நண்பர்களே,
வணக்கம். டிக்கெட் எடுக்கத் தேவை இருப்பதில்லை ; விசாவும் வேண்டியதில்லை....அட..மூட்டை, முடிச்சுகளைக் கட்டக் கூட வேணாம் - ஆனால் கண்டம் விட்டு கண்டம் பயணிக்க முடிகிறது - படு சுலபமாய் !! ஜலதோஷத்துக்காக டாக்டர் தந்த மாத்திரைகளின் புண்ணியத்தில் ஒரு அசுர தூக்கம் வருது பாருங்களேன் - சும்மா பாயிண்ட் to பாயிண்ட் பஸ் போல தேசம் விட்டு தேசம் ; பிரபஞ்சம் to பிரபஞ்சம் கூடப் பறக்க சாத்தியமாகிறது ! அவ்வப்போது அடிக்கும் செல்போன் மணிச்சத்தம் மட்டும் கேட்கவில்லையெனில் ஒரு வாரமாச்சும் தூங்கலாம் போலும் !! But தலைக்குள்ளிருக்கும் அந்த "சனிக்கிழமை இரவுப் பதிவு" அலாரம் எப்போதும் ஓயாது என்பதால் - இதோ ஆஜர் !!
மே பிறக்க இன்னமும் சில நாட்கள் இருக்கும் போதே இதழ்கள் உங்கள் கைகளில் எனும் போது - தொடரும் நாட்களை சுவாரஸ்யமாக்கிடும் பொறுப்பு உங்கள் விமர்சனங்கள் + அலசல்களுக்குத் தான் என்பேன் ! So மெக்சிகோவில் ட்யுராங்கோவோடு பயணமோ ; சிகாகோவில் மேக் & ஜாக் உடன் லூட்டியோ ; அல்லது அமெரிக்காவின் நியூ ஹாம்ஷயரில் மார்டினோடு யாத்திரையோ - ஏதோவொன்றை மேற்கொள்ள நேரம் ஒதுக்கிக் கொள்ளுங்களேன் guys !
பெர்சனலாய் எனக்கு சிகாகோ தான் # 1 - simply becos ஒரு கார்ட்டூன் தொடருக்கு (நம்மளவிலாவது) இந்தக் களம் ரொம்பவே புதுசு ! பொதுவாய் ஜில்லார் போல ; க்ளிப்டன் போல ஒரு சிரிப்புப் போலீஸ் பாத்திரத்தைப் பார்த்திருப்போம் ; ஆனால் இந்த மேக் & ஜாக் ஜோடியைப் போலவொரு பாடிகார்ட் கூட்டணியை நாம் பார்த்ததில்லை தானே ?! ஊரே பார்த்து மிரளும் ஒரு தாதாவுக்கும் கூட பாடிகார்டாகச் சம்மதிக்கும் போதே இந்த கொரில்லாக்கள் - "நீதிடா.. நேர்மைடா... நாயம்டா..." என்ற நாட்டாமை டயலாக்கை விடப் போவதில்லை என்பதுமே அப்பட்டமாகிறது ! நிறைய விதங்களில் இந்த நெட்டை + குட்டை நாயகர்கள் என்ற template ப்ளூகோட் பட்டாள ஸ்கூபி + ரூபி யோடு ஒத்துச் செல்வதைக் கவனிக்க முடியும் ! பேனா பிடித்த கை ஒன்றே (Raol Cauvin) எனும் போது அந்த ஒற்றுமையைப் புரிந்து கொள்வதில் சிரமமிராது தான் ! அப்புறம் சமீபமாய் ஒரு கார்ட்டூன் கதையைப் படித்துவிட்டு நான் விழுந்து, புரண்டு சிரிச்சதாய்ப் பதிவிட்டிருந்தது நினைவிருக்கலாம் - அது இந்த மேக் & ஜாக் தொடரின் இன்னொரு ஆல்பமே என்பது கொசுறுச் சேதி ! 2019-க்கு இந்தப் புதியவர்கள் வேண்டுமென்று நீங்கள் தீர்மானிக்கும் பட்சம் அந்த ஆல்பத்தை அடுத்தாண்டில் நிச்சயம் களமிறக்கலாம் ! தற்சமயம் நமது கார்ட்டூன் அணிவகுப்பானது மும்பை இந்தியன்ஸ் போல தட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கும் வேளையில் - இவர்கள் கொஞ்சம் கை கொடுப்பார்களெனில் - கார்ட்டூன் டீம் நிச்சயம் நிம்மதிப் பெருமூச்சு விடும் ! ஏதோ பார்த்து செய்யுங்களேன் guys !!
சிகாகோவிலிருந்து சோத்தாங்கை பக்கமாய் பயணித்தால் இம்மாத மார்ட்டின் வலம் வரும் நியூ இங்கிலாந்துப் பிராந்தியங்கள் உங்களை வரவேற்கக் காத்திருக்கும் ! இந்த ஆல்பம் முழுக்கவே இருண்டதொரு களமே என்பதாலோ என்னவோ - ஏகமாய் grey areas இங்குமங்கும் ! கதாசிரியரைத் தவிர்த்து - இந்தக் கதை சார்ந்த அலசல்களை யாருமே முழுமையாக்கிட இயலாதென்பது எனது அபிப்பிராயம் ! Simply becos - கதையின் போக்கில் நிறைய சமாச்சாரங்களை "இப்படியும் எடுத்துக்கலாம் ; அப்படியும் எடுத்துக்கலாம்" என்று முடிச்சுப் போடாது திறந்தே விட்டுள்ளார் ! So படைத்தவர் மனதில் நின்றிருந்தது என்னவென்பதை அவர் வாயால் கேட்டறிய முடிந்தால் சூப்பராக இருக்குமே என்று நமக்குத் தெரிந்த கூகுள் translator-ல் ஒரு இத்தாலியக் கடிதத்தை டைப் செய்து கதாசிரியருக்கே அனுப்பியிருந்தேன். ஆனால் அவர்களது செம பிசி அட்டவணைகளின் மத்தியில் பதில் சொல்ல நிச்சயம் அவகாசங்களிராது என்பதும் புரிந்தது ! So "மெல்லத் திறந்த கதவு" இட்டுச் செல்லக்கூடிய பாதைகள் ஏராளமாய் இருக்கக்கூடும் எனும் போது - நாம் infer செய்திடும் பாதை எதுவென்று பார்த்திட செம ஆவலாய் காத்திருப்பேன் ! வரும் நாட்களில், இந்தக் கதையில் மௌன வரைவுகளாய்த் தொடர்ந்திடும் சித்திரங்கள் சொல்லும் செய்திகள் பற்றியொரு அலசலும் நம்மிடையே நடந்திட்டால் இந்த ஆக்கத்தின் முழுப் பரிமாணமும் வெளிப்படுமென்பேன் ! Are you ready folks ?
மார்டினுக்கு விடை கொடுத்துவிட்டு அப்டியே வண்டியைக் கீழே விட்டால் அமெரிக்காவின் எல்லையோடு உரசியோடும் மெக்சிகோவின் தகிக்கும் மண்ணுக்கு ஹலோ சொல்லிடலாம் - ட்யுராங்கோ துணை நிற்க ! அதிலும் அந்தக் கதை # 3 எனக்கு ரொம்பவே பிரமாதமாய்ப்பட்டது - 2 காரணங்களுக்காக !! ஒரு தக்கனூண்டு கருவைக் கொண்டுமே தூள் கிளப்ப முடியுமென்பதைக் காட்டியது ஒருபக்கமெனில் ; பழி வாங்கிட ரொம்பவே மாறுபட்டதொரு காரணத்தை வில்லன் கும்பலின் முகமூடித் தலைவனுக்குத் தந்தது காரணம் # 2 என்பேன் ! தொடரும் பாகங்களில் ஆர்ட்ஒர்க் & கலரிங் தரம் இன்னமும் ஒருபடி மேலே போய் விடுவதைப் பார்க்க முடிகிறது ! So ஆர்ப்பாட்டங்களின்றிப் பயணிக்கும் இந்த மனுஷனை இன்னும் அழகாய் ரசிக்க வாய்ப்புள்ளதென்பேன் !
So இந்த அமெரிக்க முக்கோணத்தினுள் எந்தப் புள்ளியில் நீங்கள் பயணத்தைத் துவக்கினாலும், அது பற்றிய பயணக் கட்டுரையினை இங்கே பதிவிட மறவாதீர்கள் - ப்ளீஸ் !
Moving on, ஜம்போ காமிக்ஸ் பணிகளின் ஓட்டம் பற்றி ! (இளம்) டெக்ஸ் அதிரடியாய் பயணம் செய்யத் தயாராகி வருகிறார் - அதன் முதல் இதழில் ! முதல் சுற்றில் "காற்றுக்கென்ன வேலி ?"இடம்பிடிக்கிறதெனில், தொடரக்கூடிய காலங்களில் இளம் டெக்ஸ் வில்லர் மட்டுமன்றி, அவரது அண்ணாவான ஸாம் வில்லரையும் இந்த வரிசையில் பார்த்திட வாய்ப்புள்ளது ! டெக்சின் புதுக் கதைகளின் பயணம் ஒருபக்கம் எப்போதும் போல நடந்திட - இளம் டெக்ஸை ஒரு அட்டகாசப் பரிமாணத்தில் காட்டவும் போனெல்லி மெனக்கெட்டு வருவது புரிகிறது ! சமீபமாய் வெளியாகியுள்ள இந்த வண்ண இரு பாக சாகஸத்தைப் பாருங்களேன் :
அப்பா கென் வில்லரை தீர்த்துக் கட்டிய கும்பலை நிர்மூலமாக்க வில்லர் சகோதரர்கள் ஒன்றிணைவது மட்டுமன்றி - இன்னமும் அதிரடியாய் ஏதேதோ ஆச்சர்யங்களை போனெல்லி கைவசம் வைத்துள்ளனராம் ; அது மாத்திரமின்றி, Tex-ன் துணைவி லிலித் சார்ந்த flashback ஒன்றுமே திட்டமிடலில் உள்ளதாம் !! செப்டெம்பரில் டெக்சின் 70-வது பிறந்தநாள் கேக் வெட்டும் சமயம் தான் சகலத்தையும் வெளிப்படுத்தவிருக்கிறார்கள் ! ஆக நமது ஆதர்ஷ ரேஞ்சரின் உலகமறியா பக்கத்தினை சீக்கிரமே பார்க்கவுள்ளோம் நாம் ! எது எப்படியோ - இந்த "கௌபாய் சிங்கத்தின் சிறு வயதில்" ஜம்போவில் தொடர்ந்திடும் !
அது சரி....சின்ன சிங்கத்துக்கு இடமிருக்கும் போது - சின்ன புலிக்கு இடம் நஹியா ? என்று சில கண்கள் சிவக்கும் முன்பே இன்னமும் ஒரு இளம் புயலுமே ஜம்போவில் தலைகாட்ட வாய்ப்புகள் உள்ளதென்பதைச் சொல்ல நினைக்கிறேன் ! அது நமது "இளம் தோர்கல்" தான் ! 2011-ல் துவங்கி, ஆண்டுக்கொரு ஆல்பமென வெளியாகி இதுவரை 7 ஆல்பங்கள் உண்டு இத்தொடரில் ! Maybe பெரிய தோர்கலுக்கு இணையாய் இவரையும் ஓடவிட்டுப் பார்க்கலாமா ? அல்லது பெரியவர் சாதிக்கட்டுமென அவகாசம் தந்து விட்டு நிற்கலாமா ?
அப்புறம் ரொம்ப காலம் கழித்து ஒரு அட்டைப்பட டிசைனிங் போட்டியுமே ! காத்திருக்கும் புது நாயகர் TRENT-ன் துவக்க ஆல்பத்துக்கு முன்னட்டை அமைக்க ஆர்வம் கொண்டுள்ள நண்பர்கள் விண்ணப்பிக்கலாம் ! Please note guys : ஆர்வமென்பதை விடவும், டிசைனிங்கில் அனுபவமும், ஞானமும் இந்தப் பணிக்கு முக்கிய தேவைகள் என்பது நினைவிலிருக்கட்டுமே ப்ளீஸ் ? So விண்ணப்பிக்க விரும்பும் நண்பர்கள் இங்கே கை தூக்கிய கையோடு நமக்கொரு மின்னஞ்சல் அனுப்பிட வேண்டியதும் அவசியம் !
ஜம்போ லோகோ தயாரிப்புக்கென நண்பர்களில் சிலர் அனுப்பியிருந்த ஆக்கங்கள் தொடர்கின்றன :
Mahesh Tiruppur |
Jagatkumar, Salem |
Karthik Somalinga, Bangalore |
Sridharan, Kumbakonam |
Podiyan, Colombo |
விடாது உசிரை வாங்கி வரும் வறட்டு இருமலைச் சமாளிக்கவும், சில நாட்களாய் தொங்கலில் விட்டு விட்ட பணிகளைக் கவனிக்கவும் கிளம்புகிறேன் !! மே விமர்சனங்கள் மென்மேலும் வரட்டுமே ? Bye now ...Happy weekend !!
பி.கு.
1 .மே இதழ்கள் ஆன்லைன் லிஸ்டிங் செய்து விட்டோம் ! லிங்க் இதோ : http://lioncomics.in/latest-releases/501-vidhi-eludhiya-thiraikadhai.html
2. ஜம்போ காமிக்ஸுக்கு இன்னமும் சந்தா செலுத்தியிராதிருப்பின் - இதோ அதற்குமான லிங்க் : http://lioncomics.in/advance-booking/498-pre-booking-for-jumbo-comics-within-tamil-nadu.html
பி.கு.
1 .மே இதழ்கள் ஆன்லைன் லிஸ்டிங் செய்து விட்டோம் ! லிங்க் இதோ : http://lioncomics.in/latest-releases/501-vidhi-eludhiya-thiraikadhai.html
2. ஜம்போ காமிக்ஸுக்கு இன்னமும் சந்தா செலுத்தியிராதிருப்பின் - இதோ அதற்குமான லிங்க் : http://lioncomics.in/advance-booking/498-pre-booking-for-jumbo-comics-within-tamil-nadu.html