Tuesday, September 30, 2014

ஒரு மழை நாளின் நன்றிகள் !

நண்பர்களே,

வணக்கம். நேற்றைய மாலை அக்டோபரின் சந்தாப் பிரதிகளை கூரியர்களில் அனுப்புவதே ஒரு பெரும் சாகசமாய்ப் போய் விட்டது ! சனிக்கிழமை மதியம் வரை கார்சனின் கடந்த காலம் அச்சுப் பணிகள் நடந்து கொண்டிருக்க, பைண்டிங்கிலோ "வீதியெங்கும் உதிரம் " ஓடிக் கொண்டிருந்தது ! 'திடு திடுப்பெனக் ' கடையடைப்பு ; சங்கடமான சூழல் என்றானவுடன் கதவுகளைப் பூட்ட வேண்டிய நெருக்கடி ! 'சரி..இம்முறை கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியப் போவதில்லை ...அசடு வழிய என்ன வழி ? என்று யோசிக்கத் தொடங்கினேன் ! 'இரவில் பணி செய்ய வாய்ப்புக் கிட்டுகிறதா - பார்ப்போம் என நம்மவர்களிடம் மெதுவாய்க் கேட்டுப் பார்த்தேன் ; துளியும் தயக்கமின்றி அச்சகப் பிரிவினர் இரவில் ஆஜராகி விட்டனர் ! ராக்கூத்து முழு வீச்சில் அரங்கேற ஞாயிறு காலையில் பக்கங்கள் சகலத்தையும் தயார் செய்தும் விட்டோம் ! அதே போல நமது பைண்டிங் கான்ட்ராக்டரிடமும் ஞாயிறு வேலை செய்து தர முடியுமா என ஒரு கொக்கியைப் போட்டு வைத்திருந்தேன் ; 'சரி' என்று அவர் தலையசைத்திருந்த போதிலும் எனக்கு நம்பிக்கை குறைவாகவே இருந்தது ! ஆனால் ஞாயிறு காலையில் 'டாண்' என அவர்களும் வந்து மடிப்பு இயந்திரத்தில் வேக வேகமாய் கா.க.கா. பக்கங்களை மடிக்கத் துவங்க ; திங்கள் பகல் பொழுதில் சுடச் சுட 3 இதழ்களுமே நம் ஆபீசில் இருந்தன !! புத்தகங்கள் வந்து மட்டும் கதைக்கு ஆகாதே - அவற்றை டெஸ்பாட்ச் செய்யவும் வேண்டுமல்லவா ? மதிய உணவிற்கு 10 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக் கொண்டு அத்தனை பேரும் பேகிங் பணிகளில்  பம்பரமாய் சுழல - பிற்பகலில் கூரியர் அலுவலகங்களை முற்றுகை இட முடிந்தது ! இரவு வீட்டுக்குச் செல்லும் போது தலைக்குள் ஒற்றை சிந்தனை மட்டுமே - "எப்படி இருந்த நாங்கள் - இப்படியாகி விட்டோமே ?!!" இலக்குகளை நிர்ணயம் செய்வது ; அந்தத் தேதிக்குள் பணிகளை முடிப்பது ; என்பதெல்லாம் சமீப காலங்கள் வரை நமக்கு ரொம்பவே அந்நியமானவை ! ஆனால் இங்கு நிலவும் அந்த உற்சாக எதிர்பார்ப்பும்  ; ஒரு மாதத்து இதழ்கள் வெளியாகி, மறு மாதத்துப் பிரதிகள் வரும் வரை நிலவும் அந்த வெற்றிடத்தை நிரப்ப வேண்டிய அவசியமும் ஒன்றிணைந்து எங்களது குட்டி டீமுக்கு சிறகுகளை நல்குவது புரிகிறது ! Thanks all - for driving us on..! 

இம்மாத இதழ்களின் பின்னணியில் எங்கள் டீமின் சாகசங்கள் இன்னமும் கூட உள்ளன ! 'அதைக் கிழித்தேன் ; இதைப் பாய்ந்தேன்!' என நான் விடும் வழக்கமான உதார்களின் மத்தியினில் கொஞ்சமாய் நேரம் எடுத்துக் கொண்டு எங்கள் அணியின் பணிகளைப் பற்றி சிலாகித்துக் கொள்கிறேனே ?!! நமக்குப் பிரதானமாய் டைப்செட்டிங் செய்து கொண்டிருந்த பெண்மணிக்குத் திருமணம் என சமீபத்தில் நான் இங்கு எழுதியது நினைவிருக்கலாம் ! பெண்ணுக்குத் திருமணமாகி ஊர் விட்டுச் செல்கிறாளே ! என பெற்றோர் கலங்கினார்களோ - இல்லையோ ; நான் ரொம்பவே கவலைப்பட்டேன் ! துவக்கத்தில் கொஞ்சமாய்த் தடுமாறினாலும், பின்னாட்களில் நமது தேவைகளை ; அவசரங்களை ; அந்தர்பல்டிகளைத் தெளிவாய்ப் புரிந்து கொண்டு அழகாய்ப் பணி செய்த பொறுமைசாலி ! கடந்த 2.5 ஆண்டுகளில் நமது பணிகளின் 70% செய்த புண்ணியம் அவரையே சாருமெனும் போது - திடுதிடுப்பென அவருக்கொரு replacement தேடுவதில் நிறையவே மொக்கை போட்டோம் ! ஆனால் இன்றைய கணினியுலகில் திறமைசாலிகளுக்கா பஞ்சம் ? ரமேஷ் என்றதொரு டிசைனர் நம்மிடம் தற்போது பணியாற்றி வருகிறார் - மிகவும் திறன்படவே ! இம்மாதத்து கா.க.கா. ராப்பர் ; காலனின் கைக்கூலி உட்பக்க டைப்செட்டிங் என அனைத்தும் அவரது கைவண்ணங்களே ! இவர் தவிர நமது அலுவலகத்தில் இன்னும் இரு புதுமுகங்கள் டெஸ்பாட்ச் மற்றும் மார்க்கெட்டிங் பணிகளுக்காக இணைந்துள்ளனர் ! சுகவீனத்திலிருந்து சிறுகச் சிறுகத் தேறி வரும் நமது மூத்த பணியாளர் இராதாகிருஷ்ணன் இனி முழு நேரமும் பணியாற்றும் பொறுப்பில் இருக்கப் போவதில்லை ; வாரம் இரண்டல்லது ; மூன்று நாட்கள்  மட்டுமே வந்து செல்வார் ! அவரது இடத்தை இட்டு நிரப்பும் பணியினை அற்புதமாய்ச் செய்து வருவது ஸ்டெல்லா தான் ! தினமும் ஒலிக்கும் நம் தொலைபேசிகளை சமாளிப்பது முதல், சந்தாப் பிரதிகளின் அனுப்புதல் ; முகவர்களின் ஆர்டர்களைக் கவனிப்பது என 'ஆல்-இன்-ஆல்' இவரது பொறுப்பே ! Pre Production-ல் சகலமும் மைதீன் எனில் ; Post Production-ல் அத்தனை பொறுப்புகளும் ஸ்டெல்லாவுக்கே ! இது போன்றதொரு dedicated ஒத்தாசை இருக்காவிடின் நான் சுவற்றைப் பிறாண்டத் தான் அவசியமாகியிருக்கும் ! Thanks my team !!


கா.க.கா.வின் அட்டைப்படம் இதோ - மாலையப்பன் + நமது டிசைனர் ரமேஷின் கூட்டணிக் கைவண்ணத்தில் ! இந்த டிசைன் 2015-ன் பிறிதொரு டெக்ஸ் சாகசத்திற்காக வரையப்பட்டதொன்று ; கா.க.கா.விற்கென வரையப்பட்ட ஓவியம் எனக்கு கொஞ்சம் நெருடலாகவே இருந்ததால் - கடைசி நிமிட switch இது ! 'மண்டை ஓட்டிற்கு இங்கென்ன வேலை ?' என்ற யோசனைக்கு நேரமிருக்கவில்லை என்பதால் டெக்ஸ் + கார்சனோடு திருவாளர் மண்டையாரும் அட்டையில் ஆஜர் ! கா.க.கா. இதழும் ஒரு விதத்தினில் one-off ! இந்தப் பக்க எண்ணிக்கைகளுக்கும் - விலைக்கும் துளியும் சம்பந்தமோ - ஒப்பீடோ கிடையாது ! சந்தாத் தொகைக்குள் இதனை இணைத்ததாக வேண்டிய கட்டாயம் என்பதால் கால்குலேட்டரைத் தூரத் தூக்கிப் போட்டு விட்டோம் ! But - இதே சைஸ் ; பக்கங்களோடு இன்னுமொரு இதழ் வெளியாகும் வேளையில் விலை சத்தியமாய் நிரம்ப மாறுபடும் ! இப்போதைக்கு happy reading guys !!

COMING in 2015.....
அப்புறம் அந்த CAPTIONS எழுதும் போட்டி தொடர்கிறது ; புது பின்னூட்டங்களை இனி இங்கே   போட்டு வைத்தால் எனக்குத் தேடித் பிடிக்கும் பணி கொஞ்சம் மிச்சமாகும் ! Carry on the fun !!


விடுமுறைகளுக்கு முன்பாக இம்மாத இதழ்கள் மூன்றையும் உங்களிடம் கூரியர் அன்பர்கள் ஒப்படைத்து விடுவார்களென்ற நம்பிக்கையோடு இப்போதைக்கு விடை பெறுகிறேன் ! காலனின் கைக்கூலி இதழைப் பற்றிய உங்கள் அபிப்ராயங்களை அறிந்திட எக்ஸ்ட்ரா ஆவலாய்க் காத்திருப்போம் ! (நம் அலுவலகம் வியாழன் & வெள்ளியில் விடுமுறை என்பதை நினைவூட்டுகிறேன் !) தீபாவளி மலரின் பணிகள் மேஜையில் நடுநாயகமாய்க் காத்திருப்பதால் அதற்குள் மூழ்கிடும் நேரமிது ! Adios amigos !

P.S : Facebook மற்றும் சமூக வலைத்தளங்களே புதிய தலைமுறையை எட்டிப் பிடிக்கும் சுலப வழி என்றாகிப் போன நிலையில் - உங்களது facebook நண்பர்களுக்கு நமது வலைப்பக்கங்களை share செய்திட்டால் காமிக்ஸ் பற்றிய விழிப்புணர்வு கொஞ்சமேனும் கூடிட வாய்ப்புண்டே ? Please do share our posts folks ! (ஜூனியர் எடிட்டர் முன்வைக்கச் சொன்ன கோரிக்கை இது ! :-) )

Sunday, September 28, 2014

கனவிலும்..நனவிலும்...!

நண்பர்களே,

வணக்கம். வானமும், பொதுவான ஊர் நிலவரமும் இருண்டு கிடக்கும் ஒரு ஞாயிறின் காலை வணக்கங்கள் ! 'திடு திடுப்'பென நேற்றைக்குப் பிற்பகல் கடையடைப்பு ; ஆபீஸ்களுக்கு விடுமுறை என்றதின் ஒரே வெளிச்சக் கீற்றாய் அமைந்தது வண்டி வண்டியாய் வந்து - என்னைச் சூழ்ந்து கிடக்கும் காமிக்ஸ் சாம்பிள்களைப் படிக்கக் கிடைத்த நேரமே என்று தான் சொல்லுவேன் ! "கனவெல்லாம் காமிச்சே !" என்ற தலைப்பில் எப்போதோ ஒரு பதிவிட்டதாய் ஞாபகம் ; அதே பெயரை இன்னுமொருமுறை இரவல் வாங்கிக் கொள்ள முடிந்தால் இந்தப் பதிவுக்கும் கூட அதனையே தலைப்பாக்கி இருப்பேன் ! தூக்கத்தில் விரிவதோ டெக்ஸாஸ் பாலைவனமும் ; தோட்டாவே நிரப்பாமல் ஓராயிரம் முறை முழங்கும் துப்பாக்கிகளும் ! புரண்டு படுத்தால் - 'சர்ர்-புர்ர்- ரென்று சீரும் கார்களில் ஸ்டைலாகப் பறக்கும் டிடெக்டிவ் நாயகர்கள் ; உற்றுப் பார்க்க முனைகிறேன் - ஒரு பயலின் முகமும் தென்படமாட்டேன்கிறது ! சரி...கொஞ்சம் தண்ணீர் குடித்து விட்டுப் படுப்போம் என்று முயற்சித்தால் - ' அன்பார்ந்த செல்லக் குழந்தைகளே'  என்ற விளிப்போடு ஹாட்லைன் எழுதுவது போலொரு பயங்கரக் கனவு ! 'ஆத்தாடி !' என்று எழுந்து உட்காருகிறேன் ! 2015-ன் அட்டவணையை இறுதி செய்வதற்கு முன்பாக "காமிச்சொமேனியா" ரொம்பவே சீரியஸ் ரகமாகிவிடும் போலுள்ளது ! சரி... பூதம் புதையலைக் காப்பது போல் மண்டைக்குள்ளே வைத்து 'தேவுடு' காப்பதை விட - விஷயங்களைக் கொஞ்சமே கொஞ்சமாய் உங்களோடு பகிர்ந்திட்டல் நலம் எனத் தோன்றியது ! அட்டவணை கையில் கிடைக்கும் வரை ஆர்வமும்,  சஸ்பென்சும் தொடர்ந்திட வேண்டும் என்பதே பிரதான நோக்கம் என்பதால் - புது வரவுகளைப் பற்றி ஜாஸ்தி வாயைத் திறக்காமல் இருக்க முயற்சிப்பேன் ! கெலிக்கப் போவது  பெவிகாலா ? ஒட்டைவாயா ? என்பதைப் போகப் போகவே பார்த்தாக வேண்டும் !

ஏற்கனவே நான் சொல்லி இருந்தது போல - இத்தனை கதைவரிசைகள் நம்மிடம் இருக்கும் வேளையில் கூட 'யார் பெயர்களை அணிக்குள் முதலில் 'டிக்' அடிப்பது ?' என்பதில் பெரிதாய் சிரமங்கள் இருக்கவில்லை ! முன்பெல்லாம் பேப்பரையும் பேனாவையும் எடுத்துக் கொண்டு பிள்ளையார் சுழி போட்ட கையோடு "ஸ்பைடர்" என்று பவ்யமாய் எழுதி விட்டுத் தான் மோட்டைப் பார்த்து அடுத்த ஆசாமியின் பெயரைப் பற்றிச் சிந்திக்கத் துவங்குவது வழக்கம் ! அட்டைப்படத்தினில் ஒரு ஓரமாகவாவது தனது அழகு வதனத்தையும், உட்பக்கங்களில் ஒரு நாலே நாலு பக்கங்களிலாவது தலைவர் தலைகாட்டினாலும் போதும் - அந்த இதழ் ஹிட் என்பது அன்றைய சம்பிரதாயம் ! இன்றைக்கு அந்த இடத்தில் "லார்கோ" என்றதொரு பெயரை எழுதி வைக்கும் நிலை என்பதில் துளியும் இரகசியம் இல்லை ! இன்றைய நம் அணிவகுப்பில் - First amongst Equals என்று பார்த்தால் அது நிச்சயமாய் இந்த ப்ளூ ஜீன்ஸ் பில்லியனர் தான் ! கையில் துப்பாக்கியே எடுக்காமல் ; குதிரைச் சவாரிகளும் செய்யாமல் ( நவம்பர் இதழில் மனுஷன் கொஞ்ச நேரம் குதிரை மீதும் பவனி செல்கிறார்!!) நம்மை மயக்க இயலும் என்பதை லார்கோவும், கதாசிரியர் வான் ஹாம்மேவும் நிரூபிக்க - 2015-ன் அட்டவணைக்கு நான் முதல் பெயராய்த் தேர்ந்தெடுத்தது லார்கோவையே ! ஒரே பிரச்சனை என்னவெனில் இத்தொடரில் இன்னமும் எஞ்சி இருக்கும் கதைகள் வெகு சொற்பமே என்பதால் - லார்கோவோடு பிள்ளையார் சுழி போடும் luxury இன்னும் அதிக காலத்துக்கு நீண்டிடப் போவதில்லை ! இருக்கும் வரை ரசித்துக் கொள்வோமே ! (இந்தாண்டு பிரெஞ்சில் புதிய பாகம் ஒன்று வெளிவரவுள்ளது கொசுறுச் சேதி !)
இரண்டாமிடத்துப் பெயரை எழுதுவதற்கும் 'தல' புண்ணியத்தில் எனது தலைமுடி அதிகம் பிய்ந்திடவில்லை ! என்ன தான் 'தளபதி' ரசிகர்கள் கலாய்த்தாலும் ; டெக்ஸ் கதைகளில் ஆழமில்லை என்று விமர்சனங்கள் எழுந்தாலும் ; மசாலா ; காரம் என்றெல்லாம் அபிப்ராயங்கள் முன்வைக்கப்பட்டாலும் - விற்பனை எனும் முனைகளில் நமது "VRS வாங்கிய மும்மூர்த்திகளுக்கு" அப்புறமாய் கல்லா கட்டும் ஆற்றலை அதிகம் கொண்டிருப்பவர் நமது இரவுக் கழுகார் என்பதில் சந்தேகமே இல்லை ! ஒவ்வொரு புத்தக விழாவின் போதும் நாங்கள் திரும்பத் திரும்ப அனுப்பத் தேவையாக இருந்து வந்துள்ளது டெக்ஸ் கதைகளையே ! So காரணங்கள் எவையாக இருப்பினும், "மாஸ் ஹீரோ"  பட்டம் தற்போதைக்காவது திருவாளர் டெக்சுக்கெ ! ரசனைகளில் நாம் சிறுகச் சிறுக மேலேறி இருப்பினும்  கூட ; நமது வாசிப்புக் களங்கள் விஸ்தீரணமாய் மாறி இருந்தால் கூட - அடிமனதில் நாமெல்லாமெ 'பாட்ஷா" வின் ரசிகர்கள் தான் என்பதை அடிக்கோடிடும் விஷயமாய் இதைப் பார்க்கத் தோன்றுகிறது ! So let's enjoy the ranger !! அட்டவணைக்குள் ஆட்டோமேடிக்காக நுழையும் ஆசாமி # 2 இவர் ! ஏற்கனவே ஈரோட்டில் ஒ.வா.உலகநாதனாய்  நான் உளறி வைத்தது போல - 2015-ல் வரக் காத்திருக்கும் நமது லயனின் 250-வது இதழை அலங்கரிக்கப் போவது 2 x   மெகா டெக்ஸ் சாகசங்களே - முழு வண்ணத்தில் ! தலா 336 பக்க சாகசங்கள் எனும் போது இதுவொரு 672 பக்க அதிரடி இதழாய் இருந்திடப் போகிறது ! வெறும் கும்மாங்குத்துக்கள் மாத்திரமின்றி - கதையம்சமும் பொருந்திய சாகசங்களைத் தேர்வு செய்ய இம்முறை முனைந்துள்ளேன் ! So இதுவொரு memorable இதழாய் இருக்குமென்ற திட நம்பிக்கை என்னுள் !   
அட்டவணையின் பெயர் # 3 எனது personal favorite -ம் கூட ; தொடர்ச்சியாய் 2012 முதல் அனைத்துப் புத்தக விழாக்களிலும் பட்டையைக் கிளப்பிய மனுஷன் ! அது வேறு யாருமில்லை - நமது பென்சில் உடம்பு லக்கி லூக் தான் ! கார்டூன்களில் ; டிவி.க்களில் தலை காட்டியதனாலோ - என்னவோ குட்டீஸ்களின் பெரும்பான்மைக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் ஓரளவிற்குப் பழகிய பெயராய் இருப்பதால் ஸ்டாலுக்குள் நுழைந்த உடனேயே லக்கியின் பக்கமாய் ஈர்க்கப்படுவதை ஏராளமான தடவைகள் பார்த்தாகிவிட்டோம் ! Yes - நாம் அந்நாட்களில் படித்துப் பழகியிருந்த "புரட்சித் தீ" ; "சூப்பர் சர்க்கஸ்" : "பொடியன் பில்லி" தரங்களில் இதர கதைகளில் நகைச்சுவை quotient மிகுந்திருக்கவில்லை தான் ; ஆனால் சலிப்புத் தட்டாமல் பயணிக்கும் இவை எப்போதுமே safe bets ! திரைப்பட பாஷையில் சொல்வதாயின் "மினிமம் கேரண்டி "க்கு என்றைக்குமே சிக்கல் தரா தேர்வு ! So - பட்டியலில் # 3 லக்கி !  

இன்றைய சூழலில் ; கௌபாய் கதைகளே flavor of the season என்றிருக்கும் நிலையில் - ஆர்ப்பாட்டமில்லாமல் ; அட்டகாசச் சித்திரங்களோடு நம்மை வசியம் செய்து வரும் கமான்சே தொடரினை அடுத்ததாக அட்டவணையில் பட்டியலிட்டேன் ! ஒரு காலத்தில் கீச்சலாய்த் தெரிந்த  ஓவியர் ஹெர்மனின் ஓவிய பாணியானது இன்றைக்கு நம்மில் இத்தனை தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதை நினைக்கும் போது ரசனைகளின் படிகளில் நாம் எவ்வளவு தூரம் பயணித்துள்ளோம் என்பதை உணர முடிகின்றது ! முதன்முறையாக ஹெர்மனின் சித்திரங்களோடு கேப்டன் பிரின்சின் "பனிமண்டலக் கோட்டை" இதழை நாம் 1986-ல் வெளியிட்ட போது - "உள்ளூர் ஆர்டிஸ்ட் போட்ட படங்களா இவை ? " என்று கேட்ட வாசகர்களும் இருந்தனர் ; ஆனால் அந்த ஸ்டைலில் உள்ள வசீகரத்தை வெகு சீக்கிரமே நாம் உணர்ந்து கொண்டோம் என்பது தான் நிஜம் ! So 2015 அட்டவணையில் தேர்வு # 4 சிக்கலின்றி !

லார்கோவின் கதைகளின் ஆழமோ ; நுணுக்கமோ கிடையாதெனினும் இவரும் ஒரு மாறுபட்ட நாயகரே என்பதில் சந்தேகமில்லை ! Mandrake -க்கு அடுத்ததாய் மீசை வைத்த நாயகர் என்ற பெருமை (வேறு யாரேனும் உண்டா - கார்சனைத் தவிர ??)  ; கிருதாக்களில் நரை ; 50-களில் அகவை என்ற அடையாளங்கள் ! Yes - நாம் பேசுவது வேய்ன் ஷெல்டனைப் பற்றியே ! பளீர் சித்திரங்கள் ; பிரமாதமான வர்ணங்கள் - பரபரப்பான கதைக்களங்கள் என ஒருவிதமாய் ஜேம்ஸ் பாண்ட் பாணியில் ஓடும் இவரது சாகசங்கள் அத்தனையும் இதுவரை ஹிட் ! So தொடரும் ஆண்டிலும் இவரது ஆட்டம் தொடரும் ! 

TOP 5 தேர்வுகளில் டெக்ஸ் மாத்திரமே கலர் + black & white என இரு பாணிகளிலும் தலைகாட்டும் தைரியசாலி ! இதர தேர்வுகள் out & out கலர் நாயகர்கள் என்பதால் - பிரத்யேகக் கறுப்பு-வெள்ளையின் முதல் தேர்வைப் பற்றிப் பார்ப்போமா ? ரொம்ப காலமாய் ஓய்வில் இருந்த காரணத்தால் - புது உத்வேகத்தோடு மீண்டும் சாகசம் செய்ய வருபவர் நமது தங்கத் தலைவி ; பரணி புகழ் பாடும் (!!) மாடஸ்டி அம்மையார் அவர்களே ! 100 கதைகள் உள்ள இந்தத் தொடரில் நாம் இதுவரையில் ஒரு 30 சாகசங்களை வெளியிட்டிருப்போம் எனும் போது ஏராளமாய் புதுக் கதைகளைத் தன்னுள் கொண்ட கதைவரிசை இது ! இதனை சமீப காலங்களில் நாம் அதிகமாய் பயன்படுத்திடாது இருக்க 2 முக்கியக் காரணங்கள் உண்டு ! தினசரி strips ஆக வெளியாகும் இக்கதையினை இன்றைய கம்பியூட்டர் யுகத்தில் வெட்டி-ஒட்டி ; ஓரங்களை திரும்பவும் வரைந்து தயார் செய்வது அலுப்பை ஏற்படுத்தும் பணி என்பது காரணம் # 1 என்றால்  மாடஸ்டிக்கு செலுத்தத் தேவையான ராயல்டி கட்டணம் தலை சுற்றச் செய்யும் ஒரு தொகை என்பது இரண்டாம் பூதம் ! இங்கிலாந்தில் உருவாக்கப்படும் இக்கதைகளுக்கு பவுண்ட் ஸ்டெர்லிங்கில்  (அந்நாட்டுக் கரென்சி ) பணம் அனுப்பிட அவசியமாகிறது ! ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு வரை நமது மதிப்புக்கு ரூ.68 என்று இருந்து வந்த பவுண்ட் 'சொய்ய்ங்' என்று ரூ.103 க்குச் சென்று குந்திக் கொண்டது ! அவர்களது கட்டணங்கள் மாற்றமில்லாமல் இருந்த போதிலும், அதற்கு ஈடாக நாம் இங்கு செலுத்தத் தேவைப்படும் இந்தியப் பணம் எக்குத்தப்பாய் கூடிப் போனது ! இன்றும் நிலை அதுவே தான் ; ஆனால் எப்படியோ குட்டிக் கரணம் அடித்து தங்கமங்கையை அவ்வப்போதாவது கண்ணில் காட்டுவோமே என்ற அவாவின் விளைவே 2015-ல் மாடஸ்டி தலை காட்டும் பின்னணி ! But - இவரது கதைகள் வெளியாகும் இதழ்களின் விலைகள் மாத்திரம் - இதர b&w இதழ்களின் விலையிலிருந்து சற்றே கூடுதலாய் இருக்கும் ; அல்லது பக்கங்கள் குறைவாய் இருக்கும் ! (மாடஸ்டி வருகிறார் என்ற உடனேயே எங்கள் DTP ஆப்பெரேடர்கள் தையல் வகுப்புகளுக்குச் செல்லத் துவங்கி விட்டனர் என்பது கொசுறுச் செய்தி !!) 

தொடரும் வாரங்களில் 2015-ன் preview பற்றி இன்னமும் கொஞ்சம் பேசுவோமே ! ஒ.வா. உலகனாதனாகவும் இல்லாது - பெ.பெ.வாகவும் இல்லாது ஒரு 'சமநிலை சண்முகமாக' அவதாரம் எடுக்க முனைவேன் ! அதற்கு முன்பாக ஒரு சில teasers & updates :

1.ஏழு முழு ஆண்டுகளைச் செலவிட்டு ஒரு டெக்ஸ் கதைக்கு சித்திரம் போட்டுள்ளார் ஐரோப்பிய ஓவியர் ஒருவர் !! அவரது அசாத்திய கைவண்ணத்தை 2015-ல் நாம் ரசித்திடக் காத்துள்ளோம் !!

2."கிராபிக் நாவல்" என்ற கெட்ட வார்த்தை (!!) 2015-ல் ஒரு புது அர்த்தத்தைக் காணவுள்ளது ! ஆஸ்கார் பரிசை பெற்றதொரு blockbuster  திரைப்படத்தின் காமிக்ஸ் ஆக்கத்தை நாம் வரும் ஆண்டில் காணவிருக்கிறோம் !! கடந்த 2 நாட்களும் என் தலைக்குள் குறுக்கும் நெடுக்குமாய் ஷண்டிங் செய்து வரும் இந்தப் படைப்பு நிஜமாகவே மூச்சு வாங்கச் செய்யும் ஒரு stunner !! இதனை வெளியிட சகல முயற்சிகளும் செய்து வருகிறேன் - ராயல்டி கட்டணம் எத்தனை அதிகமாய் இருந்தாலும் பரவாயில்லை என்ற வேகத்தில் !! நிச்சயமாய் 2015-ல் இது நம் கைகளில் இருந்திடும் !!   (போராட்டக் குழுத் தலைவரை தற்காலிகமாகவாவது ஸ்டோர் ரூமில் போட்டுப் பூட்டி வைக்கும் பணியை யார் ஏற்றுக் கொள்வது ?)

3.அக்டோபர் இறுதியினில் காத்திருக்கும் ஒரு பதிவானது நிச்சயமாய் ஒரு கலக்கு கலக்கவிருக்கிறது ! Wait n' watch guys...!

4.அடுத்தாண்டின் ஒரு ஹாரர் கதை உங்கள் விழிகளைப் பனிக்கச் செய்யக் காத்துள்ளது ! Be prepared !

5.சென்ற வாரம் Caption எழுதும் போட்டிக்கு நடந்த அதகளமும், அட்டகாசமும் நான் மூன்றே நாட்களில் போட்டியை முடிவுக்குக் கொண்டு வந்ததால் மட்டுப்பட்டு விட்டதாய் நண்பர்களில் சிலர் அபிப்ராயம் சொல்லி இருந்தனர் ! 'இதற்கு மேலே தளம் தாங்காது !' என்று நினைக்கத் தோன்றியதால் தான் final whistle-ஐ சீக்கிரமே ஊத வேண்டியானது ! சரி - இம்முறை 7 நாள் அவகாசத்தோடு இன்னுமொரு வாய்ப்பு ! இம்முறை பரிசு வழங்கக் காத்திருப்பது நண்பர் ஒருவர் !! Yes - சென்ற வார உற்சாகத்தை திரும்பவும் லேசாகவேனும் தரிசிக்க வாய்ப்புக் கிட்டினால் அதற்கு ஈடாக என்னிடமுள்ள "இரத்தப் படலம்"  The Complete Collection இதழின் spare copy -ஐத் தரத் தயாரென்று சொல்லி கூரியரில் அனுப்பியுள்ளார் !!! சற்றே புரட்டப்பட்ட ; கைபட்ட இதழ் தான் எனினும், எவ்விதக் கிழிசலும் இல்லாது 'ஜம்'மென்று காட்சி தருகிறது ! பெயரை வெளிச் சொல்லிக் கொள்ள விரும்பா இந்த நண்பரின் உபயத்தில் இவ்வாரத்துப் போட்டி guys ! Get cracking !! மீண்டும் சந்திப்போம் - அதுவரை have  fun  ! 
Captions 1 & 2: 



Wednesday, September 24, 2014

ஒரு "7 donkeys" சமாச்சாரம் !

நண்பர்களே,

வணக்கம். ஒவ்வொரு காலையிலும் கண்ணாடியைப் பார்த்துக் கொள்ளும் போதெல்லாம் அந்த "7 donkeys சமாச்சாரம்"  'ஹிஹிஹி' எனப் பல்லிளிப்பதை தவறாது உணர முடியும் ! ஆனால் அந்த சோகங்களை (தற்காலிகமாகவாவது)  மறக்கடிக்க சாதனங்களுக்கா பஞ்சம் ?! "உள்ளேன் அய்யா" என்று சொல்லி பரவலாய் நிற்கும் வெளிர்நிற ரோமக்கால்களை மறைக்க சாயங்கள் ; நெற்றியில் நிலைகொண்டு நிற்கும் "இந்தியன் தாத்தா " சுருக்கங்களை பூசி மெழுக கிரீம்கள் என்று ரசாயனமும், வியாபாரமும் கரம்கோர்த்துப் புண்ணியம் சேர்க்க - வண்டி ஒரு மாதிரி ஓடித் தான் வந்தது - இந்த சில நாட்களை தொடும் வரையிலாவது  !!  சரியாகச் சொல்வதாயின் - "கார்சனின் கடந்த காலம்" இதழைக் கையில் எடுக்கும் வரை !! 

நமது இதழ்களின் தயாரிப்புப் பணிகள் முடிந்தான பின்னே இதழ்களை மேலோட்டமாய்ப் புரட்டுவதோடு அடுத்த பணிக்குள் தலைநுழைத்து   விடுவதே எனது வழக்கம். கொஞ்ச காலம் கழித்துத் திரும்பவும் படிப்பதோ ; அசைபோடுவதோ கிடையாது ! மறுவாசிப்பின் போது கண்ணில்படுவது பிழைகளும் ; அச்சின் குறைபாடுகளுமே என்பது ஒரு காரணமெனில் - மொழிபெயர்ப்பு ; பிழைதிருத்தம் ; எடிட்டிங் என பலகட்டங்களுக்கு ஒரே கதையோடு மல்லுக்கட்டி விட்டான பின்பு அதன் மீதொரு மெல்லிய அயர்வு தோன்றி இருக்கும் என்பது காரணம் # 2 ! So - நாட்களின் ஓட்டத்தோடு கதைகளின் தலைப்புகள் ; அட்டைப்படங்கள் ; லேசான கதையோட்ட ஞாபகங்கள் என்பதைத் தாண்டி வேறேதும் தலையில் குடியிருக்காது எனக்கு ! அதுவே தான் 'கா.க.க.' கதையைப் பொறுத்த வரையிலும் கூட ! எப்படியிருப்பினும் இதுவொரு மறுபதிப்பு தானே ? ; இதனில் அதிகம் சிண்டைப் பிய்க்கத் தேவையிராது  ! என்று சாவகாசமாய் ஒரு மேலோட்ட வாசிப்பை மாத்திரமே போட்டு வைக்கும் அபிப்ராயத்தில் printout  பக்கங்களைக் கையில் எடுத்தேன் ! சமீப சில டெக்ஸ் கதைகளின் "கீச்சல்" சித்திரங்கள் பாணி இதனில் இல்லை என்பது முதல் பக்கத்திலேயே 'பளிச்' எனத் தெரியத் துவங்க - மெதுவாய் வாசிக்கத் தொடங்கினேன். புரட்டப் புரட்ட பக்கங்கள் வந்து கொண்டே இருக்க ; 'இதோ இங்கே கதை நினைவுக்கு வந்து விடும் ! ; அதோ - அந்தத் திருப்பத்தில் ஞாபகக் கதவுகளைத் தட்ட ஏதேனும் சம்பவங்கள் வந்து விடுமென்ற' நம்பிக்கையோடு வண்டி ஓடிக் கொண்டே இருந்தது ! ஆனால் பக்கங்கள் தான் நீண்டு சென்றனவே தவிர, திருவாளர் ஞாபகசக்தி அந்தப்பக்கமாய்த் தலை வைத்துக் கூடப் படுக்க முனையவில்லை ! 'ஆஹா...! இந்தக் கதை வெளியானது 1995-ல் எனும் போது கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் பயணித்து விட்டன ; கதையினில் கார்சனுக்கு ஏறிடும் அதே 7 donkeys சங்கதி நமக்கும் தான் பொருந்தும் போலும் !!' என்ற ஞானோதயம்  புலர்ந்தது !

ஆனால் முதல்முறையாகப் படிப்பது போல இந்தக் கதையினைத் திரும்பவும் ஒருமுறை படிக்கக் கிடைத்த அந்த அனுபவத்தில் வேறு எதுவுமே முக்கியமாய்த் தோன்றிடவில்லை ! சமீபத்திய "சட்டம் அறிந்திரா சமவெளி" கதையில் (!!) கும்மாங்குத்துக்களை மாத்திரமே மூலதனமாய்க் கொண்டு கதை முழுக்க டெக்ஸ் அடித்த லூட்டிக்குப் பின்னே, 'கா.க.கா.வில்' கார்சன் பிரதானமாய் இடம் பிடிப்பதும் ; டெக்ஸ் அடக்கி வாசிப்பதும் ; அழகான நீரோடை போல கதை flashback & நிகழ்காலத்தில் விரிவதும் இதமான மாற்றங்களாய் எனக்குத் தோன்றியது ! அதிலும் இளவயதுக் கார்சனின் அத்தியாயங்களிலும்  ; தலைநரைத்த கார்சனின் அத்தியாயங்களிலும் ஓசையின்றி ஓடும் அந்த நேசக்கீற்றை கதையின் உயிர்நாடியாய்க் கொண்டு செல்வதை ரசிக்க முடிந்தது ! திரும்பவும் ஒரு மொழிபெயர்ப்புக்கு நேரமில்லை என்பதாலும், அந்நாட்களது எழுத்துநடையில் கத்துக்குட்டித்தனம் தலைக்காட்டவில்லை என்பதாலும் 'அட..இதை புதிதாய் ஒரு மொழியாக்கம் செய்யாமல் விட்டுவிட்டோமே! என்ற சிந்தை உதிக்கவில்லை ! எனினும் சின்னச் சின்ன இடங்களில் இன்றைய டெக்ஸ் - கார்சன் கதை பாணிகளுக்கு இணக்கமான சிற்சிறு மாற்றங்களை மட்டுமே செய்ய முனைந்துள்ளேன் ! முக்கியமாக பாடல் sequences -ல் (!!) அன்றைக்கு இடம்பிடித்திருந்த மொக்கை வரிகளைக் கடாசி விட்டு, புதிதாய் தோன்றிய சில வரிகளை இணைத்துள்ளேன் - மனப்பாடமாய் இக்கதையை நினைவில் வைத்திருக்கும் நண்பர்கள் மாற்றங்களை விளக்குமாற்றால் சாத்த மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் !  அப்படியே பூசைகள் விழுந்தாலும் அது நமது கவித்திறனுக்குக் (!!) கிட்டிய சன்மானமாய் எடுத்துக் கொள்ள வேண்டியது தான் ! In hindsight, இக்கதையை 20 ஆண்டுகளுக்கு முன்பே வெளியிடாது - இன்றைய புதிய பாணிகளில் fresh ஆக வெளியிடவொரு சந்தர்ப்பம் கிட்டியிருப்பின் அதகள வெற்றியாகி இருக்குமென்பது உறுதி என்று தோன்றுகிறது ! அன்றே இக்கதையை நாம் கொண்டாடிடத் தவறவில்லை என்பது ஒருபக்கமிருப்பினும், ரசனைகளில் லேசாக ஒரு படி மேலே சென்றிருக்கும் இன்றைய சூழலில் இது ஒரு bigger  blockbuster ஆக மிளிர்ந்திருப்பது உறுதி ! Anyways - 'சமீப நாட்கள் வரை கையிருப்பில் இருந்ததொரு இதழ்' என இக்கதையை புறந்தள்ளிடாது மறுபதிப்புப் பட்டியலுக்குள் இணைக்கச் செய்த நண்பர்களுக்கு இங்கொரு நன்றி சொல்லியே தீர வேண்டும் ! டெக்சின் "குடும்ப உடுப்பான" அந்த  மஞ்சள் சட்டை வழக்கம் போல் டாலடிக்க - வண்ணத்தில் மின்னுகிறது ! So - என்னைப் போல் கதையை மறந்திருக்கா திட நினைவாற்றல் கொண்ட "இளைஞர்களுக்குக்" கூட மறுவாசிப்பில் வண்ணம் எனும் வீரியம் துணை புரியுமென்பது உறுதி ! பாருங்களேன் கண்களுக்கு விருந்தளிக்கும் சில teasers !
ரொம்ப நாட்கள் முன்பாக டெக்ஸ் ரசிகர்கள் மத்தியில் எடுக்கப்பட்டதொரு கருத்துக் கணிப்பில் இரண்டாம் இடம் பிடித்த கதை இது என்பது கொசுறுச் செய்தி ! முதல் இடம் எந்தக் கதைக்கு ? என்ற கேள்வி உங்கள் மைண்ட்வாய்ஸாக  உதயம் ஆகும் முன்பாகவே பதிலையும் நானே சொல்லி விடுகிறேன் ! 1992-ல் லயனில் நாம் வெளியிட்ட "கழுகு வேட்டை" தான் கதை # 1-ஆகத் தேர்வானது ! 
கதைத் தேர்வுகள் பற்றிய தலைப்பில் நாம் இருக்கும் போது - நாமுமொரு  "TOP OF TEX "தேர்வை நடத்தினாலென்ன என்று தோன்றியது ! கிட்டத்தட்ட 60 டெக்ஸ் கதைகள்  வெளயாகியுள்ள நிலையில் உங்களது டாப் 1 & 2 டெக்ஸ் சாகசங்கள் எவையாக இருக்கும் ? உங்கள் தேர்வுகளை நாளையே மறுபதிப்பாய் வெளியிட்டு விடுவேன் ! என்றெல்லாம் தேர்தல் வாக்குறுதிகள் அள்ளி விட மாட்டேன்  ; ஆனால் உங்களின் ரசனைகளின் டாப் இதழ் எதுவென்ற சேதியை நினைவில் இருத்திக் கொள்ள முடிந்தால் - வாகானதொரு சமயத்தில் அது உதவிடுமே ! (உங்கள் சேமிப்பில் இல்லாத இதழை டாப் தேர்வாக்கி மறுபதிப்புக்குப் பாதையமைக்கும்  போங்கு ஆட்டமும் வேண்டாமே - ப்ளீஸ் !! ) Let's pick the best - nice and simple !!

ஊற்றடிக்கும் கற்பனைப் பிரவாகத்தின் பலனோ ; வெகுமதியின் (!!) கனம் தந்த ஊக்குவிப்போ ; XIII எனும் அந்தப் பெயருக்கு நம்மிடையே இன்னமும் பறக்கும் அந்தத் தீப்பொறியின் பலனோ - ஞாயிறுவின் பதிவிற்கு 'வரலாறு காணாத ' (!!) response ! ஒரே நாளில் 250 பின்னூட்டங்கள் ; கிட்டத்தட்ட 3000 பார்வைகள் என்று IPL மேட்ச் பார்த்த effect தான் !! (இரும்புக்கையாரின் சகாயம் இன்றியே  'Load More ' தொட்டதே ஒரு சாகசம் தானே !!) கற்பனைக் குதிரைகள் தறிகெட்டுப் பாய்ந்த இந்தப் போட்டியில் வெற்றி யாருக்கு ? என இரண்டே பேரைத் தேர்வு செய்வதை விட  - ஒரு அசாத்தியக் கலகலப்பான நாளை சாத்தியமாக்கித் தந்த அத்தனை பேருமே வெற்றியாளர்கள் தான் என்று சொல்ல எனக்கு ஆசை ! ஆனால் அத்தனை பேருக்கும் பரிசு தர வேண்டுமெனில் இரத்தப் படலத்தை ஆளுக்குப் 10 பக்கமாய்ப் பிய்த்துத் தான் தர வேண்டியிருக்கும் என்பதால் இரண்டே தேர்வுகளைச் செய்வது அவசியமாகிறது ! Here goes ! பின்னி எடுக்கும் கற்பனைகள் ; டயலாக்குகள் என்று ஏகமாய் குவிந்து கிடந்த entries மத்தியினில் முன்னேயும் - பின்னேயும் நிறைய ஸ்க்ரோல் செய்தே களைத்துப் போன பின்னே எனக்கு நன்றாகத் தோன்றியவை கீழ்க்கண்டவையே !

XIII Caption :

XII: பதினைஞ்சாவது எபிஸோட் நடக்கும்போதே எனக்கு எல்லாம் ஞாபகம் வந்துடுச்சு. வெளிய சொல்லாதேனுட்டானுங்க.. சொன்னாலும் எவன் நம்புவான்? ஸ்டார் வேல்யூ! பிசினஸ்னு ஆகிப்போச்சு! எதுக்கு வம்பு.. பேசாம இப்படியே கண்டினியூ பண்ணிடுவோம்.
TEX Caption  :

டெக்ஸ் : தோஸ்த் ! பையனுக்கு பொண்ணு பாக்க போகனும்னு ரெடியாக சொன்னா, நீ ஏன் இஞ்சி திண்ண ஏதோ மாதிரி ஆயிட்ட.?
கார்சன் : பையனுக்கு பொண்ணு பாக்கவே பளபளன்னு ஷேவிங் பண்ற பங்காளி,
உங்கூடவே சுத்துற நானும் கல்யாணமாகாத கன்னிப் பையன்தானே.? எனக்கு ஒரு பொண்ணப் பாத்து கட்டி வெக்கினுமின்னு உன்னோட புத்திக்கு ஏன் உறைக்காம போச்சு.!?

நண்பர்கள் இருவருக்கும் நமது ஜாலியான வாழ்த்துக்களோடு பரிசுகள் நாளைய கூரியரில் அனுப்பிடப்படும்! (டெர்ரர் பாய்ஸ் : நாளைக்கு அலுவலகத்தில் முகவரிகளை வாங்கி விட்டால் 'Operation கிட்னா' ஸ்டார்ட் பண்ணிவிடலாம் !!)

'இரண்டாமிடம்' என ஒரு தகுதி அறிவிக்க கஜானாவில் பரிசுகள் இல்லை - இல்லேயேல் கீழ்க்கண்ட இரு முயற்சிகளுக்கும் இரண்டாமிடம் தந்திருப்பேன் !
Erode Vijay..

Sathiya..
Congrats guys !! தவிர, இதற்கும் முந்தைய பதிவில் நமது "2015-ன் யூக அட்டவணையினை" முயற்சிக்கும் போட்டியில் ஒரு நண்பர் எனது தேர்வுகளுக்கு ஓரளவு நெருக்கத்தில் உள்ளார் ! இன்னமும் 30 நாட்களுக்குள் எனது மண்டை ஒரு நூறு திசைகளில் பயணிக்கும் எனும் போதிலும், நான் அறிவித்தபடி - 2015-ன் சந்தா அந்த நண்பருக்கு நமது அன்பளிப்பாய் அமைந்திடும் ! அட்டவணை உங்கள் கைகளுக்கு வரும் வேளையில் அவர் யார் என்பதையும் சொல்கிறேனே ?!

2015-ன் அட்டவணை பற்றியும், அதனில் இடம்பிடிக்கப் போகும் இதழ்கள் பற்றியும் நிறைய பில்டப் விட்டிருக்கிறேன் ! அதனில் லேட்டஸ்டாக : இம்முறை நமது அளவுகோல்கள் ரொம்பவே ஸ்ட்ரிக்ட் என்பதால் மதில் மேல் பூனையாய் நிற்கும் நாயகர்களுக்கு இதயத்தில் மாத்திரமே இந்தாண்டு வாய்ப்பு ! சந்தேகத்துக்கு இடமின்றி 'ஹிட்' தந்து வரும் நாயகர்களன்றி வேறு யாருக்கும் இடமில்லை இம்முறை ! அடுத்த பதிவில் அது பற்றி இன்னும் கொஞ்சம் பேசுவோமே..?! Bye for now all !

ஹீரோக்களும்...ஒளிவட்டங்களும்..!

நண்பர்களே,

வணக்கம். மாலையில் பேட்டி - காலையில் பிரதானமாய் கட்டுரை என அசத்தியுள்ளனர் டைம்ஸ் ஆப் இந்தியா பதிப்பகத்தினர் ! இன்றைய காலை Times of India செய்தித்தாளில் (சென்னை பதிப்பு) பக்கம் 6-ல் அரைப்பக்கம் ஒதுக்கி நமது நாயகர்கள் மீதும் ; காமிக்ஸ் எனும் கலையின் மீதும் தாராளமாய் ஒளிவெள்ளத்தைப் பாய்ச்சி இருக்கும் TOI நிர்வாகத்துக்கு நமது நெஞ்சார்ந்த நன்றிகள் ! தவிர, மாமூலான கேள்விகளையாய் கேட்டு வைக்காது, சற்றே மாறுபட்ட வினாக்களை முன்வைத்த கட்டுரையாளர்களுக்கும் நமது நன்றிகள் !! இது போன்ற பிரதான மீடியாக்களில்  காமிக்ஸ் மீதான பார்வை அதிகரிப்பது நமக்கொரு வரப்பிரசாதமே ! கோலிவுட்டின் ஹீரோக்களை முன்னிலைப்படுத்தும் நமது மீடியாக்களில் காமிக்ஸின் ஹீரோக்கள் இடம்பிடிப்பது நிச்சயமாய் ஒரு ஸ்பெஷல் நிகழ்வு தானே ?! சென்னைப் பதிப்பு நீங்கலாய் - மற்ற நகரங்களில் நாளை காலை இக்கட்டுரை இடம்பிடிக்கும் ! இதோ இன்ற லிங்கில் பயணித்தால் முழுக் கட்டுரையைப் படிக்கலாம் : http://epaperbeta.timesofindia.com/index.aspx?eid=31807&dt=20140924


இன்று இரவு..புதியதொரு பதிவோடு சந்திக்கிறேன் ! அது வரை have a great day all !

Sunday, September 21, 2014

பத்தோடு, பதினொன்றாய் ஒரு பதிமூன்று !!

நண்பர்களே,

வணக்கம். அலாவுதீன் விளக்கின் பூதத்தைப் போல் 'டாண்' என இன்னுமொரு ஞாயிறுக்கு உங்கள் முன்னே ஆஜராகிறேன்! இவ்வாரத்துப் பதிவு - கன்னித்தீவு சிந்துபாத்திற்குச் சவால் விடும் XIII தொடரின் மையமானதொரு மனிதனைப் பற்றியே...!

சரியாக 30 ஆண்டுகளுக்கு முன்பாய் பெல்ஜியக் காமிக்ஸ் உலகினில்  பத்தோடு, பதினொன்றாய் ஒரு பதிமூன்று உதயமானது ! SPIROU என்ற அவர்களது காமிக்ஸ் பத்திரிகையில் - நினைவை இழந்ததொரு மனிதனை மையமாகக் கொண்டு ஓவியர் வில்லயம் வான்சின் சித்திரங்களோடு XIII என்றதொரு பெயரோடு (நம்பரோடு !!) கதை ஒன்று துவங்கியிருந்தது  ! துவக்கத்திலேயே வாசகர்களை ஒருவித வசீகர ஈர்ப்பில் கட்டிப் போட்ட இந்தத் தொடரை பதிப்பகத்தினர் மாமூலாய் கொண்டு சென்று கொண்டிருக்க - தொடரும் ஒவ்வொரு பாகமும் விறு விறு விற்பனையை சந்தித்தது ! கிட்டத்தட்ட 8 பாகங்கள் வெளிவந்திருந்த நிலையில் தம் கையில் இருப்பது ஒரு blockbuster என்பதை அவர்கள் உணர்ந்திட - ஏகப்பட்ட விளம்பரங்கள் ; வேற்று மொழி மொழிபெயர்ப்புகள் என்று தூள் கிளப்பினார்கள் ! அன்று சூடு பிடித்த XIII -ன் தொடரானது ஐரோப்பாவில் உடைக்காத விற்பனை ரெகார்டுகள் கிடையாது ! நிறைய சமயங்களில் நாம் ஒரு தொடருக்குள் தலையை நுழைக்கும் வேளையினில் - அதனில் ஏற்கனவே 30-40 கதைகள் வெளியாகி இருப்பது வாடிக்கை ! So ஒருவிதமாய் establish ஆகிய கதைவரிசைகளையே நாம் கையாண்டு வந்துள்ளோம் ! ஆனால் இந்த XIII தொடரைப் பொறுத்த வரை நாம் அதன் இரண்டாம் ஆல்பம் வெளியான நிலையிலேயே வண்டியில் தொற்றிக் கொண்டோம் - தெரிந்தோ தெரியாமலோ !! படைப்பாளிகளுக்கே இந்தத் தொடரானது இத்தனை வலிமையானதொன்றாக அமையுமென ஆரூடம் சொல்லத் தெரியா நிலையில் - நாம் ஒரு ஓரமாய் ஒட்டிக் கொண்டது நம் குருட்டு அதிர்ஷ்டம் என்றே சொல்லுவேன் ! So வெற்றி பெற்றதொரு தொடரின் வேரோடு நமக்கும் குட்டியாகவேனும் ஒரு சம்பந்தம் உள்ளதென்ற சந்தோஷத்தோடு XIII -ன் 30-வது பிறந்தநாளை எதிர்கொண்டு நிற்போமே ! இது வரை 22 பாகங்கள் வெளியாகியுள்ள நிலையில் - பாகம் 23 இந்தாண்டு நவம்பர் இறுதியினில் தலைகாட்டக் காத்துள்ளது ! Yves Sente + Jigounov கூட்டணியில் இன்று உருவாகி வரும் இத்தொடரின் லேட்டஸ்ட் வருகையின் அட்டைப்படம் இதோ :


பொதுவாக ஒரு topnotch டீம் பணி செய்த இடத்தை புதியவர்கள் ரொப்பிடும் அவசியம் நேரும் போது அவர்கள் திணறுவதே நடைமுறை ! ஜிராடுக்குப் பின்னே தடுமாறும் டைகரின் தொடர் ; மோரிஸ் பணியாற்றாத பின்னே நொண்டியடிக்கும் லக்கி லூக்கின் தொடர் என சோபிக்காது போன "வாரிசு" களைப் பறைசாற்ற உதாரணங்கள் நிறையவே உண்டு தான் ! அப்படிப் பார்க்கையில் வான் ஹாம்மேவும் ; வில்லியம் வான்சும் விட்டுச் சென்ற கால்தடங்களின் பரிமாணம் அசாத்தியமானவை ; அவற்றை பின்தொடர கிட்டத்தட்ட யாருக்குமே வாய்ப்பிருக்கப் போவதில்லை என்ற எண்ணம் பரவலாய் இருந்தநிலையில் இப்புதுக் கூட்டணி கணிப்புகள் அனைத்தையும் பொய்யாக்கி விட்டுள்ளன ! வான்சின் தரத்துக்குத் துளியும் குறைவில்லா சித்திரங்கள் ; வான் ஹாம்மேவை சந்தோஷப்படுத்தக் கூடியதொரு புதுத்திசையில் ; காலத்துக்கு ஏற்ற நவீனங்களோடு நகரும் கதைக்களம் என்று உற்சாகமாய்ப் போகிறது இந்தப் புதுப் பயணம் ! இதோ பாருங்களேன் - பாகம் 23-க்கு ஒரிஜினலாய்த் திட்டமிடப்பட்டிருந்த ராப்பர் - பெண்ணின் கையிலொரு செல்போன் சகிதமாய் !!


Yuri Jigounov- Artist..
Yves Sente - Script
கடைசியாய் நான் கேட்ட போது - புதியவர்களின் கைவண்ணத்தில் ஓடும் இந்தத் தொடரின் ஒவ்வொரு ஆல்பமும் 400,000 பிரதிகள் விற்பனையாகின்றதாய்ச் சொன்னார்கள் ! சரி...ஒரிஜினல் பிதாமகர் கூட்டணியின் போது என்ன விற்பனை ? எனக் கேட்டேன் - "550,000 பிரதிகள் ! " என்று கூலாகச் சொன்னார்கள் !! அலிபாபா குகையைப் போல அகலமாய் விரிந்த என் வாய் மூட நிறைய அவகாசம் தேவைப்பட்டது என்பது கிளைக்கதை ! அவர்கள் லட்சங்களில் தொடும் எண்ணிக்கையை நாம் ஆயிரங்களில் தொட்டாலே குஷிப்படுவோம் என்ற நிலையில் - பாகம் 22 + பாகம் 23 இணைந்து 2015-ன் மார்ச்சில் நமது லயனில் வெளியாகிறது என்பதே நமக்கான சேதி !

XIII -ன் flashback -ஐப் பார்த்தாகிவிட்ட நிலையில் இம்மாதத்து வரவைப் பற்றி பேசுவோமா ? XIII மர்மம் தொடரினில் மங்கூசின் பார்வையைத் தொடர்ந்து இம்மாதம் ஸ்டீவ் ரோலாண்டுக்கு வாய்ப்புக் கிட்டுகிறது - தன பார்வைக்கோணத்தில் கதை சொல்லிட ! அவனது இளமைக்காலம் ; காதல்கொண்ட நாட்கள் ; திசைமாறிய தருணங்கள் என அழகாய் அங்குலம் அங்குலமாய் சொல்லப்பட்டிருக்கும் இந்த கிராபிக் நாவலின் அட்டைப்படம் இதோ :


ஒரிஜினலே முன்னட்டையாகவும், நமது டிசைன் பின்னட்டையிலும் இடம் பிடிக்கின்றது ! இங்கே தெரிவதை விடவும் ராப்பரில் வர்ணங்கள் இன்னமும் அழுத்தமாய் இருக்கும் ! சிம்பிள் ஆகத் தோற்றம் தந்தாலும் - பின்னட்டை அழகாய் வந்துள்ளதை மனதுக்குப் பட்டது ! உங்களுக்கு ? உட்பக்கங்களின் வர்ணக் கலவைகள் அழகாய் அமைந்துள்ள போதிலும், வித்தியாசமான பக்கம் ஒன்றினை மட்டுமே இங்கே நமது teaser -க்குப் பயன்படுத்தியுள்ளேன் !
அப்புறம், சன்ஷைன் கிராபிக் நாவலின் பாணியில் - தலையங்கம் , இத்யாதிகள் ஏதுமின்றி ஒரு படைப்பாளிகளின் அறிமுகப் பக்கம் + கதை மாத்திரமே என்ற பாணி இதனில் தொடரும் ! ("இந்த பாணி - பரணிக்குப் பிடிக்காது" என்ற கடிதத்தின் துவக்க வரிகளை இப்போதே தாரமங்கலத்தில் ஒருவர் எழுதத் துவங்கி விட்டதாய் உளவுத்துறை தகவல்கள் கசிகின்றன..!) XIII பற்றிய புராணத்துக்கு மங்களம் பாடும் முன்பாக - on a lighter vein நமது நண்பர் அஜய் சாமியின் கைவண்ணம் :


இம்மாதத்து 3 வெளியீடுகளுள்  இரண்டு அச்சாகி விட்ட நிலையில் - "கா.க.கா." தொடரும் நாட்களில் அச்சுக்குச் செல்கிறது ! கடந்த பதிவின் பின்பகுதியில் - இக்கதையின் நீளம் பற்றியும் ; நாம் இப்போது வண்ணத்தில் வெளியிடப் போவது எவ்விதமான சைசில் என்றும் வினவல்களை மேலோட்டமாய்ப் பார்த்தேன் ! 336 பக்க ஒரிஜினல் கதையினை அதே போலவே வண்ணத்தில் வெளியிடுவதெனில் விலை ரூ.180 என்று நிர்ணயம் செய்திட வேண்டி வரும் ! கறுப்பு-வெள்ளையில் திட்டமிடப்பட்டிருந்ததொரு மறுபதிப்புக்கு வண்ணம் சேர்த்திடும் பொருட்டு ஏற்கனவே விலையை டபுள் ஆக்கியுள்ள நிலையில் - we are going into this reprint with 250 pages of the regular TEX size ! ஆகையால் விலை ரூ.125 என்பதும் சரியே ; கதை முழுமையாகவே வருகின்றது ; வர்ணமும் உண்டு ! அதன் அட்டைப்படம் + ட்ரைலர் அடுத்த ஞாயிறுக்கு ! 3 இதழ்களும் செப்டெம்பர் 29-ஆம் தேதி இங்கிருந்து அனுப்பப்படும் - ஆயுத பூஜை விடுமுறைகளுக்கு முன்பாய் உங்களை வந்து சேர்ந்திடும் பொருட்டு !

வரக்காத்துள்ள டைலன் டாக் இதழுக்கு ஒரு சின்னதொரு மெருகூட்டல் சாத்தியமாகியுள்ளது ! பொதுவாக அட்டைப்படங்களுக்கு படைப்பாளிகள் பயன்படுத்தியுள்ள அதே டிசைனை நாம் பயன்படுத்துவதோ ; அல்லது நம் ஓவியர் மாலையப்பனைக் கொண்டு டிசைன் போடுவதோ மாமூல் ! ஆனால் முதல்முறையாக அயல்நாட்டு ஓவியர்கள் இருவரின் உதவியோடு இம்மாதத்து "வீதியெங்கும் உதிரம்" அட்டைப்படம் வடிவமைக்கப்பட்டுள்ளது ! டைலன் டாக் கதைகளுக்கு சித்திரம் போட விரும்பிய freelance ஓவியர் இவர் ! போனெல்லி குழுமத்திடமிருந்து ஒரு வாய்ப்புக்குக் காத்திருக்கும் இவரது டிசைன்களைப் பார்த்திட எனக்கு வாய்ப்புக் கிட்டிய போது - மெதுவாய்க் கேட்டு வைத்தேன் - நமது ராப்பரில் அவரது சித்திரத்தை அரங்கேற்றலாமாவென்று ?! துளியும் தயக்கமின்றி உற்சாகமாய் சரி சொன்னார் இந்த இத்தாலிய ஓவியர் டேனியல் ப்ரண்டௌ ! வர்ணச் சேர்க்கை : எடுவார்டோ பெரேரா ; இறுதியாய்ப் பட்டி டிங்கரிங் நம்மவர்கள் ! இதோ ஒரு முக்கூட்டணியின் படைப்பு - உங்கள் பார்வைக்கு !   


டிசைனை எப்போதும் போல போனெல்லி குழுமத்துக்கு அனுப்பிவிட்டு அவர்களது ஒப்புதலைக் கோரினோம் ; அவர்களும் ஒரு டிசைனை எத்தனை நுணுக்கமாய்ப் பார்வையிடுகிறார்கள் என்பதையும் ; தங்கள் கதாப்பாத்திரங்களை எத்தனை நேசிக்கிறார்கள் என்பதும் அவர்களது பதிலில் பார்த்திட முடிந்தது ! " ராப்பர் ஒ.கே. ; ஆனால் சின்னதொரு திருத்தம் - டைலன் எப்போதும் அணிவது Clark's ரக ஷூக்கள் மட்டுமே ; தவிர அவரது ஷூ லேஸ் எப்போதுமே சிகப்பில் தான் இருக்க வேண்டும் !" என்று பதில் வந்தது !! 'தம்மாத்துண்டு விஷயம் தானே !' என்றில்லாது தலை முதல் பாதம் வரை அங்குலம் அங்குலமாய்ப் பார்த்துப் பார்த்து செதுக்கும் அவர்களது dedication பிரமிப்பாய் உள்ளது ! அவசரம் அவசரமாய் லேஸ்களை சிகப்பாக்கியுள்ளோம் - அச்சுக்கு முன்பாக ! இந்த அட்டைப்படமும் - soft -ஆன இந்த வர்ணக்கலவையும் எப்படித் தோற்றம் தருகிறது folks ?

2015-ன் அட்டவணையை உங்களுக்குத் தந்திட இன்னமும் முப்பதே நாட்கள் உள்ள நிலையில் - கடைசி நிமிட additions & deletions நடந்தேறி வருகின்றன ! ஆனால் 2014 தந்துள்ள பாடங்கள் ஓரளவுக்கு என்னுள் தெளிவை நல்கியுள்ளதால் - போன வருஷம் போல 'காலையில் ஒரு பட்டியல்...மதியம் ஒரு அட்டவணை..இரவு புதிதாய் ஒரு schedule ' என்ற ரீதியில் ஜூனியர் எடிட்டரைக் கிறுக்காக்கும் வேலைகளில்லை இம்முறை !! ஒரே சிக்கல் என்னவெனில் முத்து காமிக்ஸின் active நாயகர்கள் பட்டியலில் உள்ள ஆசாமிகளின் எண்ணிக்கை லயனின் பட்டியலை விடக் குறைவாய் உள்ளது ! So - " நிறைய லயன் ; குறைவாய் முத்து " என்றதொரு தோற்றத்தைத் தவிர்த்தாக வேண்டுமே என்பது தான் இப்போதைய சிக்கல் ! பார்க்கலாமே..!

Before I sign off for this week - சின்னதாய் ஒரு ஜாலி போட்டி ! இங்குள்ள நம் நண்பர் (நண்பர்) XIII -க்கும் 'தல + தாத்தா ' சித்திரத்துக்குப் பொருத்தமாய் captions எதாச்சும் எழுதிடுவோமா ?


இது XIII -ன் பதிவு வாரம் என்பதால் டாப் captions எழுதிடும் 2 நண்பர்களுக்குப் பரிசாய்  "இரத்தப் படலம் - The Complete Collection " இதழ்கள்  பரிசு ! Get cracking guys !! Bye for now !