நண்பர்களே,
ஞாயிறு வணக்கங்கள். ஒரு குட்டியான பிப்ரவரியின் நடுவாக்கில் நின்று கொண்டிருக்க - காத்திருக்கும் மார்ச் இதழ்களைப் பற்றிய ப்ரிவியூவில் பிசியாவதா ? அல்லது ஒளிவட்டம் இன்னமும் பிப்ரவரியின் புக்ஸ் மீதே தங்கிட அனுமதிப்பதா? என்ற குழப்பம் உள்ள்ளுக்குள்! So 'தென்னைமரத்திலே ஒரு குத்து - பனைமரத்திலே ஒரு குத்து' என்பது போல இப்படிக் கொஞ்சம் ; அப்புறம் அப்படிக் கொஞ்சம் என வண்டியை ஓட்டலாமென்று தோன்றுகிறது!
பிப்ரவரியின் சந்தோஷ highlight என்று பார்த்தோமானால் அது டெக்ஸோ - மாடஸ்டியோ அல்ல என்பதுதான் ஆச்சரிய நிஜம்! மாறாக - The KING'S SPECIAL #2 சக்கை போடு போட்டு வருவதால் "பிப்ரவரியின் பாட்ஷா" என்ற பட்டத்தை அந்த ஹார்ட்கவர் இதழே தட்டிச் செல்கிறது! பொதுவாகவே நமக்கெல்லாம் கூட்டணி இதழ்கள் மீது தீராத காதல் உண்டு என்பது தெரிந்த விஷயம் தான்! Maybe நமது அரசியல் கட்சிகளுக்கு கூட்டணி மந்திரிசபைகள் வேப்பங்காயாய் கசக்கலாம் ; ஆனால் நமக்கோ கூட்டணிகள் என்றைக்குமே கிருஷ்ணா ஸ்வீட்ஸின் மில்க் ஸ்வீட் பாக்ஸைப் போன்ற பல்சுவை பதார்த்தங்களே என்பதில் no secrets! So அரை டஜன் கிளாசிக் நாயகர்களை ஒரே இதழில் தரிசிக்கும் அந்த அனுபவம் பரவலாய் 'ஜே' பெற்று வருவதை விற்பனைகளில் பார்த்திட முடிகிறது! Light Reading; அதிலும் ஒவ்வொரு கதையுமே 30 to 40 பக்க நீளங்கள் தான் எனும் போது சாவகாசமாய் நேரம் கிட்டும் போதெல்லாம் ஒரு கதை என பயணிக்க இங்கு சாத்தியப்படுவது பெரிய பிளஸ் என்று தோன்றுகிறது! ஆக இந்தக் கூட்டணிப் படலத்தின் இரண்டாவது அத்தியாயமும் smash hit என்பதால் அண்ணாச்சி செம ஹேப்பி ! காத்திருக்கும் ஏப்ரலில் The KING'S ஸ்பெஷல் #3 வெளிவந்திடும் என்பது கொசுறுத் தகவல் ! And அந்த ஸ்பெஷல் இதழுடன் ELECTRIC '80 தனித்தடம் பூர்த்தியாகிடும்! So இந்த நொடியில் எனது கேள்வி இதுவே folks:
King's ஸ்பெஷலின் சீஸன் 2 - தொடரலாமா? அல்லது ஒரு பிரேக் விடலாமா?
இதே போல வருஷத்திற்கு 3 கூட்டணி இதழ்களோடு அடுத்த ஒற்றை ஆண்டுக்குள் பயணிக்கலாமா - வேண்டாமா? பதில் ப்ளீஸ்?
பிப்ரவரியின் TEX (என் இனிய பொய்யே) செம ஜிலோவென்று ஓட்டமெடுத்த சாகசம் & அந்த அடங்காப் பொய்யன் செம வித்தியாசமான கதாபாத்திரம் என்பதை மறுப்பதற்கில்லை! கதையில் அடர்த்தி குறைவே என்பதை ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும் - ஆனால் அந்த வன்மேற்குக் களத்தில் 80 ஆண்டுகளாய் பயணம் பண்ணி வரும் TEX-க்கு கதாசிரியர்கள் தந்திட விழையும் சற்றே மாறுபட்ட கதைப் பின்னணிகளுக்கு நாம் இயன்ற மட்டிலும் பாராட்டுக்களைத் தெரிவிப்பதே நியாயம் என்பேன்! Oh yes - கமான்சே கிளர்ச்சி; ஆயுதக் கடத்தல்; இரத்த வெறிக் கும்பல் என்று கூடுதலான ஆக்ஷன்களுக்கு வாய்ப்பு தரக்கூடிய களங்களைக் கையிலெடுப்பது செம ஈஸியான options தான்; ஆனால் ஒரு நூறு தடவைகள் கும்மி எடுக்கப்பட்ட templates அவை என்பதே யதார்த்தம்! So இயன்ற திசைகளிலெல்லாம் புதுப்புது ஐடியாக்களை உருவாக்க முனைந்து வருகிறார்கள் TEX-ன் படைப்பாளிகள் என்பது தற்சமயம் வெளிவந்து கொண்டிருக்கும் லேட்டஸ்ட் கதைகளில் தெள்ளத் தெளிவாய் தெரிகிறது! More power to you gentlemen! என் இனிய பொய்யே கூட செம recent படைப்பே !
பிப்ரவரியின் இளவரசி எதிர்பார்த்தபடியே செம ஹிட் என்பது தரமான தகவல்! அட்டைப்படம் பிரமாதமாய் அமையும் போதே அந்த இதழின் வெற்றி விகிதம் எகிறிடுவது வாடிக்கை! இம்முறை அட்டை மாத்திரமன்றி கதையுமே அழகாய் அமைந்து போக, makes for engrossing reading. அதிலும் அந்த அருவியில் சிக்கி கார்வினும், மாடஸ்டியும் படும் அல்லல் sequence சினிமாக்களில் வந்திருந்தாள் மிரட்டியிருக்கும் அட்டகாசம் ! And சொல்ல மறந்த செய்தி - இதன் மொழிபெயர்ப்பு Ms.P. சுகன்யா. பெரிதாய் நான் நோண்ட அவசியமின்றியே அவரது ஸ்கிரிப்ட் அழகாய் அமைந்து போனதால் - அந்த குசும்பான, நக்கலான portions-ல் மட்டும் நான் மண்டையை நுழைத்திருந்தேன்!
And சந்தேகமேயின்றி பிப்ரவரியை நெஞ்சுக்கு நெருக்கமாக்கியது "டைட்டானிக் தாத்தா" எனலாம்! துறுதுறுப்பான க்யூட் பேத்தியும் அவரது மம்மிப்பாவும் (!!) சந்தோஷமாய் செலவிடும் ஒரு நாளே இந்தக் குட்டி ஆல்பம்! அழகான சித்திரங்கள் & கண்களுக்கு இதமான கலரிங் இந்தத் தொடரின் அடையாளங்கள் எனில், அந்த அழகான கதையோட்டம் இதமான குற்றாலச் சாரலுக்குச் சமம் எனலாம்! இந்த ஆல்பத்தைப் படித்த கையோடு ஒரு நண்பர் எனக்கு வாட்ஸ்அப்பில் செம வாஞ்சையோடு எழுதியிருந்தார். இத்தனைக்கும் அவருக்குப் பேரன்-பேத்தி பார்க்கும் வயதே அல்ல தற்சமயம்! "பேரன்-பேத்திகள் எனக்கும் கிட்டும் நாளில் அவர்களையும் நான் இந்த கதையில் ரோஸ் கூப்பிடுவது போலவே 'மம்மிப்பா' என்று தான் கூப்பிடச் சொல்வதாக இருக்கிறேன் சார்!" என்று எழுதியிருந்தார். நான் ஜாலியாய் எழுதி வைக்கும் சமாச்சாரம் இது போலெல்லாம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவதை பார்க்கும் போது 'பக்கோ' என்றுள்ளது !! சில தருணங்களில் மாங்கு மாங்கென்று காடு-மேடு-மலையெல்லாம் அலையத் தேவையே இல்லை போலும்; இத்தகைய மெலிதான படைப்புகள் கூட நெஞ்சைத் தொடும் ஆற்றல் கொண்டவை தான் போலும்! டைட்டானிக் தாத்தா - WARM WELCOME from ரோஸ் & us !!
காத்திருக்கும் மார்ச் இதழிலோ TEX ஒரு சிங்கிள் ஆல்பத்தில் வலம் வருகிறார். தலைப்பு என்னவோ "கார்சனைக் காணோம்" என்றிருக்கலாம் தான்; ஆனால் கதையின் பெரும்பகுதியை ஆக்கிரமிப்பவர் நமது வெள்ளிமுடியாரே ! செம லைட்டான கதை; எக்கச்சக்க ஆக்ஷன் & செம அழகான சித்திரங்கள்! இதோ ஒரிஜினல் அட்டைப்படம் - மெருகூட்டப்பட்ட வர்ணங்களில்!
மார்ச் மாதத்தில் நான் பார்க்க ஆவலாய் இருக்கும் இன்னொரு இதழ் – "ஜாக்கி போட்ட ஓநாய் " தான் ! முன்கூட்டியே சொல்லி விடுகிறேன் folks – இது நம் வீட்டு குட்டீஸ்களுக்கு கதை சொல்லவும் / வாசிக்கத் தந்திடவுமே சுகப்படப் போகும் இதழ்! இதன் கதாசிரியர் Wilfrid Lupano தான் தாத்தாக்கள் தொடரின் பிதாமகர் & இந்த ஓநாய் கேரக்டர் கூட தாத்தாக்கள் கதையில் தலைகாட்டும் உருப்படி தான்! பேத்தி Sophie நடத்தும் பொம்மலாட்ட நிகழ்வின் நாயகனே இந்த ஓநாய் தானே? ரொம்பவே சிம்பிளான ஒரு கதைக்களத்தில் இளைய தலைமுறைக்கென சில சின்னச் சின்ன மெசேஜ்கள் சொல்ல முனைகிறார் கதாசிரியர். பிரெஞ்சில் மட்டுமே கிட்டத்தட்டமுக்கால் மில்லியன் பிரதிகள் விற்பனை கண்டுள்ள இந்தத் தொடரின் முதல் ஆல்பத்தின் preview இதோ!
ரைட்டு... மார்ச்-ன் பாக்கி 2 இதழ்களான "புதைகுழிப் பூக்கள்" + ஸகுவாரோவொவின் "இருளில் ஒரு நிழல்" இதழ்களுக்கான பிரிவியூவினை அடுத்த வாரம் பார்த்துக் கொள்ளலாமா? இன்றைய பகல் பொழுதில் சின்னதாயொரு Vlog ரெடி பண்ணி நமது YouTube சேனலில் ஏற்றிட நினைக்கிறேன்! So see you again soon folks! Have fun... have a lovely Sunday!
P.S : தற்போது ஓடிக் கொண்டிருக்கும் சில முன்பதிவுகள் - உங்கள் கவனங்களுக்கு folks :
அப்புறம் தற்சமயம் நெல்லையிலும் , திருச்சியிலும் அரங்கேறி வரும் புத்தக விழாக்களில் நாம் பங்கேற்று வருகிறோம் ! அந்தப் பகுதிகளில் இருப்பின் - please do drop in மக்களே !







