நண்பர்களே,
வணக்கம். ஜெட் விமானம் ஏறி கண்டங்களைக் கடக்கும் கோமான்களும், குதிரைகளில் ஏறி அரிசோனா மாகாணத்தைக் குறுக்கும் நெடுக்குமாய் அளக்கும் கோமாளிகளும் ஒரே வாரத்தில் நம் நினைவுப் பெட்டகத்தினுள் புதைந்து போக - what next ? என்ற கேள்வியோடு காத்திருக்கிறோம் ! "காலம் தான் எத்தனை வேகமாய்க் குதி போட்டுச் செல்கிறது !!' என்ற தேய்ந்து போன டயலாக்கை எடுத்து விடாமல் - ஜூலையில் நமக்குக் காத்திருக்கும் காமிக்ஸ் விருந்துகள் பக்கமாய் பார்வைகளை ஓடச் செய்வோமே என்று நினைத்தேன் ! (ஜூன் மாதமே இன்னும் புலராத நிலையில் - ஜூலையைப் பற்றிய preview என்பது எனக்கே கொஞ்சம் ஓவராகத் தான் தெரிகிறது - ஆனால் கால்களில் நாமே சக்கரங்களைக் கட்டிக் கொண்டான பின்னே மெதுநடை போடுவது சுலபம் அல்ல தானே ?!) ஜூலையில் நமக்குக் காத்துள்ள இதழ்கள் நான்கு ! அதன் முக்கால் பங்கை "குதிரை பையன்கள்" ஆக்ரமித்துக் கொள்கின்றனர் - வெவ்வேறு பாணிகளில் ! நமக்கு நன்றாகவே பரிச்சயமான ஆக்ஷன் பாணியைக் கையில் எடுத்துக் கொள்பவர் டெக்ஸ் வில்லர் - "காவல் கழுகு" வாயிலாக ! புது அறிமுகமான மேஜிக் விண்ட் தலைகாட்டும் "ஆத்மாக்கள் அடங்குவதில்லை" கதையும் ஆக்ஷன் தான் எனினும், இது சற்றே மாறுபட்ட ரகம் ! கொஞ்சம் அமானுஷ்யம் ; கொஞ்சம் மாந்த்ரீகம் ; கொஞ்சம் செவ்விந்திய நம்பிக்கைகள் என்ற கலவையில் வரும் ஒரு வித்தியாசப் படைப்பு இது ! மூன்றாம் கௌபாய் - நமது ஒல்லியார் லக்கி - "பூம்-பூம் படலம்" மறுபதிப்பு மூலமாக ! ஜூலையின் இதழ் # 4 தான் இந்தக் கூட்டணியின் highlight ஆக இருக்கப் போகிறதென ஒரு பட்சி என் காதில் சொல்வதை உணர முடிகின்றது ! So நமது preview படலங்களை சன்ஷைன் கிராபிக் நாவலின் இதழ் # 3 - விரியனின் விரோதியிலிருந்து தொடங்குவது தான் சுவாரஸ்யமாய் இருக்குமென்று தோன்றுவதால் here goes :
நிஜத்தைச் சொல்வதானால் - இந்த XIII தொடரின் spin-off கதைகளின் மீது எனக்கொரு பெரிய அபிப்ராயம் இருந்ததில்லை ! இரத்தப் படலம் தொடரையே ஜவ்வு மிட்டாயாய் இழுக்கிறார்களே என்ற ஆதங்கம் எனக்கு பாகம் 14 முதற்கொண்டே தோன்றிய நிலையில் - அதன் உப கதாப்பாத்திரங்களைக் கொண்டு தனிப்பட்டதொரு கதை வரிசையா ? - ஆளை விடுங்க சாமி ! என்பது தான் எனது initial reaction ! ஆனால் இரத்தப் படலம் தொடர் மறுபடியும் துவங்கியான பின்னே, புதியதொரு ஓவியர் - கதாசிரியர் கூட்டணியில் கதைக்களம் தம் கட்டிப் புறப்பட்டிருக்கும் சூழலில் - கடந்தாண்டு நம் படைப்பாளிகளின் பாரிஸ் அலுவலகத்தில் நான் அமர்ந்திருந்த போது தான் "XIII மர்மம்" தொடரின் - "பில்லி ஸ்டாக்டன் " என்ற ஆல்பம் தயாராகி அதன் முதல் பிரதிகளை அவர்கள் பார்வையிடுவதைக் காண முடிந்தது ! ஏதேனும் பேச வேண்டுமே என்ற ரீதியில் "இந்த spin -off கதைகளுக்கான வரவேற்பு எவ்விதம் உள்ளது ?" என்று கேட்டு வைத்தேன் ! லேசான புன்முறுவலோடு - "XIII -கென உள்ள ரசிகர் படை இதனை பெரியதொரு வெற்றி கொள்ளச் செய்துள்ளது !" என்று சொன்னார்கள். அதிலும், சமீபமாய் (2012-ல் ) வெளியாகி இருந்த ஸ்டீவ் ரோலாண்ட் (காலனின் கைக்கூலி) ஆல்பம் பெரிய 'ஹிட்' என்று கேள்விப்பட்ட போது என் மண்டைக்குள்ளே சக்கரங்கள் சுழலத் தொடங்கின் ! இத்தொடரின் பிரதான ஆசாமிகளான ஸ்டீவ் ரோலாண்ட் + மங்கூஸ் தலை காட்டும் அல்பம்களின் மாதிரிகளை வாங்கிக் கொண்டு புறப்பட்டேன் ! ஊருக்குத் திரும்பியதும், இரண்டையுமே மொழிபெயர்க்கச் செய்து மேலோட்டமாய்ப் படிக்கத் தொடங்கிய போது தான் இவற்றின் வலிமை கொஞ்சம் கொஞ்சமாய் எனக்குள் sink in ஆகத் தொடங்கியது ! ஊருக்குத் திரும்பிய ஜோரில் "காலனின் கைக்கூலி" இதழ் முதலில் வெளி வருவதாய் விளம்பரமும் செய்திருந்தோம் ; but கதைகள் இரண்டையும் படிக்க முடிந்த போது தான் மங்கூசின் படலத்திலிருந்து துவக்கம் காண்பது தான் சரியாக இருக்குமென்பது புரிந்தது ! So விரியனின் விரோதி நம் திட்டமிடல்களுக்குள் அடியெடுத்து வைத்தது இவ்விதமாய்த் தான் ! இதோ இதழின் அட்டைப்படம் - ஒரிஜினலின் சிற்சிறு முன்னேற்றங்களோடு !
நடந்து முடிந்த சம்பவங்களைப் பின்னோக்கிப் பார்க்கும் முயற்சிகள் தான் கதை பாணியே என்பதால் முக்காலே மூன்று வீசம் flashback mode-ல் தான் உள்ளது ! மங்கூசின் பால்ய நாட்கள் ; அவனொரு கொலைகாரனாய் உருப்பெற்ற விதம் ; உலக யுத்தத்தின் முடிவைத் தொடர்ந்து 1950 -களில் உலகெங்கும் நிலவிய ஒரு வித இறுக்கம் ; அமெரிக்க ஜனாதிபதியைக் கொலை செய்ய சதி தீட்டப்பட்ட பின்னணி ; அதில் மங்கூசின் பங்கு என்று வெகு கோர்வையாய்க் கதையின் framework அமைக்கப்பட்டுள்ளது ! இவை அனைத்துமே மங்கூசின் பார்வையில் சொல்லப்பட்டுள்ளதால் சுவாரஸ்யம் இன்னமும் தூக்கலாய் இருப்பதை சீக்கிரமே நீங்களும் உணரப் போகிறீர்கள் ! சித்திரங்களும் ஒரு மெல்லிய வசீகரத்தைச் சுமந்து கதை முழுவதிலும் பயணமாகின்றன ! இரவின் நிசப்தத்தில் நியூயார்க் ரயில் நிலையத்தில் அரங்கேறும் கொலை ; பனி படர்ந்த பெர்லினின் வீதிகளில் மிளிரும் ஒரு மௌன பதைபதைப்பு என்று சிலாகிக்க ஏக விஷயங்களை ஓவியர் படைத்துள்ளார் ! வில்லியம் வான்சின் நுணுக்கங்களை நாம் எதிர்பார்க்காமல் திறந்த மனதோடு இதனுள் நுழைந்தால் நிச்சயம் எவ்வித நெருடல்களும் தோன்ற வாய்ப்பிராது ! பாருங்களேன் ஒற்றை பக்கத்தின் சின்னதொரு teaser !
இந்த இதழைத் தொடர்ந்து ஸ்டீவ் ரோலாண்டின் பார்வையிலான "காலனின் கைக்கூலி" வெளியாகும் போது - இரத்தப் படலத்தின் பின்னணி பற்றிப் புதியதொரு பரிமாணம் நமக்குக் கிடைக்கப் போவது உறுதி ! So இடியப்பம் தொடர்கிறது - புதியதொரு மணம் கமள !! Watch out guys !!
கடந்த (மினி) பதிவினில் நமக்கு காமிக்ஸ் மீதான மோகம் சற்றே குன்றி விட்டதோ ? என்பதானதொரு சிறு கேள்வியினை நான் எழுப்பி இருந்ததற்கு இங்கும், மின்னஞ்சல்களிலும் விளக்கமாய் நிறைய பதிவிட்ட நண்பர்களுக்கு நன்றிகள். ஆனால் எனது இந்த வினவல் - இங்கு நம் தளத்தில் சமீபமாய்க் குன்றி வரும் பின்னூட்டங்களின் எண்ணிக்கையை மாத்திரமே மனதில் கொண்டு பின்னப்பட்ட ஒரு திடீர் கேள்வியல்ல ! மாமூலான பதிவுகளில் ; தொடரும் அதன் அரட்டைகளில் பங்கேற்கும் நண்பர்களது எண்ணிக்கை குறைந்து இருப்பின் அது எனக்குப் பெரியதொரு சங்கதியாகக் தெரிந்திருக்காது ; ஆனால் சமீப மாதங்களாகவே இதழ்கள் வெளியான பின்பு அதன் பொருட்டு அரங்கேறும் விமர்சனங்கள் ; விவாதங்கள் சிறிது சிறிதாய் ஈனஸ்வரத்தினுள் பயணிப்பதாய் தோன்றி வந்தது தான் சிக்கலே !அதிலும் நாம் ஆவலாய் எதிர்பார்க்கும் இன்றைய டாப் ஸ்டார் லார்கோவின் இதழ் வெளியான பின்பும் ஒருவித தேக்க நிலை நிலவிய போது அந்த வெறுமை highlight ஆகித் தோற்றமளித்தது ! 'இன்னும் இந்த இதழைப் படிக்க அவகாசம் கிடைக்கவில்லை ! ; புரட்டி பார்க்க மட்டுமே நேரம் கிட்டி இருந்தது " என்ற ரீதியில் நண்பர்கள் அவ்வப்போது frank ஆக நேரில் சந்திக்கும் போதும், பின்னூட்டங்களிலும் சொல்லிடும் போது மாறி வரும் நாட்களின் தன்மையை பற்றி சிந்திக்காமல் இருக்க முடியவில்லை ! '90-களின் நடுவாக்கில் நமது லயன் & முத்துவில் வெளியான கதைகளின் பெரும்பான்மையை இன்று புரட்டிப் பார்த்தால் அவற்றுள் நிறைய 'செம சுமார்' ரகக் கதைகள் இருப்பது அப்பட்டமாய்த் தெரிகிறது. ஆனால் தட்டுத் தடுமாறி நாம் இதழ்களை வெளியிட்டு வந்த அன்றைய நாட்களில் - அந்த "சுமார்" சரக்கு கூட செம ஆவலோடு எதிர்பார்க்கப்பட்டவைகளாய் இருந்து வந்ததும், இன்றும் அவற்றைச் சேகரிக்க நண்பர்கள் முனைவதையும் நினைவு கூர்ந்த போது தான் "வாத்து பிரியாணி" சிந்தனை எனக்குள் முளைக்கத் தொடங்கியது ! ஆலையில்லா ஊரில் இலுப்பைப்பூக்களும் 'நச்' என்று இனிக்க ; இன்று சற்றே விசாலமான ஸ்வீட் ஸ்டாலில் நிற்கும் ஒரு தருணம் கிட்டியுள்ள போது நமக்கொரு மெல்லிய திகட்டல் நேர்ந்திருக்குமோ என்ற ரீதியிலான சிறு சந்தேகம் தான் எனது கேள்வியின் பின்னணி ! காமிக்ஸ் வாசிப்புக்கென நாம் ஒதுக்கிடும் அவகாசங்கள் இன்றைய பணிச் சூழல்களோடும் ; குடும்பத்துக்குச் செலவிட அவசியமாகும் நேரங்களோடும் போட்டியிட வேண்டியுள்ள யதார்த்தத்தை நிச்சயமாய் நான் மறந்திருக்கவில்லை ! But அதனையும் மீறி - இலை நிறையப் பதார்த்தங்களைப் பார்க்கும் போது நேரும் துவக்க உற்சாகமும், போகப் போக நேரும் திகட்டலும் நம் கதையினில் நிஜமாகிடக் கூடாதே ! என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடு மட்டுமே எனது அந்தக் கேள்வி ! ஆனால் ஒருமித்த குரலில் நண்பர்கள் அனைவரும் அதனை மறுத்திருப்பது சந்தோஷமளிக்கிறது ! 'சலிப்புக்கு காமிக்ஸ் அகராதியில் இடமே கிடையாது' என்று அவரவர் பாணியில் பதிவிட்டிருப்பது தொடரும் நம் பயணத்துக்கு ஒரு உற்சாக பூஸ்ட் !
Moving on, நமது லயனின் 30-வது ஆண்டுமலர் வேளையில் வழக்கம் போலவே பின்னே திரும்பிப் பார்க்கும் "டாப் இதழ்கள் " விளையாட்டில்லாமல் போகலாமா ? என்ற எண்ணம் எனக்குள் தோன்றியது. சாவகாசமாய் நமது 230 இதழ்களின் பெயர் பட்டியலையும் எடுத்து வாசித்த போது அவற்றிலிருந்து எனது TOP 6 இதழ்களைத் தேர்வு செய்ய முனைந்தேன் ! நிறைய குழப்பமிருக்கும் ; எதைத் தேர்வு செய்வது ? என்ற திணறல் தலையிடும் என்று எதிர்பார்த்து அமர்ந்த எனக்கு ஒரு சந்தோஷ ஆச்சர்யம் - வெகு சுலபமாய் எனது favorite 6 இதழ்களைத் தேர்வு செய்ய முடிந்தது ! 'இது தான் முதல் இடம் ; இரண்டாம் இடம் !' என்றெல்லாம் வரிசைக்கிரமமாய் அவற்றை arrange செய்ய முனையாமல் அந்த 6 பெயர்களை வெறுமனே ஒரு காகிதத்தில் எழுதி வைத்துக் கொண்டேன் ! LMS வெளிவருவதற்கு முன்பாக இடைப்பட்ட நாட்களின் ஒவ்வொரு பதிவிலும் ஒவ்வொரு இதழைப் பற்றி எழுதலாமென்று நினைத்தேன் ! ஏற்கனவே அவ்வப்போது எனது choices பற்றி நான் எழுதியுள்ள போதிலும், ரசனை சார்ந்த விஷயங்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறுவது இயல்பே என்ற சால்ஜாப்பு என் கைவசம் இருப்பதால் - இவை எனது current choices என்று எடுத்துக் கொள்ளுங்களேன் ?! LMS இதழில் கூட இந்த TOP 6 இதழ்களுக்கென சில பக்கங்கள் ஒதுக்கவிருக்கிறேன் என்பதால் - உங்களது தேர்வுகள் ; உங்களுக்கு அவை ரசிக்கக் காரணம் என்ன என்பது பற்றி பகிர்ந்திடலாமே - ப்ளீஸ் ? உங்களது all time favorite Top 6 இதழ்களைப் பட்டியலிடலாமே ? எனது பட்டியலின் முதல் இடத்தில் (தரவரிசையில் அல்ல!!) இருக்கும் இதழ் - இதோ இங்கே இளித்து நிற்கும் ஒரு ஆசாமியின் சாகசமே ! அது பற்றி - அடுத்த பதிவில் ! துவக்கம் மங்கூஸ் எனும் கூர்மண்டையனோடு என்றால் - ஸ்பைடர் எனும் இன்னுமொரு கூர்மண்டையனோடு இந்தப் பதிவுக்கு இப்போதைக்கொரு நிறைவைத் தருகிறேன் ! Catch you later folks ! Bye for now !
September 1984 release ! |
P.S: வாசக நண்பர் மகேஷ் கண்ணன் தன் இல்லத்துக் குட்டீஸ்களை படம் பிடித்து அனுப்பியுள்ளார் ! ஓரத்தில் இருக்கும் மஞ்சள் சட்டை மாவீரர் புரட்டும் பக்கத்தைப் பாருங்களேன் - கிரீன் மேனர் !! :-)