Saturday, August 05, 2017

400..!

நண்பர்களே,

வணக்கம். நிறையத் தடவைகள் பதிவு செய்த விஷயமே ; ஆனாலும் இன்னொரு தபா அதனை நினைவூட்டும் ஆசையை மட்டுப்படுத்த இயலவில்லை ! பெரும் தேவன் மனிடோ சந்தேகமேயின்றி ஒரு காமிக்ஸ் காதலரே ; அது மாத்திரமின்றி நம் மீதும் ஒரு இம்மியூண்டு கூடுதல் அக்கறை கொண்டவரே என்பேன் ! இல்லாவிடின் இந்த "400 " எனும் பதிவுகளின் மைல்கல்லை - ஆண்டின் ஒரு அட்டகாசமான தருணத்தில் - தற்செயலாய் அமையச் செய்வது சாத்தியமாகுமா - என்ன ? 

* ஈரோட்டுப் புத்தக விழா
* இரத்தக் கோட்டை- The Collection ரிலீஸ்
* வாசக சந்திப்பு 

என ஏராளமான highlights நிறைந்ததொரு பொழுதல்லவா இது ? அது மாத்திரமின்றி, இந்த மாதத்துக்கு இன்னமும் ஒரு விதத்தில் ஒரு ஸ்பெஷல் அந்தஸ்துள்ளது - நம் இதழ்களை பொறுத்தவரை ! அது என்னவென்பதை இன்றைய நமது சந்திப்பில் அலசிடுவோமா ?  So நீளத்தில் மிதமானதாய் இருப்பினும், ஒரு landmark moment-ன் பதிவென்ற முக்கியத்துவதோடு இன்றைய பதிவு உலா வரவுள்ளது !

நேற்றைய தினம் (வெள்ளி) உங்களது WWF - "இரத்தக் கோட்டை" முன்பதிவு இதழ்கள் - ஈரோட்டுக்கு நேரில் வர இயலா நண்பர்களைத் தேடி கூரியரில் புறப்பட்டு விட்டன ! So ஈரோட்டில் இன்று இதழ் ரிலீஸ் ஆகும் அதே நேரத்துக்கு, அநேகமாய் அனைவரையுமே  டைகரின் இந்த டாப் சாகசம் எட்டிப் பிடித்திருக்குமென்று நம்புகிறேன் ! Without much ado - இதோ இதழின் அட்டைப்பட முதல் பார்வை ! 
ஓவியர் ஜிரோவின் ஒரிஜினல் டிசைனையே இந்தத் தொகுப்புக்கு அட்டைப்படமாக்குவது என்பது ஆரம்பத்திலேயே நாம் எடுத்த முடிவென்பதால் - இம்முறை எங்களுக்கிருந்த குழப்பமே - 5 பாகங்களின் 5 அட்டகாச ராப்பர்களிலிருந்து எதனை முன்னட்டைக்குத் தேர்வு செய்வது என்பதே ! நிறைய combinations ; நிறைய பரீட்சார்த்த டிசைன்கள் என்றதன் முடிவினில் - இந்த ஆக்கமே அழகாய்த் தோன்றியது எனக்கு ! அந்த ரங்கோலி ரகப் பின்னணியை ரொம்பவே பளிச்சென்று அமைத்தால் உள்ளேயுள்ள நமது நாயகர் மீது பார்வைகள் பாய்வதை விடவும், சுற்றியுள்ள வர்ணத் தோரணங்கள் மீதே கவனங்கள் லயிக்கும் போல் பட்டது ! So அதனை subtle ஆக்கி விட்டு, மெலிதாய் வெள்ளைப் பின்னணியோடு டிசைன் செய்து பார்த்த போது classy ஆகப் பட்டது ! இதழை தயார் செய்து கையில் ஏந்திய பொழுது அந்த கணிப்பில் பிழையில்லை என்றே தோன்றியது எனக்கு ! இனி ultimate ஜூரிக்களாகிய நீங்களே தீர்ப்பெழுத வேண்டும் ! பின்னட்டையுமே தன் பங்குக்கு தக தகக்க - கொஞ்சம் நகாசு வேலைகள் செய்துள்ளோம் ! இதழைக் கையிலேந்திப் பார்க்கும் போது தான் அதனை உணர்ந்திட முடியும் ! So ஒரு அட்டையின் கதையிதுவே !


கதையைப் பொறுத்தவரை - உங்களில் அநேகப் பேர் இதனை மனப்பாடமாக ஒப்பிக்கக் கூடியவர்கள் என்பதால் நான் பில்டப் என்று மொக்கை போடப் போவதில்லை ! மாறாய் - வண்ணத்தில், இந்த பெரிய சைசில் - உங்களின் ஆதர்ஷ நாயகரை ரசிக்கும் அனுபவத்தை இயன்றமட்டுக்கு நம்மோடு பகிர்ந்து கொள்ள மட்டுமே கோரிடுவேன் ! இந்த சாகசத்துக்குமே ஒரு சுவாரஸ்யமான வரலாற்றுப் பின்னணியுள்ளது என்பதை மட்டுமே நீங்கள் புதிதாய்த் தெரிந்து கொள்ளப் போகிறீர்கள் என்பேன் !

இந்த மெகா சாகசத்தை முதன்முறையாக ரசிக்கவிருக்கும் நண்பர்கள் நிச்சயமாய் மச்சக்காரர்களே ! அன்றைக்கு நியூஸ் பிரிண்டில் - கச்சா முச்சா என்ற frame அமைப்புகளில், கருப்பு-வெள்ளையில், பிரித்துப் பிரித்து நாங்களெல்லாம் ரசித்ததை இன்று நீங்கள் அழகாய், தரமாய், 'ஏக் தம்மில்' வாசிக்கப் போவது நிச்சயமாய் ஒரு அதிர்ஷ்ட அனுபவம் என்பேன் ! Happy Reading  guys !!

ஈரோட்டில் நண்பர்களோடு சந்திப்புக்கு நேரமாகி விட்டதால் - இப்போதைக்கு விடை பெற்றுக் கொண்டு கிளம்புகிறேன் ! மீண்டும் சந்திப்போம் ; bye until then !!

And lest I forget - 400 பதிவுகள் என்று ஆஞ்சநேயர் வால் போல இந்தப் "பதிவுகளின் படலம்" நீண்டு சென்று கொண்டிருப்பினும் - தொடர்ந்து உற்சாகத்தோடு என்னை பேனா பிடிக்கச் செய்துவரும் உங்கள் ஒவ்வொருவருக்கும் எனது heartfelt thanks ! நாலு நாள் சேர்ந்தாற்போல ஒரே பாணியை கேட்கும் போதோ, வாசிக்கும் போதோ - "போலே மொக்கைச்சாமி...!" என்று அயர்ச்சி மேலோங்கும் இன்றைய நாட்களில் - சுமார் 70 மாதங்களாய் எனது புராணங்களுக்குச் சளைக்காது காது கொடுத்து வரும் நீங்கள் ஒவ்வொருவருமே நமது பயணத்தின் இன்றியமையாப் பங்குகளே !! Awesome as always - each one of you !!   

Tuesday, August 01, 2017

ஒரு "பட்டியல்" பதிவு !

நண்பர்களே, 

வணக்கம். "பொட்டிகள்"  கிளம்பிவிட்டன - ரொம்பவே சீக்கிரமாய் ! So நாளைய பொழுது 'சிக்'கென்ற புத்தகப் பார்சல் பட்டுவாடாக்கள் நிச்சயம் என்பேன் ! இம்முறை எல்லாமே வண்ணத்தில் & எல்லாமே ராக்கெட் வேக வாசிப்புக் களங்கள் என்பதொரு ஒற்றுமை ! பரபரவென படிக்கும் பழக்கம் கொண்டவராக நீங்கள் இருப்பின், நாளை மதியமே "அப்புறம் ?" என்ற கேள்வியோடு ஆஜராகிடுவது நிச்சயம் என்பேன் ! And ஆன்லைன் லிஸ்டிங்கும் இதோ : http://lioncomics.in/monthly-packs/423-august-2017-pack.html
அப்புறம் இப்போது வரையிலான "இரத்தக் கோட்டை" முன்பதிவுப் பட்டியல் இதுவே ! உங்கள் முன்பதிவு விடுபட்டுப் போயிருப்பேன் உடனே ஒரு மின்னஞ்சல் அனுப்பிடக் கோருகிறேன் ! 


 And here is the Erode list : நேரில் ஈரோட்டில் பெற்றுக் கொள்ளவிருக்கும் நண்பர்கள் பட்டியலில் உங்கள் பெயர் விடுபட்டிருப்பின் நமது அலுவலகத்துக்கு உடனடியாய் ஒரு போன் செய்து விடுங்களேன் - ப்ளீஸ் !
See you around guys ! Bye now !

Sunday, July 30, 2017

முதுகுக்கு மேஜைவிரிப்பு !!

நண்பர்களே,

வணக்கம். காட்சி # 1 :  நடுக்கூடத்தில் ஊஞ்சல்! புஷ்டியானதொரு செந்தில் சம்மணமிட்டு அந்த ஊஞ்சல் மேல்! அவர் முன்னாலோ ஒரு முக்கால் கிளாஸ் டீ! செந்திலாரின் முகத்திலோ தீவிர சிந்தனை ரேகைகள்! டீயை ஒரு நொடி உற்றுப் பார்க்க...மறு நொடி மோட்டு வளையை நோக்கிப் பார்வைகளை ஓட விட... தொடர்கிறது காட்சி ! காட்சி # 2 : நள்ளிரவைத் தாண்டிய ராப்பொழுது! சுமாரான புஷ்டியில் ஒரு ஆந்தைவிழியன் மாடிக்குப் போகும் ஏணிப்படிகளில்! ஆ.வி.யின் முன்னேயோ ஒரு கத்தைக் காகிதங்கள்! ”2018” என்று போட்டு என்னமோ கீச்சலாய் எழுதியிருக்கும் தாள்களை, கழுத்துச் சுளுக்கிக் கொள்ளும் கோணங்களிலெல்லாம் டிசைன் டிசைனாய்  முறைத்துப் பார்க்க... அப்புறமாய் விட்டத்தை விட்டேந்தியாய் ரசிக்க... ”ஊஹும்...!” என்று மண்டையை ஆட்டிவிட்டு, பரபரவென்று அந்தக் காகிதத்தின் மேலே எதையோ அடித்துத் திருத்தி எழுத, ஆந்தைகளே அடங்கும் நேரம் வரைக்கும் தொடர்கிறது காட்சி!

முந்தையது ‘ஜென்டில்மேன்‘ திரைப்படத்திலிருந்து நமது ஆதர்ஷ கவுண்டரும், செந்திலும் பின்னியெடுத்த காமெடிக் காட்சியின் இரவல் எனில் – பிந்தையது கடந்த சில பின்னிரவுகளில் எங்கள் வீட்டில் அரங்கேறி வரும் காட்சி! As usual – it’s “that” time of the year guys! 2018-ன் அட்டவணைக்கு இறுதி வடிவம் கொடுக்கும் முயற்சியில் தான் வீட்டின் மூலை முடுக்குகளிலும், ரயில் நிலைய பெஞ்சுகளிலும், சிக்கும் பேப்பர்களையெல்லாம் எதையாவது எழுதி பார்ப்பதில் செலவிட்டு, அப்புறம் பந்து பந்தாய்ப் அவற்றைக் கசக்கித் தூக்கியெறிந்து புதுசு புதுசாய் "கூட்டணிக் கோட்பாடுகளை" முயற்சித்து வருகிறேன்! தலீவருக்குப் போட்டியாக பேப்பரைச் செலவிடும் இந்தப் பொழுதுகளின் முடிவில் கையிலொரு திட்டமிடல், இறுதியாக, அழகாய் தயாராக நின்ற போது நமது லியனார்டோ தாத்தாவின் முகத்தில் தெரியும் ஒளிவட்டம் மிளிர்வது போலொரு பீலிங் உள்ளுக்குள்! Of course – இது ரொம்பவே சீக்கிரம் அந்த அட்டவணையை உங்களோடு பகிர்ந்து கொள்ளவதற்கு ; ஆனால் நிச்சயமாய் 2018-ன் timetable ஒவ்வொரு ரசனை அணிக்கும் முகத்திலொரு புன்னகையை மலரச் செய்யுமென்ற நம்பிக்கை நிரம்பி வழிகிறது எனக்குள்! கொஞ்சமே கொஞ்சமான இறுதி டிங்கரிங்குகள் மட்டும் செய்திடுவதற்கு உங்களது அபிப்பிராயங்களை இரவல் வாங்கிடுவது நலமென்று நினைத்தேன்! So அதுவே இந்த ஞாயிறின் படலம்!

* நடப்பாண்டின் சந்தா A-வின் ஹைலைட்களே சிலபல புதுவரவுகள் தானென்பதில் நிச்சயம் சந்தேகம் லேது! ட்யுராங்கோ; Lady S என்ற இரு புத்தம்புது இறக்குமதிகள் + ‘ஜேசன் ப்ரைஸ்‘ எனும் சற்றே புது வரவு (இவரது துவக்க சாகஸம் 2016-ல் அல்லவா?) இணைந்திட்ட போது சந்தா A-வின் மெருகு ஒரு படி தூக்கலாய் எனக்குத் தோன்றியது! Of course – பழைய பரீட்சைப் பேப்பர்களை வாங்கி பைண்டிங் செய்து, அதன் மீது ‘லயன் காமிக்ஸ்‘ என்று போட்டு வைத்தாலே அதை எனக்கு ரசிக்கத் தோன்றும் தான்; எந்தக் காக்காய் தன் குஞ்சை ‘கறுப்பா‘ என்று முத்திரை குத்தியிருக்கிறது? ஆகையால் என் பார்வையைத் தாண்டியதொரு கருத்துப் பகிரலும் இங்கு பிரயோஜனப்படுமென்று நினைத்தேன்! My question is: ஏற்கனவே ஒரு மினி கல்யாண வீட்டுப் பந்தி அளவிற்கு நாயகர்களும், நாயகியரும் நம் அணிவகுப்பில் முண்டிக் கொண்டு நிற்கும் போது – மேற்கொண்டு புது நாயக / நாயகியருக்கு சொற்ப காலத்திற்காவது no entry போடல் அவசியம் என்பீர்களா? அல்லது புதுசுகளே சுவாரஸ்யங்களை எகிறச் செய்திடும் காரணிகள் என்று கைதூக்குவீர்களா? நிதானமாய் சிந்தித்து உங்கள் பதில்கள் ப்ளீஸ்?

* ‘ஜேசன் ப்ரைஸ்‘ - வந்தார் ; வென்றார்! காதில் கொஞ்சமல்ல, ஒரு லோடு மலர்களை பட்டுவாடா செய்து விட்டுப் போயிருந்தாலுமே, இவர் எழுப்பிய தாக்கத்தின் அதிர்வலைகள் சமீப நாட்களுள் ஒரு செம ஸ்பெஷல் ரகமென்பேன்! அவரது கதைத் தொடரில், அந்த 3 ஆல்பங்களைத் தாண்டி புதுசாய் சரக்கு ஏதும் கிடையாதென்பதால் – அவரது தொகுதியில் ஆட்டோமேடிக்காக இடைத்தேர்தல் நடத்தும் அத்தியாவசியம் எழுகிறது! ஏற்கனவே கரை வேட்டி கட்டி நம்மோடு கைகோர்த்து உலவி வரும் நாயகர் யாரையேனும்  இந்தக் காலி slot-க்குப் பரிந்துரைப்பீர்களா? அல்லது கட்டாயமாய் இன்னொரு புது வரவுக்கேவா ? புது வரவே என்றால் – தரமான நாயகர் யாராக இருந்தாலும் ஓ.கே. தானா? அல்லது அந்த fantasy ஜேசன் ப்ரைசிற்கு மாற்றாக இன்னொரு fantasy சுப்பையாவே இடம்பிடித்தல் தேவலாம் என்பீர்களா? A straight swap (or) anything that’s good ?

* சந்தா A-யில் ஏதேனும் ஒரு genre சேர்க்கை செய்யும் சுதந்திரம் மட்டும் உங்கள் வசம் ஒப்படைக்கப்பட்டால் – உங்கள் தேர்வு என்னவாக இருக்குமோ? நாயகர் / நாயகி யாராக இருப்பார் ?  Please : ”வேதாளர்”; ”ரிப் கிர்பி”; ”காரிகன்” போன்ற பதில்கள் தற்போதைக்கு பாடத்திட்டத்திலேயே கிடையாது! அதனால் பார்வைகளை / சிந்தனைகளை கொஞ்சம் விசாலமாய் வீசியொரு சுவாரஸ்யமான பதில் தந்திடுங்களேன் – ப்ளீஸ்?

* சந்தா B: காத்திருப்பது Tex-ன் 70-வது ஆண்டு என்பதால் இதற்கென கௌபாய் ஆர்வலர்களிடம் நிறைய யோசனைகள் இருக்கலாம் தான்! காத்திருக்கும் ஈரோட்டின் வாசக சந்திப்பின் போது இது பற்றிப் பேசிடலாம் என்பதால் இப்போதைக்கு அந்தக் கேள்வியை மனதுக்குள் மாத்திரம் அசைபோடச் சொல்லி கோரிக்கையை முன்வைக்கிறேன் guys! ‘ஆயிரம் ரூபாய்க்கு ஒரே புக்; ரெண்டாயிரம் பக்கத்துக்கு ஒரே புக்‘ என்ற ரீதியிலான டெரர் பரிந்துரைகளின்றி – யதார்த்தத்தை ஒட்டிய திட்டமிடல்கள் பக்கமாய் சிந்தனைக் குதிரைகளை அனுப்புவோமே?

* சந்தா C – எனது favorite சந்தா ரகம் இதுவே என்பதில் சந்தேகமில்லை! ஆனால் இன்னமுமே இதுவொரு சகல தரப்பின் thumbsup பெற்ற universal ரசனையாக உருப்பெற்றிருக்கவில்லை தான்! So 2018-ல் சந்தா C வழமை போலத் தொடரும் ; ஆனால் கட்டாயச் சந்தாவாக இருந்திடாது! பிடித்தாலும், பிடிக்காது போனாலும் – கார்ட்டூன் சந்தாக்கள் உங்கள் தேர்வுதனில் நிச்சயம் இடம்பிடித்திடும் என நடப்பாண்டில் கண்டிப்புக் காட்டியதால் ஒரு முப்பது – நாற்பது சந்தாக்கள் miss ஆகியிருக்கக் கூடும் என்பது புரிகிறது ! அதே பிழையை இம்முறையும் செய்திட வேண்டாமென்று தீர்மானித்துள்ளேன்! ‘படித்தால் மகிழ்வோம்; பிடித்துப் படித்தால் ரொம்பவே மகிழ்வோம்; ஆனால் திணிக்க மாட்டோம்‘ என்பதே இனி நம் சிந்தனையாக இருந்திடும்! இந்தக் கார்ட்டூன் சந்தாவில் எனக்கான கேள்விகள் சில on the fence பார்ட்டிகள் சார்ந்தது!

* முதல் கேள்வி : நீலப் பொடியர்கள் ஸ்மர்ஃப்ஸ் சார்ந்தது! “அற்புதமானதொரு படைப்பு; எனக்குமே அப்படியொரு அழகான உலகிற்குள் போய் வந்த உணர்வு ஒவ்வொரு ஸ்மர்ஃப் கதையிலும் கிடைக்கிறது!” என்று சொல்லியுள்ள நண்பர்கள் கணிசம். அதே மூச்சில் – “ஏனோ சொல்லத் தெரியவில்லை; ஆனால் என்னால் இந்தத் தொடரோடு ஒன்றிட முடியவில்லையே?” என்ற மண்டைச் சொரிதல் சகித சம்பாஷணைகளுக்கும் நான் சாட்சியாக இருந்திருக்கிறேன்! கார்ட்டூன் சந்தாவின் ஒவ்வொரு பக்கமுமே உங்களுக்குப் பிசிறில்லா மகிழ்வைத் தந்திட வேண்டுமென விரும்புபவன் நான்; So அந்தச் சந்தாவில் இப்போதொரு முக்கிய அங்கமாய் இருந்து வரும் இந்தப் பொடியர் பட்டாளத்தைத் தொடரும் நாட்களில் நாம் எவ்விதம் கையாள்வது என்பதிலொரு ஊர்ஜிதம் இருந்தால் நல்லதென்று நினைக்கிறேன்! பொடியர்கள் – இதே போல தொடரலாமா? அல்லது  சற்றே slot-களைக் குறைவு பண்ணிட அவசியமாகுமா? 

* உப கேள்வி # 2 : மேலேயுள்ள வரிகளை அட்சர சுத்தமாய் நகல் எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் நீலப்பொடியர்கள் “ஸ்மர்ஃப்” என்ற இடத்தில் “ரின்டின்கேன்” என்று மட்டும் மாற்றிக் கொள்ளுங்களேன்? இந்த 4 கால் ஞானசூன்யம் பலருக்கு வெல்லம் கலந்த செல்லம்; சிலருக்கு ‘ஙே‘ ரகம் என்பது இந்தாண்டினில் நமக்கு வந்துள்ள விமர்சனங்களும், மின்னஞ்சல்களும் சொல்லும் சேதி  ! ஒரு இலக்கில்லாது slapstick காமெடி போல் இந்தத் தொடருள்ளது என்பதே இது தொடர்பாய் வந்துள்ள புகார்களின் சாராம்சம் ! "நம் வீட்டுக் குட்டீஸ்களுக்கு ;அடுத்த தலைமுறைக்கு" என நான் நிறைய பில்டப் தரலாம் தான் ; ஆனால் நாளின் இறுதியில், காசு போட்டுப் புத்தகம் வாங்கும் நபருக்கு அந்தப் படைப்பு ஒரு நிறைவைத் தந்தாகவும் வேண்டும் தானே ? So – அந்த மாமூலான ஒற்றை slot-ல் இந்த நாலுகால் நாயகன் தொடர்வது பற்றிய உங்கள் எண்ணங்கள் ப்ளீஸ்?

* சந்தா D பற்றிப் புதிதாய் என்ன கேட்கப் போகிறேன் - இந்த பால்யத்து நினைவுச் சின்னங்கள் சற்றே சுவாரஸ்யமாகத் தொடர்ந்திட ஏதாவது உபாயங்கள் மனதில் உள்ளனவா என்பதைத் தாண்டி ? சில காலமாகவே என் மனதில் இருப்பது - மும்மூர்த்திகள் கதைகளுக்கு fresh ஆகவொரு மொழியாக்கத்தை வழங்குவதே - என்பதில் ரகசியமில்லை தான்  !  நண்பர்கள் அணி பொறுப்பேற்றுக் கொள்வதாயிருப்பின் I am game for it ! ஆனால் “முதல் தமிழ் மாநாடு நடந்த வருஷத்தில், நான் வாசித்த மும்மூர்த்திகளின் கதையினில்  முனையளவு மாற்றம் இருந்தாலுமே முகச்சுளிப்பே மிஞ்சும்” என்றொரு நிலை அதற்கு பலனாகிடக் கூடாதென்பதே எனது அவா! அந்நாட்களது கதைகளுள் ஆரம்பத்து batch-ன் தமிழாக்கம் – அப்புசாமித் தாத்தாவைச் சீடை சாப்பிடச் சொன்னது போன்ற சங்கடத்தை இன்றைக்கு ஏற்படுத்துவது நிச்சயம் எனக்கு மட்டுமல்ல என்பேன் ! “Nostalgia” என்றதொரு கூலிங் கிளாஸ் மட்டும் இல்லாமல் இன்றைய ரசனை அளவுகோல்களில், அன்றைய வரிகளை ஆழத்தியெடுத்தால் – விளைவுகள் செம ரகளையாக இருக்குமென்பதில் எனக்குச் சந்தேகமில்லை! எனது கவலையெல்லாம் அந்தக் கண்ணாடி இல்லாது முதல் தடவையாக இந்தக் கதைகளை வாசிக்கும் ஒரு இன்றைய யுகத்து வாசகர் – ”இதென்னடா சாமி  பாணி?” என்று மிரண்டு விடக் கூடாதென்பதே! ”சிறைப்பறவைகள்”; ”தங்கவிரல் மர்மம்” போன்ற 1975 / 76 + ஆண்டுகளில் வெளிவந்த கதைகளுள் நமது கருணையானந்தம் அவர்களின் பணிகளும் ஒரு அங்கம் வகிப்பதால் அவற்றை நோண்டிப் பார்க்க அவசியமிராது! அவற்றிற்கு முன்பான ஆண்டுகளில் வெளிவந்த சுமாரான எழுத்து நடைகளை செப்பனிட முனைவோமா ?  What say guys? புதிதாய் ஒரு நடையை 2018-க்கு நடைமுறையாக்கிப் பார்க்கலாமா? ‘Yes’ எனில் அந்தப் பொறுப்பை ஏற்க யாரெல்லாம்   தயார் என்றும் சொல்லி விடுங்களேன் - ப்ளீஸ்?

சந்தா E முளைத்தே மூன்று இலைகள் இன்னமும் விட்டிருக்கவில்லை என்பதாலும்; “சூப்பர் 6” பற்றி ஏற்கனவே ஆராய்ச்சி செய்து முடித்தும் விட்டோம் என்பதாலும் – அந்த 2 பிரிவுகள் பற்றிய வினாக்கள் ஏதுமிருக்கப் போவதில்லை! - at least for now ! ஆகையால் current affairs பக்கமாய் பார்வைகளைத் திருப்பிடலாம்! ஆகஸ்டின் இதழ்களுள் கலரில் ரகளை பண்ணக் காத்திருக்கும் இறுதி இதழ் பற்றிய அறிமுகம் இனி !

டைலன் டாக்கின்இது கொலையுதிர் காலம்” தான் உங்களை சந்தா B-ன் சார்பாய் இம்மாதம் சந்திக்கவிருக்கும் இதழ்! And இதோ – அதன் அட்டைப்பட முதல் பார்வை!

ஒரிஜினலே செம டெரராய் அமைந்திடும் போது அதனில் நமது திருக்கரங்களைப் பிரயோகிக்கும் அவசியமே எழாது போய்விடுகிறது! So முன் + பின் அட்டைகளுமே ஒரிஜினல்களின் உபயமே! And உட்பக்கங்களும் நமது இந்தக் கறுப்பு + சிகப்பு உடுப்புக்காரரின் சாகஸத்தில் ஜகஜ்ஜோதியாக டாலடிக்கின்றன! வழக்கமாய் டைலன் கதைகளில் பத்தி பத்தியாய் பேசும் sequences நிறைய இருந்திடும்; ஆனால் இம்முறையோ ஆரம்ப பக்கத்தில் தொட்டுப் பார்க்கும் டாப் கியர் கடைசிப் பக்கம் வரையிலும் இம்மி கீழறங்குவதாகயில்லை! தலைதெறிக்கும் (மெய்யாலுமே தலைகள் தெறிக்கின்றன சாமி – கதையினில்!!) வேகத்திலான இந்த சாகஸத்தின் பின்னணியில் ஒரு சின்ன குளறுபடியின் கதையும் உள்ளது! சென்றாண்டு நாம் வெளியிட்ட டைலன் டாக் சாகஸத்தின் பெயர் KILLERS என்று பொருள்படும். இப்போது வெளியாகவுள்ள “இது கொலையுதிர் காலம்” – ”KILLER” என்று பொருள் தரக்கூடிய தலைப்பைக் கொண்டது. 2015 -ன் இறுதியினில்  நான் ஆர்டர் செய்ய நினைத்திருந்தது “KILLERS” என்ற (சென்றாண்டின்) சாகஸத்தையே! ஆனால் அனுப்பிய மின்னஞ்சலில் ஒரு ‘S’-ஐ விழுங்கி விட்டேன் போலும் – ‘KILLER’ என்ற இப்போதைய கதையின் டிஜிட்டல் .ஃபைல்களைத் தூக்கி அனுப்பி விட்டார்கள்! எங்களிடம் மொழிபெயர்க்கப்பட்டிருந்த கதை வேறு; வந்திருக்கும் ஃபைல்கள் வேறாக உள்ளதே என்று மண்டையைச் சொரிந்து கொண்டே ஆராய்ச்சி செய்த போது தான் விபரம்  புரிந்தது. So கில்லர்ஸ்  & கில்லர் அடுத்தடுத்த “டை.டா.” சாகஸங்களாகிப் போன கதையிது தான்! And அதற்குள்ளாகவே இத்தாலியிலிருந்து “டை.டா” ரசிகர்களிடமிருந்து ஆர்டர்கள் குவியத் தொடங்கி விட்டன இம்மாத வெளியீட்டுக்கு!

புது இதழ்கள் மூன்றும் திங்கள் இரவு தயாராகி விடும்; செவ்வாய் காலையில் (August 1) உங்களைத் தேடிப் புறப்படும்! ”டைலன் டாக்” இதழின் மொழிபெயர்ப்பு சார்ந்த கடைசி நிமிட ரிப்பேர் பணித் தாமதமே இந்த ஒற்றை நாள் தாமதத்துக்குப் பொறுப்பு! புதியதொரு மொழிபெயர்ப்பாளர் இதனில் பணி செய்திருந்தார் & வழக்கம் போல துவக்கத்தில் நெருடல்கள் தோன்றிடவில்லை என்பதால் இதனில் ரொம்ப பேன் பார்க்கத் தேவைப்படாது என்ற நம்பிக்கையில் “இரத்தக் கோட்டை” பணிகளுக்குள் ஆழ்ந்திருந்தேன்! ஆனால் 3 நாட்களுக்கு முன்பாக “இது கொலையுதிர் காலம்” பக்கங்களைத் தூக்கிக் கொண்டு அமர்ந்த போது – குண்டும், குழியுமான சாலையில் சவாரி போனது போல் தோன்றியது. இங்கே திருத்தம்; அங்கே ரிப்பேர் என்று ஆரம்பிக்க – ‘முழுசாய் மாற்றி எழுதிப் போவது இதை விட சுலபம்‘ என்று ஒரு கட்டத்தில் மனதுக்குப் பட, வெள்ளியிரவு தான் அது சார்ந்த பணி நிறைவுற்றன! ‘விடாதே... போட்டுத் தாக்கு‘ என்று நேற்று பிராசஸிங் & அச்சு வேலைகளை செய்யத் தொடங்கினோம். இந்தப் பதிவை நான் டைப் செய்யும் சனி நள்ளிரவுக்கு ஆபீசில் டைலன் டாக் அச்சுப் பணிகள் பரபரப்பாய் ஓடியவண்ணம் உள்ளன ! So செவ்வாய் காலை உங்கள் கூரியர்கள் ‘ஸ்லிம் சிம்ரனாய்‘ இங்கிருந்து புறப்படும் – EARLY BIRD பேட்ஜ்களையும் சுமந்து கொண்டு! 

No சிம்ரன் ; only  புஷ்டிகா !! - என்ற கோஷத்தோடு  இந்தக் கவர்களை உசிலைமணியாய் பரிணாம வளர்ச்சி கொண்டு பார்த்திட விரும்பும் பட்சத்தில், வாரயிறுதி வரைக் காத்திருந்து “இரத்தக் கோட்டை” இதழையும் இந்தக் கூரியருக்குள் நுழைத்திடல் வேண்டும் ! அவ்விதம் திட்டமிடுவதாயின்,  வெள்ளியன்று (ஆகஸ்ட் 4) பார்சல்கள் புறப்பட்டாக வேண்டும் ! எவ்விதம் செய்யலாமென்று தீர்மானிப்பது உங்கள் choice folks! 

அப்புறம் பணிகள் முடிந்த கையோடு - "சலோ ஈரோடு" என்ற ஏற்பாடுகளுக்குள் தலைநுழைக்கக் காத்திருக்கிறேன் ! As usual - அதே பரபரப்பு உங்களைச் சந்திக்கும் வாய்ப்புகளை எண்ணி ! அதே வேளையில், உங்கள் ஒவ்வொருவரின் எதிர்பார்ப்புகளுக்கும் ஏதோ விதங்களில் நியாயம் செய்திட வேண்டுமே என்ற ஆதங்கமும் !! அடுத்த ஒரு வாரத்துக்கு மட்டுமாவது கால் சராய்க்கு மேலாக ஜட்டியையும். ; மேஜை விரிப்பை முதுகிலும் கட்டிக்க கொள்ள முடிந்தால் தேவலாம் என்று பட்டது !! மீண்டும் சந்திப்போம்! அது வரை have an awesome Sunday!

P.S : கோவை புத்தக விழாவின் கடைசி நாளின்று !!நமது ஸ்டால் நம்பர் 202 க்கு மறவாது ஒரு விசிட் அடித்திடலாமே ?


Monday, July 24, 2017

கனவுகள் - நேற்றும் ..நாளையும் ...!

நண்பர்களே,

வணக்கம். பக்கம் பக்கமாய், பத்தி பத்தியாய்ப் புது வரவுகளை பற்றித் தகவல்கள் போட்டு விட்டு, கடைசிப் பாராவில் XIII பற்றி நாலே வரி  எழுதினாலுமே - மனுஷன் முண்டியடித்துக் கொண்டு வெளிச்ச வட்டத்தை ஆக்கிரமிப்பது ஒரே நாளில் 340 + பின்னூட்டங்கள் என்ற அலையிலேயே அப்பட்டமாகிறது ! இதே வேகமும், எழுச்சியும், "இரத்தப் படலம்" முன்பதிவினில் தொடர்ந்திடும் பட்சத்தில் - ஒரு landmark தருணம் நமக்குக் காத்திருக்குமென்பது உறுதி ! But first things first ! "படலம்" பற்றிய அக்கறைக்கு முன்பாக "கோட்டை" மீதான கரிசனமே முக்கியம் என்ற சூழலில் நாமுள்ளோம் இப்போது ! இன்னமுமே "இரத்தக் கோட்டை" The Collection இதழினை முன்பதிவு செய்திருக்கா பட்சத்தில் - why not give it a try today folks ? வண்ணத்தில் அட்டகாசமாய் வந்துள்ளது இதழ் & அட்டைப்படமுமே பிரமாதமாய் வந்துள்ளது ! 

சென்றாண்டின் உங்கள் கனவை நனவாக்கி விட்டோம் ; அடுத்த கனவுக்குள் ஆழ்ந்திடும் முன்பாக இந்த நொடியில் திளைத்திடுவோமே முதலில் ?

Please note : "இரத்தக் கோட்டை" இதழினை கடைகளிலோ ; புத்தக விழாக்களில் வாங்கிடுவதாக இருந்தாலோ - இதழின் விலை ரூ.575 என்பதை மறந்து விடாதீர்கள் ! முன்பதிவுகளுக்கு மட்டுமே சலுகை விலைகள் ! And ஆன்லைன் முன்பதிவு இம்மாத இறுதி வரைக்குமே தொடர்ந்திடும் சலுகை விலைகளில் !


Sunday, July 23, 2017

சந்தையில் என்ன புதுசோ ?

நண்பர்களே,

வணக்கம். கொஞ்சமே கொஞ்சம் மொக்கையாக இந்த ஆரம்ப வரிகள் தெரியக் கூடுமென்றாலும், சபலத்தை அடக்க முடியவில்லையே ! So, here goes : ("சிங்கம்" சூர்யாவின் மாடுலேஷனை மனதில் இருத்திக் கொண்டே )

"ஷெல்டன் காரிலே போய்ப் பார்த்திருப்பீங்க... விமானத்திலே போய்ப் பார்த்திருப்பீங்க... கப்பல்லே போய்ப் பார்த்திருப்பீங்க ! ஏன்- பாராசூட்லே போறதைக் கூடப் பார்த்திருப்பீங்க! 

ஆனால்..

ஷெல்டன் கழுதையிலே போறதைப் பார்த்திருக்கீங்களா? அதுவும் காய்ஞ்ச ரொட்டியைக் கழுதைக்கு முன்னாலே தொங்க விட்டுட்டே, அதைத் தாஜா பண்ணிட்டுப் போறதைப் பார்த்திருக்கீங்களா...? பார்த்திருக்கீங்களா ? "

என்றைக்கேனும் ஒரு நாள்; ஒரேயொரு நாள் – நமது ஆதர்ஷ ஷான் வான் ஹாம்மே, தமிழுக்கென பிரத்யேகமாய் ஸ்கிரிப்ட் எழுத முன்வந்து; ஷெல்டனின் லேட்டஸ்ட் சாகஸத்தை நமக்கு அறிமுகம் செய்து வைக்கும் அவசியம் மட்டும் எழுந்தால் – சாமி சத்தியமாய் மேற்கண்ட வரிகளைத் தான் எழுதியிருப்பார்! ஆத்தாடியோவ்- வெள்ளியன்று வேய்ன் ஷெல்டனின் “ஒரு காகிதத்தைத் தேடி” இதழின் எடிட்டிங் பணிக்குள் புகுந்த நேரம் எனக்குள் எழும்பிய சிரிப்பலைகளை ஒருவழியாய் இப்போது தான் மட்டுப்படுத்திக் கொள்கிறேன் ! சர்வதேச spy த்ரில்லர்கள்; XIII போன்ற அசாத்தியத் தொடர்படலங்கள்; லார்கோ வின்ச் போன்ற offbeat சாகஸத் தொடர்கள் என்றெல்லாம் அதகளம் செய்திடும் வான் ஹாம்மே ஒரு ஜாலியான தருணத்தில் இந்தக் கதைக்கு plot எழுத அமர்ந்திருப்பார் போலும்! சுலபமானதொரு துவக்கப் புள்ளியை நிர்ணயம் செய்து கொண்ட பிற்பாடு டுரோன்டோ எக்ஸ்பிரசைப் போல கதையைத் துளி பிரேக்குமின்றி நகற்றிச் செல்கிறார், மனுஷன்! அந்தப் பயணத்தின் போது தான் நமது பென்சில் மீசை நாயகருக்குக் கழுதைச் சவாரி; ரொட்டியைத் தந்து நாலுகால் நண்பரை சமனப்படுத்தும் சாகஸம் என்றெல்லாம்! சவாரி கழுதை மீதென்றாலும்- கதையின் வேகமோ ஜெட் வேகம்!

ஷெல்டனின் அறிமுக நாட்கள் இந்தத் தருணத்தில் என் மனதில் நிழலாடுகின்றன! சின்ன வயதிலிருந்தே காமிக்ஸ் நாயகர்கள் என்றால் மீசையில்லா 'மொழுமொழு பார்ட்டிகள்' என்பதான template என் தலைக்குள் குடிகொண்டிருந்தது! நமது மாண்ட்ரேக் நீங்கலாய், கண்ணுக்குத் தென்பட்ட பாக்கி அத்தனை பேருமே அந்த “no மீசை” இலக்கணத்துக்கு சாட்சிகளாக நிற்க – நம்மூர் படைப்புகளான “இன்ஸ்பெக்டர் கருடா” விற்கு மட்டும் மனசு ஒப்புதல் தந்திருந்தது. இந்த சூழலில் 2013-ன் NBS இதழுக்கான திட்டமிடல்களைப் பூர்த்தி செய்து கொண்டிருந்த வேளையது! ஏகமாய்க் கதைகளை அறிவித்து விட்ட போதிலும் எனக்குள் சன்னமாயொரு நெருடல் தொடர்ந்து கொண்டேயிருந்தது – நாயகர்களுள் ஒருவித ‘X’ factor குறைகிறதோ என்ற ரீதியில்! “கேப்டன் டைகர்”; சிக் பில்; மாடஸ்டி; லார்கோ என்று பரிச்சயமான முகங்களோடு – ஜில் ஜோர்டன் மட்டுமே புதுவரவாக இருந்தது என்னை சமனப்படுத்தியிருக்கவில்லை! ஜில்லாரின் சித்திர பாணி – கார்ட்டூன் ஸ்டைல் என்பதாலும், ரொம்பவே புராதனம் தட்டுப்படும் படைப்பு என்பதாலும் அவர் மட்டுமே போதுமா – இந்த அசுர (??!!) விலையிலான இதழைக் கரைசேர்க்க என்ற பயம் என்னை அலைக்கழித்தது! தவிர, லார்கோ துவக்கித் தந்திருந்த “நவீன யுகக்கதைகள்” என்ற முன்செல்லும் பாதைக்கு வலுசேர்க்க, லேட்டஸ்டாய் யாரேனும் தோள் தந்தால் தேவலாமே என்று தோன்றியது!

நமது நரைமுடி ரோமியோ வேய்ன் ஷெல்டனை எனக்கு ரொம்ப காலமாகவே தெரியும் தான்! ஆனால் அந்த மோவாய்க்கு மேலான ‘கம்பிளிப் பூச்சியின்‘ காரணத்தால் – “ஓவியாவுக்குக் கூட ஓட்டுப் போட்டு விடலாம்; இவருக்கு வேண்டாமே?!” என்ற சிந்தனையே மேலோங்கி நின்றது! வீட்டிலிருந்தபடிக்கு சாமங்களில் பதிவுகளை டைப்பித்து பழகி வந்த நாட்களவை என்பதால் ஒரு மணி – ரெண்டு மணி என்பதெல்லாம் எனக்கு நண்பகல் போல! புதுசாய் யாரையேனும் தேடிப் பிடிக்க வேண்டுமே (NBS-க்குத் தானுங்கோ!!) என்ற குடைச்சல் வேறு தூங்க விடாது பண்ண, எனது காமிக்ஸ் சேகரிப்பு பீரோவைக் குடைய ஆரம்பித்தேன்! “Les Casseurs” என்றதொரு பிரெஞ்சுத் தொடரின் ஆல்பங்கள் கையில் சிக்கின! அந்தத் தொடரோ ஐரோப்பாவில் மெகா சைஸ் டிரக்குகளை சாலையில் ஓட்டிச் செல்லும் 2 சாகஸ டிரைவர்களின் கதை! அதில் நமக்கு ஜாஸ்தி ஆர்வம் இருக்க முடியாதென்றாலும், கதை நெடுகிலும் தலைகாட்டிய ராட்சஸ சைஸ் ‘பூம்‘ டிரக்குகளின் சித்திரங்கள் சொக்க வைத்தன! ஓவியர் யாரென்று கூகுளில் தேடிப் பார்த்தால் – க்ரிஸ்டியான் டினாயெர் என்று பதில் கிடைத்தது. கூடவே அவர் பணியாற்றியுள்ள இதர தொடர்கள் என்ற தலைப்பில் ‘வேய்ன் ஷெல்டன்‘ என்று பிரதானமாய் எழுதப்பட்டிருந்தது! “ஆகா... இது அவர்லே?” என்றபடிக்கே யோசனையில் லயிக்கத் தொடங்கினேன். என்னிடமிருந்த ஷெல்டனின் முதல் பிரெஞ்சு ஆல்பத்தையும் புரட்டத் தொடங்கிய போது- “வான் ஹாம்மே” என்ற பெயரும் கண்ணில் பட்டது! ஆஹா... ஒரு ஜாம்பவனோடு, ஒரு ஓவிய ஜீனியஸ் கைகோர்த்திருக்கும் போது – மீசையென்ன – ஜடாமுடியே வைத்திருந்தாலும் கதை சோடை போகாதென்று ஞானோதயம் உதித்தது! அப்புறம் நடந்த சமாச்சாரங்கள் தான் நாமறிந்ததாச்சே? NBS என்னும் வண்டி ஜெட் வேகத்தில் கரை தாண்டியது; நம்மையுமே அடுத்ததொரு லெவலுக்கு இழுத்துக் கொண்டே! அந்த வெற்றியில் வேய்னுக்கு எத்தனை சதவிகிதப் பங்குண்டு என்று சொல்லத் தெரியவில்லை – ஆனால் நிச்சயமாய் நம்மிடையே ஒரு பக்கவான ஆக்ஷன் ஹீரோவாக ஆசாமி ‘செட்‘ ஆகிப் போனது மட்டும் நிச்சயம்! And இதோ எட்டிவிட்டோமே – இந்தத் தொடரின் அந்திமப் பகுதியினை! ஆகஸ்டில் வரவிருக்கும் "ஒரு காகிதத்தைத் தேடி" இந்தத் தொடரில் ஆல்பம் # 11 ! இதற்குப் பின்னே ஒரேயொரு ஆல்பம் எஞ்சியுள்ளது !  இதழின் அட்டைப்பட முதல் பார்வை & உட்பக்க டீசர் இதோ:

”கழுதைச் சவாரி” தான் இதழின் ஒரிஜினல் அட்டைப்படமுமே என்பதால் அதனையே நாமும் ஏற்றுக் கொண்டோம் – பின்னணிகளில் மட்டுமே மாற்றங்களைச் செய்து கொண்டு! பின்னணிக்கு இம்முறை பயன்படுத்தியுள்ள ஒரு வித Prussian Blue – நமது ராப்பர்களுக்குப் புதுசு என்றே தோன்றியது!
உட்பக்கங்களில் வழக்கம் போலவே அதிரடிச் சித்திரங்கள் + கலரிங் பாணிகள் என்று கண்களுக்கொரு விருந்து காத்துள்ளது! So ”ஒரு காகிதத்தைத் தேடி” – வான் ஹாம்மேவின் மறுபக்கம்! Don’t miss it guys!

அப்புறம் இன்னமுமொரு ‘ஷெல்டன்‘ சேதியும் கூட! இந்தத் தொடருக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்களோ ? என்ற மெலிதான சந்தேகம் எனக்குள்ளிருந்தது! ஆனால் சென்றாண்டின் ஏதோவொரு சமயம் இது பற்றிப் படைப்பாளர்களிடம் கேட்ட போது – கண்சிமிட்டலோடு ‘don’t worry!’ என்று மட்டும் சொல்லி வைத்திருந்தார்கள்! அதற்கென்ன அர்த்தமென்பது தற்சமயம் புரிகிறது – ஆகஸ்டில் காத்திருக்கும் புத்தம் புதிய ஆல்பத்தின் அறிவிப்போடு! So இன்னும் ஒரேயொரு ஷெல்டன் கதை மட்டுமே பாக்கியுள்ளது என்ற நிலை மாறுகிறது! இதோ – காத்திருக்கும் புது ஆல்பத்தின் அட்டைப்படம்!
And புது ஆல்பங்கள் காத்திருப்பது நமது கோடீஸ்வரக் கோமகனின் தொடரிலுமே! வான் ஹாம்மே கதை இலாக்காவிலிருந்து VRS வாங்கியான பின்னே ஓவியரே ஆல்-இன்-ஆல் பொறுப்புகளைக் கையில் எடுத்துக் கொண்டு, நாவலாசிரியர் ஒருவரின் ஒத்தாசையோடு தயாரித்துள்ள புது ஆல்பம் வரும் October மாதம் வெளிவரக் காத்துள்ளது! “வான் ஹாம்மே” என்ற மெகா நிழலிலிருந்து வெளிவருவது அத்தனை சுலபமல்ல தான்; ஆனால் ஓவியர் பிலிப் ப்ராங்குமே ஒரு அட்டகாச ஆற்றலாளரே எனும் போது எதிர்பார்ப்புகள் எகிறுகின்றன! இரு பாக சாகஸத்தின் முதல் ஆல்பம் இந்தாண்டிலும், இறுதி ஆல்பம் 2018-ன் இறுதியிலும் வெளியாகும்! So நாமதை சுவைபார்க்கும் வாய்ப்பு 2019-ல் தானிருக்கும் என்று நினைக்கிறேன்! இதோ அதன் அறிவிப்பு !
புது வரவுகளின் பட்டியலை இன்னமுமே கொஞ்சம் வாசித்து விடுகிறேனே? நமது ஒல்லிப் பிச்சான் லக்கி லூக்கின் புது ஆல்பம் சமீபமாய் வெளியாகியுள்ளது! ஒரு வெற்றித் தொடர் முற்றுப்புள்ளி காணாது, தொடர் நடை போடுவதில் மகிழ்ச்சியே! பாருங்களேன் அதன் ராப்பரை!
அதே சமயம் – நம்மவர்களை, நம்மவர்களே பகடி செய்திடுமொரு புது ஆல்பமும் களம் காண்கிறது! லக்கி லூக்கின் சொல் பேச்சை ஜாலி ஜம்பர் கேட்க மறுத்தால் கதை என்னாவது? என்ற கேள்வியோடு ஒரு கார்ட்டூனை கார்ட்டூனாக்கும் ஆல்பத்தை வெளியிட்டுள்ளனர் பிரெஞ்சில்! பாருங்களேன் இந்தக் கூத்தை! எப்போதாவது ஒரு பொழுது போகா தருணத்தில், இதையும் தமிழாக்க முயற்சிப்போமா guys?
Jolly Jumper Stops Responding !!
இந்தப் ”பகடி மேட்டர்” புதுசில்லை என்பது கொசுறுச் சேதி! ரிப்போர்ட்டர் ஜானி கதைகளை செமையாக வாரி லோம்பா குழுமமே ஒரு இதழொன்றை சில ஆண்டுகளுக்கு முன்பாக வெளியிட்டுள்ளது! இதுவரையிலான வெவ்வேறு ஜானி சாகஸங்களிலிருந்தே படங்களை frame by frame இரவலெடுத்துக் கொண்டே ஒரு உட்டாலக்கடி சாகஸத்தை ஒரு முழு ஆல்பமாக்கியுள்ளனர்! இதில் beauty என்னவென்றால், ஆல்பத்தின் ஒவ்வொரு frame சித்திரமுமே, இதற்கு முன்பான 78 ஜானி ஆல்பங்களுக்கு வரையப்பட்ட சித்திரங்களே ! எந்த விதத்திலும் மாற்றி வரையாது, ஆங்காங்கிருந்து அள்ளிக் கொண்டு வந்து David Vandermeulen என்ற கதாசிரியர் ஒரு remix ஆல்பத்தை உருவாக்கியுள்ளார் !! என்னவொரு கற்பனை பாருங்களேன் ?!! 

அது மட்டுமன்றி New look ரிப்போர்ட்டர் ஜானியின் சாகஸத்தில் ஆல்பம் # 2-ம் சமீபமாய் வெளியாகி தூள் கிளப்பியுள்ளது! ரொம்பவே கட்டுப்பட்டியாய் சுற்றித் திரிந்த நம்மவர் – இந்தப் புது அவதாரில், பட்டப் பகலில் பார்க்கில் "பச்சக்" அடிக்கும் அளவுக்கு வெளுத்து வாங்குகிறார் பாருங்களேன்!
Moving on – ஆகஸ்டின் நமது மையப் பணியான “இரத்தக் கோட்டை” சிறிதும் தாமதமின்றித் தயாராகிட வேண்டுமென்ற வேகத்தில் சாத்தியமான சகல பல்டிகளையும் அடித்து வருகிறோம் ! 'தல' அச்சாகும் வேளைகளில் எங்கும் மஞ்சள் மயமெனில் - "தளபதி" சர்வமும் நீலம் என்கிறார் ! இந்த முழுநீள அதிரடித் தொகுப்பை நண்பர்களின் மூவர் தனித்தனியாய்ப் பிழை திருத்தம் செய்து தந்திருக்க, என் பாடு லேசாகிப் போகுமென்ற மிதப்பிலிருந்தேன் ! ஆனால் கடைசி நேரத்தில், வழக்கம் போலவே மனம் ஒப்பவே இல்லை - நானுமொரு வாசிப்பைப் போடாது பக்கங்களை அச்சுக்கு அனுப்ப ! பலனாக கிட்டத்தட்ட மறந்தே போயிருந்ததொரு கதையினை மீண்டும் வாசித்த திருப்தி கிட்டியது ! Printer's Devils என்றொரு பெயருண்டு - அச்சில் தலைகாட்டும் இந்தப் பிழைகளுக்கு  ! எத்தனை லிட்டர் விளக்கெண்ணையை, எத்தனை பேர் கண்ணில் விட்டுக் கொண்டு திருத்தங்களை செய்தாலும், அவ்வளவு பேருக்குமே 'பிம்பிலிக்கா பிலாக்கி' காட்டும் ஆற்றல் இந்தக் குட்டிச் சாத்தான்களுக்குண்டு என்பதை இன்னமுமொருமுறை உணர முடிந்தது ! நண்பர்களின் கண்களுக்கு டிமிக்கி கொடுத்திருந்த, என் ஆந்தை விழிகளுக்குத் தட்டுப்பட்ட பிழைகளுக்கு திருத்தங்களை போட்ட கையோடு (நிச்சயமாய் இது போகவும் சைத்தான்கள் இருப்பது உறுதியே !!) - இறுதி பாகத்தில் கிழவன் ஜிம்மியின் வசனங்களை மாத்திரமே இன்னும் கொஞ்சம் lively ஆக்க முயன்றேன் ! நிச்சயமாய் இந்த இறுதி ஆல்பத்தை மட்டும் மறுக்கா மொழிபெயர்க்க நேரம் இருந்திருப்பின், இன்னமும் கூட மெருகூட்டியிருக்க முடியுமே என்ற ஆதங்கமும் மெலிதாய்த் தலைதூக்கியது ! But எக்ஸ்டரா நம்பர் போட்டு தர்மஅடி வாங்கிய "தங்கக் கல்லறையின்" ஞாபகம் இன்னமுமே மங்காதிருக்க ,வான்டனாய்ப் போய்திரும்பவும் முதுகைப் பழுக்க வைக்க வேண்டாமே என்று தீர்மானித்தேன் !! 

ஒரு வழியாய் அச்சுப் பணிகள் நேற்றைக்கு முழுமையாகிட – தங்கத் தலைவன் பைண்டிங் பிரிவுக்குத் தற்காலிகமாய் ஜாகையை மாற்றியுள்ளார்! அட்டைப்பட நகாசு வேலைகளுக்கு இம்முறை கூடுதலாகவே மெனக்கெடல்கள் எடுத்திருப்பதால், அதன் பொருட்டு பொறுமையாய் பணி செய்து வருகிறோம் ! மாதந்தோறும் இது போல ஹார்ட-கவர் இதழ்கள் தொடர்ந்திடும் பட்சத்தில், ஷெரீப் டாக்புல்லுக்குப் போல எனக்குமே முடி வெட்டிக் கொள்ளும் செலவேயிராது என்பது மட்டும் நிச்சயம்! Phew!

And ஆகஸ்டின் ‘சஸ்பென்ஸ்‘ புக் ஃபேர் இதழுக்கான பணிகள் ‘விடாதே-பிடி‘ என்ற ரகத்தில் நடந்து வருகின்றன! ஏற்கனவே சொன்னது போல, இதுவொரு முரட்டு இதழல்ல என்பதால் – நிச்சயம் ஈரோட்டுக்கு முன்பாகவே தயாராகிடும் என்பதில் சந்தேகமில்லை எனக்கு! 

எனது பொழுதுகள் தற்போதைக்கு லயித்துக் கிடப்பதோ – our own சஞ்சய் ராமசாமியாரை அடுத்தாண்டு வண்ணத்தில் உலவச் செய்திடும் மார்க்கங்களை அலசுவதில் தான்! 
“ஒரே 900 பக்க மெகா இதழ்” என்ற இரத்தப் படலக் கனவை நனவாக்கிப் பார்த்திடும் பொருட்டு ஒரு சாம்பிள் பிரதியைப் போட்டுப் பார்த்தோம் ! And மெர்செலாகிப் போனோம் சாமி - அதன் எடையையும், ஆகிருதியையும் பார்த்து !!  
சத்தியமாய் சம்பளத்திற்கு ஆள் போட்டே இந்த இதழைச் சுமந்து செல்ல வேண்டியிருக்கும் என்பது அப்பட்டமாய்ப் புரிகிறது! மல்லாக்கப் படுத்துக் கொண்டு இதைப் படிக்க யாருக்கேனும் எண்ணமிருந்தால் அதற்கு முன்பாய் தத்தம் இல்லங்களிலிருந்து புத்தூருக்குப் போகும் பஸ்களின் நேரங்களைத் தெரிந்து வைத்துக் கொள்வது சாலச் சிறந்த சிந்தனையாக இருக்குமென்பேன்! Still not too late guys – “ஒற்றை இதழ்” என்ற உங்கள் கனவு,சேகரிப்புகளுக்கு மகுடம் சேர்க்கக் கூடுமே தவிர, பயன்பாட்டுக்கு எத்தனை தூரம் சுகப்படுமோ? என்ற கேள்விக்கு பதில் என்னிடம் நஹி ! But பெட்ரோமேக்ஸ் லைட்டே தான் வேண்டுமென்று நீங்கள் தீவிரமாகயிருப்பின், உங்களோடு சேர்ந்து இப்போதே நானும் தண்டால், பஸ்கியெல்லாம் எடுத்துப் பழகிக் கொள்ள வேண்டியது தான்! தலீவர் போன்ற 'பிஞ்சு பயில்வான்களுக்கு' இந்த இதழ் வழங்கப்படாதென்றொரு போர்டே வைத்து விடலாம்! So இதற்கான முன்பதிவுப் படிவத்தில்,  பெயர்; முகவரி; செல் நம்பர் என்பதோடு - எடை; பளு தூக்கும் ஆற்றல் என்ற களங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டியது தான்! So Last chance all : கோட்டைச்சாமி தமிழ்நாட்டின் மானத்தைக் காப்பாற்றியே தீர வேண்டுமென்பதில் உறுதியாய் உள்ளீர்களா ? உறுதியானவர்கள் கை தூக்குங்கள் - please ! மிச்ச மீதியை ஈரோட்டில் பேசிக் கொள்ளலாமே !
கோவை புத்தக விழா நேற்றைக்குத் துவங்கியுள்ளது! ஈரோட்டளவிற்கு அங்கு விற்பனை இருந்ததில்லையென்றாலும், இம்முறை துவக்க 2 நாட்களிலேயே ‘அடடே‘ சொல்லும் விதமாய் அட்டகாச response! அடுத்த ஞாயிறு வரை நடைபெறும் விழாவிற்கு அந்தப் பகுதிகளில் உள்ள நண்பர்கள் ஒரு விசிட் அடித்திடலாமே? 

புறப்படும் முன்பாய் - மீண்டுமொரு caption contest !! இம்முறையே தளபதியும், அவரது சகாக்களுமே !! வெற்றி பெரும் caption writer-க்கு  "இரத்தக் கோட்டை" யின் ஒரிஜினல் பிரெஞ்சு இதழ் பரிசு !!
And ஈரோட்டுக்கு வந்திடவுள்ள நண்பர்கள் இன்னமும் attendance பதியாதிருப்பின், இந்தப் பதிவினில் செய்து கொள்ளலாமே - ப்ளீஸ் ? 

SATURDAY 5th.AUGUST'2017 :

சந்திக்கும் இடம் : HOTEL LE JARDIN 

VOC பார்க் வாயிலில், பஸ் நிலையத்திலிருந்து நடக்கும் தூரமே !

நேரம் : காலை 10 to மதியம் 2 

Please do drop in !!!

மீண்டும் சந்திப்போம் guys! டைலன் டாக் காத்திருக்கிறார் எனது ஞாயிறை கபளீகரம் செய்திட !!  Have a great Sunday!

SUNDAY FROM KOVAI
நமது ஸ்டாலில் நிற்பது யாரெல்லாமென்று  பாருங்களேன் !!