வணக்கம். ஒரே மாதத்தில் 2 hardcover புக்ஸ் வெளியான முதல் சந்தர்ப்பம் இதுவாகத் தானிருக்குமா ? என்று யோசிக்கும் போதே ட்யுராங்கோ + லக்கி ஸ்பெஷல் சேர்ந்தே வெளியானதா - அல்லது ; வெவ்வேறு தருணங்களிலா ?? என்ற சந்தேகமும் குடைகிறது! எது எப்படியோ - 2 மைல்கல் இதழ்கள் (300 + 400 ) ஒரே வேளையில் வெளியாவது இதுவே முதன் முறை என்ற மட்டிற்கு உறுதியாய்ச் சொல்லலாமென்றே நினைக்கிறேன் ! தயாரிப்பில் நிறையவே வியர்வை சிந்தச் செய்த இம்மாத 4 இதழ்களும் இப்போது ஆன்லைன் விற்பனைக்கும் தயாராகி நிற்கின்றன : http://lioncomics.in/monthly-packs/409-july-2017-pack.html
அதிரடிக்கு TEX & இளவரசி மாடஸ்டி ; டிடெக்டிவ் genre-க்கு ராபின் & ஜூலியா ; கார்ட்டூன் கலகலப்பிற்கு உட்ஸிட்டி கோமாளிகள் ; சர்வதேச உளவுக் கதைத் த்ரில்லரின் பிரதிநிதியாய் LADY S & ஜான் சில்வர் - என இம்மாதம் காத்திருக்கும் கலவை ஒவ்வொரு ரசனைக்கும் ஒரு விதத்தில் ரசிக்குமென்ற நம்பிக்கையுள்ளது!!
கிட்டத்தட்ட 820 பக்க வாசிப்புக் காத்துள்ளதால் - இம்மாதத்தில் நமக்கென சற்றே கூடுதல் அவகாசம் எடுத்துக் கொண்டு,படித்ததை பற்றி எழுதிடலாமே all ? அலச - ஆராய - விவாதிக்க இம்மாதம் நிறையவே விஷயங்கள் இருக்குமென்ற நம்பிக்கை எனக்குள்ளது ! So அடுத்த 25 நாட்களுக்கு பந்து உங்கள் கோர்ட்டில் தான் folks !! Time for you to get cracking !! Bye for now !
வணக்கம். ஒரு பின்னிரவுப் பதிவுக்கு, மறு நாள் மாலையே ஒரு உபபதிவு அவசியமாகி இருப்பதே - நம்மில் ஊற்றெடுக்கும் காமிக்ஸ் உத்வேகத்தைப் பறைசாற்றுகிறது ! நேற்றும், இன்றுமாய் நமது தளத்தின் பார்வைகள் எண்ணிக்கை 4500+ !!!! Variety is the spice of life என்று படித்திருப்போம் ; ஆனால் அதன் கண்கூடான நடைமுறைப்படுத்தலை இன்றைய பொழுது தரிசிக்க முடிந்தது - உங்கள் எண்ண சிதறல்களில் !
காலம் காலமாய், வண்டி வண்டியாய் நாயக / நாயகியரை நமது அணிவகுப்பிற்குக் கொண்டு வந்ததன் பலனை தெறிக்கும் உங்களின் உற்சாகங்களில் இன்று பார்க்க முடிகிறது ! வேதாளர் ; ஆர்ச்சி...நார்மன்..மிஸ்டர் ஜெட்...ஜான் மாஸ்டர்..; கறுப்புக் கிழவி ; இரட்டை வேட்டையர் ; மாடஸ்டி ; என்று ஆளாளுக்கு அனல் பறக்கச் செய்யும் பொழுது எழும் அதிர்வலைகள் - எங்களது ஓயாத் தேடல்களுக்கு றெக்கைகள் தந்திடும் ஆற்றல் கொண்டுள்ளன !!
இந்தப் பயணத்தின் பெட்ரோலும் நீங்களே ; GPS -ம் நீங்களே ! So ஜமாயுங்கள் !! Bye for now !!
நெய்வேலியில் நடந்து வரும் புத்தக விழாவில் நமது ஸ்டால் நம்பர் 116 ! Please visit us !!
வணக்கம். 'பழையன கழிதல் ; புதியன புகுதல்" என்றெல்லாம் நிறையவே வாசித்திருப்போம் - ஆனால் அது நடைமுறையாகிடும் பொழுது மனுஷனுக்கு நவ துவாரங்களிலிருந்தும் சுடு காற்று மட்டுமே வெளிப்படும் பட்சத்தில் - விழி பிதுங்கிப் போகிறது என்பதை இவ்வாரம் உணர்ந்திட முடிந்துள்ளது ! வருது,...வருது...என்றான மூன்றெழுத்துப் புலி ஒரு வழியாய் வந்தே தீர, GST பதிவுகள் ; அந்தப் படிவம் நிரப்பல் ; இந்தப் படிவம் நிரப்பல் ; கணக்கெழுதும் software அப்டேட் செய்தல் ; இறக்குமதிக்குள்ள விதி மாற்றங்கள் பற்றியறிதல் ; சேவை வரியின் மாற்றங்கள் இத்யாதி....இத்யாதி என என்று இந்த வாரமே ஒரு மண்டை காயும் வாரமாகிப் போனது ! சரி...அலைந்தோம், திரிந்தோம் என்பதற்காக விபரங்கள் ஸ்பஷ்டமாய்த் தெரிந்தனவா என்றால் - ஊஹூம் !! ஆளுக்கொரு விதமாய்ச் சட்டங்களை அர்த்தம் செய்து கொண்டு மனுஷனின் கடைசிக் கற்றை கேசத்தையும் நிர்மூலமாக்க கச்சை கட்டி நிற்கின்றனர் ! "சுக்குக் காபிக்கு GST கிடையாதாம் ; டிகாஷன் காபிக்கு 18 % வரியாம்" ; "கடவாய்க்குள் நம்ம விரலை விட்டுச் சப்பிக் கொண்டிருந்தாலே 5 % சேவை வரி உண்டாம் - அதே இது, அடுத்தாள் விரலைச் சப்ப நேர்ந்தால் 12 % வரியாம் சாமி !தெரியுமோ ?" என்ற ரீதியில் ஆளாளுக்கு ஒரே நாளிரவில் பொருளாதார மேதாவிலாசங்களை, சல்லிசாய் கொள்முதல் செய்து கொண்டிருப்பது புரிகிறது ! நமக்கு மாத்திரம் தானென்றில்லாது - நமது பைண்டிங் பிரிவுக்குமே இந்த GST வருகை தவிர்க்க இயலா அவசியமாகிப் போக - பணியில் கவனம் தர நேரமின்றி, மனுஷன் கனக்குப் பிள்ளை வீட்டின் முன் தவம் கிடந்தது வருகிறார் ! "ஜூலை 1 " என்ற கெடு நம் இதழ்களுக்கும் சரி, GST க்கும் சரி, ஒன்றாய் அமைந்திட - வேறு வழியே இல்லை, திரு திரு வென்று விழிப்பதைத் தாண்டி !! மாதத்தின் 3 இதழ்கள் பைண்டாகித் தயாராகியிருக்க - லயன் # 300 மட்டும் கடைசிக் கட்டப் (பைண்டிங்) பணிகளில் இருந்து வருகிறது. அதன் ஒவ்வொரு தயாரிப்பு நிலையிலுமே வெயிட் போட்டு செட்டாக அவகாசம் ; பெவிகால் காய்ந்திட அவகாசம் என்று time gap தருவது இன்றியமையா சமாச்சாரம் என்பதால், பல்லைக் கடித்துக் கொண்டே காத்துக் கிடக்க வேண்டிப் போகிறது ! To cut a long story short - வரும் செவ்வாய் மாலைக்கு உங்களது கூரியர்கள் இங்கிருந்து கிளம்பிடும் ! சமீப காலங்களில் இதுவே மிகுந்த தாமதம் என்பதன் பொருட்டு உள்ளுக்குள் ரொம்பவே நெருடுகிறது ! ஆனால் விடிந்து முழித்தால் -வேலையைத் தாண்டி வேறெதிலும் கவனம் தர அவசியமில்லாது சுற்றி வந்த மக்களை, இந்த GST திருவிழாவுக்குள் பங்கேற்க 'வாங்கோ....வாங்கோ..' என்று கையைப் பிடித்து இழுத்துச் செல்லும் அனுபவம் இவ்விதமிருக்கும் என்று நாங்கள் எதிர்பார்த்திருக்கவில்லை ! Sorry guys - நிஜமாகவே வருந்துகிறோம் !
இதனை ஈடு செய்திடும் பொருட்டு "இரத்தக் கோட்டை" இதழினை ஜூலை 15 -க்குள் அச்சிடத் தீர்மானித்துள்ளோம் ! அடுத்த 4 நாட்களுக்குள் அதன் DTP வேலைகள் மொத்தமாய் நிறைவு கண்டிருக்கும் என்பதால் - proof reading பணிக்கு உதவிட முன்வந்திருந்த நண்பர்களுக்கு பணிகள் பிரித்து அனுப்பப்படும் ! 3 நாட்கள் அவகாசத்தில் பிழை திருத்தம் செய்து திருப்பி அனுப்பிடல் அவசியம் guys !! And அட்டைப்பட டிசைனும் தற்போது ரெடியென்பதால் - காரணங்கள் இராது, ஆகஸ்டில் தாமதத்துக்கு ! Sorry again all !
தாமதத்தின் ஒரு பங்கு அடியேனுக்கும் சாரும் ; இந்த இதழினில் இடம்பிடிக்கும் ஜூலியா சாகஸத்தின் மொழிபெயர்ப்பினைச் செப்பனிடுவதில் நேரமெடுத்துக் கொண்ட வகைதனில் ! நமது புது மொழிபெயர்ப்பாளர் ஒருவரின் பேனாவின் படைப்பிது என்ற வகையில் மேம்போக்காக அந்நேரம் புரட்டிப் பார்த்ததைத் தாண்டி வேறெதற்கும் நேரம் இருந்திருக்கவில்லை ! But இம்மாதம் அதனைத் தூக்கி வைத்துக் கொண்டு பணிகளைத் துவக்கிய போது தான் -ஏகமாய்த் திருத்தங்கள் செய்திடும் அவசியம் புரிந்தது ! நல்ல மொழிநடை தான் எனினும், வாக்கிய அமைப்புகள் ; எதைத் தவிர்ப்பது, எதைத் தழுவுவது ? போன்ற சிற்சிறு விஷயங்களில், அனுபவமின்மை காரணமாய் நேரும் சொதப்பல்கள் நிறையவே நெருடின ! அவற்றைச் சரி செய்ய அமரும் வேளைகளில் எல்லாம் கொட்டாவிகள் விட்டம் வரை விரிய - தாமதம் அங்கேயும் !! Maybe இது ஆண்டுமலர் மாதம் என்பதாலோ - என்னவோ, நமது அந்நாளைய ஆத்ம தோழனாம் தாமதப் பிசாசும், ஆட்டத்துக்கு சேர்த்தியாகிக் கொண்டது போலும் ! Anyways - தொடரும் மாதங்களில் நேரம் தவறாமையைத் தவறாது கடைப்பிடிப்போம் !
இது சூப்பர் 6 இதழின் மாதமுமே என்பதால், சிக் பில்லின் classics பிரதியினைக் கையில் வைத்து அழகு பார்க்கும் போது எழுந்த சில random சிந்தனைகளே இந்த ஞாயிறின் பதிவுக்கான topic ஆகிடுகிறது ! பழசின் மறுபதிப்போ, புதுசின் புதுவரவோ - fresh அறிவிப்புகள் வெளியாகும் ஒவ்வொரு தருணத்திலும் அவற்றை விசிலடித்து வரவேற்கும் உங்கள் உத்வேகத்தை நாமறிவோம் ! அந்த விதத்தில் தற்போது ஓடிக் கொண்டிருக்கும் இந்த SUPER 6 இணைதடம் ஒரு அழகான வெற்றி என்பதில் ஐயமில்லை ! லக்கி கிளாஸிக்ஸ் துவக்கி வைத்த டெம்போவை மாடஸ்டியின் "கழுகுமலைக் கோட்டை" அடுத்த லெவலுக்கு இட்டுச் செல்ல ; தொடர்ந்திட்ட 'ஜெரெமியா' for - against என்று ஏகமாய் உணர்வுகளை வெளிப்படுத்தக் காரணமாக அமைந்ததொரு இதழ் ! And இப்போது நமது வுட் சிட்டி கோமாளிகளின் மறுபதிப்பு மேளா நிச்சயமாய் சுவாரஸ்யத்துக்குப் பஞ்சம் வைத்திடாதென்ற நம்பிக்கை திடமாயுள்ளதால் சூப்பர் 6 -ன் நான்காம் வெளியீடுமே தேறிடும் என்று நம்ப இடமுள்ளது ! காத்திருப்பது 'தல'யின் "டிராகன் நகரம்" - வண்ணத்தில் எனும் பொழுது கண்களை இருக்க மூடிக் கொள்ளலாம் - இதன் வெற்றி உத்திரவாதத்தை எண்ணி !! And இறுதி இதழும் ஒரு ஜனரஞ்சக நாயகரது என்பதால் - "பிரின்ஸ் ஸ்பெஷல்" சந்தோஷத்தை மட்டுமே விதைத்திடும் என்று நம்பலாம் தானே ? God willing - சகலமும் நலமாய் அமைந்தால், இந்த SUPER 6 முயற்சி நினைவுகளில் தொடர்ந்திடும் அந்தஸ்த்தைப் பெற்றிருக்கும் ! So இந்த இணைதடத்தைத் தொடரும் காலங்களிலும் தொடர்வதன் வாய்ப்புகள் பிரகாசம் என்பேன் ! But இந்தாண்டினைப் போலவே மினிமம் வசூலுக்கு கியாரண்டி தரும் மறுபதிப்புகளை மிகுதியாக்கிடாது - புதுசுகளுக்கு அடுத்த சுற்றில் இடம் தந்தாலென்னவென்று தோன்றியது ! Of course - இவை சகலமும் உங்கள் ஆர்வங்கள் பிரதிபலிப்புகள் எனும் பொழுது - இங்கு எனது சிந்தனைகளை விட, உங்களது தேர்வுகளுக்கே முன்னுரிமை !
ஆகையால் 100 % பழசா ? 100 % புதுசா ? அல்லது 50 - 50 கலவையா ? என்பதே எனது முதல் கேள்வி ! "பழசே செம !!" கட்சிக்காரர்களாய் நீங்களிருப்பின், நமது ரேடார்களைக் கீழ்க்காணும் நாயகர்களுக்கு மத்தியில் ஓடச் செய்யலாம் :
சாகச வீரர் ரோஜர் (அந்த "மர்மக் கத்தி" promise மறக்கவில்லை எனக்கு !)
சுஸ்கி & விஸ்கி
கூர்மண்டயர் (கொலைப்படை சைசில்..)
சார்ஜெண்ட் தாமஸ் / மின்னல்படை (யுத்த கதைகள்)
"சாவதற்கு நேரமில்லை " சைமன் !
மாயாவிகாரு - வண்ணத்தில் - கொரில்லா சாம்ராஜ்யம் / யார் அந்த மாயாவி ? etc..
Elaborating on these - வண்ணத்தில் சா.வீ,ரோ.வின் "மர்ம கத்தி" + ஏதேனுமொரு ரோஜர் சாகசம் நிச்சயம் அழகானதொரு இதழாய் அமையும் என்ற நம்பிக்கையுள்ளது எனக்கு! அந்நாட்களில் இந்த இதழைத் தயாரித்த தருணம் எனக்கு இன்னமுமே பளிச்சென்று நினைவில் உள்ளது ! ஜூலை 1986 release என்பதால் - ஒரு மாதம் முன்பாய் இதனுள் பணியாற்றப் புகுந்த தருணம் தான் எனது பி.காம் இறுதியாண்டின் பரீட்சைகள் இருந்தன - மதுரையில் !! So பத்து நாட்களாய் அங்கே ரூம் போட்டுத் தங்கியிருந்து பரீட்சைகள் எழுதும் அக்கப்போருக்கு மத்தியில் தான் இந்த ரோஜர் சாகசம் அச்சுக் கோர்க்கப்பட்டு என்னிடம் வந்து சேர்ந்தது - எடிட்டிங்கின் பொருட்டு ! 2 நாட்களில் Business Law பரீட்சையை வைத்துக் கொண்டு இந்தப் பக்கங்களுக்குள் கொஞ்ச நேரம் ; அந்தப் பக்கங்களுக்குள் மிச்ச நேரம் என்று தலை நுழைக்கப் பார்த்த பொழுது - ரிசல்ட் ஒன்றாகவே இருந்தது - தலை கிறுகிறுத்த விதத்தில் ! இங்கேயும் ஏதும் புரியலை ; அங்கேயும் ஒரு கழுதையும் புரியவில்லை ! சில சிக்கல்களுக்கு ஸ்பஷ்டமான தீர்வு - சூடாய் ரெண்டு பரோட்டா தான் என்பதை அன்றைய ராப்பொழுதில் உணர்ந்தேன் - தூங்கா நகரின்சாலையோர பரோட்டா கடைகளின் புண்ணியத்தில் ! சாப்பிட்டு விட்டு ரூம் திரும்பிய போது தலை காலியாக இருந்த போதிலும், தொப்பை நிறைந்திருந்ததில் மனம் குதூகலித்தது ! 'நேரா ரூமுக்கு போறோம் ; ஒரே அவர்லே எடிட்டிங் பண்றோம் ; அப்புறமா முழுக்க Business Law குள்ளாற முங்கு நீச்சல் போடுறோம் !" என்ற வைராக்கியத்தோடு ரெண்டு வாழைப்பழத்தைப் பிய்த்துப் போட்டுக் கொண்டே லாட்ஜுக்குத் திரும்பினால் ரிசெப்ஷன் பகுதியில் சொல்லி மாளா ஜனத் திரள் !! 'அடடே...ஒரு இளம் தொழிலதிபர் கிட்டே ராப்பொழுதிலேயும் ஆட்டோகிராப் வாங்க ராத்திரி ரெண்டு மணிக்கும் இவ்ளோ ஆர்வமா ? இந்நேரம் பாத்து நீ லுங்கிலே திரியுறியேடா பாவி !! " என்றபடிக்கே படியேறினால் - அந்நாட்களது black & white DYNORA டி.வி. முன்னே அத்தனை பயபுள்ளைகளும் குழுமிக் கிடந்தனர் - "ஓய்ய்ய்ய்" என்ற கூச்சலோடு ! பார்த்தால் மெக்சிகோவில் அந்நேரம் நடைபெற்றுக் கொண்டிருந்ததொரு புட்பால் மேட்ச் பரபரப்பாய் ஓடிக் கொண்டிருந்தது ! ஆர்ஜென்டினாவும், இங்கிலாந்தும் மோதினர் என்று ஞாபகம் ! எனக்கு பொதுவாய் லொங்கு லொங்கென்று ஒரு பந்துக்காக 22 பேர் சட்டையைக் கிழித்துக் கொள்ளும் அந்த ஆட்டத்தின் மீது அத்தனை மைய்யல் கிடையாது தான் ; ஆனால் ரூமில் மிரட்டலாய்க் காத்துக் கிடந்த ரோஜரையும் , தடிமனான பாடப் புத்தகத்தையும் நினைத்த மறுகணமே புட்பால் மீது தீராக் காதல் பிரவாகமெடுத்தது எனக்கு !! கதவோரம் இருந்த துக்கனூண்டு இடத்தில நானும் கட்டையை நுழைத்துக் கொண்டு, மேட்சுக்குள் மூழ்கிப் போக - ராப் பொழுது கரைந்தது ! ஒரு மாதிரியாய் மூன்று மணி சுமாருக்கு ரூமுக்குப் போய் நின்றால், மறுநாள் அதிகாலையில் - ரோஜரின் பக்கங்களைத் திரும்பவும் வாங்கிச் செல்ல, சிவகாசியிலிருந்து நம்மாட்களை வரச் சொல்லியிருந்தது நினைவுக்கு வந்தது ! செல்போன்கள் இல்லா நாட்கள் என்பதால் - அவர்களை நிறுத்தவும் வழி லேது !! So விழிகளில் உறக்கம் அசுரனாய்க் கனத்ததொரு பின்னிரவில் அந்த சாகசத்தைக் கரை சேர்த்தேன் ! அதன் கிராபிக் நாவல் பாணி முடிவை எட்டிப் பிடித்த போது - தூக்கமெல்லாம் வடிந்தே போனது ! ஏற்கனவே அந்த மாதம் தான் நமது இரத்தப் படலம் - பாகம் 1-ல் என் மண்டையும், உங்களது ஒட்டு மொத்த மண்டைகளும் ரெங்க ராட்டினம் சுற்றிய நினைவு பசேலென்று நிற்க - 'தெய்வமே...தமிழ் காமிக்ஸ் உலகிற்கு ஏனிந்த சோதனை ??' என்று பொருமத் தான் முடிந்தது !! But 'எல்லாம் அவன் செயல்' என்று பாரத்தைத் தூக்கிப் பகவான் மீது போட்டுவிட்டு, குறட்டைவிடத் தொடங்கினேன் ! ஆனால் இதழ் வெளியான சமயம் நம் அனைவருக்குமே அந்த கிளைமாக்ஸ் த்ரில்லிங்காக அமைந்திருந்ததும், இதழ் சிக்கலின்றி ஹிட்டடித்ததும் கண்முன்னே நிகழ்ந்த பொழுது - பகவான் நினைப்பை விடவும், அடியேனின் கதைத் தேர்வை எண்ணி காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளத் தான் தோன்றியது ! ஆனால் பிட்டத்தில் மிதிக்கும் அவசியங்களை சுடச் சுட நடைமுறைப்படுத்தும் ஆற்றல் கொண்ட ஆண்டவர் - மறு மாதமே "ரிப்போர்ட்டர் ஜானியின்" இடியாப்ப நூடுல்ஸ் சாகசத்தை முன்வைத்து - ஐயோ...தெய்வமே !! என்று கதறச் செய்தது தனிக்கதை !! So, if & whenever it happens - மர்ம கத்தி reprint நிறைய மலரும் நினைவுகளையும் வாரித் தரும் என்பதில் ஐயமில்லை !
பட்டியலில் # 2 ஆன சுஸ்கி & விஸ்கி கதைகளை அழகாய், முழு வண்ணத்தில், பெரிய சைசில் மறுபதிப்பு செய்தால் நிறைய வளர்ந்த குழந்தைகள் கண்ணில் பால்யத்து நினைவுகள் சார்ந்த ஜலம் பெருக்கெடுக்கும் என்பது நிச்சயம் ! ஆனால் கதைகளின் ஓவரான மழலைத்தனம் வேறு மாதிரியான கண்ணீர்களையும் வரவழைத்து விடுமோ என்ற சந்தேகம் தான் என் கைகளில் எழும் நமைச்சலைக் கட்டி வைத்துள்ளது ! உங்கள் சிந்தனைகளே இங்கு பிரதானம் !
Number 3 on the list - நமது சிரசாசன SMS புகழ் கூர்மண்டையரின் alltime classics-களுள் ஒன்று! கொலைப் படை வெளியான நாட்களை பற்றி நிறையவே எழுதியிருக்கிறேன் என்றாலும், அந்த சாகசத்தை vibrancy 32 ஆண்டுகளுக்குப் பின்னேயும் நினைவில் தங்கியுள்ளது ! இன்னொரு வாய்ப்பு - முழு வண்ணத்தில் கிட்டினால் ரசிக்க ரெடியா நீங்கள் ? என்பதே எனது கேள்வி ! RK நகர் பார்முலாவில் அல்லாது - நம்பும் விதமாய் ஒரு கருத்துக் கோரலை முன்வைப்போமா ?
லிஸ்டில் நான்காம் இடத்தைப் பிடிப்பவர்களுமே அந்நாட்களது Fleetway நாயகர்களே ! வெகு குறைவான வாய்ப்புகள் மட்டுமே பெற்றிருந்த மின்னல் படையினரும், சார்ஜெண்ட் தாமஸும் எனது பால்யத்து தோழர்கள் ! உலக யுத்த ஆக்ஷன் கதைகளுக்கொரு landmark என்பேன் இவர்களது சாகசங்களை ! இவர்களது தொடர்களில் தலா 13 சாகசங்கள் உண்டு - நமது மும்மூர்த்திகளின் சைசில் ! இவற்றின் மீது உங்களுக்கு ஆர்வம் தொடர்ந்திடும் பட்சத்தில் worth a try ! ஆனால் இதுவொரு ஏகோபித்த தீர்வாய் இலா பட்சத்தில் - 'உன் ஆசைக்கு என் பணம் தான் சிக்குச்சா - கரியாக்க ?' என்று தெளியத் தெளிய சாத்துக்கள் நிச்சயம் !
லிஸ்டில் 5 - ஒரு புயல் வேக நாயகர் ! Jean Valhardi என்பது இவரது பிரெஞ்சு நாமகரணம் ! ஆனால் அரையணா செலவின்றி, இவருக்கொரு புதுப் பெயர் (சைமன்) வழங்கியிருந்தேன் 1987-ல் ! "சாவதற்கு நேரமில்லை" மூச்சிரைக்கச் செய்யுமொரு ஆக்ஷன் த்ரில்லர் ! பின்னாட்களில் இன்னமுமொரு கதையும் இவரது தொடரிலிருந்து வெளியிட்டதாக ஞாபகம் ! So இந்த நாயகரை உயிர்த்தெழச் செய்ய வாய்ப்புகள் உண்டு தான் - உங்களுக்கு ஆர்வமிருப்பின் !!
Last, but not the least - வண்ணத்தில் இரும்புக்கை மாயாவி ?!! "பில்டப் கேட்டேனா ? நான் பில்டப் கேட்டேனா ?" என்று நம்மவர் தரும் மைண்ட் வாய்ஸ் உலகுக்கே கேட்கும் என்பதால் எனக்கு மாய்ஞ்சு மாய்ஞ்சு டைப் அடிக்கும் அவசியமில்லை இங்கே ! சந்தேகமிலா சூப்பர் ஹிட்டடிக்கும் தானே ?
இவர்கள் தவிர்த்து இன்னமுமே உங்களது favorite நாயகர்கள் நிறையவே இருக்கலாம் - இந்தப் பட்டியலில் இடம்பிடிக்கும் தகுதியோடு ! ஆனால் எனது இந்த முன்மொழிவுகள் எல்லாமே - சுவாரஸ்யம் ; கதைகளின் டிஜிட்டல் பைல்கள் ; மறுபதிப்பு உரிமைகள் பெற்றிடுவதில் சிரமமின்மை ; ஒரு நெடிய கால இடைவெளி போன்ற காரணங்களின் பலன்களே ! So உங்கள் ஆதர்ஷர்களுக்கு காத்திருக்கும் காலங்களில் நிச்சயமாய் வழி பிறக்காது போகாது !
ஆக - இவையே மறுபதிப்புகளுக்கு special status தந்திடும் பட்சத்தில் நம் முன்னுள்ள வாய்ப்புகளாக இருந்திடும் ! இவற்றின் சாதக-பாதகங்களை சுட்டிக் காட்டின், ஆர்வமாய்க் கேட்டுக் கொள்வேன் ! And of course - வலைக்கு அப்பாலுள்ள நண்பர்களிடமும் இதே கேள்விகளை முன்வைக்கும் கடமையும் நமக்குண்டு தான் ; but இங்கு உங்களது பெரும்பான்மை அபிப்பிராயங்களே அவர்களது எண்ணவோட்டங்களாகவும் இருப்பதை நிறைய தருணங்களில் கவனித்துள்ளேன் என்பதால் please do place your thoughts on board folks !!
இடைப்பட்டதொரு வாரத்தில் - இதே இணைதடத்தைப் புது இதழ்களுக்கென ஒதுக்குவதாயின் - நம் முன்னே இருக்கக் கூடிய தேர்வுகளைப் பட்டியலிட்டுக் காட்டுகிறேன் ! Maybe ஈரோட்டில் நமது சந்திப்பின் போது அது பற்றிய கச்சேரியை வைத்தும் கொள்ளலாம் ! இரண்டையும் சீர்தூக்கிப் பார்த்தானபின்பாய் ஒரு முடிவைச் சொல்லுங்கள் - அறிவிப்பைச் செய்து விடலாம் ! Bye for now !! See you around !
P.S : Of course - இந்த இணைதட ஓவர்டோஸ் வேண்டாமே !! 2018 -ல் வழக்கமான இதழ்கள் மட்டுமே போதுமே என்பது உங்களது எண்ணமாயின் - நிச்சயமாய் அத்தனையும் தெரியப்படுத்தலாம் !
இரும்புக்கை மாயாவியை தெரியாதவர்கள் தமிழ்நாட்டில் இருக்க முடியுமா? லாரன்ஸ் டேவிட், ஜானி நீரோ, ஸ்பைடர், டெக்ஸ் வில்லர், லக்கிலுக் என்று கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலமாக தமிழ் வாசிப்பில் ரசனையை கூட்டும் காமிக்ஸ் ஹீரோக்கள் அத்தனை பேருக்குமே சிவகாசியில்தான் டப்பிங் கொடுக்கப்படுகிறது.
எழுபதுகளின் தொடக்கத்தில் ‘முத்து காமிக்ஸ்’, எண்பதுகளின் மத்தியில் ‘லயன் காமிக்ஸ்’ என்று தொடரும் இந்த காமிக்ஸ் பயணத்துக்கு முடிவே இல்லை. இப்போது சர்வதேசத் தரத்தில் வழுவழு தாள்களில் முழுவண்ணத்தோடு புதுப்பொலிவோடு பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
தாத்தா சவுந்தரபாண்டியன், ‘முத்து காமிக்ஸ்’ தொடங்கினார். அப்பா விஜயன், ‘லயன் காமிக்ஸ்’ ஆரம்பித்தார். மூன்றாவது தலைமுறையாக இப்போது இத்தொழிலில் புதுமுகமாக களமிறங்குகிறார் விஜயனின் மகன் விக்ரம். ‘முத்து காமிக்’ஸின் 400வது இதழ், ‘லயன் காமிக்’ஸின் 300வது இதழ் என்று ஒரே மாதத்தில் - ஜூலையில் - இரண்டு இதழியல் துறை மைல்கற்களை எட்டியிருக்கிறார்கள்!
‘லயன் காமிக்’ஸின் ஜூனியர் எடிட்டரான விக்ரம் விஜயனை, தீபாவளிக்காக பரபரப்பாக தயாராகிக் கொண்டிருக்கும் கந்தக பூமியான தகதக சிவகாசியில் ஒரு மதியவேளையில் சந்தித்தோம்.
“இருபத்தைந்து வயதை இப்போதான் எட்டப்போறேன். நான் கொஞ்சம் லேட்டு. அப்பா விஜயன், பதினேழு வயசிலேயே ‘லயன் காமிக்’ஸுக்கு ஆசிரியராகி சாதித்தவர். சிவகாசியில் ஸ்கூல் முடிச்சேன். சென்னையில் பி.டெக் படிச்சேன்.
தாத்தா, அந்தக் கால ஐரோப்பிய காமிக்ஸ்களின் பரம ரசிகர். காமிக்ஸ் புத்தகங்களை தமிழில் வெளியிடுவதை ஒரு தொழிலாக இல்லாமல் தன்னுடைய கடமையாகத் தொடங்கினார். அப்பா, அதை விரிவுபடுத்தினார். சின்ன வயசுலே எங்க வீடு முழுக்கவே காமிக்ஸ் நிறைஞ்சி கிடக்கும். காமிக்ஸ் தவிர்த்து கார்ட்டூன் சேனல்கள் பார்த்துக்கிட்டிருப்பேன்.
லக்கிலுக், டின்டின்னு கார்ட்டூன் ஹீரோக்கள் என் மனசுக்குள்ளேயே எப்பவும் வசிக்கிறாங்க. எங்க குடும்பத்துக்கு உலகம் முழுக்க இருக்குற தமிழர்கள் மத்தியில் அடையாளம் கொடுத்தது காமிக்ஸ்தான். அப்படியிருக்க எனக்கு மட்டும் எப்படி இதில் ஆர்வம் வராமல் போகும்?” கேள்வி கேட்கப் போன நம்மையே கேள்வியோடு எதிர்கொண்டார் விக்ரம்.
உங்க ஊரு பட்டாசுகளை வெடிச்சி, காசை கரியாக்குறோம்னு எங்களைத்தான் எல்லாரும் சொல்லுவாங்க. நீங்க காமிக்ஸிலே பெரிய முதலீடு போட்டு காசை கரியாக்குறீங்களே?
கரியாக்குறோம்னு சொல்ல முடியாது. மத்த தொழில் மாதிரி இதுலே பெருசா லாபமெல்லாம் பார்க்க முடியாது. ஆனா, பெரிய முதலீடு தேவைப்படும் தொழில்தான் இது. தமிழில் காமிக்ஸ் வெளியிட, ஒரிஜினல் கதைகளின் அயல்நாட்டு தயாரிப்பாளர்களுக்கு பெரிய ராயல்டி தொகை தருகிறோம்.
அதைத் தவிர்த்து மொழிபெயர்ப்பு, அச்சு என்று நிறைய செலவாகிறது. இதைத் தொழிலாக லாபம் எதிர்பார்த்து செய்வதாக இருந்தால், நிச்சயமாக வாசகர்களுக்கு இவ்வளவு குறைந்த விலையில் எங்களால் காமிக்ஸ் வழங்க முடியாது. என் அப்பாவும், தாத்தாவும் பயங்கரமான காமிக்ஸ் ஆர்வலர்கள். இப்போ தாத்தா ஓய்வில் இருக்க அப்பாவும், சித்தப்பாவும்தான் எங்க தொழில்களை நிர்வகிக்கிறார்கள். சித்தப்பாவுக்கும் காமிக்ஸ் ஆர்வம் உண்டு. அவங்க ரசனை அப்படியே எனக்கும் வந்திருக்கு.
எங்க குடும்பம் பாரம்பரியமா அச்சுத்தொழில் செய்துகிட்டு வருது. அது தொடர்பான நெடிய அனுபவம் எங்களுக்கு இருக்கு. சிவகாசி மாதிரியான தொழில் நகரத்தில் இயங்குறோம் என்பதால் மார்க்கெட் நல்லா அத்துப்படி ஆகியிருக்கு. திடீர் விலையேற்றங்களை எதிர் பார்த்து, அதற்கேற்ப புதிய தொழில் யுக்திகளை கையாண்டு எங்க செலவுகளை கட்டுக்குள் வெச்சிருக்கோம்.
அதனால்தான் மூன்று தலைமுறைகளாக, நாற்பத்தைந்து ஆண்டுகளாக நாங்கள் தொடர்ச்சியா செயல்பட முடியுது. இப்போ எங்க காமிக்ஸ்களில் என் அப்பாவின் ஈடுபாடும், உழைப்பும்தான் நூறு சதவிகிதம். ஆன்லைன் விற்பனையை நிர்வகிப்பது, சமூக வலைத்தளங்களில் மார்க்கெட்டிங் செய்வது போன்றவற்றில் நான் இறங்கியிருக்கிறேன்...
வாசகர்கள் இன்னமும் அதே ஆர்வத்தோடு காமிக்ஸ் புத்தகங்களை வாசிக்கிறார்களா?
அப்பா, தாத்தா காலத்து காமிக்ஸ் வரவேற்பைப் பற்றி நான் நேரடியாக அறியவில்லை. இப்போ அஞ்சு வருஷமாதான் தயாரிப்பு, திட்டமிடல் போன்றவற்றில் அப்பாவுக்கு துணையா இருக்கேன். எண்பதுகளைத்தான் காமிக்ஸ்களின் பொற்காலம் என்று வாசகர்கள் பலரும் சொல்றாங்க.
ஆனா, இப்போ முன்பு எப்போதும் தமிழ் காமிக்ஸ் துறையில் இல்லாத அளவுக்கு புதுமைகளையும், தரத்தையும் எட்டியிருக்கோம். ஆக்ஷன், கெளபாய், கார்ட்டூன், சூப்பர்ஹீரோக்கள், கிராஃபிக் நாவல்கள் என்று வாசகர்களுக்கு வெரைட்டியா விருந்து பரிமாறுகிறோம். எங்களுக்கு வரவேற்பு எப்படியிருக்கிறது என்று நீங்களே புத்தகக் காட்சிகளின்போது எங்க ஸ்டாலுக்கு வந்து பார்க்கலாம். ஒருவேளை இன்னும் இருபது வருஷம் கழிச்சி இப்போதைய காலம்தான் காமிக்ஸ்களின் பொற்காலம் என்றுகூட சொல்லப்படலாம்!
காமிக்ஸ்களுக்கு என்று பிரத்யேகமாக நடத்தப்படும் comic con போன்ற புத்தகச்சந்தை நிகழ்வுகளில் பங்கேற்கிறீர்களா ?
நாங்களும் நம்முடைய தமிழ் காமிக்ஸ்களை எடுத்துக்கொண்டு ஆரம்பத்தில் இரண்டு ஆண்டுகள் பங்கேற்றோம். பெங்களூர், மும்பை, டெல்லி, ஹைதராபாத், பூனே என்று எங்கெங்கோ அவற்றை நடத்துகிறார்கள். சென்னைக்கு மட்டும் வரமாட்டேன் என்கிறார்கள். தமிழர்களுக்கும் நீண்டகால காமிக்ஸ் வாசிப்பு உண்டு என்பதை அவர்கள் அறியவேண்டும். என்றேனும் ஒருநாள் இங்கும் நடத்துவார்கள் என்று நம்பிக்கை இருக்கிறது. இப்போதைக்கு தமிழகத்தில் நடக்கும் பெரிய புத்தகக்காட்சிகளில் நாங்க பங்கேற்கிறோம். புத்தகக்காட்சி அமைப்பாளர்களும் நாங்க பங்கேற்பதை விரும்பறாங்க...
முன்பெல்லாம் பெட்டிக்கடைகளிலும் கூட ‘முத்து’ / ‘லயன்’ காமிக்ஸ்கள் தொங்கும். இப்போது அப்படியில்லையே..?
சின்ன வாசகர் வட்டம். போதுமான அளவுக்கு விற்பனை என்று நாங்களே எங்களை வரையறைத்து வைத்திருக்கிறோம். பெரியளவில் விளம்பரம் செய்து விற்பனை செய்யும் சக்தி எங்களுக்கு இல்லை. வாட்ஸப் குழுமங்கள், சமூக வலைத்தளங்கள் மூலம் எங்கள் வாசகர்களே எங்களுக்கு விளம்பரம் கொடுக்கிறார்கள். புத்தகக் காட்சிகளின் போது புதிய வாசகர்கள் உருவாகிறார்கள்.
எல்லாத் துறையிலும் ராக்கெட் வேக மாற்றங்கள் நடைபெறுகின்றன. நம் தமிழ் காமிக்ஸ் துறை அந்தளவுக்கு வேகமாக மாறமுடியவில்லை என்றாலும், போட்டி நிறைந்த சூழலில் நாங்களும் எங்களுக்கான ராஜபாட்டையில் கம்பீரமாக நடை போடுகிறோம். இன்டர்நெட் மூலமாவே எங்க வாசகர் வட்டத்தை ஊக்கமாக செயல்பட வைக்கிறோம். வாசகர்களின் ரசனை மாற்றங்களை இப்போ உடனுக்குடன் தெரிஞ்சுக்கவும் இன்டர்நெட் உதவுது.
இன்றைக்கும் முக்கிய நகரங்களில் எங்களுக்கு ஏஜெண்டுகள் இருக்கிறார்கள். எங்களது இப்போதைய வெளியீடுகள் நல்ல ஆர்ட் பேப்பரில், முழு வண்ணத்தில் சர்வதேசத் தரத்தில் உருவாக்கப்படுகின்றன. விலையை தொடர்ச்சியாக ஒரே மாதிரி கட்டுக்குள் வைக்க முடிவதில்லை. ஒரு இதழ் 50 ரூபாய் என்றால் அடுத்த இதழ் 100 ரூபாயாக இருக்கும். எனவே சிறிய கடைகளில் விற்க முடிவதில்லை.
வாசகர்களின் நேரடி சந்தா, ஆன்லைன் விற்பனை, புத்தகக் காட்சிகளில் பங்கேற்பு போன்ற முறைகளில் விற்பனை செய்து வருகிறோம். பல்லாயிரம் ரூபாய் செலவழித்து உரிமை வாங்கும் கதைகளை, இங்கே மிகக்குறைவான வாசகர் வட்டத்துக்குத்தான் கொண்டு செல்ல முடிகிறது என்கிற சங்கடம் எங்கள் குடும்பத்துக்கு உண்டு! http://www.kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=12325&id1=4&issue=20170630
வணக்கம். என் தாய்வழித் தாத்தா ஒரு கதர் பிரியர். சொட சொட சொடக்கும் வெள்ளை கதர் சட்டையும், வெள்ளை வேஷ்டியும் அவருக்கொரு அடையாளமாகவே ஆகிப் போயின ! ஆனால் தமிழகத்தைத் தாண்டி, பணி நிமித்தம் பயணம் செல்ல நேரிடும் போதெல்லாம், வேஷ்டி, சட்டைக்கு வி்டைகொடுத்து விட்டு, பேண்ட் & ‘இன்‘ செய்யப்பட்ட சட்டைக்கு மாறி விடுவார். 1984-ல் என்னோடு டெல்லிக்கு இரயிலைப் பிடிக்கும் நேரத்தில் இந்த ‘மாடர்ன்‘ லுக்கில் அவரைப் பார்த்த போது ஒரு நொடிக்கு ‘பக்‘கென்றது எனக்கு ! அந்த நாட்கள் தான் நினைவுக்கு வந்தன- இம்மாதம் ! அதுவும் நமது ‘தல‘யின் புண்ணியத்தில் ! மடிப்புக் கலையாத மஞ்சள் சட்டை; கழுத்தில் டிரேட் மார்க் கறுப்பு ஸ்கார்ப் ; நீல ஜீன்ஸ் ; இடையில் பிஸ்டல் பெல்ட் என முக்காலே மூன்று வீச நாட்களில் மாறாத 'லுக்கில்' வலம் வருபவர், நவஹோ குடியிருப்புகள் பக்கம் தலைகாட்டும் போது அவர்களது பாரம்பரிய உடையோடும் காட்சி தருவாரென்பது நமக்குத் தெரியும் ! ஆனால் லார்ட் லபக்தாஸ் போல பேண்ட்; சட்டை; கோட்; தொப்பி; உதட்டில் சுருட்டு என்று மனுஷன் நம் முன்னே ஆஜரானால் - மெர்சலாகிப் போகாது என்ன செய்வதாம் ? ஓ... யெஸ்... காத்திருக்கும் “க்யூபா படலம்” சாகஸத்தில் தான் நம்மவர் இப்படித் தோரணையாய் அசத்திடக் காத்திருக்கிறார்!
நமது ஜுலை மாதப் பணிகளில் முக்கால்வாசி நிறைவுற்று விட்ட நிலையில்- லயன் # 300 தான் மிரட்டலாய் இன்னமும் எஞ்சி நிற்கிறது ! சில பல சொந்தப் பணிகள் காரணமாய் இடையில் 4 நாட்கள் லீவு போடும் அவசியம் நேர்ந்திட- இப்போதோ நேரத்தோடு போட்டி போட்டுக் கொண்டு ஓடிய பிழைப்பாக உள்ளது - லயனின் இந்த 'லேண்ட்மார்க்' இதழினைப் பூர்த்தி செய்திடும் பொருட்டு ! And அதன் பிரதான highlight – இரவுக் கழுகாரின் “க்யூபா படலம்” தான் என்பதில் துளியும் சந்தேகம் கிடையாது ! நடப்பாண்டில் டெக்ஸின் கதைகள் வைகையைத் தீப்பற்ற வைத்திருக்கவில்லை என்பதை ஏற்றுக் கொள்ளும் முதல் ஆள் நானே ! தெர்மோகோல் போட்டு மூடப்படாதது தான் காரணமா ? அல்லது சற்றே துவக்க நாட்களது கதைகள் பக்கமாய் ஷண்டிங் அடித்ததன் பலனாக கதைகளில் ஒரு fire குறைவாகத் தட்டுப்பட்டதா ? என்று தெரியவில்லை ; ஆனால் விட்ட குறையைத் தீர்த்திட “க்.ப”வில் நம்மவர் அடித்து ஆடியுள்ளார் !என்னவோ ஒற்றை வரிக் கதை தான்; ஆனால் அந்த ஒற்றை வரியைக் கதாசிரியர் போசெல்லி பதித்துள்ளதோ நமக்கு ரொம்பவே புதுசான க்யூபாவில்!! அமெரிக்காவின் வால் பகுதியில் குந்தியிருக்கும் மெக்ஸிகோ தேசமானது - நமது கௌபாய் கதைகளின் ஏகத்துக்குப் பின்புலமாக இருந்ததுண்டு ! போன மாதத்து டெக்ஸ் சாகஸமே கூட அதற்கொரு உதாரணம் தானே ? ஆனால் மெக்ஸிகோவுக்கும், கீழே – ஷேப் இல்லாத சப்பாத்தியைப் போல படர்ந்து கிடக்கும் க்யூபா தேசம் அத்தி பூத்தாற் போல் மட்டும் காமிக்ஸ்களின் களமாகியிருந்துள்ளது ! இம்முறையோ அந்த மண்ணின் பாரம்பரியம் ; வரலாறு; பூகோளம்; அரசியல்; மத நம்பிக்கைகள்; ஊடூ சூன்யத் தாக்கம் ; அடிமைக் கலாச்சாரம் ; சுதந்திரப் போராட்டம் என சகலத்தையும் துளி கூட நெருடலின்றி – ஒரு திகிலூட்டும் டெம்போவில் போசெல்லி நமக்குச் சொல்லவிருக்கிறார்! கதைக்களமே ஒரு இருண்ட மர்ம பூமி என்பது பற்றாதென்று – ஊடூ மாந்த்ரீக நம்பிக்கைகள் சார்ந்த அதிரடிகளோடு இந்தப் பயணம் தடதடக்கும் போது நம்மையும் அறியாமல் மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு பக்கங்களைப் புரட்டப் போகிறோமென்பது உறுதி ! அதிலும் சித்திர பாணி – புதியதொரு ஓவியரின் கைவண்ணத்தில் அசாத்தியமாய் மிளிர்கிறது!
‘கடல் சார்ந்த சாகஸம்‘ எனும் போது அந்த மாமூல் பாலைவன உடுப்புகளுக்கும், குதிரைகளுக்கும் விடை தந்து விட்டு, கப்பலில் கோட் சூட் சகிதம் சுற்றி வருவதும்; க்யுபாவில் ரயிலில் பயணம் செய்வதும் ஒரு பக்கமென்றால் – 'நீரும்-நெருப்பும்' எம்.ஜி.ஆரைப் போல வாள் சண்டையில் பட்டையைக் கிளப்புவது இன்னொரு பக்கம் ! தீவிர டெக்ஸ் ரசிகர்களுக்கு ஒரு மாறுபட்ட ட்ரீட் காத்துள்ளது! அதே நேரம் மேம்போக்கான ஆக் ஷன் கதையாக மட்டும் இருந்திடாது – உலகின் மறுகோடியிலுள்ளதொரு புதிர் தேசத்தைப் பற்றி மேற்கொண்டும் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை நம்முள் கிளறிட இங்கே ஏகமாய் வாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன! So- ஊடூ ஆண்டவர் தேசத்தின் ஆராய்ச்சிக்கு, கூகுள் ஆண்டவரைத் தயார்ப்படுத்திக் கொள்ளலாமே ?
டெக்ஸின் அதிரடி ஒரு பக்கமெனில் பென்சில் இடையழகி ஜுலியாவின் த்ரில்லரோ முற்றிலும் வேறொரு பாணி! நம்மிடையே இந்த க்ரிமினாலஜிஸ்ட் இப்போது தான் சிறுகச் சிறுக மவுசு ஈட்டி வருகிறார்; ஆனால் இத்தாலியிலோ இவர் இப்போதொரு established சாதனையாளர்! 220+ ஆல்பங்கள் இவரது கதைத்தொடரில் இருந்திட – அங்குள்ள புக் ஸ்டோர்களில் பிரத்யேக “ஜுலியா ரேக்குகள்” ஏற்பாடாகும் அளவிற்கு இவரொரு அம்மாடக்கராகி இருப்பது தான் யதார்த்தம்! லயன் # 300-ல் இவரது கதை – பேசப்படும் ஒன்றாக அமைந்திடுமென்ற நம்பிக்கை நிறையவே உள்ளது எனக்கு ! "ஆ....இவரது கதையா ? மொக்கை தான் !! " என்ற தீர்மானங்களை முன்கூட்டியே எடுத்துக் கொள்ளாது - கதைக்குள் பொறுமையாய்ப் புகுந்திட ஒரு வாய்ப்பு தந்து தான் பாருங்களேன் ?
ஒரு பெண் புலியின் பாணி ஓசையில்லா தாண்டவமென்றால் – கைகோர்க்கும் மற்றொரு பெண் வேங்கையோ அதிரடியின் மறு பெயர் ! யெஸ் – ஆண்டில் இரண்டாவது தடவையாகத் தலைகாட்டும் தங்கத் தாரகை மாடஸ்டி – “சிறையில் ஒரு சிட்டுக் குருவி”யில் வழக்கம் போல போட்டுத் தாக்குகிறார்! சித்திரங்களில் வழக்கம் போல ஏகக் காற்றோட்டம் மிளிர, நமது DTP அணி நொடியில் கண்ண பரமாத்மாவாக உருமாறி – போத்தீஸ் போகாமலே மீட்டர் மீட்டராய் துணியை வரவழைத்து விட்டிருந்தனர்! “ஆஹா... அந்த டெய்லர் பொறுப்பை என்னிடம் விட்டு விடுங்கள்!” என்று சொல்லி, மறுபடியும் இளவரசிக்கு வியர்க்காத வகையில் ventilation-க்கு வழி செய்திருக்கிறேன்! நாளை தீர்மானிக்க வேண்டும் – திருப்பூரில் சிபிஜியிடம் சொக்காய் ஆர்டர் சொல்வதா ? வேண்டாமாவென்று !
முன்னூறின் – இறுதிக் கதையொரு ராபின் டிடெக்டிவ் த்ரில்லர்! நியூயார்க் எனும் பரிச்சயமான களம்... NYPD-ன் வழக்கமான துப்பறியும் அணி என்று crisp ஆன சித்திரங்களில், சுறுசுறுப்பாய் நகரும் கதையிது! And நிறைய காலம் கழித்தொரு அக்மார்க் டிடெக்டிவ் த்ரில்லர் நமது வாசிப்பிற்குக் கிட்டியிருப்பது highlight.
“டிடெக்டிவ் த்ரில்லர்கள்” என்ற topic–ல் இருக்கும் போது – எனக்குள்ளே லேசானதொரு ஏக்கப் பெருமூச்சும் கூட! Once upon a time – நமது இதழ்களுள் திரும்பின திசையெல்லாம் துப்பாக்கி ஏந்தும் டிடெக்டிவ்கள் சுற்றி வந்தது வரலாறு! ஆனால் அவர்களெல்லாமே பெருந்தலைவர் காலத்து அரசியல் நாணயத்தைப் போல காலாவதியாகிப் போய் விட்டது தான் இன்றைய நிலைமை ! இப்போதும் பிஸ்டல்கள் சரளமாய் கண்முன்னே நடமாடுகின்றன தான் - ஆனால் நமது வன்மேற்குப் பார்ட்டிகளின் கரங்களில் ! சமீபமாய் இந்தத் “துப்பறிவாளர்களின் பஞ்சத்துக்கொரு” தீர்வு காண ரூம் போட்டு யோசித்த போது சில பல டிடெக்டிவ் பெயர்கள் முன் நின்றன! அவர்களுள் முக்கால்வாசிப் பேர் வெவ்வேறு காரணங்களின் பொருட்டு சுகப்படாது போவது புரிந்த போது – “you are unselected!” என்று தான் சொல்ல முடிந்தது. இறுதியாய் எஞ்சி நின்றதொரு 'பிஸ்டல் பார்ட்டிக்கு' யாருமே மறுப்பு சொல்ல முடியாதென்று தோன்றியதால் – அவருக்கு மட்டும் “you are unrejected” என்று சொல்லி வைத்தேன்! So கான்டிராக்ட் போடும் படல சம்பிரதாயமும் சுபமாய் நடந்தேறிட – 2018-ல் எதிர்பார்த்திடலாம் இந்த அழகரை !
அவருக்கு இம்மி கூட குறைவில்லா இன்னொரு அதிரடி நாயகருமே நம் தேடலில் தட்டுப்பட – அவரையும் தமிழ் 'மாட்லாட' அழைத்திருக்கிறோம். ஒரே சிக்கல் என்னவெனில் அவரது கதைத் தொடரில் இது வரையிலும் இரண்டே ஆல்பங்கள் தான் வெளியாகியுள்ளன ! # 3 ரிலீஸ் ஆகும் தினத்துக்கு மனுஷனை ஒரு கோணிச் சாக்குக்குள், மரத்தடிப் பிள்ளையாரைப் போல போட்டு அடைத்து தூக்கி வந்திட முஸ்தீபுகள் தயாராக உள்ளன! இந்தாண்டின் இறுதிக்கு ஆல்பம் # 3 ரிலீஸாகி விடும் என்று படுவதால் – 2018-ல் நம்மை மிரட்ட இவருமே தயாராகி விடுவாரென்று படுகிறது ! Fingers Crossed!
Back on track – லயன் # 300-ல் இம்முறை காத்திருக்கும் black & white விருந்தானது நிச்சயமாய் ரமலான் பிரியாணி போல சுவையாக இருக்குமென்ற நம்பிக்கை ஏகமாயுள்ளது ! என்ன ஒரே சிக்கல் – தயாரிப்பில் நாக்கு... மூக்கு.... காது.... என்று சகல அவயங்களும் தரையைச் சுத்தம் செய்யக் கிளம்பி விடுகின்றன! காத்திருக்கும் வாரமானது கோரிடும் பணிகளின் தன்மையை நினைக்கும் போதே மூச்சிரைக்கிறது ! Phew ! And இதோ – லயன் # 300 ன் அட்டைப்பட முதல் பார்வையும் :
இது வழக்கமான பெரிய சைஸ் அல்லாது – மாமூலான டெக்ஸ் சைஸிலான இதழ் எனும் போது முன்னட்டையில் அத்தனை நாயக / நாயகியரின் collage ஒன்றினை உருவாக்கத் தோன்றவில்லை - ஏகமாய் இடநெருக்கடி எழுந்து விடுமென்பதால் ! And முன்னட்டையில் இருக்க வேண்டியது நமது சூப்பர் ஸ்டாரே என்பதிலும் ஐயமிருக்கவில்லை ! So அவரது ‘ஹாயான‘ போஸ் ஒன்றினை நமது ஓவியரைக் கொண்டு உருவாக்கி அட்டைப்படமாக்கிப் பார்த்தோம் ! ஆனால் பின்னணியில் டிசைனர் பொன்னன் ரொம்பவே கைவண்ணத்தை காட்டிட – அத்தனை சோபித்தது போலப் படவில்லை !
தவிர, டிசைனை ஆற, அமர ஆராய்ந்த போது ‘தல‘யின் இடது கை – குளிருக்கு இழுத்துக் கொண்டிருப்பது போலத் தோன்றியது! அட... அரிசோனாவில் அடிக்கும் வெயிலில் கை இழுக்க வாய்ப்பு லேதாச்சே? என்ற ஞானத்தோடு இன்னொரு டிசைனைப் போடுமாறு ஓவியரைக் கோரினோம் ! இம்முறை கதையின் சம்பவங்களையுமே பின்னணியில் இணைக்கச் சொல்லி விபரம் சொல்லிட, ‘பச்சக்‘கென்று போட்டுத் தாக்கினார் மாலையப்பன். அந்த டிசைனை கொஞ்சம் மெருகூட்டி, எழுத்துக்களை இணைத்த போது – LION 300 ராப்பர் உருப்பெற்றது. வழக்கமான நகாசு வேலைகளும் இடம்பிடித்திடும் என்பதால் இதழைக் கையிலேந்தும் வேளையில் எப்போதும் போலவே அந்தத் 'தடவிப் பார்க்கும் படலம்' காத்திருக்கும் உங்களுக்கு!
அட்டைப்படப் பணிகளில் இதோ – ஆகஸ்டின் அதிரடிக்கும் இன்னொரு முயற்சி! கேப்டன் டைகரின் ”இரத்தக் கோட்டை”க்கென தொடர்ந்து முயற்சித்து வரும் அட்டைப்பட டிசைன்களுள் இதோ நமது லேட்டஸ்ட்!
ஏற்கனவே 2 டிசைன்களைப் பார்த்திருக்கிறீர்கள்... and இது நம்பர் 3! இன்னமுமே ஓய்ந்தபாடில்லை நமது தேடல்கள்! So ஆகஸ்டில் ஈரோட்டில் நீங்கள் பார்த்திடவுள்ள ராப்பர் எதுவாகயிருக்குமோ என்பது இப்போதைக்கு எனக்கே தெரியாது !
சரி... இளவரசியின் பஞ்சாயத்தும், ஜுலியாவின் அதகளமும் அழைப்பதால் இப்போதைக்கு விடைபெறுகிறேன் ! See you around guys! Have a great Sunday!