வணக்கம் ! கிறுக்கலாய் அல்லாது - இந்தப் பதிவின் தலைப்பு மெய்யாகவே context-க்குப் பொருத்தமாய்த் தோன்றியதால் இரவல் வாங்குவதில் தவிறில்லை என்று தோன்றியது ! (நன்றிகள் கி.கி !) பதிவிடப் போவதே நாளைய பொழுது தான் எனும் போது - இன்றைய இந்தத் துவக்கம் சின்னதொரு விஷயத்தை உங்களுக்குத் தெரியப்படுத்தும் பொருட்டே !
இன்னுமொரு சேதியும் கூட - இன்று முதல் (ஏப்ரல் 1) Professional கூரியரின் கட்டணங்கள் எக்கச்சக்கமாய்க் கூடி விட்டுள்ளன !! சென்ற மாதம் வரை தமிழகத்தினுள் ரூ.32 என இருந்த கட்டணம் இனி ரூ.40 & பெங்களூருக்கு ரூ.40 ஆக இருந்த கட்டணம் இனி மேல் ரூ.70 !! தலை சுற்றச் செய்யும் இந்த உயர்வை நம் சந்தாதாரர்களின் தலையில் சுமத்துவது நியாயமாகாது ; எனினும் ஆன்லைனிலும், நம்மிடமே நேரடியாகவும் அவ்வப்போது வாங்கிடும் நண்பர்கள் இந்தக் கட்டண உயர்வினை ஏற்றுக் கொண்டாக வேண்டிய இக்கட்டு !! Sorry guys !
April 2'2014 : சரி...இதற்கு மேலும் ஜவ்வாய் இழுப்பது இதழ்கள் கிடைக்கப் பெறா நண்பர்களின் பொறுமைக்குச் சோதனைகளை வைக்கும் என்பதால் - பெவிகால் பெரியசாமியை நாடு கடத்திடுவோம் ! Here goes :
ஒவ்வொரு முறையும் புதிதாய் ஒரு முயற்சிக்குள் கால் பாதிக்கும் போது - "வாய்க்குள் கட்டை விரல்...!" என்ற பில்டப் கொடுப்பது எனக்கும், உங்களுக்கும் பழகிப் போனதொரு விஷயமே ! ஆனால் -
இரத்தப் படலம் முழுத் தொகுப்பின் விதிவிலக்கோடு - பாக்கி அத்தனை நேரங்களிலும் '
எப்படியும் கரை சேர்ந்திடலாம் !' என்ற ஒரு வித அசட்டுத் துணிவும், நம்பிக்கையும் என்னுள் உறைவது உண்டு ! NBS -ன் பணிகள் துவங்கிய சமயம் கூட பணிகளின் பரிமாணம் மலைப்பாய்த் தோன்றியது நிஜமே ஆயினும், அதனைத் தொடர்ந்த மாதங்களில் கழுத்துப் பிடியாய் திட்டமிடல்கள் ஏதும் இருக்கவில்லை எனும் போது - '
தக்கி-முக்கி இந்தப் பணியைப் பூர்த்தி செய்து விட்டால் தப்பிச்சோம் சாமி!' என்ற ஆறுதல் காத்து நின்றது ! ஆனால் இம்முறையோ
சூப்பர் 6 ... அதன் முதல் படியான லயனின் ராட்சஸ
ஆண்டுமலர் ...அதற்கு அருகாமையிலேயே '
மின்னும் மரணம்' முழுத் தொகுப்பு என்ற 2014-ன் schedule- முன்எப்போதும் நம் முன்னே கொணர்ந்திருக்கா பரிமாணத்தில் ஒரு அசாத்தியச் சவாலை உருவாக்கியுள்ளது ! So - முதல்முறையாக எனக்குள்ளே ஓடும் ஒரு மெல்லிய நடுக்கத்தை ; தாண்ட வேண்டிய உயரத்தின் பொருட்டு ஏற்படும் அந்த மலைப்பை -கொஞ்சம் கொஞ்சமாய் உணர்ந்து வருகின்றேன் கடந்த 3 வாரங்களாகவே ! 'வீராதி வீரனாக்கும் ; இதெல்லாம் பஞ்சு மிட்டாய் சமாச்சாரம் !' என்ற கற்பனையில் நிச்சயமாய் நான் இல்லை ; இந்தாண்டின் இறுதிப் பொழுது புலர்வதற்குள் எனக்கும் சரி, எங்களது சின்ன டீமுக்கும் சரி - நிறைய நரை முடிகளும், தூக்கமில்லா இரவுகளும் ஆத்ம நண்பர்களாய் இருக்கப் போவதை நன்றாகவே உணர முடிகிறது ! சரி - இந்த 'பீலா படலம்' போதும் - let's get on with it..என்ற உங்கள் உரத்த சிந்தனை எனக்குக் கேட்பதால் - துவங்குகிறேன் லயனின் ஆண்டுமலரின் அறிவிப்போடு !
The லயன் MAGNUM ஸ்பெஷல் !!!
NBS வெளியான சற்றைக்கெல்லாம் லயனின் 30-வது ஆண்டுமலரைப் பற்றிய பேச்சு துவங்கிய சமயமே என் தலைக்குள்ளே முதலில் உதயமான பெயர் இது ! ஆனால் "
Magnum " என்ற adjective அத்தனை சரளமான பயன்பாட்டில் இருந்திடும் ஒரு சொல் அல்ல என்பதால் - கொஞ்சம் எளிமையானதொரு பெயரை சிந்திக்க முயன்றேன் ; நண்பர்கள் உங்களின் முயற்சிகளையும் கோரி இருந்தேன் ! நீங்கள் அட்டகாசமாய் அனுப்பி இருந்த எக்கச்சக்கப் பெயர்களுள் நிறைய 'பளிச்' ரகத்தில் இருந்த போதிலும், LION MILESTONE SPECIAL என்று P .கார்த்திகேயன் suggest செய்திருந்த பெயரும் , "சிங்கத்தின் கர்ஜனை" என்ற ஆக்கமும் (நண்பர் பிரேம் கைவண்ணம்) என்னைக் கவர்ந்திருந்தன ! இது தவிர RIPROARING ஸ்பெஷல் (இது யாரது படைப்பு ப்ளீஸ் ??) என்ற பெயரும் பிடித்திருந்தது ! ஆனால் அத்தனையையும் தலைக்குள் போட்டு ஒரு வாரம் உருட்டிய பின்னே - எனது ஆரம்பத்துத் தேர்வான "
MAGNUM ஸ்பெஷல்' தேவலை என்றே தோன்றியது ! இதன் பெயர் காரணத்தைப் பற்றி ஹாட்லைனில் விரிவாகவே எழுதியுள்ளேன் என்பதால் - மீண்டும் அதனை இங்கே ஒப்பிக்காது - short n ' sweet ஆகச் சொல்லி விடுகிறேன் ! லதீன் மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு வந்துள்ள Magnum என்ற சொல்லிற்கு "கிரேட் ; ஒப்பற்ற ' என்ற ரீதியில் அர்த்தம் கொள்ளலாம் ! தவிர 'Magnum Opus' எனும் சொற்றொடருக்கு - '
படைப்புகளில் தலைசிறந்ததான' என்ற ரீதியில் பொருள்படும் ! So - இதுவரை நாம் முயற்சித்ததுள் உச்சமாய் இருக்க வேண்டுமென நான் எண்ணியுள்ள இந்த இதழுக்கு "MAGNUM ஸ்பெஷல் " என்ற பெயர் பொருந்துமெனத் தோன்றியது ! பெயருக்கு முன்பாக 'The' என்ற இணைப்பு சேரும் போது கம்பீரமும் சற்றே கூடுவது போல் எனக்குப் பட்டதால் - லயனின் 30-வது ஆண்டுமலருக்கு '
The லயன் MAGNUM ஸ்பெஷல்' என்ற பெயர் தீர்மானமானது ! பெயர் சூட்டும் முயற்சியினில் ஏராளமாய் நேரமும், சிந்தனையும் செலவிட்ட நண்பர்களுக்கு நமது நன்றிகள் ! அதிலும் அந்த டாப் 3 பெயர்களை suggest செய்திருந்தவர்களுக்கு ஒரு extra big thanks !!
பெயர் என் தலைக்குள்ளே ஓடிக் கொண்டிருந்த நாட்களுக்கு முன்பாகவே கதைத் தேர்வுகள் பற்றிய சிந்தனை தீவிரமாகி இருந்தது ! நவம்பர் 2013-ல் வந்த டெக்ஸ் வில்லரின் தீபாவளி மலருக்குக் கிட்டிய வரவேற்பும், தொடர்ந்த ஜனவரி சென்னைப் புத்தக விழாவினில் அந்த இதழுக்கு இருந்த அமோக வரவேற்பும் என் சிந்தனைகளை ஆக்கிரமித்தன ! மொத்தம் 775 பக்கங்களில் - 2 x மெகா டெக்ஸ் சாகசங்கள் ; என்பது சுலபமான பார்முலாவாய்த் தோன்றியது எனக்கு ! வேலையும் கடினமாகாது ; விற்பனைக்கும் உத்திரவாதம் ! எனும் போது சபலம் தலைக்குள் 'ஜிங்கு ஜிங்கென்று ஆடியது உண்மையே ! இது தொடர்பாய் உங்களின் சிந்தனைகளை வெள்ளோட்டம் பார்க்கும் விதமாய் இங்கு வாலை மாத்திரம் விட்டு நான் ஆழம் பார்த்தது நினைவிருக்கலாம் ! கொஞ்சப்பேர் ஒரே கதை concept -க்கு 'ஜே' போட்டாலும், பரவலாய் - 'கூட்டணி இதழுக்கே வோட்டு' என்பதை நீங்கள் தெளிவாக்கி விட்டதால் - எனது இலக்கை நிர்ணயிப்பது சுலபமாகிப் போனது ! 'ஒ.கே. - ஒரு பல்கதைக் கலவை தான் இம்முறையும் !' என்று தீர்மானம் ஆன பின்னே - தோராயமாய் ஒரு costing போட்டுப் பார்த்தேன் - எத்தனை பக்கங்கள் ; எந்த அளவில் சாத்தியம் என்றறிய ! ஆனால் இந்த ஒரு இதழுக்கு மட்டும் பெரியதொரு கணக்கு வழக்கெல்லாம் பார்த்திடாமல் - மனதுக்கு நிறைவாய் செய்வோமே என்ற உந்துதல் எனக்குள் வேகமெடுக்க, கால்குலேட்டரைத் தூரத் தூக்கிப் போட்டு விட்டு - கதைகளின் தேர்வுக்குள் ஐக்கியமானேன் ! So - இந்த இதழ் நிறைய விதங்களில் ஒரு one-off என்பதை இங்கே நான் அடிக்கோடிட்டிட விரும்புகிறேன் ! 'இத்தனை பக்கங்களுக்கு இத்தனை ரூபாய் ; இதுக்கு இன்னும் ஜாஸ்தியாக இருந்திருக்கலாம் ; அல்லது இதே பார்முலாவின்படிப் பார்த்தால் தொடரும் இதழ்களிலும் இத்தனை பக்கங்கள் இருந்தாக வேண்டுமே !' என்ற ரீதியிலான எந்தவொரு திட்டமிடல்களும் பொருந்திடாது ! This is just an one-off !
துளித் தயக்கமும் இல்லாமல் முதலில் தேர்வானவர் டெக்ஸ் வில்லரே ! அதிலும் இது போன்றதொரு லயன் மேளாவில் அதன் டாப் நாயகருக்கு முதல் மரியாதை என்பதில் எனக்குள் தயக்கம் இருந்திடவில்லை ! 228 பக்கங்களில் ஒரு முழு நீல ; முழு வண்ண ஆக்க்ஷன் சூறாவளியாய் டெக்சின் "
சட்டம் அறியா சமவெளி ' இருந்திடப் போகிறது ! அட்டகாசமான சித்திரங்கள் ; அனல் பறக்கும் கதைக்களம் என சமீப சாத்வீக டெக்சிலிருந்து வித்தியாசம் காட்டி நிற்பார் நம் நாயகர் !
டெக்ஸ் ஒருபக்கமெனில் சமீபமாய் வீறு கொண்டு எழுந்துள்ள டைகரின் அபிமானிகளின் பொருட்டு டைகரும் மறு பக்கம் நின்றால் அட்டகாசமாய் இருக்குமே என்ற என் அடுத்த சிந்தனைக்கு தற்போதைய 'இளம் டைகர்' கதைகளின் நினைவு அத்தனை ஊக்கத்தைத் தரவில்லை ! தவிரவும் ஒரு சங்கிலித் தொடராய் பயணிக்கும் கதைகளை நடுவில் பிரித்துப் போடும் தவறை இனி ஒரு முறை தொடர வேண்டாமே என வேறு மார்க்கமாய் யோசித்தேன் ! அப்போது தான் ஓவியர் வில்லியம் வாசின் மாயாஜால ஓவியங்களுடனான "மார்ஷல் டைகர்' தொடர் நினைவுக்கு வந்தது ! இரண்டே கதைகள் வான்சின் ஓவியங்களோடு ; பின்னர் நெடியதொரு இடைவெளிக்கு பின்பாய் மேற்கொண்டொரு கதை (வேறொரு ஓவியருடன்) என மொத்தமே 3 சாகசங்கள் மாத்திரமே கொண்ட தொடர் இது ! அதன் முதல் கதையினை நமது LMS -ல் முழு வண்ணத்தில் படித்திடப் போகிறீர்கள் ! "
மார்ஷல் டைகர்" ஒரு சித்திர விருந்து மட்டுமல்லாது - டைகர் ரசிகர்களுக்கு ஒரு உற்சாக க்ளுகோஸ் ஏற்றும் விதத்திலான கதை !
கௌபாய் கோட்டா ஓவர் என்ற நினைப்பு எழுந்த போது - நமது காமெடி கௌபாய் '
உள்ளேன் அய்யா !' சொல்வதை உணர முடிந்தது ! டேச்க்சுக்கு அடுத்தபடியாக லயனின் லாயத்தில் அதிக popular ஆனவர் நம் லக்கியார் தான் என்பதில் எவ்வித ஐயமும் கிடையாதென்பதால் - "
பேய் நகரம்' கதை # 3 ஆகத் தேர்வானது ! மீண்டும் முழு வண்ணம் என்பதோடு - மீண்டும் அதிரடி ஜேன் தலை காட்டவிருக்கும் முழு நீளச் சிரிப்பு மேளா இது ! ஜாலி ஜம்பரின் லூட்டிகளும் இக்கதையின் ஒரு highlight ! So - இவரும் ஒரு கௌபாய் தான் எனினும், இவரது பாணி நகைச்சுவை என்பதால் லக்கி பட்டியலுக்குள் சுலபமாய்ப் புகுந்து விட்டார் ! சரி, அடுத்து என்னவென்று லேசான சிந்தனைக்குள் அமிழ்ந்த போது தான் நமது பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளரிடம் இருந்து போன் வந்தது ! கடைசியாய் அனுப்பி இருந்த கதையின் மீதான பணிகள் முடிந்து விட்டதாகவும், அடுத்து எழுத வேண்டிய கதை எதுவோ ? என்றும் கேட்டார் ! நான் பதில் சொல்வதற்கு முன்பாக - '
எனக்கு சிரித்து சிரித்தே வயிறு புண்ணாகாத குறை தான் ; கடைசியாய் அனுப்பிய கதை சூப்பர் காமெடி' என்று சொன்னார் ! கிட்டத்தட்ட 10 ஆண்டுகளின் பரிச்சயத்தினில் இது போலொரு பாராட்டு அவரிடமிருந்து வந்ததே கிடையாது எனும் போது 'படக்' என எழுந்து உட்கார்ந்தேன் ! அவரைச் சிரிக்கச் செய்த பிரகஸ்பதி யாரோ என்று பார்த்தால் - அது நமது ரின் டின் கேன் தான் !! லக்கி கதைகளில் அடிக்கடி தலைகாட்டும் இந்த மந்தபுத்தி நாலு காலாரை மு கணமே டிக் செய்தேன் - LMS -ன் இருப்புக் கோட்டாவினைப் பூர்த்தி செய்திட ! "
அதிர்ஷ்டம் தரும் அண்ணாத்தே !" முழு வண்ணத்தில் வரக் காத்திருக்கும் 44 பக்கச் சிரிப்புத் தோரணம் !
'ரைட்...2 வெஸ்டெர்ன் ; 2 காமெடி ..ஆச்சு - what next ?' என்ற போது காலம் காலமாய் நாம் ஆராதித்து வரும் டிடெக்டிவ் ரகக் கதைகள் தான் நினைவுக்கு வந்தன ! சமீப மாதங்களில் நம் அணிவகுப்பில் ஒரு ரசிக்கத்தக்க டிடெக்டிவ் இல்லை என்ற குறை என்னை உறுத்திக் கொண்டே இருந்தது ! ஜில் ஜோர்டன் ; ஜெரோம் ஆகியோர் விளிம்பில் நிற்கும் நாயகர்கள் எனும் போது - இது போன்றதொரு முக்கிய தருணத்தின் மைல்கல் இதழுக்குச் சரி வர மாட்டார்களென்று புரிந்தது ! இன்னும் கொஞ்சம் யோசிக்கும் போது கண்ணாடி + பைப் சகிதம் வந்து செல்லும் ரிப் கிர்பி ; FBI காரிகன் ஆகியோரின் பக்கமாய் நினைவலைகள் பயணித்தன ! ஆனால் VRS கொடுத்த நாயகர்களை தட்டி எழுப்புவதை விட - வாகான வாய்ப்பின்றிப் பின்னணியில் நிற்கும் CID ராபினைக் கூப்பிடுவது சாலச் சிறந்தது என்று தீர்மானித்தேன் ! ஏற்கனவே அவருக்கு வாய்ப்பு தருவதாய் நான் இங்கு promise செய்திருந்ததும் நினைவில் நின்றதால் - டிக் ஆன கதை # 5 - ராபினின் சாகசமே ! இதனையும் வண்ணத்தில் வெளியிடும் வேட்கையில் உருட்டிய போது - போனெல்லி நிறுவனம் ராபினின் கதை # 100-ஐ வண்ணத்தில் வெளியிட்டிருந்தது தெரிய வந்தது ! பிறகென்ன - முதல் முறையாய் ராபின் வண்ணத்தில் வரத் தயாராகி விட்டார் - "
நிழல்களின் நினைவுகள்" வழியாக ! 95 பக்க டிடெக்டிவ் த்ரில்லர் இது !
இது வரை நம் இதழ்களின் உச்சபட்ச எண்ணிக்கையிலான கதைகள் டிடெக்டிவ் வகைகளே என்பதால் அந்த ரசனைக்கு இன்னும் கொஞ்சம் இடம் ஒதுக்கும் வேட்கை எனக்குள் இருந்தது ! ஆனால் பழைய முகங்களில் எதுவும் பெரிதாய் சோபித்தது போல் தெரியவில்லை என்பதாலும், ஒரு புதுமுக அறிமுகம் கொண்டு வரும் novelty சுவாரஸ்யம் தர வல்லதென்பதாலும் - கொஞ்ச காலமாகவே என் ராடாரில் இருந்து வந்த "
ஜூலியா" வை அறிமுகம் செய்வதெனத் தீர்மானித்தேன் ! ஜூலியாவும் ஒரு இத்தாலியப் படைப்பே ; 126 பக்கங்களில் black & white -ல் சாகசம் செய்யும் ஒரு பெண்மணி ! மாடஸ்டி போல் அதிரடிகள் இவரது பாணியல்ல என்றாலும் இவரொரு பரபரப்பான நாயகியே ! மகளிரின் ஒற்றைப் பிரதிநிதியாகவும் செயல்படவிருக்கும் ஜூலியா - "
விண்வெளியில் விபரீதம் ' எனும் b & w த்ரில்லர் மூலம் அறிமுகம் காண்கிறார் ! Let's give the lady a warm welcome folks !
'
அரை டஜன் ஆச்சு...இனி என்ன செய்யலாம் ?' என்று யோசித்த போது - மர்மம் + ஹாரர் கதைகளின் இலாக்கா காலியாய் உள்ளதை உணர முடிந்தது ! 'மர்மம்' எனும் போது
மர்ம மனிதன் மார்டினை மறத்தல் சாத்தியமாகுமா ? நிறைய நண்பர்களின் கோரிக்கைப் பட்டியலில் இருந்து வந்த இந்த -ஐ துளி சிந்தனையுமின்றித் தேர்வு செய்தேன் ! அதே வேகத்தில் '
கட்டத்தில் ஒரு வட்டம்' கதையினையும் டிக் அடித்தேன் ! கருப்பு-வெள்ளையில் ஒரு ஆக்க்ஷன் கதகழி காத்துள்ளது மார்டினின் மறுவருகையின் வாயிலாக ! '
மர்மம் ஆச்சு ; ஹாரருக்கு நான் இருக்கிறேன் !' என
திகில் டிடெக்டிவ் டைலன் குரல் எழுப்ப - "
நள்ளிரவு நங்கையும்' நம்மிடம் தயாராக இருக்க - வண்ணத்தில் இந்த horror thriller இணைந்து கொண்டது நம் பட்டியலுக்குள் !
புதிதாய் இன்னும் ஏதாவது ஒரு சுவையினை சேர்த்தாக வேண்டுமே என்று எனக்குள் குடைய - இருக்கவே இருக்கிறது
கிராபிக் நாவல் வரிசை என்று தலைக்குள் உதித்தது ! ஆனால் இந்த சந்தோஷத் தருணத்தில் கர்சீப் தேடச் செய்யும் கனமான கதைக்களம் வேண்டாமே என்ற சிந்தனையில் - ஒரு ஆக்க்ஷன் நாவலைத் தேர்வு செய்தேன் ! கறுப்பு-வெள்ளையில் வந்த கதை தான் என்ற போதிலும், "
இறந்தகாலம் இறப்பதில்லை" ஒரு அழகான கதை ! நம் LMS -ன் கதை # 9 இதுவே !
மிட்டாய்க் கடையில் ஆர்டர் பண்ணும் பாலகனைப் போல இஷ்டத்துக்குக் கதைகளை தேர்வு செய்தான பின்னே - பக்கங்களை total போட்டுப் பார்த்த போது 880+ பக்கங்களைத் தொட்டு விட்டிருந்தது பட்டியல் ! இன்னமும் நமது வழக்கமான filler pages-ஐ இணைக்கும் போது பக்க எண்ணிக்கை சுலபமாய் 900 பக்கங்களை எட்டிப் பிடித்து விடும் என்பது புரிந்தது ! தேர்வான 9 கதைகளில் ஆறு இத்தாலியப் படைப்புகள் என்பதால் அவற்றின் அளவுகள் அனைத்துமே நமது தற்போதைய டெக்ஸ் ; டயபாலிக் அளவுகள் தான் என்பதையும் உணர்ந்தேன் ! முன்பைப் போல் அனைத்துமே black & white பாணியில் வெளியாகக் காத்திருக்கும் பட்சத்தில் - நமது ஆர்டிஸ்ட்களைக் கொண்டு, வெட்டி, ஒட்டி இல்லாத பல்டிகளை எல்லாம் அடித்து பெரிய சைசுக்கு இதனை 450 பக்கங்களாய் மாற்ற முனைந்திருப்போம் ! ஆனால் இப்போதோ முழுதும் வண்ணம் ; முழுதும் கணினி எனும் போது இத்தனை பெரிய சைஸ் மாற்றம் தேவையற்ற இடியாப்பச் சிக்கல் என்பதை புரிந்து கொண்டேன் ! So LMS 900 பக்கங்களோடு - நமது டெக்சின் சைசில் ஒரு தலையணை கனத்திற்கு 9 பிரத்யேகக் கதைகளோடு வரக் காத்துள்ளது !
ஆக இது தான் கட்டிடத்திற்குப் போடப்பட்டுள்ள blueprint ! ஏற்கனவே இதன் மீதான பணிகளை முழு வீச்சில் துவங்கி விட்டோம் ! கல்லும், மணலும், ஜல்லியுமாய் திரும்பிய பக்கமெல்லாம் கிடக்கும் இந்த சங்கதிகளை ஒருங்கிணைத்து காலத்துக்கும் நிலைத்து நிற்கவல்லதொரு அடுக்குமாடிக் குடியிருப்பைக் கட்டும் பணி காத்து நிற்கின்றது ! அதன் ஒவ்வொரு நிலையிலும் உங்களின் ஆதரவும், உற்சாகமும் மாத்திரமே நம்மை வழி நடத்திச் செல்லவிருக்கிறது ! ஆண்டவன் அருளும், உங்கள் அண்மையும் எப்போதையும் விட இப்போது எங்களுக்கு அத்தியாவசியம் folks !! Wish us luck please !! And....மறவாது சூப்பர் 6-ன் சந்தாத் தொகையினை துரிதமாய் அனுப்பி உதவிடுங்களேன் ப்ளீஸ் ! Catch you soon guys...! இனிமேல் start music !!