நண்பர்களே,
வணக்கம். சாப்பாட்டு மேஜையில் குந்தியிருக்கும் போது இன்னொரு இட்லி வேண்டுமென்றால் கூட புகை சமிக்ஞையில் தகவல் அனுப்பலாமா ? என்று நினைக்கத் தோன்றுகிறது! ‘புதுசாய் பேப்பர் ரகம் வந்திருக்கிறது அண்ணாச்சி !‘ என்று அப்பிராணியாய் வந்து சேரும் சேல்ஸ் rep-களிடம் கூட அதிரடியாய் ஏதாவது பஞ்ச் டயலாக் பேசும் ஆசை நாவில் நடனமாடுகிறது! வரிசையில் நின்று கொண்டிருக்கும் போது, நம்மூர்களுக்கே உரித்தான அந்த ‘முண்டியடித்து முன்னே போகும் கழக‘ உறுப்பினர்களைப் பார்த்தால் நடுமூக்கில் ‘நச்‘சென்று குத்துவோமா ? என்ற பரபரப்பு தொற்றிக் கொள்கிறது! (என்ன ஒரே பிரச்சனை – ‘மு.மு.போ.க.‘ உறுப்பினர்கள் முக்கால்வாசி நேரங்களில் மூணு புல் மீல்ஸ்களை,தனியாளாய் முழுசாய் ரவுண்ட் கட்டியடிக்கும் ஆகிருதியோடு இருப்பதால் நம்மள் கி பரபரப்பை சற்றே பொத்தி வைக்க வேண்டியிருக்கிறது!!) கடந்த 2 வாரங்களாய் நமது ‘தல‘ சார்ந்த தேடல்களில் லயித்துக் கிடந்ததன் விளைவுகள் தான் வருடந்தோறும் repeat ஆகிடும் இந்த பேமானித்தனங்கள் என்பது இந்நேரத்துக்குப் புரிந்திருக்குமே guys? என்ன தான் “நடுநிலை அவசியம்”; “ஓவராய் ஒரே நாயகருக்கு பில்டப் தரப்படாது”; “flagship hero-வாக இருப்பினுமே சராசரியாகவே நடத்திட வேண்டும்” என்றெல்லாம் மனதில் திடமாகக் கட்டளைகளைப் பதித்துக் கொண்டே தேடல்களுக்குள் புகுந்தாலும் – அந்த மஞ்சள் சொக்காய் சற்றைக்கெல்லாம் ஏதோ மெஸ்மரிசம் செய்து விடுகிறது! கடைவாயில் ஜலம்... 'லப்டப்பில்' ஒரு வேகம் என்ற கெமிக்கல் ரியாக்ஷன்கள் தாமாகவே கடைவிரிக்கத் தொடங்கி விடுகின்றன! "சரி - இன்னுமொரு ‘தல‘ புராணத்தை ஆரம்பித்து விட்டானாக்கும் ?" என்ற கொட்டாவிகளுக்கு அவசியமில்லை ; simply becos – இந்தப் பதிவானது ரொம்பவே நடைமுறை சார்ந்ததொன்று! சில பல விசில்கள் எழுந்திடவும் முகாந்திரங்கள் இருக்கப் போகின்றன ; சில பல வதனங்கள் கார்வண்ணமாகிப் போகவும் சமாச்சாரமிருக்கப் போகிறது - தொடரும் பத்திகளில்! So சுவாரஸ்யமான சில நடைமுறை நிஜங்களைப் பார்க்கலாமா?
நெய்வேலி, கோவை & ஈரோடு – என 3 பெருநகரங்களில் நமது காமிக்ஸ் கேரவன் ரவுண்டடித்து விட்டு ஊர் திரும்பியுள்ளது. வழக்கமாய் ஒவ்வொரு புத்தக விழாவின் இறுதியிலும், வரவு-செலவுக் கணக்குகள்; sales ரிப்போர்ட் என்ற ரீதியில் பார்த்து விட்டு அடுத்த வேலைக்குள் மூழ்கிப் போவது வழக்கம். ஆனால் இம்முறை அடுத்தடுத்த 3 விழாக்களின் இறுதியில் விற்பனையில் ஏதேனுமொரு pattern தென்படுகிறதாவென்று பார்க்க நினைத்தேன்! So மொத்தமாய் விற்பனை விபரங்கள்; திரும்பி வந்த ரிட்டன் புக்குகள் என சகலத்தையும் தலைப்புவாரியாக; genre- வாரியாகப் பாகுபடுத்திப் பார்த்த போது ராட்டினத்தில் ஏறியமர்ந்தது போலொரு உணர்வு! So இந்தக் காமிக்ஸ் கேரவன் சொல்லவிருக்கும் கதையே இவ்வாரத்துப் பதிவு!
‘நல்ல சேதி... கெட்ட சேதி‘ என்றதொரு கார்ட்டூனை நாம் ரசித்திருக்கிறோம்! அதே பாணியில் என்னிடமும் சில நல்ல சேதிகள் + சில கெட்ட சேதிகள் உள்ளன! Let’s start off with the good ones.....!!
TEX!!! மங்களகரமாய் ஆரம்பிக்க இந்த மஞ்சள் சட்டை மாவீரனைத் தவிர்த்து வேறு யார் பொருத்தமான தேர்வாக இருக்க முடியும்? Without an iota of doubt - இன்னமும் விற்பனைகளில் முதல்வராய்த் திகழ்வது இந்த அதிரடி ரேஞ்சரே !! என்னதான் புதுசாய் நாயகர்கள் ; தொடர்கள் ; களங்கள் என்று நாம் 'தம்' பிடித்து முயற்சித்தாலும், இந்த டெக்ஸாஸ் சிங்கத்திடம் அத்தனையுமே மண்டியிட்டே தீர வேண்டியுள்ளது ! ஆண்கள், பெண்கள், சிறுசுகள், பெருசுகள் என்ற பாகுபாடின்றி இரவுக் கழுகாரின் ரசிகர்கள் என்பது மீண்டுமொருமுறை நிரூபணமாகியுள்ளது ! "அட்டையை மாற்றினால் கதைகளுக்கிடையே வேற்றுமை ஏது ?" என்றதொரு விமர்சனம் முன்பு டெக்ஸுக்கு எதிராய் வைக்கப்பட்டிருந்தது நிஜமே ; ஆனால் 'நீ அட்டையை மாத்துவியோ ; சட்டையை மாத்துவியோ - நாங்க பட்டையைக் கிளப்பாம விடமாட்டோம் ' என்று TEX & co சொல்லாது சொல்வதை இந்த விற்பனை நம்பர்கள் புரியச் செய்கின்றன guys ! இந்த விற்பனைப் புள்ளிவிபரங்கள் என் தலைக்குள் லேசாய்க் கூடுகட்டியிருந்த சிலபல சிந்தனைகளையுமே சுத்தம் செய்ய உதவியுள்ளன !
“ஓவர்டோஸ்” என்றதொரு அசுரன் நாளாசரியாய் டெக்ஸ் & கோ மீதான நமது ஈர்ப்பை மட்டுப்படுத்தி விடுவானோ என்ற பயம் என்னுள்ளே கணிசமாய்க் குடியிருந்தது நிஜமே! ஆனால் அது கடுகளவும் முகாந்திரமிலாப் பயம் மட்டுமே என்பதை நம்பர்கள் அடித்துச் சொல்கின்றன! நிறைய Tex டைட்டில்கள் இருந்தாலும், பரவலாய் சகலத்திலும் விற்பனை இருப்பது தெரிகிறது! அதற்காக பல நூறு இதழ்கள் விற்பனை என்றெல்லாம் நான் அள்ளி விட மாட்டேன்; ஆனால் நாங்கள் அனுப்பிடும் பிரதிகளுக்கும், வாபஸ் வந்திடும் பிரதிகளுக்குமிடையிலான ratio டெக்ஸின் விஷயத்தில் ரொம்பவே மனதுக்கு இதமளிப்பதாய் உள்ளன!
அதே போல ‘பணால்‘ என்று போட்டுத் தள்ளப்பட்டிருக்கும் மாயை # 2 – விலைகள் சார்ந்தது! “60 ரூபாய் டெக்ஸ் – 120 ரூபாய் டெக்ஸை விடவும் ஜாஸ்தி விற்கக் கூடும்; So குறைந்த விலைகளில் நிறைய இதழ்கள் இருப்பின் – புத்தக விழா விற்பனைகளுக்கு உதவிடும்” என்ற ரீதியில் நான் நினைப்பதுண்டு! ஆனால் கையில் தூக்கினால் அது ஓமக்குச்சி நரசிம்மனாய்க் காட்சி தருவதை விடவும் குண்டு கல்யாணமாக வலம் வருவதையே ஜனம் விரும்புகிறது என்பதும் புரிகிறது! அதிலும் நமது hardcover இதழ்களுக்குக் கிட்டிடும் சிலாகிப்புகள் ஜிலீர் ரகம்! குறிப்பாக “சர்வமும் நானே” & “லயன் # 300” இம்முறை amongst the bestsellers!
இன்னமுமொரு சுவாரஸ்யம் - “நிலவொளியில் நரபலி” கண்டு வரும் விற்பனை சார்ந்தது! அந்த ‘மினி‘ சைஸில் வண்ணம் என்ற பாணிக்கு நிரம்பவே ரசிகர்கள் இருப்பது புரிகிறது! இது பற்றி நமது கோவைக் கவிஞருமே ஏற்கனவே என்னிடம் பேசியிருந்தார் ! எப்போதுமே ஒரு விதமான பாக்கெட் சைஸுக்கான மோகம் நம்மிடையே மங்கவே மங்காது போலும்! மண்டைக்குள் சிந்தனைச் சக்கரங்கள் சுழன்றிடும் நேரம் folks!
‘தல‘க்கு அடுத்தபடியாக ஆக்ஷன் நாயகர்களுள் இம்முறை களத்தை அதிரச் செய்திருப்பது 3 சர்ப்ரைஸ் புது வரவுகள்! முதலாமவர் செம்பட்டைத் தலை ஜேசன் ப்ரைஸ்!! இவரது முப்பாக fantasy த்ரில்லரானது நிறைவான விற்பனையைச் சந்தித்துள்ளது! இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயமொன்று இருப்பதாக நான் நினைக்கிறேன்! ‘டெக்ஸ்‘ என்ற பெயர் 32 ஆண்டுகளாய் நம் அணிகளில் ஒலித்து வருவது மாத்திரமின்றி; அவ்வப்போது மீடியா கவரேஜிலும் அடிபடும் பெயர் என்ற வகையில், புத்தகவிழா வருகையாளர்களுக்கும் பரிச்சயம் இருப்பதில் வியப்பில்லை தான்! ஆனால் ‘ஜே.பி்.‘ என்ற பெயர் சமீப காலத்து அலசல்களில் மாத்திரமே பிரசித்தம் பெற்றதொரு பெயரல்லவா? So – அந்த அலசல்களைப் பற்றி அரசல் புரசலாகவாவது கேட்டிருக்கும் வாய்ப்பு நமது காமிக்ஸ் ஆர்வல வட்டத்தைத் தாண்டிய casual readers-க்கும் கிட்டியிருக்கும் போல் படுகிறது ! அல்லது ஒருவிதத் திகிலூட்டும் அந்த அட்டைப்படங்களும், கதைகளின் பெயர்களும் புது வாசகர்களை ஈர்த்திருக்குமா ? சரியாக பதில் சொல்லத் தெரியவில்லை எனக்கு !
விற்பனையில் கலக்கியுள்ள புதுவரவு # 2 பிணம் புதைக்கும் வெட்டியான் புள்ளையாண்டானே! சமீப வரவு ; சமீப இதழ் என்ற ப்ளஸ் பாய்ண்ட்கள் மட்டுமே காரணமா ? அல்லது நமது அலசல்களிலும், FB ; வாட்சப் தகவல் பரிமாற்றங்களிலும் தெறித்த positive விமர்சனங்கள் இந்த விற்பனை வெற்றிக்குக் காரணமா? – சொல்லத் தெரியவில்லை! எது எப்படியோ – “தி அண்டர்டேக்கர்” புத்தக விழாக்களிலும் ஸ்கோர் செய்துள்ளார்! சற்றே offbeat நாயகர்களுக்கு என்றைக்குமே ஒருவித ஈர்ப்பு இருந்திடும் போலுள்ளது !
# 3 யாரென்பதில் – வியப்பில்லை தான்! அந்த மோனாலிசா ரகப் பார்வையுடனான அட்டைப்படமும் சரி, Lady S என்ற அந்தப் பெயரின் வசீகரமும் சரி, இந்த recent இதழைப் புத்தக விழாக்களில் ஒரு ஆதர்ஷக் கொள்முதல் பொருளாக்கியுள்ளது புரிகிறது ! தொடரும் இதழ்களிலும் அம்மணி சாதித்தால் கொங்கு மண்டலத்தில் இவருக்கொரு சிலை நிறுவ கடும் போட்டி நிலவுமென்பது நிச்சயம் ! "கண்டதும் காதல்" ரகம் - ஷானியாவைப் பொறுத்தமட்டிலும் !
“Decent Show” என்று சொல்லும் விதமாய் களம் கண்டுள்ளோர் நால்வர் – ஆக்ஷன் ஹீரோக்களின் பட்டியலிலிருந்து! முதலாமவர் நமது ‘W’ குழும முதலாளியான “லார்கோ வின்ச்”! ‘வித்தியாசமான கதை பாணி‘ என்ற முத்திரை இவருக்கு அழகாக set ஆகி விட்டதென்றே சொல்லலாம் போலும் ; பரவலாக இவரது சாகஸங்கள் சகலமுமே decent ஆன விற்பனை கண்டுள்ளன ! தொடர்ந்து நாலைந்து ஆண்டுகளாய் எல்லாப் புத்தக விழாக்களிலுமே விரும்பி வாங்கப்படும் இதழாக இவரது ஆல்பங்கள் அமைந்து வருவது சந்தோஷமானதொரு நிகழ்வு ! கையில் துப்பாக்கியோ, கனைக்கும் குதிரைகளோ இல்லாது போனாலும், சில நாயகர்கள் சாதிக்கத் தடைகளில்லை போலும் ! Too bad – இவரது தொடரில் ஜாஸ்திக் கதைகள் மீதமில்லை!!
டீசண்ட் பார்ட்டி # 2 நமது ரிப்போர்ட்டர் ஜானி! இதழ்களைப் புரட்டுவோர்க்கு இந்தக் கதைகளின் அழகான சித்திர பாணி + கலரிங் பாணி வசீகரம் செய்கின்றனவோ; அல்லது வருஷமாய்ப் படித்துப் பழகியதில் இந்த டிடெக்டிவ் மீது ஒரு மையல் நிலைக்கிறதோ தெரியவில்லை – ஆனால் சோடை போகா கோட்டைச்சாமி இந்த பிரான்கோ – பெல்ஜிய ரிப்போர்ட்டர்! விற்பனையில் அதகளம் பண்ணுகிறாரென்று சொல்ல முடியாது ; but ஓசையின்றி நமது ரஹானே போல பணியைச் செய்து விட்டுக் கிளம்பிடும் ரகம் இவர் !
மிஸ்டர் டீசண்ட் # 3 – ‘கேப்டன் பிரின்ஸ்‘ & கோ. எப்போதுமே மிகைப்படுத்தலின்றி, தானுண்டு, தன் வேலையுண்டு என்று சுற்றி வரும் இந்தப் பரட்டைத் தலைக் கேப்டன் சத்தமின்றிக் கைதட்டல்கள் பெற்றிருக்கிறார் புத்தக விழாக்களில் ! சூப்பர் கேப்டன்!
Last in the list - நமது fantasy நாயகர் தோர்கல் ! எப்போதுமே ஒரு மந்திரவாதி ; மாய மண்டலம் சார்ந்த கதைகளெனில் நமக்குள்ளே ஒரு சன்னமான லயிப்பு தொடரும் போலுள்ளது ; சிறுவயதுகளில் நாம் கேட்டும், படித்தும் வளர்ந்த அம்புலிமாமா கதைகளின் தாக்கமோ - என்னவோ ?!! அதன் பலனாய் தோர்கல் கதைகள் doing decently ok !
“சத்தமின்றி யுத்தம் செய்வதில்” மட்டுமல்ல; விற்பனையில் சாதிப்பதிலும் தான் கில்லாடியென்பதைப் பதிவு செய்திருக்கும் ட்யுராங்கோ தான் நம் சிலாகிப்பிற்கான அடுத்த நாயகர் ! அந்த ராப்பரா? கதை பாணியா? புத்தக வடிவமைப்பா? முதல் புரட்டலில் தட்டுப்படும் ஹாலிவுட்டின் க்ளின்ட் ஈஸ்ட்வுட் பாணியிலான கதைக்களமா ? – வாசகர்களை ஈர்க்கக் காரணமாகயிருந்தது எதுவோ தெரியவில்லை ; ஆனால் wow! என்று மட்டும் சொல்வேன் இவரது விற்பனைகளைப் பார்த்து! ரொம்பவே low profile நாயகராக ட்யுராங்கோவை கதாசிரியர் சித்தரித்திருப்பினும், அந்த அலட்டலில்லா பாணிக்கும் ஒரு ரசிகர் வட்டம் set ஆகியுள்ளது புரிகிறது !
“Surprise pack” என்ற பட்டத்தை இந்த விழாக்களில் ஈட்டியுள்ள இதழ்கள் 2 ! முதலாவது Jeremiah ! “குமுதம்” கேள்வி பதிலின் சிலாகிப்பு ; நமது விவாதங்களில் பட்டையைக் கிளப்பிய எண்ணச் சிதறல்கள்; FB-ல் செய்யப்பட்ட ஆராய்ச்சிகள் என நிறையக் காரணங்களின் பொருட்டு இந்த இதழுக்கு வெளிச்ச வட்டம் கிட்டியிருப்பது புரிகிறது ! So விற்பனையிலும் ஜெரெமயா கைததூக்கி நிற்பதில் சந்தோஷமே!!
Surprise # 2 - உங்களால் யூகிக்கவே இயலாவொரு இதழ் ! (எனக்கு மட்டுமாவது) டபுள் சந்தோஷம் – “விண்ணில் ஒரு வேங்கை” இதழானது சூப்பராக விற்பனையாகியுள்ளதன் பொருட்டு! யுத்தப் பின்னணியுடனான இந்தக் கதை 3 புத்தக விழாக்களிலுமே தெரியுள்ளது - ஆச்சர்யமூட்டும் விதத்தினில் ! அதை வாங்கிச் சென்றோருக்குமே மகிழ்வு இருந்திருப்பின் சூப்பர் தான்! பாகம் 2 & 3 வெயிட்டிங் பாபு... ‘ம்ம்ம்‘ என்று மட்டும் கண்ணசைத்தால் டெம்போ வைத்தாவது அம்மணியை அழைத்து வந்து விடுவேன்! ஏதோ பார்த்து பண்ணுங்க சாமி!
ஆக்ஷன் ரவுண்டப்பில் அடுத்தது மும்மூர்த்திகள் + கூர்மண்டையரின் progress report !
வழக்கம் போல நமது மின்சாரத் திருடர் மாயாவி doing good! ஆனால் முந்தைய ஆண்டுகளைப் போல “ஹாாா... மாயாவியா??” என்று நாற்கால் பாய்ச்சலில் ஜனம் துள்ளிக் குதிப்பது மட்டுப்பட்டு வருவது புரிகிறது! முன்பெல்லாம் புத்தக விழாவின் முதல் வாரயிறுதிக்கு மாயாவி ஸ்டாக் தீர்ந்திருக்கும்! ஆனால் இப்போது மாயாவிகாருவுமே வாபஸ் வருகிறார்! ஆச்சர்ய நிஜம் !
மாயாவிக்கே இந்தப் பாடெனில் பூப்போட்ட டிராயர்காரர் பாடு எவ்விதமோ? என்ற உங்கள் மைண்ட்வாய்ஸ் இங்கே கேட்கிறது! ஆனால் ஆச்சர்யம் கொள்ளும் விதமாய், மனுஷன் அத்தனை சொதப்பவில்லை! ஜானிக்காகவோ, ஸ்டெல்லாவுக்காவோ – விற்பனைகள் எதெற்கென்று தெரியவில்லை ; ஆனால் படகு முழுகிடவில்லை என்பது மட்டும் கண்கூடு ! இன்னொரு ஜோடியான CID லாரன்ஸ் & டேவிட் தான் இந்த மூவரணியினுள் best இந்தாண்டு! யெஸ் – இவர்களது மறுபதிப்புகள் எல்லாமே ரொம்பவே neat விற்பனை கண்டுள்ளன இம்முறை ! Strong show from a strong pair !
சரி... மும்மூர்த்திகள் பற்றிச் சொல்லியாச்சு; கூர்மண்டையர் சேதி என்னவோ? என்று கேட்கிறீர்களா? ‘என்னமோ போடா மாதவா...!‘ ஒரு காலத்துக் குற்றச் சக்கரவர்த்தி இன்றைக்கு பென்னியிடம் உதை வாங்காத குறை தான்! மறுபதிப்புகளுள் இந்தாண்டினில் – the least performing தொடர் ஸ்பைடர் தான்! பேந்தப் பேந்த விழிக்கிறேன்!
ஆக்ஷன் ப்ளாக் முடிந்து விட்டதால் அடுத்த ஸ்டாப் நேராக கார்ட்டூன் காலனி பக்கமாய்! And நீங்களொரு கார்ட்டூன் காதலராய் இருக்கும் பட்சத்தில் தரையில் உருண்டு புரண்டு குதூகலிக்க ஏகமாய் காரணங்கள் காத்துள்ளன! அதே சமயம் நீவிர் கார்ட்டூன்களின் காதலர்களல்ல எனில் தொடரும் பத்திகள் உங்களுக்கு வெறும் academic interest-க்கு மாத்திரமே !
Simply put - அடித்து தூள் கிளப்பியுள்ளன கார்ட்டூன் இதழ்கள் – புத்தக விழா விற்பனைகளில் ! விடாப்பிடியாய் கார்ட்டூன் கதைவரிசைகளில் நமது நேரங்களையும், கவனங்களையும் முதலீடு செய்ததற்கான பலன்கள் மெதுமெதுவாக துளிர்விடத் தொடங்குவது புரிகிறது ! Early days தான் - இருப்பினும், கார்ட்டூன்கள் பக்கமாய் தீர்க்கமான ஆதரவு தென்படுவது கலக்கலான சந்தோஷச் சேதி என்பேன் !
பட்டியிலில் உசக்கே நிற்பது வழக்கம் போலவே திருவாளர் லக்கி லூக் தான்! இவருமே ஆங்கில காமிக்ஸ் இதழ்களில், டி.வி. தொடர்களில், மீடியாவில் என ரவுண்ட் கட்டும் நாயகரென்பதால் விழாக்களுக்கு வருகை தருவோர் லக்கியின் கதைகளை ஆர்வமாய்த் தேர்வு செய்வதில் வியப்பில்லை! முழு வண்ணம் ; அந்த clean storylines ; வண்ணத்தில் மிளிரும் artwork என நிறைய ப்ளஸ்கள் இருப்பதால் - புது வாசகர்களைக் கூட நொடியில் தோள் மீது கை போட்டு நண்பர்களாக்கி விடுகிறார் இந்த ஒல்லிக் cowboy ! And “தரைக்கடியில் தங்கம்” தான் எண்ணிக்கையில் best seller – இதுவரையிலான புத்தக விழா விற்பனைகளில்!
இரண்டாமிடத்திலிருப்பவர் நாலடி உயரம் கூடத் தேறாதொரு சுட்டிப் புயல்! Oh yes – அந்தப் பால் வடியும் பாலகன் பென்னியைக் கண்டவுடன் காதல் casual readers-க்கு! அழகான சித்திரங்கள்; வர்ணங்கள் என்று பென்னி நொடியில் சகலரையும் அரவணைத்துக் கொள்வதில் no surprises! இந்தாண்டின் விற்பனை சரவெடி !
மூன்றாமிடத்தில் இருப்போர் நிச்சயமாய் நீங்கள் எதிர்பார்த்திடக் கூடிய நாயகர்களல்ல! ‘ஏனோ தெரியவில்லை என்னால் இவர்களது தொடர்களோடு ஒன்றிடவே முடியவில்லை!‘ என நான் சந்திக்கும் வாசகர்கள் பரவலாய் ஸ்மர்ஃப்ஸ் பற்றிப் புகார் வாசிப்பதுண்டு! ஆனால் புத்தக விழாக்களிலோ பரவலாய் இவர்களது எல்லா ஆல்பங்களுமே விற்று வருகின்றன ! அதிலும் "வானம் தந்த வரம்" செமையாக sales ! So இந்த நீலப் பொடியர்கள் நிஜமாகவே not bad at all ! மண்டையைச் சொறியும் படங்கள் ஒன் டஜன் !
சிரிப்பு போலீஸ் அடுத்த இடத்தில் உள்ளனர் – courtesy: சமீபத்து சிக் பில் ஸ்பெஷல் ! அந்த hardcover collection தரும் ஈர்ப்பா ? classic கதைகளின் சேகரிப்பென்ற காரணமா ? என்று காரணத்தைப் pinpoint செய்யத் தெரியவில்லை - ஆனால் விற்பனையில் தூள்! ஒற்றை புக் கூட வாபஸில்லை என்ற பெருமையை ஈட்டியுள்ள இதழும் கூட இது ! ஆனால் இவர்களது மற்ற ஆல்பங்களின் விற்பனை சொல்லிக் கொள்ளும் ரகத்தில் இல்லை என்பது தான் புதிரே! “ஒரு பைங்கிளிப் படலம்” போன்றவையெல்லாம் பரிதாபமாய் விற்பனை கண்டுள்ளன!
‘ஒற்றை slot-க்கு ஓ.கே.! முதலுக்கு மோசமில்லை‘ என்ற வர்ணனை கேரட் மீசைக்காரருக்குப் பொருந்தும்! “கர்னல் க்ளிப்டன்” கதைகள் எல்லாமே மிதமான விற்பனை கண்டுள்ளன என்பதால் இவருக்குக் கல்தாவும் அவசியமில்லை ; இட அதிகரிப்புக்கும் முகாந்திரமில்லை என்றாகிறது ! Variety என்பதற்கேனும் இவர் நிச்சயம் அவசியம் என்பேன் !
அதே சமயம் “2018-ன் அட்டவணையில் maybe 2 ஸ்லாட்கள் தரலாமா?” என்ற ‘ரோசனையை‘ எனக்குத் தந்திருந்த ப்ளுகோட் பட்டாளத்திற்கோ just about average sales! ஏனோ தெரியவில்லை - இந்த யுத்த பூமியின் சிரிப்பு நாயகர்களுக்கு அவ்வளவாய் ரசிகர்கள் கிட்டவில்லை புத்தக விழாக்களிலாவது ! So ஒரு சீட்டே போதும்டா சாமி இந்த நீல உடுப்புப் போராளிகளுக்கு என்று நினைத்துக் கொள்ளத் தோன்றுகிறது!
And "விட்டேனா பார் ?!!" என்று விற்பனையில் பிரித்து மேய்ந்துள்ளனர் இரு “மதில் மேல் பூனை” பார்ட்டிகள்! நமது குள்ளவாத்து மந்திரியாரும் சரி; ரின்டின் கேனும் சரி- நிச்சயமாய் ஆளுக்கொரு ஸ்லாட்டைத் தக்க வைத்திட சகல தகுதிகளும் வாய்த்தவர்களே என்பதை நம்பர்கள் புரியச் செய்கின்றன! இரு நாயகர்களின் (!!) ஆல்பங்களுமே விற்பனையில் சோடை போகவில்லை என்ற ஆச்சர்யத் தகவல் கைவசம் ! Maybe நாலுகாலாரின் விற்பனையில் ஒரு பூனையின் பங்களிப்பு கணிசமாக இருக்கலாமோ? என்ற சந்தேகம் எழாதில்லை தான்; ஆனால் எது எப்படியோ ரின்டின் கேன் நிச்சயமாய் “அந்தப் பக்கமாய் போய் விளையாடுறா தம்பி” ரகமல்ல ! So தடை பல தகர்த்தெழுடா பையா!!
ஆக கார்ட்டூன் ரிப்போர்ட்களோடு நான் அடுத்ததாய் ‘ஜம்ப்‘ செய்திடவுள்ளது கிராபிக் நாவல்கள் பக்கமாய்! “தேவ ரகசியம் தேடலுக்கல்ல” & “இரவே... இருளே.... கொல்லாதே” & “ஒரு முடியா இரவு” definitely not bad at all ரகத்தில் அடைக்கலம் காண்கின்றன! அதிலும் ”தே.ர.தே.” – has been a consistent performer ! அதே சமயம் “சிப்பாயின் சுவடுகள்”; “வானமே எங்கள் வீதி”; “பாதைகளும், பயணங்களும்” ஆல்பங்களெல்லாம் அட்டகாசமான பயணிகளாக இருந்து வருகின்றன! “ஓஹோ... இது தான் நெய்வேலியாக்கும்?”; “அட... இது கோவைங்களாண்ணா?”; “சொல்லவேயில்லை... இது தான் ஈரோடுன்னு”; என்று நயமாகக் கேட்டுத் தெரிந்து கொண்டு பத்திரமாய், துளிச் சேதமுமின்றி சிவகாசிக்குத் திரும்பி விடுகின்றன! So அற்புதமான travelers ! இந்தப் பட்டியலில் க்ரீன் மேனருமே அடக்கம் என்பது தான் கொடுமையே! எண்ட குருவாயூரப்பா!
ஆக ஒரு மாதிரியாய் progress (முன்னேற்றம்) காட்டியோரின் ரிப்போர்ட்களை வாசித்து முடித்த கையோடு இனி ரிவர்ஸ் கியர் போட்டுத் தாக்கும் நாயகர்கள் பக்கமாய் பார்வையைத் திருப்பும் துரதிர்ஷ்டப் பணிக்குள் நுழைகிறேன் ! Guys – இவை விற்பனை சார்ந்த புள்ளி விபரங்கள் மட்டுமே; So உங்களின் ஆதர்ஷ நாயகர்(கள்) தொடரும் சொதப்பல் பட்டியலில் இருப்பின் அதற்கென என்னைக் கோபிக்க வேண்டாமே ப்ளீஸ்? எனக்குமே இதுவொரு சங்கடமான பணியே என்பதை மறவாதீர்கள்!
“இரத்தக் கோட்டை” இம்மாத வெளியீடு என்பதோடு டைகரின் க்ளாசிக்களுள் ஒன்றும் என்பதால் ‘இ.கோ‘ விற்பனையில் (ஈரோட்டில்) அழகாய் சாதித்துக் காட்டியுள்ளது! ஆனால்... ஆனால்... ஆனால்... அதைத் தாண்டிய சகல டைகர் இதழ்களுமே தர்ம அடி வாங்கியுள்ளது தான் வேதனை! சரி... மார்ஷல் டைகர் பிடிக்கலியா? ....இளம் டைகர் கதைகள் அத்தனை ரசிக்கலியா? பரவாயில்லை தான்! ஆனால் “தங்கக் கல்லறை” கூட ஒற்றை இலக்க எண்ணங்களில் விற்பனையாகியிருப்பதைத் தான் ஜீரணிக்கவே முடியவில்லை! இளம் டைகர் கதைகளெல்லாம் - உப்ப் !! Maybe புதிதான வாசகர்களுக்கு அந்த அழுக்கு முகமும், புழுதி மண்டலங்களும் ரசிக்கவில்லையோ – என்னவோ?? ரொம்பவே சங்கடமான நிலை!!
டைகரின் நிலை இதுவெனில் கமான்சே தொடர் படும் அல்லல்கள் சொல்லி மாளா ரகம்! இதுவரையிலான ஏழோ-எட்டு ஆல்பங்களிலும் தலா 3 அல்லது 4 பிரதிகளே விற்றுள்ளன ஒவ்வொரு விழாவிலும் ! யதார்த்தம்; மிகைப்படுத்தல் இல்லாக்களம்; ஹெர்மனின் சித்திர ஜாலங்கள் என்று ஏதேதோ ப்ளஸ்கள் இருப்பினும் இந்தத் தொடருக்கொரு ‘ஸ்டார் பவர்‘ இல்லாதது பெரும் குறையாகவே தென்படுகிறது போலும்! நேற்றைக்கு வந்த ட்யுராங்கோ கூட ஒரே ஆல்பத்தில் ஒரு ரசிகர் படையை உருவாக்கியிருக்க – கமான்சே தொடரோ தட்டுத் தடுமாறுகிறது! Sad... really sad!
மீசைக்கார நாயகர்களுக்கு வெகுஜன ஒப்புதல் எட்டாக்கனிகள் போலும் – at least காமிக்ஸ் துறையிலாவது! நம்மிடையே decent ஆன மதிப்பெண்கள் பெற்றுள்ள வேய்ன் ஷெல்டன் – புத்தக விழா விற்பனைகளில் ரொம்பவே பின்தங்கி நிற்கிறார்! இம்மாத இதழான “ஒரு காகிதத்தைத் தேடி” யினை நீங்கலாகப் பார்த்தால் இதர ஷெல்டன் ஆல்பங்கள் எல்லாமே மிக மிக சுமாரான விற்பனைகளையே கண்டுள்ளன! புரியமாட்டேன்குதே இந்த லாஜிக் ?!
ஷெல்டன் பாடு இப்படியெனில் – டயபாலிக் பாடு அதை விடவும் தரைமட்டம்! ஈரோட்டில் மொத்தமாய் 2 புக்குகளே விற்பனையாகியுள்ளன என்று சொன்னால் நம்பத் தான் முடிகிறதா ? இத்தனைக்கும் இந்த இதழின் விலையும் குறைச்சல்; சலவை வெள்ளைப் பேப்பரில் பளிச்சிடவும் செய்கிறது! ஆனால் விற்பனையில்...????
“குறைந்த விலையில் black & white இதழ்கள் விற்பனைக்கு லட்டுக்கள்!” என்ற எண்ணம் நேற்று வரை எனக்குள் இருந்தது வாஸ்தவமே! ஆனால் மூன்று புத்தக விழாக்களிலுமாய்ச் சேர்ந்து கீழ்க்கண்ட நாயக/ நாயகியர் ஈட்டியுள்ள விற்பனை எண்ணிக்கைகள் எனது அபிப்பிராயத்தைப் பப்படமாக்கி விட்டுள்ளன!
- ராபின்
- மாடஸ்டி
- ஜுலியா
இவர்களது stuttering விற்பனைகளைப் பார்க்கும் போது – வித்தியாசமானதொரு சிந்தனையும் தோன்றுகிறது! மறுபதிப்புகள் + டெக்ஸ் தவிர்த்து மற்ற கதைகள் எதுவுமே b & w-ல் self எடுக்காதோ - இனி வரும் நாட்களில் ? என்பதே அந்த சந்தேகச் சிந்தனை! Of course மர்ம மனிதன் மார்ட்டின் “மோசமில்லை” என்ற ரகத்தில் நிற்கிறார்! அவரைத் தவிர்த்த மற்ற நாயக / நாயகியர் சோபிக்கத் தவறுவது வண்ணமின்மையின் பொருட்டுத் தானா ? கறுப்பு – வெள்ளையின் ஆயுட்காலம் ரொம்பவே மட்டுப்படத் தொடங்கி விட்டதோ? இன்றைய தலைமுறைக்கு வர்ணம் ஒரு அடிப்படை அத்தியாயவசியமோ? Thinking......
“சரி... வண்ணம் தானே வேண்டும்? எங்க கிட்டே அது திகட்டத் திகட்ட இருக்குது!” என்று கீழ்க்கண்ட மூவர் சொல்லிப் பார்க்கிறார்கள் தான்!
- டைலன் டாக்
- சாகஸ வீரர் ரோஜர்
- பரூனோ பிரேசில்
ஆனால் “அந்த ஓரமாய்ப் போய் விளையாடுங்க தம்பிகளா!” என்று புத்தக விழாவில் வாசகர்கள் இவர்களிடம் சொல்லியிருப்பது புரிகிறது! இம்மாத புது இதழ் தவிர்த்து பாக்கி டைலன் டாக் இதழ்கள் எல்லாமே so so விற்பனைகளே ! ஒன்னுமே புரியலே... உலகத்திலே! என்னவோ நடக்குது... மர்மமா இருக்குது...!
ஆக இது தான் விற்பனைகள் வாயிலாய் எனக்குப் புரிபட்ட சேதிகள்! Of course – ஒற்றை நாளில் புதுப் புதுக் கதவுகளைத் திறந்து வைக்கவும்; பற்பல பழங்கதவுகளைப் படீர் படீரென்று அறைந்து சாத்தவும் நான் முனையப் போவதில்லை! நொடிப் பொழுதினில் தீர்மானம் எடுக்கும் knee-jerk reactions சத்தியமாய் அமலில் இருக்கப் போவதில்லை! மாறாக – long run-ல் மேய்ச்சலுக்கு அனுப்பப்பட வேண்டிய குதிரைகள் எவை? ஓய்வு தரப்பட்டு பரணுக்குப் பார்சலாகிட வேண்டிய குதிரைகள் எவை? என்ற பட்டியலைத் தயாரிக்க இதுவொரு துவக்கப் புள்ளியாக இருந்திடலாம்! சந்தாக்களே நமது ஜீவநாடி எனும் போது – சந்தாதாரர்களின் எண்ணவோட்டங்கள்; நமது வலைப்பதிவின் அலசல்கள் நல்கும் சேதிகள்; அப்புறமாய் ஆன்லைன் விற்பனைகளின் patterns & நமது ஏஜெண்ட்களின் விற்பனை patterns என்று சகலத்தையும் தொடரும் 2 மாதங்களில் உன்னிப்பாகக் கவனிக்கத் தீர்மானம் செய்துள்ளேன்! பார்க்கலாமே- அவற்றுள் புதைந்து கிடக்கும் சேதி என்னவாகயிருக்குமென்று!
Anyways – back to the present – செப்டம்பரின் பணிகள் ஜரூராய் நடந்தேறி வருகின்றன! காத்திருக்கும் டபுள் ஆல்பம் நமது fantasy நாயகரான தோர்கலின் “கனவு மெய்ப்பட வேண்டும்!” And வழக்கம் போலவே சீனியர் எடிட்டரை இதன் மொழிபெயர்ப்புகளைச் செய்திடக் கோரியிருந்தேன்! டபுள் ஆல்பத்தின் முதலாவது ஆல்பத்தில் “அடடே... தேவலியே!” என்று தோன்றியது ; மிகச் சொற்பமான டயலாக்குகள் மட்டுமே இருந்த போதிலும் ! ஆனால் பேனா பிடிக்கும் பணியானது ஒரு தொடர் பணியாகயின்றி – அவ்வப்போதைய சமாச்சாரங்களாக இருந்திடும் பட்சத்தில் நேரக்கூடிய சகல சிரமங்களையும் இரண்டாவது ஆல்பத்தில் சீனியர் சந்தித்திருப்பது புரிந்தது. ஏகமாய் வசனங்கள் ; கோர்வையாய்ச் சொல்லப்பட வேண்டிய வரிகள் என்று கதை நெடுக இருந்திட, மொழிபெயர்ப்பின் flow ரொம்பவே தேங்கிடுவதாய்ப் பட்டது ! கதையின் சவாலான ஸ்கிரிப்டுக்கு நியாயம் செய்ய முயற்சிக்காது போனால் – ஒரிஜினல் ஆங்கில வடிவத்தைக் கையிலேந்தியபடிக்கு பத்திக்குப் பத்தி பிழைகளைச் சுட்டிக் காட்டும் படலங்கள் தலைதூக்கக் கூடுமென்று பட்டதால் – ‘வம்பே வேணாமே!‘ என்று கிட்டத்தட்ட முழுசையுமே புதிதாய் எழுதிடும் பணியினை நேற்றைக்குத் தான் முடித்து வைத்தேன். நான் சுத்தியுள்ள கம்பு அட்சர சுத்தமென்று நான்நிச்சயம் சொல்லப் போவதில்லை ; but ஓரளவேனும் தேறிடும் என்ற நம்பிக்கையுள்ளது ! தொடரும் நாட்களில் அச்சுப் பணிகள் தொடங்கிடும்! And இதோ – அட்டைப்படத்தின் preview! வழமை போலவே முன் & பின் ராப்பர்கள் ஒரிஜினல்களே!
Before I sign off – இதோ நமது இரத்தப் படலத் தொகுப்பின் முன்பதிவுப் பட்டியல்! இரண்டே வாரங்களுக்குள் 110+ முன்பதிவுகள்; அதுவுமே நமது இதழ்களில் இது சார்ந்த விளம்பரங்கள் இல்லாத போதே என்பதைக் கருத்தில் கொண்டால் இதுவொரு smashing beginning என்பேன்! துவக்க வேகம் தொடரும் நாட்களிலும் தொடரின் – ஒரு சாதனை இதழ் நம் கண்முன்னே நனவாகி நிற்கும் நாள் தூரத்தில் இல்லை என்பேன்! Keep those bookings going folks! Yoohoo!
மீண்டும் சந்திப்போம்! அது வரை have a fun weekend! Bye for now!