Sunday, August 05, 2018

சந்தோஷம் - ஒரு ஈரோட்டுத் தொடர்கதை !!

நண்பர்களே,

வணக்கம். எங்கிருந்து ஆரம்பிப்பது ? ; எங்கே முடிப்பது ? எதைச் சொல்லுவது ? ; எதைச் சொல்லாதிருப்பது ? ; எதை சிலாகிப்பது ? எதைக் கண்டு வியப்பது ? எதைக் கண்டு திகைப்பது ? என்று சுத்தமாய் புரியா ஒரு மோன நிலையில் மோட்டைப் பார்த்துக் கொண்டே கட்டையைக் கிடத்திக் கிடக்கிறேன் ! தலைக்குள்ளோ ஒரு நூறு ஞாபகங்கள் ; சிரித்த முகங்கள் ; அலையடிக்கும் நினைவுகள் என்று ஆர்ப்பரிப்பது - அலைகடலின் ஓசையாய் எனக்குக் காதில் கேட்காத குறை தான் ! ஒவ்வொரு ஆண்டுமே நமக்கு ஆகஸ்டின் ஈரோட்டுப் புத்தக விழாக்கள் ஒரு சந்தோஷத் திருவிழாவின் அடையாளமாய் மாறிப் போய் ஆண்டுகள் ஐந்துக்கு மேலாகி விட்டன ! நண்பர் ஈரோடு ஸ்டாலினின் முயற்சிகள் 2012-ல் நம்மை ஈரோட்டுக்கு முதன்முறையாக இட்டு வந்திருக்க - தொடர்ந்த விழாக்களில் LMS ரிலீஸ் ; மின்னும் மரணம் அறிவிப்பு ; ஈரோட்டில் இத்தாலி ரிலீஸ் ; இரத்தக் கோட்டை ரிலீஸ் என்று ஏதேதோ கொண்டாட்டங்களை நிஜமாக்கிட  - நமக்கு இந்த மண் ஒரு அதிர்ஷ்ட பூமியாக அமைந்துள்ளது ! And இதோ - நமது காமிக்ஸ் பயணத்தின் ஒரு மறக்கவியலா மைல்கல்லான "இரத்தப் படலம்" முழுவண்ணத்  தொகுப்பின் முதல் பிரதியும் உங்களை சந்தித்துள்ளது இந்த மஞ்சள் மாநகரின் மண்ணில் தான் !! Coincidences ?? No way!!

"இரத்தப் படலம்" ........!! அநேகமாய் "இரும்புக்கை மாயாவி " ; "டெக்ஸ் வில்லர்" என்பதற்கு அப்புறமாய் தமிழ் காமிக்ஸ் உலகினில் அதிகம் உச்சரிக்கப்பட்டிருக்கும் பெயர் இதுவாகத் தானிருக்கும் என்று நினைக்கிறேன் !! இந்த பெயரை உச்சரித்துப் பார்க்கும் போது எனக்குள் எழுந்த முதல் கேள்வி - "என்ன நினைச்சிட்டு இந்தக் கதைக்கு இந்தப் பேர் வைச்சோம் - 32 வருஷங்களுக்கு முன்னாடி ?" என்பதே !!  நாயகனின் நினைவுக் கேந்திரத்தை சூழ்ந்து, படர்ந்து கிடக்கும் குருதியைக் குறிப்பிட்டது போலவுமிருக்கும் ; தன் தேடலில், அவன் போகும் பாதையெல்லாம் தெறிக்கும் அதகளங்களையும், சொட்டும் இரத்தத்தையும் குறிப்பிட்டது போலவுமிருக்கும் என்று இந்த இளம் தொழிலதிப எடிட்டருக்கு அந்நாட்களில் பட்டது !  இந்தத் தொடர் இத்தனை நீளம் காணுமென்றோ ; இத்தனை உயரங்கள் எட்டுமென்றோ அன்றைக்கு சத்தியமாய் யாருக்கும் தெரியாது தான் ; least of all me !!! ஆனாலும் முதல் இதழினில் இருந்ததொரு இனம்புரியா ஈர்ப்பானது - கதையின் ரொம்பவே புதிரான ஓட்டத்தையும் மீறி அப்போதைய அரை டிராயர் வாசகர்களான நம்மை வசீகரித்திருந்தது இன்னமும் நம் யாருக்கும் மறந்திராது ! And ஒரு நீண்ட அவகாசத்துக்குள் 18 பாகங்களும் வெளிவந்தது ; அப்புறமாய் அந்தப் பதினெட்டையும் ஒட்டு மொத்தமாய் கருப்பு-வெள்ளையில் ஒரே புக்காக்கி சிலாகித்தது என்பெதெல்லாமே நம் நண்பர் XIII-ன் cult status-க்கு ஒரு அழியா சான்று ! நமது இரண்டாம் வருகையின் தருணத்தோடு ; Cinebook ஆங்கிலப் பதிப்பினில் XIII தொடரானது  சக்கை போடு போட்டதும் கரம் கோர்க்க - "நீ குட்டிக் கரணம் அடிப்பியோ - குரங்கு பல்டி அடிப்பியோ ; அதெல்லாம் தெரியாது ; ஆனால் XIII மாமாவை கலரிலே போட்டே தீரணும் !!" என்ற கோரிக்கை ஒலிக்கத் துவங்கியது ! மாயாவி மறுபதிப்புகள் : டிக் அடிச்சாச்சு ; "மின்னும் மரணம்" - மெகா டிக் அடிச்சாச்சு ; இரத்தக் கோட்டை - "உள்ளேன் ஐயா" என்றான பின்னே, எஞ்சி நின்ற ஒரே மெகா கோரிக்கையான "XIII ஆடலும்-பாடலும் நிகழ்ச்சி" ஒரு தவிர்க்க இயலா கட்டாயம் என்ற நிலையை எட்டியது ! ஓராண்டின் காமிக்ஸ் பட்ஜெட்டின் பாதித் தொகைக்கு ஈடான தொகையை ஒரு மறுபதிப்புக்கென செலவிடத் தான் வேணுமா ? என்ற தயக்கம் எனக்குள் நிறையவே இருந்தாலும் - பயணப் பெட்டிகளே எஞ்சினை உந்திக் கொண்டு தட தடப்பது போல், ஆளும், பேருமாய்ச் சேர்ந்து நம்மை இந்த பிராஜெக்ட்டினுள் புகுத்தியது சுமார் ஒன்றேகால் ஆண்டுக்கு முன்பாய் ! 

அதே வேகத்தில் முன்பதிவுகளும் துவங்கிட - முதல் ஆறு மாதங்களுக்குள் நமக்கொரு உறுதி கிட்டியது - இது நிச்சயமாய் take-off ஆகிடவிருக்கும் முயற்சியே என்று !! ஏதோவொரு துரதிர்ஷ்ட சம்பவமாய் - மறுபதிப்பு இலக்கை தொட்டுப் பிடிக்க நமக்கு சாத்தியமாகிடாது போயின் அதுவரையிலான முன்பதிவுப் பணங்களைத் திருப்பித் தந்தாக வேண்டுமேயென்ற உறுத்தல் நிறையவே குடியிருக்க - தேங்காயைக் கவ்வித் திரியும் நாய்க்குட்டியைப் போல  "இ.ப."வின் - "மு.ப."வை பத்திரப்படுத்தியே வந்தேன் !

இலக்கை எட்டிட..மெது மெதுவாய்ப் பணிகளும் துவங்கிட.....எனக்குள் ஒரு இனம்புரியா பயம் ! கதை மாஸ் ஹிட்டானதொன்று என்பதில் no secrets ; ஆளாளுக்கு இதனை மனப்பாடம் செய்யாக் குறை தான் என்பதிலும் சந்தேகங்கள் லேது ! So இந்த இதழில் ஏதாவது செய்து  உங்கள் கவனங்களை ஈர்க்க வேண்டுமெனில் - அது இந்த புக்கின் மேக்கிங்கில் நாம்  காட்டிடக்கூடிய தரத்திலும் , பிரமாண்டத்திலும் மாத்திரமே சாத்தியம் என்று தெரிந்தது ! இதழ்களைக் கையில் ஏந்தும் தருணம் உங்களுக்கோர் மறக்கவியலா moment ஆக உருமாறிட வேண்டுமென்ற வேட்கை நாளாசரியாய் ஒரு obsession ஆகவே மாறிப் போனது !! சிக்கும் அவகாசங்களிலெல்லாம், வெவ்வேறு மொழிகளில் XIII ஆல்பங்கள் வெளியிடப்பட்டிருக்கும் விதம் பற்றி ; இங்கே நம்மூரில் பைண்டிங்கில் ; அட்டைப்பட நகாசு வேலைகளில் உட்புகுந்திருக்கும் புது யுக்திகள் பற்றி - என்று எதையேனும் குடைந்து கொண்டே இருக்கத் தான் தோன்றும் !! அதுவும் 3 ஆல்பங்களிலான தொகுப்பு எனும் போது - ஒன்றுக்கு மூன்றாய்ச் சவால்கள் முன்னிற்க - சொதப்பிடும் பட்சத்தில் முதுகில் கட்டப்படும் டின்னின் வீரியமும் மும்மடங்காய் இருக்கக்கூடும் என்ற புரிதல் கடந்த ஆறு மாதங்களாகவே என்னோடு 'வித்தவுட்டில்' சவாரி செய்யும் ஒரு ஓசிப் பயணியாகிப் போனது !! 

இங்கே முழு credit செல்ல வேண்டியது நமது டிசைனர் பொன்னனுக்கே ! "ஒரிஜினல் கவர்கள் ; ஆனால் இயன்ற நகாசு வேலைகளோடு" என்பதே எனது instructions ! துவக்கத்தில் மனுஷன் பின்னணி வர்ணங்களை மாற்றி ; XIII என்ற டிசைனை ஏதேதோ பாணிகளில் போட்டு மாதிரிகளை உருவாக்கிக் கொண்டே இருந்தார் ! ஒவ்வொன்றையும் பார்த்து விட்டு என் முகரை அஷ்டகோணலாக - "சாமி....இது காமிக்ஸ் சித்திர உலகின் ஒரு அசுரரின் படைப்பு ; so அவரது தூரிகையின் effects துளியும் சேதமாகிடப்படாது ; ஆனால் அதையும் மீறி ராப்பரில் ஒரு glitz தெரிந்தாக வேண்டுமென்று" சொல்லி வைத்தேன் ! இந்த 3 ஆல்பங்களின் மூன்று ராப்பர்களுக்கு நாங்கள் வண்ணத்தில் போட்டுப் பார்த்து ; நிராகரித்து ; இதைக் கூட்டி ; அதைக் கழித்து என்று கூத்தடித்த டிஜிட்டல் பிரிண்ட்களின் எண்ணிக்கை ஒரு நூறைத் தொட்டிருக்கும் தாராளமாய் !! நமது ஓவியர் சிகாமணி எழுதித் தந்த "இரத்தப் படலம்" டைப்பையும் "இப்டிக்கா மாத்துங்கோ ; அப்டிக்கா மாத்துங்கோ" என்று நச்சரித்த நாட்களும் அநேகம் ! ஒரு மாதிரியாய் டிசைன்கள் தயார் என்றான பின்னே - அட்டைப்பட special effects-க்கு என்ன செய்யலாமென்று மண்டையில் இல்லாத கேசத்தைப் பிய்க்கும் படலம் துவங்கியது ! Without getting into the techicalities - இம்முறை ராப்பரில் நாம் செய்துள்ள நகாசு வேலைகளுக்கு மாத்திரமே 4 வெவ்வேறு process அவசியப்பட்டுள்ளது !! அவற்றிற்கென ஆட்களைத் தேடிப் பிடிக்கவும் பொன்னன் உதவிட, இந்த அட்டைப்பட அதகளம் சார்ந்த பரபரப்பு ஒருமாதிரியாக எனக்குள் மெது மெதுவாய் அடங்கியது ! ஒழுங்காய் பிரிண்ட் செய்து ; அப்புறமாக ஜிகினா மேட்டர்களை பத்திரமாய்ச்   செய்து முடித்தால் end result நிச்சயம் லயிக்கச் செய்யுமென்ற நம்பிக்கை புலர்ந்தது ! இது ஒருபுறமிருக்க - உட்பக்கங்களை அச்சிட 2 வாரங்கள் நாக்குத் தொங்கிப் போனது !!

ஒருமாதிரியாக சகலத்தையும் முடித்து புக்காக்கிப் பார்த்த போது அதுவரையிலும் என் தோளில் தொற்றித் திரிந்த பயமெனும் வேதாளம் டீ குடிக்கக் கிளம்பிப் போய் விட்டது போல் பட்டது ! ஆனால் கிளம்பியது ஒரு வேதாளமெனில், புதிதாய்க் குடியேறியது இன்னொன்று !! இன்னமும் ஒன்றரை மாதங்கள் உள்ளன ஈரோட்டுக்கும் ; XIII ரிலீஸுக்கும் !! மண்டையை மறைத்தாலும், கொண்டையை மறைக்க மறந்த கதையாகிடக் கூடாதே ; வெளியிடும் தருணம் வரைக்கும் சகலத்தையும் under wraps வைத்திருக்க வேண்டுமே என்ற பய வேதாளம் தானது !  மூடாக்குப் போட்டு, கோஷாப் பெண்ணாய் நம் XIII-ஐ 45 நாட்களுக்கு ஆபீசில் பத்திரப்படுத்தி வைத்திருப்பது சுலபமாகவே இருக்கவில்லை ! பற்றாக்குறைக்கு இந்த பிராஜெக்டில் இலவச இணைப்பான "புலன் விசாரணை" பற்றி நம்மாட்களே உளறி வைத்து விடக்கூடாதே என்ற டரியலும் இன்னொரு பக்கம் !! "போனில் அடிச்சு கேட்டாலும் எதையும் சொல்லிடப்படாது !!" என்று நமது அலுவலகப் பெண்மணிகளுக்கு வாய்ப்பூட்டு போட்டது ஒரு பக்கமெனில், கோவை புத்தக விழாவிற்குச் சென்றிருந்த இராதாகிருஷ்ணன் அண்ணாச்சி & கோ. அங்கே எதையேனும் போட்டுடைத்து விடப்படாதே என்று பதறியதும் எனக்கு மட்டும் தான் தெரியும். Of course - இதனை யூகிப்பது நண்பர்களுக்கோர் கம்பு சுத்தும் பிரயத்தனமல்ல தான் என்றாலும் - நாமே போட்டுடைக்க வேண்டாமே ?!!" என்ற அவா அலையடித்தது !! So ஒரு மாதிரியாய் கண்ணில் எதையுமே காட்டாது, ஈரோட்டுக்கு இதழ்களைக் கொணர்ந்தது வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்கு நெருக்கமானதொரு நேரத்தில் !!

எங்களுக்கு ஈரோடு ஒரு வியாபார நிர்பந்தமுமே ; நண்பர்களை ; புது வாசகர்களை சந்திக்கவும் ஒரு வாய்ப்பே !! So ஈரோட்டின் தேதிகள் நெருங்க நெருங்க எங்களது வண்டி சூடு பிடிப்பதில் வியப்பில்லை !! ஆனால் "வாசக சந்திப்பு" ; "புத்தக ரிலீஸ்" என்ற நடைமுறைகள் காலூன்றத் துவங்கிய காலம் முதலே, எங்கெங்கிருந்தெல்லாமோ சங்கமிக்கும் காமிக்ஸ் பறவைகள்  ஈரோட்டை ஒரு  நவீன வேடந்தாங்கலாய் உருமாற்றி வருவது நமக்கு அளவிலா சந்தோஷத்தை வழங்கி வருகின்றது ! And இம்முறை ஒரு மெகாஆஆ  இதழின் ரிலீஸ் தருணம் என்பதால் நண்பர்களின் உற்சாக மீட்டர்கள் தெறிக்கத் துவங்கியிருந்ததும் புரிந்தது ! அமெரிக்காவிலிருந்து ; பிரான்சிலிருந்து ; ஸ்ரீலங்காவிலிருந்து ; ஹை-டெக் சேந்தம்பட்டியிலிருந்து ; சென்னை ; பெங்களூரு ; கோவை ; திருப்பூர் ; பாண்டி ; கோபி ; குடந்தை ; நெல்லை ; கரூர் ; சேலம் ; திருச்சி ; தாராபுரம் ; நாகர்கோவில் ; காரைக்கால் plus இன்னும் எக்கச்சக்க நகர்களிருந்து நண்பர்கள் தனியாகவும் ; குடும்ப சகிதமாகவும்  படையெடுத்து சனிக்கிழமை காலையே லே ஜார்டின் ஹோட்டலின் அரங்கில் திரளாய்க் குழுமியிருப்பதைக் கண்ட முதல் நொடியில் எனக்குள் தோன்றிய ஒரே எண்ணம் இதுவே !! "தெய்வமே.... எங்கிருந்தெல்லாமோ ; எவ்வளவோ சிரமங்களுக்கு ; பணிகளுக்கு ; பொறுப்புகளுக்கு மத்தியில் இங்கே காமிக்ஸ் காதல் + அன்பெனும் உத்வேகத்தில் ஒன்றிணைந்திருக்கும் இந்த நல்ல மனங்கள் சகலமும் இங்கிருந்து புறப்படும் சமயம் நிறைந்த மனதோடு ;இதே நேசத்தோடு கிளம்பும் வரம் மட்டும் வேண்டுமே !!" என்பதைத் தாண்டி வேறு எதுவும் தோன்றவில்லை ! இரும்புக்கை மாயாவி லூயி கிராண்டேல் மட்டும் அந்த அறைக்குள் அப்போது கால்பதித்திருப்பின், அங்கே விரவிக் கிடந்த மின்சார சூழலில் மனுஷன் அரூபமாகிப் போயிருக்கக்கூடுமென்பேன் - அப்படியொரு crackling air of expectations & happiness !!

ஆளுக்கொரு அடையாள tag இருந்தால் தேவலாம் ; நாம் ஒருவருக்கொருவர் அந்நியமாய்த் தெரியாதிருக்க உதவிடும் என்ற எண்ணத்தில் ஊரிலிருந்தே நிறைய கொண்டு வந்திருக்க - நண்பர்கள் வயது வித்தியாசம் பாராது - பஞ்சுமிட்டாய் வாங்க வரிசையில் கூடிடும் குழந்தைகள் போல் அணிவகுத்தது எனது ஆயுட்கால பொக்கிஷ நினைவுகளில் ஒன்றாகிடுமென்பது உறுதி !! நமது அழைப்பின் பேரில் சிறப்பு விருந்தினராய்க் கலந்து கொண்டிருந்த நமது கருணையானந்தம் அவர்களும், சீனியர் எடிட்டரும் உள்ளே புகுந்திட, அவர்களை அன்போடு சூழ்ந்து கொண்ட நண்பர் அணியை அரங்கின் பின்பகுதியிலிருந்தே ரசிக்க முடிந்தது எனக்கு ! நிச்சயமாய் சனி காலை அந்த அரங்கினை புதிதாய் யாரும் பார்வையிட்டிருந்தால் - அதுவொரு formal புத்தக வெளியீட்டு விழாவாய் காட்சி தந்திருக்க வாய்ப்பே இல்லை என்பேன் ! தம் வீட்டிலொரு விசேஷம் என்பது போல் ஆளாளுக்குப் பர பரத்துக்கு கொண்டிருந்தது ஒரு பக்கமெனில் ; "என் பொண்டாட்டி ஊர்லே இருக்கா....!!" என்ற ஜனகராஜ் உற்சாகத்தோடு நண்பர்கள் மறுக்கா bachelors ஆகிப் போனது போல் இன்னொரு பக்கம் அதகளம் செய்து கொண்டிருந்தார்கள் ! ஒரு மாதிரியாய் நண்பர்களின் வரவுகள் streamline ஆகிட - சீனியரையும் ; கருணையானந்தம் அவர்களையும் மேடைக்கு அழைத்த கையோடு - முதல் இதழை உங்கள் கண்களில் காட்டிடும் ஆர்வத்தின் பலனாய் எழுந்த நமைச்சலைக் கட்டுப்படுத்த இயலவில்லை - அதற்கு மேலாகவும் !! ஏற்கனவே இங்கே நான் வாக்குத் தந்திருந்தது போல முதல் இதழை பெற்றுக் கொள்வது நமது நண்பர் கரூர் ராஜசேகராகத் தானிருக்க வேண்டும் என்ற ஆர்வத்தில், துணைவியாரோடு வந்திருந்தவரை மேடைக்கு அழைத்தேன் !! முதல் இதழை திரு கருணையானந்தம் அவர்கள் வெளியிட - நண்பர் ராஜசேகர் பெற்றுக் கொண்ட நொடியில் என் தோளில் தொற்றித் திரிந்த சில பல வேதாளங்கள் விடை பெற்றதை உணர முடிந்தது !! ஒரு தூரத்து மழைநாளில், ஓய்வின் குடைக்கடியில் அமர்ந்திருக்கும் தருணம் இந்த ஆகஸ்ட் 4 -ம் தேதியை நான் நினைவுகூரும் போது கண்கள் சன்னமாய் வேர்க்காது போகாது  என்பது மட்டும் நிச்சயம் !

தொடர்ந்து முன்பதிவின் பிரதிகள் நண்பர்களுக்கு வழங்கப்பட - எனக்கோ ஒவ்வொரு முகத்திலும் தென்படக்கூடிய முதல் reaction என்னவென்று பார்த்திடும் ஆவல் ஆட்டியெடுத்தது ! அனைவரின் முகங்களிலும் LED பல்பின் பிராகாசம் தெரிய தெரிய - எனக்குள் ஒருவிதமான அமைதி குடி கொள்வது போலுணர்ந்தேன் ! ஏகமாய் எதிர்பார்ப்புகள் ; ஏகமாய் பணிகள் / பொறுப்புகள் என்றெல்லாம் சமீப மாதங்களில் சுமந்து திரிந்தவனுக்கு - அவை சகலமும் ஒற்றை நொடியில் காற்றில் கரைந்து போன போது மனமே நிச்சலனமானது போலிருந்தது ! தொடர்ந்து சீனியர் எடிட்டர் சுருக்கமாய்ப் பேசிட ; அதைத் தொடர்ந்து கருணையானந்தம் அவர்கள் நம் காமிக்ஸ் பயணத்துடனான தனது நினைவுகளை செம சுவாரஸ்யமாகப் பகிர்ந்து கொண்டார் ! ஜூனியரின் திருமணத்துக்கு வருகை தந்திருந்த நண்பர்களுக்கு அவரை ஏற்கனவே தெரிந்திருக்க, இதர நண்பர்களுக்கு இதுவே முதல் பரிச்சயக் களம் !

அவர் பேசி முடிக்க - நண்பர்கள் அவரிடம் கேள்விக்கணைகளைத் தொடுக்கத் துவங்கினர் !! பிடித்த கதை ; பிடிக்காத கதை ; சுலபமான கதை ; சிரமமான கதை ; ஸ்பைடர் ; டெக்ஸ் வில்லர்  ; கிராபிக் நாவல்கள் என்று கேள்விகளின் ரேன்ஜ் எங்கெங்கெல்லாமோ பயணித்தது !! அத்தனைக்கும் அசராது அவரும் பதில் சொல்ல, அரங்கமே சுவாரஸ்ய mode-ல் ஆழ்ந்து போனது. அதற்கு முன்பாய் புலன் விசாரணை இதழின் மொழிபெயர்ப்புக்கு அசாத்திய உழைப்பைத் தந்திருந்த நண்பர்கள் கார்த்திகை பாண்டியன் அவர்களையும், J என்ற ஜனார்த்தனன் அவர்களையும், கணேஷ்குமார் அவர்களையும் பற்றி பேசிய கையோடு - முதலிருவரையும் மேடைக்கு அழைத்து கௌரவப்படுத்தினோம் - அரங்கமே எழுந்து நின்று கரகோஷம் தந்து !! அவர்களுக்கான நமது சிறு சன்மானங்களையும் தந்த பின்னே நண்பர்கள் இருவரும் பேசியது இன்னொரு அழகுத தருணம் !!

ஒருவாறாக அடியேன் வசம் மைக் வந்து சேர, இரத்தப் படலம் சார்ந்த எனது நினைவுகளை கிளறத் துவங்கினேன் ! 32  ஆண்டுகளுக்கு முன்பான துவக்கப் புள்ளி பற்றி ; 10 ஆண்டுக்கு முன்பான black & white தொகுப்பு பற்றியெல்லாம் பேசிய போது ஆட்டோகிராப் சேரனின் சைக்கிள் சவாரியின் சுகம் என்னவென்று புரிந்தது ! XIII-ஐ சிலாகித்தது பற்றாதென்று - நண்பர்களின் XIII சார்ந்த ஞாபகங்களை பரிசோதிக்கும் பொருட்டு நான் ஊரிலிருந்து கொணர்ந்திருந்த கேள்வித் தாள்களை திடுமென்று நீட்ட - அரங்கமே பரீட்சை mode-க்கு மாறிப் போனது !! முன்ஜாக்கிரதையாய் பதில்களையும் ஊரிலிருந்தே கொண்டு வந்திருந்த கெத்தில் நான் பத்திரமாய் அமர்ந்திருக்க, பர பரவென பதிலெழுதும் நண்பர்களின் முகங்கள் தினுசு தினுசாய் போவதை பார்த்திட முடிந்தது !! 5 வாசகர்கள் மட்டுமே நூற்றுக்கு நூறு வாங்கியிருக்க - இப்படியும், அப்படியுமாய் மார்க் வாங்கியிருந்தனர் இதர நண்பர்கள் ! எல்லாமே ஜாலிக்காண்டி தான் என்பதால் அனைவருக்குமே  ஒரு குட்டியான XIII போஸ்ட்கார்ட் தந்த கையோடு விழாவாய் நிறைவு செய்துவிட்டு மதிய உணவுக்கும், போட்டோ எடுக்கும் படலத்துக்கும் துவக்கம் கொடுக்கத் தீர்மானித்தோம் !! 4 மணி நேரத்தை கொண்டு செல்வது எவ்விதமோ ? என்ற பதட்டத்தோடு அரங்கிற்கு வந்தவனுக்கு மணி 2 ஆகிவிட்டதென்பதை நம்பவே முடியவில்லை !! பிரியமானவர்களின் அண்மையில் நேரத்துக்கு றெக்கைகள் முளைத்துவிடும் போலும் என்று நினைத்துக் கொண்டேன் !! விடைபெறும் நண்பர்கள் அத்தனை பேரின் கண்களிலும் ஒரு நிறைவு தென்படுகிறதா ? என்ற தேடலோடு நின்றவனுக்கு, அணிவகுத்த மலர்ந்த முகங்கள் சந்தோஷ விடை தந்திட - சாப்பிடாதுமே வயிறும், மனதும் நிறைந்த உணர்வு !!

இறுதியாய் பந்திப் பக்கம் போன சமயம், அரங்க அமைப்பாளர்களின் பணியாளர்கள் கடைசிப் பந்தியிலுமே பம்பரமாய்ச் சுழன்று கொண்டு பரிமாறியதை பார்க்க சந்தோஷமாகயிருந்தது ! நம் நண்பர்களுள் சிலருமே சாம்பார் வாளிகளையும், அன்னச் சட்டிகளையும் சுமந்து சுழலும் அட்டகாசங்களுக்கும் முறையிருக்கவில்லை ! Phew !!! ஒரு மாதிரியாய் அனைவரும் பசியாறி, விடைபெற்ற போது ஜூனியரும், நானும் மெதுநடை போட்டு ரூமுக்குத் திரும்பினோம் !!கால்களும், கைகளும் ஓய்ந்து போயிருப்பினும், மனதில் நிறைவு வியாபித்துக் கிடந்தது ! கொஞ்சமாய்க் கட்டையைக் கிடத்தியான பின்னே மாலை நான் மட்டும் நம் ஸ்டாலுக்குச் செல்ல, சற்றைக்கெல்லாம் நண்பர்களும் வருகை தர, நமக்கிப்போது வெகு பரிச்சயமாகிப் போய் விட்டுள்ள புத்தக விழாவின் பின்னுள்ள மரத்தடியைக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டோம் ! எப்போதும் போலவே "அடுத்து என்ன ?" "குண்டு புக் ???" ; கி,நா உண்டா இல்லையா ?" மறுபதிப்பு digest உண்டா ? ; வேதாளன் உண்டா ? அடுத்த மெகா பிராஜெக்ட் எது ? டெக்ஸ் டைனமை ஸ்பெஷலில் என்ன ஸ்பெஷல் ? " இளம் டைகர் உண்டா ? " என்ற ரீதியில் கேள்விகள் சிறகடித்தன !! இம்முறை பெவிகால் பெரியசாமி அவதாரமே எடுக்க வேண்டிய நிர்பந்தம் - மறுபடியும் ஒரு பெரும் பட்ஜெட் காமிக்ஸ் ஆண்டை உங்கள் முன்னே வைத்திட வேண்டாமே என்ற ஆதங்கத்தில் ! So தட புட என அறிவிப்பை ஏதும் செய்யாது - 2019 அட்டவணையில் உங்கள் கேள்விகளுக்குப் பதிலிருக்கும் என்று மட்டும் சொல்லி வைத்தேன் !! நண்பர்களுக்கு இதன் பொருட்டு ஏமாற்றம் இருக்கும் என்பதில் ஐயமில்லை ; ஆனால் ஓராண்டின் திட்டமிடலை finetune செய்யும் தருணத்திலிருக்கும் எனக்கு - "இரத்தப் படல" பரபரப்பிலிருந்து விடுபட்டிருக்கும் இந்த நொடியிலேயே அடுத்த மெக் பிராஜெக்ட்டினுள் தொபுக்கடீர் எனக் குதிக்கும் தம் இல்லை என்பதே நிஜம் ! நிதானமாய் கதைகளை பரிசீலனை செய்து, 2019 -ன் அட்டவணையை இறுதி செய்வதே தற்போதைய முதல் priority எனும் போது அதனை செவ்வனே செய்து முடித்த கையோடு, நம் அடுத்த biggie project பக்கமாய்க் கவனத்தைத் திரும்புவேன் guys ! That 's a promise !!
And ஊருக்குத் திரும்பிய முதலே 'தல' வில்லரின் "டைனமைட் ஸ்பெஷல்" பணிகளில் மூழ்கிடும் அவசியமும் உள்ளதால் - லேசாய் முன்ஜாக்கிரதை முனிசாமியாகிப் போனேன் !!

கச்சேரியை முடித்த கையோடு இரவு அறைக்குத் திரும்பிய தருணத்தில் தூக்கம் சுழன்றடித்தது !! கனவில் வில்லரோடு அரிஸோனாவில் பயணிப்பது போலவும், XIII சகிதம் கோஸ்டா நெக்ராவில் பயணிப்பது போலவும்  கனவுகள் ஆர்ப்பரித்தன !! திடீரென்று நாமெல்லோரும் இத்தாலியில் 'தல'யின் 75 வது பிறந்தநாளைக் கொண்டாடுவது போலொரு கனவும் எங்கிருந்தோ எட்டிப் பார்க்க - அடித்துப் பிடித்து எழுந்தேன் !!  பார்த்தால் ஞாயிறு காலை புலர்ந்திருப்பதைக் குருவிகளும், காக்கைகளும் அறிவித்துக் கொண்டிருந்தன ! எனது அறையின் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தால் ஈரோட்டுப் புத்தக விழா அரங்கு அமைதியில் துயின்று கொண்டிருந்தது தெரிந்தது  !! ஒரு பயணத்தின் பல சந்தோஷதருணங்களை நமக்கு நல்கித் தந்துள்ள அந்தப் புத்தகப் பூங்காவை லயித்துப் பார்த்துக் கொண்டேயிருந்த போது மனதுக்குள் எண்ணற்ற புதுப் புதுக் கனவுகள் சிறகு முளைப்பது போலுணர்ந்தேன் !!   ஒரு கனவின் முற்றுப் புள்ளியில் இன்னொரு புதுக் கனவு துளிர் விடுவது இயல்பு தானோ ?!!!! 

Bye all ! See you around !!! And thank you from the bottom of our hearts !!  😀








































Sunday, July 29, 2018

விடைகளோடே வினாக்கள் !!

நண்பர்களே,

வணக்கம். மாதங்களாய் நமது இதர தொழில்கள் செம மொக்கை போட்டு வர, அதனில் ஈயோட்டும் வேளைகளில் கிடைத்த அவகாசங்களின் புண்ணியத்தில் காமிக்ஸ் பணிகளைக் கொஞ்சம் லாத்தலாய் செய்து முடிக்க முடிந்தது ! ஆனால் அதிசயத்தில் அதிசயமாய் – ஆடி மாதத்தில் மற்ற பணிகளும் லேசாய்ச் சுறுசுறுப்பாகிட; இரத்தப் படல ரிலீசும் நெருங்கிட, ஆந்தை விழிகள் – கோட்டானின் விழிகளாகிடாத குறை தான்! பயணம்… அப்புறமாய் இன்னும் கொஞ்சம் பயணம்… என்ற கூத்துக்கு மத்தியில் நமது காமிக்ஸ் திட்டமிடல்களுக்கு நேரம் ஒதுக்கத் திண்டாட்டமோ திண்டாட்டம் தான் ! ஆனால் இருக்கவே இருக்கிறதே – ரயில் நிலையங்களிலும்; விமான நிலையங்களிலும் ‘தேவுடா‘ காக்கும் தருணங்கள்!! ஆங்காங்கே காத்துக் கிடக்கும் சமயங்களில் தலைக்குள் நர்த்தனமாடி வந்தது முழுக்கவே ஈரோட்டுப் புத்தக விழாவுக்கான சிந்தனைகளும், 2019-ன் அட்டவணை பற்றிய இங்க்கி-பிங்க்கி-பாங்க்கிகளும் தான்! 

கையில் ஒரு கோடு போட்ட நோட்… விரல்களில் ஒரு பேனா… வதனத்திலோ தாமஸ் ஆல்வா எடிசனுக்கே சவால் விடும் “ரோசனை” ரேகைகள்! எதையாவது பரபரவென எழுத வேண்டியது ; ஈயென்று முகம் முழுக்க மறுகணம் ஒரு புன்னகை நிழலாட வேண்டியது ; பேப்பரையே உற்றுப் பார்க்கும் மூன்றாவது நிமிடத்தில் உச்சா போகாத உராங்குட்டான் போல முகம் இறுக்கமாக – பரபரவென எழுதியதை – சரசரவென அடித்து வைப்பது ; அப்புறம் அதையே முறைத்துப் பார்ப்பது - என்று சிக்கிய காத்திருப்புகளையெல்லாம் சமீப நாட்களில் நான் செலவிட்டு வந்துள்ள விதம் இதுவே !! தூரத்திலிருந்து பார்க்கும் போது – ஏதோ ரிலையன்ஸ் குழுமத்தின் வரவு-செலவு கணக்குப் போடும் அம்பானி ரேஞ்சுக்குத் தோன்றியிருக்கும் ; ஆனால் இங்கே அமர்ந்திருப்பதோ “ரின்டின் கேன் உள்ளேயா ?”; “கமான்சே வெளியேவோ?” என்ற குழப்பத்திலிருக்கும் பேமானி மாத்திரமே என்பது எனக்குத் தானே தெரியும் ?! ஆண்டுக்கொருமுறை தொடரும் இந்த routine ; ஆண்டுக்கொருமுறை அதையே சொல்லி வைத்து உங்களை பிளேடு போடுவதுமே அந்த routine-ன் ஒரு அங்கமாகிப் போய் விட்டது ! 

கார்ட்டூன் சந்தாக்கள்; அப்புறம் ஆக்ஷன் ஜானர்கள் பற்றிய உங்களது எண்ணங்களைத் தெரிந்து கொண்ட பிற்பாடு – காத்துக் கிடப்பதோ நம் ஜீவிதத்துக்கு ஆதாரமாயிருக்கும் Black & White சந்தா பற்றிய அலசல் தானே ? இன்னும் சரியாகச் சொல்வதானால் – ‘டெக்ஸ் சந்தா‘ பற்றி! 

A word of caution : “ச்சை… மஞ்சள் சட்டை போட்ட தொப்பிக்கார்களையே எனக்குப் புடிக்காது” என்று பழிப்புப் காட்டும் ஸ்மர்ஃபாகவோ ; "இத்தாலிக்கார் ஓவரோ-ஓவர்டோஸ்” என்று கருதும் அணியினராகவோ நீங்களிருப்பின் – நேராக இந்தப் பதிவின் வால்பகுதியில் உள்ள ஈரோடு updates-க்குள் புகுந்திடல் நலமென்பேன்! வீணாய் உங்களது எரிச்சல்களை சம்பாதித்த புண்ணியத்தைக் கட்டிக் கொள்ள வேண்டாமே ! என்ற ஆசையில் எழுந்திடும் வேண்டுகோள் தான் இது!

ஆண்டுக்கு மூன்றோ – நான்கோ டெக்ஸ் கதைகளே என்ற வேகத்தில் ஆண்டாண்டு காலமாய் வண்டி ஓடிக் கொண்டிருக்க – நமது இரண்டாம் வருகைக்குப் பின்பாக “More of டெக்ஸ் ப்ளீஸ்!!” என்ற வேண்டுகோள் உரக்க ஒலிக்கத் துவங்கியது நாம் அறிந்ததே! இதுவரையிலும் வேறு எந்த நாயகருக்குமே இது போலொரு பிரத்யேகத் தடம் பற்றி நாம் யோசித்தது கூடக் கிடையாதென்பதால் எனக்குள் உங்கள் கோரிக்கை பெரியதொரு தாக்கத்தை ஆரம்பத்தில் ஏற்படுத்தவில்லை என்பது தான் நிஜம்! ஆனால் நாட்களின் ஓட்டத்தோடு உங்களது கோரஸும் வலுத்த போது என்னால் தொடர்ந்து பிள்ளையாராய் மௌனம் சாதித்திட இயலவில்லை! ஏகப்பட்ட தயக்கத்துக்குப் பிற்பாடே “சந்தா டெக்ஸ்”-க்கு தலையசைத்தேன்! தொடர்ந்தது என்னவென்பதை நான் சொல்லவும் வேண்டுமா – என்ன ?!

பட்டாசாய் பொரிந்த “சட்டத்துக்கொரு சவக்குழி” ஆரம்பித்து வைத்த ஊர்வலம் சீக்கிரமே பேரணியாகியதைப் பார்த்த போது வாத்து மடையன் போலத் தான் உணர்ந்தேன் நான்! “இந்த மாதிரியானதொரு பந்தயக் குதிரையை களத்தில் இறக்கி விடாமல் மடியில் கட்டித் திரிந்தாயாக்கும் – இத்தனை காலமாய்?” என்று எனக்குள்ளிருந்த ஜீனியஸ் ஸ்மர்ஃப் விரலை ஆட்டி, ஆட்டித் திட்டித் தீர்த்தது! சிங்கிள் ஆல்பங்களோ; டபுள்களோ; Black & வைட்டோ; வண்ணமோ; சின்ன சைஸோ; மெகா சைஸோ – எல்லா பாணிகளிலுமே  நமது டெக்சாஸ்கார் (ம.ப. சார் அல்ல!!) அதகளம் செய்வதைத் தொடர்ந்த மாதங்களும், ஆண்டுகளும் எனக்குக் காட்டியுள்ளன ! புத்தக விழாக்களிலும் சரி, ஆன்லைன் விற்பனைகளிலும் சரி, மறுபதிப்புகள் தூள் கிளப்பி வந்தது “டெக்ஸ் சந்தா” துவக்கம் காண்பதற்கு ஓராண்டு முன்பான தருணம் என்றொரு ஞாபகம் எனக்கு! சிறுகச் சிறுக – இரவுக் கழுகாரும், வெள்ளி முடியாரும், சின்னக் கழுகாரும், மாதம்தோறும் நம் இல்லங்கள் தேடி வரும் routine பரிச்சயமாகிப் போக, பிரிட்டிஷ்கார்கள் பின்சீட்டுக்குச் செல்லும் சம்பவம் நிகழத் துவங்கியது.

இது நிச்சயமாய் மறுபதிப்புகளை மட்டம் தட்டும் முயற்சியே அல்ல ; கடந்த 3+ ஆண்டுகளாய் நாமிங்கே பணியாளர்களுக்குப் பொரிகடலைக்குப் பதிலாய் சம்பளமென்று ஒன்றைத் தந்திட முடிந்துள்ளதெனில் – அது முழுக்க முழுக்க மும்மூர்த்திகளின் விற்பனைகளின் புண்ணியத்திலேயே ! ஆயுசுக்கும் இந்த Fleetway நால்வருக்கும் நாம் ஒரு அசாத்திய நன்றிக்கடன் பட்டிருப்போமென்பது நிச்சயம் ! ஆனால் இன்றைக்கு அந்த trend தானாய்ப் பின்வாங்குவது கண்ணில் படுகிறது – டெக்ஸின் மவுசு கூடிடும் யதார்த்தத்தோடு! கிட்டத்தட்ட தினம்தோறும் ஒரு குறைந்த பட்ச எண்ணிக்கையிலான மறுபதிப்புகள் ஆன்லைனில் விற்பனையாகிடுவதுண்டு – ஆறு மாதங்கள் முன்பு வரையிலும்! ஆனால் இப்போதோ நிலவரம் தலைகீழ்! மாதத்தில் யாராவது ஒருத்தரோ, இருவரோ மும்மூர்த்திகளை நாடினாலே அது நமது யோக தினமென்று எடுத்துக் கொள்கிறோம்! Of course – மறுபதிப்புகள் எல்லாமே கிட்டத்தட்ட காலியாகும் நிலைக்கு அருகிலுள்ளன என்பதால் இந்தக் குப்புறப் பாயும் விற்பனைப் போக்கை எண்ணி ரொம்பவும் தூக்கத்தைத் தொலைக்க அவசியப்படவில்லை! அதே வேளையில் கார்ட்டூன்களும், டெக்ஸும், அந்தப் பள்ளத்தை ரொப்பி உதவிடுவதால் – ஆபீஸில் லாந்தர் விளக்குகளைத் தேடிடாது – கரெண்ட் பில்களுக்குப் பணம் கட்டும் அளவுக்குத் தேறி விடுகிறோம்! So – இந்தப் பின்னணியில் நான் முன்வைக்கப் போகும் கேள்விகளானவை செம குடாக்குத்தனமானதாய் காட்சி தருமென்பது எனக்கே புரிகிறது! But – ஒவ்வொரு ஆண்டுமே உங்களது நாடிகளை லேட்டஸ்டாய் ஒரு தபா பிடித்துப் பார்ப்பது உத்தமமென்று – உள்ளே குடியிருக்கும் டாக்டர் ஸ்மர்ஃப் சொல்வதால் இதோ எனது கேள்விகள்!

Once again -  “ஓவர்டோஸ்” அணியினர் மன்னிச்சூ… இந்தக் கேள்விக்கு நீங்கள் பதில் பதிவிடத் தேவை இராது!

1. ஆண்டொன்றுக்கு டெக்ஸுக்கென ஒதுக்கும் ஸ்லாட்களின் நம்பருக்கு எது கச்சிதமென்பீர்கள்? (சந்தாப் பிரிவின் தற்போதைய maximum எண்ணிக்கையே தலா 9 இதழ்கள் தான் என்பதை மறந்திட வேண்டாமே ?!)

     6          8          9


2. ஆண்டொன்றுக்கு சிங்கிள் TEX ஆல்பங்கள் எத்தனை? டபுள் TEX ஆல்பங்கள் எத்தனை ?

3. மெ-கா-ாா- சாகஸங்களாய் மஞ்சள் சட்டைக்காரர் இதுவரையிலும் தலைகாட்டியுள்ள (ட்ரிபிள்) ஆல்பங்கள் – அதாவது - 330 பக்கக் கதைகள் பற்றிய உங்களது அபிப்பிராயங்கள் ப்ளீஸ்?


4. கதைத் தேர்வில் நேரும் பிழைகளுக்குப் பொறுப்பு என்னதே! But still – கடந்த 3 ஆண்டுகளில் வெளிவந்துள்ள டெக்ஸ் சாகஸங்களுள் "ஹிட் – சொதப்பல் ratio" என்னவென்பீர்கள்?

    80% - 20%       70% - 30%       60% - 40%


5. Looking ahead – இந்த “நடுக்கூடத்தில் நாலு சாத்து; முன்வாசலில் மூணு குத்து!” என்ற அதிரடி பாணி நமக்குச் சலித்திடக் கூடுமென்பீர்களா? அல்லது – சில சமாச்சாரங்கள் சலிப்புகளுக்கு அப்பாற்பட்டவைகளா?

6. TEX கலர் மறுபதிப்புகள்: இவை மெய்யாலுமே மறுவாசிப்புக்கும்; ரசனைகளுக்கும் நியாயம் செய்கின்றனவா folks? அல்லது இவை சேகரிப்புகளுக்கு மாத்திரமேவா?


பந்தியில் முக்காலே மூணு வீசம் இடத்தை ரேஞ்சர் அணி ஆக்ரமித்துக் கொள்ளும் போது - எஞ்சியிருக்கும் போனெல்லி b&w நாயக / நாயகியரைப் பற்றிக் கேட்க சொற்பமான வினாக்களே எஞ்சியிருக்கின்றன :

7. மர்ம மனிதன் மார்ட்டின் : சந்தேகமின்றி இவரொரு தனிப்பட்ட லெவலில் உலாற்றும் நாயகரே !! எந்தவொரு மாமூலான template -களுக்குள்ளேயும் இவரது கதைகளை அடைக்க முடியாதென்பது திண்ணம் ! சமீபத்தைய "மெல்லத் திறந்தது கதவு" ஏற்படுத்திய தாக்கங்களின் இரு பரிமாணங்களையும் கருத்தில் நிறுத்தி தீர்ப்புச் சொல்வதாயின் - ஆண்டுக்கு ஒரு ஸ்லாட் என்பது ஓ.கே.என்பீர்களா guys ? 

8. C.I.D ராபின் சார்ந்தும் அதே கேள்வியே !! "அக்மார்க் டிடெக்டிவ்" என்ற அடையாளத்தைச் சுமந்து நிற்கும் இவருக்கு - ஆண்டுக்கொரு வாய்ப்பு என்பது பொருத்தமா ? சொல்லுங்களேன் ப்ளீஸ் ?

9. அப்புறம் கல்தா கண்டுள்ளவர்கள் மூவர் :

மேஜிக் விண்ட்
டைலன் டாக்
ஜூலியா 

இவர்களுள் யாரேனும் ஒருவர் மறுவருகைக்கு அருகதையுள்ளவர்களெனில் யாருக்கு வோட்டுப் போடுவீர்கள் ? யாருக்கு வேட்டு வைப்பீர்கள் ? Curious to know .....!!
ஆக that winds up my questions about சந்தா : கருப்பு & வெள்ளை ! நிதானமாய் பதில்கள் ப்ளீஸ் ? 

புறப்படும் முன்பாய் ஈரோடு புத்தக விழா & "இரத்தப் படலம்" ரிலீஸ் சார்ந்த updates :

1 . ஈரோட்டில் நமது ஸ்டால் நம்பர் 58 ....! ஆகஸ்ட் 4 துவங்கி, ஆகஸ்ட் 15 வரை புத்தக விழா V.O.C பூங்காவில் நடைபெறுகிறது !! As always - we would love to see you there !!

2 . ஆகஸ்ட் 4 (சனிக்கிழமை) காலையில் "இரத்தப் படலம்" ரிலீஸ் & வாசக சந்திப்பு என்ற agenda விற்கு உங்கள் ஒவ்வொருவரையும் ஆவலோடு எதிர்நோக்கிக் காத்திருப்போம் ! தங்களது முன்பதிவுப் பிரதிகளை ஈரோட்டில் பெற்றுக் கொள்ள விரும்பும் நண்பர்கள், தயை கூர்ந்து ஒரு மின்னஞ்சலைத் தட்டி விடக் கோருகிறேன் !! Most important please !!

3 .அரங்கில் ஏற்பாடு ; ரவுண்ட் பன்; சதுர பன் கொள்முதல் ; மதிய போஜன ஏற்பாடு என்பனவற்றையெல்லாம் பிசகின்றிச் செய்திட, வருகை தர உத்தேசித்திருக்கும் நண்பர்களின் எண்ணிக்கை தெரிந்தால் மிகுந்த உதவியாய் இருக்கும் ! முதல் வருடம் மதிய உணவின் போது நேர்ந்தது போலான தாமதங்கள் இனியொருமுறை வேண்டாமே என்பதால் முன்கூட்டியே உணவுக்கான திட்டமிடலை சரிவரச் செய்திட  விழைகிறோம் ! சிரமம் பாராது "உள்ளேன் நைனா !" என்று கைதூக்கி விட்டால் சிக்கல் தீர்ந்திடுமே ?!!

மீண்டும் சந்திப்போம் all !! Enjoy the Sunday !! Bye now !!

Tuesday, July 24, 2018

வாராதோ வாரயிறுதிகள் ?!

நண்பர்களே,

வணக்கம். நித்தமும் ஒரு வாரயிறுதியாய் இருந்திடக் கூடாதா ? என்ற ஏக்கம் எழுகிறது ! அட...பெர்முடாக்களைப் போட்டுக் கொண்டு வீட்டில் ஹாயாகத் திரியவொரு முகாந்திரம் என்பதற்காகவோ ; ஒரு  full கட்டு கட்டி, தொந்தியை ரொப்பிக் கொண்டு ஏகாந்தமாய் ஏப்பம் விடும் மதிய நேரத்து ரம்யங்களுக்காகவோ இந்த ஏக்கப் பெருமூச்சல்ல ! மாறாய் - மக்கள் குஷாலாய் வெளியே outing  புறப்பட ஒரு தருணமாகவும், அந்த வேளையினில் ஒரு புத்தக விழா எதிர்ப்பட்டால் அவர்களது வாங்கும் ஆர்வங்கள் விஸ்வரூபமெடுப்பதும் -  வாரயிறுதிகளெனும் அந்த 2 நாட்களின் மகிமையால் எனும் காரணத்திற்காகவே வாரஇறுதிகளை காதலிக்கத் தோன்றுகிறது !! தற்போது கோவையில் நடந்து வரும் புத்தக விழாவின் கதையும் இந்த "வாரயிறுதி magic " சார்ந்ததே ! 

வெள்ளிக்கிழமை துவங்கிய விழாவின் முதல் நாள் சுமாரான விற்பனை தான் ; ஆனால் தொடர்ந்த அடுத்த 2 நாட்களும் அழகான அனுபவங்களே !! Of course - சென்னையின் ஒரு மிதமான விற்பனை நாளின் நம்பர்களுக்கு அருகே கூட, இதர நகரங்களின் peak sales நெருங்கிடாது தான் ; ஆனால் அமாவாசைகள் நித்தமும் வருவதில்லை அல்லவா ? சனி & ஞாயிறு இரு நாட்களுமே பரபர விற்பனை ! இரு தினங்களுமே ஆஜராகி, கடல்யாழ் விற்பனைக்கு ஆனதையெல்லாம் முயற்சிக்க, நமது கவிஞர் ஸ்டீலோ  - ஞாயிறுக்கு ஒரு பாலு மஹேந்திரா அவதாரெடுத்து ஒளி  ஓவியக் கலைஞராக உருமாறி, சும்மா மடக்கி மடக்கி போட்டோக்களை எடுத்துத் தள்ளிக்கொண்டிருந்ததை 5000 மைல்களுக்கு அப்பாலிருந்தே வாட்சப்பின் புண்ணியத்தில் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது !! அங்கே கோவையில் நிலவும் சூழலை நொடிக்கு நொடி எனக்கு update செய்து வந்தார் நம் மின்னல் மனிதர் !

ரம்யா ஸ்டாலில் செய்யும் ஒத்தாசைகள் பற்றாதென, அவரது தந்தையோ - தொலைவிலிருக்கும் வங்கியில் பணம் செலுத்தக் கிளம்பிய நமது அண்ணாச்சியை தன்னோடு அழைத்துக் கொண்டு சென்று,வேலையை முடித்த கையோடு மறுபடியும் ஸ்டாலில்  கொணர்ந்து இறக்கி விட்டுள்ளார் ! இன்னொரு பக்கம் கவிஞரோ - சிவகாசியிலிருந்து அனுப்பப்பட்ட பண்டல்களை தன் பொறுப்பில் டெலிவரி எடுத்து வந்து ஸ்டாலில் ஒப்படைக்கிறார் - அதற்கான பணத்தைக் கூடப் பெற்றுக் கொள்ளாது !! And கோவையில் புத்தக விழா நடைபெறும் இடமானது ஊருக்கு வெளியே guys !! ஒவ்வொருமுறையும் நிறைய மெனெக்கெடாது நமக்கு உதவிடல் சாத்தியமே ஆகாது !! ஆனால் சகலத்தையும் தம் கடமைகளாய் பாவித்து நண்பர்கள் செய்திடும் உதவிகளுக்கு என்ன மாதிரியாய் நாம் நன்றி சொல்லப் போகிறோமோ - தெரியலை !! Thank you guys !!! Simply Awesome stuff !!

நேரம் கிட்டும் போது மேற்கொண்டும் போட்டோக்களை இங்கே பதிவிடுகிறேன் !! Bye for now !!

























Saturday, July 21, 2018

தொடரும் "உள்ளே-வெளியே" படலம் !!

நண்பர்களே,

வணக்கம். ஒரு Disclaimer : துவக்கத்திலேயே சொல்லி விடுகிறேனே - இதுவொரு உரத்த சிந்தனையின் தொகுப்பென்பதை !!  "தேமேன்னு போய்க்கினு இருந்த என்னைப் பாத்து நீ ஜிலோன்னு கருத்துக் கேட்டே ; நானும் படா ரோசனைலாம் பண்ணி மெனெக்கெட்டு சொன்னேன் ; ஆனாக்கா நீ அதை நடைமுறைப்படுத்தலை  ; இது முறையா நைனா ?!" என்ற விசனப் படலங்கள் எழக்கூடாதல்லவா ? உங்கள் அபிப்பிராயங்களே எனது தீர்மானங்களின் அஸ்திவாரம் என்பதில் துளியும் ஐயம் கிடையாது  ; so நிச்சயமாய் ஒவ்வொரு புள்ளியிலும் உங்களின் எண்ணங்களை அறிந்து கொள்ள ஆர்வமாய் இருப்பேன் ! ஆனால் ரசனைகளின் மாற்றங்களுக்கேற்ப, நீங்கள் முன்வைக்கும் சிந்தனைச் சிதறல்களும் வேறுபடுவது இயல்பே ! அந்தச் சூழலில் அனைவரது அவாக்களையும் ஒருசேர நிறைவேற்றிடுவது நட்வாக் காரியம் என்பதால் இந்த முன்ஜாக்கிரதை ! தவிர, சில நேரங்களில் இங்குள்ள நம் பொதுவான கருத்துக்களும், விற்பனைகளின் பின்னணிகளை முரண்படுவதுண்டு ! For instance - இங்கே நமது நீலப் பொடியர்கள் மித வரவேற்பு கொண்டிருப்பின், புத்தக விழாக்களில் 'ரொம்பவே தேவலாம்' என்பது மாதிரியான response பெற்றிருக்கிறார்கள் ! So எனது தீர்மானங்கள் - உங்கள் அவாக்களுக்கும், விற்பனைகளின் புள்ளிவிபரங்களுக்கும் மத்தியில் ஒரு பொதுவான சமதளத்தை நாடிடும் அவசியம் கொண்டிருக்கும் ! இவையெல்லாமே நீங்கள் அறியா சமாச்சாரங்கள் இல்லையென்றாலும் - இதற்கு முந்தைய ஆண்டுகளில், தேர்வுகள் சார்ந்த அலசல்களில் சிற்சிறு  நெருடல்கள் தலைதூக்கியது நினைவுள்ளது ! So முன்கூட்டியே உங்கள் புரிதலுக்குக் கைகூப்புகிறேன் !! ஜெய் முன்ஜாக்கிரதை முன்சாமி ! So here goes !

வருடாந்திர ‘உள்ளே-வெளியே‘ விளையாட்டை கார்ட்டூன் ஜானரோடு கனகச்சிதமாய்த் துவக்கி விட்டுள்ள நிலையில் – பார்வைகளை இனி மையமான ”ஆக்ஷன் ஜானர்” பக்கமாய்த் திருப்புவது தானே முறையாகிடும் ?! As always – காத்திருக்கும் ஆண்டுமே ஆக்ஷன் கதைகளுக்கு முக்கியத்துவம் நிறையவே தந்திடும் தான் ! And – இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் நடப்பைப் போலவே இங்கேயும்  முக்கால்வாசி இடங்களை கேள்விகளின்றி தமதாக்கிக் கொள்கிறார்கள் - நாயகர்கள் சிலர் ! So எஞ்சியிருக்கும் இடங்களுக்கான விளிம்புநிலை ஆட்டக்காரர்களின் தலையெழுத்தை (நம்மளவில்) நிர்ணயம் செய்திடும் பொறுப்பு மட்டும் தேர்வாளர்களான நம்  கைகளில் இருந்திடும்!

ஆரம்பமே ஒரு “இல்லை ஐயா !” தான் – நமது கோடீஸ்வரர் லார்கோவின் புண்ணியத்தில் ! 2012-ல் (or 2013ல்??) ஜாலியாய் அமர்ந்தபடிக்குப் புன்னகையோடு – “என் பெயர் லார்கோ” என்றபடிக்கே சுய அறிமுகம் செய்து கொண்ட இந்த நாயகர் தொடர்ந்துள்ள ஒவ்வொரு ஆண்டுமே, நமது ஆக்ஷன் அட்டவணையின் முதுகெலும்பாய் இருந்து வந்துள்ளார் ! ஆனால் இவரில்லாததொரு புத்தாண்டே நமக்குக் காத்துள்ளது – simply becos இவரது தொடரின் சகல ஆல்பங்களையும் நாம் வெளியிட்டு முடித்து விட்டோம் ! புதியதொரு 2 பாக ஆல்பத்தின் முதல் அத்தியாயம் பிரெஞ்சில் அக்டோபர் 2017-ல் வெளி வந்திருக்க, அதன் க்ளைமேக்ஸ் இந்தாண்டின் இறுதியில் வெளிவந்திடலாம் ! So அது தயாராகாத வரையிலுமே நமக்கு சரக்கு லேது – புதுசாய் லார்கோ தோசைகள் வார்த்திட ! இந்த not so happy சேதியோடு இதர நாயகர்கள் பக்கமாய் கவனத்தைத் திருப்புவோமா?

ஆரம்பத்தில் மெதுமெதுவாய் response இருப்பினும், போகப் போக கதைகளின் ஆழங்களால் நம்மைக் கட்டுண்டு போகச் செய்த மனுஷன் – ஆரிசியாவின் ஆத்துக்காரர் தோர்கல் ! "Fantasy-யா ?? இது குழந்தைப்புள்ளைகளுக்குத் தான் சுகப்படுமோ ?" என்று நம்மிடையே ஒரு லேசான தயக்கம் துவக்கத்தில் நிலவியதென்னவோ நிஜம் தான் ; ஆனால் கடந்த 2 ஆண்டுகளின் வெளியீடுகள் சகலமும் டாப் கியரைத் தொட்டிருக்க – இந்த ஆணழகர் இன்றைக்கு நமது ஆட்டோமேட்டிக் தேர்வுகளுள் ஒன்றாகிறார் ! அதிலும் நடப்பாண்டின் துவக்க ஆல்பமான “கடவுளரின் தேசம்” ஒரு மறக்க இயலா saga என்பதில் ஐயமில்லை என்பதால் – இவரைக் கொண்டு மறுக்கா ‘உள்ளே வெளியே‘ கூத்தடிக்க அவசியமில்லை என்ற நம்பிக்கை பலமாயுள்ளது  ! So என் சார்பாய் ; உங்கள் சார்பாய் - வைக்கிங் சார்வாளுக்கு ஒரு ‘டிக்‘ போட்டு விடலாமா ?

அதே வேகத்தோடு நமது நரைமுடி நாயகர் பக்கமாய்த் திருப்பினால் – அவரது தொடரில் ஒரேயொரு ஆல்பம் எஞ்சி நிற்பது தெரிகிறது! வேய்ன் ஷெல்டன் தொடரிலுமே பரபரவென புதுக்கதைகள் உருவாகிடா பட்சத்தில் –சமீப வருடங்களில்  நமது அட்டவணைகளில் ஒரு permanent fixture ஆக இடம்பிடித்து வரும் இந்த சாகஸக்காரர், தொடரும் காலங்களில் missing ஆகிடக் கூடும் ! லார்கோ அளவிற்கு இவரது ஆல்பங்களில் ஆழம் நஹி என்பது எனது அபிப்பிராயம். அதே சமயம், இது நிச்சயமாய் ஒரு மாமூல் தொடருமல்ல என்பதும் உறுதியே ! விற்பனைக் கோணங்களில் மனுஷன் பெரிதாய் வூடு கட்டி அடிக்காது போனாலும், ‘முதலுக்கு மோசமில்லை‘ என்ற ரீதியில் safe ஆனதொரு ஹீரோவே ! And இதுவரையிலான இவரது ஆல்பங்களுள் எதுவுமே ‘செம மொக்கை‘ என்ற மாதிரியான அர்ச்சனைகளைப் பெற்றிருக்கவில்லை எனும் போது – எஞ்சி நிற்கும் ஒற்றை (புது) சாகஸத்தையும் களமிறக்குவதில் நிச்சயமாய் நமக்கு ஆட்சேபனைகள் இராதென்று நான் எடுத்துக் கொள்ளலாமா ?

Moving on, ‘ஒற்றை ஸ்லாட்டுக்கு மோசமில்லை!‘ என்ற உத்தரவாதமளிக்கும் இன்னொரு மனுஷர் தனது டிரேட் மார்க் புன்னகையோடு எதிர்கொண்டு நிற்பது தெரிகிறது! அறிமுகமான 1986 முதலாய் இதுவரையிலும், நாம் இவரை அசாத்தியமாய் சிலாகித்ததுமில்லை ; சாத்தியெடுத்ததுமில்லை தான் ! 'பரபர'வென துவங்கும் கதையை கடைசி 2 பக்கங்கள் வரையிலும் கொதிநிலையிலேயே பயணிக்கச் செய்து, அந்த க்ளைமேக்ஸ் பக்கங்களில் ஒட்டுமொத்தப் புதிரையும் ‘பொடேரென‘ முடிச்சவிழ்க்கும் லாவகம் ‘ரிப்போர்ட்டர் ஜானி‘யின் படைப்பாளிகளுக்கே உரித்தான கெத்து ! அந்தப் பரபரப்பை வண்ணத்தில் ஆண்டுக்கொரு முறை ரசிப்பதை இதுவரையிலும் ஒரு மாறா வழக்கமாகக் கொண்டிருக்கிறோம் – நமது மறுவருகையினில்! So அந்த routine-ஐ இம்முறையும் தொடரலாம் தானே folks ?! அதே போல ஜானியின் புது பாணி பிரெஞ்சில் வேகமெடுத்து வருகிறது – மூன்றாவது ஆல்பமும் வெற்றி கண்டுள்ள நிலையில்! ஜானியோடு பயணம் ஓ.கே.யெனில் புது பாணியா ? பழசா ? உங்கள் எண்ணங்கள் என்னவாக இருக்குமோ ?

Next in line.....“ஆண்டுக்கு ஒரு முறையே” என்ற ஃபார்முலா இவருக்குமே பொருந்தும் தான் - சின்னதொரு வித்தியாசத்தோடு ! ஆண்டுக்கு ஒரு முறையே தலைகாட்டினார் என்றாலும், மூன்றோ-நான்கோ கதைகளோடு பட்டாசு வெடிக்கும் மௌனப் புயல் இவர் ! 2017-ல் அறிமுகமாகி – 2018-ல் தொடர்கதையாகி நம்மோடு உலவி வரும் ட்யுராங்கோவுமே ஒரு சந்தேகமிலாத் தேர்வென நாம் கருதிடலாமா நண்பர்களே ? “சத்தமின்றி யுத்தம் செய்” பெற்றது 95 மார்க்குகளெனில், நடப்பாண்டின் “மௌனமாயொரு இடிமுழக்கம்” அந்த உச்சத்தைத் தொட்டிருக்கவில்லை என்பது வார்னிஷ் அடிக்காத யதார்த்தம் ! ஆனால் ‘ஆனை படுத்தாலும் குதிரையை விட உசத்தியே‘ என்ற கணக்காக லேசாய் கோட்டைவிட்ட ட்யுராங்கோ – இதர தத்தா புத்தா நாயகர்களை விடவும் better choice தான் என்று நீங்களும் சொல்வீர்களென்ற நம்பிக்கையுண்டு எனக்கு ! So ஒற்றை ஸ்லாட் ; கற்றைக் கதைகள் - என்ற பாணிக்குப் பச்சைக் கொடி possible ?

ஒரு மாதிரியாய் சுலபமான கேள்விகளை எதிர்கொண்டான பிற்பாடு தொடர்வன சற்றே complex வினாக்கள் ! And எப்போதும் போலவே இங்கே அபிப்பிராய பேதங்கள் இருக்குமென்பது நிச்சயம் !

கேள்வி # 1: கமான்சேவின் வனவாசம் தொடர்வது சரி தானா ? அல்லது ஹெர்மனின் இந்தப் பரட்டைத்தலைக் கௌபாய்க்கு இன்னுமொரு வாய்ப்பு தந்தால் மோசமில்லை என்பீர்களா ? விற்பனைகளில் மனுஷன் பெரிதாய் கம்பு சுழற்றிடவில்லை என்பதால் எனக்குமே இவருக்கென பெரிதாய் வாதாடத் தோன்ற மாட்டேன்கிறது தான் ; ஆனாலும் ஒரு தொடர் முக்கால் கிணறு தாண்டிய நிலையில் அம்போவென நிற்கிறதே என்ற வருத்தமும் இல்லாதில்லை ! “பிள்ளையைக் கிள்ளி விட்றான், தொட்டில் ஆட்டி விட்றான்” என்ற விமர்சனத்துக்கு இது இடம் தருமென்று  புரியாதில்லை ; ஆனால் ஹெர்மனின் படைப்புகளில் கேப்டன் பிரின்ஸ் தவிர்த்து வேறு யாருமே நம்மிடையே பெருசாய் சோபிக்கவில்லையே என்ற ஆதங்கமே என்னை வாய் திறக்கச் செய்கிறது !

கேள்வி # 2 : LADY S!!! ஆண்டுக்கொரு ஸ்லாட் என்ற ஃபார்முலா இவருக்கு ஓ.கே. தானா - என்று உங்கள் பார்வைக்கோணங்களிலிருந்து  ரோசிக்க முயன்று வருகிறேன் ! ? வான் ஹாமின் கதைக்களம்; மிரட்டலான சித்திரங்கள்; வசியம் செய்யும் கலரிங் என்று மிளிரும் இந்த நாயகி மீது எனக்கு தனிப்பட்ட முறையில்  நிறையவே அபிமானம் உண்டு ! ஆனால் சமீப 2 ஆல்பங்களிலும் “ஆக்ஷன் குறைச்சல்” என்ற புகார்கள் முகாரி ராகமாய் ஒலிப்பதையும் மறக்க இயலவில்லை எனும் போது – பந்து சிந்தனைகள் வலுப்பெறுகின்றன ! மகளிரணி ரொம்பவே பலவீனமாய்க் காட்சி தரும் நிலையில், இந்த மதிமுக ஷானியாவை 2019-ல் தொடரச் செய்வது ஓ.கே.வாக இருக்குமா ? நாம் எதிர்பார்க்கும் “அக்மார்க் ஹீரோ / ஹீரோயின் இலக்கணத்துக்கு” Lady S முழு நியாயம் செய்திடாது போயிருக்கலாம் ; ஆனால் for that matter, இந்த ஆக்ஷன் ஜானரில் புராதனம் சொட்டாத சமகாலத்துப் படைப்புகள் அத்தனை நிறைய இல்லை என்பதையும் நினைவில் இருத்திட வேண்டியுள்ளது ! அதற்குமீறி ‘பளிச்‘சென்ற ஆக்ஷன் தொடர்கள் கண்ணில் பட்டாலும், அவை பெரும்பாலும் கௌபாய்க் களங்களாக உள்ளன ; அல்லது நான்கோ – ஆறோ ஆல்பங்களில் முற்றுப்பெறும் ஒரு நெடுந்தொடராக இருக்கின்றன ! அவற்றை இது போன்ற சிங்கிள் ஆல்பங்களாய் வெளியிட இயலாதெனும் போது சிக்கல் எழுகிறது ! So சிந்தனைக் குல்லாவைத் தேடித் திரிகிறேன் தற்சமயம் ! Your thoughts please ?

மகளிரணியின் மறு மகாராணியார் பற்றிப் பேசாது போனால் பிழையாகிப் போகுமென்பதால் படாரென மாடஸ்டி பிளைஸி பக்கமாய் ரேடாரைத் திருப்பிடுவோம்!  இவருக்குமே “ஆண்டுக்கொரு ஸ்லாட்” என்ற ரீதியில் வாய்ப்பளித்து வருகிறோம் – with mixed results ! துவக்க காலம் முதலாய் இளவரசியை ஆராதித்து வரும் நண்பர்களுக்கு இவரொரு இன்றியமையா ஹீரோயினாகத் தோன்றினாலும்; சமீப வாசகர்களுக்கு லைட்டாகப் பேஸ்தடிப்பதும் நிஜமே ! மாடஸ்டி கதைகள் உருவான காலகட்டத்தில் உலகின் அரசியல் வரைபடமே வித்தியாசமானதொன்றாகக் காட்சி தந்து வந்தது! அன்றைக்கு ரஷ்யாவும்; கம்யூனிச தேசங்களும் ஒரு அணியாகவும்; மேற்கத்திய சக்திகள் இன்னொரு அணியாகவும் முறைப்புக் காட்டிக் கொண்டு திரிந்தன! பெர்லின் மதில் வீழ்ந்திருக்கவில்லை; சர்வதேச அரங்கில் தேசங்களுக்கு மத்தியில் ஒரு அரூபமான திரையிருந்து வந்தது! Those were the days of the Cold War !! ஜேம்ஸ் பாண்ட் பாணிகளுக்கும் ; அதனைத் தழுவிய மாடஸ்டியின் பாணிகளுக்கும் அந்தக் காலங்களில் பரபரப்பான acceptance இருந்ததில் வியப்பில்லை! ஆனால் இன்றைக்கோ உலக அரசியல் அரங்கே ஏகமாய் மாறியிருக்க – மாடஸ்டியின் கதைக்களங்கள் நண்பர்களில் ஒரு அணிக்கு அத்தனை ரம்யம் தருவதில்லை என்பது புரிகிறது ! பெர்சனலாக மாடஸ்டி-கார்வின் கதாப்பாத்திரங்களுக்கு நானும் ரசிகனே ! ஆனால் உங்களின் ரசனை மீட்டர்களும் அதே திசையில் பயணித்தாலன்றி – இளவரசியை உங்கள் மீது திணித்த கதையாகிப் போகும் ! அக்குவேறு ஆணி வேறாய் அலச வேண்டுமென்றில்லாது – ஒரு ஸ்லாட்டுக்கு இவர் ஓ.கே.வா ? என்று மட்டும் சொல்லிடுங்களேன் folks ?

அடுத்ததாய் தலைகாட்டுபவர் நமது ஜில்லார்! இவரது சித்திர பாணி கார்ட்டூன்களை நினைவுபடுத்தும் விதமாய் இருப்பதாலும், இவரது அல்லக்கை அசிஸ்டெண்ட் மொக்கை ஜோக்குகளாய் அவிழ்த்து விட்டுக் கொண்டிருப்பதாலும், ஜில் ஜோர்டன் கதைகளை கார்ட்டூன்களாய்ப் பார்த்திட நமக்குத் தோன்றுவதில் வியப்பில்லை தான் ! Maybe அந்த சிறு தடுமாற்றம் இந்தக் கதைகளோடு ஒன்றிடுவதற்குத் ‘தடா‘ போடுகிறதாவென்று தெரியவில்லை! எது எப்படியோ – ஜில்லாருக்கு இன்னொரு வாய்ப்பு பற்றி உங்களது அபிப்பிராயம் ப்ளீஸ் ?

புதுவரவு ட்ரெண்ட் பலரிடம் ”ஆஹா” என்ற சிலாகிப்பையும் ; சிலரிடம் ‘ஐயோ‘ என்ற அங்கலாய்ப்பையும் ஏற்படுத்தியிருப்பது புரிகிறது! இதுவொரு slam-bang ரகக் கதையே அல்ல ; மாறாக, நாம் இதுவரையிலும் பார்த்திரா ஒரு புதுப் பிரதேசம் சார்ந்த கதைக்களம் - என்பதை நான் ஏற்கனவே தெளிவுபடுத்தியிருந்தது நினைவிருக்கலாம் ! So “ஆக்ஷன் கம்மி” என்ற புகார் அத்தனை பொருத்தமென்று சொல்ல மாட்டேன்! அதே போல ஒற்றை சாகஸத்தோடு ஓரம்கட்டுமளவிற்கு இவர் சொதப்பிடும் ரகமுமல்ல என்பதால் – ‘உள்ளே; வெளியே‘ ஆட்டத்துக்கான முகாந்திரமே இந்த நொடியில் இவருக்கு இருப்பதாய் நான் நினைக்கவில்லை !

ஆக்ஷன் நாயகர்களைப் பற்றிப் பேசும் போது தளபதியைப் பற்றிப் பேசாது போனால் முட்டுச் சந்தில் போட்டுக் குமுறி விடுவார்களென்பதால் “டைகர்” என்ற பெயரை பவ்யமாய் உச்சரிக்க முனைகிறேன் ! பெரியவரின் கதைகள்; மார்ஷல் அவதாரின் கதைகள் என்று சகலமும் காலி என்பதால் – இளையவரின் சாகஸங்கள் மட்டுமே பாக்கி ! இந்த அமர கதாப்பாத்திரத்தை உருவாக்கிய பிதாமகர்கள் இன்று நம்மோடு இல்லை என்ற நெருடல் இந்தத் தொடரில் புதுசு புதுசாய்ப் பணியாற்றும் கதாசிரியர்களையும், ஓவியர்களையும் பார்க்கும் போது எழாதில்லை ! எத்தனை ஆற்றல்மிக்க சமகாலத்துப் படைப்பாளிகள் களமிறங்கினாலுமே – தலைமுறைக்கொருமுறை தலையெடுக்கும் ஜாம்பவான்களின் காலணிகளை இட்டு நிரப்புவது சுலபமல்ல தானே ? 'சார்லியே – ஜிரௌ' என்ற அந்த அசாத்தியக் கூட்டணியை மனதில் இருத்திக் கொண்டு – புதியவர்களின் உழைப்புகளை எடைபோட முனைவது முறையாகாது என்பது புரிந்தாலும் – ஆழ்மனசு சேட்டைகளைக் கைவிட மறுக்கிறது ! Again – சிந்தனைக் குல்லாவுக்கு ‘ஜே‘ போட்டு வருகிறேன்!

இவர்கள் நீங்கலாய் – விளிம்பு நிலை நாயகர்களாய் சாகஸ வீரர் ரோஜர்; டிடெக்டிவ் ஜெரோம் என்றெல்லாம் நிற்கிறார்கள் – வாய்ப்புகள் கோரி ! மறுக்கா ஒரு நாசூக்கான சாரியை இவர்களிடம் சொல்லத் தான் வேணுமோ ? உங்கள் எண்ணங்கள் ப்ளீஸ் ?

That just about sums up the majority of the action heroes from recent years....! இவர்கள் தவிர்த்து - புழக்கத்திலிருக்கும் (color) நாயகர்கள் யாரையேனும் கவனத்திற்கு கொண்டு வர மறந்திருந்தேன் என்றால் - உங்கள் நினைவூட்டல்கள் உதவிடும் folks !! போனெல்லியின் b & w நாயக / நாயகியரைப் பற்றி அடுத்த வாரப் பதிவில் பார்த்திடலாம் !

அப்புறம் "இரத்தப் படலம்" வெளியீட்டு விழா பற்றிய updates :

😃ஈரோடு புத்தக விழா நடைபெறும் VOC பூங்காவின் வாயிலில் உள்ள ஹோட்டல் LE JARDIN-ன் தரைதளத்திலுள்ள ORCHID ஹாலில் ஆகஸ்ட் 4 (சனிக்கிழமை) காலையில் சந்திக்க ஏற்பாடுகள் செய்துள்ளோம் guys ! 10 மணி முதல் மதியம் 2 வரை அரங்கில் அரட்டை ; இரத்தப் படல ரிலீஸ் என்றான பிற்பாடு அங்கேயே சைவ உணவும் மதியத்துக்கு ! உங்களின் லேட்டஸ்ட் கனாவும், இதுவரையிலான costliest கனாவுமான"இ.ப."வெளியாகும் தருணத்தில், உங்கள் அனைவரின் அண்மை நமக்கு   அத்தியாவசியத் தேவை என்பேன் ! So உங்களது அட்டவணைகளில் ஆகஸ்ட் 4-ம் தேதியினை நமக்கோசரம் ஒதுக்கிடக்  கோருகிறேன் !! Would love to see you all !!

😃அதே போல கூரியர்களில் அல்லாது, ஈரோட்டில் "இ.ப." பிரதிகளை நேரில் பெற்றுக் கொள்ள விரும்பும் நண்பர்கள் தயை கூர்ந்து ஒரேயொரு மின்னஞ்சல் மட்டும் தட்டி விடணும் - ப்ளீஸ் ! இந்த வலைப்பக்கத்தில் வலது கோடியில்  உள்ள Contact படிவத்தைப் பயன்படுத்தியும் கூட நமக்குத் தகவல் தெரிவிக்கலாம் ! உங்கள் புக்கிங் நம்பர் ; அல்லது பெயர் & முகவரி அவசியமாகிடும் folks !! 

Before I sign off - சில updates :

☎கோவையில் தற்போது நடைபெற்று வரும் புத்தக விழாவின் முதல் 2 நாட்களும் சுவாரஸ்யம் தரும் விற்பனை என்று சொல்லலாம் ! சென்னைக்குப் போட்டியாகவோ  ; ஈரோட்டுக்குப் போட்டியாகவோ - கோவையின் விற்பனைகள் அமைந்திடும் வாய்ப்புகள் குறைவே என்றாலும், கிட்டங்கி நிறைய இதழ்களை ரொப்பி வைத்துக் கொண்டு விழிபிதுங்கி நிற்கும் நமக்கு எந்தவொரு சிறு கிளையுமே உதவிடும் தான் ! தொடரும் நாட்களில் விற்பனை கூடுதல் வேகமெடுக்க, நம் சார்பில் வேண்டிக் கொள்ளுங்களேன் guys ! 

☎அப்புறம் சின்னதொரு இதழ் மாற்றமுமே : நடப்பாண்டின் அட்டவணையில் - "த்ரில்லர் ஸ்பெஷல்" என்ற பெயரில் மாடஸ்டி பிளைசி + டிடெக்டிவ் ராபின் கதைகள் இணைந்து வருவதாய் திட்டமிட்டிருந்தோம் ! ஆனால் தற்சமயம் ஆண்டின் இறுதி வரை கொண்டு செல்ல கைவசமுள்ள இதழ்களின் எண்ணிக்கை ரொம்பவே குறைவாய் இருப்பதால் - மாடஸ்டியை தனி இதழாகவும் ; ராபினை தனி இதழாகவும் வெளியிடத் தீர்மானித்துள்ளோம் ! 

☎நமது இத்தாலிய டெக்ஸ் வில்லர் ரசிக / ஓவியர் இன்னமுமொரு அட்டைப்படப் பெயின்டிங் போட்டுத் தரச் சம்மதித்துள்ளார் - அவகாசம் கிட்டும் போது ! So இந்தாண்டினில் இன்னும் ஒரு வித்தியாசமான டெக்ஸ் ராப்பரைப் பார்க்கும் வாய்ப்புகள் பிரகாசம் என்பேன் ! 

மீண்டும் சந்திப்போம் !! Have a lovely weekend !! Bye now all !!