நண்பர்களே,
வணக்கம். இது மும்மூர்த்திகளில் இருவர் எழுந்தருளும் நேரம் ! "மாயாவி ; லாரன்ஸ்-டேவிட் ; ஜானி நீரோ என்று அந்தப் பெயர்களைக் கேட்டாலே இன்னமும் எனக்கு சிலிர்த்துப் போகும் ; நான் தாட்டியமாய் இருக்கும் போதே அந்த மறுபதிப்புகளை போட்டு முடிச்சிடுங்க - ப்ளீஸ் !" என்றவாறு இந்தாண்டின் சென்னைப் புத்தகவிழாவின் போது என் முன்னே புன்சிரிப்போடு நின்ற முதியவரை மட்டுமன்றி, இது போன்ற "மும்மூர்த்தி வாஞ்சை" செண்டிமெண்ட்களை ஏராளமான முறைகள் என்னிடம் பகிர்ந்துள்ள அத்தனை vintage ரசிகர்களையும் இந்த நேரத்தில் நினைத்துப் பார்க்கத் தோன்றுகிறது ! இது பற்றி நாம் ஓராயிரம் முறைகள் பேசி விட்டோம் ; விவாதித்து விட்டோம் ; வியந்து விட்டோம் ; சிரித்து உருண்டும் விட்டோம் தான் ; ஆனால் இன்னமும் இந்த மறுபதிப்பின் வேளைகளில் நிகழுமந்த விற்பனை மாயாஜாலத்தை விவரிக்க வார்த்தைகள் கிடையாது ! "ஏப்ரலின் வெளியீடுகளுள் மறுபதிப்புகளும் உண்டா ? அப்படியானால் ஒவ்வொன்றிலும் 25 கூடுதலாய்ப் போடுங்களேன் !" என்று 2 நாட்களுக்கு முன்பு கூட, கோவையின் ஒரு பிரதான புத்தக நிலையத்தின் உரிமையாளர் கோரியது போல் ஆங்காங்கே தவறாது நிகழ்வதுண்டு - "மாயாவி" என்ற பெயரைக் கேட்ட மறுகணம் !
"புதுயுகக் கதைகள் ; மாறுபட்ட ரசனைகள்" என்றெல்லாம் தொண்டை நரம்பு புடைக்க நான் ஒரு பக்கம் சவுண்ட் விட்டுத் திரிய.."அது கிடக்கு அரை லூசு !" என்ற பாணியில் நமது இந்தப் புராதனச் சின்னங்களை இன்னமும் ரசிக்கும் அணி அநேகம் ! பால்ய நினைவூட்டல்களாய்ப் பார்த்தாலும் சரி ; குழப்படியற்ற சிம்பிளான கதைகளென்று பார்த்தாலும் சரி - இந்தக் கதைகள் உலகின் எந்தவொரு மொழியிலும் பெற்றிருக்காத வரவேற்பை நாம் யுகங்களாய் நல்கி வருவது நிஜம் ! இங்கிலாந்தில் வெளியான இந்தக் கதைகள் பின்னாட்களில் இத்தாலிய மொழியில் ; பிரெஞ்சில் ; ஸ்பானிஷில் கூட வெளிவந்துள்ளன ! In fact - சமீபமாய் போனெல்லி அலுவலகத்தில் மர்ம மனிதன் மார்டினின் கதாசிரியரோடு பேசிக் கொண்டிருக்கும் போது - "நீங்கள் ஸ்பைடர் கதைகளையும் வெளியிட்டுள்ளீர்கள் தானே ?" என்று அவர் கேட்டார் ! எனக்கு நிஜமான ஆச்சர்யம் - இரண்டு காரணங்களின் பொருட்டு : முதல் ஆச்சர்யம் - "ஸ்பைடர்" என்றதொரு 1960's பிரிட்டிஷ் ஹீரோவை கூட இவர் தெரிந்து வைத்திருக்கிறாரே என்று ; இரண்டாவது - நமது இதர வெளியீடுகளின் விபரங்களையும் மனுஷன் இத்தனை நுணுக்கமாய் கவனித்து வந்துள்ளாரே என்று ! அப்புறம் தான் தெரிந்தது 1970-களின் ஏதோ ஒரு தருணத்தில் இத்தாலியின் ஒரிஜினல் கூர்மண்டையரோடு சில காலத்துக்கு நம்மாள் போட்டி போட்டிருக்கிறார் என்று !
அதே போல ஸ்பானிஷ் மொழியிலும் மாயாவியின் பிரபல கதைகள் சகலம் + ஸ்பைடரின் சாகசங்களின் பெரும் பகுதி + லாரன்ஸ்-டேவிட்டின் சாகஸங்களென ஒரு முழு சுற்று வெளிவந்துள்ளன ! சொல்லப் போனால் இம்மாத லாரன்ஸ் - டேவிட் மறுபதிப்பான FLIGHT 731-க்கு நாம் அட்டைப்பட தோசை சுட்டிருப்பது ஸ்பானிஷ் மாவின் புண்ணியத்திலேயே! சமீபமாய் நமது புது இதழ்களுக்கான ராப்பர்கள் ஒரிஜினல்களைத் தழுவியே அமைத்து வருவதால் அதற்கென பெரியதொரு மெனக்கெடலுக்கு அவசியம் நேர்வதில்லை ! ஆனால் இந்த மறுபதிப்புகளின் விஷயத்தில் மட்டுமே சிக்கல்கள் அட்டைப்பட வடிவங்களில் எழுகின்றன ! ஒரிஜினல் டிஜிட்டல் பைல்கள் படைப்பாளிகளிடமே இல்லையெனும் போது - அட்டைப்படங்களுக்காக நாமிங்கே மொக்கை போடுவது வாடிக்கையாகி வருகிறது ! அந்நாட்களில் ப்ளீட்வே உருவாக்கியிருந்த அட்டைப்பட டிசைன்கள் அழகாய் இருப்பினும் அவற்றை நிறைய முறை நாம் பார்த்தாகி விட்டோமென்பதால் அவற்றினருகே செல்லும் அவசியங்களை சற்றே குறைத்திட நினைக்கிறோம். So இதர மொழிகளில் நம் மும்மூர்த்திகளின் உலாக்கள் நம் கவனத்தை அவ்வப்போது ஈர்ப்பது வாடிக்கையாகியுள்ளது இப்போது !
இதோ - அந்த ஸ்பானிஷ் அட்டைப்பட டிசைன் ; அதன் பின்னே ப்ளீட்வேயின் ஒரிஜினல் டிசைன் + நமது கூட்டணித் தயாரிப்பு ! தமிழில் நாம் அன்றைய நாட்களில் வெளியிட்ட FLIGHT 731-ன் அட்டைப்பட ஜாடையும் லேசாக இருந்திடும் பொருட்டு கொஞ்சம் பட்டி-டிங்கரிங் செய்துள்ளோம் ! இறுதி வடிவில் லாரன்ஸ் ஏதோ பரத அபிநயம் பிடிப்பது போல் தோற்றம் தந்தாலும் வழக்கமான துப்பாக்கி-கத்தி-கப்படா பாணியிலிருந்து இதுவொரு சின்ன மாற்றமாய் இருந்துவிட்டுப் போகட்டுமே என்று நினைத்தேன் ! May 1967-ல் ஒரிஜினலாய் உருவாக்கப்பட்ட இந்த லாரன்ஸ்-டேவிட் சாகசம் தான் தமிழுக்கு இந்த நாயகர்களை அறிமுகம் செய்து வைத்த கதை ! அன்றைய நாட்களில் இந்தக் கதைகள் ஏற்படுத்திய தாக்கம் well chronicled என்பதால் நான் என் பங்குக்கு அதனுள் தலைவிடப் போவதில்லை !
இந்தத் தொடர்கள் வெளியானது இங்கிலாந்தில் தான் எனினும் அவற்றின் படைப்பாளிகள் பெரும்பாலும் இத்தாலியர்களாகவோ, ஸ்பெயின் நாட்டவராகவோ தான் இருந்துள்ளனர் ! FLIGHT 731 கதைக்கு சித்திரம் போட்டவர் ரபேல் லோபெஸ் என்ற இந்த ஸ்பெயின் நாட்டு ஜாம்பவான் தான் !
இவர் பணியாற்றியுள்ள கதைகள் / தொடர்கள் பற்றிய பட்டியலைப் போட இங்கே இடம் பற்றாது - மனுஷன் அப்படியொரு பிரம்மிக்கச் செய்யும் எண்ணிக்கையிலான கதைகளை உருவாக்கியுள்ளார் ! லா-டே ஜோடியின் கதைகளில் மட்டும் 7 இவரது கைவண்ணம் !
1.தலை கேட்ட தங்கப் புதையல்
2.காற்றில் கரைந்த கப்பல்கள்.
3.பார்முலா X -13
4.FLIGHT 731
5.விண்ணில் மறைந்த விமானங்கள்
6.மஞ்சள் பூ மர்மம்
7.CID லாரன்ஸ்
இவை தவிர, இரும்புக்கை மாயாவி & ஸ்பைடர் - கதைகளுக்கும் நிறைய சித்திரங்கள் போட்டுள்ளார் ! கணினிகள் இலா அந்நாட்களிலேயே இத்தனை அதகளம் செய்த பெருமைக்குச் சொந்தக்காரர் !
தொடர்வது நமது ஆஸ்தான மாயாவியாரின் மறுபதிப்பு - "கொள்ளைக்கார மாயாவி" - for the umpteenth time ! இந்த இதழ் தமிழில் வெளியான நாட்களில் எனக்கு ரொம்பவே பிடித்திருந்ததொரு கதை ! கிளைமாக்சில் வில்லனைத் துரத்திச் செல்லும் மாயாவியின் நெஞ்சில் வந்து விழும் சம்மட்டி அடி ; அண்டங்காகம் சுமந்துவரும் அந்த விசித்திர ஆயுதம் ; நிழல்படைத் தலைவரை மூக்கோடு சேர்த்துக் குத்தும் sequence என்று மனதில் 'பச்சக்' என பதிந்து போன விஷயங்கள் ஏராளம் ! இன்று திரும்பவும் படிக்கும் போது கண்ணில்பட்டவை பெரும்பாலும் கதையின் லாஜிக் ஓட்டைகளும், மொழியாக்கத்தின் அன்றைய vintage பாணியுமே ! கதையைச் செப்பனிட இயலாதெனும் போது - மொழிநடையை சிறிதேனும் சீர் செய்திடவாவது முயற்சிப்போமே என்று ஆங்காங்கே கொஞ்சமாய் கை வைத்துள்ளேன் ! ஓரளவுக்குப் பற்கள் ஆட்டம் காணாது இப்போது கதையைப் படிக்க முடிந்திட்டால் - செலவிட்ட நேரம் உருப்படியானது என்றாகும் ! இனி வரும் நாட்களிலும் இது போல் (அவசியப்படும்) மாற்றங்களை மட்டும் செய்திடவுள்ளோம் - அதற்கான அவகாசம் கிடைக்குமென்ற நம்பிக்கையில் !
இதற்கான அட்டைப்படம் - ஒரிஜினல் டிசைனின் உபயமே - முன்னட்டைக்கு ! பின்னட்டையுமே கூட ஒரு ஸ்பானிஷ் நாட்டு ஓவியரின் கைவண்ணத்தின் தழுவல் - நமது பின்னணி வர்ணச் சேர்க்கைகளோடு ! "பார்க்கப்..பார்க்கப் பிடிக்கும் ரகம் " என்ற நம்பிக்கையோடு இந்த டிசைனை இரும்புக்கையாரின் இம்மாத இதழுக்கு ராப்பராக்குகிறோம் ! Genuinely curious to know how you find them !
செப்டெம்பர் 1967-ல் உருவான இந்தக் கதைக்கு இன்றைய வயது 48 !! Still going strong !! உலகத்திலேயே இவை தற்போது லைவ்வாக வெளியாவது நமது தமிழில் மட்டுமே என்ற விதத்தில் நாம் பெருமைப்பட்டுக் கொள்வதா ? அல்லது (காமிக்ஸ்) உலகமே எங்கெங்கோ சவாரி செய்து கொண்டிருக்கும் வேளையில் கூட - புறப்பட்ட இடத்திலிருக்கும் மரங்களைச் சுற்றிய டூயட் காதலர்களாய் இன்னமும் நம்மைப் பார்த்துக் கொள்வதா ? - விடையறியாக் கேள்வியே !
இதோ நம்மில் பலருக்கு காமிக்ஸின் மறு சொல்லாகிப் போய் விட்ட மாயாவியாரின் முக்கிய படைப்பாளிகள் :
Jesus Blasco |
Tom Tully |
கதாசிரியர் டாம் டல்லி ஸ்காட்லாந்து நாட்டைச் சார்ந்தவர் ! ஓவியர் ஜீசஸ் ப்ளாஸ்கோ ஸ்பெயினைத் தாயகமாகக் கொண்டவர்! "கொள்ளைக்கார மாயாவியின்" சித்திரங்களைப் போட்டவர் ஜீசஸ் ப்ளாஸ்கோ இல்லையெனினும் கூட, அந்நாட்களில் இதர மாயாவி ஓவியர்களின் முன்மாதிரியே ப்ளாஸ்கோவின் பாணி தான் ! அந்நாட்களில் இங்கிலாந்தில் ஓவியர்களுக்குப் பஞ்சம் இருந்ததில்லை தான் ; ஆயினும் இந்தக் கதைவரிசைகளை அயல்நாட்டு ஓவியர்களிடம் ஒப்படைத்ததன் பின்னணி சிக்கன நடவடிக்கைகளே ! இங்கிலாந்தில் ஆகும் செலவுகளை விட, இத்தாலி ; ஸ்பெயின் போன்ற இடங்களில் இவற்றைத் தயாரித்து வாங்குவது பணம் மிச்சம் செய்திடவொரு முக்கிய வழியாக அமைந்திருந்தது ! சொல்லப் போனால் இந்தக் கதைகள் சகலத்தையும் அச்சிட்டதும் கூட இத்தாலியில் தான் ! Outsourcing சமீபத்திய நடைமுறையல்ல என்பது தெளிவு !
'ரமணா' பாணியில் சிக்கிய புள்ளிவிபரங்களை அள்ளித் தெளிப்பதொடு இந்த மறுபதிப்புகளில் எனது கடமை முடிந்து போகிறது ! மேலோட்டமாய்ப் புரட்டிப் பார்த்து விட்டு, மலரும் நினைவுகளுக்குள் மூழ்கியான பின்னே இதழ்களைப் பத்திரமாக உள்ளே வைத்துப் பூட்டி விடாது - please do give them a read ! உங்கள் வீட்டிலுள்ள இளம் வாசகர்களுக்கும் கூட இவை ஒரு சுலபமான துவக்கப் புள்ளியாக இருந்திடலாம் என்பதால் அவர்களுக்கும் படிக்கக் கொடுத்துப் பாருங்களேன் - ப்ளீஸ் ?! "காமிக்ஸ் சேகரிப்பு" என்பது ஒரு சுகமான ஹாபி தான் ; ஆனால் வாசிப்புக்கும் அதனில் ஒரு வாய்ப்பின்றிப் போகும் பட்சத்தில் வெறும் சேகரிப்புகள் மட்டுமே நெடு நாள் ஓடாதே !
புராதனங்களுக்குப் புத்துயிர் ஊட்டும் பணிகள் ஒரு பக்கம் கறுப்பு-வெள்ளை அச்சோடு நிறைவுபெற்றிருக்க, மறு பக்கமோ வண்ணச் சூறாவளிகளில் தளபதியும், கோமானும் நம்மை பிசியாக ஆழ்த்தி வருகின்றனர் ! "மின்னும் மரணம் " அச்சுப் பணிகள் 70% ஐத் தாண்டி விட்ட நிலையில் - லார்கோவின் பிரிண்டிங் குறுக்கே புகுந்துள்ளது ! வரும் வார இறுதிக்குள் அத்தனையையும் முடித்து விட்டு பைண்டிங் படையெடுப்பில் மூழ்கிடுவதே இப்போதைய அட்டவணை ! அடுத்த சனிக்கிழமை துவக்கம் எங்கள் ஊரின் கோவில் திருவிழாவின் பொருட்டு புதன்கிழமை வரையிலும் விடுமுறை எனும் போது - மின்னும் மரணம் மெகா இதழினை ஏப்ரல் 19-க்குத் தயார் செய்திட ராட்சஸ முயற்சிகள் அவசியமென்பது இப்போதே புரிகிறது ! எங்களது பைண்டரின் நிலையை நினைத்தால் இப்போதே எனக்குப் பாவமாய் உள்ளது - நம்மவர்கள் தற்காலிகமாய் அவர் ஆபீசில் தான் குடித்தனமே செய்யப் போகிறார்கள் என்பது உறுதி ! இதில் தளபதியின் போஸ்டர் வேறு தயார் செய்தாகணும் - phew !!!
Moving on, நமது தலையின் 330 + 220 + 110 பக்கக் கதைகளின் தொகுப்பான லயன் 250-வது இதழின் பணிகளும் இன்னொரு தடத்தில் தடதடத்து வருகின்றன ! இரண்டு கதைகள் கிட்டத்தட்ட 70% முடிவடையும் நிலையில் -துரதிஷ்டவசமாய் டெக்ஸ் கதைகளை மொழிபெயர்க்கும் இல்லத்தரசிக்கு சின்னதொரு விபத்தில் எலும்பு முறிவு நேர்ந்து ; அறுவை சிகிச்சைக்கும் அவசியமாகிப் போய் விட்டது ! நான் கைகளைப் பிசைந்த வண்ணம் இருந்த நிலையில் 15 நாட்கள் ஓய்வுக்குப் பின்னே கடமையுணர்வோடு சிரமப்பட்டேனும் தன பங்குப் பணிகளைப் பூர்த்தி செய்து அவர் ஒப்படைத்து விட்டதில் பூரித்துப் போய் விட்டோம் !! பணம் என்பதையெல்லாம் தாண்டி ஒருவித அர்ப்பணிப்பு இல்லையெனில் இது போன்ற செயல்வேகம் சாத்தியமே ஆகாது ! தலைவணங்குகிறோம் !
நேற்றுத் தான் 2015-ன் அட்டவணையும், திட்டமிடல்களும் துவங்கியது போலான உணர்வு தலைக்குள் இன்னமும் தேங்கிக் கிடக்க, வருடத்தின் முதல் 5 மாத இதழ்களின் பணிகள் நெருக்கி முடியும் தருணம் புலர்ந்து விட்டதும் புரிகிறது ! வழக்கமாய் ஆகஸ்டிலேயே மறு ஆண்டுக்கான யோசனைகளை ஆரம்பித்து வந்துள்ளேன் - கடந்த 2 வருஷங்களாய் ! அப்படிப் பார்க்கையில் இன்னமும் மூன்றே மாதங்களில் THE YEAR NEXT பற்றிய தீவிர பரிசீலனை துவங்கிடும் நேரமும் வந்து விடும் ! இம்முறை எனது வேலைகளை சுலபமாக்க அதிர்ஷ்டவசமாக ஒரு புதுப் பதிப்பகத்தின் பரிச்சயம் நமக்குக் கிட்டியுள்ளது ! 'எதைப் போட..? எதை வேண்டாமென்று சொல்ல ? ' என்று விழி பிதுங்கும் விதமுள்ளது அவர்களது படைப்புகள் ஒவ்வொன்றும் ! நமது தற்போதைய இதழ்கள் அத்தனையையும் பார்த்து விட்டு ரொம்பவே குஷியாகிய நிலையில் - உரிமைகளைத் தர சம்மதம் சொல்லியுள்ளனர் ! மின்னும் மரணம் தயாரிப்புப் பணிகள் நிறைவு பெற்றான பின்னே, கொஞ்சம் மூச்சு விட்டுக் கொண்டு, அவர்களை நேரில் சந்திப்பதாக திட்டம் ! So 2016-ல் நிறையவே அதிரடிகள் காத்துள்ளன folks ! அதற்குள் நமது விற்பனை எண்ணிக்கை கொஞ்சமே கொஞ்சமாய் புஷ்டியாகிடும் பட்சத்தில், அவர்கள் கோரும் ராயல்டிகளை செலுத்திட - முரட்டு அந்தர்பல்டிகளுக்கோ ; திரும்பவும் கடன் கோரி வங்கியின் கதவைத் தட்டுதலோ அவசியமாகாது போகலாம் ! நம்பிக்கையோடு முயற்சிகளை செய்து வருகிறோம் !
அடுத்த மாதம் முதல் ரேடியோ விளம்பரங்களை ஒவ்வொரு மாதத்து முதல் வாரங்களிலும் செய்வதாக உள்ளோம். தற்போதைக்கு சென்னை ; கோவை ; சேலம் ஆகிய மூன்று நகரங்களில் கவனம் செலுத்த உள்ளோம் ; இந்தப் பகுதிகளில் நல்ல reach உள்ள சேனல்கள் எவை ? என்பது பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன் guys ?
சரி ...இப்போதைக்கு நான் புறப்படும் வழியைப் பார்க்கிறேன்..! 'யார் ஜெயிச்சால் நமக்கென்ன ?" என்ற மோன நிலையில் ஞாயிறின் பகல் பொழுதை பைனல்ஸ் பார்ப்பதில் செலவிட்டு விட்டு, அடுத்து காத்திருக்கும் பௌன்சரின் "கறுப்பு விதவை"யின் மொழிபெயர்ப்பில் செலவிடுவதாக உள்ளேன் ! See you around soon ! Bye for now !
சரி ...இப்போதைக்கு நான் புறப்படும் வழியைப் பார்க்கிறேன்..! 'யார் ஜெயிச்சால் நமக்கென்ன ?" என்ற மோன நிலையில் ஞாயிறின் பகல் பொழுதை பைனல்ஸ் பார்ப்பதில் செலவிட்டு விட்டு, அடுத்து காத்திருக்கும் பௌன்சரின் "கறுப்பு விதவை"யின் மொழிபெயர்ப்பில் செலவிடுவதாக உள்ளேன் ! See you around soon ! Bye for now !
P.S : ஏப்ரல் துவக்கத்தின் இதழ்கள் மூன்றும் (லார்கோ + மாயாவி + லாரன்ஸ்) ஏப்ரல் மூன்றாம் தேதி இங்கிருந்து புறப்படும் !