நண்பர்களே,
வணக்கம். 'வலையுலகிற்கும், மாறுபட்ட அபிப்ராயங்களுக்கும், அவற்றைக் கையாளும் விதங்களுக்கும் நாம் செமையாய்த் தயாராகி விட்டோமே - என்னமோ, போடா மாதவா.. !' என்று என்னை நானே முதுகில் தட்டிக் கொள்ளும் போது - பொடெரென்று எங்கிருந்தாவது விளக்குமாற்றுச் சாத்து விழுவதும் கூட இப்போதெல்லாம் பழக்கமாகிப் போய் விட்டது ! எவ்ளோ அடிச்சாலும் "வலிக்கலியே..!" என்று வெளியே பல்லைக் காட்டித் திரியும் கலையிலும் கூட ஓரளவிற்குத் தேர்ச்சி கண்டு விட்டேன் என்றே தான் சொல்ல வேண்டும் ! So 'எனது மேஜையில் நடந்து வரும் 'ரணகள ராஜ்ஜியத்தின்' எடிட்டிங் பணிகள் ஒரு பக்கமெனில் கடந்த நாலைந்து நாட்களாய் இங்கு அரங்கேறி வரும் வேறொரு வகையிலான 'ரணகள ராஜ்யத்தினைப்' பெரிதாய் நான் தலைக்குக் கொண்டு செல்லவில்லை தான் ! ஆனால் நம் பொருட்டு, நண்பர்களுக்குள் வாத-விவாதங்கள் ஓடி வருவதைப் பார்ப்பது தான் சங்கடமாய் உள்ளது !
"2012 போல் இல்லை ; அச்சில் குறைபாடு !" என்பதே 'சொய்ங்' என பொத்தாம் பொதுவாய் வீசப்பட்டுள்ள கல் ! அதன் பொருட்டு நண்பர்கள் அவரவர்களுக்குத் தெரிந்த விளக்கங்களை முன்வைப்பதை ஆர்வத்துடன் பார்த்தேன் ! ஒவ்வொரு விளக்கத்திலும் சாரமும், விஷய ஞானமும் நிறைந்து இருப்பதை ரசித்த அதே கணத்தில் நிஜமான பின்னணிகளை விளக்கிட்டால் என்னவென்று தோன்றியது ! இது சொந்தக் காசில் சூன்யம் வைத்துக் கொள்ளும் வேலையாகவும் இருக்கலாம் ; என்னை உதைக்க நானே நயமான BATA பாதணிகளை எடுத்துத் தரும் நிகழ்வாகவும் இருக்கலாம் தான் ! ஆனால் வெளிப்படையாய் இருப்பதே எனக்குத் தெரிந்த ஒரே யுக்தி என்பதால் இதன் பின்விளைவுகள் ; பின்னாத விளைவுகளைப் பற்றியெல்லாம் கவலைப்பட்டுக் கொண்டு எனது கொஞ்ச நஞ்ச உறக்கத்தையும் தொலைத்துக் கொள்ளப் போவதில்லை ! எனது விளக்கங்களைப் படித்து முடித்த பின்னே - 'நம்புற மாதிரி இல்லியே" என்றோ - 'சப்பைக்கட்டு கட்டறான்' என்றோ காமிக்ஸ் Whatsapp க்ரூப்களில் சுடச் சுட "ஞாயிறு ஸ்பெஷல்கள்" தடதடக்கும் வாய்ப்புகள் பிரகாசம் என்றும் தெரிகின்ற போதிலும், நிஜத்தைச் சொல்லத் தயங்கிய தவறை நான் செய்வதாகயில்லை !
அதே போல இந்த விளக்கங்கள், குரல் உயர்த்திப் "போராட" (!!) முயற்சிக்கும் நண்பரின் பொருட்டு அல்ல - நிச்சயமாய் ! உயரும் ஒவ்வொரு குரலுக்கும் நடுங்கிப் போய் என் அடிமடியைத் திறந்து காட்டுவதாக இருப்பின், நாள் முழுவதிலும் வேஷ்டியை சரி செய்வதைத் தாண்டி நான் வேறெதுவும் செய்திருக்க முடியாது ! நம் தரப்பிலும் நிச்சயமாய் நியாயம் இருக்கும் என்ற பொறுமையோடும், நம்பிக்கையோடும், நிஜம் என்னவென்று அறியாது உள்ளுக்குள்ளே சங்கடப்பட்டுக் கொண்டிருக்கக் கூடிய நண்பர்களின் திருப்திக்காக இந்த விளக்கப் படலம் !
2012-ல் வண்ணத்தில் மறுவருகை ; COMEBACK ஸ்பெஷல் என்றெல்லாம் நாம் துவங்கிய நாட்களில் ஆண்டின் சந்தாவே வெறும் ரூ.620 தான் ! அந்தத் தொகையைக் கூட 2012-ன் சென்னைப் புத்தக விழாவினில் நாம் முதல்முறையாக ஸ்டால் போட்டிருந்த தருணத்தில் - 'இனி சந்தா எவ்வளவு சார் ?' என விஷ்வா கேட்ட பின்னர் அங்கேயே வைத்து ஒரு சின்ன மனக்கணக்கைப் போட்டுச் சொன்னேன் ! முதல் இதழை ரூ.100 விலையில் வெளியிடும் போதும், "இந்த விலை வாசகர்களுக்கு எட்டும் தூரத்தில் இருக்குமா ?" ; இந்தக் கதைகள் ஒ.கே.தானா ?" ; "பிரின்சின் கதை சப்பையாக உள்ளதே ; லக்கி லூக்கின் புதுக் கதையில் அந்த லேட்டஸ்ட் கலரின் பாணி சூப்பர்-டூப்பராக இருந்தாலும் கதை ரொம்ப சுமாராக உள்ளதே !" என்ற ரீதியில் எனக்குள் ஓராயிரம் சந்தேகங்கள் குடியிருந்தன ! "அந்தப் பெயருக்காகவாச்சும் வண்டி ஓடாதா- என்ன ? ; எதற்கும் இருந்து விட்டுப் போகட்டுமே !" என்ற சிந்தனையில் தான் மாயாவியின் நீளமான black & white கதையினை COMEBACK ஸ்பெஷலில் ஓட்டுச் சேர்த்திருந்தேன் ! கலர் வெளியீடுகளுக்குள் கால் பதித்த நாட்களில் நம்மிடமிருந்த திட்டமிடலின் எல்லைகள் அவ்வளவுக்குள் தான் இருந்தன ! COMEBACK SPL ; LARGO ; DOUBLE THRILL ; WILD WEST மற்றும் தங்கக் கல்லறை என ஐந்தே வண்ண வெளியீடுகள் ; மிச்சம் மீதியெல்லாம் பத்து ரூபாய் விலையிலான black & white இதழ்களே என்று தான் முதல் ஆண்டைக் கடக்க திட்டமிட்டிருந்தோம் !
இருநூறு ரூபாய்க்கே 852 பக்கங்கள் அவசியமாகியிருந்த அந்த (இரத்தப் படல ) நாட்களில் - தொடர் வண்ண இதழ்கள் ; தொடர் 100 ரூபாய் விலைகள் என்பதெல்லாம் நினைக்கவே பயம் தந்த முயற்சிகள் ! மொத்தமாய் முகவர்கள் நம்மைக் கைவிட்டிருந்த நாட்களவை என்பதையும் ; நமது நம்பகத்தன்மை (!!) லெமூரியாக் கண்டத்தோடு காணாது போயிருந்த சங்கதி என்பதையும் இங்கே நினைவூட்டுகிறேன் ! In fact - 2013-ல் NBS வெளியாகி ; தொடர்ச்சியாய் மற்ற இதழ்களும் வெளிவரத் துவங்கிய வரையிலும் - ஒரு விரல் கிருஷ்ணாராவை விட 'வரும்..ஆனா வராது' காமெடியில் அதிகம் உருண்டது எனது சொட்டைத் தலையாக தான் இருக்கும் என்பதில் இரகசியமேது ? 'வாசகர்களோடு ஞாயிறுகளில் போன் பேசுகிறேன் பேர்வழி' என நான் ஆர்வக் கோளாறு காட்டிய நாட்களில், நண்பரொருவரோடு பேசிக் கொண்டிருக்கும் போதே 'சேர்ந்தார் போல நாலு இதழ்களைப் போட்டுட்டு அப்புறமா இந்த பீலாலாம் விடச் சொல்லு' என்று 'அன்பான' பின்னணிக் குரல் ஒலித்ததும் உண்டு ! So இதுவொரு make or break சூழ்நிலை என்பதையும், இங்கே சொதப்பினால் மானம் மொத்தமாய்க் கப்பல், ரயில், ராக்கெட் ஏறி விடும் என்பதாலும் - மறுவருகையின் முதல் ஆண்டின் சகல ஸ்பெஷல் வெளியீடுகளுக்கும் நாம் சுத்தமாய்க் கணக்குப் பார்க்கவே இல்லை என்பது தான் நிஜம் ! அந்த COMEBACK ஸ்பெஷலில் சுமார் 300 பக்கங்கள் என்று ஞாபகம் ! வெறும் 1600 பிரதிகள் அச்சிடப்பட்ட அந்த இதழை அன்றைய விலைவாசிகளில் கூட - ரூ.100-க்கு உற்பத்தி செய்ய துளி கூட வாய்ப்பே கிடையாது ! ஆனால் இனியொருமுறை 'ஹி..ஹி..' - "இதழ்கள் தாமதம்" ; "விற்பனை மந்தம்" என்றெல்லாம் அசடு வழிந்து நிற்கவே கூடாது என்ற வைராக்கியம் மட்டும் என்னை உந்தித் தள்ள - முதலாண்டின் லாப-நஷ்டக் கணக்கு கணிசமான சிகப்பில் கரை ஒதுங்கிய போதிலும் அதனை நான் மௌனமாய் முழுங்கிக் கொண்டேன் ! "விலை அதிகம் " என்ற சிந்தனை எந்த விதத்திலும் உங்களுக்குத் தோன்றிடவே கூடாது என்ற பயமே பிரதானமாய் நின்றது !
சரி..இந்தக் கதைக்கும், அச்சுத் தரம் பற்றிய சர்ச்சைக்கும் என்ன சம்பந்தம் ? என்று நீங்கள் கேட்கத் துவங்கும் முன்னே நானே விஷயத்துக்கு வருகிறேன் !
'ஆஹா...பிரிண்டிங் பிரமாதம் !' என்றோ ; "மோசம் ! " என்றோ சொல்லும் வேளைகளில் அந்தப் பெருமையோ / சிறுமையோ அச்சுக்கு ஒரு படி முன்னேயுள்ள PRE-PRESS என்ற பிராசசிங் பிரிவிற்கும் பெருமளவு சாரும் என்பது நிறைய கவனங்களை ஈர்க்கா ஒரு விஷயம் ! 2012-ல் அந்த வண்ண இதழ்களை நாம் பிராசசிங் செய்த விதங்கள் சகலமுமே மிக விலையுயர்ந்த பாணிகள் ! அந்தத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தும் போது கிடைக்கும் அச்சுத் தரம் சராசரியை விட நிச்சயம் சில பல படிகள் மேலேயிருக்கும் ! அந்த முறையினில் அச்சுக்குப் பயன்படுத்தப்படும் பிளேட்கள் முதற்கொண்டு அயல்நாட்டு இறக்குமதிகள் தான் ! இது பற்றாதென்று அந்த நாட்களில் நம்மிடம் இன்னுமொரு துருப்புச் சீட்டும் தற்செயலாய் கைவசம் இருந்தது ! நமது இன்னொரு தொழில் second hand அச்சு இயந்திரங்களை இறக்குமதி செய்து விற்பனை செய்வதும் கூட என்பதால், உயர்விலையிலான மிஷின்கள் எப்போதாவது நம்மிடம் கைவசம் இருப்பது உண்டு ! 2012-ல் அது போல் ஸ்டாக்கில் இருந்ததொரு மிஷின் விற்காது மொக்கை போட்டுக் கொண்டு கிடந்ததால் - அதனை install செய்து trial பார்க்கும் நிலைக்குக் கொண்டு வந்து வைத்திருந்தோம் ! 'சரி..சும்மா நிற்கும் மிஷின் தானே...? விற்கும் வரைக்கும் அதில் அச்சிடுவோமே !' என்ற எண்ணத்தில் நமது வண்ண இதழ்களை அதனில் அச்சிட்டு விட்டு அப்புறம் மூடாக்குப் போட்டு மூடி விடுவோம் ! So - imported paper ; high-end pre-press ; imported plates ; imported inks ; young printing machine என்ற கூட்டணி தற்செயலாய் நமக்குக் கிட்டியிருந்தது என்பதால் அதன் பலன்கள் 'பளிச' ரகத்தில் அமைந்ததில் வியப்பில்லை !
2012-ன் இறுதியில் NBS என்ற மெகா இதழை அறிவிக்கும் அளவுக்கு நாம் முன்னேறியிருந்தோம் என்பதால் அந்த இதழுக்கும் அதே pre-press பாணிகள் தொடர்ந்தன ! ஆனால் மாதந்தோறும் அந்த பிராசசிங் பில்களுக்குப் பணம் கொடுக்கும் வேளைகளில் நான் பிச்சை எடுக்காத குறை தான் ! NBS தந்த உற்சாகம் தொடர்ந்து மார்ச் 2013 வரையிலும் நஷ்டத்தின் பரிமாணங்களை மேஜை விரிப்புக்குக் கீழே பதுக்கிப் பதுக்கி வைக்கச் செய்தது ! ஆனால் என்ன தான் இதுவொரு குடும்பத் தொழில் என்றாலும் - அண்ணனின் வறட்டுப் பிடிவாதம் ஏற்படுத்தும் தொடர் நஷ்டங்களை தம்பி சகித்துக் கொண்டே இருப்பது எத்தனை காலம் தான் தொடர்ந்திட முடியும் ? மார்ச் 31-ல் அந்தக் கணக்காண்டின் முடிவுகளைத் தோராயமாய்ப் பார்க்கும் போதே - செலவினங்களைக் கணிசமாய்க் குறைக்க வழி கண்டுபிடிக்காவிட்டால் கதை கந்தலாகிப் போகும் என்பது தெள்ளத் தெளிவாய்த் தெரிந்தது ! பற்றாக்குறைக்கு ஒரு அமெரிக்க டாலருக்கு 51 ரூபாய் சுமாருக்கு இருந்து வந்த அன்னியச் செலாவணியின் மதிப்பும் பகீர் பகீரென்று உயரத் தொடங்கிய போது நமது பற்கள் இன்னும் அதிகம் ஆட்டம் காணத் தொடங்கின ! கதைகள் ; அச்சுக் காகிதம் ; இன்க் ; பிளேட் என சகலமும் வெளிநாட்டு இறக்குமதி என்பதால், ஒவ்வொரு மாதமும் எனது திட்டமிடல்கள் மண்ணைக் கவ்வத் தொடங்கின !
So எங்கெங்கு முடியுமோ - அங்கங்கு செலவுகளுக்குக் கத்திரி போடுவது ; அல்லது விலையைப் 'படக்' கென ஏற்றுவது ...என்பதைத் தாண்டி நம் முன்னே பெரியதொரு choice இருக்கவில்லை ! 'ஆண்டுச் சந்தா' என வசூலித்து விட்டு, சிறுகச் சிறுக நமது இதழ்களுக்கொரு credibility வளர்த்து வரும் வேளையில் - விலையை நடுவாக்கில் கூட்டுவது நிச்சயமாய் அசிங்கமாக இருக்கும் என்பதால் cost cutting என்ற சாலையிலே செல்வதென்று தீர்மானித்தேன் ! திரும்பிப் பார்க்கையில் அது சரியான தீர்மானம் தானா ? ; அன்றே விலையை ஏற்றி விட்டு அதே தரத்தை தொடர்ந்திருக்க வேண்டுமா ? என்ற கேள்விகளுக்கெல்லாம் சத்தியமாய் என்னிடம் விடையில்லை ! பெரும் பதிப்பகங்களைப் போல திட்டமிடவோ ; விவாதம் செய்து தீர்மானங்களை எட்டிப் பிடிக்கவோ இங்கு ஆள் ஏது ? நானே ராஜா..நானே..மந்திரி..நானே டவாலியும் கூட எனும் போது என் சக்திக்கு உட்பட்ட தீர்மானங்களே நம் இதழ்களின் பாதைகளைத் தீர்மானிக்கும் சக்திகளாகிப் போகின்றன ! இதுவொரு வரமா ? சாபமா ? ; இந்த நவீன யுகத்தினில் இன்னமும் இது போன்ற archaic நிர்வாக முறைகள் கொண்டு செல்லுமா ? என்பதெல்லாம் சுவாரஸ்யமான விவாதத் தலைப்பாக இருந்திட முடியும் ! ஆனால் முடிந்தளவுக்கு என் சிந்தனைகளை மாறி வரும் ரசனைகளுக்கேற்ப adapt செய்து கொள்ள முயற்சிக்கத் தான் செய்து வருகிறேன் ! அடுத்த தலைமுறைக்கு நான் வழிவிடும் வேளை வாகாகப் புலரும் போது - maybe இது போன்ற குழப்பங்கள் தொடராது போகலாம் ! ஆனால் அது வரையிலும் என்னையும், எனது செயல்முறைகளையும் சகித்தாக வேண்டிப் போகிறது !
Getting back on track, பிராசசிங்கில் செய்திடக் கூடிய மாற்றங்கள் தான் முதல் இலக்காகிப் போயின - நமது Operation cost cutting -ல் ! சற்றே அடுத்த லெவல் pre-press பாணி ; இந்திய பிளேட்கள் என்ற தவிர்க்க இயலா மாற்றம் முதலில் நிகழ, பக்கக் குறைப்புகள் தொடர்ந்தன ! சரியாக அதே தருணத்தில், அதுவரையிலும் விற்பனையாகாது கிடந்த நமது உயர்விலையிலான மிஷினும் விற்பனையாகியதால் - நாம் எப்போதும் பயன்படுத்தும் normal இயந்திரத்திலேயே பணிகளைத் தொடரத் துவங்கினோம் - 2013-ன் ஏப்ரல் இதழான "டைகர் ஸ்பெஷல்" முதல் !(நார்மல் இயந்திரமென்ற உடனே இது பேரீச்சம்பழத்தின் ஈடென்று நினைத்திட வேண்டாமே - இதன் விலையே நெருக்கி 30 இலட்சம் !) சற்றே மாறுபட்ட டெக்னாலஜி கொண்ட மிஷினில் அதுவரையிலும் அச்சான நமது வண்ண இதழ்களை, நார்மலான மிஷினில் பிரிண்ட் செய்ய நம்மவர்கள் தடுமாறத் தான் செய்தார்கள் ! "இரத்தத் தடம்" சொதப்பியது இப்படித் தான் ! தவிர அந்தத் தருணத்தில் பணியாட்களிலும் அனுபவசாலிகள் குறைவாய் இருந்திட 2013-ன் நிறைய இதழ்கள் 'தொட்டுக்கோ-துடைச்சுக்கோ' பாணியில் தான் கரை சேர்ந்தன ! இது தொடர்பாய் அந்நாட்களிலேயே நாமொரு நீண்ட விவாத மேடையை சந்தித்தது கூட நினைவிருக்கலாம் ! ஆனால் "சிப்பாயின் சுவடுகள்" வெளியான தருணம் முதலே புதிய பிரிண்டர் குமார் பணியில் சேர்ந்திட - கொஞ்சம் கொஞ்சமாய் அச்சின் சிக்கல்களை களையத் தொடங்கினோம். 2014-ன் வெளியீடுகளில் "ஆத்மாக்கள் அடங்குவதில்லை" ; "நள்ளிரவு நங்கை" ; "உயரே ஒரு ஒற்றைக் கழுகு" ஆகிய 3 இதழ்களைத் தவிர, பாக்கி எல்லாமே சிக்கல்களின்றி தயாராகின ! இவை மூன்றுமே மாறுபட்ட சைஸ் என்பதால் அதற்கு இன்னமும் கூடுதலாய் கவனம் செலுத்தத் தேவைப்படுகிறது என்பதை ஒத்துக் கொள்கிறேன் ! அதே போல - pre-press பாணியின் மாற்றங்களையும் அச்சுத் தரத்தில் அதிகமாய்ப் பிரதிபலிக்க அனுமதிக்காது இத்துறையில் புத்தம் புது மிஷின்களாய் வைத்திருக்கும் processing நிறுவனங்களையாகத் தேடித் தேடி வேலை கொடுத்து வருகிறோம் இப்போதெல்லாம் ! LMS இதழின் பணிகள் தொடங்கிய போது கூட பிராசஸிங் செய்பவர்களை அதீத கவனம் எடுத்துக் கொள்ளக் கோரி வேலை வாங்கினோம் ! அதன் அச்சுப் பணிகளின் போது நானும் விடிய, விடிய அச்சுக் கூடமே கதியெனக் கிடக்க - நமது நார்மலான மிஷினிலேயே, நம் பணியாட்கள் மிரட்டலான தரத்தை சாத்தியமாக்கினார்கள் ! 'புளுகுகிறான்..!! LMS இதழை உள்ளே அச்சிட்டிருக்க வாய்ப்பில்லை ; நிச்சயமாய் outsource செய்திருப்பார்கள் !" என்று சாதிக்கக் காத்திருக்கும் "அன்பர்களின்" பொருட்டு நான் சூடத்தை அணைத்து சத்தியம் செய்யும் முஸ்தீபுகளில் எல்லாம் இறங்கப் போவதில்லை ! ஆனால் சத்தியமான நிஜம் அதுவே என்பது ஆண்டவனுக்கும் , எங்கள் அணியின் முழுமைக்கும் தெரியும்!
இதை விடவும் உயர்தர இயந்திரம் வாங்கிட கோடியில் முதலீடு அவசியமாகும் ! சிவகாசியிலும் சரி ; மொத்தத்துக்கே அச்சுத் தொழில் இன்றுள்ள நிலைக்கும் சரி - அத்தகைய முதலீடுகள் மண்ணைக் கவ்வ உறுதியான வழிமுறை என்ற நிலை ! 'சரி - outsource செய்து அச்சிட்டு வாங்க வேண்டியது தானே ? ' என்ற கேள்விக்கான பதில் நமது தற்போதைய ரொக்கப் பணப் புளக்க pattern-ல் உள்ளது ! ஆண்டின் துவக்கத்தில் உங்களிடமிருந்து கிட்டும் சந்தாத் தொகைகளின் 90% ஆண்டின் கதைக் கொள்முதல்களுக்கே சரியாகி விடும் ! பௌன்சர் தொடரா ? - மொத்தமாய் எல்லாக் கதைகளுக்கும் பணம் கட்டியாக வேண்டும் ; மும்மூர்த்திகளின் மறுபதிப்பா ? கட்டுடா மொத்தமாய் ! என்பதே நிலைமை ! So உங்கள் வரவுகளை சேதாரமின்றிப் பத்திரப்படுத்தி படைப்பாளிகளுக்கு அனுப்பினால் தான் சக்கரங்கள் சுற்றவே வழி பிறக்கும் ! இந்தாண்டு சந்தாத் தொகைகளை பிரத்யேகமாய் Sunshine Library கணக்கிற்குக் கொண்டு சென்றதன் காரணமே இது தான் ! தெரியாத்தனமாய்க் கூட அந்தப் பணம் வேறு செலவினங்களுக்குச் சென்று விடக் கூடாதே என்ற முன்ஜாக்கிரதை !
அதன் பின்னே டிசைனிங் ; டைப்செட்டிங் செலவுகள் ; காகிதக் கொள்முதல், சம்பளங்கள், நிர்வாகச் செலவுகள் ; பிராசஸிங் செலவுகள் ; கூரியர் கட்டணங்கள் என்று வரும் தவிர்க்க இயலாச் செலவுகளை சமாளிக்க முகவர்கள் வாயிலாக நமக்குக் கிடைக்கும் பணங்களும், இடையிடையே வரும் புத்தக விழாக்களின் சிற்சிறு விற்பனைத் தொகைகளும் ஓரளவுக்கு உதவும். வங்கிக் கடன்களோ ; நமது இதர நிறுவனங்களிலிருந்து நான் கோரிப் பெற்றிடும் தொகைகளோ தான் துண்டு விழும் பட்ஜெட்டை நேர் பண்ண உதவும் கருவிகள் ! பிரிண்டிங் இன்க் வாங்குவது நீங்கலாக "அச்சுக் கூலி" என்று தனியாக எவ்விதக் கட்டணங்களையோ ; நான் செய்யும் மொழிபெயர்ப்புகளுக்கு அரையணா சன்மானத்தையோ கூட இந்தக் கணக்கில் நாம் பற்று எழுதுவதில்லை ! இது தான் கலப்படமில்லா நிஜம் ! இந்த சூழலில் நான் மாதா மாதம் வெளியில் அச்சுப் பணிகளை outsource செய்து தான் வாங்க வேண்டுமெனில் - அதற்கான money flow -க்கு வழியில்லையே ! ? Pre-Press யுக்திகளில் 'no compromises ' என்று நான் வீராய்ப்பாய் மீசையை முறுக்கிக் கொள்ளலாம் தான் - ஆனால் மாதந்தோறும் அதன் பொருட்டு நான் generate செய்திடத் தேவையான தொகை சன்னமானதல்லவே ! அச்சிடுவதில் 75% பிரதிகளை முதல் 3 மாதங்களுக்குள்ளாவது விற்க சாத்தியமாகும் நாள் புலரும் வரை இந்த ஆடு புலியாட்டத்தைத் தொடர்ந்தே தீர வேண்டும் ! Trust me guys, பணம் புரட்ட நடக்கும் இந்த அதகளம் பர்மா காடுகளில் சைமனைத் தேடிச் செல்வதை விடச் சிக்கலானதொரு பணி ! நாளைக்கே திட்டமிடலில் பலமான இன்னொரு நிறுவனம் காமிக்ஸ் வெளியீட்டைத் துவக்கி நம்மை விட அழகாய் ஒரு product-ஐ வழங்கலாம் தான் ; so நமது பட்ஜெட் / விலையமைப்புகள் சகலமும் மார்கெட்டில் அனைவருக்குமே பொருந்தும் என்றெல்லாம் நான் சொல்லப் போவதில்லை ! நமக்கிருக்கும் ஆற்றல்களுக்குள் ; விலைகளை இயன்றளவு கட்டுக்குள் வைத்தே தீர வேண்டுமென்ற வைராக்கிய வட்டத்துக்குள் உலாவும் அவசியம் நேரும் போது நாம் செய்திடக் கூடியது அதிகம் இருப்பதில்லை என்பது மட்டுமே எனது பதிவு !
இந்தாண்டின் பௌன்சர் ; சிறைக்குள் சடுகுடு..;இரத்தப் படலம் இதழ்களெல்லாம் neat என்று சொல்லும் ரகம் என்பதில் சந்தேகம் கிடையாது ! அதே சமயம் சொற்பமானதொரு சர்குலேஷன் ; அச்சிடும் பிரதிகளின் எண்ணிக்கை குறைவு என்பதால் - வேஸ்ட் ஆகும் காகிதங்களின் எண்ணிக்கை அதிகம் இருப்பதும் நடைமுறை. (அச்சு இயந்திரத்தில் 2000 காகிதங்களை அச்சிட சுமார் 200 தாள்கள் வேஸ்ட் ஆகும் ; அதே சமயம் 200,000 காகிதங்களை அச்சிடும் போது வேஸ்டின் எண்ணிக்கை 500-ஐத் தாண்டாது !) So அந்த வேஸ்ட் காகிதங்கள் அவ்வப்போது உங்கள் பிரதியினில் நுழையும் வாய்ப்புகள் உண்டு ! இம்மாதம் முதல் அச்சுக் கூடத்திலேயே அந்த வேஸ்ட் தாள்களை தூக்கி வீசிடும் ஏற்பாடுகளை செய்திடப் போகிறோம் என்பதால் தொடரும் மாதங்களில் அதன் பொருட்டு சிக்கல்கள் பெரிதாய் எழுந்திடக் கூடாது என்று நம்புகிறேன் ! அதே போல முகவர்களுக்கு அனுப்பப்படும் பிரதிகளையும் இனிமேல் கால்களில் வெந்நீர் ஊற்றிய பாணிகளில் அனுப்பிடாது 2 நாட்களின் அவகாசத்தின் பின்னதாக - முழுமையாகக் கை பார்க்கப்பட்ட பின்னரே அனுப்பிடவிருக்கிறோம் !
ஒரு கொட்டாவியைப் பார்த்த மறுகணம் ஆளாளுக்குக் கொட்டாவி விடும் உணர்வு எழுவது இயல்பு தானே ?! சுமாரான அச்சுத்தரத்தோடு 2013-ல் நிறைய இதழ்களும் , 2014-ல் நடுநடுவே ஒன்றிரண்டு இதழ்களும் வந்த பின்னே ஒவ்வொரு முறையும் அச்சின் பொருட்டு சிறு கிலேசம் எழுவது இயற்கையே ! ஆனால் - 'இவன் காசு பார்க்கும் பொருட்டு எதையோ சொதப்புகிறான் ; அதனால் இப்போது வரும் அத்தனையும் குப்பையாகத் தானிருக்கும் !' என்ற தீர்மானத்தை மனதுக்குள் திடமான கோட்டையாய்க் கட்டிக் கொண்டு ஒவ்வொரு மாதமும் பக்கங்களைப் புரட்டும் போது - பௌன்சரின் ஒரிஜினல் rustic coloring கூட நாராசமாய்த் தெரியலாம் தான் ! ஒவ்வொரு மாதமும், இதழைப் பிரிக்கும் போதும் , பக்கங்களைப் புரட்டும் போதும் குறைபாடுகள் உள்ளனவா ? என்ற தேடலுக்கு முதலிடம் தராது - கதையை ரசிக்க முன்னுரிமை தருவோமே நண்பர்களே ?! குறைகள் இருப்பின், நீங்கள் தேடிச் செல்லாமலே 'பொளேரென்று' உங்கள் முன்னே அவை ஆஜராகி நிற்கும் என்பது நிச்சயம் ! தற்சமயத்து பெரிய சைசில், இந்த ஆர்ட் பேப்பரில் எந்தக் குறைபாடும் கண்ணில் படாது போக வாய்ப்பே இல்லையெனும் போது - why strain to go fault finding ?
விமர்சனங்களுக்கு நிச்சயமாய் நாம் விரோதியல்ல ; ஆனால் விமர்சனமே வாசிப்பின் நோக்கமாகிப் போக வேண்டாமே என்பது தான் எனது விண்ணப்பம் ! கடந்த பதிவிற்கு 310+ பின்னூட்டங்கள் உள்ள போதிலும், ஷெல்டனையோ ; நண்பர் XIII -ஐ யோ பற்றிய கருத்துக்கள் / வாசக அபிப்பிராயங்கள் 50-ஐத் தாண்டியிருப்பின் ஆச்சர்யப்படுவேன் ! ரசனைகளில் முதிர்ச்சி வந்திருக்கா பால்யங்களில் carefree மனங்கள் நமக்கொரு வரமாய் இருந்ததனாலோ என்னவோ - அன்றைய கதைகளை கூட நம்மால் மனம் விட்டு ரசிக்க முடிந்துள்ளது - அது ஸ்பைடரின் புஷ்பக் கூடைகளாக இருப்பினும் ! ஆனால் இன்றோ - பலதரப்பட்ட சிந்தனைகள் வாசிப்பின் அந்த சுலப சந்தோஷங்களை மட்டுப்படுத்தி விடுகின்றனவோ என்று நினைக்கத் தோன்றுகிறது ! எல்லாவற்றிற்கும் மேலாய் - "காமிக்ஸ் வாசிப்பு" என்ற கலப்படமற்ற சந்தோஷ அனுபவத்தை விட - அதன் பின்னணி அலசல்கள் ; விவாதங்கள் ; தேடல்கள் ; கலாய்ப்புகள் ; வலைத்தள ஜாலிகள் இன்றைக்கு நம் மனங்களில் பெரிதாகிப் போய் விட்டனவோ என்ற பயம் லேசாக என்னுள் வியாபிக்கிறது ! பயண இலக்கை விடப் பயணத்தின் மீதான காதலில் நாம் மெய்மறந்து வருகிறோமா நண்பர்களே ??
அதே போல ஏதேதோ காரணங்களால் என் மீதான வருத்தங்கள்.- நமது காமிக்ஸ் மீதான வெறுப்பாய் மாறிடுவதும் நிகழ்கிறதோ என்ற சங்கடம் எனக்குள் உள்ளது ! "என் கருத்துக்கு மரியாதையில்லை : என் பங்களிப்புக்கு அங்கீகாரமில்லை ; இதை நான் இன்னும் சிறப்பாய்ச் செய்திருப்பேனே..' ; போட்டிக்கு ஆள் இல்லை என்பதால் தான் இவன் துள்ளுறான் ; எனக்குப் பிடிக்காதவருக்கு இந்த சொட்டைத் தலையன் முக்கியத்துவம் தருகிறான் ; ஓவரா நடிக்கிறானோ ? ; கொள்ளை இலாபம் பார்க்கிறானோ ? ; புக்கில் புரட்டின பக்கமெல்லாம் இவன் புராணம் தான் " - என்று சில பல மௌன வருத்தங்களைப் பட்டியல் போட்டுக் கொண்டே போகலாம் என்பதை அறிவேன் ! இவையும், இன்ன பிற சலனங்களும் உங்களில் சில மனங்களை அரித்துக் கொண்டிருப்பதை சங்கடத்தோடு உணர்கிறேன் ! அந்த நெருடல்கள் கூட இதழ்களை சந்தோஷமாய் வாசிக்கத் தடையாய் நிற்கின்றனவோ ? உங்களில் எவரையும் சங்கடப்படுத்தும் நோக்கம் எனக்கு என்றைக்கும் இருந்ததில்லை ! அதே போல உங்களின் எண்ணங்களுக்கு நான் இசைவு தெரிவிக்க இயலாது போவதற்கும் ஓராயிரம் காரணங்கள் இருந்திருக்கலாம் ! எங்கெங்கோ எனது கவனங்கள் சிதறிக் கிடக்கும் நிலைகளில் - உங்களுக்கு ஏற்புடைய விதத்தினில் எல்லா சமயங்களிலும் என்னால் நடந்து கொள்ள முடியாது போயிருக்கலாம் தான் ! அவை அறியாப் பிழைகளே தவிர, உங்களைக் காயம் கொள்ளச் செய்யும் காரணிகளாக ஒரு போதும் இருந்ததே கிடையாது ! அவ்விதம் நேர்ந்திருக்கக் கூடிய உளைச்சல்களை ஒரு 31 ஆண்டு கால நண்பனுக்காகப் பொறுத்தருளக் கூடாதா folks ?
இப்போது கூட - 'செண்டிமெண்டாகப் பேசிக் காரியம் சாதிக்கப் பார்க்கிறான் டோய் !' என்ற விமர்சனமோ ; "ஒரு சின்ன சர்ச்சைக்கு இது ஓவர் ரியாக்ஷன்டா சாமி !" என்ற கலாய்ப்போ ; "அடுத்த விலையேற்றத்துக்கு அண்ணாத்தே அடிப்போட்டுட்டார் !" என்ற கவலையோ எழக் கூடும் தான் ! ஆனால் இது கடந்த பதிவினில் ஏற்பட்ட சலசலப்பின் பிரதிபலிப்போ ; இன்னமுமொரு சப்பைக்கட்டு மூட்டையோ ; விலை அதிகரிப்பின் முன்னோட்டமோ கிடையவே கிடையாது ! கொஞ்ச காலமாகவே எனக்குள் உறுத்திக் கொண்டிருந்த சலனங்களை வெளிப்படுத்த இதனை ஒரு வாய்ப்பாக மட்டுமே எடுத்துக் கொள்கிறேன் ! தூங்கப் புறப்படும் முன்னே - ஒரே ஒரு வேண்டுகோள் மட்டுமே :
இந்தத் தொழிலில் எங்களுக்குள்ள அனுபவத்தையோ ; கைவசமுள்ள அச்சுக்கூடத்து அமைப்பினையோ ; மொழிபெயர்ப்புத் திறமைகளையோ ; படைப்பாளிகளிடமுள்ள பரிச்சயங்களையோ எங்களது பலம் என்று நான் ஒரு நாளும் கருதவில்லை ! எங்கள் பலமே நீங்கள் தான் ! உங்களில் ஒவ்வொருவரும் எங்களை ஒவ்வொரு விதத்தில் தாங்கி நிற்கும் தூண்கள் எனும் போது - ஒரு தூண் குறைந்தாலும் கூட கட்டிடமே இளைத்திடாதா ? We need each one of you with us folks !! போட்டுத் தாக்குங்கள் ; கலாயுங்கள் ; நிறை-குறைகளை உரிமையோடு சுட்டிக் காட்டுங்கள் - ஆனால் ஒற்றை அணியாய் நமக்குள் பிரிவுகளின்றி நின்று பழகுவோமே ? ரசனைகளில், ஜாகைகளில் ; பழகும் விதங்களில் நமக்குள் வேறுபாடுகள் இருப்பினும், 'காமிக்ஸ் காதலர்கள்' என்ற common அடையாளம் போதாதா விக்கிரமன் படக் கிளைமாக்ஸ் போல நாம் கைகோர்க்க ? Give it some thought folks ?! Bye for now ! See you around !