Monday, June 13, 2016

"ஜெ.ஜே" -க்கு ஜே !!

நண்பர்களே,

வணக்கம். ஒற்றை நாளில் 340+ பின்னூட்டங்களோடு நேற்றைய பதிவை அமர்க்களப்படுத்தி விட்டீர்கள் ! கூடவே LOAD MORE தலைநோவும் கைகோர்த்துள்ளதாலும், ABSOLUTE CLASSICS -ன் இரண்டாவது லக்கி லூக் கதையின் தேர்வையும் உறுதிப்படுத்தும் விதமாயும் இதோ ஒரு மினி , புதுப் பதிவு ! 

By a distance , ஜெஸ்ஸி ஜேம்ஸ் அந்த இரண்டாவது slot -ஐ தனதாக்கிக் கொள்வதால் - செப்டெம்பரில் "ஒரு கோச் வண்டியின் கதை" + :ஜெஸ்ஸி ஜேம்ஸ்" இணைந்த ABSOLUTE CLASSICS இதழானது வெளிவரும் ! So பாக்கிக் கதைகளின் தேர்வுகளை 'நச்'என்று தேர்வு செய்தீர்களெனில் கச்சேரி களைகட்டத் தொடங்கி விடும் !

நேற்றைய பொழுது - சமீபமாய் இங்கே வெளிவந்துள்ள "லக்கியைப்   போட்டுத் தள்ளியது யார் ? " புது கிராபிக் காமிக்ஸின் இத்தாலியப் பதிப்பைப் பார்த்தேன் ! நமது ஒல்லிப்பிச்சான் கொஞ்சம் சத்துப் பிடித்து, 'ஜம்'மென்று சுற்றி வருகிறார் ஒரு சீரியஸ் நாயகரைப் போல !! இதனை மொழிபெயர்க்கக் கோரியுள்ளேன் நம்மவர்களிடம் - ஆங்கிலத்தில் படித்துப் பார்த்து விட்டு இது பற்றியொரு தீர்மானத்துக்கு வரலாம் என்றுள்ளேன் !

திரும்பிய திசையெல்லாம் கடைகளில் வண்டி வண்டியாய் காமிக்ஸ் என்று ரொம்பவே ஜொள்ளு விடச் செய்யும் நகராக இது உள்ளது !! அந்த அந்தரத்தில் ஆரஞ்ச் சாமியைப் பார்த்து கொஞ்சம் தொழில் ரகசியத்தைத் தெரிந்து கொண்டால் நாமும் கூட இங்கே குடி பெயரலாம் போலுள்ளது !! 

And மைசூர்பாகு - ஆளுக்கொரு அரைக்கிலோ பார்சல் - சேலம் & ஈரோடுக்கு !! Bye all !

P.S : இன்றைய  (ஹிந்து) BUSINESS LINE செய்தித்தாளில் நம் இதழ்கள் பற்றியதொரு coverage வந்துள்ளதென நண்பர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார் ! அதன் லிங்க் இருப்பின், இங்கே போட்டு விடலாம் - நாம் எல்லோருமே பார்த்திடும் வகையில் ! BUSINESS LINE -க்கு நமது நன்றிகள் !! 

Sunday, June 12, 2016

பயணத்தில் ஒரு பதிவு !

நண்பர்களே,

வணக்கம். கால்பந்து ஜூரம் அனலாய் அடிக்கும் ஐரோப்பாவில் இந்த வாரயிறுதியினை ஒப்பேற்ற முயற்சித்துக் கொண்டிருக்கிறேன் ! நமது மிஷினரி இறக்குமதிப் பிரிவின் சார்பில் இந்தப் பயணம் ஒரு வாரத்துக்கு முன்பே நிகழ்ந்திருக்க வேண்டும் ! ஆனால் ஒரு டஜன் இதழ்கள் / நண்பர்கள் சந்திப்பு / புத்தக விழா ஏற்பாடுகள் என அத்தனையும் அந்தரத்தில் தொங்கி நின்ற  தருணம் எனக்கு மூட்டையைக் கட்டவே ரசிக்கவில்லை ! ஆண்டவனும் ஒரு காமிக்ஸ் காதலர் என்பதில் ஐயமில்லை என்பதால் - எனது வேலையை  இந்த வாரம் வரை ஜவ்விழுக்க சாத்தியமாக்கித் தந்துவிட்டார் ! And அந்தப் புண்ணியத்தில் நமது கோமானின் வேட்டை நகரில் நேற்றைய பொழுதையும், டெக்சின் தாய்வீட்டில் இன்றைய நாளையும் கடத்திக் கொண்டுள்ளேன் ! கோடையின் வரவும், வாரயிறுதியின் முதல் நாளும் ; யூரோ கோப்பை புட்பால் போட்டிகளும் கைக்கோர்த்து நிற்க - ஊரே திருவிழா கோலம் பூண்டு நிற்க -எனக்கோ மண்டைக்குள் "பதிவு போட்டாகணுமே கோப்பால் !" என்ற குடைச்சல் ! So மிலான் நகரின் மையத்தில்  எழுந்து வரும் பரபரப்பின் ஓசைகளை காதுக்குள் போட்டுக்கொள்ளாமல் சிக்கியதொரு காகிதக் கத்தையில் எழுதிட மிலானின்  அசாத்தியமான தேவாலயத்தின் படிகளில் அமர்ந்து முயற்சித்துக் கொண்டிருக்கிறேன் ! பதிவின் சாரம் தெற்கே புறப்பட்டு, கிழக்கே பயணமாகி , வடக்குப் பக்கமாய்ப் போய் ; மேற்கே U-டர்ன் அடிக்கும் விதமாய் இருப்பின், கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கொள்ளுங்களேன் - இந்த ஒருமுறை மட்டும் ! 

First things first !! இன்னமும் ஒரே நாள் மீதமிருக்கும் BAPASI சென்னைப் புத்தக விழா நம்மைப் பொறுத்தவரை கடவுளின் கொடையே !! வழக்கமான ஜனவரியின் விற்பனை எண்ணிக்கையினைத் தொடும் சாத்தியங்கள் துளியும் இல்லையெனினும், ஆண்டின் மையப் பகுதியில் கடுமையான வைட்டமின் "ப" தட்டுப்பாட்டில் தடுமாறி வரும் நமக்கு - இங்கே கிட்டியுள்ள decent விற்பனையானது அடுத்த மூன்று மாதங்களைக் கடந்து செல்லும் வலுவை நல்கியுள்ளது ! தொடரும் மாதங்களில் நெய்வேலி ; ஈரோடு & மதுரை விழாக்களும் நமக்கு வாயில்களைத் திறந்திடும் பட்சங்களில் - டிசம்பரைத் தொட்டு விடுவோம் - புத்தூர் மாவுக்கட்டுப் போடும் அவசியங்களின்றி ! விற்பனை ஒருபக்கமெனில் - சென்னையில் எப்போதுமே மீடியாவின் பார்வைகளில் நாம் விழும் சாத்தியங்களும் அதிகம் ! இம்முறையும் TV சேனல்கள் ; தினமலர் ; இந்தியன் எக்ஸ்பிரஸ் ; ஹிந்து உள்ளிட்ட நாளிதழ்கள் நம் பக்கம் நிறையவே ஆர்வத்தைக் காட்டின ! இதுதவிர இன்னும் சில சுவாரஸ்யமான மனிதர்களும் நமது ஸ்டாலுக்கு வருகை தந்திருந்தனர் ! அதனில் ஒரு சந்திப்பு கொஞ்சமாய் பலன் தந்திடும் பட்சத்தில் - நமது சிக்கல்களில் ஒரு பகுதி தீர்ந்திடவும் வாய்ப்புள்ளது ! அது நிஜமாகிடும் பொழுது நிச்சயமாய் உங்களுக்குத் தெரிவிப்பேன் ! Last but not the least - அடைமழையோ ; அனலடிக்கும் பகல் பொழுதுகளின் வெப்பங்களோ ; ஜூன் மாதத்தின் பிடுங்கல்களோ - நிஜமான புத்தகக் காதலர்களுக்கு ஒரு பொருட்டே ஆகாது என்பதை அழுத்தமாய்ப் பதிவு செய்துள்ள தலைநகரின் பிரஜைகளுக்கு நமது வணக்கங்கள் உரித்தாகட்டும் ! And தேர்தல் முடிந்த பின்னே இருந்த சொற்ப அவகாசத்தில் விழாவுக்கென அற்புதமாய் ஏற்பாடுகள் செய்ததுக்கும் சரி ; மழை கொட்டித் தீர்த்த நாளின் இரவிலும், தொடர்ந்த பொழுதின் காலையிலும் அசாத்திய ஈடுபாடு காட்டியமைக்கும் சரி - BAPASI -யின்குழுவிற்கு hats off !!ஒவ்வொரு ஸ்டாலின் உரிமையாளர்களுக்கும் கலையில் போன் செய்து, உடனே ஸ்டாலுக்கு வரச் சொல்லித் தகவல் தந்தது மட்டுமன்றி, இரவு முழுவதும் இருளினுள் தட்டுத் தடுமாறிக் கொண்டே இயன்ற அத்தனையும் செய்துள்ளனர் - ஒவ்வொரு ஸ்டாலிலும் உள்ள புத்தகங்கள் நனைந்து போகாதிருக்க ! Awesome !!

"என் பெயர் டைகர்"-ன் hype-லும் ; முத்து மினி இதழ்களின் மறுவருகையின்பொருட்டும்,  திருவிழாவில் காணாமல் போன குழந்தைகளாய் இம்மாதத்து ரெகுலர் இதழ்கள் தத்தளிக்குமோ என்ற சிறு பயம் என்னுள் இருந்தது ! அதிலும், டெக்ஸ் மறுபதிப்பு நீங்கலாய் - பாக்கி இதழ்களில் எல்லாமே சராசரியான நாயக / நாயகிய / நாலு காலார் ஆதிக்கம் தான் என்ற பொழுது எனது கலக்கத்திற்கொரு முகாந்திரமில்லாதில்லை ! ஆனால் அவற்றிற்குக் கிட்டியுள்ள பரவலான thumbs up சந்தோஷம் தருகிறது ! 

COMANCHE - எப்போதும் போலவே சித்திரங்களில் வாங்கிடும் ++++++ மார்க்குகள் - கதையின் (-) (-) (-) களை தனது தோளில் சுமந்து செல்வது புரிகிறது ! "பேசியே பிராணனை வாங்குகிறார்கள்" என்ற விமர்சனம் இந்தக் கதைக்கு சற்றே தூக்கலாய் பதிவாகியுள்ளதையும் கவனிக்கவே செய்தேன் ! In fact எழுதும் போதே "பேச்சைக் குறைங்கடா !" என்று அந்தக் கும்பலிடம் சொல்ல வேண்டும் போலவே தோன்றியது ! Maybe ஆங்காங்கே வசனத்தில் கொஞ்சம் கத்திரி போட்டு - சற்றே crisp ஆக்கிடுவோமா ? என்று கூட நினைத்தேன் ! ஆனால் - 'கதாசிரியரின் கடின உழைப்பை நீ என்னமாய் கபளீகரம் செய்யப் போச்சு ?" என்றொரு புது Surf Exel படலத்துக்கு நாமே தடம் போடுவானேன் ? என்று அந்த ஆசையை ஓரம்கட்டி விட்டேன் !   15 ஆல்பம்கள் கொண்ட தொடரின் மையத்தில் தற்போது நிற்கிறோம் - 8 இதழ்களை வெளியிட்டுள்ள நிலையில் ! பாக்கி 7 கதைகளை இதே போல் ஆண்டுக்கு 2 இதழ்கள் என இன்னமுமொரு 3 ஆண்டுகளுக்குக் கொண்டு செல்லலாம் ! Or maybe ப்ளூகோட்களுக்கு செய்ததைப் போல - ஒரு  சின்ன பிரேக் தந்து விட்டு அதன் மறுவருஷம் கேரட் மண்டையரை மறுபடியும் துவங்கிடலாமா ? (ப்ளூகோட் கதைகள் எல்லாமே one shots எனும் போது - பிரேக் விழுந்தாலும் தொடரவில் பெரியதொரு பாதிப்பு இராது தான் !) ஆனால் COMANCHE விஷயத்தில் நிலவரம் அவ்விதம்  கிடையாதெனும் பொழுது - ப்ரேக் விடுவதில் எனக்கு உடன்பாடில்லை தான் ; but still - உங்கள் அபிப்பிராயங்களையும் தெரிந்து கொள்வது நலமே என்று பட்டது ! What say all ? 

சந்தேகமின்றி ஜூலியா ஜூனின் ஒரு வெற்றிக் கதை ! "வள வள வென்று போனது ; ஆக்ஷன் இல்லை !" என்ற ரீதியிலான விமர்சனங்களை அங்கொன்றும், இங்கொன்றுமாய்ப் பார்க்க இயன்றது தானெனினும் - இது போன்ற இயல்பான, வித்தியாசமான கதைகளை ஆண்டுக்கு ஒருமுறை கூட வெளியிட வேண்டாமென்ற சிந்தனையில் எனக்கு துளியும் உடன்பாடு கிடையாது ! திரும்பின திசையெல்லாம் தொப்பிவாலாக்களும், தோட்டவாலாக்களுமே ராஜ்ஜியம் செய்வது தொடரின் - சலிப்பு நேர்வதைத் தவிர்க்க இயலாது தானே ? So ஜூலியா is here to stay ! 

நிஜத்தைச் சொல்வதானால் - இம்மாதப் பட்டியலில் நமது "4 கால் ; 1 வால் ரின் டின்பார்ட்டி" உங்களிடம் டின் வாங்கிடுவாரோ என்ற பயம் என்னுள் இருந்தது ! பெரியதொரு கதை கிடையாதெனும்   பொழுது - வசனங்களிலும், சித்திர ஜாலங்களிலுமே தலைதப்பித்தாக வேண்டுமென்பதைப் படைப்பாளிகள் அழகாய்ப் புரிந்து வைத்திருந்ததால் இதனை நீங்கள் எவ்விதம் எடுத்துக்கொள்வீர்களோ என்ற சிறு அச்சம் ! ஆனால் ஜாலியான நமது கலாரசிகனை நீங்களும் ஜாலியாய் ஏற்றுக் கொண்டு விட்டதில் எனக்கு ஜாலியோ ஜாலி ! Phew !! 

And விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு லெவெலில் வீற்றிருக்கும் இரவுக் கழுகாரின் ஒரு classic வண்ண மறுபதிப்பெனும் பொழுது - no surprises at all !! "பழிவாங்கும் புயல்"  நம் கையிருப்பில் 6  மாதங்களைத் தாண்டாது  என்பது நிச்சயம் !! A crackerjack !!

முத்து மினி மறுபதிப்புகளும் decent ஆன வரவேற்பைப் பெற்றுள்ளதைப் பார்க்க மகிழ்வாக உள்ளது ! உள்ளூர் ஆக்கங்களே என்றாலும், தரமானவை எனும் பொழுது அவற்றை நீங்கள் ஏற்றுக் கொண்டுள்ளதில் மன நிறைவாய் உணர்கிறோம் ! இந்த "குட்டி விலை / சிம்பிள் format" என்ற தடம் வரும் நாட்களில்  நிறையவே பரிசோதனை முயற்சிகளுக்கு பயன்படக் கூடுமென்றே தோன்றுகிறது ! இந்த 6 பிரதிகளையும் பார்த்த நாள் முதலாகவே தலைக்குள் சுழலும் சக்கரங்கள் உருப்படியாய் ஒரு பலனை அறிவிக்கும் பொழுது - நிச்சயமாய் அதனைப் பகிர்ந்து கொள்வேன் உங்களோடு !!

And finally to the man of the moment : டைகர் !! கூரியர் குளறுபடிகள் ; ஏகப்பட்ட சின்ன இதழ்களோடு வந்திருக்கும் பெரிய இதழ் ; விடுமுறைகள் இல்லா மாதம் - என்ற சிலபல காரணங்களால் "என் பெயர் புலிக்குள்" உங்களில் பலரும் முழுவதுமாய்ப் புகுந்திருக்க வாய்ப்பில்லை என்பது புரிகிறது ! "அட்டைப்படம் அழகு ; black & white பதிப்பு அழகு "என்ற ஆரம்ப கட்ட எண்ணச் சிதறல்களைத் தாண்டி - கதை பற்றி ; இதழ் பற்றி உங்களது பதிவுகளைக் காண ஆவல் ! Maybe இந்த ஞாயிறை அதற்கெனச் செலவிடலாமா ? 

Looking ahead - lion ஆண்டுமலருக்கென ஒரு 3-in -one பிரான்கோ-பெல்ஜிய நாயகர்களின் தொகுப்பு தயாராகி,அதன் பக்கங்கள் என் மேஜையில் ஒரு பகுதியும், இங்கே எனது பெட்டிக்குள் மீதமும் கிடக்கின்றன ! இந்த ஞாயிறை ரோஜரோடு செலவிடப் போகிறேனா ? - பார்த்தாக வேண்டும் ! ஆண்டுமலர் என்ற topic-ல் உள்ள இந்தத் தருணத்தில் - எனக்குள் ரொம்ப நாளாகவே ஒரு சின்னக் கேள்வி ! ஒவ்வொரு ஆண்டும் சத்துக்கு ஏற்றார் போல ஏதோ ஒரு "ஆண்டுமலர்" இதழை நமது லயனில் வழக்கமாக்கியுள்ளோம் ! ஆனால் முத்து காமிக்ஸில் நான் பொறுப்பேற்றுக் கொண்ட புதுசில் -  (1988 ? 1989 ?) ஆண்டுமலர் என்று வெளியிட்டதன்பின்னே ஏனோ அந்த முயற்சி தொடரவில்லை! And உண்ணும் விரதம், சைக்கிள் மறியல் , கண்ணாடியை முறைத்துப் பார்த்தல் என்ற ரீதியில் உக்கிரமான கொரில்லா யுக்திகளை அறிந்து வைத்திருக்கும் "போ.கு" இதுபற்றி பெரியதொரு கொட்டாவியைக் கூட விட்டிருக்கவில்லை என்பதில் எனக்கு ஆச்சர்யமே ! காத்திருக்கும் ஜனவரி 2017 - முத்துவின் 45-வது ஆண்டுமலர் ! ஏதேனும் திட்டமிட்டு தெறிக்க விட்டுப் பார்ப்போமா ? 

ABSOLUTE CLASSICS பற்றிய updates :  "மின்னும்  மரணம்" வண்ணத் தொகுப்புக்கான முன்பதிவுக்குப் பிற்பாடாய் இது போன்றதொரு அட்டகாச  முன்பதிவினை இப்பொழுது தான் பார்க்க சாத்தியமாகியுள்ளது என்று சொல்லலாம் ! முன்பதிவின் எண்ணிக்கை அதற்குள் 100-ஐத் தாண்டி விட்டதென்றே நினைக்கிறேன் ! So நமது இலக்கைத் தொட ரொம்பவெல்லாம் காத்திருக்கத் தேவையிராது என்றே படுகிறது ! இங்கே சின்னச் சின்னதாய் சில விளக்கங்களைச் சொல்லிட நேரம் எடுத்துக் கொள்கிறேனே :

" 2 கதைகள் ; hardcover பைண்டிங் ; விலை ரூ.200" என்ற template தான் இந்த வண்ண ABSOLUTE CLASSICS இதழ்களின் பின்னணியாக இருக்குமென்று சென்ற பதிவிலேயே விளக்கமாய் எழுதியிருந்தேன். நண்பர்களுள் சிலர், "hardcover வேண்டாம் - விலை ரூ.150 என்று வையுங்களேன்"  என்றும், இன்னும் சிலரோ - "hardcover வேண்டாம் - 3 கதைகள் போட்டு, விலையை ரூ.200 என்றே நிர்ணயம் பண்ணுங்களேன்" என்றும் எழுதியுள்ளனர் ! விலையைக் குறைப்பதோ - அதே விலையில் பக்ககளைக் கூட்டுவதோ in effect ஒரே விளைவுகளைச் சார்ந்த தீர்மானங்களே என்பதால் 2 வினவல்களுக்கே ஒரே பதிலே சொல்லிட அவசியமாகிறது ! வெறும் 1000-1200 என்ற printrun களில் செயல்படும் வேளையில் நமக்கு தலை தப்பிப்பதே பெரும் விஷயம் என்றாகிறது ! இன்னும் சொல்லப் போனால் - பிராசஸிங் & அச்சுப் பணிகளில் சிவகாசி ஸ்டைல் அந்தர்பல்டிக்கள் நிறையவே அடிக்க முடிவதால் தான் இந்த முயற்சி சாத்தியம் என்றாகிறது ! பெருநகர அச்சக கட்டணங்களையோ ; நிர்வாகச் செலவுகளையோ நாம் கணக்கிட்டால் அம்பேல் தான் ! So விலை குறைப்பு / பக்க இணைப்பு இரண்டுக்கும் தற்போதைய சொற்பமான பிரிண்ட் ரன்னில் வாய்ப்பில்லை நண்பர்களே ! And "இந்த இதழ்களுக்கு  hardcover ஏனோ ?" என்ற கேள்வியினை கொண்டுள்ளோர்க்கும் பதில் சொல்லிய புண்ணியம் எனதாகட்டுமே ? நமது இதழ்களின் பல பரிணாம மாற்றங்களை / ஏற்றங்களை / இறக்கங்களை அருகிலிருந்து கவனித்து வரும் உங்களுக்கு இதன் பின்னணிக் கதைகள் தெளிவாய்த் தெரிந்திருக்கும் என்பதால் எங்கள் பிழைப்பு லேசாகிறது ! ஆனால் இந்தக் கருத்துப்பரிமற்றங்களுக்கு அப்பால் உள்ள நண்பர்கள் ; புத்தக விழாக்களில் நமது ஸ்டாலில்  புத்தகங்களை வாங்கிட முனையும் casual readers போன்றோருக்கு ஒரு regular இதழுக்கும், அடுத்த limited edition இதழுக்குமான வேற்றுமை தெரிந்திருக்க வாய்ப்பில்லை அல்லவா ? So  ரூ.65 என்ற விலையில் ஒரு லக்கி லூக் ரெகுலர் இதழையும் , வரக்கூடிய ABSOLUTE CLASSICS-ன் 2 லக்கி லூக் கதைகள் அடங்கிய தொகுப்பினை  ரூ.200 என்ற விலையிலும் பார்க்க நேரிட்டால் குழம்பிடுவது இயல்பு தானே ? So இந்த hardcover வடிவமானது - ABSOLUTE CLASSICS இதழ்கள் ஒருவித பிரத்யேக சேகரிப்பின் பிரதிநிதகள் என்பதை வேற்றுமைப்படுத்திக் காட்டும் பொருட்டே ! ஆகையினால் அதனிலும் மாற்றம் இராது guys ! 

பேசிக்கொண்டே பொழுதைக் கரைக்காமல் - உங்கள் முன்பதிவின் வேகங்களுக்கு ஈடுதரும் விதமாய் நாமும் செயலில் இறங்கினால் சாலச் சிறந்தது என்று மனதுக்குப் படுவதால் - முதல் இதழான லக்கி digest -க்கு மட்டும் இன்றே கதைத் தேர்வுகளை இறுதி செய்துவிடுவோமே ? சவ சவ என்ற நிதானக் காத்திருப்புகளுக்கு அவசியமின்றி - ABS CLASS இதழ்கள் வெளிச்சத்தைப் பார்த்திடத் தொடங்கினால் அதுவே கூட முன்பதிவுகளின் துரிதத்தை மேம்படுத்தவும் உதவும் என்று நினைத்தேன் ! So கீழ்க்கண்ட 3 கதைகளுள் ஒன்றைத் தேர்வு செய்வோமா - "கோச் வண்டியின் கதை" யோடு சவாரி செய்திட ? 

1.ஜெஸ்ஸி ஜேம்ஸ்
2.தாயில்லாமல் டால்டனில்லை 
3.கௌபாய் எக்ஸ்பிரஸ் 

இன்றே இதுபற்றிய தீர்மானம் ஆயின், வண்ண டிஜிட்டல் பைல்களுக்கு சுடச் சுட நாளையே ஆர்டர் பண்ணிவிடலாம் ! நிழலை விடவும் வேகமாய்ச் சுடும் கௌபாய் சமாச்சாரத்தில் - நாமும் அந்த வேகத்தைக் காட்டுவோமா ? உங்கள் தேர்வுகளை மேற்படி 3 கதைகளுக்குள் மாத்திரமே வரையறை செய்திடக் கோருகிறேன் folks !! 

"எல்லாம் சரிதான்....ஆனால் நான் எதிரார்த்த மறுபதிப்புகள் இது இல்லையே !!" என்ற ஆதங்கம் தெரிவித்துள்ள நண்பர்களுக்கு : எனது தெளிவான பதில் சென்ற பதிவிலேயே உள்ளது ! ஆதரவும், விற்பனையும் கிட்டிடும் பட்சத்தில் இந்த ABS CLASS சுற்றுக்கள் ரெகுலராகத் தொடரும் - இயன்ற கதைகளோடு ! புழக்கத்திலேயே இல்லாத கதைகளோ, வாசக ஆதரவின் மீட்டரில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தாத நாயகர்களோ உங்கள் தேர்வுகளை இருப்பின் - sorry guys !! 

இறுதியாய் - "பொன்முட்டை...பிரியாணி...அஞ்சப்பர்..." என்ற ரீதியில் அபிப்பிராயம் கொண்டுள்ள நண்பர்களுக்கு : என்றைக்கோ ப்ளஸ் ஒன்னில் படித்த எகனாமிக்ஸ் பாடத்தை எடுத்து விட இதனை ஒரு குறும் வாய்ப்பாக எடுத்துக்எ கொள்கிறேன் ! எப்போதுமே சந்தை வணிகத்தில் ஒரு பொருளின் விலையும் சரி, அதன் உற்பத்தியும் சரி - நிர்ணயம் காண்பது டிமாண்டின் அடிப்படையிலேயே ! இங்கே தற்போது அரங்கேறி வருவதும் அதுவே !ஒரு சொற்பமான வாசகர்களுக்கு  மாத்திரமே இந்த மறுபதிப்புகளில் ஆர்வமெனில் அதற்கேற்ப விலையும் சரி ; எண்ணிக்கையும் சரி  நிர்ணயித்து செயல்பட முனைந்துள்ளோம் ! அள்ளி அடித்து இதனிலும் ஏராளமாய் பிரதிகளை அச்சிட்டு கடைகளில் குவித்தால் -  நெடும் ஓட்டத்தின் பொழுது நமக்கே அதுவொரு இடராய் உருப்பெற்றிடலாம் தான் ! ஆனால் இப்போதோ - இதுவொரு on demand முயற்சி மட்டுமே ! உங்களுள் ஆர்வம் தொடரும் நாள் வரைத் தொடரும் இதுவும் !! அந்த ஆர்வம் வற்றிய நாளில் அரவமின்றி ஆறடிப் பள்ளத்துக்குள் தஞ்சம் கண்டுவிடும் ! So இப்போதைக்கு - let the show begin !!

கிளம்பும் முன்பாய் ஒரு சின்ன போட்டி !! இன்று மதியம் இங்கே மிலானின் மைய வீதியொன்றில் எடுத்த  போட்டோ இது !! 

நம்மாட்கள் இங்கேயும் கலக்குவது சுற்றுமுற்றும் நிற்போரின் முகங்களில் தெரியும் மிரட்சியிலேயே புரியும் !! அந்தரத்தில்  ஆரோகணம் செய்திடும் இந்த ஆரஞ்ச் ஆசாமிக்கு நமது காமிக்ஸ் தொடர்பாய் ஏதேனும் நயமானதொரு  caption எழுதுங்களேன் ?! வெற்றி காண்போருக்கு கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு ஈடாய் எங்கள் நகர மைசூர்பாகு அரை கிலோ பரிசு !! இன்றைய பொழுது மட்டுமே போட்டிக்கான அவகாசம் ! See you around all ! Bye for now !

Saturday, June 04, 2016

ஒரு புதுப் பொழுது.......ஒரு புதுப் பயணம்..!


நண்பர்களே,

வணக்கம். இந்தாண்டு பருவ மழை நன்றாகவே இருக்குமாம் - வானிலை ஆய்வறிக்கைகள் சொல்கின்றன ! இரண்டே நாட்களுக்குள் நான்கு பதிவுகள் எனும் போது - தொடரும் மாதங்களில் நமது காமிக்ஸ் மழை கூட ரொம்பவே செழிப்பாய்  இருக்குமென்று தோன்றுகிறது ! And இது நமது 300-வது பதிவும் எனும் போது - ஏதோவொரு சின்ன மைல்கல்லைத் தொட்டு நிற்பது போல் உணர்கிறேன் ! ஆயிரக்கணக்கான பதிவுகளோடு எத்தனையோ ஆற்றலாளர்கள் வலையுலகில் வலம் வருவதை நானறிவேன் ; ஆனால் காமிக்ஸ் எனும் ஒற்றை agenda-வைத் தாண்டி வேறெதன் பக்கமும் தலை சாய்க்காத நமக்கு "300" என்பது கணிசமான எண்ணிக்கையாகவே தோன்றுகிறது ! இத்தனை பக்கங்களில் ; பதிவுகளில் - ஒரே மாதிரியான எனது எழுத்துகளைத் தொடர்ந்து ஆதரித்து வருவது நிச்சயமாய் ஒரு சுலபக் காரியமல்ல என்பதில் சந்தேகமில்லை ! Thank you ever so much for being such compassionate companions !

முன்னூறாவது பதிவு !! What's new ? என்ற கேள்வி உங்களுள் எழும் முன்பாகவே பதில் தயார் என்னிடம் ! சில மாதங்களாகவே நாம் பேசி வந்த ABSOLUTE CLASSICS முயற்சிகளுக்கொரு செயல் வடிவம் தருவது குறித்து அவ்வப்போது யோசித்து வருவேன் ! ஆனால் அந்தந்த மாதத்துப்   பிடுங்கல்கள் சுற்றி வளைக்கும் போது - அந்தச் சிந்தனைகள் பின்சீட்டுக்குச் சென்றுவிடும் ! அது மட்டுமன்றி - "என் பெயர் டைகர்" இதழினை உங்களிடம் ஒப்படைக்காது அடுத்த முயற்சிக்குள் மூக்கை நுழைப்பதில்லை என்று எனக்கே ஒரு கட்டுப்பாடு போட்டு வைத்திருந்தேன் ! 'எ.பெ.டை' முடிந்தது ; முத்து மினி மறுபதிப்புகளும் ஆயிற்று ; தொடரும் மாதங்களில் மென்னியை முறிக்கும் சிரமமான இதழ்கள் ஏதுமில்லை என்பதால் தலைக்குள் ஒரு இறுக்கம் விடுபட்ட உணர்வு மெலிதாய் மேலோங்கிய போதே ABSOLUTE CLASSICS பற்றிய சிந்தனைகள் வேகம் பிடித்துக் கொண்டன ! ஏற்கனவே தொங்கலில் உள்ள சந்தா Z பற்றிய சிந்தனைகளும் இணை கோட்டில் ஓடத் தொடங்கின  ! ஆனால் Z-ல் எனக்குத் தோன்றிய ஒரே தயக்கம் - அது கொணரக்கூடிய வேலைப் பளுவை சமாளிக்கும் ஆற்றலும், நேரமும் நம்மிடம் உள்ளதா ? என்ற கேள்வி மட்டுமே ! மாதமொரு TEX எனும் பொழுது அந்தப் பக்க நீளங்களையும், 12 மாதங்களுக்கும் அவை கொண்டு வரக்கூடிய பணிச் சுமைகளையும் நான் முழுமையாய் கணிக்கத் தவறி விட்டேன் என்றே சொல்ல வேண்டும் ! என்னதான் செம சுவாரஸ்யமான சுலபமான ; நேர்கோட்டுக் கதைகள் என்றாலும் - 220 பக்கங்களும் ; 330 பக்கங்களும் கொண்ட ஆல்பங்கள் மூச்சு வாங்கச் செய்து விடுவதை கடந்த ஆறு மாதங்களில் உணர்ந்து வருகிறேன் ! So முறையான திட்டமிடலும், முன்கூட்டிய மொழிபெயர்ப்புகளும் செய்திடாது சந்தா Z -ஐ அறிவிப்பது எனக்கு நானே சூன்யம் வைத்துக் கொள்வது போலானது என்று தோன்றியது ! So  ஓசையின்றி நடந்து வரும் அந்தப் பணிகள் ஓரளவுக்கு முழுமை அடையும் நேரமே சந்தா Z -க்கான சரியான தருணமாய் இருக்க இயலும் என்ற புரிதலோடு - ABSOLUTE CLASSICS  பக்கமாய் தலை சாய்த்தேன் !  And இதோ - புதியதொரு பாணியில் நாம் எடுத்து வைக்கப் போகும் எட்டுக்களின் ஒரு சின்ன preview !!

  • மொத்தமாய் 6 ஸ்பெஷல் இதழ்களுக்கும் முன்பதிவு செய்வோருக்கு விலை ரூ.1050/- கூரியர் கட்டணம் கிடையாது!
  • You can pick any 4 out of this 6 too! இந்தப் பட்டியிலில் எல்லா இதழ்களையும் வாங்கித் தான் தீர வேண்டுமென்ற கட்டாயம் கிடையாது ! ஏதேனும் 4 இதழ்களை மாத்திரமே வாங்கிக் கொள்ளும் சுதந்திரம் உண்டு! பிரதிகளின் விலைகளோடு தமிழகமெனில் ரூ.120 & பெங்களுரெனில் ரூ.180 கூரியர் கட்டணங்களுக்கெனச் சேர்த்துக் கொள்ளுங்கள்!
  • இவை அனைத்துமே நிஜமான limited editions! ஒவ்வொரு இதழிலும் சரியாக 1000 பிரதிகள் மட்டுமே அச்சிடப்படும்! டெக்ஸ் & MMS-ல் மட்டும் 1500 பிரதிகள்!
  • ABSOLUTE CLASSICS முயற்சியின் முதல் சுற்று இது! (5 மறுபதிப்புகள்) தொடரும் காலங்களில் இந்தப் பாணியின் சாதக/ பாதகங்களை உள்வாங்கிக் கொண்டு சுற்றுகள் தொடரும்!
  • மறுபதிப்புகளின் கதைத் தேர்வு முழுக்க முழுக்க வாசக விருப்பங்களைச் சார்ந்ததே! தொடரும் நமது ஜூலை இதழ்களிலும் இந்தக் கேள்விகள் எல்லோரிடமும் சமர்ப்பிக்கப்படும்! The choices of the majority will prevail!
  • வேதாளன்‘ இல்லையா?; இரத்தப் படலம் அவ்ளோ தானா?; ‘டிடெக்டிவ் ஸ்பெஷல்‘ பூட்ட கேஸ் தானா? என்ற சஞ்சலங்களுக்குத் தேவை கிடையாது! முயற்சியின் முதல் படி இது! படிகளும், பயண தூரமும் ஏகமாய் காத்துள்ளன நம் முன்னே என்பதில் நம்பிக்கை கொள்ளுங்கள்!
  • இந்த ABSOLUTE CLASSICS அட்டவணை செப்டம்பர் முதல் துவங்கிட பணிகளை முடுக்கிடுவோம் ; அதற்குள் உங்களின் முன்பதிவுகள் வேகமாய்க் கிட்டிடும் என்ற நம்பிக்கையில்   ! 
  • வழக்கம் போல ‘500‘ எனும் மந்திர எண்ணை நாம் நெருங்கிட வேண்டியது அவசியம் !
  • இவை முன்பதிவுகளுக்கும், கையிருப்புள்ள வரையிலும் online & புத்தக விழா விற்பனைகளுக்கும் மாத்திரமே! முன்பணம் அனுப்பிப் பெறும் முகவர்கள் இதனை வாங்கிட இயலும் தான்; ஆனால் உங்கள் நகர முகவர்கள் இவற்றை வாங்கிடுவாரா? இல்லையா? என்ற உத்தரவாதம் கிடையாது!
  • And here’s the icing on the cake! ஆறு ஸ்பெஷல் இதழ்களுக்கும் ஆர்டர் செய்யும் நண்பர்களுக்கு மாத்திரமே ஒரு பிரத்யேக முயற்சி செய்திடவுள்ளோம்! காத்திருக்கும் ABSOLUTE CLASSICS-ன்  டெக்ஸ் மறுபதிப்பின் முதல் பக்கத்தில் (hard cover புக்கைத் திறந்தவுடன் கண்ணில் படும் double-spread ) உங்களது black & white போட்டோவும் பெயரும் அச்சிடப்பட்டு வழங்கப்படும்! Customized imprints என்பதன் நிஜ அர்த்தமாகித் தான் பார்ப்போமே என்ற எங்கள் ஆசையின் வெளிப்பாடு இது! Please note: இது ஆறு இதழ்களையும் முன்பதிவு செய்திடும் நண்பர்களுக்கு மாத்திரமே சாத்தியம்!! And Tex இதழில் மட்டுமே!
  • கடைகளில் மட்டுமே வாங்கிடும் நண்பர்களும் இதனில் இணைந்திட ஆர்வமாயிருப்பின், உங்கள் நகர விற்பனையாளர் மூலமாக முன்பதிவு செய்து கொள்ளலாம் தான் ! 
  • கடல் கடந்த இலங்கை நண்பர்களாயின்- உங்கள் பொருட்டும் இந்த imprint முயற்சியை செய்திடத் தயார் நாங்கள்! ஆறு ஸ்பெஷல் பிரதிகளின் விலையில் பாதித் தொகையினை இப்போதைக்கு உங்கள் விற்பனையாளரிடம் முன்பணமாய் வழங்கிய கையோடு உங்கள் போட்டோக்களையும் மின்னஞ்சல் செய்தால்- சந்தோஷமாய் செயல்படக் காத்திருப்போம்!
  • இதர அயல்நாட்டுச் சந்தாதார நண்பர்களுக்கு: நிச்சயமாய் நீங்களும் நம் திட்டமிடலில் ஒரு இன்றியமையா அங்கமே! இந்த மொத்த project-ம் ஒன்றரை நாட்களுக்கு முன்பான மகாசிந்தனைகளின்  பலன்களே என்பதால் ஏர்மெயில் கட்டணங்களைக் கேட்டறிய அவகாசமில்லை! உங்களுக்கும் இந்த SUPER 6-ல் ஆர்வமெனில் நமக்கொரு மின்னஞ்சல் மட்டும் தட்டி விடுங்கள். எத்தனை சீக்கிரமாய் முடியுமோ- அத்தனை விரைவாய் கட்டணங்களோடு உங்களைத் தொடர்பு கொள்வோம்.
  • இயன்ற மட்டிலும், ஒவ்வொரு கோணத்திலிருந்தும் சிந்தித்துத் தீர்மானங்களைச் செய்திட sincere ஆக முயற்சித்துள்ளேன்! விலைகளையும் மிகுந்த கவனத்தோடும்; நிறைய தயக்கத்தோடும் தான் நிர்ணயித்துள்ளேன் ! Print-run ஏகக் குறைச்சல் என்றாலும் படைப்பாளிகளுக்கு நாம் செலுத்தியாக வேண்டிய ஒரு மினிமம் ராயல்டி கட்டணத்தில் பஞ்சப்பாட்டு பாடுவது இயலாக் காரியம்! So அவர்களது கட்டணங்களில் காக்காய் கடி கடித்து, செலவினங்களைக் குறைக்க வாய்ப்பின்றிப் போகிறது! 
  • மறுபதிப்புகளெனும் தடம் தனியாக ஆரோக்கியமாக உருவாக வேண்டுமெனில்- இவற்றையும் வழக்கம் போல நிறையவே அச்சிட்டு மலையாய் கிட்டங்கிகளில் குவிக்கும் பாணிக்கு 'டாடா' காட்டியே தீர வேண்டுமென்பது நம் நிதிநிலைமைகளும்; மார்கெட் நிலவரங்களும் உருவாக்கும் கட்டாயங்கள் ! அதன் பொருட்டு உங்கள் புரிதல் கிட்டின்- நிச்சயமாய் தடுமாற்றங்களின்றி இந்த ‘மறுபதிப்பு எக்ஸ்பிரஸ்‘ தடதடக்கும்! எப்போதும் போலவே- உங்கள் காமிக்ஸ் நேசத்தையும், நம் மீது நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கையையுமே ABSOLUTE CLASSICS-ன் மூலதனமாக்க விழைகிறேன்! 
  • கொஞ்ச நாட்களாகவே தலைக்குள் மிதந்து கிடந்த சிந்தனைகளுக்கு சொற்ப அவகாசத்தில் வடிவம் கொடுத்துள்ளேன் இந்த அறிவிப்பின் வாயிலாக! So இந்த business மாடலில் நிச்சயமாய் ப்ளஸ் & மைனஸ் இருந்திடலாம் தான்! மைனஸ்(கள்) கண்ணில் படும் பட்சத்தில்- என்னைத் துவைத்துத் தொங்கப் போடவொரு லேட்டஸ்ட் வாய்ப்பாகப் பார்த்திடாது- பதிவிலோ; மின்னஞ்சலிலோ பிழைகளை என் கவனத்துக்குக் கொண்டு வந்தால் அவற்றை சரி செய்ய நிச்சயம் முயற்சிப்பேன்! என் கவனத்துக்கே வர வாய்ப்பில்லா மேடைகளில் நம் குறைகளை காரசாரமாய் அலசிடுவது நமக்கு எவ்விதத்திலும் உதவிடாது என்பதை அறியாதவர்களா நீங்கள்?!
  •  And இன்னமும் காமிக்ஸ் சேகரிப்பின் மீது நண்பர்களின் ஒரு சிறு பகுதியினர் கொண்டிருக்கும் மோகத்தை ஒரு வியாபார வாய்ப்பாகக் கருதி வரும் நமது Scan & Print at home நண்பர்களுக்கு : ‘இவையெல்லாம் கிடைக்க வாய்ப்பேயில்லை என்பதால் நாங்கள் இதனை ஒரு சேவை மனப்பான்மையில் செய்கிறோம்ஜி!‘ என்று இனியும் தொடர்ந்திட வேண்டாமே- ப்ளீஸ்? உங்களிடம் உள்ள பழைய சேகரிப்புகளை ஒரு கோடி ரூபாய்க்குத் தெருக் கோடியில் கடையே போட்டு விற்றாலும் அதனில் எனக்குத் துளியும் விசனம் கிடையாது! ஆனால்- ஸ்கேன் செய்து CD-யாக விற்பது; பிரிண்ட் போட்டு பெயரின்றி விற்பது என்ற தவறுகள் இனியும் தொடர  வேண்டாம்! And இதனை ஒரு விளையாட்டாய்; நட்பின் தொடர்ச்சியாய்; காமிக்ஸ் சேகரிப்பின் அங்கமாய்ப் பார்த்து வரும் நண்பர்களும்- இனி மேற்கொண்டும் இந்த கிரே மார்கெட்  “வியாபாரங்களுக்கு“ (?!) உரமாக இருந்திட வேண்டாமே- ப்ளீஸ்? நிதானமாய், பொறுமையாய் பயணம் செய்தோமேயானால் உங்களின் ‘கனவு இதழ்கள்‘ எல்லாமே- நியாயமாய், எல்லோரையும் எட்டும் விதமாய் நனவாகும் நாட்கள் தூரமில்லை! இன்றைக்கு ஆயிரம் பிரதிகள் மட்டுமே என்ற நிலை மாறி - விற்பனை எண்ணிக்கையினைக் கூட்ட வாய்ப்பு ஏற்படின் - நிச்சயமாய் தற்போதைய விலையினை அதற்கேற்ப குறைப்போம் என்பதிலும் நம்பிக்கை கொள்ளலாம் ! 
இனி கதைகளின் தேர்வுகள் பற்றி :

லக்கி லூக் classics :

நமது ஆதர்ஷ கார்ட்டூன் நாயகரின் 2 கதைத் தொகுப்பினில் "ஒரு கோச் வண்டியின் கதை" ஜூனியர் எடிட்டரின் தேர்வாக உட்புகுகிறது ! மீத ஸ்லாட்டில் எதனை உட்புகுத்தலாம் என்பதை சென்னை வாசக சந்திப்பிலும், நமது ஜூலை இதழிலும் கேட்டு வைப்போம் ; ஏகோபித்த பெரும்பான்மைத் தேர்வே ஜெயம் காணும் ! 

சிக் பில் classics :

"இரும்பு கௌபாய்"   ; "விண்ணில் ஒரு எலி " என்ற தேர்வுகள் நமது முந்தய உரையாடல்களின் பொழுது அடிபட்டதாய் ஞாபகம் ! ஆனால் வலைக்கும், நேரடிச் சந்திப்புகளுக்கும் தூரமாய் நிற்கும் வாசகர்களின் தேர்வுகளும் நமக்கு முக்கியமே என்பதால் - இங்கேயும் ஒரு ப்ரெஷ் வாக்கெடுப்பு எடுத்து விடுவோமே ? தெளிவாய் சிந்தித்து அழகான கதைகளாய்ச் சொல்லுங்களேன் நமது வுட் சிட்டி கோமாளிகளுக்கு ? 

கேப்டன் பிரின்ஸ் classics :

சென்றாண்டு ஈரோட்டின் சந்திப்பின் போது நான் செய்திருந்த promise இது ! நமது பரட்டைத்தலைக் கேப்டனின் மறுபதிப்புகள் வண்ணத்தில் அட்டகாசமாய்த் தோற்றம் தருவதைப் பார்க்கும் போது - வண்ண மறுபதிப்புகளுக்கு ரொம்பவே தகுதியான கதைத் தொடரிது என்பதில் சந்தேகமில்லை எனக்கு ! ஏற்கனவே நாம் reprint செய்து முடித்து விட்ட கதைகள் போக எஞ்சி நிற்பவற்றுள் TOP 2 எதுவோ ? 

TEX WILLER classic !

சென்ற முறை ஈரோட்டில் இரண்டாம் இடத்தைப் பிடித்த "டிராகன் நகரம்" தான் வண்ண மறுபதிப்புக்கு மனதில் நிழலாடும் இதழ் என்றாலும் - "ஒரு அறைக்குள் அமர்ந்திருந்த 50+ வாசகர்களின் தேர்வுகளையே ஏகோபித்த தேர்வாய்க் கருதுவது நியாயமா ?" என்ற ரீதியில் எழுந்த கேள்விகளும், அவற்றின் பின்னணி ஆதங்கங்களும் எனக்கு கவனத்தைக் கோரும் விஷயங்களாய்த் தோன்றின ! So மீண்டும் இந்தக் கேள்வியை இங்கும், நேரிலும், நம் இதழிலும் கேட்டு வைப்பேன் ; the mass choice will prevail ! டெக்சின் எல்லாக் கதைகளின் டிஜிட்டல்  பைல்களுமே கிடைக்கும் என்பதால் எந்தக் கதையாக இருப்பினும் நமக்கு ஒ.கே. தான் ! ஒரே நிபந்தனை - 192 பக்கங்களுக்கு மிகுந்திடாத பக்கங்கள் கொண்ட சாகசமாய் இருத்தல் அவசியம் ! 

Modesty Blaise classic !

சில தருணங்களில், தொடர்ச்சியாய் ஒலிக்கும் குரல்கள், எண்ணிக்கையில் குறைவாய் இருப்பினும் - உரத்துக் கேட்பதன் காரணமாய் ஒரு வெகுஜன வாய்சாகத் தோன்றிடுவதுண்டு  ! நமது வலைப்பக்கத்தில் சமீப காலமாய்க் கேட்டு வரும் "இளவரசிக்கு ஜே " குரல்கள் மிகுந்து வருவதால் - "கழுகுமலைக் கோட்டை" இதழினை வண்ணத்தில் மறுபதிப்பிடும் தீர்மானத்தை எடுத்துள்ளேன் ! விற்பனையிலும் இது சாதித்து விட்டால் - இளவரசி நற்பணி மன்றத்துக்கு ஒரு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருப்போம் ! ஆனால் இளவரசிக்கு மனதில் மட்டுமே இடமென்று நண்பர்கள் தீர்மானிப்பின் - நமது முதல் நாயகியின் எதிர்காலம் முன்னேயொரு கேள்விக்குறி எழுவதைத் தவிர்த்தல் சிரமமாகிடும் ! பார்ப்போமே !! 

Finally onto The MMS !! 

3 வெவ்வேறு தேர்வுகளை முயற்சித்து வருகிறேன் - அடுத்த 3 மாதங்களுக்குள் நாம் எட்டிப் பிடிக்கக் கூடிய 2 மில்லியன் எனும் இந்த மைல்கல்லிற்கு !  அவற்றின் முடிவுகள் அடுத்த 1 மாதத்துக்குள் தெரிந்திடும் என்பதால் அது பற்றிய தீர்க்கமான அறிவிப்பு ஆகஸ்டிலேயே வெளிவந்திடும் ! அதற்கு முன்பாய் வாயை விட்டு, அப்புறமாய் அசடு வழிய வேண்டாமே என்ற முன்ஜாக்கிரதை காரணமாய் இப்போதைக்கு MMS அறிவிப்பளவில் மட்டுமே ! "தோர்கல்   இல்லியா ? ; அது பூட்ட கேஸ் தானா ? வாக்கெடுப்பெல்லாம் எடுத்தீர்களே ? அதுவும் சும்மாகாச்சுதானா ?" என்று உஷ்ணமாய் குரல்கள் இங்கே எழுவது நிச்சயம் என்பதை யூகிக்க முடிகிறது ! அவற்றிற்கு நான் சொல்லக் கூடியதெல்லாம் ஒன்றே : நம் சக்திகளுக்குட்பட்ட முயற்சிகள் எப்போதுமே,உங்களுக்கு THE BEST-ஐ வழங்குவதன் மார்க்கத்திலேயே இருந்திடும் ! வெகு சமீபமாய்  2 மாறுபட்ட கதைகளின் உரிமைகளுக்குக் கல்லை விட்டெறிந்து பார்க்கும் வாய்ப்பு வந்துள்ளதெனும் பொழுது அதனைத் தவற விட மனம் ஒப்பவில்லை ! So ஆகஸ்டில் இது தொடர்பாய் ஒரு இறுதி வடிவத்தை நான் அறிவிக்கும் வரையில் பொறுமை ப்ளீஸ் ! 

And before I wind off, நிறையமுறை நான் சொல்லியுள்ளதையே மறுபடியுமொருமுறை பதிவிட அனுமதியுங்களேன்? எனது பிரதான இலக்கு- இன்றும், என்றும் புதிய ஆக்கங்களே! இன்றைய சமையலுக்கு நான் லீவு போட்டு விட்டால்- நேற்றைய பழையதை மைக்ரோ-வேவில் வைத்துச் சூடு பண்ணிச் சாப்பிடும் கலாச்சாரம் அதிக நாள் ரசிக்காது / ருசிக்காது! So மறுபதிப்பு மோகங்களையும்; புதியனவற்றின் மீதான பார்வைகளையும் நிதானமாய்க் கையாளும் கட்டாயம் என்னிடமுள்ளது! உங்கள் ஆதர்ஷ இதழொன்று தற்போதைய சுற்றில் மறுபதிப்பு காணாது போய் விட்டால் அதன் பொருட்டு சலனம் கொள்ளத் தேவைகளே கிடையாது ; சுற்றுக்கள் தொடரும் தருணங்களில் அவை சிறுகச்சிறுக அட்டவணையில் புகுந்திட வாய்ப்புகள் உண்டென்று நம்பிக்கை கொள்ளுங்கள் ! 

இரு குதிரைச் சவாரியெனும்போது கூடுதல் கவனமும், ரொம்பவே ஜாக்கிரதையும் தேவையென்பதால்- எப்போதையும் விட இப்போது உங்கள் ஆதரவுகளும், வழித்துணைகளும் எங்களுக்குத் தேவை! ‘சிங்கத்தின் பல் போன வயதில்‘ எனும் தொடரை தலீவரும், நீங்களும் மூக்குக் கண்ணாடிகள் போட்டுக் கொண்டு படிக்கும் ஒரு தூரத்து நாளில் இன்றைய இந்தத் தருணத்தை நான் வாஞ்சையோடு நினைவுகூர்ந்திட நிச்சயம் வாய்ப்பு அமையும் என்ற நம்பிக்கையோடு புறப்படுகிறேன்! Thank you again for being with us !! Bye for now !!

P.S : ஒரே நேரத்தில் 3 பதிவுகள் ; மூன்றுமே live topics ! இயன்றவரைக்கும் மூன்றையுமே உயிர்ப்போடு தொடரச் செய்து தான் பார்ப்போமா ?

நண்பர்களோடு ஒரு அற்புதக் காலையும்....அதகள மாலையும் ! இன்றைய காலையில்...சென்னை THREE ELEPHANT புக் ஸ்டோரில் நடந்த நமது புத்தக ரிலீசின் பொழுது...!! 

ஆத்தா...நான் பெயிலாயிட்டேன்...! 
Muthu Mini முதல் பிரதிகள்..! 













க்ரூப் ஸ்டடி பண்ணலாமோ..?

புலி வந்தே விட்டது...!

நண்பர்களே,

வணக்கம். நீண்டதொரு காத்திருப்புக்கு எங்களது நன்றிகளை முதலில் ஏற்றுக் கொள்ளுங்களேன்...! எப்போதென்றே மறந்து போய்விட்ட சென்றாண்டின் ஒரு தருணத்தில் நாம் அறிவித்த "என் பெயர் டைகர்" ஸ்பெஷல் இதழ் இன்று (சனிக்கிழமை) காலை உங்கள் இல்லக் கதவுகளைத் தட்டிடும் !! வண்ணத்திலும், black & white -லும் ஒரே இதழினை ; ஒரே சமயத்தினில் நாம் வெளியிடுவது இதுவே முதல்முறை என்ற வகையில் இதுவொரு குட்டியான லேண்ட்மார்க் என்று சொல்லலாம் ! And கௌபாய் காமிக்ஸ் உலகின் ஒரு மறக்க இயலா நாயகரின் ஒரு புதிய பரிமாணத்தை வெளிச்சம் போட்டுக்காட்டும் இதழ் என்ற வகையிலும் இதுவொரு special moment !! Without much ado - இதோ இதழின் அட்டைப்படங்கள் உங்கள் பார்வைகளுக்கு !



இந்த இதழின் தயாரிப்பினைத் தொடங்கும் முன்பாகவே படைப்பாளிகளிடமிருந்து நமக்கிடப்பட்டிருந்த ஒரே கோரிக்கை - "இயன்றவரையிலும் ஒரிஜினல் அட்டைப்படங்களையே பயன்படுத்துங்கள்" என்பதே  ! இந்தத் தொடரின் துவக்க சாகசத்தின் அட்டையினில் டைகரின் முகம் செம அட்டகாசமாய் இருப்பதைத் தாண்டி, பாக்கி 4 ராப்பர்களுமே அத்தனை ரம்யமில்லை எனும் பொழுது நமக்கிருந்த options ரொம்பவே சொற்பமாகிப் போயின ! சரி - ஒரிஜினல்களையே பயன்படுத்திடுவது என்றான பின்னே, ஒட்டுமொத்தமாய் எல்லா டிசைன்களையுமே ஒன்றிணைத்து விட்டால் என்னவென்று தோன்றியது !  அதன் பலனே நமது பின்னட்டையில் பொன்னன் செய்துள்ள collage ! ஒரு மறந்து போன யுகத்தின் பிரதிநிதியாய் வெளியாகும் WILD WEST COLLECTION-ன் அட்டைப்படம் 'சிங்கு சாங்' வர்ணச் சேர்க்கையில் இருப்பது நன்றாகயிராதென்பதால் சற்றே அடர் வர்ணப் பின்னணியினில் டிசைனைத் திட்டமிட்டோம் ! உங்களுக்குப் பிடித்திருப்பின், பாராட்டுக்களை பொன்னனுக்குச் சொல்லுங்கள் ! And முதல்முறையாக அட்டையினில் ஹோலோக்ராபிக் லேமினேஷன் செய்துள்ளோம் - ஒரு மாறுபட்ட effect கிட்டும் பொருட்டு ! இதழைக் கையில் ஏந்தும் தருணம் மனநிறைவாய் உணர்ந்தீர்களெனில் அதுவே எங்கள் டீமின் மகிழ்ச்சியான தருணமாகிடும் !  And இங்கே சின்னதாயொரு நினைவூட்டலும் / முன்ஜாக்கிரதையும் கூட :

"மின்னும் மரணத்தையும்", பக்கங்கள் கூடுதலான LMS இதழ்களையும் தூக்கிப் பழகிய உங்கள் கைகளுக்கு 260 பக்கங்களேயான இந்த இதழ் பஞ்சாய்த் தோன்றிடலாம் ; ஆகையால் 'தம்' பிடிக்காது இதழினைத் தூக்க முற்பட்டால் நிச்சயம் எமாற்றமிராது ! 

இதழைப் பற்றி ஒரு சின்ன preview-ம் இங்கே : கேப்டன் டைகரின் வெற்றி கண்ட பல கதைகளிலும் பயன்படுத்தப்பட்டிருந்த கதைக்கருக்கள் - வன்மேற்கின் நிஜ நிகழ்வுகளின் மீதான கதாசிரியரின் புனைவுகளே! ஆனால் இம்முறையோ கதாசிரியர் அவதாரமெடுத்திருக்கும் ஓவியர் ஜிரௌ - வன்மேற்கின்   ஒரு படு முக்கியமான நிகழ்வினுள் டைகரை இணைத்தொரு கதையினை உருவாக்கியுள்ளார் ! இந்தக் கதையின் பின்னணி ஒரு நிஜ நகரம் ; கதையில் உலவிடும் அத்தனை மாந்தர்களுமே (டைகரைத் தவிர்த்து) அந்நாட்களில் நிஜமாய் வாழ்ந்தவர்கள் !  கதையின் மையம் சுழல்வது - ஒரு வரலாற்றுப் பிரசித்தி பெற்ற துப்பாக்கி மோதலினைச் சுற்றி ! இங்கே டைகர் மட்டுமே கற்பனைக் கதாப்பாத்திரம் ! So ஒரு இயல்பான நாயகரை ஒரு நிஜ வாழ்வுச் சூழலுக்குள் உலவச் செய்திருப்பதே "MISTER BLUEBERRY " தொடரின் தனித்தன்மை ! இந்தப் பின்னணிகளை சற்றே சுலபமாய்ப் புரியச் செய்திடும் பொருட்டு - "வரலாற்றின் சில சிகப்புக் பக்கங்கள்" என்ற தலைப்பில் - நிறைய நிஜ போட்டோக்களுடன், குறிப்புகளுடன் 4 பக்கங்களை பயன்படுத்தியுள்ளேன் ! அவற்றைப் படித்தான பின்பு ; அந்த போட்டோக்களில் மிடுக்காய்த் தோன்றும் அந்நாட்களது மனிதர்களை உங்கள் மனதுகளில் பதிவு செய்து கொண்டான பிறகு கதைக்குள் புகுந்தால் ஒரு கூடுதல் ஈர்ப்பு கிட்டும் என்பது என் எண்ணம் ! So ஒரு வித்தியாசமான real life + காமிக்ஸ்   அனுபவத்துக்குத் தயாராகிக் கொள்ளுங்கள் ! வழக்கமான காமிக்ஸ் டைம் + கொஞ்சமே கொஞ்சமாய் filler pages நீங்கலாய் இந்த இதழினில் வேறு பக்க நிரப்பிகள் கிடையாது ! பெயருக்கேற்றதொரு கம்பீரம் இதழினில் இருக்கட்டுமே என்பதால் வேறு பக்கமாய்க் கவனங்களைத் திசைதிருப்ப எத்தனிக்கவில்லை ! Hope you will understand folks !



இந்த இதழோடு எனக்குள்ள சின்னதொரு பரிச்சயம் பற்றி ஏற்கனவே உங்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளேனா - தெரியவில்லை ! (அது சரி..ஒரு இடம் - இரண்டு இடம் என்றில்லாது சிக்கின சந்தில் எல்லாம் எழுதித் தள்ளினால் எப்படி ஞாபகம் இருக்கும் ? என்று என் மைண்ட்வாய்ஸே கேட்கிறது !) 1995-ல் நான் பாரிசின் முக்கிய வீதியிலுள்ளதொரு புத்தகக் கடையில் பராக்குப் பார்த்துக் கொண்டு நின்றிருந்த நாளில் தான் இந்தத் தொடரின் முதல் ஆல்பம் ரிலீஸ் ஆகியிருந்தது ! ஒரிஜினல் கதாசிரியர் சார்லியரின் மரணத்தைத் தொடர்ந்து நித்திரையில் ஆழ்ந்துகிடந்த டைகர் தொடருக்கு மறுவாழ்வு கிடைத்திருந்ததால் - தடபுடலாய் விளம்பரங்கள் என்பதோடு - முதல் நாள் ; முதல் பிரதியினில் கதாசிரியர் ஜிரௌ ஆட்டோகிராப் போடுவார் என்றும் ஏற்பாடாகி இருந்தது ! அந்நாட்களில் BLUEBERRY என்ற பெயர், கொசா-முசா artwork கொண்டதொரு கௌபாய்த் தொடர் என்று மட்டுமே எனக்குள் பதிவாகியிருந்தபடியால் - நான் பெரிதாய் ஆர்வம் காட்டிக் கொள்ளவில்லை ! 26 ஆண்டுகள் கழிந்த நிலையில் அதே இதழை வண்ணத்தில் இவ்விதம் வெளியிடுவோம் என்பதையோ ; "டைகர்" என்ற பெயர் நம்முள் இத்தனை பெரிய ஈர்ப்பை ஏற்படுத்தியிருக்கும் என்பதையோ அன்றைக்கு நான் யூகித்திருக்க வாய்ப்பிருந்திருப்பின் நானும் வரிசையில் நின்று ஜிரௌ அவர்களிடம் ஒரு கையெழுத்து வாங்கியிருப்பேன் ! எத்தனை பெரியதொரு வாய்ப்பைத் தவற விட்டுவிட்டேன் !!! Anyways - இன்று நாம் செய்துள்ள இந்த முயற்சியை அவர் விண்ணிலிருந்து பார்த்திடுவார் என்ற நம்பிக்கையோடு மனதைத் தேற்றிக் கொள்கிறேன் ! ஒரு மகா படைப்பாளிக்கு இந்த இதழ் நமது சின்னஞ்சிறு சமர்ப்பணமாகட்டும் ! Happy Reading all !! 

இன்று பகலில் சென்னையில் இந்த இதழினையும், முத்து மினி காமிக்ஸ் 6 இதழ்களையும் ரிலீஸ் செய்த கையோடு நமது ஸ்டாலில் விற்பனையும் துவக்கிடுவோம் ! சென்னையில் நீங்கள் இருப்பின், we would love to see you!! 

அப்புறம் - ஒரே நேரத்தில் ஜூன் மாதத்து ரெகுலர் இதழ்களும், டைகரின் இந்த ஸ்பெஷல் இதழும் வெளியாகியுள்ள சூழலில் - ஒவ்வொன்றின் விமர்சனங்களையும் அந்தந்தப் பதிவுகளிலேயே தொடர்ந்திடுவோமா ? So "ஜூனின் சூரர்கள்" பதிவினில் - ஜூன் விமர்சனங்களையும் ; இந்தப் பதிவினடியில் "எ.பெ.டை" விமர்சனங்களையும் கொண்டு செல்வோமே ? இரண்டிலுமே நான் பார்வைகளை ஓட விடுவேன் ; நீங்களுமே இரண்டையுமே தொடர்ந்திடலாமே ? Bye for now all !

Thursday, June 02, 2016

ஜூனின் சூரர்கள் !

ஹலோ...ஹலோ...மைக் டெஸ்டிங்.....! கடலைமிட்டாய்க் காவியமாய் சென்ற பதிவு அமைந்திட - ஜூன் மாதப் புது இதழ்கள் பற்றி யாருக்குமே ஞாபகமின்றிப் போய் விட்டது !! ஜூலியாவும், ரின்டின்னும், ரெட் டஸ்டும், இரவுக் கழுகாரோடு உங்கள் இல்லங்களை எட்டிப் பிடித்து விட்டார்களா ? நேற்றைக்கே கூரியர்கள் அனைத்தும் சீக்கிரமாகவே கிளம்பி விட்டதால் - இந்நேரம் நிச்சயம் பட்டுவாடாக்கள் ஆகியிருக்க வேண்டும் !

இந்தப் பகுதியினை இம்மாத ரெகுலர் இதழ்களின் பொருட்டு பயன்படுத்திக் கொள்வோமே நண்பர்களே ?! 
P.S : சென்னையில் என் பெயர் டைகர் இதழினைப் பெற்றுக் கொள்ள விருப்பம் தெரிவித்து மிகக் குறைவான மின்னஞ்சல்களே வந்துள்ளன இது வரையிலும் ! LAST CHANCE !! இன்றைக்கு இரவுக்குள் ஒரு மெயில் தட்டி விட்டால் பிரதிகள் சென்னை வந்தடையும் ; இல்லையேல் கூரியர்களின் உங்களின் இல்லங்களுக்கே பயணமாகிடும் guys !