Sunday, August 13, 2017

தேடலே ஒரு தொடர்கதையாய்....!

நண்பர்களே,

வணக்கம். இரண்டு நாட்களாய் தொண்டையிலிருந்து கார்பொரேஷன் குழாயைப் போல 'புஸ்ஸ்...புஸ்ஸ்ஸ்' என்று காற்று மட்டுமே வெளிப்பட, "போட்றா மாத்திரைகளை" என்று விழுங்கிவிட்டு ஒரு கும்பகர்ணத் தூக்கத்தைப் போட்டால் - கனவெல்லாம் கலர்கள் !! உங்கள் கற்பனைக் குதிரைகள்  தறி கெட்டுப் போவதற்கு முன்பாய் - அந்தக் "கலர்களுக்கு" கனவில் என்ன ரோல் என்று சொல்லிவிடுகிறேனே !  மஞ்சள் சொக்காய் போட்டுக்கொண்டு ஒருத்தர் தெற்கேயும், வடக்கேயும் ரவுண்ட் அடிக்க ; ஆட்டுத்தாடி ஆரஞ்சு சொக்காய் ஆசாமியோ எதை எதையோ விழுங்கிக் கொண்டிருக்க, தட்டை மூக்குடனான ஊதா சொக்காய் பார்ட்டி பீப்பீ ஊதிக் கொண்டே தலைக்குள் தாண்டவம் நடத்தி வர, ரணகளம் தான் ! ஈரோட்டின்  ஹேங்கோவரா ?  இரத்தக் கோட்டை / TEX 70-ன்சிந்தனைகளா ? என்று சொல்லத் தெரியவில்லை - ஆனால் கண்மூடும் மறு கணமே அந்த அரிசோனா பாலையும்....அதனை ஆராதிக்கும் நம்மவர்களின் முகங்களுமே தென்படுகிறது ! 

But பண்டிகையும் முடிந்தாச்சு ; பட்டாசும் வெடிச்சாச்சு ; பட்சணமும் ருசிச்சாச்சு என்றான பின்னே நடைமுறைக்குத் திரும்பத் தானே வேணும் ? And here we are - காத்திருக்கும் நாட்களையும், இதழ்களையும் எதிர்நோக்கிடும் உற்சாகத்தோடு ! நிறைய விதங்களில் ஆகஸ்ட் ஒரு முக்கிய மாதம் நமக்கு ! புத்தக விழாக்கள், சந்திப்புகள் என்பது ஒருபக்கமிருக்க, மறு ஆண்டின் அட்டவணை தயாரிப்புத் துவங்கும் நேரமும் இதுவே ! வெவ்வேறு சந்தாக்களில் நாயக / நாயகியரைத் தேர்வு செய்வது முதல் பணியெனில் -நாம் தரவிருக்கும் ஒன்றோ - இரண்டோ slot-களை நிரப்பிட அவர்களது கதை வரிசைகளிலிருந்து சுவாரஸ்யமான சாகசங்களுக்காகச் சல்லடை போடுவது இரண்டாம் கட்டம் ! இங்கு தான் படைப்பாளிகளின் சிண்டுகளும், நமது பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளரின் சிண்டும் படாத பாடு பட்டுப் போகும் ! 

லார்கோ ; ஷெல்டன்  தோர்கல் போன்ற தொடர்களில் சிக்கலேதும் கிடையாது - simply becos வரிசைக்கிரமப்படி அத்தனை ஆல்பங்களையும்  போட்டு விடுவது தான் நடைமுறை ! ஆனால் லக்கி லூக் ; சிக் பில் ; ரிப்போர்ட்டர் ஜானி ; ரோஜர் போன்ற ஆஞ்சநேயர் வால் நீளக் கதைவரிசைகளைக்  கொண்டோரின் விஷயங்களில் எக்கச்சக்க research அவசியப்படும் ! இதற்கென நான் கடைபிடிக்கும் யுக்திகள் பற்றி நிறையவே எழுதியுள்ளேன் ; ஆனால் இம்முறை ஒரு புதியதொரு திக்கிலிருந்து சன்னமான ஒத்தாசையும் கிடைத்துள்ளது தான் highlight ! 

2018-ல் வெளிவரவுள்ள ரிப்போர்ட்டர் ஜானி கதையானது அவரது புது அவதாரின்ஆல்பம் # 2 ! இரண்டு ஆண்டுகளுக்கு முன்னிருந்தே இந்த ஜானி version 2.0 புழக்கத்தில் உள்ளதை நாமறிவோம் ; ஆனால் அந்தக் கதையோட்டத்தைப் பற்றிச் சரியானதொரு கணிப்புக்கு வர எனக்கு சாத்தியமாகியிருக்கவில்லை ! ஆனால் திடீரென ஒருநாள் எனக்கு வந்ததொரு சேதியில் - "சார்....நமது ஜானியின் புது வரிசையின் ஆல்பம் # 2 பிரமாதம் ! Our Johnny is back !" என்றிருந்தது ! யாரிடமிருந்து ? என்று பார்த்தால் பாரிஸிலிருந்து நண்பர் ராட்ஜா அனுப்பியிருந்த தகவல் அது ! பிரெஞ்சில் அந்த ஆல்பம் வெளியான சற்றைக்கெல்லாம் அதனைப் படித்துவிட்டுத் தனது அபிப்பிராயத்தைப் பகிர்ந்துள்ளார் என்பதை புரிந்து கொண்டு அந்தத் தகவலைத் தலைக்குள் சேமித்துக் கொண்டேன் சந்தோஷமாய் ! என்ன தான் நாம் ஒரு திறமையான மொழிபெயர்ப்பாளரின் உதவியோடு கதைகளை அலச முனைந்தாலுமே, அவர் நம்மைப் போலொரு காமிக்ஸ் fan அல்ல என்பது தான் யதார்த்தம் ! So நம் வட்டத்துக்கு ஒத்த கதையிது ; ஒத்து வரா சங்கதியிது என்ற நிர்ணயம் அவருக்கு அத்தனை சுலபமல்ல ! "இது இப்டி உள்ளது....அது அப்டி உள்ளது....இனி உங்கள் பாடு" என்று ஒதுங்கிக் கொள்வார் ! நானோ கைதேர்ந்த விஞ்ஞானபூர்வ ஆய்வுகளை செய்து பார்த்து, கொத்துக் கொத்தாய் கேசத்தை இழந்த பிற்பாடு - மகா அஸ்திரமான "இங்கி-பிங்கி-பாங்கி"யை வெளியெடுத்து விடுவேன் ! அந்த அஸ்திரம் சில நேரங்களில் பாகுபலி ரேஞ்சுக்கு அமைந்து விடுவதுமுண்டு ; சில தருணங்களில் "துயில் எழுந்த பிசாசு" ரேஞ்சுக்கு இருந்திடுவதுமுண்டு ! ஆனால் நம் வட்டத்தைச் சார்ந்தவர் ; அயல் மொழியினைத் தாய்மொழி போல் பேசக் கூடியவர் என்ற தகுதிகளைக் கொண்டவரின் பரிந்துரை என் வேலையை ரொம்பச் சுலபமாகி விடுகிறது ! 2018-ன் முதல் டிக் பெற்ற சாகசம் அதுவே ! தொடரும் நாட்களில் , இணையத்தில், வேற்று மொழிகளில் என ஸ்பெஷல் கவனம் தரக்கூடிய கதைகளை படிக்கும் நண்பர்கள் அவை சார்ந்த தகவல்களை நமக்கு அனுப்பி வைப்பது ஆக்கபூர்வமான ஒத்தாசைகளாய் இருக்கும் தானே ? 

எனது தேடல்களை வருஷா வருஷம் லக்கியிடமிருந்து ஆரம்பிப்பது வழக்கம் ; and இம்முறையும் அதே சம்பிரதாயம் தொடர்ந்தது !  கிட்டத்தட்ட லக்கியின் 90 % கதைகள்  Cinebook புண்ணியத்தில் இப்போது ஆங்கிலத்தில் கிடைப்பதால் - எனது எர்வாமாட்டின் ஆர்டர் லேசாக மட்டுப் பெறுகிறது ! படைப்பாளிகளிடமிருந்து ஆங்கிலப் படிவங்களின் pdf பைல்கள் சுலபமாய்க் கிட்டிவிடும் என்றாலும், அசோக சக்கரவர்த்தி காலத்து ஆளான எனக்கு, ஒரிஜினல் புக்கைக் கையில் ஏந்திப் படிக்கும் சுகம் கிடைக்காவிடின் படிக்கும் ஆர்வமும் எழுவதில்லை ! கம்பியூட்டர் திரையில் படிப்பது ; பிரிண்ட் போட்டுப் படிப்பது என்பதெல்லாம் நமக்கு ஒத்து வராத விஷயங்கள் !  So எங்கெங்கெல்லாம் ஆங்கிலப் பதிப்புகள் சாத்தியமோ, அங்கெல்லாம் அதனை தேடிப் பிடித்து வாங்கிவிடுவேன். புக் ஒன்று 932 ரூபாய் என்று Amazon-ல் பார்க்கும் போது காரமான சூப் புரையேறியது போலான பீலிங் எழுவதுண்டுதான் ; ஆனால், அத்தியாவசியங்களில் கஞ்சத்தனம் கதைக்கு ஆகாதே ?!! So கடந்த 4 வாரங்களாக வாயில் புல்லோடு லக்கியும், கோடு போட்ட பனியன்களோடு டால்டன்களும்  காட்சி தரும் கலர் கலரான புக்குகளே எனது சாப்பாட்டு வேளைத் தோழர்களாக இருந்து வருகின்றனர் ! ஜாம்பவான்கள் பணியாற்றிய தொடர்களை ; அவர்களது உச்சங்களின் கோலோச்சலின் போது ருசிக்கும் வரம் நமக்கு அருளப்பட்டிருப்பது லக்கியின் தொடரில் கண்கூடாய்த் தெரிகிறது ! இந்த ஒல்லிப்பிச்சான் ஹீரோவை நாம் நேசிக்கத் தொடங்கிய 1987-ன் போது கதாசிரியராக கோசினியும், ஓவியராக மோரிஸும் பணியாற்றிப் படைத்திருந்த சூப்பர்-டூப்பர் கதைகள் ஒரு வண்டி தயாராகக் காத்திருந்தன ! So சூப்பர் சர்க்கஸ் ; புரட்சித் தீ ; பொடியன் பில்லி ; கௌபாய் எக்ஸ்பிரஸ் ; ஜெஸ்ஸி ஜேம்ஸ் ; கோச் வண்டியின் கதை etc etc என்று தோண்ட தோண்ட புதையல்களாய்க் கிட்டின நமக்கு ! அவற்றையெல்லாம் வரிசைக்குப் போட்டுத் தாக்கிவிட்டு, இப்போது அடுத்த தலைமுறைப் படைப்பாளிகளின் கதைகளை படிக்கும் போது அந்த ZING ...ZIP மிஸ்ஸிங் என்பது அப்பட்டமாய்ப் புரிகிறது ! So "பழைய குருடி..கதவைத் திறடி.." என்ற கதையாக 1960-களின் துவக்கத்தில் உருவான கதைகளுள் நாம் வெளியிடாதவைகளாக என்னவுள்ளது என்ற சல்லடை போடும் படலம் தொடர்கிறது ! கடந்த 10 நாட்களுக்குள் பழசும், புதுசுமாய்க் கலந்து குறைந்தது 15 லக்கி இதழ்களை வாசித்ததன் பலனாய் சில சூப்பர் ஆல்பங்கள் சிக்கியுள்ளன ! So அடுத்த ஓரிரண்டு ஆண்டுகளுக்காவது இந்தப் புலம்பல்கள் அவசியமாகாது என்பேன் ! 

ப்ளூகோட் பட்டாளத்தின் கதைகளுமே இப்போது ஆங்கிலத்தில் வரத் துவங்கியிருப்பதால் அங்கேயுமே பர்ஸ் பழுக்கும் படலம் தொடர்கிறது ! அதனில் ஒரு சுவாரஸ்ய நிகழ்வொன்று ! பொதுவாக நமது பிரெஞ்சு - ஆங்கில மொழிமாற்றப் பணிகள் 1  வருடம் அட்வான்ஸில் ஓடுவது வழக்கம். இப்போது கூட 2018-ன் இறுதிக் quarter-ன் கதைகள் மீதான பணிகள் ஓடிவருகின்றன !  நமது மொழிபெயர்ப்பாளர் மட்டும் டெங்குக் காய்ச்சலில் அவதியுற்றிராவிடின் இந்நேரம் 2019-க்குள் கால் பதித்திருப்போமென்பது நிச்சயம் !! So போன வருடத்தின் ஒரு சமயம், ப்ளூகோட் பட்டாளத்தின் கதையொன்றை தேர்வு செய்து அதனை பிரெஞ்சிலிருந்து மொழிபெயர்த்து வாங்கி விட்டிருந்தேன்.ஆனால் அப்புறமாய் "நானும் சிப்பாய் தான்" கதையின் ஆங்கிலப் பதிப்பு என்கண்ணில் பட, "அட..இதுவே நல்லாத் தானே இருக்கு ? இதையே போட்டு விட்டுப் போவோம் !" என்று தீர்மானித்து செயல்பட்டேன். So அந்த பிரெஞ்சு மொழிமாற்றம் என் பீரோவிலேயே உறங்கி வந்தது ஓராண்டாய் ! இப்போது 2018-க்கான Bluecoats கதையைத் தேர்வு செய்திடும் பொருட்டு - Cinebook-ன்பதிப்புகளில் ஒரு நாலைந்துக்கு ஆர்டர் போட்டு வைத்தேன் ! பார்சல் வந்த சமயம்பார்த்தால் - அதனுள் ஒரு புக், நம்மிடம் ஏற்கனவே மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு நிலுவையில் உள்ள அதே கதை தான் ! தொடர்ந்த நாட்களில் அந்த ஆல்பங்கள் சகலத்தையும் படித்து முடித்த போது - அந்தக் கதையே best ஆகத் தோன்ற, 2018-ன் பட்டியலுக்குள் அது நுழைகிறது ! இப்போது சுவாரஸ்யம் என்னவெனில் என் கையில் ஒரு உயர்தர ; ஒரிஜினல் பிரெஞ்சு மொழியாக்கமும் உள்ளது ; அதே கதைக்கு நம்மூரில் நமது ரெகுலர் மொழிபெயர்ப்பாளர் எழுதித் தந்துள்ள ஸ்கிரிப்ட்டும் உள்ளது ! இதன் தமிழாக்கத்தில் பணியாற்றும் போது இரண்டையுமே வைத்துக் கொண்டொரு ஒப்பீடு செய்து பார்க்கும் ஆவல் எனக்குள்ளே ஏகமாய் உள்ளது ! தாய்மொழியில் இருக்கக் கூடிய புலமைக்கும் , பயின்றதொரு மொழியில் ஏற்படுத்திக் கொள்ளும் புலமைக்கும் மத்தியினில்  போட்டி வைப்பது முறையல்ல தான் ; ஆனால் தற்செயலாய் அமைந்துள்ள இந்த சந்தர்ப்பத்தை உருப்படியாய் பயன்படுத்திடுவதாக உள்ளேன் ! இதற்காகவே கூட ப்ளூகோட் பட்டாளம் ஆண்டின் ஆரம்பத்திலேயே தலைக்காட்டக் கூடும் என்பேன் !  Can't wait to get to work on it !!

கார்ட்டூன் சந்தாவின் "நிச்சயங்கள்" பட்டியலில் சிக் பில்லுக்கும் இடமுண்டு என்பதாலும், இந்தத் தொடரிலும் 70 கதைகள் உள்ளன என்பதாலும், இங்கேயும் வழக்கம் போல் தேடல் படலம் ! ஆனால் சென்றாண்டே மூன்றோ/ நான்கு கதைகளை shortlist செய்து வைத்திருந்தோம் என்பதால் இந்தத் தடவை அந்த மாவைக் கொண்டே தோசை சுட்டு விட்டேன் ! நமது டைகரும் சரி ; டெக்ஸும் சரி - அதிரடி செய்த அதே OK CORRAL-க்கு நமது சிரிப்புப் போலீஸ் படை பயணம் செய்தால் என்னவாகுமோ - அதனை இம்முறை பார்க்கவிருக்கிறோம் ! 

கதைகளுக்குள் சல்லடை போடும் பணியானது - ஒரு புது வரவின் பொருட்டும் இந்த வாரம் முதல் அரங்கேறவுள்ளது ! ஏற்கனவே இந்தத் தொடர் மீது எனக்கொரு (பெரிய) கண் இருந்ததால் - அது பற்றியதொரு பொதுவான ரிப்போர்ட்டை பெல்ஜியத்தில் உள்ள நமது ஆலோசகரிடம் கோரிக் பெற்றிருந்தோம். அதனை இப்போது எடுத்து பரீட்சைக்குப் படிக்கும் பிள்ளையைப் போல மண்டைக்குள் ஏற்ற முயற்சித்து வருகிறேன் ! நமது மொழிபெயர்ப்பாளருமே இந்தத் தொடருக்கு green signal கொடுத்து விட்டால் - ஒரு முற்றிலும் மாறுபட்ட பாணிச் சிரிப்பு மேளா நமக்கு காத்துள்ளது ! "அப்டின்னா கேரட் மீசைக்காரர் கிடையாதா ?" "Smurfs அவ்ளோ தானா ?".." பென்னி பூட்ட கேஸ் தானா ?"... "ரின்டின்க்கு டிங்கு டாங் தானா ?" என்ற கேள்விகளெல்லாம் கார்ட்டூன் காதலர்களின்மனங்களில் இந்நேரம் உதிக்கத் தொடங்கியிருக்கும் என்பது புரிகிறது ! Rest assured guys - நிச்சயமாய் கார்ட்டூன் சந்தா எப்போதும் போலவே colorful & vibrant ஆக இருந்திடும் ! So "யாருக்கு  வீட்டிலிருந்து கல்தா கொடுக்கப் போறானோ இந்த மாங்காய்ப் பயல் ?" என்ற பயம் அனாவசியம் !

எப்போதுமே உச்சபட்ச சிரமம் தலையெடுப்பது 'தல' சார்ந்த தேடல்களில் தான் என்பதில் no secrets ! 70 கதைகள் ; அத்தனைக்குமே  சீரான பக்க நீளங்கள் - என்றதொரு அடையாளம் தாங்கிய குவியலிலிருந்து filter செய்வதே பிராணனில் பாதியை விலையாகக் கேட்கும் முயற்சி எனும் போது, கிட்டத்தட்ட 700-ஐத் தொட்டுப் பிடிக்கவுள்ளதொரு மெ-காஆஆ தொடரிலிருந்து கதைகளை தேர்வு செய்வது என்ன மாதிரியான வேலையாக இருக்கக் கூடுமென்பதை யூகிக்கலாம் தானே ? அதுவும் கதைகளின் பக்க நீளங்கள் பற்றிச் சொல்லவும் வேண்டுமா ? 76 பக்கங்கள் ; 94 பக்கங்கள் ; 110  பக்கங்கள் ; 178 ; 192 ; 220 ; 240 ; 260 ; 330 ; 500+ பக்கங்கள் என்று இஷ்டத்துக்கு பயணிக்கும் தொடரிது ! "கதை செமையாகத் தெரிகிறதே !" என்று பின்தொடர்ந்தால் - "260 பக்கங்கள்" என்று ஒரு ரெண்டும்கெட்டான் விலைக்கு அடிப்போடும் குத்துக்கல் ஜிங்கென்று ஆஜராகி நிற்கும் ! "சரி...மேற்கொண்டு புரட்டுவோம்" என்று போனால் - ஓவிய பாணியில் ஒரு compromise செய்யும் அவசியம் தலைதூக்கி நிற்கும் !  "சார்...என்ன செய்வீங்களோ தெரியாது ; ஆனால் டெக்ஸுக்கு "சித்தப்பாமேரி" தோற்றத்திலுள்ள கதைகள் வேண்டாமே !!" என்ற ஈரோட்டுக் கோரிக்கைகளுள் ஒன்று என் காதில் இன்னமும் ஒலித்துக் கொண்டிருக்க, 'டிக்' அடித்திருந்த 2 கதைகள்  இப்போது waiting list-க்கு இடம் மாறிவிட்டுள்ளன ! கதைகளுள் ஒருவித ஒற்றுமை தொடர்ந்திட வேண்டாமே ; முடிந்த மட்டிலும் variety காட்ட வேண்டுமே என்ற ஆசை தொற்றிக் கொள்ளும் போது - வழக்கமான ஆயுதக் கடத்தல் ; செவ்விந்தியக் கிளர்ச்சி பாணியிலான கதைகளை நாசூக்காய் ஒதுக்கவும் வேண்டி வரும் ! நடப்பாண்டின் TEX  கதைத் தேர்வுகள் தெர்மோகோல் போட்டு மூடப்படாத வைகையையும் பற்றி எரியச் செய்திருக்கவில்லை எனும் பொழுது - தொடரும் ஆண்டுக்கான தேடல்கள் இன்னமுமே உத்வேகத்தோடு இருக்க வேண்டுமே என்ற வேட்கை ஒரு வித வெறியாகவே உள்ளுக்குள் பதுங்கியுள்ளது என்பேன் ! 

In an ideal world - ஆண்டின் சகல இதழ்களுமே சூப்பர் ஹிட்களாகிட வேண்டுமென்பதே எதிர்பார்ப்பாய் இருக்கும் தான் ! ஆனால் நடைமுறையில் 75 % -ஐத் தாண்டி விட்டாலே பெரும் பிரயத்தனம் என்பது புரிந்தாலுமே -காத்திருக்கும் TEX 70 ஆண்டானது ஒரு சரவெடிச் சூறாவளியாய் இருந்திட வேண்டுமென்ற ஆர்வம் என்னைப் பரோட்டா சூரியாக மாறச் செய்கிறது !  ஒரு TEX கதை பட்டியலைப் போட்டு வைப்பது ; அப்புறம் நாலு நாள் கழிந்த பின்னே..."இல்லே.இல்லே ...கோட்டை அழி...முதல்லேர்ந்து பரோட்டா சாப்பிடுறேன் " என்று ஆரம்பிப்பதே பிழைப்பு என்றாகியுள்ளது ! அதுவும் AFTER ஈரோடு - இந்த டெக்ஸ் எதிர்பார்ப்புகளுக்கு பூரண நியாயம் செய்யும்  பொருட்டு - இணையத்தை உருட்டோ உருட்டென்று உருட்டி வருகிறேன் ! "லக்ஷணமான" டெக்ஸ் தான் லட்சியம் - என்ற கூடுதல் கண்டிஷன் நிறையவே சிந்தனைகளை அவசியமாக்குகின்றன ! இந்தாண்டின் ஹிட்டான "இரும்புக் குதிரையில் ஒரு தங்கப் புதையல்" நிறைவான கதையே ; ஆனால் ஓவியர் Jose Ortiz -ன் அந்த  ஓவிய பாணியினை நாம் நிராகரித்திருப்பின், இந்த classic த்ரில்லரைத் தவற விட்டிருப்போம் தானே ?!

அதே போல இன்னொரு மகாசிந்தனையுமே ஒரு நள்ளிரவில் தோன்றியது ! "Variety காட்டுகிறேன் பேர்வழி என்று படுத்துவானேன் ? TEX என்றாலே அதிரடி தானே ? சிவனே என்று "சட்டம் அறிந்திராச் சமவெளி"யைப் போன்ற கதைகளையாகத் தேர்வு செய்து போட்டால் வேலை முடிந்து விடாதா ? " என்று நினைக்கத் தோன்றியது ! ஆனால் மறு கணமே, வெள்ளையுடை தேவதைகள் BG மியூசிக்கோடு - "ஒரு குறிப்பிட்ட template கதைகளாக மட்டுமே தேர்வு செய்வதாயின் -  "கியூபா படலம்" போன்ற சற்றே 'ரிஸ்க்கான' கதைகளை ஓரம் காட்ட வேண்டிவரும் தம்பி ! பர்வால்லியா ?" என்று கேட்பதும் கேட்டது ! வெள்ளை டிரஸ் பொம்மனாட்டிகளையும் சரி, டார்க் கலர் உடுப்பணிந்த லேடீஸ்களையும் சரி - உங்கள் முன்னேயே நிற்கச் செய்து ஒரு தீர்மானத்துக்கு வந்தால் தேவலாம் என்று பட்டது ! சொல்லுங்களேன் guys - 

1.டெக்ஸ் கதைத் தேர்வுகளில் கதைகள் 100% & சித்திரங்கள் 100% ஸ்கோர் செய்ய வேண்டுமென்பதே நியதியா ? அல்லது கதைகள் ஓ.கே. எனில் சித்திரங்களின் cut off மதிப்பெண்களைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாமா ?

2 .மூன்றாம் பக்கத்தைப் புரட்டும் போதே ஒரு நாலைந்து சில்லுமூக்குகள் சேதாரம் கண்டிருக்கும் கதைகள் உங்கள் சாய்சா ?

3.இல்லீங்கோ ; தற்போதுள்ள பாணியில், கதைகளில் variety காட்டும் முயற்சிகளே க்ஷேமம் என்பீர்களா ?

4.மாயாஜாலம் ; அமானுஷ்யம் + TEX >>>>>>> இது சரிப்படாது ! டபுள் ஓ.கே. ! உங்கள் பதில் என்னவோ ?

TEX கதைகளின் இறுதிப் பட்டியலை அடுத்த 7 நாட்களுக்குள் தயார் செய்திட எண்ணியுள்ளதால் - your inputs would help !!

அப்புறம் நமது "இரத்தப் படலம்" வண்ணத் தொகுப்பு பற்றிய update :

ஆன்லைனில் லிஸ்டிங் போட்டது முதலாய் செம விறுவிறுப்பு முன்பதிவில் ! And இதில் ஆச்சர்யமே - payment pattern-ல் தான் ! கிட்டத்தட்ட 75% முன்பதிவாளர்கள் இரு தவணையில் பணம் அனுப்பும் வசதியினை நாடிடாது முழுத் தொகையையும் அனுப்பி வருகின்றனர் !! வெள்ளி & சனி நான் ஆபீஸ் செல்லவில்லை என்பதால் முன்பதிவின் சரியான நம்பரை சொல்லத் தெரியவில்லை ! ஆனால் somewhere between 60 - 70 என்று நினைக்கிறேன் ! திங்கட்கிழமை ஒரு உபபதிவு போடும் அவசியம் நேர்ந்தால், அந்த புக்கிங் பட்டியலையே போட்டுத் தாக்கி விடலாம் ! தொடரும் நமது செப்டெம்பர் இதழ்களிலும்  இது சார்ந்த விளம்பரங்களை வெளியிட்டால் - வலைக்கு விலகி நிற்கும் நண்பர்களும் முன்பதிவில் கலந்து கொள்வார்களென்ற நம்பிக்கை நிறையவே உள்ளது ! முன்பதிவு 300-ஐ தொட்டு  விட்டாலே - கதைகளின் டிஜிட்டல் பைல்களுக்கு ஆர்டர் செய்து விட்டு, வேலைகளைத் துவக்கி விடுவோம்  ! So we are waiting !! இதோ ஆன்லைன் புக்கிங் லிங்க் :

புறப்படும் முன்பாய் குட்டியாய் சில சந்தோஷ updates :

1.நமது கேரவன் அடுத்து மதுரை நோக்கிப் பயணமாகவுள்ளது ! மதுரை புத்தக விழாவினில் பங்கேற்க விண்ணப்பித்துள்ளோம் ; அமைப்பாளர்களின் இசைவு கிடைக்கும் பட்சத்தில் செப்டெம்பர் 1 அங்கே இருப்போம் !

2.சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் நமது இதழ்களுள் ஒரு சிறு பகுதியினை தருவித்துள்ளார்கள் ! விரைவில் லக்கியும்; நீலப் பொடியர்களும், கிட் ஆர்டின்னும் ; ரின்டின்னும் அங்கே சாகசம் செய்திடுவார்கள் !

3. வாசக சந்திப்பின் போது ஜாலியாய் நடத்திய அந்தப்   போட்டிக்குப் பரிசாய் நமது ஓவியங்களை வழங்கியதற்கு நிறைய சந்தோஷ மின்னஞ்சல்கள் !! எங்களைப் பொறுத்தவரை இவை தினப்படி சமாச்சாரங்களாய்த் தோன்றினாலும்,  உங்கள் பார்வைகளில் அவற்றிற்கான மதிப்பீடே தனி என்பது புரிகிறது !! 

Bye all...see you around ! Have a sparkling sunday !



Tuesday, August 08, 2017

ஆமோஸோடு ஆரம்பம் !

நண்பர்களே,

வணக்கம். புது வாரத்தின் தொடக்கத்தோடு பணிகளும், பொறுப்புகளும், வழக்கம் போல் நம்மை ஸ்வாஹா செய்திருக்கும் என்றே நினைக்கிறேன்  ! ஈரோட்டின் நினைவுகள் ஏதாவதொரு ரூபத்தில்  மனதில் நிழலாடிக் கொண்டே இருந்தாலும், வாழ்க்கைச் சக்கரங்கள் சுற்றியாக வேண்டுமல்லவா ? And அதற்குள் தேதி  8 ஆகிவிட்டது ; இன்னமும் மூன்றே வாரங்களுக்குள் செப்டெம்பரின் இதழ்களோடு ஆஜராகிட வேண்டுமே என்ற பரபரப்பும் தொற்றிக் கொண்டு விட, காலையில் SMURFS ; மாலையில் கிராபிக் நாவல் என்று எனது நாட்கள் நகர்ந்து வருகின்றன ! நாளைய விருந்துக்கு நான் பணி செய்து வரும் வேளைதனில், இம்மாதத்து இதழ்களை பற்றிய அலசல்களுக்குள் புகுந்திட்டாலென்ன all ? அதிலும் அந்தக் கண்ணாடிக்காரர் கர்னல் ஆமோசின் இதழிலிருந்து ஆரம்பித்தால் ஆட்டம் சூடு பிடித்து விடுமென்று நினைக்கிறேன் ! 
இந்த spin-off சாகஸத்தைப் பொறுத்த வரையிலும் - வழக்கமான சந்தாவின் ஏதேனுமொரு பிரிவிற்குள் நுழைக்க எனக்கு அத்தனை ரசிக்கவில்லை ! சந்தா E இதற்கு வாகானதொரு களமே என்றாலுமே , அதனில் முற்றிலுமாய் புதிதான கதைவரிசைகளை ; one -shot களை மட்டுமே பயன்படுத்த நினைத்திருப்பதால் கர்னலுக்கு அங்கே இடமிருப்பதாக எனக்குத் தோன்றவில்லை ! So இந்த bookfair slot தான் இதற்கு சரி வருமென்று தீர்மானித்தேன் ! XIII கதையோடு நேரடியாய் இந்த ஆல்பத்துக்கு தொடர்பில்லையெனினும், இரத்தப் படலத்தின் ஒரு மையக்  கதாப்பாத்திரத்தை இன்னும் கொஞ்சம் நெருக்கமாய் நாம் அறிந்துகொள்ள இந்த ஆல்பம் பயன்படக்கூடும் ! இதன் ஓவியர் நமக்கு பவுன்சரின் புண்ணியத்தில் நன்றாகவே பரிச்சயமான Boucq தான் ! ஒரிஜினல் அட்டைப்படத்தோடு, துளியும் ஜிகினா வேலைகளின்றி வெளி வந்திருக்கும் இந்த சீரியஸ் ரக கதை -சர்வதேச உளவுத்துறைகளின் கள்ளன்-போலீஸ் ஆட்டத்துக்கொரு உதாரணம் என்று சொல்லலாம் போலும் ! இவர்கள் விடாக்கொண்டர்கள் என்றால் - எதிராளிகள் கொடாக்கண்டர்கள் !! நிதானமாய் இதனைப் படித்திட நேரம் ஒதுக்குங்களேன் guys ? இதனை ஆன்லைனில் வாங்கிட : http://lioncomics.in/xiii-rathap-padalam/427-xiii-colonel-amos.html
  • அப்புறம் இம்மாத ஹீரோ நமது டைகரை மறுபதிப்பில் ரசிக்க சாத்தியமானதா ?
  • டைலனின் "கொலையுதிர் காலம்" சுகப்பட்டதா ? பக்கத்துக்குப் பக்கம் தெறிக்கச் செய்யும் அந்தக் கொலைகார "கோஹ்லெம்" concept பற்றிய உங்களின் அபிப்பிராயம் என்னவோ ? 
  • நம்மவரின் மறுபதிப்பு - "மரணத்தின் நிறம் பச்சை" ? How did it fare ?
  • And நமது நரைமுடி ரோமியோ ஷெல்டன் சாகசம் பற்றியுமே பேசலாமே ?
Let 's get cracking guys ?! மீண்டும் சந்திப்போம் ! Bye for now !










இது 3  ஆண்டுகளுக்கு முன்பான நமது ஈரோடு ஸ்டால் !! Phew !!

Sunday, August 06, 2017

வந்தனம் ஈரோடு !

நண்பர்களே,

வணக்கம். நிறைய முறை அனுபவித்து விட்ட உணர்வுகளே  ; நிறையத் தடவைகள் பார்த்து விட்ட காட்சிகளே ; நிறையத் தடவைகள் கேட்டு விட்ட வரிகளே ...! ஆனால் ஒவ்வொரு முறையும் அவையெல்லாமே ஒரு புது உச்சத்தைத் தொட முயற்சித்துக் கொண்டே இருக்கும் போது - அவை உண்டாக்கும் தாக்கங்களும் விஸ்வரூபம் எடுத்துக் கொண்டே செல்கின்றன ! துளியும் குன்றா காமிக்ஸ் நேசம், நம் மீதான நிபந்தனைகளற்ற  அன்பு மழை  என்ற உணர்வுகளின் குவியல் ; நெடு நாள் நண்பர்களாய் அங்கே அத்தனை பேரும் கைகோர்க்கும் அந்தக் காட்சிகளின் ரம்யம் ; ஒவ்வொரு சந்திப்பின் போதும் பறக்கும் கேள்விக் கணைகள் -  நான் விவரித்த விஷயங்கள் இவையே என்பதை புரிந்து கொள்ள நாமெல்லாம் லியனார்டோ தாத்தாவாக இருக்க வேண்டியதில்லை தானே ? நேற்றைய ஈரோட்டுப் புத்தக விழாவின் பகலில் நடந்த நமது வாசக சந்திப்புப் படலமும், அதன்பின்பாய் அந்தி புலரும் நேரம் முதல் ஊரடங்கும் வேளை வரைக்கும் தொடர்ந்த அளவளாவல்களும் ; இன்று காலை மறுபடியும் நண்பர் ஸ்டாலினின் இல்லத்தில் தொடர்ந்த கலகலப்புகளும் ஒரு ஆயுளுக்குத் தேவையான சந்தோஷ நினைவுகளைத் தந்துள்ளன  என்றால் அது மிகையில்லை ! 

ஆரம்பிப்பது எங்கே ?  ;  முடிப்பது எங்கே ?  என்று தெரியாது விழிப்பதுமே ஒரு சுவாரஸ்யமான அனுபவமே என்பதை 2012 சென்னைப் புத்தக விழாவிலிருந்தே உணர்ந்து வருகிறேன் ! இந்த ஈரோட்டு விழாவும் அதற்கு விதிவிலக்கல்ல ! முழுவீச்சில் ஒரு வாசக சந்திப்பு நடைபெற்ற  போன வருடம் - இந்த ஒட்டு மொத்த அனுபவமுமே எவ்விதமிருக்குமென்று நம்மில் யாருக்கும் தெரிந்திருக்காது என்பதால் அங்கே அந்த novelty factor பிரதானமாய் இருந்தது ! And அதற்கேற்ப நண்பர்கள் குழுமிட, ஒரு ரகளையான தினமன்று சாத்தியமானது ! ஆனால் எப்போதுமே ஒரு வெற்றியை சுவைப்பதை விட, அதனைத் தக்க வைத்துக் கொள்வதும், அதற்கு மெருகூட்டுவதும் ரொம்பவே சிரமமான காரியங்கள் என்பதில் எனக்குள் ஐயங்களிருக்கவில்லை ! So இம்முறை நமது சந்திப்புக்கு சென்றாண்டுக்கு ஈடு தரும் அளவிலான attendance இருக்குமா ? என்றதொரு கேள்வி எனக்குள் இருக்கவே செய்தது ! ஆனால் எப்போதும் போல் நமது சேந்தம்பட்டிக் குழு ஏற்பாடுகளைக் கையிலெடுத்துச் செய்திட - லார்ட் லபக்தாஸ் போல  ஈரோட்டுக்கு வந்து சேர்வது மாத்திரமே எனது வேலையாக இருந்தது ! And சனிக்கிழமை காலை Le Jardin ஹோட்டலின் அருகாமையில் கண்ணுக்குத் தெரிந்த திசைகளிலெல்லாம் நம் நட்பு வட்டங்கள் மட்டுமே தென்படத் தொடங்க ஆட்டம் துவங்கிவிட்டது புரிந்தது ! எங்கெங்கிருந்தோ அடித்துப் பிடித்து, தத்தம் பணிகளையெல்லாம் ஓரம்கட்டி விட்டு, தம் வீட்டு வைபவம் போல உத்வேகத்தோடு ஆஜராகிவந்த ஒவ்வொருவரையும் பார்த்த போது, சூப் வாளியைப் பார்த்த ரின்டின் கேனைப் போல எனது உற்சாக மீட்டர் தெறிக்கத் தொடங்கியது. நிகழ்ச்சியைத் துவக்கிய சமயம் கணிசமான காலி இருக்கைகள் தென்பட்ட போதும், வெகு சீக்கிரமே அரங்கம் FULL என்பதை உணர முடிந்தது ! அன்றைய விழாவின் மையப் புள்ளி நமது tsi-nah-pah வின் "இரத்தக் கோட்டை" தான் என்பதால் - அதன் ரிலீசோடு நிகழ்ச்சியினை துவக்கம் செய்த போது, எனது தலைக்குள்ளோ - "இது போன வருடத்தின் இதே தருணத்தின் கனவன்றோ ? நாட்கள் தான் எத்தனை துரிதமாய் ஓட்டம் பிடிக்கின்றன !!"  என்ற சிந்தனையே பிரதானமாய் ஓடிக்கொண்டிருந்தது ! இன்னமுமே இதனைத் தடவி, அழகு பார்த்து சிலாகிக்கும் படலத்தை பெரும்பான்மை நண்பர்கள் தாண்டியிருக்கவில்லை என்பதை அறிவேன் ! Maybe நாளை முதலாய் இந்த ஆல்பத்தினுள் புகுந்திட நேரம் கிடைப்பின், அது பற்றிய உங்களது எண்ணங்களை இங்கே பதிவிடுங்களேன் folks ? Hardcover இதழ்கள் என்பதெல்லாம் ஒரு சீமான் தேசத்து, தூரத்துக் கனவாய் இருந்த நாட்களெல்லாம் போய் - நடப்பாண்டில் இது ஐந்தாவது hardcover என்ற நாட்களில் நாமெல்லாம் உலவி வருகிறோம் என்பதை நம்ப முடிகிறதா ? The power of dreams !!











"இரத்தக் கோட்டை" ரீலீஸைத் தொடர்ந்து நான் பேசியது ; சஸ்பென்ஸ் இதழாய் XIII மர்மம் தொடரின் "கர்னல் ஆமோஸ்" இதழை அறிமுகம் செய்தது ;  நடுவே நண்பர்களுக்கு நடத்திய காமிக்ஸ் நினைவுத் திறன் போட்டியின்லூட்டிகள் என்றெல்லாம் நிமிடங்கள் செம ரகளையாய் கழிந்த போதிலும், "அந்த" முக்கிய அறிவிப்பு உண்டா ? இல்லையா ? என்பதிலேயே அநேக நண்பர்கள் தீவிரமாய்க் காத்திருந்தது புரிந்தது ! And "அந்த" அறிவிப்பு எது தொடர்பானது என்பதில் சந்தேகம் வேண்டுமா - என்ன ?  







கனவுகளுக்கொரு ரம்யமான பழக்கம் உண்டு  - ஒன்று நிறைவேறியான பின்னே அதனைத் தொடர்வதோ, ஒரு படி மெகா சைசில் இருப்பது வாடிக்கை என்ற விதத்தில் ! And அது மீண்டுமொருமுறை நிஜமாகியுள்ளது - "இரத்தப் படலம்" ஒரு முழுவண்ணத் தொகுப்பு என்ற ரூபத்தில் ! சிலபல ஆண்டுகளாகவே இந்தக் கோரிக்கையினை நண்பர்கள் முன்வைத்து வருவதும்,  "பார்ப்போமே !" என்று நான்தட்டிக் கழித்து வந்ததிலும் இரகசியமேது ?  இம்முறை அதற்கான தருணம் மெய்யாகவே புலர்ந்திருப்பதாய் நினைக்கத் தோன்றுகிறது - நண்பர்களின் வேகத்தைப் பார்க்கும் பொழுது ! And so - இதோ அதற்கான முறையான அறிவிப்பு !

  • வெறும் 800 பிரதிகளே விற்பனை இலக்கென்ற நிர்ணயத்தோடு 848 முழுவண்ணப் பக்கங்களோடு - 3 தொகுப்புகள் இணைந்ததொரு  பிரத்யேக slipcase-ல் இதனைத் திட்டமிட்டுள்ளோம் !
  • ஒற்றை இதழாய் - இரண்டேகால் கிலோ எடையோடு இந்த இதழைத் தயாரிப்பதில் ஒரு பிரம்மாண்டம் நிச்சயம் இருக்கும் தான் ; ஆனால் தயாரிப்பில் ; சேகரிப்பில் ; வாசிப்பில் ஏகமாய் நடைமுறை சிக்கல்கள் கொண்ட அந்த முயற்சியை விடவும், இந்த 3 தொகுப்பென்ற பாணி நிரம்ப சுலபமென்பதில் சந்தேகங்கள் கிடையாது ! 
  • இந்தத் தொகுப்பின் விலை ரூ.2200 ; slipcase ; கூரியர் / ஏர்மெயில் கட்டணங்கள் தனி !
  • இது முன்பதிவின் விலை மாத்திரமே ; கடைகளில் / புத்தக விழாக்களில் வாங்கிடுவதாக இருப்பின், விலை கூடுதலாய் இருக்கும் !
  • தற்சமயம் ரூ.1200 முன்பதிவுக்கென அனுப்பினால் போதுமானது. பாக்கித் தொகையினை 31/01/2018-க்கு முன்பாய் அனுப்பிடல் வேண்டும்.
  • குறைந்த பட்சம் 400 முன்பதிவுகள் அத்தியாவசியம்  - இந்த முயற்சி நனவாகிட ! So நமது நண்பர் XIII-ன் விதியை தமிழில் நிர்ணயிக்கப் போகும் பொறுப்பு உங்களிடமே இனி !
  • ஜனவரிக்குள் முன்பதிவுகள் ; அடுத்த ஈரோட்டு விழாவினில் இதழ் ரிலீஸ் என்பதே இலட்சியம் ! Maybe ; just maybe - 'தட தடவென' முன்பதிவுகள் கிட்டிடும் பட்சத்தில் ஏப்ரல் 2018-ல் இதனை அழகு பார்க்கும் சாத்தியங்களும் இருக்கலாம் !
  • பாகங்கள் 1 - 18 அதே ஒரிஜினல் மொழிபெயர்ப்போடு வெளிவந்திடும் ! Proofreading பணியினில் நமக்கு ஒரு கூட்டு முயற்சி ரொம்பவே அவசியம்  என்பதால் - இதற்கு உதவிட உங்களை பெரிதும் எதிர்பார்த்திருப்போம் guys !!
  • "இரத்தக் கோட்டை" பாணியிலேயே  - ஓவியர் வான்சின் ஒரிஜினல் அட்டைப்பட டிசைன்கள் மட்டுமே 3 ஆல்பங்களுக்குமே அட்டைப்படங்களாக அமைக்கப்படும். Plus - XIII சார்ந்த செய்திகள் தவிர்த்து இங்கே வேறெந்த விஷயங்களுக்கும் இடமிராது ! Will be a total dedication to XIII !
  • முன்பதிவு செய்திடும் முதல் 200 நண்பர்களுக்கு "Codename மின்னல்" என்றதொரு பேட்ஜ் + wristband உண்டு ! 
  • நண்பர்களின் உதவியோடு இந்த முயற்சிக்கென ஒரு பிரத்யேக FB பக்கமொன்றை உருவாக்கிட எண்ணியுள்ளேன் ! ரெகுலராக XIII சார்ந்த செய்திகள் ; நினைவுகள் ; என இதனில் சுவாரஸ்யத்தைத் தொடர முனைவோம் ! 
  • நாளைய தினமே ஆன்லைன் லிஸ்டிங்கும் செய்து விடுவோம் என்பதால் புக்கிங்கள் சுலபமாகிடக் கூடும் ! 

தொடர்ந்த பொழுதுகளில் - 2018 அட்டவணை பற்றியும், SUPER 6 பற்றியும் ; நமது 'தல' 70 க்கு என்ன திட்டமிடல் என்பது பற்றியும்  - கருத்துக்கள் ; கேள்விகள் ; கோரிக்கைகள் என ஓராயிரம் கணைகள் பறக்கத் துவங்கின ! நேரப் பற்றாக்குறை ஒருபக்கமிருக்க, இந்த சந்திப்பில் உங்களிடமிருந்து நான் கிரகித்துக் கொண்ட சில விஷயங்களை நடைமுறைப்படுத்திப் பார்க்க - back to the drawing board அவசியமென்று நான் நினைத்ததால் - பெவிக்கால் பெரியசாமியாகவே நான் நிறைய நேரத்துக்கு உலவி வந்தேன் ! நிஜத்தைச் சொல்வதானால் - 4 மணி நேர சந்திப்பில் - நேரம் நிறைய மிச்சமிருந்து போயின் என்ன செய்வதென்று தெரியாமல் முழித்து நிற்க  கூடாதே என்ற முன்ஜாக்கிரதையில் 2018 -ன் அட்டவணையையும் கையில் கொண்டே வந்திருந்தேன் ! ஆனால் இன்னும் 4 நேரங்கள் கூடுதலாய் இருந்திருந்தாலுமே அதனைப் பையிலிருந்து வெளியே எடுத்திருக்க அவசியமோ / அவகாசமோ இருந்திராதென்று இப்போது புரிகிறது ! So பத்திரமாய் அது என்னோடே வ்வேடு திரும்புகிறது - சிறுசிறு மாற்றங்களோடும், மெருகூட்டல்களோடும் தீபாவளிக்கு முன்பாய் உங்களைச் சந்திக்கும் பொருட்டு !




இன்னமுமே ஒரு அதிரடி அறிவிப்புக்கான சமாச்சாரமுமே எனது கைப்பைக்குள் பதுங்கியிருந்து - அவசியம் நேர்ந்திடும் பட்சத்தில் ஆஜராகிட ! But அதனிலுமே மெலிதான fine-tuning தேவை என்று எனக்கு உங்களோடு உரையாடிய பொழுதில் பட்டதால் - அதற்கான அவகாசத்தையும் எடுத்துக் கொண்டு இன்னமுமே பக்காவான திட்டமிடலோடு உங்கள் முன்னே இன்னொரு தருணத்தில் ஆஜராவேன் ! So இப்போதைக்கு யூகக் குதிரைகள் திக்குக்கொன்றாய் உலவிட விட வேண்டியது தான் guys !!

ஒரு இலட்சம் விஷயங்கள் தலைக்குள் நீச்சல் அடித்துக் கிடப்பினும், உங்களின் அன்பெனும் அலை அவையனைத்தையும் பின்கொண்டு சென்று விடுவதால் - நிதானத்துக்குத் திரும்பிய பிற்பாடு அவற்றைப் பகிர்ந்திட முயற்சிப்பேன் ! இன்னமுமொரு சந்திப்பை ஒரு ஆயுட்கால நினைவுப் பொக்கிஷமாய் எங்களுக்கு மாற்றித் தந்த உங்கள் ஒவ்வொருவருக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றிகள் folks ! சிறு துளிகள் தான் பெரு வெள்ளங்களுக்கு அச்சாரமன்று படித்திருக்கிறோம் ! அது நிஜமாகும் நாளொன்று புலராது போகாது என்ற நம்பிக்கை முன்னெப்போதையும் விட இப்போது துளிர் விட்டு நிற்கிறது ! நம் பயனத்திற்கொரு புது அர்த்தம் வழங்கும் இந்த ஈரோடு நகருக்கு என்றென்றும் நமது வந்தனங்கள் ! 

See you around all ! "இரத்தக் கோட்டை" பற்றிய விமர்சனங்கள் + ஆகஸ்ட் இதழ்கள் சார்ந்த அலசல்களோடு தொடர்வோமா - வரும் வாரத்தில் ? Bye now ! 

Saturday, August 05, 2017

400..!

நண்பர்களே,

வணக்கம். நிறையத் தடவைகள் பதிவு செய்த விஷயமே ; ஆனாலும் இன்னொரு தபா அதனை நினைவூட்டும் ஆசையை மட்டுப்படுத்த இயலவில்லை ! பெரும் தேவன் மனிடோ சந்தேகமேயின்றி ஒரு காமிக்ஸ் காதலரே ; அது மாத்திரமின்றி நம் மீதும் ஒரு இம்மியூண்டு கூடுதல் அக்கறை கொண்டவரே என்பேன் ! இல்லாவிடின் இந்த "400 " எனும் பதிவுகளின் மைல்கல்லை - ஆண்டின் ஒரு அட்டகாசமான தருணத்தில் - தற்செயலாய் அமையச் செய்வது சாத்தியமாகுமா - என்ன ? 

* ஈரோட்டுப் புத்தக விழா
* இரத்தக் கோட்டை- The Collection ரிலீஸ்
* வாசக சந்திப்பு 

என ஏராளமான highlights நிறைந்ததொரு பொழுதல்லவா இது ? அது மாத்திரமின்றி, இந்த மாதத்துக்கு இன்னமும் ஒரு விதத்தில் ஒரு ஸ்பெஷல் அந்தஸ்துள்ளது - நம் இதழ்களை பொறுத்தவரை ! அது என்னவென்பதை இன்றைய நமது சந்திப்பில் அலசிடுவோமா ?  So நீளத்தில் மிதமானதாய் இருப்பினும், ஒரு landmark moment-ன் பதிவென்ற முக்கியத்துவதோடு இன்றைய பதிவு உலா வரவுள்ளது !

நேற்றைய தினம் (வெள்ளி) உங்களது WWF - "இரத்தக் கோட்டை" முன்பதிவு இதழ்கள் - ஈரோட்டுக்கு நேரில் வர இயலா நண்பர்களைத் தேடி கூரியரில் புறப்பட்டு விட்டன ! So ஈரோட்டில் இன்று இதழ் ரிலீஸ் ஆகும் அதே நேரத்துக்கு, அநேகமாய் அனைவரையுமே  டைகரின் இந்த டாப் சாகசம் எட்டிப் பிடித்திருக்குமென்று நம்புகிறேன் ! Without much ado - இதோ இதழின் அட்டைப்பட முதல் பார்வை ! 
ஓவியர் ஜிரோவின் ஒரிஜினல் டிசைனையே இந்தத் தொகுப்புக்கு அட்டைப்படமாக்குவது என்பது ஆரம்பத்திலேயே நாம் எடுத்த முடிவென்பதால் - இம்முறை எங்களுக்கிருந்த குழப்பமே - 5 பாகங்களின் 5 அட்டகாச ராப்பர்களிலிருந்து எதனை முன்னட்டைக்குத் தேர்வு செய்வது என்பதே ! நிறைய combinations ; நிறைய பரீட்சார்த்த டிசைன்கள் என்றதன் முடிவினில் - இந்த ஆக்கமே அழகாய்த் தோன்றியது எனக்கு ! அந்த ரங்கோலி ரகப் பின்னணியை ரொம்பவே பளிச்சென்று அமைத்தால் உள்ளேயுள்ள நமது நாயகர் மீது பார்வைகள் பாய்வதை விடவும், சுற்றியுள்ள வர்ணத் தோரணங்கள் மீதே கவனங்கள் லயிக்கும் போல் பட்டது ! So அதனை subtle ஆக்கி விட்டு, மெலிதாய் வெள்ளைப் பின்னணியோடு டிசைன் செய்து பார்த்த போது classy ஆகப் பட்டது ! இதழை தயார் செய்து கையில் ஏந்திய பொழுது அந்த கணிப்பில் பிழையில்லை என்றே தோன்றியது எனக்கு ! இனி ultimate ஜூரிக்களாகிய நீங்களே தீர்ப்பெழுத வேண்டும் ! பின்னட்டையுமே தன் பங்குக்கு தக தகக்க - கொஞ்சம் நகாசு வேலைகள் செய்துள்ளோம் ! இதழைக் கையிலேந்திப் பார்க்கும் போது தான் அதனை உணர்ந்திட முடியும் ! So ஒரு அட்டையின் கதையிதுவே !


கதையைப் பொறுத்தவரை - உங்களில் அநேகப் பேர் இதனை மனப்பாடமாக ஒப்பிக்கக் கூடியவர்கள் என்பதால் நான் பில்டப் என்று மொக்கை போடப் போவதில்லை ! மாறாய் - வண்ணத்தில், இந்த பெரிய சைசில் - உங்களின் ஆதர்ஷ நாயகரை ரசிக்கும் அனுபவத்தை இயன்றமட்டுக்கு நம்மோடு பகிர்ந்து கொள்ள மட்டுமே கோரிடுவேன் ! இந்த சாகசத்துக்குமே ஒரு சுவாரஸ்யமான வரலாற்றுப் பின்னணியுள்ளது என்பதை மட்டுமே நீங்கள் புதிதாய்த் தெரிந்து கொள்ளப் போகிறீர்கள் என்பேன் !

இந்த மெகா சாகசத்தை முதன்முறையாக ரசிக்கவிருக்கும் நண்பர்கள் நிச்சயமாய் மச்சக்காரர்களே ! அன்றைக்கு நியூஸ் பிரிண்டில் - கச்சா முச்சா என்ற frame அமைப்புகளில், கருப்பு-வெள்ளையில், பிரித்துப் பிரித்து நாங்களெல்லாம் ரசித்ததை இன்று நீங்கள் அழகாய், தரமாய், 'ஏக் தம்மில்' வாசிக்கப் போவது நிச்சயமாய் ஒரு அதிர்ஷ்ட அனுபவம் என்பேன் ! Happy Reading  guys !!

ஈரோட்டில் நண்பர்களோடு சந்திப்புக்கு நேரமாகி விட்டதால் - இப்போதைக்கு விடை பெற்றுக் கொண்டு கிளம்புகிறேன் ! மீண்டும் சந்திப்போம் ; bye until then !!

And lest I forget - 400 பதிவுகள் என்று ஆஞ்சநேயர் வால் போல இந்தப் "பதிவுகளின் படலம்" நீண்டு சென்று கொண்டிருப்பினும் - தொடர்ந்து உற்சாகத்தோடு என்னை பேனா பிடிக்கச் செய்துவரும் உங்கள் ஒவ்வொருவருக்கும் எனது heartfelt thanks ! நாலு நாள் சேர்ந்தாற்போல ஒரே பாணியை கேட்கும் போதோ, வாசிக்கும் போதோ - "போலே மொக்கைச்சாமி...!" என்று அயர்ச்சி மேலோங்கும் இன்றைய நாட்களில் - சுமார் 70 மாதங்களாய் எனது புராணங்களுக்குச் சளைக்காது காது கொடுத்து வரும் நீங்கள் ஒவ்வொருவருமே நமது பயணத்தின் இன்றியமையாப் பங்குகளே !! Awesome as always - each one of you !!   

Tuesday, August 01, 2017

ஒரு "பட்டியல்" பதிவு !

நண்பர்களே, 

வணக்கம். "பொட்டிகள்"  கிளம்பிவிட்டன - ரொம்பவே சீக்கிரமாய் ! So நாளைய பொழுது 'சிக்'கென்ற புத்தகப் பார்சல் பட்டுவாடாக்கள் நிச்சயம் என்பேன் ! இம்முறை எல்லாமே வண்ணத்தில் & எல்லாமே ராக்கெட் வேக வாசிப்புக் களங்கள் என்பதொரு ஒற்றுமை ! பரபரவென படிக்கும் பழக்கம் கொண்டவராக நீங்கள் இருப்பின், நாளை மதியமே "அப்புறம் ?" என்ற கேள்வியோடு ஆஜராகிடுவது நிச்சயம் என்பேன் ! And ஆன்லைன் லிஸ்டிங்கும் இதோ : http://lioncomics.in/monthly-packs/423-august-2017-pack.html
அப்புறம் இப்போது வரையிலான "இரத்தக் கோட்டை" முன்பதிவுப் பட்டியல் இதுவே ! உங்கள் முன்பதிவு விடுபட்டுப் போயிருப்பேன் உடனே ஒரு மின்னஞ்சல் அனுப்பிடக் கோருகிறேன் ! 


 And here is the Erode list : நேரில் ஈரோட்டில் பெற்றுக் கொள்ளவிருக்கும் நண்பர்கள் பட்டியலில் உங்கள் பெயர் விடுபட்டிருப்பின் நமது அலுவலகத்துக்கு உடனடியாய் ஒரு போன் செய்து விடுங்களேன் - ப்ளீஸ் !
See you around guys ! Bye now !