Sunday, January 17, 2016

மொக்கைக்கொரு மருந்து..!

நண்பர்களே,
            
வணக்கம். தமிழர் திருநாளின் உற்சாக வாரயிறுதியில் உங்களை நான் சந்திக்கவிருப்பது 2015-ன் மார்க் ஷீட்டோடு.! கடந்து சென்ற 12 மாதங்களை என் பார்வையில் ஏற்கனவே கடந்து விட்ட போதிலும் நிஜமான அலசல் உங்கள் தரப்பினதாக இருப்பது தானே பொருத்தம்? பரீட்சை எழுதியது நாங்கள்; திருத்துவது நீங்களெனும் போது நீங்கள் போடும் மார்க்குகள் தானே செல்லுபடியாகும்? So- இதோ வருகிறது வலைத்தளத்திலும், மின்னஞ்சல்களிலும், கடிதங்களிலும் கிட்டியுள்ள உங்கள் feedback-ன் சாராம்ஸம் :

கேள்வி # 1 : 2015-ன் Top 3 இதழ்கள் எவை?

‘Fairly easy!’ என்றே சொல்வேன்; ஏனெனில் நம் வரலாற்றினிலேயே (!!) ஒரு மறக்க இயலா முத்திரை பதித்த இதழான “மின்னும் மரணம்“ முழுத்தொகுப்பாக வெளிவந்தது இந்த 2015-ல் தானே? நான்கிலக்க விலைகளைத் தொட்டது ஒருபக்கமிருப்பினும் ஒரு ஹாலிவுட் blockbuster திரைப்படத்திற்கு நிகரான அந்தக் கதையினை ‘ஏக் தம்' தொகுப்பாய் பார்த்திட முடிந்த பரவசம் இந்த இதழையே சென்றாண்டின் undisputed # 1 ஆக தேர்வாகச் செய்துள்ளது! ‘மறுபதிப்பு தானே..?; கடைசி பாகம் நீங்கலாக பாக்கிக் கதைகள் சகலமும் ஏற்கனவே நாம் படித்தது தானே?‘ என்ற விமர்சனம் தலைதூக்கலாம் தான்; ஆனால் for the sheer intensity of the adventure – இந்த ஒரு முறை மட்டும் (நம்) விதிமுறைகளை சற்றே தளர்த்திடல் தெய்வ குற்றமாகிவிடாதல்லவா? So- 2015-ன் pole position – கேப்டன் டைகரின் “மின்னும் மரணம் The Complete Sagaவிற்கே!

இரண்டாமிடத்துக்கான போட்டி நிஜமான இரு மேற்கத்திய ஜாம்பவான்களுக்கி்டையே! ஆண்டின் துவக்கத்திலேயே அறிமுகமான `பௌன்சர்‘ ஒரு பக்கமெனில் வருடத்தின் இரண்டாம் பாதியைத் தனதாக்கிக் கொண்ட நமது இரவுக் கழுகார் மறுபக்கம் ! நேருக்கு நேர் மோதிக் கொண்ட இந்த இரு heavy weights-ம் பாணிகளில் எதிரெதிர் துருவங்கள் என்பதில் சந்தேகமில்லை ! டெக்ஸின் கதைகள் எப்போதுமே squeaky clean; துளியும் விரசமோ, ஆபாசமோ இவர் பக்கமாய் தலைவைத்துக் கூடப் படுப்பதில்லை! ஆனால் ஒற்றைக்கரத்தாரோ இதுநாள் வரைக்கும் நாம் அஞ்சி, ஒதுங்கி நின்ற அத்தனை சமாச்சாரங்களுக்கும் தெனாவட்டான பிரதிநிதியாகக் காட்சி தந்தது நிஜமே! முதுகுத் தண்டில் சலசலப்பை உண்டாக்கும் வன்முறை; ‘just like that’ அரங்கேறிடும் அடல்ட்ஸ் ஒன்லி சங்கதிகள்; வக்கிரமான கதை மனிதர்கள் என ‘பௌன்சர்‘ எல்லா வகைகளிலுமே ஒரு ‘அழுக்கு மனிதனே‘! ஆனால் அத்தனை விமர்சனங்களையும் மீறி- சொரோவ்ஸ்கியின் இந்த ஆக்கத்திலொரு அனலடிக்கும் வசீகரம் குடியிப்பதை நம்மில் யாரும் மறுக்கவில்லை என்பதே 2015-ன் ஆச்சர்யங்களுள் தலையாயது! ‘ரௌத்திரம் பழகு‘ ஒரு அதிரடி ஆரம்பமெனில் தொடர்ந்த ‘சர்ப்பங்களின் சாபம்& கறுப்பு விதவை‘ நமது இதுநாள்வரையிலான கட்டுப்பெட்டித்தனங்களை சம்மட்டியால் போட்டுத் தாக்கிய ஆல்பம்களாய் அமைந்து போயின! So- டெக்ஸின் ‘ஓக்லஹோமா;பிரம்மன் மறந்த பிரதேசம்;எமனின் வாசலில் போன்ற டாப் சாகஸங்கள் 2015-ன் லிஸ்டில் இருந்தபோதிலும் பௌன்சரிடமுள்ள அந்த ‘X-factor’ – தராசின் முள்ளை அவர் பக்கமாய் சாய்க்கும் சக்தியுள்ளதைப் புரிந்து கொள்ள முடிகிறது ! 2015-ன் Top Title # 2 ? என்ற கேள்விக்கு ‘பௌன்சர்‘ என்று உங்களில் பலரும் பொதுவான பதில் தந்துள்ள போதிலும் ‘சர்ப்பங்களின் சாபம்‘ என குறிப்பிட்டு எழுதியுள்ள நண்பர்களும் கணிசம்! So- மேற்கின் வக்கிர முகத்தின் காமிக்ஸ் பிரதிநிதியாய் வலம் வந்திருக்கும் பௌன்சரின் ஆல்பம்கள் 3 & 4 இணைந்த (நமது) இதழான ‘சர்ப்பங்களின் சாபம்‘ வெள்ளிப் பதக்கத்தை ஆட்டையைப் போடுகின்றது!

வெண்கலப் பதக்கத்திற்கான போட்டிக்கு அவசியமே ஏது?‘ என்ற ரீதியில் நமது இரவுக்கழுகாரின் மும்முனைத் தாக்குதலைத் தாங்கி வந்த The Lion 250இதழைத் தேர்வு செய்துள்ளீர்கள்! No surprises indeed ! வண்ணத்தில் 3 கதைகள்; அவற்றுள் 2 blockbusters ; ‘தல‘யின் அதகள அதிரடிகள்; ஹார்ட்கவர் பைண்டிங் என நிறைவாக அமைந்து போன இந்த இதழை 2015-ன் டாப் 3க்குள் நுழைத்துள்ளீர்கள்!

முதல் 3 இதழ்களின் தேர்வுகளை உங்கள் ரசனைகளின் வெளிப்பாடாய் மட்டும் பார்த்திடாமல் - வரிகளுக்கு மத்தியில் புதைந்து கிடக்கும் சேதிகளையும் சொல்லும் பட்சிகளாகவும் பார்க்க முடிந்தது! அவற்றுள் நான் கிரகித்த சிற்சில விஷயங்கள் பின்வருமாறு!

§ என்ன தான் நாயகர்களை நாம் சிலாகித்தும், கொண்டாடியும் வந்தாலும் வலுவான கதைக்களங்கள் அமையும் போது மாத்திரமே அவர்கள் விஸ்வரூபம் எடுக்க சாத்தியமாகிறது! 2015-ன் Top 3 தேர்வுகளிலும் இத்தனை powerful storylines இல்லாது போயின் இந்த வெற்றிகள் நிச்சயம் சாத்தியமாயிராது!
§  காலமாய் ஒரு கூட்டுக்குள் குடிகொண்டிருந்த நமது ரசனைகள் இன்றைக்கு நிறைய தளைகளைத் தகர்த்து விட்டு விசாலமான வெளிகளை நாடுவதும் பௌன்சரின் வெற்றி மூலமாய்ப் புரிந்திட முடிந்தது! புதியதொரு தலைமுறை அத்தனை சுலபமாய் shock ஆவதுமில்லை; எதையும் சுலபமாய் எடுத்துக் கொள்வதும் அவர்களுக்குச் சிரமமில்லை எனும் போது, நம் பயணத்திற்கு பௌன்சர் கொணர்ந்திருக்கும் ஒரு சிந்தனை மாற்றம் சாதாரண ரகத்திலானதல்ல! சில வருடங்களுக்கு முன்பாக சற்றே முதிர்ந்த ரசனைகளுக்கு மாத்திரமே லாயக்குப்படுமென்று நாம் ஓரம்கட்டிய ‘ஜேஸன் பிரைஸ்‘ இன்றைக்கு நமது ரெகுலர் அட்டவணைக்குள் அடியெடுத்து வைத்தல் சாத்தியமாகிறதென்றால் அது பௌன்சர் உண்டாக்கியுள்ள தாக்கதின் பலனே!
§    ராக்கெட் விஞ்ஞானியாக நானிருத்தல் தேவையில்லை தான்; ஆனால் தொடர்ச்சியாய் சில ஆண்டுகளாகவே ‘ஸ்கோர்‘ செய்து வருவது ‘குண்டூஸ்‘ புத்தகங்களே என்பதும் இங்கே வெளிச்சத்துக்கு வரும் சேதி! ஒரு நீ-ண்-ட கதையையோ; புஷ்டியானதொரு இதழையோ படித்திடும் / ரசித்திடும் அனுபவமே அலாதி என்பதை இன்னொரு முறை அழுத்தமாய் பதிவு செய்துள்ளீர்கள்! ஆனால் 2016-ல் அதற்கான வாய்ப்புகள் அத்தனை அகப்படவில்லை என்பதோடு, சந்தாவில் கட்டணங்களைக் கட்டுக்குள் வைத்திருக்க அவசியப்படும் நிர்பந்தங்களும் இந்த ‘குண்டூஸ்‘ ஆசையினை சற்றே நீர்த்துப் போகச் செய்கின்றன! May be 2017ல் ஏதாவது landmarkகள் நம்மை எதிர்நோக்கியிருப்பின் அங்கே இந்த குண்டுப் பார்ட்டிகளை இறக்கி விட்டுப் பார்க்கலாமோ?
§  And எப்போதும் போலவே டாப் 3 நாயகர்களும், வன்மேற்கின் பிரதிநிதிகளே என்பதைப் பார்த்திடும் போது நமது ரசனைகள் குதிரைப் பசங்கள் திசையில் தீர்க்கமாய்த் திரும்பி நிலைகொண்டுவிட்டதா ?    அல்லது இதர genre களின் தரங்கள் கீழே சென்று விட்டனவா என்பது கேள்விக்குறியே! But இந்த நடப்பாண்டில் கார்ட்டூன் கோட்டா வலுவாக உள்ளதால் கௌ-பாய்களுக்கு நமது கிச்சு கிச்சு நாயகர்கள் சவால் விடுவார்களா என்பதைப் பொறுத்திருந்தே பார்த்திட வேண்டும்!

கேள்வி # 2 : 2015-ன் Top 3 மொக்கைப் பீஸ்கள்?

ஏகோபித்த தேர்வாய் டிக் வாங்குவது ‘விடுதலையே உன் விலையென்ன?‘ தான்!! இந்தக் கதைத்தேர்வின் பின்னணி பற்றி ஏற்கனவே நிறைய எழுதிவிட்டதால் அதே மாவை மறுபடியும் கிரைண்டரில் போடுவானேன்? நிறைய எதிர்பார்ப்போடு களமிறக்கிவிடும் கதைகள் இது போல அட்டகாசமாய் சொதப்பிடும் போது ரொம்பவே தர்மசங்கடமாயுள்ளது!

And உப்மா # 2 என்ற ‘பரிசை‘ லபக்கிச் செல்வதும் 2015ன் புதுவரவான ‘Lady Spitfire‘! அழகான சித்திரங்கள்; (எனக்குப்) பிடித்தமானதொரு யுத்தக் கதைக்களம் என்றிருந்தும் விண்ணில் ஒரு வேங்கை‘ தரையை விட்டு அகலவில்லை என்பதே நிதர்சனம்! 

சந்தா செலுத்தியுள்ள நண்பர்களை வம்படியாய் இது போன்ற “நொந்து நூடுல்ஸாகிடும் அனுபவங்களுக்குள்“ பயணிக்கச் செய்வதை சங்கடத்தோடே பார்க்கிறேன்! கடைகளில் வாங்கிடும் நண்பர்களாவது விமர்சனங்களை படித்து விட்டு எதை வாங்குவது? எதைத் தவிர்ப்பது?‘ என்ற சுதந்திரத்தோடு செயல்பட முடிந்திடலாம்! ஆனால் சந்தாதாரர்களுக்கு அந்தச் சுதந்திரம் கிடையாதெனும் போது விதியை நொந்து கொள்வதைத் தாண்டி அவர்கள் செய்திடக் கூடியது வேறெதுவும் இருக்க முடியாதென்பது புரிகிறது! So- 2015ன் இரு மொக்கைப் பீஸ்களை சகித்துக் கொண்ட அந்தப் பெருந்தன்மைக்குச் சின்னதொரு ஈடாய் நடப்பாண்டில் சிக் பில்லின் நிழல் 1 நிஜம் 2முழு வண்ண மறுபதிப்பை சந்தாதாரர்களுக்கு மட்டும் நம் அன்பளிப்பாய் வழங்கிடத் தீர்மானித்துள்ளேன்! சந்தாவினில் அங்கமாக இல்லா நண்பர்கள் (தேவையெனில்) இதனை நம்மிடமிருந்துவாங்கிக் கொள்ளலாம்! இனி வரும் காலங்களில் கதைத் தேர்வுகளில் கூடுதல் கவனம் செலுத்த எங்களுக்கொரு நினைவூட்டலாகவும்;சந்தா கட்டினால் சிரத்துக்கு ஆபத்தென்று‘ எண்ணிடும் நண்பர்களுக்கொரு சிறு சமாதானமாயும் இது அமைந்திட்டால் சந்தோஷமே! ‘நிழல் 1நிஜம் 2'‘ மே மாதம் வந்திடும்!

 
மொக்கை பீஸ் of the year – மூன்றாமிடத்திற்குக் கடுமையான போட்டி ரோஜரின் மஞ்சள் நிழல் இதழுக்கும், வானமே எங்கள் வீதியின் மூன்றாம் பாகமான “பாதைகளும், பயணங்களும்“ இதழ்களுக்கிடையே தான்! ஆண்டுதோறும் கடைசி பென்ச்சின் மாணாக்கர் பட்டியலில் நமது ரோஜரார் இடம்பிடித்து வருவது நெருடலான விஷயமே! இம்முறை “மஞ்சள் நிழல்“ அத்தனை பாடாவதியல்ல என்று எனக்குப்பட்டது; ஆனால் உங்களில் பலரும் மாற்றுக் கருத்தை வெளிப்படுத்தியுள்ளது தான் சங்கடமே! ஆனால் “மஞ்சள் நிழலையும்“ விட ரணமாக்கியது “பாதைகளும்... பயணங்களும்“ தான் என்று சொன்னோரின் எண்ணிக்கை ஜாஸ்தியென்பதால் அந்த dubious distinction பெற்றிடுவது “பா.ப.“ இதழே! Phew!

கேள்வி # 3 : 2015-ன் Top அட்டைப்படம்?
     
நிஜமாகவே சிரமமான தேர்வுக்களம் simply becos 2015-ல் நமது அட்டைப்படத் தரம் நிஜமான முன்னேற்றம் கண்டிருந்தது நிதர்சனம்! மறுபதிப்புகளைக் கணக்கில் சேர்த்திடாது பார்த்தால் ஆண்டில் ஏழே இதழ்களுக்கு மட்டுமே நமது ஓவியர் சித்திரங்கள் போட்டுள்ளார்! பாக்கியனைத்தும் ஒரிஜினல்களின் தழுவல்களே! So- இந்த அட்டைப்படத் தர ஏற்றத்திற்காக நாம் ஒரேயடியாய்க் காலரைத் தூக்கி விட்டுக் கொள்வது முறையாகாது என்றாலும். ஒரிஜினல்களை மெருகூட்டும் போது அவர்களையே நம்மவர்கள் மிஞ்சிய தருணங்களும் இல்லாதில்லை தான்! 2015-ன் பெஸ்ட் அட்டைப்படம் என்ற கோப்பையை நீங்கள் வழங்கியிருப்பது கீழ்க்கண்ட இதழ்களுக்கே :    
§         சைத்தான் துறைமுகம்
§         சீற்றத்தின் நிறம் சிகப்பு
§         சாத்வீகமாய் ஒரு சிங்கம்



இந்த மூன்றுக்குமே ஓவியப் பணியாற்றியது ஹெர்மென் தான் என்பதால் மூன்றுமே அவரது மழலைகள் என்ற காரணத்தினால் பரிசைப் பகிர்ந்திடுவதில் தப்பில்லை என்று நினைத்தேன்! What say folks?


4. கேள்வி # 4 : 2015-ன் worst அட்டைப்படம்?

இந்தக் கேள்விக்கான பதில் நிஜமாகவே என்னை மண்டையைச் சொரியச் செய்தது! ஓவியர் வில்லியம் வான்ஸின் க்ளாசிக் அட்டைப்படச் சித்திரமே நமது ‘மஞ்சள் நிழல்‘ இதழின் ராப்பர்! அதனில் கதையின் பெயர், நமது லோகோ போன்றவற்றைப் பதித்ததைத் தாண்டி நாமும் கை வைக்கவில்லை! ஆனால் 2015-ன் செம டொக்கு ராப்பராக இதனையே நண்பர்களில் பெரும்பான்மை தேர்வு செய்திருப்பது ஏனென்பது நிஜமாய் புரியவில்லை!

5. 2015-ன் மறக்க இயலாத் தருணம்?
     
சுலபமான கேள்வியே! ஈரோட்டுப் புத்தகவிழாவும் தொடர்ந்த வாசகர் சந்திப்பும் செம ஜாலி அனுபவங்களாய் அமைந்திருப்பினும் நேரில் சந்திக்க வாய்ப்புக் கிட்டா நண்பர்கள் அனைவருக்குமே ‘மின்னும் மரணம்‘ இதழினை டப்பாவிலிருந்து உடைத்துக் கையில் ஏந்திய அனுபவத்தின் பரவசம் 2015-ன் பிரதானத் தருணமாக அமைந்திருப்பது புரிகிறது! இது போன்றதொரு இதழை வெளியிடும் வேளை இனி புலரக் காத்திருப்பது எந்த மாமாங்கத்திலோ எனும் போது இந்த மைல்கல் தருணத்தின் முக்கியத்துவம் இன்னமும் பன்மடங்காகிறது! அப்படியே இன்னுமொரு மெகாாா இதழ் உருவாகிடும் நாளே மலர்ந்தால் கூட முதலாவதைக் கோட்டைக் கடந்த சந்தோஷத்தை தொடர்ந்து வருபவர் அனுபவிக்க முடியாது தானே?

6. 2015-ல் முத்திரை பதித்த நாயகர் யார்?

திரும்பவும் ஒரு நேருக்கு நேர் மோதல் இம்முறை பௌன்சருக்கும், தோர்கலுக்கும் இடையில்! ஆண்டின் துவக்கத்தின் போது ‘பௌன்சர்‘ என்ற பெயர் கிரிக்கெட் ஆடுகளத்தினில் மூஞ்சைப் பதம் பார்க்கும் பந்தாகவும்;தோர்கல்‘ என்ற பெயர் சுமாரான விட்டலாச்சார்யா ரகக் கதைகளில் தலைகாட்டுமொரு பரட்டைத் தலைப்பையனாகவம் மட்டுமே நமக்கும் தெரியும்! ஆனால் 2015-ன் இறுதியில் ‘பௌன்சர் என்ற பதத்தின் பரிமாணமே வேறாகிப் போனது மட்டுமன்றி தோர்கல்‘ என்ற நாமகரணத்திற்கொரு புது கம்பீரமும், வீரியமும் உருவாகியிருப்பது நிஜமல்லவா? இந்தாண்டின் ‘டாப் நாயகர்‘ என்ற கௌரவத்திற்கு இருவருமே தகுதியானவர்கள் என்றாலும் தோர்கலே‘ உங்களது வாக்குகளை அதிகம் பெற்றுள்ளார்! So- 2015ன் டாப் நாயகர் ஆரிசியாவின் மணாளனே! ஒரு விதத்தில் பார்த்தால் உங்களின் இந்தத் தேர்வின் பின்னணியில் லாஜிக் நிறையவே உள்ளது; ஏனெனில் ஏழெட்டு ஆல்பங்கள் கொண்ட பௌன்சரின் ராஜ்யம் அத்தனை விசாலமானதல்ல. ஆனால் தோர்கலோ 1977 முதல் இன்று வரையிலும் கடந்து சென்றிருக்கும் பாதை பிரமாண்டமானதெனும் போது வான் ஹாம்மேயின் இந்தப் படைப்பிற்கு உரிய அங்கீகாரம் வழங்கியது spot on!

கேள்வி # 7 : 2015-ல் அதிகம் ஏமாற்றமளித்த இதழ் எது?
     
Top 3 மொக்கை பீஸ்கள்‘ பற்றிய கேள்வியும், இந்தக் கேள்வியும் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளதால் பெரும்பாலான நண்பர்கள் இதற்கு பதிலளிக்க மெனக்கெடவில்லை! So நாமும் இதனைக் கடந்து செல்வது தான் வழி!

கேள்வி # 8 : கௌ-பாய் இதழ்கள் திகட்டவில்லையா?
            
இந்த பயம் எனக்கு அவ்வப்போது தலைதூக்குவது உண்டு தான்; ஆனாலும் தொடர்ந்து தொப்பிக்காரத் தம்பிகளைத் தேடியலைவதை நான் கைவிடுவதில்லை தான்! நீங்களும் ஆண்டுதோறும் இந்தத் தங்கக்கம்பிகளை ரசிப்பதில் துளியும் ஆர்வக் குறைவினைக் காட்டுவதில்லை! 2015ன் Top 3 இதழ்களுமே கௌ-பாய் கதைகளே எனும் போது என் கேள்விக்குப் பின்புலமே இல்லாது போகிறது! Cowboys are still Kings!

9. 2015-ன் Best அறிமுகம்?

“அறிமுகம்“ என்று பார்த்தால் 2015-ல் புதுவரவுகளாய் தலைகாட்டியோர் பட்டியல் இதோ :
§         பௌன்சர்
§         லேடி ஸ்பிட் ஃபயர்
§         கர்னல் க்ளிப்டன்
§         ஸ்மர்ஃப்
§         லியனார்டோ தாத்தா
‘லேடி ஸ்பிட் ஃபயர்‘ போட்டிக்கு முன்பாகவே வீட்டுக்கு அனுப்பப்பட்டதால் அவரைக் கணக்கில் சேர்ப்பதில் பிரயோஜனமில்லை! And லியனார்டோ தாத்தா கூட குட்டிக் குட்டி gag தொகுப்பின் நாயகரென்பதால் அவரை 50-50 என்ற விகிதத்தில் தான் ரசிக்க முடிந்துள்ளது உங்களில் நிறைய பேருக்கு! எஞ்சி நிற்கும் மூவருள் ‘பௌன்சர்‘ பெற்ற வாக்குகளுக்குச் சளைக்காது நமது கார்ட்டூன் பிரதிநிதிகளும் ‘ஸ்கோர்‘ செய்துள்ளனர்! ஆனால் ரொம்ப நுணுக்கமாய் பார்க்கும் போது கர்னல் க்ளிப்டனுக்கு விழுந்துள்ள மார்க்குகள் தான் ஜாஸ்தி! என்றோவொரு மாமாங்கத்தில் இவர் நமது மினி லயனில் ஒரேயொரு சாகஸத்தில் தலைகாட்டியுள்ள போதிலும் அவரது வண்ண அவதாரம் ஒரு புத்தம் புதிய பரிமாணம் என்றே சொல்லலாம்! So- கேரட் மீசைக்காரரை 2015-ன் டாப் அறிமுகமாய் நீங்கள் தேர்வு செய்துள்ளதில் எனக்கும் சூப்பர் குஷி! And a close second were THE SMURFS !! 

10. என்ன குறைகிறதென்று பட்டது 2015-ல்?
     
இங்கும் கிட்டத்தட்ட ஏகோபித்த பதில்கள்! முன்பெல்லாம் தடுக்கி விழுந்தால் “துப்பறியும் சிங்கங்கள்“ மீதே விழுந்தாக வேண்டுமென்ற நிலை தற்சமயம் அடியோடு ாறியிருப்பது குறித்து நண்பர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்! C.I.D. ராபின்; ரிப்போர்ட்டர் ஜானி நீங்கலாய் ‘டிடெக்டிவ்‘ என்ற பதத்திற்குப் பெருமை சேர்க்கும் ஆசாமிகள் நம்மிடம் அதிகமில்லை என்பதை மறுக்க இயலாது தான்! இந்த flavour மாத்திரம் இன்னும் சற்றே தூக்கலாகயிருப்பின் இன்னும் சிறப்பாகயிருக்குமென்பதே உங்களின் opinion! சிந்திப்போம் இது தொடர்பாய்!!

கேள்வி # 11 : 2015-ன் overall அனுபவம் எப்படி?

முன்னேற்றத்திற்கு நிறையவே வாய்ப்பிருப்பதைச் சுட்டிக் காட்டியுள்ள அதே மூச்சில் இந்த 2015-ன் வாசிப்பு அனுபவத்தை நிறைவாகப் பாராட்டியுள்ளீர்கள் guys! காமிக்ஸ் தாகம் தீர்ந்திட ‘வாராதோ ஓர் விடியலே?‘ என நீங்கள் காத்திருந்த நாட்கள் காலாவதியாகிட ‘தங்கம் தேடிய சிங்கமாய்‘ நமது லயனும், முத்துவும் செயல்படுவதை 2015 வலியுறுத்தியுள்ளதைக் கனிவாகச் சிலாகித்துள்ளமைக்கு thanks a ton! 2015ன் குறைகளைக் களைந்து; நிறைகளை இன்னமும் விசாலமாக்கிட வரும் நாட்கள் உதவுமென்று நம்புவோம்!

பின்னோக்கிய படலம் இத்தோடு இனிதே நிறைவாகிட  -   நிகழ்காலத்துக்குத் திரும்பிடுவோமா ? இதோ - பிப்ரவரியில் காத்திருக்கும் அடுத்த கௌபாயின் அட்டைப்படப் preview !! இவரோ - நமது ஒல்லிப் பிச்சான் காமெடிக்காரர் என்பதால் - இங்கே கேட்கும் வெடிச் சத்தம் சிரிப்பு வெடிகளின் ஓசையாகவே இருந்திடும் ! "ஒரு பட்டாப் போட்டி" - ஒரிஜினல் முன் + பின் அட்டைகளின் அக்மார்க் நகல்களே ! ஒரிஜினல்களே சூப்பராக இருந்தபடியால் அவற்றில் நமது திருக்கரங்களைப் பிரயோகிக்கும் அவசியம் தோன்றவில்லை ! நாம் ஏற்கனவே டெக்சின் "ஒக்லஹோமா " சாகசத்தில் படித்து  ரசித்த அதே குடியேற்ற நிகழ்வின் கார்ட்டூன் பாணியிலான பார்வை இது ! அழகான சித்திரங்கள், ரம்யமான வண்ணக் கலவைகள் கொண்ட இந்த இதழ் ஏற்கனவே அச்சாகி விட்டது ; கையில் வண்ணப் பக்கங்களை வைத்து ரசிக்கும் போது அட்டகாசமாய்த் தோன்றியது எனக்கு ! நமது 'மக்கன்பேடா நண்பரை' நிச்சயமாய் உற்சாகத்தில் துள்ளச் செய்யப் போகும் இதழிது !

கிளம்பும் முன்பாக - பட்டையைக் கிளப்பும் ஒரு சேதியும் கூட !! ஒரு சில நாட்களுக்கு முன்பாய் சென்னையில் துவங்கியுள்ள  "பொங்கல் புத்தக   விழா"வினில்  எவ்வித வரவேற்பை எதிர்பார்ப்பதென்ற யூகங்களின்றியே இருந்தோம் ! வழக்கமாய் நடந்திடும் ஜனவரி புத்தக விழா அளவில் பன்மடங்கு பிரம்மாண்டமானது (750 ஸ்டால்கள் !!) ; ஆனால் இந்த விழாவிலோ 208 ஸ்டால்கள் மாத்திரமே என்ற போது - மக்களின் வரவேற்பு பற்றி பெரியதொரு கற்பனைகளை நாம் வளர்த்துக் கொள்ளவில்லை தான் ! ஆனால் ஜனவரிக்கும், சென்னைக்கும், புத்தகங்களுக்கும் இடையே கடந்த 40 ஆண்டுகளாய் ஏற்பட்டுப் போயுள்ளதொரு பந்தம்  - மழையாலோ ; வெள்ளத்தாலோ மட்டுப்படப் போவதில்லை என்பதை தீர்க்கமாய்ப் புரிந்து கொள்ள கடந்த சில நாட்களொரு வாய்ப்பாக அமைந்து போயுள்ளது ! அட்டகாசமான ஜனத்திரள்   ; அழகான விற்பனைகள் என அரங்கில் அனைத்துப் பதிப்பகங்களும் சந்தோஷத்தில் திளைத்திருக்க - நமக்கும் சூப்பர் -டூப்பர் வரவேற்பு !! நமது ஸ்டாலின் இடமும் அருமையாய் அமைந்திட - பொங்கலன்றும், நேற்றும் நம்மவர்கள் திணறிப் போய்விட்டனர் பொங்கிய மக்கள் வெள்ளத்தை சமாளித்திட ! விற்பனை தொகைகளில்  BAPASI-ன் ஜனவரி விழா முற்றிலும் வேறொரு league என்பதால் அந்தத் தொகைகள் (இதுவரையிலும்) சாத்தியமாகிடவில்லை தான் - ஆனால் கடந்த 2 நாட்களின் வேகமும், விறுவிறுப்பும் தொடரும் நாட்களிலும் தொடரும் பட்சத்தில் - தமிழ் பதிப்பக உலகில் ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின்பாக புன்னகைகள் சரளமாய்ப் புழங்கத் தொடங்கியிருக்கும் !! And நமது ஸ்டால்களில் ஒரு போட்டியே நடக்கிறது - bestseller என்ற பட்டத்தைத் தட்டிச் செல்ல !! "நயாகராவில் மாயாவி" இன்னமும் வண்டி வண்டியாய் விற்பனையாகி வர - நம் இரவுக்கழுகாரின் "நில்..கவனி..சுடு !" & "சட்டத்துக்கொரு சவக்குழி" இன்னொரு பக்கம் அதகளம் செய்து வருகின்றன !! டெக்சின் விற்பனை கோணத்தினில் பார்த்திட்டால் - "நில்..கவனி..சுடு.." ஒரு all time high என்று சொல்லலாம் ! மூன்றாவது தரப்பிலோ - கார்ட்டூன் இதழ்கள் பின்னிப் பெடலேடுத்தும் வருகின்றன !! லக்கி லூக் எப்போதும் போல அனல் பறக்கச் செய்ய, SMURFS இதழுக்கும் அமோக வரவேற்பு ! நடப்பாண்டில் நமது அட்டவணையினில் ஒரு கார்டூன் தனித்தடம் அமைந்திருப்பதால் தொடரும் புத்தக விழாக்காலங்களில் நம்மிடம் கார்ட்டூன் ஆல்பங்கள் கணிசமாகவே இருந்திடும் என்ற நினைப்பே ஜில்லென்று உள்ளது ! 

அடுத்த ஞாயிறு வரைக்கும் நடக்கவுள்ள இந்த விழாவினை வாஞ்சையோடு நாம் நினைவு கொண்டிட நிச்சயமாய்  சூழல்கள் அமைந்திடுமென்ற நம்பிக்கையோடு இரவு மூன்றரைக்கு மட்டுப்பட்ட எனது தூக்கத்தைத் தொடரச் செல்கிறேன் !! Have a wonderful Sunday folks !! See you around soon...bye for now !! 

Sunday, January 10, 2016

தெறிக்க விடுவோமா...?

நண்பர்களே,
            
வணக்கம். ‘A job well begun is half done !என்ற சிந்தனை மட்டும் நிஜமாக இருந்திடும் பட்சத்தில் இந்தாண்டு நமக்கொரு அமர்க்களப் பொழுதாக அமைந்திடப் போவது சர்வ நிச்சயம்!  ஜனவரியின் இதழ்கள் எல்லாமே அழகாய் அமைந்து போனதையும், அவற்றிற்குக் கிட்டிய ரம்யமான வரவேற்பைப் பற்றியுமே நான் குறிப்பிடுகிறேன் என்பதை யூகம் பண்ண ராக்கெட் விஞ்ஞான ஞானம் நமக்குத் தேவையில்லை தானே?! மாதம் 4 இதழ்கள் எனும் போது – அவற்றுள் ஏதாவது ஒன்றோ, இரண்டோ கோட்டை விடுவது அவ்வப்போதைய நடைமுறைகள் என்பதை மறுப்பதற்கில்லை! So இந்தாண்டின் திட்டமிடலைத் துவக்கிய போது நான் முக்கியமெனக் கருதியது 3 விஷயங்களை!

விஷயம் # 1 : ‘ஒவ்வொரு முகத்திலும் ஒரு சந்தோஷப் புன்னகை என்ற tagline-ஐ வெறும் அலங்கார வார்த்தைகளாகக் கருதிடாமல்  - நடைமுறையில் அதனை நிஜமாக்கிட வேண்டுமென்பது எங்களது முதல் லட்சியமாக முன்நின்றது!

விஷயம் # 2 : Consistency!! ஒரு மாதம் அழகான கதைக்குவியல்கள் & மறு மாதம் சுமாரான படைப்புகள் என்று அமைந்திடும் போது – ஆறுவழிச் சாலையில் வேகத்தடை இருப்பது போலாகி விடுவதை இம்முறை எப்படியாவது தவிர்க்க வேண்டுமென்பதும் எங்களது கனவு!

விஷயம் # 3 : நோ விஷப் பரீட்சைகள்!! வித்தியாசமான கதைகள்; பரீட்சார்த்த முயற்சிகள்; கனமான களங்கள் என சகலத்தையும மெயின் தடத்தில் ஏற்றி விடும் வேலை நிச்சயமாய் கூடாது என்பதே எங்கள் அவா # 3 ! அவற்றை ரசிக்கத் தயாராகவுள்ள நண்பர்களுக்கென ஒரு தனி track தான் இவற்றிற்கு லாயக்கு என்று தீர்மானித்தோம் !

So- இந்த 3 கனவுகளையும் காத்திருக்கும் 12 மாதங்களுக்குள் வாழ்ந்து பார்க்கும் பேராவலுடன் தான் 2016-ன் படலத்தைத் துவக்கினோம்! ஆரம்ப மாதமே அதற்கு வாகாய் அமைந்து போனதற்கு நாம் நன்றி சொல்ல வேண்டியது நிச்சயமாய் நமது மஞ்சள் சட்டை மாவீரருக்கே! ஒரு 320 பக்கக் கதை அழகான சித்திரங்களோடும்; சுலபமான கதைக்களத்தோடும் நகர்ந்திடும் போது – வழிப்போக்கர்களாய் இணைந்து கொள்வோர் எந்த மொழி பேசுபவராக இருப்பினும் ஒரு ஈர்ப்பு ஏற்படத் தவறாது என்பதே போனெல்லியின் MAXI TEX கதைவரிசையின் பின்னணிச் சித்தாந்தம்! அதைக் கொஞ்சமாய் இரவல் வாங்கிக் கொண்டோம் – ஜனவரியை விசையோடு துவங்கிடும் பொருட்டு! And “சட்டத்திற்கொரு சவக்குழி” கச்சிதமாய் செயலாற்றியது போனெல்லியின் வெற்றியே - in more ways than one !

நமது இத்தாலிய சூப்பர்-ஸ்டார் புராணம் இன்னமும் ஓய்ந்த பாடில்லை! Simply becos – இதோ காத்துள்ளது அவரது பிப்ரவரி மாதத்து ஆக்ஷன் த்ரில்லரின் அட்டைப்பட preview! ‘காமிக்ஸ் எக்ஸ்பிரஸ்‘ என்றதொரு சமாச்சாரத்தை சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பாக (maybe இன்னும் முன்பாகவோ??) துவக்கிய சமயம் அதனில் மூன்றோ-நான்கோ பக்கங்களுக்குத் தலைகாட்டிய “திகில் நகரில் டெக்ஸ்” – இத்தனை காலத்தை வெறும் விளம்பங்களிலேயே செலவழித்து விட்டிருக்கிறார்! ஒருவழியாக வெளிச்சத்தைப் பார்த்திடக் காத்திருக்கும் இந்த சாகஸம் – ரொம்பவே வித்தியாசமானது! தேய்ந்து போன வார்த்தைப் பிரயோகமே இது என்ற போதிலும் – பிப்ரவரி பிறக்கும் போது இதன் பின்னணி நிஜம் அம்பலமாவது நிச்சயம்! ஒரு திருட்டு கும்பலைத் தேடிச் செல்லும் தடத்தில் – ஒரு சிறு நகரில் அரங்கேறும் கொடூரக் கொலைகளைத் துப்பறியத் தொடங்குகிறார் நமது பிரிய ரேஞ்சர்! அந்நகரிலேயே ஷெரீப்பாக டெக்ஸ் பதவியேற்றுக் கொள்வவதும் ; ஒரு டிடெக்டிவ் பாணியில் கொலையாளியைத் தேடித் திரிவதும் – நாம் இது வரை ரசித்திருக்காப் புதுப் பரிமாணம்! And- 'ஓக்லஹோமா' கதைக்கு சித்திரங்கள் போட்டிருந்த அதே ஓவியரின் கைவண்ணம் எனும் போது – இன்னுமொரு அழகான visual treat நமக்குக் காத்துள்ளது என்று சொல்வேன்!
 
இன்னமும் பணி நிறைவு பெறா டிசைனே இது...!    
அட்டைப்படத்தைப் பொறுத்தைவரை இது போனெல்லியின் ஒரிஜினலே – மிகச் சன்னமான மாற்றங்களோடு! அழகான இந்த ராப்பருக்கு பின்னட்டை மட்டுமே நமது ஏற்பாடு ! And முன்னட்டையில் அந்த TEX லோகோ; கதையின் பெயர் உறுத்தாது இடம் பிடிக்கும் பாங்கு; பின் ராப்பரின் பாணி – என சகலமும் ஒரே template-ல் இந்தாண்டு முழுக்கவும் இருந்திடப் போவதற்கு இதுவுமொரு அத்தாட்சி! பின்னட்டையில் டெக்ஸ் வில்லருக்கு நாம் நல்கிடும் ‘பன்ச்‘ அறிமுக வாக்கியம் மட்டுமே இதழுக்கு இதழ் மாறிடும்! And ஜாலியாக இதற்கென சில one liner-களை நீங்களும் சொல்லிடலாமே- காத்திருக்கும் இதழ்களில் பயன்படுத்திடும் பொருட்டு?! ராப்பரை தயார் செய்யும் அவசரத்தில் நான் எழுதும் அந்த வரிகள் சில சமயங்களில் ரொம்பவே cheesy ஆகத் தோன்றிடக்கூடும் தான் ; ஆகையால் உங்களின் பங்களிப்புகள் இருப்பின் – அவற்றுள் ரம்யமானவற்றை பயன்படுத்திக் கொள்வோமல்லவா ?

அட... இத்தோடு ‘தல‘ புராணம் இந்த வாரத்துக்கு ஓய்ந்ததுடா சாமி” நினைத்திட்டால் – சாரி; இன்னமும் சமாச்சாரம் பாக்கியுள்ளது என்றே சொல்லியாக வேண்டும்! சென்ற வாரம் இத்தாலிய மொழிபெயர்ப்பு முடித்த சில டிஜிட்டல் கோப்புகள் ஜுனியர் எடிட்டருக்கு வந்திருந்தன! அவற்றோடு இணைந்திருந்த கதைகளை மேலோட்டமாய் படம் பார்த்துக் கொண்டிருந்தேன்! அப்போது – “தலையில்லாப் போராளி” (டெக்ஸ்) ஆல்பத்தின் high-resolution ஃபைல்களையும் பார்க்க முடிந்தது! ஒற்றை வரியில் சொல்வதானால் – ஸ்தம்பித்துப் போய் விட்டேன்!! (புத்தக அளவில்) மெகா சைஸில் ரூ.200/- விலையில் வரக் காத்திருப்பது இந்தக் கதையே என்பதும்; இதனை நான் தேர்வு செய்ததன் பின்னணியே அந்த அசாத்தியச் சித்திரத் தரத்தின் பொருட்டே என்ற போதிலும்- ஏகப்பட்ட கதைகளைப் புரட்டிய அனுபவத்தினுள் இந்த சாகஸம் என் ஞாபகத்தில் மங்கிப் போயிருந்தது! ஆனால் நேற்றைக்கு அதன் சித்திரங்களைப் பக்கம் பக்கமாய் – ஒரிஜினல் தயாரிப்புத் தரத்தோடு பார்க்க முடிந்த போது – புல் மட்டுமல்ல – செடி, கொடி, மரம் என சகலமும் அரிக்கத் தொடங்கியது! இதோ பாருங்களேன் – அந்த ஆல்பத்தின் ஒரு sneak preview!! 
ஒவ்வொரு frame-க்கும் ஓவியர் எடுத்துக் கொண்டிருக்கும் சிரமத்தையும்; சிரத்தையையும் பார்த்தால் – இத்துறையில் ஐரோப்பியக் கொடி பெருமையோடு படபடப்பதன் காரணம் புரிகிறது! ஏப்ரலில் கோடை மலராகவும் அவதாரமெடுக்கக் காத்திருக்கும் “தலையில்லாப் போராளி” யை அந்தப் பெரிய சைஸில் உங்கள் கரங்களில் ஒப்படைக்க இப்போதே எனக்கு நமைச்சல் எடுக்கத் தொடங்கி விட்டது ! ஏப்ரலே சீக்கிரம் வாராயோ?

ஒரு வழியாய் அடுத்த topic பக்கமாய் வெளிச்ச வட்டத்தைத் திருப்புவோமென்று பார்த்தால் – ‘இன்னும் கொஞ்சமே கொஞ்சமாய் ‘தல‘ சேதிகளைச் சொல்லி விடுகிறேனே?' என்று (என்) தலை சொல்லிட – here goes some more! ஜனவரியை டெக்ஸ் துணையோடு நாம் துவக்குவது ஒரு செய்தியாக (!!!) இருக்கலாம் தான்; ஆனால் நம் ரேஞ்சரோடே 365 நாட்களும் குப்பை கொட்டும் போனெல்லி குழுமத்திற்கு அதுவொரு தினசரி நிகழ்வு தானே? இதோ – மூன்றே நாட்களுக்கு முன்பாய் அங்கே வெளியான லேட்டஸ்ட் இதழின் அட்டைப்படம். And இது அவர்களது இதழ் # 663!! Phew! 
அதே போல – தயாரிக்கும் போதே முழு வண்ணத்திற்கென படைக்கப்படும் TEX Color இதழ்களில் வரிசைகளில் – சமீபமாய் உருவான 132 பக்க ஆல்பத்தினில் 4 x 32 பக்கக் குட்டிக் கதைகள் முழுவண்ணத்தில் உள்ளன! ஒவ்வொரு கதைக்கும் ஒரு புத்தம் புது கதாசிரியரும்,  ஓவியரும் பணி செய்துள்ளனர் !  அவற்றுள் ஒரு sample பக்கமிது!

சித்திரங்களையும், வண்ணங்களையும் பார்க்கும் போதே என் கடைவாயில் ஜலப்பிரவாகத்தைத் தவிர்க்க முடியவில்லை! 'மாதமொரு டெக்ஸ்' என்ன ? – 'வாரம் ஒரு டெக்ஸ் !' என்று கடைபோட்டாலும் –போனெல்லியின் பேழையை நாம் முழுமையாய் ஆழம் பார்த்திட இந்த யுகம் போதாது போலும்! இது போன்ற வேளைகளில் – ‘காமிக்ஸ் ஓவர்டோஸ்!‘; ‘டெக்ஸ் ஓவர்டோஸ்‘ என்ற சிந்தனை் சகலமும் ஜன்னலுக்கு வெளியே குதித்து ஓடிப் போய் விட – ‘அட.. இவற்றையெல்லாம் திரட்டி ஒரு ஸ்பெஷல் போடுவோமா?‘; ‘ஆட்ரா ராமா......தாண்ட்ரா ராமா!!'என்று இப்டிக்கா புதுசாய் ஏதேனும்  ஒரு குட்டிக்கரணம் போட்டுப் பார்ப்போமா? என்ற எண்ணங்கள் எனக்குள் அணிவகுத்துச் செல்வதைத் தவிர்க்க முடிவதில்லை! ‘மடக்-மடக்‘கென்று ஒரு கிளாஸ் தண்ணீரைக் குடித்து விட்டு – தறிகெட்டு ஓடும் தலையை (திரும்பவும் என்னதைத் தான்!!) நிதானத்துக்குக் கொண்டு வர ரொம்பவே பிரயத்தனங்கள் அவசியமாகின்றன! Such is the power of this man !! சரி- இதற்கும் மேலாய் ‘டெக்ஸ் கச்சேரியை‘ தொடர்ந்தால் பூமி தாங்காது என்பதால் – let’s move on!

இரவுக்கழுகார் புராணம் முடிந்த பின்னே - உடைந்தமூக்காரையும் கவனிக்காது போயின் அது பிழையாகிப் போகாதா ? Here are the updates from the world of Blueberry ! "என் பெயர் டைகர்" முன்பதிவுகள் 500-ஐ தொட்டுப் பிடிக்கும் தொலைவுக்குள் நெருங்கி விட்டன ! வண்ண இதழ்களில் 335 + black & white பதிப்பினில் 105 என்பதே தற்போதைய நிலவரம் ! நிஜத்தைச் சொல்வதாயின் - b&w பதிப்பிற்குக் கூடுதலாய் வரவேற்பிருக்குமென்றே நான் எதிர்பார்த்தேன் ! ஆனால் color is king !! கிட்டத்தட்ட மூன்றே முக்கால் ஆண்டு இடைவெளிக்குப் பின்பாக "இளம் டைகர்" கதைவரிசையினில் ஒரு புது ஆல்பம் போன மாதம் பிரெஞ்சில் வெளிவந்துள்ளது !  இதோ அதன் அட்டைப்படம் ! இந்த வரிசையில் இது ஆல்பம் # 21 ! நாம் ஆல்பம் 9 வரை எடிப்பிடித்திருக்கிறோம் என்பது நினைவிருக்கலாம் ! எஞ்சியிருக்கும் ஆல்பங்களை 2017 முதலாய் தீவிரமாய் பின்தொடர எண்ணியுள்ளேன் ! 

சந்தோஷச் சேதிகள் இரண்டு உள்ளன – உங்களோடு பகிர்ந்திட! நமது ஜனவரி இதழ்கள் வெளியானது முதலாகவே சந்தாக்களின் ஸ்பீடு கூடியுள்ளது ! நண்பர்கள் சிலரின் வளமான கற்பனைகளுக்கேற்ப நம்மிடம் 1000+ சந்தாக்களெல்லாம் எந்தவொரு யுகத்தினிலும் இருந்ததில்லை! அதனில் பாதிக்குச் சற்றே அதிகம் தான் கடந்த 4 ஆண்டுகளாய் நமது எண்ணம்! அதனை தற்சமயம் 80% எட்டிப் பிடித்து விட்ட நிலையில் – லேசாகவொரு நிம்மதிப் பெருமூச்சு சாத்தியமாகிறது! எஞ்சியிருக்கும் 20% நண்பர்களும், சென்னைப் புத்தக விழாவின் போது புதுப்பித்திடுவதாய் சொல்லியிருப்பது நம்பிக்கையூட்டுகிறது! And - நாளைய தினம் (ஜனவரி 11) உறுதிபடத் தெரிந்து விடும் – சென்னைப் பொங்கல் விழாவினில் நமக்கு ஸ்டால் உண்டா ? – என்ற நிலவரம்! நம்பிக்கையோடு காத்திருக்கிறோம்! 

‘சந்தாப் புதுப்பித்தல்‘ தொடர்பான விஷயத்தில் லயித்திருக்கும் சமயம், நமது வாசக நண்பரொருவர் அனுப்பியுள்ள இந்த மின்னஞ்சல் பொருத்தமானதொரு இடைச்செருகலாக இருந்திடுமென்று பட்டது! 
//விஜயன்  அவர்களுக்கு  வணக்கம்.!
      நான்  கடந்த  எட்டு  வருடங்களுக்கு  முன்  காமிக்ஸை  தேடி  கடை கடையாக  அலைந்து  நொந்து போய்  பின்பு  ஆர்.டி.முருகன்  அட்வைஸ்படி (சென்றவருடம் வரை) சந்தா  கட்டி  ஜாலியாக  இருந்தேன்.இம்முறை   எனது  தாயார்  கீழே  விழுந்து  கை  முறிந்துவிட்டது.அதனால்  ஆபரேஷன் 80 ஆயிரம்  வரை செலவாகிவிட்டது.பற்றாகுறைக்கு மழை வெள்ளம் புரட்டிபோட்டுவிட்டது.தென்னை  மரத்தில்  தேள் கொட்டினால் பனைமரத்தில்    நெறி கட்டிய மாதிரி  எனக்கு  நேரடியாக  பாதிப்பு  இல்லை  என்றாலும்  சுற்றி  உள்ளவர்கள்  பாதிப்பு  அடைந்ததால் பணம்  புழக்கம்  இல்லை. இதுவரை  கடனே  கேட்காத நண்பர்கள்  கூட கடன்  கேட்டதால்  கடன்  கொடுக்வேண்டியதாயிற்று.இதுவரை  சந்தா  கட்டாமல்  இருப்பவர்களை  இளக்காரமாக பார்த்ததற்கு கடவுள்  ஒரு சோதனை  கொடுத்துவிட்டார்.! இன்று மாலை  நுங்கம்பாக்கம் சென்று  இம்மாத இதழ்களை  வாங்கிவிட்டேன்.இதற்கு  மூன்று மணிநேரம் +ரூ 60 செலவு.சென்னையை  பொருத்த அளவில்  சந்தாவே  சுலபமானது ; சிக்கனமானது.இந்தமாதம் சந்தா கட்டிவிடுவேன்.! டெக்ஸ்  விஜயராகவன்  குறிப்பிட்டமாதிரி   ஈ.பு.க.கா.யிலே  சந்தா தொகையை  மட்டுமாவது அறிவித்தால் நன்றாக  இருக்கும்."ஆறிய கஞ்சி  பழங்கஞ்சி"  என்று  சந்தா அறிவிப்பை  தோரயமாக  எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.! நன்றி.! என்னை   போன்ற  மிடில் கிளாஸ்வகுப்பினருக்கு வசதியாக  இருக்கும்.!   //

தொடரும் ஆண்டுகளில் சந்தாத் தொகையினை மட்டுமாவது முன்கூட்டியே தெரிவிப்பது உங்களுக்கு வசதியெனில் - அதனில் நிச்சயமாய் நமக்குச் சிரமங்கள் இருந்திடாது !  And வீடு தேடி வரும் இதழ்களின் வசதியே அலாதி!‘ என்பதை சந்தாப் புதுப்பித்தலைச் செய்திருக்கா நண்பர்களும் நிச்சயம் உணர்ந்திருப்பார்களென்பது உறுதி! But - இன்றைய சூழல்களில் ரூ.4000 என்பது ஒரு சிறு தொகையல்ல எனும் போது- அவர்களுக்கு அவகாசம் தந்திடுவது நம் கடமை என்றுமாகிறது! We will wait folks..for sure !! 

Slowly inching towards target என்ற நிலையில் – புன்னகையோடு சின்னதாகவொரு ஏமாற்றத்தையும் சொல்லிடலில் தவறில்லை என்று நினைக்கிறேன்! ரொம்பவே கோரப்பட்ட ‘டெக்ஸ் சந்தா‘; ‘கார்ட்டூன் சந்தா‘; ‘100% கமர்ஷியல் கதைத் தேர்வுகள்‘ என்ற பின்னணியோடு இந்தாண்டின் அட்டவணையைத் தயாரித்த சமயம் – நான்கிலக்கச் சந்தா எண்ணிக்கையினை இம்முறை நெருங்கிட வாய்ப்புகள் பிரகாசம் என்ற எண்ணம் ஓசையின்றி என்னுள் குடி புகுந்திருந்தது! ஆனால் அது நிஜமாகவில்லை என்பதில் மெலிதான வருத்தமே! Maybe இப்படியொரு எதிர்பார்ப்பு இம்முறை எனக்குள் இருந்ததாலோ-என்னவோ- நார்மலான வேகம் கூட என் கண்களுக்கு ஆமை வேகம் போல் தோன்றியது போலும்!! 

ஆனால் அதை சற்றே அமிழ்ந்து போகச் செய்திடும் விஷயமொன்றும் கடந்த 10 நாட்களாக அரங்கேறி வருகிறது – நமது "ஆன்லைன் விற்பனையில் விறுவிறுப்பு" என்ற வகையில்! And நம்பினால் நம்புங்கள் – கடந்த 10 நாட்களில் மேக்ஸிமம் விற்றுள்ள இதழ்கள் நமது மாயாவிகாருவின் 4 மறுபதிப்புகளும்; லாரன்ஸ் & டேவிட்டின் இதழ்களும் தான்!! ‘சட்டத்திற்கொரு சவக்குழி‘ யை விட ஆன்லைனில் ஜாஸ்தி போணியாகியுள்ள இதழ் “பாம்புத் தீவு“ தான் என்று சொன்னால் நம்ப முடிகிறதா ? நம்பியே தீர வேண்டும் நண்பர்களே - becos those are the facts ! முகம் துடைக்க டவல் எடுத்துப் போக; தாகத்திற்குத் தண்ணீர் எடுத்துச் செல்ல – 12-வது ஆட்டகாரர் ரீதியில் நாம் மறுபதிப்புகளை சில சமயங்களில் கருதினாலும் – அவர்கள் ஓசையின்றி அடிக்கும் பவுண்டரிகள் “தெறிக்க வைக்கும்“ ரகத்திலுள்ளன! Talk about evergreen stuff!!!

இம்மாத இறுதியில், திருப்பூரில் நடைபெறவுள்ள புத்தக விழாவிலும் பங்கேற்க முயற்சிக்கவிருக்கிறோம்! அளவில் சென்னை / ஈரோடு விழாக்களை விட திருப்பூர் சிறிதே எனினும் – பரபரப்பான இந்த நகரத்தினில் நிச்சயம் நல்ல வரவேற்பிருக்குமென்றே நினைக்கத் தோன்றுகிறது! And- நமது நண்பர்களில் பலருக்கும் அந்தப் பகுதிகளே ஜாகைகள் எனும் போது – விற்பனைக்கும், உற்சாகத்திற்கும் குறைவிராது என்பது நிச்சயமல்லவா?

Before I wind up – நமது ஆங்கில இதழ்களின் (CINEBOOKS) விற்பனை முயற்சிகள் பற்றிய சின்ன update! www.comics4all.in என்ற தளம் இப்போது செயல்படத் துவங்கியுள்ளது! அதுமட்டுமின்றி – விலைகளை முடிந்த மட்டிலும் குறைத்து லிஸ்டிங் செய்துள்ளோம்! (ஏற்கனவே ஆர்டர் செய்துள்ள நண்பர்களுக்கும் – இந்த விலை மாற்றச் சலுகை நிச்சயமாய் உண்டு) And சென்னைப் புத்தக விழாவினில் நமக்கு ஸ்டால் கிடைத்திடும் பட்சத்தில் – இவை அங்கேயும் விற்பனைக்கு இருந்திடும்! So- நமது ஆதர்ஷ நாயகர்களை ஆங்கிலத்திலும் ரசித்திட ஆர்வமிருப்பின் – CINEBOOK–ன் தரம் நிச்சயம் உங்களை மெய்மறக்கச் செய்திடும்! மீண்டும் சந்திப்போம்! அது வரை have a great day & an awesome week ahead ! அட்வான்ஸ் பொங்கல் வாழ்த்துக்களும் கூட !!  

Sunday, January 03, 2016

ஜனவரி !!

நண்பர்களே,

வணக்கம். 'ஒரு வார இடைவெளிக்கொரு பதிவு' என்ற வழக்கமான அட்டவணைப்படி தலைக்குள்ளே உள்ள அலாரம் சனிக்கிழமைகளில் activate ஆகிடுவது வாடிக்கை ! ஆனால் இம்முறை வார நாட்களில் 2 புதுப் பதிவுகள்  உட்புகுந்து விட்டபடியால் அந்த அலாரம் கொஞ்சமாய் மக்கர் செய்து விட்டது ! நான்பாட்டுக்கு "திகில்நகரில் டெக்ஸ்' பணிகளுக்குள் மண்டையை நுழைத்துக் கொண்டே பகலை ஒப்பேற்றிவிட்டு, இறக்குமதி செய்துள்ள CINEBOOKS கஜானாவினுள் புகுந்து ஜாலியாய் கதை படிக்கத் தொடங்கியிருந்தேன் - மாலையில் ! சரி ...குறட்டை விடப் புறப்படும் முன்பாக வலைப்பதிவின் பக்கமாய்   எட்டிப் பார்ப்போமே என்று நுழைந்த போது தான் உறைத்தது - புதிய பதிவு due என்று ! So அரக்கப் பரக்கத் துவங்குகிறேன் ஆண்டின் இரண்டாம் நாளிலேயே - இரண்டாம் பதிவினை !! ஜனவரி இதழ்கள் மீது இன்னும் அழுத்தமாய் பார்வைகள் விழுந்திட வேண்டிய வேளையினில் - அடுத்த மாதத்து முன்னோட்டங்களை இப்போதே ஆரம்பிப்பது அர்த்தமற்றது என்பதால் - திரும்பவும் ஒரு about turn பதிவு தான் காலத்தின் கட்டாயம் என்று புரிந்த அந்தக் கணமே - எதைப் பற்றி எழுதுவது என்ற கேள்விக்கும் விடை கிட்டியது !! ஜனவரி !! Yes - ஆண்டின் இந்த முதல் மாதத்திற்கும் நமக்குமள்ளதொரு ஜாலியான கெமிஸ்ட்ரி பற்றி எழுதினால் என்னவென்று தோன்றியது ! So  அதுவே இந்தப் பதிவின் ஆரம்பப் புள்ளி ! 

நமது லயனின் ஆரம்பம் 'இங்குமிலா -அங்குமிலா'  ஒரு நட்டநடு ஜூலையில் தான் எனினும், வண்டி சூடு பிடித்து உச்ச கியரை எட்டிப் பிடிக்கத் துவங்கியது 1984-ன் இறுதிப் பகுதிகளில் தான் ! And 1984 நவம்பர் இறுதியினில் டெல்லிக்குப் பயணமாகிய பொழுது தான் தொடரவிருந்த புத்தாண்டின் நமது டமாக்கா இதழ்களின் கதைகள் என் கைக்கு வந்து சேர்ந்தன ! போபாலின் கொடூர விஷவாயுச் சம்பவம் இன்றைய தலைமுறைக்கு லேசானதொரு வரலாற்று ஞாபகமாக மாத்திரமே இருந்திடலாம் - ஆனால் அந்தக் கோரம் அரங்கேறுவதற்கு 8 நாட்கள் முன்பாகத் தான் Grand Trunk எக்ஸ்பிரசில் போபாலைத் தாண்டிச் சென்றிருந்தேன் ஒரு சிலுசிலுப்பான காலையில் ! கறுப்புக்கே புது இலக்கணம் சொல்லக்கூடியதொரு எண்ணெய்ச் சட்டியில் ஆவி பறக்கும் பூரிகளை வாங்கிட கூட்டத்தில் முண்டியடித்துச் சென்றது தான் போபால் பற்றிய எனது நினைவாக இருந்து வந்தது - ஊர் திரும்பிய சற்றைக்கெல்லாம் பேப்பரில் அந்த ரணகளம் பற்றிப் படிக்கும் வரையிலும் ! 

டில்லியிலிருந்து அச்சமயம் வாங்கி வந்திருந்த கதை தான் ஜனவரி 1985-ல் பொங்கல் மலராக(வும்) வெளியான ஸ்பைடரின் "கொலைப் படை" ! நிறைய இதழ்களைத் தயாரிக்கும் போதே அவை ஹிட்டடிக்கும் என்பதைப் புரிந்து கொள்ள முடியும் ! டெக்சின் டாப் கதைகள் ; லக்கி லூக்கின் classics ; ஸ்பைடர் மேனியா உச்சத்தில் இருந்த பொழுது வெளியான கூர்மண்டை கதைகள் என்று இந்தப் பட்டியல் நீண்டு செல்லும். ஆனால் - "இது ஆர்ப்பரிக்கும் அதகள ஹிட்டாகும் !" என்ற நம்பிக்கையை பணி துவங்கிய முதல் நாள் முதலாகவே எனக்குத் தந்துள்ள இதழ்கள் இதுவரையிலும் இரண்டே இரண்டு தான் என்று சொல்லலாம் !! அதில் இதழ் # 1 - "கொலைப் படை" !  Spider Vs.The Android Emperor என்ற பெயர் கொண்ட இந்த சாகஸத்தை வழுவழுப்பான போட்டோ பேப்பர் ஒரிஜினலில் - ஆங்கிலத்தில்  படிக்க முடிந்த போது எனது இரத்தமெல்லாம் சூடாகிப் போனது இன்னமும் நினைவில் உள்ளது ! ஆக்ஷன் என்றால் அப்படியொரு அதிரடி ஆக்ஷன் & decent சித்திரங்களும் ஒன்று சேர்ந்திட - எனக்குக் குத்தாட்டம் போடணும் போலவே இருந்தது ! ஏற்கனவே ஆர்ச்சியின் "இரும்பு மனிதன்" இதழினை பெரிய சைசில் ; இரு வண்ணத்தில் அச்சிட்டு அனுபவம் கண்டிருந்த காரணத்தால் - இந்த இதழையும் அதே format-ல் பிரம்மாண்டமாய் ரூ.4/ விலையிலேயே (!!!) வெளியிடுவதெனத் திட்டம்  ! 

இம்முறையும் என் தந்தையின் அச்சகத்திலேயே - web offset இயந்திரத்திலேயே ஒரே நேரத்தில் முன்னும் பின்னும் 2+2 வர்ணங்களை அச்சிடத் தீர்மானித்திருந்தேன் ! ஒன்றரை மாதங்களுக்கு முன்பாய் அரங்கேறியிருந்த அந்த  "நடுவிலே கொஞ்சம் பேப்பர் ரீலைக் காணோம்" படலம் இன்னமும் எனக்கு மறந்திருக்கவில்லை தான் ! ஆனால் நான் போட்ட சாமியாட்டம் கூட யாருக்கும் மறந்திருக்காது என்ற நம்பிக்கையும் ; நிச்சயமாய் அதே தவறு தொடர்ந்திடாது என்ற நம்பிக்கையும் இருந்ததால் - பேப்பர் ரீல்களுக்கு ஆர்டர் போட்டிருந்தேன் - அப்போது மித அளவில் வளர்ந்து கொண்டிருந்த கரூர் TNPL மில்லில் ! ஒழுங்காக முன்பணம் தந்து சில மாதங்களாய் பேப்பர் கொள்முதல் செய்து வந்தபடியால் அவர்களும் நம் மீதொரு அபிமானம் கொண்டிருந்தார்கள் ! "டாண்' என்று சொன்ன தேதிக்கு டிசம்பர் நடுவிலேயே ரீல்களும் வந்துவிட்டன ! என்னதான் நம்பிக்கை இருப்பினும், 'எதற்கும் இருக்கட்டுமே' என்று எனது குட்டி டீமை ரீல்களுக்குக் காவலாய் நிற்க வைத்திருந்தேன் ! And பொழுதைக் கடத்தாமல் காலா காலத்தில் அச்சிட்டு விட்டால் - தொல்லையும் தீர்ந்ததே ! என்ற வேகமும் உள்ளுக்குள் ! காளிராஜன் ; சிகாமணி என்று 2 ஆர்டிஸ்ட்கள்   அப்போது நம்மிடம் பணியாற்றிட - வேலைகள் தீயாய் நடந்து முடிந்தன ! இரவு 2 மணிக்குக் கூட நகரமே 'ஜே ஜே' வென விழித்திருந்து பணியாற்றும் காலமது  ! So ஆர்டிஸ்ட்களோடு   உட்கார்ந்து அரட்டையடித்துக் கொண்டே இரவு 11 மணிக்கு மேல் சாவகாசமாய் ஏதாச்சும் பரோட்டா கடையில் ஒரு கட்டு கட்டி விட்டு - பணி முடிந்த பக்கங்களை நெகடிவ் எடுக்கக் கொடுத்து வருவேன் ! அவர்களும் முகம் சுளிக்காமல் அர்த்தஜாமத்திலும் வேலை செய்து தர - மார்கழியின் பனியிரவில் அந்த நெகடிவ்களை சுமந்து கொண்டு ஊரின் இன்னொரு கோடியிலிருக்கும் அச்சகத்துக்கு ஜாலியாய் சைக்கிளை மிதித்த நாட்களவை ! நமக்காக 2 மணிக்குக் கூட பணியாட்கள் காத்திருக்க - ராவோடு ராவாய் ஸ்பைடர் அச்சாகத் தொடங்கினார் ! கிளிப் பச்சை & ஜவ்வுமிட்டாய் ரோஸ் & ஆரஞ்சு வர்ணங்கள் சேர்ந்திட - பக்கங்களை மடித்துச் சரி பார்க்கும் போதே எனக்குள் வாணவேடிக்கைகள் தான் ! பற்றாக்குறைக்கு - "பாதாளப் போராட்டம்" கதைக்கென நமக்கு வழங்கப்பட்டிருந்த ஒரிஜினல் ராப்பர் டிசைனை - இந்த ஸ்பெஷல் இதழுக்கென லவட்டி ரிசர்வில் வைத்திருந்தேன் ! So அட்டைப்படமும் டெரராக அமைந்திட - இதுவொரு blockbuster ஹிட் என்பதில் எனக்கு ஐயமே இருக்கவில்லை ! இரண்டே நாட்களில் அச்சுப் பணிகள் முழுமையாய் முடிந்திட - அட்டைப்படத்தினை எனது அண்ணனின் அச்சகத்தில் அச்சிட்டு முடித்திருந்தேன் இடைப்பட்ட வேளையில் ! ஆக ஒரு சுபயோக சுபதினத்தில் கூர்மண்டையர் விற்பனைக்குத் தயாராகி நின்றார் ! 

அப்போதெல்லாம் நமது நெல்லை முகவர் ஒவ்வொரு மாதமும் இதழ் தயாரான மதியத்துக்கு பஸ் பிடித்து சிவகாசி வந்து பண்டலைக் கையோடு கொண்டு செல்வது வழக்கம் ! அவரது முதல் அபிப்பிராயம் எப்போதுமே அந்த இதழின் விற்பனைக்கொரு கோடி காட்டுவதாய் அமைந்திடுவது மாமூல் ! இம்முறையோ மனுஷன் இதழைப் பார்த்த மறு கணம் - "பண்டலை பிரிங்க..பிரிங்க..!" என்று கூவினார் ! விஷயம் என்னவென்று பார்த்தால் அந்நாட்களில் 300 பிரதிகள் வாங்கிடும் அவர் - ஒற்றை நொடியினில் ஆர்டரை 500-ஆக உயர்த்திடத் தீர்மானித்திருந்தார் ! தொடர்ந்த 10 நாட்களுக்குள் ஆர்டினின் முதலாளி நம்மை ஒரு ரேஞ்சுக்குக் கொண்டு சென்று விட்டார் - விற்பனையில் தென்பட்ட அசாத்திய வேகத்தைக் கொண்டு ! அதுவரை நொண்டியடித்துக் கொண்டிருந்த சிறுநகர முகவர்கள் கூட அவசரம் அவசரமாய் ஆர்டர்கள் அனுப்பிட - மொத்தப் பிரதிகளும் பிப்ரவரி பிறக்கும் முன்பே தரைதட்டிப் போயிருந்தன நம் கிட்டங்கியில் ! வாழ்க்கையில் ஐம்பதாயிரத்தை  கடந்ததொரு தொகை நமது வங்கியிருப்பில் இருந்த முதல்முறை அது !! இன்றைய நாட்களில் startup salaries கூட லகரங்களில் ஓடும் போது - இந்த ஐம்பதாயிரம் ஒரு பிசாத்துத் தொகையாகத் தெரியக்கூடும் தான் ; ஆனால் 30 வருஷங்களுக்கு முன்பு அதெல்லாம் ஒரு ராஜாங்கத்தின் விலை bros !!

"எத்தனுக்கு எத்தன்" ; "Dr .டக்கர்" ; "இரும்பு மனிதன் " ; "பாதாளப் போராட்டம்" எல்லாமே ஹிட்கள் தான் - ஆனால் இது முற்றிலும் புதியதொரு பரிமாணத்திலான வெற்றியாக இருந்தது !! இது எல்லாவற்றையும் விட மிகப் பெரிய குஷியை எனக்குத் தந்த சம்பவமும் அதே தருணத்தில் அரங்கேறியது - முத்து காமிக்ஸில்  பணியாற்றிவிட்டு ; அப்புறமாய் இங்கே-அங்கே என காமிக்ஸ் கடைகள் விரித்துச் சென்று கொண்டிருந்த முல்லை தங்கராசனை சந்திக்க நேர்ந்த பொழுது ! அப்போது மனுஷன் மேத்தா காமிக்சிலோ ; ரத்னபாலாவிலோ பணியாற்றிக் கொண்டிருந்தார் ! நம்மிடம் 500 பிரதிகள் வாங்கிய கையோடு அதே நெல்லை முகவர் இவரது ஆபீசுக்கும் சென்று அவர்களது அந்த மாதத்து இதழ்களில் குறைச்சலாக ஒரு எண்ணிக்கையில் பிரதிகள் வாங்கியுள்ளார் ! அங்கே போனவர் சும்மா இராமல் - "கொலைப் படை" இதழையும் காட்டி விட்டு - "500 பிரதிகள் வாங்கியிருக்கிறேனாக்கும் !!" என்று ஒட்டியிருக்கிறார் ! முல்லை தங்கராசனும் இதழைப் புரட்டிப் பார்த்து விட்டு - அதைத் தன்வசமே வைத்துக் கொண்டு அன்று மாலை எனது தந்தையின் ஆபீசுக்கு வந்து விட்டார்  ! என்னை அங்கே பார்த்தவர் - புலம்பாத குறையாக "Fleetway-ல் டாப் கதைகள் எல்லாவற்றிலும் துண்டு விரித்து விட்டே!" என்று ஆதங்கப் பெருமூச்சு விட்டார்! என்றைக்குமே எனக்கும், அவருக்கும் ஒத்துப் போனதில்லை எனும் பொழுது - இந்த மறைமுகப் பாராட்டு சிலீரென்ற ஆலங்கட்டி  மழையாகப் பட்டது எனக்கு !  ஸ்பைடரின் ultimate வெற்றித் தருணமாய் அந்த நொடி எனக்குப்பட்டது ! இன்றைக்கு அதுவொரு சிறுபிள்ளைத்தனமான சிந்தனையாகத் தோன்றினாலும், 18 வயதை தொட்டிருக்கா அந்த  நாட்களில் - சிந்தனையில் விசாலத்துக்கெல்லாம் அவசியமே தோன்றிடவில்லை ! ஜனவரியுடனான முதல் ஸ்பரிசம் அசாத்திய வெற்றியை நல்கிய நாட்களாய் அமைந்ததால் - இன்று காலை பார்த்த மனிதரின் பெயர் மறந்து போனாலும், 30 வருடங்களுக்கு முன்பான நாட்கள் பசுமையாய் ஞாபகத்தில் தங்கிவிட்டன ! 
"ஜனவரி காதல்" தொடர்ந்தது மறு ஆண்டிலும் கூட - தலைவிரிகோலமான பச்சைப் பிசாசு - ராப்பரில் நாக்கைத் துருத்திக் கொண்டு நின்ற "திகில்" அறிமுகத்தின் வாயிலாக ! வண்டி வண்டியாய் திகிலின் பின்னணி பற்றி ஏற்கனவே எழுதியுள்ள நிலையில் - maybe அங்கே விடுபட்டுப் போன finer details களை மட்டுமே இங்கே சொல்லிச் செல்கிறேனே..?! சிறு (திகில்) கதைகளின் தொகுப்பு...ஒரே ஒரு முழுநீள ஹாரர் த்ரில்லர் ; சின்னச் சின்ன கட்டுரைகள் ; துணுக்குகள் என்று இந்த இதழை ரொம்பவே ரசித்துச் செதுக்கினோம் ! அப்போதெல்லாம் Fleetway நிறுவனம் தடுமாற்றமானதொரு சூழலில் சிக்கிக் கிடக்க - சிறுகச் சிறுக அவர்களும் செலவினங்களைக் குறைக்கும் வேலையில் முனைப்பாகிப் போனார்கள் ! அந்நாட்களில் கறுப்பு-வெள்ளை ஒரிஜினல்கள் உயர் ரக bromide பேப்பரில் பிரிண்ட் போடப்பட்டு வந்திடும் ! ஆனால் அதெல்லாம் அனாவசியச் செலவென்று தீர்மானித்து - வரும் நாட்களில் நமக்குத் தேவைப்படும் கதைகளை ஜெராக்ஸ் மட்டும் எடுத்துத் தரப் போவதாகத் தகவல் சொல்லினர் ! ஜெராக்ஸ் எடுப்பது கூட அந்நாட்களில் இன்றைய ஐம்பது பைசா விவகாரமல்ல ; and அன்றைய ஜெராக்ஸ் தரங்கள் இப்போது போல் துல்லியமாய், அடர்த்தியாய் இருந்திடாது தான் ! அதிலும் "பேய்வீரர் லோகன்" தோன்றிய அந்த முழுநீளக் கதையின் ஜெராக்ஸ் - கதையின் கருவுக்கேற்ப - பேய் போலவே இருந்தது, வெண்மை மிகுந்து ! அந்தக் கதைக்கு உயிரூட்ட நமது ஓவியர்கள் விடிய விடிய வேலை செய்ததெல்லாம் - மறக்க இயலா அனுபவங்கள் !! "பேய்..பிசாசுகள் எல்லாமே வேற்று கிரகத்திலிருந்து இங்கே இறக்குமதியானவை!" என்பது போலான இந்தக் கதை எனக்கு ரொம்பவே பிடித்ததொன்று ! (பெயர் மறந்தே போச்சு !!) வழக்கமாய் பெரிய சைசிலிருக்கும் ஒரிஜினல்களை கட்டிங் - பேஸ்டிங் செய்து பாக்கெட் சைசாக்குவோம் ; ஆனால் இம்முறையோ தலைகீழ் ! பாக்கெட் சைசில் இருந்த கதையை பெரிய சைசுக்கு உருமாற்றம் செய்தோம் ! 

மொத்தமாய்ப் பணிகளை செய்து முடித்தான பின்பு - அட்டைப்படம் செம டெரராக இருக்க வேண்டுமே என்ற ஆர்வத்தில் மொத்தம் 3 டிசைன்கள் போடச் செய்தேன் நமது ஓவியரை ! பிசாசுகளை வரைவதென்றால்  நம்மவருக்கு அல்வா சாபிடுவது போல் ஜாலியான பணி ; பிரித்து மேய்ந்து விடுவார் ! மூன்று டிசைன்களுமே சூப்பராகத் தோன்றிட அதில் பெஸ்ட் என எனக்குத் தோன்றிய 2 டிசைன்களையும் முன் + பின் அட்டைகளுக்குக் கொண்டு சென்றேன் ! 

உட்பக்கங்களும் சரி ; ராப்பர்களும் சரி - என் அண்ணனின்  (பெரியப்பா பையன்) அச்சகத்தில் தான் அந்தச் சமயங்களில் பெரும்பாலும் அச்சாகும் ! அதே வளாகத்தில் தான் நமது ஆபீசும் இருந்ததால் - விறு விறுவென்று நடந்து சென்று பணி நிலவரத்தைப் பார்த்துக் கொள்ள முடியும் ! பேப்பரை இறக்கி விட்டு - அச்சிட பிளேட்களையும் தயார் செய்து வாங்கிக் கொண்டு அவர்களது அச்சகத்துக்குப் போனால் இருட்டாகக் கிடந்தது ! அந்நாட்களில் 12 மணி நேரம் வீதம் 2 ஷிப்ட் வேலை உண்டு எனும் பொழுது ஞாயிறு மாலை வரை செம பிசியாக இருக்கும் இடம் சனிக்கிழமை இரவில் இருட்டாகக் கிடப்பதைப் பார்த்த பொழுது வினோதமாய்ப்பட்டது ! என்ன-ஏது ? என்று விசாரித்தால் - தயங்கித் தயங்கி பணியாளர்கள் குண்டைத் தூக்கிப் போட்டனர் ! அண்ணனுக்கும், அவரது தந்தைக்கும் (என் பெரியப்பா) அடிக்கடி லடாய் நேர்வதுண்டு தான் ; ஆனால் இம்முறை லடாய் முற்றி - கோபத்தில் அண்ணன்காரு ஆபீஸைப் பூட்டிச் சாவியை எடுத்துக் கொண்டு போய் அவர்களது உறவுமுறையிலானதொரு  வக்கீலிடம்  ஒப்படைத்திருந்தாராம் !! பாகப்பிரிவினை செய்து விட்டுத் தான் மறு வேலை ; அதுவரைக்கும் யாரும் ஆபீஸைத் திறக்கக் கூடாது என்று ஒரே போடாய்ப் போட்டு விட்டார் ! உள்ளே நம் தாள் மட்டுமன்றி - இதே போல வந்து, செல்லும் நிறைய பார்ட்டிகளின் காகிதங்களும் சிக்கிக் கிடக்க, எல்லாரும் கோபத்தை யார் மீது காட்டவென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தனர் ! எனக்கோ ஒரே டென்ஷன் ; "பேப்பரை மட்டும் கொடுத்திடுங்க சாமிகளா...அப்புறமாய் உங்க பஞ்சாயத்தை எப்படியும் வைச்சுக்கோங்க !! என்று நான் அண்ணனைத் தேடித் பிடித்து மூக்கால் அழுக - என்ன நினைத்தாரோ தெரியவில்லை - மறு நிமிஷமே சாவியை வரவழைத்து நமது பேப்பரை மட்டும் வெளியேற்ற அனுமதித்தார் ! 'துண்டைக் காணோம்-துணியைக்   காணோம்' என்று ராவோடு ராவாக பேப்பரைத் தூக்கிப் போனவன் - என் பள்ளித்தோழனின் அச்சகத்தைத் தேடிப் பிடித்து அங்கே இறக்கி வைத்தேன் ! அவனும் அதிக வேலையின்றி ஈயோட்டிக் கொண்டிருக்க, மட மடவென்று பணிகள் நிறைவு பெற்றன ! "ஷப்பா..தப்பிச்சோம்டா சாமி !" என்ற நிம்மதிப் பெருமூச்சோடு நான் ஆபீஸ் திரும்பினால் - முகப்பிலிருந்த அண்ணனின் ஆபீசில் வழக்கம் போல் வேலைகள் ஓடிக் கொண்டிருந்தன !! "இது என்ன கூத்துடா சாமி ? நேற்றைக்குவரையிலும் "நடுவிலே சுவரைக் கட்டு ; பங்கைப் பிரி !"  என்ற கூச்சல் கேட்டுக் கொண்டிருந்த நிறுவனத்தில் இப்போது நார்மல் சர்வீஸ் எவ்விதம் ?என்று ஒரே திகைப்பாய் இருந்தது ! "என்னாச்சு ? "என்று விசாரித்தால் - அண்ணன் கோபிப்பது இது 113-வது தடவை என்றும் - அவர்களது குடும்ப வக்கீல் அண்ணனைப் பார்த்தாலே கன்னத்தில் மரு ஒட்டிக் கொண்டு ராமேஸ்வரம் பக்கமாய் எஸ்கேப் ஆகிடுவார் என்பதும் தெரிய வந்தது ! அடச் சை ! என்ற கடுப்பில் அடுத்த சில மாதங்களுக்கு அவர்களது ஆபீஸ் பக்கமே நான் போகவில்லை ! திகில் முதல் இதழோ - பட்டையைக் கிளப்பும் விற்பனை கண்டது - at least நம்மிடமிருந்து !! வாங்கிச் சென்ற முகவர்களால் கடைகளில் போட்டு சரிவர விற்பனை செய்திட முடியவில்லை என்பது வேறு விஷயம் ! But செம வேகமாய் ; செம எதிர்பார்ப்புகளை நல்கிய விதமான விற்பனையை ஜனவரி 1986-ம் நமக்குக் காட்டியது ! 

ஹாட்ரிக் அடித்த கதையாய் 1987 ஜனவரியும் இன்னொரு சந்தோஷ உச்சத்தைக் கண்ணில் காட்டிய மாதம் !! இம்முறையோ - ஜூனியர் லயன் & மினி லயன் ஜனித்த வகையில் !! இரண்டு ரூபாயில் ; முழு வண்ணத்தில் ஒரு முழுநீள லக்கி லூக் கதையை வெளியிட்டிருக்கக் கூடிய முதலும், கடைசியுமான பதிப்பகம் நாமாகத் தானிருக்க முடியுமென்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை ! அன்றைய பொழுதில் வண்ண இதழ்களுக்கு ஒழுங்காகக் costing போட்டேனா ? என்பது கூட எனக்குச் சரிவர சொல்லத் தெரியவில்லை ! ஆனால் எப்படியேனும் கலரில் கலக்கியே தீர வேண்டுமென்ற வைராக்கியம் மட்டும் மேலோங்க - ஒற்றையொற்றை கலராய் சூப்பர் சர்க்கஸ் இதழினை அச்சிட்டோம் ! முன்பக்கம் 4 கலர் + பின்பக்கம் 4 கலர் என நியூஸ்பிரின்ட் காகிதத்தில் விடிய விடிய அன்றைக்கு அச்சிட்டதை நினைத்தால் மலைப்பாக உள்ளது ! ஒரே நேரத்தில் 4 கலர்களை அச்சிடும் இயந்திரங்கள் அந்நாட்களில் சிவகாசியில் கிடையாதெனும்  போது  - இந்த ஒற்றை-ஒற்றை கலர் பிரிண்டிங் தவிர்க்க இயலாதது ! But அந்தப் பணிக்கு அசாத்தியத் திறமை தேவை ! அந்நாட்களில் அத்தகைய கெட்டிக்காரர்கள் மிகுந்திருந்தது தான் எங்கள் நகரின் வளர்ச்சிக்கொரு முக்கிய காரணமும் கூட ! எல்லாவற்றையும் விட - "சூப்பர் சர்க்கஸ்" இதழை எடுத்து இப்போது புரட்டிப் பார்க்கும் போது - அதற்கு நான் எழுதியிருந்த தலையங்கம் மிகப் பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது ! நான் தொழிலுக்குள் புகுந்து இரண்டரை ஆண்டுகள் ஆகிப் போயிருந்தன - 1987-ல் அதனை எழுதிய போது ; but still அந்த வயசுக்கு அந்த writing தேவலை என்று தோன்றியது ! இதழ் வெளியான பின்பு - ஒரு டாப் கார்ட்டூன் தொடரினை முதல்முறையாக முழுநீளக் கதையாய் ; வர்ணத்தில் பார்த்த சந்தோஷத்தை நீங்கள் வெளிப்படுத்திய கணத்தில் ஏதோ இமாலய உச்சியை சைக்கிளிலேயே எட்டிப் பிடித்து விட்டது போன்றதொரு உணர்வு !! ஜூனியர் லயன் ஒரு பக்கமெனில் - அதே ஜனவரியில் "மினி லயன்" ஒற்றை ரூபாய் விலையோடு - "துப்பாக்கி முனையில்" கதையோடு துவக்கம் கண்டது இன்னொரு வானவில் ! ACTION Library என்ற லேபிலின் கீழ் Fleetway வெளியிட்டு வந்த கதைகளை நாம் மினி-லயனில் அரங்கேற்றியிருந்தோம். "ஆஹா..ஓஹோ" தரமில்லை எனினும் எல்லாமே decent ஆன கதைகளே ! So 30,000+ பிரதிகள் அச்சிட்டு - சகலத்தையும் விற்பனை செய்ய இயன்ற அந்த ஜனவரியை மறக்கத் தான் முடியுமா ? Phew !!

அந்த நாட்களிலிருந்து டப்பென்று நிகழ்காலத்துக்குக் குதித்தால் - நமது மறுவருகைக்குத் தளமாய் 2012-ல் அமைந்ததும் இன்னொரு ஜனவரியே ! COMEBACK ஸ்பெஷல் ; சென்னைப் புத்தக விழா ; வாசக நண்பர்கள் சந்திப்பு ; வலைப்பதிவு ; தண்டவாளத்தில் வண்டி சீராய் ஓடத் துவங்கியது - என சகலத்துக்கும் பிள்ளையார்சுழி போட்டுத் தந்ததும் அந்த ஜனவரி தானே ?! And மறக்க இயலா NBS வெளியிட சாத்தியமானதும் தொடர்ந்தாண்டின் ஜனவரியில் தான் எனும் போது - ஆண்டின் இந்த முதல் மாதத்தின் மீது நான் விடாப்பிடியாய் காதல் கொண்டிருப்பதில் வியப்பேதும் உண்டோ ?

 Before I sign off - இரண்டே கேள்விகள் guys !! 

முதலாவது கேள்வி  : "ஆர்ப்பாட்டமான அதகள ஹிட்டடிக்கும் இதழாக இருந்தே தீருமென்ற" நம்பிக்கையை எனக்குத் தந்த  இதழ் # 2 என்னவாக இருந்திருக்கும் ?  Any guesses ?

இரண்டாவது கேள்வி : அந்தத் துவக்கத்து "திகில்" காமிக்ஸ் இதழ்களை சுத்தமாய் நீங்கள் நிராகரித்தது ஏனென்று ஏதேனும் thoughts ப்ளீஸ் ? நான் குறிப்பிடுவது திகிலின் ஆரம்ப 3 இதழ்களையும் ! அவை வாங்கிய சாத்துக்களின் சூடு தாங்காது - இதழ் # 4 முதல் வழக்கமான பார்முலாவுக்கே தாவியிருந்தோம் !! அந்த ஆரம்பத்து இதழ்கள் உங்களுக்கு ரசிக்காது போனதன் பின்னணி பற்றி ஏதேனும் நினைவிருந்தால் சொல்லுங்களேன்? 

கேள்விகள் மட்டுமன்றி - வேண்டுகோள்களிலும் 2 உள்ளன :

'குட் நைட்' சொல்லி விட்டு நடையைக் கட்டும் முன்பாக - சந்தாக்கள் பற்றிய நினைவூட்டல் !!  இன்னமும் சந்தாப் புதிப்பித்தல்களைச்  செய்திருக்கா நண்பர்களை போன் மூலமும், இங்கே நமது பதிவுகளின் வாயிலாகவும் தொடர்ந்து மென்மையாய் ஞாபகப்படுத்திக் கொண்டே இருந்து வருகிறோம். சென்றாண்டின் சந்தா எண்ணிகையில் 60% தான் நாம் இதுவரையிலும் எட்டி இருக்கிறோம் என்பது வார்னிஷ் அடிக்கா நிஜம் ! ஏற்கனவே BAPASI-ன் சென்னைப் புத்தக விழா ஜனவரியில் கிடையாதெனும்  பொழுது ஒரு கணிசமான விற்பனைத் தொகைக்கு வழியில்லாது நிற்கிறோம் ! (புதிதாய் அறிவிக்கப்பட்டுள்ள புத்தக விழாவினில் நமக்கு ஸ்டால் கிடைப்பின் ; பொதுமக்களின் வருகை  கணிசமாக இருப்பின் - ஓரளவுக்குத் தலை தப்பும் ! ) But எது எவ்விதமிருப்பினும், சந்தாக்களின் எண்ணிக்கையில் 40% குறைபாடிருப்பின்,  இந்தாண்டைக் கடப்பதற்குள் நிச்சயமாய் பெண்டு கழன்றே போய் விடும் ! இக்கட்டான சூழ்நிலை guys !! உங்கள் புரிதலும், ஒத்துழைப்பும் இப்போதைய அவசரத் தேவைகள் !! Please !!

இரண்டாவது கோரிக்கை - இதழ்கள் பற்றிய உங்கள் அபிப்பிராயப் பகிர்வுகள் தொடர்பாக  !! ஒவ்வொரு மாதமும் 4 இதழ்கள் எனும் பொழுது எங்கள் சக்கரங்கள் தொடர்ச்சியாய் சுழன்று கொண்டே இருந்தாக வேண்டும் ! இது போன்ற நிலையில்  எங்கள் ரசனைகளில் ஒரு செக்குமாட்டுத்தனம் தோன்றிட வாய்ப்புகளுண்டு ! So ஒவ்வொரு இதழையும் படித்தான பின்னே, சின்னதாய் நாலு வரிகளில் உங்கள் எண்ணங்களைத் தெரிவித்தால் - நம் பயணப் பாதை சரி தானா ? அல்லது செக்குமாடுகள் போல சுற்றிச் சுற்றி வருகிறோமா ? என்ற புரிதல் பிறக்கும் எங்களுக்கும் ! பாராட்டுக்களோ ; குறைகளின் வெளிப்பாடுகளோ - we would love to hear more from you folks ! சமீப வாரங்களில் பின்னூட்டங்களின் எண்ணிக்கைகள் குறைவதில் எனக்குப் பெரிதாய் கிலேசமில்லை ; ஒற்றை ஆளாய் நானே ஆதாம்-ஏவாள் காலத்திலிருந்து  தொடர்ந்து எழுதி வரும் நிலையில் ஓரளவுக்கு மேல் திகட்டல் தலைதூக்குமென்பது  இயல்பே ! அது மட்டுமன்றி - Whatsapp காமிக்ஸ் க்ரூப்கள் நிறைய உள்ள நிலையில் கருத்துப் பரிமாற்றங்களுக்கு இங்கு தான் அனைவரும் குழுமியாக வேண்டுமென்ற கட்டாயமும் கிடையாது !  So இதர சமயங்களில் am not too worried !  ஆனால் - இதழ்கள் வெளியாகும் வேளைகளிலும் ஒருவித மௌன / மந்த நிலை இங்கே நிலவிடின் - காமிச்ஸே ஓவர்டோஸ் ஆகிப் போகிறதோ ? என்ற பயம் தலைதூக்குவதை தடுக்க இயலவில்லை ! கார்ட்டூன் ; டெக்ஸ் கதை வரிசைகள் ; அக்ஷன் கதைகளென வெவ்வேறு பாணிகளில் மாதம்தோறும் variety meals பரிமாறும் போதும் பந்தியில் விறுவிறுப்பின்றிப் போகும் பட்சத்தில் அது நிச்சயமாய் சரி செய்யப்பட வேண்டியதொரு நிலையாகிடாதா ? See you around soon ! Bye for now !! 

Friday, January 01, 2016

WELCOME 2016 !!


நண்பர்களே,

வணக்கம். "பதிவுகளில் சிக்கனம்" - புத்தாண்டின் கோட்பாடாய் இருந்திட வேண்டுமென்ற உத்வேகம் ஒரு பக்கமாய் மீசையை முறுக்கிக் கொண்டிருக்க, 'கெக்கே பிக்கே' சிரிப்போடு இன்னொரு பக்கம் கீ-போர்டை தட்டத் துவங்கி விட்டான் 'பதிவு பருத்திவீரன்"! அட..நேற்றைக்குத் தான் மாங்கு மாங்கென்று பதிவொன்றைப் போட்டுள்ள போது - புதுசாய் இன்றைக்கு என்ன சேதி சொல்லி பூமியைக் காப்பற்றப் போகிறாய் அப்பனே ? என்ற கேள்வி தலைக்குள் ஒலிக்கிறது ! As always, கீ-போர்டைத் தட்டும் போது மண்டைக்குள் சிந்தனைச் சக்கரங்களும் தாமாய் இயங்குமென்ற நம்பிக்கை தான் ! காத்திருக்கும் கதைகள்...நாயகர்கள்..திட்டங்கள்..அட்டவணைகள் பற்றியெல்லாம் பத்தி பத்தியாய் எழுதித் தள்ளி விட்டுள்ள நிலையில் திரும்பவும் அதே மாவை அரைத்திட ஆர்வம் எழவில்லை ! ஒரு மாற்றத்துக்கு - கொஞ்சம் லைட்டாக - ஒரு ஞானி அவதாரத்தைப் புனைய முனைகிறேன் ! "திரும்பிப் பார்க்கும் போது ; அந்த நொடியைக் கடந்து வந்தான பின்பு - நாம் அனைவருமே ஞானிகள் தான் !" எனும் போது -  here are some of my ஞானி moments !!

காலச் சக்கரத்தைத் திருப்பிட வாய்ப்புக் கிட்டிடும் பட்சத்தில் நான் செய்திட நினைக்கும் முதல் வேலை - "தங்கக் கல்லறையின்" மொழிபெயர்ப்பினைப் பட்டி டிங்கரிங் செய்திடாது - அதே பழைய கலவையோடு வண்ணத்தில் பிரசுரிப்பது ! இந்த இதழின் பொருட்டு உங்களில் ஒவ்வொருவரும் எத்தனை ஆவலாய்க் காத்திருந்தீர்கள் என்பதில் இரகசியம் ஏதுமில்லை ! But நமது புதுயுக மொழிமாற்றம் உங்களில் நிறையப் பேரை நோகச் செய்தது நம் வரலாற்றின் ஒரு பக்கம் ! இன்றளவும் புதிய மொழிநடை தான் தேவலை என்று நானும் கருணையானந்தம் அவர்களும், கருதினாலும் - உங்கள் அபிப்பிராயங்கள் was on the contrary ! 'எக்ஸ்ட்ரா நம்பர் போடச் சொன்னேனா ?' என்ற உங்கள் வெப்பச் சலனத்தைத் தவிர்த்திருக்க விழைவதே எனது முதல் பின்னோக்கிய ஆசையாக இருந்திடும் ! 
NBS எனும் ஒரு மைல்கல் இதழினை வெளியிட்டதும், அது நமக்கு உற்பத்தி செய்து தந்த உத்வேகமும் மறக்க இயலா விஷயங்கள் ! ஆனால் - நமது மறுவருகையின் துவக்க காலத்திலான அந்நாட்களில் எனக்குள் துயின்று கொண்டிருந்த டெய்லர் வீறு கொண்டு எழுந்ததும் அதே NBS தயாரிப்பின் வேளையிலும் தான் !  'சிவனே' என்று தீவொன்றில் மாடஸ்டி சூரியக் குளியல் போட்டுக் கொண்டிருக்க - சீற்றத்தோடு அவருக்குப் போட்டு விட்டேனே அந்தக் கோடுகள் - ஐயோ சாமி ! இன்றைக்கும் NBS-ஐப் புரட்டும் பொழுது புல்லரித்துப் போகின்றது !! கொடஸ்டியாய் மாறிப் போன மாடஸ்டியை - புனர்ஜென்மம் எடுக்கச் செய்ய விரும்புவதே எனது ஆசை # 2 !!

என்னையே முதலிலும், அப்புறமாய் உங்களையும் 'தெளிய வைத்துத் ..தெளிய வைத்துத் ' துவைத்துத் தொங்கப் போட்டதொரு அனுபவம் சிக்கியது கூட அதே காலகட்டத்தினில் தான் ! உபயதாரர்கள் நமது மாயாவிகாருவும்...கூர்மண்டை சேட்டனுமே ! "சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல்" பின்னாட்களில் நமது 'அதிகம் தேடப்படும் இதழ்கள்' பட்டியலினுள் இடம் பெற்றிடக் கூடும் தான் ; அந்தக் காதுலே புய்ப்பம் ரகக் கதைகளின் ஆர்வலர்கள் அதனைக் கொண்டாடக் கூடும் தான்- ஆனால் சத்தியமாய் அதன் எடிட்டிங்கின் போது - "சுலபமாய் சந்நியாசம் பெறுவது எவ்விதம் ?" என்ற நூல்களைத் தேடும் ஆர்வம் எனக்குள் ஊற்றடித்தது !! "ஐயோ..தெய்வமே..இதற்கொரு முடிவே இல்லியா ? என்று எண்ணும் விதமாய் பக்கம் பக்கமாய் "டமால்..டுமீல்...ழ்ழ்ழ்ழ்ழ்...ச்ச்ச்ச்ச்...சொய்ந்ங்..டும்" என்று ஒலி வசங்கள் எழுதியே என் பேனா முனை மழுங்கிப் போனது ! Given a choice - அந்த இதழின் பணிகளை மட்டும் நமது நண்பர் ஸ்டீல் பொன்ராஜிடம் ஒப்படைத்திருக்க ஆசை !! 
"பச்சை மாளிகைப்" படலமும் கொஞ்சம் மாறுதலோடு செயலாக்கிட வாய்ப்புக் கிட்டின் - would love to give it another shot ! நமது இதழ்களுள் நிறைய விவாதிக்கப்பட்ட இதழ்களுள் கிரீன் மேனரும் ஒன்று ! அதனை ஆங்கிலத்தில் வாசித்த பொழுது அந்தப் புராதன கதைக்களம் ; உயர்மட்டப் புள்ளிகளின் சிந்தனைகள் ; உரையாடல் பாணிகள் எல்லாமே striking ஆக இருந்தது மறக்க இயலா சங்கதி ! அதனைத் தமிழாக்கம் செய்திட அமர்ந்த போது - ராணியார் காலத்து இங்கிலாந்தில் நடக்கும் கதைக்களத்திற்கு புராதன ; தூய தமிழ் தான் பொருத்தமாக இருக்குமென்று உறுதிபட நம்பினேன் ! And I'm pretty sure that was right too ! ஆனால் சிக்கல் எழுந்ததே அதனை எழுதத் துவங்கிய பிற்பாடு தான் ! கொஞ்சம் கொஞ்சமாய் அந்த இலக்கியத் தமிழ் நடையின் போதைக்குள் நான் மூழ்கிப் போக..கிட்டத்தட்ட ஒரு முழு வாரத்திற்கு என் தலைக்குள் நான் சின்ன வயசில் பார்த்த அத்தனை RS மனோகர் புராண நாடகங்களின் வரிகளும் ஓடிக் கொண்டே இருந்தன !! "மைதீனாரே...இன்றைய  தினத்தின் அஸ்தமனத்துக்கு முன்பாய் அச்சு இயந்திரத்தினில் வர்ணப் பக்கங்கள் பயணிப்பதினை நான் தரிசித்தே தீர வேண்டும் !"  என்ற ரீதியில் ஆபீசிலும் நான் உளறிக் கொட்டாத குறை தான் ! அந்த மொழிநடை அந்தக் கதைக்குப்   பொருத்தமானதே என்ற ஒருசாராருக்கு தோன்றியிருக்கலாம் தான் ; ஆனால் புதிதாய் காமிக்ஸ் படிக்க நினைத்து அந்த இதழினைக் கையில் தூக்கியிருக்கக் கூடிய வாசகரை நினைத்துப் பார்க்கும் போது - பர்மாவின் கானகங்களில் கொஞ்ச நாட்கள் குப்பை கொட்டி விட்டு வரலாமாவென்று தோன்றும் ! ஓவர்டோஸ் ஆகிப் போனதை சீர் செய்ய வாய்ப்புக் கிட்டின் - அதுவே எனது ஆசை # 4 ஆக இருந்திருக்கும் !!

ஒரு வித மென்சோகம் கலந்த யுத்தக் கதைகள்...நிஜ நிகழ்வுகளின் கதையாக்கங்கள் எப்போதுமே எனது ரசனைப் பட்டியலில் உயரே இருப்பது வாடிக்கை ! So அவை உங்களுக்கும் பிடிக்குமென்ற எனது எதிர்பார்ப்பே நான் திருத்தி அமைக்க எண்ணும் விஷயம் # 5 ! "பிரளயத்தின் பிள்ளைகள்" 'ஆஹா..ஓஹோ..'வெனப் பாராட்டுப் பெறும் கதையாக அமைந்திடுமென்ற எதிர்பார்ப்பு எனக்குள் திடமாய்க் குடி இருந்ததால் - கதையினில் ஆங்காங்கே இருந்த பலவீனங்கள் எனக்குப் பிரதானமாய்த் தோன்றிடவில்லை ! அது வெளியான பின்பு - உங்களில் ஒருசாரார் - விழுங்கவும் முடியாது ; துப்பவும் தெரியாது விழித்த கொடுமை நிச்சயம் என் ஞாபகங்களின் பெட்டகங்களிளிருந்து தப்பிடவில்லை ! "காமிக்ஸ் படிப்பதே எங்கள் பிடுங்கல்களை மறக்கத் தான் ; இதில் ஊரான் வீட்டு அழுகாச்சியை நான் கேட்டேனா ?" என்ற கேள்விக்கு இடம் தந்திடாதிருப்பின் - சந்தோஷப்பட்டிருப்பேன் !

"சிப்பாயின் சுவடுகளின்" இறுதியினில் மொழிபெயர்ப்பினில் நமது அணி சறுக்கியிருந்ததையும், அதனை நான் கவனிக்கத் தவறி இருந்ததையும் சரி செய்திட வாய்ப்புக் கிட்டின் - that would be # 6 !!  "சிரமமான கதைகள்" பட்டியலில் நிச்சயமாய் உயரே ஒரு இடம் பிடிக்கும் ரகத்திலானவை -அந்தக் கதையின் பணிகள் ! அதனில் 95% கழுதைப் பொதியைச் சுமந்தான பின்னே - இறுதி 5%-ல் விட்ட கோட்டை இன்றைக்கும் என்னை உறுத்தும் ஒரு விஷயம் ! அழிரப்பர் இருக்கா guys - பின்னே சென்று தவறை சரி செய்து விட்டுத் திரும்பிட ?

இப்போது நினைத்தாலும் - என்னை நானே உதைத்துக் கொள்ளும் சம்பவம் - KAUN BANEGA TRANSLATOR - 1-ன் சமய நிகழ்வுகள் ! "மதியில்லா மந்திரி" குட்டி சாகசம் ஒன்றினை மொழிபெயர்க்கும் போட்டியினை அறிவித்து விட்டு - சுமார் 30 பேர் பங்கேற்றான பின்பு - அதனில் "பிரமாதம்" என்று சொல்லும் விதமாய் ஏதுமில்லை என்ற அறிவிப்போடு - நானே அந்தக் கதையினை மொழிபெயர்த்தும்  இதழினை வெளியிட்டிடத் தயாரும் ஆகி இருந்தேன் ! நேராக ஸ்டம்பை நோக்கி வந்த பந்தை ஆடாமல் விட்டு க்ளீன் போல்டான ஹாஷிம் அம்லாவைப் போல அந்த வேலையினில் எனக்கு brain freeze நிகழ்ந்திருக்க வேண்டுமென்பதைத் தவிர - வேறு விளக்கங்கள் எதையும் என்னால் முன்வைக்க முடியவில்லை ! எந்தக் கடவுளின் புண்ணியமோ - நிதானம் கொஞ்சமாய் திரும்பி - அப்புறம் ஒரு குட்டி புக்லெட் வடிவில் வாசக மொழிபெயர்ப்பினையும் வெளியிட்டு பிராயச்சித்தம் தேட முடிந்தது !! Definitely a moment to erase !!

அதே போலொரு கூமுட்டைத்தனம் நிகழ நான் இடம் தந்தது சென்றாண்டின் சமயம் ! நமது திருப்பூர் முன்னாள் முகவரிடமிருந்து விற்பனையாகா 15 வருடப் பழைய இதழ்களை பொட்டலம் கட்டிக் கொண்டு வந்து ஆபீசில் இறக்கிய போது - 'அட..இதை பதிவில் போட்டு நண்பர்களை உற்சாகம் கொள்ளச் செய்ய வேண்டியது தான் !" என்று மகா சிந்தனைக்குச் சொந்தம் கொண்டாடினேன் ! ஆனால் மறு நாள் பகலில் நமது ஆபீசே ரணகலமாகிப் போனதைப் பார்த்த பொழுது தான் நான் சொதப்பியதன் பரிமாணம் புரிந்தது ! இருந்ததோ 9000 ரூபாய்க்கான இதழ்கள் ; அதனைக் கோரி வந்திருந்த ஆர்டர்களோ 100-கும் அதிகமாய் ; அதுவும் முதல் நாளிலேயே ! விடிய விடிய உட்கார்ந்து மின்னஞ்சல் அனுப்பியோரின் நேரங்களை நோட் செய்து - வரிசைக்கிரமம் பண்ணி - 'முதலில் வந்தோருக்கு முன்னுரிமை' என்று ஏதோ நான் பட்டியல் போட்டுத் தர - அதுவும் ஒரு புத்தம்புது சர்ச்சைக் காலமாகிப் போனது ! "தெரிஞ்சவங்களுக்கு முன்னுரிமை !" என்று நண்பர்களுள் யாரோ ஏமாற்றத்தில் திரிக் கொளுத்திப் போட - வாகை சிக்கிய சொட்டை மண்டையில் ஒருவண்டி மிளகாய் மீண்டும் அரவையானது ! ஐயோ சாமி - அந்த இதழ்களை உங்க ஊரின் லைப்ரரிக்கே தூக்கிக் கொடுத்து விடுங்கள் !" என்று திருப்பு முகவரிடம் சொல்லாமல் போனோமே என்ற ஏக்கம் தான் எனது moment to change # 8 !!

இன்னுமொரு சான்ஸ் கிட்டின் - நான் தவிர்த்திருக்க எண்ணியிருப்பேன் - நமது இரவுக் கழுகாரின் KING SPECIAL இதழினை !! போனோமோ- வில்லனை சாத்தோ சாத்தென்று சாத்தினோமா...ஒரு லோடு தோட்டாக்களைக் காலி செய்தோமா என்றில்லாது - மெக்சிகப் புரட்சி ; வரலாற்று லிங்க் ; என்று எங்கெங்கோ பயணம் சென்ற டெக்சின் இந்த இதழை ரசிக்க ரொம்பவே சிரமமாக இருந்தது ! பற்றாக்குறைக்கு ராப்பரில் டிராபிக் constable போல நின்ற டெக்ஸ்- !!  மொக்கைக் கதைகளொன்றும் நமக்குப் புதிதல்ல தான் எனினும் - சூப்பர் சித்திரங்கள் ; பார்வைக்கு அட்டகாசமான ஆக்ஷன் என்றெல்லாம் ஓடிய நமது டாப் ஹீரோவின் சாகசம் இப்படிப் பப்படம் ஆனதில் மனது ரொம்பவே சலனமானது ! Moment to change # 9 !!

மொக்கைக் கதைக்கு வாய்ப்புத் தந்தது ஒரு சங்கடமெனில் - சூப்பர் தொடர் ஒன்றினை aggressive ஆக உங்களிடம் திணிக்க முயற்சிக்காது போன தவறைச் செய்தவனாவேன் - தோர்கலின்   கதையில் !! Fantasy கதைகளை நீங்கள் எவ்விதம் ஏற்பீர்களோ என்ற கலக்கத்தில் ஒரு prime நாயகரை ஓரத்தினில் நடை பயிலச் செய்திட நேர்ந்தது ! And அதன் பலனாய் 2016-ன் mainstream சந்தாவில் அவருக்கு இடமில்லாது போயுள்ளது ! இன்னும் கொஞ்சம் தைரியமாய் இந்தத் தொடரினை முன்னிலைப்படுத்த விரும்புவதே - எனது wish to change # 10 !!

இதே போல் இன்னமும் சின்னச் சின்ன விஷயங்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம் தான் ; ஆனால் ஞானிகளும் கொட்டாவி விடத் துவங்கும் போது "சுப மங்களம்" தான் அடுத்த வரியாகிட வேண்டுமேம்ற ஆர்வம் எழுகிறது  !! புலர்ந்திருக்கும் புது வருடத்தினில் - அனுபவங்கள் தந்த பாடங்கள் திரும்பவும் இது போன்ற boo -boo க்களைத் தவிர்த்திடும் திறமையை நமக்கு நல்கிடும் என்ற நம்பிக்கையோடு தூங்கச் செல்கிறேன் ! ஜாலியான இந்தப் பதிவை ஜாலியாகவே மாத்திரம் பார்த்து / படித்து விட்டு - ஜனவரியின் இதழ்களின் பக்கமாகவே கவனத்தைத் தொடர்ந்திடக் கோருகிறேன் ! நடுச்சாமத்து எனது பருத்திவீரப் பதிவுகளை விட - முன்செல்லும் பாதையே பிரதானம் என்பதால் நமது பார்வைகள் அங்கே நிலைகொண்டிருக்கட்டுமே !!

புலர்ந்திருக்கும் புது வருஷம் நமக்கெல்லாம் ஒரு வரம் தரும் ஆண்டாய் அமைந்திட வேண்டிக் கொள்வோமே !! Bye for now folks !!

P.S : புத்தம் புதியதொரு கௌபாய் தொடர் - தெளிவான சித்திரங்கள் + clean action சகிதம் கிட்டியுள்ளது ! அதனை எங்கு - எவ்விதம் நுழைப்பது என்ற குழப்பம் அடியேனுக்கு ! தற்போதைய தொடர்கள் கொஞ்சம் முற்றுப்புள்ளி காணும் சமயம் புதியவரைக் களமிறக்கலாமா ? அல்லது - இப்போதேவா ? என்ன நினைக்கிறீர்கள் all ?