Thursday, September 15, 2016

பெருமூச்சே மிச்சம் !!

நண்பர்களே,

வணக்கம். சமீபமாய் சந்தா E -வின் பொருட்டு 2 புதிய தொடர்களை சீரியசாகப் புரட்டிக் கொண்டிருந்தேன்   ! சும்மா தெறிக்கச் செய்த சித்திரத் தரத்தைப் பார்த்துத்  திறந்த வாயை மூடவே முடியவில்லை !! ஆனால் இரண்டு தொடர்களுக்குமே கதாசிரியர் - நமக்குப் பரிச்சயமனான (பெளன்சர்) புகழ் Alejandro Jodorowsky என்ற போதே சன்னமானதொரு மிரட்சியோடு தான் பக்கங்களை புரட்டினேன் ! சற்றைக்கெல்லாம் தலைகாட்டத் தொடங்கிய அடல்ட்ஸ் ஒன்லி சமாச்சாரங்கள் வயிற்றில் புளியை கரைத்தன ! அட்டகாசமாய்த் தோன்றிடும் இந்த மினி தொடர்களில் இந்த நெருடல்கள்  மட்டும் இல்லாது போயின்  நிச்சயம் இவை இந்தாண்டு நம்மூருக்கு இறக்குமதியாகி இருக்கும் ! எப்படியாவது கெஞ்சிக் கூத்தாடி கொஞ்சம் கத்திரி போட சம்மதம் வாங்கினால் தலை தப்பித்துவிடுமென்று பார்த்தால் - கதையின் போக்கோடே இந்தச் சமாச்சாரங்களும் இணைந்து ஓடுகின்றன  !! ஒரு அசாத்தியச் சித்திர விருந்தை தவற விடுகிறோம் என்ற சங்கடத்துடன் இரண்டையுமே ஓரம்கட்டி வைத்தேன் ! ஐரோப்பிய புது ஆக்கங்களில் இவையெல்லாமே மாமூலான விஷயங்கள் என்றாகிவிட்ட நிலையில் வரும் காலங்களில் இவற்றின் நடுவே வண்டி ஓட்டுவது ஒரு tricky அனுபவமாய் இருக்குமென்பது உறுதி !! ஷப்பா !! 
பாருங்களேன் - இந்த அசாத்தியதை !! பெருமூச்சோடு அடுத்த சிலநாட்களைக் கடத்திடுவேன் guys !! See you again on Sunday !!

P.S : "கை சீவம்மா..கை சீவு...!"  - இதுவும் 2017-ன் ஒரு கதையின் தலைப்பு !! (சும்மா ரைமிங் ஆக இருந்திட வேண்டுமென்று உண்டாக்கிய பெயரல்ல இது - கதையோட்டத்துக்கு ரொம்பவே பொருந்தும் தலைப்பு ! ) யாருடைய  கதைக்கென்று யூகியுங்களேன் ?

FLASH :
போனெல்லி குழுமத்தின் வலைப்பக்கத்தில் நமது TEX காதலுக்கு அசாத்திய மரியாதை செலுத்தியுள்ளனர் !! பாருங்களேன் : 
http://www.sergiobonelli.it/gallery/home/41214/tex-in-india.html


TEX IN INDIA!

Our indian licensor, passionate publisher of Tex's adventures in tamil language, sends us some snapshots that testify the enthusiasm that surrounds the local edition of the Bonellian Ranger!

Lion-Muthu Comics is the Indian publisher of Tex's adventures, translated in Tamil language. A recent comics convention hosted some panels about Lion-Muthu Comics publications. Take a look at our gallery, featuring many pictures showing some Tex fans from India, some of them holding the latest issues of their favourite hero's adventures, including the tamil language edition of the 27th "Texone", "La cavalcata del morto", by Mauro Boselli and Fabio Civitelli. As you can see, the passion for Tex knows no borders!

Sunday, September 11, 2016

ஒரு ஒப்பித்தல் படலம் !

நண்பர்களே,

வணக்கம். ‘ஒரு வாரமாய்க் காணவில்லை !‘ என்று போஸ்டர் அடிக்கத் தயாராகிக் கொண்டிருப்பின், அந்தச் செலவை மிச்சம் செய்திட இதோ ஆஜராகி விட்டேன் - புதிய பதிவுடன் ! ஆண்டின் மிக சுவாரஸ்யமான பகுதி மட்டுமன்றி ; மிகவும் முக்கியமான பகுதியும் தற்போதைய வேளையே என்பதால் குனிந்த தலை நிமிர நேரமிருக்கவில்லை இந்த வாரத்தின் முழுமைக்கும் ! So சமீபப் பொழுதுகளின்  ஒரு "ஒப்பித்தல் படலமே"  - இவ்வாரப் பதிவாகிறது ! 

"2017 கதைத் தேர்வுகள்" என்று மூழ்குவதற்கு முன்பாக எனது முதல் வேலை ஒரு பரவலான எல்லைக்கோட்டைப் போடுவதாக இருந்தது ! எத்தனை இதழ்கள் ? என்ன பட்ஜெட் ? என்று தீர்மானிக்க நேரம் எடுத்துக் கொண்டான பின்னே யாரெல்லாம் நிச்சயமாய் ‘உள்ளே‘ என்ற பட்டியலைப் போட்டுப் பார்த்தேன் ! அதில் சமீபத்து விற்பனைப் புள்ளி விபரங்களையும் சம்பந்தப்படுத்திப் பார்க்கும் போது கொஞ்சம் தடுமாறத் தான் செய்தது ! ‘விடு... விடு... சுனா... பானா...‘ என்று ஒருமாதிரி என்னையே நிதானப்படுத்திக் கொண்டு அடுத்தபடியாக ‘வெளியே‘ பட்டியலின் பார்ட்டிகளைப் பரிசீலனை செய்தேன் ! "இவர் வெளியேறினால் எங்கே பட்டாசு வெடித்துக் குஷிப்படுவார்கள் ? ; எங்கெல்லாம்  என் முதுகில் ஊத்தப்பம் போடத் தயாராவார்கள் ? என்ற சிந்தனை தலைக்குள் நீச்சலடிக்க – ஒரு மாதிரியாய் அந்தப் பட்டியலையும் இறுதிப்படுத்தினேன். அதன் பின்னே ஆரம்பித்தது கதைத் தேர்வுப் படலம் ! லார்கோ, ஷெல்டன், கமான்சே போன்ற வரிசைக்கிரம நாயகர்கள் இதனில் துளியும் சிரமம் தந்திடாது போக ; ஒரு லோடுக் கதைகள் கொண்ட நாயகர்களோ வசமாகச் சுளுக்கு எடுத்து விட்டனர் ! அதிலும் டெக்ஸ் கதைத் தேர்வில் சுத்தமாய் ஒரு வாரம் செலவிட்டிருப்பேன் என்று தான் சொல்ல வேண்டும் ! பற்றாக்குறைக்கு அவ்வப்போது பதிவிலோ ; நேரடிச் சந்திப்புகளிலோ நான் அள்ளி விட்டிருக்கக்கூடிய வாக்குறுதிகளை நினைவுகூர்ந்து கொண்டு, அவற்றையும் நடைமுறைப்படுத்திடும் அவசியமும் வந்தது ! So இரவில் எதையாவது ‘டிக்‘ அடித்து விட்டு, அதற்கான விளம்பரங்களையும் தயாரிக்கச் சொல்லி விட்டு மறுநாளே –‘இல்லே... இல்லே... கோட்டை அழி‘ முதல்லேர்ந்து புரோட்டா சாப்பிடுறேன் ! ‘ என்று அழிச்சாட்டியம் செய்த நாட்கள் ஏராளம் ! நமது DTP பெண்கள் அதிர்ந்து பேசக்கூடத் தெரியாத சாதுக்கள் ; கடந்த 10 நாட்களாய் அவர்களைக் கொலையாய்க் கொன்று வருகிறேன் தான் !! 

கதைத் தேர்வுகளில் முக்கியமென மனதுக்குப் பட்டது - புதுசுக்கும்-பழசுக்குமிடையே ஒரு ஆரோக்கியமான நிதானம் இருந்திட வேண்டுமென்பதே ! அரைத்த அதே மாவையே புதுசாய் அடுத்த வருஷத்துக்கு அரைக்க மனதில்லை ; அதே சமயம் இராமாயணமாய் நீண்டு செல்லக் கூடிய புதுக் தொடர்களை மேற்கொண்டும் இழுத்து விட்டு அவற்றை அந்தரத்தில் தொங்க விடவும் கூடாதென்ற உறுதியும் இருந்தது. So இந்த இரண்டுக்கும் நியாயம் செய்திட வேண்டிய கட்டாயம் இருப்பதாய் மனதுக்குப்பட்டது !  அட்டவணையில் "புதுமுகங்கள்" பளிச் என்று இருந்திட வேண்டுமென்ற ஆர்வமும் மேலோங்கியது ! இதன் பொருட்டு அவசியமான நெட் உருட்டல்கள் ஏராளமோ-ஏராளம் ! 

இந்தக் கதை தேடி ‘முத்துக் குளிக்கும்‘ படலம் ஒரு பக்கமெனில் – காத்திருக்கும் 2017-ன் மைல்கல்களுக்கென்ற திட்டமிடல்களையும் அட்டவணைக்குள் நுழைக்கும் பிரயத்தனம் இன்னொரு பக்கம் ! முத்து காமிக்ஸ் 45-வது ஆண்டு மலர்; லயன் # 300 ; முத்து # 400 ; தீபாவளி மலர் என்று முரட்டுச் சிங்கங்களாய் பல எதிரே காத்திருக்க – அதன்பொருட்டு கூட்டல் ; கழித்தல் ; பெருக்கல் ; வகுத்தல் என்று ஒரு வண்டிப் பேப்பரைக் காலி செய்திருப்பேன் ! அநேகமாய் கடந்த ஒரு மாதத்தில் நம் தலீவரையே மிஞ்சம் அளவுக்கான பேப்பரைக் கொள்முதல் செய்த பெருமையை நானே லவட்டியிருப்பேன் ! "குண்டூ புக்காகவும் இருக்க வேண்டும் ; பட்ஜெட்டும் எகிறி்டக் கூடாது ; தருணத்திற்கேற்ற நிறைவோடும் அமைந்திட வேண்டுமென்ற" கட்டாயங்கள் இருப்பதால் மோட்டுவளையை அங்குலம் அங்குலமாய் அளவெடுத்து முடித்தேன் கடந்த வாரத்தில் ! ஒரு மாதிரியாய் ஆர்வங்களுக்கு தீனி போடும் விதமாயும், பர்ஸுக்கு வெடி வைக்காத மாதிரியும் ஒரு தடம் போட முடிந்த திருப்தி தற்போதைக்கு ! விபரங்களை வெளியிட்டான பின்னே, நீங்களும் அவ்விதம் நினைப்பின் - 'உஷ்ஷ்ஹ்ஹ்ஹ்' என்றொரு பெருமூச்சு தப்பிக்கும் என்னிடமிருந்து ! 

ஒரு மாதிரியாய் இதழ்களின் எண்ணிக்கை ; சந்தாத் தொகை ; கதைத் தேர்வுகள் என்று முடித்து விட்டு – ‘தலைப்பு நல்கும் தருணத்தை‘எட்டிய போது இது தொடர்பாய்  உங்களது சிலபல எண்ணச் சிதறல்களைப் பார்க்க முடிந்தது ! அவை சொன்ன கருத்துக்களும் சரியாகவே பட்டதால் இந்த தபா – ‘இரத்தம்‘ ; ‘காட்டேரி‘; ‘மரணம்‘ ; ‘பிணம்‘ இத்யாதி... இத்யாதிகளை ஓரம்கட்டுவதென்று  தீர்மானித்தேன் ! ஆனால் சாத்வீகமான பெயர்சூட்டல் என்பது ‘தலப்பாக்கட்டி பிரியாணிக்கடை‘யில் அமர்ந்து கொண்டு மெனுவில் தக்காளிச் சாதத்தைத் தேடுவது போல படு சிரமமான பணியென்று அப்புறம் தான் புரிந்தது ! ஆண்டாண்டு காலத்துப் பழக்கத்தில் வாயில் வரும் முதல் பெயரானது கோங்குரா காரத்தோடே அமைந்து வர, கொஞ்சம் கொஞ்சமாய் அந்த மிளகாயைக் குறைத்திட நிறைய நேரம் எடுத்துக் கொண்டேன் ! இன்னமும் இங்கொன்றும், அங்கொன்றுமாய் உக்கிரமான தலைப்புகள் கண்ணில் பட்டால் – அவை கதைகளின் தன்மைக்கேற்ப அத்தியாவசியமானவைகளே என்று எடுத்துக் கொள்ளுங்கள் - ப்ளீஸ் !

நேரம் எடுத்துக் கொண்டேனும் இந்தப் பணிகளெல்லாம் நிறைவு பெற்றிட – கொடைக்கானல் மலையேறும் பலாப்பழ லாரியைப் போல ‘ட்ரான்... ட்ரான்... ட்ரான்ன்ன்‘ என்று இழுவையானது சந்தா Z-ன் கதைத் தேர்வுகளிலேயே ! (சந்தா Z-க்கு பெயர் மாற்றம் நிகழ்ந்துள்ளது என்பது தமிழகத்தைப் புரட்டிப் போடும் கொசுறுச் சேதி ! இனி அது சந்தா "E" என்று அன்போடு அழைக்கப்படும் !) கட்டுப்பாடுகளில்லா ஒரு தடம் ; "இது தான் போடலாம் ; இதைப் போட முடியாது !" என்ற வரையறுத்தல்கள் இருந்திடா சுதந்திரம் ; பரீட்சார்த்த முயற்சிகளுக்கு maybe இதுவே கடைசிச் சந்தர்ப்பம் என்ற புரிதல் – என ஏகமான factors இங்கே கைதூக்கி நிற்க ரொம்பவே சிண்டைப் பிய்த்துக் கொள்ள முகாந்திரமிருந்தது ! முதலில் ஒரு batch கதைகளைக் குறித்து வைத்துக் கொண்டு அவற்றுள் சுற்றிச் சுற்றி வர ஆரம்பித்தேன் ! வண்டி வண்டியாய் விமர்சனங்கள் ; ஒவ்வொரு மொழியிலும் அவை ஈட்டியிருந்த மதிப்பெண்கள் ; கதைச்சுருக்கங்கள் என்று நான் தெரிந்து கொள்ள வேண்டிய சமாச்சாரங்களும் ஏகமாய் நின்றன...! ‘கதை பிரமாதம்‘ என்று டிக் அடிக்க நினைக்கும் தருணத்தில் ‘திடு‘மென்று தலைகாட்டும் ‘அடல்ட்ஸ் ஒன்லி‘ பக்கங்கள் கடுப்பைக் கிளப்பும் ! சரி... இன்னொரு கதையைத் தூக்கி வைத்து அதனில் கவனம் தந்தால் – அந்தக் கதைத்தொடர் இன்னமும் இரு ஆல்பங்களுக்காகக் காத்துள்ளது  என்ற தகவல் கிடைத்திடும் ! அரைகுறையாய் அயல்தேசத்திலேயே நின்று வரும் தொடர்களை அவசரமாய் இங்கே கொணர்ந்து உங்கள் சிரங்களில் வடாம் காயப் போடும் வேலை இனி வேண்டவே வேண்டாமென்ற தீர்மானம் எடுத்துள்ளதால் அத்தகைய தொடர்களைத் (தற்காலிகமாய்) கைகழுவி விட்டேன் ! இந்த ரீதியில் miss out ஆன கதைகளும் சிலபல..!  அதே போல – "ஒரேயடியாய் கலைச் சேவை செய்கிறேன், அவார்ட் வாங்கும் பிலிம் எடுக்கிறேன் பேர்வழி !” என்று பிரேமுக்கு பிரேம் பொறுமையைச் சோதிக்கும் படு slow கதைகளைத் தவிர்ப்பதிலும் குறியாக இருந்தேன். So இதன் காரணமாயும் சில பல கதைகள் ஜன்னல் வழியே எகிறிக் குதித்து விட்டன ! இறுதியாய் ஒரு சின்னதொரு பட்டியலை உறுதி செய்த போது – ‘இவை நிச்சயமாய் casual வாசகர்களைக் கூடக் கவர்ந்திடும் !‘ என்றே தோன்றியது ! இந்தத் தனித்தட முயற்சி ஆரம்பத்திலேயே ரொம்பப் பெரியளவில் இருந்து விட வேண்டாமே என்றும் பார்த்தேன்! சுருக்கமானதொரு எண்ணிக்கையுடன் ஆரம்பம் ; உங்களது அபிப்பிராயங்களைக் கருத்தில் கொண்டு அவசியத்திற்கேற்ப அப்புறமாய் விரிவாக்கம் செய்வதென்பதே தற்போதையத் திட்டமிடல் ! So புதுத் தடத்தில் துவக்க நாட்களில் தட தடக்கப் போவது 6 கோச் வண்டிகள் மாத்திரமே ! இந்த ஆறு கோச்களும் ‘புல்‘லாகி விட்டன ; இன்னமும் ‘டிமாண்ட்‘ உள்ளதென்று ஊர்ஜிதமானால் பெட்டிகளின் எண்ணிக்கையைக் கூட்டிடலாம் ! Hope for your understanding on this folks !!

ஒரு மார்க்கமாய் இந்தத் திட்டமிடலும் நிறைவு பெறும் வேளையில் காத்திருந்த அடுத்த மெகாப் பொறுப்பு அத்தனை கதைகளுக்குமான கான்டிராக்டுகளை சரி பார்த்தல் / புதுப்பித்தல் / புதுக் தொடர்களெனில், அவற்றிற்குப் புதிதாய் கான்டிராக்ட்டுகள் ஏற்பாடு செய்தல் ! முன்பெல்லாம் “பிழைக்கப் பிழைக்கப் பார்த்துக் கொள்வோம்” என்ற நம்பிக்கையில் வண்டி ஓடும் நாட்களில் ஓரிரண்டு மாதக் கதைகளைக் கையிருப்பில் வைத்துக் கொண்டே ‘தத்தக்கா-புத்தக்கா‘ என்று தவழ்ந்து விடுவோம் ! ஆனால் இப்போதோ 12 மாதத் தேவைகளும் முன்கூட்டியே ஸ்பஷ்டமாய்த் தெரியுமெனும் போது அதற்கான படைப்பாளிகளின் ஒப்புதல்களைப் பக்காவாகத் தயார் செய்திட ஏகப்பட்ட 'க்ளுகான் D' டப்பாக்களைக் கரைக்க வேண்டிப் போனது! சந்தா E–ன் 2 கதைகளுக்கான ஒப்புதல் நீங்கலாய் பாக்கி எல்லாமே இந்த வாரம் தான் ஓ.கே. ஆனது என்பதால் – சிறுகச் சிறுக மூச்சை விட்டுக் கொண்டிருக்கிறேன். படைப்பாளிகளின் லைசென்சிங் பிரிவின் நிர்வாகிகள் மாற்றி மாற்றி ஏதேனுமொரு தேசத்து புத்தக விழாக்களுக்குப் பயணமாவது ஒரு பக்கமெனில், அவர்களது கணிசமான விடுமுறைகளும் இன்னொரு பக்கம் ! ஏதேனும் ஒரு கதை பற்றிய சில பல கேள்விகளை சீரியஸாய் டைப் அடித்து மெயில் அனுப்பி விட்டு நிமிர்ந்தால் – ‘டொட்டடாய்ங்‘ என்று பதில் வந்திருக்கும் – ‘அடுத்த 10 நாட்களுக்கு நான் அலுவலகத்தில் இல்லை!‘ என்ற ரீதியில் ! அவர்களது அளவுகோல்களில் நாம் தந்து கொண்டிருக்கும் குட்டியூண்டுத் தொகைகளுக்கு அவர்கள் நமக்குப் பதில் போடுவதே பகவான் கருணை எனும் போது - பொறுமையாய் ; ரொம்பப் பொறுமையாய் பணிகளின் இந்தப் பகுதியை அணுகிட வேண்டி வரும் ! So இந்த வாரத்தின் பகல்களை படைப்பாளிகளுக்கெனவும் ; இரவுகளை அவர்களது படைப்புகளுக்கெனவும் பிரித்துச் செலவிட்டதில் blog பக்கம் தலைகாட்ட ‘தம்‘ மிஞ்சவில்லை !

"பார்த்தீங்களா மஹாஜனங்களே ? ...கம்பி மேலே நடக்குது....அல்லாரும் ஜோரா ஒருதபா கை தட்டுங்கோ !" என்ற நோக்கம் கொண்டதல்ல இந்த ஒப்பிப்புப் படலம் ! அதே போல, "இவ்ளோ கஷ்டப்பட்டு தயார் செய்யுது...கொஞ்சம் பாத்துப் போட்டுக் கொடுங்கோ ஷாமியோவ் !!" என்ற உண்டியல் குலுக்கும் முயற்சியுமல்ல இது ! மாறாக - தொடரும் 12 மாதங்களின் நமது (காமிக்ஸ்) வாசிப்புக் களங்கள் பற்றிய அறிவிப்புகள் திரை விலகும் வேளையினில் - அதன் பின்னணி லாஜிக் என்னவாக இருந்திருக்குமென்று உங்களுக்கு சொல்ல முனைந்திடும் முயற்சி மாத்திரமே இது ! புது வரவுகளின் அவசியம் ; இருப்போரில் சிலரது கல்தாக்களின் பின்னணி ; கூடுதல் இடம் / குறைவான இடம் வழங்கப்பட்டதன் thought process ; உங்கள் அவாக்களின் பிரதிபலிப்புகள் - என்று நிறைய விஷயங்களைக் கோடிட்டுக் காட்ட நினைக்கும் பதிவிது ! 

இதற்கு மத்தியில் மாமூலான மாதாந்திர இதழ்களின் வேலைகளும் சத்தமின்றி நடந்தேறிக் கொண்டிருக்க – இந்த மாதம் 25-ம் தேதிக்குள்ளாகவே 4 இதழ்களும் தயாராகி விடும் போல் படுகிறது ! இதோ- இம்மாதத்தின் எனது personal favorite ! 2016-ன் இரண்டாவது லக்கி லூக் சாகஸம், இந்தத் தொடரின் டாப் கதைகளுள் ஒன்றும் கூட! நோவு தெரியாமல் பணி செய்திட சாத்தியமாகும் சொற்பமான கதைகளுள் லக்கி தலையாயது என்பதால் செம ஜாலியாய் எழுதிட முடிந்தது ! ‘திருடனும் திருந்துவான்‘ இதழுக்கான நமது அட்டைப்படம் இதோ!

இது ஒரிஜினல் டிசைன் மீது நமது டிசைனர் பொன்னன் செய்துள்ள மெருகூட்டல் ; அழகாய் அமைந்துள்ளதென்று நினைத்தேன் ! உங்கள் மதிப்பெண்கள் என்னவோ guys? அடுத்தடுத்த வேலைகள் சீக்கிரமே ஆகிவிட்டால் – அக்டோபர் பிறப்பதற்கு வெகு முன்பாகவே இதழ்கள் நான்கும் உங்கள் கைகளில் இருந்திட வேண்டுமென்று எதிர்பா்க்கிறேன்!

And இதோ – இம்மாத மறுபதிப்பின் பிரதிநிதி – திருவாளர் ஸ்பைடர் – இம்முறை ஒரிஜினல் ராப்பரோடே! இந்த பெயிண்டிங் 31 ஆண்டுகள் கழிந்தும் பத்திரமாய் தாக்குப் பிடித்திருக்க - துளியும் மாற்றமின்றி முன்னட்டையாக்கி விட்டோம் ! சோப் முட்டைக்குள் புகுந்து சாகஸம் செய்த நமது வலைமன்னனின் இந்த இதழானது 1985 மார்ச்சில் வெளிவந்த போது கிட்டிய (விற்பனைப்) பரபரப்பில் நான்கிலொரு பங்கு தற்சமயம் சாத்தியமானாலும் சூப்பரென்பேன் ! Phew – பட்டையைக் கிளப்பிய இதழல்லவா இது அன்றைக்கு?!! 
இதெல்லாம் ஒரு பக்கமிருக்க – ‘தல தீபாவளி‘க்கென இப்போது பலகாரங்களும் தயாராகி வருகின்றன ! ‘சர்வமும் நானே‘ மெகாவோ-மெகா நீளமான டெக்ஸ் அதிரடி என்பதால் அதனையும் இயன்றளவுக்குச் சீக்கிரமாய்க் கரைசேர்க்கப் பல்டியடித்து வருகிறோம்! இந்தாண்டின் கதைகளை before schedule முடித்து விட்டால் 2017-க்குள் வேகமாய் பாய்ந்து விடலாமென்ற ஆசை தான் !எனக்கே நம்பக கஷ்டமாகத் தானுள்ளது ; ஆனால் 2017-ன் சந்தா A-வின் கதைகள் சகலமும் மொழிபெயர்ப்பு பூர்த்தி கண்டு நிற்கின்றன !! புத்தாண்டில் சந்தா E பக்கமாய்க் கவனம் தந்திடும் அவசியம் எழுமென்பதால் - "சீக்கிரம் சீனு"அவதார் எடுக்க முனைந்து வருகிறோம்!! 

ஓவர் பில்டப்போடு உலவி வரும் 2017-ன் அட்டவணையானது இம்மாத இதழ்களோடு உங்களை சந்திக்கப் புறப்படும் என்ற செய்தியோடு நான் இப்போது புறப்படுகிறேன் -  லியனார்டோ தாத்தாவுடன் கண்ணாமூச்சி ஆட  ! அட்டவணையைப் பார்த்த பின்பாக - "அட..இதுக்குத் தான் இத்தனை வாய்ப்பந்தலா ?" என்றோ ;"அட..பேஷ்..பேஷ்...சூப்பராகத் தெரிகிறது !" என்றோ உங்களது reactions இருந்திடலாம் தான் ! ஆனால் இரண்டாவது சிந்தனைக்கே வாய்ப்புகள் ஜாஸ்தி என்றதொரு மௌன நம்பிக்கை எனக்குள் குடியேறியுள்ளது !! திரை விலக பெரியதொரு காத்திருப்பில்லை என்பதால் சீக்கிரமே தீர்ப்பெழுதத் தயாராகிக் கொள்ளுங்களேன் ! மீண்டும் சந்திப்போம் ! நாளைய பொழுது பதிவினில் தான் உலாற்றிக் கொண்டிருப்பேன் ! Bye for now !

Sunday, September 04, 2016

ஞாயிறு - 'ரமணா' பாணியினில்.. !!

நண்பர்களே,
            
வணக்கம். எதிர்பார்த்தபடிக்கே இரவுக் கழுகாரின் ஒரு புதுப் பரிமாணம் இம்மாத “துரோகத்துக்கு முகமில்லை” இதழில் கலக்கி வருவதை சந்தோஷமாய் ரசித்து வருகிறோம். ஒரு விதத்தில் இதுவொரு நிச்சயிக்கப்பட்ட ‘ஹிட்‘ தான் என்பதால் இங்கே பெரிதாய் வியப்புகளுக்கு இடமில்லை. ஆனால் நமது ஊதாப் பொடியர்களின் லூட்டி உங்களில் நிறைய பேருக்கு இம்முறை பிடித்துப் போயிருப்பதில் தான் ஒரு ‘ஜிலீர்‘ உணர்வு ! ஸ்மர்ஃப் கதைகளில் லக்கி லூக்கின் களங்களையோ; சிக்பில்லின் ரவுசுகளையோ எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும் ! ஆனால் அந்த ஊதாப் பொடியுலகினுள் ‘ஹாயாக‘ ஒரு முறை குதித்து - அந்த மினி மனிதர்களின் மண்டைகளுக்குள் குடிபுகுந்திட முயற்சித்தால் ஒரு அட்டகாச அனுபவம் உத்தரவாதமென்பேன் ! அது மட்டுமின்றி – நம் வீட்டுக் குட்டீஸ்களுக்கு ரின்டின்கேன் + ஸ்மர்ஃப்ஸ் + பென்னி  என்ற கூட்டணியை ஒரேயொரு முறை அறிமுகப்படுத்தித்தான் பாருங்களேன் – அடுத்தாண்டில் 2 கார்ட்டூன் சந்தாக்கள் கோரிடும் அவசியத்தை  உருவாக்கிடுவார்கள்!

Moving on – ஈரோடு – கோவை என்று ஓடி வந்த நமது புத்தக விழாவின் கேரவன் தற்போது நிலைகொண்டு நிற்பது தூங்கா நகரமாம் மதுரையில் ! ரொம்பவே சீக்கிரமிது - மதுரை பற்றியதொரு தீர்ப்புச் சொல்ல - ஆனால் இதுவரையிலான ஒன்றரை நாட்களில் நமக்குக் கிட்டியுள்ள வரவேற்பு ரொம்பவே decent என்பேன் ! எப்போதும் போலவே - “ஆ... மாயாவி கதைகள்லாம் இன்னமும் வருதா? ஹை... லாரன்ஸ்-டேவிட் கதைகளுமா?” என்ற ஆச்சர்யக் குரல்களையே நம்மாட்கள் கேட்டு வருகின்றனர் என்றாலும் - இந்த ஆரம்ப தினங்களில் ஓரளவுக்கு கார்ட்டூன் கதைகளும் போணியாகியுள்ளன ! மிரட்டலான விற்பனைத் தொகைகள் என்றில்லாவிடினும் – துயில் பயிலும் புத்தகங்கள் இடப்பெயர்ச்சி காண்பதில் no complaints at all ! அதைவிடவும் முக்கியமாய் – ஏராளமான (புது) வாசகர்களின் பார்வைகளில் லயிப்பது; புதிதாய் பல குடும்பங்களுக்குள் சன்னமாயொரு ‘என்ட்ரி‘க்கான வாய்ப்பு கிடைத்திருப்பதில் நாங்க ஹேப்பி அண்ணாச்சி ! ஈரோடு – கோவை – மதுரை என ஓடிடும் இந்தக் கேரவனின் புண்ணியத்தில் ஒற்றை ராத்திரியிலேயே இல்லாவிட்டாலும் – சிறுகச் சிறுக ஒரு வாசக வட்ட விரிவாக்கத்துக்கு வழிபிறந்தால் நாம் எல்லோருமே ஹேப்பி அண்ணாச்சிகள் தானே ? Fingers crossed!

ஜுனியர் எடிட்டரின் கணினிமயமாக்க முயற்சிகளால் சமீபத்திய விற்பனைகள் பற்றிய சிலபல புள்ளிவிபரங்களை ஒரு ‘க்ளிக்‘கில் கையிலேந்த சாத்தியமானது ! பொத்தாம் பொதுவாய் எல்லாக் கதைகளையும், எல்லா நாயகர்களையும் செல்லப் பிள்ளைகளாகப் பார்க்கும் போது - ஒரு புது வாசகரின் நாடித்துடிப்பை உணர்வது சுலபமாயிராது தான் ; ஆனால் ஓரளவுக்கு எல்லாரது ரசனைகளைப் பற்றியும் நமக்குத் தெரியுமென்ற துக்கடா நம்பிக்கை எனக்குள் புதைந்திருந்தது மெய்யே ! கையிலுள்ள இந்தப் பேப்பர் கற்றை என்னைப் பார்த்துப் பல்லிளிக்கும் போது- ‘போய்யா டுபுக்கு!‘ என்று அது சொல்லாமல் சொல்வது போல்படுகிறது ! சமீபமாய் – அதாவது இந்தாண்டின் துவக்கம் முதலாய் – இந்த ஆகஸ்ட் இறுதி வரையிலான 240+ நாட்களில் சென்னையில் ; ஈரோட்டில் ; கோவையில் மாத்திரமின்றி – ஆன்லைனிலும் எவை விற்றுள்ளன ? எவை சுவையான மண்சோறு ருசித்துள்ளன‘ என்பதை சொல்லட்டுமா ? இது முழுக்க முழுக்க ‘ரமணா‘ பாணியிலான புள்ளிவிபரங்கள் மாத்திரமே என்பதால் – உங்கள் ஆதர்ஷ நாயக / நாயகியர் சில பல பிலிப்ஸ் பல்புகளை வாங்கியிருப்பின் – அது பொருட்டு என் மீது எரிச்சல் கொள்ள வேண்டாமே – ப்ளீ்ஸ்?

நமது சந்தாக்களில் இறுதி இடத்தைப் பிடித்து வரும் சந்தா “D”-ன் நாயகர்களே- இந்தாண்டின் முதலிடத்தைப் பிடித்து வருகிறார்கள் – விற்பனைகளில் ! இதைக் கேட்டு, நில நடுக்கங்கள் ஏதும் நிகழப் போவதில்லை தான் - ஆனால் மாயாவி சார்வாள் உசேன் போல்டைப் போல தனியொரு லெவலில் ஓடிக் கொண்டிருக்க, மற்றவர்கள் எல்லோரும் வெள்ளிக்காகவும், வெண்கலத்துக்காகவும், கிண்ணங்களுக்காகவுமாய் களத்தில் உள்ளது அப்பட்டம் ! அதிலும் “நாச அலைகள்” & “உறைபனி மர்மம்” – இந்தாண்டின் (இதுவரையிலான) bestseller என்ற தகுதிக்காக ரணகளப் போட்டியில் ஈடுபட்டுள்ளன ! “உ.ப.ம.” சன்னமானதொரு வாக்கு வித்தியாசத்தில் தங்கம் வாங்கியுள்ளது ! 

மறுபதிப்புப் பட்டாளத்தின் CID லாரன்ஸ் & டேவிட் ஜோடி இரண்டாமிடத்தில் இல்லை என்பது அடுத்த தகவல் ! மாறாக "புய்ப்பங்கள் போட்ட அன்ட்ராயர் புகழ்" ஜானி நீரோ – இரண்டாமிடத்தில் டேரா போட்டுள்ளார் ! அதிலும் “சதிகாரர் சங்கம்” இதழானது விற்பனையில் பிரித்து மேய்ந்துள்ளது ! போகிற போக்கில் அடுத்த வருஷம் உங்களுக்கு ஆளுக்கொரு ரோஸ் பூப்போட்ட  அண்டடாயர் தான் வழங்கிடுவோமென்று தோன்றுகிறது !! மறுபதிப்பின் வெண்கலத்திலும் ஒரு ஆச்சர்யமே = கூர்மண்டையரின் அதிரடிகளால் ! ஆரம்பத்தில் ஸ்பைடர் மறுபதிப்புகள் அத்தனை விறுவிறுப்பின்றிப் பயணித்தது போலப்பட்டது வாஸ்தவமே ; ஆனால் முதுகில் பூச்சி மருந்துக்கேன் மாட்டித் திரியும் நம்மவரை இப்போதெல்லாம் புத்தக விழாக்களில் விரட்டி-விரட்டி வாங்குகிறார்கள் ! அதிலும் “சைத்தான் விஞ்ஞானி” ஒரு புக்ஃபேர் செல்லம் என்றாகியுள்ளது ! எங்கெல்லாம் எத்தனை சிரசாசன SMS-கள் உற்பத்தியாகின்றனவோ - ஆண்டவா !!

மறுபதிப்புகளின் ராஜ்யத்தைத் தாண்டிடும் போது- முதல்வராய் நிற்பது இரவுக் கழுகாரே! இந்தாண்டு நம்மிடமுள்ள  ‘தல‘ டைட்டில்கள் ஏராளம் என்பதால் – விற்பனைத் தொகைகளின் விகிதத்தில் ஒரு மைல் தூரத்தில் முன்னணி  வகிப்பவர் டெக்ஸ் வில்லரே ! அதிலும் ‘நில்... கவனி... சுடு‘ & ‘குற்றம் பார்க்கின்‘ (இதுவரையிலான) டெக்ஸ் கதைகளுள் ஒரு பிரத்யேக இடத்தினைப் பெற்று நிற்கின்றன ! மீண்டும் ஆச்சர்யங்கள் ஏதுமில்லை – ஆனால் மாயாவிக்கு பிரபல்யத்திலும் சரி, விற்பனையிலும் சரி; போட்டி தரக்கூடிய ஒற்றை ஆசாமி டெக்ஸ் மட்டுமே என்பதை இந்தாண்டும் நிலைநாட்டுகிறது!
ஏற்கனவே தெரிந்த விஷயங்களை புள்ளி விபரங்கள் வாயிலாகத் தெரிந்து கொண்டான பின்பு – ஆச்சர்யங்களின் சமயம் இனிமேல் ! நம்பினால நம்புங்கள் – நமது சஞ்சய் ராமசாமி XIII புத்தக விழாக்களில் இதுவரையிலுமாவது சோடை போகவில்லை ! ‘இரத்தப் படலம்‘ கதைகள் ஏதோவொரு காரணத்தின் பொருட்டு புது வாசகர்களைக் கூட ஈர்த்து வருவது புரியாத புதிர்களுள் ஒன்று என்று சொல்வேன் ! இதில் வேடிக்கை என்னவெனில் one-shot spin offs – “விரியனின் விரோதி” & “காலனின் கைக்கூலி” அத்தனை சுவாரஸ்யமான விற்பனை கண்டிருக்கக் காணோம் ! ஆனால் மெயின் தொடரின் கதைகள் சரளமாகவே விற்றுள்ளன - ஆன்லைன் + புத்தக விழாக் கூட்டணியில் !

தொடரும் ஆச்சர்யங்களுள் – கேப்டன் டைகரை அடுத்ததாகச் சொல்லலாம் – ஆனால் சற்றே வில்லங்கமான காரணங்களின் பொருட்டு ! “தங்கக் கல்லறை” & “மின்னும் மரணம்” இதழ்கள் சற்றும் தொய்வில்லா விற்பனை கண்டு வருகின்றன எல்லாவிதங்களிலும் ! அதே போல “என் பெயர் டைகர்” ஸ்பெஷல் இதழும் சூடாய் சுற்றி வந்துள்ளது ! இங்கேவொரு ஆச்சர்யக் கொசுறுக் சேதி : மொத்த விற்பனையில் பார்த்தால் – “என் பெயர் டைகரின்” வண்ண ஆல்பங்களின் விற்பனையானது – black & white இதழின் விற்பனையை விடவும் இருமடங்கு ஜாஸ்தி ! தட்டுத்தடுமாறியே b&w இதழ்கள் நகன்று வருகின்றன ! இவை நீங்கலாய் பாக்கி டைகர் இதழ்களின் விற்பனை க்ரௌச்சோவின் கடி ஜோக்குகளை விடவும் படு சுமார் ! தளபதிக்கு வந்த சோதனையடா சாமி !

சோதனைகள் பரட்டைத்தலை அழுக்கு மூக்காருக்கு மட்டும் தான் என்றில்லை – கோட் சூட்டணிந்து  ஜெட்டில் கண்டம் விட்டுக் கண்டம் தாண்டும் கோடீஸ்வரக் கோமானுக்குமே ! ஆன்லைனில் “பரவாயில்லை” என்ற ரக விற்பனை ; ஆனால் புத்தக விழாக்களில் லார்கோ ஆல்பங்கள் ஒருவிதப் பிடிவாதம் காட்டி வருகின்றன - “நாங்கள் கடையை விட்டு கட்டை விரலைக் கூட நகர்த்தவே மாட்டோம் !” என்று ! இங்கே சின்னதொரு நெருடல் லார்கோவின் எல்லா ஆல்பங்களுமே டபுள் ஆல்பங்கள் என்பது தான் ! புது வாசகர்களுக்கு மெலிதான, இலகுவாய்த் தோற்றம் தரும் கதைகளின் மீது மையல் தோன்றுவதில் வியப்பில்லை தான் ! Maybe லார்கோ விற்பனையில் பின்தங்கி நிற்க இதுவொரு காரணமோ - என்னவோ?!

"மண்சோற்றுக் கூட்டணியில்" ஒற்றைக்கை ஏகப்பட்ட பத்தினிவிரதரும் சேர்த்தி ! ஊர் ஊராய் வலம் வருவது – போன எண்ணிக்கையிலேயே ஊர் திரும்புவது – இது தான் பௌன்சர் ஆல்பம்களின் இந்தாண்டின் தலைவிதி ! கதைக்களங்களின் வன்முறை ; கூடுதல் விலைகள் - புது வாசகர்களை மிரளச் செய்திருக்கலாமென்று மனதைத் தேற்றிக் கொள்கிறோம் ! ‘ம.சோ.கூ.‘யில் இன்னமும் நிறையப் பேருக்கு இடமுள்ளது ! நரைமீசை ரோமியோ ஷெல்டனும் ஆன்லைனில் செல்லப்பிள்ளை - ஆனால் புத்தக விழாக்களில் மெதுவான பார்ட்டியே ! ஆனால் இவரது one shot ஆல்பங்கள் பரவலாய் விற்றுள்ளன என்பதை இங்கே கவனிக்க வேண்டி வருகிறது ! டபுள் ஆல்பங்கள் பரவலாய் தடுமாறுகின்றன ! அதே சமயம் லயன் 250 ; ஈரோட்டில் இத்தாலி போன்ற குண்டு புக்குகள் போட்டுத் தாக்குகின்றன !! ஒரே நேரத்தில் 2 பாலா படங்கள் பார்த்தது போலொரு மிரட்சி எனக்குள் - இந்தப் புள்ளிவிபரங்களின்பின்னுள்ள லாஜிக்தனை உள்வாங்கிக் கொள்ளும் முயற்சியினில் ! 

ஆச்சர்யம் தந்துள்ள இன்னொரு இதழ் ‘தேவ இரகசியம் தேடலுக்கல்ல !‘ தான்! ஆன்லைனில் ; ஈரோட்டில் என இந்த கிராபிக் நாவல் மற்ற கி.நா.க்களை விடக் கணிசமான முன்னணியில் உள்ளது ! விலை கூடுதல் ; ட்ரிபிள் ஆல்பமிது என்ற போதிலும் விற்பனையில் இது சோடை போகாதிருப்பது எதனால் என்பதை ஜாவாவின் முதலாளியிடம் சொல்லித் துப்பறியச் செய்ய நினைக்கிறேன் !

சொல்லிக்கொள்ளும் விதமாய் விற்பனையில் சரளம் கண்டு வரும் சில பல கார்ட்டூன் நாயகர்களின் பட்டியல் (தரவரிசைப்படி) இதோ-

1. சுட்டி லக்கி
2. லக்கி லூக்
3. ஸ்மர்ஃப்ஸ்
4. சிக் பில்

ஸ்டாலுக்கு வருகை தந்திடும் புதியவர்கள் – தத்தம் அரை டிக்கெட்டுகளுக்கு “புயலுக்கொரு பள்ளிக்கூடம்” இதழினை வாங்கித் தருவது புரிகிறது ! So கார்ட்டூன்காரர்களின் முதல்வராய் நிற்பது இந்தப் பொடியன் தான் ! ‘எப்போதும் செல்லப்பிள்ளை‘யான லக்கி இரண்டாமிடத்தில் நிற்பதில் வியப்பில்லை தான் ; ஆனால் ஸ்மர்ஃப்ஸ் ஆன்லைனில் ; புத்தக விழாக்களில் என்று டாப் கியரில் இப்போது பயணிக்கத் தொடங்கியிருப்பதை வாய் பிளந்தே பார்க்கிறேன் ! அதிலும் – “தேவதையைக் கண்டேன்” இதழ் இந்தாண்டின் கார்ட்டூன் இதழ்களுள் best seller # 2 ! பொதுவாய்ப் பகரப்படும் எண்ணங்களுக்கும், சாயங்களில்லாப் புள்ளிவிபரங்களுக்குமிடையே உள்ள வேறுபாடு மலைக்கச் செய்கிறது ! கார்ட்டூன் பட்டியலில் சொல்லும்படியான இன்னொரு பெயர் ப்ளுகோட் பட்டாளம் ! அதிரடியாய் இல்லாவிடினும், சீராய் இவை விற்பனை காண்பது தெரிகிறது !

சிரிப்புப் பார்ட்டிகளிடமிருந்து சீரியஸ் பார்ட்டிகள் பக்கமாய் திரும்பவும் பார்வைகளைத் திருப்பினால் – தர்ம அடி வாங்கிடும் இருவர் தென்படுகின்றனர் ! முதலாமவர் ஜடாமுடி “மேஜிக் விண்ட்” எனில் இரண்டாமவர் இளவரசியார் !! (சாரி நண்பர்களே - இங்கே அயல்நாட்டுச் சதி கிடையாது நிச்சயமாய் !!) ஒட்டுமொத்த விற்பனையில் ஏகப்பட்ட பிலிப்ஸ் ; ஹேவல்ஸ் ; க்ராம்டன் பல்புகள் வாங்கியுள்ளனர் இந்த இருவருமே ! இரு தொடர்களின் விற்பனை விலைகளும் சொற்பமே ; புத்தகங்களும் தடிமனானவைகளல்ல தான் ! இருப்பினும் ஆன்லைனிலோ- விழாக்களிலோ இவை கரிவேப்பிலை ரேஞ்சுக்கே பாவிக்கப்படுவது சங்கடமாய் உள்ளது !

இதே போலவே தாளமிடும் விற்பனை கண்டு வருவது மார்ட்டினின் இதழ்களும் கூடத்தான் ! ஆகஸ்டின் “இனியெல்லாம் மரணமே” மார்ட்டினின் ஒரு புனர்ஜென்மத்துக்கு உதவினால் தேவலை என்பேன் - ஏனெனில் “கனவுகளின் குழந்தை” விற்பனையில் பரிதாபமாய் காட்சி தருகிறது ! அதே நிலைமை தான் ரிப்போர்ட்டர் ஜானிக்கும் கூட!! நமது முப்பதாண்டு பரிச்சய நண்பர் புது வாசகர்களைக் கவர்ந்திட ஏதேனும் புதுசாய் வித்தைகள் கற்றிட வேண்டும் போலும் ; புத்தகவிழாக்களில் இவர் பக்கம் தலைவைத்துப் படுக்கக் கூட ஆளைக் காணோம் ! இதில் கொடுமை என்னவெனில்- ப்ரூனோ பிரேசிலின் “சாக மறந்த சுறா” விற்பனையில் ahaa ரகம் !

புதுவரவுகளுள் ரின்டின்கேன்; பென்னி; க்ளிப்டன் ஆகியோரது ரிப்போர்ட்கார்டுகள் ரொம்பவே உற்சாகமளிக்கும் விதமாய் உள்ளன ; ஆனால் அவர்களுக்கு இவை துவக்க நாட்களே என்பதால் பொறுத்திருந்து பார்த்தாக வேண்டுமென்று சொல்லுவேன்!

So - நமது ஆதர்ஷ பட்டாளத்தின் ஒரு மேலோட்டமான மதிப்பீடு இது ! சொதப்பும் எல்லோருக்கும் கல்தா என்றோ ; சாதித்துள்ள சகலருக்கும் கூடுதல் slots என்றோ கொள்ளத் தேவையில்லை! இந்த ஞாயிறை சுவாரஸ்யமாக்கிட ஒரு ரமணா ரகப் பதிவு மட்டுமே இது ! Nothing more...nothing less ! 

Before I sign off - ஜாலியான சிறு நிகழ்வுகள் பற்றி ! நேற்றைய தலைமுறையின் புண்ணியத்தில் மின்சார பகாசுரன் மாயாவியின் பெயர் சாஸ்வதமாய் நிலைத்திருப்பது போலவே - நமது இரவுக்கு கழுகாரின்கீர்த்தி - காலத்தை வென்று நிற்கும் என்பதை உறுதிப்படுத்தின சமீபத்தைய 2 நிகழ்வுகள் ! வாரத்தின் இறுதியினை நவக்கிரஹக் கோவில்களின் ஒரு சூறாவளிச்  சுற்றுப்பயணத்தின் பொருட்டு ஒதுக்கிய கையோடு ரயிலேறியிருந்தேன் - வீட்டோடு ! வெள்ளிக்கிழமை நண்பகலுக்கு  திருவெண்காடு கோவிலில் நின்று கொண்டிருக்கும் வேளையில் திடு திடுப்பென்று என் முன்னே ஆஜரானார் புதியவர் ஒருவர் ! "சார்..நீங்கள் சிவகாசி தானே ? லயன் காமிக்ஸ் விஜயன் தானே ? " என்றபடிக்குத் தன்னை அறிமுகம் செய்து கொண்டார் ! தேனி சொந்த ஊர் ; வயது 37 ; தற்போதைய பணியிடம் மும்பை ; சந்தாவின் ரெகுலர் அங்கத்தினர் ; நமது வலைப்பதிவின் மௌன வாசகர் - பெயர் ஆனந்த் !! பிள்ளையாருக்கு முன்னே நின்று ஓரிரு நிமிடங்கள் குசலம் விசாரித்து விட்டு, விடைபெற்றுக் கிளம்பினேன் ; ஆனால் நண்பரோ இன்னும் நிறைய-நிறைய பேசும் மூடில் இருப்பது புரிந்தது ! ஐந்து நிமிடங்களில் மீண்டும் ஏதோவொரு சன்னதிக்கு முன்னே நிற்கும் வேளையில் மடை திறந்த வெள்ளமாய்ப் பேசத் தொடங்கினார் ! சிறுவயது முதலே துவங்கிய தனது  காமிக்ஸ் காதல் பற்றியும், குடும்பம் பற்றியும், ஆதர்ஷ நாயகர் பற்றியும் பேசிக் கொண்டே சென்றவர் - தனது துணைவியாரும் ஒரு டெக்ஸ் ரசிகை என்று பெருமையோடு சொன்னார் ! கோவில் நடைசாத்தப் போகும் வேளையானது நமது டெக்ஸ் வில்லர் சிலாகிப்புகளுக்கு உகந்த நேரமாகயிராது என்று சொல்லிவிட்டு ; நேரம் கிடைக்கும் பொழுது நமது வலைப் பதிவில் கலந்து கொள்ளுங்களேன் என்ற கோரிக்கையோடு கிளம்பினேன். இன்னமும் ஏதேதோ கேட்டிட / பகிர்ந்திட நண்பருக்கு ஏக உத்வேகம் இருப்பது புரிந்த போதிலும், நம் கச்சேரிக்கு அது உகந்த இடமாக எனக்குத் தோன்றவில்லை என்பதால் நகர்ந்திட வேண்டிப் போனது. ஜுனியர் எடிட்டருக்கு நண்பர்களது ஆர்வங்கள் புதிதல்ல என்பதால் casual ஆக எடுத்துக் கொண்டு நிற்க - இதெல்லாம் துளியும் பரிச்சயமிலா எனது பாரியாள் - "ஆவென்று" நிற்க நான்உசேன்போல்டானேன் !  

மதியம் மயிலாடுதுறை திரும்பி, தங்கியிருந்த லாட்ஜில் மத்திய உணவுக்குப் போய் அமர்ந்தால் - அங்கே பணிபுரிபவர் என்னை ஒவ்வொரு கோணத்திலிருந்து பார்வையிடுவதைக் கவனிக்க முடிந்தது ! 'அட்ரா சக்கை - இன்னொரு டெக்ஸ் உற்சவம் காத்துள்ளது !" என்று என் உள்ளுணர்வு சொல்ல - பிசகின்றி நிஜமானது ! "சார்...நீங்க சிவகாசி தானே ?" என்று அவர் கேட்கத் துவங்கும் போதே என் மனைவியின்கண்களில் "ஆஹா.......என்னதான் நடக்கிறது இங்கே ?" என்று கேள்வி கேட்கும் பார்வையினை கணிக்க முடிந்தது ! நண்பரும் அதே 37 வயதுக்காரர் ; காலமாய் நமது அபிமானி ; காமிக்ஸ் வெறியர் ; மயிலாடுதுறையின் மைந்தர் ; டெக்ஸ் வில்லர் ரசிகர் ; நமது வலைப்பதிவின் தீவிர / மௌன வாசகர் என்று அடுக்கிக் கொண்டே செல்ல - நான் பாம்பு டான்ஸ் தான் ஆடிக் கொண்டிருந்தேன் !! என்னென்னவோ பேச நினைத்தவர் - என்ன பேசவென்று தெரியாத திகைப்பில் ரொம்பவே உணர்ச்சிவசப்பட்டுப் போக - பக்கத்துக்கு  டேபிள்களில் இருந்தவர்கள்  - "யார்டா இந்த டமாஸ் பார்ட்டி ?" என்பது மாதிரியான லுக் விட, எனக்கோ  பேஸ்மெண்ட் உதறல்தான் ! கிளம்பும் முன்னே போட்டோ எடுக்கலாமா ? என்று அவர் ஆசை  ஆசையாய்க் கேட்க, அங்கேயே போட்டோ படலம் அரங்கேறியது ! உடன் பணிபுரிபவர்களிடம் என்னைப் பற்றி  பரபரப்பாய் நண்பர் ஏதோ அறிமுகம் செய்திட, அவர்கள் கொட்டாவிகளை சன்னமாக்கிக் கொண்டே - சுவாரஸ்யம் காட்டுவது போல லைட்டாக தத்தம் நடிப்புத் திறமைகளை அரங்கேற்றினர் ! ஒரு மாதிரியாய் நண்பரிடம் விடைபெற்றுக் கிளம்பும் போது நமது இரவுக்கு கழுகாரின் புண்ணியத்தில் இந்த ஆந்தை விழியனாருக்குக் கிட்டி வரும் வாழ்வை எண்ணி வியக்காதிருக்க முடியவில்லை ! Thanks & sorry guys - சூழ்நிலை அவ்விதம் என்பதால் உங்களிடம் முறையாய்ப் பேச முடியாது போய் விட்டது  ! 

See you around all ! செப்டம்பர் விமர்சனங்கள் தொடரட்டுமே? Bye for now!

Tuesday, August 30, 2016

நீலப் பொடியர்கள் - உங்கள் இல்லங்களில் !

நண்பர்களே,

வணக்கம். இன்னொரு புது நாள்.....இன்னுமொரு கத்தைப் புது இதழ்கள்.... தொடரும் ஒரு சுவாரஸ்யக் கதைத் தேடல் !! இவை போதாதா எந்தவொரு சோர்வையும் புறம்தள்ளிட ? செப்டெம்பரின் நான்கு இதழ்களும் ஒரு நாள் முன்னதாகவே தயாராகி விட, அவற்றைப் புரட்டும் போது உற்சாக மீட்டர் தானாய் வேகம் பிடிக்கிறது !! ஏற்கனவே பலமுறைகள் சொன்ன அதே விஷயம் தானெனினும் - ஒவ்வொருமுறையும் புதுத தயாரிப்புகளை ஒருசேரப் பார்க்கும் அனுபவத்தின் சந்தோஷம் எப்போதுமே அலாதியானது !! ஹிட்டோ-மொக்கையோ - தீர்ப்பெழுதும் பணி உங்களது என்பதால் அதைப் பற்றியெல்லாம்  அலட்டிக் கொள்ளாமல்,இதழ்களை புரட்டிப் பார்க்கும் அந்த ஒற்றை நொடியின்  carefree சந்தோஷம் ஒரு சூப்பர் அனுபவம் !!  இம்முறையும் அந்த வேலையை மட்டுமே செய்துவிட்டு - நம்மவர்கள் பேக்கிங் பணிகளில் ஈடுபடுவதை பராக்குப் பார்க்கக் கிளம்பி விட்டேன் ! நாளைய தினம் உங்கள் இல்லங்களில் தஞ்சம் புக நீலப் பொடியர்களும், XIII-காருவும், இரவுக் கழுகாரும் பரபரப்பாய் காத்துள்ளதால் நீங்களும் தயாராகிக் கொள்ளுங்களேன் ? அதிலும் இம்முறை SMURFS கதையானது ரொம்பவே cute என்று நினைத்தேன் !! கொஞ்சமாய் நேரம் ஒதுக்கிக் கொண்டு இந்தக் கதையைப் படித்திட முனையுங்களேன் - ஒவ்வொரு வீட்டிலும்...ஒவ்வொரு நட்பு வட்டத்திலும் ஒரு ஜோக்கர் smurf ; ஒரு ஜீனியஸ் smurf ; ஒரு பீம்பாய் smurf ; ஒரு பர்கர் smurf ; ஒரு சீனியர் smurf - என்று ஏதேனுமொரு SMURF பிரதிநிதி இருப்பது புரியும் ! ஒரே வருத்தம் - இந்தக் கதையானது நமது மாநிலத்தில் தேர்தல்கள் நடந்து கொண்டிருக்கும் வேளைதனில் வெளியாகியிருப்பின் இன்னமும் பொருத்தமாய் இருந்திருக்கும் !! 
அப்புறம் இம்மாத மறுபதிப்பான "காணாமல் போன கைதி" பற்றி ! இந்த இதழ் முதல் தொடரும் மறுபதிப்புகள் எல்லாமே - நாம் நார்மலாக டெக்ஸ் வில்லர் ; மார்ட்டின் கதைகளுக்குப் பயன்படுத்தும் அதே வெள்ளைத் தாளில் தான் தொடர்ந்திடும். இதுவரையிலும் மறுபதிப்புகளில் நாம் உபயோகித்து வந்த அந்த சற்றே மஞ்சள் கலந்த பேப்பரின் விலைகள் இந்த சீசனில் எட்டா தூரத்துக்குச் சென்றுவிட்டதால் நமக்கு இனி வேறு மார்க்கமில்லை ! கவனிக்க : பேப்பரின் ரகத்தில் மட்டுமே மாற்றமே தவிர - கனத்தில் அல்ல ! So மெல்லிசான பேப்பரோ ? என்ற சலனங்களுக்கு / புதுசாயொரு பஞ்சாயத்துக்கு அவசியமில்லை ! முதன்முறையாக மறுபதிப்புக் காணும் இந்தக் கதை அநேகரின் சேகரிப்பில் இருந்திடாதென்று நினைக்கிறேன் ! இம்முறையும் இந்த மறுபதிப்பின்  proof-reading பணியினை நமது வாசகர்களுள் இருவர் ஒருவருக்குப் பின் இன்னொருவராய் செய்துள்ளனர் ! இருவருமே அனாமதேயத்தையே நாடுவதால் பெவிக்கால் பெரியசாமி ஆஜர் ! Happy Reading !

எனக்கும் கூட ஒருவிதத்தில் சந்தோஷ வாசிப்பு அனுபவங்களே - 2017-ன் "TEX' கதைத் தேர்வினுள் ஈடுபட்டுக் கிடக்கும் முகாந்திரத்தினில் !! சுவாரஸ்யமான கதைகளின் பட்டியல் ஒன்றினை படைப்பாளிகளிடம் வாங்கி கொண்டு - அவற்றிலுள்ள  ஒவ்வொரு கதையின் சுருக்கத்தையும் ; அது குறித்த இதர மொழி வாசகர்களின் விமர்சனங்களையும் ; கதைகளின் ஓவிய பாணிகளையும்  , பக்க நீளங்கள் பற்றிய விபரங்களையும் - ஆங்காங்கே சிதறிக் கிடக்கும்  இணையதளக் குறிப்புகளிலிருந்து சேகரிப்பதை ஞாயிறு காலை துவக்கினேன் ! டெக்ஸ் கதைகளின் குவியலுக்குள் புகுந்தால்தான் புரிகிறது - அதன் பின்னணியில் எத்தனை எத்தனை அட்டகாசமான, ஆர்ப்பாட்டமான கதைக்களங்கள் உள்ளனவென்று ! மாமூலான செவ்விந்திய யுத்தம் ; நில ஆக்கிரமிப்பு ; ஆயுதக் கடத்தல் கதைகளுக்கும் பஞ்சமில்லை என்றாலும் - இப்போதெல்லாம் வெளியாகும் கதைகளில் தென்படும் variety மூச்சிரைக்கச் செய்கிறது ! தற்செயலாய்க் கண்ணில்பட்ட கதைகளுள் நாம் சம்பந்தப்பட்ட சாகசமும் ஒன்று உண்டு !!  "நாமென்றால்" - இந்தியர்கள்  என்ற முறையினில் ! ஆனால் தென்னமெரிக்கக் காட்டினில் காளி கோயில்...முரட்டுப் போக்கிரிகள் ...ஹிந்து தீவிரவாதிகள்  என்று கதை பயணிப்பதால் - நிச்சயமாய் நமக்கு ரசிக்காதென்று பட்டது ! திகைக்கச் செய்யும் ஓவிய ஸ்டைல்கள் ; எண்ணற்ற அசாத்திய அட்டைப்படங்கள் ; MAXI ; MEGA : குட்டிக் கதைகள் என்று 'தல' தேடலில் எனக்கு கிட்டிய விஷயங்கள் எக்கச்சக்கம் ! 

2015 வரையிலும் டெக்ஸ் கதைத்தொடர்களினில் பணிசெய்துள்ள ஓவியர்களின் எண்ணிக்கை 74 என்றால் நம்ப முடிகிறதா ?? இம்மாதம் நாம் ரசிக்கவிருக்கும் சித்திரங்களை உருவாக்கிய திரு.காலப்பினி தான் - 103 சாகசங்களுக்குப் படம் போட்டு பட்டியலின் முதலிடத்தில் உள்ளார் ! இரண்டாம் இடமோ - ("ஓக்லஹோமா " கதைப் புகழ் )- லெட்டெரி - 50 ஆல்பங்களுடன்  !! மூன்றாவது தலைமுறையாய்த் தொடர்ந்திடும் நமது இரவுக் கழுகாரின் பின்னே ஒரு ரயில்பெட்டியின் பயணிகள் எண்ணிக்கைக்கு ஈடாகப் படைப்பாளிகள் குவிந்திருப்பதைப் பார்க்கும் போது WOW என்று மட்டுமே சொல்லமுடிகிறது ! குறிப்பிட்ட கதைகளின் PDF பைல்களை வாங்கிக் கொண்டு அவற்றைப் புரட்டினால் - நம்மவரைத் தூக்கி ஜெயிலில் கடாசுகிறார்கள் ; சுவற்றில் கட்டித் தொங்க விடுகிறார்கள் ; சாட்டையால் ஒருத்தன் விளாசுகிறான் ; மண்ணுக்குள் புதைத்து வைக்கிறார்கள் !! வெள்ளிமுடியார் கார்சனோ பேங்கைக் கொள்ளையடிக்கிறார் ; இராணுவ உடுப்பில் கலக்குகிறார் ; ஹிப்னாடிச மயக்கத்தில் டெக்ஸை போட்டுத்தள்ளத் தயாராகுகிறார் ! இன்னும் கொஞ்சம் பக்கங்களைத் திருப்பினால் - ரகம் ரகமான சில்லுமூக்குகளை நம்மாள் - தயவு தாட்சண்யமின்றிப் பொத்தல் ஆக்கும் படலம் ஓடுகிறது ! இடைப்பட்ட அவகாசங்களில் நமது பதிவுக்குள் நுழைந்தால் - அந்த ஆக்ஷனுக்குத் துளியும் சளைக்காத கும்மா-கும் sequence இங்கேயும் ஓடுவதைப்  பார்க்க முடிந்த பொழுது - "இந்த வா-ர-ம் ஆக்ஷன் வாரம் !" போலும் என்று நினைத்துக் கொண்டேன் ! ஒரு மாதிரியாய் பழசும் ; புதுசும் கலந்ததொரு TEX அட்டவணையை நேற்றிரவு இறுதி செய்துள்ளேன் !! மாறுபட்ட கதை பாணிகள் ; ஆனால் அதே சமயம் டெக்சின் இமேஜுக்கு பாதகம் தந்திடாத தேர்வுகள் ; ஓவிய பாணிகளில் நெருடலின்மை ; வெவ்வேறு கதாசிரியர்களின் கைவண்ணங்கள் என்று இயன்றமட்டிலும் கவனமாய் பணி செய்துள்ளேன் ! அடுத்தாண்டின் இவ்வேளையில் "'தல' போல் வருமா ?" என்ற பாட்டு உங்களிடம் ஓடிக்கொண்டிருப்பின் - இப்போதைய ஆராய்ச்சிக்கொரு அர்த்தம் இருந்திடும் !! 
கதைத் தேர்வு ஒருபக்கமெனில் - தேர்வான கதைகளுக்கான பெயர்களை தயார் செய்யும் பணி இன்னொருபுறம் ! தெலுங்கு ரீமேக் படத் தலைப்புகள் போலவும் இல்லாது ; "இரத்தம் " ; "மரணம்"  "காட்டேரி" ;"பிசாசு"என்ற கொங்குராக் காரமான பெயர்களையும் இணைக்காது பெயர் வைக்க முனைந்து கொண்டுள்ளேன் ! இன்னொரு பக்கமோ - மார்டினின் வெற்றியைத் தொடர்ந்து அவரது அடுத்தாண்டின் கதைக்கென மெனக்கெடல் தொடங்கி விட்டது ! இம்முறை பெற்றுள்ள பெயரை அவர் தக்க வைத்துக் கொள்வது முக்கியமன்றோ ? ஆகையால் - மார்டினை உருவாக்கிய திரு. அல்பிரேடோ காஸ்டெல்லி அவர்களிடம் அவரது உதவியினை நாடி மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன் !! அவர் உதவி கிட்டின் அற்புதமாய் இருக்கும் ! இங்கும் கூட - தாஜ் மஹால்...இந்திய சாமியார்...என்ற ரீதியில் கதையொன்று உள்ளது ! ஆனால் அவற்றுள் இந்தியா பற்றி வழக்கமான சிலபல முன்தீர்மானம் செய்யப்பட விஷயங்கள் மிகுந்திருக்குமோ ? ; ஏகமாய் மாற்றம் கண்டுள்ள இன்றைய நாட்களில் நமக்கு அவை நெருடலாய் தோன்றிட வாய்ப்புள்ளதோ ? என்ற பயம் எனக்கு ! தட்டுத் தடுமாறி சில கதைகளை shortlist செய்துவிட்டு - அவற்றின் மீதான ஆராய்ச்சிகளைத் துவங்கியுள்ளேன் !! இந்தப் பணி - டெக்சின் கதைத் தேர்வை விடவும் சிரமமாய் உள்ளதென்பது மட்டும் புரிகிறது !! உர்ர்ர்..உர்ர்.....என்று ஜாவாவின் பாணியில் முனகிக் கொண்டே இன்றும் நள்ளிரவு எண்ணையை எரிக்கத் தயாராகிறேன் ! Bye now all !
P.S : இவ்வாரம் வெள்ளிக்கிழமை துவங்கவிருக்கும்  மதுரை புத்தக விழாவினில் நமது ஸ்டால் எண் : 71. ஒரு விசிட் அடிக்கலாமே - இந்தப் பக்கத்து நண்பர்கள் ?



http://lioncomics.in/monthly-packs/208-september-2016-pack.html

Sunday, August 28, 2016

நமக்கு நாமே !

நண்பர்களே,
            
வணக்கம். "இவன் ரொம்பப் பேசுவானே...!!" என்ற தயக்கத்தோடு நமது ஞாயிறுப் பதிவுகளை அணுகுவது உங்கள் வழக்கமெனில் - இவ்வாரத்துக்கொரு 'டாட்டா' காட்டிவிடுவது சாலச் சிறந்தது என்று துவக்கத்திலேயே சொல்லி விடுகிறேனே !  நிறையவே  பேச / எழுத / டைப்படிக்க உள்ளேன்தான் இம்முறை ! And அவற்றுள் நிறைய விஷயங்கள் "மறு ஒளிபரப்பு"ப் போலவும் தோன்றிடலாம் தான் - but  கோர்வையாய் சில நிகழ்வுகளை முன்வைக்கும் பொருட்டே இந்த "ம.ஓ".!! 

சில நேரங்களில் பெரிதாய் நம் பக்கத்தினில் முயற்சிகளின்றியும் கூடப் பயணதிசை சரியாக அமைந்திடுவதுண்டு ! சமீபத்தைய சில பல நிகழ்வுகள் – பதிவுகள் – பின்னூட்டங்கள் எல்லாமே தற்செயலாய் ஒன்றன்பின் ஒன்றாய்க் கோர்வையாக அமைந்திட- சில முக்கிய 'செய் & செய்யாதேக்கள்' ஸ்பஷ்டமாய் நம் முன்நிற்கின்றன ! நிகழ்வு # 1 – ஈரோட்டுப் புத்தக விழாவும் அது சமயம் அரங்கேறிய வாசகர் சந்திப்பும் ! இதுவரை நாம் பார்த்திரா ஒரு அசாத்திய உற்சாகத்தோடு நடந்த நேர்முகச் சந்திப்பு ஏகப்பட்ட நூலான்படைகளை மூளைக்குள்ளிலிருந்து விலக்கியுள்ளது என்று சொல்வேன் ! காமிக்ஸ் வாசிப்பு ; காதல் என்பதெல்லாம் கருகிடவில்லை ; செழிப்பாய் ; ஆரோக்கியமாய் தொடர்கிறதென்பது அன்றைய தினத்தின் முதல் பாடம் ! அந்த காமிக்ஸ் காதலானது - சக வாசகர்களின் நட்போடு கைகோர்க்கும் போது ஒரு விவரிக்க இயலாப் புதுப்பரிமாணத்தை எட்டுகிறது என்பதை அன்றைய தினம் மட்டுமன்றி, தொடர்ந்த வாரங்களது பின்னூட்டங்களின் உற்சாகங்களும் பிடரியில் சாத்திச் சொல்லியதுதான் பாடம் # 2 ! அந்தப் பாசிட்டிவ் எனர்ஜியின் பிரவாகம் அட்டகாசமான புத்தக விமர்சனங்களாய் ஒரு கட்டத்தில் உருவெடுக்க – அவை கண்ணில்காட்டிய சூப்பர்- டூப்பர் பலன்களே நமது பாடம் # 3 ! Yes – ஆகஸ்ட் 6 முதல் இன்று வரைக்குமான நமது ஆன்லைன் ஸ்டோரின் வியாபாரம் – வழக்கத்தை விட இரு மடங்கு அதிகமாகியுள்ளது ! ரெகுலர் வாசகர்கள் என்றில்லாத விளிம்புநிலை நண்பர்கள் இணையத்தில் பொங்கும் உற்சாகத்தினால் ஈர்க்கப்பட்டு இம்மாத இதழ்களை மாத்திரமின்றி - முந்தைய இதழ்களையும் சேர்த்தே  வாங்கியுள்ளனர் என்பதே என் புத்திக்கு எட்டிய inference ! Of course - இந்த விற்பனை இரட்டிப்புக்கு வேறு காரணங்கள் இருக்கலாம்தான் ; குருவி டேரா போட - பனம்பழம் ட்ராப் ஆன கதையாகவும் இருக்கலாம்தான் ! ஆனால் - எனது உள்ளுணர்வு சொல்வதோ - இம்மாத மேளாவின் நேரடிப் பலனே இது என்று !! 

ரொம்ப காலமாகவே நான் சொல்ல நினைத்து; தயங்கி நின்று விடும் சமாச்சாரம் இது தொடர்பானதே ! பொதுவாய் ஒவ்வொரு இதழின் வருகையினைத் தொடர்ந்தும் நமது பதிவிலும், இன்னபிற சமூகவலைத்தள / வாட்சப் தகவல் பரிமாற்றங்களிலும் – பாராட்டுக்களும், குட்டுக்களும் ஒருசேர அரங்கேறுவதில் இரகசியங்கள் ஏதுமில்லை. சில தருணங்களில் பதிவாகிடும் அந்த நெகடிவ் விமர்சனங்களுக்கு நிறையவே முகாந்திரங்கள் இருப்பதுண்டு ! “கதை மொக்கை; அட்டைப்படம் சரியில்லை; மொழிபெயர்ப்பு சரியில்லை” என்று ஏதேனும் உருப்படியான காரணங்கள் இருக்கும் போது அவற்றைச் சரி செய்யும் உத்வேகத்தை எனக்குள் விதைத்துக் கொண்டு நகர்ந்து விடுவேன் ! வேறு சில வேளைகளிலோ - நண்பர்கள் நடத்திடும் நையாண்டி தர்பார்களின் நோக்கம் - ஜாலியான கலாய்ப்ஸ் அல்லது என்னை மண்டையில் தட்டி வைப்பதாக மாத்திரமே இருப்பதுண்டு ! அத்தகைய நிகழ்வுகள் அவர்களைப் பொறுத்தவரையிலும் ஒருத்தற்காலிக ‘புகை வெளியேற்றமாக‘ இருந்திடலாம் தான் ; ஆனால் ஒரு தொடர்விளைவாய் அவை உண்டாக்கக்கூடிய  வியாபாரச் சுணக்கங்களின் அளவுகளை நாம் யாருமே அறிந்திருக்க வாய்ப்பில்லை என்பது இன்றைக்கு லேசாய் சிந்திக்கச் செய்கிறது ! ! 

ஒரு உதாரணம் சொல்லுகிறேனே ! சின்னதொரு எண்ணிக்கையே நமது பிரிண்ட்ரன் எனும் போது- அச்சின் ஆரம்பகட்டத்துப் பேப்பர்களில் துல்லியம் குறைவாக இருக்கும் ! அவற்றை நாம் தூக்கிக் கடாசிவிட்டாலும் ஏதேனும் சில ஜோதியில் கலந்து, பைண்டிங்கிலும் பிரிக்கப்படாது உங்களை வந்து எட்டிடக்கூடும் ! அத்தகைய தருணங்களிலோ ; பைண்டிங்கில் பிழைகளுள்ள பிரதிகள் உங்களை சென்றடைந்திடும் சமயங்களிலோ- மறு கேள்வியின்றி மாற்றுப் புத்தகங்களை நம் செலவிலேயே அனுப்பியிருக்கிறோம். So அது போன்ற சிரமங்கள் நேரும் சமயங்களில் ஒரேயொரு பொறுமையான ஈ-மெயிலைத் தட்டி விட்டால் ஓசையின்றிப் பிரச்சனை தீர்ந்து விடும் ! மாறாக அந்தப் புத்தகத்தை போட்டோ எடுத்து, தத்தம் வாட்சப் / FB க்ரூப்களில் போட்டுக் கழுவிக் கழுவி காக்காய்க்கு ஊற்றும்போது அடங்கிடக்கூடியது நண்பர்களது எரிச்சலாக மாத்திரம் தானே  இருக்கக் கூடும் ?! ‘எடிட்டரை சும்மா பிரிச்சு மேய்ஞ்சுட்டேன்லே !!‘ என்ற உற்சாகமும் உங்களதாகலாம் ! ஆனால் அந்தத் தற்காலிகச் சந்தோஷத்தையும், அவை ஈட்டித் தரக்கூடிய "லைக்"களையும்  தாண்டி காரியார்த்தமாய் சாதித்திருக்கக் கூடியது என்னவென்று யோசிக்க அவர்கள் நேரம் எடுத்துக் கொண்டிருப்பின்- ‘பலன் பூஜ்யமே‘ என்பது புரிந்திருக்கும் ! ஸ்டேஷனுக்குள்ளேயே புகுந்து ஏட்டையாவை 'நச்'சென்று நடுமூக்கில் குத்தியதால் நீங்கள் ‘world famous’ ஆகப் போவதில்லையே - simply becos இந்த ஏட்டையா ஒரு சாதாரண சிரிப்புப் போலீஸ் மட்டும்தானே? இவரைச் சாத்தி நீங்கள் பிரசித்தி அடைவதை விட- ஒரு தவறை முறையான வழியில் சுட்டிக்காட்டி அதனைத் தொடர்ந்திடாதிருக்க உதவிய சிறு மௌனக் காரணியாக இருந்து விட்டுப் போவது – ‘காமிக்ஸ்‘ எனும் ரசனைக்கான long term உபகாரமாக இருந்திடாதா ?

ஆக விமர்சிக்கவே கூடாதாக்கும் ? ; நீ என்னத்தைப் போட்டாலும் பேஷ்-பேஷ் என்று பாராட்ட மட்டும்தான் செய்யணுமாக்கும் ?‘ என்ற கேள்வி உங்களுக்குள் ததும்புவது புரிகிறது ! என் நோக்கம் விமர்சனங்களில்லா இணையமல்ல ! கதைகளின் நிறை-குறைகளைத் தாராளமாய் விமர்சித்திடலாம் ! சொல்லப் போனால் - நாம் செல்வது முறையான பாதையில்தானா ? என்ற ஊர்ஜிதத்துக்கு உங்களின் விமர்சனங்கள் சர்வ நிச்சயமாய் அவசியம் ! "விடுதலையே - உன் விலை என்ன ? " ; "வானமே எங்கள் வீதி"  ; "விண்ணில் ஒரு வேங்கை" போன்ற கதைகளின் சுமாரான அம்சங்களை நீங்கள் எனக்குச் சுட்டிக் காட்டியிராவிடின் அவற்றின் ரோதனை நிச்சயமாய்த் தொடர்ந்திருக்கும் ! நீங்கள்  எனக்கொரு கோடி காட்டும் போதே நான் அத்தொடர்களின் எஞ்சிய கதைகளை பரணுக்கு பார்சல் பண்ணிவிட்டேன் - அவற்றுள் பல்லாயிரங்கள் முடங்கிக் கிடந்தாலும் !! So "விமர்சிக்க வேண்டாமே" - என்பதல்ல எனது கோரிக்கை ! 

ஆரோக்கியமான விமர்சனங்கள் ; ரசிக்கக் கூடிய நையாண்டி கொண்ட வரிகள் ; ஒப்பீடுகள் என்றைக்குமே படிக்கும் எவரையும் புன்னகைக்கச் செய்யும்தானே ? மாறாக - என்மீதான கோபங்களை இறக்கி வைக்குமொரு முகாந்திரமாய் அந்த அபிப்பிராயப் பகிரல் உருமாறும் போது  - விமர்சனங்களின் நோக்கமே திசைமாறிடுகிறது  என்பது மட்டும்தான் எனது ஆதங்கம் ! பாராட்டுக்களெனில் அவை கதைகளுக்கும், தயாரிப்புப் பணிகளுக்கும் உரியவை என்பதில் எனக்குள் எவ்விதக் குழப்பமுமில்லை ! அதே மூச்சில் - மண்டையில் குட்டெனில் அது எனது கதைத் தேர்வுக்கும், தயாரிப்பின் குறைகளுக்குமே - இதனில் தனிப்பட்ட எனது பாக்களிப்புகள் ஏதும் கிடையாது என்பதிலும் நான் தெளிவாக உள்ளேன் ! So – “இந்த இதழைப் பாராட்டித் தொலைத்தால் இந்தச் சொட்டைத்தலையனை ஏற்றி விட்டது போலல்லவா ஆகிவிடுமே ?” என்ற தயக்கங்களின் பொருட்டு நீங்கள் மௌனம் சாதிக்கத் தேவைகளே கிடையாது !! அதே போல  "வசமாய் முதுகில் நெய் தோசைகள் வார்த்துவிட்டோம் - தொல்லை தீர்ந்தது !" என்ற நிம்மதிப் பெருமூச்சுக்கும் வழியிராது - ஏனெனில் அடுத்த முப்பதாவது நாளே புதுசாய்  எதையேனும் ஏந்திக் கொண்டு உங்கள் முகங்களுக்குள் நான் நிற்கத்தான் போகிறேன் அல்லவா ?!  

படைப்பாளிகளுக்கும் - உங்களுக்குமிடையிலான போஸ்ட்மேன் மட்டுமே நான் என்பதில் துளியும் குழப்பங்களில்லை என்னுள் ! So ஒவ்வொரு படைப்பையும் அவற்றின் நிறை-குறைகள் சார்ந்த கண்ணோட்டத்தில் மட்டுமே பார்த்திட்டால்- நெட்டைக்கொக்காய் இடையில் நான் நிற்பதை சுலபமாக மறந்திட முடியும் ! நிறைகளை நிறைவாய்ப் பாராட்டினீர்களெனில் – நீங்கள் உற்பத்தி செய்து தரும் உற்சாகமும், பாசிட்டிவ் எனர்ஜியும் நிறையப் புது வாசகர்களை வசீகரித்திட உதவுமே ! After all – இந்த 4 ஆண்டுப் பயணத்தில் சந்தோஷப்படும் சமாச்சாரங்கள் நிச்சயமாய் உண்டுதானே ? 

- லார்கோ வின்ச் (கிட்டத்தட்ட) முழுத்தொடர்
- வேய்ன் ஷெல்டன் (கிட்டத்தட்ட) முழுத்தொடர்
- கமான்சே அறிமுகம்
- மின்னும் மரணம் தொகுப்பு
- LMS
- க்ரீன் மேனர்
-தலையில்லா போராளி 
- லயன் 250 
- XIII Spin Offs
- தோர்கல்
- பௌன்சர்
- கார்ட்டூன் தடம்

என்று சுவாரஸ்ய அனுபவங்களுக்குப் பஞ்சமிலாப் பயணமல்லவா இதுவரையிலாவது  ? ‘பேப்பர் சரியில்லை‘; ‘அச்சு சரியில்லை‘ என் பொத்தாம் பொதுவாய் இடப்படும் புகார்களையும் கூடக் களைய தலைகீழாய் நின்று தண்ணீர் குடித்து வருகிறோம். இந்தாண்டின் அச்சுத்தரம் நிச்சயமாய் குறைசொல்லும் விதங்களில்லை என்பது உங்குளுக்கும் தெரியும் – எனக்கும் தெரியும் ! அதே போல இந்தாண்டில் - "மரண மொக்கை" என்ற ரேஞ்சில் அமைந்துபோன இதழாய் எதுவும் இருந்ததுபோலவும் எனக்கு நினைவில்லை ! ஆக முந்தைய நாட்களில் செய்த தவறுகளிலிருந்து பாடம் படிக்க நமக்குத் தயக்கங்கள் இல்லை  என்று எடுத்துக் கொள்ளலாமே ? 'தொடர்ச்சியாய்த் தலையில் தட்டிக் கொண்டேயிராவிடின் மெத்தனம் குடிபுகுந்து விடுமோ ?' என்ற முன்ஜாக்கிரதைகளுக்கு அவசியமில்லை என்ற நம்பிக்கையில் சற்றே  ரிலாக்ஸ் செய்திடலாமன்றோ ? 

உங்கள் ஒவ்வொருவரின் ஆக்கபூர்வமான பங்களிப்புகளுமே - காமிக்ஸ்களுக்கான அசாத்தியமான தூதர்கள் என்பதை ஈரோடு நிரூபித்து விட்டது ! உங்களிடம் உறையும் அந்த ஆற்றலை முன்வைத்து, தொடரும் காலங்களில் இந்தப் பயண வேகத்தை இன்னுமொரு உச்சத்துக்கு எடுத்துச் சென்றால் ‘விற்பனைச் சுணக்கம்‘ என்ற பேய் நம்மைப் பீடிக்காது! அல்லவா ? உங்களிடம் நான் வைக்கும் கோரிக்கைதனில்  எங்களது சுயநலம் நிச்சயமாய்க் கலந்துள்ளது தான் ! ஆனால் உங்கள் ஒவ்வொருவரின் சகாயமும்தானே இந்த வண்டியின் பெட்ரோலே - ஆரம்ப நாள் முதலாய் ? FB -ல் எழுதுங்கள் ; உங்களது காமிக்ஸ் வலைப்பதிவில் எழுதுங்கள் ; ஏதோவொரு ஆக்கபூர்வமான ரூபத்தில் காமிக்ஸ் பற்றிய சுவாரஸ்ய ஜுவாலை உயிர்ப்போடு தொடரட்டுமே ? 

 ஈரோட்டில் நாங்கள் கற்ற பாடங்களின் அத்தியாயம் 2 பற்றி இனி ! For that matter – கோவையிலும் அதே பாடத்தின் சாயல்களே என்றும் சொல்லலாம் ! இந்தாண்டின் ஜனவரியில் சென்னையில் மாமூலான புத்தக விழா நடந்திடாது போய் - இறுதி நிமிடத்தில் மாற்றாய் இன்னொரு விழா நடந்தது ; அப்புறமாய் ஜுனில் மறுபடியும் சென்னையில் ; ஆகஸ்ட் துவக்கத்தில் ஈரோட்டில் & இறுதியில கோவையில் புத்தகவிழாக்கள் என்று இந்தாண்டின் நமது விற்பனை pattern ரொம்பவே இப்படியும்-அப்படியுமானது ! முறையாகப் பார்த்தால் 50 title-கள் கைவசமுள்ள சமயம் கிட்டும் விற்பனைக்கும், 130+ title-கள் கைவசமுள்ள நேரங்களில் சாத்தியமாகிடக் கூடிய விற்பனைக்கும் நிச்சயமாய் ஒரு கணிசமான வேறுபாடு இருந்திட வேண்டுமல்லவா ? அத்தகைய கனவே எங்களிடமும் இருந்தது இந்தாண்டு ! நிறைய டெக்ஸ் கதைகள் ; சில பல ஸ்பெஷல் இதழ்கள் ; ஏகமாய் கார்ட்டூன்ஸ் ; கணிசமாய் மறுபதிப்புகள் என all round ரசனைகளுக்கு இதழ்கள் நம்மிடம் உள்ளன எனும்போது- விற்பனை நிச்சயமாய் முந்தைய நம்பர்களைத் தூக்கிச் சாப்பிடும் விதமாய் இருக்குமென்று எதிர்பார்த்தோம் ! ஆனால் அவை வெறும் கனவுகளாகவே இருந்து விட்டன ! ஒரு casual walk-in வாசகருக்கு உள்ளது ஒரு குறிப்பிட்ட பட்ஜெட் மாத்திரமே போலும் ; So நம்மிடம் எத்தனை ரகங்கள் குவிந்திருப்பினும் அவர் செலவிடப் போவது அந்த முன்தீர்மானிக்கப்பட்ட தொகையினை மட்டுமே தான் ! 10 டெக்ஸ் வில்லர் இதழ்கள்  உள்ளனவா ? அவற்றுள் முதல் பார்வைக்கு அவரைக் கவரும் இதழ் எதுவோ- அதுவே அவரது அந்நேரத்தையக் கொள்முதலாக இருந்திடுகிறது ! ஆக நமது கையிருப்பு ரகங்களின் எண்ணிக்கை உயர்வு - விற்பனை எண்ணிக்கையின் உயர்வாக உருமாற்றம் காண்பதில்லை என்பதே இந்த ஆண்டின் bookfair அனுபவ பாடம் ! ‘அட... இது தான் எனக்குத் தெரியுமே! இதை நான் முன்கூட்டியே யூகித்திருந்தேனே!‘ என்று நீங்கள் தடாலடி அடித்தால் நீங்களொரு அசாத்திய தீர்க்கதரிசியே ! ஆனால் ஒரு 20% விற்பனை உயர்வு கூட இராது, வழக்கமான அதே விற்பனைகள் மட்டும் தான் சாத்தியமாகும் என்று யூகம் நிச்சயமாய் எங்களிடம் இருந்திருக்கவில்லை ! அந்த மட்டிற்கு 2017-ன் அட்டவணைத் திட்டமிடலின் இறுதிக் கட்டத்திலுள்ள வேளையிலாவது இந்த விடியல் புலர்ந்ததே என்ற சந்தோஷம் எனக்கு ! ஆண்டின் “புத்தக விழா விற்பனைத் தொகை” என்று இனியொரு realistic பட்ஜெட்டைப் போட்டு விட்டு எனது திட்டமிடல்களை நான் முன்கொண்டு சென்றால் - அடுத்தாண்டிலாவது கையிருப்புக் குவியலின் கஷ்டங்கள் மட்டுப்படுமல்லவா?

கையிருப்புகள் பற்றிய topic தான் அத்தியாயம் # 3 – சமீபத்தையத் தற்செயலான நிகழ்வுகளில் ! நண்பர் காமிக் லவர் சமீபமாய் முன்வைத்திருந்த ஸ்டாக் நிலவரப் பட்டியல் துல்லியமானதல்ல ; சில இதழ்களில் 300 / 400 என்ற ரீதியிலேயே ஸ்டாக் உள்ளது & பலவற்றில் கூடுதலாக  ! So மொத்த எண்ணம் அத்தனை மெகா சைஸல்ல என்றாலும்- நிச்சயமாய் ஒரு கணிசமான / மிகக் கணிசமான ஸ்டாக் நம்மிடமுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை ! மொத்த மார்கெட்டில் வாங்கும் போது ஒரு கிலோ மாம்பழம் ரூ.225 ; அதே நேரம் 3 கிலோவாக வாங்கினால் கிலோ ரூ.150 என்று விலைகள் அமைவதுண்டு தானே ? நமது இதழ்களின் pricing–ல் உள்ள தத்துவமும் (!!!) அதுவே ! முறையான தேவைக்கு மட்டுமே உற்பத்தி செய்தால் ஸ்டாக் சேராது ; ஆனால் இதழ்களின் விலை உயரத்தில் நிற்கும் ! அந்த விலையை எட்டும் தூரத்திற்கும் கொணர வேண்டுமெனில் உற்பத்தி எண்ணிக்கையைக் கூடுதலாக்கி விட்டு - மிஞ்சிடும் கையிருப்பை ஓராண்டுக்குள் விற்றுக் கொள்ளலாமென்ற நம்பிக்கை கொண்டாக வேண்டும் ! நாம் செய்து வருவது option # 2 தான் ! இந்தாண்டின் புத்தக விழா விற்பனைகள் நாம் எதிர்பார்த்தபடிக்குக் கூடியிருப்பின் இதே பாணியைக் கண தயக்கமுமின்றித் தொடர்ந்திடுவோம் ! ஆனால் யதார்த்தம் அதுவல்ல எனும் போது - பிரிண்ட் ரன்னைக் குறைப்பது எனது தலை காக்கத் தலையாயப் பணியாகிறது ! அதற்காக இனிமேல் விலை ரூ.100 ; ரூ. 90 என்றிருக்கும் என்ற அச்சம் தேவையில்லை. தொடரும் 2017-ல் ரூ.75/- என்ற விலையில் – குறைவான பிரிண்ட்ரன்னில் தொடரவுள்ளோம் ! இது ஸ்டாக் சேரவிடாது தவிர்க்குமே தவிர - சத்தியமாய் தம்புடி இலாபம் ஈட்ட வழிதராது என்பது நிதரிசனம் ! (விலை கூடுதல் ; இதே வேலையை நான் செய்தால் சஸ்தாவாக வழங்கிடுவேன் ! என்று ஏற்கனவே வாட்சப்களில் முழங்கிடும் நண்பர்கள் மன்னிப்பார்களாக ! ஆனால்  எனது சீட்டில் ஒரு மாதம் அமர்ந்து விழிபிதுங்கச் செய்யும் செலவுகளை நிர்வாகம் செய்து பார்த்தால் வீர முழக்கங்கள் mute mode-க்குப் போய்விடும் சாத்தியங்கள் ஏகம் !) ஒட்டுமொத்தமாய் விலையை ஏற்றுகிறேன் என்று நமது வாசக வட்டத்தை இன்னமும் குறுகலாக்கிடுவதை விடவும்- இப்போதைக்கு லாபம் இல்லை- நஷ்டமுமில்லை என்ற நிலை தொடர்ந்தால் போதுமென்று தீர்மானித்துள்ளோம் ! இது நிச்சயமொரு தற்காலிகத் தீர்வே ; எப்பாடுபட்டேனும் 2017-ல் நமது விற்பனையினை உயர்த்த வழி தேடியாகவேண்டும் என்பது புரிகிறது ! So இங்கே உங்களது புரிதலும், கரிசனமும் எங்களுக்குக் கிட்டின் - நம்பிக்கையோடு பணியாற்றுவோம் ! இங்கே ஒரு கொசுறுச் சேதி ! இதுவரையிலான சந்தா ஆண்டுகளில் நடப்பாண்டே THE BEST என்று சொல்லலாம் - சந்தாக்களின் ஒட்டு மொத்த எண்ணிக்கையினில் ! ஜனவரி - பிப்ரவரி என சோர்வாகவே சந்தாச் சேர்க்கை நடந்தது போல் தோற்றம் தந்தாலும் - இறுதி நம்பரானது இதுவரைக்கும் நாம் பார்த்துள்ளதில் டாப் !! 2017-ன் சந்தாவினில் இன்னமுமொரு சிறு அதிகரிப்பாவது நிகழும் பட்சத்தில் - துவக்கமே டாப் கியரில் இருந்திடும் ! Fingers seriously crossed !!

தவிர, ஒரு எதிர்பாரா திக்கிலிருந்து கிட்டியுள்ளதொரு சன்னமான- ஆனால் அசாத்தியமான ஊக்குவிப்பு நமக்குப் பெரும் பலம் தந்துள்ளது - மனதளவிலாவது ! அது என்னவென்பதை உரிய வேளையில் தெரிவிக்கிறேன் ! ஆக 2017-ன் நமது திட்டமிடலின் ஒரு மேலோட்டமான, பூர்வாங்க அறிவிப்பு இதுவே ! ‘இது தேறாது... இதை அப்படிச் செய்திருக்க வேண்டும் ; விலை கூட்டினால் அடுத்த தலைமுறையை எட்டாது ;  எதிர்கால வாசகர்கள் மீது அக்கறை அவசியம்!‘ இத்யாதி... இத்யாதி என்ற விமர்சனங்களை இதற்குப் பின்தொடர்வாக அமைத்திடாது நண்பர்கள் எனக்குப் பணியாற்ற சுதந்திரம் நல்கினால் நிச்சயமாய் அழுத்தங்களின்றிப் பணியாற்றுவேன் ! தொடரும் தலைமுறை மீதும், காமிக்ஸ் எனும் ரசனை தொடர வேண்டியதன் அவசியம் மீதும் மிகுந்த அக்கறை நம்மிடமுள்ளது. ஆனால் ‘சுவர் இருந்தால் மட்டுமே சித்திரங்கள் சாத்தியம்‘ என்பதையும் ; இந்தக் கிழட்டுச் சுவரின் வலிமை என்னவென்பது பற்றியும் நன்றாகவே தெரிந்து வைத்திருப்பதால் சில கட்டாயத் தீர்மானங்கள் நிறைவேற்றும் அவசியங்கள் எழுகின்றன !

பிள்ளைகளுக்கு இது எட்டாது‘; ‘நிறைய வாசகர்களைப் போய்ச் சேர்ந்திட நடவடிக்கை எடுக்கத் தெரியாதா ?‘என்று  உங்களுக்குத் தோன்றலாம் தான் ! கண்ணில்படும் வினாக்களுக்கு என்னால் இயன்ற பதில்களைச் சொல்லிவிட்டு - நானுமே நகர்ந்திடுவேன் தான் ;  ஆனால் ஆங்காங்கே பதிவாகிக் கிடக்கும் உங்கள் சிந்தனைகள் - புது வாசகர்களின் மனதுகளில் ஏற்படுத்தக் கூடிய சலனங்கள் long term ! குட்டிக் கரணமே அடித்தாலும் கூட ; உலகின் தலையாய காமிக்ஸ் கதைகளைக் கொணர்ந்தால் கூட- மேலோட்டமான பராக்குப் பார்வைகளைத் தாண்டிய சுவாரஸ்யத்தை பொதுமக்களிடையே உண்டாக்க முடிவதில்லை என்பதைக் கடந்த சில நாட்களில் கண்கூடாய்ப் பார்த்து வருகிறோம் !! 

கோவைப் புத்தகவிழா நடைபெற்று வரும் கொடிசியா அரங்கின் இன்னொரு பாகத்தில் தினமலர் நடத்தும் வீட்டு உபயோகப் பொருட்களின் கண்காட்சி கடந்த வியாழன் முதல் நடைபெற்று வருகிறது. So அங்கே வருகை புரியும் மக்கள் குடும்பங்களோடு புத்தகவிழா அரங்கிற்குள்ளும் வலம் வருவதால் வியாழன் முதலே புத்தக அரங்கு நிரம்பி வழிகிறது. நமது ஸ்டாலிலும் சொல்லி மாளாக் கூட்டம்! ஆனால் இரவு 9 மணிக்கு அன்றன்றைய விற்பனைத் தொகைகளைக் கேட்கும் போது காதை ஒன்றுக்கு இரு முறைகள் குத்திவிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டி வருகிறது - காதில் விழுந்தது சரியான தொகை தானா ? என்ற சந்தேகத்தில்  ! ‘காமிக்ஸ்‘ எனும் ரசனை தயக்கத்தோடு அணுகப்பட வேண்டியதொரு ஜீவனாய் மட்டுமே இன்னமும், பெரும்பாலானோர்க்குத்  தொடர்வதால் - கண்முன்னே ஒரு வண்டிக் காமிக்ஸ் புத்தகங்கள் கலர் கலராய்த் தட்டுப்படும் போது கூட அவற்றை மெதுமெதுவாய்  முயற்சிக்க மட்டுமே மக்கள்  முனைப்புக் காட்டுகிறார்கள் ! கடந்த 4 நாட்களில் கோவையில் நமது ஸ்டாலுக்கு வந்து சென்ற மக்கள் எண்ணிக்கை ஒரு மெகா பட்ஜெட்டிலான விளம்பர campaign-ல் கிடைத்திருக்கக் கூடிய கவனத்தை விடவும் ஜாஸ்தியாக ஈர்த்துள்ளது ! அற்புதமானதொரு விளம்பரமாய் அது அமைந்துள்ள போதிலும், அந்த ஜனத்திரளானது 10% விற்பனைகளாகக் கூட உருமாற்றம் காணவில்லை ! அதே போல - FB -ல் நமது விளம்பரப் போஸ்ட்களை பூஸ்ட் செய்திட  ஓசையின்றி மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலவிட்டு வருகிறோம் -ஒரு வருஷமாய்  ! இதன் பலனாய் நமது பக்கத்துக்கு கிட்டியுள்ள லைக்ஸ் ஓராண்டினில் இருமடங்காகியுள்ளது ! ஆனால் அவை விற்பனையாக உருமாற்றம் கண்டபாடைக் காணோம் ! ஆன்லைன் விற்பனையில் இந்த ஓராண்டில் சொல்லிக்கொள்ளும் விதமாய் எந்தவொரு உயர்வும் இருந்திருக்கவில்லை - "தலையில்லாப் போராளி" யின் ஏப்ரலில், இந்த ஆகஸ்டில் நீங்கலாக ! 

So ‘காமிக்ஸ்‘ எனும் ரசனை ஒரு வெகுஜனத் தேர்வாகிட நிறையவே நேரமும் ; முயற்சியும் தேவைப்படும் போலும்! சிறு தயக்கத்தோடு மேலோட்டமாய் மாயாவி, லக்கி லூக் என்று வாங்கிச் சென்றுள்ள அனைவருமே நமது ஆன்லைன் ஸ்டோர்கள் பற்றியும்; சந்தாக்கள் பற்றியும் கேட்டுத் தெரிந்து சென்றுள்ளனர் ! ஒரே ராத்திரியில் நிகழாது போயினும்- சிறுகச் சிறுகப் புது இரத்தம் உட்புகுவதற்கு கதவுகள் மெல்லத் திறந்து வருகின்றன என்பது தான் கோவையில் பார்க்க முடிந்துள்ள silver lining. இவர்களுள் பெரும்பாலானோர் இன்றைய தலைமுறையினர் என்பதால், இயல்பான  அடுத்தகட்ட நிகழ்வாக FB-ல் ; இணையத்தில் ; பதிவுகளில் என காமிக்ஸ் தொடர்பான தேடல்களுக்குள் ஈடுபடுவர் என்று  எதிர்பார்க்கலாம் ! அவர்களை வரவேற்பது காமிக்ஸ் சார்ந்த அழகான விமர்சனங்கள் ; ஆரோக்கியமான விவாதங்கள் என்றிருக்கக் கூடிய பட்சத்தில் நிச்சமாய் ஆயுட்கால காமிக்ஸ் ஆர்வலர்களாய் அவர்கள் உருமாற்றம் காணும் சாத்தியங்கள் பிரகாசம் ! அதற்குப் பதிலாய் நையாண்டிகள் ; சிலபல ரௌத்திரங்களின் பலனாய் முன்வைக்கப்படும் சீற்றங்கள் ; நிறைகள் நூறு கண்ணில் பட்டாலும் - குறைகளை மட்டுமே பறைசாற்றுவேன் என்ற வைராக்கியங்கள் ; க்ரே மார்கெட் கூத்துகள் ; நமக்கிடையிலான ஈகோ மோதல்கள் என்ற சமாச்சாரங்கள் தாண்டவமாடின் - அதன் பலன் எவ்விதம் இருக்குமென்பதை யூகிக்கச் சிரமமிராது தானே ? நூறு பேரது கருத்துக்களும் ரசனைகளும் எல்லாத் தருணங்களிலும் ஒரே சாலையில் பயணிக்க வேண்டியது கட்டாயமல்ல ; ஆனால் அதன் பொருட்டு உருவாகும் கருத்து வேறுபாடுகளை ஒரு தொடர்கதையாகக் கொண்டு செல்லாது - நமது focus காமிக்ஸ் ரசனைகள் மீது மட்டுமே என்ற உறுதியோடு தொடர்ந்திட்டால் இங்கே உதயமாகும் வெளிச்சமும், பாசிட்டிவ் எனர்ஜியும் நமது பயணத்தை புல்லட் ரயில் வேகத்துக்குக் கொண்டு சென்றிடாதா?

4½ ஆண்டுகளுக்கு முன்பாய் நான் இந்தப் பதிவுகள் படலத்தைத் தொடங்கிய போது இரு விஷயங்களை எனக்குள் இருத்திக் கொண்டேன் ! எந்தவொரு சந்தர்ப்பத்திலும் (நமது) காமிக்ஸ் சார்ந்த விஷயங்களைத் தவிர்த்து வேறு சமாச்சாரங்கள் எதன் மீதிலும் இங்கே மையல் காட்டிட மாட்டேனென்பது விஷயம் # 1. அதே போல எந்தவொரு சூழலிலும் ‘கருத்து கந்தசாமியாக‘ மாறி அட்வைஸ் மழை பொழியும் அபத்தங்களைச் செய்திடக் கூடாதென்பது தீர்மானம் # 2 ஆக இருந்தது ! முதன் முறையாக ‘அட்வைஸ்‘ ஜாடையில் இந்தப் பதிவு அமைந்திருப்பதாய் உங்களுக்குத் தோன்றினால் - மன்னியுங்கள் நண்பர்களே, எனது நோக்கம் அதுவல்ல ! எப்போதும் போலவே உங்கள் தோள்களில் கைபோடும் உரிமையை எனதாக்கிக் கொள்ளும் ஆர்வத்தோடு என் மனதில் பட்ட விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள மட்டுமே நினைத்திருக்கிறேன் ! திறந்த மனதோடு இதனைப் படித்திருக்கும் பட்சத்தில் நிச்சயமாய் உங்களுக்குள் இறுக்கங்கள் ஏதும் நேர்ந்திருக்க வாய்ப்பிராது ; அதே நேரம் என் மீதான ஏதோவொரு எரிச்சலைப் பின்புலத்தில் தக்க வைத்துக் கொண்டே வாசித்திருப்பின் – ‘இவனென்ன பெரிய புண்ணாக்கா? காமிக்ஸைக் காப்பாற்ற வந்த தேவமகனா - எனக்கு யோசனை சொல்ல??!‘ என்ற உஷ்ணம் உற்பத்தியாகலாம் ! இரண்டாம் ரகத்தவராக நீங்கள் இருக்கும் பட்சத்தில் - இந்தப் பதிவின் துவக்க வரிகளை மட்டுமே மறுபடியும் என்னால் நினைவுகூர்ந்திடச் சொல்லிட முடியும்  - with my apologies of course ! 

காமிக்ஸ் வட்டமென்பது சிறுகச் சிறுக நாமாய்ப் பராமரித்து; நாமாய் நீரூற்றி ; களையெடுத்து ; உரமிட்டு வளர்த்திட வேண்டியதொரு செடி - நமது மார்க்கெட்டிலாவது ! அந்தச் செடிக்கு நம்மாலான பணிவிடைகளைச் செய்வோமே, ஏதோவொரு ரூபத்தில்  ? என்பது மட்டுமே  எனது கோரிக்கை ! இந்தச் சின்ன உலகில் நாம் வளர- தெரிந்தோ, தெரியாமலோ நாமே நமக்குத் தடை போட்டுக் கொள்ள வேண்டாமே - ப்ளீஸ் ? 

For sure - நமக்கு நாமே  !!

இங்கே நான் எழுதியுள்ள சமாச்சாரங்களில் கலாய்ப்சுக்கு ஏகமாய் மேட்டர் கிட்டிடலாம் தான் ; ஆனால் அதனில் கிடைக்கக்கூடிய அப்போதைய நகைப்புகளைத் தாண்டியும், நையாண்டி செய்த திருப்திகளைத் தாண்டியும் ஆத்மார்த்தமாய் ஏதேனும் செய்யும் அவா உங்களுக்கு எழுந்திட வாய்ப்புகள் எக்கச்சக்கம்  என்ற நம்பிக்கையிலேயே நிறைய எழுதியுள்ளேன் ! அந்த நம்பிக்கை மெய்யானால் - இனியெல்லாம் சுகமே ! பொய்யானால் - ஞாயிறு டிபனுக்கு மணக்க மணக்க தோசைகள் வார்க்கவொரு முதுகு தயார் - வழக்கம் போலவே ! மனதில் பட்டதை எழுதிட முனைந்துள்ளேன் ! வழியில் சிலபல கால்சுட்டுவிரல்களின்மீது நான் இடறியிருக்கக் கூடும் ; நாளைக்கு காலையில் எழுந்து இதே பதிவை இன்னொருமுறை வாசித்தால் - இன்னும் கொஞ்சம் மாற்றி எழுதியிருக்கலாமோ ? என்ற எண்ணம் தோன்றவும் கூடும் தான் ! ஆனால் மனதில்பட்டதை உங்களிடம் நகாசுகளின்றி இறக்கி வைத்த சின்னதொரு திருப்தி இப்போதைக்கு மிஞ்சுகிறது !  சொன்ன சமாச்சாரங்களிலோ ; சொன்ன விதத்திலோ குறைபாடுகள் இருப்பின் - முன்கூட்டிய கைகூப்பல் படங்கள் சிலபல ! புலரவுள்ள  பொழுதும், காத்துள்ள நாட்களும் 'ஒரு தோசைத் திருவிழாவாக' இல்லாது போக புனித மனிடோ அருள்புரிவாராக !! 

நீ-ண்-ட-தொ-ரு பதிவுக்கு இத்தோடு மங்களம் பாடி விட்டு ஒற்றை ரன்னில் (கிரிக்கெட்டில்) தோற்ற சோகத்தை விழுங்கச் சிரமப்பட்டுக் கொண்டே தூங்கப் செல்கிறேன்  ! ஜாலியான சிலபல புள்ளி விபரங்ககள் கைவசமுள்ளன - தொடரவிருக்கும் அடுத்த சில நாட்களின் உப பதிவினில் எழுதிட  ! Adios until then ! 

P.S : இம்மாத இதழ்கள் வரும் 31-ஆம் தேதி இங்கிருந்து கிளம்பிடும் - முதல் தேதியன்று உங்களுக்குச் சலாம் சொல்லிட ! 

And சந்தாவின் இரண்டாம் (இறுதியும்) தவணை செலுத்தியிருக்கா நண்பர்களுக்கு மீண்டுமொரு அவசர நினைவூட்டல் !! ப்ளீஸ் - இம்மாத இதழ்களை சுணக்கமின்றிப் பெற்றுக் கொள்ள உங்களின் பாக்கித் தொகைகளை உடனே அனுப்பிடலாமே ?