நண்பர்களே,
வணக்கம். ஏழென்ன – மாதம் பதினேழு இதழ்கள் கூடத் தயாரித்து விடலாம் போலும் ; box-set – டிபன் கேரியர் செட்கள் எல்லாம் ரெடி செய்து விடலாம் போலும் ; ஆனால் ஒரு புத்தக விழாவிற்குச்
சென்று நண்பர்களுடன் பொழுதைக் கழித்தான பின்னர் – அந்த சந்தோஷங்களையும், மன நிறைவுகளையும் வார்த்தைகளில் வடிப்பது
என்பது அதையெல்லாம் மீறியதொரு ராட்சஸப் பிரயத்தனம் என்பதைப் பல தடவைகள் உணர்ந்துள்ள போதிலும் – இந்தாண்டின் ஈரோட்டுத் திருவிழா
ஒரு புது உயரத்தைக் கண்ணுக்குக் காட்டியுள்ளது! திங்களே இரவே இந்தப் பதிவைப் போட்டிருக்க வேண்டியது ; ஆனால் உடம்பு ஒட்டுமொத்தமாய் ஒத்துழைக்க மறுத்து விட்டபடியால் செவ்வாய் & புதன் ஏகமாய் விடுமுறை தினங்களாய் மாறிப் போய் விட்டன எனக்கு ! So - "சுடச்சுடப் பதிவுக்கு" வழி இல்லாது போயினும், சென்ற வார இறுதியின் மனநிறைவுகளைப் பதிவிடாது போக இயலாதே என்பதால் - better late than never பதிவிது !!
வெள்ளிக்கிழமை நம் ஆபீஸே யுத்தகளம்
போலக் காட்சி தர – உங்கள்
CCC பிரதிகளைக் கூரியர்களுக்கு அனுப்பிய கையோடு நானும், ஜுனியர்
எடிட்டரும் அரக்கப் பரக்க ஈரோட்டுக்கு ரயிலைப் பிடித்தோம். வழக்கம் போலவே புத்தக
விழா நடைபெறும் திடலின் வாசலில் உள்ள ஹோட்டலில் ரூம் போட்டிருக்க, எங்கள் ரூம்
ஜன்னல் வழியாகப் பார்க்கும் போது ஈரோடு விழா அரங்கு நிசப்தமாய் காட்சி தந்தது. சனிக்கிழமை காலையில் சாவகாசமாய் 11 மணிக்கு மேலாக அரங்கிற்கு நாங்கள்
நடைபோட, மனம் என்னையறியாது சென்றாண்டின் ஆகஸ்ட் முதல் வார சனிக்கிழமையை நோக்கிப்
பயணமானது! LMS-ன் ரிலீசை
முன்னிட்டு நண்பர்கள் பரபரப்பே உருவாய்க் காத்திருந்ததும், ஸ்டாலுக்குள் கொஞ்ச
நேரத்திலேயே நம் நண்பர்கள் திரள் விஸ்வரூபமெடுத்ததும் – சுற்றுமுற்றுமிருந்த ஸ்டால்களின்
கடுகடுத்த பார்வைகளுக்கு மத்தியில் சந்தோஷங்களைப் பரிமாறிக் கொண்டதும் மனதில்
நிழலாடியது! ஆனால் இம்முறையோ அரங்கின் வாயிலில் வேறு விதமானதொரு கூட்டம் !! தி்க்குமுக்காடச் செய்யுமளவிற்கு
மாணவ / மாணவியரின் திரள் நின்று
கொண்டிருந்தது – சாரை சாரையான
லைன்களில்! ‘ஆஹா... இந்தப் பிள்ளைகள் அத்தனை பேரும் காமிக்ஸ் எனும்
சுவையுணர்ந்திருப்பின் என்னவொரு அட்டகாச எதிர்காலமிருக்கும் காமிக்ஸ் துறைக்கு!‘
என்ற பகற்கனவோடு அரங்குக்குள் புகுந்தோம்! ஆனால் பிள்ளைகளோ – நம் ஸ்டாலை மட்டுமின்றி
பெரும்பாலான ஸ்டால்களை சம்பிரதாயப் பார்வையோடு தாண்டிச் செல்ல, வறுத்தெடுக்கும்
வெயிலும், கூட்ட நெரிசலும் ஒன்று சேர்ந்து அரங்கத்தை நண்பகல் வரை தீபாவளி
நேரத்து T-நகர் ரங்கநாதன் தெரு
ஜாடைக்கு உருமாற்றியிருந்தன !
நம் நண்பர்களில் சிலர் ஏற்கனவே அங்கே காத்திருக்க – இன்னும் சிலர் on the way என்ற தகவலும் கிட்டியது. CCC பிரதிகள் தாங்கிய
பண்டல்களும் அந்நேரத்திற்கு ஸ்டாலுக்கு
வந்து சேர்ந்திருக்க ஸ்மர்ஃப்கள் பற்றியும், லியனார்டோ பற்றியும் அரட்டை மையம் கொண்டிருந்தது!
சற்றைக்கெல்லாம் பெரியதொரு அட்டைப்பெட்டி நிறைய மக்கன் பேடா (பெயர் சரி தானா??) சகிதம்,
பெங்களுர் நண்பர் அகமது பாஷா ஆஜராக, சந்தோஷப் பரிமாற்றங்கள் தொடர்ந்தன! ஃபோட்டோக்கள்; அரட்டைகள் எனப் பொழுது நகர்ந்த
போதிலும் – மூச்சுத் திணறச்
செய்யும் கூட்ட நெரிசலில் அதிக உற்சாகத்திற்கு வாய்ப்பிருக்கவில்லை என்பதால்
அருகாமையிலிருந்த ஹோட்டலுக்குப் புறப்பட்டோம் – வயிற்றுக்குப் பெட்ரோல் போடும் பொருட்டு!
அங்கே
கூட்டமில்லை என்பதால் அரட்டைக் கச்சேரிகளும், ஃபோட்டோ படலங்களும் தொடர்ந்தன! மாலைப்பொழுது
மேற்கொண்டும் நண்பர்கள் ஜோதியில் ஐக்கியமாகிடும் வேளையாக அமைந்து விட, நமது ஸ்டாலின் முன்னே
கூட்டமாய் நின்று மறுபடியும் அமைப்பாளர்களின் கண்டனங்களைச் சம்பாதிக்க வேண்டாமென்ற
அவாவில் – சென்றாண்டைப் போலவே அரங்கத்தின்
பின்பக்கமிருக்கும் கார்-பார்க் பகுதியில் திரண்ட சற்றைக்கெல்லாம் கேள்விகள்
பறக்கத் தொடங்கின! எப்போதும் போலவே ‘இரத்தப் படலம் வண்ணத் தொகுப்பு எப்போது?‘ என்ற
வினாவே அதிகத் தடவைகள்; அதிக
நண்பர்களிடமிருந்து எழுந்தன ! இங்கே நானொரு விஷயத்தைக் குறிப்பிடல் அவசியமென்று நினைக்கிறேன்!
துவக்கம் முதலாகவே இரத்தப்படலத்தின்
பாகங்களைக் கையாளும் வேளைகளிலெல்லாம் ஒருவிதக் குழப்பமும், கலக்கமும் என்னுள் குடிகொண்டிப்பது
வாடிக்கை ! 30 ஆண்டுகளுக்கு முந்தைய அந்நாட்களில் இரத்தப் படலத்தின் ஆங்கிலப்
பதிப்புகளும் கிடையாது ; நெட்டைத்
தேடி உருட்டினால் சிக்கிடக் கூடிய ஆங்கில ஸ்கான்லேஷன்களும் கிடையாதெனும் போது – பிரெஞ்சிலிருந்து மொழிபெயர்ப்பாகிடும்
நமது ஸ்கிரிப்டுகளை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு நான் பணியாற்றிடத் தேவைப்படும் ! தவிர
துவக்க ஆண்டுகளில் நமக்குக் கிட்டத்தட்ட 4 / 5 வெவ்வேறு பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளர்கள் உதவி வந்ததால் பாகம்
3-ஐ மொழிபெயர்த்தவரே பாகம் 4-ஐயும் செய்திடுவாரென்ற உத்திரவாதம் இருந்ததில்லை ! So - குழப்பமான கதைக்களம்; வெவ்வேறு மொழிபெயர்ப்பாளர்கள்; பிரெஞ்சில் மாத்திரமே உள்ள
ஒரிஜினல்கள்;
அவற்றை நமக்குப் புரியும் விதமாய் google செய்து பார்க்கும் வசதிகளின்மை என்பதே இரத்தப் படலத்தை சுற்றி
நின்ற அந்நாட்களது அரண்கள்! இவற்றுக்கு மத்தியில் புகுந்து, வேலை செய்வது ஒரு மண்டை நோவான சமாச்சாரம்
என்பதால் என்னையும் அறியாது ஒருவித அலெர்ஜி நண்பர் XIII மீது எழுந்திருந்ததே நிஜம்! உச்சக்கட்டமாய் இரத்தப்
படலத்தின் 1-18 தொகுப்பின் மீது கவனம் செலுத்தும் சமயம் வந்த போது - எட்டிக்காயை ஜுஸாக்கிக் குடித்து பார்க்கும்
உத்வேகத்தோடு தான் அந்தப் பணியினை நான் அணுகினேன்! கி்ட்டத்தட்ட 3 மாதங்கள், பரீட்சைக்கு
நோட்ஸ் எடுக்கும் பிள்ளையைப் போல தட்டுத் தடுமாறி அந்தப் பணியினை நிறைவு செய்த
போது- ஒரு massive பெருமூச்சு எழுந்தது மட்டுமின்றி '12-க்கும், 14-க்கும் இடைப்பட்ட நம்பரை இரயில்
பெர்த்தில் கூட இனி கொஞ்ச காலத்திற்குப் பார்க்க அவசியம் நேரக் கூடாதேடா சாமி!‘
என்ற வேண்டுதல் என் உதடுகளில் இருந்தது ! சரி-
இதழ் வெளியானதா; விற்பனையானதா; போட்ட முதலீடு திரும்பக் கிடைத்ததா- என்று பார்த்தால்
– முன்பதிவுகளைத் தாண்டிய பாக்கிப் பிரதிகள் என்னைப் பார்த்துக் கண்ணடித்துக்
கொண்டே கிடந்தன கிட்டத்தட்ட 18 மாதங்களாய்! So நண்பர்
XIII எனது அபிமான, ஆதர்ஷ, ஆத்மார்த்த நாயகர் பட்டியலில் உயரமானதொரு இடத்தைத்
தனதாக்கிக் கொள்ளவில்லை என்பதில் ரகசியமில்லை !
ஆனால் உங்களுக்கோ – எனது இந்தக் குட்டிக்கர்ணங்களில் எதுவும்
அவசியப்பட்டிருக்கவில்லை என்பதால் – கதையின் சுவாரஸ்யத்துக்குள் மூழ்கிடுவது
சுலபக் காரியமாகியிருந்திருக்கும் – துவக்கம் முதலாக! கதையின்
ஸ்டைல்; சஸ்பென்ஸ்; வான் ஹாமேவின் அதிரடிகள்; வான்சின் ஓவிய ஜாலங்கள் என்று positives களை மட்டுமே
உங்களது பார்வைக் கோணங்கள் உள்வாங்கியிருந்திருக்கும்! So பந்திக்கு வந்தது பாயாசமாகவே இருப்பினும் – அதைக்
கிளறும் ஆயாசத்தோடு நானும்; சுவைத்த பரவசத்தில்
நீங்களும் இருப்பது கண்கூடு! Maybe எனக்குள் உள்ள அந்த "XIII அலெர்ஜி"யானது
இரத்தப்படலத்தின் முழுவண்ணத் தொகுப்புக்குத் தடை போட்டு வருகிறதா ?- அல்லது 5
ஆண்டுகளுக்கு முன்னர் வெளியானதொரு கதையையே மறுபடியும் சாயம் பூசி, புதுசாய்
பரிமாறுவதில் சுகமென்ன / சுவையென்ன இருந்திடக்
கூடுமென்ற நியாயமான பயமுணர்ச்சி தடை போடுகிறதா ? என்ற சின்னக் குழப்பம்
என்னுள்! Customized imprints என்றதொரு அஸ்திரத்தை “மின்னும் மரணம்“ எனும் அசாத்திய சாகஸத்திற்கு பயன்படுத்தினோமெனில்,
தொடரும் ஒவ்வொரு மறுபதிப்புக் கோரிக்கைக்கும் அதனையே கையிலெடுக்க நினைப்பது
விவேகமா? அந்த நேரத்தையும், முதலீட்டையும், உழைப்பையும் புதிய கதைகளின் பக்கம்
திருப்புவோமே என நான் ஒவ்வொரு முறையும் விளக்கினாலும் கூட இந்தக் கேள்விக்கு
முற்றுப்புள்ளி விழும் அறிகுறிகளே காணோம்! இதை நான் இங்கே எழுதக் காரணமே –
ஒருக்கால் என் மன அளவுகோல்கள் செய்திடும் தர ஒப்பீட்டை விட நிஜத்தில் இரத்தப் படலம் பன்மடங்கு உசத்தியோ? என்ற
சந்தேகத்தை நண்பர்களின் கேள்விகள் கிளப்பி விடுகின்றன ! For once அந்த nostalgia
சமாச்சாரங்களைக் கட்டிலுக்குக் கீழே கிடத்தி விட்டு மெய்யாகவே இரத்தப் படலம் - இரத்தம் சிந்த மீண்டுமொருமுறை உழைத்திட அருகதையான சமாச்சாரம் தானா என்று
உரக்க சிந்தித்துப் பாருங்களேன்? (Andகோவையில் வசிக்கும் இரும்புக்கரத்தார்கள் இந்தப் போட்டிக்கு சேர்த்தி இல்லை !!)
மாலை,
இரவாக – கார்-பார்க் பக்கமாய்ச் செல்லும் ஈரோட்டு மக்கள் அனைவருமே விநோதப் பார்வைகளை
நம் பக்கம் வீசிச் செல்வது பற்றி நண்பர்கள் துளியும் கவலை கொண்ட மாதிரித்
தோன்றவில்லை! எனக்கு ஏற்கனவே தொண்டையில் ‘கிச் கிச்‘ உயிரை வாங்கத் தொடங்க நான்
விடைபெற்றுக் கிளம்பினேன்! ரூமுக்குச் சென்று படுத்த போது – மறு நாள் காலையில் காத்திருந்த
நண்பர்கள் சந்திப்பை சமாளிப்பது எவ்விதமென்ற சிந்தனைகளில் லயிக்காது – ‘தெய்வமே...
M.R. ராதா குரலிலாவது பேசிட காலையில முடிந்தாகணுமே!‘ என்ற ஆதங்கமே தலைதூக்கியிருந்தது !
மாத்திரைகளைப் போட்டுக் கொண்டு, ஹோட்டல் சமையல்காரரை வெந்நீர் கேட்டே கொலையாய் கொன்று
விட்டு ஒருமாதிரியாகத் தூங்கச் சென்ற போது நள்ளிரவைத் தாண்டியிருந்தது! காலை
சிற்றுண்டி, நண்பர் ஸ்டாலினின் இல்லத்தில் என்பது கடந்த சில ஆண்டுகளின் பழக்கம்
என்பதால் சீக்கிரமே அதற்குக் கிளம்பிட வேண்டுமே என்ற நினைவூட்டலை மண்டை செய்திட -
சரி; நாளைய பிழைப்பை காலையில் பார்ப்போமென்று கண்ணயர்ந்தேன்!
வழக்கம்
போல காலையில் விழிப்புத் தட்டியது; ஆனால் நான் பயந்தபடியே
எங்கள் ஊர் போர்வெல் குழாய்களில் வரும் காற்று மாத்திரமே என்
தொண்டையிலிருந்து வெளிப்பட்டது! சும்மாவே ‘ததிகிநதும்‘ போடும் அழகான தொண்டை
“ஹிஸ்... ஹிஸ்..“ என்று பாம்பைப் போல குரல் கொடுக்க, அரண்டு போனேன் மெய்யாகவே!
நண்பர் ஸ்டாலினுக்கு ஃபோன் செய்து -"சார் நான் நேரடியாக 11-30 மணிக்கு மீட்டிங்
ஹாலுக்கே வந்து விடுகிறேனே...?" என்று கிசுகிசுக்க – அவரோ – ‘நண்பர்களில் நிறையப்
பேரையும் வீட்டுக்கு அழைத்திருக்கிறேன்; நீங்கள் பேசவே வேண்டாம்
– டிபன் சாப்பிட்டு விட்டு மட்டும் போகலாமே?‘ என்று அன்புக் கோரிக்கை வைக்க மறுப்புச்
சொல்ல மனம் ஒப்பவில்லை! So திரும்பவும் ஒரு லோட்டா வெந்நீரை உள்ளே தள்ளி விட்டுப் புறப்பட்டேன் நண்பர்களோடு ! பெவிகால்
பெரியசாமி அவதாரமெல்லாம் ஆன்லைனுக்கு சுலபமாக இருக்கலாம் தான்; ஆனால் நிஜத்தில் வாய்க்கொரு திண்டுக்கல் பூட்டுப்
போடுவது நடக்கிற காரியமா – என்ன? ஸ்டாலின்ஜி வீட்டில் குழுமியிருந்த நண்பர்களோடு ‘கானக்
குயிலாய்‘ நான் அளவளாவி விட்டு ரூமுக்குத் திரும்பிய போது – மீட்டிங்கில் நிச்சயமாய் சைகை
பாஷையைத் தான் கையிலெடுத்தாகணும் போலும் என்ற நிலையிலிருந்தேன்!
பெருந்துறையில் கல்லூரி
படித்து வரும் என் தங்கையின் மகனும் சனி மாலை முதலே புத்தக விழாவில் நம்மோடு
இணைந்திருக்க – காலை
11.30-க்கு மீட்டிங் ஹாலுக்கு அவனுமே ஆஜரானான்! நாங்கள் தங்கியிருந்த அதே
ஹோட்டலின் ஆறாவது மாடியில் இருந்தது அந்த சிறு அரங்கம்! 60 பேர் அமரக் கூடிய அந்த
ஹாலில் ஏற்கனவே நண்பர்கள் கூடத் தொடங்கியிருக்க – புதுவையிலிருந்து, சேலத்திலிருந்து, பெங்களுரிலிருந்து,
மதுரையிலிருந்து, கரூரிலிருந்து, ஈரோட்டின் அருகாமை நகர்களிலிருந்து என்றெல்லாம்
புதுசும், பழசுமாய் நண்பர்கள் அறிமுகமாகினர்! Formal ஆனதொரு மீட்டிங் நமக்கு ஒத்துவராத விஷயமென்பதால் – ஜாலியாகவே ஆரம்பித்தேன் ‘தொண்டை
சதி செய்து விடக் கூடாதே கடவுளே!‘ என்ற பீதியோடே!
ஏற்கனவே அறிவித்திருந்தபடி – இது தொடரவிருக்கும் ஆண்டிற்கான முன்னோட்டம் + நடப்பாண்டின் performance review என்பதால் எனது முதல் கேள்வியே – தற்போதைய நமது இதழ்களின் வெளியீட்டு எண்ணிக்கை சம்பந்தமானதாக இருந்தது! “ஆண்டுக்கு 48 இதழ்கள் என்பது ஓ.கே. தானா? அந்த 48-ல் மறுபதிப்புகள் 12 slot-களை ஆக்கிரமிப்பது விற்பனையின் பொருட்டு அவசியம் எனும் போது – எஞ்சி நிற்கும் 36 இதழ்களுமே புதியவைகளாக இருந்திடும் ! இந்த எண்ணிக்கை சரி தானா ? – ஜாஸ்தியா?“ என்று கேட்டு வைக்க –உற்சாகக் குரல்கள் பதில்களாய் பறக்கத் தொடங்கின! “நிச்சயம் ஓ.கே. தான்...!! நிறைய வெளியீடுகள் இருந்தால் மட்டுமே வாசகர்களுக்கு ஒரு நிறைவான choice கிடைக்கும்! ஆண்டுதோறும் ஏராளமாய் சினிமாக்கள் வெளியாகும் போது தான் தேர்ந்தெடுத்துப் பார்க்கும் option கிட்டுகிறது! வெளியாகும் படங்களே, குறைவாகி விட்டால் சுகப்படாது“ என்று பெரும்பான்மை கருத்துத் தெரிவிக்க – அதற்கு சற்றே மாறுபட்ட எண்ணங்களை புதுவையின் முதலைப் பட்டாளத்தினர் முன்வைத்தனர். மாதம் 7 இதழ்கள் வெளியாகும் இம்மாதம் போன்ற தருணங்களில் – ‘சுவாரஸ்யமான கதைகள் எவை? சற்றே “கடிகள்“ எவை?‘ என்ற ரீதியில் சிந்தனைகள் வாங்குபவர் மத்தியில் எழுவது சகஜமே என்று அவர்கள் சொன்ன போது அதிலுள்ள லாஜிக்கும் முன்நின்றது! நண்பர்களின் ஒரு சிறு அணியோ – ‘48ஐ விட ஜாஸ்தியாகவே எதிர்பார்க்கிறோம்‘ என்று போட்டுத் தாக்க – கலகலப்பிற்குப் பஞ்சமிருக்கவில்லை! நமது நிதி நிலைமைகள்; ஸ்டாக் வைக்க அவசியப்படும் கிட்டங்கிகள்; backissues பராமரிப்புகள் போன்ற விஷயங்களை கணக்கில் கொள்ளும் போது –நமது maximum எண்ணிக்கை 48-ஐத் தாண்டுவது சாத்தியமல்ல என்பதை விளக்கினேன். தவிர இன்னும் ஒரு சில ஆண்டுகளுக்காவது நமது வெளியீட்டு எண்ணிக்கை புஷ்டியானதொரு நம்பரை எட்டிப் பிடிக்க அவசியமிருப்பதால் தட்டுத் தடுமாறியாவது தற்போதைய tempo-வைத் தொடர்ந்திடும் அவசியத்தைச் சுட்டிக் காட்டினேன்!
அதன் பின்னே நான் கேட்டு வைத்த கேள்வி கிராபிக் நாவல்கள் பற்றியும் – அது தொடர்பாய் நண்பர்களின் தற்போதைய mindset பற்றியும்! ஆச்சரியமூட்டும் விதமாய் – ஏகோபித்த ‘No‘ என்றோ ; ‘ஐயோ... ஆளை விடுங்கள்‘ என்ற ரீதியிலோ நண்பர்களின் பதில்கள் அமைந்திடவில்லை! ஒரேயடியாக யுத்தம் தொடர்பான கதைகளாகவும்; வரலாறு சம்பந்தமான கதைக்களமாகவும் இல்லாது – மாறுபட்ட பாணிகளிலுள்ள ஆக்கங்களைப் படித்திட பெரும்பான்மை நண்பர்கள் ஆர்வம் தெரிவித்தது சந்தோஷ ஆச்சர்யமாக அமைந்தது! நம் போராட்டக்குழுத் தலைவர் கூட – சுலபமாய் புரியும் விதத்திலுள்ள கதைகள் எதுவாகினும் ஓ.கே.‘ என்று கருத்துச் சொன்னார் ! ‘அட... கிராபிக் நாவல்கள் என்ற genre-க்கு நம்மவர்கள் பகைவர்களல்ல; maybe தேர்வான கதைகள் சரியானவைகளாக அமைந்திடவில்லை போலும்!‘ என்ற புரிதல் மனதுக்கு இதமாக இருந்தது! So- back to the drawing board with more searches என்று நினைத்துக் கொண்டேன்!
அடுத்ததாக சில பல விஷயங்கள் நோக்கிப் பேச்சு திரும்பும் வேளையில், பொறுமையின்றி நம் இரவுக் கழுகாரைப் பற்றிய அறிவிப்புகளுக்காக நண்பர்கள் பரபரக்கத் துவங்கினர்! ஊரிலிருந்து ஒரு 7 அடி உயர பேனரை நான் கொண்டு வந்து, மீட்டிங் ஹாலில் தோரணம் கட்டியிருக்க – அதன் பொருட்டு நண்பர்களின் நாடித்துடிப்புகள் துரிதமாகியிருந்தது அப்பட்டமாய் தெரிந்தது! “தனிச் சந்தா உண்டா – டெக்ஸிற்கென?“ ; “என்ன குண்டு புக்?“ ; “எத்தனை குண்டு புக்?“ என்று கேள்விகள் ‘தல‘யின் தோட்டாக்களை விட வேகமாய் இடமும், வலமுமாய் காற்றைக் கிழித்திட – பெவிகால் பெரியசாமிக்கு தற்காலிகக் கல்தா கொடுத்தல் அவசியமாகிப் போனது! ரொம்பவே முன்பாக அறிவிப்புகளைச் செய்து விட்டால், அவை அமலாகும் தருணம் புலர்வதற்குள் ஆறிப் போன பழங்கஞ்சு effect எழுந்திடக் கூடுமே என்ற அச்சம் எனக்குள்ளே எப்போதுமே உண்டென்பதால் – அவசியமாகிடும் வரை மௌனத்தையே தாய்மொழியாக்கிட விழைந்து வருகிறேன்! ஆனால் ஏதாவது ஒரு அதிரடி அறிவிப்பு இருந்தே தீருமென்ற எதிர்பார்ப்புகளுடன் குழுமியிருந்த நண்பர்களை disappoint செய்திட மனம் ஒப்பவில்லை! So- ஜுனியர் எடிட்டரின் முதல் project பற்றிய அறிவிப்பை ஈரோட்டு ஸ்பெஷலாக்கினேன்! இரவுக் கழுகாரை black & white-ல் குண்டு புக்களில் பார்த்து விட்டோம்; வண்ணங்களில் பார்த்து விட்டோம்; மூன்று கதைத் தொகுப்பிலும் பார்த்து விட்டோம் எனும் போது – அவரை இன்னனும் நாம் ரசித்திடாத ஒரே அவதார் – MAXI TEX அவதாராக மாத்திரமே இருந்திட முடியும்! அதாவது – பக்க அளவில் 330-ஐத் தொட்டிடும் மெகா Tex சாகஸம் ஒன்றினை நமது வழக்கமான போனெல்லி சைஸில் அல்லாது – பிரான்கோ – பெல்ஜியக் கதைகளை நாம் வெளியிடும் அந்த பெரிய சைஸில் – ‘பளிச்‘ சித்திரங்களோடும், வண்ணத்திலும் ரசிப்பது நிச்சயம் ஒரு பரவச அனுபவமாய் இருக்குமென்று எங்களுக்குத் தோன்றியது ! So- அதுவே நம் அபிமான ரேஞ்சரின் ‘விஸ்வரூபமாய்‘ வரக் காத்துள்ளது – 2016ன் சென்னை புத்தக விழாவின் தருணத்தில்! விலை – கதை விபரம் – எல்லாமே அக்டோபர் இறுதியினில் நமது அட்டவணை 2016ல் பார்த்திடப் போகிறீர்கள்! And this will be a part of the regular subscription.
இது தவிர, ‘டெக்ஸை மாதந்தோறும் வெளியிட்டுத், துவைத்துக் காயப் போட வேண்டாமே!‘ என்ற சிந்தனையி்லும் ஒரு பெரும்பான்மை ஒப்புதல் நண்பர்களிடையே நிலவியது! ‘மாதம் ஒரு டெக்ஸ்‘ என்பது நிச்சயம் overdose ஆகிப் போய்விடுமென்று தீவிர ‘தல‘ அபிமானிகள் கூட கருத்துச் சொல்ல – ஆசைகளை ஓரம்கட்டி விட்டு, யதார்த்தங்களுக்கு நம்மவர்கள் முன்னுரிமை தருவதைப் புரிந்து கொள்ள முடிந்தது ! ‘டெக்ஸ்‘ பற்றிய discussion ஓடிக் கொண்டிருக்கும் போதே 'மறுபதிப்புப் பட்டியலில் டெக்ஸ் உண்டா?' என்ற கேள்வியும் சூடு பிடித்தது ! “நிச்சயம் 1 ; லட்சியம் 2“ என்ற mindset என்னிடம் ஏற்கனவே என்னிடம் இருந்ததால் – அதற்கு ஒப்புதல் சொன்னது மட்டுமின்றி – மறுபதிப்பாகும் கதையினைத் தேர்வு செய்திடும் சுதந்திரத்தை நண்பர்களிடமே ஒப்படைத்தேன். ஒரு மளிகைக்கடை லிஸ்ட் நீளத்திற்கான பட்டியலை ஆளாளுக்கு ஒப்பிக்க, இது வேலைக்கு ஆகாதென்று நானே மூன்று இதழ்களின் பெயரை பலகையில் எழுதிப் போட்டு – அதன் மீதான வாக்கெடுப்பை எடுத்தோம்! “பழி வாங்கும் புயல்“ முதலிடத்தைத் தட்டிச் செல்ல – “டிராகன் நகரம்“ slot # 2 ஐப் பிடித்தது ! So 2016-ல் “பழி வாங்கும் புயல்“ வண்ண மறுபதிப்பாய் வெளிவருவது உறுதி என்று நான் அறிவித்த போதே – ‘ஒன்று போதாது; அட்லீஸ்ட் 2 வேண்டும்!‘ என்ற கோஷங்கள் முழங்கின! எண்ணிக்கைகளை அதிகரித்துக் கொண்டே செல்லும்பட்சத்தில் சந்தாத் தொகைகள் உயரே... உயரே செல்லும் ஆபத்துள்ளது என்பதால் ஆர்வங்களை சற்றே மட்டுப்படுத்திக் கொள்ளும் கோரிக்கையை முன்வைத்து விட்டு அடுத்த டாபிக் பக்கம் வண்டியை நகற்றினேன்! And இந்த டாபிக்கின் மீது கவனம் இருக்கும் இத்தருணமே - 2016-ன் சந்தாக் கட்டணம் நிச்சயமாய் நடப்பாண்டின் பட்ஜெட்டை விடக் கூடுதலாய் இராதென்பதையும் சொல்லி வைத்துக் கொள்கிறேன்!
தொடர்ந்து கேப்டன் டைகர் பற்றியும், அவரது எதிர்காலம் (நம்மிடையே தான்!!) பற்றியும் கேள்வி எழுப்பினேன்! நீண்டு செல்லும் plot கொண்ட Young Blueberry கதைகளை “டைகர்“ என்ற பெயருக்காவது தொடரலாமா – அல்லது கொஞ்ச காலம் ‘பிரேக்‘ கொடுத்துப் பார்ப்போமா? என்ற என் வினவலுக்கு சிந்தித்துப் பதில் சொல்லத் தொடங்கினர்! இறுதியில் “என் பெயர் டைகர்“ ஐந்து பாகத் தொடரினை ஒற்றை இதழாக்கி – முன்பதிவுக்கேற்றதொரு விலை நிர்ணயம் செய்து தயாரிக்கலாமே! என்பது பெரும்பான்மையினரின் அபிப்பிராயமாக இருந்தது! துண்டும், துக்கடாவுமாய் கதைகளைப் பிரித்து வெளியிட்டு அவற்றின் flow-க்கு வில்லங்கம் ஏற்படுத்துவதை விட – இது போன்ற "one-shot; buy if you wish" மார்க்கம் தேவலை என்று எனக்கும் பட்டது! ஆனால் அன்று குழுமியிருந்த 55 நண்பர்களைத் தாண்டிய உங்களது குரல்களுக்கும் முக்கியத்துவம் தரும் கடமை நமக்குள்ளது என்பதால் – இது பற்றிய உங்கள் சிந்தனைகளை வரவேற்கிறேன் guys! இறுதியான தீர்மானம் அனைவரது அபிப்பிராயங்களையும் அறிந்த பின்பே எடுக்கப்படும் !
தொடர்ந்த உரையாடல்களின் போது ரிப்போர்டர் ஜானிக்கு ஆதரவாய் சில நண்பர்கள் கருத்துச் சொல்ல – என் மனதில் நிழலாடிக் கொண்டிருந்ததொரு எண்ணத்தையும் வெளிப்படுத்தினேன்! இந்த அக்டோபரோடு பிரான்கோ-பெல்ஜிய காமிக்ஸ் உலகுடன் நமது தொடர்புக்கு அகவை 30 ஆகிறது! அதன் ஒரு சின்ன celebration ஆக அன்று முதல் இன்று வரை going strong நாயகர்களின் digest ஒன்றினை வெளியிடலாமே என்பது தான் எனது அந்த அவா! உற்சாகமாய் அதற்கு ஆதரவு கிட்டிய போதிலும் – மீண்டுமொரு வாக்கெடுப்பில் கேப்டன் பிரின்ஸ் தொடரில் எஞ்சி நிற்கும் சிறுகதைகளின் தொகுப்பானதொரு புது ஆல்பம் - ரிப்போர்டர் ஜானியை விடக் கூடுதலாய் வாக்குகள் பெற்றது! So- 2016-ன் ஒரு வாகான தருணத்தில் கேப்டன் பிரின்ஸின் புதுக்கதைகள் அடங்கிய சிறுகதைத் தொகுப்பு அழகாக வெளிவந்திடும்!
இறுதியாய் “பௌன்சர்“ பற்றிய கேள்வியை எழுப்பி வைத்தேன் – அதன் தாக்கம் நண்பர்கள் மத்தியினில் எவ்விதமுள்ளதென்பதை நேரடியாகத் தெரிந்து கொள்ளும் பொருட்டு! சென்னிமலை நண்பர் ஒருவர் நீங்கலாகப் பெரும்பான்மை வாசகர்கள் பௌன்சரின் அந்த ரணகள அதிரடி பாணிக்கு ரசிகர்களே என்பது தெள்ளத் தெளிவாகப் புரிந்தது! “For mature audience“ என்ற லேபில் மட்டும் இதற்குப் போட முடிந்தால் இன்னும் நலம் என நண்பர் ப்ளுபெர்ரி தெரிவித்தார்! (அது நடைமுறை சாத்தியமல்ல என்பது வேறு விஷயம்!!) இடையே ஒரு மிகச் சிறிய டீ பிரேக் நீங்கலாய் முழுவீசசில் நகன்ற சந்திப்பானது முழுசாய் 3 மணி நேரங்களை விழுங்கியிருந்தது அப்போது தான் புலனானது! இதற்கும் மேலாய் நம் கச்சேரிகளைத் தொடர்ந்தால் வயிறுகள் போடும் பசிக் கூச்சல்கள் பெரிதாகிடக் கூடுமென்பதால் சின்னதொரு summary உடன் அந்த சந்திப்பை நிறைவு செய்தோம்!
தொடர்ந்த க்ரூப் போட்டோ படலம்; நண்பர்களுக்கு விடைகொடுத்தல் இத்யாதிகளோடு அவசரமாய் கிளம்ப வேண்டிய அவசியமில்லா நண்பர்களோடு மதிய உணவும் அருந்த சமயமிருந்தது! சகலத்தையும் முடித்து விட்டு ரூமுக்கு நான் கிளம்பிய போது என் தொண்டையில் யாரோ உப்புத் தாளைத் தடவியிருந்த உணர்விருந்த போதிலும் – மனது முழுவதும் திருப்தியும், மகிழ்வும் நிறைந்து கிடந்தன! ‘தோளில் கைபோடுங்கள் சார் – போட்டோ போசுக்கு‘ என்ற உரிமையோடு கேட்ட நண்பரின் குரலும்; ‘நான் எடிட்டர் கூட அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்... நீ அவரோடு பேசுறியா?‘ என்று ஒலித்த பெருமிதக் குரலும்; சென்னிமலை முருகன் ஆலயத்திலிருந்து மாலையும்; பட்டுத் துண்டும், சாமி படமும் கொணர்ந்து தந்த அந்த அன்பரின் நேசமும்; ஈரோட்டில் நானிருந்த ஒன்றரை நாளுக்கு ஒவ்வொரு நண்பரும் இந்த சிவகாசி சாமான்யனிடம் காட்டிய அன்பும், பரிவும் நிச்சயமாய் ஏழேழு ஜென்மங்களுக்கும் மறந்திடாது! எத்தனை எத்தனை அந்தர் பல்டிக்கள் நாங்கள் அடித்தாலும் நீங்கள் காட்டிடும் நேசத்துக்கு நிச்சயம் நியாயம் செய்திட இயலாது என்பது அப்பட்டம் ! இந்த அன்புக்கு என்றைக்கும் நாங்கள் தகுதியானவர்களாகத் தொடர்ந்தாலே போதும் – இந்தப் பிறவிக்கொரு அர்த்தம் கிடைத்திருக்கும் ! Thanks guys – thanks for everything & more! மீண்டும் சந்திப்போம் - ஞாயிறின் பதிவோடு ! Bye until then !




























