வணக்கம் நண்பர்களே, அநேகமாய் இது நம்மில் அனைவருக்குமே நிகழ்ந்திருக்குமென்று நினைக்கிறேன் :
புது ஊர்...பணிகள் முடிந்த கையோடு ஊர் திரும்பலாமென்றிருக்கும் நேரம் ; ரயிலுக்கு நேரம் நிறையவே இருக்கும் ! சாலையில் பராக்குப் பார்த்தபடிக்கே நடக்கும் போது எதிரே திடீரென ஒரு 'பளிச்' ஹோட்டல் கண்ணில்படும் ! 'அடடே...சூப்பரா கீதே ?!" என்றபடிக்கு உள்ளே விரைகிறோம் ! ஜிலீர் AC முகத்தை வருடித் தர - வரிசைகட்டி நிற்கும் மெத் மெத்தென்ற சோபாக்கள் நம்மைப் பார்த்துக் கூப்பிடுவது போலொரு பிரமை ! ஒய்யாரமாய் அமர்ந்தால் ஆறடியிலான பீம்பாய், தடிமனானதொரு மெனுவை நம்மிடம் நீட்டுவார் ! புரட்டினால் சும்மா கண்களுக்கும், புத்திக்கும் ஒரு விருந்தே எதிர்படும் ! "அடடே...பாஸந்தி இருக்கா ? சர்ர்ர்ர்....பானிபூரி கூட இருக்கு போல ? தோ பார்டா.....சில்லி இட்லியா ? சூப்பரு...சூப்பரு...! ஹ்ம்ம்ம்…பக்கத்து டேபிளுக்குப் போறது டிராகன் காளிபிளவரா…? ஆர்டர் பண்ணிட வேண்டியது தான் ....ஹை…. பாஸ்த்தா கூட இருக்கு போல ; சொல்லிப் பார்ப்போமா..? அச்சோ...எதிர் டேபிள்லே அந்த ஆசாமி விழுங்கும் பலூடாவைப் பார்த்தாக்கா மெர்சலா கீதே !!"” என்றபடிக்கே மூளைக்கும், நாவுக்குக்குமிடையே ஒரு ஜலப் பிரவாக சம்பாஷணை ஓடும் பாருங்கள் - அந்த நொடியில் வயிறு ஒரு நெல் கிட்டங்கியாய் மாறிடக் கூடாதா ? என்பது போலொரு ஆதங்கம் எழும் ! ஆனால் "இதுவா-அதுவா ? ஒற்றை ஆளுக்கு அது கொஞ்சம் ஜாஸ்தியோ ? காரத்தை ஓவராய்த் தின்னுப்புட்டு காலைத் தூக்கிக் கொண்டு கிடப்பானேன் ?" என்பது மாதிரியான சிந்தனைகள் தலைக்குள் சுழன்றடிக்கும் போதே - பொறுமையிழந்த பீம்பாய் - "என்ன சார் சாப்பிடறீங்க ?" என்று வினவும் குரல் கேட்கும்! திருதிருவென முழித்தபடிக்கு "ஆங்...ரெண்டு இட்லி கொடுங்க !!"என்று சொல்லிவிட்டு அந்த மெனுவை பட்டென்று மூடி வைத்து விடுவோம் ! "இந்தக் கூத்துக்கு தான் இவ்ளோ நேரம் மெனுவை புரட்டுனியாக்கும் ?" என்பது போலொரு பார்வையோடு பீம்பாய் அகலும் போது, நாமோ ஐ,நா.சபையிலிருந்து அவசர சேதி வந்திருப்பது போல் செல்போனுக்குள் புதையும் பாவ்லா காட்டிக்கொண்டிருப்போம் ! மனக்கண்ணில் பாம்பே மீல்ஸ்களும் ; தந்தூரி ஐட்டங்களும் ; ஐஸ்க்ரீம்களும் அணிவகுத்து ஓட ; ராமநாதபுர மாவட்ட வறட்சிக்கே விடையாகிடக்கூடிய அளவுக்கு, வாய்க்குள் ததும்பிக் கிடக்கும் ஜொள் நீரை சத்தமில்லாது விழுங்கி விட்டு,தட்டில் மலர்ந்து கிடக்கும் இட்லிக்களைப் பிய்த்து போடத் துவங்கிடுவோம் - ஒரு மௌனப் பெருமூச்சோடு ! "அது வந்து - travel-லே இட்லி தான் best !" என்று நமக்கே ஒரு சமாதானமும் சொல்லிக் கொள்வோம் ! Phewww !!!
அநேகமாய் இது போன்ற அனுபவத்திலிருந்து நம்மில் யாருமே விதிவிலக்காக இருந்திருக்க இயலாது என்பேன் !! அது சரி - இதுக்கும் , இன்றைய பதிவுக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா ? சித்தே பொறுமை ப்ளீஸ் ; குட்டிக் கதை வரும் முன்னே - சம்பந்தம் வரும் பின்னே !
இப்போ cut பண்ணுனா - நேரா நடப்பு நாட்களுக்குத் திரும்புகின்றோம் ! ஜூலையின் சந்தோஷங்களோடே தொடரவிருக்கும் மாதங்கள் மீதான பணிகள், ஜரூராய் நடந்தேறி வருகின்றன! “இரத்தப் படலம்” சார்ந்த பணிகள் நம்மளவிற்கு முற்றிலுமாய் நிறைவுற்றிருக்க – அந்த 3 தடிமனான ஹார்ட்கவர் இதழ்களை நுழைத்திடும் slip-case க்கான காத்திருப்பு தொடங்கியுள்ளது ! அது மாத்திரம் வெளிமாநிலத்திலிருந்து வந்திட வேண்டிய சமாச்சாரம் என்பதால் ஆகஸ்ட் துவக்க நாட்களில் தான் நம் கைக்கு வந்து சேரும் போலும் ! So டப்பிக்குள் இதழ்களை அடைத்த கையோடு – அந்த “Code Name மின்னல்” என்ற ரவுண்ட் பேட்ஜோடு தயாராகிட வேண்டியது தான்! நம்மளவிற்கு எஞ்சியிருப்பது அந்த பேட்ஜை செய்து வாங்கும் வேலை மாத்திரமே ! So அக்கடாவென சேரில் சாய்ந்து உட்கார லேசாய் முற்பட்டு வருகிறோம் ! And பேட்ஜ் டிசைனை செய்து தர நண்பர்களுக்கு ஆர்வமிருப்பின் – most welcome too !!
ஆகஸ்ட் முழுமைக்குமே “இரத்தப் படலம்” மாத்திரமே என்பதால் – ஆண்டின் இறுதி quarter-ன் இதழ்கள் மீதான வேலைகள் துவங்கி விட்டன ! தடதடவென ஆண்டின் பெரும்பகுதி ஓட்டமாய் ஓடிவிட்டிருக்க – அடுத்த biggies என்று நம்மை எதிர்நோக்கியிருப்பன சிலபல ‘தல‘ வெளியீடுகளே !
- முழு வண்ணத்தில் – “சைத்தான் சாம்ராஜ்யம்” – color reprint செப்டம்பரிலும்.....
- வண்ணம் + b&w – “டைனமைட் ஸ்பெஷல்” – அக்டோபரிலும்......
- B&W-ல் தீபாவளி மலராக – ”காதலும் கடந்து போகும்” நவம்பரிலும்.....
slot ஆகிக் காத்துள்ளன ! ‘தல‘யின் பிறந்த நாள் தினமான செப்டம்பர் 30-ல் – இத்தாலியில் ஏதேதோ ஸ்பெஷல் வெளியீடுகளை போனெல்லி திட்டமிட்டிருக்க, அதே தேதியில் நாம் “டைனமைட் ஸ்பெஷலை” கையில் ஏந்திடலாமென்று நினைத்தேன்! “இ.ப.” பணிகள் முடிந்து விட்டதால் – இப்போதைக்கு எனது மேஜையை நிரப்பிக் கிடப்பது – மேற்படி டைனமைட்டே!! இதில் வரவிருக்கும் கதைகளைப் பற்றி அடுத்த மாதம் preview பார்த்திடலாமென்றும் நினைத்தேன் – நம்மவர் XIII மீதான கவனம் சற்றே ஓய்ந்த நிலையில் !
‘டைனமைட்டை‘க் கரை சேர்த்த கையோடு அடுத்த மெகாப் பணி – தொடரவிருக்கும் புது வருடத்தின் கதைத் தேர்வுகள் + அட்டவணை இறுதி செய்தல் தானென்பதால் – இப்போதே கிடைக்கும் சந்தடி சாக்குகளில் கதைகளை மேயத் தொடங்கியுள்ளேன்! வருடத்தின் இந்தத் தருணம் தான் – இந்தப் படைப்பாளிகளின் பிரம்மாண்டத்தை எண்ணி மேலும் மேலும் வாய்பிளக்கும் வாய்ப்புகளைத் தருகின்றது! ஷப்பாடி… எத்தனை எத்தனை வித விதமான ஜானர்கள் ; எத்தனை எத்தனை பரீட்சார்த்த முயற்சிகள்?!! இவர்களெல்லாம் மனுஷப் பிறவிகளே கிடையாது ; அசுரர்கள் ; ஜாம்பவான்கள் ; தெய்வப் பிறவிகள் !!
👀“ஹாரர்” கதை வரிசைகளுக்குள் புகுந்தால் – மிரளச் செய்யும் variety சிதறிக் கிடப்பதைப் பார்க்க முடிகிறது! ஏற்கனவே நாம் விவாதித்த Zombie கதைகள் இங்கும், அங்கும் கொட்டிக் கிடக்கின்றன! நமக்குத் தான் அந்த அருவருப்பான ஜென்மங்களை நம் வாசிப்புக் குடையினுள் புகுத்திக் கொள்ளும் பிரியம் எழமாட்டேன்கிறது; ஆனால் ஐரோப்பிய & அமெரிக்க காமிக்ஸ் ரசிகர்கள் இந்தச் செத்தும், சாகாத அழகு சுந்தரன்களோடு வாஞ்சையோடு தோளில் கைபோட்டுக் கொள்கிறார்கள்!! அதே போல Monsters சார்ந்த கதைகளும் ஏராளமோ ஏராளம் !
👀 நேற்றைக்கு வரவழைத்ததொரு மூன்று பாக ஆல்பத்தைப் புரட்டிப் பார்த்தாலே கபாலத்தில் மீதமிருக்கும் ரோமக்கால்கள் குத்திட்டு நிற்காத குறை தான்! மனிதன் பாதி – மிருகம் பாதி – என்பது போலொரு அசுர உருவம் கேசரி சாப்பிடுவது போல ஒரு ஆசாமியின் குடலை உருவி வாய்க்குள் தள்ளிக் கொண்டுள்ளது! ‘லாஜிக்‘ என்றதொரு சங்கிலியை அந்த ஊர் மார்வாடி நண்பரிடம் தற்காலிகமாய் ஒப்படைத்து விட்டு –படைப்பாளிகள் தங்களின் கற்பனைக் குதிரைகளுக்கு ஒரு லோடு ரம்மை ஊற்றிக் கொடுத்து விடுகிறார்கள் என்பது நொடியில் புரிந்தது. வண்ணத்தில் அந்தச் சித்திரங்களைப் பார்த்தால் ஒவ்வொரு பக்கமும் ஒரு ஹாலிவுட் திரைப்படத்தின் பிரம்மாண்டத்தோடு போட்டி போடுவது அப்பட்டமாய்த் தெரிகிறது! நமக்கு மட்டும் லாஜிக் சார்ந்த templates அவசியப்படாதிருப்பின் இந்த முப்பாக ஹாரர் த்ரில்லர் மீது நிச்சயம் ஒரு பெரிய ‘டிக்‘ அடித்திருப்பேன்! A stunning visual masterpiece !!
👀அதே போல பரபரவெனப் பயணிக்கும் சைக்கோ கொலைகாரன் plot கொண்டதொரு ஆல்பத்தையும் படித்துப் பார்த்தேன் (அதாவது, கதைச்சுருக்கம் சகிதம் பக்கங்களைப் புரட்டினேன் !! !!) ஆளரவமில்லாத் தீவு ஒன்றில் குழுமும் நண்பர்கள் குழுவில் ஒவ்வொரு உருப்படியாய் பரலோகம் போய்ச் சேருகிறது ! அட… சுவாரஸ்யமாக உள்ளதே ?! என்றபடிக்குப் பக்கங்களைப் புரட்டினால் – திடுமென ‘அடல்ட்ஸ் ஒன்லி‘ சமாச்சாரங்களின் தாக்குதல், உலகக் கோப்பையில் பெல்ஜியத்தின் கோல்களைப் போல் அதிரடியாய்த் துவங்கின ! பழைய தமிழ் சினிமாப் படங்களில் வருவதைப் போல,அடல்ட்ஸ் ஒன்லி சமாச்சார சீன்களில் மொக்கையான சூரியகாந்திப் பூக்களை உட்புகுத்தினாலுமே, பிரேம்களில் விரசத்தை அணைகட்ட முடியாதென்று புரிந்தது! ஒரு பௌன்சரைச் சமாளிப்பதிலேயே பிராணனில் பாதி காலாவதியான நிலையில் மேற்கொண்டும் வில்லங்கத்தை விலை தந்து வாங்குவானேன்? என்று தோன்றிட – ‘டப்‘பென்று அந்தப் பக்கங்களை மூடி விட்டேன்!
👀கௌபாய் + fantasy + திகில் என்ற ஒரு வித்தியாசமான கூட்டணியில் கதையொன்று கண்ணில் பட, அதனையும் நெட்டில் தேடிப் பிடித்து அலசினேன் ! கதை நெடுகிலும் குதிரை போட்டிருக்கும் அதே அளவு துணியை மட்டுமே நாயகியும் போட்டிருக்க, பக்கங்களைப் புரட்ட புரட்ட – ஜேஸன் ப்ரைஸ் மாதிரியான கதைக்களம் என்று தோன்றியது ! "அட… ஜே.பி. ஹிட் தந்த கதைபாணியாச்சே ? – அதனைத் தொடர்ந்திட இதுவொரு வாய்ப்பாக அமையுமோ?" என்ற ஆர்வம் மேலோங்கியது! ஆனால் கதை நகர, நகர fantasy சமாச்சாரங்கள் டாப் கியரைத் தொட்டு விட்டது போல - பூதம்; பிசாசு ; சாத்தான் என்று ஏதேதோ தாண்டவமாடத் தொடங்கின! ”ஆத்தாடியோவ்… விட்டலாச்சாரியா காலமெல்லாம் மலையேறி ஏகப்பட்ட மாமாங்கங்கள் போயே போச்சு! இந்நேரத்தில் இது வேலைக்கு ஆகாதுடோய்‘” என்று தீர்மானித்து ஓட்டம் பிடித்தேன்!
சரி… 2019-ஐ கிராபிக் நாவல்களால் கலக்கலாமென்ற ஆர்வத்தோடு – ஏற்கனவே போட்டு வைத்திருக்கும் பட்டியலோடு, புதுத் தேடல்களையும் தொடங்கினேன்! கற்பனைகளுக்கு வானம் கூட எல்லையாகாது என்பதை umpteenth தடவையாகப் புரிந்து கொள்ள முடிந்தது! இன்ன தான் கதைக்கள வரையறைகள் என்றில்லாது – just like that வாழ்க்கையின் சகல பரிமாணங்கள் பக்கமும் பார்வைகளை ஓடவிடுகிறார்கள்!
👍 கர்ப்பமடையும் பெண்ணொருத்திக்கு பிரசவத்தில் சிக்கல்கள் இருக்கக் கூடுமென்பதால் டாக்டர்கள் முழு ஓய்வெடுக்கச் சொல்கிறார்கள் - 5-ம் மாதம் முதலாக ! வேறு வழியின்றி ஓய்ந்து கிடக்கும் போது வாழ்க்கையை ஒரு புது கோணத்தில் பார்க்கிறாள் அந்தப் பெண்! நேற்று வரை பரபரவென உலகத்தோடு தானுமே ஓடித் திரிந்த போது கவனித்திரா எக்கச்சக்க சமாச்சாரங்கள் இன்றைய ஓய்வில் அவள் கண்ணுக்கு எட்டுகின்றன ! இது தான் ஒரு ஆல்பத்தின் களமே !! என்னவொரு தைரியமென்று வியக்க மட்டுமே முடிந்தது !
👍 முதல் உலகப்போரின் போது நிகழ்ந்ததொரு நிஜ சம்பவத்தைப் பின்னணியாகக் கொண்டு இன்னொரு ஆல்பத்தை தரிசித்தேன்! பிரெஞ்சு – ஜெர்மானிய எல்லையை ஒட்டியதொரு பகுதியில் 1300 பேருக்கும் அதிகமான மனநோயாளிகளைப் பராமரிக்கும் ஒரு காப்பகம் உள்ளது! நாஜிக்களின் படை நெருங்கிட, தலைமை டாக்டர்களும், காவலர்களும் ஓட்டம் பிடிக்கின்றனர். எஞ்சியிருக்கும் செவிலியரும் பணியாளர்களும் அந்த நரக சூழலைச் சமாளிப்பதே இந்த ஆல்பத்தின் கதைக்களம்! உணவு இருப்பு பூஜ்யம்; மருந்து – மாத்திரைகளுக்குத் தட்டுப்பாடு! மனதை உருக்கும் ஒரு ஜீவ மரணப் போராட்டம்! நெருங்கும் பனிக்காலத்தில் இதை சாமான்ய மக்கள் சமாளிப்பதே இந்த ஆல்பத்தின் முதுகெலும்பு ! “அட… மறுக்கா அழுகாச்சிக் கதைகளா? வாணாமே”? என்று நம்முள் பலமாய் அலாரம் அடித்திடக் கூடுமென்பதால் இது போன்ற ஆல்பங்களைப் பெருமூச்சோடு தாண்டிட வேண்டி வருகிறது!
👍 இன்னொன்றோ – செம சிரிப்பு + செம டிராஜெடி கலந்ததொரு படைப்பு! ‘படம் எடுக்கிறேன் பேர்வழி‘ என்று ஒரு புது டைரக்டர் பட்ஜெட்டை எக்குத்தப்பாய் எகிறச் செய்து விடுகிறார்! படமும் முடிகிறது ; ஆனால் பட்ஜெட்டோ கூரையைப் பிய்த்துக் கொண்டு எங்கோ சென்று விடுகிறது ! 20 மடங்கு கூடிப் போன செலவை என்ன செய்தாலும் ஈடு செய்ய இயலாதென்று புரிந்த கணத்தில் ரௌத்திரம் கொள்ளும் தயாரிப்பாளர், ஆத்திரத்தில் மொத்த பிலிம் சுருள்களையும் தூக்கிப் போய் எங்கோ ஒரு வனாந்திரத்தில் குழி தோண்டிப் புதைத்து விடுகிறார்! நாட்களின் ஓட்டத்தோடு, அந்தச் சுருள்களும் மாயமாய் மறைந்து போகின்றன! பின்னாளில் அதைத் தேட முற்படுவதே இந்த ஆல்பத்தின் ஓட்டம் !
👍 ஒரு சர்வதேச வல்லரசின் வரலாற்றுத் தலைவர் அவர்! இரும்புக்கரத்தோடு பரந்து விரிந்த தேசத்தையே ஆள்பவர்! ஒரு நாளிரவு மனுஷன் இறந்து போகிறார்! சகலமுமாய் இத்தனை காலம் நின்றவர் சவமான மறுகணமே அடுத்தகட்டப் பொறுப்பிலிருக்கும் மனிதர்களின் பதவி வெறிகள் உந்திக் கொண்டு வெளிவருகின்றன! தலைவரின் சாவை வெளியுலகிற்கு அறிவிக்காது – அதற்கு முன்பாய் தத்தம் ஆதாயங்களை கணக்கிடுகிறது அதிகார மையம்! யதார்த்தத்தை; வரலாற்றை – பகடியோடு சொல்கிறார்கள்! க்ரீன் மேனர் பாணியில் ஒரு வித கார்ட்டூன் ஸ்டைல் சித்திரங்களுடன் கலக்குகிறது தான்! ஆனால் வரலாறு சார்ந்த விவகாரம்; நம்மூர்களில் வேறுவிதமாய் பார்க்கப்படலாம் என்பதால் தைரியம் நஹி – இதனுள் தலைநுழைக்க!
👍 இன்னொரு “வெட்டியான்” பற்றிய கதை! இவனுமே ஒரு விவேகமான பார்ட்டி தான்! புக் படிப்பதில் அதீத ஆர்வம் கொண்டவன்! தொழிலுக்கும், சுபாவத்துக்கும் துளியும் தொடர்பிலா ஆசாமி! தொல்லையைக் கண்டு தெறித்து ஓட நினைக்கும் போதெல்லாம் அது இவனை இறுகத் தழுவிக் கொள்கிறது! அதே வன்மேற்குக் களம் தான் & சித்திரங்களுமே semi-cartoon பாணியில்! பொறுமையாய் கதையை வாசித்த பின் – நாம் எதிர்பார்க்கும் கதையோட்டம் ; ஆக்ஷன் என்றான templates missing என்பது புரிந்தது! சாரி ப்ரோ… எங்ககிட்டே இருக்கும் அந்த அண்டர்டேக்கரே இப்போதைக்கு போதும் ! என்படிக்கு நடையைக் கட்டினேன்!
👍 Sci-fi ரகக் கதைகள் ஒரு வண்டி காத்துக் கிடக்கின்றன! எப்போதும் போல அவற்றை இம்முறையும் பராக்குப் பார்த்த கையோடு டாட்டா காட்டி விட்டுக் கிளம்பத் தான் முடிகிறது! Incals; Metabarons; Valerian – என்று பிரான்கோ-பெல்ஜியத்தில் மாத்திரமின்றி – ஏகமாய் பல வேற்று மார்கெட்களிலும் சாதனைகள் செய்துள்ள கதைகளை நாம் (சு)வாசிக்க நாள் என்று புலருமோ ?
பெருமூச்சு விடும் கணத்தில், கட் பண்ணிய கையோடு நேராக இந்தப் பதிவின் துவக்கத்துக்குப் போலாமா ? அந்த ஹோட்டல் ; மெனு ; குழப்பம் ; இறுதியில் இட்லி என்ற விவரிப்பை இப்போது மறுக்கா படியுங்களேன் - ப்ளீஸ் ? லேசாய் ஒரு தொடர்பு ; ஒரு சம்பந்தம் இருப்பது புரிந்திடுமென்று நினைக்கிறேன் !
Variety எனும் மெனுவிலிருந்து,வித்தியாசமாய் ஆர்டர் செய்திட ஆசையிருக்கும் தான்; ஆனால் பயணத்தின் போது, கண்டதையும் தின்னு வயித்தைக் கெடுத்துப்பானேன்? என்ற முன்ஜாக்கிரதையும் தலைதூக்கும் ! அதே dilemma தான் நமக்கும் - இந்தக் கதை தேர்வுகளில் ! ! லேசாய் வித்தியாசம் காட்ட எண்ணி கனடாவின் போலீஸ்காரரைக் களமிறக்கிய மறுகணமே ”ஆக்ஷன் கம்மி! ஊஹும்…!” என்ற அபிப்பிராயங்கள் சுற்றி வர – “டெக்ஸ் வில்லர் இட்லிகளும்; தோர்கல் வீட்டு தோசைகளும்; லக்கி லூக் பொங்கலுமே போதுமோ?” என்ற மகா சிந்தனை எழுகிறது! விற்பனை எனும் அளவுகோல்களில் மட்டுமல்லாது - நம் சின்னவட்டத்தின் பெரும்பான்மைக்கு உகந்த ரசனை எனும் அளவுகோலிலும் நமது mainstream, commercial நாயகர்களே பிரதான இடம்பிடித்துத் தொடர்கிறார்கள் எனும் போது - பரீட்சார்த்த முயற்சிகள் பக்கமாய் நாம் அதிக கவனம் தர சாத்தியப்பட மாட்டேன்கிறது ! இதில் யார் மீதும் தவறும் இல்லை எனும் போது - நீள நீளமான மெனுக்களின் மீது ஒரு ஏக்கப் பார்வையை மட்டுமே வீச முடிகிறது !
ச்சை! எனக்கு இந்தப் பெ-ரி-ய மெனுக்களே புடிக்காது!!!
Bye folks! See you around !!
P.S : கலர் டெக்ஸ் தொகுப்பு ஜூலை 15-ல் ஆன்லைனில் விற்பனைக்கு வந்திடும் ! இதன் அட்டைப்படம் - 'தல' தேசத்திலிருக்கும் ஒரு 'தல' ரசிக / ஓவியர் நமக்காக வரைந்து தந்துள்ள சமாச்சாரம் ! நாம் தலைகீழாய் நின்று தண்ணீர் குடித்தாலும் டெக்சின் முகத்தில் இத்தனை களையைக் கொணர சாத்தியமாவதில்லை ! ஆனால் இத்தாலிய ஓவியருக்கோ - இது செம சுலபமாய் முடிகின்றது !! Classic !!!