Saturday, September 29, 2012

ஒரு பயணத்தின் வெள்ளோட்டம் !


நண்பர்களே,

14 மணி நேர மின்வெட்டுக்கு நடுவில் தத்ததளிக்கும் சிவகாசியிலிருந்து வணக்கங்கள் ! எதிலும் உள்ள 'பளிச்' பக்கத்தைப் பார்த்திடுவோமே என்ற எங்கள் நகரின் சித்தாந்தத்தைப் பயன்படுத்தி சிந்தித்தேன்... ! டிசைன் பிரிவில் ; கம்ப்யூட்டர் பிரிவில் ; அச்சுப் பிரிவில் ; லாமினேஷன் பிரிவில் என்று ஒப்படைத்த எந்தப் பணிகளும் நடந்தேறிட வாய்ப்பில்லை என்பதால், 'அக்கடா'வென தலைக்குக் கையை வைத்துக் கட்டையைக் கிடத்த அவகாசம் கிடைக்கிறதே - அந்த மட்டிற்கு ஜாலி தான் என்று தோன்றியது !! 

திண்ணை சிந்தனைகள் செல்லும் திசைகள் ; வழங்கிடும் முத்துக்கள் தான் எத்தனை,எத்தனை !! இயந்தரத்தலை மனிதர்களின் கிளைமாக்சில் வருவது போல் நமது இரும்புக்கை மாயாவியாரை (கோவைகாரரை அல்ல!!) வரவழைத்து, பாட்டரிகளில் இருந்து மின்சாரத்தை உறிஞ்சி  இருளில் மூழ்கிக் கிடக்கும் நகரை ஒளி வெள்ளத்தில் ஆழ்த்திட முடிந்தால் - 'அடடே பிரமாதமாக இருக்குமே' என்ற சூப்பர் ஐடியா ! நமது சட்டித் தலையன் ஆர்ச்சியை களத்தில் இறக்கி, பரபரவென்று பைண்டிங் பணிகளை அசுர வேகத்தில் முடித்திட முடிந்தால் - மின்வெட்டாவது, ஒன்றாவது - எல்லா மாதங்களும் இதழ்கள் ஜரூராய் தயாராகிடுமே என்ற அறிவுபூர்வமான சிந்தனை மறு நொடியில் !  5 லிட்டர் ஸ்பீட் பெட்ரோல் போட்டு விட்டு நமது "தலை" ஸ்பைடரை தனது ஹெலிகாரில் கிளப்பி விட்டு சந்தாப் பிரதிகளைப் பட்டுவாடா செய்திடச் செய்தால் - ST  கூரியரைத் தேடி அலையத் தேவை இராதே என்ற இன்னொரு சிந்தனை முத்து !! So இருளிலும் முத்துக்கள் - அவை சிந்தனை முத்துக்களோ ; காமிக்ஸ் முத்துக்களோ - உருவாக வாய்ப்புள்ளதென்பதை புரிந்து கொண்டே, தட்டுத் தடுமாறி நமது பணிகளை பார்த்து வருகின்றோம் ! தற்போது நமது டீம் முழுவதுமே இரவுக் கழுகுகளாய் உருமாறிப் பணி செய்வதால் சூப்பர் ஹீரோ ஸ்பெஷல் அக்டோபர் 15 -ல் தயாராகி விடும் என்பது தான் சந்தோஷச் சேதி ! அது மட்டுமல்லாது கேப்டன் டைகரின் "தங்கக் கல்லறை" கூட நவம்பர் முதல் தேதிக்கே தயாராகி விடும் ! So உங்கள் தீபாவளிக்கு சிவகாசிப் பட்டாசுகளோடு டைகர் & கோவின் வாண வேடிக்கைகளும் துணை இருக்கும் ! 

இடையில் வரவிருக்கும் பெரிய இதழ்களின் பணிகளை முடித்துவிட்டால் மெகா இதழான NEVER BEFORE ஸ்பெஷல் மீது கவனம் செலுத்திட  இயலும் என்பதால் ஒரு வித பரபரப்பு என்னுள் இப்போதெல்லாம் ! இதன் மத்தியில் இங்கே இரத்தப் படலம் வண்ண மறுபதிப்பு பற்றிய track ஒன்று ஓடிக் கொண்டிருப்பதைக் கவனித்தேன் ! ஏற்கனவே இதில் உள்ள நடைமுறை சிக்கல்களின் ஒரு பகுதியினை நான் தெளிவாகவே எடுத்துச் சொல்லி விட்டேன் ! சிக்கல்களின் மீதப் பரிமாணங்களை சிலாகித்தோ ; இந்தக் கனவை நடைமுறைப்படுத்திட எங்களது உழைப்பை செலவிடும் பட்சத்தில் - நிச்சயம் அடுத்த 6 மாதங்களாவது வேறு புது இதழ்கள்  சாத்தியப்படாது என்பதைப் பற்றியோ பேசி, ஒரு சீராய் பயணித்துக் கொண்டிருக்கும் நமது புது இதழ்களின் சாலையை கரடு முரடாக்கிக் கொள்வது விவேகமாகாதென்று நினைக்கிறேன் !  அது மட்டுமல்லாது இந்த ஆயிரம் ரூபாய் ; ஆயிரத்து ஐநூறு ரூபாய் என்றெல்லாம் விலைகள் வைத்து நமது காமிக்ஸ்களை சராசரியான நண்பர்களின் தொடும் தூரத்திற்கு வெகு அப்பால் கொண்டு நிறுத்திடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை ! புதன் கிழமை மாலை நமது அலுவலகத்திற்கு வந்ததொரு உள்ளூர் சிறுவன் கையில் இருந்ததோ ரூபாய் 100 ; ஆனால் அவன் இன்னும் வாங்கிடாத நமது சமீபத்திய இதழ்கள் 3 ! அவன் கண்களில் தெரிந்த அந்த ஏக்கம் ; இறுதியாக நியூ லுக் ஸ்பெஷல் இதழை தேர்வு செய்த பின்னும், டபுள் த்ரில் மீது லயித்து நின்ற அவனது பார்வை என்னுள் ஒரு விதக் கலக்கத்தை ஏற்படுத்தியது ! நூறு ரூபாய் இதழ்களெனும் போதே இந்த நிலை என்றால், கனவிலும் எட்டிட இயலா 4 digit  விலைகள் இது போன்ற ஏக்கங்கள் எத்தனைக்கு விளைநிலங்கள் ஆகிட வாய்ப்புத் தருமோ ? 

மறுபதிப்புகள் ஆண்டொன்றுக்கு ஆறு இதழ்களே என்று நாம் தீர்மானித்தது நினைவிருக்கலாம்  ! அவற்றில் 5 கறுப்பு வெள்ளை இதழ்களும் ; ஒன்றே ஒன்று ரூபாய் நூறு விலையிலான வண்ண இதழாகவும்  இருக்கும் என்று சொல்லி இருந்தேன் ! அதில் சின்னதாய் ஒரு அதிகரிப்பு ; black & white  இதழ்கள் 6 + வண்ண மறுபதிப்பு 1 - ஆக மொத்தம் 7 இதழ்கள் என்று திட்டமிட்டுள்ளேன்! அந்த ஒரு வண்ண இதழ் ஆண்டின் இறுதி இதழாக ; பெரும்பான்மையினரின் தேர்வாக அமைந்திடும் ..! So பாக்கி 6 இதழ்களை அதிக தாமதமின்றி அறிவித்து விட்டால், குழப்பங்களுக்கு இடம் தந்திடாது என்று தோன்றுகிறது ! So, here goes : 

மறுபதிப்புகள் என்ற உடனேயே நம் முத்து காமிக்ஸ் மும்மூர்த்திகள் முன்னணியில் ஆஜர் ஆகிடுவதை தவிர்க்க இயலாதே ! So பிள்ளையார் சுழி போட்டு வைக்கப் போகும் இதழ் நமது "மாயாவி டைஜெஸ்ட் -1 " பிரத்யேகமாக மாயாவியின் சாகசங்களை மாத்திரமே தாங்கி வரவிருக்கும் இந்த இதழில் - கீழ்க்கண்ட 3 கதைகள் இடம் பிடித்திடும் :
  • உறைபனி மர்மம்
  • நயாகராவில் மாயாவி
  • கொள்ளைக்கார  மாயாவி 


நமது பத்து ரூபாய் லயன் ; முத்து இதழ்கள் வெளிவந்த அதே சைசில் (19cm x 13 cm ) ; black & white -ல் 368 பக்கங்களுடன் ; அருமையான வெள்ளைக் காகிதத்தில், கெட்டியான அட்டைப்படத்தோடு காமிக்ஸ் க்ளாசிக்ஸ் banner -ல் இந்த வரிசை தொடர்ந்திடும். அடுத்த இதழாக வரவிருப்பது - லாரன்ஸ் டேவிட் டைஜெஸ்ட் -1 ! அதே சைஸ் ; பக்கங்கள் ; இத்யாதி ; இத்யாதி...! கதைகளின் பட்டியல் இதோ :

  • FLIGHT 731 
  • வான்வெளிக் கொள்ளையர்
  • பனிக்கடலில் பயங்கர எரிமலை !

இதழ் எண் 3 - "ஜானி நீரோ ஸ்பெஷல் -1 " ! கதைகளின் வரிசை இதோ :

  • பெய்ரூட்டில் ஜானி நீரோ
  • காணாமல் போன கைதி
  • மலைக்கோட்டை மர்மம்



இந்த 9 கதைகளுமே அற்புத சாகச விருந்துகள் என்பதோடு ; சமீபத்தில் மறுபதிப்பாகா கதைகள் என்பதாலும் தேர்வாகின்றன ! முடிந்தளவிற்கு இந்த digest -களுக்கு Fleetway பயன்படுத்திய அதே அட்டைப்பட டிசைன்களை நாமும் உபயோகிக்க முயற்சிப்போம் ! 'மறுபதிப்பில் மும்மூர்த்திகள் மட்டும் தானா ? லயனின் ஆரம்ப - ஆதர்ஷ நாயகரான குற்றச் சக்கரவர்த்திக்கு இடமில்லையா ?' வென புருவத்தை உயர்த்தும் நண்பர்களின் பொருட்டு - இதோ இதழ் # 4 -ன் அறிவிப்பு !! "ஸ்பைடர் ஸ்பெஷல்-1 "-ல் இந்த 3 கதைகள் வந்திடும் :

  • சைத்தான் விஞ்ஞானி
  • விசித்திர சவால்
  • மரண ராகம்


இதில் முதல் இரு கதைகள் லயனின் ஆண்டுமலர் & தீபாவளி  மலர்களில் பல கதைகளின் மத்தியினில் இணைந்து வந்தவை என்பதால், இது நாள் வரை நமது மறுபதிப்பு வலையில் சிக்கிடாமல் போனது ! அதே போல் மரண ராகம் இதழ் கூட மறுபதிப்பானதாய் நினைவில்லை எனக்கு ! 

இதழ் எண் 5  - நிறைய நண்பர்களுக்கு சற்றே வியப்பைத் தரும் ஒரு தேர்வாக இருந்திடலாம் !  எனினும், இது வரை போனிலும், நேரிலும், கடிதங்களிலும் எக்கச்சக்கமான வாக்குகளைப் பெற்ற காரணத்தால், மினி லயனின் ஆரம்ப 4 இதழ்களும் ஒரு சேர - "மினி லயன் டைஜெஸ்ட் -1 "  ஆக மறுபதிப்பாகிடும் ! இவை இன்றைய தலைமுறை வாசகர்களுக்கு வெறும் பெயர்களாக இருந்திட்டால் நான் வியப்படைய மாட்டேன் ; ஆனால் 25 ஆண்டுகளுக்கு முன்னே - ரூபாய் 1 விலையில் (நம்பித் தான் ஆக வேண்டும் !!) வந்த கலக்கலான ஆகஷன் கதைகள் இவை ! ஒரிஜினலில் மெகா பாக்கெட் சைஸ் இதழ்கள் தான் என்ற போதிலும் தற்சமயம் இதர மறுபதிப்புகள் போல் சற்றே பெரிதாய்  வந்திடும் ! இதோ அந்தக் கதைகளின் பட்டியல் ! 
  • துப்பாக்கி முனையில்
  • மரண சர்க்கஸ் 
  • கறுப்புப் பாதிரி மர்மம்
  • கானக மோசடி
இதழ் எண் 6 -ம் ஒரு சுவாரஸ்யமான தேர்வு என்றே சொல்லுவேன் ! ஏற்கனவே கோடிட்டுக் காட்டியது போல - இது ஒரு "VINTAGE DETECTIVE DIGEST "! ரிப் கிர்பி ; காரிகன் ; விங் கமாண்டர் ஜார்ஜ் ; சார்லி ஆகிய நால்வரின் டாப் சாகசங்களில் ஒவ்வொன்றைக் கொண்ட இந்த இதழில் கீழ்க்கண்ட கதைகள் இடம் பெற்றிருக்கும் :
  • நெப்போலியன் பொக்கிஷம் (ஜார்ஜ்)
  • குரங்கு தேடிய கொள்ளையர் புதையல் (சார்லி)
  • வைரஸ் x (காரிகன்)
  • ரோஜா மாளிகை ரகசியம் (ரிப் கிர்பி)

இவை அனைத்துமே முத்து காமிக்ஸில் வெளி வந்த சமயம் தொடங்கி ; இன்று வரை நம்மை மெய்மறக்கச் செய்யும் கதைகள் என்பதில் சந்தேகமே கிடையாதே ! புதிதாய் படிக்கவிருக்கும் நண்பர்களுக்கு இது நிச்சயம் ஒரு பிரமிப்பான அனுபவமாய் அமையப் போவது உறுதி !  

2013 -க்கான இந்த 6 இதழ்கள் நீங்கலாக - டிசெம்பர் 2013 -ல் ஒரு வண்ண மறுபதிப்பு ரூபாய் - 100 விலையில் ; 112 பக்கங்களோடு வந்திடும் ! இதில் இடம் பிடிக்கக் கூடிய கதைகளின் தேர்வு முழுக்க முழுக்க உங்களிடமே..! நம் இதழ்களில்  இதற்காக ஒரு கூப்பன் இருந்திடும் ; அவற்றில் உங்கள் தேர்வுகளை தெளிவாக எழுதி அனுப்பிடலாம் !  

So புலரவிருக்கும் புத்தாண்டின் மறுபதிப்புப் பட்டியல் இதுவே ! கொஞ்சம் உடன்பாடும் ; நிறைய மாறுபட்ட கருத்துக்களும் இந்தத் தேர்வுகளுக்கு இருந்திட வாய்ப்புண்டு என்பதை நான் அறிவேன் ! எனினும் பெரும்பான்மையான நமது வாசகர்களின் வேண்டுகோள்களின் பிரதிபலிப்பே எனது இந்தப் பட்டியலே தவிர - எனது தனிப்பட்ட விருப்புகளுக்கு இங்கு இடமோ ; வெறுப்புகளுக்குக் கல்தாவோ தந்திட நான் முனைந்திடவில்லை என்பதே நிஜம் !  உங்களின் reactions நிச்சயம் சுவாரஸ்யமாய் இருந்திடுமென்பது எனக்குத் தெரியும் ! Fingers Crossed ! 

விரைவில் சந்திப்போம் ! Take  Care !!

Wednesday, September 19, 2012

கொழுக்கட்டைகளும், சில கேள்விகளும்... !


நண்பர்களே,

தாமதமாகினும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்களோடு எனது வணக்கங்களும் உரித்தாகுக ! 

பிள்ளையாரின் பிறந்தநாட்கள் எப்போதுமே ஒரு விதப் பரபரப்பையும், உற்சாகத்தையும் என்னுள் கொண்டு வருவதுண்டு! கொழுக்கட்டைகளைப் போட்டுத் தாக்கிட ஒரு சூப்பர் வாய்ப்பென்பதைத் தாண்டி, நிறைய பள்ளிப் பருவ நினைவுகளையும் கொண்டு வந்திடும் மகிமை இந்நாளுக்கு உண்டு என்னைப் பொருத்த வரை !  எங்கள் நகரின் மையத்தில் உள்ளதொரு பிள்ளையார் கோவிலின் வாசலில் ஒவ்வொரு விநாயகர் சதுர்த்தியின் போதும் பெரியதொரு மேடை அமைக்கப்பட்டு, பள்ளி மாணாக்கரிடையே ஒரு பேச்சுப் போட்டி நடைபெற்றிடும். எங்கள் பள்ளியின் சார்பாக அனுப்பப்படும் போட்டியாளர்களில் அடியேனும் அடக்கம். ஊரின் மையப் பகுதியில் ரோட்டை மறித்து மாலையில் நடத்தப்படும் போட்டி என்பதால் தெருக்களில் நல்ல கூட்டம் கூடிடுவது வழக்கம். பள்ளியில் மேடைகளில் பேசும் போதே ஒரு விதக் கூச்சம் மனுஷனை பிடுங்கிடும் போது, வீதிகளில் ஏராளமான கூட்டத்தின் நடுவே பேசிடணும் என்றால்  கேட்கவும் வேண்டுமா? "பில்டிங் ஸ்ட்ராங் ;பேஸ்மென்ட் வீக் " என்ற கதை தான் !! அதுவும் மேடையில் மாணவிகள் தங்கு தடைகளின்றி விளாசிடும் போது, நமது வரிசை வருவதற்காகக் கீழே காத்திருப்பது  - 'ஐயோடா சாமி' அனுபவம் !! "பிள்ளையாரப்பா....எனக்குப் பரிசெல்லாம் கிடைக்காவிட்டிலும் பரவாயில்லை; இத்தனை கூட்டத்தின் மத்தியில் ; அதுவும் இப்படிப் பின்னி பெடல் எடுக்கும் பெண் பிள்ளைகள் மத்தியில் என்னை நானே முட்டாளாக்கிக் கொள்ளாது இருந்தாலே போதும்" என்று வேண்டிய மாலைகள் நிறையவே நினைவுக்கு வருகின்றன !!  

நினைவுகளைக் கொணரும் இந்த சதுர்த்தி தினத்தில், வெகு சமீபத்தில் பெங்களுருவில் நமது நண்பர்களை சந்தித்ததும், அவர்களது கேள்விகளும் 'பளிச்' என்று நினைவில் நிற்கின்றது. ஆங்கே கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களையே சின்னதொரு பதிவாய்ப் போட்டிட promise பண்ணி இருந்ததும் நினைவில் நிற்பதால், here goes :

  • சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல் எப்போது ? நிச்சயம் வருகிறது தானே ? ----> சந்தேகமே வேண்டாம்...சூ.ஹீ.சூ.ஸ்பெஷல் நிச்சயம் உண்டு  ! அடுத்த வாரத் துவக்கத்தில் அச்சுப் பணிகளைத் தொடங்கிடவிருக்கின்றோம் . இம்மாத இறுதிக்குள் இதழ் அச்சாகி ; அக்டோபர் 10 தேதிக்கு முன்னதாகவே உங்களை வந்தடையும்.  
  • மறுபதிப்புகளில் மாயாவி உண்டா ?----->                                                மாற்றம் ஒன்று மாத்திரமே மாறாதது ; ஆனால் இதற்கு விதிவிலக்கென்று ஏதேனும் இருக்குமாயின், அது தான் "இரும்புக்கை மாயாவி"யின் குறையா மவுசு ! தமிழில் காமிக்ஸ் என்பதற்கே ஒரு அடையாளம் தந்த நம் மறையும் மனிதர் - ஏறத்தாழ 40 ஆண்டுகள் கழிந்த பின்னும் தனது (தமிழ்) காமிக்ஸ் பயணத்தின் வேகத்தை மட்டுப்படுத்திடுவதாகத் தெரியவில்லை !தனிப்பட்டமுறையில் 'it's time to move on' என்று நான் நினைத்திட்டாலும்,  மறுபதிப்புகள் எனும் உங்களின் கோரிக்கை விடாது தொடர்வதால், மாயாவி & கோ. 2013 - ல்  நிச்சயம் தொடர்வர் ; reprint களில் ! 

  • வண்ணத்தில் மறுபதிப்பு போடுவீர்களா ?--------->பெங்களுருவில் சந்தித்த நண்பர்களில் கணிசமானோர் - நமது இந்த வலைப்பதிவைத் தவறாது வாசிக்கும், ஆனால் நேரமின்மை காரணத்தாலோ ; தமிழில் டைப் செய்யத் தெரியாதென்ற காரணத்தினாலோ பின்னூட்டங்கள் இடாத passive followers ! ஆகையால், இங்கே கருத்துப் பரிமாற்றங்கள் நடந்திடுவதை படித்துப் பரிச்சயம் கொண்டிருந்தாலும், தங்களது சொந்த விருப்பு - வெறுப்புகளை அதிகம் வெளிப்படுத்தியிரா மௌனிகள் - at least என்னை சந்தித்திட்ட வரை ! பேச வாய்ப்புக் கிடைத்த போது ஒவ்வொருவரும் தத்தம் ஆதர்ஷ நாயகர்கள் பற்றி ; தங்களின் மறுபதிப்புத் தேர்வுகள் பற்றி ; சூ.ஹீ.சூ.ஸ்பெஷல் பற்றி என்று வெளுத்துக் கட்டி விட்டனர் ! அவர்களில் நிறையப் பேர் கேட்டது : "வண்ணத்தில் மறுபதிப்பு சாத்தியமா?"என்பதே ! வண்ணத்தில் ஒரு இதழைத் தயாரிப்பதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை நான் பட்டியலிட எத்தனித்தால், அது ஒரு அழுகாச்சி மெகா சீரியல் போல் ஆகிடும் என்பதால் நான் மழுப்பிக் கொண்டே நடையைக் கட்டிடுவது வழக்கம் ! ஆனால் சமீபமாய் , இந்த "வண்ணம் வேண்டும்" என்ற கோரிக்கை உரக்க ஒலிப்பதால் , அதன் மறுபக்கமுள்ள மண்டை நோவுகளையும் உங்களுக்குப் பரிச்சயமாக்கும் வேளை வந்துவிட்டதென்று தோன்றுகிறது ! நான் பல முறை சொல்லியுள்ளது போல, நமது பலமும், பலவீனமும் நமது அமைப்பின் அளவே ! பெரியதொரு அலுவலகம், எக்கச்சக்கமான ஆள், அம்பாரமெல்லாம் நமது காமிக்ஸ் பிரிவிற்கு எனக் கிடையாது !  சொல்லப் போனால்,பணியாளர்களின்  சம்பளமும், தொலைபேசிக் கட்டணங்களும் தவிர்த்து, நமது காமிக்ஸ் பிரிவின் தலையில் வேறு எந்த செலவினங்களையும் சுமத்துவதில்லை. நான் அயல்நாட்டுப் பயணங்கள் மேற்கொள்ளும் போது கூட, அதில் ஒரு அணா வாகினும் காமிக்ஸ் பிரிவின் பொறுப்பாகிடாது ! தற்சமயம் நாம் பின்பற்றி வரும் இந்த நேரடி விற்பனை முயற்சியில் - முன்பைப் போல் கடன் தரும் அவஸ்தைகள் ; வசூலுக்காகச் செருப்புகள் தேய்விப்பது போன்ற தொல்லைகள் கிடையாது ! ஆனால் தற்சமயம் நாம் அச்சிடும் பிரதிகளில் உடனே விற்பனை செய்வது தோராயமாக 60 % மாத்திரமே ; மீதமுள்ள 40 % நம் கைவசம் ஸ்டாக்காக இருந்து, சிறுகச் சிறுகவே விற்பனை ஆகிடும். ஒரு குறைந்தபட்ச printrun ஆவது இல்லாவிடில், விலையினை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க இயலாதென்பது பத்திரிகை உலக economics ! ஆகையால் ஒவ்வொரு வண்ண இதழுக்கும் தற்சமயம் நம் முதலீடும் அதிகம் ; முடங்கும் தொகையும் அதிகம் ! அவ்வப்போது வந்திடும் புத்தகத் திருவிழாக்களில் விற்பனை ; E -Bay ஆன்லைன விற்பனை ; ஏஜெண்டுகளின் ரொக்கக் கொள்முதல்கள் என்று சிறுகச் சிறுக விற்பனைகள் நடந்தேறி வருவதால் சற்றே பாதை சுலபமாகி வருகின்றது ! இந்த சூழலில் வண்ணத்தில் மறுபதிப்பு என்று புதிதாக இன்னொரு சாலை அமைப்பதென்பது உங்கள் பாக்கெட்களுக்கு    மாத்திரமன்றி எங்களது பாக்கெட்களுக்கும் நலம் தரா விஷயம்! இது ஒருபக்க நடைமுறைச் சிக்கலென்றால், தயாரிப்பில் சந்திக்கும் "பெண்டு நிமிர்த்திகளுக்குப்" பஞ்சமே கிடையாது ! வண்ண மறுபதிப்பான  "தங்கக் கல்லறை" இதழுக்கான பணிகளும் தற்போது நடந்தேறி வருவதால், அதில் எழும் பிரச்னைகளை first hand ஆக சமாளித்து வருகின்றேன் ! இதழைப் படிக்கும் சமயம் வந்திடும் போது இது பற்றி எழுதுகிறேன் !  எல்லாவற்றிற்கும் மேலாக, புதிதாய் ஒரு பணியை ; ஒரு ப்ராஜெக்டை கையில் எடுத்திடும் போது தோன்றும் உற்சாகம், ஒரு மறுபதிப்பிற்கு மறுவடிவம் தந்திட முயலும் போது எழுந்திடுவதில்லை !So ஆண்டுக்கு ஒரு மறுபதிப்பு - முழு வண்ணத்தில் ; பெரிய சைசில் என்பது நிச்சயம் !! அதில் வந்திடவிருக்கும் கதைத் தேர்வுகள் முழுக்க முழுக்க உங்கள் கைகளில் !கள்ள ஓட்டோ - நல்ல ஓட்டோ போட்டு நீங்கள் தேர்வு செய்யும் கதைகள் வண்ணத்தில் (மறுபதிப்பாய்) வந்திடும் !    
  • "மின்னும் மரணம்" வண்ணத்தில் திரும்பவும் போடலாமே ? -------இக்கேள்விக்கு பதில் இதோ - மேலே உள்ளதால்...I will let this one pass by !!  
  • மினி லயன் எல்லாவற்றையும் மறுபதிப்பு போட்டே தீர வேண்டும் !மினி லயனின் அந்த ஆரம்பக் கதைகள் - ஒரு ரூபாய் விலையில் வந்தவை என்பதாலோ, என்னமோ இன்னமும் என் நினைவில் நின்றிடும் இதழ்கள். பின்னர் வெவ்வேறு விலைகளில் வந்தாலும், சுவாரஸ்யமான combination களைக் கொண்டு ஒவ்வொரு இதழும் வெளியானதாய் என் மனதுக்குப்பட்டது ! மறுபதிப்பு ப்ரோக்ராமில் மினி லயனுக்கு இடம் ஒதுக்குவது சிரமம் தராதென்று நினைக்கிறேன் ! பார்க்கலாமே..!
  • டெக்ஸ் வில்லர் ஏன் ஆளைக் காணோம் ?'பதுங்குவது பாய்வதற்கே' என்று பஞ்ச் டயலாக் விட்டால் நன்றாகவே இருக்கும் ; எனினும் நிஜம் அதுவல்ல ! டெக்ஸ் கதைகளின் பிரதானம் கருப்பு, வெள்ளை என்பதாலும், அதன் வடிவமைப்பு நமது தற்சமயப் பெரிய சைசிற்கு அத்தனை ஏற்றதல்ல என்பதாலும், 2012 -ன் காலெண்டரில் அவருக்கு இடம் தந்திட்டு என்னை நானே குழப்பிக் கொள்ளத் தயாராக இல்லை. புதிய பாணி ; புதிய விற்பனை முறைகள் அனைத்துமே ஓரளவுக்குப் பரிச்சயமான பின்னே மாறுபட்ட விலைகள் ; அமைப்புகள் என்று முயற்சிக்கலாம் என்பதே எனது சிந்தனையாக இருந்தது இவ்வாண்டின் துவக்கத்தில் ! இப்போது ஓரளவிற்குத் தெளிவு பிறந்திருப்பதால் நமது டாப் ஸ்டாரான  டெக்ஸின் வருகைக்கு ரூட் க்ளியர் ஆகி விட்டது. இரவுக் கழுகார் பிப்ரவரி 2013 -ல் பிரச்சனமாகிறார் - ரூபாய் ஐம்பது விலையில் - ஒரு 240 பக்க சாகசத்தோடு ! 

  • மாண்ட்ரேக் கதைகள் ஏன் வருவதில்லை இப்போதெல்லாம் ?எனது ஆதர்ஷ காமிக்ஸ் நாயகர்கள் பட்டியலில் மாண்ட்ரேக்குக்கு நிச்சயம் இடமுண்டு : ஆனால் உங்களில் எத்தனை பேர் அவரது சாகசங்களை ரசித்திட நிஜமாகத் தயாரென்று நானறியேன் ! நமது பத்து ரூபாய் இதழ்களில் மாண்ட்ரேக் வந்து கொண்டிருந்த வேளைகளில் விற்பனை செம மந்தம் என்பது அவரை ஓரங்கட்டிட ஒரு பிரதான காரணம் ! நீங்கள் தயாரென்றால் - நானும் தயாரே...! தூங்கிக் கொண்டிருக்கும் அவரது கதைகளை எனது மேஜையிலிருந்து விடுதலை கொடுத்த புண்ணியமும் நமக்குச் சேரும் !! 
  • நமது சர்குலேஷன் இப்போது எவ்வளவு ?பெரிதாய் இல்லாத போதிலும், நிச்சயம்  சரியான பாதையில் பயணிக்கிறோம் என்று எண்ணிடச் செய்யும் ஒரு நம்பிக்கையான நம்பர் ! இப்போதைக்கு let's leave it at that ! 
  • ஜான் ஸ்டீல் அவ்ளோ பெரிய அப்பாடக்கரா ஆனதன் ரகசியம் ?'30 நாட்களில் அப்பாடக்கராவது எப்படி ?'  என்று புத்தகங்கள் எதையும் படித்து ஜான் ஸ்டீல் நம் இதழ்களில் தற்சமயத்து இடத்தைப்  பிடித்திடவில்லை! '60 களின் இறுதியிலும் ; '70 -களின் துவக்கங்களிலும்    Fleetway வெளியீடுகளில் மிகுந்த வரவேற்புப் பெற்றதொரு ஹீரோ ஜான் ஸ்டீல்!அவரது கதைகளில் திறமையான ஓவியரின் பணியும்;யதார்த்தமான கதைக்களங்களை உருவாக்கும் கதாசிரியரின் கைவண்ணத்தையும் ரசித்திட முடியும். ஜான் ஸ்டீல் கதைகளின் காலகட்டம் புராதனமானதென்பதால், லார்கோ ;XIII போன்ற சமகாலத்து நாயகர்களின் பளபளப்பு தென்படுவது இயலாக் காரியம் ; but still கழிக்கும் ரகமல்ல ! தவிர இவரது கதைகளின் நீளம் ஜாஸ்தி கிடையாதென்பதால் நமது இதழ்களின் பின்பக்கங்களில் இவரை நுழைத்திடுவது சுலபமாகுகிறது !
  • இரத்தப் படலம் முழுவதையும் வண்ணத்தில் மறுபதிப்பு முடியுமா ?இரத்தப் படலம் - முழுத் தொகுப்பு சுருக்கமாய்ச் சொல்வதெனில் ஒரு வைராக்கியத்தின் வெளிப்பாடு ! அதனை கருப்பு வெள்ளையில் வெளியிடுவதிலேயே தொங்கிப் போன நாக்கு தெருவைக் கூட்டாத குறை தான் ! மீண்டும் அதனை வண்ணத்தில் வெளியிடுவதென்பது சுகமான கற்பனையாகவே இருந்திடும் ! இரத்தப் படலம் கதைகளில் வசனங்களுக்குப் பஞ்சமே கிடையாது ; பக்கம் பக்கமாய் ஒவ்வொரு பாத்திரமும் பேசுவது சகஜம் என்பது நாமறிவோம் . வண்ணத்தில் அந்தந்த வசன பலூன்களுக்குள் ஓரளவிற்காவது வாசிக்க இயலும் சைசில் எழுத்துக்களை அமைக்க வேண்டுமெனில், மீண்டும் 18 பாகங்களையும் crisp ஆக மொழிபெயர்த்திடல் அவசியம் ! புதிய  மொழிபெயர்ப்பில் முந்தைய கருப்பு வெள்ளைக் கதையின் நடையில் இருந்த சுவாரஸ்யம் குன்றிடாமல் ;  சங்கதிகள் ஏதும் கத்திரிக்கப்படாது அமைகிறதாவென்று பார்த்துக்கொள்வதிலேயே பெண்டு கழன்று விடும். 'அப்படியே எடுத்தோம் ; வண்ணத்தை மாத்திரமே சேர்த்தோம் - இதழ் ரெடி' என்றதொரு magic noodles பார்முலா கிட்டிட்டால் எல்லாமே சுலபமாகிடும் ! அது வரை கனவுகளே நம் தோழர்களாக இருத்தல் அவசியம் - இரத்தப் படலத்தைப் பொருத்த வரையிலாவது !  

  • கிராபிக் நாவல் என்றால் என்ன ? இது அடிக்கடி வருமா ? எமனின் திசை மேற்கு இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லி இருக்கும் -நிச்சயமாக !இது போல் மாறுபட்ட கதைகள் கிடைக்கும் போது நிச்சயம் வெளியிடுவோம் - அவை கௌபாய் ரகக் கதைகளாக அல்லாது இருந்தாலும் !  
  • ஸ்பைடர் கதைகளை ரசிக்க அப்படி என்ன பெரிய பிரச்னை ?இது ஒவ்வொருவரின் ரசனையினையும் சார்ந்த சங்கதி என்பதால், ரொம்பவே sensitive ஆன விஷயமாகிறது ! இதில் எனது அபிப்ராயம் எதுவாக இருப்பினும், வாசகர்களின் ஆர்வத்திற்கோ, வேட்கைக்கோ நான் தடையாக நிற்கப் போவதில்லை ! சூ.ஹீ.சூ.ஸ்பெஷல் இதழ் வெளியான பின்னே இதனைப் பற்றிப் பேசுவது பொருத்தமாக இருக்குமென்று நினைக்கிறேன் ! Judgement reserved ?
  • "கார்சனின் கடந்த காலம் " reprintபோடாமல் விட்டுடாதீங்க !!ரீப்ரின்ட் - ரீப்ரின்ட் - உங்கள் சாய்ஸ் - உங்கள் சாய்ஸ் !  
  • கேப்டன் டைகர் கதைகளின் குறைபடிப் பாகங்களை எப்போது நிறைவு செய்வதாக திட்டம் ? செப்பனிட வேண்டிய சாலைகள் ; உருவாக்க வேண்டிய மேம்பாலங்களென - நம் நாட்டு நெடுஞ்சாலைகளைப் போல் டைகர் கதைகளிலும் நமக்கு ஏகப்பட்ட வேலை பாக்கி உள்ளது ! பணியைத் துவக்கியாச்சு..இனி பொறுமையாய் ஒவ்வொன்றாய் முடிக்க வேண்டியது தான் ! 
  • இரும்புக்கை எத்தனின் இறுதிப் பாகங்கள் ??? மே 2013 ! 
  • புதிதாய் என்ன கதைகள் வரப் போகின்றன ? மர்ம மனிதன் மார்ட்டின் & ராபின் வருவது உறுதியாகிவிட்டது . மதியில்லா மந்திரி ; சாகச வீரர் ரோஜர் ; ப்ருனோ பிரேசில் ஆகியோரும் உண்டு பட்டியலில். இன்னும் ஒரு சில நாயகர்கள் என் லிஸ்டில் உள்ளனர் ; நவம்பரில் அவர்களைப் பற்றி எழுதிகிறேனே !

  • இந்தப் புது பாணிக்கு வரவேற்பு எப்படி உள்ளது ? ஒற்றை வார்த்தையில் சொல்வதானால் - "WOW "!! Thanks folks!!! 
  • மறுபதிப்புக்கு ஏன் இவ்வளவு தயக்கம் ? தயக்கமெல்லாம் கிடையாது ! கடல் அளவு சர்வதேசத் தரம் நம் முன்னே புதிதாய்க் காத்திருக்கும் போது, பெருங்காய டப்பாவை முகர்ந்து பார்த்துக் கொண்டே இருப்பது எவ்விதம் சுவாரஸ்யம் அளிக்குமென்பது தான் எனது கேள்வி ! "எமனின் திசை மேற்கு" ரகத்தில் காத்திருக்கும் அற்புதங்கள் எத்தனையோ ? லார்கோவின் புதுப் பாணியில் இன்னும் நம் கைபடாத கதைவரிசைகள் எத்தனையோ ? அந்தத் தேடலில் நமது creative energy செலவாகினால் எனக்கு சந்தோஷமே ! 
  • வேதாளரின் புதிய கதைகளை ஏன் போடக் கூடாது ?  வேதாளரின் புதுப் பாணிக் கதைகளை  நிறைய ஆங்கிலப் பதிப்பகங்கள் முயற்சித்து, கையைச் சுட்டுக் கொண்டு நிறுத்தி விட்டன. முந்தைய கதைகளை உங்களுக்கு ஆர்வமிருப்பின் உயிர்ப்பித்துக் கொண்டு வர உரிமையாளர்களிடம் பேசிப் பார்க்கலாம் !

  • சூ.ஹீ .சூ .Spl வண்ணத்தில் போட முடியாதா ?No way !! 
  • திகில் ஆரம்ப இதழ்களை தொடர்ந்து மறுபதிப்பு செய்வதை ஏன் நிறுத்தி விட்டீர்கள்   ?இரண்டாம் திகில் இதழின் மறுபதிப்பு "தங்கக் கல்லறை"யின் பின்னே வந்திடும் ! இதழ் 3  - maybe மறுபதிப்புப் பட்டியலில் !! 
  • கபிஷ் ; இன்ஸ்பெக்டர் கருடா போன்ற கதைகளை ஏன் போடுவதில்லை இப்போதெல்லாம் ? மும்பையிலிருந்து Rang Rekha Features எனும் நிறுவனம் மேற்படிக் கதைகளை தயாரித்து விற்பனை செய்து கொண்டிருந்தது. நீண்ட காலமாய் தொடர்பின்றிப் போனதால், இப்போதைய நிலவரம் சரியாகத் தெரியவில்லை. விசாரித்துப் பார்க்க வேண்டும் !  
  • வாண்டுகள் படிப்பதற்காக முந்தைய ஜூனியர் லயன் பாணியில் ஏதாச்சும் வெளியிட்டால் என்ன ? கவனிக்கப் படவேண்டியதொரு சங்கதி ! தமிழில் சிறார்கள் படிக்கக் கூடிய காமிக்ஸ் இதழ் ஒன்றை உருவாக்க முடிந்தால் அற்புதமாக இருக்கும் ! நிச்சயம் சிந்திப்பேன் ! 
  • டைகர் digest  ; பிரின்ஸ் digest ; சிக் பில் digest என்று தனித்தனியாய்ப் போட்டால் என்ன ? மீண்டும் நமது விற்பனை முகவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக நமது இதழ்களைக் கேட்டு வாங்குவதை கடந்த ஓரிரு மாதங்களாய் நாங்கள் பார்த்து வருகின்றோம். கொஞ்சம் அவகாசமளித்தால் விற்பனை எண் இன்னும் சற்றே தாட்டியமாகிட வாய்ப்புண்டு என்று உறுதியாக நம்பத் தோன்றுகிறது ! அந்த பொழுது புலரும் போது எல்லாமே சாத்தியமே !
  • NEVER BEFORE ஸ்பெஷல் ஜனவரியில் நிச்சயமா ?You bet !!! முழு மூச்சாய்ப் பணிகள் நடந்தேறி வருகின்றன ! சொல்லப் போனால் கடந்த ஒரு மாதமாகவே நான் இங்கே வலைப்பதிவிற்கு   ஒதுக்கும் நேரம் கூட குறைந்து விட்டது - NEVER BEFORE ஸ்பெஷல் இதழின் பணி மும்முரத்தில் ! ஜனவரி 2013 -ல் உங்கள் கைகளில் இதழ் இருப்பது நிச்சயம் !
பெரும்பான்மையான சங்கதிகள் நாம் இங்கே ஏற்கனவே போட்டுத் துவைத்தவைகளே என்ற போதிலும், புது வாசகர்களுக்கு இவை சுவாரஸ்யத்தைத் தரலாமென்று தோன்றியது !எழுதிடுவதில் எனக்குக் கிடைத்த சந்தோஷம், படிக்கும் உங்களுக்கும் கிடைத்தால் ரெட்டிப்பு மகிழ்ச்சியே ! Take care folks ! 

Thursday, September 13, 2012

சலாம் பெங்களுரு !!

நண்பர்களே,

வணக்கம். சிவகாசியில் இரு பெரிய அம்மன் கோவில்கள் இருப்பதால், ஒவ்வொரு கோடையிலும், ஒன்றுக்கு இரண்டாகத் திருவிழாக்கள் நடந்தேறுவது வழக்கம். பள்ளி ஆண்டு விடுமுறைகளை ஒட்டிய ஏப்ரலில் ஒன்றும், மே மாதம் இன்னொன்றும் என எங்களது சிறு வயதுக் குதூகலங்கள் இந்தத் திருவிழாக்களின் வருகையைச் சுற்றியே இருந்திடுவது வழக்கம். முப்பது ஆண்டுகளுக்கு முந்தைய அந்த அப்பட்டமான சந்தோஷத்தை ; கலப்படமில்லாக் குதூகலத்தை ; கடந்த சனி & ஞாயிற்றுக் கிழமைகள் உணர்ந்திடும் ஒரு ஆச்சர்ய அனுபவம் நமது பெங்களுரு COMIC CON திருவிழாவின் புண்ணியத்தில் கிட்டியது !



பெரிதானதொரு எதிர்பார்ப்பையோ  ..ஏராளமான பிரதிகளையோ சுமந்து செல்லாமல், ரம்யமான பெங்களுருவில் சனி காலையில் நானும், எனது புதல்வன் விக்ரமும், நமது காமிக்ஸின் "பிரபல முகமும், குரலுமான" எங்களது விற்பனை மேலாளர் ராதாகிருஷ்ணன் சகிதம் இறங்கிய போதே நமது வாசக நண்பர்களின் தொலைபேசி அழைப்புகள் துவங்கிட்டன! ராதாகிருஷ்ணனின் கைபேசி எண் நிறைய நண்பர்களுக்குப் பரிச்சயம் என்பதால், ஆர்வமான வினவல்கள் ; விசாரிப்புகள் என்று காலை 9 மணிக்கு முன்னதாகவே களை கட்டத் துவங்கியது ! நிகழ்ச்சி நடந்திடும் கோரமங்களா ஸ்டேடியத்திற்கு வழி கண்டு பிடித்து   ஒன்பது மணிக்கு அங்கே ஆஜராகிய போது, பெரிய , பெரிய டெம்போக்களிலும்  வேன்களிலும், இதர பங்கேற்பாளர்களின் சரக்குகள் வந்து இறங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்திட முடிந்தது ! காலை பத்து மணிக்கு மேல் திருவிழா துவங்கிடவிருக்க , தத்தம் ஸ்டால்களைத் தயார்படுத்திட    ஒன்பது மணிக்கு அனுமதி தந்திட்டார்கள். மெள்ள அரங்கினுள் நுழைந்தால், அங்கே பரிச்சயப்பட்டதொரு முகம் நம்மை வரவேற்றிட நின்றது ! அதிகாலையே பெங்களுரு வந்துவிட்டதாகவும், இங்கே அரங்கு வாயிலில் எட்டு மணிக்கெல்லாம் வந்து 'தேவுடு ' காத்திருப்பதாகவும் நமது வாசக நண்பர் சொல்லிய போது அவர்தம் முகத்தில் அயற்சியினைப் பார்த்திட முடியவில்லை ; மாறாக கொப்பளிக்கும் உற்சாகமே தெரிந்தது ! நமக்கு ஒதுக்கப்பட்டிருந்த ஸ்டால் எண் B17  சிறிதென்ற போதிலும் நல்லதொரு இடத்தில அமைந்திருந்தது ! 'விறு விறு' வென்று எங்கள் பணியாளர்கள் நாங்கள் கொண்டு வந்திருந்த போஸ்டர்கள் ; பெரிய banner ஆகியவற்றை ஸ்டாலில் ஒட்டிடத் தயார் ஆக, வரிந்து கட்டிக் கொண்டு நம் நண்பரும் செயலில் இறங்கினார் ! 

பத்தே நிமிடங்களில் நமது ஸ்டால் 'பளிச்' என்று காட்சியளித்தது ! வரவிருக்கும் "தங்கக் கல்லறை " அட்டைப்படத்தின் blowup ; மையமாய் சூ.சூ.Spl -ன் (முழுவதும் பூர்த்தி செய்யப் படாத ) முன்பக்க டிசைன் ; நமது நாயகர்களின்  ஒரு குட்டி அறிமுகம் கொண்ட நான்கு பக்க போஸ்டர் - ஆங்கிலத்தில் ; இரத்தப் படல முழுத் தொகுப்பின் அட்டைப்பட blow up ; WILD WEST ஸ்பெஷலின் blowup என்று  நமது ஸ்டாலின் சுவர்கள் சுவாரஸ்யமாகவே தெரிந்ததாக எனக்குப் பட்டது !  


பக்கத்தில் கடை போடத் துவங்கிக் கொண்டிருந்த இதர பங்கேற்பாளர்களை பராக்குப் பார்க்க அரங்கத்தை ஒரு ரவுண்ட் அடித்தேன் ! காமிக்ஸ் பதிப்பகங்கள் ; விற்பனையாளர்கள் மட்டுமென்று இல்லாது,  t -ஷர்ட் விற்பனை மையங்கள்  ; காமிக்ஸ் தொடர்புடைய பொம்மைகள், விளையாட்டுப் பொருட் விற்பனை நிலையங்கள்  ; அரிய காமிக்ஸ் சித்திரங்களின் சேகரிப்பைக் கொண்டதொரு கடை ; காமிக்ஸ் ஓவியர்கள் பயன்படுத்திடும் பல்வேறு சித்திர சாதனங்களின் விற்பனைக் கூடம் ; சர்வதேச அளவில் காமிக்ஸ் ; அனிமேஷன் போன்ற கலைகளில் பயிற்சி தந்திடும் பள்ளிகளின் ஸ்டால்கள் என்று காமிக்ஸ் தொடர்புடைய சங்கதிகளாய் அரங்கமே நிறைந்திருந்தது நிறைவாக இருந்தது ! "நானொரு காமிக்ஸ் காதலன் " என்று சொன்னால், "ஆஹா..நேற்று வரை பயல் நல்லா தானே இருந்தான் ?" என்ற பாணியிலான பார்வைகள் அடுத்த இரண்டு நாட்களுக்கு இங்கே நிச்சயமிருக்காது என்ற உணர்வு ; தொடர்ந்து இங்கே ஆஜராகப் போகும் ஒவ்வொருவரும் காமிக்ஸ் எனும் சுவையை நேசிக்கும், சுவாசிக்கும் அன்பர்களாகத் தான் இருப்பார்கள் என்ற realisation ஒரு இனம் சொல்ல இயலா இதத்தை தந்தது ! 


மணி பத்து அடிக்கும் போது வேக நடையாய் நம் வாசகர்கள் ஒருவர் பின் ஒருவராய் அங்கே பிரசன்னமாக (!) எனக்குள் சின்னதாய் ஒரு நம்பிக்கை துளிர் விடத் துவங்கியது ! நான் ஏற்கனவே எழுதி இருந்தது போல,   அசாத்தியமான விற்பனையை எதிர்பார்த்தெல்லாம் நாங்கள் COMIC CON -க்குப் புறப்பட்டிருக்கவில்லை ! மாறாக, நமது இரண்டாவது வருகையின்   தொடர்ச்சியாக ; இந்த வலைப்பதிவில் நாம் எண்ணப் பரிமாற்றங்கள் செய்திடத் துவங்கியதன் தொடர்ச்சியாக - வாசக நண்பர்களை சந்திக்கவும், அவர்தம் கருத்துக்களை அறிந்திடவும் இதுவொரு platform ஆக அமைந்திட வேண்டுமே என்ற அவா மட்டுமே என்னுள் மேலோங்கி நின்றது ! அரங்கம் முழுவதிலும் தமிழ் முகங்கள் நம்மது மாத்திரமே என்பதால், நம்மை சந்தித்திட வருகை தரும் நண்பர்களை சுலபமாய் அடையாளம் காண முடிந்த போது எனது எதிர்பார்ப்பு பொய்க்காது என்று புரிந்தது ! 

மிகச் சின்ன அவகாசத்திற்குள் நம் ஸ்டால் செம பிஸியாகி விட்டது ! பெங்களுருவில் வசிக்கும் ; பணி புரியும் நண்பர்கள் ; தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து பிரத்யேகமாக இதற்கெனவே ஒரு ட்ரிப் அடித்திருந்த அன்பர்கள் என்று ஒரு காமிக்ஸ் காதல் குழுமம்  அங்கே சற்றைக்கெல்லாம் உருவாகி விட்டிருந்தது ! ஒவ்வொருவரின் முகத்தில்  தாண்டவமாடிய சந்தோஷமும், கண்களில் தெரிந்த ஒளியும், எவ்வித சந்தேகமும் வைத்திடவில்லை - நம் இதழ்களின் மீது அவர்களுக்குள்ள நேசத்தினைப் பற்றி !!

ஒவ்வொருவரும் சரவெடியாய்க் கேள்விகளைத் தொடுத்தனர் !!


  • சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல் எப்போது ? நிச்சயம் வருகிறது தானே ? 
  • மறுபதிப்புகளில் மாயாவி உண்டா ? 
  • வண்ணத்தில் மறுபதிப்பு போடுவீர்களா ?
  • "மின்னும் மரணம்" வண்ணத்தில் திரும்பவும் போடலாமே ?
  • மினி லயன் எல்லாவற்றையும் மறுபதிப்பு போட்டே தீர வேண்டும் !
  • டெக்ஸ் வில்லர் ஏன் ஆளைக் காணோம் ?
  • மாண்ட்ரேக் கதைகள் ஏன் வருவதில்லை இப்போதெல்லாம் ?
  • நமது சர்குலேஷன் இப்போது எவ்வளவு ?
  • ஜான் ஸ்டீல் அவ்ளோ பெரிய அப்பாடக்கரா ஆனதன் ரகசியம் ?
  • இரத்தப் படலம் முழுவதையும் வண்ணத்தில் மறுபதிப்பு முடியுமா ?
  • கிராபிக் நாவல் என்றால் என்ன ? இது அடிக்கடி வருமா ? 
  • ஸ்பைடர் கதைகளை ரசிக்க அப்படி என்ன பெரிய பிரச்னை ?
  • "கார்சனின் கடந்த காலம் " reprintபோடாமல் விட்டுடாதீங்க !!
  • கேப்டன் டைகர் கதைகளின் குறைபடிப் பாகங்களை எப்போது நிறைவு செய்வதாக திட்டம் ? 
  • இரும்புக்கை எத்தனின் இறுதிப் பாகங்கள் ???
  • புதிதாய் என்ன கதைகள் வரப் போகின்றன ?
  • இந்தப் புது பாணிக்கு வரவேற்பு எப்படி உள்ளது ?
  • மறுபதிப்புக்கு ஏன் இவ்வளவு தயக்கம் ?
  • வேதாளரின் புதிய கதைகளை ஏன் போடக் கூடாது ? 
  • சூ.ஹீ .சூ .Spl வண்ணத்தில் போட முடியாதா ?
  • திகில் ஆரம்ப இதழ்களை தொடர்ந்து மறுபதிப்பு செய்வதை ஏன் நிறுத்தி விட்டீர்கள்   ?
  • கபிஷ் ; இன்ஸ்பெக்டர் கருடா போன்ற கதைகளை ஏன் போடுவதில்லை இப்போதெல்லாம் ? 
  • வாண்டுகள் படிப்பதற்காக முந்தைய ஜூனியர் லயன் பாணியில் ஏதாச்சும் வெளியிட்டால் என்ன ? 
  • டைகர் digest  ; பிரின்ஸ் digest ; சிக் பில் digest என்று தனித்தனியாய்ப் போட்டால் என்ன ? 
  • NEVER BEFORE ஸ்பெஷல் ஜனவரியில் நிச்சயமா ?

லக்கி லூக்கின் தோட்டாக்களின் வேகத்திற்கு வந்து விழுந்த கேள்விகளுக்கு பதில் சொல்லியது ஒரு நிஜமான சுவாரஸ்ய அனுபவம் ! நிறைய நண்பர்கள்  நமது காமிக்ஸ்களைப்  படிக்கத் துவங்கிய காலகட்டங்களைப் பற்றிச் சொல்லியவாறே சுகமாய் பின்னோக்கிப் பயணித்ததைப் பார்த்திட முடிந்தது ! அப்போது திடுமென இன்னொரு சென்னை நண்பர் அங்கே ஆஜராகினார்  - கௌபாய் தொப்பியும், பெல்ட்டும் சகிதமாய்...முன்பக்கத்தில் டெக்ஸ் வில்லரின் படமும் , பின்னே கேப்டன் டைகரின் ப்ரிண்டும் போடப்பட்டதொரு T -ஷர்ட் அணிந்து ! 

பேசிக்கொண்டே நமது புது இதழை (WILD WEST Spl ) நம் நண்பர்களுக்கு நான் வழங்கிட, செல்போன் காமராக்களும் ; டிஜிட்டல் காமராக்களும் ஆங்காங்கே பளிச்சிட்டன ! எனது கல்யாணத்தின் போது கூட யாரும் என்னை இத்தனை போட்டோக்கள் எடுத்ததாய் எனக்கு நினைவில்லை !  எப்போதுமே spotlight -ஐத் தவிர்ப்பதில் ஆர்வமாய் இருந்திடும் எனக்கோ , நண்பர்களின் உத்வேகத்தைப் பார்த்திட்ட போது 'நோ' சொல்லிட இயலவில்லை ! இந்த இரு நாள் திருவிழாவில் நான் மெய்யாக சந்தோஷப்பட்டது நண்பர்கள் பலரும் தம் குடும்பங்களோடு ஆஜராகி இருந்ததன் பொருட்டே !! கணவர்கள் மெய்மறந்து நம் ஸ்டாலில் புத்தக வேட்டை நடத்திக்கொண்டே என்னிடமும் பேசிக் கொண்டிருக்க,  துணைவிகள் லேசான புன்முறுவலோடு அங்கே கூடி நின்ற அத்தனை காமிக்ஸ் ரசிகர்களையும் பார்த்திட்டது சுவாரஸ்யமான அனுபவம் ! "காமிக்ஸ் புக்-னா பைத்தியமா ஆகிடுவார் சார் ! புக் வந்த நாளைக்கு கேட்கவே வேண்டாம் " என்று ஒரு திருமதி என்னிடம் சொல்லிட..."இங்கே நிற்கும் நாங்கள் எல்லோருமே அதே ரகம் தான் !" என்று நான் பதில் சொன்ன போது அவருக்கு சிரிப்பு ! சில துணைவியர் தாங்களும் இப்போது காமிக்ஸ் படிக்கத் தொடங்கி இருப்பதாகவும் ; ஒரு சிலர் நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே வாசகிகள் என்று சொன்ன சந்தோஷத் தருணங்களும் இருந்தன !    அப்போது வேகமாய் ஒரு இளைஞர் வந்திட்டார் - ! "இங்கிலிஷில் இதை வெளியிட்டால் என்ன ? "  என்ற கேள்வியுடன் ! தாய்மொழியில் படிக்கும், ரசிக்கும் அனுபவத்திற்கு அது ஈடாகாது ; அதே போல் ஆங்கிலத்தில் வரும் ஒரு காமிக்ஸை ஆங்கிலத்திலேயே மறுபதிப்பு செய்வதில் என்ன சவால் இருந்திட முடியுமென்று நான் கேட்டேன் !   தமிழில் படிப்பது நிச்சயம் ஒரு கௌரவக் குறைச்சல் அல்லவே என்பதை நான் சொல்லிய போதும் தமிழ தெரிந்த அந்த நண்பர், அவ்வளவாக convince ஆகவில்லை என்பது எனக்குப் புரிந்தது ! 


இடையே நமது பெங்களுரு நண்பர், தமது வலைப்பூவிற்காக என்னைக் குட்டியாகவொரு impromptu வீடியோ பேட்டி எடுத்திட்டார் ! கேள்விகள் என்று முன் ஏற்பாடாக எதனையும் கொண்டிடாமல் மனதிற்குத் தோன்றியதை அவர் கேட்டிட, பெரிதாய் எந்த ஒரு சிந்தனையுமின்றி நானும் பேசினேன் ! வாஞ்சையாய் சுற்றி நின்ற நமது நண்பர்கள் ஒவ்வொருவரின் கண்களிலும் அந்த நொடியின் சந்தோஷத்தில் பங்கேற்ற பரபரப்புத் தெரிந்தது ! நானும் எனது புதல்வனும் இதர ஸ்டால்களில் நடந்தேறிடும் சங்கதிகளை ரசித்திட ஒரு ரவுண்ட் கிளம்பினோம் ! அருகாமையில் இருந்த RANDOM HOUSE இந்தியா  விற்பனை மையத்திலும் சரி, Westland ஸ்டாலிலும் சரி, ஆங்கில கிராபிக் நாவல்கள் செம சுறுசுறுப்பாய் விற்பனை ஆகிக் கொண்டிருந்தன ! விலைகள் 200 ; 300 என்று இருந்த போதிலும் காமிக்ஸ் ஆர்வம் அதனைப் பொருட்படுத்தவில்லை என்பதற்கு அங்கே மாங்கு மாங்கென்று பில் போட்டுக்கொண்டிருந்த காஷியர்களே சாட்சி ! இன்னொரு பக்கமோ மேடையில் பிரபல வட இந்திய காமிக்ஸ் ஓவியர்களோடு கலந்துரையாடல் நடந்தேறிக் கொண்டிருந்தது ! ஆங்காங்கே பிரபல காமிக்ஸ் நாயகர்கள் ; காமெடியன்கள் ; வில்லன்கள் போல் மேக்கப் போட்டுக்கொண்டு COMIC  CON  ஏற்பாடு செய்திருந்த ஆசாமிகள் உலவிட, வந்திருந்த பார்வையாளர்களில் பலர் அசத்தும் காமிக்ஸ் கெட்டப் களிலும் கலக்கிக் கொண்டிருந்தனர் ! இந்தியாவிற்கு இது போன்ற pioneering முயற்சி எத்தனை விலைமதிப்பற்றது என்பதை அப்போது உணர முடிந்தது ! பெரியதொரு கண்காட்சியல்ல என்பதால் இங்கும் அங்கும் ரெண்டு சுற்று சுற்றி விட்டு நமது ஸ்டாலுக்கே திரும்பினோம். பைன் ஆர்ட்ஸ் ஸ்கூலில் இருந்து வந்திருந்த ஓவிய மாணவர்கள் சிலர் ஆர்வமாய் பேசிச் சென்ற பின்னர் , வட இந்திய காமிக்ஸ் இணையதளத்தின் சார்பாய் ஒரு இளம் நிருபர் சின்னதாய்ப் பேட்டி எடுக்கும் பாணியில் கேள்விகள் கேட்டார் ! நமது காமிக்ஸின் வயது நாற்பது என்று சொன்ன போது அவர் கண்ணில் தெரிந்த ஆச்சர்யம் ஒரு நொடிப் பொழுதுப் பெருமிதத்தை விதைத்தது எனக்குள் !



பேசியதோடு டாட்டா காட்டிடாது அனேக வாசகர்கள் தங்களிடமில்லாத இதழ்களை வாங்கிக் கொண்டே நமது பில்லிங் பிரிவையும் பிசி ஆக்கினார்கள் ! WILD WEST ஸ்பெஷல் சுடச் சுட விற்பனை ! நண்பர்களுக்கு அனுப்பிட 10 பிரதிகள் வாங்கி, அந்த 5 கிலோ சுமையை சந்தோஷமாய்த்   தூக்கிச் சென்ற நண்பரும் அதில் சேர்த்தி ! எங்கள் மேல் காட்டப்பட்டு வரும் இந்த நேசத்தின் ஒவ்வொரு வெளிப்பாடும், துளியும் நிபந்தனை இல்லா சங்கதிகளே என்ற போதிலும் எங்களுக்குள்ள பொறுப்பின் ஆழத்தை உணர்த்திடும் நினைவூட்டிகளாகவே நான் அவற்றைப்  பார்த்திட்டேன் ! நமது இந்தப் புது அவதாரின் ஆதாரத்தில் எத்தனை கனவுகள் ; எத்தனை எதிர்பார்ப்புகள் உங்களுள் உருவாகியுள்ளன என்பது நாங்கள் அறிந்தது தான் என்ற போதிலும் அதனை நேரடியாகக் கேட்டு..உணர்ந்திடும் போது அதன் தாக்கமே வேறாகிறது ! மதியத்திற்கு மேலே வாசகர்களின் வருகை சற்றே மட்டுப்பட்டது ! குடும்பத்தோடு வந்திருந்ததொரு நண்பர் என்னிடம் பேசிடத் தயங்கியவாறே தள்ளி நின்றே நம் ஸ்டாலைப் படம் பிடிக்க முயற்சித்துக்கொண்டிருக்க, அவரை அழைத்துப் பேசிய போது அவர் முகத்தில் தெரிந்த பிரகாசப் பிரவாகம் மெய்யாக என்னை உலுக்கியது. "நீங்கள் 17 வயசிலேயே வெளிநாடெல்லாம் போய் காமிக்ஸ் கதை வாங்கி வந்தது பற்றியெல்லாம் வீட்டில் சொல்லிக் கொண்டே இருப்பார் ' என்று அவரது துணைவியார் கூறிய போது விக்கித்துப் போனேன. முகமறியா  தூரத்தில் ; வெறும் பெயராகவும் ; ஹாட்லைன் எனும் ஒரு பக்கத் தொடர்பு மாத்திரமே பாலமாக இருந்திட்ட போதிலும், காமிக்ஸ் எனும் நேசம் இத்தனை சக்தி வாய்ந்ததா என்பதை உணர்ந்திட இயன்ற போது வார்த்தைகள் வரவில்லை எனக்கு ! அவர்தம் குடும்பத்தோடு போட்டோ எடுத்துக்கொண்டேன் ..எனினும் அவர்களிடம் அதன் ஒரு பிரதியை அனுப்பிடச் சொல்ல இயலாது போயிற்று ! இந்த வலைப்பதிவைப் படித்திடும் நண்பராக அவர் இருந்திடும் பட்சத்தில், please - ஒரு மின்னஞ்சலில் அப்புகைபடத்தினை எனக்கு அனுப்பிடுங்களேன் ?! 


நான்கு மணிக்கு மேலே தாக்குப் புடிக்க முடியவில்லை ; வாசகர்களின் வருகையும் குறைவாக இருப்பது போல் தோன்றியதால், எங்கள் பணியாளர்களை மட்டும் ஸ்டாலில் விட்டு விட்டு நானும் என் பையனும் புறப்பட்டோம். நாங்கள் கொண்டு வந்திருந்த இதழ்களில் 75 % அதற்குள்ளாகவே விற்றுப் போய் இருந்ததால், ராதாக்ருஷ்ணன் என் கையில் ரூபாய் 18,000 ௦௦௦௦௦௦ திணித்த போது உன் புருவங்கள் உயர்ந்தன !! சென்னை புத்தக விழாவிற்குப் பின் இது போன்ற விற்பனை வேகத்தை சந்தித்திராத எங்களுக்கு - பெங்களுருவில் இந்த விறுவிறுப்பு  ஜிவ்வென்று உற்சாகம் கூடிடச் செய்தது  ! உடனடியாக சிவகாசிக்கு போன் செய்து மேற்கொண்டு பிரதிகளை மாலை பஸ் மூலம் அனுப்பிடச் சொல்லி வைத்தேன் ! அன்றிரவு தூங்கும் போது கேப்டன் டைகரும், ஒற்றைக்கை ஆசாமிகளும், நிறைந்த கல்லாப்பெட்டிகளுமாய் எனது சொப்பனங்கள் ஒரே சித்திரமயமாய் இருந்தன ! 


மறு நாள் காலை பத்து மணிக்கு விழா துவங்கிய போது, பெங்களுரு நண்பர்கள் நமக்கு முன்பே ஆஜர் அங்கே ! ஞாயிறு என்பதால் கூட்டமும் ரொம்ப சீக்கிரமே அலைமோதியது ! சற்றைகெல்லாமே நம் ஸ்டாலில் முதல் நாளைப் போலவே (புதியதொரு) வாசகக் குழமம் ! முதல் நாளை விட இன்றைக்கு குடும்பங்களின் வருகை அதிகமாய் இருந்தது highlight ! அப்போது சேலத்திலிருந்து வந்திருந்த நண்பர் தம் புதல்வர் மூலம் ஒரு giftwrap செய்யப்பட்ட டப்பாவைத் தந்திட, அதன் மேல் அழகாய் ஒரு வாழ்த்துச் சேதி !! உள்ளேயோ ஒரு மைசூர்பாகு டப்பா ! டெக்ஸ் வில்லரின் அதி தீவிர ரசிகரான இந்நண்பர் நம்மை சந்திக்கவே குடும்பத்தோடு புறப்பட்டு வந்திருந்தார் !! இனிப்பாய் அங்கே கரைந்தது கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நெய் மைசூர்பாகு மாத்திரமல்ல என்பதை நான் சொல்லிடத் தேவையும் உண்டா - என்ன ?
தொடர்ந்து முதல் நாளைப் போலவே சரமாரியான கேள்விகள், குழுமி நின்ற நண்பர்களிடமிருந்து ! WILD WEST இதழில் டெக்ஸ் வில்லரின் வருகை பற்றி ; டைகரின் பாக்கி இரு பாகங்கள் பற்றி விளம்பரங்கள் வந்திருந்ததால் ரொம்ப திருப்தியாக இருந்தனர் கௌபாய் கதை ரசிகர்கள் ! WILD WEST இதழின் இரு கதைகளுக்குமே அற்புதமான பாராட்டுக்கள் கிட்டிய போது,என் மனதில் அடுத்து வரவிருக்கும் சூ.ஹீ.சூ.SPL க்கு எவ்வித reactions வந்திடவிருக்கிறதோ என்று சிந்தனைகள் ஓடிய வண்ணம் இருந்தன !! 



இரண்டாவது நாளும் விறுவிறுப்பான விற்பனை ! நாங்கள் கொண்டு வந்திருந்த Full Set புக்ஸ் முழுவதும் காலி ஆகி ஒன்றிரண்டு நண்பர்கள் ஏமாற்றத்தோடு திரும்பவும் நேர்ந்தது ! எல்லாவற்றையும் விட, "உசுப்பி விடும்" விதமாய் மேஜை மேல் நின்ற :இரத்தப் படலம்" மாதிரிப்ப்ரதி எக்கச்சக்க நண்பர்களின் கண்ணை உறுதிக் கொண்டே இருந்தது ! அது விற்பனைக்கு அல்ல...மாதிரி மாத்திரமே என்று எங்கள் பணியாளர்கள் அன்பாய்ச் சொல்லிட, தீராத ஏமாற்றம் சில நண்பர்களுக்கு ! ஒன்றரை ஆண்டுகளாய் நம்மிடம் ஸ்டாக் இருந்த இதழுக்கு இப்போது தேடல் வேட்டை துவங்குகிறது ! சமயம் கிடைத்த போது மற்ற இந்திய காமிக்ஸ் பதிப்பகங்களின் ஸ்டாலுக்கு சின்னதாய் ஒரு விசிட் அடித்தேன். இங்கிலிஷில் வெளியிடப்படும் இந்த கிராபிக் நாவல்கள் இன்றைய இந்திய ஓவியர்களின் அசாத்தியப் பரிணாம வளர்ச்சியினை showcase செய்யும் விதத்தில் இருந்தது பிரமாதமாகத் தெரிந்தது. ஒரு சில பதிப்பகங்களின் கதைக் களங்கள் விநோதமாய் இருந்த போதிலும் ரோவோல்ட் ; Campfire போன்ற பதிப்பகங்களின் படைப்புகள் நிஜமாகவே அற்புதம் ! இவற்றில் தரமானவற்றை நாம் தமிழில் வெளியிட முயற்சித்தால் என்னவென்று நமது பெங்களுரு நண்பர் வினவிட, அந்தக் கோரிக்கையை  என் தலைக்குள் ஒரு ஓரமாய் பத்திரப்படுத்தியுள்ளேன் ! அவர்களது இதழ்களில் பளிச் ரகத்தில் தெரிந்த சிலவற்றை வாங்கி வந்துள்ளேன் ; படித்துப் பார்த்து விட்டு மேற்கொண்டு சிந்திக்கலாமென்ற எண்ணம்  ! 

மீண்டும் நிறைய நண்பர்கள் ; எக்கச்சக்கமான சிரித்த முகங்கள் ; ஏராளமான கை குலுக்கல்கள் ; அங்கே இங்கேவென காமெராக்களின் கிளிக்குகள் என்று பொழுது ஓடியதே தெரியவில்லை ! நான் அன்று பிற்பகல் ரயிலில் சென்னை புறப்பட வேண்டி இருந்ததால் மதியத்திற்கு மேல் ஸ்டாலில் இருந்து புறப்பட்டுவிட்டேன் ! அது வரை நம்மோடு ஒவ்வொரு நிமிடமும் காத்திருந்த அன்பான நண்பர்களுக்கு விடை கொடுப்பது நிஜமாகவே கஷ்டமான காரியமாய் இருந்தது ! மீண்டும் சென்னையில் சந்திக்கலாமென்ற போது அனைவரது முகங்களிலும் உற்சாகம் ! அன்றைய இரவு COMIC CON நிறைவு பெற்ற போது எங்களின் 2 நாள் விற்பனை ரூபாய் 40,000 -ஐ தொட்டு இருந்தது ! பிரமித்துப் போனோம் என்பது நிச்சயம் ஒரு understatement  ! 

ரயிலில் பயணிக்கும் போது என் சிந்தைகள் அங்கும் இங்குமாய் அலை பாய்ந்தன ! 2 நாட்களில் நான் பார்த்திட்ட முகங்கள் ; அந்தக் கண்களில் பளீரிட்ட உவகை ;நான் அனுபவித்திட்ட அந்த நேசத்தின் விலைமதிப்பற்ற பரிமாணம் என்று ஒவ்வொன்றாய் எனக்குள்ளே மெள்ள மெள்ள பதிவாகிக் கொண்டே இருந்தது  ! " More things are wrought by prayer than this world dreams of" என்று பிரபல ஆங்கிலக் கவிஞர் சொல்லி இருந்தது நமக்கு நிரம்பவே பொருந்தும் என்பதையும் உணர்ந்திட முடிந்தது ! நமக்காக ; நமது வெற்றிக்காகப் பிரார்த்திக்கும் உள்ளங்கள் இத்தனை இருந்திடும் போது ; நமது ஒவ்வொரு வெற்றியையும் தத்தம் வீட்டுக் குழந்தையின் சாதனை போலப் பாவித்திடும் இத்தனை நேச நெஞ்சங்கள் இருக்கும் போது புயலோ ; இடியோ ; மழையோ நம்மைத் தளரச் செய்ய சாத்தியமே இல்லை ! Thanks folks ! Thanks for every little thing! 

குட்டியாய் சில பின் குறிப்புகள் !! 

இரு நாட்களும் நம்மை சந்திக்க வந்த நண்பர்கள் அனைவரையும் இங்கே குறிப்பிடுவது இயலாத காரியமென்பதால் நான் எவர் பெயர்களையும் இங்கே எழுதிடவில்லை ! எவ்வித இருட்டடிப்பும் இதன் நோக்கமல்ல ; நண்பர்களின் பெயர்கள் விடுபட்டுப் போய்விடின் அது சங்கடத்தைத் தரும் என்ற ஒரே காரணமே இதன் பின்னணியில் ! 

COMIC CON 2012 அதிரடி வெற்றியினைத் தொடர்ந்து இதனை அடுத்த ஆண்டும் பெங்களுருவிலேயே 3 நாள் விழாவாகக் கொண்டாடிட அதன் அமைப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர் !! சென்னைக்கும் COMIC CON வருகை புரியும் நாள் தொலைவில் இராதென்று நம்புவோமாக ! Take care people ! 

Thursday, September 06, 2012

மேற்கே ஒரு பயணம் !


நண்பர்களே,

வணக்கம். தொலைவில் ஒரு புள்ளியாய்த் தெரிந்திட்ட  பெங்களுரு COMIC CON 2012 வரும் சனிக்கிழமை என்று நெருங்கி விட்டது ! 



செப்டம்பர் 8  & 9 தேதிகளில் கோரமங்களா ஸ்டேடியத்தில் நடந்திடவிருக்கும் இந்த காமிக்ஸ் திருவிழா எனக்குமே ஒரு புது அனுபவம் ! அமெரிக்காவில் நான் பார்த்திட்ட காமிக்ஸ் convention - அளவில் ; பிரம்மாண்டத்தில் ; மிகப் பெரிதென்ற போதிலும் இந்தியாவிற்கு சமீபத்திய இந்தப் புதிய முயற்சிகள் ஒரு சந்தோஷமான வருகையே ! தமிழ் தாய்மொழியாக அல்லாததொரு நகரில் நடந்திடும் இந்தத் திருவிழாவில் நமக்கு எத்தனை தூரம் வரவேற்பிருக்குமென்று   கணித்திடத் தெரியவில்லை என்ற போதிலும், நமது படைப்புகளை showcase செய்திடவும், பிறரது படைப்புகளை ரசித்திடவும் இது நல்லதொரு வாய்ப்பாகப் பார்த்திடுகின்றோம்! 

நமது ஸ்டால் எண் B -17 ! குட்டியானதொரு இடம் தான் என்ற போதிலும் நம்மிடம் தற்சமயம் ஏராளமான ஸ்டாக் இல்லை என்பதால்  கூடுதல் கட்டணத்தை அவசியப்படுத்தும் பெரிய ஸ்டால் தேவை இராதென்று நினைத்தோம். அடுத்த COMIC CON சென்னையில் நடந்திட வாய்ப்பிருக்கும் பட்சத்தில், நிச்சயம்  பெரியதொரு ஸ்டாலில் கலக்கிடலாம் !

Layout


WILD WEST SPECIAL அழகாகத் தயாராகி வருகின்றது. வரும் சனிக்கிழமையன்று காலையில் பெங்களுருவில் நமது ஸ்டாலில் இதழ் கிடைக்கும் ; அதே தேதியில் சிவகாசியிலிருந்து உங்களது சந்தா பிரதிகளும் அனுப்பிடப்படும் ! 'உலகத் தொலைகாட்சிகளில் " முதன்முறையாக என்ற பாணியில், என் நினைவுக்குத் தெரிந்த வரைக்கும் வெளியீட்டுத் தேதிக்கு ஒரு வாரம் முன்னதாகவே ஒரு லயன் இதழ் தயார் ஆவது இதுவே முதல் தடவை என்று நினைக்கிறேன் ! கடந்த 2 வாரங்களாய் முகம் சுளிக்காது செயலாற்றிட்ட எங்களது டீம் - க்கு எனது நன்றிகள் என்றும் உண்டு ! 

COMIC CON விழாவிற்கும், நமது ஸ்டாலுக்கும் உங்களை வரவேற்பது எங்களது பெருமை !!


  • September 8th சனிக்கிழமை காலை 10 -00 முதல் மாலை 5 -00 வரையும்  
  • September 9th ஞாயிறு காலை 10 -00 முதல் மதியம் 1 மணி வரையிலும் 


நான் நமது ஸ்டாலில் இருப்பேன். இதர நேரங்களில் நமது பணியாளர்கள் அங்கே இருந்திடுவார்கள் !   Look forward to seeing you there folks ! 


என்னிடம் பேச எண்ணிடும் நண்பர்கள் வழக்கம் போல் 9842864584 என்ற நம்பருக்கு சனி & ஞாயிறு போன் அடிக்கலாம் !  Adios amigos ! 

Thursday, August 30, 2012

ஒரு புதிய வருகை !!




நண்பர்களே,

வணக்கம் ! செப்டம்பர் 8  & 9 தேதிகளில் பெங்களுருவில் நடந்திடவிருக்கும் COMIC CON 2012 -ல் நமது அடுத்த இதழான 'Wild West ஸ்பெஷல்' விற்பனைக்குக் கிட்டிட வேண்டுமென்ற உத்வேகத்தில் பணிகளை நிரம்பவே துரிதப்படுத்தி வருகிறேன் ! அது மட்டுமல்லாது நமது Never Before ஸ்பெஷல் பணிகள் இமாலய உயரத்திற்கு என்   முன்னே நிற்பதால், அதிலும் எக்கச்சக்கமாய் கவனம் செலுத்திட வேண்டிய நிர்ப்பந்தம் ! So இங்கே அவ்வப்போது எட்டிப்பார்ப்பதைத் தவிர அதிகமாய் நேரம் செலவிட இயலவில்லை !Apologies folks ! நாளை இரவு உங்களின் சமீபத்திய பதிவுகளுக்கு இயன்றளவு பதில் இடுவேன் உறுதியாய் ! 

இதோ நமது WW ஸ்பெஷலின் அட்டைப்பட டிசைன் ! 


இரு அட்டைகளுக்குமே ஒரிஜினலாக பிரெஞ்சு ஓவியர்கள் தயாரித்த அதே படங்களை தக்க வைத்துக் கொண்டு பின்னணி வர்ணச் சேர்க்கைகளை மட்டும் நாமாக அமைத்துள்ளோம் ! ஒரிஜினலின் வண்ணங்கள் ரொம்பவே plain ஆக இருந்ததால் அவற்றை அப்படியே பயன்படுத்திட மனம் ஒப்பவில்லை ! கண்ணை அதிகம் உறுத்தாத மெல்லிய வண்ணங்களை இம்முறை நமது டிசைனர் பிரயோகித்துள்ளது சிறப்பாக உள்ளதென்று எனக்குத் தோன்றியது ! நிச்சயம் இதில் ஒவ்வொருவரின் கண்ணோட்டமும் மாறுபடுமென்று நான் அறிவேன் ; வழக்கம் போல் உங்கள் எண்ணங்களை பதிவிடலாமே !

"எமனின் திசை மேற்கு" கதையின் உள்பக்கங்கள் வண்ணத்தில் அற்புதமாய்  மிளிர்கின்றதென்றே சொல்ல வேண்டும் ! மிகவும் வித்தியாசமான வண்ணச் சேர்க்கை ; மாறுபட்ட கதைக் களமென்று விரைவில் உங்களை சந்திக்கவிருக்கும் இக்கதைக்கு உங்களது மதிப்பீட்டினை அறிந்திடும் ஆவல் இப்போதே எனக்குள் !

டைகரின் சாகசம் சிறிதும் சோடை போகா 'பரபர ' பட்டாசு ! புதியதொரு ஓவியரின் கைவண்ணத்தில் (காலின்   வில்சன்) வண்ணத்தில்  கலக்கும் இந்த சாகசம் டைகர் மன்றத்தினருக்கு சரியான விருந்து படைத்திடும் ! இவை தவிர உங்களை குஷிப்படுத்தக்கூடிய பக்கங்கள் சிலவும் இதழில் உள்ளன ! You will love them for sure !



பெங்களுருவில் கோரமங்களாவில் (http://www.comicconindia.com/Express/index.php?page=venue) நடந்திடவிருக்கும் இந்த COMIC CON 2012 நமக்கு ஒரு புதிய களமே.!என்ன எதிர்பார்த்திடுவதென்ற ஐடியா  பெரிதாக ஏதுமில்லை என்பதே நிஜம் ! இந்திய காமிக்ஸ் உலகப் பதிப்பகப் பெருந்தலைகளோடு தோள் உரசிடும் ஒரு அனுபவமாக ; சம காலக் காமிக்ஸ் முன்னேற்றங்களை ரசித்திடும் ஒரு வாய்ப்பாக எங்களுக்கு இது அமைந்திடுமென்று நம்புகிறேன் ! இரு தினங்களும் அங்கே ஒரு காமிக்ஸ் ரசிகனாய் ரவுண்ட் அடித்திடும் எண்ணத்தில் உள்ளேன் ! உங்களை அங்கு சந்திக்க இயன்றால் நிச்சயம் எங்களுக்கு மகிழ்ச்சியே ! Please do drop in folks !! 

பெங்களுருவில் மட்டுமல்லாது மதுரையில் இன்று முதல் துவங்கியுள்ள புத்தகத் திருவிழாவிலும் நமது இதழ்கள் ஸ்டால் எண்  125  & 126 -ல் கிடைத்திடும் ! முதல் நாளே decent விற்பனை என்ற சேதி சந்தோஷமளித்தது ! புன்னகைக்க இன்னுமொரு காரணமாய் அமைந்தது இன்று காலையில் நமது அலுவலகத்தில் என்னை சந்தித்திட்ட வாசகர்களின் உற்சாக வெளிப்பாடுகள் ! இருவருமே 37 ..38 வயதிலிருந்த நண்பர்கள் ; தனித்தனியே வந்திருந்த போதிலும் இருவரும் வெளிப்படுத்திய உணர்வுகள் ரொம்பவே ஒற்றுமையானவை. ! அவர்களது காமிக்ஸ் ஆர்வம் understandable தான் ; எனினும் இருவருமே தத்தம் வீடுகளில் குட்டிப் புதல்வர்கள் நமது நியூ லுக் ஸ்பெஷல் இதழினை ரொம்ப ரசித்ததைப் பற்றிச் சொன்ன போது நிஜமான சந்தோஷம் ! ஒரு புதிய தலைமுறை நமது காமிக்ஸ் உலகினுள் அடியெடுத்து வைக்கத் தயாராகி வருகின்றதன் அறிகுறிகள் வரவேற்க வேண்டிய விஷயம் தானே ?!! Welcome the generation next & the next.....!!!

P.S: வார இறுதிகளில் என்னோடு பேசிட எண்ணும் நண்பர்கள் இனி தொடர்பு கொள்ள வேண்டிய நிரந்தர எண் இதுவே : 98428  64584 !  முந்தைய எண் இனி செயல்படாது !