நண்பர்களே,
வணக்கம். திறந்த வாய் இன்னமும் மூடாத நிலையில் இந்தப் பதிவினை ஞாயிறு அதிகாலையில் டைப்புகிறேன் !! வேறென்ன ? தேசமே மலைத்தும், வியந்தும் பார்த்துவரும் பாகுபலி - The Conclusion திரைப்படத்தை சனி மதியம் சோழ மண்டலத்துத் தியேட்டர் ஒன்றில் ஜுனியரோடு பார்த்துவிட்டு வந்த போது ஓபன் ஆன வாய் தான் இன்னமும் அலிபாபா குகை போலவே திறந்து கிடக்கிறது ! நமது வலைப்பதிவினில் காமிக்ஸ் சார்ந்த சமாச்சாரங்களைத் தாண்டி வேறெதுவும் இடம்பிடித்திடாது என்பதை ஒரு எழுதப்படா கோட்பாடாய் நாம் கொண்டு செல்வதில் இரகசியம் இல்லை தான் ; ஆனால் ஒரு அசாத்திய கற்பனைப் புனைவு கண்முன்னே திரைவிலகும் வேளையில் அதனைச் சிலாகிப்பதில் தவறில்லை என்று பட்டது - simply becos சித்திரங்கள் வாயிலாய்க் கதை சொல்லும் காமிக்ஸ் யுக்திக்கும் , இந்தத் திரைமுயற்சிக்கும் ஒரு மிக நெருக்கமான தொடர்பு இருப்பதை படம் நெடுகிலும் உணர முடிந்தது ! டைரக்டர் ராஜமௌலி ஒரு அதிதீவிர Amar Chithra Katha ரசிகர் எனும் பொழுது அவரது மனதில் ஓடிய ஒவ்வொரு பிரேமிலும் என்றோ, எங்கெங்கோ அவர் படித்திருக்கக்கூடிய காமிக்ஸ் கதைகள் inspire செய்த சமாச்சாரங்கள் இடம்பிடித்தல் சாத்தியமே என்று நினைத்தேன் ! And படம் ஓட ஓட - எனக்கு ஒவ்வொரு காட்சியிலும் கண்ணில் தெரிந்தது நாயகர் பிரபாஸ் அல்ல - நம்மவர் தோர்கலே !! அனுஷ்காவாய் என் முன்னே நிழலாடியது முழுக்கவே அரிசியா தான் !! இந்தக் கற்பனைக் களத்துக்கு இந்திய சாயல் மாத்திரம் இல்லாவிடின் - தோர்கலை இங்கு பொருத்திப் பார்ப்பது வெகு சுலபம் என்பேன் ! படம் நெடுகிலும் அள்ளித் தெளிக்கப்பட்டிருக்கும் பிரம்மாண்டமானspecial effects ஒவ்வொன்றும் அதன்பின்னுள்ள ஓவியர் அணியின் அசாத்திய உழைப்பையும் பறைசாற்றுவதை உணர்ந்த பொழுது - ரொம்பவே பெருமையாக இருந்தது ! அசாத்திய ஆற்றல் கொண்டதொரு அணியின் கூட்டு வெற்றி இது என்ற போதிலும், அதன் ஒரு ஓரத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் காமிக்ஸ் என்ற முத்திரை நமக்கெல்லாம் பொதுவானதொரு விஷயம் என்ற விதத்தில் பாகுபாலியோடு நாமும் நெருக்கமாய் உணர முடிகிறதோ என்னவோ ?!!
ஆகாச உயரத்திலிருந்து நம் நடைமுறைக்குத் திரும்புவோமா இனி ? நேற்றைய தினம் (சனி) உங்களது சந்தாப் பிரதிகள் சகலமும் கூரியரில் புறப்பட்டு விட்டன guys ! தென்னைமரத்திலே தேள் கொட்ட முகாந்திரம் என்னவோ - தெரியாது ; ஆனால் அது கொட்டிவைத்தால் அதன் பலனாய் பனைமரத்தில் நெரி கட்டுமென்பது பழமொழி அல்லவா ? அதனை இந்த வாரத்தில் உணர்ந்தோம் ! மேதின விடுமுறை காத்திருப்பதால் கூறியர்களை எப்பாடு பட்டேனும் வெள்ளிக்கிழமையே இங்கிருந்து கிளப்பியாக வேண்டுமென்று திட்டமிட்டிருந்தோம். ஆனால் ஊரின் மையத்தில் நெடுங்காலமாய் நீடித்து வந்ததொரு ஆக்கிரமிப்பைத் தட்டிவிட உச்சநீதிமன்றத்தின் உத்தரவு வியாழனன்று அமல்படுத்தப்பட்டது ! So புல்டோசர்களும் , போலீஸ் பாதுகாப்புமாய் பனி ஜரூராய் நடைபெறத் துவங்கிய சற்றைக்கெல்லாமே பெரும்பான்மையான பகுதிகளில் மின்சாரத்தையும் துண்டித்துவிட்டார்கள் ! So வியாழன் முன்னிரவு வரை நமது பைண்டிங் ஆபீஸ் இருளிலே மிதக்க, அன்றைய பணிகளும், நமது திட்டமிடல்களும் ஒருங்கே பணாலாகிப் போயின ! வெள்ளியிரவே பிரதிகள் நம்மை வந்து சேர, சனிக்கிழமை பேக்கிங் செய்து அவற்றை அனுப்பியுள்ளனர் !! ஒருக்கால் ஞாயிறன்றும் கூரியரின் கதவைத் தட்டிப் பார்சலை வாங்கி கொள்ளல் சாத்தியமாகியின் - good luck & happy reading over the weekend !
மே இதழ்களின் ஆன்லைன் லிஸ்டிங்குமே தற்போது செய்யப்பட்டுள்ளது - மொத்தமாகவும், தனித் தனியாகவும் ! So சந்தாவில் இடம் பெறா நண்பர்கள் இங்கே க்ளிக் செய்திட்டால் போதும் : http://lioncomics.in/monthly-packs/354-may-2017-pack.html .
சந்தா என்ற topic-ல் இருக்கும் வேளையிலேயே சின்னதொரு நினைவூட்டலுமே கூட : சந்தாக்களை 2 தவணைகளாய் செலுத்தத் திட்டமிட்டிருந்த நண்பர்கள் இறுதித் தவணைகளை அனுப்பி உதவிடுங்களேன் - ப்ளீஸ் ?
Moving on, அடுத்த மாதங்களின் பக்கமாயும், எஞ்சியிருக்கும் 2017-ன் இதழ்கள் பக்கமாயும் பார்வைகளை சில நாட்களுக்கு முன்பாய் ஓடவிட்டுக் கொண்டிருந்த பொழுது சில விஷயங்கள் பளிச் என்று கவனத்தைக் கோரின ! ரெகுலர் சந்தாப் பிரிவுகள் A B C & D-ல் தலா 10 இதழ்கள் எனும் பொழுது மாதம்தோறும் 4 இதழ்களென்ற பார்முலாவைத் தொடர்ந்திடும் பட்சத்தில் - அக்டோபரிலேயே அறிவிக்கப்பட்ட இதழ்களை மங்களம் பாடி முடித்திருப்போம் !! சந்தா E & Super 6-ன் எஞ்சியுள்ள இதழ்களும் கைவசம் இருப்பதால் ஒரு தினுசாய் manage செய்ய முடிகிறது ! அவை மட்டும் இல்லாது போகும் பட்சம் - லேசாயொரு வெற்றிடம் தெரிந்திட வாப்புகளுண்டு என்பேன் ! Take away சந்தா D (மறுபதிப்புகள்) from the equation & எஞ்சி நிற்க கூடியது 2 புது இதழ்கள் மட்டுமே என்றிருக்கக் கூடும் !
இங்கொரு கேள்வி எழுப்பிட ஆசை ! மாதம்தோறும் 4 இதழ்கள் எனும் பொழுது - இவற்றைப் படித்து முடிக்க சராசரியாய் உங்களுக்கு அவசியமாவது எத்தனை நாட்கள் ? அதைவிட முக்கியமான இன்னொரு வினாவும் ! இந்தாண்டின் இதுவரையிலுமான இதழ்களில் எத்தனை பாக்கி நிற்கின்றன - படிக்க அவகாசம் கிட்டா காரணத்தின் பொருட்டு ? நிச்சயம் கோபித்துக் கொள்ள மாட்டேன் - தாராளமாய் நிஜத்தைப் பகிர்ந்திடலாம் - ப்ளீஸ் ? கிட்டத்தட்ட வருடத்தின் பாதிப் பகுதியை எட்டிப் பிடிக்கவிருக்கிறோம் என்ற நிலையில் - 2018-ன் அட்டவணைத் திட்டமிடல் பக்கமாய் நிறையவே சிந்தனை தந்திட அவசியமாகிறது ! So இந்தத் தருணத்தில் உங்களது inputs கிடைப்பின் - நிச்சயம் உதவிடும் !
அரைத்த மாவுகளையே புதுசாய் recycle செய்திடாது ஒரு ஒட்டுமொத்தமான புது நாயக அணியோடு ஓராண்டாவது களமிறங்கித் தான் பார்க்க வேண்டும் - என்பது எனது சமீப காலத்து அவா ! No லார்கோ ; No ஷெல்டன் ; No கமான்சே ; No லக்கி ; No சிக்பில் என்ற ரீதியில் ஒரு அட்டவணையை 2017 க்கே ஒருவாட்டி எழுதிப் பார்த்தேன் - எங்கோ ஒரு இரயில்நிலையத்தில் தேவுடு காத்து நின்ற வேளையில் ! ஆனால் சிலபல துடைப்பங்கள் DTDC கூரியரில் கிளம்பிடக்கூடுமென்று பட்டதால் - ஜகாவும் வாங்கிவிட்டேன் ! என் கேள்வி இதுவே : ஒரு சுழற்சி முறையில் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு சந்தாப் பிரிவில் ஒரு ஒட்டுமொத்த ஆள்மாறாட்டம் செய்ய முனைந்தால் ஓவராய் உதைப்பீர்களா - மிதமாய்ச் சாத்துவீர்களா ? Say - முதல் ஆண்டில் சந்தா A -வில் ஒட்டுமொத்தமாய் புது ஆக்ஷன் & டிடெக்டிவ் நாயகர்களை புகுத்துவது ; மறு ஆண்டில் - தற்போதைய black & white நாயகர்கள் சகலருக்கும் ஓராண்டு விடுமுறை தந்து - புதுவரவுகளை வரவேற்பது ; ஆண்டு # 3 -ல் அந்தப் பரீட்சார்த்த முயற்சியைக் கார்ட்டூன்கள் பக்கமாய்த் திருப்புவது என்றிருப்பின் - அது பற்றிய உங்கள் எண்ணங்கள் என்னவாக இருக்கும் ? 'ரைட்டு...பாயைப் பிறாண்ட ஆரம்பிச்சுட்டான் புள்ளையாண்டான் !' என்ற பயம் வேண்டாமே - இது சும்மா தலைக்குள் தோன்றியதொரு நினைப்பின் உரத்த பகிர்வே ! ஒருவித அயர்ச்சியை விலக்கி, இந்த முயற்சியானது நமது உற்சாகங்களைத் தக்க வைக்குமென்று உங்களுக்குமே தோன்றிடும் பட்சத்தில் - maybe 2019 முதல் இதுக்கொரு துவக்கம் தந்து பார்க்கலாம் ! 'பரவால்லே...இப்போ பிடுங்கிட்டு இருக்கும் ஆணிகளே நலம் !" என்று மனதில் பட்டால் - அதையும் தெரிவிக்கலாம் guys !
போன மாதம் இலண்டனுக்குப் போயிருந்த சமயம் நான் கவனித்த சில விஷயங்கள் பற்றியும், அவை நமது திட்டமிடல்களை மெருகூட்டக் கூடிய விதங்களைப் பற்றியுமே கொஞ்சம் பேசட்டுமா ? நமது ஆரம்பங்கள் சகலமுமே பிரிட்டனின் கரைகளைச் சார்ந்த கதைகளே என்பதை நாமறிவோம் ! மாயாவிகாருவில் துவங்கி இரும்புக்கை உளவாளி (வில்சன்) வரைக்கும் ஒருவண்டி Fleetway & DC Thomson கதைகளுக்குள் நாம் மண்டையை நுழைத்து நின்றது அந்நாட்களது உச்சங்கள் ! அப்போதெல்லாம் இங்கிலாந்தின் காமிக்ஸ் மார்க்கெட்டும் செம விறுவிறுப்பாய் இருந்திடும் ! ஏதேனும் வேலை காரணமாய் அங்கு செல்லும் போதெல்லாம் - புத்தகக் கடைகளுக்குள் புகுவதே சொர்க்கத்துக்குச் செல்லும் ஒரு அனுபவமாய் இருப்பது வழக்கம் ! ரேக் முழுவதும் வித விதமாய் ; கலர் கலராய் காமிக்ஸ் இதழ்கள் கண்ணைப் பறிக்கும் !! அங்கேயே நின்று அவற்றைப் புரட்டினாலோ, படித்தாலோ, யாரும் ஏதும் சொல்வதில்லை என்பதால் சாவகாசமாய் மாலைப் பொழுதுகளை இந்தப் பராக்குப் பார்க்கும் படலத்தில் செலவிடுவது வழக்கம் ! ஆனால் துரதிர்ஷ்டவசமாய் பிரிட்டிஷ் காமிக்ஸ் பாணிகள் சிறுகச் சிறுக ஈர்ப்பை இழந்திட, அமெரிக்க காமிக்ஸ் படையெடுப்பு இங்கு வெற்றி காணத் துவங்கியது ! BUSTER ; BEANO ; DANDY ; VULCAN ; MISTY என்ற இதழ்களையாகப் பார்த்தும், ரசித்தும் வந்த பிற்பாடு - ஸ்பைடர்மேன் / சூப்பர்மேன் என்ற அமெரிக்க சூப்பர் ஹீரோ சாகசங்களை அதே ரேக்கில் பார்க்கும் போது ஏனோ ஒரு சின்ன ஏமாற்றம் தோன்றும் உள்ளுக்குள் ! ஆனால் இம்முறையோ ஒரு ரொம்பவே pleasant surprise !! பிரிட்டிஷ் சிறுவர் இதழ்கள் & காமிக்ஸ் மறுபடியும் ஒரு மெல்லிய சுறுசுறுப்பைக் காட்டி வருவதை - உணர முடிந்தது ! அந்நாட்களது அதே அதகளம் என்றில்லை தான் ; but நிச்சயமாய் ஒரு சின்ன மறுமலர்ச்சி கண்ணில்பட்டது போலிருந்தது ! Of course - CINEBOOK அதிரடியாய் பிரெஞ்சு காமிக்ஸ் இதழ்களை மொழிமாற்றம் செய்து ஆங்கிலத்தில் வெளியிட்டு தூள் கிளப்பி வருகிறது தான் ; ஆனால் ஏனோ தெரியவில்லை லண்டனின் புத்தகக் கடைகளில் அவை அவ்வளவாய்க் கண்ணில்படவே இல்லை !! வேற்றுமொழிப் படைப்புகள் - என்ற கோணத்தில் இவையங்கு பார்க்கப் படுகிறதா - சொல்லத் தெரியவில்லை ! நம்மைப் பொறுத்தவையிலும் என்னதான் பிரான்க்கோ-பெல்ஜிய கதைகள் ; இத்தாலியக் கதைகள் என்ற நாம் சுற்றி வந்தாலுமே - அந்த நேர்கோட்டு fleetway சாகசங்களின் சுவாரஸ்யமும், சுலபத்தனமும் ஒரு வித்தியாசமே என்ற சிந்தனைக்குச் சொந்தக்காரன் நான் ! So முன்னர் போல முழுக்க அதனுள் மூழ்கிடாது போனாலும் - நடுநடுவே பிரிட்டிஷ் கதைகளைக் கண்ணில் காட்டல் ஓகே தானா ? இது தொடர்பாய் பிள்ளையார் சுழிகள் ஏற்கனவே போட்டு வைத்திருக்கிறேன் என்றாலும் - உங்களின் அபிப்பிராயங்களே எனது அடுத்த அடிகளை நிர்ணயிக்க உதவிடும் ! இதனையொரு ரிவர்ஸ் கியர் போடும் முயற்சியாக நீங்கள் பார்ப்பீர்களா ? அல்லது சிகப்புக் கம்பளம் இல்லாட்டியும் லேசாய்ச் சாயம் போனதொரு ஜமுக்காளத்தையாவது விரிக்கத் தயாராவீர்களா ?
Before I sign off - சில வேண்டுகோள்கள் !!
# 1 : நமது சூப்பர் 6 -ல் காத்திருக்கும் டிராகன் நகரம் இதழின் முதல் பக்கத்தில் உங்கள் போட்டோக்களை அச்சிட்டுத் தருவதாய்ச் சொல்லி இருந்ததை நிச்சயம் மறந்திருக்க மாட்டீர்கள் ! நேரமிது - உங்கள் போட்டோக்களை சேகரித்திட !! ஏற்கனவே ஒரு 25 பேர் சுமாருக்கு மட்டும் தபாலில் தங்களது போட்டோக்களை வெவ்வேறு தருணங்களில் அனுப்பி இருப்பர் ! இப்போது எல்லோருமே தங்கள் படங்களை : photos_lion@yahoo.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிட இயலுமா - ப்ளீஸ் ? இப்போதிலிருந்து துவக்கினாலே இந்த மெகா முயற்சியை வெற்றியாக்கிட இயலும் ! So சீக்கிரமே அனுப்புங்களேன் - Super 6 subscribers ?
# 2 : இரத்தக் கோட்டை தொகுப்பு தயாராகி வருகிறது ! Early Birds களுக்கு அது தொடர்பான டீசர்கள் சீக்கிரமே அனுப்பப்படும் ! இந்த இதழில் "டைகர் - தொடரும் ஒரு சகாப்தம் ! " என்ற தலைப்பில் சில பக்கங்களை ஒதுக்கியுள்ளோம் - உங்களின் எண்ணச் சிதறல்களை அதனுள் அடக்கிடும் பொருட்டு ! So இங்கே பின்னூட்டங்களாக வெளியிட்டாலும் சரி, நமக்கு மின்னஞ்சலில் (lioncomics@yahoo.com)அனுப்பினாலும் சரி - பயனாகிடும் ! பேனாக்களைத் தயார் செய்யுங்களேன் folks ?
# 3 : சமீபமாய் நமது பதிவில் வாசக டிசைனர்களின் திறமைகளை முன்னிறுத்திய "பயங்கர புயல்" ராப்பர்களைப் பார்த்துக் கொண்டிருந்த பொழுது - உங்களின் திறமைகளை மீண்டுமொருமுறை showcase செய்திடும் ஆவல் மேலோங்கியது ! காத்திருக்கும் அடுத்த கார்ட்டூன் இதழுக்கு ராப்பர் வடிவமைக்கும் ஒரு குட்டியான contest வைத்தாலென்னவென்று தோன்றியது ! So ரின்டின் கேனாரின் "தடை பல தகர்த்தெழு !!" இதழின் முகப்பை உங்கள் கைவண்ணத்தில் மிளிரச் செய்வோமா ? ஆர்வமுள்ள நண்பர்கள் கரம் தூக்குங்களேன் - ப்ளீஸ் ?