நண்பர்களே,
வணக்கம். 30 ஆண்டுகளாய் தொலைத்ததொரு விஷயத்தைத் தேடித் திரியும் ஒரு பாவப்பட்ட ஜீவன் மறுவருகை தரும் வேளையிது ! Yes - மலங்க மலங்க விழித்து நிற்கும் நண்பர் XIII -ன் entry -க்கான பில்டப் தான் இது என்பதை யூகிக்க பெரியதொரு விஷய ஞானம் அவசியமில்லை தான் ! இதோ பிப்ரவரியில் வரக் காத்திருக்கும் இரத்தப் படலம் பாகம் 22 & 23 இணைந்த நமது இதழின் அட்டைப்பட first look & உட்பக்க டீசர்கள் !
முன்னட்டையில் எழுத்தின் அளவிலும் (சற்றே சின்னதாக) ; பின்னட்டையில் படைப்பாளிகளின் பெயர் தாங்கிய copyright notice-ம் இணைக்கப் பெற்ற ராப்பரின் இறுதி வடிவ பைலை என்னிடம் தருவதற்குப் பதிலாய் - அதற்கு முந்தய version -ஐ என்னிடம் நம்மவர்கள் தந்துள்ளனர் ! So நீங்கள் இதழினில் பார்க்கப் போகும் ராப்பரில் குட்டிக் குட்டியான அந்த மாறுதல்கள் இருந்திடும் ! மற்றபடிக்கு அழகான 2 ஒரிஜினல் அட்டைப்படங்களையும் இம்மி கூட மாற்றமின்றி அப்படியே வழங்கியுள்ளோம் !
அதே போல இந்த உட்பக்க டீசர்களில் எழுத்துக்கள் லேசாய் அடைந்து இருப்பது போல் தோன்றுவதன் காரணம் மொக்கையாக இருந்த ஒரிஜினல் டிஜிட்டல் பக்கங்களை நான் குட்டியாக்கிட பயன்படுத்திய சாப்ட்வேரின் புண்ணியமே - இதழில் ஸ்பஷ்டமாய் வாசிக்க இயலும் !
Software எனும் பேச்சிலிருக்கும் சமயத்திலேயே சமீபமாய் நேர்ந்துள்ளதொரு பிரச்சனையைப் பற்றியும் சொல்லிடுகிறேனே ! ஜனவரியின் மறுபதிப்பான "பெய்ரூட்டில் ஜானி" இதழில் கதை முழுமையிலும் 'லி' என்ற எழுத்து விடுபட்டுப் போயிருப்பதை பலரும் சுட்டிக் காட்டி இருந்தனர் ; நானும் கூட நமது proof reader விட்ட கோட்டை தான் அது என்று நினைத்திருந்தேன். ஆனால் 4 நாட்களுக்கு முன்பாய் நடந்த விஷயம் அந்த அபிப்ராயத்தை முற்றிலுமாய் மாற்றியது ! ஷெல்டனின் புதுக் கதைக்கான எடிட்டிங் வேலைகள் நடந்து கொண்டிருந்த பொழுது கதையின் முதல் copy என்னிடம் வந்திருந்தது. வழக்கம் போல் பிழை திருத்தங்கள் , கடைசி நிமிட வசன மாற்றங்கள் இத்த்யாதிகளைச் செய்து விட்டு மீண்டும் நமது டைப்செட்டிங் பிரிவுக்கு அனுப்பியிருந்தேன். அந்த இறுதிக் கட்ட வசன சேர்க்கைகளை சரி பார்க்கும் பொருட்டு இரண்டாவது copy-யையும் வரவழைத்து இருந்தேன் - சமீப மாதங்களின் பழக்கத்துத் தொடர்ச்சியாய் ! அதனை வாசிக்கத் தொடங்கிய போது ஒற்றை இடத்தில் கூட 'லி' பதிவாகவே இல்லை என்பதை கவனித்த போது 'பகீரென்று' இருந்தது ! 'அட..கண்ணும் டொக்காகிப் போச்சா நமக்கு ?' என்ற கவலையோடு அவசரமாய் முதல் பிரதியினை மீட்டெடுத்து சரி பார்த்தால் அதனில் எல்லா இடங்களிலுமே பிழையின்றி 'லி' வியாபித்து நிற்கின்றது ! இது என்ன புது வித விட்டலாச்சார்யா மர்மமாக உள்ளதே என்று நம்மவர்களை விசாரித்த போது தான் விஷயமே புரிந்தது ! தமிழில் வேலை செய்துள்ள பைல்களை Corel Draw 12 என்ற சாப்ட்வேர்-ஐ பயன்படுத்தி திறக்கும் சமயம் பிரச்சனையின்றி வண்டி ஓடி விடுகிறது ; ஆனால் Corel Draw Graphics Suite X 4 என்றதொரு மென்பொருளில் அதே பக்கத்தை ஓபன் பண்ணும் போது அத்தனை 'லி' க்களும் காற்றில் கரைந்து போய் விடுகின்றன !! நம்மிடம் உள்ள 4 கம்பியூட்டர்களில் இரண்டில் இந்த X 4 சமீபமாய் ஏற்றப்பட்டு உள்ளது போலும் ! So சென்ற மாதத்து பெய்ரூட்டில் ஜானி பணி செய்யப்பட்டது CDR 12-ல் ; ஆனால் இறுதி வடிவம் save செய்யப்பட்டது இந்த X 4 மென்பொருளில் என்பதையும் ; கதை நெடுக 'லி' பஞ்சம் தலைவிரித்தாடியது இந்த சாப்ட்வேர் குளறுபடியின் காரணமாய் தான் என்பதையும் அப்புறம் தான் உணர முடிந்தது ! Sorry guys...and of course a sorry to our proof reader too !
கம்பியூட்டர்களைப் பொறுத்த வரை எனது ஞானம் பூஜ்யத்துக்கு வெகு அருகாமையில் என்பதால் நம்மவர்கள் விளக்கிச் சொன்ன போது 'பூம் பூம்' மாடு போல் தலையாட்டி விட்டு - அதில் எனக்குப் புரிந்ததை இங்கே எழுதியிருக்கிறேன் ! இதனை இன்னும் கொஞ்சம் அலசுவதை இதனில் தேர்ச்சி பெற்ற நண்பர்கள் பொறுப்பில் விட்டு விடுவதே சாலச் சிறந்தது என்பது என் அபிப்பிராயம் ! என் பங்குக்கு இப்போதெல்லாம் அச்சுக்குத் தயாராகும் சமயங்களில் பேப்பரில் உள்ள வர்ணங்களைப் பார்ப்பதற்கு முன்பாய் எங்கேனும் 'லி' குடிகொண்டிருக்கும் சொற்கள் உள்ளனவா ? ; அவற்றில் திருவாளர் 'லி' ஆஜராகி நிற்கிறாரா ? என்பதே சரி பார்த்தலின் முதல் கட்டமாய் உள்ளது !
வர்ணங்கள் என்று mention பண்ணும் வேளையில் இரத்தப் படலத்தின் உட்பக்க கலரிங் பற்றி சிலாகிக்காது இருக்க இயலவில்லை! வெள்ளிக்கிழமை நடந்த அச்சுப் பணிகளின் போது நானும் அச்சுக்கூடத்திலேயே டேரா அடித்து விட - ஒவ்வொரு பக்கத்தின் கலரிங் ஜாலங்களையும் அருகிலிருந்து ரசித்திட முடிந்தது ! வித விதமாய் pastel shade வர்ணங்கள் ; சில பின்னணி வானங்களின் நீலத்தில் அட்டகாசமான வேறுபாடுகள் ; கண்ணாடிகளுக்குப் பின்பாய் நிற்பது போல் வரும் இடங்களில் அந்த glass effect காட்டுவது என்று கலரிங் ஆர்ட்டிஸ்ட் அசத்தோ அசத்தென்று அசத்தியுள்ளார் ! நம்மவர்களின் பிரிண்டிங்கும் இம்முறை அட்டகாசமாய் வந்துள்ளதை சீக்கிரமே பார்த்திடப் போகிறீர்கள் !
XIII-ன் இந்த இரண்டாம் சுற்றுக் கதைக்களம் இந்தாண்டு நவம்பர் 30-ல் வரக் காத்திருக்கும் பாகம் இருபத்தி நான்கோடு நிறைவு பெறுகிறது ! மூக்கைத் தொட முன்னூறு மைல் பயணம் செய்யும் இந்தக் கதையினை 'திடும்'மென எவ்விதம் முடிக்கப் போகிறார்களோ நானறியேன் - ஆனால் நிச்சயமாய் சீசன் 3 என்ற இன்னுமொரு பை-பாஸ் பயணத்துக்கு சின்னதான சாளரத்தைத் திறந்தே வைத்திடுவார்கள் என்பதே என் அபிபிராயம் ! 'ஆஹா...தப்பிச்சோம்டா சாமி !!' என்றும் ; 'அடடே..அதுக்குள்ளாகவா ?' என்றும்...'அப்படியானால் பாகம் 1-ல் துவங்கி கலரில் மறுபதிப்பு போடலாமே ?' என்றும் விதம் விதமாய் மைண்ட் வாய்ஸ்கள் உற்பத்தியாகும் என்று தோன்றுகிறது ! ஒரே ஒரு சின்ன word of caution ...XIII கதைகளை இந்த இதழ் துவக்கம் - முதல்முறையாகப் படிக்கப் போகும் வாசகராய் நீங்கள் இருப்பின் 1.5 ஆண்டுகளுக்கு முன்பாய் நாம் வெளியிட்ட பாகம் 20 & 21-ன் தொகுப்பினையாவது குறைந்த பட்சமாகப் படித்து விடக் கோருகிறேன் ; இல்லையேல் வீணாய் நிறைய கேச இழப்புக்குக் காரணமாகிடலாம் !
இம்மாதத்தின் இன்னொரு வண்ண இதழான (ஷெல்டன் ) "ஆதலினால் காதல் செய்யாதீர் !"-ம் அட்டகாசமாய் தயாராகி வருகிறது ! செவ்வாய்க்கிழமை அச்சுக்குச் செல்லும் இந்த இதழ் ஒரு slam - bang அதிரடி ! நிச்சயமாய் ஷெல்டனுக்கு இன்னும் கொஞ்சம் ரசிகர்களை ஈட்டித் தர இக்கதை உதவும் என்பது உறுதி !
இதழ் # 3 - (ஜனவரி மாதத்து விடுதலான) நம் கூர்மண்டையர் ஸ்பைடரின் "சைத்தான் விஞ்ஞானி" - black & white -ல் ! ஸ்பைடர் கதை வரிசையில் முதல் முழுநீள படைப்பு இதுவே ! இதற்கு முன்பாய் வெளியான ஸ்பைடர் கதைகள் சகலமும் - வார இதழ்களில் வெளியான 2 பக்க தொடர்களின் தொகுப்புகளே ! முதன்முறையாக ஸ்பைடரைக் கொண்டு Fleetway ஒரு முழுநீள காமிக்ஸ் ஆல்பம் உருவாக்கியது "The Professor of Power " என்ற இந்த சாகசத்தின் வழியாகவே ! 1985-ல் நமது முதலாம் ஆண்டுமலரில் ஆர்ச்சியோடு இந்தக் கதை வெளியானது நமது சமீபத்து வாசகர்கள் அறிந்திருக்க இயலாச் செய்தி ! 30 ஆண்டுகளுக்கு முன்னே இந்த "டபுள் சூப்பர் ஸ்டார் இதழ்" வெளியான சமயம் கிடைத்த வரவேற்பும் ; விற்பனையும் அதகளம் தான் ! செவிகளில் 'புஷ்பச் செருகல்' ஒரு லாரி லோடு நிறைய என்று இருப்பினும், நமது பால்யங்கள் அவற்றை ஏகாந்தமாய் ஏற்றுக் கொள்ள அனுமதித்தது ! இன்று மீண்டும் ஒரு முறை ஸ்பைடர் & கோ. ஹெலிகார் நிறைய ரொப்பிக் கொண்டு வரும் மலர்களையும் அந்த பால்ய நினைவுகளின் மறுவருகை ஏற்றுக் கொள்ள இடம் தருமா guys ? சென்னைப் புத்தக விழாவின் 'மாயாவி' விற்பனையை ஒரு அளவுகோலாக்கிப் பார்த்திடும் பட்சத்தில் பதில் ஒரு emphatic "யெஸ்" என்பதாகத் தானிருக்கும் ! பார்ப்போமே ...!!! உங்கள் வீட்டுக் குட்டீஸ்களுக்கு இது போன்ற "புஷ்பங்களுக்குள் காது" கதை பாணிகள் பிடித்திடும் பட்சத்தில் - இரவில் கதை சொல்ல ஒரு சூப்பர் துவக்கம் இது !! 'நன்றி மறந்தவன் ! ; ஏற்றி விட்ட ஏணியை நையாண்டி செய்கிறான் !" என்றெல்லாம் நமது தீவிர கூர்மண்டையர் ரசிகர்கள் இந்நேரத்துக்கு முணுமுணுப்பதை நான் அறியாதவனல்ல ; so இதற்கு மேல் தலைவருக்கு பில்டப் வேண்டாமென்று ஓரம் கட்டிக் கொள்ளுகிறேன் ! இந்தாண்டின் அடுத்த செட் மறுபதிப்புகளை நாம் ஏற்கனவே அறிவித்து விட்டோம் ; 2015-க்கான இறுதியான 4 மறுபதிப்புகளுக்கு உங்களின் choice என்னவாக இருக்குமோ என்றறிய ஆவல் ! காமிக்ஸ் கிளாசிக்ஸ் இதழ்களில் வெளியாகா இதழ்களை மட்டுமே மையப்படுத்திடாமல் -
- Best of மாயாவி....?
- Best of CID லாரன்ஸ் & டேவிட் ...?
- Best of ஜானி நீரோ...?
- Best of ஸ்பைடர் ...?
என உங்கள் தேர்வுகளைச் செய்திடலாமே folks ? அதே போல - அந்நாட்களது மொழியாக்கத்தில் தென்படும் அந்தப் புராதனத்தையாவது கொஞ்சமாய் களைய முயற்சிப்போமா ? அத்தனை கதைகளிலும் என்றில்லாது - அட் லீஸ்ட் ஆரம்பத்து மாயாவி கதைகளுக்காவது ஒரு புது மொழிநடை என்று தந்து கொஞ்சம் சுவாரஸ்யம் கூட்டிட முடிகிறதா என்று பார்த்தாலென்ன? அதனையும் நாங்களே கையில் எடுத்துக் கொண்டு எங்கள் அட்டவணைகளை மேலும் நெருசலாக்கிக் கொள்வதற்குப் பதிலாய் - அந்தப் பணியை வாசகர்களிடம் ஒப்படைத்தால் எவ்விதமிருக்கும் - பரிசு - ரூ.3000 என்ற அறிவிப்போடு ? 'அய்யகோ...மாற்றமா ? அபச்சாரம் !!' என்பது உங்களின் முதல் reaction ஆக இருந்தாலும் கூட - இந்தக் கதைகளை இன்று முதல்முறையாகப் படிக்கக் கூடிய புது வாசகர்களின் கண்ணோட்டத்திலும் சற்றே நிதானமாய் பார்த்திடலாமே? What say all ?
Before I sign off, பழையன மீதுள்ள நம் மோகங்கள் சில சமயங்களில் ஏற்படுத்தும் விரயங்களை நான் நேரில் உணர ஒரு வாய்ப்புக் கிட்டியது - வெகு சமீபமாய் நம் அலுவலகத்தில் என்னை சந்தித்ததொரு வாசகரின் ரூபத்தில் ! என் வயதை ஒத்தவர் என்ற விதத்தில் உலக அனுபவமில்லாதவர் என்று நிச்சயம் சொல்லிட இயலாது ; 'ரொம்பப் பெரிய சம்பளம் வாங்குபவனும் அல்ல நான் !' என்றே தன்னை அறிமுகம் செய்து கொண்டதால் - பொழுதுபோக்கிற்காக பணத்தை இரைக்கும் திறன் கொண்டவருமல்ல என்பதும் புரிந்தது ! ஆனால் - சீரியசாகவே என்னிடம் ஒரு 30 முந்தைய இதழ்களின் பட்டியலைக் கொடுத்து - "இவற்றையெல்லாம் வாங்க நாயாய்ப் பேயாய் அலைகிறேன்...இவையனைத்தையும் வைத்திருக்கும் ஒரு comics collector ரூ.50,000 கேட்கிறார் ; ஒரு முறை உங்களை சந்தித்து இவற்றை மறுபதிப்பு செய்யும் திட்டமுள்ளதா ? என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் வந்திருக்கிறேன்" என்றார் மூச்சிரைக்க ! எனக்குக் கொஞ்ச நேரம் பேந்தப் பேந்த முளிப்பதைத் தாண்டி வேறு எதுவும் தோன்றவில்லை ! ரூ.50,000 எனும் நம்பரைத் தாண்டி - அத்தனை செலவழித்தாவது இதழ்களை வாங்கியே தீர வேண்டுமென்ற அந்த காமிக்ஸ் நேசம் மலைப்பைத் தந்தாலும் - இது நிச்சயம் ஓவரோ ஓவர் என்ற சிந்தனையைத் தவிர்க்க இயலவில்லை ! அதிலும் இந்தாண்டு சென்னை விழாவின் போது நம் காமிக்ஸ் காதல நண்பர்களின் இல்லத்தரசிகள் சிலரிடமும் பேச வாய்ப்புக் கிட்டிய போது லேசானதொரு நெருடலை உணர முடிந்தது ! நிறைய சமயங்களில் காமிக்ஸ் வாசிப்பு ; காமிக்ஸ் கலந்துரையாடல் ; பதிவிடுதல் ; போன்ற நமது ஆதர்ஷப் பொழுதுபோக்குகளின் பொருட்டு நாம் எடுத்துக் கொள்ளும் நேரங்கள் - இதற்கு அப்பால் நிற்கும் துணைவிகளுக்கு லேசானதொரு எரிச்சலை உண்டாக்குவது இயல்பு தானே ?! அப்படியொரு சூழலில் ரூ.50,000 செலவழித்து 30 பழைய இதழ்களை வாங்கி வீட்டுக்குக் கொண்டு போனால் அங்கே நண்பருக்கு மாத்திரமே மகிழ்ச்சி இருந்திட முடியும் ; இல்லத்தரசிக்கு தலையில் ஒரு கல்லைத் தூக்கிப் போடும் ரௌத்திரம் எழுந்தால் அத்தனை குற்றம் சொல்ல முடியாதன்றோ ? உலகெங்கும் காமிக்ஸ் சேகரிப்பு என்பது ஒரு பெரிய பொழுதுபோக்கு ; அதற்கென நிறைய நேரம்,பணம், மெனக்கெடல் அவசியம் என்பதை நான் அறிவேன் ! அதன் சுகத்தையும் அறிவேன் ! அதே சமயம் நம் பட்ஜெட் ; குடும்ப சூழல் என்பனவும் ஒரு முக்கிய விஷயம் தானே ? இப்போதே ஆண்டுக்கு ரூ.5000 அளவுக்கு வேட்டு வைக்கிறோமே என்ற உறுத்தல் எனக்குள்ளே ஒரு ஓரத்தில் குடியிருக்கின்றது ; இந்த நிலையில் நண்பர் இந்தக் கோரிக்கையோடு என் முன்னே அமர்ந்த போது சங்கடமாய் இருந்தது !
அந்தப் பட்டியலை வாங்கி பத்திரப்படுத்தி விட்டு - தொடரும் ஆண்டுகளில் இவற்றுள் உள்ள சிறப்பான கதைகளை நிச்சயமாய் மறுபதிப்பு செய்வோம் ; ஆகையால் பொறுமை காத்திடலாமே - ப்ளீஸ் ! என்று சொல்லி வழியனுப்பி வைத்தேன் ! 'என்னமோ சொல்றீங்கே...ஹ்ம்ம்..!' என்ற பார்வையோடு புறப்பட்ட நண்பர் நம்பிக்கை வைத்துக் காத்திருப்பாரா ? - அல்லது இந்நேரத்துக்கு ஒரு கட்டு பச்சை காந்தி நோட்டுக்கள் கை மாறியிருக்குமா நானறியேன் ! But if you are reading this - நான் சொன்னது உங்களை சந்தோஷப்படுத்தும் வெற்று promise அல்ல ; நிச்சயமாய் மறுபதிப்புகள் என்ற தனித் தண்டவாளம் இனி ஒவ்வொரு ஆண்டும் தொடரும் ! And எப்போதும் போல - அவை ஒரு option என்று மாத்திரமே இருந்திடும் ! இது ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் என்பதால் உங்களை குஷிப்படுத்தும் பொருட்டு நான் சொல்ல அவசியமே கிடையாது ! So என்னை சந்தித்த நண்பர் மட்டும் தானன்றி - பழைய இதழ்களின் பொருட்டு காத்துக் கிடக்கும் இதர நண்பர்களும் நம்பிக்கையோடு காத்திருக்கலாமே ..?
'மொத்த கல்லாவையும் இவனே கட்டப் பார்க்குறாண்டா டோய் !!' என்ற சிந்தனைக்கு வெகு சிலருள் இது இடம் தந்திட்டாலும் கூட - இந்த மறுபதிப்பு மனமாற்றத்தின் காரணம் என்னவென்று நாம் அறிவோம் தானே ? அந்த நம்பிக்கையோடு நடையைக் கட்டுகிறேன் இப்போது ! மீண்டும் சிந்திப்போம் ! Enjoy the long weekend folks !!