Powered By Blogger

Sunday, December 28, 2014

Goodbye 2014...!

நண்பர்களே,

வணக்கம். 3 down ...2 to go ..! டிசெம்பரின் எஞ்சி நின்ற 2 இதழ்கள் + ஜனவரியின் ஆரம்ப 3 இதழ்கள் - ஆக மொத்தம் 5 ல் - வண்ண இதழ்கள் மூன்றும் தயாராகி விட்டன ! கறுப்பு-வெள்ளையில் வர வேண்டிய  டயபாலிக்காரும், இளவரசியாரும் மட்டுமே நாளை & நாளை மறு நாள் அச்சுக்குச் செல்கிறார்கள் ! எப்போதும் போலவே இதழ்கள் அச்சான மறு கணம் முதல் நமது பைண்டிங் பணியாளர்களுக்கு நம்மவர்களது முகங்கள் தவிர்க்க இயலாக் காட்சிகளாய்ப் போகும் என்பதால் - அறிவித்தபடியே ஜனவரி 2-ம் தேதி இங்கிருந்து 5 இதழ்களையும் அனுப்பிடுவோம் ! Packing செய்ய அட்டைப்பெட்டிகளும் தயார் என்பதால் - we are all set! 'இந்தக் கதை !  ...கதை மட்டும் தான் தேவை !' என்று சுற்றித் திரியும் 'காதலிக்க நேரமில்லை' நாகேஷைப் போல - "இந்தச் சந்தா !.....சந்தாக்கள் மட்டும் தான் இன்னமும் தேவை guys....." என்ற கானா பாடிக் கொண்டே ஜனவரியின் பாக்கி நிற்கும் டிரைலர்களுக்குள் உங்களை இட்டுச் செல்கிறேன்..! 

ப்ளூகோட் பட்டாளத்தின் கதைத் தொடரில் பிரெஞ்சிலும் சரி ; ஆங்கிலத்திலும் சரி - ஒரு முக்கிய இடம் பிடிக்கும் இந்தக் கதைக்கு ஒரிஜினல் டிசைனையே பயன்படுத்தியுள்ளோம் - லேசான கலர் மாற்றங்களோடு ! Hope you like our cover ! தொடர்வது உட்பக்கத்தின் ஒரு டீசர் ! 
வழக்கம் போல் வடக்கும்-தெற்கும் முட்டிக் கொள்ளும் உள்நாட்டுப் போரே கதையின் களம் ! நிஜ சம்பவங்களை கதையின் போக்கினூடே லாவகமாய் இணைத்து யுத்தங்களின் அர்த்தமின்மையை ; தோல்வி தரும் தண்டனைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவது கதாசிரியர் கௌவினின் ஸ்பெஷல் பாணி ! இந்தக் கதையிலும் 1850-களில் அமெரிக்காவில் நிறுவப்பட்டிருந்த Andersonville சிறைக்கூடத்தையும் அங்கே நிலவிய கொடூரமான வாழ்க்கையையும் தழுவி சம்பவங்களை அமைத்துள்ளார் ! கார்ட்டூன் பாணியில் சொல்லப்பட்டுள்ள கதை என்பதால் படித்து ; சிரித்து விட்டு நாம் நகன்று விடுவோம் ; பின்னணியில் நிற்கும் அந்த வரலாறோ ஏராளமான ரணங்களுக்கு சாட்சி ! இது அந்தச் சிறையின் அந்நாட்களது போட்டோ ! 

ஜனவரியின் black & white கச்சேரிக்கு அச்சாரம் போடக் காத்திருக்கும் நமது இளவரசியின் முறை இப்போது - அட்டைப்படத்தில் தன வதனத்தை நமக்குக் காட்ட ! இதோ - நீண்டதொரு இடைவெளிக்குப் பின்னே ஆஜராகும் மாடஸ்டி ப்ளைசியின் "நிழலோடு நிஜ யுத்தம்" இதழின் அட்டைப்படம் ! இது நமது ஓவியர் மாலையப்பன் கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பாக வரைந்திருந்த டிசைன் ! இடையில் ஒரு கும்பகர்ணத் தூக்கத்தில் நாம் லயித்துப் போனதாலும் ; 2012-ல் விழித்து எழுந்த பின்னேயும் கூட மாடஸ்டிக்கு அதிக வாய்ப்புத் தராக் காரணத்தால் இந்த டிசைன் உள்ளேயே துயில் பயின்று வந்தது ! இதோ - கிடைத்த முதல் சந்தர்ப்பத்தில் 'ஜிங்' என வெளியே பாய்ந்து விட்டார் !  
எப்போதோ ஒரு பதிவில் மாடஸ்டியின் கதைகளுக்கான வானுயர்ந்த ராயல்டி கட்டணங்கள் பற்றி நான் பதிவிட்டிருந்ததாய் ஞாபகம் ! இங்கிலாந்தின் படைப்பான மாடஸ்டிக்கு நாம் அனுப்பும் பணமும் அவர்களது கரன்சியான பௌண்ட் ஸ்டெர்லிங்கில் இருந்தாக வேண்டும் ;   'ஜம்'மென்று 100 ரூபாயில் அமர்ந்திருக்கும் பௌண்ட் நம் முதுகை செமையாய்ப் பதம் பார்க்கிறது ! இதன் பலனாய் மாடஸ்டியின் கதைகள் தாங்கி வரும் இந்தாண்டின் 2 black & white இதழ்கள் மட்டும் குறைவான பக்கங்களோடு வெளிவரும். So - 'விலை-பக்கங்கள் தொடர்பான equation ' மாடஸ்டிக்கு மாத்திரம் ஒத்து வராது !  Hope for your understanding please..! 'அவ்வளவு பணம் தந்து மாடஸ்டியைப் போட்டுத் தான் தீரணுமா ? ' என்று உங்களில் சிலரின் மைண்ட்வாய்ஸ் கேள்வி எழுப்பத் தயாராகும் முன்பாகவே நானே பதில் சொல்ல முந்திக் கொள்கிறேனே ! மாடஸ்டிக்கு இன்னமும் நம்மிடையே நிறைய ரசிகர்கள் உள்ளனர் என்பதோடு - மகளிர் அணியிலும் இதற்கென ஒரு ஈர்ப்பும், வரவேற்பும் உள்ளது என்பதை நானே பார்த்திருக்கிறேன் ! கடந்த 3 சென்னைப் புத்தக விழாக்களிலும் 'மாடஸ்டி இல்லையா ?' என்ற ஏமாற்றக் குரல்களை நிறைய முறை கேட்டவன் என்ற முறையில் மாடஸ்டிக்கு சின்னதாய் ஒரு சாளரத்தைத் திறந்து வைப்பதில் தவறில்லை என்றே நினைத்தேன் !    அவசரம் அவசரமாய் மாடஸ்டியை ஜனவரிப் பட்டியலுக்குள் நான் நுழைத்ததும், சென்னை விழாவினை மனதில் கொண்டே ! (விழா நடக்கவிருக்கும் மைதானத்தில் நமக்கு இடமிருக்குமா ? - அல்லது அமைப்பாளர்களின் இதயத்தில் மட்டுமேவா ? என்பது இன்னமும் விடையறியாக் கேள்வி ! )

அப்புறம் - ஜனவரியின் முதல் 5 -ல் எனது பணிகள் ஏதும் பாக்கியில்லை என்பதால் அடுத்த 5-ன் மீதான லயிப்பில் எனது நாட்கள் நகர்கின்றன ! நமது கூர்மண்டையருக்கும் ; CID லாரன்ஸ் சாகசதிற்கும் அட்டைப்படங்கள் சூப்பராக அமைந்திருப்பதாய் மனதுக்குப்பட்டது ! அதையும் இப்போதே இங்கே களமிறக்க ஆசை தான் எனினும், தொடரும் நாட்களுக்கு ஒரு சின்ன சுவாரஸ்யத்தைத் தக்க வைக்கும் பொருட்டு அடக்கி வாசிக்கச் சொல்கிறார் பெவிகால் பெரியசாமி ! மாயாவி & ஜானி நீரோவின் பட்டி டின்கெரிங்க் வேலைகள் தொடரும் வாரத்தில் நடக்கும் என்பதால் - அவையும் அழகாய் அமைந்துவிட்டால் சந்தோஷப்படுவேன் ! இந்த மறுபதிப்புப் படலத்தின் தொடர்பானதொரு மிகப் பெரிய சந்தோஷம் ஒன்றினையும் உங்களோடு பகிர்ந்திடா விட்டால் - என் தலை 'பூம் பூம் படலத்தில்' வரும் நைட்ரோ இல்லாமலே வெடித்துப் போய் விடும் ! 2013-ன் துவக்கத்தில் இதே மறுபதிப்புப் ப்ரொஜெக்ட் துவங்கிய சமயம் - ஆறு மாதக் காத்திருப்பின் பின்பும் கூட 75 சந்தாக்கள் கூடத் தேறாது போனதும் ; அந்த முயற்சியையே ஓரம் கட்டியதும் நிச்சயம் நான் மறந்திருக்கவில்லை ! இம்முறை அதே மறுபதிப்புச் சங்கதியை தைரியமாகத் தூக்கிப் பிடிப்பது போல் வெளிப்பார்வைக்கு 'பில்டிங் செம ஸ்ட்ராங் ' என்று உடான்ஸ் விட்டுத் திரிந்த போதிலும், உள்ளுக்குள்ளே ' ஆத்தா..மகமாயி...இந்தத் தடவையாச்சும் மண்ணைக் கவ்வாமல் தப்பிச்சால் தேவலையே !!' என்ற சிந்தனை ஓடாமலில்லை ! இம்முறையோ - ஒரு 20 நண்பர்கள்  நீங்கலாக - பாக்கி அத்தனை பேருமே மறுபதிப்புக்கும் சேர்த்துப் பணம் அனுப்பியுள்ளனர் ! அதே போல கிராபிக் நாவல்களுக்குமே சிறிதும் தொய்வில்லா சந்தாக்கள் ! மொத்த எண்ணிக்கை இன்னமும் 2014-ன் நம்பரை எட்டிப் பிடிக்கவில்லையென்றால் கூட - இதுவரையிலான பெரும்பான்மை A+B+C -என மூன்று packages-க்கும் சேர்ந்தே பதிவாகியுள்ளது மனதுக்கு நிறைவைத் தருகிறது !  Thanks a ton all ! 

ஜனவரியின் second 5-ன் இறுதி வெளியீடான பௌன்சரும் கிட்டத்தட்ட   ரெடி என்றே சொல்லலாம் ! இதழின் பணிகளோடு மாத்திரமே நாங்கள் தயாரென்று இல்லாமல்  - வானவில்லின் வர்ணங்களைப் போல படு கலர்புல்லாக அதற்குக் கிட்டப் போகும் வரவேற்புக்கும் / விமர்சனங்களுக்குமே சிறிது சிறிதாய்த் தயாராகி வருகிறோம் ! கதையின் சுவாரஸ்யத்துக்கு சிறிதும் சளைக்காது பௌன்சரின் aftermath இருந்திடுமென்பதைப் புரிந்திட நிச்சயமாய் ஞாபக மறதிக்கார நண்பர் XIII -க்குக் கூட சிரமம் இராது ! So வழக்கம் போல - 'fingers crossed ' என்பதோடு திருப்திப்பட்டுக் கொள்ளாமல் - arms, legs, fingers & toes crossed !! என்று சொல்லி வைத்துக் கொள்கிறேன் ! 

கடந்த பதிவின் பின்னூட்டங்களில் நண்பர் செல்வன் அபிராமி - நமது இந்த blog -க்கு வயது 3 என்பதைச் சுட்டிக்காட்டியிருந்தார் ! அங்கேயே சந்தோஷப் பகிர்வாய் இரண்டு வரிகளை டைப்படித்து விட்டு நான் நகர்ந்திருக்கலாம் தான் ; ஆனால் சூப்பர்மேனுக்கு அவதாரம் மாற்றிடக்  கிட்டும் டெலிபோன் பூத் போல - கடந்த மூன்றாண்டுகளாய் எனக்கு ரீசார்ஜ் செய்யும் தளமாய் / களமாய் இருந்து வரும் இந்த வலைப்பக்கத்திற்கும் ; அதனை தளராது நகரச் செய்யும் உங்களுக்கும் ஒரு casual நன்றி சொல்லி விட்டு நகர்வது நியாயமாகாதே ! 

'இது இத்தனை பெரிதாய் வளரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை ; ஆனை-பூனை...blah blah ' என்றெல்லாம் தியாகராஜ பாகவதர் காலத்து டயலாக்குகளை நான் எடுத்து விடப் போவதில்லை ! Simply because - இந்த வலைப்பதிவைத் துவக்கிய தருணங்களில் காமிக்ஸ் என்றொரு சமாச்சாரத்தையே 2012-ன் நடுப்பகுதி வரையிலாவது தொடர்வேனா என்பதே எனக்குத் தெரிந்திரா ஒரு விஷயமாக இருந்தது ! மலை போல முந்தைய இதழ்களின் கையிருப்பு (கிட்டத்தட்ட 140 ரகங்கள் !!) ; மளிகைக் கடைச் சிட்டையைப் போல நீளும் ஏஜெண்ட்களின் நிலுவைப் பட்டியல் ; பத்து ரூபாய்க்கு வெறும் 4000 பிரதிகள் அச்சிட்டால் அதனில் பாதி நம்மிடமே குந்திக் கொண்டு பல்லைக்காட்டும் நோவு ; நம் ஓவியர்கள் அனைவருமே எங்கெங்கோ சிதறிச் சென்றிருந்த நிலை என்ற சூழலுக்கு மத்தியில் பெருசாய் கற்பனைகளுக்கோ ; ஆடம்பரத் திட்டமிடல்களுக்கோ என்னிடம் அன்றைக்கு துளியும் 'தம்' இருக்கவில்லை என்பது தான் யதார்த்தம் ! கடையை மொத்தமாய் மூடி விட்டால் - ஏஜெண்ட்களிடம் நிற்கும் பாக்கித் தொகை ஊற்றி மூடி விடுமே என்ற பயம் மேலோங்கி நின்றதால் தான் தட்டுத் தடுமாறியபடி வண்டியை ஒட்டிக் கொண்டிருந்தோம் ! 2012-ன் ஜனவரியில் சென்னை புத்தக விழாவிற்கு COMEBACK SPECIAL இதழினைத் தயார் செய்த போது கூட 'என்னத்த comeback ; என்னத்த ஸ்பெஷல்...!' என்ற ஒரு வித நெகடிவ் மனப்பாங்கிலேயே தானிருந்தேன் ! 2011-ல் என்னுள் விரவிக் கிடந்த அந்த நம்பிக்கையின்மையை அவ்வப்போது கரைத்து வந்த புண்ணியம் நமது இன்றைய ஜூனியர் எடிட்டரையே சாரும் ! ஒவ்வொரு காக்கைக்கும் அதனதன் குட்டிகள் தங்கமாய்த் தோன்றுவது சகஜமே என்ற ரீதியில் எனது சிலாகிப்பும் சில amused looks & புன்னகைகளை உருவாக்கலாம் தான் - ஆனால் நான் சிறிதும் மிகைப்படுத்தலின்றிச் சொல்லும் நிஜமிது ! கீழ்க்கண்ட இந்த MS Word பைல் 2011 ஜூலையில் விக்ரம் டைப் செய்து எனக்கொரு பிரிண்ட் அவுட் எடுத்துக் கொடுத்த பக்கம் ! இன்று வரை எனது வீட்டுக் கம்பியூட்டரில் இதனைப் பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டு அவ்வப்போது இதை நான் பார்ப்பது எனது பிரியமான பொழுதுபோக்கு ! இன்று நடைமுறையில் நாம் அரங்கேற்றி வரும் அத்தனை விஷயங்களும் அவன் அன்றைக்கே டைப் செய்த பைலில் உள்ளதைப் பார்க்கும் போது இன்றைய தலைமுறைகளின் சிந்தனை வேகங்களை எண்ணி மலைக்காது இருக்க முடியவில்லை !  

25+ ஆண்டுகளின் அனுபவம் கொண்டிருந்த ; நாலு எருமை வயதிலான எனக்கு - இவை சகலமும் ஒரு விளையாட்டுப் பிள்ளையின் பொழுதுபோகா தருணத்தின் சிந்தனையாய் மட்டுமே அன்றைக்குத் தோன்றியது ! ஆனால் விடாப்பிடியாய் அவன் செய்த நச்சரிப்புகள் என்னை சிறுகச் சிறுக அசைத்துப் பார்க்க ; நமது சென்னை நண்பர்களின் நச்சரிப்பும் அதே வேளையில் இணைந்து கொள்ள - ஒரு மாதிரியாய் 2012 ஜனவரியில் சென்னைப் புத்தக விழாவினில் ஒரு இரவல் ஸ்டாலில் தலைகாட்டினோம் ! அது நாள் வரை மண்ணுக்குள் தலை புதைத்துக் கிடக்கும் தீக்கோழியைப் போன்றிருந்த எனக்கு முதன்முறையாக அங்கே கிட்டிய விற்பனையும், வரவேற்பும் ஒரு eye -opener என்று சொல்லலாம் ! கையில் குவிந்து கிடந்த முந்தைய இதழ்களை பண்டல் பண்டலாய் அந்த வருடம் விற்ற நினைவுகள் ஒரு பக்கம்  ; அது கொண்டு வந்த 2.50 லட்சங்களை நினைத்து பட்ட சந்தோஷம் இன்னொரு பக்கமென அவை எதுவுமே இன்னமும் நினைவை விட்டு அகலவில்லை ! 

அதற்கு ஓரிரு வாரங்கள் முன்பாகத் தான் என் பிள்ளையின் அனற்றலின் இன்னொரு பரிமாணமாக இருந்து வந்த 'blog கோரிக்கைக்கு' நான் ஒரு மாதிரியாகத் தலையசைத்து எழுதத் துவங்கியிருந்தேன் ! 'முக்கி-முக்கி எழுதினால் 2 மாதம் ; அதன் பின்னே வழக்கம் போல் முருங்கை மரம் ஏறி விடுவோம் ; புள்ளையாண்டனும்  அதுக்குள் மறந்து போய் விடுவான் !' என்பதே அன்றைக்கு என் அடிமனது மைண்ட் வாய்ஸ் ! ஆனால் எனக்குள் லேசாய் சில மாற்றங்கள் நிகழ்ந்திருந்ததை சிறுகச் சிறுக உணர முடிந்தது ! சென்னையில் உங்களை சந்தித்தான அனுபவங்களும் ; COMEBACK ஸ்பெஷல் இதழுக்குக் கிடைத்த வரவேற்பும் ; உடனிருந்து கொண்டு என்னை நச்சரித்தே வேலை செய்யச் செய்து கொண்டிருந்த  ஜூனியரின் பிடிவாதமும் காமிக்ஸ் பக்கமாய் திரும்பவும் ஒரு உத்வேகத்துடன் என்னைத் திரும்பிப் பார்க்கச் செய்தது ! சரியாக அதே தருணத்தில் இந்த வலைப்பதிவில் நீங்களும் படு உற்சாகமாய் பங்கேற்கத் துவங்கிய போது எனது தளர்நடை ஒரு துள்ளலாக மாற்றம் கண்டது ! Guys....உங்கள் முதுகுகளை வருடி விட்டு - உங்களிடம் 'செண்டிமெண்ட் சீன' போட்டு  நல்ல பிள்ளையாகும் முயற்சியல்ல நிச்சயமாய் ! ; மனதின் ஆழத்திலிருந்து வரும் நிஜத்தின் வெளிப்பாடே இது !சமீப காலங்களில்  "வெற்றி" என்று நாம் ஏதேனும் ஈட்டி இருப்போமெனில் அதன் முழு முதல் பங்கும் இங்குள்ள ஒவ்வொருவரையுமே தான் சாரும் ! 

கிட்டத்தட்ட 200 பதிவுகளை நெருங்கும் இந்த 3 ஆண்டு அவகாசத்துள் நான் படித்துள்ள பாடங்கள் தான் எத்தனை ! ஒவ்வொரு கதையையும் நான் இத்தனை நாளாய்ப் பார்த்து வந்த கோணங்களுக்கும்  , இன்று உங்களின் இடங்களிலிருந்து பார்க்க முயற்சிக்கும் வேளையில் புலனாகும் கோணங்களுக்கும் மத்தியில் எத்தனை வேற்றுமைகள் ! 'முணுக்' என்ற மாத்திரத்தில் கோபப்படும் எனக்குப் பொறுமையைக் கற்றுத் தந்துள்ளது இந்தத் தளம் ! 'அட..நான் பார்க்காத காமிக்ஸ் உலகா..?' என்று காலரைத் தூக்கித் திரிந்தவனது திமிரை உங்கள் ஒவ்வொருவரின் விஷய ஞானமும் கரைத்தது இங்கே தானே ?! 'ஈகோ'வை  go ! go ! என்று சொல்வதால் கிடைக்கும் நட்பை நான் உணர்ந்தது இங்கே தானே ?! எங்கெங்கோ தூரங்களில் ; தேசங்களில் வசிக்கும் முகம்பார்த்திரா வாசகர்களும் என்னை ஒரு தோழனாய் ஏற்றுக் கொள்ள வழி செய்து தந்ததும் இந்த வலைப்பக்கம் தானே ! அசாத்திய உற்சாகங்களோடு இந்தத் தளத்தை ஜீவிக்கச் செய்து வரும் நண்பர்கள் அனைவருக்கும் இங்கே ஒரு ராட்சச 'தேங்க்ஸ்' சொல்லும் கடமை எனக்குண்டு ! 

அதே போல -  ஏதோ காரணங்களினால்  எனது அணுகுமுறைகளோ ; எனது அபிப்ராயங்களோ ; நண்பர்களில் சிலருக்கு மனத்தாங்கல்களை ஏற்படுத்தி இருக்கலாமென்பதில் ரகசியம் ஏதும் கிடையாது தான் ! ஒவ்வொரு புதிய நாளும் ஒரு புதிய விடியல் என்ற முறையில் நான் நேற்றைய சங்கடங்களை மறு நாளுக்குச் சுமந்து செல்ல விரும்புபவனல்ல !  So மாற்றுக் கருத்துக்கள் கொண்டிருக்கும் நண்பர்கள் கூட தத்தம் விதங்களில் நம் வளர்ச்சிக்கு உதவும் தூண்டுகோல்கள் என்பதை நான் ஒரு போதும் மறக்க மாட்டேன் ! அவர்களுக்கும் நன்றி சொல்லாது போனால் அது நியாயமாகாதே !! நிறைய சந்தோஷங்கள் ; நிறைவான தருணங்கள் மட்டுமன்றி சில சங்கடமான வேளைகளையும் நாம் கடந்து வந்திருப்பதால் இங்கு எனக்குக் கிட்டியுள்ள அனுபவம் ஒரு அசாத்திய ரகம் என்பதில் துளியும் சந்தேகமில்லை ! 

பலருக்கு சந்தோஷக் காரணியாய்  ; சிலருக்கு எரிச்சலின் ஊற்றாய் ; இன்னும் சிலருக்குப் பரிகாசத்தின் பண்டமாய்  நான் காட்சி தந்தாலும் - எங்கோ ஒரு சிறுநகரில் முகமின்றித் திரிந்தவனுக்கு  இத்தனை மாந்தர்களின் அண்மையை ஈட்டித் தந்த வகையில் இந்தத் தளத்துக்கு நான் என்றும் கடமைப்பட்டிருப்பேன் ! This has been a wonderful experience without a doubt ! 

நமது பயணத்தில் ஒரு மறக்க இயலா ஆண்டுக்கு விடை கொடுக்கும் இந்தப் பதிவை இத்தோடு 'சுபம்' போட்டுவிட்டு புறப்படுகிறேன் - மீண்டும் அடுத்த வாரம் ; புத்தாண்டின் முதல் பதிவோடு சந்திக்கும் பொருட்டு  ! அது வரை adios amigos & muchas gracias ! And அனைவருக்கும் அட்வான்ஸ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ! 

P.S :www.lion-muthucomics.com என்ற நமது வலைத்தலதினில் இனி உங்களின் Debit Cards / Credit Caards பயன்படுத்தி நமது இதழ்களை வாங்கிடலாம் ! Paypal முறையும் சீக்கிரமே அமலுக்கு வந்திடும் ! அதற்கான ஏற்பாடுகளை நமது டாக்டரின் புதல்வரின் உதவியோடு செய்துள்ளோம் ! 

அதே போல www.lioncomics.in என்ற நமது புதுத்தளத்திலும் ஆன்லைன் விற்பனைக்கான ஏற்பாடுகள் சீக்கிரமே ரெடியாகி விடும் ! இது ஜூ.எ.வின் கைங்கர்யம் ! 

Sunday, December 21, 2014

கேள்விகளோடு ஒரு ஞாயிறு !

நண்பர்களே,

வணக்கம். 'கல்யாணத்தைச் செஞ்சு பார்...வீட்டைக் கட்டிப் பாரு...! ' என்று முதன்முறையாக பெருமூச்சு விட்டுக் கொண்ட புண்ணியவான் யாரோ தெரியாது ; ஆனால் அவர் அனுமதித்தால் - 'வருஷத்தின் இறுதி மாதங்களில் ஒரு வண்டி காமிக்ஸ் இதழ்களைத் திட்டமிட்டுவிட்டு ; தொடரும் நாட்களுக்கும் ஒரு அம்பாரப் புத்தகங்களை அட்டவணைக்குள் நுழைத்து விட்டு  முழி பிதுங்கிப் பாரு !' என்ற வரிகளையும் சேர்ப்பதில் தப்பில்லை என்று சொல்லுவேன் !  தினுசு தினுசாய்க் கூத்துக்கள் கட்டுவதற்கு நாம் புதியவர்கள் அல்ல தான் ; ஆனால் டிசம்பர் '14 + ஜனவரி 15 -க்கான அட்டவணைகள் நமது அளவுகோள்களின்படிக் கூட ஓவரோ ஓவர் ! என்பதில் ஐயமில்லை ! So - ஒரு வழியாய் இந்தாண்டின் இறுதி வெளியீட்டின் பணிகளை முடிக்கும் இந்தத் தருவாயில் அந்நாட்களது ரயில் இன்ஜினைப் போல 'உஸ்ஸ்ஸ்' என்ற பெருமூச்சு விடுவதைத் தவிர்க்க இயலவில்லை ! இதோ 'நித்தமும் குற்றம்' செய்யும் இத்தாலிய anti -hero டயபாலிக்கின் அட்டைப்படத்தின் முதல் பார்வை ! 

முன்னட்டையில் கதைத் தலைப்பின் லெட்டெரிங்க் பாணியிலும், அளவிலும் கொஞ்சம் மாற்றங்கள் செய்துள்ள போதிலும், அந்த revised file வெளியூரில் சுற்றித் திரியும் என்னிடம் தற்சமயம் கையில் இல்லை ; நாளை ஊர் திரும்பியவுடன் அதனை replace செய்கிறேன் ! ஒரிஜினல் பதிப்பின் அட்டைப்பட டிசைனை லேசான பின்னணி வர்ண மாற்றங்களோடு அப்படியே பயன்படுத்தியுள்ளோம். பின்னட்டையோ நமது ஓவியரின் தயாரிப்பு ! சொல்லப் போனால் மாலையப்பனின் ஓவியத்தை முன்னேவும்,  ஒரிஜினலைப் பின்னேவும் போடத் தான் திட்டமிட்டிருந்தேன். ஆனால் KING ஸ்பெஷல் அட்டைப்படத்தில் எழுந்த - 'முன்னாடி தேவலை -பின்னாடி தேவலை ! ' பாணிச் சர்ச்சைக்கு திரும்பவும் இடம் தரப் பிரியப்படாமல் ஓசியான ஒரிஜினலை முன்னேவும், காசு கொடுத்துப் போட்டு வாங்கியதை பின்னேவும் இடம்பெயர்த்து விட்டேன் ! கதைப் பக்கங்களின் இத்தாலிய மொழிபெயர்ப்பு ரொம்பவே தாமதம் ஆகிப் போனதால் - இதர பணிகள் நிறைவு பெற்றிட இன்னும் இரண்டல்லது, மூன்று நாட்கள் ஆகிடும் !

ஒரு மாதிரியாய் 2014-ன் இதழ்களை பெரியதாய்ப் பல மாற்றங்களின்றி வெளிக்கொணர முடிந்ததில் நிம்மதி மேலோங்குகிறது. கடந்து வந்துள்ள நாட்களை அசை போடும் முயற்சியில் தலைக்குள் எஞ்சி நிற்பது ஒரு வண்ணமயமான blur மாத்திரமே ! வருஷத்தின் முதல் மாதத்தை சுருக்கம் விழுந்த செவ்விந்தியனின் முகத்தோடும்  (யுத்தம் உண்டு ; எதிரி இல்லை !) ; மடிப்புக் கலையா ப்ரூனோ பிரசிலோடும் சென்னைப் புத்தக விழாவினில் துவங்கியது நேற்றைய நிகழ்வு போல் பட்டாலும், தொடர்ந்துள்ள 365 நாட்களில் சுமார் 42 கதைகளை தரிசித்திருக்கிறோம் எனும் போது நாட்களின் வேகம் வாய் பிளக்கச் செய்கிறது ! முன்னே ஒரு புத்தாண்டும் , இன்னும் விசாலமானதொரு அட்டவணையும் காத்திருக்கும் போதிலும், கொஞ்சமே கொஞ்சமாய் நேரம் எடுத்துக் கொண்டு கடந்து வந்துள்ள இந்தாண்டின் அனுபவங்களை அசை போடுவதில் தப்பில்லை என்று தோன்றியது ! So 2014-ன் நம் இதழ்களை நீங்களும், நானுமாய் rate செய்திடும் வாரமாய் இதனை அமைத்துக் கொள்வோமே ?!

எடுத்த உடனேயே மனதில் எழுந்து நிற்கும் முதல் கேள்வியானது - 2014-ன் டாப் 3 இதழ்களாக எவை இருந்திட முடியும் என்பதே...! LMS எனும் முரட்டு இதழை இங்கே ஒரு மொத்த இதழாகப் பார்த்திடாமல் - அதனில் வெளியாகியிருந்த 9 கதைகளையும் தனித்தனியாய் ஒரு ஆக்கமாய்க் கருத்திடலாம் என்ற கோரிக்கையோடு - இந்தாண்டின் சில சிலாகிக்கப்பட்ட கதைகளை இங்கே பட்டியல் போடுகிறேன் - உங்கள் நினைவலைகளை தட்டிக் கொடுக்கும் விதமாய் :

  • நில்..கவனி.. சுடு! ( டெக்ஸ் )
  • எஞ்சி நின்றவனின் கதை (ஷெல்டன்)
  • விரியனின் விரோதி..! (மங்கூஸ்)
  • ஆத்மாக்கள் அடங்குவதில்லை ! (மேஜிக் விண்ட்) 
  • கட்டத்துக்குள் வட்டம் (மர்ம மனிதன் மார்டின )
  • அந்தி மண்டலம் (Dylan Dog)
  • கார்சனின் கடந்த காலம் (டெக்ஸ்)
  • ஒரு நிழல் நிஜமாகிறது (லார்கோ)
  • இரவே..இருளே..கொல்லாதே...(கிராபிக் நாவல்)
  • வானமே எங்கள் வீதி...! (கிராபிக் நாவல்)
வெளியான வேளைகளில் துடிப்பான விற்பனையையும், பரவலான பாராட்டுக்களையும் பெற்ற இதழ்கள் என்ற ரீதியில் தான் இந்தப் பட்டியலைப் போட்டுள்ளேனே தவிர, எவ்விதத் தரவரிசையிலோ ; எனது favorites இது தான் என்ற ரீதியிலோ இந்த லிஸ்ட் அமைந்திடவில்லை ! இவற்றில் எவையுமே உங்களின் டாப் 3 பட்டியலில் இடம்பிடிக்காது - முற்றிலும் வேறு இதழ்கள் / கதைகள் உங்கள் ரசனைகளைக் கவர்ந்தவையாக இருந்தாலும் அதை நீங்கள் பதிவிடலாம் ! என்ன தான் வருஷம் முழுவதும் உங்கள் தோள்களில் தொற்றிக் கொண்டு சவாரி செய்து கொண்டிருக்கும் வேதாளமாய் நான் தொடர்ந்தாலும், உங்கள் ரசனைகளுக்கொரு insight கிடைக்கும் இது போன்ற சமயங்கள் நமது இதழ்களின் பயணப் பாதைகளை நிர்ணயம் செய்ய ரொம்பவே உதவும் !So மனதில் தோன்றுவதை பளிச் என பகிர்ந்திடலாமே - ப்ளீஸ் ?!"பெரும்பான்மையான சக நண்பர்களுக்குப் பிடித்தவையே நமது தேர்வுகளாகவும் இருக்க வேண்டும் ; மாறுபட்டுத் தெரிந்தால் விமர்சனங்கள் எழலாம்!"  என்ற ரீதியிலான விசாரங்கள் ஏதுமின்றி - மனதுக்குப் பட்டதை பதிவு செய்தல் நிஜமாய் நமக்கு உதவும் என்பதை மறந்திட வேண்டாமே  !

டாப் 3 எவை ? என்ற கேள்வி அடங்கிய மறு கணமே எழுந்திடுவது  - இந்தாண்டின் டாப் 3 சொதப்பல்கள் எவை ? என்ற கேள்வி தானே ? நிச்சயமாய் இங்கே நான் suggestions எடுத்துக் கொடுக்கும் அவசியம் பெரிதாய் இராதென்பது உறுதி ; வெவ்வேறு காரணங்களுக்காய் அவரவர் மனதுகளில் வெவ்வேறு boo-boos மேலோங்கி நிற்பது நிச்சயம்! So 2014-ன் மொக்கை பீஸ்கள் எவையோ - உங்கள் பார்வைகளில் ? And more importantly - why ?

Moving onto QUESTIONS # 3 & 42014-ன் பிரமாதமான அட்டைப்படம் எதுவென்றும் ; படு சுமாரான அட்டைப்படம் எதுவென்றும் தேர்ந்தெடுப்போமா ? Again, ரசனை சார்ந்த இந்தத் தேர்வுகளுக்கு எனது prompts அவசியமாகாதென்று நினைக்கிறேன் !

அதே போல 2014-ல் நிறையவே அறிமுகங்களை நாம் சந்தித்துள்ளோம் ! டைலன் டாக் ; டிடெக்டிவ் ஜூலியா ; ரிண்டின் கேன் ; மேஜிக் விண்ட் ; தோர்கல் என்று ! ஒருவர் திகில் நாயகர் ; இன்னொருவர் கிரிமினாலஜிஸ்ட் ; இன்னொன்றோ ஒரு மொக்கை நாய் ; மற்றவர் செவ்விந்தியக்/ கௌபாய் என்ற ஈதியில் ஒவ்வொரு அறிமுகமும், வெவ்வேறு genre -ன் பிரதிநிதி என்பதால் ஒருவருக்கொருவர் எவ்வித ஒற்றுமையோடும் இருக்கப் போவதில்லை ! ரசனைகளின் அடிப்படையில் யாரை 2014-ன் சிறந்த புதுமுகமாய்த் தேர்வு செய்வீர்கள் folks ? (QUESTION # 5)

சென்றாண்டும் கேட்டகேள்வி தான் இது ; தொடரும் ஆண்டிலும் கேட்க வேண்டிய அவசியத்தை உருவாக்கப் போகும் கேள்வியும் கூடவே...! இருந்தாலும் கேட்காமல் இருப்பது நியாயமாகாது என்பதால் - here goes :
இந்தாண்டிலும் நமது 'தல' யின் ஆக்கிரமிப்பே ஜாஸ்தி நமது இதழ்களில்..! விற்பனையில் துளியும் திகட்டல் தரா நாயகர் ; அதிரடிகள் நிறைந்த கதை பாணிகளில் இன்றைய # 1 என்றாலும் டெக்சின் கதைகளை ஓவராய் போட்டு வருவதாய் நினைக்கத் தோன்றுகிறதா ? டெக்ஸ் கதைகளின் மீது லேசாகவேணும் சலிப்புத் தோன்றுகிறதா ? 'தல-தளபதி' தரப்புகளும் மிகைப்படுத்தல்களின்றி QUESTION # 6-க்குப் பதில் சொன்னால் மகிழ்வேன் ! 

QUESTION # 7 : 'இவரது கதைகள் நன்றாக இருப்பினும், இவருக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன ; அல்லது திறமைகேற்ற அளவிற்கு வாய்ப்புகள் தரப்படவில்லை !' என்ற ரீதியில்  2014-ன் நாயகர்கள் யாரைப் பற்றியேனும் நினைக்கத் தோன்றுகிறதா  ? அல்லது திறமை-வாய்ப்பு விகிதம் சரியாகவே உள்ளதா சகலருக்கும் ? 

QUESTION # 8 : முந்தய ஆண்டோடு ஒப்பிடுகையில் நாம் ரசனைகளில் எங்கே நிற்கிறோம் ? நிஜமாய் முன்னேறி இருக்கிறோமா எவ்விதங்களிலாவது - அல்லது அரைத்த மாவையே இன்னும் கலர் கலராய் அரைத்து வருகிறோமா ? மாற்றம் ஏதேனும் உண்டென்று சொல்வதாயின் - அது எதுவாக இருக்கும் ? கொஞ்சம் பொறுமையாய் இதற்கு பதில் ப்ளீஸ் ? 

QUESTION # 9 : மேலோட்டமாயின்றி - இந்தாண்டின் 45+ கதைகளையும் கொஞ்சமாய் தலைக்குள் ஒரு slideshow போல ஓட விட்டுப் பாருங்களேன்...2014-ன் HIGHLIGHT என்று சொல்லத் தோன்றும் கணம் எதுவாக இருக்கும் ? ( இது முதுகை சொறிந்து விடக் கோரும் கேள்வியல்ல guys ; நிஜமாக உங்களை மகிழ்வித்த தருணம் எதுவென்று தெரிந்து கொள்ளும் முயற்சி மட்டுமே

QUESTION # 10 : THE YEAR IN TOTAL - இந்தாண்டின் ஒட்டு மொத்த அனுபவம் எவ்விதம் இருந்துள்ளது என்று நினைக்கிறீர்கள் ? விறுவிறுப்பு ; சுவாரஸ்யம் ; value for money ; variety ; புதுமைகள் போன்ற முக்கிய அம்சங்களில் இந்தாண்டின் நமது performance-ஐ எவ்விதம் ரேட் செய்வீர்கள் ? இங்கே சின்னதாய் ஒரு கோரிக்கை ப்ளீஸ் : 'பளிச்' என மனதில் தோன்றும் முதல் அபிப்ராயங்களைப் பதிவிடுங்களேன் ? விமர்சகர் என்ற தொப்பிகளைத் தேடிப் பிடித்து மாட்டிக் கொண்டு பகிர்ந்திடும் சிந்தனைகளை விட, உங்களின் அந்த முதல் அபிப்ராயங்களுக்கு ஒரு freshness அதிகம் என்பது எனது நம்பிக்கை ! (குட்டுக்கள் வைக்காதீர்கள் என்ற அர்த்தத்தில் நிச்சயமாய் நான் இதைச் சொல்லவில்லை !!

QUESTION # 11 : இந்தக் கேள்வியானது வலைக்குள் உலவும் நம் நண்பர்களுக்கு மாத்திரமே ! இந்தாண்டிலும் நெருக்கி 65+ பதிவுகளைப் போட்டு உங்களைத் தாக்கித் தள்ளியிருப்பதை வலப்பக்கமுள்ள போஸ்ட்ஸ் எண்ணிக்கை பறைசாற்றுகிறது ! இந்த ஒட்டு மொத்த பட்டியலில் பெரும்பான்மை மாமூலான மாதாந்திர வெளியீட்டு முன்னோட்டங்களும், அறிவிப்புகளுமே என்பது நமக்குத் தெரியும் தான் ! அந்த routine சமாச்சாரங்களைத் தாண்டி சுவாரஸ்ய மீட்டரில் டாப் இடத்தைப் பிடித்த பதிவாய் எதைச் சொல்லுவீர்கள் ? Care to share ? (இந்தக் கேள்விக்கு பதில் சொல்லுவது optional மட்டுமே ; பாக்கி 10-க்கும் விடை தெரிந்தால் மகிழ்வோம் ! )

Shifting focus - ஜனவரியின் முதல் batch -ல் கீழ்க்கண்ட இதழ்கள் உங்களைத் தேடி வந்திடும் :

  • டைலன் டாக் - "நள்ளிரவு நங்கை !"
  • டயபாலிக் - "நித்தமும் குற்றம்"
  • லக்கி லுக் - "ஒரு ஜென்டில்மேனின் கதை"
  • ப்ளூ கோட்ஸ் - "சிறைக்குள் ஒரு சடுகுடு"
  • மாடஸ்டி - "நிழலோடு நிஜ யுத்தம்"

இவையனைத்தும் ஜனவரி 2-ல் டெஸ்பாட்ச் செய்யப்படும் !

ஜனவரி 9-ல் புறப்படப் போகும் பாக்கி 5 இதழ்களும் இதோ :

  • பௌன்சர் - ரௌத்திரம் பழகு
  • நயாகராவில் மாயாவி
  • ஸ்பைடர்
  • பெய்ரூட்டில் ஜானி
  • வான்வெளிக் கொள்ளையர் 

நமக்குச் சென்னைப் புத்தக விழாவினில் ஸ்டால் கிடைக்கும் பட்சத்தில் - சனிக்கிழமையன்று  (10-ஜனவரி) இந்த 5 இதழ்களும் ஸ்டாலில் விற்பனைக்குக் கிடைக்கும். So 5+5 என்ற பார்முலாவொடு தொடங்கக் காத்திருக்கும் புத்தாண்டின் முதல் டீசர் இதோ :

வழக்கம் போலவே லக்கியின் வண்ண சாகசம்  செம 'பளிச்' வர்ணங்களில்  அமைந்துள்ளது ! கதையும் சுவாரஸ்யமாய் ; இதுவரையிலான லக்கி பாணியில் இல்லாது அமைந்துள்ளது highlight ! ஆங்கிலத்தில் இதனைப் படித்திருகா நண்பர்களுக்கு நிச்சயம் ஒரு சுவாரஸ்யமான இதழாக அமையுமென்பது உறுதி ! ஒரிஜினல் முன் + பின் அட்டைகள் லேசான வர்ண மாற்றங்களோடு மாத்திரமே ! சந்தா புதுபித்தல்களை இனியும் தாமதமின்றிச் செய்ய இதுவொரு அழகான காரணம் என்பேன் !

மின்னும் மரணம் முன்பதிவுகளும் ஒரு second wind பிடித்துக் கொண்டு மீண்டும் விறுவிறுப்பு அடையத் தொடங்கியுள்ளது சந்தோஷச் சமாச்சாரம் ! காதல் பித்துப் பிடித்து தடுமாறும் கேப்டன் டைகரைப் பார்த்திடக் காத்திருக்கும் நண்பர்களுக்கு - இதோ அதன் லேட்டஸ்ட் ட்ரைலர் !
அப்புறம் புதுவையில் துவங்கியுள்ள புத்தக விழாவில் 'அட்டகாசம்!' என்ற ரீதியில் இல்லாவிடினும், "pretty decent " என்று சொல்லும் விதமாய் வரவேற்பும், விற்பனையும் அமைந்துள்ளது இன்னுமொரு சந்தோஷ update ! அங்கும் 'இரும்புக்கை மாயாவி இல்லியா-இல்லியா? ' என்ற கானமே ஓங்கி ஒலிப்பதாய் நம்மவர்கள் சொன்னார்கள் ! தவிர, நமது இதழ்களைப் பார்த்து விட்டு விழாவின் அமைப்பாளர்களே மகிழ்ந்துள்ளனராம் ! நமது ஸ்டால் # 48-ஐக் குறிப்பிட்டு குட்டியாய் போஸ்டர்கள் தயார் செய்து விழாவின் அரங்கில் அத்தனை இடங்களிலும் ஒட்டி வைக்குமாறு அவர்களே நமக்கு suggest செய்துள்ளனராம் ! வரும் ஜனங்கள் அனைவருக்கும் நமது ஸ்டால் ஒரு stopover ஆக அமைந்திட வேண்டுமென அவர்களே விரும்பியுள்ளது மிகவும் சந்தோஷமாய் உள்ளது ! See you soon folks ! Bye for now !

Sunday, December 14, 2014

கடிவாளமில்லாக் குதிரைகள் !

நண்பர்களே,

வணக்கம். மங்கலான வெளிச்சக் காலைகளில் தட்டுத் தடுமாறிக் கண் திறந்த சற்றைக்கெல்லாம்  ப்ளூகோட் பட்டாளத்தோடு மொழிபெயர்ப்பு ரோந்து  ; பூவா ஆன பிற்பாடு நயாகராவில் பல்டியடிக்கும் மாயாவியின் பிழைத்திருத்தங்கள் ; ஆபீசுக்குப் போன பின்னே 'அட்டைப்பட டிசைன் தாமதம் ஆகுதே !' என்ற அங்கலாய்ப்பு ; மதியமாய் மொட்டைத்தலை டேவிடும், C.I.D லாரன்சும் துணையிருக்க அவர்களோடு ஒரு சுற்று ; மாலையில் மாலயப்பனோடு ஒரு sitting ; அந்தி சாயும் வேளையில் பௌன்சரின் இறுதி நகாசு வேலைகள் ; ராவினில் கூலிங் கிளாஸ் ஜானி நீரோவும், 'பளிச்' ஸ்டெல்லாவும் பெய்ரூட்டில் செய்யும் சாகசங்களை நினைவூட்டிக் கொள்ளுதல் ; பிசாசு உலாற்றும் பின்னிரவில் கூர்மண்டயர் ஸ்பைடரோடு சண்டித்தனம் ! இது தான் கடந்த 10 நாட்களாய் என் அட்டவணை ! ஜனவரியில் 8 இதழ்கள் + இந்த டிசம்பரில் பாக்கியிருப்பது இரண்டு = ஆக மொத்தம் 10 ! என்ற நினைவூட்டலை நொடிக்கொருதரம் என் மண்டை செய்து வர -  'இதற்கு மேலே தொண்டைக்குழிக்குள் கால்விரலை நுழைத்துக் கொள்ளவே முடியாதுடா சாமி !!' என்று தான் நினைக்கத் தோன்றியது ! இந்தக் களேபரங்கள் ஒரு பக்கமிருக்க - ஏப்ரலின் "மின்னும் மரணம்" முழுநீள ஆல்பம் குறித்தான பணிகளும் இன்னொரு தண்டவாளத்தில் சத்தமில்லாது துவங்கியுள்ளன ! கிட்டத்தட்ட 430 முன்பதிவுகள் எனும் போது சுளையாய் 4 இலட்சம் ரூபாயை உங்களிடம் வசூலித்து விட்டு 'தேமே' என நான் அமர்ந்திருப்பது சரியாகப்படவில்லை ! So - 'பத்தோடு ஒன்று - 11 ' என்ற கணக்காய் - 10+1 பாகங்களோடு வரக் காத்திருக்கும் தளபதியாரின் மி.மி.பணிகளையும் தேர்திருவிழாவோடு இணைத்து விட்டேன் ! இழுப்பது தேர் என்றான பின்னே இதையும் சேர்த்து இழுத்துத் தான் பார்ப்போமே ?! ஏற்கனவே வெளியான முதல் 10 பாகங்களிலும் எனக்குப் பெரிதாய் வேலைகள் கிடையாதென்பதால் தற்போது நமக்காகப் பணியாற்றும் 5 தனித்தனி டைப்செட்டிங் டீம்கள் தத்தம் வீட்டுக் கீபோர்டுகளை 'ததும்..ததும்' என்று தட்டிக் கொண்டிருக்கிறார்கள் - ராப்பகலாய் ! இந்த ஐவர் அணியில் உள்ள ஒரே ஒரு ஆண் நீங்கலாக  ; பாக்கி சகலருமே வீட்டிலிருந்தபடி நமக்காகப் பணிசெய்யும் இல்லத்தரசிகள் ! குறைவான அவகாசத்திற்குள்ளாக நாங்கள் தயார் செய்துள்ள இந்தப் புதிய அணி எனக்குக் கைகொடுப்பதால் மாத்திரமே என் தலைதப்பிக்கின்றது ! இல்லையெனில் நண்பர் XIII -ஐப் போல பேந்தப் பேந்த முழித்துக் கொண்டு தான் சுற்றி வந்திருப்பேன் ! நமது அலுவலகத்திலும் காமிக்ஸ் பிரிவினில் இன்று பணியாற்றுவது பெரும்பாலும் பெண்களே எனும் போது - girl power - flexing their muscles என்று தான் சொல்லத் தோன்றுகிறது ! 

புதிய கதைகள் ;  பழைய கதைகள் ; புதிய பாணி ; புடலங்காய் பாணி ; மறுபதிப்புகள் ; கிராபிக் நாவல் ; ஒல்லிப்பிச்சான் ; மொக்கை ரூபி  ; இளவரசி ;இரும்புக்கரம் ; குற்றச் சக்கரவர்த்தி ; என்று  சுற்றிச் சுற்றி ஒரே வட்டத்துக்குள் சுழன்று வரும் இந்த நேரத்தில் இன்றைய பதிவையும் அதே ரூட்டில் எடுத்துச் செல்லாமல் -  'ஹாயாக' வேறு திசையில் போவோமே என்று தோன்றியது ! So இது ஒரு unplugged ரகப் பதிவென்று வைத்துக் கொள்ளுங்களேன் ! எவ்விதக் கோர்வைகளையும் முக்கியமென  மண்டைக்குள் ஏற்றிக் கொள்ளாமல் - கடிவாளங்கள் இல்லாக் குதிரைகளாய் என் எழுத்துக்களை இந்த ஒருமுறை மாத்திரமே ஓட அனுமதிக்கிறேனே ?! 

இந்த வாரம் துவங்கியது தினத்தந்தி டி.வி.யினரின் சிவகாசி வருகையின் போது நமது அலுவலக விஜயத்தோடு ! ஒவ்வொரு வட்டர்ரத்திலும்  உள்ள சுவாரஸ்யமான சுற்றுலாத் தளங்களை ; ஆங்காங்கே உள்ள வித்தியாசமான தொழில்களை ; ஒவ்வொரு ஊரின் விசேஷங்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் இந்நிகழ்ச்சியில் இம்முறை "காமிக்ஸ்" தயாரிப்பின் மீது focus செய்திட விரும்பினர் ! வழக்கமாய் கேட்கப்படும்  "இரும்புக்கைமாயாவி ரகக் கேள்விகளை" இயன்றளவுக்கு தவிர்த்து விட்டு, நமது புது முயற்சிகள் ; இன்றைய ரசனைகளின் பக்கமாய் கவனத்தைத் திருப்பிட முயன்றேன் ! (என் தந்தையைப் பேட்டி கண்ட போது - 'மலரும் நினைவுகள்' புகுந்திடுவதைத் தவிர்க்க வழியில்லாது போனது வேறு விஷயம் ! ) டிசைனிங் பணிகள் ; அச்சுப் பணிகள் என அவற்றின் மீதும் கொஞ்சம் ஒளிவட்டம் விழுந்திட - நம்மவர்களும் டி-வி.காமெராக்களுக்குள் சந்தோஷமாய் ஐக்கியம் ஆகினர் ! பிரோக்ராம் எடிட் ஆகி வெளியாகும் சமயத்தில் அவர்களது segment எத்தனை நொடிகள் / நிமிடங்கள் இடம்பிடித்திடுமோ  - நானறியேன் ; ஆனால் பணியாளர்களின் முகங்களில் அன்று நிலவிய சந்தோஷம் - made my day !! 

டி.வி.ஆட்களுக்கு நமது அந்நாட்களது அட்டைப்பட ஓவியங்களைப் பார்க்க இயன்ற போது தாங்க இயலா வியப்பு ! 'கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு முன்பான ஓவியங்களில் இன்னமும் இத்தனை உயிரோட்டம் எஞ்சி உள்ளதே !' என சிலாகித்தனர் ! அவர்களிடம் காட்டும் பொருட்டு கிட்டங்கியிலிருந்த பழசைக் கிளறிக் கொண்டிருந்த போது நாசியில் ஏறிய தூசோடு ஏகப்பட்ட மலரும் நினைவுகளும் ஒட்டிக் கொண்டன என்று தான் சொல்ல வேண்டும் ! வாடகைச் சைக்கிளில் ஏறிக் கொண்டு புறப்பட்ட நினைவுகளின் பின்னோக்கிய பயணம் - "அடடே ...பாதாளப் போராட்டம்" இதழின் அட்டைப்படம் அல்லவா இது ? இந்தக் கதையை டெல்லியில் ஏஜெண்டின் அலுவலகத்தில் வாங்கிய கணம் முதல் சென்னை திரும்பும் வரை ஒரு டஜன் தடவையாவது படித்திருப்பேனே !!' என்று துவங்கி ; "தோ பார்டா... மாஸ்கோவில் மாஸ்டர் இதழுக்கான அட்டைப்படத்தில் தான் என்னவொரு தேஜஸ் !!" ; "அந்நாட்களது கறுப்புக் கிழவி ராப்பர்களில் தான் என்னவொரு திகில்" ; "உலகம் சுற்றும் அலிபாபா டிசைன் செமப்பா " !! என்ற ரீதியில் எங்கெங்கோ பிரயாணம் செய்தன !  தோண்டத் தோண்ட உள்ளிருந்து வந்த முந்தைய இதழ்களும் ; ஆங்கில இதழ்களும் ; இன்னமும் நாம் பயன்படுத்தியிரா மாண்ட்ரேக் ; ரிப் கிர்பி ; காரிகன் கதைகளின் ஒரிஜினல்களும் என ஒரு வண்டி தேறும் !  "பெய்ரூட்டில் ஜானி நீரோ " கதையினில் - லாரன்ஸ் & டேவிட் தோன்றும் "விண்ணில் மறைந்த விமானங்கள்" இதழின் ஒரு பக்கமும் தவறுதலாய் அச்சாகியிருந்ததொரு அதிசய FLEETWAY ஆங்கில இதழும் கூட கையில் சிக்கியது ! இன்றைக்கு அந்த இதழின் மதிப்பு மலைக்கச் செய்யும் ஒரு தொகையாக இருக்குமென்பது நிச்சயம் ! FLEETWAY-ன் நமது ஜனவரி மறுபதிப்புகளைப்  (முதல் ரவுண்ட்) பிழைதிருத்தம் செய்து கொண்டிருந்த சமயம் - கதைகளில் அந்நாட்களது சுலபத் தமிழ்நடை அப்பட்டமாய்த் தெரிந்தது ! இன்றைக்கு நாம் பழகிப் போயிருக்கும் பாணிகளில் இருந்து சற்றே விலகித் தோன்றும் இந்த மொழிநடைகளை இந்தாண்டின் பிற்பகுதியின் பாக்கியுள்ள 8  மறுபதிப்புகளில் செப்பனிட முயற்சித்தால் என்னவென்று தோன்றியது ! ஆனால் ஒவ்வொரு பக்கத்து  வரியையும் ; புள்ளியையும், கோட்டினையும் மனப்பாடம் செய்து வைத்திருக்கும் நண்பர்களுக்கு இது அபச்சாரமாய்த் தோன்றுமோ ? என்ற கேள்வியும் எழாமலில்லை ! What say guys ? 

Fleetway-ன் இங்கிலாந்திலிருந்து ஒரு 'ஜம்ப்' செய்து அமெரிக்காவில் கரை சேர்ந்தால் - சமீபமாய் மார்வெல் நிறுவனத்தோடு மேலோட்டமாய் பேச்சுவார்த்தைகள் நடத்திடும் வாய்ப்புக் கிட்டியது நமக்கு ! மார்வெல் நிறுவனம் பிரசித்தி பெற்ற ஸ்பைடர்மேன் கதைகளையும் ; இன்னும் ஏராளமான சூப்பர் ஹீரோ கதைகளையும் வெளியிட்டு வரும் ஒரு அமெரிக்க மெகா நிறுவனம் ! கிட்டத்தட்ட 75 ஆண்டுப் பாரம்பரியம் கொண்ட இப்பதிப்பகத்தின் ALL TIME TOP 10 இதழ்களை அங்குள்ள வாசகர்கள் சமீபத்தில் தேர்வு செய்திருந்தனர் ! அவற்றில் நமக்கு ஒத்துப் போவது போல் தோன்றும் தொடர்களுக்கான உரிமைகளை வாங்கிட முயன்று தான் பார்ப்போமே  என்ற நப்பாசையில் அந்தப் பட்டியலைப் புரட்டினேன் !  X-Men ; Fantastic Four ; Spiderman ; Daredevil என்ற பெயர்களே அந்தப் பட்டியலில் முன்னணியில் நின்றன ! அவையனைத்தும் அங்கே சக்கைபோடு போடும் தொடர்கள் ; ஆனால் நாம் இந்த சூப்பரோ-சூப்பர் ஹீரோக்களை  ; அந்த  எதிர்காலத்துக் கதை பாணிகளை ஏற்றுக் கொள்ளுவோமா ? என்பது million bucks கேள்வியாகவே நிற்கின்றது ! உலகின் காமிக்ஸ் விற்பனையில் நம்பர் 1 இடத்திலிருக்கும் ஒரு தேசமே மட்டுமல்லாது ; அவர்களது உரிமைகளைப் பெற்று உலகில் ஆங்காங்கே  மறுபதிப்புகள் செய்து வரும் பதிப்பகங்களும் சிலாகிக்கும் அந்தக் கதை வரிசைகள் நமக்கு மட்டும் அன்னியமாய்த் தெரிவது ஏனோ ? என்ற கேள்விக்கு எனக்கு விடை தெரியவில்லை ! நாம் மூழ்கித் திளைக்கும் பிரான்கோ-பெல்ஜிய நாடுகளில் கூட - அமெரிக்கக் காமிக்ஸ் நாயகர்களின் வருகை ஆண்டுதோறும் வீரியம் அடைந்து வருகின்றது ! 2014-ன் விற்பனைகளில் மிகத் துரித முன்னேற்றம் கண்டுள்ளது அமெரிக்கக் காமிக்ஸ் தொடர்கள் தானாம் !!  'கலாச்சார வேறுபாடு ' தான் இர்ரகக் கதைகளை நாம் ரசிக்கத் தடையாக நிற்கிறது என்று பதில் சொல்லிக்கொள்ள முயன்றால் - நமக்கும் இத்தாலிக்கும் ; பிரான்சுக்கும் தான் என்ன ஒற்றுமை இருந்திடக்கூடும் ? என்ற கேள்வி 'சொய்ங்' என தலைதூக்கி நிற்கின்றது ! அதற்காக 'நாளைக்கே X-Men இத்யாதிகளை வெளியிடப் போகிறேன் என்றோ ; அதனை ரசிக்கப் பழகிக் கொள்ளுங்கள் !' என்றோ நான் இங்கே சொல்ல வரவில்லை ; அமெரிக்க முக்கியப் பதிப்பகங்களின் ராயல்டி எதிர்பார்ப்புகளின் கிட்டத்திலாவது நாம் இருக்கிறோமா என்பதே கேள்விக்குறி ! என் கேள்வி - why does the american genre of comics seem so alien to us ? (மேஜர் சுந்தர்ராஜன் பாணியில்) - அமெரிக்கக் காமிக்ஸ் ரசனைகள் நமக்கு ரொம்பவே தூரத்து ரசனைகளாய்த் தெரிவதன் காரணம் தான் என்னவாக இருக்கும் ? கடந்த ஞாயிறின் பதிவின் பின்பகுதிகளில் உலக யுத்தம் பற்றியும் ; நாஜிக்களின் யுத்த முறைகள் பற்றியும் ; பாரதியாரைப் பற்றியும் (!!!) பின்னூட்டங்களில் தூள் கிளப்பிய நமக்கு இது சின்னதொரு விவாத மேடை என்று வைத்துக் கொள்வோமே ?! 

கதை பாணிகள் பற்றிய தலைப்பிலேயே, சமீபமாய் நான் எங்கோ படிக்க நேர்ந்த சின்னதொரு சேதியும் கூட ! கௌபாய் அல்லாத கதைகளுள் இன்றைய  நமது டாப் ஸ்டார் லார்கோ தான் என்பதில் ஐயமே இராது ! ஒரு தொழில் அதிபரை இது போன்றதொரு ஆக்ஷன் template -க்குள் நுழைத்து வெற்றி காண கதாசிரியர் வான் ஹாம்மேவிற்கு எவ்விதம் சாத்தியமானதோ - அதுவும் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பாகவே (லார்கோ தொடர் துவங்கியது 1990-ல்) என்ற கேள்வி அவ்வப்போது எனக்குள் எழுவதுண்டு ! ஆனால் இந்தக் கதைகளை வான் ஹாம்மே அதற்கும் 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே எழுதி முடித்து வைத்திருந்தாராம் ! 1980-கள் இந்தக் கதை பாணிகளுக்கு சற்றே too early என்று கருதினாரோ - என்னவோ ; எழுதிய கதைகளை ஒரு பத்தாண்டுகளுக்கு வெளியே கொணர முயற்சிக்கவே இல்லையாம் ! So  (ஜேம்ஸ் பாண்ட்) பாணியிலான துப்பறியும் கதைகளும் ; கார்ட்டூன்களுமாய் மார்கெட் நிரம்பி வழிந்த 1980-களிலேயே மனிதர் இத்தனை தொலைநோக்கோடு ஒரு தொடரை உருவாக்கி வைத்திருந்தார் எனில் -  hats off !! 
பிரான்சில் வசிக்கும் நம் இளம் வாசகர்கள் சுஜி & ஜெயந்த் அனுப்பிய போட்டோ ! 
ஆங்காங்கே படிக்க இயன்ற காமிக்ஸ் செய்திகளுள் சற்றே sober ஆனதொரு விஷயமும் கூட உண்டு ! காமிக்ஸ் எனும் மீடியத்தின் நிஜமான ஆற்றலுக்கும் கூட இதுவொரு வெளிப்பாடு என்று சொல்லலாம் ! சுபான் புக்ஸ் என்றதொரு டெல்லி பதிப்பகம் - 'ப்ரியா' என்றதொரு ஹீரோயினை மையமாகக் கொண்டு ஒரு புதிய காமிக்ஸ் தொடரை உருவாக்கியுள்ளது ! இதில் விசேஷம் என்னவெனில் - கதாநாயகி ப்ரியா பாலியல் பலாத்காரத்தின் ஒரு துரதிர்ஷ்ட பலியாடு ! அந்தக் கொடூரத்தைத் தாண்டி வர முற்படும் பெண்ணுக்கு  கடவுள்கள் துணை புரிவது போலவும், அந்த சண்டாளர்களை ப்ரியா பழிவாங்குவது போலவும் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளதாம் ! 2012 டிசம்பரின் டில்லியில் ஓடும் பஸ்ஸில் நிகழ்ந்த அந்தக் கொடூரத்தின் பிற்பாடு  இந்தியாவே கூனிக் குறுகிப் போன வேளைதனில் இந்தக் கதையினை உருவாக்கிட தனக்குத் தோன்றியதாக அதன் படைப்பாளிகள் சொல்லியுள்ளனர் ! உலகெங்கும் டிஜிட்டல் பிரதிகளாய் இலவசமாய்க் கிடைக்கப் போகும் இந்தக் கதை(கள்) இம்மாதத்து மும்பை COMIC CON -லும் கிடைக்கும் ! Great initiative indeed ! 
இந்தியாவின் காமிக்ஸ் தலைநகராய் டெல்லி உருவாகி வருவதும் இங்கே நாம் குறிப்பிட்டாக வேண்டியதொரு விஷயமே ! நிறையத் திறமையான புதுயுகப் படைப்பாளிகள் ; புதுப் பதிப்பகங்கள் அழகான பல படைப்புகளை உருவாக்கி வருகின்றனர்  ! ஹிந்தி ; இங்கிலீஷ் எனும் பரந்ததொரு மார்கெட் அவர்களுக்கு சாத்தியம் ஆவதால் விற்பனைக்களம் நம்மதைப் போல் குறுகிய  ஒன்றாய் இல்லாதிருப்பது கண்கூடு ! இருப்பினும் அதனை அழகாய்ப் பயன்படுத்தும் திறமை இன்றைய டெல்லி காமிக்ஸ் பதிப்பகங்களுக்கு நிரம்ப இருப்பது ஒரு சந்தோஷ விஷயம் ! இதோ பாருங்களேன் - அங்கு நடந்ததொரு காமிக்ஸ் பயிலரங்கத்தின் போட்டோ ! காமிக்ஸ் கதைகள் எழுதுவது எப்படி ; சித்திரங்கள் போடுவது எப்படி ? என்றெல்லாம் வார இறுதிகளில் வகுப்புகள் எடுக்கப்படுகின்றன !! 
More from the stuff I got to read - நமக்கு சுவாரஸ்யம் தரக்கூடிய சில புள்ளிவிபரங்கள் இப்போது : 
  • சென்றாண்டின் இறுதிப்பகுதியில் வெளியான புதிய Asterix & Obelix சாகசமானது விற்பனை சாதனைகள் படைத்துள்ளது! 'ஸ்காட்லாந்தில் Asterix ' என்ற தலைப்போடு வந்த இக்கதை பிரெஞ்சில் மாத்திரம்  24,80,000 பிரதிகள் விற்பனை கண்டுள்ளதாம் !!!! (ஊர்ஜிதம் செய்திடத் தேவைப்படும் ஒரு எண்ணிக்கையே இது !! )
  • வரலாற்றில் இது வரை அதிகப் பிரதிகள் விற்றுள்ளதும் இவர்களது காமிக்ஸ் தொடரே ! இது வரை 350 மில்லியன் பிரதிகள் விற்றுள்ளனவாம் (பல்வேறு மொழிகளில் ) இவர்களது அனைத்துக் கதைகளும் கூட்டாக !! (ஒரு மில்லியன் என்றால் 10 இலட்சம் எனும் போது - 350 மில்லியன் என்றால் ???? ஆஆஅவ்வ்வ்வ்வ்வ் !!! ))
  • லார்கோ வின்ச் - 600,000 பிரதிகள் (பிரெஞ்சில்) 
  • தோர்கல் - 200,000 பிரதிகள் !
  • நாம் வெளியிட்டு வரும் "இரவே..இருளே..கொல்லாதே.." ; "தேவ இரகசியம் தேடலுக்கல்ல" போன்ற கதைகளை உருவாக்கிய டெல்கோர்ட் நிறுவனமே சென்றாண்டின் டாப் பிரெஞ்சுப் பதிப்பகம் ! உலகின் இரம்டாவது பெரிய மார்கெட்டின் நம்பர் 1 & 2 இடங்களில் உள்ள இரு கூடங்களோடும் நல்லுறவு உள்ளது நமக்கு பெரியதொரு பெருமிதம் தரும் விஷயம் ! 
  • உலகெங்கும் சராசரியாய் 2600 இதழ்களில் ; 120 நாடுகளில் குண்டுப் பூனை GARFIELD வெற்றிகரமாய் சுற்றித் திரிகிறது ! (நமக்கு மட்டும் இதனை ரசிக்க இயலாது போனது பெரும் மர்மமே !!) 
இலட்சங்களையும், கோடிகளையும் பிரெஞ்சு காமிக்ஸ் மார்கெட் துளாவிக் கொண்டிருக்கும் வேளையில் நமது ஒருகாலத்துத் தாய்வீடான' இங்கிலாந்தில் காமிக்ஸ்கள் எவ்விதம் குப்பை கொட்டுகின்றன ? என்பதையும் சமீபமாய் அங்குள்ள பதிப்பக நண்பர்கள் வாயிலாக அறிந்து கொள்ள முயற்சித்தேன் ! இன்னமும் விற்பனை எண்ணிக்கைகளில் இங்கிலாந்தில் முதலிடம் பிடித்து வருவது பள்ளி செல்லும் சிறுவர்களை வாசகர்களாய்க் கொண்டிருக்கும் கார்டூன் ரகக் கதைகளே என்று சொல்கிறார்கள் ! இவையும் கூட ஒரு இலட்சத்துக்கு மிகக் கீழே தான் விற்பனை காண்கின்றனவாம் ! BEN 10 போன்ற சமீப ஆக்கங்கள் 70,000 பிரதிகள் விற்கின்றனவாம் - ஒவ்வொரு சாகசத்திலும் ! இப்போதெல்லாம் அமெரிக்க இறக்குமதி காமிக்ஸ்கள் உள்ளூர் பதிப்பகங்களைப் பின்தள்ளும் நிலை மெதுவாய்ப் புலர்ந்து வருவதாய் சொன்னார்கள் ! எப்படியிருந்ததொரு மார்கெட் - இன்று இப்படியாகிப் போனதே ! என்ற ஆதங்கம் அவர்கட்கு மாத்திரமல்ல ; எனக்குமே ! 

Back to home, sweet home : புதுவை புத்தக விழாவினில் நாம் பங்கேற்பது உறுதி என்ற நிலையில் ; 2015-ன் சென்னை புத்தக விழாவிற்கு விண்ணப்பித்து ஆவலோடு காத்திருக்கிறோம் ! சென்னையில் நமக்கென பிரத்யேக ஸ்டால் கிடைக்கும் பட்சத்தில் - 8 இதழ்கள் கொண்ட ஜனவரிக்கு மட்டுமன்றி 2015- க்கே ஒரு சூப்பர் ஆரம்பம் கிட்டியது போலாகும் ! ஸ்டால் கிடைக்கும் பட்சத்தில் முதல் மூன்று நாட்களும் (ஜனவரி 9 ; 10 ; 11) அடியேனின் ஜாகை சென்னையாகத் தானிருக்கும் ! 

'பெரியவர்கள்' இம்முறை re-entry ஆகிறார்கள் எனும் போது அவர்களுக்கென இனி ஒவ்வொரு விழாவிலும் தனியாக banner அமைத்திடுவது அவசியமாகிடும் ! நமது டிசைனர்கள் அனைவரும் கழுத்து முட்ட பணிகளோடு இருப்பதால் - இம்முறை உங்களின் உதவி நமக்கு ரொம்பவே தேவை ! அதே போல ஜனவரி முதற்கொண்டு ஜூனியர் விகடன் (அரைப்பக்கம் - black & white ) ; புதிய தலைமுறை (முழுப் பக்கம் - வண்ணத்தில்) போன்ற இதழ்களில் நாம் செய்து வந்த விளம்பரங்களைத் தொடர்வதாக உள்ளோம் ! அவற்றிற்கும் சென்ற முறை போலவே உங்களின் டிசைன் உதவிகள் கிடைத்தால் புண்ணியங்கள் ஒரு கோடி சாரும் !! Please guys - spare some creative time for us !!

நமது உள்ளூர் ஆர்டிஸ்ட்களை பிசியாக வைத்திருப்பது பற்றாதென - ஐரோப்பிய ஓவியர் ஒருவரையும் நம் பொருட்டு களத்தில் இறக்கியுள்ளோம் ! நம்மூர் மாலையப்பன் ஒரு ஐரோப்பிய முகத்தை ; உடுப்பை வரைவதற்கும் அந்நாட்டவர் அதனை வரைவதற்கும் உள்ள வேற்றுமைகளைப் பாருங்களேன் - இந்தப் பூர்வாங்கப் பென்சில் sketch-ல் ! வர்ணங்கள் பூசி விரைவில் அனுப்பவதாய் சொல்லியுள்ளார் ஓவியர் ; பார்ப்போமே end product எவ்விதமுள்ளதென்று !  

2015-ன் இதழ்களில் filler pages களில் ஏதேனும் புதிதாய் முயற்சித்தால் தேவலை என்ற எண்ணம் மேலோங்கி நிற்கிறது ! வழக்கம் போல் அதே மாவை நான் அரையோ அரை என்று அரைப்பது எனக்கே போர் அடிக்கிறது ! So அந்த 4 பக்கங்களைப் புதிதாய்  எதைக் கொண்டு நிறைக்கலாம் என்பது பற்றியும் கொஞ்சம் சிந்தித்துச் சொல்லுங்களேன் ? ஏதேனும் சுவாரஸ்யமான கார்டூன் தொடர்கள் நினைவுக்கு வரும் பட்சத்தில் அவற்றை suggest செய்திடலாம் ; அல்லது ஏதேனும் தொடர்கதைகளை அங்கே நுழைத்துப் பார்க்கலாமா ? Get your best thinking caps out folks !! 

சமீபமாய் ஒரு தம்பதியினர் என்னை சந்தித்த சமயம் - அழகாய் ஒரு வேண்டுகோள் வைத்தனர் ! சிறு வயதில் தான் படித்த சுஸ்கி & விஸ்கி கதைகள் இன்னமும் நினைவுகளில் பசுமையாய் உள்ளதாகவும், அதனை போல சுலபமான கதைகளாக இன்றைய இளம் தலைமுறைக்கு நம்மிடம் வேறு சரக்கே இல்லை எனும் போது - திருவாளர்கள் சு.வி.யை நம் அணிவகுப்பிற்க்குக் கொணர வாய்ப்பேதும் உண்டா ? என்று வினவினர் ! இதே போன்ற அவாவினை சில காலம் முன்பாக நமது இராஜபாளையம் வாசக நண்பரின் சகோதரியும் கூட முன்வைத்திருந்தார் ! சுஸ்கி & விஸ்கி இன்றைய நம் வயதுகளுக்கு ; ரசனைகளுக்கு ரொம்பவே மழலைத்தனமாய் தோன்றிடுமே என்பது எனது ஆதங்கம் ! அனால் உங்களின் சிந்தனைகள் என்னவோ - இதனில் ? சொல்லுங்கண்ணே..சொல்லுங்க...! 

And again - the vital reminder ! சந்தாப் புதுப்பித்தல்களை இன்னமும் ஜரூராய் செய்திடலாமே நண்பர்களே ? சென்றாண்டின் 40%-ஐ இப்போது தான் தட்டுத் தடுமாறி எட்டிப் பிடித்திருக்கிறோம் ! மீதமுள்ள நண்பர்கள் தொடரும் நாட்களில் பணம் அனுப்பி உதவிட்டால் 2015-ன் தேர்த்திருவிழா களை கட்டிடாதா ? Please do chip in guys ?! மீண்டும் சந்திப்போம் !  Bye for now !! 

Sunday, December 07, 2014

முயற்சிக்கு வயதேது ?

நண்பர்களே,

வணக்கம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ரிலீஸ் ஆகும் புதுத் திரைப்படங்களின் பின்னணியில் இருப்பவர்களுக்கு அந்த முதல் ஒன்றிரண்டு நாட்களின் படபடப்பு எவ்விதமிருக்குமோ நானறியேன் -ஆனால் ஒவ்வொரு மாதத்து முதல் வாரத்திலும் நமது புது இதழ்கள் உங்களை வந்து சேரும் நாட்களில் எனது விரல்களை நான் தீர்க்கமாகவே cross செய்து வைத்திருப்பேன் ! ஒரு திரைப்படத்தை உருவாக்கும் அசுரப் பிரயத்தனத்தின் முன்னே நாம் செய்யும் தயாரிப்பு வேலைகள் வெறும் ஜூஜூபி தான் என்றாலும், நம்மளவிற்கு நம் டென்ஷன் ! அதிலும் இந்த டிசம்பரில் எனக்கு 'டென்ஷன் மீட்டர்' சற்றே ஜாஸ்தியாகிட காரணங்கள் நிறையவே இருந்தன ! 

இந்தாண்டின் இதுவரையிலான அத்தனை வெளியீடுகளின்  இறுதிப் பணிகள் நடந்தேறும் வேளைகளிலும், டெஸ்பாட்ச் சமயங்களிலும்   எனது இதர வேலைகளை ஓரம்கட்டி வைத்து விட்டு முழு மூச்சாய் காமிக்ஸ் வேலைகளுக்குள் தலைநுழைத்திட ஒருவித luxury கிட்டியிருந்தது !  ஆனால் கடந்த வாரம் எழுந்ததொரு அவசர வேலையால்  சட்டிபெட்டிகளைத் தூக்கிக் கொண்டு செவ்வாய்க்கிழமை காலை அமெரிக்கா செல்லவேண்டியதொரு அவசியம் ! So நான் இல்லாமலே நம்மவர்கள் தாக்குப் பிடித்தாக வேண்டிய கட்டாயம் இம்முறை ! KING SPECIAL & "வானமே எங்கள் வீதி" இதழ்களின் அச்சுப் பணிகளை ஒரு வாரத்துக்கு  முன்பாகவே முடித்திருந்தோம் என்பதால்  மேஜிக் விண்ட் துவக்கப் பக்கங்கள் அச்சாவதை மட்டும் பார்த்து விட்டு   நான் கிளம்பி விட்டேன் ! சென்னை வந்து சேர்ந்த சற்றைக்கெல்லாம் போன் ஒன்று தொடர்ந்தது - நமது பிரிண்டர் குமார் அச்சு இயந்திரத்திலிருந்து கீழே இறங்கும் சமயம் கால் பிசகி விழுந்து விட்டதாகவும், வலது கால் மூட்டில் ஒரு hairline fracture ஏற்பட்டுள்ளது என்றும் ! சமீப மாதங்களில் நமது அச்சுப் பிரிவின் தலைமைப் பொறுப்பை மேற்கொண்டிருக்கும் திறமைசாலி அவர் ! வலியில் தவித்த மனுஷனை மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்று மாவுக் கட்டுப் போட்டு விட்டு, வீட்டில் கொண்டு சேர்த்து வர ஏற்பாடுகள் செய்தான பின்னர் தான் மேஜிக் விண்டின் இறுதி 16 பக்கங்கள் அச்சாக பாக்கி நிற்பது நினைவுக்கு வந்தது ! அவசரமாய் நமது மற்றொரு ப்ரிண்டரைக் கொண்டு வேலைகளை முடித்து பைண்டிங்குக்கு செல்ல முடிந்த போதே புதன் மாலையாகிப் போயிருந்தது ! 'வியாழன் காலையில் பிரதிகளை அனுப்பி விடுவோம் !' என்று நான் சென்ற பதிவில் கித்தாய்ப்பாய் சொல்லியிருந்ததால் - வழக்கம் போல் பைண்டிங் செய்து தரும் நண்பரின் அலுவலகத்தில் முற்றுகை போட்டு விட்டனர் நம்மாட்கள் ! இன்னொரு பக்கம் - 'இம்மாதம் முதல் புக்ஸ் அனைத்துமே அட்டைபெட்டியில் தான் !'என்று பந்தாவாய் அறிவித்திருந்தேன் ; ஆனால் பெட்டி செய்து தருபவர்களோ ஆண்டின் இறுதி மாதத்து rush-ல் நம் வேளைகளில் சுணக்கம் காட்ட, அதிலும் ஒரு தலைநோவு ! இங்குள்ளவர்களின் குடலை போனிலேயே உருவிடுவதைத் தாண்டி என்னால் அமெரிக்காவிலிருந்து செய்யக் கூடியது அதிகமிருக்கவில்லை என்பதால் வியாழன் மாலை "டெஸ்பாட்ச் முடித்து விட்டோம் !" என்று சேதி கிடைக்கும் வரை எனக்கு தூக்கம் பிடிக்கவில்லை அங்கே ! 

தயாரிப்பின் பல்டிகள் ஒருபக்கமிருக்க, இம்மாதத்து 3 கதைகளுக்கும் உங்களின் response எவ்விதமிருக்குமோ என்று என்னால் கணிக்க முடிந்திருக்கவுமில்லை ! TEX கதையைப் பொறுத்த வரை ஜாஸ்தி சிக்கலில்லை தான் ; மாறுபட்ட கதைக்களமாக இருப்பினும், 'தல' கரை சேர்த்திடுவார்  என்பதில் எனக்கு ஐயமிருக்கவில்லை ! ஆனால் மற்ற இரு இதழ்களிலுமே எனக்கு அவ்வித உறுதி இருக்கவில்லை என்பது தான் நிஜம் ! In fact -  - லார்கோவையும் ; ஷெல்டனையும் ரசிக்கும் நமது தற்போதைய ரசனைகளின் மத்தியில் "உயரே ஒரு ஒற்றைக் கழுகு" போன்றதொரு சிந்துபாத் பாணிக் கதைக்கு அர்ச்சனை கிட்டுமோ என்ற பயம் எனக்குள் நிறையவே இருந்தது ! செவ்விந்தியர்களை வெறும் கொலு பொம்மைகளாய் கொண்டிராமல் அவர்களது வாழ்க்கை முறைகளைக் கொஞ்சமாய் தரிசிக்க வாய்ப்புத் தரும் இந்தக் கதையில் நீங்கள் 'லாஜிக்' தேடினால் நான் அம்பேல் என்பது நிதர்சனம் ! ஆனால் கொஞ்ச நேரத்துக்கு லாஜிக் எனும் மூட்டைகளை இறக்கி வைத்து விட்டு அந்த மாந்த்ரீக உலகில் உலவிடும் அனுபவத்தை நீங்கள் வெகுவாய் ரசித்திருப்பதை உங்களின் initial reactions பறைசாற்றுவதை சந்தோஷத்துடன் கவனித்தேன் ! பத்தே நிமிடங்களில் படித்து முடிக்கக் கூடிய இந்தக் கதையில் மேலோட்டமாய் விட்டலாச்சார்யா சமாச்சாரங்களே மிகுந்து தெரிந்தாலும் - மாறுபட்ட பல மனித உணர்வுகளுக்கும் இடமிருப்பது அப்பட்டம் ! 'இது தான் களம் !' என்று நமக்கு நாமே ஒரு வரையறை போட்டுக் கொள்ளாது - கழுகின் கம்பீரப் பறக்கும் ஆற்றலைப் போலவே நமது காமிக்ஸ் வாசிப்புக் களங்களை விசாலமாக்கிக் கொள்ள இது போன்ற கதைகள் உதவும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை !

'வானமே எங்கள் வீதி' யைப் பொறுத்த வரை - அழுகாச்சியில்லா  ஒரு அழகான கிராபிக் நாவல் என்ற போதிலும், சிறுவர்களை மையமாய்க் கொண்டு நகரும் அந்த வித்தியாசமான கதைக்கும் ; 'தொடரும்' என்ற tagline -க்கும் உங்களின் reactions எங்ஙனம் இருக்குமென்று யூகிக்க எனக்கு முடியவில்லை ! அதிலும் கிராபிக் நாவல்களைப் பற்றி வெகு சமீபமாய் வந்திருந்த  நண்பரின் கடிதமொன்று என்னை நிறையவே சிந்திக்கச் செய்திருந்தது ! சென்னையைச் சார்ந்த இந்நண்பர் நமது தீவிர ரசிகர் ; ஒவ்வொரு மாதமும் தவறாது தன் எண்ணங்களைக் கடிதங்களில் நம்மோடு பரிமாறிக் கொள்பவர் ; சென்னைப் புத்தக விழாக்களின் போதும் ஆஜராபவர் ! இது அவரது கடிதத்தின் வரிக்கு வரியிலான நகல் அல்ல ; என் நினைவில் நின்ற சாராம்சம் மாத்திரமே :

'சமீபமாய் வந்த தேவ ரகசியம் தேடலுக்கல்ல ;  இரவே.. இருளே.. கொல்லாதே ! போன்ற கிராபிக் நாவல்கள் பரவலாய் வரவேற்பு பெற்றிருப்பதை உணர்கிறேன் ! எல்லாத் தரப்பு வாசகர்களையும் திருப்தி செய்யும் கடமை உங்களுக்கு உள்ளது என்பது எனக்கும் புரிகிறது ; ஆனால் 7-77 வயது வரை அனைவருக்கும் காமிக்ஸ் எனும் போது - சுத்தமாய் புரியாத இது மாதிரியான கதைகளால் என் போன்ற வாசகர்களுக்கு என்ன பிரயோஜனம் இருக்க முடியும் ? இரவே..இருளே..கொல்லாதே கதையைப் படித்து விட்டு எனக்கு தலையும் புரியவில்லை ; வாலும் புரியவில்லை ! சரி..நண்பர்களிடம் கேட்டுப் புரிந்து கொள்வோம் என்று போன் அடித்துப் பார்த்தால் அவர்களில் முக்கால்வாசிப் பேருக்கும் கதையைச் சொல்லத் தெரியவில்லை ! 'புரியவில்லை' என்று சொன்னால் அது நன்றாகத் தோன்றாது என்பதால் நிறைய பேர் புரிந்தது மாதிரியே நடிக்கிறார்களோ என்று நினைக்கிறேன் ! ஏற்கனவே "சிப்பாயின் சுவடுகளில்" கதையின் விளக்கத்தை தேடி நான் நாக்குத் தொங்கிப் போனது நினைவில் உள்ளது ! ஆகையால் இது மாதிரிக் கதைகளை வெளியிடும் போதாவது -  என் போன்ற வாசகர்களுக்காக கதைச் சுருக்கத்தை வெளியிடுங்களேன் ?! கதைச் சுருக்கத்தைப் போட்டால் படிக்கும் சுவாரஸ்யம் குறைந்து போய் விடுமோ என்று வாசகர்கள் சொல்வார்கள் என்றால் அந்த கதைச் சுருக்கத்தை மட்டும் கடைசிப் பக்கத்தில் தலைகீழாக அச்சிட்டு விடுங்கள் ; தேவைப்படுவோர் மட்டும் படித்துக் கொள்ளட்டும் ! '

தெற்கே, வடக்கே என்றெல்லாம் சுற்றி வளைக்காமல் மனதில் தோன்றியதை 'பளிச்' என நண்பர் எடுத்துரைத்த பாணி ரொம்பவே அழகு ! 'இது எனக்குப் பிடிக்கவில்லை!' என்று சொல்வதற்கும் - 'இது எனக்குப் புரியவில்லை !' என்று சொல்வதற்கும் உள்ள வேறுபாடு அவரது கடிதத்தில் தெளிவாய்ப் புரிந்தது ! கிராபிக் நாவல்களை விரும்பிடா நண்பர்களில் பெரும்பகுதியினரும் - ' டெக்ஸ் போதும் ; டைகர் போதும் ; லார்கோ போதும் ; எனக்கு எதுக்கு இந்த புது பாணிகள் ?' என்ற ரீதியிலேயே தங்கள் எதிர்ப்புகளைப் பதிவு செய்திருந்த  நிலையில் - ரசனை சார்ந்த விஷயங்களில் பொறுமை அவசியம் ; காலப்போக்கில் இது போன்ற வித்தியாசமான கதைகளையும் நம்மால் ஏற்றுக் கொள்ள முடியும் என்பதே எனது திடமான அபிப்ராயமாய் இருந்து வந்தது !  ஆனால் முதல்முறையாக - 'ஐயா..கதையே புரியவில்லை !' என்று நண்பரொருவர் கை தூக்கி இருக்கும் போது அதற்கு கவனம் தர வேண்டிய கடமை நமக்குண்டு நிச்சயமாய் ! அவரே சொல்லியிருக்கும் சுலபத் தீர்வை நடைமுறைக்குக் கொண்டு வர அதிக சிரமம் இராது தான் ; ஆனால் the bigger issue still remains to be addressed ! அனைவருக்கும் புரியும் சுலபமான வட்டத்துக்குள் வலம் வந்தால் போதும் தானா ? பரிசோதனைகள் ; வாசிப்புக் களங்களை விரிவாக்குதல் என்பதெல்லாம் அனைவருக்கும் ஏற்புடையதாய் கொண்டு செல்ல வழியேதும் உண்டா ? சிந்திக்க வேண்டிய விஷயங்கள் அல்லவோ இவை ? 2015-ஐப் பொறுத்த வரை யாருக்கும் இது போன்ற நெருடல்கள் நேர்ந்திட வாய்ப்பிராது ; தேர்வு செய்யப்பட்டுள்ள கிராபிக் நாவல்கள் ( 3 x BOUNCER + 2 x THORGAL ) மட்டுமன்றி புதுக் கதைகளான "விடுதலையே உன் விலையென்ன ?" ; "விண்ணில் ஒரு வேங்கை" ; "ஒற்றை நொடி..ஒன்பது தோட்டா..!" என சகலமுமே ஆக்ஷன் அதகளங்கள் ! இங்கே மண்டையைப் பிய்த்துக் கொள்ள அவசியங்கள் இராது நிச்சயமாய் ! 

So இந்தப் பின்னணியில் இம்மாதம் ஒரு கிராபிக் நாவல் எனும் போது - உங்களின் அபிப்ராயங்கள் எப்போதையும் விட அதிக முக்கியத்துவம் பெற்றவைகளாகத் தோன்றுகின்றன ! 'ஐயோ..கிராபிக் நாவலா ?!' என்ற mindset -ல் இல்லாமல் சகஜமாய்ப் படித்துப் பார்த்து விட்டு - உங்கள் மனதில் தோன்றும் முதல் சிந்தனையைப் பகிர்ந்திடுங்களேன் - ப்ளீஸ்! 'விமர்சனம் செய்தாக வேண்டும் !' என்ற பார்வைகளை இரண்டாம் பட்சங்களாக்கிக் கொண்டு - உங்களின் initial reactions என்னவோ - அவற்றை பதிவிடுங்களேன் ! 

அமெரிக்காப் பயணம் என்றான பின்னே கொஞ்சமாவது அந்தப் புராணம் பாடாவிட்டால் தலை தான் வெடித்து விடுமே ?! இம்முறை எனக்குப் பணி இருந்தது கான்சாஸ் நகரில் ! டெக்சின் கதைகளிலும் ; டைகரின் சாகசங்களிலும் இது வரை வெறும் பெயர்களாய் இருந்து வந்துள்ள கான்சாஸ் ; டொபெகா ; மிசௌரி போன்றவற்றை நேரில் பார்க்கும் போது - 150 ஆண்டுகளுக்கு முன்பாய் நம் ஆதர்ஷ கௌபாய்கள் உலவிய பூமியல்லவா இது ? என்ற சிந்தை மட்டுமே நிலைத்து நின்றது ! எப்போதும் போலவே இம்முறையும் அமெரிக்க காமிக்ஸ் புத்தகக் கடைகளின் கதவுகளைத்  தட்டவும் தவறவில்லை ! குவிந்து கிடக்கும் அந்தக் காமிக்ஸ் புதையல்களுக்கு மத்தியில் நம் நாட்டைச் சார்ந்த Campfire  நிறுவனத்தின் படைப்புகள் ஒன்றிரண்டும் தலைகாட்டியது சந்தோஷமாய் இருந்தது ; நம்மவர்களும் உலக அரங்கினில் ஆஜராகும் நாள் புலர்கிறதே என்று ! மற்றபடிக்கு சூப்பர் ஹீரோக்களின் ராஜ்ஜியம் தங்கு தடையின்றித் தொடர்கிறது அமெரிக்காவில் ! அது மட்டுமன்றி APOCALYPSE எனப்படும் தீமில் ஏகப்பட்ட கதைகள் ! ஏனோ தெரியவில்லை - நிறைய காமிக்ஸ் படைப்பாளிகளுக்கு இதனில் பெரியதொரு ஆர்வம் எழுகின்றது ! ஒரு தூரத்து எதிர்காலத்தில் பூமியே நிர்மூலமாகிப் போய் மிகச் சொற்பமான ஜனத்தொகையே எஞ்சி நிற்கும் ஒரு களத்தைப் பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்படும் கதைகள் இவை ! அபரிமித வெற்றி பெற்றுள்ளன இவ்வகைத் தொடர்களில் சில ! இவற்றை நம்மால் ரசிக்க முடியும் என்று நினைக்கிறீர்களா guys ? 'ஆமாம்' எனில் - நாம் முயற்சிக்கக் கூடிய தொடர்கள் ஏராளம் உள்ளன ! 

டிசம்பரின் தொடரும் 2 வெளியீடுகளுக்கான பணிகளில் 'டைலன் டாக்' ரெடி ! " நள்ளிரவு நங்கை " இதழின் அட்டைப்படமும், உட்பக்க டீசரும் இதோ :   


வண்ணத்தில் டைலன் எப்போதும் போல் இம்முறையும் கலக்குகிறார் ! And எப்போதும் போலவே இதுவும் ஒரு வித்தியாசமான கதை பாணி ! எந்தவொரு வட்டத்துக்குள்ளும் டைலனின் கதைகளை அடைக்கவே முடியாதென்பதற்கு இதுவும் ஒரு testimony ! இந்தக் கதையை விட, இதன் தயாரிப்புப் பின்னணியின் சுவாரஸ்யம் அதிகம் என்னைப் பொறுத்த வரை !  Yes - 'உலகத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக' பாணியில் இக்கதையின் தமிழாக்கம் எனது தந்தையினுடையது ! 2005-ல் இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டது முதலாகவே முழு ஒய்வு மட்டுமே அவரது அட்டவணையாக இருக்க வேண்டுமென்பதில்  நாங்கள் உறுதியாக இருந்தோம் என்பதால் - பொழுது போகா சில தருணங்களில் மாத்திரமே அவர் அலுவலகம் வருவது வழக்கம். ஆனால் ஒவ்வொரு மாதத்து நமது இதழ்களையும் ஒரு வரி விடாமல் படிக்கத் தவறுவதில்லை ! சமீபமாய் ஒரு நாள் - 'நான் ஏதாவது ஒரு கதையை தமிழில் எழுதிப் பார்க்கவா ?' என்று கேட்ட போது என்னால் மறுக்க முடியவில்லை ! 1972-ல் நமது முத்து காமிக்ஸ் துவக்கம் கண்ட நாள் முதலாய் சகலத்திலும் ஆர்வம் காட்டி வந்த என் தந்தை எப்போதாவது ஒன்றிரண்டு "கபிஷ்" கதைகளைத் தாண்டி வேறு மொழிபெயர்ப்புப் பொறுப்புகளை கையில் எடுத்துக் கொண்டதே கிடையாது  ! சமீப வருஷங்களில் நான் வண்டி வண்டியாய் எழுதுவதைப் பார்த்தோ என்னவோ ; நமது இதழ்களின் எண்ணிக்கைகள் கூடிக் கொண்டே செல்வதைப் பார்த்த உற்சாகமோ என்னவோ - இம்முறை பேனாவைக் கையில் எடுக்கும் ஆர்வம் அவருக்குள் உதயமாகியது ! So ஒரு சுபயோக சுபதினத்தில் "நள்ளிரவு நங்கையை" எழுதத் தொடங்கினார் ! டைலனுக்கான பாணி எவ்விதமிருக்க வேண்டுமென்று மேலோட்டமாய் டியூஷன் எடுத்தது ஒருபக்கமிருக்க, டைப்செட்டிங் பணி செய்பவர்களுக்குப் புரியும் விதமாய் கட்டங்களை நம்பரிடுவது ; பலூன்களுக்கு நம்பரிடுவது எப்படி ? என்பது தான் முக்கிய பாடமாய் அமைந்தது ! அதன் பின்னே ஒரு நாலைந்து நாட்களில் rough copy ஒன்றை எழுதித் தந்திட அதனைப் படித்து விட்டு நான் உதட்டைத் தான் பிதுக்கினேன் ! காலமெல்லாம் காமிக்ஸ் ரசிப்பதென்பது வேறு - அதன் பின்னணியில் பணியாற்றுவது வேறு என்பதை இத்தனை அனுபவம் கொண்ட என் தந்தைக்கு புரியச் செய்வது ஒரு embarrassing அனுபவமாய் எனக்கு இருப்பினும், துளியும் ஈகோ பார்த்திடாமல் நான் சொன்ன விஷயங்களைக் கேட்டுக் கொண்டு மீண்டுமொருமுறை புதிதாய் தமிழாக்கம் செய்து கொடுத்தார் ! இதிலும் நிறையவே மாற்றங்கள் அவசியப்பட்டதெனினும், முதல் தடவைக்கு இந்த இரண்டாம் முயற்சி தேவலாம் என்று பட்டது ! முழுமையாய் அதைச் செப்பனிட திரும்பவும் அவரை சிரமப்படுத்த வேண்டாமே என்று - அந்த இரண்டாம் பிரதியின் மீதே திருத்தங்களைச் செய்து டைப்செட்டிங்குக்கு அனுப்பி வைத்தேன்  ! So 42 ஆண்டுகளாய் காமிக்ஸ் உலகில் நிலைகொண்டிருக்கும் ஒரு 74 வயது இளைஞரின் கன்னி முயற்சியை இம்முறை காணவுள்ளீர்கள் !! Fingers crossed - for dad !! 

அப்புறம் நமது சமீபத்திய updates
  • 2015-ன் நமது மறுபதிப்புகளின் பொருட்டு 2 அட்டைப் படங்களை - அயல்நாட்டு ஓவியர் தயார் செய்து வருகிறார் ! அவர் அனுப்பியுள்ள பென்சில் ஸ்கெட்ச் பட்டையைக் கிளப்பும் வண்ணம் உள்ளது ! வர்ணப் பூச்சும் அதே பாணியில் அமைந்து விட்டால் அட்டகாசம் தான் ! 
  • மாடஸ்டியின் ஜனவரி மாத ராப்பரும் சூப்பர் டூப்பராய் அமைந்துள்ளது - சமீப நாட்களில் நம் ஓவியரின் பெஸ்ட் என்று சொல்லும் விதமாய் ! You will fall in love with the princess !
  • மறுபதிப்புகளுக்கு மறு டைப்செட்டிங் செய்துள்ளோம் ; பழைய தமிழ் எழுத்துகளை மாற்றிடும் பொருட்டு ! பிழைத்திருத்தங்கள் செய்ய ஆர்வம் உள்ள நண்பர்கள் கரம் தூக்கிடலாமே - இம்முயற்சியில் ஒரு குட்டியான பங்களிப்பை வழங்கிடும் விதமாய் ?
  • 2014-ன் final இதழாய் "நித்தமும் குற்றம்" தயாராகி வருகிறது - கூர்மண்டையர் டயபாலிக்கின் சாகசத்தோடு ! அடுத்த வாரம் அவரது அட்டைப்படம் இங்கே ஆஜராகும் !
  • சந்தாக்களின் புதுபித்தல்கள் நடந்தேறி வருகின்றன ; இது வரையில் சுமார் 30% நண்பர்கள் புதுப்பித்து விட்டனர் ! இன்னமும் சற்றே கூடுதல் வேகம் காட்டினால் நலமாயிருக்கும் நண்பர்களே !  
அப்புறம் - கடந்த வாரப் பதிவின் பின்னூட்டங்களின் இடையே நண்பர் ரம்மி - நமது இந்த "ஞாயிறுதோறும் பதிவு" பாணி போர் அடிப்பதாய்க் குறிப்பிட்டிருந்தார்   ! Expect the unexpected என்பதெல்லாம் நமது முந்தய trademark ஆக இருந்த நாட்கள் மலையேறி - இன்று ஓராண்டுக்கு அட்வான்சாய் திட்டமிடும் சூழலில் உள்ளோம் ! LMS -க்கு முன்பாய் துவங்கிய இந்த "ஞாயிறு பதிவுகள்" பாணி  எனக்கு நிறைய விதங்களில் சுலபமாய் உள்ளது ! வாரத்தின் இடைப்பட்டதொரு நாளை தேர்வு செய்தால் இதற்கென அரை நாளை செலவிட வேண்டி வருகின்றது ; இடையே வேறு வேலைகள் எழும் பட்சத்தில் எழுத்தில் ஒரு flow அமைந்திடச் சிரமமாகிப் போகின்றது ! நேற்று பின்னிரவில் ஊர் திரும்பிய நான் ஞாயிறு காலைத் தூக்கத்தை மட்டும் கொஞ்சமாய் ஒத்திப் போட்டுவிடும் போது  சிரமங்களின்றி பதிவிட முடிகின்றது ; தவிரவும் ஞாயிறெனும் போது அன்றைய ஒரு நாளாவது நண்பர்களின் பின்னூட்டங்களோடு நானும் இணைந்திட சாத்தியமாகிறது ! Much as I would love to login more often - கிட்டத்தட்ட வாரமொரு இதழ் என்ற ஓராண்டு அட்டணையைக் கையில் வைத்துக் கொண்டு சிறிதும் அசட்டையாய் இருக்க இடம் இருப்பதில்லை ! So உங்கள் கருத்துக்கள் சகலத்தையும் படித்திடுவேன் ; நேரம்கிடைக்கும் போதெல்லாம் உள்ளே புகுந்திடுவேன் !  Hope for your understanding on this folks ! மீண்டும் சந்திப்போம் ! Have a glorious sunday and a great week ahead !!