நண்பர்களே,
வணக்கம். 'ஆல்-இன்-ஆல் அழகுராஜா சைக்கிள்கடை' என்றொரு போர்டைப் பார்த்த பின்னேயும் ஒரு வாடகை சைக்கிளை எடுத்துக் கொண்டு, Autograph சேரன் பாணியில் flashback-க்குக்குள் போகாது இருப்போமா - என்ன ? என்னடா திடீர் விசேஷமென்று யோசிக்கிறீர்களா ? முந்தைய ஆபீசில் அலமாரி ஒன்று வருஷங்களாய்த் திறக்கப்படாமலே கிடந்தது ! அதை போன வாரத்தில் ஒரு நாள் திறந்து பார்த்தால் நமது துவக்க நாட்களது பில் புக்குகள் ; சில பல மக்கிப் போன பைல்கள் ; வவுச்சர்கள் என்று ஒடிந்து விழும் நிலையில் காகிதங்கள் ஒரு வண்டி இருந்தன ! கரையான்கள் பீடித்திருந்த அவற்றையெல்லாம் இறுதியில் தீமூட்டத் தான் முடிந்ததென்றாலும் - அவற்றோடு கை கோர்த்து வந்த நினைவுகளை அசைபோடுவது ஒரு இனம்புரியா அனுபவமாய் அமைந்தது !! 34 வருடங்களுக்கு முன்பாய் இந்த வேளையில் என்ன செய்து கொண்டிருந்தோமென்பதை நினைவூட்ட இது போல் சந்தர்ப்பங்கள் வாய்த்தால் யார் தான் வாடகைச் சைக்கிளில் தொற்றிட மாட்டார்கள் ?! இந்த ஆயிரத்து நூத்திப் பதினாலாவது மலரும் நினைவுகள் படலமானது - கே.பி.சுந்தராம்பாள் காலத்துப் பாட்டு போலத் தோன்றிடலாம் தான் ; ஆனால் அந்தத் துவக்க நாட்களின் untold stories இன்னமுமே கொஞ்சம் மிச்சமுள்ளன என்றே தோன்றுகிறது ! அதிலும் நமது ஆண்டுமலர் கூப்பிடு தொலைவிலிருக்கும் இந்த வேளையில் லேசாய் ஒரு 'சேரன் சவாரி'போனால் தப்பில்லை என்று பட்டது ! ("ச்சை...எனக்கு இவன் போடுற மொக்கையே புடிக்காது " என்று feel பண்ணிடும் நண்பர்கள் நேராய் பதிவின் பின்பகுதிக்குப் பயணிக்கலாமே - ப்ளீஸ் ? ஜூலை இதழ்கள் பற்றிய preview -க்கள் ; இத்யாதிகள் அங்குள்ளன ! பிடிக்காததைப் படித்து விட்டு உம்மணாமூஞ்சி smurf போல் முகச்சுழிப்பை வெளிப்படுத்தும் சிரமம் கொள்வானேன் ? - என்றே இந்த suggestion )
நமது முதன் முதல் பணியாளருக்கு அன்றைக்குத் தந்த சம்பளத்தின் வவுச்சர்கள் ஒரு பைலில் பழுப்பேறிப் போய்க் கிடந்தன ! P .காளிராஜன் : மாதச் சம்பளம் ரூ.360 என்றிருந்ததைப் படித்த போது சிரிப்பதா - அழுவதா என்று தெரியவில்லை !! நாளொன்றுக்குப் பன்னிரண்டு ரூபாய் சம்பளம் ; அதுவும் ஒரு ஆர்ட்டிஸ்ட் வேலைக்கு !! என் தந்தையிடம் அச்சகத்தில் அந்நாட்களில் பணிபுரிந்து வந்ததொரு மூத்த பணியாளரின் தம்பி பையன் என்று அறிமுகமான காளிராஜனுக்கு, சிகாமணியைப் போலவோ ; மாலையப்பனைப் போலவோ இயற்கையாகவே ஓவியத் திறனெல்லாம் கிடையாது தான் ; ஆனால் ஆர்வத்தில் சிறுகச் சிறுக தானாய் வளர்த்துக் கொண்ட ஆற்றல், பின்னாட்களில் line drawing-களில் செம கில்லாடியென்ற நிலைக்கு இட்டுச் சென்றிருந்தது ! 1984-ல் வேலைக்குச் சேரும் போது காளிராஜனுக்கு என் வயது தான் இருக்கும் ; அவனும் ரூ.75 சம்பளத்துக்குப் பணி செய்த ஆபீஸ் பாயும் தான் நமது அப்போதைய ஒட்டு மொத்த அணி ; டீம் ; படை ; பட்டாளம் -எல்லாமே !! பத்துக்குப் பத்து ரூமும் , முன்னிருந்த முற்றமும் தான் நமது சாம்ராஜ்யம் !
கூரியர்கள் இல்லா அந்நாட்களில் - போஸ்ட்மேன் கொணர்ந்து ஒப்படைக்கும் கதைகளை, இந்த சூரப்புலியே மொழிபெயர்த்த கையோடு அந்நாட்களது முத்து காமிக்ஸில் பணியாற்றிய அச்சுக்கோர்ப்பு பணியாளர்களிடம் ஒப்படைப்பேன் ! அவையெல்லாம் முத்து காமிக்ஸ் பெரும் கும்பகர்ணத் தூக்கத்தில் ஆழ்ந்திருந்த நாட்கள் என்பதால் யாருக்கும் அங்கே வேலையில்லாது - பேப்பர் படித்துக் கொண்டு ஈயோட்டிக் கொண்டிருப்பார்கள் ! சும்மா இருப்பவர்களுக்கு ஏதோ வேலை கொடுத்த மாதிரியாச்சே என்று MC-ன் மேனேஜர் பாலசுப்ரமணியமும் சந்தோஷப்பட - எனக்கோ ஓசியில் வேலையினை ஒப்பேற்றிய சந்தோஷம் ! அந்த அச்சுக்கோர்ப்புகளை பிரிண்ட் போட்டு எடுத்துக் கொண்டு போய் காளிராஜனிடம் கொடுத்து விட்டு அவன் முதுகுக்குப் பின்னே நட்டமாய் நின்றபடிக்கே அவன் வெட்டி, ஒட்டி, கருப்பு மசியைக் கொண்டு பபுள்களையும் ; கட்டங்களையும் போடுவதைப் பராக்குப் பார்ப்பேன் ! ஒரு மாதிரியாய் சகலமும் முடிந்த பின்னே பக்கங்களை பிலிம் எடுக்கத் தூக்கிக் கொண்டு நானும் காளிராஜனும் பிராசசிங் கூடத்துக்குப் படையெடுப்போம் ! அந்த நாட்களில் ஸ்பைடர் சைசிலான ஒரு முழு புக்குக்குமே சேர்த்து பிலிம் எடுக்கும் கிரயம் ரூ.450 தான் என்பதை பைலில் கிடந்த இன்னொரு பில்லில் பார்க்க முடிந்தது ! சுடச் சுட அப்போதே ரொக்கமாய் பட்டுவாடா செய்துவிடுவோம் என்பதால் நாங்கள்லாம் cash parties அந்நாட்களில் !!
இன்னும் சொல்லப் போனால் முதல் 18 மாதங்களுக்கு கணக்கு-வழக்கு என்று எதுவுமே எழுதும் பழக்கமே கிடையாது நம்மிடம் ! ஏஜென்ட்கள் டிராப்ட் அனுப்பினால் மட்டுமே புத்தகங்கள் அனுப்புவோம் ; so அந்த வரவும், பற்றும் tally ஆகிப் போய்விடும் ! அவர்களுக்கென ஏடுகள் maintain செய்யும் அவசியமே இராது துளியும் ! சம்பளமா ? 10 நாட்களுக்கொரு தபா ரூ.145 கொடுத்தால் முடிந்தது பிரச்னை ! பேப்பர் கொள்முதலா ? வாங்கும் போதே சுடச் சுட செக்கும் கொடுத்து விடுவோம் என்பதால் அவர்களது கணக்கில் பாக்கி என்ன உள்ளதென்று பார்க்கும் அவசியங்கள் இராது ! பிரின்டிங் கூலியும் அதே கதை தான் ; பேப்பரைக் கொண்டு போய் எனது பெரியப்பாவின் ஆபீசில் இறக்கிய அடுத்த முப்பதாவது நிமிடமே அவர்களது கணக்குப்பிள்ளைகள் படையெடுத்து விடுவார்கள் - முன்கூட்டியே என்னிடமிருந்து அச்சுக் கூலியைக் கறந்து விடமுடியுமென்ற நம்பிக்கையில் ! மொத்தமே ரூ.1800 கூலி தான் வரும் - ஒரு முழு புக்கினில் 20,000 பிரதிகள் black & white-ல் அச்சிட !!! எந்தச் சாமத்தில் போனாலும் முன்னுரிமையோடு நமது பணிகளை அச்சிட்டு வாங்கிட சாத்தியப்படும் என்பதால், நானுமே அவர்கள் கேட்க்கும் போதே நோட்டுக்களை நீட்டிவிடுவேன் ! So அங்கேயும் "லயன் காமிக்ஸ் முதலாளி" என்று ஒரு கெத்து !! பைண்டிங் பணிகளும் ஒட்டு மொத்தமாய் ரொக்கத்தில் மாத்திரமே செய்திடுவது வழக்கம் ! பாளையங்கோட்டையிலிருந்து ஒரு மூத்த பைண்டர் அந்நாட்களில் என் தந்தையின் அச்சகத்தில் காண்டிராக்ட் பணி செய்வதுண்டு ; அவரையே நாமும் பயன்படுத்திக் கொள்வோம் ! இன்றைக்கு வரையிலும் அவர் பெயர் தெரியாது ; "நைனா....பிரின்டிங் முடிஞ்சது ; கிளம்பி வாங்க" என்று ஒரு போன் அடித்தால் அடுத்த மூன்றாவது மணி நேரத்தில் மனுஷன் இங்கே ஆஜராகியிருப்பார் ! பைண்டிங் செய்ய பெரியப்பா ஆபீசில் இடம் இராதென்பதால் அது மாத்திரம் என் தந்தையின் ஆபீசில் வைத்து நடைபெறும். ஒரு மாதிரியாய்ப் பிரதிகள் தயாராகிய இரவே காளிராஜனின் சித்தப்பா மின்னல் வேகத்தில் பண்டல் போட்டுத் தருவார் நமக்கு ! அப்போதெல்லாம் ஆர்டர் புக்கும் கிடையாது ; ஒரு புடலங்காயும் இராது ! 'ஆங்...திண்டுக்கல் - 200 புக் ; மதுரை : 3000 ; ஈரோடு : 1500 : அறந்தாங்கி : 50 ; சோளிங்கர் : 35 ; புஞ்சைபுளியம்பட்டி : 25 etc..etc' என்று சகலமும் மனப்பாடமாக இருக்கும் என்னுள் ! பண்டல் ஒன்றுக்கு கூலி ரூ.2 & அவை சகலமும் ரயிலில் concession ரேட்டில் புக்காகி ஒவ்வொரு ஊருக்கும் பயணமாகிடும் - நான்கு ரூபாய்களுக்கும் ; ஐந்து ரூபாய்களுக்கும் !! மாலையில் ரயில்வே புரோக்கர் கை நிறைய பாஸ்களோடு ஆபீசுக்கு வரும் போது அட்ரஸ் எழுதி ரெடியாக இருக்கும் கவர்களில் அவற்றை மட மடவென திணித்து RMS எனும் ரெயில்வே போஸ்ட்டாபீஸில் போய் சேர்த்து விட்டு வருவேன் ! ஒற்றை ரூபாய் ஸ்டாம்ப் கூடுதலாய் ஓட்ட வேண்டும் அந்தச் சேவையைப் பயன்படுத்திட - ஆனால் ரயிலில் போகும் போதே sorting செய்து மறுநாள் பட்டுவாடா செய்துவிடுவார்கள் ! பண்டல்கள் போய்ச் சேர ; பாஸும் தபாலில் வந்திட, சூட்டோடு சூடாய் இதழ்கள் கடைகளுக்குச் சென்றுவிடும் !
ஏஜெண்ட்களின் டிராப்ட்களை பேங்கில் கொண்டு போய்ச் சேர்ப்பது ; மாதாமாதம் ஏஜெண்ட்களுக்கு புது இதழ்கள் பற்றிய சுற்றறிக்கை அனுப்புவது ; வரும் கடிதங்களுக்குத் தத்தக்கா -புத்தக்கா என்று ஏதாச்சும் பதில் போடுவது என்று எஞ்சியிருக்கும் வேலைகள் சகலமும் என்னதே ! And இவை சகலத்தையும் என்னோடு இருந்து கொண்டே ஜாலியாய் வேடிக்கை பார்ப்பது எனது தாத்தாவின் பொழுதுபோக்காக இருந்திடும் ! மாதம் பிறந்துவிட்டால் போதும் - முதற்காரியமாக காத்தைப் பிடித்துத் திருகி உட்காரச் செய்து அப்போதைய லாப-நஷ்டக் கணக்குகளைப் பார்க்கச் செய்துவிடுவார் ! 1984 -ன் இந்த வேளையில் என்னிடம் அவர் ஒப்படைத்திருந்தது ரூ.40,000 ரொக்கம் !! ஒவ்வொரு மாதமுமே அந்தப் பணம் எந்த ரூபத்தில் உள்ளதென்ற சரி பார்க்கும் படலம் தவறாது நடந்து விடும். பேங்க்கில் இருப்பு எவ்வளவு ? கதைகள் கையிருப்பு எவ்வளவு ? புத்தக ஸ்டாக்கின் கிரயமென்ன ? பேப்பர் ஸ்டாக் இருப்பின், எவ்வளவுக்கு ? என்று ஒரு லிஸ்ட் போட்டு அதனை தாத்தாவிடம் காட்டியாக வேண்டும் ! முந்தைய மாதத்துக் கணக்கிலிருந்து மறு மாதத்துக் கணக்கில் குறைந்த பட்சம் ரூ.ஐந்தாயிரமாவது ஜாஸ்தியாகிவிட்டிருந்தால் - "ஹை...இது தான் இந்த மாசத்து லாபமா ?" என்று எனது ஆந்தைவிழிகள் மேலும் விரியும் ! தாத்தாவும் திருப்தியோடு கிளம்பிவிடுவார்கள் ! ஆனால் ஏதாச்சும் சொதப்பி விட்டால் உட்கார வைத்து சகலத்தையும் மறுக்கா சரி பார்க்காது விட மாட்டார்கள் ! செப்டெம்பர் மாதவாக்கில் நான் அந்நேரம் ஓட்டிக் கொண்டிருந்ததொரு அலாவுதீன் காலத்து சைக்கிளை விற்று விட்டு, ரூ.970-க்கு ஒரு புது ஹெர்குலிஸ் சைக்கிளை வாங்கியிருந்தேன் ! எங்களது மாதாந்திர பட்ஜெட் மீட்டிங்கில் (!!!) இந்தக் கொள்முதல் எப்படியோ விடுபட்டுப் போக - கணக்கில் ஆயிரம் ரூபாய் துண்டு விழுந்தது போல் தோன்றியது ! "ஆயிரம் ரூபாய் தானே ? என்றெல்லாம் விட தாத்தாவும் தயாரில்லை ; ஏதோ பெருசாய் சம்பாதித்துக் கொண்டிருக்கிறோமென்ற கனவில் திரிந்த இந்தச் சுள்ளான் தொழிலதிபரும் தயாரில்லை ! ஒன்றரை மணி நேரம் அதே கணக்கை போடு போடென்று போட்டு - இறுதியில் சைக்கிள் சமாச்சாரமும் ஞாபகத்துக்கு வர - பேரனுக்கும், பெரியவருக்கும் முகமெல்லாம் மத்தாப்பூ !!
முதன்முதலாய் நமது வங்கிக் கணக்கில் மட்டுமே ரூ.ஐம்பதாயிரத்துக்கு மேலானதொரு தொகை இருப்பில் நின்ற நாளில் எங்களிருவருக்கும் கிட்டிய புளகாங்கிதத்தை இன்றைக்கும் என்னால் அசைபோட முடிகிறது !! பேங்க் இருப்பே ஐம்பதாயிரம் ; அப்புறமாய் கையிலுள்ள ஸ்டாக் ; இத்யாதி..இத்யாதியெல்லாம் சேர்த்து மொத்தம் தொண்ணூறாயிரம் தேறும் என்பது புரிந்த போது - போட்ட முதல் தொகையினை சேதாரமுமின்றி பயல் இரட்டிப்பாகி விட்டானென்ற சந்தோஷம் தாத்தாவுக்கு ! எனக்கோ அந்த பேங்க் பேஸ்புக்கை தலைமாட்டில் வைத்துப் படுத்துறங்காத குறைதான் !! ஆபீசில் இருக்கும்போது ஓசையின்றி மேஜையின் டிராயரைத் திறப்பேன் ; பாஸ்புக்கில் கிறுக்கலான கையெழுத்தில் பதிவாகியிருக்கும் அந்தத் தொகையினைப் பார்ப்பேன் ; சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு லேசாய் ஒரு இளிப்பு இளித்த கையோடு மறுபடியும் டிராயரிலேயே வைத்து விடுவேன் ! அதைவிடப் பெருங்கூத்து - அதுநாள்வரைக்கும் டப்பு-டப்பென்று payment பண்ணி வந்தவனுக்கு, எங்கே இந்த பேங்க் கையிருப்பு 50000-க்குக் கீழே கரைந்து விடுமோ ? என்ற பயத்தில் யாருக்கும் காசையே கண்ணில் காட்டாது, வரும் மணியார்டர் பணங்களிலேயே வண்டியை ஒட்டவும் முனைவேன் ! வாரயிறுதி ஆகிவிட்டால் - ஓவர்டைம் ரூ.60 வரும் ! அன்றைய மணியார்டரில் அந்தப் பட்டுவாடாவை ஒப்பேற்றிய கையோடு, மிச்சமிருக்கக் கூடிய நூறையோ, இருநூறையோ பைக்குள் திணித்துக் கொண்டே ஜாலியாய் இரவு ஒன்பது மணிக்கு ஆபீஸைப் பூட்டி விட்டு காளிராஜனும், நானுமாய்ப் புறப்படும் போது - வானமே எங்கள் காலடியில் என்பது போலொரு ஏகாந்தத்தை உணர முடியும் ! அவனும் என் வயதே என்பதால் - "அண்ணே..அண்ணே..!" என்று தான் கூப்பிடுவான் ; ரொம்பவே நட்பாகயிருப்பான் ! அவன் வீடு எங்கள் வீட்டைத் தாண்டித் தான் என்பதால் வழி நெடுக ஏதேதோ அரட்டையடித்துக் கொண்டே வீடு திரும்புவோம் ! பின்னாட்களில் சொந்தமாய்த் தொழில் செய்யும் பொருட்டு பணியிலிருந்து விலகியவனை, போன வருடம் எதேச்சையாய் சந்தித்த போது ரொம்பவே சந்தோஷமாகயிருந்தது ! மூன்று பசங்கள் ; லாரி புக்கிங் ஏஜென்சி ; நிதானமான வாழ்க்கை என்று வண்டி நிறைவாய் ஓடிக்கொண்டிருப்பதாய்ச் சொன்னான் ! ஜுனியர் எடிட்டரின் கல்யாணத்தின் போது தேடித் பிடித்து அவனிடமும் ஒரு பத்திரிகையை ஒப்படைத்த போது ரொம்பவே சந்தோஷப்பட்டான் !! அந்த முதல் சம்பள வவுச்சரைப் பார்த்த போது ஏகமாகவே nostalgia - எனக்குள் !!
அலமாரியைக் கிண்டக் கிண்ட - அலாவுதீன் விளக்கிலிருந்து வெளிப்படும் பூதங்கள் போல் ஞாபகங்களுமே படையெடுத்தன ! "கபாலர் கழகம்" இதழின் டைப்செட்டிங் பில் (அது தீபாவளிமலர் மாதத்தில் வந்த இதழோ என்னவோ - முதன்முறையாக வெளியே கொடுத்து அச்சுக் கோர்த்து வாங்கினோம்) ; மாலையப்பனுக்கு பெயின்டிங் போடும் பொருட்டு நான் திரட்டிக் கொடுத்த டிசைன் மாதிரிகள் ; சென்னையில் Southern Distributors என்ற நமது அந்நாளைய ஏஜெண்டுக்கு, பணம் அனுப்பத் தாமதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து நான் கோபமாய் எழுதி அனுப்பி ஏழரையைக் கிளப்பிக் கொண்ட லெட்டரின் சாயம் போன நகல் ; பதிப்பகங்களுடனான மங்கிப் போன கடுதாசிப் பரிமாற்றங்கள் ; சிலபல "அடுத்த வெளியீடு" விளம்பரங்கள் ; என்று என்னென்னவோ இரைந்து கிடந்தன ! ஆனால் அத்தனையுமே தம் ஆயுள் முடிந்தநிலையில் ஒடிந்து விழாக் குறையாக ; கரையானுக்குத் தீனியாகிக் கிடக்க - அவற்றை நேற்றைக்குத் தான் எரித்து விட்டோம் ! நினைவுகளைக் கரையான்கள் அரிக்காதவரையிலும் உத்தமம் என்ற பெருமூச்சோடு ஆபீசுக்குத் திரும்பினேன் ! Phewww !!
நினைவுகள் சுகம்மாய் இருந்தாலும், நிதரிசனத்துக்குத் திரும்பிடல் அவசியமன்றோ ? So - இதோ ஜூலையில் காத்திருக்கும் வண்ண இதழ்களின் previews : "லூட்டி with லக்கி " - இந்தாண்டின் நமது ஆண்டுமலர் + டாப் கார்ட்டூன் நாயகரின் முதல் வருகை + அட்டகாசமான ஹார்டகவர் இதழும் கூட ! இரு புத்தம்புது சாகசங்கள் - முழுவண்ணத்தில் என்பதால் கார்ட்டூன் பிரியர்களுக்கு ஒரு கலக்கல் விருந்து காத்துள்ளது என்பேன் ! அதிலும் அந்த "திசைக்கொரு திருடன்" கதை செம ரகளையானது! டால்டன்கள் இரு ஆல்பங்களிலுமே பிரதான பங்கெடுக்கிறார்கள் என்றாலும் "தி.ஓ.தி" மாஸ் தான் ! டால்டன்கள் யோக்கியன்களாகவும், லக்கி முகமூடித் திருடனாகவும் மாறினால் - கூத்துக்குப் பஞ்சமிருக்குமா - என்ன ? State Bank of டால்டன் - இந்த மொள்ளமாறிச் சகோதரர்களை யோக்கியமான பேங்க்கர்களாக மாற்ற முற்படும் ஒரு தாய்மாமனின் கதை ! Again ஒரு சிரிப்பு மேளா தான் ! அட்டைப்படம் - ஒரிஜினல்கள் - நமது டிசைனர் பொன்னனின் கைவண்ணத்தில். ஹார்டகவர் புக்காக்கிப் பார்க்கும் போது இது செமையாய் ஸ்கோர் செய்கிறது ! இதோ - உட்பக்கங்களிருந்தும் previews :
![]() |
| State Bank of Dalton !! |
![]() |
| "திசைக்கொரு திருடன்" |
ஜூலையின் இன்னொரு கௌபாய் பற்றி இனி ! டிரெண்ட் தோன்றும் "பனிமண்டல வேட்டை" - இந்தப் புதியவரின் துவக்க சாகசம் ! இந்த ஆல்பத்தைப் புரட்டும் போது எனக்குத் தோன்றிய முதல் சிந்தனையே : கமான்சே தொடரில் எல்லா கதைமாந்தர்களும் பரட்டைகளாய் உலவியதற்கு இந்தத் தொடர் நேர் contrast ; சகலரும் படிய வாரிய தலைகளோடு நீட்டாய் காட்சியளிக்கிறார்கள் - என்பதே ! கதையுமே அழகாய், நேர்கோட்டில் பயணிக்கிறது - மயக்கும் சித்திரங்களோடும், வர்ணங்களோடும் ! இந்தத் தொடரின் அடுத்த 3 ஆல்பங்களையும் போன வாரம் படிக்க நேர்ந்தது ; remarkably refreshing என்பதே எனது எண்ணமாக இருந்தது ! ஆனால் நான் ஓவர் பில்டப் தந்து விட்டேனென்று பின்னாளில் துடைப்பங்களைத் தேடும் படலமெல்லாம் உங்களுக்கு வேண்டாமே என்பதால் - நீங்களே படித்து தீர்ப்புச் சொல்வது தேவலாம் என்றுபடுகிறது ! இதோ டிரெண்டின் previews :
ஜூலையின் மூன்றாவது வண்ண இதழான "எரிமலைத்தீவில் பிரின்ஸ்" preview-க்களை புக் அனுப்பும் நாளின் பதிவில் கண்ணில் காட்டிவிடலாமென்றுள்ளதால் இப்போதைக்குக் கிளம்புகிறேன் ! Bye all ; have an awesome weekend !! ஆங்....அந்த கலர் டெக்ஸ் 3 குட்டிக்கதைகள் இணைந்த தொகுப்பானது இந்த ஜூலையில் தயாராகியிருக்கும், என்பதைச் சொல்ல மறந்துவிட்டேன் ! சந்தாவில் இல்லா நண்பர்கள் அவற்றை ஆன்லைனில் வாங்கிடலாம் - ஜூலை முதல்வாரத்தில் ! See you around folks !!


















































