நண்பர்களே,
வணக்கம். இது கூட ஒரு விளையாட்டென்று யாராவது சொன்னால் மண்டை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றதே...! இதயம் தட தடக்க ; கடித்தது போக மீதமிருக்கும் நகத்தையும், விரலையும் வைத்துக் கொண்டு முடிந்ததை டைப் செய்கிறேன் !! 'ஏதேனும் ஒரு அதிசயம் நிகழ்ந்து எப்படியேனும் நமது அணி வெற்றி காண வேண்டுமே தெய்வமே !' என்ற நம் ஒவ்வொருவரின் பிரார்த்தனைகளும் பயனின்றிப் போக - 'இதுவும் கடந்து போகும்' என்றெல்லாம் தத்துவம் பேசிட இதயம் மறுக்கின்றது !!
ஆனால் வெற்றியோ-தோல்வியோ - பூமி சுழன்றே தீர வேண்டும் ; காலை புலர்ந்தே ஆக வேண்டும் ; வழக்கம் போல் வயிறு பசிக்கவே செய்யும் ; கொத்தவால்சாவடியைக் கண்முன்னே கொணரும் முயற்சியில் "அந்த அலசல் - இந்த அலசல்" என்ற பெயரில் வெள்ளையும், சொள்ளையுமாய் நிறையப் பேர் - உச்சஸ்தாயியில், ஏக சமயத்தில் அரற்றித் தள்ளுவதை டி-வி.க்களில் எப்போதும் போல் பார்த்திடத் தான் போகிறோம் ; "இந்த வருஷம் வெயில் மண்டையைப் புளக்குதுலே பங்காளி ?" என்ற கேள்விகளை ஆங்காங்கே கேட்டுக் கொண்டே சிலபல கிலோ தர்பூசணிகளை துவம்சம் செய்யத் தான் போகிறோம்..! So அந்தப் பட்டியலோடு - மாதத்தின் முதல் தேதியினை அறிவிக்கும் விதமாய் ஒரு டப்பாவோடு, கூரியர் நண்பர்கள் நாளைக் காலை உங்கள் இல்லங்களின் கதவுகளைத் தட்டப் போகும் வைபவத்தையும் சேர்த்துக் கொள்வோமா ?
இன்று காலையே, சீக்கிரமாகவே உங்கள் சந்தாப் பிரதிகள் சகலமும் கூரியரிலும், பதிவுத் தபால்களிலும் பயணங்களைத் துவக்கி விட்டன என்பதால் நாளைய தினம் உங்கள் அனைவரின் கைகளிலும் நமது ஏப்ரல் இதழ்கள் குடியிருக்கப் போவது நிச்சயம் ! ஏகமாய் heavyweights நிறைந்த மாதம் இது என்பதோடு - முதல் முறையாக மெகா சைசில் நம் மெகா ஸ்டார் வலம் வரவிருக்கும் ஆல்பமும் இம்மாதப் பட்டியலில் சேர்த்தி என்பதால் - உங்களின் முதல் அபிப்பிராயங்களை ஆர்வமாய் எதிர்நோக்கிக் காத்திருப்போம் ! அது மட்டுமன்றி - 'தல'யின் இந்த ஸ்பெஷல் தருணத்தை காலத்துக்கும் நினைவில் நிலைக்கச் செய்யும் விதமாய் - SELFIE WITH டெக்ஸ்# என்ற பெயரோடு ஒரு க்ளிக் அனுப்புங்களேன் all ? அவற்றை நமது FB பக்கத்தில் வலையேற்றம் செய்வதோடு மட்டுமன்றி - இத்தாலிக்கும் அனுப்பி வைக்கலாம் ! இதோ என் சகோதரனின் குட்டீஸ்களின் கிளிக்கோடு ஆட்டத்தை ஆரம்பிக்கிறேன் !! (நீங்களும் இதற்கென இல்லத்துக் குட்டீஸ்களை நாடிட வேண்டுமென்றெல்லாம் இல்லை ; கையில் டெக்ஸ் சகிதம் உங்களையே ஒரு க்ளிக்கி அடித்தாலே போதுமே ! )

And of course - இதழ்களின் தயாரிப்புத் தரங்கள் பற்றி ; முதல் பார்வையின் மதிப்பீடுகள் பற்றித் தெரிந்து கொள்ள எப்போதையும் இட இப்போது கூடுதல் ஆர்வத்துடன் தேவுடா காத்துக் கிடப்போம் ! So நாளைய பொழுது சுவாரஸ்யமான பொழுதாய் அமைய வேண்டுமென்ற வேண்டுதலோடு புறப்படுகிறேன் guys ! ஞாயிறு காலை புதிய பதிவோடு உங்களை சந்திக்கிறேன் ! And இயன்றால் ஞாயிறு காலை 10-12 -ல் இம்மாத இதழ்களுள் லார்கோவையோ ; டெக்சையோ அலசும் வேலையைக் கையில் எடுத்துக் கொள்வோமா ? Do let me know please !
புறப்படும் முன்பாய் - இதோ ஸ்பைடர் caption போட்டியின் வெற்றி பெறும் என்ட்ரி ! சிலபல தீவிர ஸ்பைடர் ரசிகர்களின் கொலைவெறிக்கு ஆளாகிட எனக்குத் துணைக்கு இம்முறை சிக்கியிருப்பது ஈரோட்டுப் பூனையார் ! வாழ்த்துக்கள் நண்பரே !
 |
| Artwork : Podiyan. Caption : ERODE Vijay |
P.S : இம்மாதத்து ஆன்லைன் விற்பனை லிஸ்டிங் : http://lioncomics.in/monthly-packs/20794-april-2016-pack.html