Monday, September 09, 2019

ஒரு ரிப்பீட் ராக்கூத்து !

நண்பர்களே,

வணக்கம். சில நேரங்களில் மாங்கு மாங்கென்று எதையாச்சும் ரோசனை பண்ணி  எழுதித் தள்ளி விட்டு - ''இன்னிக்கு பின்னூட்டம் அள்ளப்  போகுதுடோய்  ; ஓவர் நைட்டிலே ஒபாமா தான் !!" என்ற எதிர்பார்ப்பில் விட்டத்தைப் பார்த்துக் கிடந்தால், ஞாயிறு ராவுக்கு பின்னூட்ட எண்ணிக்கை "57" என  நொண்டியடித்துக் கொண்டு நிற்கும் !! ஆனால் சில வேலைகளிலோ கேஷுவலாய் ; மண்டையில் உதிக்கும் முதல் சமாச்சாரத்தை டைப்பி விட்டு மதியமாய் கொட்டாவி விட்டபடிக்கே இங்கே எட்டிப் பார்த்தால் ரணகள வேகத்தில் பின்னூட்டங்கள் பதிவாகிக் கிடக்கும் - நேற்றைய பொழுதைப் போல ! 

நிஜத்தைச் சொல்வதானால் சனிக்கிழமை பதிவின் பொருட்டு சின்னதாயொரு கூத்து அரங்கேறியிருந்தது ! டைப்படிக்கச் சோம்பேறித்தனப்படுவதால், சமீபப் பொழுதுகளில் பேப்பரும், பேனாவுமாய், சனி பகலில் அமர்ந்து பதிவுக்கான மேட்டரை எழுதித் தந்து, அதனை நமக்கு DTP ஜாப்ஒர்க் செய்திடுபவரிடமோ ; அல்லது நமது DTP பெண்களிடமோ ஒப்படைத்து டைப்படித்து வாங்கி வருவேன் ! அதே routine இந்த சனியன்றும் தொடர்ந்தது & சனி மாலை வேலை முடித்துக் கிளம்பும் முன்பாகவே நமது பெண்கள் முடித்து எனக்கு மெயில் பண்ணியும் விட்டார்கள் !! சரி, இரவு கட்டையைக் கிடத்தும் முன்பாய் சாவகாசமாய் போஸ்ட் செய்து விடலாமென மெயிலை வாசிக்கத் தொடங்கும் போது, லைட்டாக ஒரு சந்தேகம் துளிர் விடத்துவங்கியது ! இதே மேட்டரை - சமீபமாய் எழுதினோமோ ? என்பது போலொரு பீதி குடியேற - அவசரம் அவசரமாய் இந்தாண்டின் பதிவுகள் முழுசையும் இழுத்துப் போட்டு வாசிக்க ஆரம்பித்தேன் !! 'ஆத்தாடியோவ் - வண்டி வண்டியாய் எத்தனை மொக்கை போட்டிருக்கிறேன் !' என்பதை உணர்ந்த போது எனக்கே மலைப்பாயிருந்தது !! ஒரு மாதிரியாய் மே மாதத்தின் பதிவுக்குள் புகுந்த போது 'பக்கோ' என்று ஆகிப் போனது - simply becos எனது பயம் மெய்யாகியிருந்தது !! They came ...They saw ...They left என்ற பதிவினில் அட்சர சுத்தமாய் அதே சங்கதிகளை எழுதியிருப்பதை படித்திட முடிந்தது !! (https://lion-muthucomics.blogspot.com/2019/05/they-camethey-sawthey-left.html

எங்கள் ஊர்ப்பக்கம் ஓயாது பேசிக்  கொண்டிருப்பவனைக் கிண்டலாய் - "ஓலைப்பாயில் நாய் மூச்சா போவது போல சள சளத்துக்   கொண்டேயிருக்கிறான்" என்பார்கள் !  ஒற்றை ஆளாய் நான் இங்கே விடிய விடிய வருஷக்கணக்காய்ப் பெனாத்திக் கிடப்பதில் உள்ள flipside -களுள் இதுவும் ஒன்று ! எதை ஏற்கனவே பகிர்ந்து விட்டேன் ? - எதில் வாயைத் திறந்திருக்கவில்லை ? என்பது பல நேரங்களில் தோராயமாகவே நினைவிருக்கும் !! பேப்பரையும், பேனாவையும் எடுத்துக் கொண்டு இந்த சனியன்று எழுதத் துவங்கும்  வேளையில், அரைத்த மாவையே மறுக்கா அரைக்கும் உணர்வு துளியும் எழாது போக - கடமைவீரன் கந்தசாமியாக செயலாற்றி விட்டிருந்தேன் ! எந்தச் சாமி புண்ணியமோ - அவசரமாய் அதை அன்றைக்கு post செய்து, செம குண்டு பல்புகளை சல்லிசாய் உங்களிடம் வாங்கிடும்  கண்றாவியிலிருந்து தப்பித்தேன் ! 

ராவில் இந்த ரிப்பீட் லூசுத்தனத்தை தோண்டியெடுத்திருந்த போதே நள்ளிரவைத் தாண்டியிருந்தது ! இதுக்கு மேல் புதுசாய் என்னத்தை எழுதுவதென்று தெரியாது திரு திருவென முழிக்க - தூக்கமோ சுழற்றியடித்தது ! 'சரி...இப்போ படுத்துத் தூங்கலாம் ; காலையிலே எதுவும் தோணாங்காட்டி, இருக்கவே இருக்கு வாடகை சைக்கிள் ; இருக்கவே இருக்கு  பிராங்பர்ட் !" என்றபடிக்கே அலாரத்தை செட் பண்ணிவிட்டுத் தூங்கிப் போனேன் ! காலையில் ஆறு மணிக்கு மலங்க மலங்க கண் முழித்த போது - மண்டையின் உட்புறமும், வெளிப்புறத்தைப் போலவே துடைத்து வைத்தாற்போல சூன்யமாய்த் தென்பட்டது !  'சிவனே' என்று ஒரு கார்பீல்டு கார்டூனைப் போட்டு விட்டு ஏதாச்சும் சால்ஜாப்பு சொல்லிப் பார்க்கலாமா ? என்று கூட நினைக்கத் தோன்றியது ! அப்போது தான் நான் ரொம்ப காலமாய் சொல்ல நினைத்து; ஆனால் சொல்லாதே போன அந்த BBB ஸ்பெஷல் சமாச்சாரம் நினைவுக்கு வந்தது ! சரி, இன்னொரு "57 பின்னூட்ட ஞாயிறு" confirm என்றபடிக்கே மாங்கு மாங்கென்று டைப்படித்து, பதிவைப் போட்டு விட்டு, ஒரு தபா ஸ்பெல்லிங்குகளைச் சரி பார்த்து விட்டு  பல்லைத் தேய்க்கக் கிளம்புவதற்குள்ளேயே பின்னூட்ட எண்ணிக்கை 30-ஐத் தொட்டிருக்க - 'பார்டா !!' என்று புருவங்கள் சன்னமாய் உசந்தன ! மதியத்துக்குள் 150  ; மாலைக்குள் 200 ; அப்பாலிக்கா இன்று நண்பர்களின்  போங்கு ஆட்ட உபயத்தில்  300-ஐத் தாண்டி பின்னூட்ட எண்ணிக்கை நிற்பதைப் பார்க்கும் போது 'ஒண்ணுமே புரியலே.உலகத்திலே....!!' என்று சந்திரபாபு (??) பாட்டுத் தான் மண்டைக்குள் ஓடியது !! So வெகு காலமாய் தலைக்குள் தேமே என நின்றதொரு சமாச்சாரம் உங்களையும், என்னையும் நேற்றைக்குக் காப்பாற்றி விட்டது - பிராங்பர்ட் தக்காளிச் சட்னியிலிருந்து !!  And இதோ - ஒரு உபபதிவுக்குமே மேட்டராகிப் போயுள்ளது !! வாழ்க BBB !!! 

Bye folks !! Carry on with the September reviews please !! 

Sunday, September 08, 2019

ஒரு கோ.மா.கனவு !

நண்பர்களே,

வணக்கம். செம்டம்பர் இதழ்கள் : டிக் அடிச்சாச்சு! நீங்களுமே சூட்டோடு சூடாய்ப் படித்தாச்சு ! ஆனால் நாட்காட்டியைப் பார்த்தால் இன்னுமும் இரட்டை இலக்கத் தேதியைத் தொடவே அவகாசம் உள்ளது என்று சொல்கிறது! But அக்டோபரின் இதழ்கள் பற்றிய preview-க்களுக்கு இது ரெம்பவே early ! வழக்கமாய் எழுத சமாச்சாரம் சிக்காங்காட்டி நேராக ரிவர்ஸ் கியர் போட்டு ஒரு வாடகைச் சைக்கிளை எடுத்தபடிக்கு "நான் ப்ராங்க்பர்ட் போனேனா...தன்னானே...." என்று ஆரம்பித்து விடுவது தான் வாடிக்கை ! ஆனாக்கா "பிராங்பர்ட்" என்ற வார்த்தையை உச்சரித்தால் என் காதிலேயே தக்காளிச் சட்னி கசிவதால், அந்தத் திக்கில் வண்டியை விடவும் இஷ்டமில்லை ! So thinking...!

செப்டம்பரின் success story என்று பார்த்தால் ஒரு எதிர்பாரா ஆசாமி கைதூக்கி நிற்பதைக்  கடந்த 10 நாட்களாய் பார்த்து வருவதால் அவரது பின்னணியினை inspiration ஆக எடுத்துக் கொண்டே இந்த வாரத்துப் பதிவு வண்டியை துவக்க  நினைக்கிறேன்!

ட்ரெண்ட் !! 'தல' டெக்ஸையும் ; 'ஒல்லித்  தல' லுக்கியையும் கார்ட்டூன் இரட்டையர் ஸ்கூபி & ரூபியையும் பச்சைக் குதிரை தாண்டி எதிர்பாரா முதல் ஆசாமியாய் எகிறி நிற்கும் இந்தச் சிகப்புச் சட்டைக்காரரை கொஞ்சம் வாஞ்சையோடும், கொஞ்சம் புதிரோடும்  பார்த்திடுகிறேன்! பொதுவாகவே கௌபாய்கள் எல்லாருமே முரட்டு அதிரடிக்காரர்கள் என்பது template ! தோட்டாக்கள் பறப்பதும் ; முஷ்டிகள் சீறுவதும்,  டெக்ஸ் / டைகர் / ட்யுராங்கோ என அத்தனை வெற்றி கண்ட வன்மேற்கர்களின் அடையாளங்களுமே ! ஆனால் அதிலிருந்து விலகி நிற்கும் இந்த கனடாவின் காவல் வீரர் - பெரிய அடிதடிகளுக்கோ; ஆக்ஷன் sequence-களுக்கோ அவசியமே நஹி ; தெளிவான கதையும், அழகான சித்திரங்களும் இருந்தாலே போதுமென்பதை நிலைநாட்டியிருக்கிறார்! அதன் மூலமாய் தொடரும் அட்டவணைகளில் தனக்கான slot பற்றிய சந்தேகங்களை அறவே நீக்கி விட்டுமுள்ளார் ! So "சாலையெல்லாம் ஜுவாலைகளே" - இந்தத் தொடருக்கான சாலைகளை நம்மளவிற்காவது smoothen பணியுள்ளது! (என்ன ஒரே வருத்தம் - மொத்தமே  8 ஆல்பங்கள் தான் ட்ரெண்ட் தொடரில் ! இன்னமும் நாம் போட்டிரா கதைகள் நான்கே இந்தாண்டின் இறுதியில் எஞ்சி நிற்கும் எனும் போது, மிஞ்சிப் போனால் இரண்டோ / மூன்றோ ஆண்டுகளே இவரது பரிச்சயம் இருந்திட முடியும் !!)

இந்தத் தருணத்தில்  இன்னொரு சற்றே சாத்வீகமான கௌபாய்த் தொடரான கமான்சேவை எண்ணிடாமலும் இருக்க இயலவில்லை ! அங்குமே பெரும் ஆக்ஷனுக்கோ ; மாமூலான கௌபாய் சாகச template களுக்கோ முக்கியத்துவம் தந்திட கதாசிரியர் முனைந்திடுவதில்லை ! யதார்த்தமாய் ; மிகைகளின்றி சீராய் ஓடிடும் கதைகளை அங்கு பார்த்துள்ளோம் ! And அங்குமே சித்திரங்கள்  ஜாம்பவான் ஓவியரான ஹெர்மனின் கைவண்ணம் !! ஆனால் - டிரெண்ட் நம்மை கவர்ந்துள்ளதில் பாதி கூட கமான்சே கவர்ந்திடவில்லையே எனும் போது மோவாயில் கைவைத்து யோசிக்கவே தோன்றுகிறது !! இரு தொடர்களுக்கும் மத்தியினில் உள்ள வேற்றுமைகளை நீங்கள் எதை பார்த்திடுகிறீர்கள் ? என்று அறிந்திட ஆவல் folks !! ட்ரெண்ட் vs கமான்சே - ஒற்றை வரியில் வேறுபடுத்திட முடியுமெனில் முயற்சித்துப் பார்க்கலாமே ப்ளீஸ் ?  

Anyways ட்ரெண்ட் புராணமல்ல இந்தப் பதிவின் நோக்கம் ; மாறாக ஆண்டின் மூன்றாவது quarter ஒரு surprise வெற்றியாளரோடு மெருகு கண்டு நிற்கும் வேளைதனில் - அவரை சிலாகித்து முடித்த கையோடு - இத்தகைய star power இலா நாயகர்களின் பக்கமாய் பார்வைகளை ஓடச் செய்யும் ஒரு freewheeling சிந்தனைக்கே இந்த ஞாயிறு !! இன்னும் சொல்லப் போனால் - நானே ஆசைப்பட்டாலும் நிறைவேற்றிட இயலாக் கனவாய் என்னுள் நின்றிடும் ஒரு project சார்ந்த உரத்த சிந்தனை என்று வைத்துக் கொள்ளுங்களேன் ? 

ரொம்ப வருடங்களாகவே எனக்கொரு கோக்கு-மாக்கான ஆசையுண்டு ! அதாவது ஏதேதோ காரணங்களின் பொருட்டு நாம்  waiting list -க்கு அனுப்பிவைத்திருக்கும் நிறைய நாயக / நாயகியரை தூசி தட்டி, மெருகூட்டி அவர்களைக் கொண்டொரு பிரத்யேக ஸ்பெஷல் இதழ் வெளியிட்டிட வேண்டும் என்பதே அந்த கோ.மா. ஆசை !! உதாரணத்துக்கு ஜாகஜ வீரர் ரோஸர் ; டிடெக்டிவ் ஜெரோம் ; Lady S போன்றோரை எடுத்துக் கொள்வோமே ?! நமது தர எதிர்பார்ப்புகளும், அளவீடுகளும் இத்தனை strict சுடலைமுத்துக்களாய் இல்லாதிருப்பின், இவர்களெல்லாம் நிச்சயமாய் இன்னமும் நம் மத்தியில் உலவி வருவார்கள் தானே ?! Granted - ரோஜர் தொடரில் உப்மாக்கள் நிறையவே கிடக்கின்றன தான் ; அதே சமயம் "மர்மக் கத்தி " ; "தவளை மனிதனின் முத்திரை" ; "கறுப்புக் கதிரவன்" போன்ற செம offbeat சாகசங்களும் இருந்துள்ளன தானே ? So அத்தகைய சுவாரஸ்யக் கதையினைத் தேடிப் பிடித்துக் கொண்டு வந்தால் சுகப்படாது போகுமா - என்ன ?

எனது "கோ.மா.கனவு" இதழுக்கொரு பெயரும் உண்டு என்னிடம் ! "The BBB ஸ்பெஷல் !!" என்பதே அது !!! அதாவது வகுப்பின் முன்பெஞ்சில் எப்போதுமே 'படிப்ஸ்' பார்ட்டிகள் இடம் பிடிப்பது சகஜம் தானே ? So  லார்கோ ; தோர்கல் ; டெக்ஸ் ; லக்கி போன்ற 'பளிச்' மாணாக்கர்கள் அந்த முன்வரிசைகளை ஆக்ரமித்துக் குந்தியிருப்பது  நடைமுறை என்றால் - ஓரம்கட்டப்பட்டிருக்கும் 'not so பளிச்' மாணவர்களின் ஜாகையாக அந்தப் பின்பென்ச்கள் தானே இருந்திட முடியும் ? ஆக - BBB Special = Back Bench Boys  ஸ்பெஷல் !! அதாவது - 'ஓரம்கட்டப்பட்ட நாயகர்களின் ஸ்பெஷல்' என்று சொல்லலாம் !!

நிஜமாகிட வாய்ப்பில்லா இந்த ஸ்பெஷலினை நான் துவக்கிடத்  திட்டமிட்டிருப்பது - ஒரு வில்லிய வான்ஸ் சித்திரங்களுடனான சா.வீ.ரோஜரின் கதையிலிருந்து தான் !! டிடெக்டிவ் பாணிக் கதைகள் ; நார்மலான ஆக்ஷன் கதைகளெனத் தேர்வு செய்தால் அங்கே புராதனத்தின் சுவடுகளை மறைக்க இயலாது போகும் என்பதால் - offbeat கதைகளாய் ; ஒருவித திகில் ஜாடைகளோடு பயணிக்கும் த்ரில்லராய்த் தேடிட வேண்டும் என்பது இலட்சியம் !! இதன் பொருட்டு, நிறையவே கதைத் தேடல் ; உருட்டல் என்று மெனெக்கெட வேண்டியிருக்கலாம் ; but கடல்படுகையில் புதையல் தேட நினைத்தால் அதற்கென முதுகை வளைத்தே தீர வேண்டும் தானே ?

So ஜாகஜ வீரர் முதல் பந்தைச் சந்திக்கிறாரெனில், மறுமுனையில் அவரது பார்ட்னராக நான் களமிறக்க எண்ணியிருப்பது  எஞ்சியிருக்கும் ஒற்றை புது சாகசத்தினுடனான முதலைப்படையினரை !! ப்ருனோ பிரேசில் ! 'திகில்' comics வெற்றியோடு மிளிர்ந்த நாட்களில் இவரும் அதற்குப் பெருமளவில் உதவி செய்திட்ட நாயகரே !! இன்றைக்கு இத்தனை காலம் கடந்த பிற்பாடு, இவரது கதைகளை மறுக்கா வாசிக்க முனையும் போது - நிறையவே ஜெர்க் அடிக்கத் தான் செய்கிறதென்றாலும் - சர்வதேச அரங்கில் ஜேம்ஸ் பாண்ட் கதைகள் கொடிகட்டிப் பறந்து வந்த '70-களில் உருவாக்கப்பட்ட இந்த "ஜேம்ஸ் பாண்ட் ஜெராக்ஸ்" - wouldn't do too badly for an one-shot என்றே சொல்வேன் !! Moreover - இங்கேயும் திரு வான்சின் கைவண்ணம் உண்டெனும் போது - இரு சமகால பிரான்க்கோ-பெல்ஜிய ஆல்பங்கள், ஒரே ஜாம்பவானின் தூரிகையினில் என்ற திருப்தி கிட்டிடாதோ ? 

கதை # 3 என நான் தேர்வு செய்வதுமே ஒரு பிரான்க்கோ-பெல்ஜியப் படைப்பாகவே இருந்திடும் - இம்முறை டிடெக்டிவ் ஜெரோம் ரூபத்தில் ! 'ஒரே ஆல்பம் தான் வாய்ப்பு ; அதுவே அவரது தலைவிதியை நம் மத்தியில் நிர்ணயிக்கும் தீர்ப்பு' என்ற அந்த not so fair உபசரிப்பே இந்தக் கோழிமுட்டைக் கண் நாயகருக்கு நாம் வழங்கியுள்ளோம் ! 'தற்செயலாய் ஒரு தற்கொலை' டாம்-டூம் ஆக்ஷன் இல்லாததொரு டிடெக்டிவ் சாகசம் தான் ; but தேசத்தில் எல்லாத் துப்பறிவாளர்களும் துப்பாக்கிகளைத் தூக்கிக் கொண்டு, 'உய்..உய்' எனக் கூச்சலிடும் சைரன் கார்களில் குறுக்கும் நெடுக்குமாய்ப் பயணிப்பதில்லையே - நிஜத்தினில் ? So 'தேமே' என சைக்கிளைத் தள்ளிக் கொண்டு பாரிஸை வலம் வந்தபடிக்கே மர்மங்களை முடிச்சவிழ்க்க முனையும் இந்த சிம்பிள் டிடெக்டிவினை இன்னொருவாட்டி பரிசீலிக்க விழையும் எனது BBB ஸ்பெஷல் ! அதுவும் இதுவொரு 26 ஆல்பம் கொண்ட not so ancient தொடர் எனும் போது, நவீன பாணியில் கலரிங்கும் இருந்திடும் ! So கண்களைக் கூசச் செய்யும் பஞ்சு மிட்டாய் வர்ணங்களை அள்ளித் தெளித்த effect இங்கே இராது ! ஆக ஆக்ஷன் ஜானருக்கு ரோஜர் ; சர்வதேச spy த்ரில்லர் பாணிக்கு ப்ருனோ பிரேசில் ; டிடெக்டிவ் பாணிக்கென ஜெரோம் என்றிருக்கும் !

எனது தேர்வு # 4 - கார்ட்டூன் கரைகளில் பக்கமாய் இருந்திடும் ! இங்கே நாம் ஓரம்கட்டியுள்ள நாயகர்கள் / தொடர்கள் ஏராளமுண்டு ! Smurfs ; பென்னி ; லியனார்டோ ; மந்திரியார் ; ரின்டின் கேன் - என்று அடுக்கிக் கொண்டே போகலாம் ! ஆனால் அவர்களையெல்லாம் மறுக்கா தூசி தட்டுவதற்குப் பதிலாய் நான் நாட நினைப்பது திருவாளர் "ஸ்தீல்பாடி ஷெர்லாக்" அவர்களையே ! இதுவரைக்கும் குட்டிக் குட்டி சாகசங்களில் (!!) மனுஷனின் கூத்துக்களைப் பார்த்துள்ளோம் ! But இவரது தொடரில் இன்னமும் சில முழுநீள ஆல்பங்கள் காத்துள்ளன ! So ஒரு 46 பக்க நீள ஆல்பத்தில் இந்த குடாக்கு ஷெர்லாக் & டுபுக்கு வாட்சன் ஜோடியை ரசிக்க எண்ணிடும் எனது ஸ்பெஷலானது ! கார்ட்டூன் பாணியையும் டிக் அடித்தது போலாச்சு ; ஒரு offbeat நாயகரை உட்புகுத்திய திருப்தியும் கிட்டியாச்சு என்பேன் !

My கதை # 5 would be : LADY S ! 'பின்பென்ச் பசங்க' என்ற அடையாளத்தோடு வந்திடும் ஒரு இதழில் பொம்மனாட்டிக்கு என்ன ஜோலியோ ? என்ற லாஜிக் கேள்விகளை நீங்களும் சரி, நானும் சரி, அம்மணியின் விஷயத்தில் மட்டும் வசதியாய் ஓரம்கட்டிடுகிறோமாம் !! So அந்தச் சலுகையைக் கையில் எடுத்துக் கொண்ட கையோடு கதாசிரியர் வான் ஹாமின் இந்தப் படைப்பின் நடுவாக்கைத் தொட்டிடும் ஒரு ஆக்ஷன் ஆல்பத்தோடு களமிறங்கத் தயாராவேன் ! இங்கே தொடரின் ஒரிஜினல் கதைவரிசைக்கெல்லாம் பெருசாய் முக்கியத்துவம் தந்திடாது - CINEBOOK -ல் அத்தனை லேடி S ஆல்பங்களையும் வாங்கி, பர பரவெனப் படித்துவிட்டு அவற்றுள் best எதுவோ, அதையே தேர்வு செய்திட முனைந்திடுவேன் ! எப்படியும் - எந்த ஆல்பத்தைத் தேர்வு செய்தாலும் நிக்கரோடு கூரைகளில் பாப்பா நடுராத்திரியில் பயணிப்பது நிச்சயம் எனும் போது நம்மிலுள்ள 'கலாரசிகர்களுக்கும்' ஏமாற்றங்களிராது !! வான் ஹாமின் இதர அமர படைப்புகளை (XIII ; தோர்கல் ; எமனின் திசை மேற்கு etc ) மனத்திரையில் ஓடவிட்டுக் கொண்டே லேடி S தொடரினையும் அவற்றோடு ஒப்பிடாது - கதையைக் கதைக்காக மட்டுமே ரசிக்க முனையும் இந்த ஸ்பெஷல் இதழினில் !

அரை டஜனாவது கதையோடு இந்த ஸ்பெஷலை நிறைவு செய்திட நான் தேர்வு செய்வது கமான்சே கதையினையே !! 'கௌபாய் சுவையின்றி ஒரு ஸ்பெஷல்' என்பது இப்போதெல்லாம் நினைத்துப் பார்க்கவே இயலா சமாச்சாரம் எனும் போது - நம்மிடையே the neglected cowboy series என எஞ்சி நிற்கும் இந்த கேரட் மண்டைக் கௌபாயை களமிறக்கிடுவதில் தயக்கமே இராது என்னுள் ! Again - கதைத் தொடரின் வரிசைக்கு நோ முக்கியத்துவம் ; எஞ்சியுள்ளவற்றுள் எது பெஸ்டோ அதை பச்சக் என தூக்கியாந்திட வேண்டியது தான் ! And maybe..just maybe இந்த ஒற்றை சாகசத்தை மட்டும் கலரில் அல்லாது - black & white-ல் முயற்சித்திடுவேன்- கண்களைக் கூசச் செய்யும் அந்த வர்ணக்கலவையினைத் தவிர்த்திடும் பொருட்டு !!

ஆக அரை டஜன் கதைகளோடு அம்சமாய் அமைந்திடும் இந்த இதழினில் வில்லியம் வான்ஸ் ; கிரெக் ; வான் ஹாம் ; ஹெர்மன் போன்ற பிரான்க்கோ-பெல்ஜிய அசுரர்களின் கைவண்ணங்கள்  நெடுக விரவிக் கிடக்கும் ! And இவர்களையெல்லாம் ஒரே இதழில் ஒட்டுமொத்தமாய் சாம்பாராக்கிட படைப்பாளிகள் சம்மதிக்க மாட்டார்கள் என்பதால் - அதற்குமொரு உபாயம் இருக்கும் என்னிடம் ! ஆறு இதழ்களையும் , ஆறு individual இதழ்களாய் ; தனித்தனி அட்டைப்படங்களோடே வெளியிட்டு விட்டு, மொத்தமாய் அவற்றை உட்புகுத்திட ஒரு அழகான slipcase ரெடி செய்து தந்திடுவேன் ! So 6 கதைகளையும் அந்த box set-ல் போட்டு அசத்திட திட்டங்கள் ரெடி !! Phew !!! கனவுகளுக்கும் எத்தனை நுணுக்கம் அவசியமாகிறது இன்றைக்கெல்லாம் ?

Back to reality - வெளியிட ரிஸ்க் இலா கதைகள் ஒரு வண்டி காத்துள்ள போது, இந்தப் பின்பென்ச் காதல் எல்லாம் வேலைக்கு ஆகாது என்பதை மண்டை சுட்டிக்காட்டுவதால் எனது இந்தக் கோக்கு மாக்குக் கனவானது கனவாக மாத்திரமே தொடர்கிறது என்னுள் ! And அவ்விதமே தொடரவும் செய்திடும் ! என்றேனும் ஒரு பொழுது போகா நாளில் இதனை உங்களோடு பகிர்ந்திட நினைத்திருந்தேன் ; and அந்த நாள் இன்றாகிப் போனது என்று வைத்துக் கொள்ளுங்களேன் !

Before I sign off - இதோ காத்திருக்கும் அடுத்த மாதத்தின் மறுபதிப்பின் அட்டைப்பட முதல்பார்வை :
இப்போதெல்லாம் ஒரிஜினல் அட்டைப்படங்களையே உபயோகிக்கும் பாங்கு கிட்டத்தட்ட 95% நடைமுறையிலிருப்பதைக் கவனித்திருப்பீர்களென்று நினைக்கிறேன் ! இந்தாண்டின் இதுவ்ரைக்கிலும் " சாத்தானின் சீடர்கள்" & "பாலைவனத்தில் ஒரு கப்பல்" ஆகிய 2 ஆல்பங்களுக்கு மாத்திரமே நமது ஓவியர் மாலையப்பனின் பெயிண்டிங்கை பயன்படுத்தியுள்ளோம் ! அவருக்கும் வயதின் தாக்கம் அதிகமிருப்பதால் முன்போல் சிரத்தை தந்திட இயன்றிடுவதில்லை ! So நல்ல நாளைக்கே மாடஸ்டிக்கு டிசைன் போடுவதினில் சிரமம் காண்பதுண்டு என்ற நிலையில் - இந்த வேளையில் மேற்கொண்டும் விஷப்பரீட்சை செய்திட தோன்றவில்லை ! அதனால் இந்த மறுபதிப்பு சாகசத்துக்கு ஒரு ஒரிஜினல் டிராயிங்கையே அட்டையாக்கிட முனைந்துள்ளோம் ! அச்சிலும் ரொம்பவே decent ஆக வந்துள்ளதாக எனக்குத் தோன்றியது ! Your thoughts folks ? நமது முதல் நாயகியின் இந்த classic மறுப்பதிப்பை உங்களில் எத்தனை பேர் படித்துள்ளீர்களோ - தெரியாது ; ஆனால் ஒரு அட்டகாச ஆக்ஷன் த்ரில்லர் காத்துள்ளது என்பதை மட்டும் முதல்வாட்டி படிக்கவுள்ள நண்பர்களுக்குச் சொல்லிடுவேன் ! One of the best tales from the series guys !!

நாளை நிறைவுறும் மதுரைப் புத்தக விழாவோடு இந்த சீசன் புத்தக விழா caravan வீடு திரும்புகிறது ! இந்த சீசனது ஆச்சர்ய சந்தோஷமெனில் அவை கோவை & மதுரை புத்தக விழாக்கள் என்பேன் !! இரண்டிலுமே அசகாய விற்பனை நம்பரெல்லாம் நஹி என்றாலும் - நாம் மாமூலாய்ச் சந்தித்து வந்துள்ள இலக்கங்களை இந்த 2 நகரங்களில் மட்டுமே தாண்டிட இயன்றுள்ளது ! இன்றும், நாளையும் மதுரையில் அதே trend தொடர்ந்திட்டால் சூப்பர் !! Fingers crossed !!

Bye folks...have a wonderful sunday ! See you around !!

Sunday, September 01, 2019

வாசிப்புக்கொரு வரிசை 😃

நண்பர்களே,

வணக்கம். திரும்பின திக்கெல்லாம் வாழைமரங்கள் கட்டிய மஹால்களின் முன்னே முரட்டு ப்ளெக்ஸ் பேனர்களில் பெண்ணும், மாப்பிள்ளையும் ஸ்டைலாய் போஸ் கொடுத்து நிற்க,  மாமன்மார்களும், சித்தப்பு-பெரியப்புமார்களும் டெரராய் இளித்து நிற்க, கல்யாண சீஸன் well & truly on என்பது தெரிகிறது ! நம்மையும் மதித்து, பத்திரிக்கைகளைத் தந்து போவது நடக்க – மொய் கவரும் கையுமாய்ப் போய் பந்தியில் சாம்பாரையும், சில்லி புரோட்டாவையும் பதம் பார்க்கும் முஸ்தீபுகள் ஆரம்பம்! உங்களுக்குமே இந்த ஞாயிறும், காத்திருக்கும் சதுர்த்தித் திருநாளும் பிஸியான விடுமுறை நாட்களாயிருக்குமென்பதால் மாமூலான ஞாயிறின் பதிவை crisp ஆக்கிடுவோமே ? தவிர ஒன்றுக்கு – நாலாய் செம breezy reads இம்மாதம் உங்கள் கைகளில் சுடச்சுடக் குடியிருப்பதால் அவற்றோடு இந்த வாரயிறுதியை நகற்றும் பொறுப்பும் உங்களதல்லவா ?

செப்டம்பரின் preview படலம் மூன்று இதழ்களோடு நின்றிருக்க – பிரிவ்யூ # 4 வெளியாகும் முன்னமே அந்த இதழே உங்களை எட்டிப் பிடித்து விட்டது ! So 'உலக பில்டப்களில் முதன் முறையாக' – preview க்குப் பதிலாய் postview என்று வைத்துக் கொள்வோமே ?! இம்மாதத்துக் கூட்டணியில் இடம் பிடித்திருக்கும் நால்வரில் – மூன்று டீம்களுக்குத் தொடரும் அட்டவணைகளில் இடம் பற்றிய கேள்வியே எழாது என்பதால் அவர்களெல்லாமே Super Safe Zone-ல் உள்ளவர்கள் ! ஆனால் மீசையில்லாத விஷாலைப் போலத் தோற்றம் தரும் செஞ்சட்டைக் காவலர் ட்ரெண்ட் - இரண்டு ஆல்பங்களோடு மாத்திரமே இதுவரைக்கும் நம்மிடையே பரிச்சயம் கண்டிருப்பவர் என்ற முறையில் அந்த Super Safe சொகுசுகளுக்கு ஆட்டோமேட்டிக்காகத் தகுதி பெற்றிடும் நிலையைத் தொட்டிருக்கவில்லை ! So இம்மாதம் ‘தல‘ TEX எவ்விதம் ரவுசு செய்கிறாரென்பதைக் கவனித்திடுவதை விடவும் ; ப்ளூகோட் பட்டாளத்துப் புண்ணியவான்களின் performance எப்படியென்று பரிசீலிப்பதை விடவும் ; லக்கியின் புது one-shot அவதாரை நீங்கள் எவ்விதம் அணுகுகிறீர்களென்பதை அலசுவதை விடவும் – ட்டிரண்டின் பாணிக்கு நீங்கள் தந்திடவுள்ள வரவேற்பு மீதே எனது கவனம் லயித்து நிற்கும் ! பெர்சனலாய் எனக்கு ரொம்பவே பிடித்தமான (சமீப) நாயகர்களுள் இவருக்கும் ஒரு இடமுண்டு ! ஆனால் எனக்குப் பிடித்தவர்கள், உங்களுக்கும் பிடித்தமானவர்களாய் இருந்தால் தானே ரயிலில் பெர்த் கிடைக்கும் ?! So தொடரும் ஆண்டின் ட்ரெண்டுக்கான slot அல்லது slots பற்றிய இறுதி முடிவெடுக்க இம்மாதத்து “சாலையெலாம் ஜுவாலைகளே” ஈட்டிடவுள்ள வரவேற்போ ; சாத்துக்களோ நிறையவே உதவிடும். இயன்றால் இம்மாதத்து வாசிப்புகளை இந்தக் கனடா காவலரிலிருந்து ஆரம்பித்துப் பாருங்களேன் folks ? 

கதையைப் பொறுத்த வரையிலும் செம ட்விஸ்ட்களோ ; செம அதிரடிகளோ இருந்திடப் போவதில்லை ! மாறாக யதார்த்தம் + மெல்லிய மனித உணர்வுகளுக்கு இங்கே முக்கியத்துவமிருக்கும் ! And maybe குடும்பத்தை விட்டுப் பிரிந்து, தொலைவில் பணியாற்றுவோருக்கு இந்தக் கதையின் பின்னணியில் இழையோடும் உணர்வுகளோடு அடையாளம் காண முடிந்திடலாம் ! லேசாய் நம்மூர் சினிமாக்களின் கதையைப் போல தோற்றம் தரும் இந்த ஆல்பத்தை தமிழாக்கம் செய்வது செம breezy அனுபவமாயிருந்தது போலவே – வாசிப்பதும் சுலபமாக அமையின், ட்ரெண்ட் நம்மிடையே டெண்ட் கொட்டாய் போட்டுத் தங்கத் தயாராகி விட்டார் என்று எடுத்துக் கொள்ளலாம் ! அடுத்த மாதமுமே இவரது சாகஸம் தொடரவுள்ளதால் all the more eager to know your ratings !! கனடாலேர்ந்து டெம்போலாம் வச்சுக் கூட்டி வந்திருக்கோமுங்க... சித்தே பார்த்து மார்க் போடுங்கோ – ப்ளீஸ் ?

இம்மாதத்தின் surprise package ஆக இருக்கப் போவது நமது காமெடி சூப்பர் ஸ்டார் லக்கி லூக் தான் என்பதில் எனக்குச் சந்தேகம் கிடையாது ! பொதுவாய் ஒரு நாயகருக்கானதொரு template நம் மனதில் பதிந்து விட்டால் அதனை அத்தனை சீக்கிரமாய் அகற்றிக் கொள்ள விரும்புவோரல்ல நாம் ! இதற்கு விதிவிலக்கென்று நான் சொல்லக் கூடியது நமது கூர்மண்டையைர் ஸ்பைடரை மட்டுமே ! ஆரவாரமான வில்லனாய் அறிமுகமாகி நம் மனதைக் கொள்ளை கொண்ட மனுஷன், அப்படியே U-turn அடித்து நீதிக்காவலனாய் மாறிப் போனதை நாம் வாஞ்சையோடு ஏற்றுக் கொண்டது ஒரு அதிசய நிகழ்வு என்பேன் ! அவர் நீங்கலாய் மற்ற கதாநாயக / நாயகியர் யாருமே அறிமுகமான பாணியிலிருந்து பெரிதாய் விலகியது போல் எனக்கு நினைவில்லை ! (Anybody at all folks ??) But இம்மாதத்து லக்கி லூக் ஒரு total makeover சகிதம் நம் முன்னே வலம் வருகிறார் ! சித்திர பாணிகள் ; கதை சொல்லும் பாங்கு ; நாயகருக்கென வழங்கப்படும் ட்ரீட்மெண்ட் – என்று சகலமுமே “லக்கி லூக்கை சுட்டது யார்?” ஆல்பத்தினில் வேறுபட்டு நிற்பதைக் கண்டிருப்பீர்கள் ! ஒரு ரீல் நாயகன், ரியல் நாயகனாகிடும் பட்சத்தில் நிகழக்கூடிய சம்பவங்களைச் சுவையாய்ச் சொல்ல முனைந்து; அதனில் முழுவெற்றியும் பெற்றிருக்கும் கதாசிரியரைத் தான் இங்கே தோளில் தூக்கிக் கொண்டு கொண்டாட வேண்டுமென்பேன் ! So செப்டம்பர் வாசிப்பினில் இயன்றால் – “லக்கி லூக்கைச் சுட்டது யார்?” ஆல்பத்தினை உங்களது வாசிப்பு # 2 ஆக வரிசைப்படுத்திடலாமே?

My choice of # 3 – டெக்ஸின் “ரௌத்திர ரேஞ்சர்” black & white சாகஸமாகத்தானிருக்கும். இது பற்றிப் போன வாரமே கணிசமாய் பில்டப் செய்திருப்பதால் மேற்கொண்டும் பீப்பீ ஸ்மர்ப்பாய் சுற்றித் திரிய வேண்டாமென்று நினைத்தேன் !

வாசிப்பு வரிசையின் இறுதி இடம் – நமது ப்ளூகோட் பட்டாளத்துக்கென்று சொல்லலாம் ! இந்த வரிசைக்கிரமமானது கதைகளின் தரங்கள் மீதான பிரதிபலிப்பல்ல ; சும்மாக்காச்சும் இம்மாத இதழ்களுள் பயணிக்க (நமக்கு) வசதியான ‘ஏக்-தோ-தீன்-சார்‘ என்பதால், “ஆ... ஸ்கூபி & ரூபியை மட்டம் தட்டிப்புட்டீகளே!!” என்று கண் சிவக்கத் தேவையில்லை ! As with all cartoons – இதுவுமே எனது ஆதர்ஷத் தொடர்களுள் ஒன்றே ! அதுவும் படைப்பாளிகள் தேர்வு செய்துள்ள களமானது – சிரிப்புக் கதைகளுக்கு ரொம்பவே வித்தியாசமானது என்ற வகையில், இந்தத் தொடர் வெற்றி காண வேண்டுமென ரொம்பவே விரும்புபவன் நான் ! இம்முறையும் கதைக்களமானது போரின் கோரங்களை ; தோல்விகளின் பாரங்களை காமெடி எனும் சர்க்கரைப் பூச்சோடு சொல்ல விழைகின்றது ! வரலாற்றில் ஏதோவொரு பக்கமே இது ; நாம் கண்ணிலேயே பார்த்திரா பூமியில் அரங்கேறிடும் யுத்தமிது என்றாலும் – சாவுகளை; இழப்பின் சங்கடங்களை உணர்ந்திட அவை தடைகளாய் இருக்காது தானே ? So சிந்தித்தபடியே சிரிக்க – இம்மாதத்து இறுதித் தேர்வாய் “கறுப்புத் தான் எனக்குப் பிடிச்ச கலரு!” அமைந்தால் பொருத்தமாகயிருக்குமென்பேன் !

இதெல்லாமே எனது ரோசனைகளே தவிர்த்து – அவரவரது ஆதர்ஷ வாசிப்பு வரிசைகளில் தவறிராது தான் ! So எதைப் படித்திட நேரம் கிட்டினாலுமே – அவை சார்ந்த உங்கள் பார்வைகளை இங்கே பதிவிட்டால் கச்சேரி களைகட்டிடும் !

Moving on, ஒரு மெகா ஹிட் மாதத்தைத் தொடரும் வேளைகளில் ஒருவிதமான மிதப்பு நம்மை அறியாமலே குடிகொள்வது வாடிக்கை ! வெயிட்டான விருந்துக்கு மறுநாள் ஆபீஸ் போனால் புளிச்ச ஏப்பமும், சோம்பலுமாய் ரவுண்டு கட்டியடிக்குமே – அதே மாதிரித் தான் இந்த மிதப்புமே ! ஆனால் இம்முறையோ அட்டவணையின் திட்டமிடலின் தருணத்திலேயே – ‘ஆகஸ்ட்‘ எனும் full meals மாதத்தின் மறுமாதத்தின் reading ரொம்பவே light-ஆக அமைந்திட வேண்டுமென்று நினைத்திருந்தேன் ! அது ஓரளவுக்கு நிறைவேறியுள்ளதில் ஹேப்பி அண்ணாச்சி!

ஆகஸ்டின் இதழ்களுள் முதலிடம் பிடித்திருந்த “பிஸ்டலுக்குப் பிரியாவிடை” ஏகப்பட்ட அலசல்களுக்கு உட்பட்டது மாத்திரமின்றி – ஏகோபித்த thumbs up பெற்றதில் மனம் நிறைகிறது ! கதாசிரியரின் வெற்றி ; ஓவிய பாணியின் வெற்றி ; மொழிநடையின் வெற்றி ; மேக்கிங்கில் வெற்றி என்றெல்லாம் நிறைய கனிவான சிந்தனைகளை ஆங்காங்கே படிக்க முடிந்த போதிலும், இதனை நான் உங்கள் “ரசனைகளின் வெற்றி” என்று தான் சொல்வேன் ! I have a reason to say this folks...! 

பொதுவாய் இதுவரையிலுமான மெகா இதழ்கள் எல்லாமே – யாரேனுமொரு ஸ்டார் நாயகரின் குடையில் இளைப்பாறியிருப்பது வழக்கம் ! கேப்டன் டைகர்; டெக்ஸ்; லக்கி லூக் ; XIII என்று big names பிரதானமாய் இருக்கும் போது மெகா இதழ்களின் சக்கரங்கள் கிறீச்சிடாமல் சுற்றி வந்திடுகின்றன ! ஆனால் இந்த தபா “ஈரோடு எக்ஸ்பிரஸ்” என நான் அறிவித்திருந்த 2 இதழ்களுமே total புதுவரவுகள் ! And எவ்வித முன் அறிமுகமோ ; அதிரடிகளுக்கான உத்தரவாதங்களோ இல்லாத இதழ்களெனும் போது எனது அறிவிப்பைத் தொடர்ந்து ஒரு ‘மின்னும் மரண‘ முன்பதிவு அதகளமோ ; ஒரு இரத்தப்படலத் தொகுப்பு முன்பதிவுகளின் ரணகளமோ அரங்கேறிடவில்லை ! ஓரளவுக்கு நானுமே இதை எதிர்பார்த்திருந்தேன் ; ஆனால் விடாது ஊதிடும் பில்டப் பீப்பியின்  புண்ணியத்தில் நமது மாமூலான முன்பதிவு இலக்கை (500) கொஞ்சமாச்சும் நெருங்கிடலாமென்று நான் நினைத்திருந்தேன் ! ஆனாக்கா ‘ஜடாமுடி ஜானதனுக்குமே பில்டப் தர்றவன் தானே நீ...? அப்டிக்கா ஓரமாய் போயி தனியாப் பேசிக்கோ !‘ என்று நிறைய நண்பர்கள் தீர்மானித்து விட்டனர் ! தஸ்ஸு... புஸ்சென்று முக்கியும் 345-ஐத் தாண்டவில்லை முன்பதிவு எண்ணிக்கையானது ! கொஞ்சம் ஜெர்க்கடிக்கத் தான் செய்தது என்றாலுமே – கதையின் வீரியம் நம்மைக் கரை சேர்த்து விடுமென்ற நம்பிக்கையோடே ஈரோட்டுக்குப் பொட்டலம் கட்டிக் கொண்டு புறப்பட்டோம் ! MAXI லயனின் TEX + லக்கி லூக் மெகா கூட்டணியும், ஈரோட்டின் சர்ப்பரைஸ் என்றிருக்க – அவர்களது ராட்சஸ presence-ஐ தாண்டி வேறு யாரும் மிளிர்வது சிரமமே என்பதும் புரியாதில்லை தான் ! ஆனாலும் உள்ளுக்குள் ஒரு சின்ன திட நம்பிக்கை – உங்கள் ரசனைகள் மீது லயித்துக் கிடந்ததால், ஈரோட்டு விழாவை நிறைவு செய்த கையோடு ஊர் திரும்பிய கணம் முதலாய் ‘பி.பி.வி.‘க்கு உங்களது ரெஸ்பான்ஸைக் கணிப்பதிலேயே மும்முரமாயிருந்தேன் ! And எனது நம்பிக்கை துளி கூட வீண் போகவில்லை ; அண்டர்டேக்கர் ; TEX ; லக்கி போன்ற பிஸ்தாக்களையே ‘அப்பாலிக்கா ஓரமாய்ப் போய் விளையாடுங்க தம்பிகளா!‘ என்று சொல்லி விட்டு ”பி.பி.வி‘ யை நீங்கள் தெறிக்க விட்டது செம landmark moment இந்தாண்டினில் ! உங்கள் மத்தியில் வெற்றிக்கு Star Power இனியும் ஒரு அத்தியாவசியமல்ல என்பதை ஆணித்தரமாய் நிரூபித்திருக்கும் தருணமாய் இதை நான் பார்த்திடுகிறேன் !!   சமீப மாதங்களில் நீளமான ஆல்பங்களை தவணை முறைகளில் படிக்கவே திணறி வந்த நண்பர்கள் இந்த 4 பாக ஆல்பத்தை ; ஒரு ஹீரோவே இல்லாத ஆல்பத்தை ; கோக்மாக்கான சித்திரபாணியிலான ஆல்பத்தை – சும்மா ஜெட் வேகத்தில் படித்து, முடித்து, சிலாகித்தது செமத்தியானதொரு சாதனை என்பதில் ஐயமே கிடையாது ! “ஹாாாவ்... ஹீரோவே இல்லியே ?.... அமெரிக்க அரசியல் சட்டமா....?? இது இன்னா மேரி கதைப்பா ? அய்யே..படமே சொகப்படலியே  ?” என்றெல்லாம் கொட்டாவிகள் விடாது இந்த இதழினை நீங்கள் ரசித்தது – நான் உங்கள் மீது வைத்த நம்பிக்கையின் வெற்றி !! தொடர்ந்த நாட்களில், ஈரோட்டுப் புத்தக விழாவில் ; கடைகளில்  ; ஆன்லைனில் என்று பரபரத்த விற்பனைகள் ஒற்றை விஷயத்தை ஊர்ஜிதப்படுத்துகின்றன – என்னளவிற்கு : ரசனைகள் எனும் ஏணியில் நீங்கள் LIC கட்டிட உசரங்களையெலாம் தாண்டி நாட்கள் பலவாச்சுங்கோய் ! 'இந்தத் தொடர் நம்மாட்களுக்குப் புரியுமா ? ரசிக்குமா ?' என்ற கேள்விகளெல்லாம் இனிமேலும் கேட்டுத் தயங்குவது குடாக்குத்தனம் என்பதே அது ! மெய்யான தரமிருந்தால் – அது எத்தனை முரட்டுப் போர்வையின் பின்னணியிலிருந்தாலுமே நீங்கள் பிரித்து மேய்ந்து விடுவீர்கள் என்றாகி விட்டது ! Take a bow all !!

பிஸ்டலுக்குப் பிரியாவிடை... தாழிடப்பட்டிருந்த ரசனைக் கதவுகள் பலவற்றிற்கான பிரியாவிடையுமே !! 

 Before I sign out –  பற்றிய தாக்கல் ! வெள்ளி மாலை மதுரை தமுக்கம் மைதானத்தில் துவங்கியுள்ள புத்தக விழாவினில் நமது ஸ்டால் # 195 ! And முதலிரண்டு நாட்களில் அட்டகாச response !! புது இதழ்கள் சகலமுமே அங்கும் கிடைக்கும் என்பதால் – மதுரை மண்ணின் மைந்தர்கள் ஒரு விசிட் அடிக்கலாமே – ப்ளீஸ்!
Bye folks! Have a Super Sunday !! See you around ! முன்கூட்டிய பண்டிகை வாழ்த்துக்களும் !! 

Thursday, August 29, 2019

ஆகஸ்டில் அடுத்த மாசம் !

நண்பர்களே,

வணக்கம். கைவசம் தற்காலிகமாய் லேப்டாப் நஹி ; போனில் டைப்படித்து பெருசாய் பதிவொன்றைப் போடும் திறனும் நஹி ; பொறுமையும் நஹி ; சனி வரையிலும் ஊரிலும் நஹி ! இத்தனை நஹிகளுக்கு மத்தியில் செப்டெம்பரின் இதழ்கள் மட்டும் 'ஹேய்' என்பதால் இந்தக் குட்டியூண்டுப் பதிவு ! என் பணிகளை போன ஞாயிறே நிறைவு செய்திட்டபடியால் - 4 இதழ்கள் கொண்ட டப்பி   இன்றைக்கு கூரியரில் கிளம்பியாச்சு ! 

வெள்ளியன்று அனுப்பினால் பாதிப் பேருக்கு புக்குகளும், மீதிப் பேருக்கு கடுப்புமே கிட்டுவது வாடிக்கை என்பதால் பைண்டிங்கில் 'குடல் உருவும் படலத்தை' கொஞ்சம் அழுத்திப் போட்டதன் பலன் - விசாலக்கிழமை டெஸ்பாட்ச் ! புத்தகங்களின் அன்லைன் லிஸ்டிங்கும் ரெடி ! So 'ஆகஸ்டிலேயே செப்டெம்பர்' என்ற மொக்கை வரியோடு மீ இப்போ ஜாத்தா ஹை ; கூரியர் டுமாரோ ஆத்தா ஹை ; புக்ஸ் பற்றி அலசல் இந்த வாரயிறுதிக்கு ஸ்டார்ட்டா ஹை ! ஞான் இப்போ டாட்டா ஹை ! Happy reading folks !

Sunday, August 25, 2019

சலசலக்கும் செப்டெம்பர் !

நண்பர்களே,

வணக்கம். சில நேரங்களில் வாசிப்புகள், ரசனைகள் என்று சகலமுமே ஏதேனுமொரு குறிப்பிட்ட திக்கில் நிலைகொண்டு நிற்பது வழக்கம். ஆரம்ப நாட்களில் இஷ்பைடர்; சட்டித்தலையன் ஆர்ச்சி; இரட்டை வேட்டையர்; மாடஸ்டி என்று ஜனரஞ்சக, ஆக்ஷன் கதைகளுள் முழுமையாய் ஆழ்ந்திருக்கிறோம் ! அப்புறமாய் புலர்ந்ததொரு phase-ல் டெக்ஸ் வில்லர்; கேப்டன் டைகர் என்று கௌபாய் மேனியாவில் மும்முரமாகிட – நமது சாலைகள் சகலமும் வன்மேற்குப் பக்கமாகவே பரந்து விரிந்தன ! அப்பாலிக்கா லார்கோ ; XIII ; ஷெல்டன் என்று சமகாலக் கதைகள் ; அதற்கும் அப்பாலிக்கா கிராபிக் நாவல்கள் என்று ரவுண்ட் அடித்து வருகிறோம் ! இதோ latest ஆகக் கூட “பி.பி.வி” எனும் அந்தக் 'கௌ-பாய் கிராபிக் நாவலுக்குள்' மெய்மறந்து ஆகஸ்டை ஓட்டி வருவது தானே நடந்து வருகிறது ? ஆழ்ந்த கதைக்கருக்கள் ; நிறைய சமூக messages ; வித்தியாசமான நான்-லீனியர் கதைப் பாணிகள் என்று ஓட்டமெடுத்து வரும் இன்றைய பொழுதினில் எனக்குள் லேசாயொரு நமைச்சல் ! 'அட... இந்தப் புதுமாதிரி கதைகளெல்லாம் ஓ.கே. தான்... ஆனாக்கா நாலு மொத்து ; நாற்பது குத்து; நானூறு பன்ச் டயலாக் என்று ஒரு சிம்பிளான நேர்கோட்டு ஆக்ஷன் மேளாவுக்குள் நீச்சலடித்து நிறையவே நாட்களாகி விட்டதே??!!' என்பதே மேற்படி நமைச்சலின் பின்னணி ! சமீபத்தைய அண்டர்டேக்கரோ ஒரு dark த்ரில்லர் ; ஜனரஞ்சக ட்யுராங்கோவோ ஒரு அமர்த்தலான அமைதியான அதிரடி ஆசாமி; தி Lone ரேஞ்சரோ – வேறு மாதிரியான நாயகர் ; பராகுடாவோ முற்றிலும் மாறுபட்ட களம் எனும் போது – சிம்பிளான, ஜாலியான, அதிரடியான, அதகளமான, ஆஸமான, அழகான, அட்டகாசமான ஒரு பட்டாசான கதைக்கோசரம் மனம் ஏங்கியது!

மேற்படி வர்ணனைகள் சகலத்துக்கும் நியாயம் செய்யக் கூடிய நாயகர் ஒருவர் சித்தே நிழலில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்க – செப்டம்பரின் அட்டவணையும் அவரை என் மேஜைக்கே இட்டாந்திட – குதூகலமாய் நிமிர்ந்து பார்த்தால் நிற்கிறார் நமது மஞ்சள் சட்டை மாவீரர்!! “ஒரு ரௌத்திர ரேஞ்சர்!” என்ற தலைப்போடு 224 பக்க நீளத்திற்குப் பயணிக்கும் இந்த TEX சாகஸத்தினுள் நான் பணியாற்றியது ஏகப்பட்ட மாதங்களுக்கு முன்னே என்பதால் கிட்டத்தட்ட கதையின் outline நீ்ங்கலாக பாக்கி சகலமும் மறந்தே போயிருந்தது! So எடிட்டிங்குக்கென தூக்கிக் கொண்டு அமர்ந்த போது புதுசாய் ஒரு கதையைப் படிப்பது போலவே ஒரு fresh feel! And அந்த 220 பக்க அதிரடியினைப் பாதி எடிட் செய்துள்ள தருவாயில் இதை எழுதுகிறேன் guys; செப்டம்பரில் - ட்ரெண்ட்; ப்ளூகோட்ஸ்; லக்கி கிராபிக் நாவல் என அத்தினி பேரும் அப்டிக்கா ஓரமாய்ப் போய் விளையாடிட வேண்டியது தான் ! ஷப்பாாா!!! ஏகப்பட்ட நாட்களாகி விட்டன இத்தனை வித்தியாசமானதொரு களமும், எதிராளியும் TEX-க்கு அமைந்து! சும்மா ஒவ்வொரு பக்கத்திலும் மின்சாரம் பாயாத குறை தான்! கதையின் துவக்கத்திலேயே டாப் கியரில் எகிறும் நம்மவர் சுபம் போடும் வரையிலும் அதே ரணகள mode-ல் தொடர்ந்திடுகிறார்! And இம்முறை அவரோடு பொருதுவதோ – அடிக்கு அடி; உதைக்கு உதை; குத்துக்குக் குத்து; தோட்டாவுக்குத் தோட்டாவென ஈடுதரவல்லதொரு சக ரேஞ்சரே!! 

700+ ஆல்பங்கள் கொண்டதொரு தொடரில் – இன்னமும் புதுசாய்த் தோண்டியெடுக்கக் கூடிய கதைக்கருக்கள் என்ன தானிருக்க முடியுமோ? என்ற நினைப்பு என்னுள் அவ்வப்போது தோன்றிடுவதுண்டு! நாலைந்து வருடங்களுக்கு முன்பாய் TEX-ன் டாப் கதாசிரியரான திரு.மௌரோ போசெல்லியைச் சந்தித்த போது கூட இதே கேள்வியைத் தான் கேட்டு வைத்தேன் ! சன்னமான புன்னகையே பதிலாகக் கிடைத்தது எனக்கு ! TEX Room என்று அவர்கள் அழைக்கும் பெரியதொரு ரூமுக்குள் அப்புறமாய் அவரது உதவியாளர் அழைத்துச் சென்ற போது எக்கச்சக்கமாய் Wild West சார்ந்த புக்குகள் ; வரைபடங்கள் ; ஸ்டேஜ் கோச் ; ரைபிள் ; பிஸ்டல் ; குதிரைகளின் தத்ரூபமான பொம்மைகள் என்று நிறைந்து கிடப்பதைப் பார்க்க முடிந்தது ! வன்மேற்கின் வரலாற்றை அக்கு வேறு – ஆணி வேறாய்ப் படிக்கிறார்கள் ; நிஜ நிகழ்வுகளை நுணுக்கமாய் அலசுகிறார்கள்; இக்ளியூண்டு spark கிட்டினாலும் போதும், அதனையே அப்புறமாய் விஸ்தீரணம் செய்து, ஒரு முழுநீளக் கதையாக உருமாற்றுகிறார்கள் என்பது புரிந்தது!

And காத்திருக்கும் இந்த TEX அதிரடி கூட இத்தகையதொரு சன்னமான வரலாற்றுப் புள்ளியிலிருந்து புறப்பட்டிருக்குமோ என்னமோ – கதையின் முழுமையிலும் ஒருவித யதார்த்தமும், நம்பகத்தன்மையும் இழையோடுகிறது! பொதுவாய் 220 பக்க எடிட்டிங் வேலையெனும் போது – அது டெக்ஸ் கதையாகவே இருப்பினும் லேலெல்லாம் வலிக்கத் தான் செய்யும் – simply becos of the volume of the work! ஆனால் சமீபத்தைய கிராபிக் நாவல் mode-ல் கிடந்தவனுக்கு TEX கத்தையை இந்தவாட்டி பார்த்திடும் போது குச்சி முட்டாயும், குருவி ரொட்டியும் பார்த்த குழந்தைப் புள்ளை போல குஷியாகிப் போனது! மார்ச் மாதம் வெளியான “பாலைவனத்திலொரு கப்பல்” மாத்திரமே இந்தாண்டின் TEX முத்திரை கொண்ட சாகஸமாய் அமைந்துள்ளதை நமது அட்டவணை சொல்கிறது! அந்தக் குறையை நிவர்த்திக்க “ஒ.ரௌ.ரே” காத்துள்ளார் ! Electrifying TEX folks!! அதிலும் க்ளைமேக்சில் பறக்கும் அனல் + இழையோடும் மனித உணர்வுகள் நெடுநாள் மனதில் நிற்கப் போவது நிச்சயம்! பொதுவாய் நான் பில்டப் தருவதெல்லாம் சற்றே சவலைப்பிள்ளைகளான நாயக / நாயகியருக்கு தானிருந்திடுவதுண்டு! ரொம்ப காலம் கழித்து, நெல்லை ஊருக்கே இருட்டுக்கடை அல்வாவின் அருமை பெருமைகளைப் பற்றிப் பேசும் உணர்வே மேலோங்குகிறது! ஆனால் 115 பக்கங்களைக் கடந்துள்ள நிலையிலேயே சேர் மேலே ஏறி நின்று கொண்டு ‘விஷ்க்... விஷ்க்...‘ என்று விசிலடிக்கத் தோன்றுவதாலாயே இந்த ஒட்டைவாய் அவதார்!

And இதோ – இந்த இதழுக்கான அட்டைப்பட முதல் பார்வை – முழுக்கவே ஒரிஜினல் டிசைன்களுடன்! போனெல்லியின் 2 தனித்தனி இதழ்களில் – தொடர்களாய்த் தடதடத்த இந்த சாகஸத்திற்கு அவர்கள் போட்டிருந்த 2 அட்டைப்பட டிசைன்களுமே பட்டையைக் கிளப்ப – எதை முன்னட்டைக்கு ? எதைப் பின்னட்டைக்கு ? என்று நிர்ணயிக்க மட்டுமே ஒரு கணம் திணறினேன்! அப்புறம் ஓவியர் Garcia Seijas-ன் கைவண்ணத்தில் உட்பக்கங்களில் அரங்கேறும் சித்திர மேளா அதகளம் செய்கிறது! டெக்ஸின் கம்பீரம்; கார்சனின் வசீகரம்; எதிராளியின் வீரியம் என்று அத்தனையுமே ‘நச்‘ ரகம்! நிறைய முறைகள் கதைகளின் outline-களை வாசித்து ‘அடடே...!!!‘ என்றபடிக்கே அந்த ஆல்பத்தை வரவழைத்து ஆர்வமாய் புரட்டினால் – ‘புசுக்‘கென்று பலூனில் காற்று போனது போலாகிடும், சித்திர பாணிகளைப் பார்த்திடும் போது! திரையில் நடிகர் திலகம் பிரசன்னமாகும் போது – நாம் எதிர்பார்ப்பது அவரது சிம்மக்குரலைத் தானே? மாறாக – நடிகர் திலகத்துக்கு சுருளிராஜனின் voiceover அமைந்தால் வெறுத்துப் போய்விடுமன்றோ ? அதே feel தான் டெக்ஸின் ஒருசில புது ஓவியர்களின் படைப்புகளைப் பார்த்திடும் போது ஏற்படுவதுண்டு ! இத்தாலிய வாசகர்களுக்கெல்லாம் இது அத்தனை பெரிய சமாச்சாரமாய்த் தென்படுவதில்லை போலும் - கதையை; நாயகரை ரசிப்பதிலேயே திருப்திப்பட்டு விடுகின்றனர்! ஆனால் நமக்கோ பந்தியில் பரிமாறப்படும் ஸ்வீட்டிலிருந்து, ஊறுகாய் வரையிலும் சகலமுமே சுவையாய் அமைந்திடல் ஒரு அத்தியாவசியம் எனும் போது – கதைத் தேர்வுகளோடு, சித்திரச் சுந்தரங்களுக்கும் பெரும் பங்கு இருந்து வருகிறது! இம்முறை இரண்டுமே ஒற்றைப் புள்ளியில் சந்திக்க / சங்கமிக்க – a treat for all the senses in place!! 

கடைவாயோரம் வழிந்து வரும் குற்றாலத்தைத் துடைத்தபடிக்கே அடுத்த subject-க்குத் தாவும் முன்பாய் உள்ளுக்குள் இன்னொரு நினைப்புமே ஓடாதில்லை! “ஆத்தாடியோவ்... முரட்டுத்தனமான பில்டப் தந்திருக்கோம்; இப்பவே பெங்களூரின் ஒரு மூலையில்... கோபியின் இன்னொரு கோடியில் பெருசாய் பல்பு தர முஸ்தீபுகள் அரங்கேறிக் கொண்டிருக்குமோ?" என்ற பீதி தான் அது! ஆனாலும் நாம் பார்க்காத முட்டுச் சந்துகளா? வாங்காத LED பல்புகளா? எனும் போது  "பில்டப் படலத்தில் போவோமே....போய்த் தான் பாப்போமே !!" என்றபடிக்கு jump to the next topic!!

லக்கி லூக் !! சமீப மாதங்களது நமது ‘ஹிட்‘ படலத்துக்கு நிறையவே பெட்ரோலாய் அமைந்த புண்ணியவாளர் இவரே! மிஸிஸிபி நதியின் படகுப் போட்டி சாகஸத்தில் ஆரம்பித்து; உருளைக்கிழங்கை உரிக்கச் செய்யும் கர்னல் பிக்ஜீரோ; சுதந்திர தேவி சிலையைத் தூக்கித் திரியும் ரகளை என்று இவரது ஜாலி அதிரடிகள் இந்தாண்டின் கார்ட்டூன் வாசிப்புகளுக்கு ஒரு மெருகூட்டியுள்ளது! And காத்திருக்கும் செப்டம்பரிலும் இவரது பெயரை உச்சரிக்கவுள்ளோம் – இந்தவாட்டி செம வித்தியாசமானதொரு களத்தினில் ! (ஆரம்பிச்சாச்சா ? என்ற உங்கள் மைண்ட்வாய்ஸ் கேட்குது !!) மாதாமாதம் யாருக்காகவும் பில்டப் பலூனில் காற்று ஏற்றும் போதெல்லாம் – “செம வித்தியாசமான கதைக்களம்” என்ற பதத்தை நையப் புடைத்திடுவத எனது வாடிக்கை ! ஜானதன் கார்ட்லேண்டுக்குமே இதே போல லாலி பாடியிருப்பேன் என்பதால் எனது பில்டப்களைப் பொதுவாய் ஒரு சிட்டிகை உப்போடே அணுகுவீர்களென்பது புரிகிறது guys ! ஆனால் நம்பினால் நம்புங்கள் – இந்த முறை சந்திக்கவுள்ள லக்கி லூக் – 'ஆயுளில் ஒருவாட்டியே !' என்ற ஸ்டைலில் காத்திருக்கிறார்! சிரிப்பூட்டும் கார்ட்டூன் நாயகராக இன்றி – ஒருவித நிஜத்தன்மை கொண்ட கௌ-பாய் ; ஒரு அழகான களத்தில் ; ஜாலியான சித்திர பாணியில் கலக்குகிறார்! “லக்கி லூக்கைச் சுட்டது யார்?!” நம்மவரின் 70-வது பிறந்த நாளுக்கோரம் விசேஷமாய் 2017-ல் வெளியான ஆல்பம்! அப்போதே இதனை தமிழில் வெளியிடும் ஆசையிருந்த போதிலும் ஸ்லாட்ஸ் பற்றாக்குறையால் RAC-ல் காத்திருக்கச் செய்ய வேண்டிப் போனது ! லேட்டாயினும், லேட்டஸ்டாய் வந்தே தீருவேன் என்று மனுஷன் அடம்பிடிக்க, இதோ ஜம்போவின் சீஸன் 2 அதற்கான வாய்ப்பு அமைந்துள்ளது! முதல் எடிஷன் வெளியான பத்தே நாட்களில் முழுசும் விற்றுத் தீர்ந்திட – இரண்டாவது வாரமே மறுபதிப்புக்கு அவசியம் நேர்ந்ததாம் பிரெஞ்சு மொழியில்! நமக்குமே லக்கி லூக் collection-ல் இந்த ஆல்பத்துக்கென ஒரு உச்ச ஸ்தானம் கிட்டப் போவது நிச்சயமென்று ஜாலி ஜம்பர் சொல்கிறது! ரொம்பவே சமீபத்தை படைப்பு என்பதால் கலரிங் பாணி சும்மா பட்டையைக் கிளப்புகிறது ! நேற்று காலை துவங்கிய அச்சின் முதல் படிவத்தைப் பார்த்த போதே என் கண்களெல்லாம் பிரகாசமாகிப் போயின! Brilliant கலரிங்!

So இதோ – ஒரு மைல்கல் தருணத்துக்கொருத் தயாரான இதழின் ஒரிஜினல் ராப்பர் – துளியும் டிங்கரிங் இன்றி அப்படியே! அந்த எழுத்துருக்கள் மாத்திரம் நமது ஓவியர் சிகாமணியின் அதகளம்! மூப்புக்கும், திறன்களுக்கும் துளி கூடச் சம்மந்தம் நஹி போலும்... இன்னமுமே கலக்குகிறார் மனுஷன்!

Before I sign out - சில updates :

1.தஞ்சாவூரில் திங்களன்று ( நாளை) புத்தக விழா நிறைவுறுகிறது ! பெரு நகரமல்ல எனும் போது நமது எதிர்பார்ப்புகளும் பெருசாய் இருந்திடவில்லை; So ஓரளவுக்கான decent விற்பனையின் பொருட்டு மகிழ்ச்சியே! வாரயிறுதியில் இன்னும் வேகமெடுத்தால் சூப்பர்! புத்தக விழா கேரவனின் அடுத்த நிறுத்தம் – மதுரை ! BAPASI நடத்திடும் இந்த விழாவினில் நமது ஸ்டால் நம்பர் 195 ! இந்த book fair சீஸனை மதுரையில் சந்தோஷமாய் நிறைவு செய்திடலாம் என்ற நம்பிக்கையுடன் உள்ளோம் ! ! Fingers crossed ! 

2.அப்புறம் நண்பர் ஜேடர்பாளையம் சரவணகுமாருக்கு வரும் புதனன்று அறுவை சிகிச்சைக்குத் திட்டமிட்டுள்ளனராம் !! நமது பிரார்த்தனைகளும், சிறிதும், பெரிதுமான நமது பொருளாதார உதவிகளும், அவர் பூரண நலம் பெற நிரம்பவே உதவும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது !! While on this topic - குடும்பத்துக்கான மருத்துவக் காப்பீட்டின் முக்கியத்துவம் பற்றியும் கொஞ்சம் பேசுவோமா guys ?  இது போன்ற தருணங்களிலேயே அதன் அவசியம் நமக்கு ஸ்பஷ்டமாய் புரிகிறது ! நானே கூட 3 ஆண்டுகளுக்கு முன்பு வரைக்கும் இதற்கென மெனக்கெடாது எருமை போலவே சுற்றித் திரிந்தேன் தான் ! ஆனால் எனக்கு நேர் மாறான எனது தம்பி - இத்தகைய விஷயங்களில் செம முன்ஜாக்கிரதை முத்தண்ணா தான் ! அவனது நச்சரிப்பின் பேரில் medical பாலிசி ஒன்றினை எடுத்து வைத்தேன் !! 'காசுக்குப் பிடித்த கேடு' என்ற நினைப்பு என் தலைக்குள் ஒரு ஓரத்தில் குடிகொண்டிருந்தது என்பதை மறுப்பதற்கில்லை ! ஆனால் 4 மாதங்களுக்கு முன்னே சிறுநீரகக்கல் சிகிச்சைக்காக சென்னையில் போய் படுத்துக் கிடந்த வேளையில் தான் இந்த பாலிசியின் அருமை புரிந்தது ! 'சின்ன procedure தான் ; முந்தின நாள் அட்மிட் ஆனாக்கா மறு நாள் சாயந்திரம் வீட்டுக்குப் போயிடலாம் ; ஒண்ணுமே கிடையாது !!' என்று டாக்டர் சொல்லியிருந்ததைக் கொண்டு - ஏதோ ஒரு முப்பதாயிரம் - முப்பத்தைந்தாயிரம் ரேஞ்சுக்கு பில் போடுவார்களென்ற நினைப்பில் மல்லாந்து கிடந்தேன் ! ஆனால் அட்மிட் ஆகும் போதே " insurance இருக்கா ?" என்று கேட்ட கையோடு ஒரு எஸ்டிமேட்டும் போட்டு நீட்டினார்கள் ! வாங்கிப் பார்த்தால் எனது எதிர்பார்ப்பு + 1 ; அதாவது 1 லட்சம் + முப்பத்தைந்தாயிரம் என்றிருந்தது ! காப்பீட்டின் குஷன் மாத்திரம் இல்லாது போயின் - 'பூமிதிக்க' வந்து தீமிதிக்க வேண்டிப் போன கவுண்டரைப் போல் அன்றைக்கு நானும் "ஐயோ..நெருப்புடோய் !! ஐயோ...பில்லில் ஆறு இலக்கம்டோய் !!" என்று மிரண்டு போயிருப்பேன்  !! வெறும் 3000 ரூபாய் நீங்கலாய், பாக்கித் தொகை முழுசையும் இன்சூரன்ஸ் கம்பெனி நேரடியாய் மருத்துவமனைக்கே செலுத்தி விட - பெருமூச்சொன்றை விட்டபடிக்கே நடையைக் கட்டினேன் ! And இப்போதெல்லாம் காப்பீட்டுப் புதுப்பிப்புக்கு தலைகாட்டும் முகவர்களைப் பார்த்தால் மூக்கில் குத்தத் தோன்றுவதில்லை ; மாறாக 'காபி சாப்பிடறீங்களாண்ணா ? டிபன் சாப்பிடறீங்களாண்ணா ?' என்று குசலம் விசாரிக்கத் தான் தோன்றுகிறது ! 

கதையின் கருத்து : ஏதேதோ ஓட்டங்களில் நில்லாது ஈடுபடுவதே நமக்கு இன்றைக்கு வாழ்க்கை என்றாகிப் போய்விட்டது !! அந்த ஓட்ட மும்மரத்தில் சில அத்தியாவசியங்களின் அவசியங்களை நாம் மறக்க நேரிடுகிறது ! ஆனால் இன்றைக்கு நண்பர் JSK-க்கு புலர்ந்துள்ள சுகவீனத்தையும், இக்கட்டையும் பார்த்திடும் போது தான் பகீரென்று ஒரு நினைவூட்டலாய் அமைகிறது ! Please guys : இயன்ற தொகைக்கொரு குடும்பக் காப்பீட்டுத் திட்டத்தை எத்தனை சீக்கிரமாய் எடுத்திட முடியுமோ - அத்தனை சீக்கிரமாய் எடுத்திடுங்களேன் ? நித்தமும் செலவுகளுக்குப் பஞ்சமே இருக்கப் போவதில்லை தான் ;  இந்தக் காப்பீட்டுப் பிரீமியம் செலுத்தினாலும் சக்கரம் ஏதோவொரு விதத்தில் சுத்தத் தான் போகிறது ; செலுத்தாது போனாலும் வண்டி ஒடத் தான் போகிறது ! சிரமத்தோடு, சிரமமாய் இந்த அத்தியாவசியத்துக்கும் ஒரு வழி செய்து விடுவோமே ?

Bye folks....Have a great Sunday !!