நண்பர்களே,
வணக்கம். ஊர்ஜனமெல்லாம் வங்கி வாசல்களிலும், ATM மிஷின்களின் முன்னேயும் தவம் கிடக்கும் பொழுதினில் நான் வழக்கம் போல 'உசிலம்பட்டி முதல் உகாண்டா வரை' உலகம் சுற்றும் பயணத்துக்கு உங்களை அழைத்துச் செல்வது ஒரு சிலருக்குக் கடுப்போ கடுப்பாகத் தோன்றிடலாம் தான் ! அவர்கள் மட்டும் இந்த வாரப் பதிவுக்கு விடுமுறை நல்கிட்டால் தவறில்லை என்பேன் !
‘காலத்தை வென்ற (நமது காமிக்ஸ்) ஜாம்பவான்கள்‘ பட்டியலினை போன வாரம் நமது இரும்புக்கரத்தார் துவக்கி வைத்திருந்ததில் நிச்சயமாய் யாருக்கும் அபிப்ராய பேதங்கள் இருந்திருக்காது ! So அந்தப் பட்டியலில் அடுத்த இடத்தைப் பிடிக்கப் போகும் ஆசாமி யாரென்று பார்ப்போமா ? (இது கால வரிசையிலானதொரு பட்டியலே தவிர, தரவரிசைப் பட்டியலல்ல என்ற புரிதலோடு படித்தால் – ‘அவருக்கு இவர் சோடையாக்கும்? இவரை விட அவர் பெரிய அப்பாடக்கராக்கும்?‘ என்ற கேள்விகள் எழாது !) So here goes :
மாயாவிக்கு 4 மாதங்கள் ஜுனியர்களாய் நமது தமிழ் காமிக்ஸ் உலகிற்கு அறிமுகமான சாகஸ ஜோடியான C.I.D. லாரன்ஸ் & டேவிட் துவக்கம் முதலாகவே போட்டதென்னவோ டாப் கியர் தான் ! “ப்ளைட் 731” வெளியான காலங்களில் – அனல்தெறிக்கும் ஹிட்டாக இருந்திருக்குமென்பதை யூகிப்பதில் சிரமமில்லை ! கண்டம் விட்டு கண்டம் பறந்து ; கண்டம் to கண்டம் தாண்டித் தாண்டிச் செல்வதை அந்நாட்களில் நாம் திறந்த வாய் மூடாது ரசித்திருப்பது உறுதி ! இந்தக் கதையானது அப்போதொரு மலையாளப் பதிப்பாகவும் வெளிவந்தது என்பது கொசுறுச் சேதி ! அதனை 45 ஆண்டுகள் கழித்தும் சிலாகியோ- சிலாகி என்று சிலாகித்திட திருவனந்தபுரத்தில் சில மூத்த வாசகர்கள் உள்ளனர் ! சொல்லப் போனால் அவர்களது காமிக்ஸ் உலகமானது துவங்குவது flight 731-ல் & முற்றுப் பெறுவது "மஞ்சள்பூ மர்மத்தில்" !! இவையிரண்டையும் உச்சி மோர்ந்து அவர்கள் நெட்டில் ஆங்காங்கே ஆண்டாண்டு காலமாய்ப் பதிவிட்டு வருகின்றனர் !! இவற்றை மட்டுமாவது மலையாளத்தில் மறுபதிப்பு செய்யுங்களேன் என்றும் எண்ணற்றமுறை கோரிக்கை வைத்துள்ளனர் என்றால் இவர்களது "லா.டே." அபிமானம் எத்தகையது என்பதைப் புரிந்து கொள்ளலாம் !! So மாயாவியின் சம கால சாகஸ வீரர்கள் ; ஏராளமான ‘ஹிட்‘ நாயகர்கள் என்ற பெருமை இந்த ஜோடிக்கு உண்டெனினும் – ‘ஜாம்பவான்கள்" என்ற அடைமொழிக்கு தகுதியானவர்களா ? என்பதொரு கேள்விக்குறியே - at least என்னைப் பொறுத்தவரையிலுமாவது !
நமது ‘டிசைனர் டிரவுஸர்‘ புகழ் ஜானி நீரோவும் இதே படகில் சவாரி செய்யும் ஒரு சமவயது ஹீரோ ! ‘கொலைகாரக் கலைஞன் ‘ மூலமாய் அறிமுகம் கண்டு – தொடர்ந்த மாதங்களில் / ஆண்டுகளில் பல memorable கதைகளை வழங்கிய ஜானி நிச்சயமாய் popularity chart-களில் உயரமானதொரு இடத்துக்குச் சொந்தக்காரரே ! ஆனால் அவரை ‘ஜாம்பவான்‘ என்பதெல்லாம் சற்றே ஓவராகத்தானிருக்கும் ! Wouldn't you agree ?
ரசனைசார்ந்த தேர்வுகளில் இது போன்ற ‘எடுத்தோம்-கவிழ்த்தோம் ‘ தீர்ப்புகள் எனது சொந்தக் கருத்துக்களின் பிரதிபலிப்பாகவே இருக்க முடியும் என்றாலும் – தற்போது இரண்டாண்டுகளாய் அரங்கேறிடும் மறுபதிப்புப் படலத்தின் விற்பனை அளவுகோல்களையும் இங்கே நான் நுழைத்துப் பார்க்கவே செய்கிறேன் ! லாரன்ஸ்-டேவிட் ; ஜானி நீரோ - தலா 10 பிரதிகள் விற்கும் நேரத்திற்குள் மின்சாரப் பகாசுரர் மாயாவி 50 பிரதிகளை விற்றுத் தந்து விடுகிறார் நமக்கு ! So இந்தத் தீர்ப்புகள் என்னது மாத்திரமல்ல – வாசகர்கள் cum வாடிக்கையாளர்களான உங்களதுமே என்று எடுத்துக் கொள்ளலாம் !
முத்து காமிக்ஸில் Fleetway இதழ்கள் வெள்ளமாய்ப் பிரவாகமெடுத்திருந்த நிலையில் - துவக்கத்தின் அதே tempo-வைத் தொடர்ந்திட அந்நாட்களில் சீரியஸான (வெளித்) தடங்கல்கள் ஏதுமிருந்திருக்கக் கூடாது தான் ! பொன்னி காமிக்ஸ் ; வாசு காமிக்ஸ் ; ரத்னபாலா போன்ற இதழ்கள் வந்து கொண்டிருந்த போதிலும், அவை எதுவுமே ஒரு மெகாப் பதிப்பகக் குழுமத்தின் படைப்புகளல்ல என்பதால் மார்க்கெட்டில் கடும் போட்டி ஏற்படுத்தியிருக்க இயன்றிருக்காது ! ஆனாலும் அந்த ஆரம்பத்து அதிரடியிலிருந்து சற்றே மித வேகத்திற்கு முத்து காமிக்சின் கியர் மாறியதற்கு maybe என் தந்தையின் சகோதரர்கள் மத்தியிலான முதல் பிரிவினை ஒரு காரணமாக இருந்திருக்கலாமென்பது எனது யூகம் ! என் தந்தைக்கு மொத்தம் 3 மூத்த சகோதரர்கள் & 1 இளவல் ! முதலிரண்டு சகோதரர்கள் 1974 / 75 வாக்கில் பிரித்துக் கொண்டு விலகி விட்டனர் ! So ஒருக்கால் அதன் விளைவாய், சின்னதொரு தொய்வு நிகழ்ந்ததோ – என்னவோ ?! எது எப்படியிருப்பினும், Fleetway-ன் அந்த ஆரம்ப நாட்களது மாயாவி & Co. பட்டாளத்தைத் தாண்டி, புதிதாயொரு நாயகர் அணியை உருவாக்க யாரும் சிரத்தை எடுத்ததாய் எனக்குத் தோன்றவில்லை ! 13 மாயாவி; 13 லா & டே; 13 ஜா. நீ. கதைகளுக்குப் பின்பாய் எவற்றைக் களமிறக்குவது ? என்று மண்டையை உருட்ட சீனியருக்கு அந்நாட்களில் அவகாசம் இல்லாது போயிருக்கலாம் ! So ஒரு வெற்றிடம் உருவாகி வந்த தருணத்தில் அதனை நிரப்பப் புகுந்ததவை தான் அமெரிக்கத் துருப்புக்கள் !
King Features Syndicate என்ற அமெரிக்கக் குழுமத்திற்கு உலகமெங்கும் காமிக்ஸ் கதைகளை விநியோகம் செய்வதே தொழில் ! அவர்களது மும்பை ஏஜெண்ட்கள் வாயிலாக ரிப் கிர்பி ; காரிகன் ; விங்-கமாண்டர் ஜார்ஜ் ; சார்லி ; சிஸ்கோ கிட் ; வேதாளன் ; மாண்ட்ரேக் ; டாக்டர் கில்டேர் என்று ஒரு கும்பலாய் ஹீரோக்களை அள்ளிக் கொண்டு முத்து காமிக்ஸிற்குள் அணிவகுக்கச் செய்தார் சீனியர் ! இங்கே இந்தியாவினுள்ளேயே ஏஜெண்ட்கள் இருந்தபடியாலும், இந்த நாயகர்கள் சகலரின் கதைகளும் நேர்கோட்டு clean பாணியிலானவை என்பதாலும் - பெரியதொரு மெனக்கெடல்களின்றி இவர்களது கதைகளை வாங்கிடல் ஓ.கே.வானது. (அந்நாட்களது கடிதப் போக்குவரத்து files சகலமும் இன்னமும் என்வசம் உள்ளன என்பதால், அந்நாளைய நடப்புகளை அருகிலிருந்து பார்த்த புரிதல் சாத்தியமாகிறது !)
‘மொதுமொது‘வென புது நாயகர்கள் ஆஜராகிட Fleetway ன் தாக்கம் லேசாய் குறைந்து- KFS-ன் கை ஓங்கியது நமது இதழ்களுள் ! இவை சகலமுமே அந்நாட்களது அமெரிக்க தினசரிகளில் வெளியாகிக் கொண்டிருந்த ஸ்ட்ரிப்களின் தொகுப்புகள் என்பதால் Fleetway-ஐப் போலொரு நிரந்தரக் கதைநீளம் ; கதைபாணிகள் கொண்டிருக்கவில்லை ! இவை வெளியாகத் தொடங்கிய வேளைகளில் நான் ஆங்கில ஒரிஜினல்களைப் படிக்குமளவிற்குத் தேறிவிட்டிருந்தேன் என்பதால் - எந்தவொரு கதையும் என் பார்வைக்குத் தப்பாது ! நீளநீளமான வழு வழு ஆர்ட் பேப்பரில் பிரிண்ட் போடப்பட்டு வரும் அந்த ஒரிஜினல்களை முத்து காமிக்ஸின் ஆபீஸில் உட்கார்ந்தே படித்துத் தள்ளுவேன் ! அவற்றுள் ரொம்பவே ஸ்பெஷலாய் நான் ரசித்தது ஒரு முகமூடி மனிதரை ! Yes- வேதாள மாயாத்மா தான் அந்நாளைய எனது ஆல்-இன்-ஆல் அழகு நாயகர் !
The Illustrated Weekly of India என்றதொரு (மும்பை) வாரயிதழில் அரைப் பக்கத் தொடராய் வேதாளர் கதைகள் வருவதுண்டு ! அவற்றைக் கத்தரித்து சேகரிப்பது ஒரு பொழுதுபோக்கெனில் - இந்திரஜால் காமிக்ஸின் முழுநீளக் கதைகளை செம ஆர்வமாய்ப் படிப்பதும் இன்னொரு பக்கம் ! அந்த அரை நிஜார் வயதில் எனக்கிருந்த மானசீக சூப்பர் ஹீரோக்கள் இருவரே ! முதலாமவர் நமது முதல்வரும் கூட ! Yes- நமது புரட்சித் தலைவர் M.G.R. அவர்கள் தான் தலையாய சூப்பர் ஸ்டார் எனக்கு ! அதிலும் அந்நாட்களில் நீரும்..நெருப்பும்" என்றதொரு படம் வெளியாகியிருந்தது ! தலைவர் அதனில் டபுள் ஆக்ட்; சிகப்பு உடுப்பு M.G.R. நல்லவர் & கறுப்பு outfit-காரர் கெட்டவர் ! ஆக சிகப்பு நிறம் தான் "நல்லது சார்ந்த நிறம்" என்ற எண்ணம் அந்நாட்களில் மனதில் பதிந்து கிடந்தது ! சூப்பர் ஹீரோ # 2 நமது வேதாளர் ! 1972-ன் அயல்நாட்டுப் பயணத்தின் போது வேதாளர் பாணியிலான ஒரு டிராயரை என் தந்தை வாங்கித் தந்திருக்க, அதை சதாகாலமும் மாட்டித் திரிவேன் ! So வேதாளர் கதைகளை வெளியிடும் வேளை முத்து காமிக்ஸிற்குப் பின்னாட்களில் பிறந்த போது - அந்தப் புதுப் புதுக் கதைகளைப் பிரமாதமாய் ரசித்தேன் ! எட்டாம் வகுப்பு விடுமுறையின் போது என் தந்தை என்னை மும்பைக்கு கூட்டிச் சென்றிருந்த சமயம், KFS கதைகளைத் தருவித்து தந்த ஏஜெண்ட்களின் அலுவலகத்திற்கும் இட்டுச் சென்றிருந்தார் ! பரபரப்பான மும்பையின் வியாபாரப் பகுதியில் ஒரு வெள்ளைக்காரர் காலத்துக் கட்டிடத்தில் இருந்த அந்த ஆபீஸினில் கத்தை கத்தையாய் கதைகள் ஸ்டாக்கில் கிடந்தது இன்னமும் நினைவுள்ளது. அத்தனையையும் வாங்க முடியாது என்பது புரிந்தாலும், ‘ஆ... லட்டு! ஆ... பூந்தி... ஐயோ... மைசூர்பாகு !' என்று எனக்கு ஜொள் பிரவாகமெடுக்காத குறைதான் ! அந்த விடுமுறைகளின் பிந்தைய சமயத்தில் ‘டிங்-டாங்‘ என்ற புதிய சிறுவர் மாதமிருமுறைக்கான பணிகளை விளையாட்டாய்த் தொடங்கிய போது, அதனுள் மும்பையில் நான் தேர்வு செய்திருந்த வேதாளர் கதையொன்றின் முதல் 4 பக்கங்களையும் இணைத்திருந்தேன் ! சரியாக நினைவில்லை ; ஆனால் நான் மொழிபெயர்த்த முதல் காமிக்ஸ் பக்கங்கள் அந்த நான்கு பக்கங்களாகத் தானிருக்க வேண்டும் !
முத்து காமிக்ஸில் வேதாளர் ஒரு பிரத்யேக முத்திரை பதித்திருந்தார் என்பதில் ஐயமில்லை ! ‘முகமூடி வேதாளன்‘; ஜும்போ; ‘சிறையில் தொங்கிய சர்வாதிகாரி‘; ‘கீழ்த்திசை சூன்யம்‘ போன்ற இதழ்கள் மட்டும் எனக்கு நினைவில் தங்கியுள்ளன ! ஆனால்- மொத்தத்தில் ஒன்றரை டஜன் கதைகள் வெளிவந்திருக்கும் என்பது எனது எண்ணம் ! Maybe more... maybe less ! இன்னும் கூடுதலாய் சாகஸங்களில் அவர் இடம்பிடித்திருக்கும் பட்சத்தில், நிச்சயமாய் ஒரு “ஜாம்பவான்” பதாகையை நமது காமிக்ஸ் அளவிலாவது அவருக்கு வழங்கி இருக்கலாம் தான் ; ஆனால் விதி வேறு விதமாய் அமைந்து போனது - ‘மாலைமதி காமிக்ஸின்‘ ரூபத்தில்! ‘குமுதம்‘ என்ற மகா சக்தி காமிக்ஸ் துறைக்குள் கால்பதிக்கத் தீர்மானித்த கணமே அவர்களது வாங்கும் திறன்களுக்கு ஈடுகொடுக்க முத்து காமிக்ஸிற்குச் சாத்தியமாகிடவில்லை ! ரிப் கிர்பி ; காரிகன் ; விங் கமாண்டர் ஜார்ஜ் என ஏகமாய் King Features படைப்புகளை அவர்கள் ஒரே நாளில் லவட்டி விட ஆட்டம் கண்டு போனோம் ! ஏற்கனவே தாமதம் ; விற்பனை மந்தம் என்று சிரமங்கள் நிலைகொண்டிருந்த வேளையில் கதைகள் கைமாறியதும் ஒரு பெரிய setback ஆக அமைந்து போனது. அப்புறமாய் ‘முத்து காமிக்ஸ் வாரமலர்‘ என்ற முயற்சி ; அதன் அகால காலாவதி என்று நாட்கள் தொடர்ந்த போது வேதாளர் ஒரு மறக்கப்பட்ட நாயகராகிப் போனார் ! So ஒரு ஆற்றலான நாயகரை அவருக்குரிய வாய்ப்புகளோடு ஆராதித்திருந்தால் இந்தப் பட்டியலில் இரண்டாமிடம் அவரதாகியிருக்கும் - சந்தேகமின்றி !
பின்நாட்களில் முத்து காமிக்ஸின் நிர்வாகம் என் கைக்கு வந்தான பின்பு - நிறைய fleetway மறுவருகைகள் ; சிறுகச் சிறுக பிரான்கோ-பெல்ஜிய அறிமுகங்கள் ; King features நாயகர்களின் வீடு திரும்பல்கள் என்று அரங்கேறிய போதும் வேதாளரை மட்டும் நம் அட்டவணைக்குள் ஐக்கியமாக்கிட எனக்குச் சாத்தியப்படவேயில்லை ! இம்முறையோ ‘ராணி காமிக்ஸ்‘ ரூபத்தில் ஒரு அசைக்க இயலா சக்தி முட்டுக்கட்டையாக நின்றது ! “மாயாவி” என்ற பெயரில் அவர்கள் சகட்டுமேனிக்கு PHANTOM கதைகளை வெளியிட்டது நமக்குத் தெரியும் ! ஆனால் ‘போட்டிக் கம்பெனியின் பொன் கூட எனக்குப் பித்தளையே!‘ என்று வேதாளரோடு ‘காய்‘ விட்டுவிட்டேன் ! So ஒரு ஜாம்பவானுக்குரிய சர்வ லட்சணங்களும் பொருந்தியவரை அந்தப் பதவியில் அமர்த்த இயலாது போன கதையே இந்த வாரத்தின் கதை !
ஆனால் சிறிதும் எதிர்பாராத் திசையிலிருந்து ஒரு சூப்பர் ஸ்டார் நாயகராகிடுவதற்கு எவ்விதத் தகுதியும் இல்லாதது போல் தோற்றம் தந்தே - அதகளம் செய்த நாயகர் நமக்குக் கிட்டியது தான் விதியின் விளையாட்டென்பேன்!
உடைந்த மூக்கார்... ட்ஸி-நா-பா; ப்ளுபெர்ரி... டைகர்.... என்றெல்லாம் நான் hints தந்திடவும் வேண்டுமா என்ன - அவரை நாம் அடையாளம் தெரிந்து கொள்ள ?!! 1995-ல் “தங்கக் கல்லறை”யில் நமக்குப் பரிச்சயமான இந்த அழுக்குக் கௌ-பாய் - கதைகளின் வலிமையில் ; வீரியத்தில், அசாத்திய உச்சங்களை நமக்குக் காட்டியவர் என்பதை மறக்கவோ, மறுக்கவோ இயலாது ! நமது காமிக்ஸ் பயணத்தின் ஒரு Magnum Opus ஆக ‘மின்னும் மரணம்‘ இன்றும், என்றும் தொடர்ந்திடும் தானே ? இத்தனை ஆண்டுகள் கழிந்த பின்னரும், "தங்கக் கல்லறை" & "மின்னும் மரணம்" மறுபதிப்புகளிலும் பட்டையைக் கிளப்புவது கேப்டன் டைகரின் சாஸ்வதத்திற்கொரு சான்று என்பேன் ! அந்த இளவயதுக் கதைகள் பெரியதொரு இலக்கின்றி இங்கும் அங்குமாய் சுற்றித் திரிந்தது மட்டுமே இவரது தொடருக்கொரு திருஷ்டிப் பரிகாரம் ! ஆனால் அவரது ஒரிஜினல் சிருஷ்டிகர்த்தாக்கள் இருந்த வரையிலும் உருவாகிய LT.BLUEBERRY கதைகளுக்கு நிகராய் வேறொரு கௌ-பாய் தொடரைச் சுட்டிக் காட்டுவது அசாத்தியம் என்பேன் ! இவரது சாகஸங்களை நாம் வெளியிட்ட அந்நாட்களில் தாமதப் போய் அகோரத் தாண்டவமாடியது தான் ; நியூஸ் பிரிண்டில் சுமாரான அச்சில் ஒப்பேற்றியிருந்தோம் தான் ; ஒரு பாகத்திற்கும் அடுத்த பாகத்திற்குமிடையே மாதக்கணக்கில் / ஆண்டுக்கணக்கில் இடைவெளி விட்டிருந்தோம் தான் ! ஆனால் இதற்கெல்லாம் மீறியும் டைகரின் சாகஸங்கள் பதித்த முத்திரை - அவருக்கு “ஜாம்பவான்” தகுதியை ஈட்டித் தரும் பிரதம காரணி ! Maybe அந்நாட்களில் இவரது ஆல்பங்கள் சகலத்தையும் வண்ணத்தில், பெரிய சைஸில், ஆர்ட் பேப்பரில், தொடர்ச்சியாய் இப்போது போல வெளியிட்டிருப்பின் மனுஷன் இன்றைக்கு துபாயின் புர்ஜ் கலீபா கட்டிட உயரத்தில் வீற்றிருக்கவும் கூடும் நம் மனங்களில் ! Salute the inimitable Lt.Blueberry a.k.a கேப்டன் டைகர் ! கௌபாய் காமிக்ஸ் ரசனைகளை (நம்மளவிற்காவது) ஒரு புது உயரத்துக்கு இட்டுச் சென்ற இவரது பங்களிப்பு நம் பசுமையான நினைவுகளின் பிரதானமொரு அங்கமல்லவா ? எத்தனை கமான்சேக்கள் வந்தாலும் ; ட்யூராங்கோக்கள் தலைகாட்டினாலும் – அந்த சவரம் செய்யப்படா சப்பை மூக்கு சாகஸக்காரரை நமது நெஞ்சங்களிலிருந்து கிளப்பி விட முடியாதல்லவா ?
So ஜாம்பவான் # 2 & ஜாம்பவான் forever – கேப்டன் டைகர் !
O.k.....பழங்கதைகளுக்கு சலாம் போட்டுவிட்டு - நடப்புக்குள் புகுந்திடுவோமா ? இதோ இம்மாதக் கலர் கோட்டாவின் இன்னுமொரு பிரதிநிதி - நமது நீலப் பொடியர்களின் ரூபத்தில் ! எப்போதும் போலவே - இந்த SMURF ஆல்பத்திற்குமே அவர்களது ஒரிஜினல் டிசைனேயே பிரயோகித்துள்ளோம் - இம்மி கூட மாற்றமின்றி ! (மாற்ற விட மாட்டேன்கிறார்கள் என்பது வேறு கதை !!) வழக்கமாய் சிரிப்பு வெடிகளை மட்டுமே வீசிட முயற்சிக்கும் நமது குட்டிப் பார்ட்டிகள் இம்முறை நெஞ்சைத் தொடுமொரு அழகான கதையோடு உங்களைச் சந்திக்கக் காத்துள்ளனர் ! நான் ரொம்பவே ரசித்த SMURF ஆல்பமிது - உங்களிடமும் அதே மாதிரியான உணர்வுகளை ஏற்படுத்தின, ஆண்டின் இறுதி மாதத்தை ரம்யமாக நிறைவு செய்த திருப்தி எனதாகிடும் ! பார்க்கலாமே !!
டிசம்பர் "பெட்டியில்" - சூப்பர் 6-ன் முதல் இதழும் உண்டென்பதால் இம்மாதம் :
- 1 ஜேசன் ப்ரைஸ்
- 1 TEX
- 1 SMURF
- 1 லக்கி லூக் கிளாசிக்ஸ்
என்ற combo இருந்திடும் ! தீபாவளி இதழை சீக்கிரமே தயார் செய்த காரணத்தால் - டிசம்பரின்ஆல்பம்களும் சூட்டோடு சூடாகவே தயாராகி வருகின்றன ! SUPER 6 அச்சுப் பணிகள் நிறைவுற்று விட்டன ; ஜேசன் ப்ரைஸ் பாதி முடிந்து விட்டது & அதன் மீதி + SMURF இரண்டுமே புதன்கிழமைக்குள் முடிந்துவிடும். So நமது இரவுக்கு கழுகாரின் black & white இதழ் மாத்திரமே பாக்கியிருக்கும் !! இம்முறையும் புது மாதம் ( டிசம்பர்) பிறக்கும் முன்பே இதழ்கள் உங்கள் கைகளில் இருக்கப் போவது உறுதி.
And finally - இதோ : 2 ஞாயிறுகளுக்கு முன்பான caption போட்டியின் முடிவுகள் !! நண்பர் வெட்டுக்கிளியாரின் இந்த 2 முயற்சிகளுமே சிறப்பாக இருந்ததாய் எனக்குத் தோன்றியது ! So வாழ்த்துக்கள் வெ.வீ. சார் !!
அப்புறம் போன வாரத்து "மீன் கழுவும் TEX" கேப்ஷன் போட்டிக்கான முடிவினை அடுத்த ஞாயிறுக்கு வைத்துக் கொள்வோமே ! Bye for now !! See you around !!
VETTUKILI VEERAIYAN :
C இந்த தரம் தலே பயங்கரமான ஆசாமியை சந்திச்சுட்டார் போல ..!
B மாந்த்ரீகருக்கு இரவுக் கழுகின் வணக்கங்கள் !!
A வோ !
B குடிமக்கள் அனைவரும் நலம்தானே ?
A வோ !
B சென்ற முறை சந்தித்ததை விட உடல் நலம் கூடியிருப்பது கண்டு மகிழ்ச்சி !
A வோ !
B அபாச்சேக்கள் தொந்தரவு ஏதுமில்லைதானே ?
A வோ !
B சொல்ல மறந்து விட்டேன் ! உங்களுக்காக சுத்தமான பாட்டில் ஒன்று கொண்டு வந்திருக்கின்றேன் ! கொடுக்கவா ?
A ஓ ..!
VETTUKILI VEERAIYAN:
B சாமி என் பையனுக்கு கல்யாணம் தள்ளிப் போயிட்டே இருக்கு நீங்க நல்ல பரிகாரம் சொல்வீங்கன்னு கார்சன் சொன்னான் வந்தேன் ..!!
A பரிகாரம்தானே..? வர்ற வெள்ளிக்கிழமை நல்ல நாள் ! நல்ல வெள்ளாட்டுக்கிடா வாங்கி குல தெய்வத்துக்கு பலி குடுத்துட்டு முக்கியமா கறியை வறுத்து நண்பர்களுக்கு விருந்து வைங்க !! மறந்துடாதீங்க... நண்பர்களுக்கு விருந்து ..!!
C. ஹி ஹி ..!! நேத்து அவசர அவசரமா கார்சன் இங்கே வந்துட்டு போனது இதுக்குத்தானா ..?
A : அட அவனுங்க கொள்ளையடிச்சதெல்லாம் ஆயிரம் ரூவா நோட்டுகளாம்ப்பா!