நண்பர்களே,
வணக்கம். "சண்டே எக்ஸ்பிரஸ்" தொடர்கிறது - நமது மார்ச் பட்டியலின் இறுதி இதழின் டீசரோடு ! (காலையில் தான் இரயிலில் சென்னை வந்து இறங்கினேன் என்பதாலும், கொஞ்சம் background தேடலுக்கு அவசியம் ஏற்படுத்திய பதிவிது என்பதாலும் நமது ரயில் இந்தவாட்டி கொஞ்சம் லேட் !! ) இரு தடிமனான, வண்ண பிரான்கோ-பெல்ஜியக் கௌபாய் இதழ்களுக்கு மத்தியில் பல்லி போல் ஒட்டிக் கொண்டு வரக் காத்திருக்கும் கறுப்பு-வெள்ளை இத்தாலிய டிடெக்டிவ் ராபினின் சாகசம் தான் அது ! "எத்தர்களின் எல்லை" - ஒரு நெடும் இடைவெளிக்குப் பின்னதாக வெளி வரும் CID ராபினின் பிரத்யேக இதழ் ! வழக்கமான நமது black & white சைசில்,அழகான சித்திரங்களோடு , ஒரு சிம்பிளான ஆக்ஷன் கதையோடு இம்முறை களம் காணும் ராபின், நம் உலகக் கோப்பை அணியில் அஜிங்கிய ரஹானே போன்றவர் என்று சொல்லலாம் ! எப்போதுமே பெருந்தலைகளை ஒளிவட்டத்தை ஏற்றுக் கொள்ள அனுமதித்து விட்டு, ஓசையின்றி தன் பங்குக்கு வெளுத்துக் கட்டி விடும் ரஹானேவின் பாணியில் ராபின் இம்முறை செயல்பட்டிருப்பதாய் எனக்குப் பட்டது ! இதோ இதழின் அட்டைப்படம்+ உட்பக்க டிரைலர்கள் !
மாலையப்பனின் டிசைன் + நமது டிசைனரின் பட்டி-டிங்கரிங் அட்டைப்படத்தின் உருவாக்கப் பின்னணி ! இது டெக்சாஸ் - மெக்சிக எல்லையில் நடந்தேறும் ஒரு சாகசம் என்பதால் கதையின் மனிதர்கள் மண்டையில் stetson தொப்பிகளோடு அவ்வப்போது திரிவதைக் காணலாம்! அதே போல இது வரையிலும் வந்த ராபின் கதைகளுக்கு இல்லாத ஒரு புது (அழகு) பாணியில் சித்திரங்கள் இருப்பதையும் பார்த்திட முடியும் ! முடிச்சுகள் ; சிக்கல்கள் என பொறுமையைத் துளியும் சோதிக்காது சீராக - நேர்கோட்டில் செல்லும் ராபினின் பாணியை ரசிக்க முடிந்தது எனக்கு ! 2016-ல் மனுஷனுக்கு கணிசமான வாய்ப்புகள் தந்தே தீருவது என்ற எண்ணத்தையும் எனக்குள் வலுவாக விதைத்துள்ளது ! மேஜர் சுந்தர்ராஜன் பாணியில் சொல்வதானால் - the coming year will see more of this detective ! "டிடெக்டிவ்" என்ற தலைப்பில் நாம் உலாற்றும் இந்த வேளையில் கொஞ்சமாய்த் திரும்பிப் பார்த்து, இது வரையிலும் நாம் சந்தித்துள்ள (காமிக்ஸ்) துப்பறியும் சாம்புக்களைப் பட்டியல் போட்டுப் பார்த்தாலென்னவென்று தோன்றியது ! அதன் பலனே - இந்த ஞாயிறின் பதிவு !
நமது காமிக்ஸ் பிள்ளையார் சுழி மும்மூர்த்திகள் வாயிலாகப் போடப்பட்டது என்பதை நாமறிவோம் ; அந்த மூவருமே தத்தம் பாணிகளில் துப்பறிவாளர்களும் கூட என்பதால் நமது பட்டியலின் முதல் 3 பெயர்களும் அவர்களதே ! இரும்புக்கை மாயாவி நிழல்படையின் ஏஜெண்ட் என்ற முறையிலும், லாரன்ஸ்& டேவிட் ஜோடியும் ஏதோ ஒரு வகை அரசு உளவாளிகள் என்பதாகவும், ஜானி நீரோ இங்கிலாந்தின் MI 6 உளவுப் பிரிவின் முன்னாள் ஏஜெண்ட் என்ற ரீதியிலும் இந்தத் "துப்பறிவாளர்" தொப்பிகளுக்கு தகுதி கொண்டவர்களாகின்றனர் ! மாயாவியின் கதைகள் - adventure + கொஞ்சம் fantasy என்ற ரீதியில் பெரும்பாலும் இருப்பினும், ஒவ்வொரு முறையுமொரு இருட்டு அறைக்குள் குந்தியிருக்கும் நிழல் 1 என்ற பாஸ் அவருக்கு உத்தரவுகள் வழங்கிட, இவரும் அதை நிறைவேற்றக் கிளம்புவது ஒரு உருப்படியான ஏஜெண்டின் ஜாடை அங்கே தெரிவது மாமூல் ! அதே போல லாரன்சும், மொட்டை டேவிட்டும் ஒரு குற்றத்தைத் துப்புத் துலக்கும் அக்மார்க் டிடெக்டிவ் ரகத்துக்குள் அடைபடுவதில்லை - ஒரு பெரும் சிக்கல் ; ஆபத்து ; பிரச்சனை என எழும் நேரங்களில் அவற்றை வேரறுக்க புறப்படும் (முதிய) புலிகள் இவர்கள் ! ஜானி நீரோவின் கதையும் கூட இதைப் போலவே தான் -லட்சணமான அந்தக் காரியதரிசியோடு உலகைச் சுற்றி வரும் ஒரு ஜேம்ஸ் பாண்ட் பாணி ஆசாமி என்று சொல்லலாம் !
பட்டியலின் முதல் 'அக்மார்க்' டிடெக்டிவ் என்று சொல்வதானால் அது நம் கண்ணாடிக்கார ஆசாமி தான் ! "புதையல் வேட்டை" இதழின் மூலம் அறிமுகமான ரிப் கிர்பி ஒரு தொழில்முறை துப்பறிவாளர் என்பதால் ஒவ்வொரு முறையும் அவரது கதைகளில் ஒரு குற்ற முடிச்சு (சின்னதோ-பெரிதோ) இருப்பது வாடிக்கை ! 1946-ல் உருவாக்கப்பட்டவர் எனும் போது இவர் டெக்ஸ் வில்லருக்கே கூட சீனியர் தான் ! அலெக்ஸ் ரெமண்ட் என்ற அமெரிக்கப் படைப்பாளியின் கைவண்ணத்தில் துவங்கிய ரிப் - தினசரி செய்தித்தாட்களில் சக்கை போடு போட்டதைத் தொடர்ந்து உலகின் பல நாடுகளில் அவரது சாகசங்கள் அறிமுகமாயின ! 1999 வரைத் தொடர்ந்த இந்த ஜென்டில்மேன் டிடெக்டிவ் மொத்தம் 197 சாகசங்களில் இடம் பிடித்துள்ளார் ! புது யுகக் கதைகளின் வருகையைத் தொடர்ந்து நம் இதழ்களில் VRS வழங்கப்பட்ட இவருக்கு இன்னமும் ஆங்காங்கே ரசிகர்கள் இருப்பது நிச்சயம் ! அது சரி - நாம் இது வரை வெளியிட்டுள்ள ரிப் கதைகள் எத்தனையோ ? சரியாக விடை சொல்லும் முதல் நண்பருக்கு ஒரு குட்டியான ரிப் கிர்பி அமெரிக்க (வண்ண) இதழ் நம் அன்பளிப்பாய் இருந்திடும் !
பட்டியலின் அடுத்த இடம் பிடிப்பவர் விங் - கமாண்டர் ஜார்ஜ் ! Johnny Hazard என்பது இவரது ஒரிஜினல் பெயர் ! இவரும் அமெரிக்க தினசரி செய்தித்தாட்களின் நாயகரே ; இவரும் கூட ஒரு புராதன ஹீரோவே ! துவக்கத்தில் அமெரிக்க விமானப்படையின் பைலட்டாக அறிமுகம் காண்பவர் பின்னாட்களில் ஒரு இரகசிய ஏஜெண்டாக செயல்படுகிறார் ! 1944-ல் துவங்கிய ஜார்ஜ் 1977 வரையிலும் சாகசம் செய்தான பின்னே ஒய்வு கண்டவர் ! இவரது கதைகளை நினைகூர்ந்திடும் போதெல்லாம் "நெப்போலியன் பொக்கிஷம்" நினைவுக்கு வருவதைத் தவிர்க்க இயலாது எனக்கு ! சரியாக 40 ஆண்டுகளுக்கு முன்பான நமது முத்து காமிக்ஸில் வெளிவந்த இதழ் அது என்று நினைக்கிறேன் !
பட்டியலின் ஆறாவது இதழுக்குச் சொந்தக்காரார் ஒரு சூப்பர் டிடெக்டிவ் என்பதில் மாற்றுக் கருத்தே இருக்க முடியாது ! இவரும் அமெரிக்கரே ! ரிப் கிர்பியின் படைப்பாளரான அலெக்ஸ் ரெமண்ட் இங்கும் ஒரு முக்கிய பங்கெடுத்துக் கொண்டார் ! துவக்க நாட்களில் சீக்ரெட் ஏஜெண்ட் X -9 என்று அறிமுகமானவர் பின்னாட்களில் நாமறிந்த பிலிப் காரிகன் என்ற அவதாரம் கண்டார் ! 1934-ல் துவங்கியவர் என்ற வகையில் நம் நாயகர்களின் சூப்பர் சீனியராக இவரைச் சொல்லலாம் ! 1996 வரைத் தொடர்ந்த காரிகனுக்கு adventure + துப்பறியும் பாணி என இரு முகங்கள் உண்டு என்பதாலோ என்னவோ - அவரது கதைகள் இங்குமன்றி ; அங்குமன்றி இருப்பது போலொரு உணர்வுக்கு இடமளித்தன ! பலன் ? சுமார் 60 ஆண்டுகள் ஒடியதெனினும் "ஆதர்ஷ நாயகர் என்ற பெயரை ஈட்ட அவருக்கு சிரமாகவே இருந்து வந்துள்ளது ! "வைரஸ் X " ; "கடலில் தூங்கிய பூதம்" போன்ற அதிரடிகளால் நம் ஞாபகங்களில் காரிகன் இடம்பிடிப்பினும் ஒரு mass hero என்ற நிலையை எட்டினாரா என்பதை எனக்கு சொல்லத் தெரியவில்லை ! What say folks ?
அடுத்த துப்பறிவாளர் Fleetway -ன் ஜான் சில்வர் ! இவரும் கூட ஒரு விமானியே எனினும் அவரைப் பதவி நீக்கம் செய்து விட்டு, அதையே பகடைக் காயாகப் பயன்படுத்தி வேலை வாங்கும் உளவுத் துறையும் இங்கு தலைகாட்டுவதால் ஜான் சில்வரும் இங்கே இடம்பிடிக்கிறார் ! ஒரிஜினலாய் இவரும் கூட ஒரு JH தான் ; இவரது ஒரிஜினல் பெயர் JOHN HAVOC ! இவரது கதைகள் முத்து காமிக்ஸில் கொஞ்சமும், பின்னாட்களில் மேத்தா காமிக்ஸில் நிறையவும் வெளியாகின என்பது 30 ஆண்டுகளுக்கு முன்பான "வரலாற்றுக் குறிப்புகள்" !!
முத்து காமிக்ஸின் முதல் பிரான்கோ-பெல்ஜிய நாயகர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் தான் நமது லிஸ்டின் அடுத்த நபர் ! 1969-ல் உருவாக்கப்பட்ட ஜெஸ் ஒரு போலீஸ்காரர் என்ற முறையில் துப்பறியும் களப் பணிகளில் ஈடுபடும் ஒரு அமைதியான ஆசாமி ! வாயில் பைப் ; மேலே ஒரு ஓவர்கோட் என்பதே இவரின் அடையாளங்கள் ! (ரிப் கிர்பியை அவ்வப்போது நினைவுபடுத்துவது நிஜமே !!) ஜில் ஜோர்டான் கதைகளுக்கு சித்திரங்கள் போட்ட மாரிஸ் டிலோ தான் இந்தத் தொடரின் துவக்கக் கதைகளுக்கும் ஓவியங்கள் போட்டவர் ! 1996 தான் இவருக்கும் ஒய்வு வழங்கப்பட்ட ஆண்டு ! (அது என்ன - நிறைய டிடெக்டிவ் கதைகள் 1990-களின் மத்தியில் 'மங்களம்' கண்டுள்ளன ?? புது பாணிகளுக்கு ஈடு தர இயலாமையா ??)
![]() |
| JESS LONG |
இரகசிய ஏஜெண்ட்கள் பற்றிய பட்டியலானது - எஜென்ட்களுக்கெல்லாம் 'தல' யான 007-ஐ சேர்த்திடாது முழுமை பெறுமா - என்ன ? Yes ; 1970-களின் அசைக்க இயலா டாப் நாயகராய் உலகெங்கும் உலவிய ஜேம்ஸ் பாண்ட் தான் நமது பட்டியலில் அடுத்தவர் ! பிரிட்டிஷ் உளவுத்துறையின் தலைசிறந்த ஏஜெண்ட் ; "கொல்லும் லைசன்ஸ்'-க்குச் சொந்தக்காரராகிய இவர் நம்மிடம் செய்த சாகசங்களை விட ராணி காமிக்ஸில் செய்த அதிரடிகள் ஜாஸ்தி ! அதனாலேயே என்னவோ - அன்னார் மீது எனக்கொரு லைட்டான கடுப்பு உண்டு ! தினசரிகளில் தொடராய் ; முழுநீளக் கதைகளாய் ; திரைப்படங்களின் தழுவல்களாய் 007-ன் சாகசங்கள் உலகெங்கும் வெளியாகியுள்ள போதிலும், நமது மார்கெட்டில் தினசரிகளின் தொகுப்புகளே பெரும்பாலும் வெளியாகியுள்ளன ! திரையின் மாயத்தை காமிக்ஸில் 007 கொண்டு வருவதில் வெற்றி கண்டாரா என்பது மில்லியன் டாலர் கேள்வியே !
பட்டியலில் பத்தாவது இடம் ஒரு பேய் வீரருக்கே ! சொல்லப் போனால் இந்த ஆசாமியின் உருவாக்கம் 18-ஆம் நூற்றாண்டில் என்ற விதத்தில் இவருக்கே பேயாகப் புளிய மரங்களில் உறையும் வயசு தான் !! இங்கிலாந்தில் 1893-ல் துவங்கியவை செக்ஸ்டன் பிளேக்கின் சாகசங்கள். ஆரம்பத்தில் நாவல்களை அறிமுகம் கண்டவர் மிகப் பிரபல்யமானதைத் தொடர்ந்து காமிக் நாயகராகவும் புரமோஷன் கண்டார் ! Fleetway இவரது கதைகளை தொடர்களாய் வாரம்தோறும் வெளியிட, நாம் அவற்றில் சிலவற்றை '80 களின் இறுதிகளில் வெளியிட்டோம் ! பின்னாட்களில் "விக்டர் டிராகோ" என்ற பெயரோடு தொடர்ந்த இவரது கதைகள் நிஜமான டிடெக்டிவ் த்ரில்லர்ஸ் என்று சொல்லலாம் ! திரைப்படங்களாகவும் ; நிறைய டி.வி. சீரியல்களாகவும் களமிறங்கியுள்ள செக்ச்டனை நாம் போதிய அளவு பயன்படுத்திடவில்லை என்பதே நிஜம் !
தொடரும் ஆசாமியும் Fleetway-ன் குழந்தையே ! ஏஜென்ட் ஜான் ஸ்டீல் இரண்டாம் உலக யுத்தப் பின்னணியில் சாகசம் செய்யத் துவங்கிய மனுஷன்; பின்னாட்களில் ஒரு தனியார் துப்பறிவாளராய் அவதாரம் கண்டார் ! பக்கத்துக்கு இரண்டே கட்டங்கள் என்ற அந்த classic பாணியில் அழகான சித்திரங்களோடு Thriller Library என்றதொரு கதைவரிசையில் நயமாக இவரது கதைகள் இங்கிலாந்தில் வெளியாகின. SPY 13 என்ற பெயரில் தொடங்கி, பின்னாட்களில் ஜான் ஸ்டீல் என மாற்றம் கண்டு ; பச்சக் என என்றோ ஒரு சமயம் ஜான் ஹேவக் என்ற பெயரையும் தாங்கிக் கொண்டு நடமாடத் தொடங்கியவர் இவர் ! முத்து காமிக்ஸில் இவரை நாம் அவ்வப்போதும், திகிலில் ஒரு முறையும் சந்தித்துள்ளதாய் ஞாபகம் ! லயனில் கூட 1990's-ல் எட்டிப் பார்த்திருப்பார் !
டிடெக்டிவ்களின் பிதாமகரே இன்றைய பயங்கரப் பன்னிரண்டு பட்டியலின் இறுதி ஆசாமி ! சர். ஆர்தர் கொனன் டாயிலின் அமர படைப்பான ஷெர்லாக் ஹோல்ம்ஸ் தான் இந்த வாரப் பதிவை நிறைவு செய்யும் துப்பறிவாளர் ! நாவல்களை உலகை இன்று வரை மெய்மறக்கச் செய்து வரும் ஷெர்லாக் கதைகளும் தினசரி ஸ்ட்ரிப்களாய் ; முழுநீளக் கதைகளாய் ;கிராபிக் நாவல்களாய் உலகெங்கும் பிரசித்தம் கண்டுள்ளன ! நாம்'90 களில் வெளியிட்டவை தினசரிகளின் தொகுப்புகளே ! ஒரிஜினல் டிடெக்டிவ் என்ற பட்டத்துக்கு 100% பொருத்தமான இவரது ஆல்பங்கள் பிரான்கோ-பெல்ஜியப் படைப்பாளிகளின் கைவன்னங்களிலும் அட்டகாசமாய் வெளிவந்துள்ளன ! உங்களுக்கு ஆர்வமிருப்பின் அவற்றையும் நாம் முயற்சிக்க முயற்சிக்கலாம் ! What say all ?
இன்னமும் ஒரு டஜன் துப்பறிவாளர்கள் நமது காமிக்ஸ் பட்டியலில் காத்திருப்பினும், கர்ஜிக்கும் என் வயிறு அவர்களை அடுத்த ஞாயிறுக்கு ஒத்திப் போடச் சொல்லி ஏகமனதாய் தீர்மானம் போட்டுள்ளது ! So - 'பயங்கரப் பன்னிரண்டு' படலம் அடுத்த வாரமும் தொடரும் ! அது வரையிலும் இன்றைய இந்தப் பதிவில் ஆங்காங்கே நான் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு உங்களின் அபிபிராயங்களை / பதில்களைப் பகிர்ந்தால் சந்தோஷமே !
மார்ச்சின் புது இதழ்கள் மூன்றும் பைண்டிங்கில் உள்ளன ! மேலோட்டமாய் அவற்றை சரி பார்க்கவும் ஒரு நாள் அவகாசம் எடுத்துக் கொண்டு புதனன்று கூரியரில் மொத்தமாய் அனுப்பிடவுள்ளோம் ! So வியாழன்று ஒற்றைக்கையரையும். தளபதியையும் சந்திக்கலாம் ! அது வரை bye folks ! See you around !
































