட்டல் கோப்புகளை பத்திரப்படுத்தும் பணியை முனைப்போடு செய்து வருகிறார்கள் ! சமீபத்தில் நாம் வெளியிட்ட ACTION SPECIAL அதன் பலனே !! ஒரு சகாப்தம் அந்தக் கால கட்டத்தோடு நின்று போயிடாது, நிரந்தரமாய்த் தொடர்ந்திட அவர்கள் செய்து வரும் முயற்சிகள் ரொம்பவே நிறைவைத் தருகிறது ! மெது மெதுவாயே இந்த முயற்சிகள் வெற்றி கண்டிட முடியும் !! அவற்றின் மீது நமக்கு இன்னமும் மையல் உள்ளதோ, இல்லையோ - நம்மையெல்லாம் கற்பனையெனும் சோலைக்குள் இட்டுச் சென்ற அந்த அசாத்திய ஆக்கங்களை மீட்டிடும் முயற்சி வெற்றி காண வாழ்த்துவோமே !! Back to the present folks.......
எப்போதுமே நமக்கொரு சுவாரஸ்ய மாதமாய் அமைந்து வந்துள்ள ஜூலை - 35 ஆண்டுகளாகியும் அந்தப் பழக்கத்தினை விட்டுத் தந்திருக்கவில்லை !! இதோ - சிறுகச் சிறுகப் பதிவாகி வரும் உங்களின் இம்மாத அலசல்களின் துவக்கம் all is well with this July too என்பதைச் சுட்டிக்காட்டி வருகிறது ! உங்களில் நிறையப் பேர் டப்பியை உடைத்து புக்குகளின் அட்டைப்படங்களை ரசிக்கும் கட்டத்தைத் தாண்டியிருக்க மாட்டீர்கள் என்பதில் ரகசியங்களில்லை தான் ! But still இது வரைக்கும் உட்புகுந்து இதழ்களை வாசிக்க நேரம் ஒதுக்கியுள்ள நண்பர்களின் அபிப்பிராயங்கள் நிறையவே பாசிட்டிவ் ரகம் என்பதை ஒரு உற்சாகமூட்டும் குறியீடாய்ப் பார்த்திடுகிறேன் !! லக்கி லூக் ஆல்பங்கள் எப்போதுமே ஜாலியான K.S .ரவிக்குமார் ; சுந்தர் C படங்களை போல பொழுதுபோக்குக்கு உத்திரவாதமானவை என்பதால் லயனின் 35-வது ஆண்டுமலரைப் பற்றி ரொம்பவெல்லாம் தலையைப் பிய்த்துக் கொள்ளவில்லை ! ஹார்ட்கவர் பைண்டிங் ; அட்டைப்படங்களில் நகாசு வேலைகள் ; ஒன்றுக்கு, இரண்டாய்க் கதைகள் என்றெல்லாம் கூடுதலாய் ப்ளஸ் பாயிண்ட்கள் இருந்திட, இந்த இதழை எப்படியும் கரை சேர்த்துவிடுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கிருந்தது ! எனது சுவாரஸ்யமே - இதர 2 இதழ்கள் சார்ந்தது !!
*நீரில்லை..நிலமில்லை..!
*நித்திரை மறந்த நியூயார்க்
இந்த 2 ஆல்பங்களை வாசிக்கவும் நேரமெடுத்துக் கொண்டு கொஞ்சம் சொல்லுங்களேன் உங்களின் அபிப்பிராயங்களை !!
அப்புறம் முக்கிய விஷயத்தை மறந்து விடக்கூடாதல்லவா ? Caption போட்டியில் வெற்றி கண்டுள்ள 2 நண்பர்களும் ஈரோட்டில் நமது Guests ஆக இருந்திடுவர் !! அவர்களை ஈரோட்டுக்கு அழைத்து வருவது முதல், தங்கிட, திரும்பிச் சென்றிட என all ஏற்பாடுகள் கம்பெனியின் பொறுப்பே ! பொருளாளர்ஜியைக் கடத்தி வரும் ஏற்பாட்டை யாரேனும் ஏற்றுக் கொண்டால் - செலவினங்களை நாம் ஈடு செய்திடலாம் ! நண்பர் கார்த்திகேயன் ஒரு மின்னஞ்சல் ப்ளீஸ் - உங்கள் வயது + முகவரியோடு !! டிக்கெட்கள் உங்களைத் தேடி வந்திடும் வெகு விரைவிலேயே !!
And மேற்படி நண்பர்கள் தவிர்த்த இதர நண்பர்களும் ஈரோட்டுக்கு டிக்கெட் போட்டாச்சா ? என்று தெரிந்து கொள்ள ஆவல் ! சென்றமுறை போலவே மதிய உணவும் அரங்கிலேயே என்பதால் அன்றைய தினக் கிடாவிருந்து முன்னேற்பாடுகளை ஒரு நாளுக்குத் தள்ளிப் போட்டுக் கொள்ளக் கோருகிறேன் !! Please folks - visit with family if possible !!
Bye guys for now !! Have a cool Sunday ! See you around !!
 |
| நித்தமொரு யுத்தம் preview !! |