நண்பர்களே,
வணக்கம்! கோழி முதலில் வந்ததா? முட்டை முதலில் வந்ததா? என்ற சந்தேகம் தான் சமீப வாரங்களில்! நான் பதிவுகளின் பக்கம் சரிவர வராததால் தான் இங்கே தொய்வா? அல்லது நீங்கள் சரிவர இங்கே பங்கேற்காததால் தான் நானும் தலைகாட்டலியா? புதிராகவே தொடர்கிறது இக்கேள்வி என்னுள்! Of course வாரயிறுதிகளில் இங்கே வருகை தருவோரின் எண்ணிக்கைகள் பெரியதொரு உதை வாங்காமல் தொடரத் தான் செய்கின்றன; ஆனால், தற்போதைய சின்ன பட்ஜெட் படங்களைப் போல வாரநாட்களில் பதிவுப் பக்கமானது ஈயோட்டுவதையே பார்க்க முடிகிறது! இப்போதெல்லாம் வாட்சப் கம்யூனிட்டியில் கட்டும் களையினை வலைப்பக்கத்து சலனமற்ற அமைதிகளோடு ஒப்பிட்டால் "ஙே'' என்றே முழிக்கத் தோன்றுகிறது! Of course ஏதேனும் ஸ்பெஷல் இதழ்கள் பற்றியோ, மறுபதிப்புகள் பற்றியோ, மூ.ச.பஞ்சாயத்துக்கள் சார்ந்தோ பதிவில் எழுத நேரிடும் நாட்களில் views & comments அள்ளுகின்றன தான்! ஆனால், நெதத்துக்கும் அதற்கென ஸ்பெஷல் இதழ்களைப் போட்டுக் கொண்டிருக்க முடியாதே?!
"ஸ்பெஷல் இதழ்கள்'' என்ற தலைப்பிலிருக்கும் போதே ஒரு சமீபத்தைய மகா சிந்தனையை பற்றியும் பகிர்ந்து விடுகிறேனே?! எல்லாம் துவங்கியது 2026-ன் அட்டவணைக்கென கதைத் தேடல்களுக்குள் முத்துக் குளிக்க ஆரம்பித்த வேளைகளில் தான்! இந்த முறை என்ன மாயமோ தெரியலை - மாமூலான நாயகர்களைத் தாண்டி ஏகமாய் புதுப்புது ஆல்பங்கள் "பளிச்' "பளிச்' என கண்ணில் பட்டுக் கொண்டேயிருந்தன! புரட்டாசி மாத விரதத்தில் இருப்பவன் ஸோமாட்டோவில் scroll செய்தால் - தெரிவதெல்லாம் தலப்பாக்கட்டி பிரியாணியும், புஹாரியும், KFC & பர்கர்-கிங்களாக இருந்தால் எப்படியிருக்குமோ- அப்படியே இருந்தது எனக்கு! இங்கேயோ பட்ஜெட்டின் காரணமாய் இதழ்களின் எண்ணிக்கையினை சிக்கனமாக வைத்திருக்க வேண்டிய இக்கட்டு ; ஆனால், கண்ணில் தென்படும் சகலமும் கடைவாயோரம் குற்றாலத்தை ஓடச் செய்தன!
அந்த வேளையில் தான் நமது ஜம்போ காமிக்ஸை ரொம்பவே மிஸ் செய்தேன்! நாயகர்களுக்கென எவ்வித முன்னுரிமைகளும் இல்லாது, ஒன்-ஷாட்ஸ்; புது வரவுகள் என எதை எதையோ முயற்சிக்க அதுவொரு களம் ஏற்படுத்தித் தந்திருந்தது! ஆனால், விற்பனை ரீதியில் அங்கு பெருசாய் ஜெயம் நஹி என்பதால் ஊற்றி மூட வேண்டிப் போனது!அதையெல்லாம் நினைத்து அசை போட்டுக் கொண்டிருந்த போது சின்னதொரு வருத்தம் இழையோடியது உள்ளாற! எப்போவுமே எங்கிட்டாவது ஒரு திக்கிலே இன்டிக்கேட்டரைப் போட்டுப்புட்டு, அதுக்கு நேர்மாறான திசையிலே கையைக் காட்டிப்புட்டு, நேராக புளியமரத்திலோ- புங்கை மரத்திலோ ஸ்கூட்டரைக் கொண்டு போய்ச் செருகும் நம்ம ட்ரேட்மார்க் பாணிக்கு இப்போல்லாம் வேலையே இல்லாமப் போச்சே என்று! வருஷ அட்டவணையினை நிரம்ப திட்டமிடலுடன் போட்டுவிட்டு good boy ஆக அதனுடன் பயணிப்பது ரெகுலர் தடம்! இடையிடையே கிட்டும் ஆன்லைன் மேளாக்களின் போதும் சரி, புத்தகவிழாக்களின் ஸ்பெஷல்களிலுமே விடுபட்ட நாயக / நாயகியரையோ; விற்பனையில் சாதிக்கக் கூடியவர்களையோ களமிறக்கும் கட்டாயங்கள்! ரொம்பவே மாறுபட்ட நொடிகளில் தான் "பயணம்''; ""சாம்பலின் சங்கீதம்'' போன்ற off-beat படைப்புகளை முயற்சிக்கவே சாத்தியமாகிறது!
To cut a long story short- இன்டிக்கேட்டருக்கே அவசியமில்லாமல் ; கையையோ- காலையோ - மண்டையையோ எந்தத் திசையிலும் திருப்ப அவசியமில்லாமல்; மனம் போன போக்கில் இஷ்டப்பட்ட, சாத்தியப்பட்ட சமயங்களில் மட்டுமே பயணம் பண்ணவொரு சாலையை நாமளாய் போட்டாலென்னவென்று தோன்றியது! நமக்குத் தான் மண்டைக்குள் ஏதாச்சுமொரு சிந்தனை எழுந்துவிட்டால் அப்புறம் "அடம் அப்பாசாமி' அவதார் எடுத்துப்புடுவோமே! So ரெகுலர் தடத்தில் அல்லாத இதழ்களை நாம் வெளியிடப் பயன்படுத்தி வரும் லயன் லைப்ரரி லேபிலில் "திசைகள் நான்கு'' என்றதொரு series அறிமுகமாகவுள்ளது!
அதென்னய்யா பெயர் என்கிறீர்களா? காசிக்குப் போக நினைத்தால் வடக்காலே சலோ என்று கிளம்புவோம்! பயண இலக்கு பம்பாய் என்றால் மேற்கின் திக்கில் நடை போடுவோம்! அட, கல்கத்தாவில் ரசகுல்லா சாப்டுவோமே என்ற எண்ணம் தலைதூக்கினால் கிழக்காலே நடையைக் கட்டுவோம்! மாறாக ஐயன் வள்ளுவர் சிலையின் காலடியில் குந்தி புளிசாதத்தைச் சாப்பிடத் தோன்றினால் தெற்காலே தானே பயணப்படுவோம்?! ஆனால், இலக்கென்று எந்த ஊரும் மனசில் fix ஆகலை ; பச்சே பயணம் போகும் ஆசை மட்டும் ஊற்றெடுக்கிறது! என்ன செய்யலாம் அந்த நொடியில்? எந்த ரயிலில் டிக்கெட் காலியிருக்குதோ - அதில் ஏறி, எந்த ஊரைப் பார்க்கும் நொடியில் மண்டைக்குள் ஒரு பல்ப் எரிகிறதோ, அங்கே இறங்கி, ஜாலியாய் சுற்றலாம்! So அந்த மாதிரியான சமயங்களில் திசைகள் நான்குமே நமக்கு நண்பர்களே!
எனது அவாவும் கச்சிதமாய் அதுவே!
* இது விற்குமா- விற்காதா? என்ற வணிகரீதியிலான கேள்விகளுக்கு செவிசாய்க்கும் அவசியங்களின்றி....
* இவர் பெரிய ஈரோவாச்சே; இவருக்கு துண்டு விரிச்சே தீரணுமே என்ற நிர்ப்பந்தகளின்றி...
* இந்த விலை கூடுதலா? குறைச்சலா? என்ற கறைச்சல்களின்றி...
* இதை தீபாவளிக்குப் போடறதா? பொங்கலுக்குப் போடறதா ? எனக்கு மொத தபா பல்லு விழுந்த anniversary-க்குப் போடறதா? என்ற குழப்பங்கள் கிஞ்சித்துமின்றி...
* ஐயையோ.. இது கிராபிக் நாவலாச்சே? அச்சச்சோ.. அது கார்ட்டூனாச்சே..? அடடா.. அது யுத்தக் கதையாச்சே..? ஆத்தாடி இது பழசாச்சே..? என்று இல்லாத சிண்டைப் பிய்த்துக் கொள்ளவும் தேவைகளின்றி...
* "அடங்கப்பா.. தேதி இப்போவே 25 ஆச்சு.. மாசம் பிறக்க இன்னும் அஞ்சே நாட்கள் தானே பாக்கி...?" என்றபடிக்கே அரக்கப் பரக்க பல் விளக்கக் கூட நேரம் ஒதுக்க முடியாது குட்டிக்கரணமடிக்கவுமே கட்டாயங்களின்றி....
😁ஜாலியாய்- நினைத்த நேரத்திற்கு..!
😁குதூகலமாய்- இஷ்டப்பட்ட கதைக்களங்களை..!
😁கட்டாயங்களின்றி- சந்தாக்கள், முன்பதிவுகள் என இல்லாமலே..!
😁இஷ்டப்பட்டால் வாங்கிக்கலாம்! என்ற சுதந்திரத்தோடு...
😁எந்தத் திசையிலும், பயணிக்கலாமென்ற சுதந்திரத்தோடு travel செய்திடும் முயற்சியாக இது இருந்திடும்!
இங்கே டெக்ஸ் வில்லரும் தலைகாட்டக் கூடும்; தில்லையாடி வள்ளியம்மையுமே தலைகாட்டக் கூடும்! So முதல்வாட்டியாக அக்கட தேசத்தின் ஆரஞ்ச் கேசக்கார பெரியவரைப் போல, எல்லைகளற்ற சுதந்திரத்தை எனதாக்கிக் கொண்டு அவரைப் போலவே ஒரு தடாலடிப் பயணத்தைத் துவக்கிட உத்தேசித்துள்ளேன்! இது சிறப்பான முயற்சியாகவும் இருக்கலாம், புத்தம்புது மூ.ச. கிளைகளின் முன்னுரையாகவும் அமையலாம்! But பார்க்கும் நொடியில் எனக்குப் பிடித்திடும் ஆல்பங்களை - ஆராமாய் தயார் செய்து, டென்ஷனின்றி பரிமாறும் திருப்திக்கு முன்பாக மூ.ச.க்களின் கிளைகளானவை அம்புட்டுப் பெரிய டெரராகத் தெரியக் காணோம்! So நம் முன்னே காத்திருப்பன திசைகள் நான்கு!
அதன் முதற்பயணம் எந்தப் பக்கமாய்? எப்போது? என்பது பற்றிப் புத்தாண்டில் பார்க்கலாமுங்களா?
ரைட்டு! காத்திருக்கும் டிசம்பர் இளம் டெக்ஸின் அட்டைப்பட preview & உட்பக்கப் பிரிவியூஸ் இதோ! இம்முறை இளம் வெள்ளிமுடியாருமே இந்த 320 பக்க 5 அத்தியாயப் பயணத்தில் ஸ்டைலாக டெக்ஸுக்குத் துளியும் விடுதலின்றி ஆற்றலோடு பயணிக்கும் கட்டிளங்காளை என்பதால் அவருக்கு நையாண்டி அவதார் தந்திடவில்லை! இயல்பாய், கம்பீரமாய் இவரும் பயணம் பண்ணவிருக்கிறார்! So டிசம்பரில் கலரில் பில்லியனரா? கறுப்பு- வெள்ளையில் காளையரா? என்பதே உங்களது dilemma வாக இருந்திடப் போகிறது!
லார்கோவில் பணிகள் முடிந்த நிலையில், going to print shortly. இளம் டெக்ஸில் இந்த நொடியில் பிஸி! So அவரை சடுதியில் முடித்த கையோடு ஜனவரிப் பக்கமாய் பார்வையைத் திருப்பிட நடையைக் கட்டுகிறேன்! அதற்கு முன்பாக சில updates மக்களே!
அச்சாகிக் கொண்டிருப்பது "சாம்பலின் சங்கீதம்'' மெகா இதழுமே தான்! திங்களன்று முழுவதுமாய் அச்சாகி, பைண்டிங் புறப்பட்டிட வேண்டும்! And இதனை எதிர்வரவுள்ள சேலம் புததகவிழாவினில் ரிலீஸ் செய்திடலாமென எண்ணியுள்ளோம் ! And இன்று தான் டிசம்பர் 19 to 29 தேதிகளில் சேலம் விழா என்பது உறுதியாகியுள்ளது! நமக்கு ஸ்டாலுமே உறுதியாகி விட்டால் மேற்கொண்டு ஆக வேண்டிய வேலைகளை ஆரம்பித்து விடலாம்! Fingers crossed!
அப்புறம் Bapasi அமைப்பிலும் டிசம்பர் ஒன்றாம் தேதிக்கு மொத்தமாய், சகலப் பொறுப்புகளுக்குமான தேர்தல் அரங்கேற இருப்பதால் கடந்த சில வாரங்களாகவே அவர்கள் செம பிஸி! So - புத்தக விழாக்களின் circuit சற்றே ஸ்லோவாகி உள்ளது ! ஏற்கனவே திருச்சி விழா மறுதேதியின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது! கரூர் விழா பற்றியும் தகவல் இல்லை! Bapasi தேர்தல் முடிந்து வெற்றி பெறுவோர் பொறுப்பேற்ற பின்னே தான் circuit மீண்டும் வேகம் எடுக்கும் என நம்பிக்கொண்டுள்ளோம்!
புறப்படும் முன்பாக as usual சந்தா நினைவூட்டலும் ! 2026-ன் கதை + பேப்பர் கொள்முதல்களை நடத்திட உங்களின் சந்தா தொகைகளையே மலை போல நம்பியுள்ளோம்! Please do your best folks!
Bye all have a safe weekend!













