நண்பர்களே,
வணக்கம். நேற்றைய மாலை அக்டோபரின் சந்தாப் பிரதிகளை கூரியர்களில் அனுப்புவதே ஒரு பெரும் சாகசமாய்ப் போய் விட்டது ! சனிக்கிழமை மதியம் வரை கார்சனின் கடந்த காலம் அச்சுப் பணிகள் நடந்து கொண்டிருக்க, பைண்டிங்கிலோ "வீதியெங்கும் உதிரம் " ஓடிக் கொண்டிருந்தது ! 'திடு திடுப்பெனக் ' கடையடைப்பு ; சங்கடமான சூழல் என்றானவுடன் கதவுகளைப் பூட்ட வேண்டிய நெருக்கடி ! 'சரி..இம்முறை கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியப் போவதில்லை ...அசடு வழிய என்ன வழி ? என்று யோசிக்கத் தொடங்கினேன் ! 'இரவில் பணி செய்ய வாய்ப்புக் கிட்டுகிறதா - பார்ப்போம் என நம்மவர்களிடம் மெதுவாய்க் கேட்டுப் பார்த்தேன் ; துளியும் தயக்கமின்றி அச்சகப் பிரிவினர் இரவில் ஆஜராகி விட்டனர் ! ராக்கூத்து முழு வீச்சில் அரங்கேற ஞாயிறு காலையில் பக்கங்கள் சகலத்தையும் தயார் செய்தும் விட்டோம் ! அதே போல நமது பைண்டிங் கான்ட்ராக்டரிடமும் ஞாயிறு வேலை செய்து தர முடியுமா என ஒரு கொக்கியைப் போட்டு வைத்திருந்தேன் ; 'சரி' என்று அவர் தலையசைத்திருந்த போதிலும் எனக்கு நம்பிக்கை குறைவாகவே இருந்தது ! ஆனால் ஞாயிறு காலையில் 'டாண்' என அவர்களும் வந்து மடிப்பு இயந்திரத்தில் வேக வேகமாய் கா.க.கா. பக்கங்களை மடிக்கத் துவங்க ; திங்கள் பகல் பொழுதில் சுடச் சுட 3 இதழ்களுமே நம் ஆபீசில் இருந்தன !! புத்தகங்கள் வந்து மட்டும் கதைக்கு ஆகாதே - அவற்றை டெஸ்பாட்ச் செய்யவும் வேண்டுமல்லவா ? மதிய உணவிற்கு 10 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக் கொண்டு அத்தனை பேரும் பேகிங் பணிகளில் பம்பரமாய் சுழல - பிற்பகலில் கூரியர் அலுவலகங்களை முற்றுகை இட முடிந்தது ! இரவு வீட்டுக்குச் செல்லும் போது தலைக்குள் ஒற்றை சிந்தனை மட்டுமே - "எப்படி இருந்த நாங்கள் - இப்படியாகி விட்டோமே ?!!" இலக்குகளை நிர்ணயம் செய்வது ; அந்தத் தேதிக்குள் பணிகளை முடிப்பது ; என்பதெல்லாம் சமீப காலங்கள் வரை நமக்கு ரொம்பவே அந்நியமானவை ! ஆனால் இங்கு நிலவும் அந்த உற்சாக எதிர்பார்ப்பும் ; ஒரு மாதத்து இதழ்கள் வெளியாகி, மறு மாதத்துப் பிரதிகள் வரும் வரை நிலவும் அந்த வெற்றிடத்தை நிரப்ப வேண்டிய அவசியமும் ஒன்றிணைந்து எங்களது குட்டி டீமுக்கு சிறகுகளை நல்குவது புரிகிறது ! Thanks all - for driving us on..!
இம்மாத இதழ்களின் பின்னணியில் எங்கள் டீமின் சாகசங்கள் இன்னமும் கூட உள்ளன ! 'அதைக் கிழித்தேன் ; இதைப் பாய்ந்தேன்!' என நான் விடும் வழக்கமான உதார்களின் மத்தியினில் கொஞ்சமாய் நேரம் எடுத்துக் கொண்டு எங்கள் அணியின் பணிகளைப் பற்றி சிலாகித்துக் கொள்கிறேனே ?!! நமக்குப் பிரதானமாய் டைப்செட்டிங் செய்து கொண்டிருந்த பெண்மணிக்குத் திருமணம் என சமீபத்தில் நான் இங்கு எழுதியது நினைவிருக்கலாம் ! பெண்ணுக்குத் திருமணமாகி ஊர் விட்டுச் செல்கிறாளே ! என பெற்றோர் கலங்கினார்களோ - இல்லையோ ; நான் ரொம்பவே கவலைப்பட்டேன் ! துவக்கத்தில் கொஞ்சமாய்த் தடுமாறினாலும், பின்னாட்களில் நமது தேவைகளை ; அவசரங்களை ; அந்தர்பல்டிகளைத் தெளிவாய்ப் புரிந்து கொண்டு அழகாய்ப் பணி செய்த பொறுமைசாலி ! கடந்த 2.5 ஆண்டுகளில் நமது பணிகளின் 70% செய்த புண்ணியம் அவரையே சாருமெனும் போது - திடுதிடுப்பென அவருக்கொரு replacement தேடுவதில் நிறையவே மொக்கை போட்டோம் ! ஆனால் இன்றைய கணினியுலகில் திறமைசாலிகளுக்கா பஞ்சம் ? ரமேஷ் என்றதொரு டிசைனர் நம்மிடம் தற்போது பணியாற்றி வருகிறார் - மிகவும் திறன்படவே ! இம்மாதத்து கா.க.கா. ராப்பர் ; காலனின் கைக்கூலி உட்பக்க டைப்செட்டிங் என அனைத்தும் அவரது கைவண்ணங்களே ! இவர் தவிர நமது அலுவலகத்தில் இன்னும் இரு புதுமுகங்கள் டெஸ்பாட்ச் மற்றும் மார்க்கெட்டிங் பணிகளுக்காக இணைந்துள்ளனர் ! சுகவீனத்திலிருந்து சிறுகச் சிறுகத் தேறி வரும் நமது மூத்த பணியாளர் இராதாகிருஷ்ணன் இனி முழு நேரமும் பணியாற்றும் பொறுப்பில் இருக்கப் போவதில்லை ; வாரம் இரண்டல்லது ; மூன்று நாட்கள் மட்டுமே வந்து செல்வார் ! அவரது இடத்தை இட்டு நிரப்பும் பணியினை அற்புதமாய்ச் செய்து வருவது ஸ்டெல்லா தான் ! தினமும் ஒலிக்கும் நம் தொலைபேசிகளை சமாளிப்பது முதல், சந்தாப் பிரதிகளின் அனுப்புதல் ; முகவர்களின் ஆர்டர்களைக் கவனிப்பது என 'ஆல்-இன்-ஆல்' இவரது பொறுப்பே ! Pre Production-ல் சகலமும் மைதீன் எனில் ; Post Production-ல் அத்தனை பொறுப்புகளும் ஸ்டெல்லாவுக்கே ! இது போன்றதொரு dedicated ஒத்தாசை இருக்காவிடின் நான் சுவற்றைப் பிறாண்டத் தான் அவசியமாகியிருக்கும் ! Thanks my team !!
கா.க.கா.வின் அட்டைப்படம் இதோ - மாலையப்பன் + நமது டிசைனர் ரமேஷின் கூட்டணிக் கைவண்ணத்தில் ! இந்த டிசைன் 2015-ன் பிறிதொரு டெக்ஸ் சாகசத்திற்காக வரையப்பட்டதொன்று ; கா.க.கா.விற்கென வரையப்பட்ட ஓவியம் எனக்கு கொஞ்சம் நெருடலாகவே இருந்ததால் - கடைசி நிமிட switch இது ! 'மண்டை ஓட்டிற்கு இங்கென்ன வேலை ?' என்ற யோசனைக்கு நேரமிருக்கவில்லை என்பதால் டெக்ஸ் + கார்சனோடு திருவாளர் மண்டையாரும் அட்டையில் ஆஜர் ! கா.க.கா. இதழும் ஒரு விதத்தினில் one-off ! இந்தப் பக்க எண்ணிக்கைகளுக்கும் - விலைக்கும் துளியும் சம்பந்தமோ - ஒப்பீடோ கிடையாது ! சந்தாத் தொகைக்குள் இதனை இணைத்ததாக வேண்டிய கட்டாயம் என்பதால் கால்குலேட்டரைத் தூரத் தூக்கிப் போட்டு விட்டோம் ! But - இதே சைஸ் ; பக்கங்களோடு இன்னுமொரு இதழ் வெளியாகும் வேளையில் விலை சத்தியமாய் நிரம்ப மாறுபடும் ! இப்போதைக்கு happy reading guys !!
COMING in 2015..... |
அப்புறம் அந்த CAPTIONS எழுதும் போட்டி தொடர்கிறது ; புது பின்னூட்டங்களை இனி இங்கே போட்டு வைத்தால் எனக்குத் தேடித் பிடிக்கும் பணி கொஞ்சம் மிச்சமாகும் ! Carry on the fun !!
விடுமுறைகளுக்கு முன்பாக இம்மாத இதழ்கள் மூன்றையும் உங்களிடம் கூரியர் அன்பர்கள் ஒப்படைத்து விடுவார்களென்ற நம்பிக்கையோடு இப்போதைக்கு விடை பெறுகிறேன் ! காலனின் கைக்கூலி இதழைப் பற்றிய உங்கள் அபிப்ராயங்களை அறிந்திட எக்ஸ்ட்ரா ஆவலாய்க் காத்திருப்போம் ! (நம் அலுவலகம் வியாழன் & வெள்ளியில் விடுமுறை என்பதை நினைவூட்டுகிறேன் !) தீபாவளி மலரின் பணிகள் மேஜையில் நடுநாயகமாய்க் காத்திருப்பதால் அதற்குள் மூழ்கிடும் நேரமிது ! Adios amigos !
P.S : Facebook மற்றும் சமூக வலைத்தளங்களே புதிய தலைமுறையை எட்டிப் பிடிக்கும் சுலப வழி என்றாகிப் போன நிலையில் - உங்களது facebook நண்பர்களுக்கு நமது வலைப்பக்கங்களை share செய்திட்டால் காமிக்ஸ் பற்றிய விழிப்புணர்வு கொஞ்சமேனும் கூடிட வாய்ப்புண்டே ? Please do share our posts folks ! (ஜூனியர் எடிட்டர் முன்வைக்கச் சொன்ன கோரிக்கை இது ! :-) )
P.S : Facebook மற்றும் சமூக வலைத்தளங்களே புதிய தலைமுறையை எட்டிப் பிடிக்கும் சுலப வழி என்றாகிப் போன நிலையில் - உங்களது facebook நண்பர்களுக்கு நமது வலைப்பக்கங்களை share செய்திட்டால் காமிக்ஸ் பற்றிய விழிப்புணர்வு கொஞ்சமேனும் கூடிட வாய்ப்புண்டே ? Please do share our posts folks ! (ஜூனியர் எடிட்டர் முன்வைக்கச் சொன்ன கோரிக்கை இது ! :-) )