வணக்கம். 'கல்யாணத்தைச் செஞ்சு பார்...வீட்டைக் கட்டிப் பாரு...! ' என்று முதன்முறையாக பெருமூச்சு விட்டுக் கொண்ட புண்ணியவான் யாரோ தெரியாது ; ஆனால் அவர் அனுமதித்தால் - 'வருஷத்தின் இறுதி மாதங்களில் ஒரு வண்டி காமிக்ஸ் இதழ்களைத் திட்டமிட்டுவிட்டு ; தொடரும் நாட்களுக்கும் ஒரு அம்பாரப் புத்தகங்களை அட்டவணைக்குள் நுழைத்து விட்டு முழி பிதுங்கிப் பாரு !' என்ற வரிகளையும் சேர்ப்பதில் தப்பில்லை என்று சொல்லுவேன் ! தினுசு தினுசாய்க் கூத்துக்கள் கட்டுவதற்கு நாம் புதியவர்கள் அல்ல தான் ; ஆனால் டிசம்பர் '14 + ஜனவரி 15 -க்கான அட்டவணைகள் நமது அளவுகோள்களின்படிக் கூட ஓவரோ ஓவர் ! என்பதில் ஐயமில்லை ! So - ஒரு வழியாய் இந்தாண்டின் இறுதி வெளியீட்டின் பணிகளை முடிக்கும் இந்தத் தருவாயில் அந்நாட்களது ரயில் இன்ஜினைப் போல 'உஸ்ஸ்ஸ்' என்ற பெருமூச்சு விடுவதைத் தவிர்க்க இயலவில்லை ! இதோ 'நித்தமும் குற்றம்' செய்யும் இத்தாலிய anti -hero டயபாலிக்கின் அட்டைப்படத்தின் முதல் பார்வை !
முன்னட்டையில் கதைத் தலைப்பின் லெட்டெரிங்க் பாணியிலும், அளவிலும் கொஞ்சம் மாற்றங்கள் செய்துள்ள போதிலும், அந்த revised file வெளியூரில் சுற்றித் திரியும் என்னிடம் தற்சமயம் கையில் இல்லை ; நாளை ஊர் திரும்பியவுடன் அதனை replace செய்கிறேன் ! ஒரிஜினல் பதிப்பின் அட்டைப்பட டிசைனை லேசான பின்னணி வர்ண மாற்றங்களோடு அப்படியே பயன்படுத்தியுள்ளோம். பின்னட்டையோ நமது ஓவியரின் தயாரிப்பு ! சொல்லப் போனால் மாலையப்பனின் ஓவியத்தை முன்னேவும், ஒரிஜினலைப் பின்னேவும் போடத் தான் திட்டமிட்டிருந்தேன். ஆனால் KING ஸ்பெஷல் அட்டைப்படத்தில் எழுந்த - '
முன்னாடி தேவலை -பின்னாடி தேவலை ! ' பாணிச் சர்ச்சைக்கு திரும்பவும் இடம் தரப் பிரியப்படாமல் ஓசியான ஒரிஜினலை முன்னேவும், காசு கொடுத்துப் போட்டு வாங்கியதை பின்னேவும் இடம்பெயர்த்து விட்டேன் ! கதைப் பக்கங்களின் இத்தாலிய மொழிபெயர்ப்பு ரொம்பவே தாமதம் ஆகிப் போனதால் - இதர பணிகள் நிறைவு பெற்றிட இன்னும் இரண்டல்லது, மூன்று நாட்கள் ஆகிடும் !
ஒரு மாதிரியாய் 2014-ன் இதழ்களை பெரியதாய்ப் பல மாற்றங்களின்றி வெளிக்கொணர முடிந்ததில் நிம்மதி மேலோங்குகிறது. கடந்து வந்துள்ள நாட்களை அசை போடும் முயற்சியில் தலைக்குள் எஞ்சி நிற்பது ஒரு வண்ணமயமான blur மாத்திரமே ! வருஷத்தின் முதல் மாதத்தை சுருக்கம் விழுந்த செவ்விந்தியனின் முகத்தோடும் (யுத்தம் உண்டு ; எதிரி இல்லை !) ; மடிப்புக் கலையா ப்ரூனோ பிரசிலோடும் சென்னைப் புத்தக விழாவினில் துவங்கியது நேற்றைய நிகழ்வு போல் பட்டாலும், தொடர்ந்துள்ள 365 நாட்களில் சுமார் 42 கதைகளை தரிசித்திருக்கிறோம் எனும் போது நாட்களின் வேகம் வாய் பிளக்கச் செய்கிறது ! முன்னே ஒரு புத்தாண்டும் , இன்னும் விசாலமானதொரு அட்டவணையும் காத்திருக்கும் போதிலும், கொஞ்சமே கொஞ்சமாய் நேரம் எடுத்துக் கொண்டு கடந்து வந்துள்ள இந்தாண்டின் அனுபவங்களை அசை போடுவதில் தப்பில்லை என்று தோன்றியது ! So 2014-ன் நம் இதழ்களை நீங்களும், நானுமாய் rate செய்திடும் வாரமாய் இதனை அமைத்துக் கொள்வோமே ?!
எடுத்த உடனேயே மனதில் எழுந்து நிற்கும் முதல் கேள்வியானது -
2014-ன் டாப் 3 இதழ்களாக எவை இருந்திட முடியும் என்பதே...! LMS எனும் முரட்டு இதழை இங்கே ஒரு மொத்த இதழாகப் பார்த்திடாமல் - அதனில் வெளியாகியிருந்த 9 கதைகளையும் தனித்தனியாய் ஒரு ஆக்கமாய்க் கருத்திடலாம் என்ற கோரிக்கையோடு - இந்தாண்டின் சில சிலாகிக்கப்பட்ட கதைகளை இங்கே பட்டியல் போடுகிறேன் - உங்கள் நினைவலைகளை தட்டிக் கொடுக்கும் விதமாய் :
- நில்..கவனி.. சுடு! ( டெக்ஸ் )
- எஞ்சி நின்றவனின் கதை (ஷெல்டன்)
- விரியனின் விரோதி..! (மங்கூஸ்)
- ஆத்மாக்கள் அடங்குவதில்லை ! (மேஜிக் விண்ட்)
- கட்டத்துக்குள் வட்டம் (மர்ம மனிதன் மார்டின )
- அந்தி மண்டலம் (Dylan Dog)
- கார்சனின் கடந்த காலம் (டெக்ஸ்)
- ஒரு நிழல் நிஜமாகிறது (லார்கோ)
- இரவே..இருளே..கொல்லாதே...(கிராபிக் நாவல்)
- வானமே எங்கள் வீதி...! (கிராபிக் நாவல்)
வெளியான வேளைகளில் துடிப்பான விற்பனையையும், பரவலான பாராட்டுக்களையும் பெற்ற இதழ்கள் என்ற ரீதியில் தான் இந்தப் பட்டியலைப் போட்டுள்ளேனே தவிர, எவ்விதத் தரவரிசையிலோ ; எனது favorites இது தான் என்ற ரீதியிலோ இந்த லிஸ்ட் அமைந்திடவில்லை ! இவற்றில் எவையுமே உங்களின் டாப் 3 பட்டியலில் இடம்பிடிக்காது - முற்றிலும் வேறு இதழ்கள் / கதைகள் உங்கள் ரசனைகளைக் கவர்ந்தவையாக இருந்தாலும் அதை நீங்கள் பதிவிடலாம் ! என்ன தான் வருஷம் முழுவதும் உங்கள் தோள்களில் தொற்றிக் கொண்டு சவாரி செய்து கொண்டிருக்கும் வேதாளமாய் நான் தொடர்ந்தாலும், உங்கள் ரசனைகளுக்கொரு insight கிடைக்கும் இது போன்ற சமயங்கள் நமது இதழ்களின் பயணப் பாதைகளை நிர்ணயம் செய்ய ரொம்பவே உதவும் !So மனதில் தோன்றுவதை பளிச் என பகிர்ந்திடலாமே - ப்ளீஸ் ?!"
பெரும்பான்மையான சக நண்பர்களுக்குப் பிடித்தவையே நமது தேர்வுகளாகவும் இருக்க வேண்டும் ; மாறுபட்டுத் தெரிந்தால் விமர்சனங்கள் எழலாம்!" என்ற ரீதியிலான விசாரங்கள் ஏதுமின்றி - மனதுக்குப் பட்டதை பதிவு செய்தல் நிஜமாய் நமக்கு உதவும் என்பதை மறந்திட வேண்டாமே !
டாப் 3 எவை ? என்ற கேள்வி அடங்கிய மறு கணமே எழுந்திடுவது - இந்தாண்டின் டாப் 3 சொதப்பல்கள் எவை ? என்ற கேள்வி தானே ? நிச்சயமாய் இங்கே நான் suggestions எடுத்துக் கொடுக்கும் அவசியம் பெரிதாய் இராதென்பது உறுதி ; வெவ்வேறு காரணங்களுக்காய் அவரவர் மனதுகளில் வெவ்வேறு boo-boos மேலோங்கி நிற்பது நிச்சயம்! So
2014-ன் மொக்கை பீஸ்கள் எவையோ - உங்கள் பார்வைகளில் ? And more importantly - why ?
Moving onto
QUESTIONS # 3 & 4 :
2014-ன் பிரமாதமான அட்டைப்படம் எதுவென்றும் ; படு சுமாரான அட்டைப்படம் எதுவென்றும் தேர்ந்தெடுப்போமா ? Again, ரசனை சார்ந்த இந்தத் தேர்வுகளுக்கு எனது prompts அவசியமாகாதென்று நினைக்கிறேன் !
அதே போல 2014-ல் நிறையவே அறிமுகங்களை நாம் சந்தித்துள்ளோம் ! டைலன் டாக் ; டிடெக்டிவ் ஜூலியா ; ரிண்டின் கேன் ; மேஜிக் விண்ட் ; தோர்கல் என்று ! ஒருவர் திகில் நாயகர் ; இன்னொருவர் கிரிமினாலஜிஸ்ட் ; இன்னொன்றோ ஒரு மொக்கை நாய் ; மற்றவர் செவ்விந்தியக்/ கௌபாய் என்ற ஈதியில் ஒவ்வொரு அறிமுகமும், வெவ்வேறு genre -ன் பிரதிநிதி என்பதால் ஒருவருக்கொருவர் எவ்வித ஒற்றுமையோடும் இருக்கப் போவதில்லை ! ரசனைகளின் அடிப்படையில் யாரை
2014-ன் சிறந்த புதுமுகமாய்த் தேர்வு செய்வீர்கள் folks ?
(QUESTION # 5)
சென்றாண்டும் கேட்டகேள்வி தான் இது ; தொடரும் ஆண்டிலும் கேட்க வேண்டிய அவசியத்தை உருவாக்கப் போகும் கேள்வியும் கூடவே...! இருந்தாலும் கேட்காமல் இருப்பது நியாயமாகாது என்பதால் - here goes :
இந்தாண்டிலும் நமது 'தல' யின் ஆக்கிரமிப்பே ஜாஸ்தி நமது இதழ்களில்..! விற்பனையில் துளியும் திகட்டல் தரா நாயகர் ; அதிரடிகள் நிறைந்த கதை பாணிகளில் இன்றைய # 1 என்றாலும் டெக்சின் கதைகளை ஓவராய் போட்டு வருவதாய் நினைக்கத் தோன்றுகிறதா ? டெக்ஸ் கதைகளின் மீது லேசாகவேணும் சலிப்புத் தோன்றுகிறதா ? 'தல-தளபதி' தரப்புகளும் மிகைப்படுத்தல்களின்றி QUESTION # 6-க்குப் பதில் சொன்னால் மகிழ்வேன் !
QUESTION # 7 : 'இவரது கதைகள் நன்றாக இருப்பினும், இவருக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன ; அல்லது திறமைகேற்ற அளவிற்கு வாய்ப்புகள் தரப்படவில்லை !' என்ற ரீதியில் 2014-ன் நாயகர்கள் யாரைப் பற்றியேனும் நினைக்கத் தோன்றுகிறதா ? அல்லது திறமை-வாய்ப்பு விகிதம் சரியாகவே உள்ளதா சகலருக்கும் ?
QUESTION # 8 : முந்தய ஆண்டோடு ஒப்பிடுகையில் நாம் ரசனைகளில் எங்கே நிற்கிறோம் ? நிஜமாய் முன்னேறி இருக்கிறோமா எவ்விதங்களிலாவது - அல்லது அரைத்த மாவையே இன்னும் கலர் கலராய் அரைத்து வருகிறோமா ? மாற்றம் ஏதேனும் உண்டென்று சொல்வதாயின் - அது எதுவாக இருக்கும் ? கொஞ்சம் பொறுமையாய் இதற்கு பதில் ப்ளீஸ் ?
QUESTION # 9 : மேலோட்டமாயின்றி - இந்தாண்டின் 45+ கதைகளையும் கொஞ்சமாய் தலைக்குள் ஒரு slideshow போல ஓட விட்டுப் பாருங்களேன்...2014-ன் HIGHLIGHT என்று சொல்லத் தோன்றும் கணம் எதுவாக இருக்கும் ? ( இது முதுகை சொறிந்து விடக் கோரும் கேள்வியல்ல guys ; நிஜமாக உங்களை மகிழ்வித்த தருணம் எதுவென்று தெரிந்து கொள்ளும் முயற்சி மட்டுமே)
QUESTION # 10 : THE YEAR IN TOTAL - இந்தாண்டின் ஒட்டு மொத்த அனுபவம் எவ்விதம் இருந்துள்ளது என்று நினைக்கிறீர்கள் ? விறுவிறுப்பு ; சுவாரஸ்யம் ; value for money ; variety ; புதுமைகள் போன்ற முக்கிய அம்சங்களில் இந்தாண்டின் நமது performance-ஐ எவ்விதம் ரேட் செய்வீர்கள் ? இங்கே சின்னதாய் ஒரு கோரிக்கை ப்ளீஸ் : 'பளிச்' என மனதில் தோன்றும் முதல் அபிப்ராயங்களைப் பதிவிடுங்களேன் ? விமர்சகர் என்ற தொப்பிகளைத் தேடிப் பிடித்து மாட்டிக் கொண்டு பகிர்ந்திடும் சிந்தனைகளை விட, உங்களின் அந்த முதல் அபிப்ராயங்களுக்கு ஒரு freshness அதிகம் என்பது எனது நம்பிக்கை ! (குட்டுக்கள் வைக்காதீர்கள் என்ற அர்த்தத்தில் நிச்சயமாய் நான் இதைச் சொல்லவில்லை !!)
QUESTION # 11 : இந்தக் கேள்வியானது வலைக்குள் உலவும் நம் நண்பர்களுக்கு மாத்திரமே ! இந்தாண்டிலும் நெருக்கி 65+ பதிவுகளைப் போட்டு உங்களைத் தாக்கித் தள்ளியிருப்பதை வலப்பக்கமுள்ள போஸ்ட்ஸ் எண்ணிக்கை பறைசாற்றுகிறது ! இந்த ஒட்டு மொத்த பட்டியலில் பெரும்பான்மை மாமூலான மாதாந்திர வெளியீட்டு முன்னோட்டங்களும், அறிவிப்புகளுமே என்பது நமக்குத் தெரியும் தான் ! அந்த routine சமாச்சாரங்களைத் தாண்டி சுவாரஸ்ய மீட்டரில் டாப் இடத்தைப் பிடித்த பதிவாய் எதைச் சொல்லுவீர்கள் ? Care to share ? (இந்தக் கேள்விக்கு பதில் சொல்லுவது optional மட்டுமே ; பாக்கி 10-க்கும் விடை தெரிந்தால் மகிழ்வோம் ! )
Shifting focus - ஜனவரியின் முதல் batch -ல் கீழ்க்கண்ட இதழ்கள் உங்களைத் தேடி வந்திடும் :
- டைலன் டாக் - "நள்ளிரவு நங்கை !"
- டயபாலிக் - "நித்தமும் குற்றம்"
- லக்கி லுக் - "ஒரு ஜென்டில்மேனின் கதை"
- ப்ளூ கோட்ஸ் - "சிறைக்குள் ஒரு சடுகுடு"
- மாடஸ்டி - "நிழலோடு நிஜ யுத்தம்"
இவையனைத்தும் ஜனவரி 2-ல் டெஸ்பாட்ச் செய்யப்படும் !
ஜனவரி 9-ல் புறப்படப் போகும் பாக்கி 5 இதழ்களும் இதோ :
- பௌன்சர் - ரௌத்திரம் பழகு
- நயாகராவில் மாயாவி
- ஸ்பைடர்
- பெய்ரூட்டில் ஜானி
- வான்வெளிக் கொள்ளையர்
நமக்குச் சென்னைப் புத்தக விழாவினில் ஸ்டால் கிடைக்கும் பட்சத்தில் - சனிக்கிழமையன்று (10-ஜனவரி) இந்த 5 இதழ்களும் ஸ்டாலில் விற்பனைக்குக் கிடைக்கும். So 5+5 என்ற பார்முலாவொடு தொடங்கக் காத்திருக்கும் புத்தாண்டின் முதல் டீசர் இதோ :
வழக்கம் போலவே லக்கியின் வண்ண சாகசம் செம 'பளிச்' வர்ணங்களில் அமைந்துள்ளது ! கதையும் சுவாரஸ்யமாய் ; இதுவரையிலான லக்கி பாணியில் இல்லாது அமைந்துள்ளது highlight ! ஆங்கிலத்தில் இதனைப் படித்திருகா நண்பர்களுக்கு நிச்சயம் ஒரு சுவாரஸ்யமான இதழாக அமையுமென்பது உறுதி ! ஒரிஜினல் முன் + பின் அட்டைகள் லேசான வர்ண மாற்றங்களோடு மாத்திரமே ! சந்தா புதுபித்தல்களை இனியும் தாமதமின்றிச் செய்ய இதுவொரு அழகான காரணம் என்பேன் !
மின்னும் மரணம் முன்பதிவுகளும் ஒரு second wind பிடித்துக் கொண்டு மீண்டும் விறுவிறுப்பு அடையத் தொடங்கியுள்ளது சந்தோஷச் சமாச்சாரம் ! காதல் பித்துப் பிடித்து தடுமாறும் கேப்டன் டைகரைப் பார்த்திடக் காத்திருக்கும் நண்பர்களுக்கு - இதோ அதன் லேட்டஸ்ட் ட்ரைலர் !
அப்புறம் புதுவையில் துவங்கியுள்ள புத்தக விழாவில் 'அட்டகாசம்!' என்ற ரீதியில் இல்லாவிடினும், "pretty decent " என்று சொல்லும் விதமாய் வரவேற்பும், விற்பனையும் அமைந்துள்ளது இன்னுமொரு சந்தோஷ update ! அங்கும் 'இரும்புக்கை மாயாவி இல்லியா-இல்லியா? ' என்ற கானமே ஓங்கி ஒலிப்பதாய் நம்மவர்கள் சொன்னார்கள் ! தவிர, நமது இதழ்களைப் பார்த்து விட்டு விழாவின் அமைப்பாளர்களே மகிழ்ந்துள்ளனராம் ! நமது ஸ்டால் # 48-ஐக் குறிப்பிட்டு குட்டியாய் போஸ்டர்கள் தயார் செய்து விழாவின் அரங்கில் அத்தனை இடங்களிலும் ஒட்டி வைக்குமாறு அவர்களே நமக்கு suggest செய்துள்ளனராம் ! வரும் ஜனங்கள் அனைவருக்கும் நமது ஸ்டால் ஒரு stopover ஆக அமைந்திட வேண்டுமென அவர்களே விரும்பியுள்ளது மிகவும் சந்தோஷமாய் உள்ளது ! See you soon folks ! Bye for now !